Monday, November 26, 2007

கீத்துக்கொட்டாயும் கயித்துக்கட்டிலும்

வெய்யில் காலத்துக்கு இதமாக இருப்பது எது?


வீட்டு முன்னாலே ஒரு தென்னோலைப் பந்தலும், கயித்துக்கட்டிலும்.
தரையெல்லாம் ஆத்துமணல் தூவித் தண்ணி தெளிச்சுவிட்டுட்டா அப்படியே 'சில்'ன்னு ஆளைத்தூக்கிட்டுப் போயிறாதா?



நாகரிக உலகமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் காலக்கட்டத்தில் இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்?



கவலைப்படாதே சகோத(ரா)ரின்னு நம்ம ஏக்கத்தைப் புரிஞ்சுக்கிட்ட ச்சீனர்கள் உதவிக்கு ஓடோடி வந்துட்டாங்க.


நூத்திஎழுபத்தியொம்போது தானாமே! இப்பத்தான் வீட்டுக்கு வந்த 'ஜங்க் மெயிலில் பார்த்தேன். ரொம்பநாளா ஒரு கண்ணு இதுமேலே இருந்துச்சுதான். ஆனா வேணுமா வேணாமான்னு முடிவெடுக்கத்தான் நாளாச்சு. 229ன்னு போட்டுருந்தான். இப்போ அம்பதைக் குறைச்சிருக்கான்:-) ஸ்டோர்வொய்டு ஸேல்னு, எதையெடுத்தாலும் 15% அல்லது 20% கழிவுன்னு வர்றதும் வழக்கம்தான். நமக்கு 'உண்மையாவே' வேணுங்கற பொருட்கள் மட்டும் ஸேலில் இல்லைன்றதைப் பொடிப்'பிரிண்டுலே போட்டுருவாங்க. (-: எலெக்ட்ரானிக்ஸ் & எலெக்ட்ரிகல் ஐட்டம்ஸ் எக்ஸ்க்ளூடட்.




ஆனாலும் இங்கே என்னமோத்தான் ஆகிக்கிடக்கு. அவுட் டோர் ஃபர்னிச்சர் சரி. தொலையட்டும் இந்த கேம்பிங் ஆக்ஸஸரீஸ்ன்னு இருக்கறதைப் பார்க்கணுமே....




நாலு தட்டு அலமாரியாம், ஸ்டோரேஜ் வச்சுக்கற மேசையாம். பாத்திரம் கழுவும் கேம்ப் ஸிங்க், கேம்ப் கிச்சன்,சோலார் ஷவர், ரெண்டு அறையுள்ள டெண்ட், நாற்காலிகள் (இதுலே ட்ரிங் கேன் வச்சுக்கற ஹோல்டர்ஸ் வேற), கட்டில்கள், கேம்ஸ் விளையாடிக்கன்னு தனியா ஒரு சதுர மேசை இப்படி அட்டகாசம். இவ்வளவும் வேணுமுன்னா பேசாம வீட்டுலேயே இருக்கலாம்தானே?




கஸீபோ வாங்க ஓடினோம். 'நோ ரெயின் செக்' காலையில் போயிருக்கலாம். வசதிப்படலை. இதுக்குள்ளெ வித்துப்போயிருக்குமோ என்னவோ? 'நமக்கு விதிச்சிருந்தாக் கட்டாயம் கிடைக்கும்' இது ஆத்ம விசாரம். கிடைக்கணுங்கறது கிடைக்காமல் போகாது:-)



கிடைச்சது. கூடவே ஃப்ரீ போனஸ் நெட். ஈக்கள் வராம இருக்கும் வலைச்சுவர்.



வீட்டுக்குக் கொண்டுவந்து இறக்குனதும் முதல் காரியம் நம்ம கிங்குக்குச் சேதி சொல்லணும். அவர் வந்து போட்டுத் தரட்டும். எனக்கு 'பல்'வேலை இருந்துச்சு. போயிட்டுத் திரும்பும்போது, நம் வீட்டு வாசலில் ஒரு கும்பல் நிக்குது. (நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க)

கிங் & கோ வந்து பேக்கைத் திறந்து பார்த்துப் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அவரோட தம்பிக்கு ஒண்ணு வாங்கிக்கணுமாம். தரையோடு சேர்த்துப் பிடிப்பிக்க பலமான ஒரு பொருள் வேணும். 'பேக்'கில் வந்த கம்பிக்குப் பலம் போதாது. அடிக்குற காத்துலே பிச்சுக்கும். இன்னிக்கு வியாழந்தான். இன்னும் ரெண்டு நாள் வீக் எண்ட்லே வேலையை வச்சுக்கலாம்.

