Monday, September 28, 2009

கிடைக்கணும் என்பது ..... கிடைக்காமப் போகாது!

தோழி வீட்டுக்குக் கொலுவுக்குப் போயிருந்தோம்.(கொலு விவரம் அப்புறம் சொல்றேன். முதல் விஷயம் முதலில்:-) ரங்கமணிகள் பேசிக்கிட்டே உள் ஹாலில் இருந்தாங்க. திடீர்னு 'ராகசுதா ஹால்' எங்கே இருக்குன்னு இவர் கேட்டார். இங்கேதான் ரொம்பப் பக்கமுன்னு தோழியின் ரங்க்ஸ் சொன்னார். அங்கே நடன நிகழ்ச்சி இருக்கு அதுவும் கதக் எனக்கு ரொம்பப் பிடிக்குமுன்னு சொன்னார். 'இன் ஹி லோகோனே.....' ஆஹா....

தினசரியில் இருந்த தொலைபேசி எண்ணைக் கூப்பிட்டு உங்க நிகழ்ச்சி நடக்கும் ஹால் எங்கேன்னும் கேட்டுக்கிட்டார் நம்ம முன் ஜாக்கிரதை முத்தண்ணா. 'வாங்க வாங்க. கட்டாயம் வாங்கன்னு வரவேற்பு. இதென்ன ஆறேகாலுக்கே இப்படி இருட்டிப்போச்சு...... அங்கங்கே முக்குலே இருக்கும் கோவில்களில் எரியும் கற்பூரார்த்திகளைவச்சு வழி கண்டுபிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம்.(வழக்கம்போல தப்பான சில டர்னிங் எல்லாம் எடுத்துட்டுத்தான்) அசப்புலே பார்க்க ஒரு வீடு போல இருக்கு. சின்னதான வாசலைத் திறந்து உள்ளெ போனால் ஆடம்பரம் இல்லாத சின்ன ஹால். ஒரு முப்பதுபேர்போல இருந்தாங்க. ஆறரைக்கு நிகழ்ச்சி. 'டான்'னு ஆரம்பமாச்சு.
திவ்யா மலையப்பனின் பரதநாட்டியம். 'என்ன சோதனையோ....' வர்ணத்துக்கு அபிநயம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. சொல்லித் தந்ததைப் பிழையில்லாம ஆடும் பாவம். திரைக்குப் பக்கவாட்டில் நின்னு நடனத்தைப் பார்த்து ஏதோ ரிப்போர்ட் குறிப்பு எழுதும் ரெண்டு (நடன)ஆசிரியைகள்.

நாங்கள் ரெண்டாவது வரிசையில் இருந்தோம். எனக்கு முன்னால் 'எங்கியோ பார்த்த முகம்'. பிரதீபா பாட்டீல் ஸ்டைலில் ஜாக்கெட்.(ஐயோ...இந்தச் சூட்டில்....) அவுங்களுக்குப் பக்கத்தில் வைரம் டாலடிக்கும் பெரிய கம்மலுடன் ஒரு முதிய பெண்மணி. கொஞ்சம் சின்னக் கம்மலுடன் இன்னொருத்தர். (முகத்தைப் பார்த்தவுடன் ஒளிவெள்ளம் வெட்டி இழுக்கும் தோடுகள் பார்வைக்குத் தப்பலை.இல்லேன்னா கவனிச்சே இருக்கமாட்டேன்.ஹிஹி)


ஜெய துர்கா என்ற பாட்டுக்குக் குச்சுப்புடி நடனம் ஆடுச்சு பாருங்க ஒரு பொண்ணு........ஹைய்யோ..........அஷ்ரிதா கேஷவின் அட்டகாச நடனம்! என்னை மட்டும் மார்க் போடச் சொன்னால் நூத்துக்கு நூறு என்ன....இருநூறு போட்டுருப்பேன்! பாட்டும் அருமை. இங்கே எல்லாப் பாட்டுகளும் ஏற்கெனவே சிடியில் பதிவு செய்யப்பட்டவைகள்தான். பொழுதன்னிக்கும் லைவ் ம்யூஸிக்குக்கு எங்கே போறது?

நம்ம கோபிகா வர்மாவின் மோகினியாட்டம் பள்ளிக்கூடத்தில் இருந்து விபினா & ரெம்யான்னு ரெண்டு 'குட்டிகள்' வந்நு மூணு டான்ஸ் ஆடுனாங்க. அபிநயம், தில்லானான்னு தூள் கிளப்பிட்டாங்க. எல்லாம் மகாராஜா ஸ்வாதித் திருநாளின் பாட்டுகள்.

தமிழ்நாடு, ஆந்திரா கேரளான்னு ஆச்சு....கருநாடகத்துக்குத்தான் ஒன்னுமில்லைன்னதும் கோபால், அதெப்படி அதெப்படி''ன்னு துடிச்சுப் போயிட்டார்.
பூஜா & ப்ரார்த்தனான்னு மெடிக்கல் காலேஜ் மாணவிகள். தாதீம்தா..தித்தீம்தா...... ஜல்ஜல்ஜல்ன்னு கதக். ஸ்ரீ ராம்சரிதத்தில் இருந்து அகல்யா கதை! ஒரு பஜன் அப்புறம் தனியா ரெண்டு மைக் தரையில் செட் செஞ்சதும் தாளக்கட்டு ஜதி சொல்லி ஒரு நடனம். உரக்க ஆரம்பிச்சு.........கடைசியில் ஒரு சலங்கை ஒலி மட்டும் மெள்ள வர்றதுபோல.... இதுக்கும் 'சலங்கை ஒலி'ன்னு தலைப்பு எடுத்துக் கொடுத்தார் கோபால். ஆஹா......இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிடுவாங்களே.....
(பேசாம நீங்களே ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுருங்கன்னு 'ஊக்கு'விச்சேன்:-)
சிறப்பு விருந்தினர் (பெரிய கம்மல்) சின்னத் தள்ளாட்டத்துடன் மேடைக்குப் போனாங்க. கூடவே சின்னக் கம்மலும், எங்கியோ பார்த்த முகமும். 'ந்ருத்திய கான லயா ட்ரஸ்ட்' நடத்தும் நிகழ்ச்சி. ட்ரஸ்டின் நிர்வாகி தேவி கிருஷ்ணா மேடைக்கு வந்து இவுங்களை வரவேற்றுப் பேசினாங்க. இந்த ட்ரஸ்ட்டு தொடங்கி இது நாலாம் ஆண்டு. தன்னுடைய தந்தை நினைவாகத் தொடங்கி இருக்காங்க.
இதுக்கெல்லாம் ஊக்கம் கொடுத்தது , ஒரு காலத்துலே திரை உலகில் இருந்த தன்னுடைய தாய் ராஜசுலோசனான்னு சொல்லி 'பாட்டீல் ப்ளவுஸை'ப் பார்த்தவுடந்தான் 'ஆஹா.... இப்ப ஞாபகம் வருதேன்னு .......

