Sunday, April 21, 2013

ஸ்ரீராமநவமி

எனக்கு ரொம்பவும் பிடிச்ச பண்டிகை இது.

'ஓ ராமா நீ ரொம்ப சிம்பிள் அண்ட் ஸ்வீட்'ன்னு கொண்டாடத் தோணும். கொண்டாடுவேன்.  பிரசாதம் செய்ய மெனெக்கெடவே வேணாம்:-)

ஒரு பானகம், ஒரு  நீர்மோர்,  ஒரு வடபப்பு. வேலை முடிஞ்சது.

அம்மாவீட்டில் வடபப்புவுக்கு ஊறவச்ச பாசிப்பருப்பு. இங்கே நம்ம வீட்டில் அதுலே சின்னமாறுதல். தாளிச்சுக்கொட்டும்போது  ஊறவச்ச பருப்பைப்போட்டு அரைவேக்காடாய் எடுப்பேன்.  ரொம்ப வேக வச்சால் சுண்டலாகிரும். கவனமா இருக்கணும் கேட்டோ:-)  அப்புறம் வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக்கிக் கலந்துருவேன்.  மாங்காயில் ஒரு எழுத்தை மட்டும் நீக்கி தேங்காய் ஆக்கிருவேன். இங்கே மாங்காய் நஹீ:( அம்புட்டுதான்.


சாமிக்குக் கை காமிச்சுட்டு நாம் முழுங்க வேண்டியதுதான்:-)

வெள்ளிக்கிழமை ஆரம்பிச்ச ராமநவமி  இப்போதான் முடிவுற்றது.

வெள்ளிக்கிழமை நம்ம வீட்டில் ஆச்சா.... அன்னிக்கு மாலை  ஶ்ரீ சனாதன் தரம் (Shree Sanatan Dharam Christchurch) நடத்தும் ஸ்ரீராமநவமி பூஜைக்குப் போயிருந்தோம். நிலநடுக்கம் வந்தபிறகு இங்கே பப்ளிக் ஃபங்ஷன் நடத்த ஹால்கள் கிடைப்பதில்லை. கூட்டம்(?!) கூடும் சமயம் எதாவது நடந்துபோச்சுன்னால்  அந்த  உயிர்களுக்கு யார் கேரண்டீ?  அரசாங்கத்தைப்போட்டுக் காய்ச்சு காய்ச்சு காய்ச்சிருவோம்லெ!

அதனால் ஒரு வீட்டில் பூஜைக்கு ஏற்பாடு. வீடு என்பதால் எல்லோருக்கும் இருக்கைகள் தர முடியாதேன்னு  ஹாலில் வெறும் பாய்கள் போட்டு வச்சுருந்தாங்க. நமக்கோ....மூட்டுவலி.  முழங்கால் தகராறு.  போயிட்டோமேன்னு பல்லைக் கடிச்சுப் பொறுத்துக்கிட்டேன். பண்டிட் ஒரு கதை சொன்னார்.  இதுவரை எனக்குத் தெரியாத புதுக்கதை. அதை உங்களுக்கு நான் சொல்லணுமுன்னு கோபாலுக்கு ஒரே துடிப்பு:-)


ஒரு சமயம் நாரதர் கடும்தவம் செய்யறார். காமத்தையும்  குரோதத்தையும் வெல்லணும் என்பதற்காக இந்த தவம்.  மஹாவிஷ்ணு தோன்றி உன்னிஷ்டம் போல நடக்குமுன்னு சொல்லிடறார். தவம் முடிஞ்சது. இவ்வளவு நாள்  ஒரே இடத்தில் இருந்து தவம் செஞ்சு கைகால் எல்லாம்  ஒரே வலி. ஊர் சுத்தும் கால்களுக்குப் போரடிச்சுப் போச்சு.  அதுவுமில்லாமல்  இத்தனை நாள், எல்லோரும்  நான் எங்கேன்னு  தவிச்சுக்கிட்டு இருந்துருப்பாங்கன்னு  எண்ணம் வேற.

நாராயணான்னு  ஸ்ரீவைகுண்டம் போகிறார். 'வாரும் நாரதரே. எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோமே' ன்னார் விஷ்ணு.

ஆஹா!  சரியான சந்தர்ப்பம் னு நினைச்சுத்  தொண்டையை லேசாக் கனைச்சுக்கிட்டு ' நான் தவம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். கடுமையான தவம் ' என்று சொன்னார்.

"அடடே... அப்படியா? எதுக்காகத் தவம்?  எதை வேண்டி?"

"அதொன்னுமில்லை. நான் காமத்தை வெல்லணுமுன்னு  தவம்செஞ்சேன். அது நிறைவேறிடுச்சு. இப்போ நானும் சிவனும் ஒன்னுதான். அவரைப்போலவே நானும் காமனைத் தூக்கி எறிஞ்சுட்டேன். அவராவது கோபத்தில் மன்மதனை எரிச்சுட்டார். நான்  கோபத்தையும் வென்றுவிட்டேன்.  உண்மையைச் சொன்னால் நான்  இப்போ சிவனை விட ஒரு படி மேல்!"

"ஆஹா.... நல்லதாப் போச்சு.  சரி இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?"


"ஒன்னுமில்லை. ரொம்பநாளா ஒரே இடத்தில் குந்தியிருந்து போரடிச்சுப் போச்சு. ஹாயா உலகை ஒரு சுத்து சுத்திட்டு வரணும். போயிட்டு வரேன்!"