வெள்ளிக்கிழமை வந்த ஜங்க் மெயிலில் இன்னொரு கடையில் கயித்துக்கட்டில் இருக்கு. 25% கழிவு. ஊரே கோடைக்கு தயார் ஆகுது. ச்சீனர்களுக்குத்தான் மக்கள் மேல் எவ்வளோ பரிவு!!!!! அடடா......

ஒவ்வொண்ணுக்கும் சரியான குறிப்புகள். படத்தோடு விளக்கங்கள். 'ஏ'வை, 'பி' யோடு இணைக்கவும். 'எஃப்' யைக்கொண்டு முடுக்கவும்( இது ஸ்க்ரூ) இப்படி......
பரபரன்னு இணைச்சு கட்டிலை உருவக்கி முடிச்சதும், எதோ தனக்குத்தான் எல்லாம் தயாராகுதுன்ற நினைப்பு இங்கே ஒருத்தருக்கு:-))))

ஆமா....நம்மூர்களிலே இன்னும் கயித்துக்கட்டில் இருக்கா இல்ல அதுவும் கால வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சா?

இனி கொட்டாய் வேலை பாக்கி. மூணு மீட்டர் பை மூணு மீட்டர். போட நினைச்சிருக்கும் இடத்தில் சரி வருமான்னு தெரியலை. இடத்தை அளந்தா
2.97 மீட்டர்தான் இருக்கு . வுட்டுற முடியுதா?

எடுத்துப் பிரிச்சுப்போட்டு வேலையை ஆரம்பிச்சோம். 1,2,3ன்னு வகைகளைப் பிரிச்சாச்சு. செல்லம்போல எல்லாத்தையும் யோசிச்சு வச்சுருக்கான் ச்சீனாக்காரன்!!!!

சொன்னபடி செஞ்சோம். இடம் பத்தாதுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்சதூரம் தள்ளி அசெம்பிள் பண்ணியாச்சு. இப்ப எப்படி இதை நகர்த்தணும்? நாலுபேர் இருந்தா ஆளுக்கு ஒரு பக்கம் பிடிக்கலாம். இருப்பதோ நாலு கைகள்.
அரையடி அரையடியா நகர்த்துவோமுன்னு சாதிச்சுப்புட்டொம்லெ:-)))

ஒரே ஒரு சோகம் என்னென்னா மரக்கிளைகள் தடுக்குமுன்னு நினைச்சுப் பரபரன்னு கிளைகளைத் தரிச்சதுதான். ஒரே ஒரு கிளையை வெட்டியிருந்தாப்போதும். ஆனா நம்மாளு சிவன், அழிக்கறதில்.




அப்புறம்?
அப்புறமென்ன...? என்கிட்டே கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கிட்டார்(வழக்கம்போல)
சிலபேருக்கு அப்படி ஒரு ராசி. என்னதான் மாஞ்சுமாஞ்சு செஞ்சுகொடுத்தாலும் கடைசியில் ஒரு (அவப்)பேரு.

அதெல்லாம் முளைச்சு வந்துருமாம், கொஞ்சநாளில்.

பார்க்கலாம், பக்கத்துவீட்டு மரம் முளைக்குதான்னு!!!!

பந்தல் போட்டாச்சு.

Friday, November 23, 2007

முதல் முதலாய்....

எண்ணி எட்டேநாளில் எங்க கோடைகாலம் ஆரம்பிக்கப்போகுது.


செடிகொடிகளின் ஆரவாரம் ஆரம்பம். இந்த சீஸனில் முதல்முதலாப் பூத்தவைகள் உங்களுக்கு(ம்) கண்காட்சி!


இது லில்லிகளின் காலம்.





கிறிஸ்மஸ் லில்லி


வாட்டர் லில்லி



ஆரம் லில்லி


Peace லில்லி


ஜாப்பனீஸ் Cycas குருத்து


போகன்வில்லா




சாக்ஸாஃப்ராகா



ரோஜா



மல்லி




ட்யூலிப்




லாவண்டர்






லொபெலியா



காக்டெஸ்





பெயர் தெரியாத ஒரு மரம் ( விஷச்செடியாமே!)






