Thursday, December 31, 2009

சிம்மராசியும் ஜீஸஸ் க்றைஸ்ட்டும், கன்னிமரியாளும் க்ருஷ்ண லீலையும்

'அங்கே' இருந்துருந்தா இந்த ஒரு மாசமா தினமொன்னு கிறிஸ்மஸ் பார்ட்டிகளுக்குப் போயிருப்பேன். வேணாமுன்னாலும் விடமுடியுதா? என்னமோ போன்னு ஒரு சிறு சலிப்போடு(?) புதுசா ஒரு பொடவையோ, இல்லை பஞ்சாபியோ(!! ஆரம்பகாலத்துலே பஞ்சாபிஸூட்ன்னுதான் பெயராக்கும்) போட்டுக்கிட்டுப் போவேன். வந்திருக்கவுங்க எல்லோரும், மெய்யாவோ பொய்யாவோ வந்து நம்ம உடையைப் பாராட்டிட்டுப் போவாங்க. இதைவிட்டா நமக்கு(ம்) சான்ஸ் ஏது பாராட்டு(??) மழையில் நனைய!

'இங்கே' எல்லாம் ஓசைப்படாமல் நடக்குது . கொறைஞ்சபட்சம் ஒரு சர்ச்சுக்குப் போய்வரணுமுன்னு நினைச்சது(ம்) மறந்தே போச்சு வேறொரு கொண்டாட்டத்துலே முழுகிட்டதால்.

ஒரு இசைநிகழ்ச்சிக்குப்போயிட்டு வரும்வழியில் கோபாலுக்கு ஒரே கழுத்துவலி (அவ்வளவாத் தலையைக்கூட ஆட்டலையே!!!! இன்னிக்கு அங்கே நானும் ரொம்பக் கொஞ்சமாத்தானே பேசினேன். ) உடம்பு சரியில்லைன்னா இவருக்கு ஏற்ற சிகிச்சை ஒன்னு இருக்கு. பாதி இல்லே முக்கால்வாசி வியாதிகள் இவருக்கு டாக்குட்டர் முகத்தைப் பார்த்ததும் போயிரும்.. மலர் ஹாஸ்பிடலுக்கான்னு கேட்டேன். வீட்டுப் பத்திரத்தை நியூஸியில் விட்டுட்டுவந்த கவலை எனக்கு! ம்ம்ம்ன்னு என்னவோ சொல்ல ஆரம்பிச்சவர், சாதாரண டாக்டர் கிடைச்சால் போதுன்னார். ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகிறனுமுன்னு முயற்சி செஞ்சு முதல் கட்டமா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன். இனி எதாவது ஒரு பல்கலைக் கழகம் இங்கே டாக்குட்டர் தந்தா வாங்கிக்கிட்டுப் போகணும். மக்கா...என்ன விலை என்ன விவரமுன்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க)

நம்ம டிரைவர்கிட்டே எங்கியாவது டாக்டர் பார்த்தா நிறுத்துங்கன்னு சொல்லி வாய் மூடலை ஒரு டாக்டர் போர்டு கிடைச்சுருச்சு. எதிரும்புதிருமாப் போட்டுருந்த ரெண்டு நீள பெஞ்சில் போய் உக்கார்ந்தோம். நாலுக்கு எட்டுன்னு ஒரு அறை. ஒரு மேசைமேல் துளி இடம் இல்லாம விதவிதமான ப்ளாஸ்டிக் டப்பாக்கள். எனக்கென்னமோ சட்னு பான்பராக் விற்பவர்தான் நினைவுக்கு வந்தார். காத்துருந்தவங்க அவுங்களே யாருக்குபின் யார்ன்னு வரிசைப்படுத்திக்கிட்டு உள்ளே ( நான் இருந்த இடத்திலிருந்து ரெண்டு எட்டு) போவதும், அங்கே இருந்த ப்ளாஸ்டிக் ஸ்டூலில் உக்காருவதுமா.... ஒரு ஊசி, நாலு வார்த்தை, காசு கைமாறுவது.

ரொம்ப வருசங்களுக்குமுன்னே நாங்க கேரளாவில் இருந்தப்போ, இவருக்கு மூக்கில் புண். (சிகரெட்டை ஞாபகமறதியா தீ இருக்கும் பக்கம் மூக்கருகில் வச்சுச் சுட்டுக்கிட்டாரோ? அப்பெல்லாம் புகைவலி பழக்கம் வேற.அதை ஒழிக்க நான் பட்டபாடு..... அப்புறம் கதைகள் 1500 இல் சொல்லலாம்) கடைவீதிக்குப் போகும்போது அங்கே இருந்த ஒரு மருந்துக்கடையில் போய் நின்னோம்.

"எந்தா?"

'ம்ஹூக்குலே ஹுண்ணு"

ஏறிட்டுப் பார்த்தக் கடைக்காரர், ரெண்டு மாத்திரைகளைக் கொடுத்து

" இந்தா இது கழிச்சோ. ....ரண்டு ருபெ"

இந்தச் சம்பவம் இப்போ ரெண்டுபேருக்கும் ஒரே சமயத்தில் நினைவுக்கு வந்து.. புன்முறுவல். ஓசைப்படாமல் அவர் 'ம்ஹூக்குலே ஹுண்ணு' ஜாடையில் சொல்ல நான் 'ரண்டு ருபெ' :-))))

(சும்மாவா சொன்னான் சீயக்காப்பொடி!! (இதுவும் 1500 இல் பார்க்கலாம்)

எங்கள் முறை வந்ததும் மேசையின் அருகில் நின்னு பார்த்தேன். என் கவலையெல்லாம் சிரிஞ்சி பற்றித்தான். மேசையின் அடுத்த ஓரத்தில் சின்னக் குன்றாய் பயன்படுத்திய சிரிஞ்சிகள். நோய் விசாரணை ஆச்சு. ஹெட் கோல்ட் இருப்பதால் வந்த வலி(யாம். இதைத்தானே ரெண்டுநாளா நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்) ஊசி போட்டுக்குங்கன்னு புதுசா ஒரு சிரிஞ்சி எடுத்தார். அப்பாடா..... கூடவே 3, 2 ன்னு ரெண்டுவகை மாத்திரைகள். முப்பது ரூபாய்கள். (உடனே மகளுக்கு விவரம் சொல்லணுமுன்னு துடிப்பா இருந்தேன். டெலிபதி:கெஸ் வாட்? வாட்? டாட் இஸ் ஸிக். ஓ நோ... பீன் டு தெ டாக்.? எஸ். டூ யூ நோ ஹௌமச் ஹீ சார்ஜ்ட்? நோ ஐடியா.... அ டாலர். வாவ்)


வெளியே வந்து காரை நோக்கிப்போகையில் அங்கே, தெருமுனையில் நேடிவிட்டி ஸீன் வச்சுருந்தாங்க. நின்னு படம் எடுத்தேன். இந்த மீனை எடுங்க ன்னு சிலர் வந்து நின்னாங்க. எல்லோரும் ஆட்டோக்காரர்கள். டொம்னிக், லூர்த்ராஜ், சாரதி, பாஸ்கர், செல்வம், சரவணண், சதீஷ், வின்செண்ட்ன்னு இந்த ஆட்டோ ஸ்டாண்டுக்காரர்கள். எல்லோருமா சேர்ந்து பணம் போட்டு இந்த அலங்காரம் செஞ்சு வச்சுருக்காங்க.. மூவாயிரம் செலவாச்சாம். இப்படிக் கொண்டாடுவதைப் போனவருசம் ஆரம்பிச்சாங்களாம். இதோ..இது ரெண்டாம் வருசம். மைலாப்பூர் டைம்ஸில் இந்த விவரம் வந்துருக்குன்னு அங்கே அந்த பேப்பர் கட்டிங்கை நோட்டீஸ் போர்டில் ஒட்டிவச்சுருக்காங்க. இந்த ஆட்டோஸ்டேண்டுக்குப் பெயர் இருக்கான்னு கேட்டேன். இருக்காம். 'சிம்மராசி சரத்குமார் ஆட்டோ ஸ்டேண்ட்..' ரொம்ப ஆர்வமா அந்த மீன்தொட்டியை விவரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கிறிஸ்மஸுக்கும் மீனுக்கும் தொடர்பு என்னன்னு ஆராயணும். ஒருவேளை வானத்தில் விண்மீன் தோன்றியது என்பதை.......