ஆகாயமார்க்கமாப்போகும்போது கீழே ஒரு இடத்தில் கண்ணைப்பறிக்கும் விளக்குகளின் ஒளியோடு அலங்காரமா ஒரு நகரம் கண்ணில் பட்டது. என்னன்னு பார்க்க  கீழே இறங்கி நகரத்தில் கால் வச்சார்.  நாரதரரைப்பார்த்து மக்கள் வணங்குறாங்க.  ராஜகுமாரிக்கு சுயம்வரம் நடக்கப்போகுதாம். அதான்  நாடே கோலாகலமா இருக்கு!

அதுக்குள்ளே நாரதர் வந்த விவரம் அரண்மனைக்கு  எட்டிருச்சு. அரசரே எதிர் கொண்டு வர்றார். நாரதமகரிஷியை வணங்கி வரவேற்று அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டுப்போய் நல்லா உபசரிச்சார்.  விருந்து போஜனம் முடிஞ்சபிறகு,  ' நாளைக்கு   என் மகளுக்கு சுயம்வரம். அவளுடைய எதிர்காலமெப்படி இருக்குமோன்னு  மனக்கவலையா இருக்கு. என்ன இருந்தாலும்  பெற்ற தகப்பன் இல்லையா?  தயவு செஞ்சு அவளுடைய கைரேகை பார்த்து அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்குமுன்னு தேவரீர் சொல்லணும்' என்று வினயமா வேண்டினார்.

'அதுக்கென்ன? பேஷாய்ச் சொல்லிடலாம். மகளை வரச்சொல்' என்றார் நாரதர்.  இளவரசி வந்தாள். பெயர் விஸ்வமோஹினி. அழகுன்னா அப்படி ஒரு அழகு. இதுவரை நாரதர்கூட இப்படிப்பட்ட அழகியை  மூணுலோகத்திலும் பார்த்தது  இல்லை. கண் விழியே தெறித்து விழுந்துருமோன்னு இருக்கு அவருக்கு!  இப்பேர்பட்ட அழகியை எவனோ ராஜகுமாரன் நாளைக்குக்கல்யாணம் செஞ்சுக்கிட்டுப்போகப்போறானேன்னு மனம் பதைக்குது.  இவளை நானே ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?  காமத்தை வெல்லணுமுன்னு  தவம் செஞ்சு எவ்ளோ நாளை வீணாக்கிட்டேன்:(  தேவையா அதெல்லாம்?  இவளை வேற யாருக்கும் விட்டுக்கொடுக்கவே கூடாது. எப்படியாவது இவளை  நானே திருமணம் செஞ்சு தீரணும். மனக்கண்ணில் அவளோடு குடும்பம் நடத்தும் அழகை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறார். தாங்கமுடியலை!


'அரசே, கவலையே படாதீர். உம் மகள் அறிவிலும் அழகிலும் சிறந்த ஒருவரை சுருக்கமாச் சொன்னால் இதைவிட மேலான வரன் யாருமே இல்லை என்ற அளவுக்கு என்னைப்போல தவவலிமை மிகுந்தவரைத்தான் திருமணம் செய்யப்போகிறாள். அவளது எதிர்காலம் அமோகமா இருக்குமு'ன்னார்.


வேகவேகமா தனி அறைக்குப்போய் மஹாவிஷ்ணுவைக்குறிச்சு ஜெபம் செய்யறார். ' ஓம் விஷ்ணுவே.... நேரம், கடத்தாம சட்னு கண் முன் வாரும்'னு கெஞ்சுனதும் 'டாண்' னு விஷ்ணு ஆஜர்.

"என்னப்பா இவ்ளோ அவசரம்? "

"ஐயோ.... என்னன்னு சொல்வேன். நாளைக்கு இங்கே சுயம்வரம் நடக்கப்போகுது. இந்தப்பேரழகியை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.  அவளுடைய அழகுக்குப் பொருத்தமான அழகுள்ளவனா என்னை மாற்றித்தாரும்."

"மன்மதன் ரூபம் வேணுமா? அவன் அழகில் சிறந்தவன்."


"வேணாம் வேணாம்.அவனை விட அழகில் சிறந்த உருவம் வேணும் . ராஜகுமாரியும் அழகில் சிறந்தவனைத்தான் தேர்ந்தெடுப்பாள்.  அவளுடைய அழகுக்கு ஈடு கொடுக்க உம்மால்தான் முடியும். ஆகவே உம் உருவத்தையே எனக்குத் தரணும். "

'ஓ. நோ ஒர்ரீஸ். இந்தா'ன்னு உருவத்தை மாற்றினார். நாரதர் கண்ணாடியில் பார்க்கிறார் சாக்ஷாத் மஹாவிஷ்ணு!

'தேங்க்ஸ். கல்யாணம் முடிஞ்சு புது மனைவியோடு வைகுண்டத்துக்கு வர்றேன். நீர் உடனே இடத்தைக் காலி செய்யும். ரெண்டு விஷ்ணுவைப் பார்த்தால்  குழப்பம் ஏற்படுமு'ன்னு  மஹாவிஷ்ணுவை விரட்டினார்.


அடக்கமாட்டாத சிரிப்போடு வைகுண்டம் போறார் மஹாவிஷ்ணு.

 மறுநாள் பொழுது புலர்ந்தது. சுயம்வர மண்டபம் முழுசும் போட்டிக்கு வந்த ராஜகுமாரர்களாலும், வேடிக்கை பார்க்க வந்த ஊர் மக்களாலும் நிறைஞ்சு வழியுது. ராஜகுமாரர்கள் வரிசையில் நாரதர் போய் நிக்கறார். மனம் முழுசும் பூரிப்பு!  அவரைப் பார்க்கும் மற்றவர்கள் எல்லாம் சுயம்வரம் நடக்கும் இடத்தில் நாரதருக்கு என்ன வேலை? எதுக்காக இங்கே நிக்கறார்ன்னு நினைச்சுக் குழம்பறாங்க. எல்லோர் கண்ணுக்கும் அவர் நாரதராகவேதான் தெரியறார்!  அரசரும் வந்தார்.  ஓஹோ...  மகள் யாரை வரிக்கபோறாள் என்று பார்க்க நாரதரும் ஆவலா நிக்கறார்ன்னு  நினைக்கிறார்.

