Monday, April 29, 2013

கொஞ்சம் அக்கம்பக்கம் பார்க்கலாம்:-)


" போனவாரமே உங்களைப் பார்த்தேன். உங்ககிட்டே வந்து பேச ஆசையா இருந்தது.வேணாம் அவுங்க பிஸியா  இருக்காங்கன்னு தடுத்துட்டார். (வீட்டுவீட்டுக்கு இப்படி ஒருத்தர் இருப்பாரே!) தினம்  நாங்க ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வரும் சமயம்  நீங்க கிளம்பிப் போய்க்கிட்டு இருப்பீங்க.   எங்கே மகளை காணோம்?  எப்பவும் மூணு பேரா வருவீங்க? எங்கே இருக்கீங்க?  அடிக்கடி வருவீங்களா? எப்பவும் இங்கேதான் தங்குவீங்களா?  சொந்த ஊர்  எது? சென்னைதானா?"

சபாஷ்! சரியான போட்டி:-) என்னை வாயைத் திறக்கவிடாம படபடன்னு  வார்த்தைகள் வந்து விழுது!  ஆஹா....வல்லாளுக்கு வல்லாள்,  வையகத்தில் உண்டு!!!!

" இங்கேயா தங்கி இருக்கீங்க? போனவாரம் உங்களைப் பார்க்கலையே:( எந்த ஊர்?"

' மெல்பர்ன்! ஆஸி!'    இன்னொரு அதிர்ச்சி.  அட! நம்ம பக்கத்தூரு மக்கள்ஸ்.

"அம்மாவும் பொண்ணுமா  பட்டுபுடவையில் அன்னிக்கு  ரொம்ப நல்லா இருந்தீங்க. கல்யாணத்துக்கு போனீங்களா?"

"ஆமாம். அன்னிக்குதான் எங்களுக்குக் கல்யாணம்!"

அரண்டு போன  முகத்தை ரசிச்சேன்.  'அறுபதாங் கல்யாண'முன்னு குறுக்கே பாய்ஞ்சார் கோபால்:-)

அவுங்களுக்கும் சென்னைதான் சொந்த ஊர் என்றாலும் 'வசதிகளை' முன்னிட்டு கெஸ்ட் ஹவுஸில் தங்குவாங்களாம்.  ஸேம் ப்ளட்:-)

'சுருக்கமா' ஒரு அரைமணி நேரம் பேச்சில் போனது. நம்ம தொழில் எழுத்துன்னதும் இன்னுமொரு அதிர்ச்சி அவுங்களுக்கு:-)  விடமுடியுமா? நம்ம வாசகர் வட்டத்துலே சேர்த்துவிட்டேன்!

நம்ம சீனிவாசனை வீட்டுக்குப்போயிட்டு வரச்சொல்லி இருந்தோம்.  அவர் திரும்பி வந்தவுடன் தி நகர் ரவுண்டு கிளம்பினோம். பயணங்களில் செக்கு மாடு போலத்தான்  போன இடங்களுக்கே போகவேண்டியதாப் போகுது.  தைக்கக் கொடுத்துருக்கும்  உடைகளை வாங்கிக்கணும். மங்கேஷ் தெருவுக்குப்போய்  சீனிவாசன்  ஆசாரி செஞ்சு வச்சுருக்கும் மோதிரத்தையும் வாங்கிக்கணும். தோழி வீட்டுக்கு ஒரு எட்டு.  இன்றைக்கு இதோடு சரின்னு திட்டம்.

1994 லே அண்ணன் மகள் கல்யாணத்துக்குப் போயிருக்கோம். அன்னிக்குன்னு பார்த்து ப்ளைட் லேட்.  எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சு  வீடுப்போய்ச் சேரும்போதே ராத்திரி மணி 12. அண்ணன் வீடு அப்போ அண்ணாநகரில் :-) . பொழுது விடிஞ்சதும் பந்தக்கால்.  நிகழ்ச்சி முடிஞ்சதும் பத்து மணிக்கு மற்ற பூஜைகள் ஆரம்பம்.  எதுக்கும் நிக்க நமக்கு நேரமில்லை.  வீட்டுலே புடவைகள் எடுத்து வச்சுருந்தாலும் அதுக்கு  ப்ளவுஸ் தைச்சுக்கணும் உடனடியா! மகளுக்குப் பட்டுப்பாவாடைகள் வேற எடுத்து உடனடியா தைச்சு வாங்கணும்.

ஏழுமாடி சரவணா ஸ்டோர்ஸ், போத்தி'ஸ், சென்னை  ஸில்க்ஸ் எல்லாம் அப்போ கிடையாது. நல்லி, அதை விட்டா குமரன் சில்க்ஸ் !  குமரனுக்கு ரெண்டு கடைகள்!   பர்ச்சேஸ் முடிஞ்சது.  வெளியூர்வாசின்னு நெத்தியில் எழுதி இருந்ததைப் படிச்ச  கடைப்பையன் ஒருவர், 'உடனே தச்சுக்கொடுக்க இங்கெ ஒரு டைலர் இருக்காரு. வாங்க , நான் இடம் காமிக்கிறேன்'னு ஒரு ஆட்டோ புடிச்சாந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனார்.  கிட்டேதான். பனகல் பார்க்குக்கு எதுத்த பக்கம் . ராம்ஸ் பஸார்.

அங்கே ஏகப்பட்ட டெய்லர்ஸ் இருக்காங்க. பையன் கொண்டு போய் விட்ட  கடையில்  இருந்தவர்  மறுநாளே  தர்றதாச் சொன்னார். அளவு  கொடுத்துட்டு  வந்தோம். மறுநாள்  மாலை ரிஸப்ஷன். கிளம்பிக் கல்யாண மண்டபம்  போகும்போதே  டெய்லர் கடைக்குப்போய்  உடைகளை வாங்கிக்கிட்டோம்.  மகளுடைய  சட்டையில்  கொஞ்சம் குழறுபடி.  கோபால் எடுத்துக்கிட்டு ஓடினார். மீண்டும் சீர்படுத்தியெடுத்துக்கிட்டு  நல்லவேளையா ரிஸப்ஷன் ஆரம்பிக்கும் முன்  வந்து சேர்ந்துட்டார்.

அதுக்குப்பிறகு  இன்னொரு பயணத்தில்  இன்னொரு கடையில் துணிகளை வாங்கியதும்  தைக்கக்கொடுக்க விசாரிச்சதில் இன்னொரு இடத்தைக் காமிச்சாங்க. அங்கே போனால்  அதே டெய்லர் இருக்கார்.  பெயர் மொஹம்மத் முஸ்தாஃபா.  இதுக்குப்பிறகு அவர் எங்கே கடை போடறாரோ அங்கே போய் கொடுக்கும்படியா ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போச்சு. அவரும் விடாம பனகல் பார்க்கைச் சுத்தியேதான் கடைகளை மாற்றிக்கிட்டே இருக்கார்.  இப்ப வியாபாரம் ரொம்பவே பெருகி இருக்கு.  இடம் பழைய ராம்ஸ் பஸாரேதான்! 


ஒரே ஒரு சின்னக் கஷ்டம்தான் நமக்கு.  பொய் ஒன்னு சொல்லணும். ஆபத்தில்லாத பொய் என்பதால் நானே என்னை மன்னிச்சுக்குவேன்.  துணிகளைத் தைக்கக் கொடுத்துட்டு  உண்மையில் ஊருக்குக் கிளம்பும் நாளுக்கு ஒரு நாள் முன்னதான  தேதியில்  கிளம்பறேன் என்று சொல்ல ஆரம்பிச்சேன்.  உண்மை விளம்பியா இருந்த காலக்கட்டத்தில்  கடைசி நிமிசம் வரை   இதோ அதோன்னு  லேட் பண்ணி பேஜாராப் போயிருக்கு. அட்ரஸ் கொடுங்கம்மா. பையன்கிட்டே கொடுத்தனுப்பறேன்னு சொல்லி ஒரு பயணத்தில்  ஊருக்குக் கிளம்பும் நாள், காலையில்  ஆறுமணிக்குப் பையன் வந்தார்!

ஆனால் ஒன்னு சொல்லணும்,  ஒருதடவையாக் கொண்டுபோய்க் கொடுக்காம  பயணத்தில்  தினசரி ஊர் சுற்றும்போது , நல்லதாக் கண்ணில் படும் துணிகளை வாங்கிக்கிட்டே இருப்பேன்.  பாவம் கோபால். போதும் போதுமுன்னு  அலறுவார்.  இனிமேல் கொடுத்தால் டெய்லருக்குத் தைக்க நேரம் இருக்காதுன்னெல்லாம் சொல்லி பயமுறுத்துவார். பாவம்:-)))  நம்ம முஸ்தஃபா மாஸ்டர் அதெல்லாம்  பொருட்படுத்தாமத் தைச்சுக் கொடுத்துருவார். சிலசமயம் கோபால் தனியா  பயணம் செஞ்சாலும்  நம்ம கடையில்  எங்களுக்கான துணிகளைத் தைக்கக்கொடுத்து வாங்கியாந்துருவார்.   எங்கள் அளவுகளை  எழுதி வாங்கியாந்துருக்கேன்.  அதைக் கொடுத்தனுப்பினால் போதும்.

அவர் தைப்பது நமக்கும்  இந்த 19 வருசமாப் பிடிச்சுப்போச்சுன்னும்  வச்சுக்கலாம். நானே ஒரு தைய்யல்காரிதான் என்றாலும்  இங்கே கொண்டு வந்து தைச்சுக்க இப்பெல்லாம் சோம்பல் அதிகம். மேலும் இங்கே ஒரு மேட்சிங் கலர் நூல்கண்டு வாங்கும் விலையில் சென்னையில் உடையே தைச்சுக்கிட்டு வந்துடலாம்,பாருங்க.

