Wednesday, January 31, 2018

எங்கும் எதிலும் இருப்பான்.... அவன் யாரோ... .....(இந்திய மண்ணில் பயணம் 108) நிறைவுப்பகுதி!

முக்திநாத் போறோமுன்னு தீர்மானிச்சவுடனேயே   அங்கிருந்து கண்டகி நதியில் நாமே சாளக்ராம் எடுத்து வரணுமுன்னு ஒரு ஆசை. ஆனால் அங்கே போனப்பதான் தெரிஞ்சது,  இதை அங்கே ஒரு பெரிய வியாபாரமா ஆக்கிட்டாங்கன்னு! நதியில் இருந்து அவுங்களே எடுத்துவந்து  பெரிய கடைகள் முதல் தெருவோரக் கடைகள் வரை வியாபாரம் கொடிகட்டிப் பறக்குது.
நதியில் உருண்டுவரும் ஒரு வகைக் கற்கள்  காலப்போக்கில் மொழுமொழுன்னு  சின்ன இலந்தைப்பழம் சைஸில் இருந்து  மகாபெரிய சைஸ் வரை கிடைக்குதாம். ஏகப்பட்ட பெரியவைகளை ஏற்கெனவே எடுத்துட்டாங்க. இப்பக் கிடைப்பதெல்லாம்  உள்ளங்கை அளவு முதல் கோலிகுண்டு அளவு வரைதான். நதியின் ஆரம்பத்துலேயே வலை கட்டிக் கற்களை எடுத்துடறாங்கன்னு ஒருத்தர் சொன்னார்!
இது கொஞ்சம் ம்ருதுவான கல் வகை.  சிலபல கற்களில் இக்கினியூண்டு ஓட்டை இருக்கு(மாம்! )அதன்வழியாக ஏதோ ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி உள்ளே போய் அங்கேயே வளர்ந்து மரவட்டையாட்டம் சுருண்டு கிடந்து  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மண்டையைப் போட்டுருது போல!

Fossils என்ற பெயர், ஆராய்ச்சி எல்லாம் இல்லாத காலகட்டத்தில்   'எப்பவோ' இதை கண்டகி நதியில் கண்டெடுத்த 'யாரோ'  உருண்டைக் கல்லை உடைச்சுப் பார்த்துருக்கலாம். உள்ளே இருந்த  சக்கர அடையாளத்தைப் பார்த்துட்டு, மஹாவிஷ்ணு கையில் இருக்கும் சக்கரம் என்று  உண்மையாவே நினைச்சுருக்கலாம்.
சின்னதா கோலிகுண்டு சைஸோ, 'சென்னையில் கிடைக்கும் எலுமிச்சம்பழம் சைஸோ' இருந்தால் அது முழுசாத்தான் இருக்கு.  கொஞ்சம் பெரிய கற்களைத்தான் உடைச்சு வச்சுருக்காங்க.  அதையும் ஒரு  நறுவிஸா நீட்டா உடைக்கப்டாதோ........ இன்னொரு கல்லை  வச்சு உடைக்கிறாங்க போல....   கண்டக்கா முண்டக்கான்னு உடைஞ்சுருக்கு :-( ஆனாலும் ரெண்டையும் சேர்த்து வச்சாக் கச்சிதமா பொருந்திக்குதுதான். ஜோடி பிரியாமல் இருக்க ரப்பர் பேண்ட் போட்டு வச்சுருக்காங்க.

அடடா... உடைஞ்ச கல்லா இருக்கேன்னு நாம் நினைச்சுட்டோமுன்னா..........
அங்கெதான் இருக்கு இன்னொரு ட்ரிக்.  சாளக்ராம் மட்டும் உடைஞ்சுருந்தாலும் தோஷமில்லாததே!  தாராளமா பூஜையில் வைக்கலாம்.

இது எப்படி இருக்கு?  முக்கால்வாசிக் கற்களில் சக்கரம்தான். மரவட்டை சுருண்டு இருக்கும் அடையாளம் போல!

அபூர்வமா அங்கே மட்டும் கிடைச்சுக்கிட்டு இருக்கும் இதுக்கு  ரிலிஜியஸ் மதிப்பு உண்டாயிருச்சு. சாமியையே உண்டாக்குன மனுஷனுக்கு இதெல்லாம் ஜூஜுபி இல்லையோ!  அதிலும் எத்தனைவகை உருவங்கள் சாமிக்கு! அதே போல காலப்போக்கில் சாளக்ராமில்  சாமி   சமாச்சார உருவங்கள் தென்பட்டதையும் கண்டுபிடிச்சுட்டான். சங்கு, மத்ஸ்ய, சிவலிங்கம், ஓட்டைக்குள் எழும்பி நிற்கும் குட்டி மேடுகள் உள்ளவை இப்படி ஏகப்பட்டவைகள்.  ( ரெண்டு மேடுள்ளது லக்ஷ்மிநாராயணன்! நானும் ஒன்னு வாங்கினேன் தாம்பரம் அத்தைக்குக் கொடுத்தேன்)

இதுலே இன்னொரு தோழி சொன்னாங்க.....    வீட்டுலே பூஜையில் வச்சுருக்கும் சாளக்ராம் வளர்ந்து வருதாம்........  !!!!!!

புனிதப்பொருள்!  சாமியே இதுலே வாஸம் செய்கிறார், இதுவே சாமி!  இப்படியெல்லாம் நம்ம மூதாதையர்களால் நமக்குச்  சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளதே! நாமும் வீடுகளில் பூஜையில் வச்சு வணங்குகிறோம்! இது ஒரு சொத்து என்ற அளவில்   ஆன்மிக மதிப்பு வாய்ந்ததாக ஆக்கப்பட்டுருக்கு! எனக்குத் தெரிஞ்சு  பெரியவங்க சொன்னதுக்கெல்லாம் மறுபேச்சுப் பேசாம அப்படியே நம்பி அதைக் கடைப்பிடிச்சது நம்ம தலைமுறைவரைதான்னு தோணுது. நமக்கடுத்த தலைமுறை கேள்வி கேட்கத் தொடங்கிருச்சேப்பா !!!!

பொதுவா  இந்தக் கற்களுக்கு  வயசு 140 முதல்   165  மில்லியன்  ஆண்டுகளாம்! 140 to 165 million years old.

நமக்குத்தான் சாமி இல்லாத இடமே இல்லையே....  தூணிலும் துரும்பிலும் இருக்கும் சாமி கல்லில், கல்லுக்குள்ளில் இருக்கமாட்டாரா என்ன?

இதுக்கான பூஜை விதிகள் எல்லாம் உருவாக்கியாச்சு.  தினமும் அபிஷேகம் செய்யணும்.   சாமியைப்  பட்டினி போடக்கூடாதுன்னு  தினமும் எதாவது நிவேதனம் செஞ்சுடணும்.