மூவுலக அழகும் ஒன்னாய்த் திரண்டு நிற்கும்  அழகுச்சிலை போல விஸ்வமோஹினி கையில் மலர் மாலையுடன் அடிமேல் அடி எடுத்து வச்சு ஒவ்வொரு ராஜகுமாரனாய்ப் பார்த்துக்கிட்டே வர்றாள்.  நாரதருக்கு  நெஞ்சு படபடன்னு துடிக்குது. இதோ அடுத்து நம் முன் நிக்கப்போறாள் என்னும் போது  அவரை ஏறிட்டுப் பார்த்த  ராஜகுமாரி, சட்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு  வேகமா அந்த இடத்தை விட்டு விலகி அடுத்த ராஜகுமாரனை ஏறிட்டுப் பார்க்கிறாள்.  'எதுக்கு இந்த சபையில் ஒரு கருங்குரங்கு வந்து நிக்குது'ன்னு அவளுக்குப் பயமும் அருவருப்புமா இருக்கு!

நாரதருக்கு அவள் நம்மை சரியாப் பார்க்கலையோன்னு தோணுது. வரிசையை விட்டு விலகி அவள் போகும் பாதையில்  நிற்கும் ராஜகுமாரர்களின் வரிசையில்  நைஸா நுழைஞ்சு நிக்கறார்.  இந்த முறையும்  அவரை ஓரக்கண்ணால்  பார்த்த விஸ்வமோஹினி, குரங்கு எப்படித் தாவி இங்கே வந்து நிக்குதுன்னு யோசித்தவாறே   அடுத்த வரிசை  மணமகன்களை நோக்கி நடக்கிறாள்.

அவள் கண்ணுலே நாம்  படவில்லையோன்னு நினைச்சு நாரதரும் வெவ்வேற வரிசையில் மாறி மாறிப்போய் நிக்கறார். சபையிலுள்ள சனம் முழுசும் எதுக்காக நாரதர் இப்படித் தாவித்தாவி  ராஜகுமாரன்களுக்கிடையில் போய் போய் நிக்கறாருன்னு திகைப்பு.

ராஜகுமாரியைத் தவிர மற்றவர்கள் எல்லோர் கண்ணுக்கும் நாரதராகவும் ராஜகுமாரிக்கு மட்டும் கருங்குரங்குமாக் காட்சி கொடுக்கும் நாரதருக்கு அவர் கண்ணுக்கு மட்டும் தன் உருவம் மஹாவிஷ்ணுவாகவே ஜொலிக்குது.

சுயம்வரத்தில் ஒவ்வொரு முகமாப்பார்த்துக்கிட்டே போன விஸ்வமோஹினி, ஒரு வரிசையில் மஹாவிஷ்ணுவே நிற்பதைப் பார்த்து அவர் கழுத்தில் மாலையைப் போட்டுட்டாள்.  ஏதோ யோசனையில் இருந்த நாரதர், மக்களின் ஆரவாரம் கேட்டு தன் நினைவுக்கு வந்து என்ன ஆச்சுன்னு பார்த்தால்  மஹாவிஷ்ணு மாலையும் கழுத்துமாய் விஸ்வமோஹினி பக்கத்தில் நிக்கறார்.

அவ்ளோதான்...வந்தது பாருங்க ஒரு ஆவேசம் நாரதருக்கு.....  விடுவிடுன்னு மஹாவிஷ்ணுவுக்கு எதிரில் போய் நின்னு கோபம் பொங்கும் விழிகளால் முறைச்சுப் பார்த்துத் தகாத சொற்களால் ஏசறார்.

 "அடப்பாவி.....  அழகிய மங்கையரை அபகரிப்பதே உன் வேலையாப் போச்சா? அன்னிக்கு அப்படித்தான் திருப்பாற்கடலைக் கடைஞ்சப்ப தோன்றிய மஹாலக்ஷ்மியை நீயே எடுத்துக்கிட்டு, அதுலே வந்த ஆலகால விஷத்தை அந்த பேமாலம் சிவனுக்குக் கொடுத்தாய்.  இப்ப என்னன்னா நான் கல்யாணம்  கட்ட நினைச்சுருந்த  பெண்ணை உனக்கு மாலை போட வச்சாய். அதான் உனக்கு ஸ்ரீதேவி,, பூதேவி, நீளாதேவி, ஆண்டாள்னு ஏகப்பட்ட மனைவிகள் இருக்க  நான் பார்த்து வச்ச பொண்ணையும் நீயே அடையணுமுன்னு  எவ்ளோ பேராசை பார் உனக்கு:( எனக்கு வர்ற ஆங்காரத்துக்கு  உன்னைச் சும்மா விடப்போறதில்லை. வயிறு எரிஞ்சு கொடுக்கறேன் சாபம். நீ உன் மனைவியைப் பிரிஞ்சு லோலோன்னு அலையப்போறே பார்!"

மஹாவிஷ்ணு சிரிச்ச முகத்துடன், 'அது சரி நாரதரே,  நீர்தான் காமத்தை வென்று சிவனைப்போலவே  இல்லையில்லை அவரைவிட மேலானவரா ஆகிட்டீரே இப்ப என்ன கல்யாண ஆசை?'ன்னார். அதுவுமில்லாம இப்போ கோபம் வந்து குரோதமாய் என் மேல் சாபம் எல்லாம் விட்டுட்டீரே! காமம் குரோதம் எல்லாம் உம்மிடம் அப்படியே  இருக்கேன்னார்.

