Monday, August 12, 2019

சிவன் கோவிலில் விஸ்வரூப விஷ்ணு ! (பயணத்தொடர், பகுதி 129)

அநுராதபுரம் எல்லையைத் தாண்டும்போது.... சிங்கம் எதுக்கு இப்படி வாயை 'ஆ'ன்னு திறந்து வச்சுக்கிட்டு இருக்குன்னு முதலில் புரியலை.... எதாவது குறியீடோ?  உள்ளே போனால்... அவ்ளோதான்..... வெளியில் வரவே முடியாதுன்னு....  ஹாஹா....
ஆர்மின்னா எப்பவும் வயித்துலே பயத்தோடு பார்க்கணுமா என்ன?  பயமே இல்லாம சர்க்கஸ்லே சிங்கத்தின் வாய்க்குள்ளே தலையை நுழைக்கும் காட்சி போல்தான்....  ச்சும்மா.....   இது இலங்கை ராணுவப்படையின் சேவைப்பிரிவுக்கான நுழைவு வாசல்தான் :-)
இப்போ நாம் போகும் சாலை அட்டகாசமா இருக்கு! ரெண்டு பக்கமும் மரங்கள் வரிசை வேற .....  இந்த மாதிரி சாலைகள் இருந்தா ட்ரைவர்களுக்குக் குஷிதானே?  மஞ்சு பறக்கிறார்!
வரும் வழியில் சின்னச் சின்ன ஊர்களைக் கடக்கும்போது  சின்ன அளவு சைத்யாக்கள் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு.
சுமார் ரெண்டு மணி நேரப்பயணத்தில்  சாலை ஓரமாவே இருக்கும்  ஒரு ரெஸ்ட்டாரண்டாண்டை  வந்துருந்தோம். மணியும் பகல் ஒன்னு. இங்கேயே  லஞ்சு முடிச்சுக்கலாமேன்னார் 'நம்மவர்'

Baththuluoya Family Restaurant  பார்க்க நீட்டாவே இருக்கு.  இந்த ஊருக்கு இப்படி ஒரு பெயரோ என்னவோ....   இந்த Oya ஓயா என்பதற்குப் பொருள்  ஆறுன்னு நினைக்கிறேன்.  இந்த அஞ்சாறு நாட்கள் இங்கே சுத்துனதில் நிறைய ஓயாஸ் பார்த்துட்டோம்.  இப்பக்கூட ஒரு ஆற்றுப் பாலம் கடந்துதான் வந்தோம்.

மெனுன்னு தனியா ஒன்னும் இல்லை. நிறைய பதார்த்தங்கள்  வெஜ்ஜும், நான்வெஜ்ஜுமா சமைச்சு வச்சுருக்காங்க. நமக்கு வேணுங்கறதைப் பார்த்து எதெது வேணுமுன்னு சொல்லணும்.

நம்மவரும் மஞ்சுவும் அவுங்களுக்கு என்ன வேணுமோ அது, எனக்கு ஒரு  ஸிலோன் பரோட்டா :-)   தொட்டுக்க ஒரு தயிர். எல்லாம் இது போதும்....

ஓரளவு நல்ல கூட்டம்தான்.... லஞ்சு டைம் இல்லையோ!
சாப்பாடானதும்  வாசல் முற்றத்தில் இருந்த  பெரிய திருவடியையும், செல்லத்தையும்  க்ளிக்கிட்டுக் கிளம்பியாச்சு. இன்னும் ஒரு  ரெண்டு மணி நேரப்பயணம் பாக்கி இருக்கு இன்றையக் கணக்கில்......
அதுலே கிட்டத்தட்ட அரைமணி நேரம் போயிருக்கும்.... கண்ணில் பட்டது ஒரு அழகான வெள்ளைக்கோபுரம் ! பகல் ரெண்டு மணிக்குக் கோவில்  திறந்துருக்காதே.....  ஆனாலும்  என்னன்னு பார்த்துட்டுப் போகலாமேன்னு...... வண்டியை அந்தப் பக்கம் திருப்பச் சொன்னேன், நம்ம மஞ்சுவிடம்.
ரெட்டை மணிக்கூண்டும், அழகான விமானங்களுமா அழகா இருக்கு. இது பின்புற(மேற்கு) வாசல். அதானே இடும்பியின் வழக்கப்படி வேற வழியில்தானே போகணும், ஏன்  மூடிக்கிடக்கு :-)
கோவிலுக்குள் போக வாசல் தேடி  நடந்தால் வடக்குவாசல் திறந்துருக்கு.  உள்ளே போனால்......  ஹைய்யோ....  பெருமாள்!  இந்தாண்டை செல்லம்போல் குட்டி ஆஞ்சி ! அந்தாண்டை தாயார் !