இந்தப் பயணத்தில் முக்திநாத் கோவிலில் பரிச்சயமான சென்னைவாசி ஒருவரும் நம்முடன் திரும்பி வரும் வழியில் சாளக்ராம் கற்கள் வாங்கினார். அவருடன் கூட வந்த உறவினர் (தேவி உபாசகராம்) கற்களை எடுத்துப் பார்த்து எது ஜீவன் உள்ளதுன்னு   தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். நாங்க இவரை சந்திக்குமுன்னேயே ஒரு பெரிய சாளக்ராம் கல் வாங்கிட்டோம். உள்ளே சக்கரம் இருக்கு.  அதை நம்மிடமிருந்து வாங்கிப் பார்த்தவர் ஒரு  அரை நிமிடம் கண்ணை மூடிக்கிட்டுக் கையில் வச்சுருந்துட்டு நல்ல வைப்ரேஷன் இருக்குன்னார்!!!! 
இவர் தான்  எனக்கு சர்ப்பதோஷம் இருக்குன்னு சொன்னவர். சர்ப்ப யாகம் செய்யணுமாம்!  நான் ஒரு ஜனமே ஜெயன்னு அப்பதான் தெரிஞ்சது.  நம்ம கோபாலுக்கு வேற பாம்பு பயம் இருக்கா....    அதை அப்படியே  எனக்கு சாதகமா செஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு இப்ப.  எதாவது சண்டைக்குன்னு வந்தால்....   சட்னு கையால்  பாம்பு ஸைன் காட்டுவேன். கப்சுப் :-)  :-)   :-) 
மறுநாள்  அங்கிருந்து கிளம்பும்போது  (ஜொம்ஸம்மில் ஒரே விடுதியில் பக்கத்துப் பக்கத்து அறையில் தங்கி இருந்தோம்! ) தேவி உபாசகர் நம் அறைக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தார். ஒரே ஒரு சாளக்ராம்தான் வாங்கினோமுன்னு கோபால் சொன்னப்ப, அவர் கூடுதலா ஒரு ஏழெட்டு வாங்கினதாகவும் வேணுமுன்னால் அதிலிருந்து ரெண்டு தரேன்னும் சொன்னார்.  கோபால் உடனே  'தாங்க. ஆனால் காசு வாங்கிக்கணுமு'ன்னு சொல்லி  அதுக்கான விலையையும் இண்டியன் கரன்ஸியில் தந்துட்டார்.  அப்புறம் நாந்தான் சொன்னேன் கோபாலின் ரெண்டு தம்பிகளுக்கும் ஆளுக்கொன்னு கொடுக்கலாமேன்னு. அப்போ சரின்னவர்,  பிற்பாடு சென்னை வந்தபிறகு, 'வேணாம். நேபாள் போய் வந்த சின்ன தம்பி வாங்கி வந்துருப்பார். நாமே கொண்டு போகலாம்' என்றார்.

 எங்க   அம்முவுக்குக் கற்கள் பிடிக்கும். கல்ப்ரேமி.  எங்கேபோனாலும் கற்கள் சேகரிச்சுக்கொண்டு வந்தவை, சின்ன மலை அளவு வீட்டில் இருக்கு:-)  அவளுடைய கல்யாணத்துலே எடைக்கு எடை  இந்தக் கற்களையே வரதக்ஷணையாக் கொடுத்துடலாம் என்ற ஐடியா கூட இருந்துச்சு  எனக்கு!   ஆனா மாப்பிள்ளை இங்கத்து ஆள் ஆனபடியால், வரதக்ஷணை கொடுத்துப் பழக்கப் படுத்தணுமா என்னன்னு விட்டுட்டேன் :-)

 இப்ப இந்த சாளக்ராம் கற்களை அவளுக்குத் தரலாம்னு நினைச்சேன்.  இங்கே வந்தபின் எடுத்துக் காமிச்சு 'என்னன்னு தெரியுமா' என்றதுக்கு  'ஃபாஸில்' என்றுசொன்னாள்.

"வேணுமா?"

" நோ "

 ஓக்கே. எனக்கே ஆச்சுன்னு  இருந்துட்டேன்:-)

சாமின்னு  ஆனதும் இதுலே வெறும் உருண்டையா இருக்கும் சின்னக் கற்களை தங்கக் கம்பி வளையத்துக்குள் வச்சு  (முத்து நெக்லேஸ் கட்டுவதைப்போல்)மாலையாக்கி கோவில்களில் சாமி சிலைகளுக்கு  (மூலவருக்கு)போடறாங்க. சாளக்ராம மாலை அணிஞ்ச சாமின்னு இன்னும் மதிப்பு கூடுதல், இல்லையோ!  சாளக்ராமத்தால் செஞ்ச சாமி சிலைன்னு கூட சில  கோவில்களில் சொல்றாங்க. (எ.கா. திருவட்டாறு ஆதிகேசவன். 16008 சாளக்ராமம் உள்ளடக்கிய கடுசக்கரைத் திருப்படிமம்!  உடுபி க்ருஷ்ணரும் சாளக்ராமத்தால் ஆன சிலை  என்றுதான் கோவிலில் சொன்னாங்க!  பெரிய கல்லில் செதுக்கி இருக்கலாம்.  த்வாரகையில் ஸ்ரீகிருஷ்ணர் கேட்டுக்கிட்டதுக்காக  விஸ்வகர்மா உண்டாக்கிய சிலைன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, கேட்டோ! )


முக்திநாத்தில் நட்பான சென்னைவாசி வீட்டுக்குப் போயிருந்தப்ப, 'சாளக்ராம் பூஜையில் வச்சாச்சா'ன்னு கேட்டேன், எதோ  ரிச்சுவல்ஸ் இருக்கும் தெரிஞ்சுக்கலாமேன்னுதான். அதுக்கு அந்த வீட்டம்மா சொன்ன பதில் ஆச்சரியம்!

' அபிஷேகம் பண்ணி, அப்படியே  பூஜையில் வச்சுட்டேன். தினமும் நைவேத்யம் கட்டாயம் பண்ணனுமாம். அதனால் அரிசிப்பெட்டியில் வச்சுட்டால் போதும்' என்று யாரோ சொன்னார்களாம். அதானே....   சாமியே ஆக்கித் தின்னுக்கட்டும்  என்ற பெரிய மனசு!  அவுங்க வீட்டு சாமி அறைக்குக்கூட்டிப்போய் காமிச்சாங்க. சின்ன அட்டைப் பொட்டிக்குள் ஒரு  ஸ்பூன் அரிசி போட்டு அதுக்குள்ளே வச்சுருந்தாங்க!  ஏம்ப்பா....  எப்படியும் தினம் சாதம் சமைக்கத்தானே செய்வாங்க. அந்த மஹாநைவேத்யத்தை சாமி கண்ணுலே காமிச்சால் ஆகாதா?

(நானும்  பல வருஷங்களா   சாமி அறையில் விக்ரகங்களுக்கு  முன்னால் ஒரு குட்டி அன்னக்கூடையில் அரிசி நிரப்பி வச்சுருக்கேன். இது நமக்கு வாழும்நாள் வரை அன்னம் கிடைக்க அருள்புரியணும் என்று அன்னமூர்த்திக்குப்  படையல்! புது மூட்டை அரிசி வாங்கும்போது பழையதை மாற்றி புது அரிசி ரொப்பி வைப்பேன். இப்பப் பார்த்தால் சின்னக் கலசம், ஒரு டம்ப்ளர், அன்னக்கூடை, இன்னொரு கிண்ணம் என்று  சாமி மேடையில் அங்கங்கே நாலு வச்சுருக்கேன்! பெரிய கூட்டுக்குடும்பம் ஆகி இருக்கு சாமி மேடை! )

தண்ணீரில் இருக்கும்போது பளபளன்னு இருக்கும் கற்கள் வெளியே எடுத்து ஈரம் உலர்ந்ததும் வெறுங்கல்லாத்தான் தெரியுது.  மகளிடம் அன்று  பேசும்போது  'குக்கிங் ஆயில் தடவி வச்சால் ஷைனிங்கா இருக்கும்' என்று சொன்னாள். 'ஓ' ன்னு கேட்டுக்கிட்டேன்.

