Thursday, November 08, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 45

25/3
அப்படி இப்படின்னு மார்ச் மாசம் முடியப்போகுது.
வைனல் வருதான்னு தெரியலை. அப்பப்பக் கேட்டுக்கிட்டே இருந்தேன். ராணியம்மா எப்ப அனுப்புவாங்கன்னே தெரியலை. இங்கிலாந்துலே இருந்து வரணுமாம். ஒரு நாள் சேதிவந்தது, அது வரப்போறதில்லைன்னு(-:
மார்பிள் லுக்....அதான் அரண்மனைக்கு மட்டுமே இருக்கட்டுமுன்னு சொல்லிட்டாங்க போல:-)))))

அந்தக் கடையிலே இருக்கும் மத்த டிஸைனுகள் அவ்வளவாப் பிடிக்கலை. பேசாம 'டிம்பர்' போர்டு போட்டுக்கலாமன்னு ஒரு யோசனை. ஆனா அதுக்கு
சீர் செஞ்சுக்கிட்டு இருக்கணும். முக்கியமா ஃபோயர், லாண்டரி ஏரியான்னா நடமாட்டம் அதிகம் இருக்கும் இடமில்லையா? போடு 'டிம்பர் லுக் வைனல்':-))))


ரெண்டு சின்னப்பசங்க வந்து மூணு மணி நேரத்துலே போட்டுட்டாங்க. 15 வருசம் வாரண்டி இருக்கும் ஃபோம் பேக் வைனல்.நம்ம கோபாலுக்கு ஒரு பெரிய ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியிலே ரக்பி பார்க்கணுமாம். அதுவும் 'லேஸி பாய்'லே சாஞ்சுக்கிட்டு.. ஏற்கெனவே லிவிங் ஏரியாவுலே சுவத்துலே ஒரு பெரிய இடம் வர்றமாதிரிதான் கட்டி இருக்கு. அங்கே ப்ரொஜெக்டர் மூலம் தமிழ்ப்படம் போட்டுக்கிட்டு, ஊஞ்சலில் இருந்து பார்க்கணுமுன்னு எனக்கிருக்கு. மனுசங்களுக்கு வர்ற ஆசைகளைப் பாருங்க.
செலவோட செலவா இருந்துட்டுப் போகட்டும். அப்புறம் அப்புறமுன்னா விடியறதில்லை. பேசாம ஒரு டிவியை வாங்கி சுவத்துலெ வச்சுக்கலாமுன்னு ப்ளாஸ்மா 42 இஞ்சு வாங்குனோம். நம்ம கஷ்டகாலம், அந்தச் சுவத்துலே வைக்கமுடியாதாம். ஸ்டட் சரியில்லையாம். கட்டும்போதே இன்னும் பலமான மரக்கட்டைகள் உள்ளெ வச்சுருக்கணுமாம். எல்லாம் நம்ம கிங்தான் சோதிச்சுப் பார்த்துட்டுச் சொன்னார். அதுக்கு ஒரு ஸ்டாண்ட் வாங்கித்தான் ஆகணும். வாங்குனோம்.

வீட்டுக்குள்ளெ ஒரு ஷோ கேஸ் அலமாரி வைக்கறது, ஷெல்ஃபு வரவேண்டிய இடத்துலே எல்லாம் கண்ணாடித்தட்டுகள்
போட்டு அலமாரி இப்படி எதாவது வேலைகள் நம்ம கிச்சன் கிங் செஞ்சுக்கிட்டே இருந்தார்.


டைனிங் ஏரியா பக்கத்தில் இருக்கு ஃபீச்சர் வாலில் மாடம் மாதிரி இடம் விட்டது அங்கே ஒரு பெருமாள் படம் முழுசா வைக்கணுமுன்னுதான். திருப்பதி தேவஸ்தானம் அச்சிடும் பெருமாள் படத்தை இங்கே ஒரு மைக்ரோஃப்ல்ம் கடையில் கொடுத்ததுக்குச் செஞ்சுதரோமுன்னு சொன்னாங்க.
அளவு 590 x 1680 மிமீ இருக்கு. ஒரு போஸ்டர்மாதிரி வரணும். படத்தை அவுங்ககிட்டே கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கோம், அங்கெ இருந்து ஃபோன் வருது, அளவு சரியில்லை. செய்ய முடியாதுன்னு. அப்படியே வண்டியைத் திருப்பிக்கிட்டுப் போனோம். அகலமும் நீளமும் பொருத்தம் இல்லையாம். உருவம் நீண்டு இருக்குமாம். அகலம் குறுகிருமாம். ஒல்லிப்பிச்சான் பெருமாள் நல்லாவா இருப்பார்? வேற எதாவது.... ஐடியா வருதான்னு பார்க்கணும்.