கேரளத்தை நினைவுபடுத்தும்  சிகப்பு சிமெண்ட் தரையோடு சுத்திவர இருக்கும் சந்நிதிகளும், நடுவில்  திறந்த வெளிப்ரகாரமும் அதுக்குள்ளே கருவறையுமா அட்டகாசமா இருக்கு! இடப்பக்கச் சுவர்களில் கடவுளர்களின்  அருமையான புடைப்புச் சிற்பங்கள் !  சுதையில்  செய்தவைதான். அனந்தசயனப்பெருமாள், மஹாலஷ்மி, மஹிஷாசுரமர்த்தினி, நரஸிம்ஹமூர்த்தி, சரஸ்வதி, சரபேஸ்வரர்ன்னு.....
முன்னேஸ்வர தேவஸ்தானம்!

கேள்விப்படாத பெருமாளா இருக்காரேன்னு பார்த்தால் இது சிவன் கோவில். மூலவர் முன்னேஸ்வரர்.  அம்பாள் வடிவுடைநாயகி!

கோவிலுக்கு வயசு தெரியாது.....   ப்ராச்சீன் !  ராமாயணகாலத்துலே இருந்துன்னு சொல்றாங்க.....  (ஓ)  கோவிலில் கிடைச்ச கல்வெட்டுகளில், மன்னர் ஆறாம் பராக்ரமபாஹு தன் ஆட்சி காலத்தில்  (1412 முதல் 1467 வரை) கோவிலுக்கு நிறைய நிலபுலன்களையும் செல்வங்களையும் கொடுத்துருக்கார்னு  ஒரு குறிப்பு இருக்காம்.

இவருக்கு அப்புறம் ஆண்ட மன்னர்களும் இந்தக் கோவிலைப் போற்றிப் பராமரிச்சுருக்காங்க.  பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1509 - 1528) மன்னர் ஒன்பதாம் பராக்ரமபாஹூ ஏராளமான நிலபுலன்களைக் கோவிலுக்குக் கொடுத்த விவரம் செப்பேடுகளில் இருக்குன்னு கோவில் நிர்வாகம் சொல்லுது!

இவ்வளவு சீரும் சிறப்புமா இருந்த கோவிலை,  1578 ஆம்  ஆண்டு  இடிச்சுத்தரைமட்டம் ஆக்கியது போர்த்துக்கீசியர்களின் ஆட்சி. 1505 இல் மெல்ல நுழைஞ்சவங்க, 1658 வரை இருந்து  நாட்டை ஒரு வழி பண்ணிட்டுத்தான் போனாங்க.

இவுங்க தொலைஞ்சபிறகு, சின்ன அளவில் மக்களும், மன்னர்களுமாக் கோவில்களைத் திரும்பக் கட்டி வழிபாடு நடத்திக்கிட்டு இருந்தாங்க என்றாலும் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கா ஆட்சியில் (1747 - 1782 )கொஞ்சம் புதுப்பித்துப் பெருசாவே கட்டிக் கும்பாபிஷேகம் நடந்தது 1753 இல்.  போனதெல்லாம் போகத் திரும்பவும் கோவிலுக்கு நிலபுலன்களை எழுதி வச்சார் மன்னர்.

