Friday, August 30, 2019

தக்ஷிணேஸ்வர் (பயணத்தொடர், பகுதி 137)

ஒரு அஞ்சு கிலோமீட்டருக்கும் குறைவுதான் நாம் பேலூர் மடத்தில் இருந்து தக்ஷிணேஸ்வர்  காளி கோவில் வந்து  சேர்வதற்கு. கங்கைக்கு இந்தாண்டை இருந்த நாம் அந்தாண்டை போகவேணும்.  கங்கையைக் கடக்க நாலு பெரிய பாலங்கள் கட்டி இருக்காங்க. உண்மையில்  ஹௌரா ப்ரிட்ஜ்  மட்டும்தான் நான் கேள்விப்பட்ட பெயர். எத்தனை சினிமாவில் பார்த்துருக்கோம்.....   இப்ப இதுக்கு ரபீந்த்ர சேது ன்னு பெயராம். விவேகானந்த சேது, வித்யாசாகர் சேதுன்னு இருக்கும் கணக்கில் இப்ப நாம் போய்க்கிட்டு இருக்கும் நிவேதிதா சேது நாலாமத்துப் பாலம். (சேதுன்னா பாலமா? ஓ.... )
ஏற்கெனவே அழுக்கு பிடிச்ச ஊர், இதுலே மழை வேற  ஒரு வாரமா படுத்தி எடுக்குதாம்.  நசநசன்னு எங்கே பார்த்தாலும்....  இதுலே பயங்கர ட்ராஃபிக் வேற....  போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு மெட்ரோ போடும் வேலைகளுக்காகத் தோண்டிப்போட்டு வச்சுருக்காங்க. அந்த அஞ்சு கீமீ பயணத்துக்கு நமக்கு அரைமணி ஆச்சு.   2373
கார்பார்க்குன்னு ஒரு இடம் வச்சுருக்காங்க. அங்கே வண்டியை நிறுத்திட்டு நாங்க இறங்கறோம்.... அப்பதான்  கோபிந்த் (நம்ம ட்ரைவர்) சொல்றார், கேமெரா, செல்ஃபோன் எல்லாம் அனுமதி இல்லையாம்.  லாக்கரில் கொடுக்கணுமாம்.
பாலத்தாண்டை இருக்கும் காளி சந்நிதி....


  அட ராமா......    வண்டியில்தான் வச்சுட்டுப் போகணும் போல..... நம்மவர் பயணத்துக்குன்னு ஒரு பேக்பேக் கொண்டுவருவார். அதுலே எல்லாத்தையும் வச்சு கோபிந்த்கிட்ட ஒப்படைச்சுட்டு, என் ஹேண்ட்பேக் மட்டும் எடுத்துக்கிட்டுப் போறோம்.