கோவில்களில் பால் அபிஷேகம் தினம் செய்வதால்  ஒரு பளபளப்பு இருக்கு.  எண்ணெய் தடவமாட்டாங்கன்னு  நினைக்கிறேன்.

நம்ம வீட்டில் சாளக்ராமக்கற்களை பூஜைக்குத் தயார் செஞ்சப்ப,   இதுக்குன்னே முதல்நாள்  கடையில் வாங்கிய புத்தம்புது பாத்திரத்தை எடுத்து   அதில் வெந்நீர் நிரப்பி சாளக்ராமங்களைக் குளிப்பாட்டி, அப்புறம் தண்ணீரை எடுத்துட்டுப் பால்  ஊற்றி  அதில் கழுவி எடுத்தேன். பெரிய க்ளியோபாட்ராப்பா இந்தக் கற்கள்!  அப்புறம் இன்னொரு நீர் அபிஷேகம்.  அப்புறம் புத்தம் புது கைத்துவாலையால் தொடைச்சு எடுத்து பசும்நெய் துளி எடுத்து எல்லோருக்கும் நெய்ப்பூச்சு போட்டதும் பளபளா!  நெய் ஒட்டாமல் இருக்க  டிஷ்யூ பேப்பர் அடியில். நாஞ்சொல்லலை...  நம்ம வீட்டுக்குன்னு  யார் வந்தாலும் நாமத்தைச் சாத்திருவேன்னு...  ஹிஹி.... அதே போல நால்வருக்கும் நாமம் சாத்தியாச்!
எங்கே வைக்கலாமுன்னு யோசிச்சு,  கேரள டிஸைன் ஆபரணப்பெட்டி வீட்டில் இருக்கேன்னு  அதில் வச்சேன். இதுநாள் வரை சும்மாக் காலியா ஷோ கேஸில் இருந்த பெட்டி, சாளக்ராமத்துக்குக் காத்துருந்ததோ என்னவோ! (இந்தமாதிரிப் பெட்டியில்தான்  (பெரிய  சைஸில் இருக்கும்)  ஐயப்பன் நகைகளை சபரி மலைக்குக் கொண்டு போவாங்க. திருவாபரணப் பெட்டியாக்கும், கேட்டோ! )

அன்றைக்குப் பூஜையில் வச்சு  சுடச்சுட சாதம், பருப்பு, நெய் , சாளக்ராமத்துக்குக் கண்ணிலே காட்டினேன்! அப்பவே சொல்லியாச். நான் என்ன சமைக்கிறேனோ அதேதான் உனக்கும்னு :-) சமைக்காத நாட்களில் இருக்கவே இருக்கு பழங்கள்.  தினமும் ஆப்பிள் கொடுத்தால் டாக்டரே வேணாம் :-)

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.... எங்க ஊருலே நம்ம வீட்டுலே இருந்து ஒரு 50 கிமீ தூரத்தில் இருக்கும் லிட்டில் ரிவர் என்ற இடத்துக்குப் போனோம். அது ஆச்சு  25 வருசம். அங்கே கூழாங்கற்கள் நிறைஞ்ச  கல் பீச் இருக்கு.  நதி ஒரு இடத்தில் அப்படியே முடிஞ்சுரும்.  அங்கிருந்து ஒரு 400 மீட்டர் தூரத்தில் கடல். பஸிஃபிக் ஓஷன்தான்.  இங்கே இருக்கும் ஈல் மீன் வகை    அந்த ஃப்ரெஷ் வாட்டர் நதியில் முட்டையிட்டுட்டு கடலுக்குத் திரும்பிருமாம்.  அந்த முட்டைகள் எல்லாம்   குஞ்சு பொரிச்சதும், அந்தக்  குட்டிகள் ஓரளவு வளர்ந்தபின்  அதுகளும் கடலுக்குப் போயிருமாம்.  பிறகு அவை வளர்ந்து  பெரிதாகி, முட்டையிடும் பருவம் வந்ததும் கடலில் இருந்து நதிக்கு வந்து  இங்கே முட்டையிட்டதும்,  தாய் கடலுக்குத் திரும்பி விடும். அந்த 400 மீட்டர் தூரத்தை எப்படிக்கடந்து போகுதோன்னு எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான். காலா இருக்கு நடக்க? அதுவும் கல்லு மேலே நடந்து போகணுமே....   இயற்கையில் என்னென்ன அதிசயங்கள் இருக்கு பாருங்க !!!!

இந்த குறிப்பிட்ட இடம் மவொரிகளுக்கு (இங்கத்து பூர்வகுடிகள்) புனிதமான இடம் என்பதால்  அந்தப் பகுதி முழுசும் மவொரிகளில் கட்டுப்பாட்டில் இருக்கு.  எங்க அம்மு 'கல் கல்' என்றதால்தான் அங்கே போனோம். அங்கே ஒரு  சிலிண்டர் வடிவ மழமழன்னு ஒரு கல் என் கண்ணில்   ஆப்ட்டது. எடுத்துப் பார்த்தால் மூணு கோடுகள் நெடுக்குவாக்கில். ஆஹா.... மஹாவிஷ்ணுவின் திருமண். இதுதான் நமக்கு   நியூஸி சாளக்ராம் என்று கொண்டுவந்து பூஜையில் வச்சுருக்கேன் இந்த 25 வருசங்களாக. அது ஒரு விதமான க்வார்ட்ஸ் கல்.   சாமி  ஜோதி விளக்கில் பார்த்தால் ஒளி ஊடுருவி வருது!



இப்பதான் நர்மதை  நதியில் சாளக்ராம் கிடைக்குதுன்னு  விக்கறாங்களே!  இவை சிவன் அம்சமாம்!  மதுராவில் பார்த்தேன். விலை வெறும் பத்து ரூ தான் :-)

நம்ம வீட்டில் எப்படி  ஆபரணப்பெட்டியில் நாலு இருக்குன்னு கேள்வி வருமுன்....  இன்னொன்னையும் சொல்லிடறேன்.....

(அதானே.... மூணு இல்லே இருக்கணும். ஒன்னு நாமே வாங்குனது. ரெண்டண்ணம் சக்தி உபாசகரிடம் இருந்து வாங்குனது. 1 + 2 = 3 தானே.......)

இங்கிருக்கும் ஒரு தோழி, நம்ம  முக்திநாத்  பயணம் தெரிஞ்சதும் ' கண்டகி நதியில் எனக்கு ரெண்டு சாளக்ராம் பொறுக்கிண்டு வா' ன்னு சொன்னாங்க. கல் வெயிட்டா இருக்குமேன்னு  சொன்னதுக்கு கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் கிட்டக்க வச்சு  இத்துனூண்டு கோலி அளவுன்னு  காமிச்சாங்க.

