Wednesday, August 28, 2019

குருவின் நினைவுக்காக சிஷ்யர் ஆரம்பிச்ச மடம்..... (பயணத்தொடர், பகுதி 136)

ஒருமணி நேரத்தில் பேலூர் ராமகிருஷ்ண மடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். மெயின் கேட்டுக்குள் நுழைஞ்சால்  உள்ளே நெடுந்தூரம் நடக்கணும். ரொம்பவே பெரிய வளாகம். மொத்தம் நாப்பது ஏக்கர்.  ஹூக்ளி நதியையொட்டியே இருக்கு!

ஸ்ரீ விவேகானந்தரால் 1897 இல் நிறுவப்பட்டது. அப்போ பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பூவுலகை நீத்து  பதினொரு வருஷம்  ஆகி இருந்தது.

இப்ப உலகின் பலபாகங்களில் ராமகிருஷ்ணா மிஷன் பலவகைகளிலும் மானுட சேவை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இவுங்க ஆஸ்ரமத்தில் கட்டும் கோவிலும் கூட ஏறக்குறைய ஒரே டிஸைனில் இருக்கு என்பதை வேற பயணங்களில் கவனிச்சுருக்கேன்.

காலை எட்டரைமுதல் பதினொன்னரை வரையும், மாலை நாலு முதல் ஆறு வரையும்தான்  மக்கள் வந்துபோகத்  திறந்து வைக்கிறாங்க. நல்லவேளையா நமக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு! வளாகம் பெருசுதான் என்றாலும் உள்ளே 'நமக்கு'ப் பார்க்கிங் கிடையாது.  பக்கத்துத் தெருவில் இறங்கி நடந்து வரவேண்டியதாப் போயிருச்சு. ரெண்டு தெருக்களுக்கு முன்னாலேயே நுழைவுக்கான  தோரண வாசல் இருக்கு.
நல்ல கூட்டம்தான். நாமும் ஜோதியில் கலந்தோம். முதலில் ராமக்ருஷ்ணா சங்க்ரஹா மந்திர். இது ம்யூஸியம்தான். அஞ்சு ரூ டிக்கெட் வாங்கிக்கணும். உள்ளேபோய் ஒரு ரவுண்டு.  ச்சும்மா  எட்டிப் பார்த்துட்டு வந்துட்டோம். நமக்கு நின்னு பார்க்க நேரம் இல்லை.  இன்னும் அரைமணிதானே இருக்கு... இல்லையோ....   ஒரு ஸ்பெஷல் எக்ஸிபிஷன் வேற  வச்சுருக்காங்க.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை  :-(


பெரியவளாகமுன்னு சொன்னேனில்லையோ.....  அங்கங்கே புல்வெளிகளும், கரையோரப் பூச்செடிகளும், மரங்களுமா இருப்பது பிடிச்சிருந்தது.
சுத்திப் பார்த்துக்கிட்டே  கோவிலாண்டை வந்துருந்தோம்.  நம்ம சென்னை ஆர்கே மட் ரோடில் இருக்கும் ராமக்ருஷ்ணா மிஷன் கோவில் மாதிரியே அச்சு அசலா இங்கேயும்.    பேலூர் மடம் இவுங்க தலைமையகம் என்பதால் இது  கொஞ்சம்(தான் ) பெருசோன்னு தோணுச்சு.

உள்ளே போனால்....   வெளியே இருக்கும் ஆரவாரங்களுக்கும்  எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப்போல் ஒரு அமைதி!  அதோ ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்ஸர்  உக்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்து போயிருக்கார்.  நாமும் கொஞ்சநேரம் உக்கார்ந்து மனசை அடக்கலாமுன்னா எங்கே?  குரங்கின் ஆட்டம் அதிகம்.... ப்ச்.....
அதான் அவர் அங்கே !   நாம்.... இங்கே....

