Thursday, May 31, 2012

நாளை முதல் குளிராம்

அப்படித்தான் அதிகாரபூர்வமான அறிக்கை சொல்கிறது. ஜூன் ஒன்று முதல்! இது அந்த பாழாப் போனதுக்குத் தெரியலை. ஒரு மாசத்துக்கு முன்னேயே வந்து தொலைச்சுருச்சு:(
இந்தக் கணக்கில் பார்த்தால் நாளை முதல் மிட் விண்ட்டர் இல்லையோ?

 மாட்சிமை தாங்கிய மகாராணியின் பொறந்தநாளுக்காக எங்க நாட்டில் லாங் வீக் எண்ட் ஜூன் 4 ஆம் தேதி. உண்மையைச் சொன்னால் ராணியம்மா பிறந்தது ஏப்ரல் 21 (1926) அவர்களின் குடிமக்களான நாங்க எங்க வசதிக்காக ஆறுவாரம் தள்ளி வச்சுக்கிட்டோம். மவராசன்களுக்கும் மகராணிகளுக்கும் வருசம் முழுசும் வைபவங்கள்தானே!

இந்த வருசம் இன்னுமொரு விசேஷமுன்னா ராணியம்மா பட்டத்துக்கு வந்து வருசம் அறுபதாச்சு! இந்த அறுபதுலே எவ்ளோ கஷ்டம், துக்கம், மகிழ்ச்சி, நிம்மதின்னு நிறையப் பார்த்துட்டாங்க.  மகாராணி விக்டோரியாவுக்குப்  பிறகு நிறைய வருசங்கள் ஆட்சியில் இருப்பது   மகாராணி எலிஸபெத் அவர்கள்தான். இன்னும்  மூணு வருசம் 217 நாட்கள் ஆண்டால் அவுங்களை பீட் பண்ணிறலாம்.

லண்டன் மாநகரில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடக்குது. நம்ம சார்பில் எங்க பிரதமரும் போயிருக்கார்! அவர் அந்தப்பக்கம் கிளம்புனதும் நாங்களும் அண்டை நாட்டுக்கு ஒரு சின்னப்பயணம் வச்சுக்கிட்டோம்.

பார்க்கலாம், பதிவுக்கு எதாவது மேட்டர் தேருமான்னு:-))))) அப்படியே ஒரு வாரம் குளிருக்கும் டாட்டா சொன்ன மாதிரி இருக்கும்.

வந்து வச்சுக்கறேன்  கச்சேரியை. வர்ட்டா மக்களே?

Wednesday, May 30, 2012

வகுத்தல் தெரிந்த மனமே உனக்கு பெருக்கல் தெரியாதா?

இங்கெல்லாம் அப்படி நடக்காதுன்னு இறுமாப்பா இருந்ததுக்கு பலத்த அடி கிடைச்சுருச்சு. உலகெங்கும் ஊடகங்கள் ஒன்னுதான் போல! உண்மையின் உரைகல்லா இருக்க வேண்டியவைகள், பொய்மையைத் தூக்கிப் பிடிப்பதும் பத்திரிகை(அ)தர்மம்:(

 கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம ஐநூறுன்னு உள்ளூர் ரேடியோவில் ஒலிபரப்பிக்கிட்டு இருக்காங்க. அந்த நிகழ்ச்சியைக் கவர் பண்ண வந்த நிருபருக்கு உலகத்துலேயே பெரிய எண் ஐநூறு:)

 பத்தால் வகுக்கத் தெரிஞ்சவருக்கு பத்தால் பெருக்கத் தெரியலை பாருங்க!!!!

 ஒருவாரமாவே வீடுகளில் இருக்கும் லெட்டர் பாக்ஸ்களுக்குத் தகவல் வந்துக்கிட்டே இருந்துச்சு. சனிக்கிழமை மத்தியானம் வேற எந்த வேலையும் வச்சுக்காதீங்க, முக்கியமான வேலை ஒன்னு இருக்குன்னு கோபாலிடம் சொல்லி வச்சேன்.

 சூரியன் சதி பண்ணிட்டான். தலைக்குல்லா, கையுறை எல்லாம் போட்டுக்கிட்டு மறக்காம கெமெராவையும் எடுத்துக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம். கார் நிறுத்த இடம் தேடியதில் பிரமாண்டமான வெற்றிடம் கிடைச்சது. இம்மாம்பெரிய இடம் இங்கே எப்படி? நிலநடுக்கத்தில் இடிஞ்சுபோன கட்டிடத்தை அப்புறப்படுத்தி இருக்காங்கன்னு புரியுது. ஆனா..... முந்தி இங்கே என்ன இருந்திருக்கும்?
கூகுளாண்டவரை சரணடைஞ்சதும் காமிச்சுக்கொடுத்தார். மனம் விக்கிச்சுப்போனது உண்மை! பாரம்பரியக் கட்டிடங்களில் இதுவும் ஒன்னு!

 நகருக்குள் புகுந்து போகும்போதெல்லாம் அங்கங்கே இருக்கும் வெற்றிடங்கள், மூளையைக் கலக்கும். இல்லாமல் போனது என்ன? சரியாக் கவனிச்சு வச்சுக்காம ஒரு ஊரில் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு வாழ்ந்து என்ன பயன்? தலையை உசத்தி அழகை அனுபவிக்காம எல்லாத்தையும் அலட்சியப்படுத்திட்டோமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி.

