Wednesday, March 29, 2023

எதிர்பாராத சந்திப்பு !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 31

ஏம்மா.... என்னவோ நகைகள் (! ) வாங்கணுமுன்னியே....  பத்துமணிக்குப்போய் வாங்கிட்டு வந்துறலாமா.....
தீபாவளியன்னிக்குக் கங்கையில் முங்கினதன்  காரணமோ என்னவோ... அன்றைக்கு மாலையில் இருந்தே காதுக்குள்ளே ஙொய்னு இருந்தது.  சரியாக் கவனிக்காம  ஊர் சுத்தற பிஸியிலே இருந்துட்டேன்.  முந்தாநாள்  ஃப்ளைட்டுலே வந்தாட்டு,  காதடைப்பு வேற !  பொதுவா பயணங்களில் ஃப்ளைட்  தரையிறங்கும் சமயம் இப்படித்தான் காது அடைச்சுக்கிட்டு ஒரு நாள் ஆனதும்  அடைப்பு....'Bப்ளக்'னு ரிலீஸ் ஆகிரும்.  இந்த முறை அந்த 24 மணி நேரக்கணக்கும் இல்லாமப் போயிருக்கு.  

இதுலே முந்தாநாள், காசியிலிருந்து ஹைதை வந்தமா..... பழையபடி காதடைப்பு!  இன்னும் ரிலீஸ் ஆகலை. ஆனால் செலக்டிவ் ஹியரிங்க் போல!!     ' நகைகள்' என்ற அருஞ்சொல்  மட்டும் காதுலே விழுந்துருச்சு, பாருங்க  ! எப்பவாவது இவர்  பேச்சை மீறி நடந்துருக்கேனா என்ன ?   உடனே 'சரி' ன்னேன்.  :-) 

காலையில் எழுந்ததும்  ரயிலை  வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  நம்ம சனத்துக்கு, மெனெக்கெட்டாலும் பரவாயில்லை.... குறுக்கு வழி வேணும்தான்.....  ஸ்டேஷன் வேலியைத் தாண்டிக் குதிச்சு வர்றதும்,  ப்ளாட்ஃபாரத்திலிருந்து குதிச்சு, ரயில் பாதையி ல் நடந்து எதிர்ப்புறம் ப்ளாட்ஃபாரத்துக்கு ஏறி வர்றதுமா  இருக்காங்க. 



வழக்கம்போல் கூரை முழுசும் புறாக்கூட்டம்.  ஒன்னு வந்து ஹலோ சொல்லிட்டுப் போச்சு ! பார்க் பக்கத்துலே புதுக்கட்டடங்கள் வந்துக்கிட்டு இருக்கு. அங்கே வேலைக்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் குடியிருப்பு அங்கேயே......  ஒருவிதத்தில் அவுங்களுக்கு நல்லதுதான்.  வேலை முடங்காமல், நேர விரயம் ஆகாமல் இருக்கும்.

ஹுஸைன் சாகரில்   படகு சவாரி  நடக்குது........  நாமும் கடமைகளை முடிச்சுட்டுக் காலையுணவுக்குப் போகணும்.  அதுவும் ஆச்சு.
வண்டிக்குச் சொல்லவான்னார்.  இங்கே  பொதுவாக் காலை வேளைகளில் அவ்வளவா சுறுசுறுப்பு இல்லை.  எல்லாமே பத்துமணிக்கு மேலேதான்.....  ராத்திரி பத்து, பதினொன்னுவரை கடைகள் திறந்துதான் இருப்பதால்  எல்லாம் நிதானம் ப்ரதானம் ! போன பயணத்துலேயே கவனிச்சதுதான். ஒரு பதினொரு மணிக்கு மேலே   கிளம்பலாமுன்னேன்.

பயணங்களில், ஒவ்வொரு ஊருக்கும் போகும்போது,  நம்ம வரவை ஃபேஸ்புக்கில் போட்டு வைப்பது ரொம்ப நல்ல சமாச்சாரம்.  நண்பர்கள் கண்ணில் படாமலா போயிரும் ? 

நம்ம துளசிதளத்தின் வாசகி, சேதி அனுப்பினாங்க. நமக்கு நேரம் இருந்தால், சந்திக்க இயலுமான்னு !  கரும்பு தின்னக்கூலியா ??? .  நம்மவர் நரேஷை  பதினொன்னரைக்குத்தான் வரச்சொல்லி இருந்ததால்,  காலை  பதினொன்னரை வரை அறையில் இருப்போமுன்னதும், வரேன்னுட்டாங்க!