சின்னக் கம்மல் அம்மாதான் கலைமாமணி ராஜலக்ஷ்மி. நடனக்கலைஞர். தேவி கிருஷ்ணாவின் நடன ஆசிரியர். நடுவில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடைகள் போத்தினார்கள். மூத்த கலைஞர். அந்தக் காலத் திரை உலகத்தாரகை. பி.எஸ். சரோஜா அவர்கள். எண்ணி நாலே வரி பேசுனாங்க. இன்னும் கொஞ்சம் பேசுங்கம்மான்னதும் 'எல்லாம் போறும்'ன்னாங்க. (அவுங்க நடிச்ச படங்கள் என்னெவெல்லாம் நான் பார்த்துருக்கேன்னு நினைச்சு மண்டையை குழப்பிக்கிட்டதுதான் மிச்சம். ஒரு படத்துலே உலக உருண்டையில் எம்ஜிஆரோடு பாடுன நினைவு. உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம்தானிரண்டு........ பழைய சினிமாக்களைத் துரத்தித்துரத்திப் போய்ப் பார்த்தக் காலம் போச்சே.... வெஸ்ட் மாம்பலம் நேஷனல் தியேட்டர் இன்னும் இருக்கா?)

கலைமாமணி ராஜலக்ஷ்மி அவர்கள், இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட்டமே வர்றதில்லைன்னு வருத்தப்பட்டார். ராஜசுலோசனா அவர்கள் இந்த வயதிலும் நல்லாப் பளிச்ன்னு இருக்காங்க. மகள் செய்யும் கலைச்சேவையைப் பாராட்டி வெறும் பரதநாட்டியம் மட்டுமுன்னு வச்சு ரசிகர்களைப் போரடிக்காம விதவிதமான வகைகளுடன் நாட்டியங்களைத் தேர்ந்தெடுத்து வழங்குனதைப் பாராட்டுனாங்க. அந்தக் காலத்தில் அவுங்க எப்படி வெவ்வேறு நாட்டியங்களைக் கத்துக்கிட்டாங்கன்னும் சொன்னாங்க.. பேத்தியின் தூண்டுதலினால்தான் மகளும் இந்தச் சேவையில் ஈடுபட்டுருக்காங்களாம். கலைக்குடும்பம். நல்லா இருக்கணும்.

(நாட்டியம் ஆடத் தெரிஞ்சுருக்கறது நடிக்க வருபவர்களுக்கானக் கட்டாயக் குவாலிஃபிகேஷனாத்தானே இருந்துச்சு. இப்போ? யார் இதுக்காக மெனெக்கெடுறா? பரதநாட்டிய உடைகளைப் போட்டுக்கிட்டுச் சாணி மிதிச்சால் ஆச்சு)
நாமெல்லாம் வளரும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தரணும்னு சொல்லி நடன மணிகளுக்கு, நாம் வசிக்கும் பூவுலகைப் பசுமையாக மாற்றும்
விதமா துள்சியைக் கொடுத்தாங்க.தேவி. (எல்லாம் சிம்பாலிக்கான ஒரு அடையாளம்தான். போகட்டும் மேடைவரை போயிருக்கேன்:-)
நிகழ்ச்சி முடிஞ்சதும் கொஞ்ச நேரம் தேவி கிருஷ்ணாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கிட்டுப் பேசினோம். நீங்கதான் ஃபோன்லே வழி எல்லாம் கேட்டீங்களான்னு சொல்லி மகிழ்ந்து போயிட்டாங்க. சிலசமயம் இப்படிக் கத்துக்குட்டிகள் நடனத்தின் போது ஒரு இருபதுபேர்கூட வரமாட்டாங்களாம். அடப்பாவமே...... ஆடும் பிள்ளைகளுக்குக் காலி ஆடிட்டோரியம் பார்த்தா மனசு எப்படி இருக்கும்? நாங்க இன்னும் கொஞ்சநாள் இருப்போம். நிகழ்ச்சி வச்சா சொல்லுங்கன்னேன். நம்மாள் இன்னும் ஒரு படி மேலே போய் , 'ஏதாவது உதவி வேணுமுன்னாச் சொல்லுங்க'ன்னார்.

நாமோ புதுசு. என்ன உதவி செய்யமுடியுமுன்னு திரும்பிவரும் வழியில் கேட்டால்........ வந்த பதில் 'ரெண்டு இருக்கையை நிரப்புவொம்லெ' !!!


தலைப்பை நியாயப்படுத்த: நிகழ்ச்சி நடக்குதுன்னோ, அங்கே போகப் போறோமுன்னோ, ஒரு பதினைந்து நிமிசத்துக்கு முன்வரை தெரியாது. திடீர்னு பார்வையில் பட்டது. ஜஸ்டிஃபைடா? :-))))

பதிவர் வீட்டுக் கொலுவைப் பாரு.....

நகர்வலத்தில் கொலு வாரம் விஸிட் 2,3,4,5,6,7............

