Tuesday, December 24, 2013

Merry Christmas from Christchurch


வருசத்துக்கான  கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் போன டிசம்பர் 8, ஞாயிறு நடந்தது. பொதுவா எல்லா வருசமும் ஊர்வலத்தில் ஊர்ந்துவரும் சமாச்சாரம் ஒரேமாதிரிதான் என்றாலும்,  அதையெல்லாம் கண்டுக்காம முடிஞ்சவரை நாமும் தவறாமல் கலந்துக்குவோம். எல்லாம் வேடிக்கை பார்க்கத்தான்.

சின்னப்புள்ளைங்களுக்கு  பயங்கர உத்ஸாகம், கொண்டாட்டம்தான்    நம்மூட்டுலேயும்  எதுன்னாலும் கொண்டாடும் மனம் இருக்கே!
நாலு மணி நேரத்துக்கு மெயின் ரோடில் போக்குவரத்து நிறுத்திட்டாங்க. ரெண்டு பக்கமும் குழந்தையும் குட்டிகளுமா மக்கள்ஸ். தெருக்கள்  எப்போதும் படு சுத்தம் என்பதால்  நட்டநடுத்தெருவில் கூட உக்கார்ந்துக்கலாம், இங்கே!

சீனர்களின் கூட்டம்  (வழக்கம் போல்) ஏராளம். அதில் ஃபலூன்டாபா ( Falun Dafa)  என்ற பிரிவினரை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. என்ன ஒரு ஒழுங்கு , கம்பீரம், நிதானம்! தாமரைப்பூவில் மஹாலக்ஷ்மி இருக்காள்:-)

எங்கூரின் சரித்திரத்தில் முதல்முறையாக  நம்ம இந்தியன் க்ளப் பங்கேற்றது.  அவரவர்களின் பாரம்பரிய உடைகளுடன் பரேடில் போகலாமுன்னு  முடிவு செஞ்சாங்க. இங்கே முதன்மையா இருந்தது பாஞ்சாபிகள். பல்லே பல்லே பல்லேன்னு  பாங்ரா உடுப்போடு ஆடிக்கிட்டே போனாங்க. குழுவின் கடைசிப்பகுதியில்  முண்டும் செட்டுமா சேட்டன்மாரும் சேச்சிமாருமாக ஒரு  பத்திருவது பேர். இந்திய மூவர்ணக்கொடியை ஊர்வலத்தில் பார்த்தபோது மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தாலும்......  கூடவே ஒரு நியூஸிக்கொடியையும்  கொண்டு போயிருக்கலாம். இருநாடுகளின் உறவு பலப்படுமில்லையா?








சீனர்களைப் பாருங்க. எங்கிருந்தாலும் அந்த நாட்டோடு பின்னிப் பிணைஞ்சுடறாங்க. (இந்த குணம் நாம்  அவர்களிடமிருந்து  கற்றுக்கொள்ளத்தான் வேணும்!) ச்சிங்  ச்சிங்ன்னு சிங்க டான்ஸும், ட்ராகன்  டான்ஸுமா எனக்குப்பிடிச்ச சமாச்சாரத்தை  நல்லா ரசிச்சேன்:-)


ஸேண்ட்டா  பரேடு ஊர்வலத்தில் இந்தவருசம் புதுசா இருந்த ஃப்ளோட்களின் படம் போட்டுருக்கேன் பாருங்க. மற்றவை எல்லாம்  இந்த 26 வருசமாப் பார்த்துக்கிட்டே இருப்பதுதான். ஆனாலும் சின்னப் பிள்ளைகளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி!!! அதுகளைப் பார்த்து நமக்கும் மகிழ்ச்சியே!



உமக்கென்ன  கொம்பா முளைச்சிருக்கு?   எஸ்ஸு:-)



ஸ்ப்ரிங் ஃப்ரீ ட்ராம்போலின்!


ஜப்பானீஸ் அவுங்க ட்ரம்மை விடலை! அடிச்சு நொறுக்கினாங்க:-)




ரேடியோ லாலிபாப் முதல்முறையா ஊர்வலத்தில் வந்தாங்க. 1979இல் மருத்துவமனைகளில் நோயாளியாக இருக்கும் குழந்தைகளுக்காக  Surrey, England இல் முதல்முறையாக  ஆரம்பிச்ச ஒலிபரப்பு,  முதல்முறையாக  இங்கிலாந்தைவிட்டு மற்ற நாடுகளுக்கு  வர ஆரம்பிச்சது.  முதல் கிளை 1985 இல் அஸ்ட்ராலியா. அங்கே வந்தால் எங்களுக்கும் கட்டாயம் வரத்தான் வேணும். வந்துருச்சு!