 இருந்தப்ப அருமை தெரியலையே? இழந்தபின் புலம்பறேனே.....:(
நல்ல கூட்டம்தான். அநேகமா எதிரிக்கட்சி முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்துருந்தாங்க. இதுலே சிட்டிக் கவுன்ஸிலர்கள் சிலரும் உண்டு. அனைவரையும் வரவேற்ற பின் தீம் ஸாங் போட்டாங்க. புகைமூட்டமும் பனிரெண்டு டிகிரியுமா இருக்கும் சூழலில் நெஞ்சைப்பிழிவது போல் அந்தப்பாட்டு...... என்ன குரல்! ஆர்பாட்டமான பின்னணி இசை ஒன்னுமில்லாமல்... அப்படியே கத்தியை இதயத்தில் செருகுனமாதிரி.....
கோவிலைக் காப்பாத்தணும். அது நம்மால் முடியும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த நூறு ஸ்ட்ரக்ச்சரல் எஞ்சிநீயர்கள் இதைப் பழுதுபார்த்துத் திரும்ப உயிர்ப்பிக்க முடியுமுன்னுதான் சொல்றாங்க. உயிர்தெழ ஒரு சான்ஸ் கொடுக்க இந்த ஏஞ்சலீகன் நிறுவனம் சம்மதிக்க மாட்டேங்குதே!
கடந்த 30 ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள பழைய பாரம்பரியக் கட்டிடங்களைப் பழுதுபார்த்துப் புனரமைக்கும் கலையில் வல்லவரான Marcus Brandt என்ற நிபுணர், உடைஞ்சுபோன மணிக்கூண்டை மட்டும் முற்றிலும் புதுமாதிரி கட்டிட்டு, சர்ச் கட்டிடத்தை நல்லபடி பழுதுபார்த்து பாதுகாப்பான கட்டிடமா மாற்றிட முடியும். இதுக்கு 55 மில்லியன் டாலர்களே போதும் என்றார்.
மேடையில் பேசியவர்கள் சொன்னதில் இருந்து நான் கிரகிச்சது.......

 பூரா உலகமும் 'இந்த சர்ச்' பற்றிய விவரங்களையும் அதுக்கு நேரப்போகும் சமாச்சாரத்தையும் கவனிச்சுக்கிட்டே இருக்கு.

 உலகெங்கிலும் பலர் சர்ச் புனரமைக்க நிதி வழங்க தயாரா இருக்காங்க.

 தன்னார்வலர்களா வந்து இந்த வேலையை முடிக்க நிறைய கல்வேலைக் கொத்தனார்கள் ரெடி. உள்ளூர் கல்வேலை கற்கும் இளைஞர்களுக்கு நல்ல பயிற்சிக்களமா இருக்கும்.

 கூடுதல் வரி ஏத்தி நகர மக்களைக் கஷ்டப்படுத்த வேணாம். நிதி அளிக்க உள்ளூர் தனிகர்கள் தயார்.

 அண்டைநாடான அஸ்ட்ராலியாவில் இருந்து (பேசிக்கிட்டு இருந்த மைக்கேலின் மகனின் நண்பராம்)ஒருவர் பத்தாயிரம் டாலர்களை அனுப்பி இருக்கார். இதுலே என்ன ஆச்சரியம் என்றால்..... அவர் ரோமன் கத்தோலிக்கர், யூத இனம் தவிர அவர் அஸ்ட்ராலியர்! (போதுண்டா சாமி.... சான்ஸ் கிடைச்சால் ஆஸிக்கு ஒரு ஊசிகுத்து )
நம்ம சிட்டிக் கவுன்ஸில் லெட்டர் ஹெட்டில் ஊரின் ஐகான் சர்ச் படம்தான் இருக்கு. (சர்ச்சை இடிச்சுட்டால்...... வேற படம் தேடணும். கவுன்ஸிலுக்கு ஸ்டேஷனரி செலவு கூடிப்போகாதோ?)

 இடிக்கணும் இடிக்கணும். ரெண்டு இல்லை மூணு மீட்டர் விட்டுட்டு பாக்கி எல்லாம் இடிக்கணுமுன்னு பிஷப்பம்மா சொல்றாங்களே. அப்ப..... குட்டிச்சுவரா நிக்க வைப்பாங்களா இருக்கும்,இல்லே?

 நாங்களும், அதாவது இடிக்கக்கூடாதுன்னு கோவிலைக் காப்பாத்தணுமுன்னு சொல்ற நாங்களும் கொஞ்சம் இடிப்போம்தான்!!!! எதுக்குன்னா பழுதான இடத்தை இடிச்சுச் சரிபடுத்தி மீண்டும் கட்டி முடிக்க. இது கத்தி! எப்படின்னா.... கறிக்கடைக்காரர் கையில் உள்ள கத்தி இல்லை. அறுவை சிகிச்சை நிபுணர் கையில் உள்ள கத்தி!!!! 