கோபாலுக்கு நோய் முக்கால்வாசி குணமாகி முகம் தெளிஞ்சுருச்சு. அதான் டாக்குட்டரைப் பார்த்தாச்சே!
கிளம்புமுன் ஒரே ஒரு 'கருத்து'ச் சொன்னேன். "அப்ப ஆட்டோக்காரங்களில் நல்லவங்க(ளும்) இருக்காங்க"

"என்ன மேடம் இப்படிச் சொல்லீட்டீங்க?"

"இல்லையா பின்னே. உங்களுக்குன்னு ஒரு 'பேட் ரெப்யூட்டேஷன்' இருக்கேப்பா."
"அப்படி இல்லை மேடம். ஏர்ப்போர்ட், செண்ட்ரல் இந்த ரெண்டு இடத்துலே இருக்கறவங்கதான் தகராறு செய்வாங்க. அதாலேதான் மொத்தப்பேருக்கும்......"

இந்த ஆட்டோக்களைப் பற்றிய ஒரு விஷயம் ஹிந்துவில் காணக்கிடைச்சது. சென்னையில் மட்டும் 48,350 ஆட்டோகள் ஓடுதாம். ஆட்டோகளின் எண்ணிக்கையைக் கண்ட்ரோல் செய்யறதுக்கு பர்மிட் முறை வந்துருக்கு வயசு 23 முதல் 45 வரைக்குள்ளே இருக்கணும். கொறைஞ்சது எட்டாங்கிளாஸ் படிச்சுருக்கணும். 375 ரூபாய் கட்டணம் கட்டணும் பர்மிட் விண்ணப்பத்துக்கு. இவை அரசாங்கம் நியமிச்ச விதிகள்.
இப்போ 20 வருசமா. பர்மிட் வந்ததும் அதோட அக்காவும் கூடவே வந்து சேர்ந்துக்கிடணுமில்லை. ஊஊஊஊழல். இந்த முன்னூத்தி எழுபத்தியஞ்சு வீங்கிப்போய் இப்போ மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு தனி. சொந்தமா வண்டியும் பர்மிட்டும் சேர்த்து வாங்க்கணுமுன்னா செலவு கொஞ்சமே கொஞ்சம்தான். வெறும் ரெண்டேகால் லட்சம்!!!

சாதாரண ஆட்டோ ஒட்டிகளுக்கு இவ்வளோ ஐவேஜ் ஏது? வட்டிக்கு விடும் ஆட்கள் வேறெத்துக்கு இருக்காங்க? 12 சதமானம் கூட்டு வட்டி. மாசத்தவணை அஞ்சு இல்லை ஆறாயிரம் வரை ஆகுமாம். இதுக்குமே தினம் 200 எடுத்து வைக்கணும். பெட்ரோல் செலவு வேற இருக்கு. சங்கிலியைப் புடிச்சுக்கிட்டேப் போய்க் கடைசியில் பார்த்தால் காசு தின்னும் மக்கள் ....... ஃபைனான்சியர்களும் பர்மிட் வச்சுருக்கும் ஆட்டோ ஓனர்களும். இந்த ஓனர்களில் பலர் *** துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்(??)கள். இதைப் பத்தி இன்னும் கொஞ்சம்விவரம் இருக்கு. வேறொருநாள் பார்ப்போம்.
எப்படியோ மத நல்லிணக்கம் இருக்குன்னு மகிழ்ச்சியோடு ரெண்டு நாளுக்கு முன்னே அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்குப் போனால்....அங்கே இவுங்களை மிஞ்சும்வகையில் இன்னொரு விஷயம் பார்த்தேன். கோவிலின் வலதுபக்கம் தனி மண்டபத்தில் மாதா, அந்தப் பால்க்காரச் சிறுவனுக்குக் காட்சி கொடுத்த சிற்பம் வச்சுருக்காங்க. அங்கே இருக்கும் இரண்டு மாதா சிலைகளுக்கு மக்கள் நேர்ந்துக்கிட்டு புடவை சாத்தறாங்க. புதுப்புடவைகளை மாற்றி மாற்றிக் கட்டிக்கிட்டே இருக்காங்க. அவ்வளோ வந்து குவியுது. குழந்தை வரம் வேண்டி தொட்டில் வாங்கி அங்கே கம்பியில் தொங்கவிடுவதும் ஒரு பிரார்த்தனையா இருக்கு. தொட்டில்களில் குழந்தைக் கண்ணன் இருக்கான். கோபால் சுட்டிக் காமிச்சவுடன், நோ ச்சான்ஸ்ன்னு சொல்லிக்கிட்டே எக்கிப் பார்த்தால் நெற்றியிலே திருமண்ணோடுத் தவழும் க்ருஷ்ணாப் பாப்பா.



அதே இடத்தில் கீழ் வரிசையில் ஒரு சங்கிலியில் பூட்டுகளாத் தொங்கவிட்டுருக்காங்க. இது என்னவகை பிரார்த்தனைன்னு தெரியலை. மெழுகுவத்தி ஏற்றும் இடத்தில் நம்ம ஆள் இருக்கார்.

இங்கேயும் நேட்டிவிட்டி ஸீன்ஸ் ரெண்டு இடத்துலே இருக்கு. அந்த பெரிய வளாகத்துலே இயேசுவின் சரிதை முழுசும் பத்துப்பனிரெண்டு ஸீன்களாக் காட்சியாகக் கண்ணாடிக்கூண்டுலே இருக்கு. அதையெல்லாம் அன்னிக்குத்தான் பார்த்தேன்.



எல்லாமே ஒன்னு. அப்படித்தான் இருக்கணும். இருக்கு.

இதுதான் கடைசிப் பதிவு இந்த வருசத்துக்கு.

அனைவருக்கும் ஆங்கிலப் (??) புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Wednesday, December 30, 2009

11க்கும் 12க்கும் இடையில்

"ராத்திரியெல்லாம் தூங்காம இருப்போம்"

"ஓ...ஸ்லீப் ஓவரா? நாங்களும் தூங்கவே மாட்டோம்."

"கண் முழிக்கறதுக்காகவே சினிமாவெல்லாம் போயிருக்கோம்."

"நாங்களும்தான் நாலைஞ்சு டிவிடி வாங்கிவந்து போட்டுப் பாப்போம்."

"சாமிப் படமா இருக்கணுமுன்னு கண்டிஷன் இருக்கு."

"எங்களுக்கு ரொம்ப ஸ்கேரியா இருக்கணும்."

"தூக்கம் வராம இருக்க தாயம், பல்லாங்குழி, பரமபதம் எல்லாம் விளையாடுவோம்."

"நாங்களும்தான் டைஸ் வச்சு மோனோப்லி, ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாடுவோம்."

"ஹாஹா... அந்த ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்தான் பரமபதம். அப்பாடி இது ஒன்னாவது, ஒண்ணா இருக்கே!"