வளாகத்தின் அடுத்த கட்டடமும் ஒரு கோவில்தான்...  நதிக்கரைக்குக் கொஞ்சம் பக்கத்துலேயே இருக்கு.  சாரதாதேவியை எரியூட்டிய இடமாம். அதன்மேலேயே கோவிலை எழுப்பி இருக்காங்க.  பூலோக சுகங்கள் எதையும் அனுபவிக்காமப் போன பிறவி.....  எப்பவும் எனக்கு   சில குறிப்பிட்ட பெண்ஜன்மங்களை நினைக்கும்போதே  கண்ணுலே  நிறையும்  கண்ணீர் இப்பவும்....
உள்ளே கங்கையைப் பார்த்தபடி அமர்ந்த  நிலையில்  தேவியின் சிலையும் பக்கத்தில் ஒரு பாணலிங்கமும் பிரதிஷ்டை ஆகி இருக்கு.
அடுத்து ரொம்ப கம்பீரமா நிற்கும் கட்டடம் ஸ்வாமி விவேகாநந்தருக்கு!
உள்ளே போய் தரிசனம் செஞ்சுக்க முடியலை.  பழுதுபார்க்கும் வேலை நடக்குது. வளாகத்திலும் நதிக்கரையையொட்டியே  சீரமைப்பு வேலைக்கான  சிமெண்ட், மணல் , செங்கல்னு  பொருட்கள் வந்து இறங்கி இருக்கு. அதனால் நாம் வெளியில் இருந்தே  கும்பிட்டுக்கிட்டோம்.


அகலமாப் பரந்து  ஓடும் கங்கைக்கரையில் பக்தர்கள்  பலர் ஓடும் தண்ணீருக்குள் இறங்கி முங்கி எழுந்து வர்றாங்க. இக்கரைக்கும் அக்கரைக்குமா படகு மக்களை ஏத்திக்கிட்டுப் போய் வருது!  அந்தாண்டை படகுத்துறை இருக்கு போல !


கங்கையைப் பிடிச்சு வச்சுருந்தார் பக்தர் ஒருவர்.  விடாத மழையின் காரணம் கரைபுரண்டு ஓடும் தண்ணீரின் நிறம் மாறிக்கிடக்கு.....
 இந்த ஹூக்ளி நதியை பாகீரதி ஹூக்ளின்னு சொல்றாங்க.   உண்மையில் இது கங்கைதான்.  கொல்கத்தா நகருக்கு முன்னூறு கிமீ தூரத்துக்கு முன்னே இருக்கும் முர்ஷிதாபாத் என்ற ஊருக்குப்பக்கம் கங்கையில் ஒரு பெரிய அணை கட்டி அங்கிருந்து வரும் தண்ணீர்தான் ஹூக்ளியில் பாயுது.  இந்தத் தண்ணீர் கூட ரெண்டாப் பிரிஞ்சு ஒன்னு மேற்கு வங்காள ஹூக்ளியாகவும் இன்னொன்னு கிழக்கு வங்காள பத்மா வாகவும்தான் பாய்ஞ்சுக்கிட்டு இருக்கு!   கடைசியில் ரெண்டுமே போய் வங்காளவிரிகுடாவில்தான்  கலந்துருது.
கிளம்பி கேட்டுக்குப் போகும் வழியில்  இவுங்களோட வெளியீடுகள் விற்கும் புக்‌ஷாப்.  அதுக்கடுத்து இருக்கும் கட்டடம்.... கழிவறை !
இவ்ளோ மக்கள் வந்து போகும் இடத்துலே  டாய்லெட்ஸ் வசதிகள் செஞ்சு வச்சுருப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய அம்சம்.
உள்ளே போக  ஒரு கட்டணம் உண்டு.  அதைப் பார்த்ததும் மனசு விர்ர்ன்னு பறந்துபோய் நின்னது பத்மநாபபுரம் அரண்மனையில் !

'மூத்ரம் ஒழிக்கானோ அல்ல மற்றதோ ? ' விசாரிச்ச வல்யம்ம ஓர்ம வந்து.   பத்மநாபபுரம் அரண்மனை சமாச்சாரம்.....    இந்த மாதிரி  ஒன்றுக்கும் இரண்டுக்கும் காசு என்பதை முதல்முதலா நான் தெரிஞ்சுக்கிட்டது பாரீஸ் பயணத்தில்  Palace of Versailles  போனபோதுதான்.  மகளுக்குக் கழிவறை போகணும் என்று தேடிப்போனால்  பெரிய வரிசை.  காத்துநின்னு கடைசியில் கட்டடவாசலுக்குப்போனால்தான் தெரியுது காசு கொடுக்கணுமுன்னு.  நான் வேற 'கழிப்பறைக்குள்ளே எதுக்குப் பை' ன்னு நம்மவரிடம் ஹேண்ட்பேகைக் கொடுத்துட்டு வந்துருந்தேன். அப்புறம் இவரைத் தேடிப்போய் (ஒரு இடத்தில் இங்கேயே இருங்கன்னு சொல்லிட்டு வந்தாலும்  இவர்பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கிட்டே எங்கியாவது நகர்ந்து போயிருவார்)  ஹேண்ட் பேகை வாங்கி வர்றதுக்குள்ளே இங்கே  வரிசை இன்னும் வளர்ந்து போய் ரொம்ப நேரம் நிற்கும்படியாச்சு.
இது நமக்கு முதல் அரண்மனை. ரெண்டாவதுதான் பத்மநாபபுரம்.