இடிப்பதா வேணாமான்னு தீர்மானத்தை கவுன்ஸில் ஓட்டுக்கு விட்டபோது பத்து பேர் வேணாமுன்னும் நாலு பேர் இடிச்சுக்கோன்னும் சொல்லி இருக்காங்க. (மொத்தமே 14 கவுன்ஸிலர்கள்தான் நம்மூரில்)
ஊர்வல விஷயத்தை பிஷப் விக்டோரியாவுக்கு நினைவுபடுத்த இன்னிக்குக் காலையில் ஃபோன் போட்டப்ப, 'வேற வேலை இல்லையா எனக்கு? காலங்கார்த்தாலே, இப்படி தூக்கத்தைக் கெடுத்து' ன்னாங்க.  அவுங்க சொன்னதை ஒலிப்பதிவாக்கி போட்டுக் காமிச்சதும் கூட்டம் முழுசும் கூவுச்சு.

தானாய் முடிவு எடுக்கலை. அந்தம்மாவுக்கு பின்புலத்தில் ஏதோ நடக்குது.
பிரதமருக்கு அனுப்பும் திறந்த மடல்ன்னு சிகப்பு நிற அட்டையில் கோவிலைக் காப்பாற்றனுமுன்னு அச்சடிச்சு அனுப்ப ஏற்பாடு. நாங்களும் எங்கள் விவரம் எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். மொத்தத்தையும் ஒன்னாச் சேர்த்து தபாலில் அனுப்புவாங்க. நல்லவேளை..... பிரதமருக்குத் தந்தி அனுப்புங்கன்னு சொல்லும் டெக்னிக் இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியலை:-)))))

 இன்னிக்கு உள்ளூர் பத்திரிகை ( இருப்பதே ஒன்னுதான்) கருத்துக்கணிப்புன்னு ஒரு கேவலமான சேதி போட்டுருக்கு. 54 சதம் நகர மக்கள் கோவிலை இடிக்கணுமுன்னாட்டாங்களாம்.
நெசமாவா? சம்பந்தமே இல்லாதவங்களைக்கேட்டா அப்படித்தான் சொல்வாங்க.

 கணக்குப்போட்டு பார்த்தால் மூணரை லட்சம் மக்கள்ஸ் இருக்கும் ஊரில் இந்த பத்திரிகை சர்குலேஷனே எம்பதாயிரத்து ஐநூறுதான். நம்ம பக்கங்களில் சலூனில் தினம் பேப்பர் வாங்கிப் போடுவது போல இங்கே சூப்பர்மார்கெட் தவிர எல்லா கடைகண்ணிகளிலும் வியாபார நிறுவனங்களிலும், பேங்க், டாக்டர்ஸ் வெயிட்டிங் ரூம்ஸ் இப்படி மக்கள் வந்துபோகும் இடமெல்லாம் இதை வாங்கிப் போட்டுருவாங்க. ஊரில் ஒரே ஒரு பத்திரிகை என்பதால் நோ அதர் ச்சாய்ஸ்:(

 வீடுகளில் நிறையப்பேர் வாங்குவதில்லை, நாம் உள்பட. சனிக்கிழமை மட்டும் வாங்குவோம் முக்கிய ஸேல்ஸ், ரியல் எஸ்டேட் விவரம் பார்ப்பதற்காக. இந்த அழகில் எப்போ எங்கே கருத்துக்கணிப்பு யாரை வச்சு நடத்தி தகவல் சேகரிச்சாங்களாம்? எல்லாம் பொய்:(

 பொட்டி வாங்கி இருப்பாங்களோன்னு ஒரு சம்சயம் கேட்டோ!
கிழடுகள்தான் இடிக்கவேணாமுன்னு சொல்லுதுன்னு ஏற்பட்ட குற்றச்சாட்டைப் பொய்ப்பித்த இளைஞர்களும் சிறார்களும் நாயார்களுமா ஐயாயிரம் பேருக்குக் கூடி இருந்த கூட்டம் கதீட்ரலை நோக்கி ஊர்வலமாப் போனோம். (ஒரு கி.மீ இருக்கலாம்)ரெண்டு ப்ளாக் கடந்ததும் கம்பித் தடுப்பு போட்டுருந்த சர்ச்சை தூரத்தில் இருந்து பார்த்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் வழிவிட்டு சாலைக்கு ரெண்டு பக்கமும் கூடுனதும் உள்ளூர் மந்திரவாதி 'த விஸ்ஸர்ட்' கூட்டத்திரை வரவேற்று, பிஷப்பம்மா     'போனதும்'  போகுமிடம் எதுன்னு சொல்லி வாழ்த்தினார்!
எங்கூரில் நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்ற கணக்கில்.... இது மாபெரும் கூட்டம்! எல்லாத்துக்கும் சாட்சியா தினம் பத்துமுறைக்குக் குறையாமல் எட்டிப்பார்த்துப்போகும் ஆஃப்டர்ஷாக்குகள்,  நின்னபாடில்லை. நேத்து பகல் இதே நேரம் ஒரு 5.2 !

Monday, May 28, 2012

Yam இருக்க பயம் ஏன்?

வாழ ஆசையா இருக்குன்னு லேசா ஒரு கோடி காமிச்சாப்போதும், குழியைத்தோண்டி புதைச்சுருவேன். இப்படி ஒரு கொடூர புத்தி ஒரு எட்டு வருசமா கூடிக்கிட்டே போகுது.