ஸ்ரீவித்யா முத்துசாமி, பார்க் வந்துட்டேன்னு சேதி அனுப்புனதும் துள்ளிக்கிட்டுப் போனேன். முதல்முறை பார்க்கும் உணர்வே இல்லை. நெடுநாளையத்தோழி போலவே!  ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு, அங்கிருந்து வந்துருக்காங்க.  கல்யாண விருந்தை மிஸ் பண்ணி இருப்பாங்கன்னு  நினைக்கிறேன்.  கொஞ்சநேரம்தான் பேச்சு என்றாலும்.... மனசு  நிறைவாக இருந்துச்சு..... அன்பளிப்பாக  எனக்கொரு புத்தகம் ! அட!  நம்ம கானா பிரபா !  
எடை எச்சரிக்கை வந்தது நம்மவரிடமிருந்து.  அதுவும் நியாயம்தான். ஏற்கெனவே  கனம் கூட்டா ஒப்பந்ததில் கையெழுத்துப் போட்டுருந்தேன்.  எப்படியும் நியூஸி திரும்புமுன் சென்னையில் புத்தகங்கள் கொஞ்சம் வாங்கிப்போம்தானே....  அதுலே சேர்த்துக்கிட்டால் ஆச்சு, இல்லை ? 
நாம் போகும் வழியில் ஸ்ரீவித்யாவை இறக்கி விட்டுப்போகலாமுன்னா.... அவுங்க வேற திசையில் போகணுமாம்.  பார்க் வாசலிலேயே  அவுங்களுக்கு வண்டி கிடைச்சது. நரேஷ் கிட்டே பேகம்பெட்ன்னு சொன்னதும்  அங்கே போய் நம்மை   இறக்கி விட்டுட்டு, பார்க்கிங் தேடிப்போயிட்டார்.  ஏதோ சந்து மாதிரி போகுதே.... சந்து நம்மை விடாதுபோலன்னு போனால்......கடைகள் ஒன்னும் திறந்தபாடில்லை.... எதோ ஒரு கடை திறந்துருக்க அதுக்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் ஒன்னுரெண்டு கிடைச்சது. நான் தேடும் வகை அங்கே இல்லை. 

அப்பதான் தெரியவருது... இது பேகம் பஸார் இல்லைன்னு.....  நரேஷுக்கு ஃபோன் செஞ்சு இறக்கிவிட்ட இடத்துக்கு வரச் சொல்லி, பேகம் பஸார் போறோம்.  அங்கே  ஒரு இடம் வரைதான் கார் போகுமாம். அந்த இடம் ஒஸ்மானியா ஹாஸ்பிடல்.  மார்கெட் ரோடு என்பதால் நடந்துதான் போகணும். ஆஸ்பத்ரி வாசலில் ஏகப்பட்டக்கூட்டம்.  நாங்க வேடிக்கை பார்த்துக்கிட்டே மார்கெட் ரோடில் போறோம். நல்லவேளை ஒரு ஐநூறு மீட்டர்தான்.  ரோடுக்கு அந்தாண்டை க்ராஸ் பண்ணினதும்,  வாசலில் டிஸ்ப்ளே பண்ணதை வச்சுக் கடையைக் கண்டுபிடிச்சுட்டேன்.  இதிலெல்லாம் நான் நல்ல உஷார் :-)

ஏகப்பட்ட வகைகள். நாம் எது வாங்கிப்போனாலும் ஜன்னுவும் பெருமாளும் ஒன்னும் சொல்லமாட்டாங்கன்ற தைரியத்தில்  கொஞ்சம் நிறையவே வாங்கினேன். ஒருத்தருக்கு சரியில்லைன்னா இன்னொருத்தருக்கு சரியாத்தான் இருக்கும். அதான் வைஷூ, ஐஸ்ஸூ கூட்டம் சேர்ந்து போச்சே ! கடையில் வேலைசெய்யும் பசங்க, கேட்டவைகளையெல்லாம்   சோம்பல் இல்லாம எடுத்துக் காமிச்சாங்க.





