நமக்கு சனிக்கிழமை கோவிலுக்குப் போறதுதான் வழக்கம் என்றாலும், சில சமயங்களில் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் நிகழ்ச்சிகளால் சனி மாலை போக முடியறதில்லை. அப்படியான நாட்களில் வெள்ளிக்கிழமை மாலை ஆரத்திக்குப் போயிருவோம்.
ஹரேக்ருஷ்ணா மக்களின் பஜனை வெள்ளி மாலைகளில் இருக்கும்.
மறுநாள் சனிக்கிழமை முக்கியமான சில நிகழ்ச்சிகள் அமைஞ்சுருக்கு.
மகளை ஹாஸ்பிடலில் கொண்டுபோய் விடணும். விசேஷ கவனிப்பு வகையில் மகள் இருப்பதால் வாரம் மூன்று முறைகள் போய் வரணும். குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க வாரம் ஒருமுறை ஸ்கேனிங் வேற தனி. திடீர்னு ஒரு நாள் பரிசோதனைக்குப்பின், பிரஸவம் இயற்கை முறையிலா இல்லை அறுவை சிகிச்சை மூலமான்னு மகளையே முடிவு பண்ணிக்கச் சொல்லி, நல்லது கெட்டது உட்பட அதுக்கான எல்லா விளக்கங்களையும் கையில் கொடுத்துட்டாங்க. நல்லா யோசனை செஞ்சபின், இயற்கை முறைன்னு மகள் சொன்னதால்..... முப்பத்தியெட்டாம் வாரமே காலை ஆறுமணிக்கு ஹாஸ்பிடலில் வந்து அட்மிட் ஆகணுமுன்னு ....... கூடவே கணவரும் இருக்கலாம்.
Whooping Cough பிரச்சனை அதிகம் இருப்பதாகவும், சில குழந்தைகள் இதன் காரணம் சாமிகிட்டே போயிருச்சுன்னும் சொல்லி, பெற்றோரும், குழந்தையைத் தொட்டுத்தூக்கிப் பார்த்துக்கும் நெருங்கிய உறவினரும் (எல்லாம் நாங்க ரெண்டுபேரும்தான்!) இதுக்கான தடுப்பூசி போட்டுக்கணுமுன்னு அறிவுருத்தியதால் நாங்க எங்க சொந்த செலவுலேயும், மகளும் மருமகனும் ஆஸ்பத்ரி வகையிலும் போட்டுக்கிட்டோம். இங்கே பிள்ளைப்பேறு மருத்துவமனை சேவைகள் எல்லாம் இலவசமே ! ஜெனரல் ஹாஸ்பிடலிலும் நாம் சிகிச்சை எடுத்துக்கிட்டால் முற்றிலும் இலவசம்தான்.
எனக்குத்தான் மனசு பக்பக்னு இருக்கு.
காலையில் நாலரைக்கே எழுந்து குளிச்சுட்டு, நம்ம வீட்டில் சின்னதா பூஜை முடிச்சுட்டு, மகளையும் மருமகனையும் ஹாஸ்பிடலில் கொண்டுபோய் விட்டாச்சு. இனி அங்கிருந்து தகவல் வரும்வரை மனக்குழப்பம்தான், இல்லையா.....
அன்றைக்கு நம் ஃபிஜித் தோழியின் புது வீட்டு கிரகப்ரவேசம் காலையில் வச்சுருக்காங்க. மாலையில் ராமாயணம் வாசிப்புக்கான சத்சங்கம் புதுவீட்டில்.
நம் வீட்டாண்டை இருக்கும் அன்பு விநாயகர் கோவிலுக்குப் போயிட்டு அப்படியே கிரகப்ரவேசம் போயிட்டு வந்துறலாமுன்னு 'நம்மவர்' சொன்னார். அதே போல் ஆச்சு.
அன்பு விநாயகர் கோவில் வார நாட்களில் சாயங்காலங்களிலும் (6.30 முதல் 8.30 வரை), சனிக்கிழமையில் காலை 9 முதல் 11 வரைன்னு வச்சுருக்காங்க. அன்பு விநாயகர் சம்பந்த நிகழ்ச்சிதான் அன்றைக்கு மாலை நடக்கவிருக்கும் விசேஷம்.