இதுமட்டும்தான் வருஷம் முழுவதும் பூக்கும் நம் வீட்டுச் செல்லப்பூ, கருப்'பூ':-))))

Monday, November 19, 2007

ஊருக்கு உழைப்பவர்(கள்)

தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம் ஊரார் வீட்டுக்கு இரும்பிடிக்கப் போனாளாம்.....

நாலுநாள் லீவு எங்களுக்கு மட்டும். மத்த மக்கள்ஸ்க்கு வெறும் மூணே நாள்தான். எங்கூர்லெ எக்ஸிபிஷன் நடக்குது. வருசாவருசம் மாடு,ஆடு, பன்னி, கோழின்னு எல்லா ரூரல் விஷயங்களும் வந்து போறக் கொண்டாட்டம்.
இல்லேன்னா எங்களைப்போல இருக்கும் 'நகரத்தார்'களுக்கு இந்தக் கிராம விவகாரம் எல்லாம் புரிபடுமா? வெறும் ஆடுமாடுக(கா)ளைப் பார்த்துப்பார்த்து 'போர்' அடிக்காம இருக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் வேணுமுல்லெ? ராட்சஸ ராட்டினம், துப்பாக்கியிலே குறிபார்த்துப் பலூன் சுடறதுன்னு எல்லா மெரினா சமாச்சாரங்களும் இருக்கும், மொளகாய் பஜ்ஜி தவிர.


'சாஸேஜ் சிஸில்' ன்னு இறைச்சியும், வெங்காயமும் வதங்குற மணம்தான் ஒரே தூக்கல். நாடு எவ்வழியோ நாமும் அவ்வழின்னு மொத மூணு நாள் ஊர் சுத்தியாச்சு. இதுலே ஒரு நாள் நம்ம கிங் வந்து அடுக்களைப் பக்கத்து அவுட்டோர் ஏரியாவை 'பேனல்ஸ்' போட்டுச் சரி செஞ்சு கொடுத்துட்டார்.

நேத்து கடைசி நாள். ஒழுங்கு மரியாதையா வீட்டு வேலைகளைக் கொஞ்சம் செய்யவேணுமுன்னு முடிவு செஞ்சு, தோட்டத்துலே களையெடுக்க ஆரம்பிச்சோம். என்னத்தை 'லோ மெயிண்டனன்ஸ்'? 'பீச்'' கூழாங்கல்லுக்குள்ளில் இருந்து கண்டமேனிக்கு முளைச்சிருக்கு 'வீடுகள்'. வீட் இல்லாத வீட்டைப் பார்க்கவே முடியாதோ? ஆனா பாருங்க. உயிர் வாழணும் என்ற ஆசையில் கட்டாந்தரையைக்கூடப் பொருட்படுத்தாம முண்டியடிச்சு முளைக்குதுங்க பாவம். என்னைக்குமில்லாத கொலைவெறி இன்னிக்கு எங்களுக்கு(-:

ஆளாளுக்கு ஆ.....ஆயுதம் எடுத்துக்கிட்டுக் கிளம்புனோம். இன்னிக்கு வெய்யில் கண்ணைத் திறந்துருச்சு. நம்ம தாமரையும் ச்சின்னதாக் கண் திறந்துச்சு. இந்த சீஸனில் முதல் பூ.


"வெய்யில் வந்தா ஒரேதா 'ச்சுள்'ன்னு வரும்
காத்து அடிச்சா ஒரேதா 'ச்சில்'னு அடிக்கும்"

கோபாலின் பொன்வாக்கு.

அதானே...இடைப்பட்ட மாதிரி இருக்கக்கூடாதா?

வேலை செய்யும்போது வாயைத் திறக்காம இருக்க முடியுதா? பேச்சு சத்தம் கேட்டுறக்கூடாது...நம்ம பக்கத்து வீட்டுப்பசங்க 4+1+1 ஓடிவந்துரும். அந்த 4 வரலைன்னாலும் 1+1 தினமும் ரெண்டு மூணுமுறை வந்து என்னைக் கண்டுக்கிட்டுப் போகுங்கள். அதுலே 1 நம்ம வீட்டுக்கு யார் வந்தாலும் கதவைத் திறக்கும்போது அவுங்க பின்னால் நின்னு தரிசனம் கொடுக்கும். காதெல்லாம் நம்ம கேட்டுலேதான்:-)
Boony

இன்னொரு 1 வந்தால் நேரா நம்ம ஜிகேவோட சாப்பாட்டுத் தட்டைத்தேடி ஓடும். அவன் வந்துபோனபிறகு நமக்குத் தட்டுக்கழுவும் வேலை மிச்சம். சுத்தமா நக்கி வைக்கறதுதான்.
Olli

களையெடுக்கறேன் பேர்வழின்னு தரையில் உக்கார்ந்து ஒவ்வொண்ணா பிடுங்கியெடுத்துக்கிட்டு இருந்தப்ப 2+1+1 ன்னு வந்தாங்க. எய்மி, ஐலா, பூனி & ஆலி. தோட்டத்தைப் பார்வையிட்ட பிறகு என்கூட 'பீச்'சில் உக்கார்ந்துக்கிட்டே பேச்சு.