வந்த வழியாகவே திரும்பி ஆஸ்பத்ரிவரை போனோம்.  சென்னையில் கந்தசாமி கோவிலைச் சுத்தி இருக்கும் கடைப்பகுதிக்குள் நுழைஞ்சாப்போல இருக்கு இங்கே !  போறபோக்கில் சிலபல க்ளிக்ஸ். பத்தே ரூபாய்க்குப் பிரியாணியாம் ! 

மணி பார்த்தா மூணாகப்போகுது !  எங்கியாவது நல்ல இடமா லஞ்சுக்குப் போகலாமேன்னதுக்கு நரேஷ், தாஜ்மஹால் போனார்.  லஞ்ச் டைம் முடிஞ்சு போனதால்  தாலி மீல்ஸ் ஆப்ஷன் இல்லை.  எனக்கு வடை,  நம்மவருக்குப் பூரி, நரேஷுக்கு செட் தோசை.  எங்களுக்கு மட்டும் காஃபி. பரவாயில்லாமல் இருந்தது. 






இனி வேறெங்கும் போகும் எண்ணம் இல்லாததால் அறைக்குத் திரும்பிட்டோம். இங்கே உள்ளறை அமைப்புத்தான் பேஜார். எழுதும் மேஜையை எங்கே  பொருத்தியிருக்காங்கன்னு பாருங்க.  நடக்கும்போது இடிச்சுக்கமாட்டோம் ?  டாய்லட் பேப்பர் ஹோல்டர் கூட  வாழ்க்கையை பேலன்ஸ் பண்ணிக்கச் சொல்லுது :-) 

அவரவர் அவரவர் வேலைன்னு  இருந்து  கடைசியில் தூங்கியிருக்கோம்.   பயணத்தில்  இருக்கும்போது இருட்டினபிறகு எங்கேயும்  போற வழக்கம் வச்சுக்கலை.
ராச்சாப்பாடு ரூம் சர்வீஸில். வெஜ்.பிரியாணி கூடவே என்னவோ ரெண்டு பாத்திரங்களில்.  இப்போ படத்தைப் பார்த்தாலும்  அதெல்லாம் என்னன்னே தெரியலை.ஙே........

நம்மவருக்குத் தொண்டை வலி லேசா ஆரம்பிச்சு இருமத்   தொடங்கியிருக்கார்.  அலைச்சல் கூடிப்போயிருக்கு....... நாளைக்கு இங்கிருந்து கிளம்புவதால் பொட்டிகட்டி வச்சதும்  நிம்மதியான தூக்கம்தான்!

தொடரும்.......... :-)


Monday, March 27, 2023

குருவே நமஹ........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 30

தாயை நோக்கி ஓடும் கன்று போல்  மனசு நேரா அங்கே தாவிருச்சு.  மூணுமணிக்கு அறையில் இருந்து கிளம்பின நாம்  நேத்து ஏர்ப்போர்டில் இருந்து 'பார்க் 'வந்தமே அதே ரோடில் தான் போறோம். அந்த ஏரியாவுக்குப் பெயர் ஷம்ஷாபாத். ஏர்ப்போர்ட்க்குள் திரும்பும் ரோடில் போகாமல் நேராகவே இன்னும் ஒரு பதினாறு கிமீ தூரம் தொடர்ந்து  பயணிச்சால் வரும்  கிராமம் (!) முச்சிந்தல் .(Muchintal  ) சாலையின் இடதுபக்கம்  வரவேற்பு தோரணவாயில் இருக்கு. உள்ளே போறோம்.  அடுத்த  அஞ்சாவது நிமிட்டில் அதோ.........  கண்ணுக்குத் தெரிகிறார் ஸ்ரீ ராமானுஜர். ப்ரமிப்பில் கண்கள் அகலமா விரிஞ்சு அப்படியே நின்னு போச்சு !!!