இந்தியாவிலேன்னா படங்கள் வரைஞ்சு கொடுப்பாங்களே....... அதுவரை இருக்கட்டுமுன்னு நம்ம கிங்கிட்டே சொல்லி ரெண்டு கண்ணாடித்தட்டு போட்டு ஷெல்ஃப் ஆக்கச் சொன்னோம். மேல்பகுதி 850 மிமீ. பொதுவா பெரிய அளவில் கிடைக்கும் சாமிப்படங்களுக்கு அந்த அளவு சரியா இருக்கு.


அடுக்களைக்குப் பக்கத்துலெ இருக்கும் டெக் ஏரியாவுக்கு நம்ம கிங்தான் மேலே 'சன்ரூஃப்' போட்டார். காத்துலெ குப்பைகள் அடிச்சுக்கிட்டு வந்து சேராம இருக்க ஒரு ட்ரெல்லித் தடுப்பு. இப்ப ஒரு பக்கம் மட்டும் திறந்தவெளியா இருக்கு. அதை என்ன செய்யலாமுன்னு யோசிக்கணும்.
பின்வாசக் கதவுக்கு வெளியே மண்தரையைக் கெட்டிப்படுத்தி வச்சுருக்கு. அங்கே ஒரு நாப்பது சதுர மீட்டர் (8x5) இடத்துக்கு காங்க்ரீட் ஸ்லாப் போட்டு அவுட்டோர் லிவிங் ஏரியா ஆக்கிரலாம். மீதி இடத்துலே முந்தி இருந்த மூணு மீட்டர் அகல ட்ரைவ் வே, வீட்டுக்கு இடது பக்கம் இருக்கும் ரெண்டரை மீட்டர் இடம் எல்லாம் சுத்தம் செஞ்சு, அதுக்குமேலே வீட் மேட் (weed mat) ன்னு ஒரு வகை ப்ளாஸ்டிக் ஷீட்டுகளை 25 மீட்டர் நீளத்துக்கு விரிச்சாங்க. சிமெண்டும் மணலும் ஜல்லியும் கலந்த ஒரு உதிரிக் கலவையை அதுலே 15 செ.மீ கனத்துக்கு நிரப்புனாங்க. ரோலர் போட்டு அந்தக் கலவையை நல்லா அமுக்கியாச்சு. இனிமேல் அதுலெ களைகள் வராதாம்.(அப்படியா?)


