Friday, August 11, 2023

திருவோணத்தான்........

குழந்தையைப் பார்க்கப்போகும்  மகிழ்ச்சியில்  காலையில் சீக்கிரமாவே  எழுந்து மகள் வீட்டுக்குப்போய் அங்கே இருக்கும் செல்லங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்துட்டு,  வீட்டுக்கு வந்து குளிச்சுட்ட, சாமி ப்ரஸாதமா  இடும்பி ஸ்டைல்  அக்காரவடிசில் ( வேண்டாம் என்றாலும் எல்லாத்துலேயும் முந்திரி திராக்ஷையைச் சேர்த்துக்கறதுதான்  )
செஞ்சு  நம்ம பெருமாளுக்கு அம்சி பண்ணிட்டு,   மத்யான சமையலையும்  அரக்கபரக்க முடிச்சுட்டுக் கிளம்பிட்டோம்.


நம்மூர்  ஆஸ்பத்ரியில்  பப்ளிக் பார்க்கிங் கிடையாது. முந்தி சின்ன அளவிலெ இருந்ததையும்,  ஆஸ்பத்ரி  விரிவுபடுத்தன்னு  எல்லா இடங்களையும் எடுத்துக்கிட்டாங்க.  எமர்ஜன்ஸிப் பிரிவுக்கு மட்டும் கொஞ்சூண்டு இடம் பார்க்கிங் செஞ்சுக்க விட்டுருக்காங்க. ஆஸ்பத்ரிக்கு  வர்றவங்களுக்கான  பார்க்கிங் னு  2.2 கிமீ தூரத்தில் வேற ஒரு இடத்தில்  ஏற்பாடு.  அங்கே நாம்  வண்டியை நிறுத்திட்டு,  ஆஸ்பத்ரி ஷட்டில் மூலம்  ஆஸ்பத்ரிக்கு வரணும். இது இலவச சேவைதான்.  பார்க்கிங்  காசு மட்டும் நாம் அடைச்சால் போதும்.  இது நமக்கு மட்டுமில்லை.... டாக்டர்கள், நர்ஸுகள், மற்ற ஸ்டாஃப் மெம்பர்கள் அனைவருக்குமான பார்க்கிங்தான்.   கொஞ்சம் சல்யம்தான் இல்லே ?   

 ஆஸ்பத்ரிக்கு எதிரில் இருக்கும் ஹேக்ளி பார்க்கில்  கொஞ்சம் இடம் பார்க்கிங் பகுதிக்கு ஒதுக்கினால் நல்லதுன்னு சனம் கேட்டுக்கிட்டே இருக்கு.  எங்கே ? 

முதல்முதலில்  1850 ஆம்  வருஷம் நாலு கப்பலில்  சனம் இங்கிலாந்தில் இருந்து  நியூஸி (நம்ம ஊரில் ) வந்து இறங்கிய ஆறே மாசத்தில் க்ரிக்கெட் க்ளப் ஆரம்பிச்சு விளையாட ஆரம்பிச்சுருச்சு. ஒரு கையில்  பைபிளும் ஒரு  கையில் க்ரிக்கெட் மட்டையுமா வந்துட்டாங்கன்னு சொல்லிக்கிறதுதான்.  
ஆரம்பகாலத்தில்  ஊருக்கு நடுவிலே ஒரு சர்ச், அதை  சுத்திக் கொஞ்ச தூரத்திலே நாலு பக்கமும் நாலு அவென்யூக்கள். சர்ச்சுக்கும் அவென்யூக்களுக்கும் நடுவில் ஊர். இப்படித்தான் அமைப்பு.  ஒவ்வொரு அவென்யூக்கும்  ஒவ்வொரு பெயர். எல்லாம் இங்கிலாந்தில் பரிச்சயப்பட்டப் பெயர்கள்தான். 

 அப்படித்தான் ஹேக்ளி அவென்யூவை ஒட்டி பெரிய பார்க் ஒன்னு 407 ஏக்கரில் !  அங்கெதான் இந்த க்ரிக்கெட் க்ளப் விளையாட ஆரம்பிச்சது.  'ஹேக்ளி ஓவல்'னு பெயரும் ஆச்சு.  இந்த 'ஓவல்'தான் இங்கிலாந்தில் இருக்கே !  எல்லாம்  அவுங்களுக்குத் தெரிஞ்ச பெயர்களில்தான், இங்கேயும். நம்மூர் (க்றைஸ்ட்சர்ச்)என்ற பெயரும் கூட   இங்கிலாந்திலும் இன்னும் பல நாடுகளிலும் இருக்கு. 

