Monday, February 26, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 7)

இசை உலகில் ஜாகீர் ஹுஸைனைத் தெரியாதவங்க யாராவது இருக்காங்களா? நம்ம வீட்டில் அல்லா ரக்கா & ஜாகீர் ஹுஸைன் தபேலா ஜுகல்பந்தி சிடியை அடிக்கடிப் போட்டுக் கேக்குற வழக்கம் கோபாலுக்கு உண்டு. 'அடடா..... கொன்னுட்டான்'னு பாராட்டிக்கிட்டே இருப்பார்.



நாளைக்கு சுல்தான்கான் சாரங்கியும், ஜாகீரோட தப்லாவும் இருக்கு. கட்டாயம் போகணுமுன்னு முடிவு செஞ்சுட்டோம். 'ஏன், நாம்தான் டெல்லிக்குப்
போறோமே அங்கே எதாவது இசை நிகழ்ச்சியை வடக்கத்திச் சூழலில் பார்க்கலாமே'ன்னும் ஒரு யோசனை.



"அப்படி எதாவது இருந்தா அதையும் பார்த்துக்கலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவறவிட வேணாம். அதுவுமில்லாம இங்கே டிக்கெட் சுலபமாக்
கிடைக்கும். காமராஜர் அரங்கம்தான். 2000 பேர் உக்கார முடியுமே!"



1000, 200 டிக்கெட்டுகள்தான் இருக்காம். 200 போதும். நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கே, ஒரு
காஃபி குடிக்கலாமுன்னா, இசைவிழா முடிஞ்ச கையோட இந்த கேண்டீன்கள் எல்லாம் குளோஸ்(-:



அண்ணாசாலையில் அரங்கத்துக்குப் பக்கத்துலேயே ஒரு ஹோட்டல் இருந்துச்சு. உள்ளெ ஈ, காக்கை இல்லை. எல்லாம் படு நீட், வெயிட்டர் உள்பட! ரெண்டு காஃபி ப்ளீஸ்! வேற எதாவது ஸ்நாக்ஸ்......? என்ன இருக்குன்னு பார்த்தா 'ஃபிங்கர் சிப்ஸ்' இருக்காம். ஆளை விடுப்பா.



ஆற அமர வந்தது. சுமார் ரகம். அட்மாஸ்ஃபியருக்குத்தான் காசு. 200 ரூபாய். 'என்னமாதிரி ஜாய்ண்ட்'ன்னு தெரியலை. போட்டும்.



சொன்ன நேரத்துக்கு ஆரம்பிச்சுருவாங்கன்னு அரங்கம் போனோம். தலையில் சிகப்பு விளக்கு வச்ச கார்களும், சீருடை போட்ட டிப்டாப் ட்ரைவர்கள் ஓட்டிக்கிட்டு வந்த படகுக்கார்களும் சர்சர்ன்னு வந்து பெரியமனுஷங்களை
வாசலில் விட்டுக்கிட்டு இருக்கு. வேடிக்கை பார்க்கக் கசக்குதா என்ன? உள்ளெ ஃபோயர்லே 'வொர்ல்ட் ஸ்பேஸ் ரேடியோ'க்கு
விளம்பரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஜேசுதாஸ் பாட்டு முழங்குது. காக்ரா அணிஞ்ச இளம்பெண்கள் ப்ரோஷர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இதை வாங்கினால் ஒரு டின்னர் செட் இலவசமாம். அந்த செட்டுக்குள்ளே சாப்பாடு? நாமே சமைச்சுக்கணுமா?



மணி ஆனாலும், உள்ளெ போக கேட் திறக்கலை. மேடையைச் சரிசெஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். சுத்துமுத்தும்
பார்வையை ஓட்டுனா............. ரசிகர்கள் நடை, உடை, பாவனைகள் எல்லாம் ஏதோ வட இந்தியாவுலே இருக்கமோன்னு நினைக்க வச்சது. முக்காலே மூணு வீசம் ஆண்கள் சல்வார் குர்த்தா. கொஞ்சம்பேர் ( மேல் தட்டு வாசிகள்?) சாக்குப் பையும், கலரடிச்ச தலையும். சிலபல வெள்ளைக்கார முகங்கள். யார் முகத்திலும் சிரிப்பே இல்லை. ரொம்ப சீரியஸ்ஸா தப்லா வாசிக்கிறாங்க போல மனசுக்குள்ளே! ஆஹா..... நாம் நினைச்ச வடக்கத்திச் சூழல் இங்கேயே கிடைச்சிருச்சு!


ஏக் தால், தீன் தால், கரானா, வாவா இப்படிச் சில வார்த்தைகளை வச்சுக்கிட்டு எப்படி சமாளிக்கப் போறோமோன்னு ஒரு கலக்கம். அதெல்லாம் பிரச்சனையே இல்லைன்னு ஆகிப்போச்சு.



ஒன்னரை மணி நேரக் கச்சேரி. சுல்தான் கான் மெலிசான குரலில் ஒரு பாட்டும் பாடினார். இனிமையா ஒவ்வொரு உருப்படிக்கும் முன்னே விளக்கம் சொல்லி வாசிச்சார் ஜாகீர். அந்தக் காலத்துலே பாட்டுத் தொகுப்பை சீதனமாக்கூடக் கொடுப்பாங்களாம். நல்ல ஐடியாவா இருந்துருக்குல்லே?
பின்னே எப்படிக் காலம் மாறி, எல்லாத்தையும் காசாலே அளக்கும் நிலை வந்துச்சு? (-:


நானும் போனேன் (ஜாகீர்) கச்சேரிக்கு!!!



value="http://www.youtube.com/v/_rGOF9H_Oe8"> value="transparent">width="425" height="350">

இன்னும் ஒரு நாள்தான் இருக்கு டெல்லிக்குப்போக. அங்கே இருந்து திரும்ப வந்தபிறகு பொங்கல் கொண்டாட்டங்கள் இருக்கறதாலே இந்த ஆட்டம்பாட்டத்தை நீட்டிக்க முடியாது. இப்போதைக்குக் கடைசியா ஒரு நடன (அரங்கேற்றம்) நிகழ்ச்சியைப் பார்த்துக்கலாமுன்னு ஜனவரி 7-ல் மறுபடியும் வாணி மஹால்.



எனக்குப் பக்கத்துலே வந்து உக்காந்தாங்க ஒரு அம்மா. கைப்பையைத் திறக்கும் போதெல்லாம் குபீர் குபீர்ன்னு அந்தக் கால குமுதம் தீபாவளி, பொங்கல் மலர்களை நினைவுபடுத்தும் வாசனை அள்ளிக்கிட்டுப் போகுது. பேச்சை ஆரம்பிக்க அதுவெ காரணமாவும் ஆச்சு. அத்தராம். 'காதி கிராம உத்யோக்'லே கிடைக்குமாம். நடனத்துக்குப் பாட்டுப் பாடும் பாடகியின் அம்மாவாம். மூத்த பெண்ணும் பாடகிதானாம். இவுங்களும் அதெ அதே. சங்கீதக் குடும்பம்.



ஒவ்வொரு பாட்டு முடிஞ்சதும் பாடகியிடமிருந்து ஒரு பொருள் பதிந்த பார்வை அம்மாவுக்கு. ஒரு ச்சின்னத் தலையாட்டல் தாயிடமிருந்து.

" சாதாரணமாப் மேடையில் பாடறதுக்கும், இப்படி நடனத்துக்குப் பாடறதுக்கும் வெவ்வேற மாதிரி பாட்டுக் கத்துக்கணுமா? "

கோபாலின் சந்தேகம்.

" அப்படியெல்லாம் இல்லை. பாட்டுக் கத்துக்கறது எப்பவும் போலத்தான்"

" ஆனா....... ரிகர்ஸலுக்குன்னு பலதடவை போகவேண்டி இருக்குமில்லையா?" ( இது நான்)

" ஆமாங்க. அது என்னவோ நிஜம். இல்லாட்டா...பாடுறவங்களுக்கும், ஆடுறவங்களுக்கும்
ஒரு கோ ஆர்டிநேஷன் கிடைக்காது"

அடுத்தவாரம் பாடகியின் மேடைக்கச்சேரி இருக்காம். ஒல்லியான உடல்வாகு. கணீர் ன்னு குரல்.
அருமையாப் பாடுனாங்க. அதென்னவோ எல்லாரும் பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானாவையே பாடுற மாதிரி இருக்கே? அதுதான் இப்ப ரொம்ப ஃபேமஸ். (ஃபாஷன்? )

value="http://www.youtube.com/v/azSJfVqRnkM"> value="transparent">width="425" height="350">

நாளைக்கு மாலைதானே டெல்லி ஃப்ளைட்?
அதுக்குள்ளெ அந்த காதி கிராம உத்யோக் போயிட்டு வந்துரணும்.
மனசுலே முடிச்சுப்போட்டாச்சு.


நான் கண்ட இசைவிழாவை இத்துடன் நிறைவு செய்கின்றேன். வருகை தந்த அனைவருக்கும்,
பின்னூட்டி என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் நன்றி.

Saturday, February 24, 2007

நொந்த பதிவு

சாமியைப் பார்த்தவங்க கையைத் தூக்குங்க.

அட! இத்தனை பேரா:-)

விக்ரம் நடிச்ச சாமி இல்லீங்க இது.

மெய்யாலும் சாமியைத்தான் சொல்றேன்!



நானும் பார்த்ததில்லைதான். ஆனா பழக்கத்தின் காரணமா, ராமர், கிருஷ்ணர்ன்னு
சொன்னதும் மனசுலே வர்ற உருவத்துக்கு நம்ம என்.டிஆர் முகம் இருக்கும்.


முகக்களை, ஒரு குமிழ்ச்சிரிப்பு, லட்சணம் இதெல்லாம் அமையலேன்னா சாமி வேசம்
கட்டுனா எடுப்பா இருக்காதுன்னு எம் மனசு சொல்லுது.



நம்ம சினிமாக்காரங்களில் சாமி வேசம் கட்டுனவங்களிலே பொருத்தமா இருந்தவுங்க,
இருக்கறவுங்க யாருன்னு உங்களுக்குத் தோணுனதைச் சொல்லுங்க.



நானே இங்கே நொந்து போய் கிடக்கேன்.

ஏன்?

நேத்து ஆழ்வார் பார்த்தேன் (-:




சரி. ஆரம்பிச்சு வைக்கலாம்.

என்.டி.ஆர்- ராமன், கிருஷ்ணன், மகா விஷ்ணு

Friday, February 23, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 6)

டிசம்பர் 31. வருஷக்கடைசி நாள். வீட்டுவாசலில் பளிச் கோலம், அருமை. கோயில்கள் சுற்றல்ன்னு ஆரம்பிச்சு ஒரு ஆச்சரியம் நடந்துச்சு இன்னிக்கு. அதெல்லாம் கோயில்கள் பதிவுலே பார்த்துக்கலாம்:-))))



அண்ணன் மகள் இன்னிக்கு ராத்திரி ஊரில் இருந்து கிளம்பறதாலே எல்லாருமாச் சேர்ந்து ஒரு லஞ்ச். ச்சலோ' மெயின்லேண்ட்
ச்சைனா'. நுங்கம்பாக்கத்தில் இருக்கு. பஃபேதான். பேரு பெத்தப் பேரா இருந்துச்சு. எனெக்கென்னமோ சுமார்ன்னுதான் தோணல்.



இன்னிக்கு சாயந்திரம் எஸ்.வி. சேகர் நாடகம் போகணும். கிடைச்ச அஞ்சு டிக்கெட்டுலே மூணை, நம்ம குடும்ப நண்பர் வீட்டுலே கொடுத்திருந்தேன். நல்ல வேளையா ( எதுக்கு?) நாங்கள் போய்ச் சேர்ந்தப்பதான் அவுங்களும் வந்து இறங்குனாங்க. அரங்க வாசலில் கூட்டமுன்னா கூட்டம். நாடகம் இலவசம்தானே? அதான் கூட்டம். டிக்கெட்டை, வாசலில்
காமிச்சப்போ, பக்கத்து டேபிளில் டிக்கெட்டைக் கலர் மாத்தி எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. பக்கத்து மேஜைக்குப் போனோம். எத்தனை ரூபாய்து வேணுமுன்னு கேட்டாங்க! இலவசமுன்னு சொல்லிக் குடுத்தாங்களே, அது வெறும்
புக்கிங் டிக்கெட்டாம்(!!! ???) இங்கே அதை மாத்தி வேறு கலர் டிக்கெட் எடுக்கணுமாம். எல்லாரும் வாங்கன்னு சொன்னாங்களே............
அது நாடகத்தின் பெயராம். இது எப்படி இருக்கு? பேசாம 'எல்லாருக்கும் அல்வா' இல்லேன்னா 'இந்தாங்க அல்வா'ன்னு பேர் வச்சிருந்தாப் பொருத்தமா இருந்திருக்குமே:-)







நண்பர்களுக்குத் தெரியாம அவுங்க டிக்கெட்டையும் வாங்கி கலர் மாத்தி வாங்கிக்கிட்டோம். நல்லவேளைன்னு
சொன்னது இதுக்குத்தான். 'ஓசி நாடகம்தான் வாங்க வாங்க'ன்னு வற்புறுத்திக் கூப்புட்டது நாங்க. எங்களுக்கு
முன்னே அவுங்க வந்து, கலர் மாத்தணும், காசைக் கட்டுன்னு சொல்லி இருந்தா அவுங்களுக்கு எப்படி இருந்துருக்கும்?
'என்ன என்ன'ன்னு கேட்டாங்க நண்பர்கள். 'ஒண்ணுமில்லை நீங்க வாங்க'ன்னு சொல்லிச் சமாளிச்சுட்டோம்.



அங்கே வந்திருந்த எல்லாருக்குமே இப்படி அல்வாவை ஊட்டி விட்டுக்கிட்டு இருந்தாங்க. டிக்கெட் எடுக்கணுமுங்கறது ஒண்ணும்
பெரிய விஷயமில்லை. அதை நேரடியாச் சொல்லி இருக்கலாமில்லையா? ஓசின்னு ஒண்ணு கொடுக்கறது. அப்புறம்
அது ரிஸர்வேஷன் மட்டுமுன்னு சொல்லி இன்னொரு டிக்கெட் வேற கலர்லே கொடுத்துக் காசு கேக்கறது...................



இது என்ன டெக்னிக்? கொஞ்சம் அசிங்கமா இல்லை?



அரங்கம் நிறைஞ்ச ஷோதான். இவ்வளவு தூரம் வந்துட்டுத் திரும்பணுமான்னு இருந்துருக்குமோ? 2000 மக்களுக்கும்
கஷ்டநஷ்டம் பார்க்காம அல்வாக் கிண்டி ஊட்டுனதுக்கு எஸ்.வி.சேகருக்கு நன்றின்னு சொல்லலாம்.