"ஆனா ...மறுநாள் வீட்டுக்கு வந்துட்டு நீங்கெல்லாம் நல்லாத் தூங்குவீங்கல்லே...நாங்க அப்படியில்லை. மறுநாளும் பகலில் தூங்கவே கூடாது. நல்ல அருமையான சாப்பாடெல்லாம் செய்வாங்க. ஒரு பிடி பிடிச்சுட்டு அப்படியே கண் இழுத்துக்கிட்டுப் போகும்போது தூங்குனா பலன் இல்லையாம். அதுக்காக பிக்னிக் போறமாதிரி பக்கத்தூர் கோவிலுக்குப் போய் வருவோம். அதுவும் நடந்து போவோம். அப்பெல்லாம் ஆட்டோ, டாக்சி எல்லாம் இல்லை. பஸ் பிடிச்சுப் போகணும். பாட்டி சொல்வாங்க போறப்ப ஜாலியாப் பேசிக்கிட்டே நடந்து போகலாம். திரும்பி வரும்போது பஸ் எடுக்கலாமுன்னு. அன்னிக்கு சாயந்திரம் விளக்கு வச்சபிறகு சாமி கும்பிட்டுட்டு எதையாவது லைட்டாத் தின்னுட்டு வீ ஸ்லீப் லைக் லாக்(g)ஸ்."

வைகுண்ட ஏகாதசியைப் பத்தி ஒரு சமயம் மகளோடு பேசுனதெல்லாம் நினைவுக்கு வந்துச்சு.

இந்த சொர்க்கவாசல் சொர்க்கவாசல்ன்னு சொல்ற சமாச்சாரத்தை இதுவரை வாழ்நாளில் ஒருமுறைகூட வைகுண்ட ஏகாதசிக்குப் பார்த்ததே இல்லை. அதுவே மனசுலே ஒரு குறையா இருந்துச்சு. இந்த முறை இந்தியாவில் அதுவும் சென்னையில் இருக்கோம். நம்ம(??)கோவிலிலேயே பார்த்துடலாமுன்னு பக்காவா ப்ளான் வச்சுருந்தேன். சாமிக்குப் பிடிக்கலை. காய்ச்சல், இருமல்ன்னு வந்து கொஞ்சம் படுத்தல். போயிட்டுப்போகுது. டிவியிலே லைவா காமிப்பாங்களாமே. மூணுமணிக்கு எழுந்து பார்க்கணும்.


மூணடிக்க ரெண்டு நிமிசம் இருக்கும்போது கோபால் வந்து எழுப்புனார். அவருக்கு இருமல் கூடுதல். தூங்கவே இல்லையாம். நான் எழுந்து சாமிரூம் லைட்டைப் போட்டுக் கும்பிட்டுக்கிட்டு, அங்கிருந்து கண்ணை மூடிக்கிட்டே டிவி இருக்கும் ஹாலுக்குப் போனேன்,விஷுக்கணி பார்க்கும் நினைவில். கண்ணைத் திறந்தால்.... சிம்புவும் ஜோதிகாவும் ஆடிக்கிட்டு இருக்காங்க. ஜெயா போடாம எதுக்குக் கண்ட கண்றாவிகளைப் பார்க்க வைக்கிறீங்கன்னு ஒரு பாய்ச்சல். . அது ஜெயாதானாம். இன்னும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கலையாம். பாவம் கோபால். த்சு த்சு.

சிம்ரன், பிரசாந்த் , அப்புறம் இன்னொரு ஜோடின்னு ஆடி முடிச்சு ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் திரைக்கு வந்துச்சு. குரல் கொடுக்கறவர்வேற விசித்திரமாப் பேசறார். ஸ்ரீஈஈஈஈஈஈ ரங்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கோஓஓஓஓஓஓஓவிலில் இருந்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

நம்மாழ்வார்ன்னு எங்கியோ கேக்குது. கண் அப்படியே இழுத்துக்கிட்டுப்போய் நான்...........சோஃபாவில் உக்காந்து தூங்கியிருக்கேன். கண் விழிச்சால் கழுத்துவலியான வலி. டிவியிலே என்னவோ மசமசன்ன்னு ஓடுது....சாமி போல! இனி தாங்காது....... படுக்கையில் வந்து விழுந்தேன்.


ஒரே தன்னிரக்கமா இருக்கு. அட ராமா! இப்படிக் கிடைச்ச வாய்ப்பையெல்லாம் கோட்டைவிட்டுட்டேனே. இனி எப்ப வைகுண்ட ஏகாதசிக்கு இங்கே வரப்போறோம்? இன்னிக்கு முழுக்கக் கோவிலில் 'அந்த' சொர்க்கவாசல் திறந்துருக்குமாம். கோவிலிலும் நடை அடைப்பு இல்லையாம். மூணுமணிக்கே புறப்பட்டுக் கோவிலுக்குப்போனால்.....(இது பகல் மூணு) அந்தப் பேட்டையே உருமாறிக்கிடக்கு. சவுக்கு மரக் கட்டைகளைவச்சுப் புதுசு புதுசா வரிசையில் வர ஒரு ஏற்பாடு. வாகனப் போக்குவரத்து இல்லை. கூட்டம் நெரியுது. கோவில் வாசல் மட்டும் காலி. கேட்டுக்குள் நுழையப்போகும்போது.....

''அம்பது ரூபாய் டிக்கெட்டு"

குரல்கேட்டுத் திரும்பினால், இன்னிக்குச் சாமி பார்க்க அம்பது ரூபாய் வரிசை இங்கேயாம். 'தினம் பார்க்கும் சாமியை எதுக்கு அம்பது ரூபாய் கொடுத்துப் பார்க்கணும்?' னு கோபாலைப் பார்த்தால் ஆமாம்னு தலையாட்டறார்.(எதுக்கு ஆமாம்?) இலவச சேவைப் பக்கம் போகலாமுன்னா கோவிலைச் சுத்தி மூணு தெருவுக்கு நீளமான வரிசை. "ஏங்க இன்னிக்குக் கட்டாயம் சாமி பார்க்கணுமா? தினம்தினம் நான்போய்ப் பார்க்கிறேனில்லை. இன்னிக்கு வேணுமுன்னா அவனே வந்து பார்க்கட்டும்"

இதுக்கும் ஒரு 'ஆமாம்' தலையாட்டல்! கோவிலையொட்டி இருக்கும் ஹாலில் மார்கழி இசைநிகழ்ச்சி நடக்குது அதைக் கேட்டுட்டுப் போகலாமுன்னு அங்கே நுழைஞ்சால், இன்னிக்கு நாள் முழுக்க பிரஸாதம் விநியோகமாம். பீன்ஸ், கேரட் பதிச்ச சாம்பார்சாதம் தொன்னையில் வச்சுக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. ஜனங்க வாங்கித் தின்ன கையோடு தொன்னையை அங்கங்கே வீசிப்போட்டுட்டு போக சின்னமலைக் குவியல்கள். எதுலேயும் பட்டுக்காமல் நீந்தி ஹாலுக்குள்ளே போனால் ஒரு குழுவா யூனிஃபார்ம் போட்டமாதிரி ஒரே மாதிரிப் புடவைகளில் திருப்பாவை பாடிக்கிட்டு இருக்காங்க மேடையில். 'புள்ளும் சிலம்பினகாண்'

கிடைச்ச நாற்காலிகளை இழுத்துப்போட்டு உக்கார்ந்தா, கோபால் என் தோளைத்தட்டி அங்கே பாருன்னு ஜாடை காமிக்கிறார். என்ன ஆடுதுன்னு அசட்டையாத் திரும்பினா.............பெரிய கருடன் தோள்மேல் பெருமாள்!!!!(இந்தக் கோவிலில் சின்னதும் பெருசுமா ரெண்டு கருடவாகனம் உண்டு)
ஹாலில் இருந்து கோவிலுக்குப் போகும் வாசலில் வந்து நின்னுக்கிட்டு இருக்கார்.

சொன்னதைக் கேட்டுட்டு அவனே வந்துட்டான்! இன்னிக்குப் பார்த்துக் கேமெரா கொண்டுபோகலை. சொர்க்கத்துக்கு எதுக்குன்னு விட்டுட்டு வந்துருக்கேன்(-: கோபாலின் செல்லில் ரெண்டு படம் எடுத்தாச்சு.(அதை கணினியில் ஏத்தமுடியலைன்றது இன்னொரு சோகம். உங்களுக்குக் கொடுத்துவைக்கலை!)