இந்த நியூஸிலேண்ட் என்பதுகூட..... ஹாலந்து தேசத்தில் (ஹாலந்து இப்ப நெதர்லாந்து ஆகிருச்சு) இருக்கும் ஒரு மாகாணமாகிய ஸீலேண்ட் என்ற பெயருடன் நியூ சேர்த்ததுதான்.  வெள்ளையர் ஸ்டைலே இப்படித்தான்.  நாடுபிடிக்கப் போற இடங்களில், நாட்டைப் பிடிச்சதும் அவுங்களுக்குப் பரிச்சயமான பெயர் கூட  ஒரு நியூ சேர்த்துக்குவாங்க.  
மகள் இருந்த அறை ஜன்னல் வழியாகத் தெரிஞ்ச  ஹேக்ளி ஓவல். டே & நைட் கேமுக்கான  லைட்ஸ் இருக்கு பாருங்க.

அப்புறம் காலம் போகப்போக நகரம் விரிவடைஞ்சு,  க்ரிக்கெட் விளையாட லங்காஸ்டர் பார்க்னு ஸ்டேடியம் கட்டுனாங்க.  அதான்  2011 வருஷ நிலநடுக்கத்தில் போயிருச்சு. நிலநடுக்கத்தில் நம்மூர் ஸ்டேடியம் போயிருச்சுன்னு ..... அவசர அவசரமா......  தாற்காலிக ஸ்டேடியம் அமைக்கிறோமுன்னு  ஹேக்ளி பார்க்கில்  நிறைய இடத்தைப் புடிச்சுக்கிட்டாங்க.    'ஹேக்ளி ஓவல் 'னு  பழைய பெயர் வேற !  (நீங்கெல்லாம்  அநேகமா க்ரிக்கட் மேட்ச் நடக்கும்போது டிவியில் பார்த்திருப்பீங்க, இல்லை ! )
முதலில் பத்துவருஷ ஒப்பந்தம்தான். போற போக்கைப் பார்த்தால்  தாற்காலிகமாத் தெரியலை.  பொறுத்திருந்து பார்க்கணும்......
ஷட்டில் பிடிச்சு ஆஸ்பத்ரிக்கு வந்தோம்.   வளாகத்தில்  ஏழு நக்ஷத்திர வசதியோடு விமன்'ஸ் ஹாஸ்பிட்டல் ! இதுவுமே புதுக்கட்டடம்தான்.   வேற இடத்தில் இருந்த  பழைய விமன்'ஸ் ஹாஸ்பிடல்,  (1952 இல் கட்டியது ) சிக்பில்டிங் ஆகிருச்சுன்னு  பப்ளிக் ஹாஸ்பிடல் வளாகத்துலேயே கட்டுனதுதான். இதுக்கே வயசு பதினெட்டு ஆச்சு. ஆனாலும் என்னவோ  இப்பதான் கட்டி முடிச்சாப்லெ இருக்கும். அப்படி ஒரு பராமரிப்பு ! (நம்ம வீட்டுக்கும் இதுக்கும் ஒரே வயசு !!!!  ஹாஹா )