 வெங்காயம், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு இப்படி லேசா முளைவிட்டால் குழிக்குள்ளேதான் போகணும். இந்த வரிசையில் யாம் (இது நியூஸி யாம்) குழிக்குள் போச்சு! எங்க பக்க வசந்தகாலம் முடியும் தருவாயில் (நவம்பர்) மண்ணில் இறக்கினால் அது பாட்டுக்கு ஆற அமர முளைச்சு மே மாசக் கடைசியில் அறுவடைக்கு தயாராக வாடி நிக்கும். 

க்ளாவர் டிஸைன் போல இலைகளும் சின்னதா மஞ்சள் நிறப் பூவுமா இருக்கு. செடிகள் மஞ்சள் நிறமா ஆனதும் ஒரு வாடல். அப்போ தோண்டி எடுத்தால் சரியா இருக்கும்.

 ரீசைக்கிளிங் செய்யும் பொருட்களைப்போட்டு வீட்டு முன்னால் தெருவோரம் வைக்க ப்ளாஸ்டிக் கூடைகளை சிட்டிக்கவுன்ஸில் முந்தி கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம தேவையை அனுசரிச்சு எத்தனை கூடை வேணுமுன்னாலும் வாங்கிக்கலாம். (இலவசம்தான்) உலகம் பூராவும் குப்பை ஒரு பிரச்சனையா ஆகி இருக்கே! கவுன்ஸிலும் ஒவ்வொரு விதமா பரிசோதனைகள் செஞ்சுக்கிட்டு இருந்த காலம் அது. அப்புறம் பச்சை மஞ்சள் சிகப்புன்னு சக்கரம் வச்ச வீலி பின்களைக் கொடுத்தாங்க. முந்தி கொடுத்த கூடைகளை நீங்களே வச்சுகுங்கன்னதும் 'காட் மஸ்ட் பி க்ரேஸி ' கோலா பாட்டிலுக்கு ஏற்பட்ட மகிமை இதுக்கும்:-) தோட்டத்துலே குப்பை அள்ள, வேண்டாத சாமான்களை போட்டு வைக்க, பாட்டிங் மிக்ஸ் சாக்கை ஆடாமல் வைக்கன்னு இதுக்கு ஏகப்பட்ட கடமைகள். எல்லாம் முடிந்த ஒரு தருணத்தில் இதுவே செடி வைக்கும் ப்ளான்டர் தொட்டியாக அவதாரம் எடுத்துச்சு.

 கொஞ்சம் பெரிய இடத்தில் இடைவெளி நிறைய விட்டு நட்டு வச்சுருந்தால் இன்னும் நிறைய காய்ச்சு இருக்கும். தாராளமா வளர இடம் இல்லை 'யாம்'.

 இதைப்பற்றி இன்னும் விளக்கமாச் சொன்னதை இங்கே ஒருவாட்டி மீட்டிக்கறேன். நாலுவருசமானாலும் ருசி மாறலை கேட்டோ:-)

இன்னிக்கு 'நம்ம வகுப்புக் கண்மணிகளுக்காக என்ன சமைக்கலாமு'ன்னு யோசனையா இருக்கும்போது 'யாம் இருக்க பய(யா)ம் ஏன்?' ன்னு கேட்டுகிட்டேச் சிவந்த கண்ணோடு என்னைப் பார்த்துச்சு இந்த யாம்.




இது இங்கிலந்துப் பக்கம் இல்லையோ என்னவோ? நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர்,
(இங்கிலாந்துப்பெண்மணி) வீட்டுக்கு வந்தப்ப இங்கத்துக் காய்கறிகளைப் பத்திப் பேச்சுவந்துச்சு. அவுங்க வந்து ஒரு ரெண்டுவாரம்தான் ஆகி இருந்துச்சு அப்ப. இந்த 'யம் எனக்கு ரொம்ப யம்மியா இருக்கு'ன்னு சொன்னாங்க. முதன்முதலா இங்கேதான் இதைப் பார்த்தாங்களாம்.

New Zealand Yam ன்னு பொதுவா இங்கே சொன்னாலும் நம்ம விக்கியண்ணன் சொல்லும் பெயர் Oca.


நம்மூர்லே பச்சை மஞ்சள் இருக்கு பாருங்க ஏறக்கொறைய அப்படியான வடிவம். சிவப்பும் மஞ்சளுமான நிறம். உள்ளே இளமஞ்சளா இருக்கு.
இங்கே உள்ள மக்களுக்கு எதையெடுத்தாலும் அவனுக்குள்ளே(எவன்?) போட்டு 'பேக்' பண்ணித் தின்னணும். நமக்கு? எதையெடுத்தாலும் தாளிச்சுக்கொட்டிக் கறியாப் பண்ணிக்கணும்.
இது ரெண்டுக்கும் இடைப்பட்டதா எதாவது செய்யணுமுன்னு தோணிப்போச்சு. ஒரு நாள் 'நம்வழி'யில் செஞ்சதை மகளுக்குப் பரிமாறுனப்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாள். காய்கறிகள் எதைக் கொடுத்தாலும் 'யக்கி யக்கி'ன்னு சொல்லும் பெண் 'இதை யம்மி'ன்னு சொன்னதும் பிடிச்சுக்கிட்டேன்.