நாடகம் முடிஞ்சு திநகர் வந்து திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்குப்போய் சாமியைக் கும்பிட்டு வெங்கடநாராயணா
சாலை வழியா பனகல்பார்க் நோக்கி பொடி நடையில் வந்தப்ப, வுட்லேண்ட்ஸ் பக்கத்துலே கூட்டமா இருக்கு. என்னவோ
விழா.......... வாங்க வாங்கன்னு வருந்தி அழைக்கிறாங்க. தலையை நீட்டுனோம். திநகர் சோஷியல் க்ளப், புத்தாண்டுக்
கொண்டாட்டமாம். இதுவுமே வாழ்க்கையின் முதல்முறை எங்களுக்கு. ஜனங்க நல்லா உடுத்திக்கிட்டு, ஒரு மேடைக்கு
முன்னால் கூடி இருந்தாங்க. லைவ் ம்யூஸிக். சுருதி சேர்த்துக்கிட்டு இருந்தாங்க மேடையில். ஆகட்டும் அது மெதுவா,
அதுக்குள்ளே ராச்சாப்பாட்டைக் கவனிச்சுக்கலாம். அங்கேயே ஒரு ஹாலில் சாப்பாடு இருந்தது. அப்படி ஒரு கூட்டம்.
இதோ இருக்கு வுட்லேண்ட்ஸ்ன்னு அங்கெ போயிட்டு வந்தோம்.



இன்னும் ஸ்ருதி சேரலை. நேரம் ஆக ஆக நான் இதுவரை பார்க்காதச் சென்னையின் இன்னொரு முகம். அதீத அலங்காரத்தில்
பலர் வளைய வந்தாங்க. மேடை நிகழ்ச்சிகள் ஒருவழியா ஆரம்பம். முதல்லெ அவுங்க ஸ்போர்ட்ஸ் க்ளப்லே
வெவ்வேற ஆட்டங்களில் ஜெயிச்சவங்களுக்கு பரிசுகளும் கப்புகளும். அடுத்து மெல்லிசை நிகழ்ச்சி. மூணு பாட்டுக்குமேலே
உக்கார முடியலை. வாத்தியங்களுக்கும், பாட்டுக்காரங்களுக்கும் இன்னமும் சுருதி சேரவே இல்லை:-) இந்த அழகுலே
ஹிந்தி சினிமாப் பாட்டுங்க வேற.



பொழுது விடிஞ்சாப் புதுவருஷம்.இன்னிக்கும் வாசலில் பெரிய அழகான கோலம். கூடவே வருஷத்தை வரவேற்க
வாழ்த்துச் செய்திகள். இங்கே வந்தபிறகு மகள் படத்தைப் பார்த்து சொன்னபிறகுதான் கவனிச்சேன். ஒரு 'ஸீரோ'
கூடுனால் தப்பாங்க? :-))))) இல்லே ஒரு 'ஈ' பறந்தாத்தான் தப்பா? :-)))








இன்னிக்கு ஒரு சினிமாவுக்குப் போறோம். தியேட்டரில் தமிழ் சினிமாப் பார்த்துப் பன்னிரெண்டே முக்கால் வருசம்
ஆச்சு. கடைசியாப் போனது 'மகளிர் மட்டும்' 1994-ல். அபிராமியில் வெயில். இந்த காம்ப்ளெக்ஸ்க்கு முதல்முறை
விஜயம். அங்கே டிக்கெட் கவுண்டருக்கு மேலே ஒரு மானிட்டரில், டிக்கெட் இருக்கா, எதுலே எத்தனை இருக்கு,
எது ஃபுல்ன்னு விவரம் ஓடுது. பரவாயில்லையே! இன்று முதல் திரை அரங்கில் டிக்கெட் விலைக்குக் கட்டுப்பாடு
கொண்டு வந்துருக்காம் அரசாங்கம். அதன்படி 50 ரூபாய்தான் அதிகபட்ச விலையாம். அதையே வாங்கிக்கிட்டு
மாடிக்குப் போனோம். (மறுநாளே கட்டுப்பாட்டைத் தூக்கிட்டாங்களாம்) சுமாரான கூட்டம். கீழே எல்லாமே ஃபுல்லாம்.
முன்னாடி இருக்கைக்கு வந்தவங்க பேசிக்கிட்டு இருந்தாங்க.



படம் ஆரம்பிச்சது. மக்கள்ஸ் படத்தோடு ஒன்றிப்போய் உருக்கமான இடத்துலே உச்சுக்கொட்டியும், அண்ணந்தம்பி
சந்திக்கும் இடத்தில் விஸில் அடிச்சும், கைதட்டியும் ரசிக்கிறாங்க. தியேட்டரில் படம் பார்க்கறது ஒரு வித்தியாசமான
அனுபவமா இருக்கே! 'இனிமே வீட்டுலே படம் பார்க்கும் போதும் ரசிச்சுப் பார்க்கலைன்னா இருங்க உங்களை'ன்னு கருவுனேன் கோபாலை:-)))



பொதுவாவே ஆடியோ ஒரே சத்தம். இதுலே பாட்டுக்காட்சிகளில் இன்னும் ஒரு ஆயிரம் டெஸிபில்(!!)
கூடுது. காதுகளை அடைச்சுக்கிட்டே முழுப்படத்தின் வசனங்களையெல்லாம் துல்லியமாக் கேக்க
முடிஞ்சது. பகல் உணவுக்கு புரசை சரவண பவன். நிக்க இடமில்லை. பாண்டி பஜாருக்கே வந்துட்டோம்.




இன்னிக்கு மாலை ராணி சீதை ஹாலில் மேண்டலின் கச்சேரி. யூ. ஸ்ரீனிவாஸ். டிக்கெட் வாங்கி மேலே
போனா... திருச்சூர் பிரதர்ஸ் பாடிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பாட்டு கேக்கக் கிடைச்சது. மேண்டலின் ஸ்ரீனிவாஸ்
வாசிப்பு அட்டகாசம். விரல்கள் அப்படியே ஓடுது. கேட்கவே ஒரு சுகானுபவம். கண்ணை அப்படியே அசத்தித்
தூங்க வச்சுருச்சு ஒரு பத்து நிமிஷமுன்னா பாருங்க.




புதுவருஷம் பிறந்து ஒரு நாள் ஓடிப்போச்சு. இன்னைக்கும் மைலாப்பூர் பக்கம் போக வேண்டிய வேலை. நம்ம
பாலாவையும் அப்படியே பார்த்துட்டுப் போகலாமுன்னு வித்லோகா போனோம். கோபாலை அறிமுகப்படுத்த வேண்டிய
அவசியம் ஏற்படலை. பார்த்தவுடனே பாலா 'டக்'னு புரிஞ்சுக்கிட்டார். ஒரு பத்து நிமிஷம் உரையாடல். அப்படியே
வித்யாபாரதி. இன்னிக்குக் கடம் கார்த்திக்கின் ஹார்ட்பீட் ம்யூஸிக் என்செம்பிள். எம்பார் கண்ணன், யு.பி.ராஜு,
பூங்குளம் சுப்ரமணியன், ஸ்ரீசுந்தர் குமார், ஏ.எஸ். கிருஷ்ணன்ன்னு எல்லாம் வாத்தியக் கலைஞர்கள்.
அடிச்சு தூள் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. 'சற்று நேரத்திற்கு வாத்திய இசை'ன்னு கேட்டுட்டுக் கிளம்பினோம். வந்த வேலையை முடிக்கணுமே!





இன்று முதல் நாட்டிய விழா ஆரம்பம். இசைவிழா முடிஞ்சு போச்சு. தோழியின் தோழி மகளொட அரங்கேற்றம்.
நமக்கும் அழைப்பு(!!) ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 18-வது பரதம் ஃபெஸ்டிவல். சங்கீத நாடக அகெடமியின்
எக்ஸிக்யூடிவ் மெம்பரும், பத்திரிக்கைகளில் நடன விமரிசனம் எழுதுபவருமான நந்தினி ரமணி ஆரம்பித்து
வச்சாங்க. நடனமாடியது பவ்யா பாலசுப்ரமணியன். புகழ்பெற்ற ஸ்ரீகலா பரத்தோட மாணவி.

அருமையான நடனம். அந்தக் காலக் கமலா( நம்ம குமாரி கமலாங்க)வின் நாட்டியத்தை நினைவுபடுத்தியதாக
நந்தினி சொன்னாங்க. 'கிரிடிக்' சொன்னா அது சரியாத்தானிருக்கும்.

வாணிமஹாலில் ஜனவரி 31 வரை நாட்டிய விழா( ஆல் ஆர் வெல்கம்) நடக்கப்போகுது. நிகழ்ச்சி நிரலை அச்சடிச்சேக்
கொடுத்துட்டாங்க.

இனி ரெண்டு மூணு நாளைக்கு நண்பர்களைச் சந்திக்கறதும், கோவில்களைச் சுத்தறதுமா இருந்தது. அதுக்குன்னு
ஒரு பதிவு தனியா வரும்,பாருங்க:-)



"ஆமாம், மோஹினி ஆட்டம் ஒண்ணு பார்க்கலாமா? அதுக்கென்ன பேஷா............"

மியூஸிக் அகெடமி. டிக்கெட்டுக்காக ஒரு முக்காமணி நேரம் முன்னதாவே போனோம். உள்ளெ பிரியதர்சினி கோவிந்தின்
பரதநாட்டியம் நடக்குது. நாங்க நுழைஞ்சப்ப........ நாயகன் பிரிவால் நாயகி பசலை கண்டு வாடும் காட்சி. வளையல்கள்,
மேல் கையில் இருக்கும் வங்கி எல்லாம் உண்மையிலெயே கழன்று மேடையில் விழுது. ஒடிசலான உடம்பு. தலையைப்
பின்னி ஜடையாக இல்லாமல் கொண்டை போட்ட அலங்காரம். அற்புதமான நடனம். அடுத்து புறநானூறு. போர்க்களத்தில்
தன்னுடைய மகன் புறமுதுகு காட்டி மரணமடைந்தான் என்று யாரோ சொல்லக்கேட்ட வீரத்தாய், போரில் வீழ்ந்துபட்ட
உடல்களில் தன் மகனைத்தேடி அலைகின்றாள். மார்பில் அடிபட்டு மரணமடைந்த மகனை மடியில் போட்டுக்கொண்டுத்,
தன் மகன் வீரன் தான் என்று அறிந்து பரவசமும், அதே சமயம் மகனை இழந்த துக்கமும் கொண்டு இருப்பதாக வரும்
பாட்டு. 'அருமை' ன்னு சொல்றதுக்கு வேற எதாவது சொல் இருக்கா?(குமரன் இல்லே ராகவனைத்தான் கேக்கணும்)



இப்பெல்லாம் நாட்டியமணிகள் நல்லாப் படிச்சவங்களாவும் இருக்காங்க. அருமையான ஆங்கிலத்தில் ஒவ்வொரு
நடனத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு ஆடறது ரொம்ப நல்லாவே இருக்கு. வெளிநாடுகளில் நம்ம நிகழ்ச்சிகள்
நடக்கறது அதிகமானதாலே இப்படியெல்லாம் இருக்கறதுதான் பொருத்தமும்கூட. இல்லீங்களா?



நீனா பிரசாத், மோஹினி ஆட்டம் ஆடவந்தாங்க. அவுங்க இசைக்குழுவின் எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு.
வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், வயலின்னு மொத்தம் 9 பேர். . நம்ம பரதம் போலவே ஸ்டெப்ஸ். ஆனா நின்னு
நிதானமா ஆடறாங்க. துரிதகால ஆட்டமெல்லாம் இல்லை. எல்லாம் ஆற அமரன்னு போச்சு. அரைமண்டி போட்டாப்பலெதான்
முழுநடனமும் ஆச்சு. நாங்க உட்கார்ந்திருந்த பால்கனியில் இருந்து பார்க்கறப்ப இன்னும் உயரக்குறைவாத் தெரிஞ்சாங்க.

படம் எடுக்க அனுமதி இல்லைன்றதாலே கெமெராக் கொண்டுபோயும் பலன் இல்லை. பரவாயில்லை. முழுநடனமும் பார்க்கவாச்சும் இப்படி ஒருச் சான்ஸ் கிடைச்சதே போதும்.

Wednesday, February 21, 2007

நம்மில் யாராவது graphic designer ஆக இருக்கும் வாய்ப்பு உண்டா?

மக்கள்ஸ்,

இங்கே நம்ம தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு பேனர் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கு.
அதுக்குப் பொருத்தமான டிஸைன்களை வரைஞ்சு தரக்கூடியவர்களைத் தேடி
அலுத்துப் போயிட்டோம்.


நம்மில் யாராவது இந்தப் பணியைச் செய்து தர இயலுமா? கொஞ்சம் அலங்கார வேலைகள்
செய்ய வேண்டி இருக்கும். பேனரின் நீள அகலங்கள் 3 x 1.5 மீட்டர் வரணும்.

குறிப்பாகத் தமிழர்கள் ( இலங்கை & இந்தியா) செய்து தர இயலுமானால்
அவர்களுக்கு நம் அலங்கரிப்புத் தேவைகளை விளக்குவது சுலபம். எங்களுடைய
தமிழ்ச்சங்கத்தின் logo முக்கியம்.


இதற்காக ஒரு தொகையும் சங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து
விருப்பம் உள்ளவர்கள், அல்லது உங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள் யாராவது
உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால் பின்னூட்டம் மூலமாக உங்கள்
மெயில் ஐடியைத் தெரிவித்தால் ( அதை நான் வெளியிடமாட்டேன் என்பது உறுதி)
உங்களைத் தொடர்பு கொண்டு விளக்கங்கள் தர எண்ணம்.


தயவுசெய்து உதவணும். செய்வீங்கதானே?

ரொம்ப எதிர்பார்ப்புடன்,

துளசி

Monday, February 19, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 5 )



ஆர்வம் இருந்தாலும் சிலசமயம் சோம்பல்வந்து மனுஷரை ஆட்டிப் படைச்சுருது. அந்தக் காரணம் ( இதுக்கெல்லாம் கூட ஒரு காரணமா? ) இருந்ததாலே இன்னிக்கு சுதா ரகுநாதன் கச்சேரிக்கு டிக்கெட் வாங்கிக்கப் போகலை. பார்க்கலாம், சாயந்திரக் கச்சேரிதானே.


நித்தியக் கடமைகளான கோயில்( இதைப்பத்தி அப்புறமாச் சொல்லணும்) சரவணபவன், துணிக்கடைகள், டெய்லர்னுஒரு சுத்து முடிச்சிட்டு( நவகிரக சந்நிதி போல ) பகல் ஒன்னரைக்கு ஓபுல்ரெட்டி ஹாலுக்கு வந்தேன். எல்லாம் வாணிமாஹால்தான். ச்சும்மா
ஒரு சேஞ்சுக்கு இப்படிச் சொல்றது. பாலக்காடு வேணுகோபால் பாடறார். மெல்லிசான குரல். உச்சத்தில் பாடும்போது இன்னும் மெல்லிசாப் போறது. ஒரு கட்டத்துலே எனக்கு என்னவோ பூனை ஞாபகம் வந்தது. நல்லவேளை, நான் 'மியாவ்'ன்னு கத்தலை.
'பக்கல நிலபடி' பாட்டுலே வயலின் இழைஞ்சது சூப்பர். மிருதங்கம் தனி ஆவர்த்தனம் அட்டகாசம். இப்படித்தான் சிலசமயம் பாடகரைவிட பக்கவாத்தியக்காரர்கள் பிரமாதமா அமைஞ்சுடறாங்க. புதிய இளம் பாடகர்களின் கச்சேரிகளுக்கு ( ஆல் ஆர் வெல்கம்)
அவ்வளவாக் கூட்டம் இருக்கறதில்லை. கொஞ்சம் பேர்( பெயர்) வந்துட்டா,அவுங்களை மாலை நேரத்துக்கு மாத்திருவாங்க போல.