அகிலாமாமி சில குறிப்பிட்ட மக்களுக்கு ஏதோ சீட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. அடுத்து அவுங்க திருப்புகழ் குழு பாடப்போகுதாம்., இன்னும் அஞ்சு நிமிசத்தில். எல்லாருக்கும் ஒவ்வொருமணிநேரம் ஸ்லாட். முருகா முருகான்னு ஆரம்பிச்சது பாட்டு. மார்கழியைத் தூக்கி மருமானுக்குக் கொடுத்துட்டான். போகட்டும். கிளம்பி வரும்போது நம்வீட்டு 'முருகபக்தர்' 'அறுபடைவீட்டுக்குப் போகலாம்'ன்னார். வைகுண்டத்துக்கு சிவலோகத்திலே சைடு கேட் இருக்குமுன்னு சரின்னேன். இங்கே அவ்வளவாக் கூட்டமில்லை. (இந்தக் கோவிலைப் பத்தி இன்னொருநாள் விஸ்தரிக்கலாம்)

துவாதசி வந்தாச்சு. அதே கோவில் அதே பெருமாள், அதே போஸில் அதே போல். முந்தியநாளின் அமர்க்களம் ஒன்னும் இல்லாமல் வெறிச்சுன்னு இருக்கு!

"'என்னடா இப்படிப் பண்ணிட்டே நேத்து? பயங்கர டிமாண்டா ஒரு நாளுக்கு?"

" யாருக்குத் தெரியும்? நான் தேமேன்னு கிடக்கேன். ஜனங்க பண்ணும் கூத்து! எனக்கோ எல்லா நாளும் ஒன்னுதான்."

"கடைசியிலே அந்த சொர்க்கவாசலைத் தொறந்துவச்சப்பக் கண்ணுலே காமிக்கலை பாரு?"

" எதுக்கு இப்படி ஆதங்கப்படறே? இது எதுக்கு? கதவுக்கு அந்தாண்டை சின்ன சந்து வழின்னா இருக்கு. உனக்கு உண்மையான சொர்க்கவாசலைன்னா காமிக்கணும். 'அங்கே' வரும்போது கேரண்ட்டி"

வழக்கம்போல் வலம்வந்தால் உற்சவர் சந்நிதிக்கு முன்னால் நேற்றிருந்தவர் அதே கோலத்தில். அடடா..... ஒருவேளை பதிவுலகத்துக்குக் கொடுத்து வச்சுருக்கோ? படம் எடுக்கலாமான்னு கோவில் (சின்ன)பட்டரிடம் 'கேட்டால் தெரியலை. ஆஃபீஸில் கேளுங்கோ.' ஓடிப்போய் கேட்டேன். 'பெருமாள், ஃபோட்டோ, கருடவாகனத்தில்........'

தாராளமா எடுத்துக்குங்கோ!!!!

ஆஹா... பதிவுலகம் 'கொடுத்துத்தான் வச்சுருக்கு!'


மேலே: வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல். திருவீதி உலா. பெரிய கருடர்

கீழே: சின்ன கருடர். கோவிலில் 2009 அக்டோபரில் நடந்த கருடசேவை
பார்க்க ஒன்னுபோலவே இருக்கா? அதான் இல்லை! நல்லப் பாருங்க. ஆறு வித்தியாசம் கண்டுபிடிங்களேன்:-)

Monday, December 28, 2009

இப்போ எல்லாமே தீம் தீம் காலம்

க(g)ல் கல் கல் ச(ch)ல் சல் சல்ன்னு தொண்டையில் சலங்கை கட்டிக்கிட்டு ஒரே ஆட்டம்தான் நம்ம வீட்டுலே போங்க!

'அடக்கி' வாசிச்சுக்கிட்டே அப்படியும் முத்ராவுக்குப் போனோம். எம் எல் வி. பற்றி ஒரு டாக்குமெண்டரி போடறாங்களாம். திருப்பாவைன்னதும் அவுங்கதான் தானாவந்து மனசுலே உக்கார்ந்துக்கிறாங்க. புதுசுப் புதுசா எத்தனையோபேர் வந்து டிவியிலே பாடிக்கிட்டு இருந்தாலும்....ஒன்னும் மனசுக்கு............ சரி. விடுங்க வேணாம். (இதைப் பற்றித் 'தனி'யில் சொல்றேன்)

ஸ்ரீவித்யா ஒரு சமயம் குறிப்பிட்டதுபோல் எம் எல் விக்குப் போதுமான முக்கியத்துவம் கிடைக்கலை என்பதே மனசின் மூலையில் ஒரு சோகம்தான். அதே மரியாதைதான் அவுங்க மகளுக்கும் கிடைச்சது. என்னமோ போங்க. சிலசமயம் கூடுதல் தகுதியோடு இருப்பதே ஒரு தகுதி இல்லா(ய்)மையாப் போயிருது(-: அதுவுமில்லாம...... அவுங்களுக்கு அமைஞ்சதும்....... வேணாம்... விடுங்க. இப்ப அதையெல்லாம் யோசிச்சு என்ன ஆகப்போகுது?

தூர்தர்ஷனில் வந்த ஒரு சில நிகழ்ச்சிகளையும் போட்டோக்களையும் வச்ச ஒரு விவரணமா இருந்துச்சு நாங்க பார்த்தது. சின்ன வயசுலே ரொம்ப அழகா இருந்துருக்காங்க (நம் எல்லாரையும் போலவே)


இப்போதைய நட்சத்திரங்கள் மினுங்குதா?



இங்கே பாருங்களேன் , யாரெல்லாம் இருக்காங்கன்னு!

எம் எல் விக்கு அப்புறம் சூர்யபிரகாஷ்ன்னு ஒரு இளைஞர் பாடினார்.(கலைஞர்களில் எத்தனை வயசுவரை இளைஞர்ன்னு சொல்லணும்?) முந்தியே ஒருமுறை நாரதகானசபா மினியில் கொஞ்சம் கேட்டுருக்கோம். நல்ல வளமான குரல் & ஞானம். கேமெராவும் கையுமா நான் ஃபோகஸ் பண்ணப்ப, தலையை உயர்த்தி கம்பீரமா போஸ் கொடுத்தார் அப்போ. பாகவதர் கிராப். 'தலைமுடி இன்னும் நீளமா இருக்கே'ன்னு சொன்ன கோபாலுக்கு, 'மூணுமாசம் ஆச்சே. வளர்ந்துருக்காதா? 'ன்னேன்.
ஏதோ வந்தோம் பாடுனோமுன்னு இல்லாம இப்பல்லாம் 'தீம்' ஒன்னு போட்டுக்கறாங்க. இன்னிக்கு அமுதும் தேனும். அமுதுன்னா சாஸ்த்ரீயமான கர்நாடக சங்கீதம். தேனும்? ராகங்களின் அடிப்படையில் அமைஞ்ச சினிமாப் பாட்டுகள். அதுவும் இன்னிக்கு ரெண்டு மணி நேரம் அமுதும், ஒரு மணி நேரம் தேனுமாத் தருவாராம். நாற்பதுகளின் பாடல்களாம்! ஏற்கெனவே 'விஷயம்' தெரிஞ்சுவந்த 'ரசிகர்கள்' கூட்டம்! சபையை ஒரு பார்வையில் நான் சுலபமாக் கணிச்சிருக்க முடியும், கவனிச்சு இருந்தால்.
எல்லோரும் தேனுக்காகக் காத்திருந்தார்கள்!

மார்கழிக் குளிருக்கு இதமா சூடா காஃபியில் 'அன்னையும் தந்தையும் தானே...அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்' எம்கேடி பக்தர்கள் ஏராளம் கூட்டத்தில்!

விருத்தம்னு எஸ் ஜி கிட்டப்பாவின் 'கோடையிலே இளைப்பாறி' மக்கள் சிலரின் வெறும் தலையாட்டம்.

மனமே தினமும் மறவாதே ஜகதீசன் மலர்ப்பதமே..... எம் எஸ் இல்லையோ இது? லேடீஸ் சாய்ஸா?