வீட்டின் பின்புறம் புல்தரை இருக்கட்டுமுன்னு முடிவு. இருவது மீட்டர் அகலம், பதினொரு மீட்டர் நீளம்.. புல்வெளி வேலியைத் தொட்டு ஓரமா இருந்தா புல்வெட்டும் மெஷின் ஓட்டக் கஷ்டமுன்னு( எல்லாம் பழைய வீட்டு அனுபவம்தான்) சுத்திவர ஒரு அரை மீட்டர் ( ஆன்னா ஊன்னா ஒரு அரைமீட்டர் கணக்கு வச்சுருவேன்) இடம் விட்டுறலாமுன்னு அதுக்குண்டான மரக்கட்டை(ட்ரிம்) அந்தக் கட்டை நகராம இருக்கவும், பார்க்க ஒரு அழகு வேணுமுன்னு டெர்ரகோட்டா செங்கல் ஸ்லாப் சின்னது வாங்குனோம். கட்டை பதிச்சு, தரையில் வீட் மேட் விரிச்சு அதுக்கு மேலெ தங்கநிற கூழாங்கல் ச்சின்ன சைஸ் நிரவுனோம். கட்டைக்கு இந்தப் பக்கம் செங்கல்.இதையெல்லாம் போட யாங் & மிஷல் வந்தாங்க. இந்த ரெண்டு பேரையும் சில்லரை வேலைகளுக்குப் பிடிச்சு வச்சுருந்தோம். சீனர்கள். யாங் உண்மையில் ஒரு ச்சீன மருத்துவர். கைரொப்ராக்டர். இங்கெ ஒரு ச்சீன வைத்தியசாலையில் வேலை செய்யறார். பகுதி நேர வேலைன்னு எது கிடைச்சாலும் செய்வார். பெயிண்டிங், கார்டனிங், ச்சும்மா க்ளீனிங்னு எதையும் விட்டுவைக்கறதில்லை. மிஷல் இங்கே இங்கிலீஷ் படிக்கவந்த ச்சீனப் பொண்ணு. இவுங்க ரெண்டுபேரும் எப்படியோ நண்பர்களாயிட்டாங்க. எந்த வேலைன்னாலும் ரெண்டு பேருமாவந்து செஞ்சு கொடுப்பாங்க. மிஷல்கிட்டே பேசிப்பேசி எனக்குத் தெரிஞ்ச கொஞ்சநஞ்ச இங்கிலிபீஸும் மறந்து போனது இன்னொரு சமயத்தில் சொல்றேன்.


நடுவில் இருந்த இடத்துலெ புல்விதைகளைத் தூவி, அது முளைச்சும் வந்துச்சு. செங்கல், பச்சைன்னு கலர் காம்பினேஷன் நல்லா இருந்துச்சு. ட்ரைவ் வேக்கு ஒரு மரத்தடுப்பு கேட், அதுக்கு மேட்ச்சா வீட்டுக்கு இடது புறமும் ஒரு சின்னத்தடுப்பு போட்டார் கிங். எல்லாம் ஒரு ப்ரைவஸிக்காகத்தான். இந்த கேட், வேலி ஃபென்ஸ் எல்லாம் பச்சைப்பெயிண்ட் அடிச்சது நம்ம யாங்& மிஷல் ஜோடி.
இருக்கும் வேலைகளை ஒவ்வொண்ணா முடிக்கணும். அவுட்டோர் ஏரியாவுக்கான ஸ்லாப்களைப் போய்ப் பார்த்தோம். அரை மீட்டர் பை அரை மீட்டர் அளவுலே கிடைக்குது. 160 ஸ்லாப் வேணும். அதுக்கு ஒரு டிஸைன் இருக்கட்டுமுன்னு யோசிச்சு, திராட்சைக்கொடி பச்சை, டெர்ரகோட்டா சிகப்பு,
வெள்ளைக்கலர் அழுக்காகிரும் என்றதால் இயல்பான காங்க்ரீட் சிமெண்டுக்கலர்னு ஒரு டிசைன் வரைஞ்சு பார்த்தோம். பரவாயில்லாமல் இருக்கு. அதுக்கு வேண்டிய எண்ணிக்கையில் ஸ்லாப் ஆர்டர் செஞ்சு அது வந்து இறங்குச்சு. இந்த ப்ராஜெக்ட் செய்யப்போறது நம்ம கிங்.


>தனிமனுஷனா நின்னு ஒவ்வொரு பாளமாத் தூக்கி எடுத்துப் போட்டார். தரையில் மணல் தூவி நிரவி அதுக்குமேலே ஸ்லாப்களை வச்சார். நட்ட நடுவில் வரும் டெர்ர கோட்டாவுக்கு வளையம் வரும் டிஸைன் வாங்கி இருந்தோம். அதெல்லாம் வச்சதும் சூப்பரா இருக்கு. அதைச்சுத்தி வெள்ளைக்கூழாங்கல்.
ஒரு கடையில் தாமரைக்கிழங்கு கிடைச்சது. அதை ஒரு ஆழமான ப்ளாஸ்டிக் தொட்டி ( அரிசி போட்டு வச்ச bin ) யிலே தண்ணீர் ரொப்பி நட்டு வச்சுருந்தேன். நல்லா முளைச்சு அதுலெ பூக்களும் வந்துச்சு. மகாலட்சுமியே வந்துட்டான்னு நினைப்பு. இதுக்கு அடுத்த வருசம் எதாவது வழி செய்யணும்.

