Wednesday, August 23, 2023

வெயிலுள்ளபோதே.....

ரொம்பவே சுலபமான பிக்னிக் ஐட்டம் ஒன்னு எங்க யோகா  குடும்பத்துக்கு ஆகி வந்துருக்கு ! நோகாம நோம்பு என்ற வகை.  பகல் சாப்பாட்டுக்குன்னு ஒவ்வொருத்தரும் எதாவது சமைச்சு எடுத்துக்கிட்டுப்போய்  அங்கே போய்  சாப்பிட்டுட்டு உருளாம .... ஆக்டிவா இருந்தால் நல்லதுதானே !

Bபேல் & Fஃபலூடா லஞ்ச்  !   கேக்கவே நல்லா இருக்குல்லே ! 

மேலே படம்:  இடும்பி வீட்டு பேல்  :-)

 பேல்பூரிக்குண்டான ஐட்டங்களை ஆளுக்கு ஒன்னா எடுத்துப்போனால் போதும். பொரி, ஓமப்பொடி,  வேகவச்ச சன்னா, உருளைக்கிழங்கு,  வெள்ளரிக்காய், வெங்காயம் பொடியா அரிஞ்சது. கட்டா மீட்டா சாஸ்,  கொத்தமல்லி புதினா அரைச்செடுத்த க்ரீன் சாஸ்.   ஃபலூடா ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தர் நம்ம குடும்பத்துலே இருக்காங்க.  அவுங்க அதுக்குண்டானதை வாங்கி ரெடி பண்ணிருவாங்க. ரோஸ் ஸிரப், பால் & ஐஸ்க்ரீம் கடையில் வாங்கிடலாம்.  கொஞ்சம் ஜெல்லியும் செஞ்சுடலாம்.  முதல்நாளே கொதிநீரில் போட்டுக் கரைச்சு வைச்சால் ஆச்சு. கூடவே கொஞ்சம் சப்ஜா விதைகளைத் தனியா ஊறப்போட்டுடலாம்.  கைவசம் பதாம் பிஸின் இருந்தால் யதேஷ்டம்.  இல்லைன்னா மெனெக்கெட வேணாம்.

இந்த  பேல்பூரி எனக்கு ரொம்பப்பிடிக்கும். வழக்கமான பொருட்களின் கூடவே எனக்குத் தோணியதெல்லாம் கூடச் சேர்த்துக்குவேன்.  என்ன இருந்தாலும் இடும்பிக்குத் தனி வழி இல்லையோ :-)

இதோ இருக்கும் கொஞ்சநஞ்ச வெயிலும் முழுசாக் கண்ணைவிட்டுப்போகும்  காலம் வந்துக்கிட்டே இருக்கு. நாம் கொஞ்சம் முந்திக்கிட்டால் நல்லதுன்னு ஏற்பாடு .  எங்கே போகலாமுன்னு  யோசிச்சப்ப, 'என் புள்ளையாரை'  இவுங்க யாரும் பார்க்கலையேன்னு அங்கே போக முடிவு. 

சம்னர் என்ற பெயரில் ஒரு பீச் இருக்கு. நம்மூரில் இருக்கும் ரெண்டு பீச்களில் ஒன்னு. கொஞ்சநாளுக்கு முன்னே பட்டத்திருவிழான்னு போனோமே அது நியூ ப்ரைட்டன் பீச். 

இந்த இரண்டில் எனக்குப் பிடிச்சது சம்னர் பீச் தான்.  இயற்கைச் சூழலில் இருக்கும் வகை இது. இங்கே கேவ் ராக் என்னும் ஒரு சின்னக் குன்று இருக்கு.  குன்றுக்கடியில் குகை. 'எனிட் ப்ளைட்டனின்  ஃபேமஸ் ஃபைவ்' கதைகளில் வரும்  குகை வகைன்னு எனக்கு எப்பவும் தோணும்.  கடலில் Tடைட் நிறைய இருக்கும்போது குகைக்குள் தண்ணீர் நிறைஞ்சுரும்.  குகைக்குள் நுழைஞ்சு நடந்தால்  நேரெதிர்ப்புறம்  கடல் வாசல் ! 