அத்வானக்காட்டில் ஒரு அற்புதம் ! நாம் எங்கிருந்து பார்த்தாலும்  அவர் நம்மையே பார்க்கிறார்னு தோணுச்சு!  ஸ்ரீராம்நகர்னு பெயர்.  
நம்ம ஸ்ரீராமானுஜரின் ஆயிரம் ஆண்டுவிழா 2017 ஆம் வருஷம் வருதுன்னு  சில வருஷங்களுக்கு முன்னேயே எல்லா வைணவ ஷேத்ரங்கள், மடங்களில் எல்லாம் எப்படியெப்படிக் கொண்டாடலாமுன்னு  திட்டங்கள்  போட்டுக்கிட்டு இருந்த சமயம், இங்கத்து சின்ன ஜீயர் ஸ்வாமிகளின்  மனசில் உதித்த எண்ணத்தின்  முன்னால்,  நாம் நிக்கறோம்.
2014 ஆம்  வருஷம்,  சின்ன ஜீயர்  ஸ்வாமிகள் சட்னு மனசில் தோணுது.....  அதைப்பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி, ஆலோசனைகள் எல்லாம் ஆனதும்.... ஸ்தபதி  DNV Prasad அவர்கள் , தலைமைப் பொறுப்பு ஏத்துக்கிட்டார். டிஸைன்கள், அமைப்புக்கான வரைபடங்கள் எல்லாம் தயாராகுது. 
நாப்பதியஞ்சு ஏக்கர் நிலம். 
அதே வருஷம்  மே மாசம் ரெண்டாம் தேதி  நம்ம  சின்ன ஜீயர் திருக்கரங்களால்   ஸ்ரீராமானுஜரின் உருவச்சிலை அமரப்போகும் கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டாங்க. 

Pic. Sthapathy DNV Prasad 

 உருவச்சிலை உருவாக்க, சீனக் கம்பெனியுடன்  ஒப்பந்தம் ஆச்சு  எப்படியும்  மூணு வருஷத்தில் வேலை முடியும் என்ற எதிர்பார்ப்பு! சின்ன சமாச்சாரமா இது.  சிலையின் மாடல் செஞ்சு அதை அப்ரூவ் பண்ண வேணாமா ?  பதிநாலு  மாடல் சிலைகள்  செஞ்சாங்க. எல்லாம் நவீன யுக விஞ்ஞானக்கருவிகளின்  துணையோடு !  அவைகளில் இருந்து மூணு சிலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கடைசியில் மூன்றிலிருந்து ஒன்று முடிவாச்சு. 

சிலையின் உயரம் 108 அடி. தாமரை பீடம் 27 அடி.  இவற்றைத் தாங்கும் மேடை 54 அடி, கீழே கட்டடம் இப்படி எல்லாமும் சேர்த்து 216 அடி ! ஆஹா... அதுதான்  பறக்கும்போது தெரிஞ்சுருக்கு ! 
https://statueofequality.org/key-elements-of-statue-of-equality/

இவரைச் சுற்றி வளாகத்தில் 108 திவ்யதேசக் கோவில்களின் சந்நிதிகள்.  மூலக்கோவில்களின்    கருவறையில் மூலவர் என்ன ரூபத்தில் ஸேவை சாதிக்கிறாரோ...  அதே போல  இங்கேயும் !  கருவறை விமானங்களும்கூட  அதே ஸ்டைலில்.  என்ன ஒன்னு அளவில் சிறியது! 
உள்ளே போய்ப் பார்க்க விரும்பினால் இதோ இந்தச் சுட்டியின் வழியே போகலாம் !

https://statueofequality.org/project-walk-through/

சமதா மூர்த்தி ஸ்பூர்தி கேந்திரம் !!!     இது தனியார் கோவில்தான்.  அரசுக்குச் சொந்தமானது இல்லை.  தினமும் தரிசன நேரம் பகல் 11 முதல் மாலை 8 வரை. புதன் கிழமைகளில் வாரவிடுமுறை.  நுழைவுக்கட்டணமா பெரியவர்களுக்கு 150 ரூ & 5 -12 வயசுப் புள்ளைகளுக்கு  75 ரூ. 

கேட்டுக்குள் நுழையுமுன்னேயே வெளியே  ரெண்டு பக்கங்களிலும் பெரிய சிறிய திருவடிகளுக்கான 45 அடி உயர மண்டபங்களில் 18 அடி உயரமுள்ள  சிலைகள். நாம் உள்ளே நுழைஞ்ச இடத்தில் பெரியவர் இருக்கார்.  அடுத்த பக்கம் கொஞ்சதூரத்தில் சிறியவர்.  ஆனால் நான்  க்ளிக்கிய படத்தில் சிறியவர் மண்டபம் ஃப்ரேமில் இல்லை..:-(

நாம் உள்ளே நுழைஞ்சு டிக்கெட் வாங்கினதும் பெண்கள் ஆண்களுக்கான தனித்தனி செக்யூரிட்டி செக் அப். செல்ஃபோன், கேமெராக்களுக்கெல்லாம் அனுமதி இல்லை.  போச்சுரா....ன்னு மனம் வெதும்பியது உண்மை. ஆனால் முதலிலேயே இந்தத் தகவலை வலை மூலம் தெரிஞ்சுக்கிட்டதால்  இவைகளை வண்டியிலேயே நம்ம நரேஷிடம் ஒப்படைச்சுட்டுப் போயிட்டோம். அதுக்கு முன்னால் வெளியில் இருந்தே சில க்ளிக்ஸ் ஆச்சு.