ஒருவாரத்துலே கிடைச்சதையெல்லாம் விடாம நம்ம பதிவர்கள் சிலர் வீடுகளுக்குப் போய்வந்தோம்.
சுப்புரத்தினம் ஐயா வீட்டுக் கொலு
*****************************************************************************

மேலே உள்ள இரண்டு படங்களும் சுப்பு ரத்தினம் & மீனாட்சி அக்கா வீட்டு வளாகத்தில் வச்சுருக்கும் 'காமன்' (ஆங்கிலம்) கொலு!
********************************************************************************

'அலைகள் 'அருணா வீட்டுக் கொலு.
**************************************************************************


மேலே இரண்டு படங்களும் நம்ம நாச்சியார் வல்லி சிம்ஹன் வீடு

******************************************************************************




தியாகையருக்குக் காட்சி கொடுத்த ராமர் கூட்டம்!!

இந்த இரண்டு படங்களும் கீதா சாம்பசிவம் வீட்டுக் கொலுவில்
****************************************************************************

சங்குபிள்ளையார்!!
வீணை நம்ம நானானியின் குழந்தை!! இன்னும் அழகான 'காய்க்கொலு' படங்கள் இருக்கு. அவுங்க போடுவாங்கன்றதால் நான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.

அனைவருக்கும் நவராத்ரி & தசரா வாழ்த்து(க்)கள்.

பொழுது விடிஞ்சால் நம்மூட்டுலே விஜயதசமிக்கான பூசை இருக்கு. முடிஞ்சால் ஒரு நடை வந்துட்டுப் போங்க.


பதிவர் நானானி இப்போத்தான் தொலை பேசுனாங்க. அவுங்க வீட்டு அற்புதங்களைப் போடச் சொல்லிட்டாங்க!!!! நான் கண்ட இன்பம் வகையில் இதோ.....


கேரட்டும் முள்ளங்கியும் பூத்துருக்கு.



தர்ப்பூசனித் தாமரை

வீணை மீட்டும் சரஸ்வதி மஞ்சள் பூசணியில்.


புத்தக அடுக்கில் புடவை கட்டுன சரஸ்வதி.

புதுமையோ புதுமைதான் போங்க!!!!!


காய்கறிகளுக்கெல்லாம் அப்பப்பப் 'புஸ்க் புஸ்க்'ன்னு தண்ணீர் தெளிச்சுக்கிட்டே இருக்காங்க. வெளியே அடிச்சு ஆடும் மழைக்கு மேட்சா இங்கே ஒரே 'ஷவர் பாத்' தான்:-))))






Friday, September 25, 2009

காது கொடுத்துக் கேட்டேன்.....குவாகுவா சத்தம்????!!!

எத்தனை முறை சென்னைக்கு வந்துருக்கேன்......போகணுமுன்னு தோணலையே..... எல்லாத்துக்கும் ஒரு நேரமுன்னு இருக்குல்லே?
அண்ணா நூற்றாண்டு விழாவைச் சாக்குவச்சாவது போய்வரணும். எப்படியும் இந்த மாசம்பூராவும்தானே விழா? அறிவிப்பு ஒன்னு பார்த்த நினைவு.

பாசாதியைக் கண்டுக்கப்போய்வரணும். அப்படியே அண்ணாவையும். மெரினாவை வேற 'அழகு படுத்தி' இருப்பதா ஒரு சேதி ஒன்னு தினசரியில் இருந்துச்சே....

உழைப்பாளர் சிலைக்குப் பின்புறம் இருக்கும் கார்ப்பார்க்கில் இறக்கிவிடப்பட்டோம். எங்கும் 'ஜே ஜே'ன்னு கூட்டம். தமிழ்நாடு முடிதிருத்துவோர் மாநாடுன்னு பேனர் கட்டுன வண்டிகள் ஏராளம்.
ராய்சவுத்தரி செதுக்கிய சிற்பம். விலா எலும்புகள் வரிவரியாத் தெரிய உழைக்கும் மக்கள். கூடவே நின்னு நாமும் அந்தக் கல்லை நெம்பித் தள்ளலாமான்னு தோணும் வகை. பீச் ரோடில் பயங்கரமாப் போக்குவரத்து. எதிரில் கம்பீரமா நிக்கும் முகலாயர் கட்டிடக் கலையைச் சொல்லும் கோபுரம். சேப்பாக் பில்டிங்ஸ். சென்னைப் பல்கலைக்கழகம்.

முதல் சமாதியில் பயங்கரக் கூட்டம். எம்ஜிஆர், 70 வயசு வரை இருந்துருக்கார். இடதுபக்கம் அவர் வாழ்க்கை வரலாறு.சுருக்கமாச் செதுக்கிவச்ச பளிங்கு. (கடைசி வரியில் அண்ணாவின் இதயக்கனின்னு இருந்துச்சு. எவ்வளோ பொருத்தம் பாருங்க.....அண்ணாவும் இவரும் ஒன்னாவே இருக்காங்க இல்லே!)
நல்ல விஸ்தாரமான இடம்தான். சலவைக்கல் இழைச்ச அழகிய மண்டபங்கள், நடைபாதைகள், நடுவில் புல்வெளின்னு இருக்கு.
முன்பக்கம் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அருகே இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ரசிகர்கள், அவர் வாழ்ந்தக் காலக்கட்டத்தில் இருந்த மக்களின் அடுத்த தலைமுறைகள், அவர்களின் பிஞ்சுகள்னு அவருக்கான ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம்கூடக் குறையலை. அதான் தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் ஒரு எம்ஜிஆர் படமாவது வந்துக்கிட்டுத்தானே இருக்கு. இப்பவும் ஊர்ப்பக்கங்களில் பழைய எம்ஜிஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்காமே. உண்மையான 'வசூல்மன்னன்'!

பாதி மலர்ந்தத் தாமரை மொட்டு வடிவத்தில் சமாதியைச் சுற்றி அமைப்பு. தூங்கா விளக்கு. கறுப்புச் சலவைக்கல்லால் இருக்கும் சமாதியில் தலையைச் சாய்ச்சுக் காதை வச்சுக் கேட்கும் சனம்.( இதுக்கெல்லாம் ஒரு ஆள் ஆரம்பிச்சாப் போதும். வாரசனம் முழுக்க என்னமோ இருக்குன்னு செஞ்சு பார்க்குறாங்க! ) என்ன கேக்குதுன்னு கேட்டேன். கடிகார சத்தம் 'டிக் டிக்'ன்னு கேக்குதாம். ஐயோ...இதயத் துடிப்பா? இல்லையாம்...... அவருடையக் கைக்கடிகாரத்தோடு புதைச்சுருக்காங்களாம். ஆட்டோமேடிக் கடிகாரமாம். அதன் இயக்கம் மட்டும் நிக்கவேயில்லை(யாம்) அட! ஆச்சே...22 வருசம். இன்னுமா?