கோவிலையொட்டியே ஒரு பாலம் (ஸ்கைவாக்) கட்டிக்கிட்டு இருக்காங்க.  அதன்வழியாப் போனால் கீழே கோவிலைப் பார்க்கலாம். (இப்போ கட்டி முடிச்சுத் திறந்தும் வச்சுட்டாங்க. யூ ட்யூபில்  வீடியோ இருக்கு ) 
நல்ல அகலமான தெருதான் கோவில் இருக்குமிடம்.  வழக்கம்போல் ஜனக்கூட்டம்.  க்ளோக் ரூமில் கூட்டம் நெரியுது.  நல்லவேளை நாம்  கோபிந்தாண்டை ஒப்படைச்சுட்டு வந்தது.   செக்யூரிட்டி கேட்டில்  கெமெரா இருக்கான்னதுக்கு இல்லைன்னு சொல்லி உள்ளே போறோம்.
பெரூசா இருக்கும் வளாகத்துக்குள்  நடுவிலே இடம் விட்டு வலமும் இடமுமா நீளமாப்போகும் கட்டடம்.  தென்னிந்தியர்களான நமக்குக் கொஞ்சம்கூடப் பரிச்சயமில்லாத  விநோதமான ஒரு கட்டடமா  இருக்கு இந்தக் கோவில் !  சந்நிதி விமானங்கள் போல ஒன்பது  விமானங்கள்.  சின்னது எட்டு, பெருசா ஒன்னுன்னு... நவரத்னான்னு ஒரு பெயரும் சொல்றாங்க!
(படங்கள் இல்லைன்னா, சொல்றது விளங்காதேன்னு தேடியதில் வலையில் கிடைச்ச படங்களை இங்கே போட்டுருக்கேன்.  படத்தின் உரிமையாளருக்கு நம் நன்றிகள்!)
இடப்பக்கம் கட்டடத்துக்கு முன்னால் அங்கங்கே மாடிப்படிகளாட்டம் இருக்க  கம்பித்தடுப்புக்குள் சனம் நெரியுது.   வெளியேயும் நல்ல கூட்டம் அலைமோதறதைப் பார்த்து அந்தாண்டை இருக்கும் மாடிப்படி அருகில் இருக்கும் தடுப்பைத் திறந்து விட்டார் கோவில் ஊழியர் (!) ஒருவர்.  கல்லடிபட்டக் காக்கைக்கூட்டம் போல் முக்கால்வாசி சனம் இங்கிருந்து அந்தப் பக்கம் பாய்ஞ்சாங்க.  கூட்டத்துக்குப் பயந்து என்ன செய்யலாமுன்னு  பார்த்துக்கிட்டு இருந்த நமக்கு அடிச்சது லக்கிப்ரைஸ்.  இப்ப இங்கிருக்கும் சின்ன வரிசையின் வாலில் சட்னு போய்ச் சேர்ந்தோம்.
மாடிப்படி ஏறிப் போறோம்.  லேண்டிங் போல இருக்குமிடத்தில் ஒரு ஊழியர் இருந்து  அஞ்சாறு பேரை உள்ளே அனுப்பறார். நம் முறை வந்ததும் உள்ளே போய்  வலது பக்கம் போகணும்.  நாலைஞ்சு அடி வச்சுருப்போம்...  சட்னு  இதோ  நம்ம காளி ! சிகப்புப் புடவையும் செம்பருத்திப்பூக்கள் மாலையுமா கருகருன்னு மின்னிக்கிட்டு நிக்கறாள் !
உயரம் ஒரு மூணடி இருக்கலாம்.   கருப்புப் பளிங்கு சிலையாக இருக்க வேணும்.  முழிச்சுப் பார்க்கும் கண்களும், துருத்தி நீட்டிய நாக்குமாய் ..... தூக்கிய இடதுகையில் ஒரு வெட்டரிவாள் !   யாரை வெட்டப்போறாள் ?  வலதுகையால்  நல்லா இருன்னு அபயகரம்  காண்பிக்கிறாள் !  பாத தரிசனம் செஞ்சுக்கக் கண்ணைக் கீழே இறக்கினால்.... ஒரே பூக்குவியல். கீழே கிடக்கும் ஈசனை முழுசுமா மறைச்சுருச்சு. இதுக்குள்ளே கூட்டம் நம்மை நெருக்கித்தள்ள, போதும்னு  நேரேப்போய்  அந்தாண்டைப் படிகளில் இறங்கினோம்.  தரிசனம் ஒரு மூணு விநாடி இருக்குமா?

இவளுடைய பெயர் பவதாரிணி.  (எங்கெயோ கேட்டமாதிரி இல்லை? பாழாப்போன சினிமா..... விடாது போல ... )

இந்தக் கோவிலைக் கட்டுனது யாராம்?  ராணி ராஷ்மோனி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டி இருக்காங்க.  பார்க்காத ஸ்டைலுன்னு சொன்னேனே  ரொம்பச் சரி! நவரத்னா என்றபடிக்கு ஒன்பது கோபுர அமைப்புடன் இருக்கு! (ராஜஸ்தான் ஸ்டைல் !)

நம்ம ராணி ராஷ்மோனி, ஜான்பஜார் ஜமீன்தார் பாபு ராஜசந்த்ரதாஸ் அவர்களின் மனைவி.  அந்தக் காலத்துலே ஜமீன்தார்கள்  எல்லாம் சிற்றரசர்கள் போலத்தான்.  கல்யாணம் முடிஞ்ச சில வருஷங்களில்  ராணியின்  கணவர் இறந்து போயிடறார்.  ரொம்ப மனோ தைரியத்தோடு ராணியம்மாவே ஜமீன் பொறுப்பை ஏத்துக்கிட்டு ரொம்ப நல்லா நிர்வாகம் செய்யறாங்க.

ஒரு சமயம், காசி யாத்திரைக்குக் கிளம்பறாங்க. இருபத்தினாலு படகுகள், தேவையான உணவுப் பொருள், ஆளு அம்புன்னு  எல்லாம் தயார். இப்படியே ஹூப்ளிகங்கா வழியாகவே கிளம்பிப்போக வேண்டியதுதான். காலையில் கிளம்பணும்.