உடைக்கட்டுப்பாடு இருக்கு.  பாரம்பரிய உடைகளுக்கு அனுமதி. ஃபுல் பேண்ட்ஸ் இப்போ பாரம்பரிய உடைகளில் சேர்த்தி என்பதால்  பிரச்சனை இல்லை.
எதெதுக்கு அனுமதி இல்லை என்ற முழு விவரமும் அவுங்க வலைத்தளத்தில் விஸ்தாரமாப் போட்டுருக்காங்க.  இங்கே பார்க்கலாம். கவனிக்காமலோ, விதண்டாவாதமாகவோ அங்கே போய் குய்யோ முறையோன்னு கதறவேணாம். 

https://statueofequality.org/plan-your-visit/

செக்யூரிட்டி செக்கப் முடிஞ்சதும்  அடுத்த வாசல் வழியா உள்ளே தோட்டத்துக்குள் போயிருவோம்.  நீள நடைபாதை முடிஞ்சதும் இடதுபக்கம் வழி திவ்யதேச யாத்திரை தொடங்கிருது. அதுக்கு முன்னாலேயே  நிர்வாகத்தின் அனுமதி பெற்ற  ஃபொட்டாக்ராஃபர்  கெமாரவும் கையுமாக அங்கே நிக்கறார்.  விரும்பினால் நம்மைப் படம் எடுக்கிறார்கள்.  அதை ஏன் விடுவானேன்னு  நாங்களும்.....    கட்டடத்தைவிட்டு வெளியே வருமுன் படம் நமக்குக் கிடைச்சுருது.  கட்டணம் கொஞ்சம்தான்.  படத்தின் அளவுக்கேற்பக்  காசு. 
முதல் கோவில் நம்ம ரெங்கனோடது.....  கடைசி  ரெண்டும் திருப்பாற்கடல், பரமபதம் ! விண்ணுலக சமாச்சாரத்தை மண்ணுலகில் தரிசிக்கிறோம் !  ஒவ்வொரு சந்நிதியிலும்  அர்ச்சாவதாரமாய் ஜொலிக்கிறான் நம்ம பெரும் ஆள் !  நமக்கு ரெண்டாம் முறையாக 108 வாய்ச்சது!   ப்ரமாண்டமான சதுரமேடையில்  பனிரெண்டு கோணங்களாஒரு வரிசையில் நாலு, மூணு, இல்லை அஞ்சு என்ற வகையில்  அமைச்சுருக்காங்க.  ஒவ்வொரு வரிசைக்கும்   சில பட்டர் ஸ்வாமிகள்.  அங்கங்கே துளசிதீர்த்தம், சடாரி, புஷ்பம், துளசின்னு ப்ரஸாதங்கள் கிடைக்குது.
ஒரு இடத்தில்  மேஜையில் புத்தகங்களை அடுக்குவதைப் பார்த்துட்டு விசாரிச்சதில்  108 திவ்யதேசங்களின் சுருக்கமான அறிமுகம் என்ற புத்தகங்கள் அவை! செப்டம்பர் 2022தான் வெளியிட்டு இருக்காங்க. நாம் அக்டோபர் 2022 அங்கே போயிருக்கோம்.  கையில் வாங்கிப் பார்த்ததில் பரம திருப்தி.  அங்கே இருக்கும் எல்லா சந்நிதிகளிலும் உள்ள மூலவர்   படங்களுடன்  பார்த்ததும் உடனே வாங்கினோம்.  நல்ல தெளிவான விளக்கங்கள்.  முக்கியமாக ஒரு தட்டச்சுப்பிழை கூட இல்லாமல் கவனமாகப் பார்த்துத் 'தமிழ், தெலுகு, ஹிந்தி 'ன்னு மும்மொழிகளில் அழகாகச் செஞ்சுருக்காங்க.  