இந்தக்குன்றின் அடிவாரத்தில் சட்னு யாருக்கும் புலப்படாத வகையில் நம்ம புள்ளையார் இருக்கார். அதுவும் ஸ்வயம்பு !  பஞ்சமுக கணபதி. 
இவரை முதலில் கண்டுபிடிச்சு,' சம்னர் வாழ் வரசித்தி விநாயகர்' னு பெயர் வச்சது யாருன்னு உங்களுக்குச் சொல்லலாமுன்னா தன்னடக்கம் தடுக்குது. இவரைப்பற்றி 'அப்பவே '  Bay Watch  பிள்ளையார் னு எழுதியிருக்கேன்.

http://thulasidhalam.blogspot.com/2006/08/baywatch.html

இங்கிலாந்து, செஸ்டர் என்னுமிடத்தில் ஆர்ச் பிஷப்பாக இருந்த ஜான் பர்ட் சம்னர் (John Bird Sumner )என்பவர்,  ஆர்ச் பிஷப் ஆஃப் கேன்டர்புரியாக நியமனம் பெற்று,  கேன்டர்புரி அசோஸியேஷன் தலைவராகவும் ஆனார். 

வெள்ளையர் நியூஸிக்கு வந்தது 1840 ஆம் ஆண்டு.   1849 இல்  கேப்டன் தாமஸ் ( கேன்டர்புரி அசோஸியேஷனின் ஏஜென்ட் ) என்பவருக்காக  நியூஸியின் இந்தப் பகுதியை சர்வே செய்ய  எட்வர்ட் ஜோல்லி , வந்து வேலையை முடிச்சுக்கொடுத்தார்.  527 செக்‌ஷன்ஸ் & ஏராளமான சின்னக்காடுகள்னு கணக்கு. அப்போ இந்தப் பகுதிக்கு கேண்டர்புரி  ஆர்ச் பிஷப்பின் பெயரையே வைக்கலாமுன்னு  சம்னர்னு பெயரை வச்சவர் கேப்டன் தாமஸ்.

கேப்டன் குக், முதல்முதலில் புது இடத்தைக் கண்டறிஞ்சு கால்குத்தியது நம்ம நியூஸியின் தெற்குத்தீவில்தான். இதைத்தான் மெயின் லேண்ட்ன்னு குறிப்பிடுவாங்க. இப்பவும் நியூஸியில் எந்த  முக்கிய சமாச்சாரம், அரசு ஏற்படுத்தும் வசதிகள்னு ஆரம்பிக்கும்போது நமக்குத்தான் முன்னுரிமை !   அப்பவே கேன்டர்புரின்னு  நம்ம ஊருக்கும் இதைச் சுற்றி இருக்கும் தொகுதிகளுக்கும் பெயர் வச்சாச்சு. இங்கிலாந்தில் கேண்டர்புரின்னு ஒரு ஊர் இருக்கு ! நாஞ்சொல்லலை..... போற இடத்தில் எல்லாம் தெரிஞ்சபெயரையே வச்சுருவாங்கன்னு :-) மிஞ்சிப்போனா முன்னொட்டா ஒரு நியூ சேர்த்தால் ஆச்சு ! அம்புட்டுதான் ! ஜோலி முடிஞ் !

சம்னர் சலோ என்றது உறுதியாச்சு.  யோகா வகுப்பு நேரங்களைத்தவிர இப்படிப்பட்டக் கொண்டாட்டங்களில்  அங்கங்களின்  சொந்தக் குடும்ப அங்கங்களும் கலந்துகொள்ளலாம். ஏன்..... வகுப்புகளில் கூட சில சமயம் உறவினர்கள்  வந்து கலந்து கொள்வதில் பிரச்சனை ஏதும் இல்லை.  நம்ம லக்ஷ்மி அண்ணியின் பேத்திகள், பள்ளிக்கூட விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வருபவர்கள், பாட்டியுடன் வகுப்புக்கும் வருவார்கள். உண்மையில் அந்தச் சின்னக்குட்டிகள், என்னை விட யோகாப் பயிற்சியை நல்லாவே செய்வாங்க.

சம்னர் பீச்சில் இத்தனை பெரிய கூட்டம் உக்கார்ந்து சாப்பிட வசதி இல்லை.  மணலில் உக்கார்ந்தால் , காற்றில் மணல் நம் வாயில்தான் !   

அதனால் இங்கிருந்து  டேலர்'ஸ் மிஸ்டேக்  போகும் வழியில் இருக்கும் ஸ்கார்பரோ என்னும் இடத்துலே  சந்திக்க ஏற்பாடு.  இங்கிலாந்தில் இருக்கும் ஸ்கார்பரோ என்னும் சின்ன  டவுனின் பெயர் இது.    ப்ரிட்டனில் இருக்கும் பெயர்கள் எல்லாம் நியூஸியிலும் ஆஸியிலும் இருக்கும் ! தெரிஞ்ச பெயரைத்தானே புது இடத்துக்கு வைக்க முடியும், இல்லையா ? 