க்ருஷ்ணா..............முகுந்தா..........முராரே..... சபை கலகலத்தது!

சட் சட்ன்னு முடிஞ்சுரும் சின்னச்சின்னப் பாடல்கள்.

கொஞ்சம் விஸ்தாரமா 'பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா' ராகமாலிகா. எம்ஜியார் படம் இது. ராஜா தேசிங்கு.

பாரதி பாட்டு வேணுமுன்னு கூட்டத்தில் இருந்து ஒரு குரல். ஒருவிநாடி யோசனைக்குப் பிறகு..... செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து....... பி யூ சின்னப்பா பாடியது.


மனமே நீ ஈசன் நாமத்தை......வாழ்த்துவாய்..... எம் கே டி. சபை முழுக்க மறுபடி ஆரவாரம். பிடிகிட்டிப்போச்சுப் பாடகருக்கு, எதுக்கு மவுசுன்னு.

'நல்ல குண்டா, கருப்பா, நீண்ட கால்களோடு உயரமா' வந்து உக்கார்ந்தது ஒரு கொசு. மெலிசான தோலின் உள்ளே மினிமினுக்கும் ரத்தம். தாங்காதுன்னு எழுந்தோம். க்ளோஸ் அப் ஒன்னு எடுக்கலாமுன்னு கொஞ்சம் மேடை அருகே போனால்.... கணீருன்னு 'தீனக் கருணாகரனே நடராஜா' அடடா.... எனக்குப் பிடிச்ச பாட்டு! இதுக்கு மட்டும் இருந்துட்டுப் போகலாமான்னு தீனமா ஒரு பார்வையை கோபால் இருக்கும் திசையில் அனுப்புனால்..... அங்கே ஆள் காலி. நடையை கட்டிட்டார்! வெளியிலும் கேக்குதாமே!


ஏதோ சலசலப்புச் சத்தம் கேக்குதேன்னு எட்டிப் பார்த்தால் சுநாமியின் அஞ்சாம் ஆண்டுக்கான அமைதி ஊர்வலம். போனவங்களை நினைச்சால் மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு.

என்னவோ ஒரு வைரஸ் ஊர் முழுக்கக்கிடக்காம்..... லேசா ஆரம்பிச்ச ஜுரம். மாலைவரை வீட்டுலே அடைஞ்சுருந்தோமே.... சாயங்காலம் கோவிலுக்குப் போயிட்டுப் புத்துணர்வு பெற அங்கே கோவில் மண்டபத்துலே ஆட்டம் பார்த்துட்டு வரணும். சொர்ணமால்யா ஒன்னு சுகப்படலை. எனக்கு எரிச்சலா வந்தது அந்த கலர்ஸ் கோஆர்டிநேஷன். நிகழ்ச்சி தருமுன்பு கலைஞர்கள் இதையெல்லாம் கவனிக்க வேணாமா? இதென்ன கிராமத்துத் திருவிழா போல கொட்டாய் போட்டு அன்னிக்குக் கிடைப்பதைவச்சா மேடை அலங்காரம் ஆகுது? ஏற்கெனவே நாலஞ்சு நாளா இங்கே ஹாலில் இசைவிழா நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. நாட்டியமணி, இல்லே அவுங்க உதவியாளர் யாருமே கவனிக்கலையா? சிவப்புக்குச் சிவப்பு ச்சீன்னு போச்சு. ஹாலில் முக்காவாசி மாமாக்கள். (தேசிகன் கல்யாணியின் பாதிப்பு!)போகட்டும் மாமாத்தாத்தாக்கள்ன்னு வச்சுக்கலாம்! ரசிப்புக் கூடிப்போச்சு! பத்து நிமிசத்துக்குமேலே தாக்கிப்பிடிக்கமுடியலை எனக்கு. கிளம்பி வந்துட்டேன்.

அடுத்த இன்னொரு நாள் இன்னொரு தீம்.. பொற்காலத்தின் சொற்கோலங்கள். எம்.எஸ்,விஸ்வநாதன் & குழுவினரின் நிகழ்ச்சி.
டிக்கெட் கிடைச்சால் பார்க்கலாமுன்னு போயி, கவுண்டரில் கேட்டால்.... உங்களுக்காகவே முற்றிலும் இலவசம்னு பால் வார்த்தாங்க.
ரொம்பப் பழைய அரங்கு. ஒரு நாப்பது வருசமுன்பு ஒரு நாடகம் பார்த்துருக்கேன் இங்கே. மாற்றங்கள் ஒன்னுமே இல்லாம அப்படிக்கப்படியே இருக்கு இப்பவும். தமிழிசை மன்றம். முன்முற்றத்தில் அரசர் கம்பீரமா நிற்கிறார். அரங்கின் உள்ப்புறம் நீஈஈஈஈஈளக்கம்பிகளில் தொங்கும் 35 மின்சாரவிசிறிகளும், பழைய தமிழ் எழுத்துக்களில் இருக்கும் ணா, லை எல்லாமே கடந்தகாலத்தை மறைமுகமா உணர்த்தும்.
போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கிட்டாராம் இசைப்பேரறிஞர். அறிவிப்புகள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது. வெறும் 25 நிமிஷத் தாமதத்தில் நிகழ்ச்சி ஆரம்பிச்சது. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற (திருஞானசம்பந்தர் தேவாரம்) கடவுள் வாழ்த்து.

முக்கியப் பாடகர்களாக நாலு பேர். 2 x 2 என்ற கணக்கில். ஆனால் அப்பப்ப எம்எஸ்வியும் சேர்ந்துக்கறார். ஆரம்பமே அவர்தான் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....' கடைசியில் 'எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களே'ன்னு முடிச்சார்.

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

தேடினேன் வந்தது.....

உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி

மதுராநகரில் தமிழ்ச்சங்கம்

பாடகர்கள் பெயர் எனக்குத் தெரியலை. ஆனால் சென்னைவாசிகளுக்குத் தெரிந்திருக்கலாம். ஆரஞ்சு ஷர்ட் போட்டுருந்தவர் டிஎம்எஸ் குரலுக்குப் பொருத்தமா இருந்தார் (ஒருவேளை அவரேதானோ?)

அவளுக்கென்ன அழகிய முகம்.........

சபையினரில் இளவட்டங்களின் கூவல். நமக்கு முன்னே வரிசைகட்டி இருந்த இளவட்டிகளின் முகத்தில் நாணம் கலந்த புன்னகை.

அனுபவம் புதுமை..........அவரிடம் கண்டேன்...அந்நாளில் இல்லாத பொல்லாத....... பயங்கர ஆரவாரம் பின்வரிசையில் இருந்து!

மற்ற இசை அமைப்பாளரின் பாடல்களையும் பாடப்போவது எம் எஸ். வியின் பெருந்தன்மை என்று மேடையில் புகழ்ந்தபின்......

ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு ......இளையராசா.

இளசுகள்கூட பாட்டுக்குக் கைதட்டித் தாளம்போட்டு ரசித்தாங்க. இந்தப் படம் வந்தப்ப அவுங்க பொறந்துகூட இருப்பாங்களான்னு சந்தேகம்.

ரீமிக்ஸ் செய்யறதுபோல அதே சந்தத்தில் வரும் பாட்டுன்னு 'சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா'

அட! ஆமாம். கண்டுபிடிக்கவே முடியலை பாருங்க!

கூட்டத்தைக் கலகலப்பாக்க......'வெத்தலை போட்டப் பத்தினிப் பொண்ணு சுத்துது முன்னாலே' கிறுகிறுன்னு ஏறுது மக்களுக்கு!

தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா?

சூப்பர் ஸ்டார் இருபத்தியேழே படம்தான் பண்ணி இருக்கார். ஆனாலும் அவரை அப்போ மிஞ்ச ஆளில்லை.... உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? வடிவழகிலும்.....குணமதிலும்... எம் கே டி..
எழுதியதும் இசை அமைச்சதும் பாபநாசம் சிவன்.

உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு.....

பார் மகளே பார்.... நீயில்லாத மாளிகையை......அட்டகாசம்.

ஏஆர் ரெஹ்மானின் சின்னச் சின்ன ஆசை..... அதே ராகத்தில்
வீடுவரை உறவு,
பேசுவது கிளியா?
மாம்பழத்து வண்டு....வாசமலர்ச் செண்டுன்னு நாலு பாடல்கள் ஒரே சந்தம்!
அவர் சொல்லைன்னா தெரிஞ்சே இருக்காது. நீங்களே பாடிப் பாருங்க...

இதே போல.... வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே... & வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.... இது ரெண்டும் ஒரே மாதிரி.

அடுத்துப் பாடுனதுதான் நம்பவே முடியலை. Love is fine darling will you mind அப்படியே ரகுபதி ராகவ ராஜாராம்!!!!
ரெஹ்மான், ராஜா, வித்யாசாகர் எல்லோரும் ஒன்னா இருந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்து பேசினார் 'மூத்த' கலைஞர் எம் எஸ் வி.

கோபாலுக்குத் தலைவலியாம். இடிக்க ஆரம்பிச்சதும் உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யார் அறிவார்?...... முடிக்கக் காத்திருந்து எழுந்தோம். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... இங்கே மெதுவாப் போறவுங்க யாருமில்லேன்னதும் ஆமான்னு விறுவிறுன்னு வெளியில் வந்தாச்சு.

தீவுத் திடல்வழி வரும்போது செங்கோட்டையில் தமிழக இப்போதைய முதல்வரின் படம் ஒளிர முகப்பு அலங்காரம். அச்சுஅசலான கோட்டை அமைப்பு. எல்லாம் சினிமாவால் வந்த ஜாலங்கள். சுற்றுலாக் கண்காட்சியாம். போலாமா ஒரு நாள் ? நீங்க ரெடின்னா நான் ரெடி:-)

Saturday, December 26, 2009

பதிவர் வீட்டு விசேஷம்

சும்மாவே ஆடுவேன். இதுலே கொஞ்சம் கள்ளையும் ஊத்திக்கிட்டாக் கேக்கணுமா? ஒரு ஒம்போது மாசமுன்பு சிங்கையில், தோழிவீட்டுக்குப் போயிருந்தப்ப (மசால்வடை ஸ்பெஷலாச் செஞ்சுவச்சுருந்தாங்க இந்த எலிக்காக!) அநேகமா இந்தியா வாசம் அதுவும் சிங்காரச்சென்னையில் லபிக்கப்போகுதுன்னு..........

'அடிச் சக்கை. பொண்ணோட நடனஅரங்கேற்றம் டிசம்பரில் வச்சுருக்கேன். சீக்கிரமாப் போய்ச் சேரு. தோ.... பின்னாடியே வர்றோமு'ன்னாங்க. ஆஹா..... கூடச் சேர்ந்து 'ஆட'க் கூப்புட்டுருப்பாங்க ன்னு பயிற்சி எல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தேன். ஸ்டாப்...... ரொம்பக் கற்பனைக்க வேணாம். முக்கியமான ஆளா நினைச்சுக்கிட்டு அரக்கப் பரக்க இங்கேயும் அங்கேயுமா ஓடத்தான் பயிற்சி.

விழாவுக்கு ரெண்டுவாரமுன்பு சிங்கைத்தோழி இங்கே வந்துட்டாங்க. அழைப்பிதழ்கள் கொஞ்சம் கையில் வச்சுக்கிட்டு, பதிவுலகத் தோழிகளைப் பார்த்துக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.
தினமும் மூணு மணிநேரம் நடனப்பயிற்சி (தோழியின் மகளுக்குத்தான்)நடந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம வீட்டிலும் மின்தூக்கி (நம்ம கனம் தாங்காமல்?) மண்டையைப் போட்டதால் படிகள் ஏறி இறங்கியே ஒரு பத்துப் பதினைஞ்சு கிராம் இளைச்சேன்.

தக்ஷிணாமூர்த்தி ஹால். மயிலை பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் இருக்கு. போய்ச் சேர்ந்தப்ப வாசலில் அழகான பூக்களமும் நடுவில் வச்ச உருளியில் மிதக்கும் தாமரைகளும். பசுமைச்செடிகள் உள்ள தொட்டிகள் வாசலில் இருமருங்கும். மேடையிலும் ரொம்ப நீட்டா மலர்ச்சரங்களைத் தொங்கவிட்டு அழகுபடுத்தி இருந்தாங்க. நடராசர், பிள்ளையார், கடைசியா நம்ம ருக்மிணி அருண்டேல் அம்மாவின் படமுன்னு மூணடுக்கு. இப்பெல்லாம் எதுக்குமே மெனெக்கெடவேணாமுன்னு ஆகிப்போயிருக்கு. ஹால் அலங்காரம் எல்லாமும் காண்ட்ராக்ட் தானாம். அடடா.... அந்தக் காலத்துலே கல்யாணம், கச்சேரி, விசேஷமுன்னு இருந்தால் நாமே எல்லாத்தையும் இழுத்துப் போட்டு ஆக்கி அரிச்சுன்னு தாவு தீர்ந்துரும். கடைசியில் பார்த்தால் நாம் ஒரு விநாடி நின்னு நிதானிச்சு நம்ம ஏற்பாடுகளைப் பார்த்து ரசிக்கக்கூட நேரம் இருக்காது. இப்ப இந்த ஃபாஸ்ட் உலகத்துலே அத்தனையும் ஃபாஸ்ட்டே. ஒக்கே ஸ்பீடு!
வரும் மக்களை வரவேற்க ரோசாப்பூக்களும் கல்கண்டும், சந்தனமும், பன்னீருமா அட்டகாசம். ரோசாவைத் தலையில் வைக்க ஹேர்ப்பின் இல்லாமத் தவிப்போமேன்னு அதுக்கும் ஒரு ஏற்பாடு! என்னமா உக்காந்து யோசிக்கிறாங்கப்பா! பலே பேஷ் பேஷ்ன்னு சொல்லவச்சது. இதுலே வீடியோக்காரர் வேற கோபாலை நிக்கவச்சு 'ஷூட்' பண்ணிக்கிட்டு இருக்கார். நீங்களும் நில்லுங்க மேடமுன்னு உபசரிப்பு வேற. ரொம்ப ஜம்பமா ஒரு ரோசாவை எடுத்து 1 4 3 சொல்லி என் கையில் கொடுத்தார் கோபால். ஓசிப்பூவில் ஒன்னும் குறைச்சல் இல்லை:-)))))


நடக்கப்போகும்அன்றைய நிகழ்ச்சி முழுசும் அச்சடிச்சுக் கையில் கொடுத்துட்டாங்க. அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும் வடிவமைச்சது நடனமணியின் கைங்கர்யம். நிரலில் விட்டுப்போன ஒரே ஐட்டம் கொஞ்சநேரத்துக்கு மின்சாரவிசிறிகள் ஒட்டுமொத்தமாப் பண்ண வேலை நிறுத்தம். சிங்காரச்சென்னை விஷயம் சிங்கைக்காரர்களுக்குத் தெரியலைப்பா!!!