108 தரிசனங்களில் ஒவ்வொரு  கால்வாசிப் பகுதி முடிஞ்சதும் இடைவெளியில்   உள்நோக்கிப் போகும் பாதையில்  போனால் ஓய்வறை.  நடக்க முடியாதவர்களுக்கான வீல்சேர் வசதிகளும் செஞ்சுருக்காங்க.
108 தரிசனங்கள்  முடிஞ்சதும்  பூங்கா நடுவில் இருக்கும் கட்டடத்துக்குப் போகிறோம். தரைதளம் தவிர்த்து முதல் மாடி ஹாலுக்குள்  நுழைஞ்சாச்சு. பத்ரவேதி என்ற பெயருள்ள இந்தக் கட்டடப்பகுதி மட்டும் 54 அடி உயரம்.  த்யானம் செய்யும் விசாலமான ஹாலில்  ஸ்ரீ ராமானுஜர் சொக்கத்தங்கத்தில்  ஜ்வலிக்கிறார்.
 120 கிலோ தங்கமாம். நம்ம ஸ்ரீ ராமானுஜர், பூவுலகில் 120 ஆண்டுகள் ஜீவித்து இருந்ததால்  நூற்றியிருபது கிலோ என்ற கணக்கில் !   பொதுவா இந்த  நினைவுச்சின்னம்  அமைக்க 1000 கோடி ரூபாய்கள்  ஆகி இருக்கு.  இது முழுக்க முழுக்க உலகெங்கும் உள்ள  பக்தகோடிகள்  அளித்த நன்கொடையே ! (பாருங்க.... இப்போ ஸ்ரீராமானுஜர் 1000 கொண்டாடும் சமயம் செலவும் அதே ஆயிரம் கோடிகள் ! ) தங்க தரிசனம் முடிச்சு வெளியில் வந்தோம்.  

வாசலில் 42 அடி உயரமுள்ள ஒரு பெரிய செயற்கை நீரூற்று.  லீலா ஜல நீராஞ்சனம் ! குறிப்பிட்ட நேரங்களில் இது ம்யூஸிக் ஃபௌண்டெய்ன் !  அதான் கெமெராவுக்கு அனுமதி இல்லையேன்னு சோர்ந்து போயிறக்கூடாது. உயரம் அதிகம் என்பதால் கேட்டுக்கு வெளியே நாம் இருந்தாலும் தெரியும்தான்.  யாரோ ஒரு புண்ணியவான் யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கார். சுட்டி இதோ ! அன்னாருக்கு எம் நன்றி !

https://youtu.be/nLuh_LBPqYs

மேலே ஏறும் படிக்கட்டுகளில் உக்கார்ந்து பார்த்து ரசித்தோம்.  இனி மேலேறிப்போய் ஸ்ரீ ராமானுஜரை கிட்டப்போய் தரிசிக்கணும். 108 படிகள். லிஃப்ட் இருக்கு. ஆனாலும் குருவுக்காக முட்டிவலியைப் பொருட்படுத்தலை.

36 யானைகள் இருக்கும் கஜபீடத்தின் மேல் 54 இதழ்களால் ஆன தாமரையில் 108 அடி ஸ்ரீ ராமானுஜர், 135 அடி த்ரிதண்டம் ஏந்தி  உக்கார்ந்துருக்கார் !  தகதகன்னு ஜ்வலிப்பு!  தங்கமயம் ! இருபது  வருஷ  வாரண்டி இருக்கு, இந்தத் தங்க ஜ்வலிப்புக்கு !

இவரை உருவாக்கினவங்களும் சீனர்களே !   700 டன் பஞ்சலோகம் பயன்படுத்தியிருக்காங்க.  சிலை தயாரிப்பில்  1600 பகுதிகளாகப் பிரிச்சுச் செஞ்சு , தனித்தனியாப்பொதிஞ்சு 54 கண்டெய்னர்களில்  சென்னைத் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து , தரை வழியாக ஹைதராபாத்  பயணிச்சு,  ஸ்ரீராம்நகரில்  நிர்மாணம் செஞ்சுருக்காங்க. இந்த  வேலைக்காக 60 சீனர்கள் (எஞ்சிநீயர், வெல்டிங் செய்பவர்ன்னு பலரும் ) வந்து இங்கே தங்கி, எல்லாப் பகுதிகளையும் சரிவரப்பொருத்தி முழுச்சிலையாக நிர்மாணிக்கவே  15 மாசங்கள்  ஆகி இருக்கு !  