 சிட்டி டெய்லர், ஃபேஷன் டெய்லர், க்ளாஸிக் டெய்லர்ஸ்ன்னு  பல பெயர்கள் எல்லாம் மாறி இப்போதைக்கு 'ஷிபி டெய்லர் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்'  என்ற பெயரில் கடை இருக்கு.  கடை எண் 8, ராம்ஸ் பஸார். பிரகாசம் ரோடு தி. நகர்.  இந்த பிரகாசம்ரோடுக்கு வர்றதுதான் கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கும்.  ஏழுமாடி  சரவணா ஸ்டோர் தாண்டியதும்  ரைட்லே பிரியும்  ரோடு. அந்த குறிப்பிட்ட இடம்  மட்டும் ஒன்வே என்பதால்  முதலில்  ட்ரைவர்களுக்குக் குழப்பம் வந்துரும்! பனகல் பார்க்கின் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே  இருக்கும் ரோடுதான் இது.  காம்பவுண்டு சுவர் முடிஞ்சதும் இது ஜி என் செட்டி ரோடில் போய்ச் சேர்ந்துருது. பாவம்  (அந்த)பிரகாசம்:(

வழக்கம் போலவே தைச்சு முடிச்சதையெல்லாம் அயர்ன் செய்ய அனுப்பி இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துருமுன்னு  சொன்னார்:-)

மோதிரம் ரெடியா இருந்துச்சு. நல்லாவே செஞ்சுருக்கார். நன்றி சொல்லிட்டு,அங்கிருந்து  மயிலை சரவணபவன்.  கடைசி முறையா வெங்காய பஜ்ஜி.  அடுத்து  விஸிட் தோழி வீடு.  மீண்டும்  டெய்லர் கடை.     எட்டு மணிக்கெல்லாம்  அறைக்கு வந்து  பேக்கிங் ஆரம்பிச்சோம்.

ஆங்...    சொல்ல மறந்துட்டேனே......... கிராண்ட் ஸ்வீட்ஸ் வேணுமுன்னா இனி அடையாருக்கு  ஓட வேணாம்.  செயின் ஸ்டோர்ஸ் போல  மயிலை, அண்ணாநகர் . தி.நகர்ன்னு  ஒன்பது  கிளைகள் உருவாகி இருக்கு.    தி நகரில்   டாக்டர் நாயர் ரோடில் ஒரு கிளை திறந்துருக்காங்க,  கீழேயும் மாடியுமா இருக்கு.  கீழே  இனிப்பு காரம் விற்பனை. அஞ்சாறு இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.


மாடியில்  ரெஸ்ட்டாரண்ட்.   அதுக்கும் மேல் இன்னொரு மாடியில்  ஃபங்கஷன்  ஹால். நூறு பேர்வரை  கொள்ளுமிடம்.  விழாவுக்கு  ஹால் வாடகை கிடையாது.  சாப்பாடெல்லாம் கீழே இருந்து வரவழைச்சுக்கணும்.  குறைஞ்சது 100 பேருக்கான உணவுவகைகளை ஆர்டர் செஞ்சுறனுமாம். மேனேஜர்  ஸ்ரீதர்  மாடிக்கு அழைச்சுக்கிட்டுப்போய்  எல்லாம் விளக்கினார்.



ரெஸ்டாரண்டில்  தாலி மீல்ஸ் ரெண்டு வகையாக் கிடைக்குது. நார்த் அண்ட் சௌத் இண்டியன் வகைகள். இது இல்லாம , மற்ற உணவு வகைகள் எல்லாமே  சமைச்சுப்போடறாங்க:-) இப்போதைக்கு நல்ல சுத்தமான இடமாகவும்  பார்க்க நீட்டாகவுமிருக்கு. இப்படியே மெயிண்டெய்ன் ஆனா மகிழ்ச்சியே!  நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு சமீபத்தில்  இருப்பதால் நாங்களும் ஒரு நாலுமுறை போயிட்டோம்.

100 மீட்டர் நடக்க சோம்பலா இருந்தால்   ஒரு  ஏழெட்டு மீட்டரில்  Suswaad  என்றொரு  உணவுக்கடை. அங்கேயே சாப்பிடும் வசதி இருந்தாலும்..... வீட்டுக்கு வாங்கிப் போகும் மக்கள்தான் நிறைய.  சாயங்காலமாப்போனால் புட்டு கிடைக்குது. நல்ல மிருதுவா தொண்டையை அடைச்சுக்காம அட்டகாசமா இருக்கு.  இங்கே சுவை சூப்பர்னு சொல்லணும். வீட்டுச் சாப்பாடு மாதிரியே!  வயித்துக்கும்கேடு வரலை.  மாலை வேளைகளில் சப்பாத்தி, பருப்பு விசேஷம்.  பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு  கொழுக்கட்டை வாங்கிக்கலாமுன்னு போனால்   பயங்கரக்கூட்டம்.  வீட்டுலே சாமி கும்பிட நைவேத்யங்களை  இங்கே இருந்து வாங்கிப்போகும்  கும்பல் அது!  செல்ஃபோனில் தங்ஸ் போடும்  ஆர்டர் படி இங்கே ஆர்டர் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். '

 "வடை இன்னும் பத்து நிமிசமாகுமாம் இருந்து வாங்கவா? "

ஹைய்யோ!!!  லைஃப்  எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?

தொடரும்.......:-)






Thursday, April 25, 2013

ANZAC DAY!

Australia New Zealand Army Corps Day.

ஒவ்வொரு வருசமும் ஏப்ரல் மாசம் 25 ஆம் தேதி இந்த தினத்தை இங்கே
நியூஸிலாந்துலே அனுஷ்டிக்கிறோம். தலைப்பே உங்களுக்கு விஷயத்தைச் சொல்லிடும். ஆனாலும் அப்படியே விட்டுட்டா நான் 'துளசி'யா இருக்க முடியுமா?


உங்க பள்ளி நாட்களிலே அசோகரின் காலம், பொற்காலம் என்று ஏன் கூறப்படுகிறது என்ற கேள்வி, கட்டாயமா எல்லோருக்கும் ஒருமுறையாவது பரீட்சையில் கேக்கப்பட்டிருக்குமே!

இல்லைன்றவங்க கை தூக்குங்க! இதெல்லாம் ஹிஸ்டரிங்க!!!

1915லே உலக மஹா யுத்தம் நடந்ததுன்னு அநேகமா எல்லோரும் சரித்திரப் பாடத்தில் படிச்சிருப்பீங்கதானே! இது முதல் யுத்தம்!

யுத்தம் மஹா மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒத்தாசையா இருக்கறதுக்காக நியூஸிலாந்து,  அஸ்ட்ராலியாவிலிருந்து ராணுவ உதவியாக போர்வீரர்கள் போறாங்க.என்ன இருந்தாலும் தாய்நாட்டுப் பாச உணர்வு போகாதில்லையா?  அங்கிருந்து வந்தவங்கதானே இவுங்க!

இப்ப இந்த நாடுகளிலே அரசாங்கம் சுயேச்சையா நடந்துக்கிட்டு இருந்தாலும், இங்கே நாட்டு அதிபர், முதல் குடிமகனா( ப்ரெஸிடெண்ட் கிடையாது). இப்பவும் கவர்னர் ஜெனரல்தான் இருக்கார்!

இவுங்களுக்கு போஸ்டிங் துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே. முக்கிய காரணம் கருங்கடலிலே மாட்டிக்கிட்ட கோதுமைக் கப்பலை Dardanelles Straits வழியாக் கொண்டு போகறதுக்கு உதவியா, அந்த ஜலசந்தியைத் திறக்கணும்.

நியூஸியிலே இருந்து 8556 வீரர்கள் புறப்பட்டுப் போனாங்க. அதில் முக்காவாசிப் பேரு இளைஞர்கள்.அங்கே யுத்தத்திலே ஈடுபட்டு 2721பேர் 'வீரமரணம்' அடைஞ்சாங்க! மொத்தம் 260 நாட்கள் யுத்தம் நடந்தது.4852 பேருக்கு காயம்! மீதி ஆட்கள் நல்லபடியா சேதமில்லாம திரும்பி வந்துட்டாங்க!

இவுங்க அங்கே போய்ச் சேர்ந்த நாளுதான் இந்த ஏப்ரல் 25ன்றது! அதுக்கப்புறம் இந்த நாளை நினைவிலே வைக்கணும்,
இவ்வளவு ச்சின்ன நாட்டுலே எவ்வளவு தேசபக்தி, ராஜ விசுவாசம், தைரியம் எல்லாம் இருக்குன்னு வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லணுமுன்னு திரும்பி வந்த ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் முடிவு செஞ்சு, அரசாங்கமும் இவுங்களோட தேசபக்தியைப்
பாராட்டும் விதமா இதை அரசாங்க விடுமுறையாக அறிவிச்சது!

மரணமடைஞ்சவங்களை புதைச்சிட்டு,துருக்கியிலேயே ஒரு நினைவு மண்டபம்( வார் மெமோரியல்) கட்டினாங்க.
இங்கேயும் எந்தெந்த ஊர்களிலே இருந்து ராணுவ வீரர்கள் போனாங்களொ அங்கெல்லாமும் நினைவு மண்டபம்
எழுப்பினாங்க. வீரமரணம் அடைஞ்சவங்க பேருங்களையும் அங்கே செதுக்கி வச்சிருக்காங்க.

Returned Service men & women Association (RSA) இதையெல்லாம் செயல்படுத்தறதுலே கவனம் செலுத்தி எல்லாம் முறைப்படி நடக்க உதவிச்சு!

ஒவ்வொரு வருஷமும், இந்த நாளுலே அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கற நினைவு மண்டபங்களில் விசேஷமான ப்ரேயரும், அங்கங்கே உள்ள ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்வார்கள். லோகல் கம்யூனிட்டி ஆட்களும் ஏராளமா இதுலே பங்கெடுத்துக்குவாங்க.

வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு( அவுங்க பரம்பரைக்கு) அன்னைக்கு விசேஷ மரியாதை! அவுங்களும் அவருக்குக் கிடைத்த மெடல் மற்ற சமாச்சாரங்களை நல்லா மினுக்கி எடுத்துக் கொண்டுவருவாங்க!

முதியோர்கள் இல்லத்துலே இருக்கற வயதான ராணுவ வீரர்கள், இந்த நாளுக்கு ஒரு மாசத்துக்கு முன்னேயே அவுங்க மெடல்களையெல்லாம் பாலீஷ் செஞ்சு, அடுக்கி, ராணுவ உடையோட கம்பீரமா இதுலே பங்கெடுக்க
ஆர்வம் காட்டுவாங்க. சக்கர நாற்காலியிலே இருந்தாலும் கம்பீரம் கொஞ்சம் கூட குறையாம, ஒரு பெருமிதத்தோட அன்னைக்கு வலம்வருவதைப் பார்த்தா நமக்குமே ஒரு உற்சாகம் வந்துரும்!