( இந்த வினாடிதான் கட்டுரைக்கானத் தலைப்பைச் சொன்னார் கோபால்:-)நன்றி)

நேத்துதான் ஈத் பண்டிகை நாள். விழா முடிஞ்ச கையோடு புத்தாடைகள் பளபளன்னு ஜொலிக்க இசுலாமிய சகோதர சகோதரிகள் குடும்பத்தோடு உல்லாசமாச் சுத்திப் பார்க்க வந்துக்கிட்டே இருந்தாங்க. ஒரு மாசம் நோம்பு இருந்த சோர்வுகூட முகத்தில் தெரியலை. அங்கேயே இடதுபக்கம் ஒரு அருங்காட்சியகம் இருக்கு. சிலவருசங்களுக்கு முன்னால் திநகரில் இருக்கும் நினைவில்லத்துக்குப் போனதால் இங்கே நுழையாம, வந்த வேலையைப் பார்க்கலாமுன்னு அடுத்த சமாதிக்கு விரைந்தோம். ரெண்டுக்கும் நடுவில் ஒரு காவல் நிலையம் இருக்கு. ப்ளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு தகவல் பலகை ஒன்னு இருக்கு. ஆனால் ரொம்பப் பொடி எழுத்துகள். நம்ம மக்கள்ஸ் நின்னு படிப்பாங்களான்றது சந்தேகம்தான்(-:
அதுகிடக்குக் கழுதைன்னு கடந்துபோறது......... சகஜம்.....

நுழைவாசலில் கம்பரும், இளங்கோவடிகளும் ஆளுக்கொரு பக்கமாச் சிலையா நிக்கிறாங்க. உலகத் தமிழ் மாநாட்டின் நினைவுச் சின்னங்கள்.
எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது என்று பொறிக்கப்பட்ட மேடை. உள்ளே நுழைஞ்சு வரும்போது அண்ணாவின் மார்பளவு சிலை, வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம், அருங்காட்சியகம், அலங்கார மண்டபம், அணையாவிளக்கு, எவர் 'ஆட்சி'யில் நிறுவப்பட்டது என்பதெல்லாம் அங்கே போலத்தான் இங்கும். (நான் பேசாம முதலில் இங்கே வந்துட்டு அங்கே போயிருக்கணுமோ?)

அண்ணா 60 வயதுவரை இருந்துருக்கார். இவர் இறந்தே நாற்பது வருசங்கள் ஓடிப்போச்சு.ரெண்டு மரணத்துக்கும் இடைப்பட்ட பதினெட்டு வருசங்களில் தமிழ்நாட்டின் நிலை, வளர்ச்சி எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்க்கணும்.
இங்கே அவ்வளவாக் கூட்டம் இல்லை. சமாதிக்குப் பின்புறம் கடல்மண்ணுக்கு இடைப்பட்ட இடத்தில் இருக்கும் புல்வெளிக்கு இன்னும் கொஞ்சம் பராமரிப்புத் தேவைப்படுது. அடிக்கும் வெய்யில் கொஞ்சமா என்ன?

அங்கிருந்து நீண்டுகிடக்கும் கடற்கரை மணல் வெளியைப் பார்த்தப்ப..... 'இவ்வளவு நல்ல ப்ரைம் லொகேஷன் இப்படிச் சமாதிகளுக்குன்னு ஆகிருச்சே'ன்னேன். 'அதனால் என்ன? குறைஞ்சபட்சம் இது இருக்கறதால் இந்தப் பகுதியாவதுக் கொஞ்சம் சுத்தமா இருக்கே. அதை யோசி'ன்னார் கோபால். அட.... ஆமாம்ல்லெ.


நம்ம மக்கள்தான் சுற்றுப்புறத்தைச் சுத்தமா வச்சுக்கறது நம்ம கட்டாயக் கடமைன்னு நினைக்காம.....இயல்பாவே சுத்தமா வச்சுக்கும் நிலைக்கு உயரணும். காவல்நிலையத்தின் முன் பக்கச்சுவர்கள்கூட கழிப்பிடங்களா மாறிக்கிட்டு வருது. இத்தனைக்கும் இது பரபரப்பான பீச் ரோடு (அப்படி என்னாங்கடா...அடக்கவே முடியாம?)


ஆனால் ஒன்னு..... இதுவரை நாங்கள் டெல்லியிலும் மற்ற நாடுகளிலும் பார்த்த தலைவர்கள் சமாதிகள், போர் நினைவிடங்களை ஒப்பிட்டால் தரத்தில் எள்ளளவும் குறைவில்லாமல் அழகா அம்சமாத்தான் இங்கேயும் அமைச்சுருக்காங்க.

இன்னும் காந்தி, காமராசர், பக்தவத்சலம், மூப்பனார்ன்னு நினைவிடங்கள் பாக்கி இருக்கு. அதையும் ஒரு ரவுண்டு போய்ப் பார்க்கத்தான் வேணும். போனாச் சொல்றேன்.சரியா?

Thursday, September 24, 2009

துளசியின் தளத்துக்கும் மணாளனுக்கும் பொறந்தநாள்.


நம்ம தளத்துக்கும் நம்மூட்டுத் 'தல'க்கும் இன்னிக்குப் பொறந்தநாள்.

என்னவோ இப்பத்தான் எழுதவந்தது மாதிரி இருக்கு. அஞ்சு முடிஞ்சு ஆறாவது வருசம் ஆரம்பிச்சாச்சு. உருப்படியா ஏதாவது செஞ்சேனான்னு இன்னும் யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

'தல' யின் பிறந்தநாளை எங்கே மறந்திடப் போறேனோன்னு தளத்தோடு முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டது ரொம்ப நல்லதாப் போச்சு.