விவரங்களை  வலையில் வாசிக்கும்போதே ஏற்பட்ட ப்ரமிப்பு இன்னும் அடங்கலை ! (ச்சும்மாச் சொல்லக்கூடாதுப்பா இந்த சீனர்களை ! என்ன கடின உழைப்பு பாருங்க. அதுதான் உலகம் முழுசும் இவுங்க பண்ண அட்டகாசத்துக்குக்கூட வாயைத்திறக்காமல் பம்மியிருக்கு ! )

மனசில்லா மனசோடுதான் அங்கிருந்து நகரவேண்டியதாப்போச்சு.  இப்பவே மணி ஏழாகப்போகுது.  எட்டுமணிக்கு மூடிருவாங்க. நமக்கும் ஒரு மணிநேரப்பயணம் இருக்கே அறைக்குப் போக !  கீழே வரும்போது, முட்டி 'என்னைப்பார்'னு எச்சரிக்கை விட்டதால் லிஃப்ட் தான்.

கடைசியாக  வெளியேறும்  பகுதிக்கு வந்தப்ப..... தனிக் கட்டடத்தில்  கேண்டீன் போல இருக்கைகள் எல்லாம் போட்டு, ப்ரஸாத ஸ்டால் !  நாலைஞ்சு ஐட்டங்கள் நேரம் அனுசரிச்சு வச்சுருக்காங்க. ஒரு ஐட்டம் முப்பது ரூ. லட்டு, மைசூர்பாக் (நம்ம பழைய ஸ்டைலில் க்ரஞ்சியா இருக்குமே அது ! என்னோட ஃபேவரிட் !!!! ) அதிரசம், மிளகுவடை, புளியோதரை. அப்பதான்  மிளகாய் பஜ்ஜி சுடச்சுட எடுத்துக்கிட்டு வந்தாங்க.  மூணு முப்பது.  எனக்குத்தான் காரம் ஆகாதேன்னு  ஒன்னு போதுமுன்னு சொன்னதுக்கு முதலில் முடியாதுன்னு தலையாட்டிய ஸ்டால் நபர், என்னதோணுச்சோ,   சட்னு ஒன்னு எடுத்துக்கொடுத்தார். பத்தே ரூ !

ஃபோட்டோக் கடையில் நம்ம படம் ரெடி. நூறு ரூ தான்.  அதையும் வாங்கிக்கிட்டு, வெளியே கார்பார்க் வந்ததும் முதல்வேலையாக , நம்ம  கெமராவை வெளியில்  எடுத்தேன்னு தனியாச் சொல்ல வேணாம்தானே ? 
அதுக்குள்  நம்ம ஸ்ரீராமானுஜரை வண்ண வண்ண விளக்குகளால் அபிஷேகம் செய்யத் தொடங்கிட்டாங்க. ஃபோட்டொ ஸ்பாட்  வேற  இருக்கு ! சிலபல க்ளிக்குகள் ஆனதும்  கிளம்பினோம். 



பரம திருப்தியான தரிசனம் !  இதில் கூடுதலா இன்னொரு சந்தோஷம் எனக்கு !  சமதா மூர்த்தி  ஸ்பூர்தி கேந்த்ரம் திறந்து வச்சது 2022  ஃபிப்ரவரி 5 ஆம் தேதி !!!!  (அவதார நாள் ! அல்ப சந்தோஷியானேன்! )





ஒரு மணி நேரமாச்சு அறைக்கு வந்து சேர !  இன்றைக்கு டின்னர் புளியோதரைதான் !    டிஸ்ஸர்ட்.... மைசூர்பாக் :-)

தொடரும்......... :-)


PINகுறிப்பு:  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால், இந்தப் பதிவில் இருக்கும் உள்ளமைப்புப் படங்கள் எல்லாம் ஸ்ரீ ராமானுஜரின் வலைப்பக்கத்தில் இருந்து எடுத்திருக்கிறேன்.  நிர்வாகிகளுக்கு நன்றி !

தஞ்சைக் கோவில் எப்படிக் கட்டினாங்கன்னு இப்பக்கூட  ஆராய்ச்சி நடப்பது போல் இல்லாமல் எல்லா விவரங்களையும் தொகுத்து ரொம்பவே விஸ்தாரமாக அவர்களின் பக்கத்தில்  சேர்த்திருக்காங்க. மாடர்ன் டெக்னாலஜி இம்ப்ரூவ்டு ஸோ மச் !