ரோலர் போட்டு அமர்த்தி இருந்த மத்த இடங்கள் பளிச்சுன்னு இல்லைன்னு ஒரு மன உறுத்தல். தங்க நிறச் சின்னக்கூழாங்கல் (golden pebbles) நாலு கனமீட்டர் அளவில் வாங்கி வீட்டைச்சுத்தி இருந்த இடத்தில் பரத்தினோம்.
இந்த வேலையைச் செய்ய ஒரு தன்னார்வலர் வந்தார். நம்ம கோபால்தான்:-))))
நானு ச்சும்மா இல்லாமல் ச்சித்தாள் வேலை செஞ்சேன்.

பார்க்கறதுக்கு ஒரு பெப்பிள் பீச் மாதிரி இருக்கு. அதுலெ நடந்துவர ஒரு வழின்னு அதே டெர்ரகோட்டா ஸ்லாப்கள் இன்னும் 40 வாங்கி, அதே அரைமீட்டர் இடைவெளி வச்சுப் போட்டோம்.
குளிர்காலத்தில் வாழை,செம்பருத்தி, கருவேப்பிலைகளைப் பராமரிக்கக் கஷ்டமாப்போச்சு. ப்ளாஸ்டிக் தார்ப்பாலீன்கள் வச்சு சமாளிச்சோம். அடுத்த குளிருக்கு முன்னால் கன்ஸர்வேட்டரி வந்தே ஆகணும். ஒத்தைக்காலில் நின்னேன். வந்தது.


கொஞ்சம் ச்சின்னக் கன்ஸர்வேட்டரியாத்தான் இருக்கு(-:கூரையில் கண்ணாடி வச்ச இடம்தான். கட்டும்போதே, அங்கெ இருந்த ஸ்லைடிங் கதவை இந்தப்பக்கம் வச்சிருக்கலாம். ஒரே செலவாப்போயிருக்கும்(-: பொய்ட் சொன்ன 'மார்னிங் காஃபி கோர்ட்' வார்த்தையில் மயங்குனது நம்ம தப்பு.
நம்ம பழைய வீட்டுலெ எடுத்த பாத் டப்பைக் கொண்டுவந்து இங்கே போட்டு, அதுலே நம்ம தாமரையை வச்சாச்சு. வாட்டர் கார்டன் என்ற கடையில் இன்னொரு தாமரைக்கிழங்கு கிடைச்சது. பெரிய பூ வருமாம். விலையும் பழையதைவிட மூணு மடங்கு அதிகம். பெரிய பூ, பெரிய காசு. மாவுக்கேத்த பணியாரமுன்னு நினைச்சேன். ச்சின்னதா ரெண்டு இலை மட்டும் வந்துச்சு.
(இந்த வருசமும் ரெண்டு இலை எட்டிப்பார்க்குது. இதுவரை நோ பூவு. ) பழைய செடியில் அப்பப்ப பூக்கள் வந்து மனசை மகிழ்விச்சது. போன சீஸனுக்கு 14 பூக்கள். அதெல்லாம் எண்ணி வச்சுருவேன்:-)))))
தோட்டவேலைக்கான சாமான்களை வைக்க ஒரு கார்டன் ஷெட் வாங்கினோம். அதை அசெம்பிள் செஞ்சு சரியா வச்சுக்கொடுத்தது நம்ம கிங்தான். தொடரும்..........

8 comments:

said...

You have big backyard, After complete it looks great. If you put pergola in the morning coffee court it will be nice. I have that in my back yard, in summar its realy nice that to on full moon day...

said...

வாங்க அரவிந்தன்.

பெர்கோலா இங்கெ அவ்வளவாச் சரிப்படாது. குளிர் காத்து,அதுவும் சதர்லீ வந்துச்சுன்னா ரொம்பக்குளிர். அண்டார்ட்டிக்கா பக்கத்துலே இருக்கேங்க.
இப்பக்கூடப்பாருங்க அடுத்தமாசம் எங்க சம்மர்னு பேரு. வெளியில் வச்ச வாழை, ஃப்ராஸ்ட்லெ பாதிச் செத்துப்போச்சு(-:
கட்டாயம் மேலே ஒரு சன்கால் ரூஃப் இருந்தாத்தான் நல்லது.
பெரிய ஏரியாவில் செலவு இழுத்துக்கிட்டுப்போயிருது. அதான் பயம்.