காலப்போக்கில் கோவில் நிர்வாகம், இங்கே பூஜை செஞ்சுக்கிட்டு இருந்த குருக்கள் பொறுப்புக்கு வந்துருக்கு.  அவுங்களும் பரம்பரை பரம்பரையா நல்லபடி கோவிலைப் பராமரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாங்க.

திரு குமாரசாமி குருக்களின் காலத்தில் 1875 ஆம் ஆண்டு  கோவிலின் கருவறை, அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் எல்லாம்  சீர்ப்படுத்திக் கும்பாபிஷேகம்  செஞ்சாங்க.   இவருக்குப்பின்  திரு சோமாஸ்கந்த குருக்களின் பொறுப்பில் 1919 இல்  திரும்பவும் பழுது பார்த்தல் பராமரிப்பு, கும்பாபிஷேகம் எல்லாம் நடந்துருக்கு!

இந்தக்கோவில் குருக்களைப் பொறுத்தவரை,  இவர்கள் அனைவரும் பாரம்பரிய ஆகம விதிகளைப் புறக்கணிக்காமல்  ரொம்ப நல்லாவே இறைத்தொண்டு செஞ்சு வந்துருக்காங்க.  நம்ம தென்னிந்தியக் கோவில்களிலும் இவுங்களை கௌரவித்தே இருக்காங்க. ஆன்மிக விஷயத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும்  எப்பவும் நல்ல தொடர்புதான் இருக்கு!

1963 இல்  திரு பாலசுப்ரமண்ய குருக்கள் காலத்திலும், 1991 இல் திரு கைலாசநாத குருக்கள் காலத்திலும்  ரொம்ப நல்லபடி பெரிய அளவில் கும்பாபிஷேகங்கள் நடந்ததாகக் கோவில் குறிப்பு சொல்லுது!

நம்ம ஊர் கோவில்களையும்கூட  இப்படி  பரம்பரை குருக்களிடம் ஒப்படைத்தால் எல்லாமும் நல்லபடிதான் நடக்குமுன்னு எனக்குத் தோணுது.  கடவுள் நம்பிக்கையே இல்லாத ஆட்களிடம்   அந்த  அற நிலையத்துறை போனதில் எவ்வளவு சீர்கேடு நடந்துருக்கு பாருங்க.....

ராஜகோபுரம் எல்லாம் அட்டகாசமா மின்னுதேன்னு பார்த்தால்....  இதுவே புதுசுதான்.  டிசம்பர் 2017 ஆம் ஆண்டு  ராஜகோபுரம்  கட்டத் தொடங்கி, போனமாசம் (ஜூன் 25, 2018 ) கும்பாபிஷேகம் நடந்துருக்கு. நாம் அங்கே போன தேதி ஜூலை 27, 2018. முப்பத்தியிரண்டாவது நாள் ! ஆஹா....       பதிவுதான்   ஒரு வருஷம் கழிச்சு எழுதிக்கிட்டு இருக்கேன்.... கேட்டோ.....

சும்மா சொல்லக்கூடாது......  முக்கிய சம்பவங்களின் படங்களை எல்லாம்  ஃப்ரேம் செஞ்சு சுவரில் மாட்டி இருக்காங்க. அதைவிடக் கோவில்  வலைப்பக்கத்தில் எல்லா விவரங்களும் பக்கா !

தினமும் ஆறுகால பூஜை. கோவிலைக் காலையில்  அஞ்சரைக்குத் திறந்தால் இரவு எட்டுமணிக்குத்தான்  மூடறாங்க.   பயணிகளுக்கு ரொம்ப நல்ல வசதி. நடை அடைச்சுருக்கேன்னு  காத்திருக்கவோ, இல்லை தரிசனம் கிடைக்காமலோ  திரும்ப வேண்டிய அவசியமில்லை.