அமெரிக்காவிலும் பல நகரங்களில் ஆரம்பிச்சு  குழந்தைகளை மகிழ்விக்கிறாங்க.  ரொம்ப நல்ல சமாச்சாரம், இல்லையோ!


கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிகள் இடைவிடாம கட்டிடம் கட்டி நகரில் தொழில் விருத்தியாகி வரும்சமயம்.......  அடகுக்கடைஒன்னு விளம்பரம் கொடுத்துக்கிட்டே ஊர்வலத்தில் போகுது... அட ராமா!


ஜெட் எஞ்சின்கள் , பயணம் போகணும் என்பதை நினைவூட்டின. ஸேண்ட்டா கூட  உலகெங்கும் சுத்திவர அவரோட ஸ்லெட்ஜ் வண்டிக்கு இந்த எஞ்சின்கள்தான் பயன்படுத்தறாராம்:-)


எலி ஏஞ்சலீனா பேலே ஆடிக்கிட்டுப்போனாள்.  க்யூட்:-)


வெள்ளைக்கார  கழைக்கூத்தாடி?



மை லிட்டில் போனீஸ்........  ஹைய்யோ  என்ன ஒரு அழகு!

ஸேண்ட்டாவும் ரெய்ன்டீர்களும்.

இந்த ஊர்வலங்களும்  ஃப்ளோட்டுகளும் மக்களுக்கு கிறிஸ்மஸ் ஸ்பிரிட்டை ஏத்துவதற்குத்தான். கடைக்காரர்கள்பலரும் ஸ்பான்ஸார் செய்கிறார்கள்.  வருசம்முழுசும் இருக்கும் வியாபாரத்தின் லாபம்   எராளமான ஸேல்கள் , தள்ளுபடிகள் இருந்தாலுமே இந்த டிசம்பரில் மட்டும்  முப்பது சதவீதமாம்!

ரொம்ப வருசங்களுக்குப்பின் பொம்மைக்கடைகளுக்கு விஸிட் செஞ்சால்.....பில்டிங் இண்டஸ்ட்ரி கொழிக்கும் சமயம்,இந்த வருசம்  பொம்மைக்கடைகளில்  விற்பனைக்கு வந்து குவிஞ்சிருக்கும்  கிறிஸ்மஸுக்கான  பொம்மைகள்  எல்லாம் டிக்கரும் லோடரும் க்ரேனுமா இருக்கு. வழக்கமான ட்ராக்ட்டரை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளிருச்சு பாருங்க!

கிறிஸ்மஸ் தினம் ஹால் கிடைக்காத காரணத்தால்  டிசம்பர் 21 மாலை  நம்மகேரளா க்ளப்பில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம். வெஜிட்டேரியன்களுக்கு  ஒரு பனீர் வெஜிடபிள் குழம்பு கிடைச்சது. ஆடலும் பாடலுமா அமர்க்களம்தான்.  இந்த வருசம் க்ளப்பின் சிறார்களைக் கொண்டு ஒரு நேட்டிவிட்டி நாடகம்.  குட்டி ஏஞ்சல் கண்ணைப் பறிச்சாள்:-)

கூட்டம் அவ்வளவா இல்லை எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்:-)

. நிறையப்பேர் ஊருக்குப் போயிருக்காங்க. நெசம்தானான்னு பார்க்க இதோ நாங்களும் கிளம்பறோம்.  ஒரு மாசத்துக்கு லீவு விட்டாச்சு. எல்லோரும்  கிறிஸ்மஸ் பண்டிகையையும்  அதைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டையும்,பொங்கல், புத்தகத்திருவிழா என்று வரிசையாக வரப்போகும் பண்டிகைகளையும்    இனிமையாகக்  கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

நம்பள்கி சொல்வது போல் இது அனைவருக்குமான  திருவிழா. சர்ச்ச்சில்  மிட்நைட் சர்வீஸ் போகும் மக்கள்ஸ் கொஞ்சம்பேர்தான். அநேகமா எல்லோரும் முதியோர்களே!  மற்ற அனைவருக்கும் இது'காவோ, பீவோ மஜா கரோ' திருவிழாதான்!