"தாமரைக்குளத்திலே ஒரு தவளையை விடக்கூடாதா? "

" எதுக்கு அதெல்லாமுன்னு ச்சும்மா விட்டுட்டேன்"

" ஜஸ்ட் ஒண்ணே ஒண்ணு விட்டுவையேன். பொண்ணா இருக்கட்டும். அதுலே இருந்து குழந்தைகள் நிறைய வந்துரும்"

"ஆமாம் ஆமாம் . ஜஸ்ட் ஒன்"

ஆலோசனை சொன்ன அக்கா எய்மிக்கு வயசு 6. ஆமாம் போட்ட ஐலாவுக்கு வயசு மூணரை.

"செடிகளுக்குத் தண்ணீ ஊத்தவா?" ஐலா.

" உனக்கப்புறம் நானு" எய்மி.

"பசங்களே.....இப்பத் தண்ணியைத் திறந்துறாதீங்க. நான் இங்கே வேலையை முடிச்சுட்டு எந்திரிச்ச பிறகு " நான்

( முதல்லே தரையிலிருந்து எந்திரிக்க முடியுதான்னு பார்க்கணும்)

" டன்?" கோரஸ்.

"நாட் யெட்" நான்.

அதுக்குள்ளே கோபால் நிறைய வெட்டிமுறிச்சுட்டு எல்லாத்தையும் ஒரு ப்ளாஸ்டிக் தார்பாலீன்லே இழுத்துக்கிட்டு வந்தார்.


பேச்சோடு பேச்சா.....

" ஐலாவுக்கு எதாவதுத் தின்னக் கிடைக்குமா?"

அப்ப உனக்கு ஒண்ணும் வேணாம்தானெ? நேத்துப் பல்வேற பிடுங்கி இருக்கே"

"அது நேத்துதானே. இன்னிக்கு எல்லாம் தின்னலாம். 'ஆஆஆஆ' பார்த்தியா....ரத்தம் வரலை"
Ila



Amy

பிஞ்சுங்க எவ்வளவு அழகா உதவி செஞ்சதுன்னு பாருங்க. சின்னது தண்ணீ ஊத்துது. பெருசு நடைக்கல்லெல்லாம் கூட்டிப்பெருக்கிக் கழுவுது. அவுங்க அம்மா பார்த்துருக்கணும்............தன்வீட்டுக்கு உமி இடிக்க முடியாதாம் ஆனா ஊரார் வீட்டுக்கு இரும்பிடிச்சுக் கொடுப்பானாம்....


துள்சீ'ஸ் லிட்டில் ஹெல்ப்பர்ஸ்

வேலையை முடிச்சதும் ஆற அமர ஒரு ஓய்வு.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலா?

பொதுவாக் குழந்தைகள் ரொம்ப வெகுளி இல்லே? அப்ப எப்ப இந்த பேதங்கள்
வரத்தொடங்குது?

Wednesday, November 14, 2007

நினைத்தாலே பிடிச்சிருக்கு

கிடைச்ச மூணையும் கையில் எடுத்துக்கிட்டு, எதுக்கு முன்னுரிமைன்னு ஒரு யோசனை. அட்டையில் இருக்கும் படங்களைப் பார்த்தால்.....ப்ச். ஒண்ணும் சுவாரசியப்படலை. முதல்முதலாய், சிவி,நினைத்தாலே. இதுலே முதலாவதில் மட்டும் தெரிஞ்ச ஒரு முகம். பாக்கியராஜ்...... அப்பப் பார்த்து, இவர் ஃபோன்லே கூப்புட்டுப் பேசினார்.