வழக்கம்போல் உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கணுமுன்னு தமிழ்கூறும் நல்லுலகத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்,

துளசி

Tuesday, September 22, 2009

நகர்வலத்தில் கொலு வாரம். விஸிட் 1

அந்தந்தக் காலத்துலே கிடைக்கிறதை விட்டுட்டு...அப்புறம் நியூஸி போனபிறகு ஹோம்சிக் ஹோமாத சிக்குன்னு சொல்லிப் பீலா விடவேணாமுன்னு ......

முதல்லே செஞ்சது, 'டைம்ஸ் ஆஃப் இண்டியாவை நிறுத்து. ஹிந்து வாங்கு'. அதுலேதான் விலாவரியா எங்கெங்கே என்னென்ன, முக்கியமா ஓசிகள் என்னன்னு வந்துக்கிட்டு இருக்கு. டைம்ஸ்லேயும் வருதாம்.ஆனா....'பழைய நாய்க்குப் புது வித்தை படிப்பிப்பது ......ரொம்பக் கஷ்டம்'.


'எங்கூட்டுலே கொலு. வந்து பார்த்துட்டுப்போங்க'ன்னு இருக்குப்பா. நம்ம ஆளு சும்மா இருக்காம,'பத்திரிக்கையிலே போடுறாங்கன்னா பிரமாதமா இருக்கும். போலாம். என்ன எங்கேன்னு விவரம் கேளு'ன்னார்.

புருஷன் பேச்சைத் தட்டுன பாவம் நமக்கெதுக்கு? 'கண்டிப்பா வாங்க. அஞ்சு(ம்) வரை இருப்போம். கோவிலிலும் நாங்களேக் கொலு வச்சுருப்பதால் அஞ்சுப்பிறகு அங்கே போயிருவோமுன்னு சொல்லி வழியும் சொல்லி, சரியான விலாசத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்புறேன்'னு , அடுத்த நிமிசமே அனுப்பியும் வச்சார். நான் பெற்ற இன்பம் வகையில் 'போட்டோ எடுக்கலாமா?' ன்னு கேட்டுவச்சேன். இல்லீங்க. நீங்க வந்து 'அட்மையர்' பண்ணுங்கன்னார் டாக்டர் அமர்நாத்.

இப்படியெல்லாம் சொல்லி அழைச்சா..... நமக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? கிளம்பிப்போனா.... அந்த ஏரியாவில் மழை பேய்ஞ்சுருக்கு. நல்லவங்க இருக்காங்க போல இருக்கே.... (சிவாஜி கணேசன் ஸ்டைலில் படிக்கவும்)

கொலு? நிம்மதி ! நாலுமணி கூட ஆகலை. மூணே முக்கால். ஆனா வீடு பூட்டி இருக்கு. கீழ்வீட்டு மாமி சொன்னாங்க,'கோயிலுக்குப் போயிட்டார்'

நாமும் இங்கே முடிச்சுட்டுக் கோவிலுக்குப்போறத் திட்டம்தான். கோவிலில் அஷ்டதிக்கு கொலு இருக்காமே. அதுவும் நவராத்ரி என்பதால் கோவிலைப் பகலில் மூடுவதில்லையாம். சலோ சலோ..... மாடவீதியில் ஊர்ந்து, மயிலையாம் கயிலை, கயிலையாம் மயிலைன்னுக் கபாலியை அடைந்தோம். ராஜகோபுரத்தில் குளம், எனக்கோக் கால் வைக்க பயம். அடுத்த வாசல் வழியா நுழைஞ்சாச்சு.
பெரிய மண்டபத்தில் அட்டகாசமா அஷ்ட திக்கும் பார்க்கும் அலங்காரக்கொலு. கோவில்களுக்கானத் தங்க வெள்ளிக் கவசங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஏற்பாடு செஞ்சுருக்கு. நாங்கள் வந்துருக்கும் விவரம் தெரிஞ்சு சில பூனையார்களும் கொலுவுக்குள்ளே போய்ச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பரிபூரணம். எல்லாப் பொம்மைகளும் பிடிச்சதுன்னாலும் கீதை உபதேசத்தின்போது அர்ஜுனனுக்குக் காமிச்ச விச்வரூபக் காட்சிக் கொள்ளை அழகு. கார்த்திகைப் பெண்கள், முப்பெரும்தேவியர், இடும்பன், பொய்க்கால் குதிரையுடன் ஸ்வாமி ஊர்வலம், பூரணகும்பம் ஏந்திய பாவையர் அடடா.......

அடுத்து இருக்கும் சின்ன மண்டபத்தில் பதினெட்டு சித்தர்கள் இமாலயத்தைச் சுற்றி. இந்தப்பக்கம் கர்ப்பக்கிரகத்துக்கு முன் இன்னொரு கொலு அலங்காரம்( படம் எடுக்கலை. அடக்கி வாசிச்சேன்) ஆனா அங்கே இருந்த இளமங்கையர் குழுவைப் பேட்டிக் கண்டாச்சு. எதிராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள். ப்ரீத்தி அண்ட் கோ:-)

( கோபால்தான்..... வீடியோ கேமெராவோட இருக்காங்க. என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கோன்னார். எனக்கு எழுத ஐடியாக் கொடுக்கறாராம்ப்பா!!!!)
மண்டபத்துக்குப் பக்கத்துலேயே கோவில் நந்தவனம். நட்சத்திர மரங்களை வச்சு வளர்க்கறாங்க. உங்க நட்சத்திரத்துக்கு என்ன மரம்? மேலே படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:-) தோட்டத்தில் கோவில்மியாவ்ஸ் ஜாலியாச் சுத்திக்கிட்டு இருக்குதுங்க.
>மக்கள் வெள்ளத்தில் நீந்தி, எதிர்நீச்சல் போடத் தெம்புக்காகப் பெட்ரோல் ஊத்திக்கச் சரவணபவனில் நுழைஞ்சோம். நமக்கு எதிர்ப்பக்கம் வந்து உக்கார்ந்த ராமமூர்த்தி ஐயர், 'அறுபதோ, எழுவதோ இல்லை எம்பதோ எல்லாக் கல்யாணங்களையும் பண்ணிவைக்கிறேன். சார்ஜ் கொஞ்சம் கூடுதலா இருக்கும். ஆனால் மந்திரங்கள் எல்லாம் சுத்தமாச் சொல்லிவைச்சுச் செஞ்சுதரேன்'னு உறுதியாச் சொல்லி இருக்கார். யாருக்காவதுத் தேவைன்னா சொல்லுங்க. நமக்கும் ஏஜன்ஸி எடுத்தமாதிரி ஆச்சு. தினந்தினம் தட்டுலே மட்டும் ஆயிரம் வரை விழுதாம் ஒவ்வொரு சந்நிதியிலும்! நெசமாவா?