அனைவருக்கும் என்றால் செல்லங்கள் உட்பட. நம்ம ரஜ்ஜு இன்னிக்கே  அவனுடைய அபார்ட்மெண்டுக்குப் போயிட்டான்.  பெயரே எனக்குப் பிடிச்சுப்போச்சு.ஸெயிண்ட் க்ளாஸ் (ST.Claws)  நம்ம வழக்கமான  கேட்டரியில் (கோகி போகும் இடம்)  இடம் கிடைக்கலை:(

ரஜ்ஜுவின்  கிறிஸ்மஸ் கிஃப்ட்  இந்த வருசம் (புருவம் வச்ச ) ஒரு யானை!  அதில் சவாரி செய்ய அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சிங்கவாலும்,  ஸீலயன்  பாதங்களுமா  நல்லாத்தான் இருக்கு இந்த குஷன்.

டிசம்பர் தொடக்கத்துலேயே சின்னதா நம்ம வீட்டையும் விழாவுக்காக அலங்கரிச்சோம்:-)

Wednesday, December 18, 2013

கொஞ்சம் கடலை போட்டேன்!


சம்மர் வந்துருக்கு. ஒரு சில நாட்கள்  மட்டுமே கொளுத்தும் வெயில். 23 டிகிரி. இன்னிக்கு வெறும் 13. ஆனாலும் சம்மர், சம்மர்தானே?  இந்த வருசம் தோட்டப் பராமரிப்பு அவ்வளவா செய்யலை:( ஆனாலும் போன வருசச்  செடிகள் விசுவாசம் காட்டுனதும் மனசு நெகிழ்ந்துதான் போச்சு. நன்றிக்கடனைச் சொல்லித் தந்தன.


புதினா ஒரு சின்னக் காடு. தேவை இல்லையாம். இதுக்கு ஒரு கெட்ட குணம் இருக்காமே..... இருக்குமிடத்தில் உள்ள   மண்ணில் இருந்து சக்தியை எல்லாம் உறிஞ்சும் குணமாம். அக்கம்பக்கத்துச் செடிகள் பட்டினி கிடக்குமாமே!

ஆல்பைன்  அடிவாரத்தில்  வளரும் செடி ஒன்னு ரெண்டு வருசம் முந்தி வாங்கி வச்சேன். நல்லாப் பூத்துச்சு. நல்ல சிம்பிளான அழகு!
தாமரை மொட்டு விட ஆரம்பிச்சு இது நாலாவது பூ. எண்ணி நாலு நாளைக்குமேல் தாக்குப்பிடிக்கறதில்லை:(  அப்போ மஹாலக்ஷ்மி வாசம் நாலுநாளைக்குதானா?  அச்சச்சோ....

Salvia வில் பலநிறங்கள் இருக்குன்னு இப்பதான் தெரிஞ்சது.  நம்ம வீட்டில் கடந்த காலங்களில் சிகப்பு நிறப்பூக்கள் பூத்தன. இந்த முறை வாங்குன செட்டில்  சிகப்பு மட்டுமில்லாமல் வயலெட், க்ரீம் இப்படி சில நிறங்களில் மொட்டு வந்துருக்கு. போனவாரம் 'ஓனருக்குப் பிறந்தநாள். அதனால் பூச்செடிகள் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் என்ற சேதி பத்திரிகை மூலம் கிடைச்சு அங்கே போனோம். எட்டு,இல்லைன்னா பத்து செடிகள் இருக்கும் தொகுப்பு ஒவ்வொன்னும் 2.80 டாலர்தான்.  அங்கிருந்த தாத்தாவிடம் பேச்சுக்கொடுத்தால் அவர்தான்  ஓனராம். வயசு அதிகமில்லை மறுநாள் 81 ஆவது பொறந்தநாள்.  நர்ஸரிக்கு லீவு விட்டுட்டாராம். இன்னும் மிடுக்கா எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யறார்.


அட்டகாசமான ஒரு பெரிய தாமரைக்குளம் அழகான வெள்ளைப்பூக்களால் நிரம்பி இருக்கு.  அந்தக் குளத்துக்கு வயசு 85 தான். அவரோட அப்பா காலத்துலே தொடங்குன நர்ஸரியாம் இது.