அவருக்கப்புறம், ஒரு பதினேழு வயசு இளைஞர், பேர் கோபால கிருஷ்ணன் பாடவந்தார். பி.காம் ரெண்டாவது வருஷம் படிக்கிறாராம். அவரோட அம்மா சொன்னாங்க. குடும்ப ஆடியன்ஸே அதிகமா இருந்தாங்க. அஷோக்ன்னு ஒருத்தர் (நியூஸியிலிருந்து வந்துருக்காராம்)
மிருதங்கம். பலே பேஷ் பேஷ். இப்பெல்லாம் எலக்ட்ரானிக் சுருதிப்பெட்டிதான் அநேகமா பல இடங்களில். இங்கேயும் அதேதான். ஆனா குள்ளத் தம்புரா போலவே இருந்தது எனக்குப் பிடிச்சிருந்தது.


சித்தி விநாயகம் சரணம் அருமை. கம்பீரமான பார்வையுடன் சபை நடுக்கமில்லாமப் பாடுனார். குரலும் நல்லா இருந்துச்சு. கையைமட்டும் ஒரேதா ஆட்டிக்கிட்டு இருந்தார்.குடும்பம் முழுசும் இங்கேயும் அங்கேயுமாப் போய் எல்லாரையும் வரவேற்றுக்கிட்டே இருந்தாங்க. பக்கத்துலே ஒரே பேச்சு. நம்ம ஜனங்களைத் தண்டிக்கணுமுன்னா 'கொஞ்ச நேரம்பேசாம இருக்கச் சொன்னாப்போதும்' :-) இதுக்கிடையிலும் 'தாமஸமு சேயகலு, மனம் இரங்காதா இறைவா, கோவிந்தா கோபாலா 'பாட்டு எல்லாமே நல்லாவே ரசிக்க முடிஞ்சது.


அடுத்து ஒரு புல்லாங்குழல் கச்சேரி. பாட்டாவே கேட்டுக்கிட்டு இருக்கோமே, ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு இருந்துட்டேன். விஜயகோபால் ப்ளூட். ரெண்டு பாட்டைக் கேட்டுட்டுக் கிளம்பலாமுன்னு இருந்தவளை அப்படியே உக்காரவச்சது என்ன? எல்லாமே தெரிஞ்ச பாட்டுக்கள். அதனாலெ கூடுதலா ரசிக்க முடிஞ்சது. விறுவிறுன்னு நல்ல வேகம்.
கொனஷ்டைகள் ஒண்ணும் கிடையாது. கேக்கவும் சுகமா இருந்தது. முடியும்போது மணி ஆறரை. இனிமே எங்கே சுதா?


இன்னிக்குப் பாருங்க, எல்லாமே கோபால்ஸ்! செவிக்குணவு ஆச்சு. இனி வயித்துக்கு? இருக்கவே இருக்கு மூகாம்பிகையும் முரளியும். கீரைவடை, ரவாதோசை& கள்ளிச்சொட்டுக் காஃபி.


மறுநாள் ஒரு புகழ்பெற்ற வலைப்பதிவாளரைச் சந்திக்கக் கிளம்புனேன். (இதை எழுதும் இந்த நாளில் அவர் ஜொலிச்சுக்கிட்டு இருக்கார்) வழக்கம்போல 'லேண்ட் மார்க்' கேட்டுக்கிட்டேன். ஆட்டோகாரருக்கு இதெல்லாம் சொன்னாத்தான் அவருக்கும் எவ்வளோன்னு 'சத்தம்' சொல்லச் சரியா இருக்கும். ஒரு குத்து மதிப்பா எம்பது ரூபாய்ன்னுதான் ஆரம்பிக்கிறது. நம்மூர் ஆட்டோக்காரர்களுக்கு இந்த இடங்கள் எல்லாம் சரியாத் தெரியுதோ இல்லையோ பேரம் படிஞ்சதும் போற வழியிலே ஆட்டோ ஸ்டேண்டுலே இருக்கும் மத்த ஆட்டோக்காரரிடமோ,இல்லேன்னா 'தள்ளுவண்டி யாவாரம் பார்த்துக்கிட்டு இருக்கறவங்களாண்டையோ' கேட்டுக்கறதுதான். அம்மாந்தூரம்னு சொல்லி ஏறிக் குந்துனா, இம்மாந்தூரத்துலேயே வந்துரும் சிலசமயம்.

வித்யாபாரதி கல்யாண மண்டபம். இதுக்கும் நாலு இடத்துலே வழி கேட்டும், சந்திக்கப்போறவர் கிட்டேயும் ரெண்டு முறை செல்லுலே கேட்டும் ஒரு வழியா அங்கே போனேன். நான் போகவேண்டிய இடம் அந்தக் கல்யாண மண்டபம் இல்லை. அதுக்குப் பக்கத்துலே இருக்கற ஒரு கடை. அதுவும் ஒரு புத்தகக் கடை. கடைன்னு சொன்னா நல்லா இல்லையோ? சரி ஷோரூம்ன்னு வச்சுக்கலாமா? வித்லோகா.

இந்நேரம் அவர் யாருன்னு தெரிஞ்சிருக்குமே? எஸ். யூ ஆர் ரைட். நம்ம பாலபாரதி. பகல் மூணு வரைதான் இருப்பேன்னு (அபாய) அறிவிப்புக் கொடுத்ததாலே நானும் பதறியடிச்சுப் போனப்ப மணி பன்னிரெண்டுக்கும் மேலே!

ஏதோ காலங்காலமாத் தெரிஞ்ச நண்பர்கிட்டே பேசறது போல இருந்துச்சு. சூடா ஒரு ஏலக்காய் ச்சாய் வேற கிடைச்சது. 'பஹூத் அச்சா தா'. கூகுள் மேஜை மேலே கிடந்தது அப்போதான். வாங்கிக்கலை(-:


கல்யாண மண்டபத்தின் வாசலில் இறங்குறப்பவே அங்கே ஷாமியானா போட்டு இருந்ததையும், மக்கள்ஸ் கைக்கும் வாய்க்குமா இருந்ததையும் பார்த்து வச்சுக்கிட்டேன். மீனாம்பிகை கேட்டரர்ஸ். அடுத்த வாசலில் ஒரு பேனர். ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா.

ச்சென்னைச் சபாக்களிலே வயசுலே மூத்தது எது? சந்தேகம் என்ன... இதுவேதான். 1900 வருஷம் ஆரம்பமாம்.
107 வயசுக்கு, இதுவரை சொந்தக்கட்டிடம் கட்டிக்கலை(-: அவுங்க நிகழ்ச்சிகள் எல்லாம் இப்ப இந்த வித்யாபாரதியில்தான் நடந்துவருதாம். அவ்வளவா வசதிகள் இல்லாத ஹாலா இருந்தது. இங்கேயும் பிரம்பு நாற்காலிகள், ஆனால் ஒரு சின்னக் குஷன் வச்சுக்கட்டி இருந்தாங்க. மேடை அமைப்பும் ஏதோ தாற்காலிகமா வச்சதைப் போல. நம்மையெல்லாம் மறைஞ்சிருந்து பார்க்கிறமாதிரி இடது பக்கம் திரை மறைவில் ஒரு பிள்ளையார் விக்கிரகம் அலங்காரத்துடன்.


இசைவிழாக் கச்சேரிகள் மட்டுமில்லாம கருத்தரங்கம், Lecture Demonstration Session எல்லாம்கூட உண்டு இந்த சபாவுலே என்றதுதான் இன்னும் கூடுதல் சிறப்பு. அது காலையில் எட்டரை முதல் ஒன்பதரைக்குள்.அதெல்லாம் சங்கீதம் படிக்கிறவங்களுக்கு நல்ல பயனா இருக்கும். இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?


கல்கத்தா கே.ஸ்ரீ.வித்யா பாட்டு. தியாகைய்யரின் 'பண்டுரீத்தி கொலு' அருமையாப் பாடுனாங்க. பஜரே மானசம் சுமாராத் தோணுச்சு. ரொம்பத்தான் எனக்கு........ ஓசிக் கச்சேரியில் போனோமா, நாலு பாட்டைக் கேட்டோமான்னு இல்லாம........
'புண்ணியத்துக்குப் பசுமாடு கொடுத்தா......பல்லைப் புடிச்சுப் பார்த்த கதை.


வித்யா நல்லா வயலினும் வாசிப்பாங்களாம். கல்கத்தாவுலே எதோ பேங்க்லே வேலையாம். குடும்பமே சங்கீதம் படிச்சிருக்காம். அம்மா, சித்தி எல்லோரும் நல்லாப் பாடறவங்களாம். சொன்னது சங்கீதம் படிச்ச சித்தி. பாராட்டுக்களைச் சொல்லிட்டுக் கிளம்புனேன்.


மறுநாளும் அந்தப்பக்கம் வேற வேலையாப் போனப்ப வித்யாபாரதியில் நுழைஞ்சேன். யேசுதாஸ் குரல் மாதிரிக் கேட்டது. ஆனால் பாடிக்கிட்டு இருந்தவர் காவலம் ஸ்ரீகுமார். கையில் மாவுக்கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தார் வயலின்காரர். ஒரு ச்சின்னப் பையன்
பதினாறு, பதினேழு வயசுதான் சொல்லலாம் மிருதங்கம் அடிபொளி. மலையாளப் பாட்டுகள் சிலதும் பாடினார்.
'ஆடினான் கண்ணன் முகில்வண்ணன்' அருமை. கடைசியில் பாடிய தில்லானா சூப்பர். ஆமாம்......... வாய்ப்பாட்டுக் கச்சேரியில் கடைசியில் மங்களம்தானே பாடுவாங்க. இவர் என்ன தில்லானா பாடிக்கிட்டு இருக்காரேன்னு நினைச்சேன். நம்ம சங்கீத ஞானத்தைக்(??)
காமிச்சுக்க வேணாமேன்னு அக்கம்பக்கம் வாய் திறக்காமச் சும்மா இருந்துட்டேன்:-)

பகல் சாப்பாடு வேளை ரொம்பவே தள்ளிப் போயிருச்சு. வாணிமஹால் போய் இறங்கி மூகாம்பிகையில் முழுங்கிட்டு அப்படியே மேலே போய் பாட்டும் கேக்கலாம்னு சாப்பிட உக்கார்ந்தேன். முரளியின் உபசரிப்பு வழக்கம்போல. அப்ப எதிர் இருக்கையில் ஒருத்தர் வந்து உக்கார்ந்தார். அவரோட பேச்சு தோரணையெல்லாம் கவனிச்சப்ப, அவர் இந்த தியாகபிரும்ம கான சபாவின் முக்கிய புள்ளியோன்னு இருந்தது. அவர்கிட்டேயே கேட்டுட்டேன். அவருக்கு ஒரே ஆச்சரியமாப் போயிருக்கும் போல. ( அடிப்பாவி! என்னை.......... தெரியாதா? )
அவருக்குப் பக்கத்தில் பணிவோடு உக்கார்ந்திருந்தவரிடம், 'நீ சொல்லுப்பா'ன்னு எழுந்து கை கழுவப்போனார்.


ராம்ஜியாம். பத்மா சுப்ரமணியனின் சகோதரர் 'அபஸ்வரம் ராம்ஜி' இப்ப ஆச்சரியம் எனக்கு. திரும்ப வந்தவரிடம் பேச ஆரம்பிச்சேன். 'உங்களைப்பத்தி பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் படிச்சிருக்கேன். ஆனா ஆளை நேரில் பார்க்கறது இப்பத்தான்'. ரொம்ப சந்தோஷம். அவரும் என்னைப்பத்தி விசாரிச்சார். 'நீங்க உள்ளூர் இல்லைன்னு பார்த்தவுடன்
தெரிஞ்சது(!!??????) எப்படிக் கேக்கறதுன்னு தயங்குனேன், அதுக்குள்ளெ நீங்களே பேசிட்டீங்க'

சங்கீத சீஸன் முடிவுக்கு வந்தாச்சாம். நாளையோட இந்தக் கேண்டீனுமே இருக்காதாம்.(ஹா.........) முக்கிய புள்ளிகளோட
கச்சேரிகள் மட்டும் சரியான தேதிகள் கிடைக்காம விட்டுப்போனதுன்னு இருக்கறது மட்டும் இன்னும் நாலைஞ்சு நாளுக்கு இருக்குமாம்.


"இப்ப என்ன செய்யப்போறிங்க? "

" சாப்புட்டுட்டு மேலே போய் பாட்டுக் கேக்கலாமுன்னு இருக்கேன்"

" வேற ஏதும் முக்கியமான வேலை இல்லேன்னா வலையப்பட்டி ஃபெஸ்டிவல் போங்களேன். ஹேமமாலினியிலே நடக்குது.
எங்க க்ரூப் இப்ப அங்கே பாடப்போறாங்க. நானும் அங்கெதான் போய்க்கிட்டு இருக்கேன். நீங்க என்கூடவே வந்துறலாம்."


கிளம்பும்போது, 'வழியில் கதீட்ரல் ரோடுலே இறங்கிக்கறேன்'னு இன்னொரு பெண்மணியும் எங்களோடு சேர்ந்துக்கிட்டாங்க.
காரில் போகும்போதுதான் அந்தப் பெண்மணியை அறிமுகம் செய்தார். விநாயக்ராமோட அண்ணியாம்.


"விக்கு விநாயக்ராம்? கடம்? "

" ஆமாங்க. இவுங்களும் நல்லாப் பாடுவாங்க"


சங்கீத சீஸன்லே ச்சென்னையில் இடறி விழுந்தா.........இப்படிப் பெரிய மனுஷங்க மேலேதான் விழுவோமோ?


இவருடைய 'இசை மழலை' குழுவிலே கிட்டத்தட்ட 450 பிள்ளைங்க இருக்காங்களாம். இந்த வருஷம் மட்டும் 85 நிகழ்ச்சி கொடுக்கறாங்களாம் வெவ்வேற நாளில், வெவ்வேற சபாக்களில். அப்பாடா.............


ஜனவரி முதல்தேதி வருஷப்பிறப்புக்கு சிறப்பு நிகழ்ச்சியா பாரதீய வித்யாபவன் மினி ஹாலில் காலையில் 9 மணிமுதல் பிற்பகல் 3 வரை 6 நிகழ்ச்சிகள் இவுங்களெ நடத்தறாங்களாம். நேரம் இருந்தாக் கட்டாயம் வாங்கன்னு சொன்னார்.