 முதல்நாள் ராத்ரி கனவில்  காசி விசாலாக்ஷி கனவில் வந்து சொல்றாங்க.....   'எதுக்கு என்னைத்தேடி  அவ்ளோதூரம்  நதியோட்டத்துக்கு எதிராக் கஷ்டப்பட்டு வரணும்?  இங்கேயே கங்கைக் கரையில்  ஒரு கோவில் கட்டு, நானே வந்து குடி இருப்பேன்'

அது  தினமும் தான் வணங்கும் தேவியின் வாக்கு என்ற நம்பிக்கையுடன், மறுநாளே கோவில் கட்ட இடத்துக்கு ஏற்பாடு செய்யறாங்க.  இருபத்தியஞ்சு ஏக்கர்  இடம் அமைஞ்சது.  கங்கையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு வரும் என்றதால்  நல்ல உயரமான மேடையில்  1847 இல் கட்ட ஆரம்பிச்ச கோவில் 1855 இல் முடிஞ்சது.   மே மாசம் ஒன்னாம் தேதி, தேவி பவதாரிணி பிரதிஷ்டை !

கோவிலுக்குப் பூஜை செய்ய  பண்டிட் வேணுமே.....  ராம்குமார் என்பவரை பூஜாரியாக நியமிக்கிறாங்க.  அவர்  பொறுப்பேத்து நடத்தறார்.  அடுத்த வருஷம், எதிர்பாராத விதமா உடம்பு சரி இல்லாமப்போய் இறந்துடறார்.  அதுவரை அண்ணனுடன் கூடமாட உதவியாக இருந்த  அவருடைய தம்பி கதாதர் கோவில் பூஜைக்குப் பொறுப்பேத்துக்கறார்.  இங்கேயே ஒரு சின்ன அறையில் பூஜாரிக்கு க்வார்ட்டர்ஸ்.  இவருக்கு ஏற்கெனவே  காளிப்பித்து. கேட்கணுமா? அல்லும்பகலும் தியானம்.... மனசு எப்பவும் காளியைப் பார்க்கணும்னு துடிச்சுக்கிட்டு இருக்கு.
உண்மையான பக்தனைச் சும்மா விடுமா சாமி? ஒரு சமயம் ப்ரத்யக்ஷமா பக்தனுக்குத் தரிசனம் தந்து பேசவும் செய்தாள்! இங்கே காளியின் அடிமையாவே  தன்னுடைய  மரணம்வரை இருந்துடறார் கதாதர்.  காளியின் புகழும் கதாதரின் பக்தியும்  ஊர் உலகமெல்லாம் பரவினது உண்மை. இந்த கதாதர் யாருன்னு ஊகிச்சீங்களா இல்லையா?

இதுக்கிடையில்  கதாதருக்குச் சாரதாமணி என்ற பொண்ணுடன் கல்யாணமும் ஆச்சு. மாப்பிள்ளைக்கு 23 வயசு. பொண்ணுக்கு? அஞ்சு முடிஞ்சு  ஆறு நடக்குது  ! அந்தக் காலத்தில் குழந்தைத் திருமணங்கள்தானே பெரும்பாலும்....    பொண்ணு  பெரியவளானதும், புருஷன் வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவாங்களாம்.

காளிகோவில் பூசாரி, அப்பப்ப மெய்மறந்து தியானத்துலே லயிச்சுடறதும்,  தனக்கு மட்டும் தெரியும் காளி மாதாவிடம் பேசுவதும் சிரிப்பதும், அழுவதுமா  அவர் வாழ்க்கைப் போய்க்கிட்டு இருக்கு.  எதோ பைத்தியம் பிடிச்சுருக்குன்னு ஊர்மக்கள் பேசிக்கிறாங்க.

விஷயம் மெல்ல மெல்ல பெண்வீட்டுக்குப் போய்ச் சேருது.  'அட ராமா' ன்னு  ஆகிப்போயிருக்குமுல்லெ?   இனிமேல் தன்கணவரைக் கவனிச்சுக்க வேண்டியது தன்னுடைய கடமைன்னு தகப்பனாரிடம்  சொல்றாங்க  பதினெட்டு வயசு சாரதாமணி.