நாரதருக்கு  மானக்கேடாப் போச்சு. கண்ணை மூடி நின்னார். அப்புறம் மெதுவாக் கண்ணைத் திறந்து பார்க்க அவர் ஒரு பொட்டல் காட்டுலே இருக்கார்.  அழகான நகரம், அரசர், ஊர் மக்கள், அம்பத்தாறு தேசத்து  ராஜகுமாரர்கள் ,விஸ்வமோஹினி, மஹாவிஷ்ணு, இப்படி எதுவுமே அங்கே இல்லை.  வேகவேகமா வைகுண்டம் போறார்.

சிரிச்சுக்கொண்டே வரவேற்ற மஹாவிஷ்ணுவைப் பார்த்து  என்ன ஆச்சுன்னு கேட்க, அவர் சொல்றார் எல்லாமே மாயை. நான் உண்டாக்கிய மாயையில்தான் அரசர், ஊர்மக்கள்,ராஜகுமாரர்கள், விஸ்வமோஹினி எல்லாம்  தோன்றினார்கள்.  நீர் உண்மையாகவே காமத்தையும் குரோதத்தையும் வென்றீரான்னு சோதனை செஞ்சு பார்த்தேன்.  நீர்  ஃபெயில் ஆயிட்டீர் என்று சொல்லிச் சிரிச்சார்.

நாரதருக்கு  மானம் மரியாதை எல்லாம் போச்!

ஆனால் அவருடைய சாபம் மட்டும் பலிச்சுருது. பிரம்மச்சாரியின் சாபம் பாருங்க!  அதான் ராமாவதாரத்துலே ராமன் சீதையைப் பிரிஞ்சு காடுமேடெல்லாம் லோலோன்னு அலைய வேண்டியதாப் போச்சு!


ஃபிஜி பண்டிட்  ரூப் அவர்கள் சொன்ன கதையில் கொஞ்சூண்டு மசாலா லேசாத் தூவி இருக்கேன். கதை துளசிதாஸ் ராமாயணத்துலே வருதாம்.  ஃபிஜி மக்கள்  வால்மீகி வாசிக்கறதில்லை!

மறுநாள் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு ஹவன்(ஹோமம்) நடத்தி ராமர் பிறந்த நாளைக் கொண்டாடுவதா ஏற்பாடு. கீழே உக்கார பயந்துக்கிட்டு  நான்  போகலை. அதுக்கு பதிலா அன்றைக்கு  மாலை  நாம் வழக்கமாப்போகும் இன்னொரு ராமாயண் மண்டலியின் ராம்நௌமி பூஜைக்குப் போனோம். இது ஒரு பள்ளிக்கூட ஹாலில் நடந்துச்சு.  எப்படியோ கெஞ்சிக்கூத்தாடி இந்த இடத்தை ஏற்பாடு செஞ்சுருக்கார் நண்பர். அதுவும்  பகலில் வேறொரு புக்கிங் இருந்ததால்  சாயந்திரத்துக்குத்தான் கிடைச்சது.  ராம்நௌமியை  ராத்திரியில் கொண்டாடுறோமேன்னு  சின்னதா மனக்கலக்கம்.  பரவாயில்லை இந்திய நேரத்துக்கு  இது நண்பகல்தான்னு ஆறுதல் சொல்லிவச்சேன்.


அங்கே அசல் இந்தியாக்காரர்கள்  நாம்தான். அதுவும் மந்த்ராஜி (மத்ராஸி)  என்பதால் பஜனையில் நமக்காக ஒரு தமிழ்ப் பாட்டு பாடி நம்மை மகிழ்வித்தார்கள். ரொம்ப நேரத்துக்கு அது என்ன பாட்டுன்னே புரியலை.கோபால்தான் கண்டுபிடிச்சார். கற்பூரநாயகியே கனகவல்லி....!!!
இன்னொரு பாட்டு வேணுமுன்னு கேட்டேன். ஆனந்தம் ஆனந்தம் கோபாலா ஆனந்தம் என்று ஒன்னு!!!! ஃபிஜியில் இருந்து தங்கை வீட்டுக்கு விஸிட் வந்த விஜயலக்ஷ்மி மேடம் பாடுனது!

தசரதரின் புத்ரகாமேஷ்டி அத்தியாயம் வாசிச்சு ராமர்பிறந்த நாளைக் கொண்டாடினோம். இன்னிக்கு மட்டும் மொத்தம் அஞ்சு இடத்தில் ராம்நௌமி விழா. எல்லாம் ஃபிஜி இந்தியர்கள்  கொண்டாட்டமே! எந்த இந்தியரானால் என்ன நம்ம தேசிய குணத்தையும் ஒருமைப்பாட்டையும் விடமுடியுங்களா? நவகிரகங்கள் போல் ஒன்னா சேர்ந்து இருப்பதுதானே அழகு!


இன்றைக்கு ஞாயிறு மாலை நம்ம ஸ்வாமி நாராயண் கோவிலில் ஸ்ரீராம்நவமி  விழா இனிதே நடந்தது. பூஜை முடிச்சு விருந்து சாப்பிட்டுவிட்டு வந்து உங்க  எல்லோரும்  நடந்தவைகளைச் சொல்லிக்கிட்டு இருக்கேன் இப்போ:-)


குழந்தை ராமனை எட்டிப்பார்த்தேன்.சீதையுடன் இருந்தார்:-)


ராமகதை நடக்குமிடங்களில் எல்லாம் ஒரு முக்கியஸ்தர் ஆஜராவார் இல்லையா. அவருடைய  பிரதிநிதியா நானும் மூணு இடங்களுக்குப்போய் கதை கேட்டு வந்தேன்!!!!