இவள்தான் நம் வீட்டின் சுவை 'மானி.'




இதுலே சிகப்பு நிறம் இல்லாமலும் இளமஞ்சளா ஒரு வகை சமீபத்தில் வர ஆரம்பிச்சிருக்கு. அதுக்குப்பெயர் கோல்டன் யாம்! தங்கத்தை விடமாட்டேங்கறாங்கப்பா:-))))


'கோல்டன் கூமரா'ன்னு இருப்பது என்ன தெரியுமா? நம்மச் சக்கரைவள்ளிக் கிழங்குதான். வெள்ளைத்தோலா(??) இருக்கும் மண்கலரில்:-)




சீஸன் வந்து எப்ப இது கிடைக்குதோ....அப்பெல்லாம் யாமே யாம். நம்ம ரெஸிபியைப் பார்க்கலாம் வாங்க.




யாம் :285 கிராம்


பச்சை மிளகாய் : 2


மிளகாய்ப்பொடி : அரைத்தேக்கரண்டி


கறிமாப் பொடி : 1 தேக்கரண்டி


உப்பு : அரைத் தேக்கரண்டி


பெருங்காயம் : ஒரு சிட்டிகை


எண்ணெய் : ரெண்டு தேக்கரண்டி


யாமைக் கழுவி எடுத்துக்கணும். மண்ணெல்லாம் இருக்காது.
தலை & கால் பக்கம் ( எது தலை எது காலுன்னே புரியாமல் இருந்தாலும்!!)
லேசாக் கத்தியால் சுரண்டிறணும்.
இப்ப வட்டவட்டமா அரை செ.மீ தடிமனில் ஸ்லைஸ் செஞ்சுக்குங்க.
ஒரு கண்ணாடிப் பாத்திரமோ இல்லை மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாத்திரமோ எடுத்து அதில் நறுக்கிய துண்டங்களைப் போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து 4 நிமிசம் மைக்ரொவேவ் அவனில் 100 % பவரில் வச்சு எடுத்துக்கணும். அடுத்து ஒரு ஃப்ரையிங் பேன் ( குழியான அடிப்பாகம் இல்லாமல் தட்டையா இருந்தால் ரொம்ப நல்லது) அடுப்பில் வச்சு(அடுப்பு எரிய வேணாம்) ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் மி. & க.பொடிகளையும் உப்பு & பெருங்காயத்தையும், நறுக்கிய ப.மிளகாயையும் சேர்த்துட்டு அடுப்பை எரிய விடுங்க. சிம்மிலே இருக்கட்டும் தீ.



எண்ணெய் சூடாக ஆரம்பிச்சதும் அதில் சேர்த்த மசாலாக்களை ஒரு கிளறு கிளறிட்டு, வெந்த யாம் துண்டங்களை மட்டும் பரவலாக அதில் சேர்க்கணும்.
யாமில் கொஞ்சூண்டு தண்ணீர், பாத்திரத்தின் அடியில் இருக்கும். அது வேணாம். கொஞ்சம் கொளகொளன்னு வெண்டைக்காய்த் தண்ணீர் போல இருக்கும்.




அப்பப்பக் கொஞ்சம் பிரட்டிவிட்டால் போதும். துண்டங்களில் எல்லாம் மசாலா சரிசமமா ஒட்டிப்பிடிக்குதான்னு பாருங்க. லேசா பாத்திரத்தைக் குலுக்குனாவே போதும். அஞ்சு நிமிசத்தில் கொஞ்சம் கிரிஸ்ப்பா வந்துரும். அவ்வளோதான்.

அடுப்பு ஆஃப்.


இந்தக் கறிமாப்பொடி இல்லைன்னா குடி முழுகிறாது. இருக்கவே இருக்கு கடலை மாவு. மிளகாய்ப்பொடியை இன்னும் ஒரு அரைக்கரண்டி கூடுதலாச் சேர்த்துட்டு அதில் ஒரு டீஸ்பூன் கடலைமாவையும் போட்டால் ஆச்சு. எல்லாம் ஒரு லேசான மொறுமொறுப்பு வர்றதுக்குத்தான்.



இல்லே....எனக்குக் கறிமாப்பொடிதான் வேணுமுன்னு அடம் பிடிச்சா......


இதோ அதுக்குண்டான செய்முறை. (துள்சியின் வழக்கப்படி, "செய்யறது செய்யறோம் கொஞ்சம் கூடுதலாச் செஞ்சு, பாக்கியை ஃப்ரிட்ஜில் வச்சுக்கிட்டா வேற சமையலுக்கு ஆச்சு". இல்லை?)


கடலைப்பருப்பு : ரெண்டு மேசைக்கரண்டி


உளுத்தம் பருப்பு : உ. பருப்பு ரெண்டு மேசைக்கரண்டி


சீரகம் : 1 மேசைக்கரண்டி


மிளகு : 1 மேசைக்கரண்டி


விரும்பினால் மட்டும் : துளி எண்ணெயில் வறுத்த மிளகாய் வத்தல் 4






இது எல்லாத்தையும் வெறும் வாணலியில் நல்லா வாசனை வர வறுத்து, ஆறுனதும் பொடிச்சு வச்சுக்கணும்.