எல்லாம் வளர்ந்துவரும் இளைய இசைப்புயல்களா இருக்குமில்லே!!!

கோபால் செல்லுலே கூப்பிட்டார். நான் போரடிச்சுக் கிடப்பேனோன்னு அவருக்குக் கவலை. நமக்கு அடிச்ச (சர்)ப்ரைஸைச் சொன்னேன். போன வேலை முடிஞ்சதாம். ராத்திரி கிளம்பி வர்றாராம்.


கோபாலபுரம் வழியாப்போனோம்.
'இங்கேதான் முதலமைச்சர் வீடு'ன்னு சொன்னார். அடுத்து அண்ணா திமுக கட்டிடத்தை ( முந்தி இது எம்ஜிஆர் அவர்கள் வீடு) அடுத்து ஹேமமாலினிக் கல்யாண மண்டபம்.


இன்னிக்கு நடக்கப்போறக் கச்சேரியில் மிருதங்கம் வாசிக்கறது ஒரு பொண்ணாம். உலகத்துலேயே மிருதங்கம் வாசிக்கிற முதல் பொண்ணுன்னே சொல்லலாமாம். கச்சேரிக்காகவே அமெரிக்காவில் இருந்து வந்துருக்காங்களாம்.



முதல்வரிசையில் கொண்டுபோய் உக்கார்த்தி வச்சுட்டார். மேடையில் வந்து உக்கார்ந்தது மூணு ச்சின்னப் பொண்ணுங்க. பட்டுப்பாவாடையும், தாவணியுமா பார்க்கவே கொள்ளை அழகு. வயசு 17 தாண்டுனா அதிகம்.


ரெமா - பாட்டு, சுதா- வயலின் , ரஜ்னா சுவாமிநாதன் -மிருதங்கம்.


ஹம்ம்ம்ம்மா.......... என்னத்தைன்னு சொல்ல? தூள் கிளப்பிருச்சுங்க. ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா
புன்முறுவலாச் சிரிச்சுக்கிட்டே ......... சூப்பர். கொஞ்சம் சாம்பிள் இதுலே போட்டுருக்கேன் பாருங்க.(யூ ட்யூப்லே ஏத்திட்டு என்ன செய்யறதுன்னு முழிச்சேன். உதவிக்கு வந்த நண்பருக்கு நன்றி)

என்னமா தூள் கிளப்பிருச்சுங்க இந்தப் பொண்ணு ரஜ்னா!!!

ஒண்ணரைமணி நேரம் ஓடியே போச்சு. ராம்ஜி கிளம்பறப்ப சொல்லிட்டுப்போனார். அடுத்து நாலரை முதல் திருச்சூர் பிரதர்ஸ். அமெரிக்கையா உக்கார்ந்து அருமையாப் பாடுனாங்க. பக்கவத்தியக்காரர் எல்லாமே கேரளம்.


இதுவரை சந்தித்த சில நண்பர்கள்( எல்லாம் அங்கங்கே சபாக்களில் பக்கத்து இருக்கையில் நம்மகிட்டே அகப்பட்டுக்கிட்டவங்க) அபிஷேக் ரொம்ப பிரமாதமாப் பாடறான்(ர்) கட்டாயம் கேளுங்கோன்னு சொல்லி வச்சுருந்தாங்க.
யார் இந்த அபிஷேக் ரகுராம்? பாலக்காடு ரகு( மிருதங்கம்) வோட பேரன். சங்கீதப்பரம்பரை. பின்னே எதிர்பார்ப்புக்குக் கேக்கணுமா?



இப்போ அடுத்து அபிஷேக். நல்லா இருட்ட ஆரம்பிச்சது. ரெண்டே பாட்டுன்னு கேட்டுட்டுக் கிளம்பிட்டேன்.

மறுநாள் எல்லாருக்கும் அல்வாக் கிண்டி விளம்புனாங்க. எங்களுக்கும் கிடைச்சது.

Monday, February 12, 2007

அலை ஓய்ந்தது (-:

நெடுநெடுன்னு உயரமாவும், ஒல்லியாவும் இருந்த இளைஞர் ஒருத்தர்
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயம் வந்துசேர்ந்தார். நாங்க அப்ப பேசறதையெல்லாம்
பேசிமுடிச்சுட்டோம்ன்ற நிலை. வந்தவர் கையிலிருந்த ஒரு இனிப்புகள் நிறைந்த பாக்ஸ்
திறக்கப்பட்டு எல்லோருக்கும் இனிப்புகள். அருமையான மில்க் ஸ்வீட்ஸ். சிலருக்கு
அவரை ஏற்கெனவே தெரிஞ்சிருந்துச்சு. சாகரன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.
'சாகரனின் அலைகள்'னு எழுதுறவர். இருட்டும் வேளை. மசமசன்னு ஒரு மங்கல்.
நேராய் என்கிட்டே வந்தவர்,'வணக்கம் அக்கா. நல்லா இருக்கீங்களா?'ன்னு கேட்டார்.



வலைமூலம் எனக்குக் கிடைத்தக் கணக்கில்லாச் சொந்தத்தில் இவரும் ஒரு தம்பின்னு
நினைச்சேன். 'நாந்தாக்கா கல்யாண்'ன்னு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. தேன்கூட்டில் இருந்து
அப்பப்ப அவுங்க புதிய திட்டம்,மாற்றம்னு எதாவது பரிசீலிக்கும்போது ,'அக்கா... இந்த மாதிரி
...... ஒரு விஷயம் பரிசிலிக்கப்போறோம். உங்க தளத்தை வச்சு சோதனை செய்யலாமுன்னு
இருக்கேன். என்ன சொல்றீங்க? இதுலே ஏதும் ஆபத்து இல்லை'ன்னு கேட்டு மடல்கள்
அனுப்புவார். நான் ஒரு க.கை.நா என்றபடியாலே ஒண்ணும் புரியாது. என்ன ஏதுன்னு
நொச்சுநொச்சுன்னு விளக்கம் கேப்பேன். பொறுமையா பதில் சொல்வார். பரிசோதனைக்கு
இருக்கற எலியா நாம? சரி.. இருந்துக்கலாமுன்னு அதுலே பங்கெடுத்துருக்கேன். அந்த
மடல்களின் சொந்தக்காரர்தான் இவர்ன்னு தெரிஞ்சதும், மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு.



தேன்கூடு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஆண்டுவிழாவை உங்க எல்லோரோடும்
கொண்டாடி, சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கணுமுன்னுதான் இனிப்போட வந்தேன்னு சொன்னார்.
பழகுவதற்கு இனிமையான மனிதர். அங்கே இருந்த கொஞ்ச நேரத்துலேயே கலகலப்பா
எல்லார்கிட்டேயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தார்.



அதுக்கப்புறமும், அவர் ச்சென்னையிலிருந்து திரும்பிப்போகு முன்னே சிலதடவைகள்
செல்லுலே கூப்புட்டுப் பேசுனார். அருமையான நகைச்சுவையோடு நாட்டுநடப்பு, ஊர் நடப்புன்னு நிறையப் பேசுனோம்.



இங்கே நான் திரும்பி வந்தபிறகு, ஒரு முறதமிழ்மணத்துலே 'பிங்'செய்யமுடியாமப் போச்சு. சரி, தேன்கூட்டுலேயாவது நம்ம பதிவு தெரியுதான்னு பார்க்க அங்கே போனா அங்கேயும் நம்மளைக் கண்டுக்கலை.
அப்பதான் தேன்கூட்டுக்கு ஆதரவு திரட்டறதுக்காகவே நான் ச்சென்னைக்குப் போனேன்னு ஒரு 'கிசுகிசு' வந்திருந்துச்சு.



என்னடா.... இது எனக்கு? "இப்படியெல்லாம் மக்கள்ஸ் வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காங்க. இங்கே வந்து பார்த்தா
என் பதிவைக்கூட உங்க தளம் காமிக்கலை.கடைசியில் நானே பிங் செய்ய வேண்டியதாப்போச்சு'ன்னு ஒரு புகார்
அனுப்புனேன். அப்பவும் அதுக்குப் பொறுமையாப் பதில் அனுப்புனது நம்ம கல்யாண்தான்.



இதுதான் நான் அனுப்புன மடல்:


சரியாப்போச்சு.
அங்கங்கே எதோ 'நான்'தான் தேன்கூட்டுக்கு வரிஞ்சுகட்டி ஆள் சேர்க்கிறதா
'கிசுகிசுக்கள்' வந்துக்கிட்டு இருக்கு.அப்படியான்னு இங்கே வந்து பார்த்தா நம்ம ப்ளொக்லே போட்ட
புதுப் பதிவுகளைக்கூடக் காட்ட மாட்டேங்குறீங்க. அப்புறம் 'பிங்' பண்ணி விட்டுருக்கேன்.

ஏங்க தானாவே பதிவுகள் 'இடுகைகள்' பக்கத்திலே வராதா?
ஒண்ணும் புரியலையேங்க.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்

அதுக்கு வந்த பதிலும் இதோ.


Thulasi Madam,

Vanakkam.

அட.. என்னங்க மேடம் இப்படி சொல்லிட்டீங்க?!

Nothing like that. There is a logic... based on which, there is 2 different aggregating
styles. one is to aggregate once in every 1 hour. another is to aggregate in 24 hours.
If you do post regularly like every 15 days. it will automatically add it up to the 1 hour
method. Otherwise wait for 1 day.

By the way, if you can, please use ping itself whenever you post. It really reduces
lots of over heads in the backend side.

Kisu - Kisu pathi ellam kavalaipadatheenga. Crooked minded peoples are there
at all places.

Anbudan,
Kalyan.

இப்படியெல்லாம் நல்ல நட்போடு இருந்த ஒருத்தர் திடீர்னு மறைஞ்சதா, நம்ம மதியின் பதிவைப்
பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.

சாகற வயசா இது? இன்னைக்கெல்லாம் இருந்தாலும் ஒரு முப்பத்திரெண்டைத் தாண்டுவாரா என்ன?
சாகரனின் அலைகள் இப்படி ஓய்ஞ்சது ஒரு திடுக்கிடும் செய்திதான்.

அன்னாருக்கும், அவர் குடும்பத்தினருக்கும், அவரின் உற்ற நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் நேரம், கல்யாணுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

Saturday, February 10, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 4)

தி.நகருக்குன்னே நிறைய லேண்ட்மார்க் இருக்கு ச்சென்னையில். நல்லி, போத்தீஸ், தங்கமாளிகை, பனகல் பார்க், ரங்கனாதன் தெரு, பாண்டி பஜார்ன்னு இருக்கறதுங்க கூட நம்ம வாணிமஹாலையும் சேர்த்துக்கணும்.

இந்த 'லேண்ட்மார்க்'ன்னதும்தான் மக்கள்ஸ் எப்படி அநியாயத்துக்கு 'ஆவின் பூத்'தைக்கூட ஒரு அடையாளமாச் சொல்றாங்கன்னு ஞாபகம் வருது:-) இன்னொருத்தர் இதையும் மிஞ்சிட்டார்.ஒரு ******* தெருவிலே வந்தீங்கன்னா, இடது பக்கம் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இருக்கும். அதுக்கு நேரா ஒரு தெரு இருக்கும் அதுக்குள்ளெ வாங்க. *** நம்பர் வீடு நம்மது. இது எப்படி இருக்கு? :-)))

'தியாகபிரம்ம கான சபா'வோட சொந்தக்கட்டிடம் இந்த வாணி மஹால். இந்த சபா தொடங்குனது 1945லே.ஆனா இசை நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பிச்சது 1979லே இருந்துதானாம். நல்ல செண்ட்டரான இடத்துலே அமைஞ்சுபோச்சு. ஜி.என்.( செட்டி)தெருவுலே இருக்கு. உள்ளே ரெண்டு அரங்கங்கள். கீழே இருக்கறது மகாஸ்வாமிகள் அரங்கம். 850 பேர் உக்காரலாம். மாடியிலே இருக்கறது ஓபுல் ரெட்டி அரங்கம். ச்சின்னஹால். காம்பேக்ட்டா இருக்கு. 250 இருக்கைகள். ரெண்டுமே ஏ.ஸி. வசதியோட நல்லாவே இருக்கு.

வருஷம் பூராவும் இங்கே நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருக்கும். டிசம்பர் இசைவிழா, மார்கழியில் திருப்பாவை,ஜனவரியில் நடன விழா, இன்னும் நாடகங்கள்னு கோலாகலம்தான். நிறைய நடன அரங்கேற்றங்கள் இங்கே நடக்குது. இங்கே சங்கீத வகுப்புகள் வேற நடக்குதாம். பலநாட்களில் பார்த்தீங்கன்னா, சில நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்தான். வாசலில்.'ஆல் ஆர் வெல்கம்' போர்டு இருந்தா உள்ளெ நுழைஞ்சுரலாம்:-))))

இந்த முறை டிசம்பர் 25 முதல் 31 வரை நாடக வாரமா அறிவிச்சுட்டாங்க. தினமும் மாலை ஆறே முக்காலுக்கு கிரேஸி மோகன் குழுவினரின் நாடகங்கள். ஒரு நாடகம் கட்டாயம் பார்த்துரணுமுன்னு இருக்கு. கோபால் மறுநாள்டெல்லி( ஆபீஸ் வேலை) போறார். இன்னிக்கு விட்டா ச்சான்ஸ் கிடைக்காது. அதுக்கென்ன.. போயிரலாம்.

இன்னிக்கு 'சுருதிலயா' போகலாம். போற வழியிலே அப்படியே 'மியூஸிக் அகடெமி ' யிலே இன்னும் என்னென்ன நல்ல நிகழ்ச்சி இருக்குன்னு பார்த்து டிக்கெட் வாங்கிக்கோ. உனக்கும் நாலு நாள் நல்லா பொழுது போகும்'னு சொன்னார்.நான் 'இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் இவர் பேச்சைத் தட்டவே மாட்டேன்'. போனோம்.

கவுண்ட்டரில் இருந்தவர் சொல்லிட்டார், அன்னன்னிக்குள்ள டிக்கெட் மட்டும்தான் கிடைக்கும். தினம் காலையில் 10 மணிக்கு டிக்கெட்டு விற்பனை. மறுநாள் சுதா ரகுநாதன். மாலைக் கச்சேரி. 'சோம்பல்படாம காலையில் வந்து டிக்கெட்வாங்கிக்கோ'ன்னு கோபால் சொன்னார். சரின்னு தலையை ஆட்டிட்டு, இசைவிழா நிகழ்ச்சி நிரல் கிடைக்குமான்னு கேட்டேன்.கிடைச்சது. இப்ப என்ன நடக்குதுன்னு ச்சும்மாக் கேட்டுவச்சேன். பதில் வந்துச்சு 'செளம்யா'ன்னு. அடடா.....ரெண்டு டிக்கெட் கொடுங்கன்னு அவசரப்பட்டேன். அப்ப 'சக்கரைப்பந்தலில் தேன்மாரி' பொழிஞ்சது' . "ஃப்ரீ கச்சேரிதான்.எங்கே வேணாப் போய் உக்காருங்க."