நம்ம ஊர் கொடிநாள் போலத்தான் இதுவும். சிகப்புக் கலருலே இருக்கற பாப்பிப் பூ( ப்ளாஸ்டிக் தான்)சட்டையிலே குத்திக்கிட்டு, உண்டியல் குலுக்குவாங்க. காசு போட்டவுடன் நமக்கும் ஒரு பாப்பிப் பூ கிடைக்கும். அன்னைக்கு டெலிவிஷனில் வர்றவுங்க( செய்தி அறிவிப்பாளர், வானிலை சொல்றவுங்க, விளையாட்டு நியூஸ் சொல்றவுங்கன்னு) எல்லாம் பாப்பிப் பூவோட தரிசனம் தருவாங்க! இந்தக் கூட்டத்துலே நாமும் சட்டையிலே பூவோடு இருப்போம்.

இந்த 'பாப்பி டே'ன்றது ஏப்ரல் 25 க்கு முன்னாலே வர்ற வெள்ளிகிழமை. அதனாலே இந்த வருசத்து'டே'  19 ஆம்தேதியே முடிஞ்சிடுச்சு! நிறைய வாலண்டியருங்களும், பழைய ராணுவ வீரருங்களுமா எங்கே பார்த்தாலும்,
குறிப்பா எல்லா ஷாப்பிங் மால்களிலும் நிறைஞ்சு இருப்பாங்க( இருந்தாங்க!)

அரசாங்க விடுமுறையை எல்லோரும் அனுபவிப்பாங்க. கடைகண்ணிங்கெல்லாம் பகல் 12 மணிவரை மூடி இருக்கணும்.
காலையிலே தேவாலயங்களிலும் விசேஷ பூஜை நடக்கும். இதேமாதிரி அண்டைநாடான அஸ்ட்ராலியாவிலேயும் நடக்குது.

கல்லிபோலியிலே இருக்கற வார் மெமோரியலுக்கு, இந்த நாட்டுப் பிரதமர் வருசாவருசம் போய், அங்கே நடக்கற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, அரசாங்க மரியாதையைச் செலுத்திவிட்டு வருவார்!

நாங்க இருக்கற ஊரான கிறைஸ்ட்சர்ச்சிலே ஊருக்கு நடுவிலே ஒரு வார் மெமோரியல் இருந்தாலும், இங்கே ஓடற நதியின் குறுக்காக ஒரு பாலம் கட்டி, அதுக்கு 'ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ்'ன்னு பேரு வச்சிருக்காங்க.
அங்கே ஒரு நுழைவாயில் ஒண்ணு, கற்களால் கட்டி, ஒவ்வொரு கல்லுலேயும் இந்த போரிலே ஈடுபட்ட நாட்டோட பேரையெல்லாம் செதுக்கி இருக்காங்க! வருசாவருசம் இதுக்கு பெயிண்ட் அடிச்சு, இந்த இடத்தை
அழகுபடுத்தி வைப்பாங்க. இதுவும் ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷந்தான்!


சமீபத்து நிலநடுக்கத்தால் சிட்டி மாலுக்கு முன்னால் நிக்கும் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ் (Bridge of remembrance) வளைவுக்கு நல்லவேளையா சேதம் ஒன்னும்  அதிகமில்லை. (முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த நியூஸி ராணுவத்தினர் நினைவுக்காக கட்டியது நவம்பர் 11, 1924 ) வயசு தொன்னூறுன்னாலும், இதை, சிட்டிக்கவுன்ஸில் அப்பப்பப் பழுது பார்த்துச் சுத்தப்படுத்திப் புதுசு போல வச்சுருக்கும். ராணுவ வீரர்கள் ஆற்றின் குறுக்கா அப்போ இருந்த மரப்பாலத்தின் மீது நடந்து போருக்குப் போனாங்களாம். அதான் இந்த இடத்தின் விசேஷம்.




எங்கூர் வார் மெமோரியல் (இடது பக்கம் இருப்பது) இடிபாடுகளில் சிக்கிக்கிடக்கு:(

ரெண்டு வருசத்துக்கு முன்னே வந்த  நிலநடுக்கம்  எங்க வார் மெமோரியலையும் விட்டு வைக்கலை. கிட்டே போகமுடியாத நிலை. கம்பிக்குப்பின் நின்னு பார்க்க வேண்டியதுதான்:(

இங்கிருந்து டூரிஸ்ட்டுங்களைக் கொண்டுபோய், கல்லிப்போலியைச் சுத்திக் காமிச்சு, அங்கே 'அன்ஸாக் வாக்' கொண்டு போய் திருப்பிக் கூட்டிட்டு வர்றதும் இப்ப ஆரம்பிச்சு,நல்ல பிஸினெஸா ஓடிக்கிட்டு இருக்கு!

இப்ப 98 வருசமாச்சு. நூறாவது ஆண்டு விழாவை அட்டகாசமாக் கொண்டாடுறதுக்காக இப்பவே தீவிரமாத் திட்டம் தீட்டறாங்களாம்.


எது எப்படி இருந்தாலும், ராணுவம்ன்னு சொல்றது ஒரு நாட்டுக்கு எவ்வளவு தேவையானதுன்னு உங்களுக்கேத் தெரியும். நியூஸியில் எனக்குரொம்பப்பிடிச்ச விஷயம் என்னன்னா நன்றி மறவாமை. ரொம்பச்சின்ன ஊர்களிலும் கூட ஒரு வார் மெமோரியல்  கட்டாயம் இருக்கும். இத்தனைக்கும் அங்கே  இருந்து போருக்குப் போன ராணுவவீரர் ஒரேஒருத்தரா  இருந்துருப்பார்!

உலக நாடுகளிலே எதுவானாலும் சரி, தாய் நாட்டுக்காக உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தறது அந்தந்த நாட்டுலே இருக்கற ஒவ்வொரு குடிமகன்/மகளுக்கும் கடமை இல்லையா?

ராணுவ வீரர்கள் செய்யற பணி நிஜமாவே மகத்தானதுதான்!!!!


 ஜெய் ஜவான்!

PIN குறிப்பு : வேறொரு பேட்டையில் இன்று எடுத்த சில படங்கள் (கடைசி மூன்றும்) இத்துடன். 








Tuesday, April 23, 2013

மகமாயி.... மஹாமாயா...........


"இப்போ  சமயபுரம் போறோம். தரிசனம் முடிச்சுட்டு வேறெங்கேயும்  நிக்காம நேர  சிங்காரச் சென்னைதான்.  வேறெங்கேயும் உனக்குப் போகவேணாம்தானே? "  யப்பாடா.... என்ன முன்னெச்சரிக்கை.  நான் வாயைத் திறக்குமுன் அடுத்த வரி வருது." நாளைக்கு ராத்திரி ஃப்ளைட் இருக்கு, ஞாபகம் இருக்குல்லே?"

 ம்ம்...ம்ம்.........

அறையைக் காலி செஞ்சுக்கிட்டுக் கிளம்பும்போது மணி  ஒரு ஒன்பது இருக்கும்.  கொள்ளிடம் பாலம் கடந்து போறோம்.  இருக்கும் இத்துனூண்டு தண்ணியில்  துவைச்சுக் காயப்போட்டுக்கிட்டு இருக்காங்க 'ஈரங்கொல்லிகள்'!   வண்ணமயம்தான் போங்க!

அரைமணி நேரப்பயணத்தில் சமயபுரம் வந்தாச்சு.  அலங்கார வளைவுக்குள் நுழைஞ்சு போறோம். கொஞ்சம் தூரத்தில் தெப்பக்குளம்! நல்லா சுத்தமா இருக்கே!!! கோவிலை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருக்கு பாருங்க அதான் சுத்தமா இருக்குன்ற ரகசியம் புரிஞ்சது:-)

கலகலன்னு ரெண்டு பக்கமும் பூஜைப்பொருட்கள் விற்கும்  தெருவுக்குள் போனால்.... (வழக்கம்போல) வண்டி இதுக்குமேல்போகாது. இங்கேயே நிறுத்தணுமுன்னு தடாலடியா  சொல்லும் சிலர். காதுலே விழாதமாதிரி சீனிவாசன்  போய்க்கிட்டே இருக்கார்.   கோவில் வாசலைத் தாண்டி இருக்கும்  இடத்தில் வண்டியை நிறுத்தினார்.  இறங்கும்போதே கூட்டமா வந்து மொய்ச்சுக்கறாங்க வியாபாரிகள். கையில்  நேர்த்திக்கடனுக்குரிய  கண், முகம், கை காலுன்னு உடல் பாகங்கள் நிறைஞ்ச தட்டு.


கோவில்  மண்டபம் நிறைய ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள்.  கடை வாசலுக்குக் கோலம் போட்டு வச்சுருக்காங்க. பெருக்கித்தள்ளின குப்பைகள் மண்டபம் முழுசும் பக்தர் காலடிகளில்  ஒட்டிக்கிட்டு இங்கும் அங்குமாப்போகுது:( ஆரஞ்சும் மஞ்சளுமாத் தாலிக்கயிறு ஒரு கடை முழுசும். விதானத்துலே வரைஞ்சுருக்கும் சித்திரங்களை நின்னு ரசிக்க விடாமல் கடைக்காரர்கள் கூவி அழைக்கிறார்கள். நிக்கவே கூடாது போல:(

நல்ல நீண்ட மண்டபத்தின் பாதியில்  நிக்கறாள் சுமி!  பெயர் சுமித்ராவாம்!  நல்ல அழகிதான்! கடமையே கண்ணாக, காசு வாங்கி ஆசி வழங்கிக்கிட்டு இருக்காள். காவாசிக்கூட்டம்  இவளைச் சுத்திதான்.   மண்டபத்தின் கடைசிக்குப்போறோம்.