நம்ம பக்கங்களிலும்  இப்படி இருந்தால் எவ்வளவோ நல்லது. எல்லா ஊரும் காஞ்சிபுரமா என்ன? கோவில் திறக்கும்வரை பட்டுப்புடவை கடைகளுக்குள் நுழைஞ்சு,  நாலைஞ்சு  வாங்கிப்போக.... நீங்களே சொல்லுங்க.....
சரி, மூலவரை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு  போறோம். முன்மண்டபத்துலேயே கொடிமரம், பலிபீடம் !  அதுக்கு அந்தாண்டை வாசலுக்கு ரெண்டு பக்கங்களிலும் புள்ளையாருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதிகள்.
பிள்ளையார் இருக்கும் பக்கம் சுவரில் நீண்ட மாட அமைப்பில்  வகைவகையான பிள்ளையார்கள்.   முருகன் இருக்கும் பக்கம் இதே போல மாடத்தில்   முருக லீலைகள் !

முன்னேஸ்வரநாதர். கருவறைக்கு முன் இருக்கும்  அர்த்தமண்டபத்துலே சின்னதா  மேடையில்  உற்சவர்கள் நல்ல  அலங்காரத்தோடு இருக்காங்க. எதோ விழா போல இருக்கு!  விசாரிச்சதில் ஆடி மாசம் மஹோத்ஸவம் (மகோத்சவ விஞ்ஞாபனம்- 2018 ) மொத்தம் இருபத்திநான்கு நாள். நேத்துதான் கொடி ஏத்தி ஆரம்பிச்சு இருக்காங்க.  உத்ஸவம்   முடியும்வரை இப்படித்தான் அலங்காரமாம்.  அன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி  அபிஷேகம்  சாயந்திரம் உண்டுன்னாங்க.
லிங்க  வடிவில் மூலவர் !  தரிசனம் ஆச்சு.   வெளியே வந்து  உற்சவர்களை தரிசனம் செஞ்ச கையோடு வலம் தொடர்கிறோம்.  கொஞ்சம் கூட எதிர்பாராத வகையில்  நம்ம விஷ்ணு, விஸ்வரூபம் காமிக்கிறார். ஹைய்யோ !!!  ரொம்பவே பெரிய  அளவில்  இருக்கார்!
அவருக்கிடப்புறம்  வாஹனவரிசைகள் !  அறுபத்துமூவர் சந்நிதி, எல்லாம் ஒரு ஓரமா வரிசைகட்டி நிக்க,  விஷ்ணுவுக்கு நேரெதிரா  அம்பாள் வடிவுடைநாயகி சந்நிதி.  இன்னும் கூட தங்கையைக் கண்பார்வையிலேயே நிக்க வச்சுருக்கார்  பெருமாள். மீனாக்ஷி சந்நிதியில் திரை போட்டுருக்காங்க.


கருவறை கோஷ்டத்தில் தக்ஷிணா மூர்த்தி, லிங்கோத்பவர், கோஷ்ட கணபதின்னு  சிவன் கோவிலுக்குரிய  அம்சங்கள்.  ச்சும்மா மாடத்துலே  அமைக்காமல் தனிச் சந்நிதிபோலவே  ரொம்ப அழகாப் படிகளோடு  இருக்கு!

(உண்மைக்கும் ராவணன் ரொம்பவே அழகு இல்லே? )
விஷ்ணுதுர்கைக்கு அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  செவ்வாய்க்கிழமை ராஹுகால பூஜையாம்.  குருக்களிடம் அனுமதி கேட்டுக்கிட்டு க்ளிக்கினேன்.