செல்ஃப் பார்டர் போட்ட நீலப்புடவையில் செளம்யா. அதான் "நமக்குக் கிடைக்கணுங்கறது கிடைக்காமப் போகாது'!அப்பப்ப ஒரு ப்ளாஸ்க்லே இருந்து சுடுதண்ணியோ என்னமோ குடிச்சுக்கறாங்க. எதோ மாத்திரையும் போட்டுக்கிட்டமாதிரி இருந்துச்சு. " ஹூம்........ மருந்து மாத்திரையாலேதான் வாழ்ந்துண்டுருக்கா அவளும்" பின் வரிசையில் இருந்தபெரியவரின் அங்கலாய்ப்பு. இதோ அடுத்த பாட்டு........ " இது என்ன ராகம், என்ன தாளம்னு சொல்லப்படாதோ?"மறுபடியும் பெரியவர். "செத்தத் தொணப்பாம பாட்டைக் கேக்க விடுங்கோ" இது பெரியவரின் மனைவி. ஜொலிக்கும் வைரத்தோடு. என்னோட தோடைப்போல டபுள் த சைஸ்!! நல்லவேளை, நான் போட்டுக்கலை.

'என்ன ராகமுன்னு தெரியலையே? என்னன்னு சொல்லு '-மறுபடியும் பெரியவர். 'நேக்கும் தெரியலை'- இது மனைவி. ஆஹா........நம்மைப்போல நிறையப்பேர் இருக்காங்க, 'சங்கீதத்தை ரசிக்கறதுதான் என் கடமை'ன்னு. நானும் உங்களில் ஒருத்தின்னு சொல்லவா? ஒரு மணி நேரம் போனதே தெரியலை. மகுடிக்குக் கட்டுண்ட நாகம்( அதுக்கும் காது இல்லையாமே!)ஆமாம்,இன்னிக்கு... எப்படி செளம்யா? ருக்மணி வயலின்னு லிஸ்டுலே இருக்கே. ஓஓஓஓ... புரிஞ்சுபோச்சு.நேரத்தை ஸ்வாப் பண்ணி இருக்காங்க. எல்லாம் நம்ம அதிர்ஷ்டம்.

எல்லா சபாக்களும் சேர்ந்து என்னென்ன நிகழ்ச்சிகள்னு ஒரு லிஸ்ட் போட்டுருந்தா எவ்வளவு சுலபமா இருக்கும்.நெட்டுலே சேகரிச்சதுலே மாலைநேரக் கச்சேரிகள் மட்டும்தான் இருக்கு. ஆனா காலை நேரத்தைப் பத்தி விவரம் சரியா இல்லையே(-: என்னதான் ஹிண்டுலே தினப்படி வந்தாலும் எல்லாத்தையும் எழுதி வச்சுக்கிட்டு எப்படி ஜக்கிள் பண்ணலாமுன்னு ஆயிருதேன்னு ஒரு எண்ணம். உண்மையிலேயே இப்படி ஒரு லிஸ்ட் இருந்தா,சரியாத் திட்டமிட்டா இலவசமாவே நிறைய நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும். இல்லேன்னா உள்ளூர் மக்கள் பலருக்கு இப்படிக் கைக்காசை செலவு செய்யறது கொஞ்சம் கஷ்டம்தானே?

சுருதிலயா போய் சில புத்தகங்கள் ம்யூஸிக் நொடேஷனுடன் வாங்கியாச்சு. மகள் இங்கே நியூஸியில் ஃப்ளூட் படிச்சிருக்காள். இப்ப வாங்குனது சில பிரபல சினிமா மெட்டுகளுக்கு. நம்ம தமிழ்ச்சங்க விழாவுலே வாசிப்பாளோ என்ற ஒரு நப்பாசைதான். இதோ என் வீணை. எங்க இவருக்கு அங்கே இருந்த உறுமி மேளம் ஆசையா இருந்துச்சாம். இருக்காதா பின்னே? மருதக்காரவுகளாச்சே! ஒரு பித்தளை உருளையும், ஒரு மர உருளையும் சேர்ந்து ஒரு செட்டா வருது. 'தோல் வாத்தியம். அங்கே ஃப்யூமிகேட் செய்யணும். உள்ளெ விடலைன்னா வீண் செலவு'ன்னு சொல்லி,'ஆசை'க்கு ஆப்பு வச்சுட்டு, மகளுக்கு ஒரு மூங்கில் புல்லாங்குழல் வாங்குனேன்.
அப்ப அங்கே 'சரிகமபதநி'ன்னு ஒரு புத்தகம் இருந்துச்சு. புரட்டிப்பார்த்தா.......... 'தேடிப்போன மூலிகை காலில் அகப்பட்டது' டிசம்பர் இசை விழா 2006 கையேடு. ( இது ஏழு வருஷமா வருதாமே)உள்ளெ சபா முகவரிகள், சங்கீத சபாக்கள், கச்சேரி காலண்டர், வளரும் கலைஞர்கள், ஒளி வீசும் நட்சத்திரங்கள்,இதயம் வென்ற இசை வித்தகர்கள், சரித்திரம் படைத்த சங்கீத மேதைகள், வாக்கேயக்காரர்கள், இசைக்கருவி விற்பனையகங்கள்,கலைஞர்களின் முகவரிகள்னு 152 பக்கம் இருக்கு. விலை? நம்புங்களேன்......... இது இலவசமாம்! விரைவில் இணைய தளம் வழியாக வரப்போறாங்களாம். கிரேட்!!

சாயங்கால காஃபியைக் குடிக்கக் கிளம்புனோம். நம்ம 'சுஜாதா' விகடன்லே எழுதி இருந்ததைப் படிச்சிட்டு இன்னிக்குக் காலை உணவு (இட்டிலி)க்காக முருகன் இட்டிலிக்கடை போயிருந்தோம். நாலுவகைச் சட்டினிகள் இருக்குதான். ஆனா அணைக்கட்டத் தெரியலைன்னா ரொம்பக் கஷ்டம். எல்லாம் இலையில் ஓடுது. 'கொஞ்சம்' ன்ற வார்த்தையே அவுங்களுக்குப் புரியலை(-: சுஜாதாவுக்கு மட்டும் 'கெட்டி'ச் சட்டினியோ? ஆனா, அவர் எழுதியிருந்தார் பாருங்க, நல்ல காஃபிக்கு சரவணபவன்'ன்னு. அது என்னவோ நிஜம். நாங்க தங்கி இருந்த இடத்துலெ இருந்து வாணி மஹால் அஞ்சு நிமிஷநடைதான் இருக்கும். ஆனா குப்பைகளையும், அழுக்குகளையும் மிதிக்காம பயந்து பயந்து தாண்டி வர எனக்கு பதினைஞ்சு நிமிஷமாயிருது. நடைபாதைன்னு இருக்கறதுலெ எல்லாம் கார்களைப் பார்க் செஞ்சு வச்சுருக்காங்க. ரோடுலேதான் நடக்கணும். எந்த நிமிஷம் எந்த வண்டி வந்து மோதுமோன்னு இருக்கு. எக்கச்சக்கமான வண்டிகள். ரோடு ச்சின்னதா இருக்கு.லேனாவது மண்ணாவதுன்னு! கண்டபடி ஒண்ணையொண்ணு முந்தும் வண்டிகள். கோன் ஜீத்தா ஹை, வோ சிக்கந்தர்.

வீட்டைவிட்டு வெளியே வரும் ஜனங்கள் பத்திரமா வீடு போய்ச் சேர்ந்தாங்கன்னா அவுங்க விதி இன்னும் முடியலைன்னுசந்தோஷப்பட்டுக்கலாம். ஆயுசு கெட்டி. வாணிமஹாலைத் தாண்டும்போது வெளியே மேஜை போட்டு, நாடக டிக்கெட் விக்கறாங்க. அதை வாங்கிக்கலாமுன்னு போனோம்.இங்கெயும் முதல் கேள்வி, 'ஐந்நூறா இல்லை முன்னூறா?'முன்னூறே போதும். 'சார், ஐந்நூறு ரூபாய்து நானூறுக்குத் தர்றோம்.வாங்கிக்கிங்க சார்.' வேணாங்க , முன்னூறே போதும். சரி முன்னூத்தி அம்பது போட்டுக்கறேன் என்ன சொல்றீங்க? வேணாங்க. முன்னூறே போதும். பிடிச்ச பிடி.

வாசலில் போர்டு. '4.30 பி.எம்: டு டே : எம்.எஸ் லாவண்யா & சுப்புலக்ஷ்மி சாக்ஸஃபோன். ஆல் ஆர் வெல்கம்'மூணு படி ஏறி உள்ளே போனா நேரா இருக்கற எதிர்வாசலிலே ஜனங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. கேண்டீன்.சரி ஒரு காப்பியைக் குடிச்சுட்டு மேலெ போகலாம்.

மூகாம்பிகை கேட்டரர்ஸ். அருமையான உபசாரம். எதோ அவுங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தாப்போல ஓடி ஓடி வந்து நம்மைக் கூப்புட்டுப்போய் உக்கார வைக்கிறாங்க.அதிலும் நம்ம மேசைக்குப் பரிமாறுபவர் ( பேர் ,முரளி. அதெல்லாம் முதல்லெ பேரைக்கேட்டுருவேன்)பணிவாப் பாய்ஞ்சு பாய்ஞ்சு விளம்புறார். "வாழைப்பூ வடை(ஆ........நம்ம வடை விவகாரம் இவர் வரைக்கும் போயிருச்சா? ) சூடா இப்பத்தான் போடறாங்க. கொண்டு வரட்டுமா?அதுவரை ச்சுடச்சுட கோதுமை அல்வா சாப்பிடுங்களேன்."
"அல்வா வேணாம் முரளி. வடையே கொண்டு வாங்க.'

எங்கள் மேசையிலேயே ஒரு மார்வாரி குடும்பம் வந்து உக்கார்ந்தாங்க. பரவாயில்லாம, சுமாரா, நல்லாவே தமிழ்ப் பேசுறாங்க. அந்த அம்மாவுக்கு ரவா தோசைதான் வேணுமாம். அப்படியும் முரளி தன்னோட இனிய பேச்சாலே ஒரேடியா வீழ்த்திட்டார். இப்ப அவுங்க முன்னாலே ஆளுக்கொரு அல்வா. அல்வாவுக்கே அல்வா கொடுத்துட்டார்பாருங்க:-))))
வாழைப்பூ வடை அருமை மட்டுமில்லை, ரொம்பப் பெரூசு. 'கஷ்டப்பட்டு'த் தின்னவேண்டியதாப் போச்சு. முடிச்சுட்டு மாடியில் இருக்கும் அரங்கம். கதவைத் திறந்தவுடன் ரொம்பச் சத்தமா சாக்ஸஃபோன் கேக்குது.இடம் சின்னது. அதிலும் ரெட்டை சாக்ஸஃபோன்கள். பின்னே கேக்கணுமா? நல்லாதான் வாசிச்சாங்க ரெண்டு சகோதரிகளும். ஆனாலும் சத்தம் கூடுனதாலெ காது கஷ்டப்பட்டுச்சு(-:

சத்தமுன்னு சொன்னதும் இன்னொண்ணும் ஞாபகம் வருது. என்னடா, குறை சொல்றாளென்னு நினைக்காதீங்க.அதென்னங்க நம்மூர்லே எப்பவும் ஒரே சத்தம். மக்கள்ஸ் சத்தத்துக்குப் பழகிட்டாங்க போல. வீட்டுலே டிவிகூட எட்டூட்டுக்குக் கேக்கறமாதிரி வைக்கிறாங்க!

ஆறே முக்காலுன்னு சொல்லி ஒரு பத்து நிமிஷம் லேட்டாத்தான் நாடகம் ஆரம்பிச்சாங்க.

காமெடி மன்னன் கிரேஸி மோகன் & மாது பாலாஜி நடிக்கும்

' அலாவுதீனும் 100W பல்பும்'
( குபீர் டமார் சிரிப்பு நாடகம்)
இப்படித்தான் டிக்கெட்டுலே போட்டுருந்துச்சு. நாங்களும் கூட்டத்தோட சேர்ந்து தலையைக் கழட்டி வச்சுட்டுக் குபீர்...............டமார்...........ன்னு சிரிச்சோம். இப்ப நினைச்சுப் பார்த்தா எதுக்காக அப்படிச் சிரிச்சோமுன்னு தெரியலை. எதுவுமே மனசுலே நிக்கலை. எல்லாம் அந்த நிமிஷத்தோட 'குபீர்'னு மாயமா மறைஞ்சு போச்சு(-:

ஆனாலும் அரங்கம் நிறைஞ்ச காட்சிதான்.

Thursday, February 08, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 3)

"ஹலோ...... கிருஷ்ணகான சபாங்களா? சாயந்திரம் ஷோபனா டான்ஸ்க்கு டிக்கெட் கிடைக்குமா?"

" இப்ப இருக்கு"

இருக்குங்களா........... உங்க விலாசம் சொல்லுங்க, வந்து வாங்கிக்கறோம். எங்கே இருக்கு சபா?

"நம்பர் 20. மஹராஜபுரம் சந்தானம் ரோடு"

" எதாவது லேண்ட் மார்க் சொல்லுங்க. நான் ஜி.என். ( செட்டி) ரோடுலெ இருந்து வரணும்"

"பனகல் பார்க்குக்கு எதுத்தாப்பலே சாரதா வித்தியாலயா கேர்ள்ஸ் ஸ்கூலை ஒட்டி ஒருதெரு. அதுலே நேரா வந்தீங்கன்னா நம்பர் 20"

ஆட்டோகாரருக்கு விளக்கப்படுத்தி, பள்ளிக்கூடம் பக்கம் திரும்பும்போது, " இது கிரிப்பித் ரோடாச்சேம்மா,நீ என்னவோ பேர் சொல்றே?"

"இல்லைங்க இந்த ரோடுதான். இதோ பேர் பலகை இருக்கே,'மஹாராஜபுரம் சந்தானம் சாலை'ன்னு."

நானும் கோபாலும் ஆளுக்கொரு பக்கமாப் பார்த்துக்கிட்டு வர்றோம்.
ஆங்.......இதோ இருக்கு, வலக்கைப் பக்கம்.

"ஏம்மா......முப்பாத்தம்மன் கோயிலாண்டைன்னு சொல்லியிருக்கலாமுல்லே? நேரா இட்டாந்துருப்பெனே!"

"கோயில் எங்கேப்பா இருக்கு? "

"பின்னாலே திரும்பிப் பாரும்மா"

'ஸ்ரீ கிருஷ்ணகான சபா. துவக்கம்:1955' நுழைவாசலைக் கடந்து உள்ளெ போனா........முன் வெராந்தா நடுவிலே என்னவோ அலங்காரம். முதல்லெ டிக்கெட்டை வாங்கிட்டு வரலாம். ஐந்நூறா இல்லை முன்னூறா? முன்னூறே போதும்.