ஜெய் ஸ்ரீ ராம்! 
43 comments:

said...

கதை வெகு சுவாரஸ்யம்
படங்களுடனும் விளக்கத்துடனும்
பதிவு வெகு வெகு அருமை
விரிவான பகிர்வுக்கு நன்றி

said...

ஸ்ரீ ராம நவமிக்குவாழ்த்து மட்டும் தான்போலனு நெனச்சேன் . கதையும் சொல்லி டீங்க :)
நாரதர் தப்பு பண்ணிட்டு எப்பிடி சாபம் விடலாம் .....

said...

நாரதர் சாபத்தால் ராமாவதாரம்... சொன்ன விதம் சுவாரஸ்யம்... நல்லாவே மசாலா தூவல்...

கடைசி படம் மிகவும் அருமை...

said...

வணக்கம் டீச்சர்,
கதை சொல்வதில் உஙகளை யாரும் மிஞச முடியாது. வாழ்துக்கள்

said...

நாரதர் கதை கேட்காத ஒன்று. கடைசி வரி பஞ்ச் .. மிகவும் ரசித்தேன்.

said...

ராமகதை நடக்குமிடங்களில் எல்லாம் ஒரு முக்கியஸ்தர் ஆஜராவார் இல்லையா. அவருடைய பிரதிநிதியா நானும் மூணு இடங்களுக்குப்போய் கதை கேட்டு வந்தேன்!!!!

ஜெய் ஸ்ரீ ராம்!

வாழ்த்துகள்...!

said...

ரீச்சர், இது தெரிஞ்ச நாரதர் கதைதானே. ஆனாலும் உங்க வாயால் கேட்டாத் தனி சுகம்தான். நிற்க.

1) நாரதர் முதலில் தவம் செய்த பொழுது அவருக்கு வரம் தந்தது விஷ்ணுதானே. தவம் முடிந்து அவர் பாற்கடலைப் பார்த்துப் போனதும் விஷ்ணு ஒண்ணும் தெரியாத மாதிரி ஏன் முதலில் இருந்து கேட்கறார்?

2) காமமும் கோவமும் நாரதரிடமிருந்து விலகவில்லை என்றால் முதலில் அருளப்பட்ட வரம் பொய்யானதே. ஏன்?

கடேசி பெஞ்சுல் உக்காந்தாலும் கேள்வி எல்லா சரியாக் கேப்போமுல்ல.....

said...

அந்த நாரதர் கதையில இன்னொரு சாபமும் வரும் அக்கா. ஹரி என்றால் பெருமாள் என்றும் குரங்கு என்றும் இரண்டு பொருள் உண்டு. ஹரியைப் போல் அரசகுமாரிக்குத் தோன்ற வேண்டும் என்று வரம் பெற்றதால் அவளுக்கு குரங்காகத் தோன்றுகிறார் நாரதர். அதனால் கடைசியில் 'நீ மனைவியை விட்டு பிரியும் போது குரங்குகளின் துணையுடன் தான் அவளை மீண்டும் பெறுவாய்' என்று சாபம் கொடுக்கிறார்.

said...

மூன்றாம் படத்தில் இருக்கும் இராகவப் "பொற்சிலைகள்" அழகோ அழகு!

அதென்ன சீதை இடம் மாறி நிக்குறா?

எப்பமே இராமனுக்கு இடப் புறம் தானே நிப்பா? (சிவபெருமானின் இடப் பாகம் பெற்ற உமையன்னை போல்)

உங்க கொலுவில் வலப் புறம் நிக்குறாளே? புரட்சிப் பெண் ஆயிட்டாளோ?:)

said...

//குழந்தை ராமனை எட்டிப் பார்த்தேன். சீதையுடன் இருந்தார்:-)//

அடியோமோடும் உன்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!

சீதை = இராகவனை விட வயதில் சற்றே பெரியவள்;
அவதார காலங்களில் கூட அவளைப் பிரிவதில்லை அவன்!
மீனோ, ஆமையோ, குள்ளனோ.. எந்த உருவிலும், அவளும் உடன் இருப்பாள்;

இது தெரியாம, டீச்சர், நீங்க தொட்டிலை (கட்டிலை) எட்டிப் பார்த்தது தான் = Invasion of Privacy:))

said...