மிளகாய் வத்தல் வேணுமுன்னா ரெண்டு மூணு சேர்த்துக்கலாம். இதை மட்டும் கொஞ்சம் எண்ணெயில் லேசா வறுத்துக்கணும். வேலை மெனெக்கடணுமா இதுக்குன்னு? வேணாம். வேற சமயலுக்கு எதாவது தாளிக்க வேண்டி இருக்குமுல்லே....அப்ப நாலைஞ்சு காய்ஞ்ச மிளகாயைக் கிள்ளாம முழுசா அந்தத் தாளிப்பில் சேர்த்துட்டு, உடனே அதை மட்டும் தனியா எடுத்து வச்சுக்கிட்டா ஆச்சு.






PIN குறிப்பு: நம்ம வீட்டுச் சமையலில் காரம் உப்பு எல்லாம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் குறைவுதான். அதனால் உங்க இஷ்டத்துக்கு இவைகளை 'இப்போதைக்குச்' (ஆடும்வரை ஆட்டம்) சேர்த்துக்குங்களேன்:-)))



என்ன இருந்தாலும் சொந்த விளைச்சலின் சுகமே தனி!!!

Friday, May 25, 2012

அத்தைமடி மெத்தையடி எல்லாம் அந்தக் காலம்!

நிஷாவுக்கு புத்தக வாசிப்புன்னா ஒரே ஆசை. நல்ல மெத்தையாப் பார்த்து உக்காந்துக்கிட்டுக் கையிலே உள்ள புத்தகத்தைப் பிரிச்சால்.... உலகமே மறந்து போகுதாம் இந்த ஒன்னேகால் வயசுப் பிஞ்சுக்கு:-))))




PINகுறிப்பு: உங்களுக்கு இன்னிக்கு லைட் ரீடிங்:-))))

Wednesday, May 23, 2012

கண் முன் எழுந்த கோபுரம் !!!

நான் நினைச்சுக்கூட பார்க்கலை இப்படி ஒரு அனுபவமும் வாய்க்கப் போகுதுன்னு! சண்டிகரில் போய் குப்பை கொட்ட வாய்ச்சதும் சனிக்கிழமைக்குக் கோவில்தேடி, பஞ்ச்குலா என்ற இடத்தில் பெருமாளைக் கண்டேன். அங்கே கீதா & சீனிவாசன் என்ற இளம்தம்பதிகளைச் சந்திக்க நேரிட்டது. சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் சாஸ்திரத்துக்காக முன்வாசல் படிகளில் உக்கார்ந்து இருந்தப்ப .... இவுங்களும் வந்து உக்கார்ந்தாங்க. கீதா (அப்புறம் பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) வின் புடவையில் யானை எம்ப்ராய்டரி! நல்லா இருக்குன்னு ஹிந்தியில் சொன்னேன். கொஞ்சம் முழிச்சாங்க! அதையே இங்கிலிபீஸில் சொன்னதும் அவுங்களுக்கு மகிழ்ச்சி!

 பேச்சுவாக்கில் அவுங்க கோயமுத்தூர்ன்னு சொன்னதும், ஊருக்குபோய் வரும்போது யானை டிஸைனில் புடவை வாங்கி வரவான்னு கேட்டதும் மகிழ்ச்சி என் பக்கம் வந்துச்சு! அப்பதான் சொன்னாங்க சண்டிகரில் ஒரு முருகன் கோவிலும் இருக்குன்னு! விலாசம் கேட்டால் சரியாச் சொல்லத் தெரியலை. அவுங்க மொஹாலியில் இருக்காங்க. இந்த பஞ்ச்குலாவும் மொஹாலியும் சண்டிகருக்கு ரெண்டு கைகள் போல! பஞ்ச்குலா ஹரியானாவையும் மொஹாலி பஞ்சாபையும் சேர்ந்தவை. வசந்தி என்றவுங்களுக்கு எல்லா விவரமும் தெரியுமுன்னு சொல்லி அவுங்க தொலைபேசி எண்களைக் கொடுத்தாங்க.

 இந்த பெருமாள் கோவிலுக்கு முதல்முறையா வந்தோமுன்னும் சொன்னாங்க. இதுலே ஒரு வியப்பு என்னன்னா........ இந்த சந்திப்புக்குப் பிறகு அவுங்களைக் காணோம். ஊருக்குப் போனவுங்க திரும்ப வரவே இல்லை! ஒருவேளை பெருமாளே நமக்கு கீதோபதேசம் சொல்ல அவுங்களை அனுப்புனானோ என்னவோ!

 தென்னிந்தியர்களுக்கு இந்தக் கோவில் ஒரு மீட்டிங் ப்ளேஸ். கோவையைச் சேர்ந்த ஜோடியைச் சந்திச்சோம். இந்த ஊர் வந்து ஒன்னரை வருசமாச்சாம். முதல்முறையா இந்தக்கோவிலுக்கு வந்துருக்காங்க. பாலாஜியைத் தேடித்தேடி இப்போதான் கிடைச்சாராம்!!!! இங்கே தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்குன்னு இவுங்க மூலமாத் தெரியவந்துச்சு. விலாசம், தொலைபேசி எண் எல்லாம் வாங்கிக்கிட்டோம். நல்ல நட்புணர்வு உள்ள இளம் தம்பதிகள். யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு

 மேற்படி பாரா ரெண்டு வருசத்துக்கு முன்னே எழுதிய ஒரு பதிவில் இருந்து!