கண்டகி நதியில் பொறுக்கும் அளவுக்கு ஆக்ஸெஸ் கிடையாது. நாம் தங்கிய ஹொட்டேலில் இருந்து   மூணு நாலு  கிமீ தூரத்தில் கண்டகி. முதலில் குறுக்குப் பாதைன்னு  ஒரு ஜீப்பில் அதைக் கடந்து  நேரா முக்திநாத்  கூட்டிப்போறேன்னு ட்ரைவர் சொல்றாரு. அதுலே போகலாமுன்னு  கைடு ஒரு ஜீப் ஏற்பாடு செஞ்சார்.  ஜீப் போய் சட்னு நதியில் இறங்குச்சு.  வீல் முழுசும் மூழ்கும் அளவு தண்ணீர் ஓடுது.  அதுலேயே ஓட்டிப்போய்  தண்ணீர் வரத்து ஏகத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சதும் ( வண்டிக்குள்ளே தண்ணீர் வந்துருச்சு. இடுப்பளவு இருக்கும், இறங்கி நின்னால்... அப்புறம் எங்கே பொறுக்குவது? ) கஷ்டப்பட்டு வண்டியைத் திருப்பி  ஊருக்கு வெளியே ஒரு மரப்பாலம் வரை கொண்டு வந்து விட்டுட்டார். நாங்க   மூணடி அகலப் பாலத்தில் நடந்து அந்தாண்டை போய் ஒரு சின்ன கிராமத்தைக் கடந்து  ஒரு கால்மணி நடந்து அரசு ஜீப் இருக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இதெல்லாம் விஸ்தாரமா இந்தப் பயணப்பதிவுலேயே எழுதி இருக்கேன்.  நேபாள் பயணப்பதிவுன்னு  அப்போ தலைப்புக் கொடுத்து, அதுலே ஒரு   முப்பத்தியெட்டு பகுதிகள்  போட்டாச்.  அப்புறம் இந்தியாவில் பயணம் தொடர்ந்தோமே... அதுக்கு இந்தியப் பயணத்தொடர்னு தனித் தலைப்பு. அதுலே இது நூத்தியெட்டாவது பதிவு.  ஆக மொத்தம் நூத்தி நாப்பத்தாறு பகுதிகளா ஆகிப்போச்சே....

போகட்டும்.... என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்..... தோழிக்கு கோலிகுண்டு சைஸ்..... கேட்டாங்களே.....  அதனால் கோலி அளவு ஒன்னு கடையில் வாங்கினேன். அப்போதான் அந்த லக்ஷ்மிநாராயணனும், சின்ன எலுமிச்சை அளவு உருண்டையா ஒன்னும்  வாங்கினேன். அதுலேதான் லக்ஷ்மிநாராயணனை,  தாம்பரம்  அத்தைக்கும்  சின்ன எலுமிச்சை  நியூஸிக்குமா ஆனது. இப்பக் கணக்கு சரியா வருதோ? 3 + 1  :-)

பெட்டிக்குள் வச்சது முதல், தினசரி பூஜை சமயம் திறந்து பார்த்து, அவுங்களுக்கும் துவாதசநாமம் சொல்லுவேன்.  அடுக்கி வச்சதுலே பாருங்க,  குட்டிச்சாமி, அவருக்குத் தோதான ஒரு இடத்தில் உக்கார்ந்துட்டார்.  நாமம் சொல்லும்போது கரெக்ட்டா, வாமனா, கோவிந்தா, தாமோதரா  மூணும் குட்டிக்குன்னே அமைஞ்சு போச்சு :-)  இதுலே வாமனா ரொம்பப் பொருத்தம்!
ஆரம்பத்துலே வெறும் நாமம்தான். அப்புறம்தான்  எதோ கைவேலைக்காக வாங்குன கண்கள் இருக்கேன்னு ஞாபகம் வந்து தேடி எடுத்தேன். எல்லாம் வட்டக் கண்ணு....   நீளக்கண் கிடைக்கும் வரை இருக்கட்டுமுன்னு  கண் வச்சு, சந்தனத்தில் முகமும் வரைஞ்சு வச்சேன்.  முட்டைக் கண்ணால் பார்ப்பது கூட நல்லாத்தான் இருக்கு, பெருமாளே! என்ன ஒன்னு சந்தனம்தான் உதிர்ந்து போயிருது...  வேறெதாவது யோசிக்கணும்.

இப்படியாக, பெருமாள் சாளக்ராம ரூபத்தில் நம்ம வீட்டில் இடம் பிடிச்சுட்டார். என்னோடு ஒரு ஒப்பந்தமும் ஆச்சு.

"துள்ஸி, நீ என்ன சாப்புடறயோ அதுவே எனக்கும் போதும். மெனெக்கெடாதே"

"ஆமாமா.... நீர்  வேற எதாவது வேணுமுன்னு  கேக்க மாட்டீர்தானே? "
சாமியைப் பொறுத்தவரை  ஒரே ஒரு விஷயம்தான்....   அது ஒரு நம்பிக்கை! கல்லோ, மண்ணோ, மரமோ எதுவா இருந்தாலும்   நம்புனாத்தான் சாமி!

அப்படி நான் நம்பும் சாமி, உங்க எல்லோருக்கும் அன்பையும் ஆசிகளையும் அள்ளித்தரணுமுன்னு  வேண்டிக்கறேன்!
நம்மூர்  ஹரே க்ருஸ்னாவில்  சாளக்ராமம் வச்சுருக்காங்க.  அலங்காரம் அழகா இருக்குல்லே?  ஒண்டியா இருப்பதன் சௌகரியம் அது. நம்மூட்டுலே நாலு என்பதால்.....    பார்க்கலாம்......  அடுத்த பயணத்தில் எதாவது வாகா அமையுமான்னு :-)

முற்றும்........... :-)


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!


Monday, January 29, 2018

நடத்திக் கொடுத்தான்.......நாராயணன்! ..... (இந்திய மண்ணில் பயணம் 107)

தூக்கத்துக்கும் எனக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான். தூங்கணுமுன்னு நினைச்சா தூக்கம் வரவே வராது. இந்த விஷயத்தில்  நம்ம ரஜ்ஜு  கெட்டிக்காரன். கொடுத்துவச்ச மகராசா......