Sunday, September 20, 2009

கோபால் வச்சக் கொலுவைப் பார்க்க வாங்க நீங்க!

இந்த வருசம் கொலுப்பெயர்ச்சி ஆகிப்போச்சுங்க. நல்லதா எதையாவது பார்க்கும்போது....எதுக்கும் இருக்கட்டுமுன்னு கொலுவுக்காகச் சேகரிச்சுவச்சுக்கும் பழக்கத்தையொட்டிச் சில சமாச்சாரங்களை வாங்கிவச்சுருந்தேன். நம்ம 'தீம்' என்னவோ எப்பவுமே ஒன்னுதான் என்றாலும் , ஒவ்வொருவருசமும் புதுசா ரெண்டு மூணு வேணும்தானே?

சிங்காரச்சென்னையில் பூம்புகாரில் கொலுப்பொம்மைகள் விற்பனைக்கு வந்ததுமேத் தோழி தொலைபேசி விவரம் சொன்னாங்க. சீக்கிரம் போய் வாங்கிக்கோ. லேட்டாப் போனா நல்லதெல்லாம் வித்துப்போயிருக்கும். மூக்கு முழி சரியில்லாத பொம்மைகள்தான் கிடைக்குமுன்னு பயமுறுத்தி வச்சுருந்தாங்க. நமக்குத்தான் 'கிடைக்கணும் என்பது கிடைக்காமப் போகாது' என்ற கொளுகை இருக்கே:-)

நம்ம கஷ்டகாலம் பாருங்க.... இவர்வேற ஊருலே இருக்கார். தாராளமா வாங்கலாமுன்னா....... விட்டுட்டாலும்...... போய்ச் சேர்ந்தோம். பயங்கரக் கூட்டம். வெவ்வேற மாவட்டங்களின் பொம்மைகளும் வச்சுருக்காங்க.

மண்பொம்மைதான் சம்பிரதாயமா வைக்கணுமுன்னாலும்...நமக்கு அதெல்லாம் ஆகி வர்றதில்லை. கனம் வேற கூடிரும். இதென்ன பிள்ளையாரா வாங்கிட்டுத் தண்ணியிலே கரைச்சுட்டுப் போறதுக்கு? (இன்னும் நம்வீட்டுலே புள்ளையாரைக் கரைக்கலை. சுத்தமானக் கடற்கரையைத் தேடிக்கிட்டு இருக்கேன்)

திரும்பிப்போகும்போது கூடவே கொண்டு போகணும். உடையாத பொம்மையா வேணும். கனமாவும் இருக்ககூடாது. -என் கண்டிஷன்.

மேற்படி சமாச்சாரத்தோடு விலையும் சல்லிசா இருக்கணும்.- இது கோபால்.

நடக்குங்கறீங்க? ஊஹூம்... நம்பிக்கை இல்லை.

மார்பிள் தூளால் செஞ்ச வேணு கோபாலன். அழகான திருத்தமான முகம். கையில் குழல். கொஞ்சம் கனம்தான். போகட்டும். ஒன்னே ஒன்னு கனமா இருந்தா என்ன ஆகிறப்போகுது? (என்னைமட்டும் இவர் இந்தியாவிலேயே விட்டுட்டாப் போகப்போறார்?)

புள்ளையார் பல ரகவேலைகளில் இருக்கார். கண்ணுக்குக் கண்ணாடி மாட்டிக்கிட்டுக் கணக்கெழுதும் 'கணக்குப்புள்ளையார்'. பக்கத்துலே சிலேட் வச்சுக்கிட்டு அ,ஆ எழுதிக் காமிக்கும் எலி. சூப்பர். (ஹிந்திப் படிக்கணுமுன்னு இதுக்குக்கூடத் தெரியுது பாருங்களேன்...... சமர்த்து) அதே இடத்தில் நாலு யானைகள் நடந்து போனாங்க..... கோபால் வேணுமுன்னு சொல்லி பில் போட்டுவாங்கிக்கிட்டார்.

தசாவதார செட் ஆசையா இருக்கு. ஆனால் மூக்கும் முழியும் சரியில்லே. கடைசியில் ஒரு ரெண்டடி உயரம் வரும் செட் பார்த்தேன். கொள்ளை அழகு. கனமும் இல்லை. காகிதக்கூழ் சமாச்சாரம். ஆனால்..... திரும்ப நியூஸிக்குக் கொண்டுபோவது கஷ்டம். பேக்கிங் செய்யும்போது ஒவ்வொன்னுக்கும் ஒரு அட்டைப்பெட்டின்னா பத்து ஆகிரும். சீச்சீ.....ரொம்பப் புளிப்பு இல்லே?


பித்தளை, வெண்கலம் அது இதுன்னு கீழ்த்தளத்திலும் மாடியிலும் வெளியில் பின்பக்க வெராந்தாவில் வச்சுருந்த பிரமாண்டங்களையும் ச்சும்மாப் போய்ப் பார்த்துட்டு ஒன்னும் வாங்கிக்காம வயிற்றில் பால் வார்த்தேன். விஷ்ணு விக்கிரகங்கள்தான் நிறைய. சிலது கொள்ளை அழகு. ஊர் திரும்பி வீட்டை வித்துட்டு வந்து வாங்கிக்கிட்டுப் போகணும்.

"வீடே இல்லேன்னா எங்கே கொண்டு வைப்பே?"