"ஏங்க, முப்பாத்தம்மன் கோயில் முன்னாலே'ன்னு சொல்லி இருக்கலாமே. கண்டு பிடிக்க ஈஸியா இருந்துருக்குமே"

"அப்படிச் சொன்னாலும் நிறையப்பேருக்குத் தெரியாது. அதான் அட்ரஸைச் சொல்றது"

ஹூம்...... அம்மன் மேல் என்ன கோவமோ :-)

முன் வெராந்தாவுலே ஒரு மேசையில் வீணை, தபேலா, வயலின் எல்லாம் மினியேச்சர்! பார்க்கக் கொள்ளை அழகு.

'ஏங்க , இது விற்பனைக்கா?' " இல்லீங்க. நாங்களே வாங்கினோம், அலங்காரத்துக்காக."
"இல்லையா? எங்கே கிடைக்கும்? ஸ்ருதிலயா, ராயப்பேட்டை ஹை ரோடுங்களா? "மனசுலே வச்சுக்கிட்டேன்.

சபா உள்ளெ பத்து மணிக்கச்சேரி நடந்துக்கிட்டு இருக்கு. வசுந்தரா ராஜகோபால், வயலின். ச்சும்மா ஒரு பத்துநிமிஷம் நின்னவாக்குலேயே கேட்டுட்டு வந்தோம்.

முப்பாத்தம்மன் கோயில் வாசல். ரெண்டு மூணு பூ வியாபாரத்துக்குப் பக்கத்துலே ஒரு பாத்திரத்துலே பால்.சாமிக்கு அபிஷேகம் செய்யவாம். பாலுக்குத் தவிக்கும் குழந்தைகள் இருக்கற நாட்டில், தன்மேலே பாலபிஷேகம் வேணுமுன்னு எந்த அம்மன் கேக்கும்? மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.

கோயிலில் எதோ கட்டிட வேலை நடக்குது. செங்கல்லும், ஜல்லியுமாக் கொட்டி வச்சுருக்கு. சம தரையில் இல்லாம,கொஞ்சம் தாழ்வா இருக்குக் கருவறை. பூஜாரி, குனிஞ்சு போறார், வர்றார். ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் எக்கச்சக்கமா இருக்குமாம். சக்தி வாய்ந்த அம்மனாம்.

மத்தியானச் சாப்பாடு வழக்கம்போல 'கோமளவிலாஸ்'.

சாயங்காலம் நடனத்துக்குக் கிளம்பியாச்சு. உள்ளே போகுமுன்னாலே கேண்டீனைப் பார்வையிட்டா, அங்கே நம்ம'கீதா கஃபே'. பரிமாறும் கணேஷ் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர். எப்ப வந்தீங்கன்னு கேட்டுக் கொஞ்சம் குசலம் விசாரிச்சார். இசைவிழா முடியும்வரை அவருக்கு இங்கே ட்யூட்டியாம். இட்டிலி, வடை, காபின்னு முடிச்சுக்கிட்டு,வெளியே 'ம்யூஸிக் சிடி' விற்பனையில் கொஞ்ச நேரம் மேய்ஞ்சு ரெண்டு பாட்டு சிடிக்கள் வாங்கினோம். இன்னும்மணி ஆகலையே........ உள்ளெ போலாமான்னு நினைச்சுப் போனா..............

அடடா......எப்படிக் கோட்டை விட்டுட்டேன்? பிரியா சிஸ்டர்ஸ் பாடிக்கிட்டு இருக்காங்க. அரைமணிநேரம் பாட்டுக் கேக்க வாய்ச்சது. அருமையாப் பாடினாங்க. அங்கே இங்கே சுத்தாம நேரா உள்ளே வந்துருக்கலாம்(-:
நடனம் ஆரம்பிக்குமுன்னே அரங்கத்தை நோட்டம் விட்டேன். ரொம்பப் பழையக் காலக்கட்டிடம். உள்ப்புற அலங்காரங்கள்னு ஒண்ணும் பிரமாதமா இல்லை. இந்த சபாவை ஆரம்பிச்சது மஹாராஜபுரம் சந்தானம் அவர்களாம்.கிரிஃபித் ரோடு இப்ப மகாராஜபுரம் சந்தானம் சாலையா மாறியதின் காரணம் இதுதானா?சில வருஷங்கள் ஹிந்திபிரச்சார் சபாக் கட்டிடத்தில் கலை நிகழ்ச்சிகளை நடந்துனாங்களாம். 1957-ல் சொந்தமா இப்ப இருக்கும் கட்டிடத்தைக் கட்டி இங்கே வந்துட்டாங்களாம். திரு. யக்ஞராமன் சபா செகரட்டரியாக தொடர்ந்து 40 வருஷம் இருந்துருக்காராம்! வசதிகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், இங்கே வந்து நிகழ்ச்சி கொடுக்கறதை ஒரு பெரிய கெளரவமா கலைஞர்கள் நினைக்கிறாங்களாம்.

பக்கத்து ஸீட் மாமி, சேலத்துலே இருந்து வந்துருக்காங்க, இந்த சங்கீத சீஸனுக்கு. சபா மெம்பர். வருஷம் ஆயிரம் ரூபாயாம். முந்தி மாம்பலத்துலே இருந்தப்ப எடுத்ததாம். வீட்டுக்காரர் ரிட்டயர் ஆன இப்பப் பத்து வருஷமா சேலத்துக்குப் போயிட்டாங்களாம். ஆனாலும் வருஷாவருஷம் வந்துருவாங்களாம். ஜாகை? சொந்தக்காரர்கள் வீடு:-)
முன்னூறு ரூபாய் டிக்கெட்டா? முன்னாலே போய் உக்காருங்கன்னு சொன்னாங்க. பரவாயில்லை, உங்ககூடவே இருக்கேன்னு சொல்லிட்டேன்.
பிரம்பு நாற்காலிகள்.சரிஞ்சு,அப்படியே குவிஞ்சு உக்கார்ந்துக்கலாம். ஆனா நம்ம வசதிக்கு ஒரு நாற்காலியை இழுக்கமுடியாது.நாலுநாலு நார்காலிகளாச் சேர்த்து கட்டை வச்சு அடிச்சிருக்காங்க!!!! நகர்த்தணுமுன்னா......... மூச்:-)

ஷோபனாவின் நடனம் தொடங்கியாச்சு. படத்துலே இருக்கற மாதிரி இல்லாம இன்னும் ச்சின்ன உருவமா இருக்காங்க.நடனத்தைப்பத்தி சொல்ல வேற ஒண்ணும் இல்லை. பிரமாதம். சம்பிரதாயமான நடனம். நடனம் முடிஞ்சதும் ஸ்டேஜ் ஓரமா உக்கார்ந்தாங்க,இடுப்பைப் பிடிச்சிக்கிட்டு. முகத்துலே ஒரு லேசான வலியோ? கொஞ்ச நேரம் பேசிக்கிட்டுஇருந்தேன். முதுகுவலி இருக்காம். கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதாப் போச்சுன்னாங்க. என்னதான் அட்டகாசமான மேக்கப் போட்டுருந்தாலும் வயசு முகத்தில் தெரிய ஆரம்பிச்சிருக்கு(-:

அங்கே இன்னொரு பரிச்சியமான முகத்தையும் பார்த்தேன். உடம்பு முன்னைக்கு இப்போது............ சுருக்கமாச் சொன்னா என்னை மாதிரி:-)
"நீங்க சித்ரா தானே? எப்படி இருக்கீங்க? ரொம்ப வருஷத்துக்கு முன்னே உங்க நடனம் பார்த்துருக்கேன், பிஜியில்"

" அப்படியா !!....... ரொம்ப வருஷமாச்சு. பத்துப்பதினைஞ்சு வருஷம் இருக்குமே"

" இருபத்தி மூணு வருஷமாகப் போகுது. அது 1984 ஃபிப்ரவரி"

" அட! எப்படி இவ்வளவு கரெக்ட்டா ஞாபகம் வச்சுருக்கீங்க?"

" ஆறே மாசக் கைக்குழந்தையைத் தூக்கிக்கிட்டு 22 மைல் பயணம் பண்ணி உங்க நடனம் பார்க்க ஓடி வந்தது அப்படிச் சீக்கிரம் மறந்துருமா?"

வியப்பும் சிரிப்பும் முகத்தில். நல்ல களையான முகம். அழகு அப்படிக் குறைஞ்சு போயிரலை.

" அப்ப உங்களைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. அதனாலே இப்ப எடுத்துக்கப்போறென்:-)"

"நாளைக்கு என்னோட ப்ரோக்ராம் இங்கே இருக்கு. வருவீங்களா?"

" அப்படியா? தெரியாதே. வர முயற்சி செய்வோம்"

மறுநாள் போக முடியலை.
பாட்டு, நடனத்துக்கு அப்புறம் நாடகம் தானே?


Tuesday, February 06, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 2)

இன்னிக்கு கிறிஸ்மஸ் திருநாள். நேத்துப் பார்த்த ராமாயண 'மயக்கம்' இன்னும் தீர்ந்தபாடில்லை. 'ருசி கண்ட பூனை'யா இருக்கேன். இன்னிக்கு என்னென்ன இருக்கு? டி.வி. ராம்ப்ரஸாத் -பாட்டு, லாவண்யா & சுப்புலக்ஷ்மி சாக்ஸஃபோன்,மஹதி பாட்டு, அட..... அடுத்து நம்ம செளம்யா பாட்டு, அப்புறம் கடைசியா கத்ரி கோபால்நாத்.


ரொம்ப முக்கியமா நான் நினைக்கிறது செளம்யாவும், கத்ரியும்தான். ஆனாப் போகமுடியுமான்னு தெரியலை. இன்னிக்கு அரசாங்க விடுமுறையா இருக்கறதாலே காலையில் சில முக்கிய குடும்ப நண்பர்களைச் சந்திக்கறதா ஒரு முன்னேற்பாடு.மத்தியானம்? எங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கும் 'இளந்தளிர்களை'ப் பார்க்கப்போகணும்.



எங்கே எந்த நேரத்தில் இருப்போமுன்னு ஒரு திட்டமும் இல்லாததால் பகல் சாப்பாட்டை வெளியில் முடிச்சுக்கணும். 'அம்பிகா எம்பயர்' கிறிஸ்மஸ் லஞ்ச் பஃபே. பனிரெண்டுக்குத் திறக்க வேண்டிய டைனிங் ஹால், அலங்கரிப்புக்குத் தாமதமாச்சுன்னுமுக்காமணி நேரமாச்சு. உள்ளெ போனால், எதோ இங்கிலாந்துலே இருக்கறதுபோல டர்க்கி ரோஸ்ட் என்ன, லேம்ப் ரோஸ்ட் என்னன்னு அட்டகாசம். வெஜிடபுள் பிரிவை ஆராய்ஞ்சதுலே சேப்பக்கிழங்கு ரோஸ்ட், கேரளா அவியல்,ஆந்திரா காரபுலுசு( காரக்குழம்பு) மோர்கறின்னு நிறைய வகைகள். இங்கே கிடைக்காத காய்கறிகளாப் பார்த்துச் சாப்பிட்டேன்.
சாப்பாட்டின் கூடவே ஒயின் வகைகள் வேற. இந்தியா என்ன.......... ச்சென்னையே ரொம்ப மாறித்தான் போச்சு! நிறைய மக்கள்ஸ் கிறிஸ்மஸ் லஞ்சுக்கு வந்து நிரம்பிக்கிட்டு இருந்தாங்க. அங்கே சிறப்பு டின்னரும் அன்னிக்கு இருக்காம்!





நாலுமணிக்கு செம்பாக்கத்தில் இருக்கணும். இதுக்குமுன்னே போயிருந்த இடம்தான்னு சொன்னாலும், மனசில் வச்சுருக்கற லேண்ட் மார்க் எல்லாம் மறைஞ்சு எல்லாமே புதுசா இருக்கு. இடம் தெரியாமத் தடுமாற்றம். ஒரு அஞ்சுபத்து நிமிஷம் தாமதமாகுமோன்னு பயந்து செல்லுலே கூப்புட்டா, பிரியா சொல்றாங்க, 'நீங்க சரியான இடத்துக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கீங்க. இன்னும் கொஞ்சம் முன்னாலே வந்து நீச்சல் குளத்தையொட்டி இடது பக்கம் திரும்புங்க'ன்னு.


ஆஹா....... சொட்டுத்தண்ணியும் இல்லாத நீச்சல்குளத்தைப் பார்த்துட்டுச் சரியான இடத்துலேபோய் வண்டியை நிறுத்துனா,பின்னாலேயே வந்து நிக்குது பிரியாவோட ஆட்டோ! வேற எதோ வேலையாப் போயிட்டு, நாங்க காத்திருப்போமேன்னு பாய்ஞ்சு வந்தாங்களாம்:-)



மாடி வெராந்தாவுலே நின்னு கவனிக்கும் பிஞ்சுகள். உள்ளே காலடி வச்சதும் ஏகப்பட்ட வரவேற்பு. 24 பேர். சீவிச் சிங்காரிச்சு, உடுப்பு மாத்திப் பகுடர் எல்லாம் அடிச்சுக்கிட்டுப் பளிச்சுன்னு நிக்கிறாங்க நம்ம 'ஹோப்' எய்ட்ஸ் ஹோம் பசங்க. ச்சின்னதுக்கு 9 மாசம்தான் ஆகுதாம். ஆனா உறவினர் யாரோ ரெண்டு மூணுநாளைக்குக் கொண்டு போயிருக்காங்களாம். இவுங்களைக் கவனிச்சுக்கவும், குடும்பச் சூழ்நிலை கையைவிட்டுப் போன கவலைகளை மறக்கவும்ன்னு 6 பெண்கள். வட இந்தியப் பெண் ஒருத்தரும் இதில் சேர்த்தி.


பண்டிகை நாள் இல்லையா? பிள்ளைகளுக்கு 'டேனீஷ் குக்கீஸ்' டின் இங்கே இருந்து எடுத்துக்கிட்டுப் போயிருந்தோம். அப்புறம் கலரிங் புத்தகங்களும், கலர் செய்ய ஃபெல்ட் பேனாக்கள் செட்டும் லேண்ட் மார்க்கில் வாங்கி வச்சுருந்தேன். நம்ம சிங்கை சித்ரா ரமேஷூம், அவர் மகளும் பிள்ளைகளின் வயசுக்கேத்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கவும்,ஒரே மாதிரி பென் செட்டுக்கள் பெரிய கூடைகளில் இருந்து பொறுக்கி எடுக்கவும் உதவி செஞ்சாங்க. இங்கே நியூஸியில் ஒரு தோழி கொஞ்சம் இந்திய ரூபாய்களும், ஒரு புடவையும் கொடுத்தனுப்புனாங்க. அங்கெ 6 பெண்கள் என்ற விவரம் கேட்டுக்கிட்டதாலே இன்னும் அஞ்சு புடவைகள் வாங்கிக்கிட்டோம்.