'கண்ணை மூடிக்கிட்டு அப்படியே இரு. தூக்கம் வந்துரும்'  நம்மவர் சொல்றார். ஆமாம்.... வந்துட்டாலும்.....  ப்ச்.  ஃப்ளைட் பாத்  மட்டுமே என் ஒரே பொழுதுபோக்கு.  எதாவது படிக்கலாமுன்னா , நாம் லைட் போட்டுக்கிட்டால் மத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லையோ.....
நிமிச நிமிசமா... நேரத்தைத் தள்ளி, ஒருவழியாப் பொழுது விடிஞ்சது. வீட்டுக்குப்போனவுடன் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்களை நினைச்சுப்பார்த்தாலே கதி கலங்குது...
 அண்டைநாடான அஸ்ட்ராலியாவைக் கடக்கவே அஞ்சு மணி நேரம் ஆகும்.     நியூஸியை நெருங்கறோமாம்.  சிங்கைக்கும் எங்களுக்குமே அஞ்சு மணி நேர வித்தியாசம் இருக்கு.
சதர்ன் ஆல்ப்ஸ் சிகரங்கள் மேலே இன்னும் பனி இருக்கு.  கோடைகாலம் இன்னும் மூணு வாரத்துலே ஆரம்பம்..... என்ன கோடையோ...... எப்பவாவது  ஒரு முப்பதைத் தொடும்....   (இந்தப் பதிவு எழுதும் இன்று இங்கே முப்பது. நேத்தும்  முப்பதே. இந்த வருசம்தான் கோடை இங்கே சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கு.... பயங்கரச் சூடு....  ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... இட்லிக்கு அரைச்சு வச்சது நாலரை மணி நேரத்துலே அப்படியே பாத்திரம் நிறைய பொங்கிருச்சுன்னா பாருங்க....! )


கேன்ட்டர்பரி ப்ளெய்ன்ஸ் கண்ணில் பட்டதும்  ஊர் வருதுன்னு ஒரு மகிழ்ச்சி. ப்ரேக்ஃபாஸ்ட்ன்னு  ஒரு பாடாவதி மறுபடியும். காலங்கார்த்தாலே குல்ச்சா (நார்த் இண்டியன் ஐட்டம்) திங்க முடியுதா என்ன?  காஃபியோ கேக்கவே வேணாம்... யக்....  சுடுதண்ணின்னு நினைச்சுக்கிட்டு ஒரு டீயைக் குடிச்சு வச்சேன்.

ஊர் வந்தாச்.  கொஞ்ச நேரம் நமக்கு ஊரைச் சுத்திக் காமிச்சுட்டு  அப்புறமா இறக்கி விட்டார் பைலட். உள்ளூர் நேரம் காலை பத்து.
பொட்டிகளையெல்லாம் எடுத்து,   ரெட் பாத்லே போய்  தீனிகள் இருக்கும் பையைத் திறந்து காமிச்சு, மற்ற பொட்டிகளை ஸ்கேனருக்குள் அனுப்பின்னு  எல்லா சாங்கியங்களையும் முடிச்சு, டாக்ஸி பிடிச்சு வீட்டுக்குப் போய்ச்  சேரும்போது  பதினொன்னே கால்!

முதல் வேலை முதலில்னு சாமி விளக்கு ஏத்திட்டு,  அவசரத் தேவைகளுக்கு ன்னு வச்சுருக்கும்  லாங்க் லைஃப்   பாலை  காய்ச்சி,  சாமிக்குப்  படைச்சாச். கூடவே கேபின் பேகில் இருந்த ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பில் கொஞ்சம். பாவம்....  ஏழு வாரமாப் பட்டினி....
நல்லதா ஒரு காஃபி போட்டுக் குடிச்சதும்தான் உயிர் வந்துச்சு.  அப்புறம் குளியல், சமையல்னு பரபரன்னு  வேலைகள். பயணம் போய்த் திரும்பும் நாளுக்குன்னே ஒரு செட் மெனு வச்சுருக்கேன்.  தால் பாத்,   பாயில்டு பீன்ஸ்.   வயித்தைக் கஷ்டப்படுத்தக்கூடாது....  அப்புறம்  இத்தனை நாள் சமைக்காம இருந்து சுகம் கண்ட உடம்பை, திடீர்னு  வருத்திக்கக்கூடாது,  இல்லையோ?

ஒன்னே காலுக்குக் கண் டாக்டரைப் பார்க்கணும்.  சென்னையில் இருக்கும்போதே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியாச்.
பரிசோதனைகள் எல்லாம் செஞ்சு,  இன்னொரு கண்ணில் ரெட்டினாவில் ஓட்டைகள் இருப்பதைக் கன்ஃபர்ம் செஞ்சாங்க. இதை லேஸர் மூலம் சரிப் படுத்தணும். அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் நாளன்னைக்கு வருவார்.   வேற ஊரில் இருந்து வர்றாராம்.  அவருக்கான   அன்றைய வேலைகளை முடிச்சுக்கிட்டு வரணும். அதனால்  மாலை ஆறரைக்கு டைம் கொடுத்தாங்க. பொதுவா  வேலைநேரத்துக்குப்பின்னால் (அஞ்சு மணி)  வேலை செய்யறதில்லைன்னாலும்.... இது ஒரு வகை எமெர்ஜன்ஸின்னு....  இப்படி ஒரு ஏற்பாடு.
வீட்டுக்கு வந்து சின்ன ஓய்வுக்குப்பின்  மூணே முக்காலுக்குக் கிளம்பிப்போறோம் நம்ம ரஜ்ஜுவை, கேட்டரியில் இருந்து கூப்பிட்டு வர்றதுக்கு. நாலு மணிக்குத்தான் திறப்பாங்க. ரஜ்ஜுவின் கூண்டு,  மகள் வீட்டுலே இருக்கு. அங்கே போய் எடுத்துக்கிட்டுப் போகணும். மகளின் செல்லம்  ஜூனோ  ஃபென்ஸ் கட்டை மேல் உக்கார்ந்துருந்தது. தடவிக்கொடுத்துட்டு ஓடுனோம்.  ( ஜூனோ இப்ப   நவம்பர்  20 ,  தெருவைக் கடந்து போகும்போது  வண்டியில் அடிபட்டு சாமிகிட்டே போயிருச்சு.  ப்ச்.... பாவம்....  )




மேலே கம்பி வலை அடிச்சு இருக்கும் வெளிப்பகுதியில் இருந்தான். நம்ம குரலைக் கேட்டதும்  முகத்தில் ஒரு மகிழ்ச்சியும் கோபமுமா ஒரு பார்வை.  வீட்டுக்கு வந்ததும்  கூடத்தில் போட்டு வச்சுருக்கும் பெட்டிகளை   மோந்து பார்த்துட்டு, அலட்சியமாத் தோட்டத்துக்குப் போயிட்டான்.   கொஞ்ச நேரம் ஆகும் சமாதானமாக....  :-)  வீட்டுலேயும் வெளியேயும் எதாவது மாறுதல் இருக்கா? யாராவது (!!) பூனைப்பசங்க , தான் இல்லாத நேரத்துலே வந்து  போனாங்களா? எல்லாம் செக் பண்ணனும் இல்லையோ.... :-)


நமக்குக்  களைப்பா இருந்தாலும் இப்போ ரெண்டுங்கெட்டான் நேரம் என்பதால் தூங்க முடியாது.  ஒன்னு ரெண்டு பெட்டிகளையாவது திறந்து  சாமான்களை வெளியே எடுக்கலாம்.  முதலில் நம்ம தசாவதாரங்கள்  எப்படி இருக்கோ?  ஒவ்வொன்னையும் துப்பட்டாவில் சுத்திப் பத்திரமாத்தான்  வச்சுருந்தார் நம்மவர். ஆனாலும்.... எந்த கதியில் இருக்குமோன்னு ஒரு பயம்தான்...