"ஏர்ப்போர்ட்லேயே ஒரு ஓரமா உக்கார்ந்துக்கிட்டால் ஆச்சு"

ஒரு மாமல்லபுரம் செட் கண்ணுலே பட்டுச்சு. ஐந்து ரதங்கள், பகீரதன் தவம், யானை, சிங்கம், கலங்கரை விளக்கம், குன்றுன்னு சுமாரா இருக்கு. பார்த்துக்கிட்டு இருக்கும்போதே...... 'சிவகாமி.....' கோபால் மனசுலே புகுந்துட்டாள் போல! வாங்கிட்டாருப்பா.

ஒரு அஞ்சு நிமிசத்துக்கு நான் எங்கே இருக்கேன்னு என்னாலயே நம்ப முடியலை! புத்தி தெளிவா இருக்கான்னு சோதிக்க (எனக்குத்தான்) ஒரு சின்னதா, பிங்க் நிறத்தில் பெரிய காதோடு மொட்டைப் பிள்ளையார் வாங்கிக்கிட்டேன். அம்புட்டுதான். பர்ச்சேஸ் முடிஞ்சது.

பொம்மைகளைப் பொதிஞ்சு தரும் இடத்துக்கு இன்னும் நாலைஞ்சு ஆட்களைப் போடக்கூடாதா? பணம் செலுத்தும் இடம் காத்து வாங்குது. இங்கேயோ...மூச்சு முட்டுது.

ஒருத்தர், பாம்பணையில் துயிலும் பரந்தாமனைப் பொதிஞ்சுக்கிட்டு இருந்தார். பக்கத்துலே பெருமிதத்தோடு நின்னவரைப் பார்த்ததும் புரிஞ்சு போச்சு. அமெரிக்கா(ய்) 'உங்களுதா? ஹைய்யோ...சூப்பர்'ன்னேன். அவர் கண்ணில் ஒரு மின்னல்.

"எவ்வளவு வாங்கினாலும் போதாது....."

"ஆமாம் ஸார். இட் நெவர் எண்ட்ஸ்"

(போயிட்டுப்போகுது. ஆண்களுக்கு மட்டும் ஆறுதல் வார்த்தைகள் வேண்டி இருக்காதா? ரெண்டு பேரும் மனசைத் தேத்திக்குங்கோ )


இவர் வரும்வரை (வெறும்) வேடிக்கை பார்க்கச் சொன்னார். பக்கத்துலே இருந்த மாமிக்கு ரெண்டு பொண்களாம். ஒருத்தர் 'கிருஷ்ணா' என்னும் தீம். இன்னொருத்தர் 'யெஸ்டெர்டே டுடே டுமாரோ'வாம். 'நீங்க?'ன்னாங்க. 'யானை அண்டு பூனை'. வழக்கம்போல் என்னும் சொற்களைச் சொல்ல மறந்துட்டேன்:-)

எண்ணி மூணே மூணு படிகள். நியூஸியில் இருந்து கொண்டுவந்தவைகளுடன் இவைகளையும் சேர்த்து ஒரு வழி பண்ணால் ஆச்சு. மரப்பாச்சியைக் கொண்டுவந்து வச்சது மட்டும் நான். மத்ததையெல்லாம் இவரே மடமடன்னு கொண்டுவந்து அடுக்கிட்டார். என் கிளியோப்பாட்ரா செட்லே இருந்த ஸ்பிங்க்ஸ் மட்டும் முழிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கு. எங்கே 'அவளை'க் காணோம்?

'ரொம்பக் கவர்ச்சியா இருக்குன்னு வைக்கலை'யாம்!

பாவம் கொலுவுலே உக்காரணுமுன்னு 'கச்சைக் கட்டிக்கிட்டு இருந்தாள்'

அதுவும் சரி....... என் தோழிகள் கொலுப் பார்க்க வருவாங்களே..... ஆம்பளைன்னா...ஒரு அடக்கம் வேணாம்?!!!

இந்தக் கலாட்டாவுலே சுண்டல் செய்யலை. பாதாம் ஹல்வா மட்டும் வச்சுக் கும்பிட்டாச்சு (இன்னும் திங்கலை. இப்பவேத் தின்னுட்டால்.... இன்னும் ஒன்பது நாளுக்கு ?????)



நீங்கெல்லாம் சோம்பல் பார்க்காம ஒரு நடை வந்துட்டுப் போங்கன்னு
அன்போடு அழைக்கின்றோம்.

Friday, September 18, 2009

பண்டிகைக்காகப் பலகாரமா இல்லை பலகாரத்துக்காகப் பண்டிகையா?

ஒரு காலத்துலே பலகாரத்தை வச்சேப் பண்டிகையை நினைவு படுத்திக்கும் பழக்கம் இருந்துச்சு. காலம் கலியா மாறியதால் எப்போதும் எல்லாமும் கிடைக்குது. புதுத் துணிகளைக்கூட இந்த வரிசையில் சேர்த்துக்கலாம். தீவாளி பொங்கலுக்குன்னு புதுசு எடுத்ததெல்லாம் போக..... தள்ளுபடி விலை இருக்கேன்னு வருசம்பூராப் புதுசும் வாங்கிக் கட்டலாச்சே.....

இந்த வருசம் க்ருஷ்ணாஷ்டமியை எப்படியெல்லாம் கொண்டாடலாமுன்னு திட்டம் (மனசுக்குள்ளேதான்) போட்டு வச்சுருந்தேன். நானொன்று நினைக்க 'அவன்' ஒன்று நினைச்சுட்டான். தொண்டை வலி. இருமல். மாலை நடை போகும்போது மருந்து(ம்) வாங்கிக்கலாமுன்னு ................

புதுசா ஒரு கடை திறந்துருக்காங்க. 'தமிழினி'. பேரே நல்லா இருக்கேன்னு நுழைஞ்சேன். இனிப்பகம் & வெதுப்பகம். ஸ்வீட்ஸ் & பேக்கரி ஐட்டங்கள் விக்கறாங்க. ஓனர் யாழ்ப்பாணமாம். இங்கே இது மூணாவது கிளை. யாழ்ப்பாணக் கொழுக்கட்டை இவுங்களோட ஸ்பெஷாலிட்டியாம். புதுக் கடை என்பதால் எல்லாமே புதுசாத்தான் செஞ்சுருப்பாங்க. பழைய ஸ்டாக் இருக்காது என்ற நம்பிக்கை(எனக்கு).