இப்போ கொல்கத்தாவில்..... ஹாஹா.....
 அததுக்குண்டான வசதிகளோடு சுத்தமாகவே இருக்கு.   பயணத்துலே இந்த டாய்லெட் பிரச்சனைக்குப் பயந்தே  தண்ணீர் கூட ரொம்பக் குடிக்கமாட்டேன்.

வாசல் கேட்டுக்கு வந்து வண்டியை எங்கே நிறுத்தியிருக்காருன்னு தெரியாம முழிச்சப்ப, ட்ரைவர் கோபிந்த்  ஓடிவந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனார்.  மடத்துக்கு வரும் பக்தர்களுக்கான நிவேதா காட்டேஜ் பக்கம் வண்டி நின்னது.
இந்தப் பகுதியை விட்டுக் கிளம்பி இதே பெயருடைய பாலம் (நிவேதிதா ஸேது ) நோக்கிப்போறோம் இப்போ!

தொடரும்.....  :-)


11 comments:

said...

//பூலோக சுகங்கள் எதையும் அனுபவிக்காமப் போன பிறவி.// - என் உறவினரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கேன். அவர், எனக்கு இதுதான் சுகம்... நீ சுகம்னு நினைக்கறது எல்லாமே எனக்கு சுகமானவை அல்ல என்று சொன்னார்.

said...

பாருங்க... நீங்க கொல்கத்தாவுக்குப் போய் ராமகிருஷ்ணா மடம் போய்ட்டுவந்துட்டீங்க. நான் ஆர்.கே மட் ரோடு வழியா பலமுறை போயும் இன்னும் உள்ள நுழையும் ப்ராப்தம் வரலை.

said...

அழகான இடம். நாங்கள் சென்றபோதும் நிறைய மக்கள். படகுத்துறை இரண்டு பக்கங்களில் உண்டு. கங்கை படகுப் பயணம் சுகமாக இருக்கும். எங்கள் பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்கிறேன்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எது சுகம் என்பது அவரவர் மனது நினைப்பதுதான். ஞானிகளுக்குச் சுகமாக இருப்பது என்னைப்போல் அஞ்ஞானிகளுக்குச் சுகமாகத் தோணாதுதானே?

அதென்னமோ பெண்மனசு, பதறிப்போகுது..... ப்ச்....

நாங்க சிலமுறை சென்னை ராமக்ருஷ்ணா மடத்தின் கோவிலுக்குப் போயிருக்கோம். ஆரத்தி சமயம் சிறுவயதுப்பிள்ளைகளுக்கு அனுமதி இல்லைன்னு போர்டு பார்த்த நினைவு. ஆறுவயதோ, இல்லை அதுக்கும் குறைவோன்னு இப்ப நினைவில் இல்லை......

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நமக்கும் படகுப்பயணம் வாய்க்கலை. நசநசன்னு மழையில் எங்கே?

தொடர்வருகைக்கு நன்றி.

said...

கம்பீரமா நிற்கும் கட்டடம் ஸ்வாமி விவேகாநந்தருக்கு...ஆமா ரொம்ப கம்பீரமா இருக்கு ..


மத்த இடங்களும் கோவிலுமே ரொம்ப பளிச்...

said...

அருமை. சிறப்பு. நன்றி.

said...

வாங்க அனுப்ரேம்,


சட்னு பார்த்தால் அப்படியே கைகட்டி நிற்பதைப்போல்தான்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

அமைதியும்,சுத்தமும் ஓரிடத்தில்.

said...

வாங்க மாதேவி.

இந்தியாவில் இது ரெண்டும் சேர்ந்து இருப்பது அபூர்வம் !