பெருமாள் அருளால் சேதம் ஒன்னும் இல்லை.... சாமி அறை ஷெல்ஃபில் மேல் தட்டில்  அடுக்கினேன்.  என்னமோ இதுக்குன்னே இடம் பண்ணி வச்சாப்லெ சரியா அடங்கிருச்சு!
அப்புறம் நம்ம காத்மாண்டு புட்டா நீல்கந்தா ..... அவரையும் ஏளப்பண்ணியாச் !
போதும் இன்றைக்கான வேலைகள்.  ரஜ்ஜுவை சமாதானப்படுத்தி  சாப்பாடு கொடுக்கலாம்.....

எப்படியோ   இந்த நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களின் தரிசனங்களை நல்லபடியா முடிச்சுக் கொடுத்த எம்பெருமாளுக்கு  மனம் நிறைஞ்ச நன்றியைச் சொல்லாமல்  இருக்க முடியலை.....  நடத்திக் கொடுத்தான்.......நாராயணன்!

வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமாத் தூங்கி, வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்தும் ஆச்சு. இன்றைக்குத் தேதி  நவம்பர் ஒன்பதுன்னு,   செப்டம்பர் 18ன்னு தேதி காமிச்சுக்கிட்டு இருந்த தினக்காலண்டரில் பழசையெல்லாம் கொத்தாகக் கிழிச்சுட்டு இருக்கும்போது,  அடுக்களைக்கு வந்த நம்மவர் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்..........

ஐநூறு ரூபாய் நோட்டு  செல்லாதாம் !!!!!!!  

ஐயோ.................

தொடரும்........ :-)

PINகுறிப்பு: பயணம் முடிவுக்கு வந்தே வந்துருச்சு,  இல்லே!!!  சாளகிராமம் கொண்டு வந்துருக்கோமே..... அதைப் பற்றிக் கொஞ்சம் அடுத்த பதிவில் எழுதிட்டு  முடிச்சுக்கலாம்.  ஓக்கே?

தமிழ் மணத்துக்கு என்ன ஆச்சு?  அங்கே ஒரு வாரமா எதையும் இணைக்க முடியலையே.......

இப்பப் பார்த்தா.... அந்த ஓட்டுப் பட்டையையே  காணோம்!!   கிடைக்கிற ஒரு ஓட்டும் போச்சு  :-(   ( அதுவே என் ஓட்டுதானாக்கும் :-)


Friday, January 26, 2018

சிங்கைத் தோழியர் சந்திப்பு......... (இந்திய மண்ணில் பயணம் 106)

காலை ஒன்பது மணிக்கு முன்னால் செராங்கூன் ரோடில் நடப்பது சுகம்!  கடைகள் திறந்துருக்காது. நிம்மதியா விறுவிறுன்னு நடந்து போகலாம்.


அதுவும் காலையில் கடை திறந்தவுடன், கடைக்காரர்கள்  சாமி கும்பிட்டுட்டு, சனங்களும் சாமிப் பாட்டுகளைக் கேக்கட்டுமேன்னு  பாட்டுகளைப் போட்டுருவாங்க.  கடை கடைக்கு வெவ்வேற இஷ்ட தெய்வங்கள், வெவ்வேற பாட்டுகள். எல் ஆர் ஈஸ்வரி தொடங்கி விதவிதமாக் கேட்டுக்கிட்டே நடக்கணும். மாரியம்மா...கருமாரியம்மா மருதமலை மாமணியே முருகைய்யா சரணம் அய்யப்பா சஷ்டியை நோக்க சரவண  திரிசூலி.....ஓங்காரி....
வீரமாகாளியம்மனுக்கு, எதிர்வாடையில் இருந்தே  ஒரு கும்பிடு போட்டுட்டு கோமளவிலாஸ் போய் ஆளுக்கொரு ஃபில்ட்டர் காஃபி ஆச்சு.
மேலே படம்: பார்க் ராயல் பக்கத்துலே இருக்கும் கோமளவிலாஸ். ஃபாஸ்ட் ஃபுட். எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் நடைன்னாலும் பழைய கோமளவிலாஸ்தான் எனக்குப் பிடிக்கும். இதுதான் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு எதிர்வாடையில் இருக்கும் :-)

அறைக்குத் திரும்பலாமா இல்லை க்ருஷ்ணன் கோவிலுக்குப் போகலாமான்னு சின்னதா  ஒரு பேச்சு :-)   பத்து மணிக்கு நெருங்கிய தோழி  வர்றாங்க நம்மை சந்திக்க  என்பதால்   ஸிம்லிம் ஸ்கொயர் தாண்டிப் போய் வர நேரம் இருக்காதுன்னு அறைக்கே திரும்பலாமுன்னு முடிவு.

முஸ்தாஃபா கடை இப்பெல்லாம் (ஒரு ஏழெட்டு வருசமா?) இருபத்தினாலு மணி நேரமும் திறந்துருக்காங்கல்லெ.... அதுக்குள்ளே நுழைஞ்சாச்சு. எனக்குப் பவுடர் வாங்கிக்கணும்.  எப்பவும் இங்கேதான் வாங்கிக்கிட்டுப் போறது வழக்கம்.  அஞ்சாறு டப்பா(!) வாங்கினால் அடுத்த பயணம் வரை தாக்குப் பிடிக்கும். சின்ன காம்பேக்ட்தான்....  மிஞ்சிப்போனா மொத்தமே நூத்தியம்பது கிராம் எடைதான் இருக்கும் :-)

நம்மவருக்கு ஷர்ட் வாங்கிக்கணுமாம்.  அந்த செக்‌ஷனுக்குப் போனால்.... நீலக்கட்டத்தை விட்டால் வேறேதும் எடுக்கமாட்டேங்கறார்.  ஏற்கெனவே இதே கட்டம் இருக்கேன்னா, அது  கொஞ்சம் பெரிய கட்டம், இது சின்னது... நெடுக்காப் போகும் எக்ஸ்ட்ரா கோடு, இப்படி எதாவது வித்தியாசம் கண்டுபிடிச்சுச் சொல்லுவார்.   கடைசியில்.... ஒரு ஷர்ட் மட்டும் வாங்க முடிவாச்சு.  ஏற்கெனவே பேகேஜ்  அலவன்ஸ்  ஃபுல் ஆகிருச்சே.  கேபின் பேகில் ஏழுகிலோ மட்டும்தானே...
அறைக்குப் போய்ச் சேர்ந்த அஞ்சாவது நிமிட்  என்  நீண்டகால, நெருங்கிய தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்  வந்துட்டாங்க.  வெயிலில் அல்லாட வேணாமுன்னு அறையிலேயே இருந்து பேசிக்கிட்டு இருந்தோம் பனிரெண்டு வரை.

செக்கவுட் நேரம் வந்தாச்சுன்னு பெட்டிகளை எடுத்துக்கிட்டு அறையைக் காலி பண்ணி, கீழே பில்லை செட்டில் செஞ்சதும், பெட்டிகளை எல்லாம் concierge service இல் ஒப்படைச்சுட்டுப் பகல் சாப்பாட்டுக்கு  எங்கே போகலாமுன்னு  யோசிச்சுக்கிட்டே கிளம்பி இதே செராங்கூன் சாலையில் நடந்து போறோம்.  கலகலன்னு கூட்டம். மகளுக்கு  நீலக்கலர் வாட்ச் ஒன்னு வாங்கிக்கணும். கல்யாண காக்ராவுக்கு மேட்சா!  ஒருநாள் கூத்து என்பதால்....  விலை அதிகமா இருக்கறது வேணாம்தானே....