சிங்கைப்பதிவர் மானஸாஜென் போஸ்டர்களை அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்தார். இவர் ரொம்ப அழகா படங்கள் வரைவார். ஒரு நாலரை வருசத்துக்கு முன்னே சிங்கையில் நடந்த 'முதல்' அகில உலகப் பதிவர் மாநாட்டில் மீராவின் படமொன்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அடுத்தமுறை வேற படம் அன்பளிப்பாத் தரச்சொல்லிக் கேக்கணும்:-))))
(மானஸாஜென் என்ற ரமேஷ் சுப்ரமணியம் & கோபால்)


முக்கியமான ஒருத்தரா இருக்குமுன்னு நான் நினைச்சவர் காரில் வந்து இறங்கினார். சிங்கை டாக்டர் காசிநாதன். SIFAS (Singapore indian Fine Arts Society) இப்போதையக் காரியதரிசி. அப்படியே அவரிடம் கொஞ்சம் விஷயம் சேகரிச்சுக்கிட்டேன் உங்களுக்காக.
1949 வது ஆண்டு, அஞ்சு மாணவிகளும், ஒரு ஆசிரியையுமா ஆரம்பிச்ச இந்த கலைச்சங்கம் இன்னிக்கு பெரிய ஆலமரமாக் கிளைவிட்டு வளர்ந்துருக்கு. இன்றையக் கணக்கில் 1500 மாணவ மாணவிகளுடன் 23 ஆசிரியர்கள். காலை 9 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும் பள்ளி. வெவ்வேறு நேரத்தில் பாட்டு, நடனம்னு வகுப்புக்கள் ந்டந்துக்கிட்டே இருக்காம். நாட்டியம் மட்டுமில்லாமல் வாய்ப்பாட்டு கர்நாடக சங்கீதம் & ஹிந்துஸ்தானி சங்கீதம் ரெண்டும், வயலின், ம்ருதங்கம், தப்லா, வீணை, விஷுவல் ஆர்ட்ன்னு பெயிண்டிங் வகுப்புக்களும், சுருக்கமாச் சொன்னால் எல்லாக் கலைகளும் ஒரே கூரையின் கீழ்!!!!இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவமாணவிகளுக்கு பரிட்சைகள் வச்சு டிப்ளமோ வழங்கறாங்க. இன்னிக்கு நடனமாடப்போகும் ஷ்ருதி, இந்த வருடத் தேர்வில் முதலிடத்தில் வெற்றியடைஞ்சு 'நாட்டிய விஷாரத்' என்ற பட்டம் வாங்கி இருக்காங்க. சங்கத்துக்கு 60 வயசாகுது. புதுவருசம் பிறந்தவுடன் பெரிய திருவிழாவுக்கு ஏற்பாடுகள் நடக்குதாம். டாக்டர் காசிநாதன் வருசாவருசம் ம்யூஸிக் சீசனுக்குச் சென்னை வந்துருவாராம்.
ஷ்ருதியின் குருவைப் பற்றிச் சில வார்த்தைகள். குரு குருன்னதும் ரொம்ப வயசானவங்களா இருப்பாங்கன்னு போனவளுக்குக் குருவைப் பார்த்ததும் வியப்புதான்.சரூப்பா தாஸ், கலாஷேத்ராவில் பயின்றவர். மோகினியாட்டம் படிச்சது த ஃபேமஸ் கல்யாணிக்குட்டியம்மெயிடத்து. அஞ்சு வருசமா சிஃபாஸில் நடன ஆசிரியை. இப்போ சிலமாதங்களா ஷார்ஜாவில். புதுக் கல்யாணப் பொண்ணு.

இசைக்குழுவைப்பத்தியும் சொல்லாமவிடக்கூடாதில்லெ? மங்களம் ஷங்கர். ஆல் இந்தியா ரேடியோவில் 'ஏ' க்ரேடு கலைஞர். ஸ்ரீ டி.எம். தியாகராஜனின் சிஷ்யை. சிங்கை வானொலியிலும் சிலகாலம் பணி செஞ்சுருக்காங்க.
ம்ருதங்கம் வாசிச்சவர் வேதகிருஷ்ண ராம். யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஸ்வர்ணமுகி, தனஞ்செயன், சுதாராணி ரகுபதி போன்ற பெரிய ஆட்களுக்கு வாசிச்ச கைகள். கேக்கணுமா? தூள் கிளப்பிட்டார்.

ஃபிடில் வாசிச்சவர் அனந்தகிருஷ்ணன். வயலின் பரம்பரைன்னு சொல்லணும். தாத்தா ஸ்ரீ வெங்கட ராமானுஜம் ஐயங்கார் அந்தக் காலத்துலே பெரிய வயலின் வித்துவான்.

குழலிசை ஸ்ரீ பி.என். ரமேஷ். தமிழ்நாடு இசைக்கல்லூரி சென்னையில் சங்கீத வித்துவான் பட்டம் பெற்றவர். நடனத்துக்கு வாசிக்கவே பொறந்தவர் போல இருந்தார்.

பக்க வாத்தியங்கள் எல்லாம் ரொம்ப அருமையா அமைஞ்சு எல்லாம் பக்காவா இருந்ததுன்னு சொல்லி வாழ்த்தியவர் விழாவைத் தலைமையான சிறப்பு விருந்தினர் திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள். மைக் பிடிச்சு மேடையில் நிற்கும்போதே தேர்ந்த கலைஞரின் கை அசைவுகள், முகபாவனைன்னு அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. அந்தப் பேசும் கண்களைப் பார்த்து அப்படியே அதிசயிச்சு நின்னேன் என்பதே நிஜம். மூணு வயசில் நடனம் கத்துக்க ஆரம்பிச்சு பதினோராம் வயதில் ஒரு நடனத்தை வடிவமைச்சவர். சித்ராவைப் பற்றிச் சொல்ல ஆரம்பிச்சால் அதுவே ஒரு பத்துப் பதிவுகளுக்கு இழுத்துக் கொண்டுபோகும் அபாயம் இருக்கு. 25.5 வருசங்களுக்கு முன்னே இவுங்க நடனத்தை ஃபிஜித்தீவில் பார்த்தபொழுதில் இருந்து நான் இவரின் ரசிகை.
இந்திய சூழலுக்கு ஒவ்வாதவிதமாச் சரியாச் சொன்னநேரத்துக்கு நிகழ்ச்சியை 'டான்'னு ஆரம்பிச்சாங்க. புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஷப்தம்,ஜதிஸ்வரம், பதம், வர்ணம், தில்லானா, மங்களமுன்னு ரொம்பவே சம்பிரதாயமான கலாஷேத்ராபாணி நடனம். அதிலும் அந்தத் தில்லானாவை வடிவமைச்சது கலாஷேத்ராவின் ருக்மிணி அருண்டேல்தானாம். அவுங்களுக்கே அதை அர்ப்பணிக்கவும் செஞ்சாங்க.
நடனத்தை விமரிசிக்கும் வேலையை நல்லவேளையா எனக்கு வைக்கலை(!!) நம்ம சித்ரா விஸ்வேச்வரன். வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி. இது போதாதா?

எல்லாம் முடிஞ்சு வெளிவரும் சமயம்தான் வந்திருந்த விஐபி ஒருவரைச் சந்திச்சேன். அவர் வருவார்ன்னு ஏற்கெனவே தெரிஞ்சுருந்தாலும் அவருக்காக ஒதுக்கி வச்ச இருக்கை (எனக்கு முன்வரிசையில்) காலியாவே இருந்துச்சே. வியப்பில் 'நீங்களா'ன்னு நான், 'நான் ஜெயமோ......' ன்னு ஆரம்பிச்சவரை அப்படியே 'கன்' சொல்லவிடாமக் கட் பண்ணினேன். உங்களைத் தெரியாதா என்ன ? "நான் துளசி. துளசி கோபால்." ஒரு ரெண்டே நிமிசப்பேச்சு. படம் ஒன்னு க்ளிக். இங்கே இருக்கு பாருங்க.

கண்ணுக்கும், செவிக்கும் விருந்து போதாதுன்னு வயிற்றுக்கும் விருந்து உணவு பார்ஸல் ரெடியா காத்திருந்தது வந்திருந்த எல்லோருக்கும். சங்கீதாவில் இருந்து மினி டிஃபன். கேசரி, ரவா கிச்சடி, மினி இட்லி, மசால் தோசை, மெதுவடை, சட்டினி சாம்பார்களுடன். கூடவே ஒரு 500 மில்லி....... குடிதண்ணீர். ( பெரியவர்கள் பார்வையில் படுவதால் படம் போடவில்லை! ஆனால் ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசையா இருக்கு. போனவாரம் இதே குடும்பத்து சதாபிஷேகத்துலே காலை ப்ரேக் ஃபாஸ்ட்டும் லஞ்சும் அட்டகாசம். அதே ஞானாம்பிகை கேட்டரர்ஸ்தான்!!)