அருமை.
குரங்குன்னால் எவ்வளவு உயர்த்தினு விஷ்ணுக்குத் தெரியாதா என்ன.
இந்த நாரதர்க்கு இப்படித் திடீர் திடீர்னு யோசனை போகும். ஞாபகம் இருக்கா இன்னோரு கதை. நான் தான் சிறந்த விஷ்ணு னக்தன்னு சொல்லப் போயி ,பகவான் நாரதர்கிட்ட ஒரு விவசாயியைக் காண்பித்து அவன் தான் உண்மையான நாராயணபக்தன்னு சொல்ல,.
நாரதர் சண்டைக்கு வர ,சரி நீயும் சாதரண பூலோகவாசியாக இருந்துபார்னு சொல்லிடறார்.
இவரும் மனுஷனாப் பிறந்து கல்யாணம் செய்து,குழந்தை பிறந்து எல்லாம் முடிந்து வைகுண்டம் வருகிறார்.
நாரதரிடம் விஷ்ணு என்னை நினைத்தாயா என்று கேட்க ,இவர் விழிக்கிறார்.
இப்போ அந்த விவசாயியுடைய ஒரு தின வேலைகளைப் பார் என்று சொல்கிறார்.
அந்த விவசாயிக் காலைய்ல் எழுந்திருக்கும் போது உடல் சுத்தம் செய்து சூரியனைப் பார்த்துவணக்கம் செய்து நாராயணா;னு சொல்லிட்டு
வேலைகள் முழுவதும் முடிக்கிறார்.
இரவு படுக்கும்போது நாராயணா'னு மீண்டும் சொல்லிட்டுத் தூங்கப் போகிறார். பார்த்தியா அவன் இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் என்னை நினைக்கிறான் அவந்தான் உண்மையான பக்தன். நாரதர் ஒப்புக்காம நிற்கிறார்.
சரின்னு ஒரு ஸ்பூன்ல நல்லெண்ணெயைக் கொடுத்து இதை எடுத்துண்டு போ/நாராயண ஜபம் மறக்காம சொல்லணும்னு சொல்லிடறார்.
ஹா இதென்ன பெரிய வேலையான்னுட்டு நாராயண ஜபம் செய்துகொண்டே நாரதர் போகிறார்.
எண்ணெய் தளும்புகிறது நாராயண ஜபம் நிற்கிறது.
திரும்பி ஆரம்பிக்கிறார்.
திரும்ப நிறுத்துகிறார்.
கடைசில வந்து விஷ்ணுவிடம் ஒத்துக்கொள்கிறார். கஷ்டம்தான் என்று.
நாராயண நாராயண!!

இவ்வளவு அழகா ஸ்ரீராமநவமிக்கு
அனுமன் புடவை ஸ்வெட்டர் நீலப்புடவையெல்லாம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறாரே!!!

நைவேத்ய பாத்திரங்கள் ரொம்ப அழகுப்பா.:)))

said...

//இப்போ நானும் சிவனும் ஒன்னுதான். அவரைப்போலவே நானும் காமனைத் தூக்கி எறிஞ்சுட்டேன்.

அவராவது கோபத்தில் மன்மதனை எரிச்சுட்டார். நான் கோபத்தையும் வென்றுவிட்டேன்.

உண்மையைச் சொன்னால் நான் இப்போ சிவனை விட ஒரு படி மேல்!"//

ha ha ha
சீவன், சிவன் ஆகும் -ன்னு பேசுவாய்ங்க;
சிவனாகவே ஆகிவிட்ட நா-ரதனாகிய நாரதனுக்கு வாழ்த்துக்கள்!:)

ஆனா, சிவம் = "ஒரு படி மேல்/ ஒரு படி கீழ்" என்றெல்லாம் இல்லாதது;

எப்போ, அடுத்தவரை வைத்து, தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் தோன்றியதோ...
அப்போதே மனம் குரங்காகி, முகமும் குரங்காகி விடுகிறது;

தவம் செய்யாத குழந்தைப் பையனுக்குத் தெரிஞ்ச சின்ன உண்மை..
தவம் செய்யும் பெரு முனிவர்களுக்குத் தெரிவதில்லை போலும்!

"தவத்தினும் மிக்கதோர் அன்பு!"

//நீர்மோர்//

படத்தில், மோரில் நீரே இல்ல; செம கெட்டியா இருக்கு;
எனக்குப் பிடிச்ச தயிர் வடையோ? மேலாக்க சுறுசுறு-ன்னு காரா பூந்தி தூவி இருக்கலாம்-ல்ல?:)

said...

ராமநவமி பிரசாதங்கள் வெயிலுக்கு ஏற்ற பிரசாதங்களாய் நம் முன்னோர்கள் செய்து இருக்கிறார்கள்.
கோடைகாலத்தில் எளிமையான உணவுகள் தான் ஜீரணம் ஆகும்.
நீர்மோர் உடலுக்கு நல்லது செய்யும். வெள்ளிரிக்காய் குளிர்ச்சியை கொடுக்கும், பானகத்தில் சேர்க்க படும் சுக்கு, ஏலாக்காய், எலுமிச்சை எல்லாம் உடலுக்கு நன்மை தருபவை.

நாரதர் கதை ’அமர்சித்ரா’ குழந்தைகளுக்கு உள்ள புத்தகத்தில்
குமார் அவர்கள் சொன்னது போல் தான் கதை படித்தேன்.

ஸ்ரீராம், ஜெயராம் ஜெய ஜெய ராம்!

said...

படங்களும் பகிர்வும் மிக அருமை. சுவாரஸ்யமான கதை. ஸ்ரீராமநவமி வாழ்த்துகள்!

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

நாரதர், தாம் செய்வது என்னவென்று அறிந்திருக்கவில்லை!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கொஞ்சம் ஸ்பைஸ் தூக்கலோ!!!

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்.

நான் ஒரு ப்ரொஃபஷனல் கதை சொல்லியாச்சே:-))))

said...

வாங்க பந்து.

எனக்கும் இந்தக் க்தை புதுசுதான் அப்போ!

பஞ்ச் நாமும் சொல்வோமில்லெ:-))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் கொண்டாடக்கூடாதான்னு கோபாலுக்கு ஆதங்கம்.

ஒருவிதத்தில் அது நல்லது. நமக்கும் ஒரு இடம்போனால் போதும்.

ஆனால்.... மற்ற நாலு நாள் சாப்பாடு போச்சே:-)))) முக்கியமா அவருக்குத்தான்!!!

said...

வாங்க கொத்ஸ்.

அதென்ன க்ளாஸ் லீடர் கடைசி பெஞ்சுலே?

போகட்டும்.கவனம் இருந்தால் சரி:-)

1. விஷ்ணு ஒரு பேச்சுக்காக எங்கே ஆளைக் காணோமுன்னா... அதுக்கு நான் உங்களை நோக்கித் தவம் செஞ்சது உங்களுக்குத் தெரியாதான்னு கூடக் கேட்டுருக்கலாம். இல்லை...