என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு கேட்டப்ப, படங்கள் வந்துருக்கு. எதாவது பார்க்கலாமான்னு இருக்கேன்னேன். பேரையெல்லாம் கேட்டுட்டு, 'சிவி நல்லா இருக்குன்னு போட்டுருக்கான்'னு சொன்னார். வலையில் வரும் விமரிசனத்தையெல்லாம் விடாமப் படிக்கிறது அவர் வழக்கம். படத்தைப்பற்றி எந்த முன்முடிவும் இல்லாமப் படம் பார்க்கணுமுன்னுன்றது என் கருத்து. பார்வைகள் வேறுவேறு இல்லையா? படம் பார்த்தபிறகுதான் அதைப்பத்தி மக்கள்ஸ் என்ன சொல்லி இருக்காங்கன்னு தேடுவேன்.


போனாப் போட்டும், புருசன் பேச்சைக் கேக்கலாமுன்னு சிவி பார்த்தேன். பேய்க்கதை. தனியா இருக்கமே......... இதைப்போய்ப் பார்த்து வச்சேனேன்னு இருந்துச்சு. இப்ப....மனசில் இருக்கும் பேயை ஓட்டணும்.
முள்ளை முள்ளாலெ எடுக்கறது போல, மாத்து மருந்தா இன்னொரு படம் கொஞ்சம் பார்த்துக்கலாமுன்னு கையை நீட்டி எடுத்தப்ப வந்துச்சு நினைத்தாலே. ஒரு டிஸ்க் மட்டும் பார்த்துக்கலாம். மீதி நாளைன்னு இருந்தவளை.......



அழகான குடும்பம். அப்பா,அம்மா, பையன்,பொண்ணு. டைட்டில் சாங் அருமையா இருக்கு. குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பார்க்க நல்லா இருக்கு.அப்பவே மனசுலே ஒரு ச்சின்ன உறுத்தல்.


அது உண்மையாகும் விதமா, பொண்ணை(ஒரு பத்து வயசு இருக்குமா?) வீட்டுலே விட்டுட்டு, மத்த மூணு பேரும் கொட்டும் மழையில் ஒரு கல்யாணத்துக்குப் பக்கத்தூருக்குப் போறாங்க. குடிச்சுட்டுக் காரோட்டிவரும்
ஒருத்தராலே, இவுங்க வண்டி விபத்துகுள்ளாகி, எல்லாரும் அவுட். குடிகாரர் சமாளிச்சுக்கிட்டு விபத்து நடந்த வண்டியைக் கிட்டப்போய் பார்க்கும்போது அப்பா மட்டும் 'ரூபா( பொண்ணு பேரு)ரூபா'ன்னு முணங்கிட்டுச் செத்துப் போறார்.


ஆச்சு 12 வருஷம் ( என்ன கணக்கு?) தனியா வளரும் பொண்ணு இப்ப வேலையில் இருக்கு. அங்கே வேலை செய்யும் ராகுல்( அவர் அந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராம்) கூடக் காதல். ராஜஸ்தான்லெ இருந்து அவரோட குடும்பம் பொண்ணு பார்க்க வர்றாங்க. எல்லா 'கண்டிஷன்களும்' ஓக்கே.


கல்யாண நாளில் 'வருங்கால மாமியாரின்' சில நிர்பந்தங்களால் கல்யாணம் நின்னுபோச்சு. நம்மைப்போலவே கல்யாண வீட்டுக்கு வந்த கதைநாயகன் இதையெல்லாம் கவனிக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து தன் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறாராம். இந்தப் பொண்ணு பிடிச்சுப் போச்சு.
தடைப்பட்டத் திருமணத்தால் மனம் ஒடைஞ்சு கிடைக்கும் பெண்ணின் மனசை எப்படித் தன்பக்கம் திருப்பறாருன்னு போகுது கதை. அந்தக் காம்பவுண்ட்லேயே வாடகைக்கு வரார். சின்னச்சின்ன சம்பவங்கள் சுவாரசியம் சேர்க்குது. துள்ளியோடும் நா(ய்)க்குட்டிக்கூட வருது.



நாயகனைப்பார்த்ததும் என் மனசுக்குள்ளே அவர் நம்ம பதிவர்களில் ஒருத்தராக இருக்கறதுபோல ஒரு தோணல் என் மனசில். ஏன்? எப்படி? வேலையில்லாத 'வெட்டிப்பயல்'ன்னு வசனம் வருதே...அதனாலா? :-))))



கதையின் முடிச்சு இப்ப எப்படி இருக்குன்னா..... நாயகியின் குடும்பம் 'மேலே போக'க் காரணமா இருந்த குடிகாரரின் மகந்தான் நாயகன். 'கதையின் முடிவு என்ன? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க'ன்னு சொல்லக்கூடாதாமே.....பத்திரிக்கை விமரிசனம் போல . அதுவுஞ்சரிதான். நான் மட்டும் என்ன 'வெள்ளித்திரை'யிலாப் பார்த்தேன்?