மரத்தடி காலத்து எழுத்தாளர் குடும்பம் நம்ம சித்ராவும் கணவர் ரமேஷும்.
ரெண்டுபேரும் கொஞ்சம் பிஸியாகிப்போனதால் சமீபத்துலே ஒன்னும் எழுதலை. அதுக்காக.... உறவு விட்டுப்போகுமா?

சிங்கையில் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்பில் சித்ரா ஒரு முக்கிய புள்ளி. திண்ணையில் இவரது படைப்புகளைக் காணலாம். இன்னைக்கு முழுக்க முழுக்க குடும்ப நிகழ்ச்சியாப் போயிருச்சு. ரமேஷ் வந்தவர்களை வரவேற்றுப் பேசினார். சித்ரா, ஒவ்வொரு நடனத்துக்கான பொருளையும் பாடல் அமைந்த ராகம், தாளம் எல்லாம் விரிவாகச் சொல்லி விளக்கினார். நன்றி உரை நடனமணி ஷ்ருதி. உதவி செய்த ஒருவரையும் விட்டுவிடாமல் நன்றியுடன் பாராட்டியது விசேஷம்.

ஷ்ருதி ஆடும்போது, என்னவோ என் மகளே ஆடுவதுபோல் ஒரு பெருமிதம் மனசை அடைச்சுக் கண்ணுலே தண்ணீர் (ஆனந்தக் கண்ணீர்ன்னு தனியாச் சொல்லணுமாக்கும்? ) வந்துருச்சு. என்னன்னார் கோபால். தூசி விழுந்துருச்சுன்னேன். புசுக் புசுக்ன்னு இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் கண் நிறைஞ்சுருதுப்பா!

சித்ரா & ரமேஷ் தம்பதியினரின் அன்பு மகள் ஷ்ருதி எல்லா நலன்களும் பெற்று வாழணுமுன்னு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துகின்றேன்..

பதிவர் நானானி நேரிலும், கவிதாயினி மதுமிதா வான்வழியாகவும் வந்து சிறப்பித்தார்கள். கோவீயார் சாட்டில் வந்து வாழ்த்தினார்.

Wednesday, December 23, 2009

மெரீனா

அழகு'படுத்திட்டோம்'ன்னு கொஞ்சநாளா ஒரே பேச்சு. ஆனா நமக்காக இன்னும் திறந்து வைக்கலை. இதுக்கெல்லாம் அசரமாட்டோமுன்னு அங்கே கருவாடெல்லாம் காயப்போட்டு, துணிமணி துவைச்சு, காரைக் குளிப்பாட்டின்னு கழிவறைச் சமாச்சாரமெல்லாம் நடக்குதுன்னு அப்பப்பச் சேதிகள் தாள்களில் வந்துக்கிட்டும் இருந்துச்சு.
ஒருவழியா வேலைகள் முடிஞ்சு ஞாயித்துக்கிழமை(20/12/09) தமிழகமுதல்வர் 'கடற்கரை சொகுசுகளை' மக்களுக்கு அர்ப்பணித்தார். எண்ணி எத்தனை நாளு இது தாங்குமுன்னு தெரியாததால் மறுநாளே அங்கே போனோம். நாட்டுநடப்பை நம் மக்களுக்குச் சுடச்சுடத் தெரிவிக்கவேண்டிய 'கடமை' ஒன்னு நமக்கு இருக்கே! அதுவுமில்லாமல் இது பதிவர் சந்திப்பு நடக்கும் இடம். நமக்காக 'அரசு' என்னென்ன வசதி செஞ்சுருக்குன்னு பார்க்க வேணாமா?

கடற்கரைச் சாலைக்கும், அந்தப் பக்கம் இருக்கும் மணல்வெளிக்கும் இடையில் இருக்கும் இடத்தைத்தான் 'டூரிஸ்ட் ஃப்ரெண்ட்லி'யா சுத்தப்படுத்தி வச்சுருக்காங்க. புல்தரைகளும், ஒளி விளக்குகளும், நீரூற்றுக்களுமா, பளிங்குக்கற்கள், டைல்ஸ் எல்லாம் போட்ட தரைகளுமா அன்றைக்கு(ம்) சுத்தமா இருக்கு.
மணல்வெளியில் பத்தடிக்கு ஒரு தீனிக் கடை. அதைச் சுற்றிலும் பத்திருபது ப்ளாஸ்டிக் இருக்கைகள். அதையும் சுத்தி அம்பதறுவது காக்காக் கூட்டம். கடற்கரைக்கு வந்து போக அநேகமா ஒரு மூணுமணி நேரம் சராசரியா செலவளிப்பாங்க நம்ம மக்கள். இந்தக் கணக்குலே பார்த்தால் தீனிக் கடைகள் அத்தியாவசியமா? அப்படியே அவசியமுன்னு வச்சாலும் ஒரு ஃபுட் கோர்ட் மாதிரி இந்த அலங்கார அமைப்பின் பேஸ்மெண்டில் கட்டி விட்டுருந்தா, மணல்வெளி அழுக்காகாமல் பளிச் ன்னு இருக்குமுல்லே?



எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நிற்கும் ஒரே மௌனசாட்சி
சென்னையைச் சுற்றிவந்த இந்த சிலமாசங்களில் கவனிச்சது பெயர் மட்டுமே. எங்கேயும் எதிலும் இருப்பார் அவர் யாரோ?
மக்களுடைய வரிப் பணத்தில் மக்களுக்காகச் செஞ்சுதரப்படும் வசதிகளுக்கு,அங்கங்கே பொருத்தமான இடங்களில் மெகா சைஸ் எழுத்தில் பெயர் இருக்கு. அரசு'கட்டிலில்' யார் 'அமர்ந்தாலும்' இதெல்லாம் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றில்லையா? நான் சொன்னது வசதிகளை!
புலம்பிக்கிட்டு வந்த என்னை ஒரே சொல்லால் தெளிவித்தார் கோபால். 'அரசியல்'

'இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?

கோவிலுக்கு ஒரு ட்யூப் லைட் வாங்கிக் கொடுத்துட்டு அதுலே வெளிச்சம் வெளிவராத அளவுக்குத் தன் பெயரைப்போட்டு' கைங்கர்யம்' செய்பவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

யோசிச்சேன். ஆஆஆஆஆ............ கண்டுபிடிச்சேன். கைங்கர்யம் செஞ்சவர் தன் கைக்காசைப்போட்டு வாங்கித் தந்துருக்கார்.
என்னமோ போங்க. ............நான் ஒரு தூக்கம் போட்டுட்டு வரேன்.


படிக்கட்டும் ராட்சஸ ரவாலாடுகளும்

சரி,சரி....நான் புலம்பி என்ன ஆகப்போகுது? சீக்கிரமா புதுசா அழகான இடத்தில், ஒரு பதிவர் சந்திப்பு நடத்த ஏற்பாடு பண்ணுங்க. சந்திப்புக்கு வர இயலாதவங்க, இயலும்போது சோம்பல் பார்க்காம ஒரு நடை மெரீனாவுக்குப் போய் அனுபவிங்க. என்ன ஒன்னு..... காலம் கடத்தாமக் கொஞ்சம் சீக்கிரம் போங்க. அம்புட்டுதான் சொல்வேன். (இப்போ) நல்லாத்தான் இருக்கு. எஞ்சாய்.......

பி.கு: மழைக்கு அறிகுறியாக இருட்டிக்கொண்டுவந்ததால் படங்கள் தெளிவாக இல்லை. பழியெல்லாம் மழைக்கே!