 ஒரு வாரம் கழிச்சு முருகன் கோவிலைத்தேடிப்பிடிச்சுப்போன வரலாறு இங்கே இருக்கு பாருங்க:-)

 ஏழாம்படைவீட்டில் ஏழு வயசு பாலகனுக்கு................பூ நூல் போட்டாச்சு



 இப்படியாக கோவிலுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம் கூடிப்போய் இது நம்ம சொந்தக்கோவில் என்ற எண்ணம் வந்துருச்சு. சண்டிகரை விட்டு வரும்போது கோவிலை விட்டுட்டு வர்றோமேன்னு கலங்குனது நிஜம்.
போன வருசம் மார்ச் ஆறு தேதிக்கு ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டினோம்.  திருநெல்வேலி  மாவட்டத்தில் வள்ளியூர் அருகில் இருக்கும் Pothai Hill என்ற பொத்தை(பொதிகைமலைத் தொடர்) குன்றில் ஸ்ரீ முத்துக்கிருஷ்ணஸ்வாமி மிஷன் அமைத்து நடத்தி வந்தவர் திரு மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள். அவர்களின் மறைவுக்குப்பின் அவருடைய மகள் வித்தம்மா ஆசிரமப் பொறுப்பேற்று நடத்திவருகிறார். குருஜி மாதாஜி வித்தம்மா என்று அறியப்படும் இவர் முன்னிலையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

கோவிலின் பக்கத்தில் இருக்கும் மைதானத்தை நோக்கி இருக்கும்படி அமைந்த மதிள் சுவரை இடித்துவிட்டு அங்கே கோபுரவாசல் இருக்கும்படி கட்ட வேண்டும்.

 வேலைகள் மளமளவென்ன நடக்கத் தொடங்கி கண் முன்னே கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது. வாரம் குறைஞ்சது மூன்று முறையாவது கோவிலுக்குப்போய் வந்துக்கிட்டு இருந்தோம். ஸ்தபதியும் அவர் குழுவும் கோவில் மாடியில் உள்ள டைனிங் ஹாலில் தங்கி இருந்தாங்க. அவுங்க சமையலுக்குன்னு ஒருத்தர் வந்து மாடியிலே சமைச்சுப் போட்டுக்கிட்டு இருந்தார்.

 நிதி சேர்க்கப்படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார் கோவில் நிர்வாகி திரு ஆல் இன் ஆல் ராஜசேகர். நல்ல மேலாண்மை திறமை இவருக்கு. கோவிலில் விசேஷ பூஜைகள் வாராவாரம் நடக்கும். அதுக்கு நிறையப்பேர் ஸ்பான்ஸார் செய்வாங்க. கோவில் கட்ட வந்து இறங்கி இருக்கும் செங்கல்லைக்கூட நாம் 'வாங்கி' கோவிலுக்குக் கொடுக்கலாம். மூணு செங்கல் 11 ரூபாய். மக்களுக்கு இது ஒன்னும் பெரிய தொகையாத் தெரியாது. சின்ன செலவில் நாமும் திருப்பணியில் பங்கு எடுத்தோம் என்ற திருப்தியும் கிடைக்கும். சிறுதுளி பெருவெள்ளம் ஆனது இப்படித்தான்! கருவறை முன் மயில்வாகனத்தருகில் ஒரு பத்திருவது செங்கல் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கணும்:-))))

 கோவில் குருக்கள் திரு பிரகாஷ் அருமையா  ஸ்வாமி அலங்காரங்கள் செய்கிறார். பூஜைகளையும் அழகா நடத்தறார். எல்லாம்  'முருகன் ' செயல்! 


அதுக்காக கோவில் அன்னதான திட்டத்தை எல்லாம் குறைக்கவே இல்லை. எல்லா விழாக்களுக்கும் விருந்து சாப்பாடு உண்டு. அதுக்கும் நிறைய ஸ்பான்ஸார்ஸ் கிடைத்தாங்க. ஆ.வியில் கோபுரநிதி சமாச்சாரத்தை மக்களிடம் சொல்ல ஒரு கட்டுரை எழுதித்தரக் கேட்டார். அதுக்காக (நம்ம நடையைக் கொஞ்சம் மாத்திக்கிட்டு எழுதிக் கொடுத்தது இது.)



கோபுரம் எழுப்ப ஒரு கை கொடுங்களேன், ப்ளீஸ்.......... 