இந்த டேலர்'ஸ் மிஸ்டேக் கூட நம்ம டேலர் இங்கே  நம்ம ஊரான க்றைஸ்ட் சர்ச்சுக்குக் கப்பலில் வந்தபோது, ராத்ரி இருட்டுலே  வந்து இறங்கிய இடம். பொழுது விடிஞ்சு பார்த்தால் ஊரைக் காணோம்.  நேரெதிரா மலைதான் இருக்கு.  அந்த மலையில் ஏறிப் பார்த்தால் மலைக்கு  அடுத்தபக்கம் ஊர் ! தப்புப்பண்ணிட்டேன்னு  சொல்லிட்டார்.  பரவாயில்லை. இந்த இடத்துக்கு இனி  நீ செஞ்ச தப்பையே பெயரா வைச்சால் ஆச்சு !  Taylor's Mistake இப்படித்தான்  பெயர்  வாங்கிருச்சு. 

  இங்கே வந்த புதுசுலே  Industrial Sewing Machines Courseக்குப் போன காலத்தில் மொத்த வகுப்பும் அவுட்டிங் டேன்னு  இந்த டேலர்'ஸ் மிஸ்டேக் போயிருந்தோம்.  ஸர்ஃப் பீச் இது !  வேறொன்னுமே கிடையாது.  இப்ப எப்படி இருக்குமோ என்னவோ ? 
போகட்டும், நாம் ஸ்கார்பரோ பார்க்கில் ஒன்று கூடறோம். ஒரு மணிக்கூண்டு இருக்குமிடம்.  இதுவுமே  தன் தகப்பனின் நினைவுக்காக, ரிச்சர்ட் எட்வர்ட் க்ரீன் என்பவரின் நன்கொடை.  இதேபோல இன்னொரு கடிகாரத்தைய நியூ ப்ரைட்டன்  பீச்சுக்கும் நன்கொடை அளிச்சுருக்கார்.     இவருடைய தகப்பன் எட்மண்ட் க்ரீன் என்பவர்தான், நியூஸியில் டெலக்ராஃப் சேவையை நிறுவினார். அந்தக் கால.... கட்டுக் கடகடா.... கடகட கட் நினைவிருக்கோ ? 
இப்படியெல்லாம் சரித்திரம் இருக்கும் ஊரில் இருக்கோம் என்றதுகூட ஒரு சந்தோஷம்தான், இல்லெ ? 
அப்போ...............
இப்போ.......

சரியான நேரத்துக்குப்போன நாம், ஒரு நல்ல இடம் பார்த்துப் புடிச்சு வச்சோம். ஏறக்கொறைய எல்லோரும் வந்து சேர்ந்ததும்.... கொண்டுவந்த பொருட்களையெல்லாம்  அங்கே பிக்னிக் டேபிளில் வச்சுட்டு, கடலையொட்டிய பாதையில் நடந்து புள்ளையாரை நோக்கிப் பயணம்.  சுமார் 1.2 கிமீ தூரம்தான் ! இந்தப் பாதையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை  என்பதால்  குறுக்கே மறுக்கே ஓடும்  செல்லங்கள் அதிகம். 


கேவ்ராக் அடிவாரத்தில் புள்ளையாரைக் காமிச்சப்ப வியப்போ வியப்பு !  சிலர் நான் சொன்ன அடையாளங்களை வச்சு வந்து தேடியிருந்தாங்க.  நம்மாள் யார் கண்ணும் புலப்படலை பாருங்களேன் ! 
இந்த கேவ்ராக் குன்றைக்கூட..... ஆதிகாலத்து மவொரியர்கள், செத்துப்போன திமிங்கிலம் னு நினைச்சாங்களாம்.  இதுக்கு ஒரு மவொரி கதை கூட இருக்கு !

Tūrakipō என்ற மவொரித் தலைவர், பக்கத்துப்பேட்டை தலைவருடைய மகளைக் கல்யாணம் கட்ட ஆசைபட்டார். அந்தப் பொண்ணு, மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொன்னதும் தலைக்குக் கோபம் வந்து பொண்ணைச் சபிச்சுட்டார். பொண்ணோட அப்பா ச்சும்மா இருப்பாரா? அவர் கை என்ன மாங்காய் பறிச்சுக்கிட்டா இருந்துருக்கும்?