அதுதான் சரின்னு, சாரதாமணியின் தகப்பனார்  பொண்ணை அழைச்சுக்கிட்டுக் கிளம்பறார். மருமகன் இருக்கும் வீட்டுக்கு  (பவதாரிணி அம்மன் கோவில் க்வாட்டர்ஸ்) எம்பது மைல் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து நடந்தே வந்து சேர்றாங்க.

மனைவியும்  கணவருக்கு உதவியாகக் கோவில் வேலைகளிலும், கணவரைக் கவனிப்பதுமா இருக்காங்க.  கணவர் அம்பாள் உபாசகர் இல்லையோ?  மனசை எப்படி ஒருமுகப்படுத்தி தியானத்தில் லயிப்பதுன்னு சொல்லிக் கொடுக்கறார். (ஆளாளுக்கு ஒருபக்கம் கண்ணை மூடி நிஷ்டையில் உக்கார்ந்துருக்கறதுதான்... )
மனைவியையே அம்பாள் ஸ்வரூபமா நினைச்சுக் காளிக்குச் செய்யும் பூஜைகளை மனைவிக்கே செஞ்சு  அவுங்களை சாரதா தேவி ஆக்கிட்டார் கணவர் ராமக்ருஷ்ணர்.  பக்குவப்பட்ட ரெண்டு மனசு, ஒரு வீட்டில் தாயும் சேயுமா......... பதினைஞ்சு வருஷங்கள் இப்படியே போயிருச்சு.
இதுக்குள்ளே  கணவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரா ஆகி, பல சீடர்களும்  இவரிடம் வந்து சேர்ந்துட்டாங்க. இந்த சிஷ்யப்பிள்ளைகள் எல்லோருக்கும்  ஒரு தாயும்  கிடைச்சுட்டாங்க.

இந்த தக்ஷிணேஸ்வர் கோவிலைக் கட்டிய ராணி ராஷ்மோனி அவர்களின் மருமகன்  மிதுன்பாபு , ஒருநாள் பூஜாரி கதாதரைப் பார்க்கக் கோவிலுக்கு வந்துருக்கார். அப்போ  அவர்  கொஞ்சதூரத்துலே இருக்கும் தன் அறைமுன்னால் தீவிர சிந்தனையுடன்  வராந்தாவில்  முன்னும் பின்னுமாய் உலாத்திக்கிட்டு இருந்துருக்கார்.  இந்தப்பக்கம் போகும்போது காளியின் ரூபமும், அந்தப்பக்கம்  திரும்பி வரும்போது சிவனின் ரூபமாகவும்  மிதுன்பாபுவுக்குத் தெரிஞ்சாராம்.  அப்போதான் இவர் கடவுளின் அம்சம் என்று தோணி  இருக்கு.  பரமஹம்ஸர்னு அவர்தான் முதலில் போற்றினாராம்.  உண்மையில்  அந்த மிதுன்பாபுதான்  அதிர்ஷ்டசாலின்னு நான் நினைக்கிறேன் !

கதாதர் எப்போ ராமக்ருஷ்ணர் ஆனார்னு தெரியலை.   அது பூர்வாஸ்ரமப் பெயர்னு வச்சுக்கலாம்.....

அம்பது வயசான ராமகிருஷ்ணபரமஹம்ஸர்,  தொண்டைப்புற்று நோயால் சாமிக்கிட்டே போனார். (எமனுக்கும் கொண்டுபோக எதாவது காரணம் வேண்டித்தானே இருக்கு! )

கணவரின் மறைவுக்குப்பின் சிஷ்யப்பிள்ளைகள் தாயைப் பாதுகாத்து வந்தாங்க. ராமகிருஷ்ணா மிஷன் ஆரம்பிக்கப்பட்டு  பேலூர் மடமும் நடந்து வந்துச்சில்லையா?

தன்னுடைய அறுபத்தியாறாம் வயசில்  ப்ளாக் ஃபீவர் என்னும்  ஒரு வகை மலேரியா ஜுரத்தால்  (சிக்கன் குனியாவோ?) பாதிக்கப்பட்டு இவுங்களும் சாமிகிட்டே போனாங்க. அவுங்களை பேலூர் மடத்தில் கங்கைக் கரையில் எரியூட்டுன இடத்துலே கட்டுன கோவிலுக்கு நாம் காலையில் போய் வந்தோமே.... (இதற்கு முன் இருக்கும் பதிவில் பார்க்கலாம்)