ராஜகோபுரம் வழியா வெளி முற்றத்துக்குப் போனோம். வளாகம் ரொம்பவே பெருசு. கோவில் தல விருக்ஷம் அரசமரம்!  போ ட்ரீ(யாம்) போதி மரத்தை இப்படிச் சுருக்கியாச்சு. இதுவரை பார்த்த புத்தர்கோவில்களில் எல்லாம்  தலவிருக்ஷமா இதே அரசமரம்தானே! என்ன ஒன்னு .... ...  அங்கெல்லாம் மரத்தடியில் இருக்கும் புத்தர் சிலைகளுக்குப் பதிலா இங்கே மரத்தடிமேடையில்  நாகர்கள் !  கொஞ்சம் கிட்டப்போய்ப் பார்த்திருந்தால்  அதுக்கு அந்தாண்டை இருக்கும் கோவில் திருக்குளம் கண்ணில் பட்டுருக்கும். எங்கே....   அரசமரங்களையே பார்த்துப் பார்த்து....   இப்போ...  கிட்டே போகணுமுன்னு தோணலை. (அதானே.... போயிருந்தால் கொஞ்சம் ஞானம் கிடைச்சுருமே.... வேணுமா  நமக்கு அதெல்லாம்.... ) 
அதுக்குள்ளே  தெற்குப்பகுதியையொட்டிப் போகும் சாலையில்  புள்ளையார் கோவில் இருக்குன்னு  யாரோ சொல்ல, அங்கே போயிட்டோம். தனிக்கோவில் ! இங்கேயும் அழகான கடவுளர்களின் சிலைகள் !

ராஜகோபுரத் திருப்பணிக்கு உதவும் வகையில்  சில மணிமாலைகள் வச்சு விக்கறாங்க.  நானும் ஒன்னு வாங்கினேன் :-)
வடக்கிலும் தேர் நிறுத்தியிருக்கும் இடத்துக்கு அந்தாண்டை பத்ரகாளி அம்மன் கோவிலும் இருக்காம்.   வாசல் மூடி இருக்குன்னு  யாரோ சொன்னாங்கன்னு .... அங்கே போகலை.
  அஞ்சடுக்கில் புதுராஜகோபுரம்ரொம்ப அழகா பளிச்ன்னு இருக்கு! வளாகம் முழுசும் மணல் பரப்பி இருப்பதும் ஒரு அழகுதான். பீச் கோவில் !

இலங்கையில் இருக்கும் அஞ்சு முக்கிய  சிவன் கோவில்களில்  (பஞ்ச ஈச்சரம்!) இந்த முன்னேஸ்வரம் கோவில்தான் ரொம்பப் பழமையானதுன்னு சொல்றாங்க.  பலமுறை இடிக்கப்பட்ட கோவிலும் இதுதான். ஒவ்வொருமுறையும் கட்டி எழுப்பினது விசேஷம்.
மேற்குவாசலுக்குப் பக்கம் பக்தர்கள்  தங்க விடுதி ஒன்னு  அட்டகாசமாக் கட்டிக்கிட்டு இருக்காங்க.
எதிர்பாராமல் கிடைச்ச கோவில் தரிசனம் பரம திருப்தி! சரின்னு  கிளம்பிப் போனால்.... அடுத்ததாக இன்னொரு இன்ப அதிர்ச்சி !

தொடரும்......... :-)

PINகுறிப்பு :  கோவிலில் எடுத்த படங்களின்  தொகுப்பு அடுத்த பதிவில் !  

4 comments:

said...

எதிர்பாராமல் ஒரு கோவில் தரிசனம். மகிழ்ச்சி தான்.

படங்கள் அழகு. தொகுப்பினையும் பார்க்கிறேன்.

தொடர்கிறேன்.

said...

அனந்தசயனப்பெருமாள் மற்றும் விஸ்வரூப பெருமாள் சிலைகள் மிக அழகு ...


எல்லா சுதை சிற்பங்களும் அட்டகாசம் ,....ரசித்தேன் மா

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இந்தக் கோவில்வழியாகத்தான் போகப்போறோமுன்னு தெரிஞ்சுக்காமல் இருந்துட்டோம். நல்லவேளை பகல் நேரத்தில் கோவிலை மூடுவதில்லை என்பதால் நல்லதாப் போச்சு நமக்கு!

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

உண்மைதான்ப்பா! அருமையான சிற்பங்கள்! அழகும் கூட !!! இந்தக் கலை அழியாமல் இருப்பது முன்னோர் செய்த புண்ணியம்தான்!