அந்தக் காஃபி கோர்ட்தான் இப்ப கன்ஸர்வேட்டரியா மாறியிருக்கு.

ஒரு கஸீபோ மாதிரி போட்டுக்கலாமுன்னு ஐடியா இருக்கு. பார்க்கலாம், வாய்க்குதான்னு!

said...

வந்தாள் மகாலக்ஷ்மியே!!!
என் வீட்டில் என்று அவள் ஆட்சியே.
அட அட. இதுதான் தாமரை வந்த கதையா.
என்ன வேலைப்பா.
ராட்சச எஃப்பர்ட்.

கூழாங்கல் முதற்கொண்டு உங்க கையால போட்டீங்கள.
சிங்கத்துகிட காண்பித்தேன்.
நம்மளை மாதிரியே ஒரு ஆளுனு கோபாலைப் பார்த்து பெருமைப் பட்டாரு.
மறு நல்ல பாதி வாய்ச்ச விதம் அப்படினு சொன்னேன்:)))

said...

கட்டுனோம் போனோமுன்னு இல்லாம எம்புட்டு வேலை!! நினைக்கவே ரொம்ப பிரமிப்பாதான் இருக்கு.

said...

இந்தச் சினிமா பாக்குறதுன்னு சொன்னீங்க பாருங்க....அங்கதான் நீங்க நிக்கிறீங்க. இல்ல ஊஞ்சல்ல உக்காந்திருக்கீங்க.

எனக்கும் ஓம் தேட்டர்ல சினிமா பாக்கனும்னு ஆசையோ ஆசை. சிங்கப்பூர் போயிருந்தப்போ சோனி ஓம் தேட்டர் கெடைச்சது. வாங்கீட்டு வந்துட்டேன்.

ஆனா பாருங்க...அதுக்கேத்தாப்புல பிளாட் ஸ்கீரின் டீவி இல்லை. எங்கிட்ட லார்டு ஆஃப் தி ரிங்ஸ் ஒரிஜினல் டிவிடிகள் இருக்கு. அத ஓம் தேட்டர்ல போட்டா எபக்ட் சூப்பராயிருக்கும். அதே பெரிய டீவியும் இருந்தா...அடடா... ஆச எப்படி வருது பாத்தீங்களா...நீங்க சொன்னாப்புல.

தாமரைத் தடாகமும் அருமை. பாத்து டப்புன்னாலும் பாத்து எடுத்துட்டு வந்து குளம் கட்டீட்டீங்களே. ஜிகே குடுக்குற போஸ் பாத்தீங்கதான...

said...

வாங்க வல்லி.

வேலை ஆளைக் கொன்னுருது இல்லே? :-))))

அதான் அப்பப்ப இதுலே இருந்து தப்பிக்கிறமாதிரி வெளியூருக்கு 'ஜூட்' வுட்டுடறாரு:-)))

அதுக்காக.....நாம் ச்சும்மா இருக்க முடியுமா? சேர்த்துவச்சு வாங்கிக்கணும்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

அடுத்த பகுதி பாருங்க. உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கு:-)

said...

வாங்க ராகவன்.

ஹோம் தியேட்டர்க்கு ஒயரிங் பண்ணி வச்சுருக்கு. ஆடியோ வச்சுக்கன்னு விட்ட இடத்துலே 'குடும்பப்படங்கள்' :-)))) இப்படித்தான் ஒன்னிலிருந்து ஒன்னு. பரிணாமம்?????

ஜிகேவுக்கு என்னங்க.....ராசா:-) .

வீட்டை ஆளறவன் அவந்தாங்க.

கொடுத்து வச்ச மகராசன்

LOTR நம்மகிட்டேயும் ஒரிஜனல் இருக்கு. வாங்க போட்டுப்பாத்துறலாம்:-)