தக்ஷிணேஸ்வரர்  கோவிலைப் பற்றிச் சொல்ல ஆரம்பிச்சால் எப்படியும் ராமகிருஷ்ணபரமஹம்ஸர், அன்னை சாரதாதேவி நினைவு  வராமல் போகச் சான்ஸே இல்லை.....
இவ்ளோ புகழ்வாய்ந்த அந்த ராமகிருஷ்ணபரமஹம்ஸரே பூஜாரியா  இருந்து பூஜை செஞ்சு வழிபட்ட காளி பவதாரிணியை நாமும் தரிசனம் செஞ்சுக்கிட்டது மனசுக்கு நிறைவாத்தான் இருக்கு! படிகள் இறங்கி  வளாகத்தின் நடுவில் நிக்கறோம்.

காளியின் பார்வைக்கு நேரா இருக்கும்படியான உயரத்தில்  எதிர்ப்பக்கமா  ஆறும் ஆறும்னு    (நடுவில் படிக்கட்டுகளுக்கான இடைவெளிவிட்டு) பனிரெண்டு தனித்தனி சந்நிதிகள். எல்லாத்திலும் சிவலிங்கங்களே!   ஜ்யோதிர்லிங்கங்களா இருக்கணும்!   மக்கள் கூட்டம் நிறைய இருந்ததால் படிகளேறிப்போகாம  கீழே இருந்தே கும்பிட்டுக்கிட்டோம்.
இந்த பபதாரிணி கோவிலை காலை அஞ்சு முதல் மாலை எட்டுவரை திறந்து வைக்கிறாங்க. (பெங்காலிகளுக்கும் 'வ' வராது கேட்டோ! )

நாங்க வெளியே வந்து நேரா கார் பார்க் போய், நம்ம பையில் இருந்து கெமெரா எடுத்துக்கிட்டுத் திரும்ப வந்தோம். ஒரு சில க்ளிக்ஸ் கூட இல்லைன்னா மனசு ஆறாது.  கோவிலின் பின்பக்கம்  இருக்கும் தீர்த்தத்தின் இக்கரையில் நின்னு  சில க்ளிக்ஸ் ஆச்சு.   மூலவர் இருக்கும் கருவறைதான் சின்னதே தவிர, கோவில் கட்டடம்  பெருசாத்தான் சினிமாஸ்கோப் போல அகலமா நீண்டு தெரியுது!

மணியும் இப்போ பனிரெண்டே முக்கால் ஆச்சுன்னதால் கிளம்பி ராடிஸ்ஸன் வந்தோம்.  ஒரு பதினெட்டு கிமீதான் என்றாலும்  மழையும், அதிகக் கூட்டமும், பயங்கர ட்ராஃபிக்குமா இருந்ததால்  ஒன்னரை மணி  நேரம் எடுத்துருச்சு.
சாது மனைவியே காளின்னா.... காளியாட்டம் ஆடும் மனைவிகள் யாராம் ?

தொடரும்.............. :-)


Wednesday, August 28, 2019

குருவின் நினைவுக்காக சிஷ்யர் ஆரம்பிச்ச மடம்..... (பயணத்தொடர், பகுதி 136)

ஒருமணி நேரத்தில் பேலூர் ராமகிருஷ்ண மடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். மெயின் கேட்டுக்குள் நுழைஞ்சால்  உள்ளே நெடுந்தூரம் நடக்கணும். ரொம்பவே பெரிய வளாகம். மொத்தம் நாப்பது ஏக்கர்.  ஹூக்ளி நதியையொட்டியே இருக்கு!

ஸ்ரீ விவேகானந்தரால் 1897 இல் நிறுவப்பட்டது. அப்போ பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பூவுலகை நீத்து  பதினொரு வருஷம்  ஆகி இருந்தது.

இப்ப உலகின் பலபாகங்களில் ராமகிருஷ்ணா மிஷன் பலவகைகளிலும் மானுட சேவை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இவுங்க ஆஸ்ரமத்தில் கட்டும் கோவிலும் கூட ஏறக்குறைய ஒரே டிஸைனில் இருக்கு என்பதை வேற பயணங்களில் கவனிச்சுருக்கேன்.