தேடிக்கிட்டே  போகும்போது  ஒரு கடையில்   கிடைச்சது.   பையருக்கும் பொண்ணுக்குமான  ஹிஸ் & ஹெர்  :-) கல்யாண கிஃப்டா இருக்கட்டுமுன்னு  ஜெயந்தியே வாங்கிக் கொடுத்துட்டாங்க !       'அடடா.... தெரிஞ்சுருந்தால்  இன்னும் கொஞ்சம் நல்லதா வாங்கி இருக்கலாமே'ன்னேன் :-) :-) :-)   'ஓ அப்படியா.... வேற ஒன்னு செலக்ட் பண்ணுங்கோ  அதையும் வாங்கிடலா'முன்னு சொல்றாங்க !!! 
செராங்கூன் ரோடு  முழுக்க எங்கே பார்த்தாலும் யானைகளும், மயில்களும், 'தாமரை'யுமா இருக்கு அலங்காரத்தில்!  தீபாவளிக்கு  அலங்கரிச்சது அப்படியே  சீனர்களின் புது வருசம் வரை இருக்கும்  இங்கே!   அந்த சமயத்தில் சிங்கையின்  இந்தப்பகுதி ரொம்பவே அழகுதான்!
வீரமாகாளியம்மன் கோவிலைத் தாண்டும்போது, உள்ளே போகலையேன்னு போய் சாமியைக் கும்பிட்டுக்கிட்டோம். 
இந்தக் கோவிலில் அனைத்து மக்களுக்கும் அனுமதி உண்டு. சுற்றுலாப் பயணிகளான  வெள்ளைக்காரர்களுக்கும்,  மற்றும்  கோவிலுக்குள் நுழையத் தகுதியான  உடைகளைப் போட்டுக்கிட்டு வராதவங்களுக்கும் ஒரு கூடை நிறைய  கலர் துணிகளை போட்டு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னு ரெண்டை எடுத்து இடுப்பில் வேஷ்டி போலவும், இடுப்புக்கு மேலே  தோளைச்சுத்தி ஷால் மாதிரி மூடிக்கிட்டும் கோவிலுக்குள்  தாராளமா வந்து  போகலாம். ரொம்ப நல்ல விஷயம்!
பேசிக்கிட்டே நடந்ததில்  கேம்பெல் லேன் ஆரம்பத்துக்கு வந்துருந்தோம். இந்த இடத்தில் இருக்கும் காய்கறிக்கடை மேலே எனக்கு எப்பவும் ஒரு கண்ணு. என்னென்ன அருமையான(இங்கே நியூஸியில் கிடைக்காத)வகைகள் இருக்குன்னு  பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கேமெராக்   கண்ணாலே தின்னுட்டுதான் வருவேன் எப்பவும் :-)

இதே சந்துலேதான்  ஜோதி புஷ்பக்கடையும். 'கொஞ்ச தூரம்  நடந்தால்   இந்திய மரபுடமை  நிலையம் (இண்டியன் ஹெரிடேஜ் சென்டர்) இருக்கு. அங்கே போயிட்டுப்போகலாம். உங்களுக்குப் பிடிக்கும்' னு சொன்னாங்க ஜெயந்தி.  அட!  இதுவரை போனதே இல்லையேன்னு   போனால், நம்ம அதிர்ஷ்டம்.... இன்றைக்கு விடுமுறை தினமாம்.  (ஞாபகம் வச்சுக்குங்க....திங்கட்கிழமை லீவு) புத்தம்புதுசா பளபளன்னு மின்னும் கட்டடம்.
போனவருசம் மே 8,  2015 இல் திறந்து வச்சுருக்காங்க. சட்னு மனசுக்குள் கணக்குப் போட்டேன்.... இன்றைக்கு  7 நவம்பர் 2016 இல்லே! ஒன்னரை வருசம்தான் ஆகி இருக்கு. அடுத்த பயணத்தில் கட்டாயம் போய்ப் பார்க்கணும்.(மூளையில் முடிச்சு!)  சிங்கை மக்களுக்கு இலவசம். வெளிநாட்டவர்களுக்கு  ஆறு டாலர் கட்டணம்.

வாசலில் தீபாவளி வாழ்த்துகளோடு விளக்கமும் வச்சுருந்தாங்க.
1929 ஆம் ஆண்டுதான் தீபாவளிக்குப் பொதுவிடுமுறை தினம் அறிவித்தார்களாம்.  1985 முதல்தான் சிங்கை பயணத்துறை மேம்பாட்டுக் கழகமும், வியாபாரிகள் சங்கமும்     சேர்ந்து  இந்த விளக்கு அலங்காரங்களை ஆரம்பிச்சுருக்காங்களாம். (அட!  நாங்களும் முதல் முறை சிங்கை போனது 1985 இல்தான்!  ஆனால் அது மார்ச் மாசம். தீபாவளி சமயம் இல்லை)

ஒவ்வொரு வருஷமும் ஒரு தீம். இந்த வருஷத்துக்கு மயில்! இந்த வருசத்துக்கான  அலங்காரம்  செப்டம்பர் 17 இல் திறந்து வச்சது அதிபர் Tony tan keng yam. இவர் 2017, ஆகஸ்ட் 31 வரை அதிபர் பதவியில் இருந்துருக்கார். இப்போதைய அதிபர் ஒரு பெண்மணி.  மேடம் ப்ரெஸிடென்ட்.

அப்பதான் ரெண்டு இளம் பெண்கள், என்னிடம் சில கேள்விகளைக் கேக்கலாமான்னாங்க. சுற்றுலாத்துறையாம். ஒரு படிமத்தில்  சில கேள்விகளும் பதிலுக்கான இடமுமா இருக்கு. அதை நிரப்பித் தரணும். தந்தேன் :-)

 சின்னப்பசங்களுக்கு வேட்டி செட்!  அட்டகாசமா இருக்கு!

லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு அப்படியே டெக்கா  சென்டர் போகலாமுன்னு  போனால், நம்ம ஜெயந்தியின் தோழி ஒருவருடன் எதிர்பாராத சந்திப்பு!   க்ளிக் க்ளிக் :-)
 டெக்கா சென்டரில் ஒரு கேரளா உணவகம் இருக்கு. அங்கே போனால் தாற்காலிகமா மூடி இருக்காங்க(ளாம்) திரும்பக் கோமளவிலாஸுக்கே வந்தோம். அங்கத்து தோசையில் நம்ம பெயர் இருந்துருக்கு, பாருங்க :-)
பொடிநடையில் பார்க் ராயல்.   வரும் வழியில் இளநீர் வழக்கம்போல் :-) கொஞ்ச நேரம்  லாபியில் இருந்தே பேசிட்டு, அவுங்களும் கிளம்பிட்டாங்க.
பெரிய ஹொட்டேல்களில் இது ஒரு  தொந்திரவு.  செக்கின் டைம் பகல் மூணு மணி. செக்கவுட் டைம் பகல் பனிரெண்டுன்னு.....    ப்ச்....