உங்க அனுகிகத்தால் காமனை வென்றேன்னு சொல்லி இருக்கலாம். ஏதோ தானே எல்லாத்தையும் ஜெயிச்சமாதிரி அகம்பாவமா பதில் சொன்னது முதல் தப்பு, இல்லையோ?

2. அகந்தை வந்தவுடன், அருளிய வரம் வீக் ஆயிறதா? அப்படி அங்கே ஒரு வீக் பாய்ண்ட் இருக்கு:-)))

said...

வாங்க குமரன் தம்பி.

ஆஹா...இந்தப்பகுதியை பண்டிட் சொல்லலையே!!!

அடுத்த பூஜையில் மறக்காமல் கேக்கணும்.

கூடுதல் தகவலுக்கு நன்றிப்பா.

இப்ப இட் மேக் சென்ஸ்:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழி இல்லையோ!!!!
அதான். நம் வீட்டுலே நாந்தான் இடங்கொடுப்பேன் எப்பவும்.

அப்படித்தான் உத்தரவாக்கி இருக்கு மதுரையில் இருந்து:-))))

திருப்பதியில் கூட நம்ம தாயார் புரட்சிப்பெண்ணே!

தொட்டில் என்றதால்தான் குழந்தையைக் கொஞ்சலாமேன்னு எட்டிப் பார்த்தேன். ஆனா அது கட்டிலா இருக்குன்னு அப்புறம்தானே தெரிஞ்சது. பூத்திரை வேற போட்டுருந்தானே!!!

குவியல் பூக்களை அகற்றினால்..... சீச்சீ...நான் பார்க்கலை கேட்டோ:-)

said...

வாங்க வல்லி.

எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் சூப்பர்! பின்னூட்டங்களால்தான் பதிவே ஜொலிக்கிறது என்றால் தப்பே இல்லை.

நைவேத்யப் பாத்திரங்களில் குட்டி வாளி லேட்டஸ்ட் அடிஷன். அன்னிக்குத்தான் ஓப்பனிங் செரிமனி:-) போன பயணத்தில் சென்னை ஷாப்பிங்.

மற்ற அப்பக்குண்டு காணாமப்போய் தேடினப்ப ஆப்ட்டது.

தினம் ஒருமணி தேடணும் எனக்கு. எதைத் தேடறேன்னு தெரியாது ஆனால் தேடுவேன். எதிர்பாராதவைகளைக் கண்டடைவேன்:-)))

இப்பெல்லாம் நேயடு பெண் வேஷம் கட்டுறார்! பெருமாள் மோஹினி வேஷம் போட்டால் நான் போடக்கூடாதான்னு போட்டிதான்:-)

said...

கே ஆர் எஸ்,

எல்லாத்துக்கும் காரணம் அகந்தைதான்./ அதான் (அவர்) கதை கந்தலாப்போச்சு:-)

சிம்பிள் மோர் வயசானதன் அடையாளம்! அப்படியே மோர் சாதமாக்கிடுவேனே!

நீர் மோரை சாதத்துலே சேர்த்துக்க இது என்ன திருப்பதி தத்தியன்னமா?

said...

வாங்க கோமதி அரசு.

அடுத்த வருசமுதல் ராமநவமி பிரசாதத்தை மாத்திக்கணும். இங்கே குளிரில் அல்லவா பொறக்கறார் அவர்!!!

அமர் சித்ர கதா!!! ஆஹா.. பார்க்கவே இல்லையே:(

என் காலங்களில் அவை எல்லாமில்லையாக்கும்:(

ஜெய் ஸ்ரீராம்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கதை பிடிச்சுருக்குன்னது எனக்குப் பிடிச்சிருக்கு:-)

வருகைக்கு நன்றி.

said...

நாரதர் கதை கேட்டேன்.

எந்தக் கதைக்கும் கடைசியிலே
மாரல் ஆஃப் த ஸ்டோரி அப்படின்னு ஒண்ணு போடுவாக.
இந்தக் கதைலே என்ன அது ?

நாரதரா இருந்தாலும்
நானிலத்துலே உன் பெயர் ஓஹோன்னு இருந்தாலும்
அடக்கமா இருடா சோமாரி.
இல்லேன்னா
அசிங்கப்பட்டுபோயிடுவெ.


அது சரி. கதைலே ரொம்பவே மசாலா தூக்குது.
ரொம்பவே மசாலா போட்டா
அது நுங்கம்பாக்கம் தலப்ப்பாகட்டு கடை மாதிரி
பக்கத்துலே போகையிலேயே
தூக்கி அடிக்குது இல்ல !!

சுப்பு தாத்தா.

said...

சுவாரஸ்யமான பகிர்வு.அந்த வடைபப்பு சாப்பிடணுமே.ரெஸிப்பி பிளீஸ்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஸ்பைஸ் இல்லேன்னா லைஃபே இல்லையாமே! இங்கே எங்கூர்லே ஸ்பைஸ் பாரடைஸ், ஸ்பைஸ் பாரகன், ஸ்பைஸ் அண்ட் லைஃப் இப்படி பல பெயர்களில் இண்டியன் சாப்பாட்டுக்கடைகள்!

ஆமாம்.... திண்டுக்கல் தலைப்பாக்கட்டுக்கு இப்ப காப்புரிமை வந்துருச்சாமே உண்மையா?

said...

வாங்க ஸாதிகா.

ரெஸிபிதானே ?நோ ஒர்ரீஸ்.
இதுக்கூட மெனெக்கெட வேணாம். இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_18.html

நமக்கு அப்ப ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு இல்லையாக்கும் கேட்டோ:-))))

said...