முடிவு சுபம். முடிவுக்கு முந்தின காட்சிகள் அருமை.


சுசின் (இவரை எங்கியோ பார்த்த ஞாபகம்) நடிப்பு 'நாட் பேட்'. நாயகி நர்கீஸ். இவுங்களும் எதோ இந்தி விளம்பரத்துலே வந்துருக்காங்களோ? பிரமாத அழகு இல்லைன்னாலும், சில கோணங்களில் நல்லாவே இருக்காங்க.


அந்த காம்பவுண்டில் இருக்கும் வீடுகள் அழகா இருக்கு.



ரிமோட்டைக் கையில் எடுக்க அவசியம் வரலை. அனாவசியச் சண்டைகளோ, கூட்டங்கூட்டமாய்ப் பாடியாடும் கோஷ்டிகளோ இல்லைன்றதே பெரிய நிம்மதி.


காதைக்கிழிக்காத, ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான இசை. எல்லாம் நம்ம விஜய் அண்டனிதான். அருமை. எந்தப் பாட்டையும் ஃபாஸ்ட் பார்வெர்டு பண்ணத் தோணலை.


படத்துலே செய்தி ஒண்ணும் இல்லையா?


இருக்கே.......


குடிச்சுட்டுக் காரோட்டக் கூடாது.

காதல் கல்யாணமா இருந்தாலும் பெண்கள் சுயமரியாதையை விட்டுத் தரக்கூடாது.


வேலை இல்லாம வெட்டிப்பயலா இருக்கக்கூடாது.


சின்னப்பசங்களைத் தனியா வீட்டுலெ விட்டுட்டு மொத்தக் குடும்பமும் கல்யாணத்துக்குப் போகக்கூடாது.............(திஸ் ஈஸ் த்ரீ மச். ஸ்டாப்)


மொத்தத்தில் படம் எனக்குப் பிடிச்சிருக்கு.

Monday, November 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 46

முடிவுரை:


ஒரு வீட்டை முழுசுமாக் கட்டி முடிக்கணுமுன்னா மொத்தம் 66 ஒப்பந்தக்காரர்கள் வேலை செய்யணுமாம். இங்கே பில்டிங் கம்பெனியில் சொன்னது. இவுங்க அத்தனைபேரையும் ஒப்பந்தம் செஞ்சுடறது ரொம்ப சுலபம். ஆனா ஒருங்கிணைச்சு வேலை வாங்கிக்கறதுதான்........ஹப்பா....தாவு தீர்ந்துரும். ரொம்பக் கஷ்டப்படாம இருக்கணுமுன்னா எதாவது ஒரு பில்டிங் கம்பெனிக்கு ஒப்பந்தம் போட்டுக் கட்டிமுடிச்சுக்கலாம். எல்லாம் அவுங்களே பார்த்துக்குவாங்க.


பில்டிங் கம்பெனிகள் இந்த வேலையைச் சாமர்த்தியமாச் செஞ்சுடறாங்க. அவுங்ககிட்டே இதுக்குன்னு ஒரு குழுவே இருக்கு. தொழில்முறையில் அவுங்களுக்கு வேலை வருசம் முழுசும் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு இருந்துக் கிட்டேயிருக்கும். நாம் என்ன நூறு வீடாக் கட்டறோம்? கண்ணே கண்ணு அதுவும் ஒண்ணெ ஒண்ணு. இதே காரணம்தான் நல்லாத் தொழில் தெரிஞ்சவங்களைத் தேடறோமுன்னு சில சமயம் ஏமாந்து விழுந்துடறது(-:

நம்ம 'கதை'யின் போக்கில் கற்றதும் பெற்றதுமுன்னா அது இந்த அனுபவம்தான்.

இந்த வீட்டைக் கட்டுனதுலே எத்தனையோ பேரோட உழைப்பு இருக்கு! ஆனா பலபேர் இதைச் சரியாச் செய்யலை! இந்தக்
காரியத்தில் ஈடுபட்ட நமக்கு(ம்) பல படிப்பினைகள் கொஞ்சமாவா ஏற்பட்டுச்சு? ஒருவேளை இன்னோரு வீடு கட்டுனோம்ன்னு வையுங்க, (ஹா....)
அதுக்கு என்னென்ன செய்யலாம், என்னென்ன கூடாது, சாமான்கள் எங்கெங்கே வாங்கலாம், எங்கெங்கே கூடாதுன்னு பல விவரங்கள் சேகரிச்சாச்சு!