 நல்ல கூட்டம், தரிசனத்துக்குக் காத்திருக்கு. ஸ்பெஷல்தரிசன வரிசைக்குள் நுழையறோம். டைம்  ஈஸ் மணி!    கம்பித்தடுப்புகளா நட்டு வச்சுருக்காங்க.  கோவில் அர்த்த மண்டபமுன்னு நினைக்கிறேன். தேங்காய் உடைக்க ஒரு அமைப்பு. கோவில் பூஜாரி ஒருத்தர் நின்னு  அர்ச்சனைத் தட்டுத் தேங்காய்களை உடைச்சுட்டு தட்டில் போடறார்.

அந்த ஏரியா முழுசும் தேங்காய்த் தண்ணீர் விழுந்து பாசி புடிச்சுக்கிடக்கு.  வெறுங்காலை வச்சு அதைக் கடந்து போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன பயம். வழுக்........  சுத்திவர கல்தரை.   ஒரு  தேங்காய்நார் நடை விரிப்பு போட்டு வச்சுருக்கலாம்.  வரிசை வலமும்  இடமுமா  இருக்க நடுவில் நீண்ட இடம் முழுக்க உண்டியல்களே!  சட்னு பார்த்தால் ஏர்லைன்ஸ் கேட்டரிங்  தள்ளுவண்டி மாதிரியே இருக்கு!  அதே பளபள  ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்!   ஒன்னு ரெண்டு இருந்தால் சரி. இதென்ன வரிசையா  இத்தனை?  காணிக்கை போட மறந்துடப் போறாங்களே  மக்கள்ஸ்ன்னு  நினைவூட்டுறாங்க போல!வலப்பக்கமா  சிறப்பும்  இடப்பக்கமா  பொதுவுமா  மெள்ள நகர்ந்து போறோம்.

பக்தர்களுக்கு உதவி வேண்டும் சமயம் டாண்னு வந்து காப்பாற்றும் தேவி  என்பதால் சமயபுரம் மாரியாக  இங்கே இருக்காள்.  முன்பொரு காலத்தில்  மாரியம்மன் 'அண்ணன் 'வீட்டோட இருந்ததாகவும்,  இவளுக்கான தனிப்பட்ட பூஜைகளை அங்கே நிறைவேற்ற முடியாமல் இருந்ததாகவும், அதனால் கோபமாவே எப்போதும் இவள் இருந்ததாகவும், இவளைச் சமாதானப்படுத்த  அப்போ இருந்த ஜீயர் கொடுத்த ஐடியாவின் படி  இவளை  இங்கே தனிக்கோவிலில் வச்சதாகவும் ஒரு கதை உலவிக்கிட்டு இருக்காம்.

நம்மூரில் கதைகளுக்கா பஞ்சம்.  இதோ இன்னொன்னு கேளுங்க.....தில்லிப்படைகளிடம் இருந்து  மாரியம்மனின் உற்சவரைக் காப்பாற்ற  தூக்கிக்கொண்டு போன சமயம் களைப்பு மிகுதியால் ஓரிடத்தில் இறக்கி வச்சுட்டு பக்கத்தில்ஓடும் கால்வாயில்  இறங்கி கைகால்முகம் கழுவிட்டுத் திரும்ப வந்தால் சிலை மாயமாய் மறைஞ்சு போயிருக்கு.  தேடிப்பார்த்தும் கிடைக்கலை.  ரொம்ப காலம் கழிச்சு   ரெண்டு சிறுவர்கள் கண்ணில் பட்டுருக்கு.  சேதி தெரிஞ்ச  ஊர்ப்பெரியவர்கள் வந்து  சேரவும் சிலையை வேறு இடத்துக்குக் கொண்டுபோக உத்தரவாச்சு.  யானை மேலே வச்சுக்  கொண்டு போறாங்க.  ஒரு இடம் கடக்கும்போது யானை நகர மறுக்கவே அங்கேயே அந்தச்சிலையை பிரதிஷ்டை செஞ்சதாகவும் அது ஆதி மாரியம்மன் கோவிலென்றும் சொல்றாங்க.

நதி மூலம் ரிஷி மூலம் மாதிரி  இங்கே மாரி மூலமும் கேக்கப்டாது கேட்டோ!

எது எப்படியோ மாரியம்மன் கோவில் கொண்டு,  மக்களுக்கு அருள் பாலிக்கிறாள். அதுதான் முக்கியம்.  இந்தக்கோவில்  ஆதியில் நம்ம ரெங்கனின் நிர்வாகத்தில்தான் இருந்தது.  அவன்  ஒன்பது கோவில்களைக் கட்டிக் காப்பாத்தி வந்துருக்கான்.  நாம் முந்தி பார்த்த காட்டழகிய சிங்கர் கோவிலும்  நம்ம ரெங்கனுடைய அரசாட்சியில்தான். 1984 ஆம் ஆண்டு முதல்  சமயபுரம் கோவில் தனியாப் பிரிஞ்சு வந்து தனி ராஜாங்கம் செய்ஞ்சுக்கிட்டு இருக்கு.   ஆனாலும் இந்த மாரி, ரெங்கனின்  சகோதரியான மாஹாமாயாதேவி என்பதால் இன்றைக்கும்  தைப்பூசம் தீர்த்தவாரி சமயம்   உடன்பிறந்தாளுக்கு  பட்டும் பூவும் தளிகையும் பொறந்த வீட்டு சீர் என்று   அனுப்பி வைக்கிறான் நம்ம ரெங்கன்.

கிருஷ்ணாவதாரத்தில்   வசுதேவர், குழந்தைக் கண்ணனை கோகுலத்தில் வச்சுட்டு யசோதையின் குழந்தையான  மாயாவைக் கொண்டு வந்து  இதுதான் எட்டாவது குழந்தைன்னு கம்சனிடம்  சொன்ன கதை  அநேகமா எல்லோருக்கும் தெரிஞ்சுதான் இருக்கும் இல்லையா?  தில்லியில் கூட கல்காஜி கோவில் என்று ஒரு  கோவிலுக்குப் போனேன். அது(வும்) மஹாமாயாவின் கோவில்தான். அப்போ அது தெரியாது எனக்கு.  சக்திபீடக் கோவில் என்று நினைச்சேன்.  அதுக்கு வந்த பின்னூட்டங்களால்தான்  தெளிவு கிட்டியது.


வரிசை நகர்வது போலவே தெரியலை.  பயங்கர சூடு வேற! இத்தனைக்கும் காலை பத்து மணிதான் ஆகி இருக்கு.  சூடுன்னதும் ஞாபகம் வருது.  சிவன் மன்மதனை எரிச்சார் பாருங்க அந்த சூடு லோகங்கள்  முழுசும் பரவி தேவர்களும் கூட  சூடு தாங்க முடியாமல் சீதளா தேவியிடம் அபயம் தேடி  ஓடி வர்றாங்க.  எல்லா சூட்டையும்  தானே உள்வாங்கிக்கிட்டாளாம்  அம்மன். அதனால்  அவள் கருவறையில் எப்போதும் ஈரம் தேங்கிக் குளிர்ச்சியா இருக்கும்படியா  அமைச்சுருக்காங்க.  காலடியில் தண்ணீர்  ஸ்பரிசம் நமக்கும் கிடைக்குது.

ஒரு வழியா கருவறைக்குச் சமீபம் போனது வரிசை.  உள்ளே சிவாச்சாரியார்கள்  பூஜை செய்யறாங்க.  அம்மனின் முகம் சாந்தமா இருக்கு.  உக்ர ரூபத்தின் கோரைப்பற்களைப் பிடுங்கி இவளைச் சாந்தப்படுத்திட்டாங்களாம்.  மூத்த பிள்ளையைக் கூட்டி வந்து  கருவறைக்கு ரெண்டு பக்கமும்  வச்சவுடன் கோபம் மறைஞ்சே போயிருக்கு! அமைதியான முகத்துடன், எட்டுக் கைகளுடன் இடது காலை மடிச்சு, வலதுகாலைத் தொங்கப்போட்டு  அரக்கர்களின் தலையில்  வைத்தபடி உக்கார்ந்து இருக்காள்.  முன்னொரு காலம்   நாங்க இங்கே வந்தப்ப அம்மன் காதில்  அழகான நட்சத்திர வடிவக் கம்மல்  பார்த்துருக்கேன். பளிச்ன்னு ஸ்டார் ஜொலிக்கும்! அதைத் தேடிய என் கண்கள் ஏமாந்து போச்சு.  இப்ப வேறென்னமோ நகை போட்டு வச்சுருக்காங்க:( போகட்டும் புது மோஸ்தர் நகை அவளுக்கும்தானே வேணும்!

வலையில் சுட்ட படம்.


மாரியம்மனை கும்பிட்டு விட்டு பக்கவாட்டு கம்பித்தடுப்பு வழியா வெளியே வந்தோம்.  இப்ப அதிக அளவில் கூட்டம் வருது . என் முன்னொரு காலப்பயணத்தில்  நேரா உள்ளே வந்து  அம்மனை வெகு கிட்டக்கப் பார்த்த நினைவு.  கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கும் மேலேன்னுசொல்றாங்க. ஆனால்.....  தில்லிப்படைகள் காலக் கட்டம் பார்த்தால்....  அப்படித் தோணலை.  போகட்டும்  சாமி வயசையே கோவிலுக்குச் சொல்வாங்களா இருக்கும். ஆனா....சாமிக்கு வயசு எவ்ளோன்னு யாரு கணக்குப் போடமுடியும்?

காலையில் அஞ்சு மணியில் இருந்து இரவு  ஒன்பது  மணிவரை கொஞ்சம்கூட அசராமல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் அம்மா.  எனக்கு இது ரொம்பப் பிடிச்சுருக்கு. நம்மையெல்லாம் காப்பதைவிட அவளுக்கு வேறு என்ன வேலை இருக்காம்?   கவர்மெண்ட் ஆஃபீஸ் எம்ப்ளாயியா  என்ன?  டாண்  டாண்ணு  காபி ப்ரேக், லஞ்ச் ப்ரேக்ன்னு  தவறாமல் எடுத்துக்கிட்டு  சாயங்காலம் அஞ்சானதும் கிளம்பிப்போக?  பொதுவா எல்லாக் கோவில்களுமே இப்படி  பகல் பொழுது முழுசும் திறந்திருந்தால்தானே மக்களுக்கு நல்லது!  அர்ச்சகர்களுக்கு  ஓய்வு வேணுமுன்னா ஷிஃப்ட்  ட்யூட்டி போட்டுக்கலாம்தானே?