காலை எட்டரைமுதல் பதினொன்னரை வரையும், மாலை நாலு முதல் ஆறு வரையும்தான்  மக்கள் வந்துபோகத்  திறந்து வைக்கிறாங்க. நல்லவேளையா நமக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு! வளாகம் பெருசுதான் என்றாலும் உள்ளே 'நமக்கு'ப் பார்க்கிங் கிடையாது.  பக்கத்துத் தெருவில் இறங்கி நடந்து வரவேண்டியதாப் போயிருச்சு. ரெண்டு தெருக்களுக்கு முன்னாலேயே நுழைவுக்கான  தோரண வாசல் இருக்கு.
நல்ல கூட்டம்தான். நாமும் ஜோதியில் கலந்தோம். முதலில் ராமக்ருஷ்ணா சங்க்ரஹா மந்திர். இது ம்யூஸியம்தான். அஞ்சு ரூ டிக்கெட் வாங்கிக்கணும். உள்ளேபோய் ஒரு ரவுண்டு.  ச்சும்மா  எட்டிப் பார்த்துட்டு வந்துட்டோம். நமக்கு நின்னு பார்க்க நேரம் இல்லை.  இன்னும் அரைமணிதானே இருக்கு... இல்லையோ....   ஒரு ஸ்பெஷல் எக்ஸிபிஷன் வேற  வச்சுருக்காங்க.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை  :-(


பெரியவளாகமுன்னு சொன்னேனில்லையோ.....  அங்கங்கே புல்வெளிகளும், கரையோரப் பூச்செடிகளும், மரங்களுமா இருப்பது பிடிச்சிருந்தது.
சுத்திப் பார்த்துக்கிட்டே  கோவிலாண்டை வந்துருந்தோம்.  நம்ம சென்னை ஆர்கே மட் ரோடில் இருக்கும் ராமக்ருஷ்ணா மிஷன் கோவில் மாதிரியே அச்சு அசலா இங்கேயும்.    பேலூர் மடம் இவுங்க தலைமையகம் என்பதால் இது  கொஞ்சம்(தான் ) பெருசோன்னு தோணுச்சு.

உள்ளே போனால்....   வெளியே இருக்கும் ஆரவாரங்களுக்கும்  எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப்போல் ஒரு அமைதி!  அதோ ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்ஸர்  உக்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்து போயிருக்கார்.  நாமும் கொஞ்சநேரம் உக்கார்ந்து மனசை அடக்கலாமுன்னா எங்கே?  குரங்கின் ஆட்டம் அதிகம்.... ப்ச்.....
அதான் அவர் அங்கே !   நாம்.... இங்கே....

வளாகத்தின் அடுத்த கட்டடமும் ஒரு கோவில்தான்...  நதிக்கரைக்குக் கொஞ்சம் பக்கத்துலேயே இருக்கு.  சாரதாதேவியை எரியூட்டிய இடமாம். அதன்மேலேயே கோவிலை எழுப்பி இருக்காங்க.  பூலோக சுகங்கள் எதையும் அனுபவிக்காமப் போன பிறவி.....  எப்பவும் எனக்கு   சில குறிப்பிட்ட பெண்ஜன்மங்களை நினைக்கும்போதே  கண்ணுலே  நிறையும்  கண்ணீர் இப்பவும்....
உள்ளே கங்கையைப் பார்த்தபடி அமர்ந்த  நிலையில்  தேவியின் சிலையும் பக்கத்தில் ஒரு பாணலிங்கமும் பிரதிஷ்டை ஆகி இருக்கு.
அடுத்து ரொம்ப கம்பீரமா நிற்கும் கட்டடம் ஸ்வாமி விவேகாநந்தருக்கு!
உள்ளே போய் தரிசனம் செஞ்சுக்க முடியலை.  பழுதுபார்க்கும் வேலை நடக்குது. வளாகத்திலும் நதிக்கரையையொட்டியே  சீரமைப்பு வேலைக்கான  சிமெண்ட், மணல் , செங்கல்னு  பொருட்கள் வந்து இறங்கி இருக்கு. அதனால் நாம் வெளியில் இருந்தே  கும்பிட்டுக்கிட்டோம்.


அகலமாப் பரந்து  ஓடும் கங்கைக்கரையில் பக்தர்கள்  பலர் ஓடும் தண்ணீருக்குள் இறங்கி முங்கி எழுந்து வர்றாங்க. இக்கரைக்கும் அக்கரைக்குமா படகு மக்களை ஏத்திக்கிட்டுப் போய் வருது!  அந்தாண்டை படகுத்துறை இருக்கு போல !