ச்சும்மா........... ஒரு பார்வை. இளநீரில் செய்தது. எப்படி? தண்ணீர் சேர்ப்பதற்குப் பதிலா இளநீரா? அப்ப.....உப்பு வாங்கும் செலவு மிச்சம்!

இளநீர் சேர்த்துச் செஞ்ச ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர் பாகு அப்புறம் ஒரு ஷோன்கேக் (எல்லாம் நம்ம சோனா அல்வாதான்) இப்படி இது மூணுலேயும் ஒவ்வொரு துண்டு மட்டும் வாங்கினோம். எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம். இந்த வருசம் இப்படியா?

பழங்கள், இனிப்புகளோடு குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடியாச்சு. சாத்துக்குடி உரிக்கக் ' குழந்தை'க்குக் கஷ்டம் என்பதால் ஜூஸ் எடுத்துக் கொடுத்தேன். முதல் பாதி விழா முடிஞ்சது. ரெண்டாம் பாதிக்காக...... பதுமனைத் தரிசிச்சுட்டுப் போய்ச் சேர்ந்தது கலைமாமணிகளும், பதுமஸ்ரீயும் இணைஞ்ச ஒரு நிகழ்ச்சிக்கு.

கல்பத்ருமா நடத்துது. சுதா ரகுநாதன் பாட்டு, மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கம், கோபிநாத் வயலின், ராமன் மோர்சிங் & தம்புரா நாராயணன் இப்படி ஒரு ஜமா. (பட்ட விவரங்களுக்கு இந்த அழைப்பிதழைப் பாருங்க)

பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த ஹால். சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம். கச்சிதமா இருக்கு. வாசலில் மலர் அலங்கார வரவேற்'பூ'.


சொன்னாச் சொன்ன நேரத்துக்கு 'டான்'ன்னு ஆரம்பிச்சாங்க. கல்பத்ருமா இப்போ சிலவருசங்களா இப்படிக் கலைப்புரவலர்களா ஆகி இருக்காங்களாம். கலை ஆராதகரானத் தன்னுடைய தகப்பனார் பரமேஸ்வரன் ஆரம்பிச்சு வச்சது இதுன்னு இப்போதைய நிர்வாக இயக்குனர் சொன்னார்.

குரு ப்ரம்மா, குருவிஷ்ணுன்னு கடவுள் வாழ்த்து ஆரம்பிச்சு வனஜாக்ஷி முதல் பாட்டு. சப்தஸ்வர ஷோபின்னு, வீணாகான மூர்த்தேன்னு வரிசையாப் பாட்டுகள். நடுவில் நாலு பாட்டுகளுக்கு விஸ்தாரமான ராக ஆலாபனைகள். அருமையா இருந்துச்சுன்னாலும் கூடிப்போச்சோன்னு ஒரு தோணல். பால்வடியும் முகம் ஆரம்பிச்சப்பக் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஸ்ரீனிவாச பவசரணம், பாவயாமி கோபாலம், கண்டநாள் முதலாய் இப்படிக் கலந்துகட்டி ஒரு ரவுண்டு.

முதலைவாயில் அகப்பட்ட யானை குரலெடுத்து அழுது கூப்பிட்டபோதும், துகிலுரியும்போது, அனைவரும் கைவிட்ட நிலையில் த்ரௌபதி கதறி அழுதபோதும் பரந்தாமன் எப்படி உதவிக்கு வந்தான்னு அவன் கருணையை நினைச்சுப் புரந்திரதாசர்(?)பாட்டு ஒன்னு 'எமெனெல்லி காணதெந்து ஹேளபேடா' அருமை. முதல் முறையாக் கேட்கிறேன். மித்ரனும் அவனே, சத்ருவும் அவனே...ஆஹா..... எமன் மட்டும் இல்லாம இருந்துருந்தா....... நம்ம கதி? (இதைத்தானே நம்ம கவியரசர்' வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கு இடமேது'ன்னு சிம்பிளாச் சொல்லிப்போயிட்டார்! அடடா........ என்னமா எழுதிட்டார். நிம்மதியா எதையாவது பார்த்தோமா ரசிச்சோமான்னு இல்லாமக் கலந்துகட்டி இந்த எண்ணச்சுழல்களில் மனசு சிக்கிக்குதே)

மூணுமணி நேரம். ஏகப்பட்டத் 'தனி'கள். அருமையான இசை. திட்டமிடாமலே இன்றைக்கு என்னமோ கண்ணன் பாட்டுக்களா அமைஞ்சுபோச்சுன்னு சுதா சொன்னாங்க. அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து(க்)களையும் தெரிவிச்சாங்க. வருசக்கணக்கானப் பயிற்சியில் குரல் கொஞ்சம்கூட இப்படி அப்படிப் போகாம, அலுங்காமக் குலுங்காம..... பெல்ஜியம் நாட்டு ஹைவேயில் பயணிச்சதுபோல அப்படி ஒரு சுகம். 'பாடப்பாட ராகம்'!

நமக்கான ஸ்பெஷலா அவுங்க புடவையில் யானை:-)

'ரஷ்யன் ரிங்ஸ்'ன்னு கோபால் எழுதிக்காமிச்சார்.

"அதெல்லாம் இல்லை. தம்புராவை ட்யூன் செஞ்சப்பவே பார்த்துட்டேன். இது ஸ்பைரல். நல்லவேளை ஞாபகப் படுத்துனீங்க.என்கிட்டே இல்லே...ஒன்னு வாங்கிக்கணும்"

பாவம்...மனிதர். தன்னையே நொந்துக்க வேண்டிய நிலை:-)
என் வாழ்க்கையில் நானும் முதல்முறையா சுதாவின் பாட்டை நேரடியாக் கேட்டதோடு இந்த வருசக் கிருஷ்ணஜெயந்தி விழா நிறைவு ஆச்சு.


பித்தனுக்காக ஒரு படம் போட்டுருக்கேன்!