தேர்த்திருவிழா,தெப்பக்குளத்திருவிழான்னு  விழாக்கள் பல நடந்தாலும் பூச்சொரிதல் விழா ஒன்னு சிறப்பா நடக்குதாம்.  அப்ப அம்மனே மக்களுக்காக விரதம் இருக்காளாம். கேக்கவே ஆசையா இருக்கு.  ஒரு திருவிழா வந்து பார்த்தால் நல்லா இருக்கும். ஆனால்  கூட்டத்தை நினைச்சாலே பகீர்:(

மாரியம்மன் கோவில்களில் வழக்கமா  மக்கள் நேர்ந்துக்கும் பிரார்த்தனைகள் எல்லாம்  இங்கேயும் நடக்குது. குழந்தை வரம் வேண்டும் மக்கள் பிரார்த்தனை நிறைவேற்ற  கரும்புத்தொட்டிலில் குழந்தையைக் கிடத்திக் கோவிலைச் சுற்றி வந்து கும்பிடறாங்க. அக்கம்பக்கம் பதினெட்டுப்பட்டிக்கும் ஆத்தாதான் குலதெய்வம்!

இவ்ளோ புகழ் பெற்ற கோவிலை இன்னும் சுத்தமா வச்சுருக்கலாம்.  ஆனால் எங்கே:(

அசுத்தம்  போதாதுன்னு பிச்சைக்காரர்கள் தொல்லையும்  அதிகமா இருக்கு. அதிலும் சின்னக்குழந்தைகள் கையேந்தி நிற்பதைப்பார்த்தால் ..........ப்ச். என்னவோ போங்க:( ஒருத்தருக்கு கொடுத்தவுடன் ஒரு படையே திரண்டு ஓடி வருது:(

வண்டியைத் திருப்பி சென்னைக்குப்போகும் ஹைவேக்குக் கொண்டுவந்துட்டார்  சீனிவாசன். பரவாயில்லை ஒன்னரை மணி நேரத்தில்  தரிசனம் முடிச்சுட்டோம். ஆனால் கோவிலைச் சுத்திப் பார்க்கலை.  எல்லா இடத்திலும் கம்பித்தடுப்பு, தூண்களைச் சுற்றிக் கும்பல் கும்பலா மக்கள்!

டோல்ரோடு.  அங்கங்கே  காசு  கட்டிட்டுப் பயணம் தொடர்கிறோம்.  எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு இடத்தில் கட்டிட்டுப் போகும் வசதி ஏன் வைக்கலை?  இந்த அழகிலே பாக்கிச் சில்லறை கொடுக்கவே மாட்டேங்கறாங்க:(   முண்டியம்பாக்கம், திண்டிவனம் எல்லாம் கடந்து  ஆர்யாஸ் கார்டன் என்ற  ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு.  பரோட்டாதான். சுமாரா இருந்துச்சு. ஓய்வறையும்  சுமார் ரகம். அதாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கணும்!




இப்போ  பகல் ஒன்னரை மணி ஆச்சு. கிளம்பினோம்.

கொஞ்ச தூரத்தில் ஒல்லியா ஒரு ஹனுமனைப் பார்த்தேன்.    ஒரு சின்னக்குன்றின் மேல் ஒரு கோவில்கண்ணில் பட்டது.  அப்புறம் இன்னும் கொஞ்ச தூரத்தில்  தவம் செய்யும்சிவன். ஏதோ ஆஸ்ரமமாம்.

புது  ஹைவே தரமா இருக்குன்னு  வண்டி பறக்குது. நின்னு விசாரிக்கமுடியாதபடி  ஒரு வேகம்.  மேல்மருவத்தூரைக் கடந்தோம்.  ஊரே கலகலன்னு இருக்கு.  மதுராந்தகம் தாண்டும்போது... 'ராமா.... உன்னைப்பார்க்க இன்னும் வேளை வரலை'னு  முனகினேன்.  கோவில் சாத்தி இருக்கும்  நேரம் இப்போ:( எத்தனை முறை இந்தப்பக்கம் போய் வந்திருப்போம்! ஹூம்....

தாம்பரம்,  தி. நகர் னு அறைக்கு வந்துசேர்ந்தோம்.  பகல் மணி மூணரை!  நல்லவேளை  மாலைநேர ட்ராஃபிக்கில் மாட்டிக்கலை:-)

எங்கே மகளைக் காணோமுன்னு  ஒரு  குரல்!  எனக்கொரு சர்ப்ரைஸ்  கிடைச்சது அங்கே!

தொடரும்................:-)





Sunday, April 21, 2013

ஸ்ரீராமநவமி

எனக்கு ரொம்பவும் பிடிச்ச பண்டிகை இது.

'ஓ ராமா நீ ரொம்ப சிம்பிள் அண்ட் ஸ்வீட்'ன்னு கொண்டாடத் தோணும். கொண்டாடுவேன்.  பிரசாதம் செய்ய மெனெக்கெடவே வேணாம்:-)

ஒரு பானகம், ஒரு  நீர்மோர்,  ஒரு வடபப்பு. வேலை முடிஞ்சது.

அம்மாவீட்டில் வடபப்புவுக்கு ஊறவச்ச பாசிப்பருப்பு. இங்கே நம்ம வீட்டில் அதுலே சின்னமாறுதல். தாளிச்சுக்கொட்டும்போது  ஊறவச்ச பருப்பைப்போட்டு அரைவேக்காடாய் எடுப்பேன்.  ரொம்ப வேக வச்சால் சுண்டலாகிரும். கவனமா இருக்கணும் கேட்டோ:-)  அப்புறம் வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக்கிக் கலந்துருவேன்.  மாங்காயில் ஒரு எழுத்தை மட்டும் நீக்கி தேங்காய் ஆக்கிருவேன். இங்கே மாங்காய் நஹீ:( அம்புட்டுதான்.


சாமிக்குக் கை காமிச்சுட்டு நாம் முழுங்க வேண்டியதுதான்:-)

வெள்ளிக்கிழமை ஆரம்பிச்ச ராமநவமி  இப்போதான் முடிவுற்றது.

வெள்ளிக்கிழமை நம்ம வீட்டில் ஆச்சா.... அன்னிக்கு மாலை  ஶ்ரீ சனாதன் தரம் (Shree Sanatan Dharam Christchurch) நடத்தும் ஸ்ரீராமநவமி பூஜைக்குப் போயிருந்தோம். நிலநடுக்கம் வந்தபிறகு இங்கே பப்ளிக் ஃபங்ஷன் நடத்த ஹால்கள் கிடைப்பதில்லை. கூட்டம்(?!) கூடும் சமயம் எதாவது நடந்துபோச்சுன்னால்  அந்த  உயிர்களுக்கு யார் கேரண்டீ?  அரசாங்கத்தைப்போட்டுக் காய்ச்சு காய்ச்சு காய்ச்சிருவோம்லெ!

அதனால் ஒரு வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு. வீடு என்பதால் எல்லோருக்கும் இருக்கைகள் தர முடியாதேன்னு  ஹாலில் வெறும் பாய்கள் போட்டு வச்சுருந்தாங்க. நமக்கோ....மூட்டுவலி.  முழங்கால் தகராறு.  போயிட்டோமேன்னு பல்லைக் கடிச்சுப் பொறுத்துக்கிட்டேன். பண்டிட் ஒரு கதை சொன்னார்.  இதுவரை எனக்குத் தெரியாத புதுக்கதை. அதை உங்களுக்கு நான் சொல்லணுமுன்னு கோபாலுக்கு ஒரே துடிப்பு:-)


ஒரு சமயம் நாரதர் கடும்தவம் செய்யறார். காமத்தையும்  குரோதத்தையும் வெல்லணும் என்பதற்காக இந்த தவம்.  மஹாவிஷ்ணு தோன்றி உன்னிஷ்டம் போல நடக்குமுன்னு சொல்லிடறார். தவம் முடிஞ்சது. இவ்வளவு நாள்  ஒரே இடத்தில் இருந்து தவம் செஞ்சு கைகால் எல்லாம்  ஒரே வலி. ஊர் சுத்தும் கால்களுக்குப் போரடிச்சுப் போச்சு.  அதுவுமில்லாமல்  இத்தனை நாள், எல்லோரும்  நான் எங்கேன்னு  தவிச்சுக்கிட்டு இருந்துருப்பாங்கன்னு  எண்ணம் வேற.

நாராயணான்னு  ஸ்ரீவைகுண்டம் போகிறார். 'வாரும் நாரதரே. எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோமே' ன்னார் விஷ்ணு.

ஆஹா!  சரியான சந்தர்ப்பம் னு நினைச்சுத்  தொண்டையை லேசாக் கனைச்சுக்கிட்டு ' நான் தவம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். கடுமையான தவம் ' என்று சொன்னார்.

"அடடே... அப்படியா? எதுக்காகத் தவம்?  எதை வேண்டி?"

"அதொன்னுமில்லை. நான் காமத்தை வெல்லணுமுன்னு  தவம்செஞ்சேன். அது நிறைவேறிடுச்சு. இப்போ நானும் சிவனும் ஒன்னுதான். அவரைப்போலவே நானும் காமனைத் தூக்கி எறிஞ்சுட்டேன். அவராவது கோபத்தில் மன்மதனை எரிச்சுட்டார். நான்  கோபத்தையும் வென்றுவிட்டேன்.  உண்மையைச் சொன்னால் நான்  இப்போ சிவனை விட ஒரு படி மேல்!"

"ஆஹா.... நல்லதாப் போச்சு.  சரி இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?"


"ஒன்னுமில்லை. ரொம்பநாளா ஒரே இடத்தில் குந்தியிருந்து போரடிச்சுப் போச்சு. ஹாயா உலகை ஒரு சுத்து சுத்திட்டு வரணும். போயிட்டு வரேன்!"

ஆகாயமார்க்கமாப்போகும்போது கீழே ஒரு இடத்தில் கண்ணைப்பறிக்கும் விளக்குகளின் ஒளியோடு அலங்காரமா ஒரு நகரம் கண்ணில் பட்டது. என்னன்னு பார்க்க  கீழே இறங்கி நகரத்தில் கால் வச்சார்.  நாரதரரைப்பார்த்து மக்கள் வணங்குறாங்க.  ராஜகுமாரிக்கு சுயம்வரம் நடக்கப்போகுதாம். அதான்  நாடே கோலாகலமா இருக்கு!