முதல்லே ப்ளான் பண்ணதிலே இருந்து ஆரம்பிக்கலாம்!( அய்யோ...வந்துட்டாடா வந்துட்டா.....)

பாய்ட் சேம்பர்லின்- நம்ம ஆர்கிடெக்ட் ட்ராஃப்ட்ஸ்மேன்:
நல்ல பையன்/ஆள். நம்பலாம். ஆனா அளவு டேப்பை வச்சிக்கிட்டு இவ்வளவு பெருசு, அவ்வளவு பெருசுன்னு சொல்றதைக் கணக்குலே
எடுக்கக்கூடாது. நம்ம கட்டடத்துலே ரொம்ப 'டைட்'டா இடம் வச்சிட்டார். தாராளமா இடம் விட்டாத்தானே சாமான்கள் போடறப்ப/வாங்கறப்ப
தகராறு வராது!

இதோ மத்த பட்டியல்.
ரொம்ப மோசம்! வேணவே வேணாம்` (இந்த விஷயத்துலே மட்டும் கெட்டதைக் கவனமா ஞாபகம் வச்சுக்கணும்)

பில்டர் க்ரேக்
ப்ளம்பர் மைக் matt
ஜிப் தேய்ச்ச ஆளுங்க ( க்ரேக் ஏற்பாடு செஞ்சவுங்க)
ரைலாக் ஜன்னல்/ஸ்லைடிங் கதவு
மெடல் க்ராஃப்ட்ஸ் (கூரைக்கண்ணாடி)
கே புல்லன்( மில்லர்ஸ்)
ஹப்பர் கார்பெட்

பரவாயில்லை. நல்லாவே செஞ்சு கொடுத்தாங்க என்ற வகையில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. அது இங்கே இப்ப முக்கியமில்லைன்றதாலெ போடலை.

எலலாத்துலேயும் பெஸ்ட்ன்னு சொல்லணுமுன்னா
வெஸ்ட் லேக் டிம்பர்ஸ்.

அதைவிட இன்னும் ரொம்ப உசத்தியாச் சொல்லணுமுன்னா அது நம்ம கிங்தான்.

கிங் ஒண்ணும் ச்சீப் கிடையாது. ஆனா ஒரு வேலையைச் சொல்லிட்டு நாம் நிம்மதியாத் தூங்கிறலாம். அதை மனசுக்குள்ளெ போட்டு ஊறவச்சு சரியா முடிச்சுக் கொடுத்துடுவார் கிங். நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கலாம்.
இந்த வீட்டைப் பொறுத்தமட்டில் இது அவருக்கு ஒரு 'பெட் ப்ராஜெக்ட்.' எனிதிங் எனிடைம்ன்னும் சொல்லலாம்.

ஒரு குரல் கூப்புட்டாப்போதும், பெத்தபிள்ளையாட்டம் ஓடி வந்துடறார்.
இப்பக்கூட நம்ம அடுக்களைப்பக்கத்து டெக் வேலை அவர்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார். பழைய வீட்டுலே சன் ரூமில் இருந்து கழட்டுன ஸ்லைடிங் டோர் போட்டாச்சு. இன்னும் பாக்கி இருக்கும் இடத்துக்கு சைட் பேனல்ஸ் செஞ்சு கொண்டுவருவார். அநேகமா இந்த வாரம் முடியறதுக்குள்ளே வேலை முடிஞ்சாலும் ஆச்சரியமே இல்லை. அதான் தூங்க மாட்டாரே......
படம்......

இந்த டெக் வேலையா இல்லை ஆட்டோமாடிக் கேட்டான்னு 'ச்சீட்டுக் குலுக்குனதில்' ஜெயிச்சது 'கேட்'! குளிர்காலத்துலே, வண்டியைவிட்டு இறங்கிக் கேட்டைத்திறந்து.......அப்புறம் மூடின்னு சிலசமயம் எரிச்சலாவும் ஆயிருது. ஸ்லைடிங் கேட்டுக்கு சரியானபடி இடம் அமையலை. இதுக்கும் நம்ம கராஜ் டோர் போட்ட டாமினேட்டர்கிட்டேயே வேலையைக் கொடுத்தோம்.
எதோ சவுத் ஆஃப்ரிக்காலே செஞ்சதுன்னு ஒரு யூனிட்டைப் போட்டாங்க. அது பங்குக்கு நம்ம அலக்கழிச்சது அதுவும். வண்டியை வெளியெ எடுத்துட்டு, ரிமோட்டை அமுக்குனா, மூடுனா நம்ம அதிர்ஷ்டம். நாலைஞ்சுதடவை 'நிபுணர்கள்' வந்து பார்த்துட்டுப் போனாங்க!!!