புள்ளையாரை வேண்டிக்கிட்டு, தோழியின் புது வீட்டைக் கண்டுபிடிச்சுப்போகும்போதே மணி பத்தே முக்கால். பூஜை முக்கால்வாசி முடிஞ்சுருந்தது. நம்ம ஃபிஜி சநாதன் தர்ம சபாவின் பண்டிட்தான் பூஜையை நடத்திக்கிட்டு இருந்தார். நல்லவேளை ஹவன் முடியும் நேரத்துக்குள் போயாச். கராஜில் அடுப்பு வச்சு நண்பர்கள் உதவியுடன் சமையல் நடக்குது. ஃபிஜி மக்களிடம் பாராட்டவேண்டிய குணங்களில் ஒன்னு..... ஆண்கள் எல்லோரும் சேர்ந்து எத்தனை பெரிய விழாவாக இருந்தாலும் சமைச்சுருவாங்க. பெண்கள் சின்னச்சின்ன மேல்வேலைகள் செஞ்சு கொடுத்தால் போதும் ! கொஞ்ச நேரம் வீட்டைச் சுத்திப்பார்த்து, நண்பர்களுடன் பேசிட்டுக் கிளம்பிட்டோம்.
வீட்டுக்கு வந்து சின்னதா சமையல் செஞ்சு சாப்டுட்டு, மருமகனுக்கு ஃபோன் செஞ்சு விசாரிச்சால்...... வலி உண்டாக மருந்து செலுத்தியிருக்காங்களாம். இனி காத்திருப்பு மட்டுமே..... திக் திக் பக் பக்...... மனசுதான் கேட்டோ !
அன்பு விநாயகர் நிகழ்ச்சின்னு (Hindu Culture Night ) சொன்னேன் பாருங்க..... அதுக்கு அஞ்சு மணிக்குப் போகணும். இப்போ வீட்டு வளாகத்தில் கோவில் கொண்டுள்ள விநாயகருக்குப் புதுக்கோவில் கட்டும் ஏற்பாட்டின் முதல் கட்டமான நிதிவசூல் நிகழ்ச்சி.
முக்கிய விருந்தினராக எங்கள் பகுதிக்கான பாராளுமன்ற அங்கம் வந்துருந்தாங்க. போன தேர்தலுக்குப்பின் இவுங்க அமைச்சரா இருக்காங்க. வெவ்வேற அமைச்சகத்தில் இவுங்க பொறுப்பேற்று நல்லபடி நடத்தி, அப்புறம் போனவருஷம் இமிக்ரேஷன் அமைச்சராகி, இப்ப நியூஸி ஹௌஸிங் மினிஸ்டர். நம்முடைய நெடுநாள் நண்பர்தான் இவுங்க. அரசியலில் ஈடுபாடு வந்தது முதல் பல நிகழ்ச்சிகளில் பார்த்துப் பழகியே இப்போ நண்பர்கள் லிஸ்ட்டில் இருக்கோம்:-)
இங்கே பதவி எத்தனை பெருசா இருந்தாலும் பந்தா ஏதும் இல்லாமப் பழகும் மக்கள்தான் பெரும்பாலும். அதுலே அரசியல் வியாதின்னா கேட்கணுமா ? நம்மூர் சிட்டிக் கவுன்ஸில் கவுன்ஸிலர்கள் ரெண்டு பேரும் வந்துருந்தாங்க. இவுங்களும் நமக்கு நெருங்கிய நண்பர்களே ! தவிர ஆளும் கட்சி & எதிர்க்கட்சி முக்கிய அங்கங்களுக்கும் அழைப்பு அனுப்பி, அவுங்களும் வந்துருந்தாங்க.
எல்லோரையும் பார்த்துப்பேசி மகிழ்ச்சியா இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு கவலை ஓடிக்கிட்டு இருக்கு. கூட்டத்தில் முக்கால்வாசியும் நமக்குத் தெரிஞ்சவங்கதானே !
கோவில் வரப்போகும் விவரங்களை மேடையில் பவர்பாய்ண்ட் ப்ரசென்டேஷனோடு விளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்கார் நண்பர். எப்படி திடீர்னு கோவில் கட்டும் வேண்டுதலைப் புள்ளையாரிடம் வச்சார் என்றால், அவருடைய மனைவிக்கு இரண்டாம் பேறுகாலத்தில் கொஞ்சம் சிக்கலான நிலை வர, இவர் புள்ளையாரை மனதில் நினைச்சு வேன்டும்போது, எல்லாரையும் போல ... சிக்கல் தீர்ந்தால் உன் கோவிலுக்கு இதைச் செய்யறேன், அதைச் செய்யறேன், அந்தப்பூஜை செய்யறேன், இத்தனை விரதம் இருக்கேன்னெல்லாம் நினைக்காம, கோவில் கட்டறேன்னு வேண்டிக்கிட்டாராம்.