அதுக்குள்ளே நாரதர் வந்த விவரம் அரண்மனைக்கு  எட்டிருச்சு. அரசரே எதிர் கொண்டு வர்றார். நாரதமகரிஷியை வணங்கி வரவேற்று அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டுப்போய் நல்லா உபசரிச்சார்.  விருந்து போஜனம் முடிஞ்சபிறகு,  ' நாளைக்கு   என் மகளுக்கு சுயம்வரம். அவளுடைய எதிர்காலமெப்படி இருக்குமோன்னு  மனக்கவலையா இருக்கு. என்ன இருந்தாலும்  பெற்ற தகப்பன் இல்லையா?  தயவு செஞ்சு அவளுடைய கைரேகை பார்த்து அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்குமுன்னு தேவரீர் சொல்லணும்' என்று வினயமா வேண்டினார்.

'அதுக்கென்ன? பேஷாய்ச் சொல்லிடலாம். மகளை வரச்சொல்' என்றார் நாரதர்.  இளவரசி வந்தாள். பெயர் விஸ்வமோஹினி. அழகுன்னா அப்படி ஒரு அழகு. இதுவரை நாரதர்கூட இப்படிப்பட்ட அழகியை  மூணுலோகத்திலும் பார்த்தது  இல்லை. கண் விழியே தெறித்து விழுந்துருமோன்னு இருக்கு அவருக்கு!  இப்பேர்பட்ட அழகியை எவனோ ராஜகுமாரன் நாளைக்குக்கல்யாணம் செஞ்சுக்கிட்டுப்போகப்போறானேன்னு மனம் பதைக்குது.  இவளை நானே ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?  காமத்தை வெல்லணுமுன்னு  தவம் செஞ்சு எவ்ளோ நாளை வீணாக்கிட்டேன்:(  தேவையா அதெல்லாம்?  இவளை வேற யாருக்கும் விட்டுக்கொடுக்கவே கூடாது. எப்படியாவது இவளை  நானே திருமணம் செஞ்சு தீரணும். மனக்கண்ணில் அவளோடு குடும்பம் நடத்தும் அழகை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறார். தாங்கமுடியலை!


'அரசே, கவலையே படாதீர். உம் மகள் அறிவிலும் அழகிலும் சிறந்த ஒருவரை சுருக்கமாச் சொன்னால் இதைவிட மேலான வரன் யாருமே இல்லை என்ற அளவுக்கு என்னைப்போல தவவலிமை மிகுந்தவரைத்தான் திருமணம் செய்யப்போகிறாள். அவளது எதிர்காலம் அமோகமா இருக்குமு'ன்னார்.


வேகவேகமா தனி அறைக்குப்போய் மஹாவிஷ்ணுவைக்குறிச்சு ஜெபம் செய்யறார். ' ஓம் விஷ்ணுவே.... நேரம், கடத்தாம சட்னு கண் முன் வாரும்'னு கெஞ்சுனதும் 'டாண்' னு விஷ்ணு ஆஜர்.

"என்னப்பா இவ்ளோ அவசரம்? "

"ஐயோ.... என்னன்னு சொல்வேன். நாளைக்கு இங்கே சுயம்வரம் நடக்கப்போகுது. இந்தப்பேரழகியை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.  அவளுடைய அழகுக்குப் பொருத்தமான அழகுள்ளவனா என்னை மாற்றித்தாரும்."

"மன்மதன் ரூபம் வேணுமா? அவன் அழகில் சிறந்தவன்."


"வேணாம் வேணாம்.அவனை விட அழகில் சிறந்த உருவம் வேணும் . ராஜகுமாரியும் அழகில் சிறந்தவனைத்தான் தேர்ந்தெடுப்பாள்.  அவளுடைய அழகுக்கு ஈடு கொடுக்க உம்மால்தான் முடியும். ஆகவே உம் உருவத்தையே எனக்குத் தரணும். "

'ஓ. நோ ஒர்ரீஸ். இந்தா'ன்னு உருவத்தை மாற்றினார். நாரதர் கண்ணாடியில் பார்க்கிறார் சாக்ஷாத் மஹாவிஷ்ணு!

'தேங்க்ஸ். கல்யாணம் முடிஞ்சு புது மனைவியோடு வைகுண்டத்துக்கு வர்றேன். நீர் உடனே இடத்தைக் காலி செய்யும். ரெண்டு விஷ்ணுவைப் பார்த்தால்  குழப்பம் ஏற்படுமு'ன்னு  மஹாவிஷ்ணுவை விரட்டினார்.


அடக்கமாட்டாத சிரிப்போடு வைகுண்டம் போறார் மஹாவிஷ்ணு.

 மறுநாள் பொழுது புலர்ந்தது. சுயம்வர மண்டபம் முழுசும் போட்டிக்கு வந்த ராஜகுமாரர்களாலும், வேடிக்கை பார்க்க வந்த ஊர் மக்களாலும் நிறைஞ்சு வழியுது. ராஜகுமாரர்கள் வரிசையில் நாரதர் போய் நிக்கறார். மனம் முழுசும் பூரிப்பு!  அவரைப் பார்க்கும் மற்றவர்கள் எல்லாம் சுயம்வரம் நடக்கும் இடத்தில் நாரதருக்கு என்ன வேலை? எதுக்காக இங்கே நிக்கறார்ன்னு நினைச்சுக் குழம்பறாங்க. எல்லோர் கண்ணுக்கும் அவர் நாரதராகவேதான் தெரியறார்!  அரசரும் வந்தார்.  ஓஹோ...  மகள் யாரை வரிக்கபோறாள் என்று பார்க்க நாரதரும் ஆவலா நிக்கறார்ன்னு  நினைக்கிறார்.

மூவுலக அழகும் ஒன்னாய்த் திரண்டு நிற்கும்  அழகுச்சிலை போல விஸ்வமோஹினி கையில் மலர் மாலையுடன் அடிமேல் அடி எடுத்து வச்சு ஒவ்வொரு ராஜகுமாரனாய்ப் பார்த்துக்கிட்டே வர்றாள்.  நாரதருக்கு  நெஞ்சு படபடன்னு துடிக்குது. இதோ அடுத்து நம் முன் நிக்கப்போறாள் என்னும் போது  அவரை ஏறிட்டுப் பார்த்த  ராஜகுமாரி, சட்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு  வேகமா அந்த இடத்தை விட்டு விலகி அடுத்த ராஜகுமாரனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.  'எதுக்கு இந்த சபையில் ஒரு கருங்குரங்கு வந்து நிக்குது'ன்னு அவளுக்குப் பயமும் அருவருப்புமா இருக்கு!

நாரதருக்கு அவள் நம்மை சரியாப் பார்க்கலையோன்னு தோணுது. வரிசையை விட்டு விலகி அவள் போகும் பாதையில்  நிற்கும் ராஜகுமாரர்களின் வரிசையில்  நைஸா நுழைஞ்சு நிக்கறார்.  இந்த முறையும்  அவரை ஓரக்கண்ணால்  பார்த்த விஸ்வமோஹினி, குரங்கு எப்படித் தாவி இங்கே வந்து நிக்குதுன்னு யோசித்தவாறே   அடுத்த வரிசை  மணமகன்களை நோக்கி நடக்கிறாள்.

அவள் கண்ணுலே நாம்  படவில்லையோன்னு நினைச்சு நாரதரும் வெவ்வேற வரிசையில் மாறி மாறிப்போய் நிக்கறார். சபையிலுள்ள சனம் முழுசும் எதுக்காக நாரதர் இப்படித் தாவித்தாவி  ராஜகுமாரன்களுக்கிடையில் போய் போய் நிக்கறாருன்னு திகைப்பு.

ராஜகுமாரியைத் தவிர மற்றவர்கள் எல்லோர் கண்ணுக்கும் நாரதராகவும் ராஜகுமாரிக்கு மட்டும் கருங்குரங்குமாக் காட்சி கொடுக்கும் நாரதருக்கு அவர் கண்ணுக்கு மட்டும் தன் உருவம் மஹாவிஷ்ணுவாகவே ஜொலிக்குது.

சுயம்வரத்தில் ஒவ்வொரு முகமாப்பார்த்துக்கிட்டே போன விஸ்வமோஹினி, ஒரு வரிசையில் மஹாவிஷ்ணுவே நிற்பதைப் பார்த்து அவர் கழுத்தில் மாலையைப் போட்டுட்டாள்.  ஏதோ யோசனையில் இருந்த நாரதர், மக்களின் ஆரவாரம் கேட்டு தன் நினைவுக்கு வந்து என்ன ஆச்சுன்னு பார்த்தால்  மஹாவிஷ்ணு மாலையும் கழுத்துமாய் விஸ்வமோஹினி பக்கத்தில் நிக்கறார்.

அவ்ளோதான்...வந்தது பாருங்க ஒரு ஆவேசம் நாரதருக்கு.....  விடுவிடுன்னு மஹாவிஷ்ணுவுக்கு எதிரில் போய் நின்னு கோபம் பொங்கும் விழிகளால் முறைச்சுப் பார்த்துத் தகாத சொற்களால் ஏசறார்.

 "அடப்பாவி.....  அழகிய மங்கையரை அபகரிப்பதே உன் வேலையாப் போச்சா? அன்னிக்கு அப்படித்தான் திருப்பாற்கடலைக் கடைஞ்சப்ப தோன்றிய மஹாலக்ஷ்மியை நீயே எடுத்துக்கிட்டு, அதுலே வந்த ஆலகால விஷத்தை அந்த பேமாலம் சிவனுக்குக் கொடுத்தாய்.  இப்ப என்னன்னா நான் கல்யாணம்  கட்ட நினைச்சுருந்த  பெண்ணை உனக்கு மாலை போட வச்சாய். அதான் உனக்கு ஸ்ரீதேவி,, பூதேவி, நீளாதேவி, ஆண்டாள்னு ஏகப்பட்ட மனைவிகள் இருக்க  நான் பார்த்து வச்ச பொண்ணையும் நீயே அடையணுமுன்னு  எவ்ளோ பேராசை பார் உனக்கு:( எனக்கு வர்ற ஆங்காரத்துக்கு  உன்னைச் சும்மா விடப்போறதில்லை. வயிறு எரிஞ்சு கொடுக்கறேன் சாபம். நீ உன் மனைவியைப் பிரிஞ்சு லோலோன்னு அலையப்போறே பார்!"