கொஞ்ச நேரம் பிள்ளைங்களோட பேசிக்கிட்டு இருந்தோம். ரெண்டு பேர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறாங்க. மூணு பேர் இன்னும் பள்ளிக்கூட வயசு வராதவுங்க. இடைப்பட்டவங்க எல்லாம் பள்ளிக்கூடம் போய்வந்துக்கிட்டு இருக்காங்க.எங்களுக்காகப் பாட்டுக்கள் சில பாடிக்காட்டுனாங்க. அப்ப கொஞ்சம் வெக்கப்பட்டுக்கிட்டே ஒரு குழந்தை எழுந்து நின்னு,'உங்களுக்காக ஒரு டான்ஸ் ஆடிக்காட்டவா?ன்னு கேட்டாள். ஆஹா... கரும்பு தின்னக் கூலியா?


நாலு பெண் குழந்தைகள் 'ஐ லவ் மை இண்டியா' பாட்டுக்கு அட்டகாசமா ஆடுனாங்க. ஹைஸ்கூல் போற ரெண்டு அக்காங்க இன்னிக்குக் காலையில்தான் சொல்லிக் கொடுத்தாங்களாம். தூள்!!!!


பிரியான்னு சொன்னேன் பாருங்க, இவுங்க இடத்துலே முந்தி இருந்தது நம்ம தோழி.( அதனாலே என்ன? இப்ப பிரியாவும்தான் நம்ம தோழிகள் லிஸ்ட்டுலே சேர்ந்துட்டாங்க. இல்லீங்களா? ) அந்தத் தோழியும் அவுங்க கணவரும் இப்ப, 'சுநாமி' அழிவு ஏற்பட்ட கல்பாக்கம்,புதுப்பட்டினம் மீனவர் குப்பக் கிராமத்துலே இருக்கும் இளைஞர்களுக்கும், சிறார்களுக்கும் கல்விக் கண்ணைத் திறக்க உதவி செய்யறாங்க. சந்தோஷ், இளைஞர்களுக்குக் கணினி சொல்லிக் கொடுக்கறார். ஆரம்பப்பள்ளியை அவரோட மனைவி நடத்தறாங்க.


எங்களைச் சந்திக்கிறதுக்காக டாக்டர் அசோக் குமார் அங்கே வந்து சேர்ந்தார். இவருடைய குழு வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடியிருப்பு/குப்பங்களுக்குப் போய் மருத்துவப் பரிசோதனைகள் செஞ்சு, மருந்து கொடுக்கிறாங்க. ச்சென்னையில் இருக்கும் ஹோப் பவுண்டேஷனுக்கு இவர்தான் CPO. ச்சின்ன வயசுதான், என்ன ஒரு முப்பதைஞ்சு இருந்தாலே அதிகம். தன்னலமில்லாத இவருடைய சேவைக்குத் தலை வணங்கத்தான் வேணும். அவர்கிட்டேயும் கொஞ்ச நேரம் பேசி, இன்னும் எந்த வழியில் உதவி தேவை, எந்த அளவுக்கு நிலமை மாறி இருக்குன்னு பல விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம்.நல்ல வகையில் இந்த 'ஹோம்' நடக்கும்முறையை நேரில் வந்து பார்த்த தமிழக அரசு, இன்னும் சில இடங்களில் இதேபோல 'ஹோம்கள்' திறக்க இவுங்களையே கேட்டுக்கிட்டாங்களாம். தமிழ்நாட்டில் ரெண்டு ஹோம்களைச் சமீபத்தில் திறந்து நல்ல முறையில் செயல்பட்டு வருதாம்.இவுங்க சேவையைப் பாராட்டிட்டுக் கையோடு கொண்டு போன காசோலை( கொஞ்சம் நல்ல தொகைதான்)யைக் கொடுத்துட்டுக் கிளம்புனோம்.


பொதுவா நாம் செய்யும் நல்ல காரியங்களை ஓசைப்படாமச் செய்யறதுதான் உத்தமம். வலது கை கொடுக்கறது இடது கைக்குக்கூடத் தெரியக்கூடாதுன்னு சொல்வாங்க அந்தக் காலத்துலே. ஆனாப் பாருங்க, இந்த மாதிரி சேவைகளுக்கு எப்பவுமே நிதி உதவி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கு. நிலமை அவ்வளவுக்குத் தீவிரம். இதைப் படிக்கும் நல்ல உள்ளங்கள் எதாவது கொடுக்கவேணுமுன்னு நினைச்சால் உதவலாமேன்றதுக்காகத்தான் இதை இங்கே எழுதுனது. மேல் விவரங்கள் வேணுமுன்னா 'நீல' இங்கேயில் கிடைக்கும்


அங்கிருந்து கிளம்பும்போது ஆறுமணி. ஏழரைக்குத்தான் கத்ரி கோபால்நாத். டிக்கெட்டு கிடைச்சா நல்லா இருக்குமேன்னு ஒரு ஆசை. ஏழுமணிக்கே காமராஜர் அரங்கம் வந்து சேர்ந்தாச்சு. டிக்கெட்டும் கிடைச்சது. உள்ளெ போய் உக்கார்ந்தோம்.ஆங்......... இன்னொண்ணு சொல்ல மறந்துட்டேனே! நேத்து ராமாயணத்துக்கு டிக்கெட் எடுக்கும்போதே, 'எல்லாரும் வாங்க'ன்ற எஸ்.வி. சேகரின் நாடகத்துக்கு டிக்கெட் ரெண்டு கொடுத்தாங்க. அதுக்கு எவ்வளவு காசுன்னு கேட்டதுக்கு,இலவசம்தான்னு சொல்லிட்டாங்க. இன்னிக்கும் அதே நாடகத்துக்கு இன்னும் சில டிக்கெட்டையும் கொடுத்தாங்க. மறுபடியும் கேட்டதுக்கு 'இலவசம்'ன்னு சொன்னாங்க. சரி. நம்ம நண்பர்கள் யாருக்காவது கொடுக்கலாமுன்னு வாங்கி வச்சுக்கிட்டேன்.


செளம்யாவின் கச்சேரி முடிஞ்சு, கத்ரிக்காக பலர் காத்திருக்கறாங்க. நம்ம பக்கத்து இருக்கையில் 'மைதிலி மாமி'. எல்லாம் அறிமுகப்படுத்திக்கிட்டுத் தெரிஞ்சுக்கிட்டதுதான். காலையில் 10 மணிக்கு வந்தவுங்களாம். தினம் இப்படித்தான் ஆகுதாம்.


" செளம்யா பாட்டுதான் மிஸ் ஆயிருச்சு. நல்லா இருந்ததா மாமி? "


"அப்படி ஒண்ணும் பிரமாதமாப் பாடலை. கொஞ்சம் சுமார்ன்னுதான் சொல்லணும்."


"அவுங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்து ம்யூஸிக் அகடெமியிலே நாலேமுக்கா மணி நிகழ்ச்சி கேன்ஸலாயிருச்சு. ராமாயணம் முடிச்சுட்டு நேரா செளம்யான்னு போட்ட திட்டம் பணால்."


"அப்படியா? அந்த நேரத்துக்கு வேற யாரோட நிகழ்ச்சி இருந்துச்சு? டிக்கெட் முந்தியே வாங்கிட்டீங்களா?"


"டிக்கெட்டுக்குப் போன் செஞ்சப்பதான் விவரம் சொன்னாங்க. பதில் நிகழ்ச்சியா டி. ருக்குமணி வயலின்னு சொன்னாங்க. அதான் போகலை. அது இருக்கட்டும், என்னென்ன பாட்டு பாடினாங்க?"


"எதோ துக்கடாவாத்தான் பாடினா. உடம்பு சரியில்லையாமா? ட்த்சு......ட்த்சு......... அதான்............"


"என்ன புடவை கட்டிண்டிருந்தாங்க? "


"நீங்க செளம்யாவோட பயங்கர ஃபேனா? கறுப்புலே மஞ்சள் பார்டர்."


"அடடடா........சூப்பரா இருந்துருக்குமே!"


மைதிலியோட கணவரும், மச்சினரும் கொஞ்சம் 'வித்தியாசமான' கிரிக்கெட் விசிறிகளாம். இந்திய அணி எங்கே விளையாடினாலும் போய்ப் பார்த்துருவாங்களாம். ஆஸ்தராலியாவரை வந்துட்டுப் போனாங்களாம். இன்னும் நியூஸிக்கு வரலையாம்(-:


அதனாலென்ன, 2008க்கு இந்திய அணி இங்கே வருது. நீங்களும் வாங்கன்னு அழைச்சுட்டு, நம்ம விலாசம்,ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்தோம். இன்னும் பல இசை நிகழ்ச்சிகளைப் பத்தி மாமியோட பேசி விவரம் சேகரிச்சுக்கிட்டேன். அதுலே ஒண்ணு, தினமும் 'ஹிந்து' பேப்பரில் முழுவிவரமும் வருதுன்றது! அடடா....இது தெரியாம எங்கெங்கே என்னன்னு அலைஞ்சுக்கிட்டு இருந்தமே(-: இத்தனைக்கும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு 'டெக்கான் க்ரானிக்கிள், ஹிந்து, எக்ஸ்ப்ரெஸ் 'மூணும் வந்துருது. தினம் டில்லி அரசியல் & உள்நாட்டு கட்சிகளில் ஒருத்தர்மேல் ஒருத்தர் வீசும் சேறையுமே பார்த்தா எப்படி?


இதோ......... கத்ரி கோபால்நாத். அன்னிக்கு அவரோடு ஜமா சேர்ந்தவங்களை......... ஆஹா...... என்னன்னு சொல்றது?

வயலின் - கன்யாகுமரி.

தவுல்-ஏ.கே. பழனிவேல்.

அம்மாடியோவ்........... எல்லாம் பெரிய செட்! அம்ருத்ன்னு ஒரு இளைஞர் கஞ்சீரா, பெங்களுர் ராஜசேகர் மோர்சிங்.


மத்த கச்சேரிகளில் வயலின் முன்னாலே ஒலிபெருக்கி இருக்கும் பாருங்க, அப்படி இல்லாம இவுங்க வயலினுக்கு ஒரு ஸ்பெஷல் மைக் கன்யாகுமரியின் முதுகுப்பக்கமா வளைஞ்சு வந்து வயலின் மேலேயே உக்கார்ந்துருக்கு.


கழுத்துலே ஒரு ஜொலிப்போடு கூடிய சங்கிலி போட்டுக்கிட்டு, அட்டகாசமா வாசிக்கிறார் கோபால்நாத்.


"என்னமா மின்னறது பாருங்க? அவ்வளவும் வைரம்"- மைதிலி மாமி


அதிசயிச்சுப்போய் உக்கார்ந்துருக்கறேன் நான்.


சக்ஸஃபோனும் தவுலுமா என்ன ஒரு கம்பீரம்! கூடவே இழையும் வயலின். ட்ய்ங்ஞ் ட்ய்ங்ஞ்ன்னு கூடவே வரும் மோர்சிங்( கவனமா வாசிக்கணுமாமே, சிலசமயம் நாக்கு துண்டாயிருமாம், அப்படி ஒரு வாத்தியம்)


கர்நாடக சங்கீத ராகங்கள் ( பேர் எல்லாம் கேக்கப்பிடாது ஆமாம்) அருவி மாதிரி கொட்டுது. கடைசியா சில பாரதி பாட்டுக்கள். கொன்னுட்டாரய்யா......... கொன்னுட்டாரு!!


பின்குறிப்பு: கிளம்பும் அவசரத்தில் கேமெரா கொண்டுபோக மறந்துட்டேன்(-:

Monday, February 05, 2007

காலத்தின் கட்டாயம்

குடிக்கூலிக்காரியிடம்,'புது வீடு கட்டி இருக்கேன்.அங்கே வந்து இதே 'வாடகை'யில்இரு'ன்னு கூப்புட்டுக்கிட்டு இருந்த வீட்டுச் சொந்தக்காரரிடம், 'இதோ அதோ'ன்னுசாக்குச் சொல்லிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு 'வீட்டுக்காரர்', கறாராச் சொல்லிப்புட்டார்.


உன் பிரச்சனை என்னன்னு புரியுது. சாமான் செட்டெல்லாம் நிறைய இருக்கே, எப்படிடா அதையெல்லாம் கட்டி வலிக்கிறதுன்னு தானே பாக்கறே?
இன்னிக்கு நாளும் 'ரொம்ப நல்ல நாள்'. உனக்கான 'ஸ்பெஷல்' நாளுக்கு நான் இதைக்கூடச் செய்யாட்டா எப்படி?


நானே 'தொலையட்டும், போனாப்போவுது'ன்னு எல்லாத்தையும்அங்கே மாத்தி வுட்டுடறேன். நிம்மதியா(??) அங்கே போய் இருந்துக்கோன்னு 'அருள்வாக்கு' சொல்லி, இப்ப மாத்தியும் ஆச்சு.


அங்கே போய்ப் பார்த்தா.............பின்னூட்டக்காரங்க பேரெல்லாம் சிலது 'ஜிலேபி ஜிலேபி'யா இருக்கு. பலது அனானியாக் கிடக்கு.நிதானமாத்தான் இதைக் கவனிக்கணும். விவரம் தெரிஞ்ச தம்பி தங்கைகள் கொஞ்சம் என்னையும் கவனிங்கப்பா.

Thursday, February 01, 2007

பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 1)

அது இருக்கட்டும். இந்த ' பாமரன்' சொல்லுக்குப் பெண்பால் என்னவா இருக்கும்? நீங்க சொல்லுங்களேன்.......'பாமரள்'ன்னு வச்சுக்கலாமா?


ஏழுவயசா இருக்கறப்போ, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சின்னு மொத்தம் அறுவது பாட்டை மனப்பாடம் பண்ணி, அதுக்குண்டான ராகத்தோடு(?) பாடி காஞ்சி மடத்தின் தங்கக் காசைக் குன்றக்குடி அடிகளார் கையாலே முதல் பரிசா வாங்கினதும் பாட்டிக்குப் புல்லரிச்சுப் போச்சு. சங்கீத தேவதையே பேத்தியா வந்துட்டாளாம். ஏன்னா, அவுங்களே பாட்டு டீச்சர். 'ஹிமகிரிதனையே, தீராத விளையாட்டுப்பிள்ளை, அருள் புரிவாய் கருணைக்கடலே'ன்னு இன்னும் சில பாட்டுகளை பாடுவேன். இதையெல்லாம் வச்சே சமாளிச்சுருவேன்,கொலுவுக்குச் சுண்டல் வாங்கப் போகும்போது. இந்த அழகுலே டான்ஸ் வேற! 'தூண்டிற் புழுவினைப்போல்' பாட்டுக்குஅபிநயம் என்னமா இருக்கும்? 'பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்'ன்னு இருக்கறது என்கிட்டே அகப்பட்டுக்கிட்டு, 'பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்து மென்று விட்டான்'ன்னு தலையைச் சாய்ச்சுத் தூங்கும் பாவனையில் வாய் மெல்லும். பாவம் பாரதி(-:


அந்த ஊரோடு அதுவும் போச்சு.

அதுக்கப்புறம் பாட்டுன்னா சினிமாப் பாட்டுத்தான். ரேடியோவிலே ' தரநன்னா........'ன்னு ஆரம்பிச்சதும், விவிதபாரதிக்குத் திருப்பணும். பாவம்..பாட்டி. ஒரு கச்சேரி கேக்கவிட மாட்டேன்.