விடுவிடுன்னு கடலை நோக்கி நிக்கும் மலைமேலே ஏறுனார். ரொம்ப சக்தி வாய்ந்த karakia (மந்திரம்/ப்ரேயர்) ஒன்னை ஜெபிச்சார். கடல் அரசன் திமிங்கிலம் கரைக்கு வந்து சேர்ந்து ஒதுங்குச்சு. தரை தட்டுன கப்பலுக்கும் திமிங்கிலத்துக்கும் ஒரே கதிதானே?

விஷயம் தெரியாத Tūrakipō வும் அவர் குடிகளும் திமிங்கிலத்தை வெட்டி, ஆக்கித் தின்னாங்க. மந்திரத் திமிங்கிலமுல்லே..... எல்லாருக்கும் மயக்கம் வந்துச்சு. மயங்கி விழுந்த யாரும் பிறகு எந்திரிக்கவே இல்லை.

இந்தத் திமிங்கிலத்தின் மிச்சம்மீதிதான் இப்போ இங்கே கிடக்கும் கேவ்ராக்.

அப்ப உண்மையில்  இது என்னவாம் ? 

எப்பவோ இருந்து அணைஞ்சு அழிஞ்சுபோன எரிமலையின் மிச்சம்தான்.

அப்புறம் வெள்ளையர் இந்தப் பகுதியை  சர்வே பண்ணும்போதுதான்...  இந்த குன்றின் உச்சியில் போற வர்ற படகுகளுக்கு  எச்சரிக்கையா  ஒரு கொடிமரம் நட்டுவச்சுருக்காங்க.  போட் ஆட்களுக்கு ரேடியோ சிக்னல் இதுவழியா அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டேன்.  அது இன்னும் இருக்கு ! 
    



திரும்பி வந்து லஞ்ச் ஆச்சு. அவரவருக்கு தேவையானபடி  பேல் ஐட்டங்களைக் கலந்துக்கலாம்.  அன்றைக்கு நம்ம யோகா குடும்ப அங்கம் ஒருவரின் பொறந்தநாள் என்பதால் கேக் வெட்டிக் கொண்டாடினோம்.


 ஃபலூடா  செஷன் ஆரம்பமாச்சு. ஒன்னையும் விட்டுவைக்கலை.









நாம் இருந்த இடத்தையொட்டியே பிள்ளைகளுக்கான  விளையாட்டுப் பகுதி.  பகல் மூணுவரை கொட்டமடிச்சுட்டு  மூட்டையைக் கட்டிக் கிளம்பியாச்சு !  

Friday, August 18, 2023

இப்படி விழாக்கள் வரிசை கட்டி நின்னால் எப்படி ?

பெரும்பாலும் ஒரு நாள் முன்னே பின்னேதான் என்றாலும் சிலசமயம்  அபூர்வமா ஒரே நாளில் வர்றதும் உண்டு. அப்படியான நாளில் எனக்கு  வேலை மிச்சம் :-) இந்த முறை அடுத்தடுத்த நாட்களில்தான்.....தமிழ் வருஷப்பிறப்பும் விஷூவும்.  விஷூக்கணியை ரெண்டுநாட்களுக்கும் சேர்த்தே ஒருக்கணும். 

முதலில் நம்ம ஜன்னுவுக்கு ஒரு புது உடை மாத்தணும்.  ஈக்கோ கடையில் ஒரு அலங்காரப் பாவாடை (காக்ரா ஸ்டைல் )மட்டும் கிடைச்சது. அது ரொம்பவே பெரிய சைஸ்.  பத்து வயசுப் பொண்ணுக்குச் சரியா இருக்கும். நம்மளவள் மூணு வயசுக்காரிதான் ! 
அதனால் பெரிய பாவாடையை வெட்டித் தைச்சேன்.  பாவாடை & சட்டை போக மீதம் வந்த துணியில் நம்ம  கிச்சுப்பாப்பாவுக்கும் ஒரு உடுப்பு ஆச்சு. அவனுடைய குட்டிப்பாப்பாவுக்கும் ஒரு உடுப்பு ஆச்சு :-) எல்லாமே சுமாரா நல்லா அமைஞ்சு போனதில்  மகிழ்ச்சி.  நம்மளவந்தான் எனக்கொன்னும் இல்லையா என்னும் பார்வையோடு மிஷின் ரூமில் எனக்குக் கம்பெனி கொடுத்துக்கிட்டு இருந்தான் :-)