மஹாவிஷ்ணு சிரிச்ச முகத்துடன், 'அது சரி நாரதரே,  நீர்தான் காமத்தை வென்று சிவனைப்போலவே  இல்லையில்லை அவரைவிட மேலானவரா ஆகிட்டீரே இப்ப என்ன கல்யாண ஆசை?'ன்னார். அதுவுமில்லாம இப்போ கோபம் வந்து குரோதமாய் என் மேல் சாபம் எல்லாம் விட்டுட்டீரே! காமம் குரோதம் எல்லாம் உம்மிடம் அப்படியே  இருக்கேன்னார்.

நாரதருக்கு  மானக்கேடாப் போச்சு. கண்ணை மூடி நின்னார். அப்புறம் மெதுவாக் கண்ணைத் திறந்து பார்க்க அவர் ஒரு பொட்டல் காட்டுலே இருக்கார்.  அழகான நகரம், அரசர், ஊர் மக்கள், அம்பத்தாறு தேசத்து  ராஜகுமாரர்கள் ,விஸ்வமோஹினி, மஹாவிஷ்ணு, இப்படி எதுவுமே அங்கே இல்லை.  வேகவேகமா வைகுண்டம் போறார்.

சிரிச்சுக்கொண்டே வரவேற்ற மஹாவிஷ்ணுவைப் பார்த்து  என்ன ஆச்சுன்னு கேட்க, அவர் சொல்றார் எல்லாமே மாயை. நான் உண்டாக்கிய மாயையில்தான் அரசர், ஊர்மக்கள்,ராஜகுமாரர்கள், விஸ்வமோஹினி எல்லாம்  தோன்றினார்கள்.  நீர் உண்மையாகவே காமத்தையும் குரோதத்தையும் வென்றீரான்னு சோதனை செஞ்சு பார்த்தேன்.  நீர்  ஃபெயில் ஆயிட்டீர் என்று சொல்லிச் சிரிச்சார்.

நாரதருக்கு  மானம் மரியாதை எல்லாம் போச்!

ஆனால் அவருடைய சாபம் மட்டும் பலிச்சுருது. பிரம்மச்சாரியின் சாபம் பாருங்க!  அதான் ராமாவதாரத்துலே ராமன் சீதையைப் பிரிஞ்சு காடுமேடெல்லாம் லோலோன்னு அலைய வேண்டியதாப் போச்சு!


ஃபிஜி பண்டிட்  ரூப் அவர்கள் சொன்ன கதையில் கொஞ்சூண்டு மசாலா லேசாத் தூவி இருக்கேன். கதை துளசிதாஸ் ராமாயணத்துலே வருதாம்.  ஃபிஜி மக்கள்  வால்மீகி வாசிக்கறதில்லை!

மறுநாள் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு ஹவன்(ஹோமம்) நடத்தி ராமர் பிறந்த நாளைக் கொண்டாடுவதா ஏற்பாடு. கீழே உக்கார பயந்துக்கிட்டு  நான்  போகலை. அதுக்கு பதிலா அன்றைக்கு  மாலை  நாம் வழக்கமாப்போகும் இன்னொரு ராமாயண் மண்டலியின் ராம்நௌமி பூஜைக்குப் போனோம். இது ஒரு பள்ளிக்கூட ஹாலில் நடந்துச்சு.  எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி இந்த இடத்தை ஏற்பாடு செஞ்சுருக்கார் நண்பர். அதுவும்  பகலில் வேறொரு புக்கிங் இருந்ததால்  சாயந்திரத்துக்குத்தான் கிடைச்சது.  ராம்நௌமியை  ராத்திரியில் கொண்டாடுறோமேன்னு  சின்னதா மனக்கலக்கம்.  பரவாயில்லை இந்திய நேரத்துக்கு  இது நண்பகல்தான்னு ஆறுதல் சொல்லிவச்சேன்.


அங்கே அசல் இந்தியாக்காரர்கள்  நாம்தான். அதுவும் மந்த்ராஜி (மத்ராஸி)  என்பதால் பஜனையில் நமக்காக ஒரு தமிழ்ப் பாட்டு பாடி நம்மை மகிழ்வித்தார்கள். ரொம்ப நேரத்துக்கு அது என்ன பாட்டுன்னே புரியலை.கோபால்தான் கண்டுபிடிச்சார். கற்பூரநாயகியே கனகவல்லி....!!!
இன்னொரு பாட்டு வேணுமுன்னு கேட்டேன். ஆனந்தம் ஆனந்தம் கோபாலா ஆனந்தம் என்று ஒன்னு!!!! ஃபிஜியில் இருந்து தங்கை வீட்டுக்கு விஸிட் வந்த விஜயலக்ஷ்மி மேடம் பாடுனது!

தசரதரின் புத்ரகாமேஷ்டி அத்தியாயம் வாசிச்சு ராமர்பிறந்த நாளைக் கொண்டாடினோம். இன்னிக்கு மட்டும் மொத்தம் அஞ்சு இடத்தில் ராம்நௌமி விழா. எல்லாம் ஃபிஜி இந்தியர்கள்  கொண்டாட்டமே! எந்த இந்தியரானால் என்ன நம்ம தேசிய குணத்தையும் ஒருமைப்பாட்டையும் விடமுடியுங்களா? நவகிரகங்கள் போல் ஒன்னா சேர்ந்து இருப்பதுதானே அழகு!


இன்றைக்கு ஞாயிறு மாலை நம்ம ஸ்வாமி நாராயண் கோவிலில் ஸ்ரீராம்நவமி  விழா இனிதே நடந்தது. பூஜை முடிச்சு விருந்து சாப்பிட்டுவிட்டு வந்து உங்க  எல்லோரும்  நடந்தவைகளைச் சொல்லிக்கிட்டு இருக்கேன் இப்போ:-)


குழந்தை ராமனை எட்டிப்பார்த்தேன்.சீதையுடன் இருந்தார்:-)


ராமகதை நடக்குமிடங்களில் எல்லாம் ஒரு முக்கியஸ்தர் ஆஜராவார் இல்லையா. அவருடைய  பிரதிநிதியா நானும் மூணு இடங்களுக்குப்போய் கதை கேட்டு வந்தேன்!!!!

ஜெய் ஸ்ரீ ராம்! 








Friday, April 19, 2013

கில்லாடிப் புள்ளையார்!


நம்ம ரெங்கனிடம் இன்னுமொரு விசேஷம் என்னன்னா....மற்ற கோவில்கள் பகல் 12 முதல் மாலை 4 வரை மூடி வச்சுடறாங்க பாருங்க அதைப்போலில்லாமல் கோவில், காலை  6 மணி முதல் இரவு  9 வரை திறந்தே இருக்கு. முக்கிய சந்நிதிகளான  தாயார் சந்நிதியும் ரெங்கநாதர் சந்நிதியும் கூட   பகல் தரிசனத்துக்குக் குறிப்பிட்ட நேரங்களில் திறந்துதான் இருக்கு. அதான் உள்ளூர் மக்கள்ஸ் பகல் ரெண்டு மணிக்குப்போய்  ஹாயா ஸேவிச்சுக்கிட்டு வந்துடறாங்க.  நம்மைப்போல வெளியூர் மக்களுக்கு இந்த ரகசியம் தெரியாததால்  பகல் 12 மணிக்கு கோவில் மூடி இருக்குமுன்னு நினைச்சுக்கறோம்.



கோவிலில் கிடைச்ச தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன்.   ஒருமுறை பார்த்து வச்சுக்குங்க. உதவலாம்.
ஒரு நாளைக்கு மூணுமுறை பூஜை நேரம் தவிர  மற்ற நேரங்களில் பெரியவர் ஃப்ரீதான்.

உற்சவரோ வருசத்துக்கு 322 நாள் பயங்கர பிஸி.  அலங்கரிச்சுக்கிட்டு ஊர்வலம் வந்துக்கிட்டும் மக்களுக்குக் காட்சி கொடுத்துக்கிட்டும் இருக்கார்.
பதிவில் அங்கங்கே இருக்கும் படங்களைப் பாருங்களேன். புரிஞ்சுரும்:-)



  பெருமாள் சந்நிதி:


Sri Ranganathar Sannathi
 Viswarooba Seva            -      6.00  to  7.30
  Pooja Time[no Seva]   -    7.30  to  8.45
  Seva                             -    8.45  to 13.00
  Pooja Time[No Seva]  -   13.00 to 14.00
  Seva                             -   14.00 to 18.00
  Pooja Time[No Seva]  -   18.00 to 18.45
  Seva                             -   18.45 to 20.00
  Free Seva                     -   20.00 to 21.00
  No Seva  after 21.00
  Quick Seva Rs. 250/= per head.
Viswarooba Seva Rs. 50/= per head.
General Entrance - Free in all Seva time.


ரங்கநாயகி தாயார் சந்நிதி
Sri Ranganachiar Sannathi

Viswaroobam Paid Seva  -  6.30 - 7.15
Viswaroobam Free Seva  -  7.15 - 8.00
Pooja Time [No Seva]     -   8.00 - 8.45
Paid Seva                         -   8.45 - 12.00
Free Seva                         - 12.00 - 13.00
Pooja Time[No Seva]      - 13.00 - 15.00
Free Seva                         - 15.00 - 16.00
Paid Seva                         - 16.00 - 18.00
Pooja Time[No Seva]      - 18.00 - 18.45
Paid Seva                        -  18.45 - 20.00
Free Seva                        -  20.00 - 21.00
[No Seva after 21.00. Timings are subject to change during Festival days.]

திருச்சிவரை வந்துட்டு உச்சிப்பிள்ளையாரைப் பார்க்காமல் போக மனசு வரலை. ஆனால்  இப்போ இருட்டிப் போச்சு. மணிவேற ஏழாகப்போகுது. மேலும் முழங்கால் வலி. பேசாம தாயுமானவரை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு  'நாங்களே' முடிவு பண்ணி மலைக்கோட்டைக்குப் போகச் சொன்னோம் நம்ம சீனிவாசனை.