வெளிநாட்டில் இருந்துக்கிட்டுக் கோவில் கட்டுறதெல்லாம் சாதாரண சமாச்சாரமா என்ன ? வாக்கு மீறாமல், இந்தியாவில் இருக்கும் உறவினர் உதவியுடன் புள்ளையாரை இங்கே இறக்குமதி செஞ்சுட்டார். வீட்டு வளாக்கத்துலேயே ஒரு அறையும் கட்டியாச்சு. புள்ளையார் ப்ரதிஷ்டைக்கான விழா ஏற்பாடாச்சு. அதுக்கு முஹூர்த்தக்கால் நட்டு ஆரம்பிச்சு வைக்க நமக்கு அழைப்பு வந்து நாம் போனதெல்லாம் ஏற்கெனவே சொல்லிட்டேன்னு நினைவு. இதெல்லாம் நடந்தது போன ஆகஸ்ட் மாசம். இதோ, இப்ப இன்னும் ஒரு பதினைஞ்சு நாட்களில் முதல் பிறந்தநாள் வரப்போது அன்பு விநாயகருக்கு !
இப்போதைக்கு மொத்த பட்ஜெட் நாலு மில்லியன் டாலர்கள். ப்ளான் எல்லாம் பக்காவாப் போட்டுப் படம் காண்பிக்கும்போது பார்க்கவே ஆசையாத்தான் இருக்கு!
பாடல், நடனம் னு சிலபல நிகழ்ச்சிகளும் ! தபேலா வாசிப்பவர் நண்பர் ஜோஷுவா.
பூமி கர்த்தா என்ற பெயரில் கோவிலுக்கான நிலம் வாங்கும் வகையில் நிதி வசூல் அறிவிச்சவுடன், நம்ம நண்பர் ஒருவர் பெயரைக்கொடுத்து ஆரம்பிச்சார். நம்மவர் என்னிடம் நாமும் கொடுக்கலாமா என்று கேட்க, நல்ல விஷயத்துக்குக் கொடுத்தால் நல்லது என்றதும் நாமும் இருவருக்கான நிதியை அளித்தோம்.
இத்தனை அமர்க்களமும் நடந்துகொண்டு இருக்கும்போது, மருமகனின் வாட்ஸ் அப் சேதி வந்தது...... அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தாச்சு ! கூடவே ஒரு படமும். மகளுக்கு மயக்கம் தெளியும்வரை காத்திருந்து சேதியை அனுப்பி இருக்கார். அங்கே இருந்த நம் நண்பர்கள் அனைவருக்கும் சேதியைச் சொல்லிப் படமும் காண்பிச்சாச்சு.
ஹாஸ்பிடல் மெட்டர்னிட்டி வார்ட், விஸிட்டிங் டைம் இரவு எட்டுமணிக்கு முடிஞ்சுருது என்பதால் மறுநாள் வருவதாக பதில் அனுப்பினோம். மகள் வீட்டுக்குப்போய் அவர்களின் செல்லங்களுக்குச் சாப்பாடு கொடுக்கச் சொல்லி சேதி வந்தது.
நாங்களும் கிளம்பிப்போய், பசங்களுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, அவுங்க அண்ணன்மாரான சேதியைச் சொல்லிட்டு வந்தோம். முகத்தில் சிரிப்பு வந்ததுன்னு தோணுச்சு.
9 comments:
அருமை நன்றி
மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் மா குட்டி பேபிக்கு ..
குழந்தை நல்லபடியா பிறந்தது நல்ல சேதி. குழந்தைக்கும் மகள் குடும்பம் உங்க எல்லாருக்கும் வாழ்த்துகளோடு, இறைவனின் அருளும் கிடைத்திடட்டும்
கொண்டாட்டங்கள் விவரங்கள் எல்லாம் வழக்கம் போல அருமை. அங்கு எல்லாம் அமைச்சர்கள் பெரிய பொறுப்பில் இருக்கறவங்க எந்த பந்தாவும் இல்லாம இப்படி அழகா வந்து கலந்துக்கறாங்களே என்னவோ நம்ம அடுத்த வீட்டு நட்பு போல!!! நல்ல விஷயம்
கீதா
விநாயகரின் வரப்போகும் முதல் பிறந்த நாளுக்கு வணக்கங்கள்! மகள் வீட்டு பூனைகள் புதிய வரவை தங்கள் சூட்சும அறிவால் உணர்ந்திருக்குமோ...
நல்லது. நல்ல முறையில் குழந்தை பிறந்த சேதியோட பதிவை முடிச்சிருக்கீங்க.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க அனு,
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிப்பா !
வாங்க கீதா,
வாழ்த்தியமைக்கு நன்றி!
ஃபிஜியில் கூட பெரிய பதவி மக்களுக்குப் பந்தா கிடையாது. மகளுக்கு மொட்டையடிச்சுக் காதுக்குத்திய விழாவுக்கு, உள்ளுர் மேயர் குடும்பம் (கூட்டுக்குடும்பம்) முழுசும் வந்து விருந்து சமையல் செய்ய உதவி பண்ணாங்க.
நம்மூர்லேதான்...... ப்ச்.....
கோவில் ஆரம்ப வேளையில் அவனருளால் பேரனின் புதுவரவு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும் இனிய வாழ்த்துகள்.
Post a Comment