விசேஷதின அலங்காரங்கள் எல்லாம்,  முந்தி  வீட்டு முன்னறையில் செஞ்சுக்கிட்டு இருந்த இடத்தில் Bபாலி புள்ளையார்  நிரந்தரமா இடம் புடிச்சுக்கிட்டதால்  இப்பெல்லாம் பூஜை அறையிலேயே செஞ்சுக்கும்படி ஆகிப்போச்சு.  போகட்டும் இதுவும் நல்லதுக்கே !
தமிழ்வருஷப்பிறப்புக்குக்  கணிகண்டால் ஆகாதா என்ன ?  அம்பலப்புழா க்ருஷ்ணன் ஒன்னும்  சொல்லமாட்டாந்தானே ? பழங்களும் , ஸேமியா ஜவ்வரிசிப் பாயஸமும்தான் ஸ்பெஷல்.  மாய்ஞ்சு மாய்ஞ்சு சமையல் செய்த காலமெல்லாம் போச்சு.   வயசாக ஆக ஆண்களுக்கும் வயிறு சுருங்கிருது இல்லே ? 
உள்ளூர் இந்தியன் துணிக்கடையில் ஹரிக்கு ஒரு ரெடிமேட் சுடிதாரும், நம்ம ஜன்னுவுக்கு ஒரு பஞ்சாபி ஸ்டைல் ஸல்வார் கமீஸும் வாங்கிப் பூஜையில் வச்சாச். 

எது குறைஞ்சாலும்  கைநீட்டத்தை விட்டுருவோமா என்ன ?  இப்பக் கூடுதலா ஒருத்தர் வந்துட்டார் :-) 
சாயந்திரம் நம்ம செல்லப்புள்ளையார் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்புப் பூஜை. நம்ம ஊருக்கு அருகம்புல் அத்தாரிட்டி  நாம்தானே?  ஒரு மாலை கட்டி வைச்சேன். கோவிலே நமக்கு மஹாப்ரஸாதம் கொடுப்பதாகச் சொன்னதால் வேறொன்னும் சமைச்சுக் கொண்டு போகலை. கொஞ்சம் பழங்கள் மட்டும்தான்.   நம்ம செந்தில்தான் கேட்டரிங் !

நம்ம செல்லப்புள்ளையார் கோவில் வாரம் ஏழுநாட்களும் மாலை 7 முதல் எட்டரை வரை தரிசனத்துக்கு திறந்திருக்கும். இது போல விசேஷ நாட்களில் அந்த எட்டரை என்பது பத்துமணி வரை கூட நீண்டு போகும் வாய்ப்பு உண்டு. எல்லாம் வர்ற பக்தர்கள் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான்.



இன்றைக்குப் புள்ளையாருக்கு  அபிஷேகம் செய்யறோம். நம்ம நேபாளி பண்டிட்தான் விஸ்தாரமா அபிஷேகம் செய்வார். பால் அபிஷேகம் செய்யும் நேரம்  வந்தவுடன்,  வரும் பக்தர்கள் அனைவருக்கும் பால் அபிஷேகம் செய்ய வாய்ப்பு கொடுக்கிறோம். ரொம்ப நல்லதுதான், இல்லே !


விசேஷ அம்சமா, எல்லாக் குழந்தைகளுக்கும்  கைநீட்டம் கொடுத்தோம்.  புள்ளையார் தந்த காசுன்னதும் பசங்களுக்கு ரொம்பக் கொண்டாட்டம்.



மறுநாள் விஷூ. நம்ம வீட்டுலே  நைவேத்யம் மட்டுமே வேற.  ட்ரை ஃப்ரூட்ஸும், சாக்லெட்டும் போதுமுன்னு சொல்லிட்டான் க்ருஷ்ணன்.
அன்றைக்கு சனிக்கிழமையா இருந்ததால் வழக்கம்போல் ஹரே க்ருஷ்ணா தரிசனமும் ஆச்சு! ஆனால்  பகல் தரிசனம்.  மதியம் ஒரு மணிவரை இஸ்கான் கோவில் திறந்திருக்கும்.  
இங்கெ நிறைய நிகழ்ச்சிகளை வீக்கெண்டுக்குன்னு  நேர்ந்து விடுவதால்....  மாலை ஆரத்திக்குப் போகமுடியாத நாட்களில் பகல் தரிசனத்துக்குப் போய் வர்றதுண்டு.