ரொம்பவே குறுகலான ஒரு தெருவுக்குள் காரைக் கொண்டு போறார். எதிரில் வண்டி வந்தால் அம்பேல்.  பக்கத்துலே சின்னக்கடைத் தெரு இருக்கு. அதன் வழியா வந்துருக்கலாம். ரெண்டு பக்கமும் வீடுகள். இடையிடையே  தேங்காய்பழம் விற்கும் கடைகள்.இங்கேயே வண்டியை நிறுத்துங்க. இனி மேலே போக வழி இல்லை. இப்படி ஓரமா(!!)  நிறுத்திட்டு இதை வாங்கிக்கிட்டு போங்கன்னு  பூஜைப்பொருட்கள் தட்டை நீட்டுறாங்க. எப்படி நிறுத்தி எப்படி இறங்கறது? கார்க் கதவைத் திறக்கவும் இடம் இல்லையே:(  கண் முன் கொஞ்ச தூரத்தில் கார்களின் பின்னால் இருக்கும் சிகப்பு விளக்கு வெளிச்சம்தெரியுது. அப்பவண்டி இன்னும் போகலாம், இல்லையா?

கொஞ்சதூரம் மெள்ள வண்டியைச் செலுத்திக்கிட்டே போனதும்   வலப்பக்கம்  கடைவீதியின் கலகல!  திரும்பாமல் இன்னும் கொஞ்சதூரம் மேலே போனதும் பாதை கொஞ்சம் அகலமா ஆச்சு. வண்டி நிறுத்தவும் இடம் கிடைச்சது. இடது பக்கம் கோவில் வாசல் போல ஒன்னு.  சனம் போறதும் வாறதுமா இருக்கு. நாங்களும் இறங்கிப்போனோம்.அருள்மிகு  மாணிக்க விநாயகர் கோவில்

கோவில்களுக்கே உரித்தான  காவியும் வெள்ளையும் பட்டைகளாப் போட்ட  படி வரிசைகள்.  ஆனால் கீழே போகுது. விடுவிடுன்னு இறங்கிப்போறோம்.  பேஸ்மெண்ட் போயிட்டோம்.  தனிக்கோவிலாட்டம்  ஒரு சின்ன சந்நிதி. செவ்வகமா மூணு பக்கமும் கம்பித்தடுப்பு.  எட்டிப்பார்த்தால் புள்ளையார்!  நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டு இடப்பக்கம் திரும்பினால்  ஒரு பெரிய ஹால். பாட்டுக் கச்சேரி நடக்குது !  அருமையான கணீர் என்ற குரல்!  ' கணபதியே வருவாய்.....'

பார்க்க ஸாலிடா இருக்கார் பாடகர். உள்ளூர்க்காரர்.  இளம் கலைஞர்.  பக்க வாத்தியங்களுடன் தூள் கிளப்பறார். வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவரிடம் பெயர் விசாரிச்சேன். கஷ்யப் மஹேஷாம்.  ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிடம் அவார்ட் வாங்கியவராம்.

விசேஷம் என்னன்னு  கேட்டேன்.  விநாயகச் சதுர்த்தி விழா.பத்து நாள்கோலாகலமா நடக்குமாம்.  தினம் பாட்டு, ஆன்மிக உபந்நியாசம், பேச்சுன்னு  விதவிதமான நிகழ்ச்சிகள்.  கூட்டம் சுமாரா இருக்கு சபையில்.  பாட்டு கேக்கலாமுன்னு உக்காரப் போனவளை, சாமி பார்க்க வரலையான்னார் கோபால்.

அவர் கையில் ரெண்டு சீட்டுகள். அர்ச்சனைக்கான்னு கேட்டதுக்கு  விசேஷ தரிசனம் என்றார்.  ரொம்ப நேரம் வரிசையில் நிக்காமச் சட்புட்ன்னு சாமியைப் பார்த்துட்டுப்போகலாம். அம்பது ரூபாய்.  அதை எடுத்துக்கிட்டு எங்கே எந்தப்பக்கம் போகணுமுன்னு பார்த்தால்....  விநாயகர்  சந்நிதிக்கருகில்  இருந்தவர்  கையில் உள்ள சீட்டைப் பார்த்துட்டுக் கம்பித்தடுப்பைத் திறந்து வழிவிட்டார் . இதில் நுழைஞ்சு தான்  மலையேறும் படிக்கட்டுகளுக்குப் போகணும் போலன்னு நுழைஞ்சவளை  புள்ளையார் சந்நிதிக்குப்பக்கம் நிக்கச்சொன்னார். அடுத்த பக்கம் இதே போல கோபால். துவாரபாலகனும் பாலகியுமா நிக்கறோம். புள்ளையாருக்கு அபிஷேகம், தீபாராதனை எல்லாம் ஜாம் ஜாம்ன்னு நடக்குது.  நம்மைச் சுத்தி இருக்கும் கம்பித்தடுப்புக்கு வெளியில் சனம் நின்னு சாமி கும்பிடுது.


தீபாராதனையை முதலில் நமக்குக்காமிச்சு விபூதி பிரசாதம் வழங்கியபின் மற்ற சனங்களுக்குக் கொண்டு போறார் அர்ச்சகர்.  அப்பத்தான்புரியுது  இந்த விசேஷ தரிசனச் சீட்டு இங்கே இந்தப் புள்ளையாருக்குன்னு!!!!  எதுக்கு  ஸ்பெஷல் தரிசனச் சீட்டு வாங்குனீங்கன்னு  கேட்டால்   தாயுமானவரைத் தரிசிக்கன்னு நினைச்சேன் என்று முழிக்கிறார் கோபால்:-))))

புள்ளையார்  பலே கில்லாடிதான். கோபாலை எப்படி ஏமாத்தணுமுன்னு  தெரிஞ்சுருக்கு:-) முந்தி ஒருக்கில் ஸ்வாமிமலை  ஸ்வாமிநாதனைத் தரிசிக்க படிகளேறிப்போனதும்  முதல்லே கண்ணில் பட்டவர் புள்ளையார்தான்.  அங்கிருந்த குருக்களும் வாங்கோன்னு கூப்பிட்டு  தீபாராதனை காமிச்சுட்டுத் தட்டை நீட்டறார். கண்ணில் ஒத்திக்கிட்டு தட்சணை போட கோபால் சட்டைப்பைக்குள் கையை விட்டு ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் வச்சார். அப்பதான் தெரியுது அது அம்பதுன்னு!  புள்ளையாரைப் பார்த்தால்  சிரிச்சமுகமாத் தெரிஞ்சது.  என்ன தாராளப்பிரபுவா இருக்கீங்கன்னு அப்புறம் கேட்டால்..... பைக்குள் பத்து வச்ச  நினைவுன்றார்.

மாணிக்கவிநாயகரின் ஒரிஜினல் பெயர் சித்தி விநாயகர்.  கேட்ட வரங்கள் அனைத்தையும் கொடுக்கும் பெரிய மனசு!  ஒரு காலத்தில் மாணிக்கம் பிள்ளை என்ற ஒரு பக்தர்  இவருக்குண்டான  அனைத்து செலவுகளுக்கும் ஸ்பான்சார் செஞ்சுட்டதால் இவர் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக்கிட்டார். உண்மையாவே பெரியமனசுதானே!!!



கோவில் கடைகள் ஜேஜேன்னு இருக்கு. பிள்ளையார்  பொம்மைகள் கொட்டிக்கிடக்கு. நம்ம கலெக்‌ஷனுக்கு  புதுவகையில் இருக்கும் ஒன்னு தேடிக்கிட்டே இருந்தேன்.  டக்ன்னு மனம் கவரும் விதமா ஒன்னும் கண்ணுலே ஆப்டலை.  புதுமையா இருக்கணும்,கூடவே சின்ன அளவாகவும் இருக்கணும் என்ற கண்டிஷன் வேற இருக்கே:(


மலைக்கோட்டையைச் சுத்தி இருக்கும் கிரிவலப்பாதையில்  மட்டும் பதினோரு பிள்ளையார்கள் இருக்காங்க. ஏழைப்பிள்ளையார்னு கூட ஒருத்தர் இருக்கார். ஆனால்...நம்ம மாணிக்க விநாயகர்  பணக்காரர். இவர் கோவில் விமானத்துக்குத் தங்கத்தகடு போர்த்தி இருக்காங்க.  கோவிலில் அன்னதானம் நடக்குது.சிதர் தேங்காய் உடைக்கத் தனி இடம்.  விழாக்கள் நடத்தத் தனி ஹால் இப்படி   ஜமாய்க்கிறார்.



என்ன ஒன்னு....காலணிகள் பாதுகாக்க  இருக்கும் இடம் பிள்ளையார் சந்நிதி கடந்து கடைகள் ஆரம்பிக்கும் இடத்தில் இருப்பது.... கஷ்டம்:(  படிக்கட்டுகளில் இறங்கி செருப்புக்காலோடு  சந்நிதித் தடுப்பைக் கடந்து போகணும் அங்கே போக.  இந்தப்பக்கம் படிகள் இருக்குமிடத்தில் ஏதாவது  அரேஞ்ச் செஞ்சுருக்கக்கூடாதோ?

ஒரு வேளை கடைகள் இருக்கும் பகுதிக்கு அப்பால் போனால் கோவில் வாசல்  இன்னொன்னு வருதோ? அப்படித்தான் இருக்கும் போல!  அந்தப்பக்கம் நாம் போகலையே:(   படத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கு. எதா இருந்தாலும் அடுத்த பயணத்தில் கொஞ்சம்  எக்ஸ்ஃப்லோர்  பண்ணிக்கணும்.

மேலே தாயுமானவரைப் பார்க்கப் போகலாமான்னு  கேட்டதுக்கு,  'வேணாம்மா. இப்பவே நேரமாகிருச்சு.  நாளைக்கு வேற நீண்ட பயணம் இருக்கு.  அறைக்குப்போய் ரெஸ்ட் எடுக்கலாம்.
இன்னொருக்கா  பார்க்கலாம் ' என்றார்  என் தாயுமானவர்.


தொடரும்.............:-)


இன்று ஸ்ரீ ராமநவமி விழாவைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும்  விழாக்கால வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.