எதிரில் இருக்கும்  ஸிட்டி ஸ்கொயர்  வழியா அவுங்களோடு ஃபேர்ரர் பார்க் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்தோம் :-)
லாபி முழுசும் இந்தியப் பயணிகள்தான். பெரிய பெரிய குழுவாக் குடும்பத்துடன் வர்றாங்க. உக்காரப் போதுமான இடமும் இல்லை.  பிள்ளைகளோ போரடிச்சுப்போய் இங்கேயும் அங்கேயுமா  ஓடி விளையாடி கூச்சல் போட்டுக்கிட்டுன்னு களேபரமாத்தான் இருக்கு.  அதையெல்லாம் கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போதுதான் இன்னொரு  சமாச்சாரம் வாங்கிக்கலைன்னு நினைவுக்கு வந்துச்சு.
பக்கத்து பில்டிங்தான் முஸ்தாஃபா.  அங்கே போனால் ஆச்சு.  மணி மூணேகால்தான்.  குங்குமப்பூ வாங்கிக்கணும்.  அவ்ளோதான்.  கொஞ்ச நேரம் விண்டோ  ஷாப்பிங்.  ஹொட்டேல் லாபிக்கு இது தேவலை :-)
சிங்கை முன்னைப்போல இல்லை.... விலைவாசி எல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு.....
நாலேகாலுக்குத் திரும்பி  வந்து  நம்ம பெட்டிகளை (கேபின் பேக்ஸ் ரெண்டுதான்) எடுத்துக்கிட்டு டாக்ஸிக்குச் சொல்லிட்டுக் காத்திருந்தோம்.  சாயங்காலங்களில் டாக்ஸி கிடைப்பதும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு இப்பெல்லாம்....

வண்டி கிடைச்சதும், இன்னொரு நெருங்கிய தோழியைப் பார்த்து ஹை சொல்லிட்டு ஏர்ப்போர்ட் போகணும். அநேகமா ஒரு பத்து நிமிட் வெயிட்டிங் போடவேண்டி இருக்குமுன்னு  ட்ரைவரிடம் சொல்லிட்டு, தோழி வீட்டுக்குப் போறோம்.

சிங்கையில் தமிழ்வட்டாரத்தில், தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் புகழ் பெற்றவங்க இவுங்க.   எழுத்தாளர் சித்ரா ரமேஷ்!  உபதொழிலா டீச்சராவும் இருக்காங்க .  பள்ளிக்கூடத்து ஆண்டுவிழா நிகழ்ச்சி தயாரிப்பிலும், ஒத்திகை பார்ப்பதிலும் கொஞ்சம் பிஸியாகிட்டாங்க. வருஷ முடிவு வருது பாருங்க.... அவுங்க வேலை விட்டு வரும் நேரத்துக்குத்தான்  நாமும் போய்ச் சேர்ந்தோம்.  வளாகத்தின் வாசலில்  காத்திருந்தாங்க.
டாக்ஸி காத்திருக்குன்னு   சொல்லி,  சட்னு நாலு  வார்த்தை பேச்சும் ரெண்டு க்ளிக்ஸுமா அவசரடியில்  எல்லாம் ஆச்சு. நலம் நலம். போதாதா?

சிங்கையில் நமக்கு வேண்டியவர்கள்  நிறையப்பேர் இருக்காங்கன்னாலும் சந்திக்க நேரம் இல்லாமல் போச்சு.  வேலைநாள் பாருங்க............. எல்லோரும் பிஸிதானே?

ஏர்ப்போர்ட் வந்ததும்  நேரா உள்ளே போக வேண்டியதுதான்,  சென்னையிலேயே போர்டிங் பாஸ் கொடுத்துட்டாங்களே...  சிங்கையில்  பொருட்களை  வாங்கும்போது  நாம்    கொடுக்கும் வரிகளை, அந்த ரசீது காமிச்சு  திரும்ப வாங்கிக்கலாம்.  மோதிரத்துக்கான  ரசீது காமிச்சப்ப, மோதிரத்தையும் காமிக்கச் சொன்னாங்க.   அதை எடை போட்டுப் பார்த்தால்  ரசீதில் எழுதுன எடையைவிடக் கொஞ்சம் கம்மியா இருக்கு.  ரெண்டு மோதிரத்திலும் .07 கிராம் குறைவு.  ஒருவேளை ஏர்ப்போர்ட்   டாக்ஸ் ரீஃபண்ட் கவுன்ட்டரில் இருக்கும்  மெஷீன் செட்டிங் சரி இல்லையோ.....  எப்படி  ரெண்டிலும் ஒரே அளவு கம்மி?  இங்கே சரின்னா....   மெர்லின் கடையின் மெஷீன் சரி இல்லை. ஏதோ ஒரு இடத்தில்  தப்பு.  வரிகளைத் திரும்பக் கொடுத்ததும் வாங்கிக்கிட்டு அப்படியே ட்யூட்டி ஃப்ரீயில் ஒரு சின்ன சுத்து.

இங்கே  செப்டம்பரில் வந்தப்பக் கிடைச்ச வவுச்சர்கள் (  80 சாங்கி டாலர்ஸ்)வேற இருக்கே. செலவு பண்ண வேணாமா?  ஏர்ப்போர்ட்  கொடுக்கும் ஃப்ரீ வைஃபையில் மகளுக்கு என்ன வேணுமுன்னு  சேதி அனுப்புனதும் பெரிய லிஸ்ட் ஒன்னு (ஏற்கெனவே தயாரிச்சு ரெடியா வச்சுருக்காள்  :-))அனுப்பிட்டாள்.  எல்லாம் முக அலங்காரப் பொருட்கள்தான்.  அந்த லிஸ்டில் இருக்கும் பொருட்களில் சிலது கிடைக்கலை.... போகட்டும்..... மற்றதை வாங்கிக்கிட்டு,  வேறொரு கடையில் பெர்ஃப்யூம் ஒன்னும்  வாங்கி  என்  ட்யூட்டிஃப்ரீ ஷாப்பிங் கடமையை ஆத்தினேன் :-)
அப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லவுஞ்சுக்குப்போய் சாப்பாடு என்ன இருக்குன்னு பார்த்தால்....  நமக்கான செலக்‌ஷன் ஒன்னும் சரி இல்லை.  கப்புச்சீனோவும், கொஞ்சம் மஃப்பின், பிஸ்கெட்ன்னு  உள்ளே தள்ளிட்டு நம்ம டிபாச்சர் கேட்   வர்றதுக்கும்,  கேட் திறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.
நம்ம வண்டி  ஏழு அம்பதுக்குக் கிளம்பணும்.  கிளம்புச்சு. பத்தரை மணி நேரம் ....  ஒரே போர்....  நைட் ஃப்ளைட்  ஆனதால்    வெளியில் வேடிக்கை பார்க்கவும்  இருட்டைத் தவிர வேறொன்னும் இல்லை.

ஒன்பதுக்கு சாப்பாடு வந்தது, கொறிச்சுட்டுத் தூங்கணும்.

காலையில் பார்க்கலாம், ஓக்கே  ?

தொடரும்........... :-)