ஆமாம்.... இன்னைக்கு வேறென்ன கொண்டாட்டம் ? 
நம்ம தமிழ்ச்சங்கத்தின்  தமிழ்ப் புத்தாண்டு விழாதான் !  நம்ம வழக்கப்படி ஒருமணி நேரம் தாமதமாகத்தான் விழா ஆரம்பிச்சாங்க. சுமாரான கூட்டம்தான் இன்றைக்கு.  
இந்த ரெண்டு வருஷங்களா, இந்தியத்தமிழர் ஒருவர்தான் சங்கத்தின் தலையாக இருக்கார். போட்டிகள் எல்லாம் குறைஞ்சுருக்கு.  ஆரம்ப காலத்துலேயே   விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான்  தமிழ்நாட்டுத் தமிழர்கள் !   பெரும்பாலான அங்கங்கள்  இலங்கை மக்கள் என்பதால்..... தலைமையிடத்துக்கான போட்டியில்   கொஞ்சம் விரும்பாதவைகள் நடந்து போச்சு.   1994 இல் இந்தத் தமிழ்ச்சங்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் இருக்கிறோம் என்பதால்   எனக்குக் கொஞ்சம் மனவருத்தம்  வந்ததெல்லாம் உண்மை.  

இந்த கலாட்டாவால்தான்,  அப்புறம் அங்கங்களாச் சேர்ந்த  இந்தியத் தமிழர்கள் பலர், இங்கிருந்து பிரிந்துபோய்  'இண்டியன் தமிழ் அசோஸியேஷன்' ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே மொழியாக இருந்தாலும்  மொழிக்காக ஆரம்பிச்சதில்,  பிரிவு வந்ததுருச்சு.....  ப்ச்....

ஒரு பதினாலு ஆண்டுகள், கலை கலாச்சார ஒருங்கமைப்பாளராக இருந்தபோது  பல தலைகளின் கூடப் பொறுப்பை  ஏற்று நடத்திய  அனுபவம்  நமக்கு இருக்கே !  நம்ம ஆட்சியில்தான்  சங்கத்தின் பேனர் தயாரித்தோம்.  திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு நண்பரின் உதவியால் இந்த வேலையை முடித்துக்கொடுத்தேன். இந்த பேனரைப் பார்த்தவுடன்தான்  கடந்த கால சம்பவங்களின் நினைவு ,    கொசுவத்தியைப் பத்தவச்ச மாதிரி   (ஃப்ளாஷ்பேக்) எனக்கு எப்பவும்  வந்துரும்.  இதுவரை வெளியில் புலம்பாததை இன்றைக்குச் சொல்லிட்டேன்...... 

வழக்கம்போல் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நடனம், பாட்டு, பேச்சுன்னு எல்லாம் ஆச்சு.  மணப்பாறை மாடு கட்டி அட்டகாசமாக இருந்துச்சு . ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன்.  விரும்பினால் இந்தச் சுட்டியில் பார்த்து மகிழலாம் 

https://fb.watch/mtx6bDyIqG/


தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப்  பத்து ஆண்டுகள் பொறுப்பேற்று நடத்திய நண்பர்,  இன்று பள்ளிப்பொறுப்பை விட்டு விலகுகிறார். இத்தனை ஆண்டுகள் அவர் செய்த சேவையைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.  
விரும்பினால் தமிழ்ச்சங்க நிகழ்வுகளை இங்கே ஃபேஸ்புக்கில்  பார்க்கலாம்.

https://www.facebook.com/CanterburyTamilSociety

வழக்கமா எங்க தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்கு நாங்க எல்லோருமே 'பாட்லக்' வகையில் ஏதாவது சமைச்சுக்கொண்டு போவோம். இந்த முறை டின்னர், சங்கமே கொடுப்பதாக அறிவிச்சுருந்தாங்க. நம்ம தோழி ஒருவர் ரெஸ்ட்டாரண்டு நடத்தறாங்கன்னு சொல்லியிருந்தேனே... அவுங்கதான் ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க.   தமிழருக்குப் பிடிச்ச பரோட்டாவும், வெஜிடபிள் குருமாவும், சாம்பாரும்  ! சாம்பாருக்கான சோறு மட்டும்,  சங்கம் சமைக்கிறதா இருந்து, எப்படியோ  மறந்துட்டாங்க :-)   

போகட்டும்....

'தமிழன் சோற்றாலடித்தப் பிண்டமா'கவே எப்போதும் இருக்கணுமா என்ன ? 

ஹாஹாஹாஹா