வெயிட்டிங் ரூமில் கொஞ்சநேரம் இருக்கவேண்டியதாச்சு. அறையில்  செக்கப் நடந்துக்கிட்டு இருந்ததாம்.  அப்புறம் நாங்க போய் பேரனைப் பார்த்தோம்.  கையோடு கொண்டுபோயிருந்த  தாயார் குங்குமத்தை அவுங்க மூணுபேருக்கும் வச்சுட்டு, அக்காரவடிசிலைக் கொடுத்தேன்.  இங்கெல்லாம் பத்தியம் ஒன்னும் பார்க்கறதில்லையாக்கும். 
பொதுவா  மறுநாள்  (அதிகப்பக்ஷம் நாப்பத்தியெட்டு மணிநேரம்) இங்கிருந்து வேற பேட்டைகளில்  இருக்கும் ஹாஸ்பிடலுக்குத் தாயையும் சேயையும்  மாத்திருவாங்க.  அதனால் மறுநாள்  எங்கே மாத்தப்போறாங்களோன்னு ஒரு சின்னக்குழப்பம் இருந்துச்சு.  ஆனால்  சிஸேரியன் என்பதால்  மாற்றம்  இல்லைன்னு சொல்லிட்டாங்க. 
குழந்தை திருவோண நக்ஷத்திரத்தில்  பொறந்துருக்கான்.  அன்றைக்கு சனிக்கிழமை & ஏகாதசி வேற !  பெருமாளே வந்துட்டான்னு ஹரின்னு பெயர் வைச்சேன்.  தாய்தகப்பன் வச்ச பெயர் வேற ! 
நம்ம நெருங்கிய தோழிதான் இங்கே மகப்பேறு பிரிவில் சீனியர் டாக்டர்.  இன்னொரு தோழியும் இங்கே  அட்மின்லே வேலை.  இவுங்க ரெண்டுபேரும் நம்ம யோகா குழுவின் அங்கங்களும் கூட ! 
தினமும் ஹாஸ்பிடல் விஸிட், மகள் வீட்டுச் செல்லங்களுக்கு சாப்பாடு கொடுப்பதுன்னு அஞ்சு நாட்கள் போயிருச்சு.
அஞ்சாம் நாள்  வீட்டுக்கு விட்டாங்க.  மதியம் மூணு மணிக்கு டிஸ்சார்ஜ்.   நம்ம வீட்டுக்கா இல்லை மகள் வீட்டுக்கான்னு கேட்டப்ப, மகள் வீட்டுக்குத்தானாம்.  குழந்தையை  பேபி காப்ஸ்யூலில் வச்சு எப்படி கையாளனுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.   மகள் வண்டியில் ஏற்கெனவே இதுக்கான ஃபிட்டிங் எல்லாம்  செஞ்சுருந்தாங்க.  நாங்க ஷட்டிலில் போய் நம்ம வண்டியை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடல் வந்து மருமகனைக் கூட்டிக்கிட்டு  நேரா   மகள் வீட்டுக்குக் கொண்டுபோய்  விட்டோம்.  அவர் மகளோட வண்டியை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்குப் போனார்.  நாங்க நம்ம வீட்டுக்கு வந்து தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு மகள் வீட்டுக்குப்போய் ஆரத்தி கரைச்சு வச்சுத் தயாராக இருந்தோம். 
மூணுபேரும் வந்தவுடன் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அனுப்பிட்டுக் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தோம்.  நம்ம பேட்டைதான் இதுவும்.  ரெண்டுவீட்டுக்கும்  இடையில் 1.1 கிமீ தூரம்தான்.  கொஞ்ச நாட்களுக்குத் தினமும் விஸிட் வரத்தான் வேணும் ! புதுப்பெற்றோரும் புதுக்குழந்தையும் சீக்கிரம் செட்டில் ஆகிருவாங்கன்னு நம்பறேன்.
புதுக்குழந்தை பொறந்ததும் தாய்க்கு ஆறு மாசமும், தகப்பனுக்கு ரெண்டு வாரமும் அரசு லீவு கொடுக்குது. இதைத் தவிர தாய், இன்னும் ஒரு ஆறுமாசம்  சம்பளமில்லாத விடுப்பு கூட எடுத்துக்கலாம். இந்த ஒரு வருஷத்துக்குப்பின் தாய் வேலை செய்த அதே இடத்தில் அதே வேலையில் போய் சேர்ந்துக்கலாம். 'உனக்கு பதிலா வேற ஆளை வேலைக்கு எடுத்தாச்சு. இனி உனக்கு இங்கே வேலை இல்லை'ன்னு சொல்லமுடியாது !



அன்றைக்கு புதன் கிழமை. நமக்கு யோகா வகுப்பு  என்பதால்   உள்ளூரில் இருக்கும் இந்தியன் கடையில்  கொஞ்சம் இனிப்பும் காரமும் வாங்கி எடுத்துக்கிட்டு நம்ம யோகா வகுப்புக்குப்போய் பயிற்சி முடிஞ்சதும் குழந்தை வரவைக் கொண்டாடியாச். 




பிறகு அங்கிருந்து புதன்கிழமைப் புள்ளையார் கோவில்.   வழக்கம்போல் யோகா குழுமக்களும் கூடவே வந்துருந்தாங்க. புள்ளையாருக்கு ஆரத்தி எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.

குழந்தை நல்லா இருக்கணுமுன்னு  வேண்டிக்கிட்டோம்.  இனி எல்லாம் நலமே ! 

2 comments:

said...

உங்களுக்கும் கோபால் சாருக்கும் வாழ்த்துகள்.

எல்லாம் உங்கள் தெய்வ தரிசனங்களின் பலன்.

said...

புது வரவும் கொண்டாட்டங்களும் இனிய தருணங்கள்.