இந்த விஷயத்தில் என்னைக்கும் இல்லாத அதிசயமா, கோபாலுக்கே கோவம் வந்துருச்சு. 'சரி பண்ணமுடியலைன்னா கழட்டி எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு சொல்லிட்டார். பாவம், அந்த ஆளு (Carl )கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர் போல.( நமக்கே பயந்துட்டார்ன்னா பாருங்களேன்!) மறுநாளே இன்னொரு (ச்சீன) நிபுணரோட ஆஜரானார். இந்தமுறை சரி செஞ்சுட்டாங்கன்னுதான் நினைக்கறேன்( டச் வுட்!) ரெண்டு மாசமா ஒழுங்கா இருக்கு.


நம்ம பெங்களூர் ஜெயந்த் செஞ்சு கொடுத்த மாடல் வீடு இது. இந்த வீடு
இப்ப ஷோ கேஸ்லே இருக்கு. நம்ம வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க, இதைப் பார்த்தா ஆச்சரியத்தோட,
இந்த வீடுதான் இந்த வீடா? ன்னு கேக்கறப்போ ஜெயந்தை நினைச்சுக்கறதுதான்.

முன்பக்கம்
வடக்குப்பார்த்தது
தென் திசையில்

கிழக்கு(வாசல்)
மேலே இருப்பது நிழல்ன்னா கீழே நிஜம்:-))))



நம்ம கொத்ஸ் போன பதிவு பின்னூட்டத்தில் சொன்னதுபோல செஞ்ச வேலையை நினைச்சா எனக்கே பிரமிப்பா இருக்கு. நானா ......!!

எந்த வீட்டிலுமே 'இனி செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லை'ன்னு இருக்காது. ஹோம் இம்ப்ரூவ்மெண்ட்ன்னு எதுனாச்சும் இருக்கும். ஊரே அப்படி இருக்கும்போது நாமும் அந்த ஓட்டத்துலே ஓடணும்தானே?

நம்ம பழைய வீட்டை ஒரு கிண்டர்கார்டன் பள்ளிக்குக் கொடுத்திருக்கோம். (அதைப்பத்தி இன்னொருநாள் சொல்றேன்) அதனோட உள்புறத்தை மாற்றி அமைச்சப்ப எடுத்த சாமான்கள் எல்லாம் அங்கேயே கராஜ்லெ இருக்கு. இந்த வீட்டுக்கு எதாவது பொருத்தமா இருக்குமுன்னு நினைச்சா, அப்பப்ப அங்கேபோய் எடுத்துக்கிட்டு வர்றதுதான்:-))))

அந்தக் காலத்துலெ போற போக்குலே 'வீட்டைக் கட்டிப்பார்' னு ஒரு வரி சொல்லிவச்சுட்டுப் போனவங்களைக் கையெடுத்துக் கும்பிடணும். அப்படியும்
நாம் அதை நம்புனோமா? அது என்னான்னு பார்க்கலாமுன்னு உரலுக்குள்ளே தலையை விட்டுக்கறோம்:-)

இனிமேயாவது நிம்மதியா இருக்கலாமுன்னா எப்படி? அதான் தோட்டம், மெயிண்டனன்ஸ்ன்னு பல பிடுங்கல்கள் வந்துருதே. கோபால் உள்ளூரில் இருக்கும்போது அவர் பங்குக்குச் செய்யாமல் விட்ட வேலைகளை வாங்கிக்கணும். மறுபாதிக்கு உண்மையான பொருள் இதுதானேங்க:-)))

அப்படிக் கல்நெஞ்சுக்காரியா நான்? கொஞ்சமா ஒய்வெடுக்கவும் விடுவேன்.:-)))

இதுவரைப் பொறுமையாக் கூடவே வந்த உங்க எல்லாருக்கும் நன்றி.

அடுத்த வீடு கட்டும்போது சொல்லி அனுப்பறேன். எல்லாருமாச் சேர்ந்தே கட்டலாம். மறக்காம வந்துருங்க:-)))))

வணக்கம்.