'குளத்துலே நிறைய மீன்கள் இருக்கு பார்த்தியா'ன்னு கேட்டார். ஏராளமா இலைகளும் பூக்களுமா தண்ணீரை மறைச்சிருக்குன்னேன். நிலநடுக்கம் வந்தப்ப குளம் அதிர்ந்து (தரையில் பெருசாப் பள்ளம் வெட்டிய  குளம் அமைப்பு)  அதுலே இருக்கும் தண்ணீர் தளும்பி வெளியே  வர, அத்துடன் மீன்கள் எல்லாம் வெளியில் விழுந்து கிடந்தனவாம். நல்லவேளையா  அந்த சமயம் இவர் (பகல் 12.51)  இங்கே இருந்ததால் மீன்களை எடுத்து மறுபடி தண்ணீரில் விட்டாராம். இதுவே ராத்திரி நேர பூகம்பம் என்றால்  மீன்களெல்லாம் காலியாகி இருக்கும் என்றார்.  நடந்துவிட்ட பூகம்பம்  உள்ளூர் மக்கள் ஒவ்வொருவரையும் ஒரு விதத்தில் பாதிச்சுருக்கு:(


போனவருசத்து ஜிரேனியம், குளிருக்குத் தப்பிப்பிழைச்சு  இந்த வருசமும்  வஞ்சனை இல்லாமல் பூத்துருக்கு. ஃப்ராஸ்ட் விழாத இடத்தில் வச்சுருந்தேன்.

போனவருசத்துப்  பச்சைப்பூ  மீண்டும்  பூத்திருக்கு. ஆனால் மஞ்சள் பூவால்லெ இருக்கு!


வாசல் பக்கம் கேட் அருகில் காவலுக்கு நிற்பதைப்போல ரெண்டு ஹாலிஹாக். வெவ்வேற நிறம்.வெண்டைச்செடியின் இலைகள் போலவே இருக்குது. பூவும் அப்படித்தான்! ஆனால் மஞ்சள் நிறமில்லை.



ரோஜாக்களும் மல்லிகளுமா ஒரு பக்கம் கொள்ளை அழகு!
லாவண்டர் வழக்கம்போல்!


ஸாக்ஸஃப்ராஸ் கூட்டமாப் பூத்து வழிஞ்சது.

ஆர்ட்டிச்சோக் (Artichoke) கிழங்குகிடைச்சதேன்னு  நட்டு வச்சுருந்தேன். தளதளன்னு வளருது.பொறுத்திருந்து பார்ப்போம்.



அமைதி லில்லி வழக்கம்போல் வருசத்துக்கு ஒரே ஒரு பூ. நூறு குடம் தண்ணி ஊத்தி(னாலும் ஒரே )ஒரு பூ பூத்ததுன்னு பாடலாம்.  இதை எங்கூரு நாகலிங்கமுன்னு(ம்) சொல்லலாம். நடுவிலே லிங்கம்.  பின்பக்கத்துலே  வெள்ளைநாகம் போல் ஒரு குடை!  குறைஞ்சது ரெண்டு வாரம் வாடாமல் செடியிலே நிக்குது!

சமையலுக்கு ஊறவச்சுருந்த  கொண்டைக்கடலையில் ஒரு  ஏழெட்டு எடுத்து ஒரு தொட்டியில் போட்டு வச்சேன்.  செடி உயரமா வளர்ந்து  பூத்துக் காய்ச்சுருக்கு. பட்டுப்பூச்சியின் Pupa  / cocoon போல குண்டு குண்டா  தொங்கும் காய்க்குள்ளே பத்திரமா  ச்சனாவை வச்சுருக்கார் சாமி. பூனா வாழ்க்கையில் சீஸன் சமயம் செடியோடு  பிடுங்கின ச்சனா  கிடைக்கும். காயைப் பிரிச்சுத் தின்னுட்டு, தெருவில் அங்கங்கெ  ட்ராஃபிக் ஐலண்ட் போல உக்கார்ந்திருக்கும்  மாடுகளுக்குச் செடிகளை தின்னக் கொடுத்துருவோம்.


நெருங்கிய  தோழி ஒரு சமயம் கேட்டாங்க, ச்சனா நிலத்துக்குக் கீழே விளையுமான்னு..............  இல்லையே தோழி, இங்கே பாருங்க!