ஒரே ஒருக்காப் பார்த்த சினிமான்னாலும் பாட்டுங்க மட்டும் அப்படியே 'பச்சக்'குன்னு மனசுலே ஒட்டிக்கும்.பாடல் வரிகளுக்கு இருக்கவே இருக்கு, பத்து பைசா பாட்டுப் புத்தகம். ட்யூன்லெ வர்ற சந்தேகம் எல்லாம் சிலோன் ரேடியோ தீர்த்து வச்சுரும். ஊஊஊஊய்ங்........ஹொய்ங்...........ன்னு கத்திக்கிட்டே இருக்கும் ரேடியோவின் 'மேஜிக் ஐ' யையே உத்துப் பார்த்துக்கிட்டு சரியா ட்யூனிங் செய்யறதுக்குள்ளெ சிலசமயம் பாட்டே முடிஞ்சுரும். அப்படியும் விடாமக் கேட்டு உருப் போட்டுருவேன்.



பாட்டும் ரொம்ப நல்லாப் பாடறதா (!!!) வீட்டுலே எல்லோருக்கும் எண்ணம். அதிலேயும் சோகப்பாட்டுன்னா கேக்கவே வேணாம். விக்கல், தேம்பலுடன் ஒண்ணுவிடாமப் பாடிருவேன்:-)

" என் சிந்தை நோயும் தீருமா..........
தீயன் சூழ்ச்சி மாறுமா......
ஸ்நேகம் ஒன்று சேருமா......." தொடரும் தேம்பல்...........


சிந்தை நோய்ன்னா என்னன்னு அப்ப யாராவது கேட்டுருக்கணும்:-)


நல்ல சங்கீதத்தோட அருமை புரியும் வயசுலே, வாழ்க்கையே தடம்மாறிப் போச்சு. அதுக்கப்புறம் வாரப் பத்திரிக்கைகளிலே வர்ற இசைவிழாச் செய்திகள், சுப்புடுவின் காரசாரமான விமரிசனங்கள் எல்லாம் படிச்சு,'அடடா.... நல்ல சங்கீதம் படிக்கவும், கேக்கவும் ' இருந்த வாய்ப்பையெல்லாம் இப்படித் தண்டம் பண்ணிட்டோமேன்னுஒரு குற்ற உணர்ச்சி. பாட்டுக் கத்துக்கப் பாட்டி கூப்புட்டப்பெல்லாம் பாவி, எப்படி ஓடி ஒ(ழி)ளியறதுன்னு இருந்தேனே(-:



ஊருக்குப் போகும்போது ஒண்ணு ரெண்டுன்னு கொஞ்சம் கொஞ்சமா ஆடியோ டேப்களை வாங்கிவந்து 'பாட்டு' கேட்டுக்கிட்டு இருக்கும் பழக்கம் வந்துச்சு. என்ன ராகம், என்ன தாளமுன்னு கண்டு பிடிக்கும் அளவுக்கெல்லாம் இசை ஞானம் இல்லைன்னாலும்,நல்ல பாட்டை ரசிக்கத் தெரிஞ்சுக்கிட்டேன். ராகங்களைப் பத்தித் தெரிஞ்சக்கலாமேன்னு தோழியிடம் சொன்னதுக்கு,அவுங்க, 'Ragas of South India' ன்னு தலையணையாட்டம் 'ம்யூஸிக் அகடெமி ( அகெடமியோ?)யிலே இருந்து ஒரு புத்தகம் வாங்கிவந்து கொடுத்தாங்க.( நல்லாவேணும் எனக்கு. தலையும் புரியலை, கா(வா)லும் புரியலை)



எனக்கு மனசுக்குள்ளே சில நம்பிக்கைகள் எப்பவும் இருக்கு. (அது தவறானதுன்னு எங்க இவர் சொல்லிக்கிட்டு இருக்கார்,அவருக்கென்ன?) உதாரணமா ரெண்டு........ட்ரெட்மில் கண்பார்வையிலே இருந்தாலெ உடம்பு இளைச்சுரும். தலையணை சைஸுலே இருக்கறதைத் தலைக்கு வச்சுப் படுத்துக்கிட்டா 'சரக்கு' தானே மண்டையிலே ஏறிக்கும்.


இதையெல்லாம் படிச்சுட்டு நான் இசை ஞானமே இல்லாத மூடள்( பெண்பால் ?)னு நினைச்சுக்காதீங்க. இந்த இசைஅறிவைக் கொஞ்சம் பட்டை தீட்டிக்க ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். நியாயமான ஆசைகளா இருந்ததாலே நிறைவேறும் நாளும் வந்தது.


இங்கே இருந்து கிளம்பறதுக்கு முன்னேயே, வலையில் மேய்ஞ்சு, கிடைச்ச இசைவிழா நிகழ்ச்சி விவரங்களைப் பிரிண்ட் எடுத்துக்கிட்டுப் போனேன். அதுலெ பாருங்க, சில முக்கிய சபா விவரங்கள், அதுவும் மாலைநேரக் கச்சேரிகளை மட்டுமே கொடுத்திருந்தாங்க. எல்லாமே 'பெரிய பெரிய ஆட்கள்'.


ச்சென்னைக்குப் போய்ச் சேர்ந்தும்கூட எங்கே இருந்து ஆரம்பிக்கணுமுன்னு தெரியாத ஒரு த(ம)யக்கம். நான் தங்கி இருக்கற இடமோ, இசைவிழா நடக்கும் இடங்களிலே இருந்து தொலைதூரம். ராத்திரி வீட்டுக்குத் திரும்பறதுக்கு வாகனம் கிடைக்காமப் போயிட்டா? சரி. இன்னும் 12 நாளுலே இவர் வந்துருவார். அதுக்குள்ளெ கடைகண்ணி வேலைகளைமுடிச்சுக்கலாம். வாங்க வேண்டியவை(???)களை வாங்கிக்க இதைவிட்டா நல்ல ச்சான்ஸ் கிடைக்காது. கொஞ்சம் பூந்து வெள்ளாடிறலாம். கூடவே சிட்டிக்குள்ளே ஒரு இடமும் தேடிக்கணும்னு புறப்பட்டதுலே பல தோல்விகளுக்கப்புறம் தி.நகர் வாணி மகால் ( ஒரு ஆறேழு நிமிஷ நடை) பக்கம் தங்குமிடம் கிடைச்சது.


'சென்னையில் திருவையாறு'ன்னு விழா தொடங்கி ரெண்டு நாளா நடந்துக்கிட்டு இருக்கே,அது என்னன்னு பர்க்கணும்.காமராஜர் அரங்கம். காலை பதினொரு மணி இருக்கும். மத்தியானம் 1 மணிக்கு எதோ ராமாயணம் இசை நடனமாம்.அதுக்குப் போகலாமுன்னு இவர் சொன்னார். அரைகுறை மனசோட போனேன். அரங்கின் வெளியே டிக்கெட் விற்பனை.200 ரூபாய் டிக்கெட் ரெண்டு. அட! அழகான வயலின் வடிவில் நுழைவுச்சீட்டு! உள்ளே போறப்ப டிக்கெட்டைக் கிழிக்கறேன்னு இதைக் கிழிச்சிடுவாங்களோ? "அதெல்லாம் இல்லை. காமிச்சிட்டு நீங்க வச்சுக்கலாம்" ஆறுதல். வேற என்னென்ன நிகழ்ச்சிகளாம்?


தினமும் காலையில் 10 மணிக்கு ஆரம்பிச்சு, ராத்திரி 10 வரை நாளுக்கு அஞ்சு நிகழ்ச்சி வீதம் அஞ்சு நாளைக்கு நடக்குதாம். நிகழ்ச்சி நிரலைக் கொடுத்தாங்க. அடடா....... ஏற்கெனவே ரெண்டு முழுநாள் வீணாப் போயிருச்சே(-:


சரி, இதுக்கெல்லாம் சீஸன் டிக்கெட்டுபோல எதாவது இருக்கா? ஒரு நாலைஞ்சு நிகழ்ச்சிகளைத் தவிர மற்றதெல்லாம் அனுமதி இலவசமாமே! அட்றா சக்கை:-)


"இப்போ 'மல்லாடி ப்ரதர்ஸ்' பாடிக்கிட்டு இருக்காங்க. உள்ளே போறதுன்னா போங்க."


"இசைவிழாக்களில் இன்னொரு முக்கிய அம்சம் அங்கே நடக்குற கேண்டீனாமே! இங்கேயும் இருக்குங்களா? "


"இதோ.....இந்தப் பக்கம் போங்க.நல்லா டேஸ்ட்டியா இருக்கும்"


சூடா ஒரு காஃபியைக் குடிச்சு நம்ம இசைவிழா ரவுண்ட்ஸை ஆரம்பிச்சோம். அடுத்து மல்லாடி பிரதர்ஸ்.அருமையாப் பாடிக்கிட்டு இருக்காங்க. அரங்கம் முக்காவாசி நிறைஞ்சிருந்துச்சு. மூணு பாட்டுதான் கேக்கமுடிஞ்சது. 12.15க்கு நிகழ்ச்சி முடிஞ்சு, ஸ்பான்சாரிலே ஒருத்தர் பரிசும் வழங்குனார். இன்னும் முக்கால் மணி நேரத்துலேராமாயணம். மதுரை முரளீதரன் குழுவினர்.


திரை விலகல். ஏனோதானோன்னு உக்காந்திருந்த நான் உலுக்கிவிட்டாப் போல உணர்ந்தேன். 12 நடனமணிகள்.எல்லாரும் ஒரே மாதிரி 'க்ரீம் & மரூன்' கலரில் பரதநாட்டிய உடைகளில். அநேகமா ஒரே உயரம் போல இருக்கே!எல்லாருக்கும் வயசுக்கூட கிட்டத்தட்ட ஒண்ணுதானோ? கடவுள் வாழ்த்து, வரவேற்பு, ராமன் பெருமைன்னு எல்லாம் சேர்ந்த ஆரம்ப நடனம். இந்த ஒரு நடனத்துக்கே பன்னெண்டு பன்னெண்டாய் மூணு செட் பசங்க வந்து ஆடிருச்சுங்க.அடுத்த ஸீனுக்குன்னு திரை போடாமலேயே நொடியில் காட்சி மாற்றம். ராம லக்ஷ்மண பரத சத்ருகன்கள் பிறப்பு. அடுத்து விசுவாமித்திரர் வந்து ராம லக்ஷ்மணர்களை வேள்வி காக்க அழைத்துப் போறார்.


எதோ மாயாஜாலம் போல ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடைவெளியே இல்லாமல் நொடியிலேயே மாற்றம். அரச சபையின் வெளியிலே வாயிற்காப்போன் ஈட்டியுடன் நிக்கறதென்ன, உள்ளே அரசனுக்குச் சாமரம் வீசும் பாங்கியர் என்னன்னு எல்லாமே நம்ம கண்முன்னே கொண்டு வரும் அபிநயம். ஈட்டியும், வாளும்,சாமரமும், இன்ன பிற அம்சங்களும் கண்ணுக்குத் தெரியலையே தவிர அது எல்லாம் அங்கே இருக்கறதை அப்படியே உணர முடியுது. இத்தனைக்கும் முக்கிய சில கதாப் பாத்திரங்களைத் தவிர மத்த எல்லாருமே பரத நாட்டிய உடையில்தான்!


அகலிகை உயித்தெழுந்தது, தாடகை யாகத்தை அழிக்கப் பார்த்து, ராமன் கையால் மடிவது, மிதிலைக்குப் பயணம்,சிவ தனுசை நாணேற்ற வந்த மன்னர்கள், இதுலே ராவணனும் உண்டு, ராமன் நாண் பூட்டி வில்லை ஒடித்தது,சீதா கல்யாணம்னு காட்சிகள் போய்க்கிட்டே இருக்கு. கண்ணைக்கூட இமைக்காம அதிசயிச்சு மூச்சு அடைக்க உக்கார்ந்துருக்கேன்.


சீதையைக் கொண்டு போகும் ராவணனிடம் சண்டை போட்ட ஜடாயு, மரணவேதனையில் தவிச்சுக்கிட்டே குற்றுயிரும்,குறைவுயிருமா தவிச்சு, ராமனிடம் சேதி சொல்லியபின், துடிதுடிச்சுச் செத்தது............... ஆஹா......... ஜடாயுவா வந்தபெண் அட்டகாசம். நமக்கே குலை நடுங்குச்சு.


அசோகவனத்தில் சீதை. அரக்கிகள் உல்லாசமாக சோழிகளைக் குலுக்கிப்போட்டுத் தாயம், ஏழாங்கல்ன்னு ஆடிக்கிட்டேக் காவல் காக்கறது, சீதையின் கண்ணீர், தவிப்பு.


பிராட்டியைத் தேடி வந்த அனுமான். வாயு புத்திரன். என்ன ஒரு தாவல். என்ன ஒரு மிடுக்கு, என்ன ஒரு குறும்பு. அதே சமயம் அன்னையைக் கண்டதும் காமிச்ச விநயம், கணையாழியைக் கொடுத்துச் சூடாமணியை வாங்கிப்போகும் பணிவு.அப்பப்பா........ சொல்ல வார்த்தையே இல்லை.



இலங்கைக்கு பாலம் கட்டுனாங்க பாருங்க......... அரங்குலே யாரும் மூச்சு விட்டுருப்பாங்களான்னு சந்தேகம்தான்.


ராம ராவண யுத்தம் முடிஞ்சு அயோத்தி திரும்ப வந்து பட்டாபிஷேகம் வரை அப்படியே சிலைமாதிரி உக்கார்ந்துருந்தோம்.


கடைசியில் மொத்த குழுவினரையும் மேடையில் ஒவ்வொருவரா அறிமுகப்படுத்தினாங்க. தாடகையாவும், சூர்ப்பநகையாவும், காவல் காத்த அரக்கியர்கூட்டத் தலைவியாவும் வந்தது ஒரே பெண்தான். அமர்க்களம் போங்க. மொத்தம் 45 நடனமணிகள். ஏழெட்டு வயசுலே கூட சிலர் இருந்தாங்க.


தயாரிப்புக்கு என்னமா மெனெக்கெட்டுருக்காங்கன்றதைப் பார்த்தால்தான் புரியும்!


நிகழ்ச்சி முடிஞ்சவுடந்தான் திரும்பிப் பாக்கறேன், அரங்கம் பூராவும் நிறைஞ்சு வழியுது. எத்தனை ஸீட் இருக்குமோன்னு அதிசயப்பட்டப்ப, அங்கிருந்த ஒருத்தர் சொன்னார், ' இதுதாங்க ச்சென்னையிலேயே பெரிய அரங்கம். 2000 பேர் உக்காரலாம்'.


வெளியே வரும்போது அப்படி ஒரு திருப்தி மனசுலே. ராமாயணமான்னு சலிச்சுக்கிட்டு, நல்ல நிகழ்ச்சியைக் கோட்டைவிடப் பார்த்தேனே(-:


கோபாலுக்குத்தான் நன்றியைச் சொல்லணும்.

சொன்னேன்:-)


தொடரும்.