கங்கையைப் பிடிச்சு வச்சுருந்தார் பக்தர் ஒருவர்.  விடாத மழையின் காரணம் கரைபுரண்டு ஓடும் தண்ணீரின் நிறம் மாறிக்கிடக்கு.....
 இந்த ஹூக்ளி நதியை பாகீரதி ஹூக்ளின்னு சொல்றாங்க.   உண்மையில் இது கங்கைதான்.  கொல்கத்தா நகருக்கு முன்னூறு கிமீ தூரத்துக்கு முன்னே இருக்கும் முர்ஷிதாபாத் என்ற ஊருக்குப்பக்கம் கங்கையில் ஒரு பெரிய அணை கட்டி அங்கிருந்து வரும் தண்ணீர்தான் ஹூக்ளியில் பாயுது.  இந்தத் தண்ணீர் கூட ரெண்டாப் பிரிஞ்சு ஒன்னு மேற்கு வங்காள ஹூக்ளியாகவும் இன்னொன்னு கிழக்கு வங்காள பத்மா வாகவும்தான் பாய்ஞ்சுக்கிட்டு இருக்கு!   கடைசியில் ரெண்டுமே போய் வங்காளவிரிகுடாவில்தான்  கலந்துருது.
கிளம்பி கேட்டுக்குப் போகும் வழியில்  இவுங்களோட வெளியீடுகள் விற்கும் புக்‌ஷாப்.  அதுக்கடுத்து இருக்கும் கட்டடம்.... கழிவறை !
இவ்ளோ மக்கள் வந்து போகும் இடத்துலே  டாய்லெட்ஸ் வசதிகள் செஞ்சு வச்சுருப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய அம்சம்.
உள்ளே போக  ஒரு கட்டணம் உண்டு.  அதைப் பார்த்ததும் மனசு விர்ர்ன்னு பறந்துபோய் நின்னது பத்மநாபபுரம் அரண்மனையில் !

'மூத்ரம் ஒழிக்கானோ அல்ல மற்றதோ ? ' விசாரிச்ச வல்யம்ம ஓர்ம வந்து.   பத்மநாபபுரம் அரண்மனை சமாச்சாரம்.....    இந்த மாதிரி  ஒன்றுக்கும் இரண்டுக்கும் காசு என்பதை முதல்முதலா நான் தெரிஞ்சுக்கிட்டது பாரீஸ் பயணத்தில்  Palace of Versailles  போனபோதுதான்.  மகளுக்குக் கழிவறை போகணும் என்று தேடிப்போனால்  பெரிய வரிசை.  காத்துநின்னு கடைசியில் கட்டடவாசலுக்குப்போனால்தான் தெரியுது காசு கொடுக்கணுமுன்னு.  நான் வேற 'கழிப்பறைக்குள்ளே எதுக்குப் பை' ன்னு நம்மவரிடம் ஹேண்ட்பேகைக் கொடுத்துட்டு வந்துருந்தேன். அப்புறம் இவரைத் தேடிப்போய் (ஒரு இடத்தில் இங்கேயே இருங்கன்னு சொல்லிட்டு வந்தாலும்  இவர்பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கிட்டே எங்கியாவது நகர்ந்து போயிருவார்)  ஹேண்ட் பேகை வாங்கி வர்றதுக்குள்ளே இங்கே  வரிசை இன்னும் வளர்ந்து போய் ரொம்ப நேரம் நிற்கும்படியாச்சு.
இது நமக்கு முதல் அரண்மனை. ரெண்டாவதுதான் பத்மநாபபுரம்.

இப்போ கொல்கத்தாவில்..... ஹாஹா.....
 அததுக்குண்டான வசதிகளோடு சுத்தமாகவே இருக்கு.   பயணத்துலே இந்த டாய்லெட் பிரச்சனைக்குப் பயந்தே  தண்ணீர் கூட ரொம்பக் குடிக்கமாட்டேன்.

வாசல் கேட்டுக்கு வந்து வண்டியை எங்கே நிறுத்தியிருக்காருன்னு தெரியாம முழிச்சப்ப, ட்ரைவர் கோபிந்த்  ஓடிவந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனார்.  மடத்துக்கு வரும் பக்தர்களுக்கான நிவேதா காட்டேஜ் பக்கம் வண்டி நின்னது.
இந்தப் பகுதியை விட்டுக் கிளம்பி இதே பெயருடைய பாலம் (நிவேதிதா ஸேது ) நோக்கிப்போறோம் இப்போ!

தொடரும்.....  :-)