... திண்டுக்கல் தலைப்பாக்கட்டுக்கு இப்ப காப்புரிமை வந்துருச்சாமே உண்மையா?

ஆமாம்.

subbu thatha

said...

அமர் சித்ர கதா!!! ஆஹா.. பார்க்கவே இல்லையே:(

என் காலங்களில் அவை எல்லாமில்லையாக்கும்:(//

நான் சிறிமியாக இருந்தபோதும் அமர்சித்ரா கிடையாது, பூந்தளிர், அமர்சித்ரா எல்லாம் என் குழந்தைகளுக்கு என்று வாங்கியது.
அதில் படித்து இருக்கிறேன்.
பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன் தேடிப் பார்த்து படித்து முழுகதையை சொல்கிறேன்.

said...

//எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழி இல்லையோ!!!!//

ha ha ha!

பொதுவா, எல்லாத் திருமணங்களிலும், பெண், ஆணின் வலப்பக்கம் இருப்பாள்;
(தாலி கட்ட Easy Position?:))

பெரும்பாலான பெருமாள் கோயில்களில், அவள் வலப்பக்கம் இருக்க விரும்புவது = இந்தக் காரணத்தினால் தானோ;
என்றுமே கல்யாண கோலம்; மண வினை இன்பம்:)

வடிவாய் நின் "வல" மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -ன்னு பாசுரம் கூட Right Handed தான்:)
வள்ளியும், முருகனுக்கு வலப்பக்கமே இருப்பாள்; குடும்பப் பழக்கம் போல:))
-----

சீதை மட்டுமே இடப் பக்கம்!
"ராம் பரிவார்" என்று வடநாட்டு வழக்கமோ என்னவோ?
இலக்குவன் வலப் பக்கம் நிப்பான்; அவனுக்கு அருகில் அனுமன்;
சீதை இடப் பக்கம் நிக்குறாப் போலத் தான் ஓவியங்களும் வரையறாங்க!

Leftல நின்னவ
Left-Communistஆ, இராகவனிடம் கேள்வி கேட்டிருக்கப்படாதோ?:(

said...

கதை, பிரசாதங்கள், பாட்டுகள் என ஸ்ரீ ராம நவமியை தங்களது பதிவு மூலம் பிரமாதமாக கொண்டாடியாச்சு.

விடுபட்ட பதிவுகளை அப்புறமா வந்து பார்க்கிறேன்...:)

said...

ராம நவமி கொண்டாட்டங்கள் ரசிக்கும் படி இருந்தது. கடைசி வரி..... :)

said...

புதிய கதை. சொன்ன விதம் அருமை.

பிரசாதங்கள் எடுத்துக்கொண்டோம்.

said...

//மாங்காயில் ஒரு எழுத்தை மட்டும் நீக்கி தேங்காய் ஆக்கிருவேன். இங்கே மாங்காய் நஹீ//

க்ரானியை.. ஐ மீன் க்ரானி ஸ்மித்தைப் பொடிப்பொடியா நறுக்கிச் சேர்க்கலாமே..

ஏற்கனவே கேட்ட கதைன்னாலும் உங்க நடையில் கேக்கும்போது இன்னும் ருசி கூடுது.

said...

கே ஆர் எஸ்,

ஹனுமனுக்கு சீதையிடம் இருக்கும் பரிவும் பக்தியும் அதிகம். சீதைக்கு அருகில் வணங்கி நிற்பதைத்தான் அவன் விரும்புவான் என்று எனக்குத் தோணுது.

மேலும் சீதை என்ற (பூதேவி என்று சொல்லப்படும்) மஹாலக்ஷ்மி நாதனுக்கு வலப்பக்கம் இருப்பதைத்தான் விரும்புகிறாள்.

இப்போ இடும்பி வீட்டு செட்டிங்ஸ் அமைஞ்சவிதம் புரிஞ்சுருக்குமே:-))))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நிதானமா வாங்க. அதுவரை ரோஷ்ணியின் குறும்புப்பேச்சில் மகிழ்வுடன் திளைக்க ஆசிகள்!

பின்னொரு காலம் நினைத்து மகிழ இதெல்லாம் பொக்கிஷங்கள் ஆச்சே!

என் மகளும் சின்னவளா இருந்தபோது ஒரு கதை 'குழந்தை வீல் வீல் னு அழுது' ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

எதுக்கு வீல் வீல்? டயர் டயர்ன்னு ஏன் அழலைன்னு கேட்ட்யாள்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நேயுடுவின் சிநேகிதிக்கு வேறென்ன வேலை இருக்கும்:-))))

said...

வாங்க மாதேவி.

எங்களுக்கு(ம்) கதை புதுசுன்றதாலேதான்
உங்களுக்கெல்லாம் சொல்லணுமுன்னு கோபாலுக்குத் துடிப்பு:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

//க்ரானியை.. ஐ மீன் க்ரானி ஸ்மித்தைப் பொடிப்பொடியா நறுக்கிச் சேர்க்கலாமே..//

அட! ஆமாம்ப்பா!!! கிரானியை எப்படி மறந்தேன்!!!!

இந்த வருசமும் நம்மூட்டுலே ஆப்பிள் மரம் நிறையக் காய்ச்சுருக்கு. நேத்து சௌசௌ கூட்டு செய்யும்போது ஒரு க்ரானியையும் சேர்த்தேன். அருமை. கோபாலுக்குக் கண்டுபிடிக்கவே முடியலை! அதுவே மாபெரும் வெற்றி:-)))

இந்த வருசப் பரிசோதனை, கூடியவரை இனி புளிக்கு பதில் க்ரானி!