 படியேறியதும் நேராகக் கண்முன்னால் கருவறை! சந்நிதியில் வள்ளி தேவசேனாவுடன் கண்களில் அருள் பொங்கி வழியக் கோவில் கொண்டுள்ளான் எங்கள் சண்டிகர் முருகன். கைகூப்பி நிற்கிறோம். இடதுபுறம் குட்டியா ஒரு ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் செல்லம் போல் நிக்கறார். சட்னு தூக்கி இடுப்பில் வச்சுக்கலாம் போல கொள்ளை அழகு. குட்டியா அழகான சந்நிதியின் வாசல் மேல்நிலையில் சீதாபிராட்டியுடன் ராமலக்ஷ்மணர்களும் அருள்பாலிக்கிறார்கள். அனுமனின் சந்நிதிக்கு நேராக சதுரமேடையும் விதானமுமாய் அழகாக அமைந்த இடத்தில் நவகிரஹ நாயகர்கள். வட இந்தியாவில் முருகா முருகா என்று சொன்னால்........ அந்த சேவற்கொடியோன் நினைப்பு வருமா..... சேவல் நினைப்புதானே வரும்? அதனால் கார்த்திகேய ஸ்வாமியாக இருக்கார்.
பல ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றை வேல் வடிவில் உருவான கோவில். தமிழ்நாட்டைவிட்டு இங்கு வந்தோருக்கு 'நான் இருக்க பயமேன்?' என்று சொல்லாமல் சொல்லி காக்கும் கரமாய் நின்ற வேல்.

(ஒவ்வொரு சந்நிதியாக் கட்டி வந்த நேரம்!  பிள்ளையார்  வந்துட்டார்.)


காலப்போக்கில் மெள்ள மெள்ள மூணரையடி கருங்கல் சிலையாக மூலவரும் அவருக்குப் பாந்தமான உயரத்தில் மனையாட்டிகளுமாக கருவறைக்குள்ளில் ஜொலிக்கும் நம் தமிழ்க்கடவுள் அழகன் என்றால் அவன் முருகனே என்பதில் ஐயம் உண்டோ?

 ஒரே ஒரு பிரகாரம். நடுவில் திருச்சந்நிதி. அர்த்தமண்டபத்தில் மயில் வாகனத்தை தன் முன் நிறுத்தி வைத்துள்ள உற்சவர்கள். கருவறையின் சுற்றுச்சுவர்களில் அழகிய மாடங்களில் நர்த்தனகணபதி, தக்ஷிணா மூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை. பிரகாரத்தின் ஒரு புறம் கேட்ட வரம் சித்தி விநாயகர், இன்னொரு புறம் க்ருஷ்ண மாரியம்மன். சண்டிகேஸ்வரர் சாட்சிக்கு நிற்கிறார்.

 நவகிரஹ சந்நிதிக்கு அருகே சதுரமான ஒரு அரங்க மேடை. பின்புலத்தில் பார்வதியின் திருக்கல்யாணக்கோலம். தங்கையை தாரை வார்த்துக்கொடுக்கும் அண்ணன் மஹாவிஷ்ணு. அழகான முகலக்ஷ்ணங்களோடு அமைந்த சுதைச்சிற்பங்கள். கோவிலில் நடக்கும் விழாக்களுக்கும், விசேஷ பூஜையாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குமான மேடை.


 இந்துப் பண்டிகைகள் எல்லாமே இங்கே கோவிலில் கூடிக் கொண்டாடுறோம். முக்கியமா பிள்ளையார் சதுர்த்தி கந்த சஷ்டி, தைப்பூசம், ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி , ஒன்பது நாட்களும் நடக்கும் நவராத்திரி விழா எல்லாமே கோலாகலம்தான். ஆடிமாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் திருவிளக்கு பூஜை உண்டு. தினப்படி பூஜைகள் ஒரு பக்கம் தினசரி நடந்துகொண்டு இருக்கும்போது சனிக்கிழமைகளில் பெருமாள் முன்பு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும், பௌர்ணமி நாளில் சத்தியநாராயண பூஜையும், அன்று மாலை ஸ்ரீ கிருஷ்ணமாரி அம்மனுக்கு மஹா அபிஷேகமும் தவறாமல் நடத்துகிறார்கள்.

தர்மசாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டபடி கோவில் விசேஷங்களில் அன்னதானம், எளியவருக்கும் அனாதாலயங்களில் இருக்கும் சிறார்களுக்கும் உணவு, உடை, கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகங்கள் இவைகளை ஏழாம்படை வீடாக சண்டிகரில் குடிகொண்ட ஸ்ரீகார்த்திகேய ஸ்வாமி தாராளமாக அருள்கின்றார்.


 நம் கோவிலில் கீர்த்தி வடதேசங்களில் பரவி, ஜம்மு, பானிபட், அம்பாலா என்ற ஊர்களில் இருந்தும் தெற்கே பெங்களூருவில் இருந்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற வந்து போகிறார்கள். காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும், சகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஜகத்குரு ஸ்ரீ வித்யாபினவ கிருஷ்ணநாத தீர்த்த சங்கராச்சாரிய ஸ்வாமிகளும், ஸ்ரீ கோவர்தன பீடம் பூரி (ஒடிஸா) பீடாதிபதி ஜகத்குரு நிஸ்சலநந்தா சரஸ்வதி ஸ்வாமிகளும் நம் கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளானர்.

 கோவிலின் முதல் மஹாகும்பாபிஷேகம் 1992 வது ஆண்டும் இரண்டாம் முறையாக மஹா கும்பாபிஷேகம் 2002 வது ஆண்டும் நடத்தப்பட்டன, உற்சவர் இங்கே குடிகொண்டது 1996வது ஆண்டு. குறைவொன்றும் இல்லாத கோவிந்தனின் மருகனுக்கு ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மனதில் குறையாகத் தோன்றி அதற்கான முயற்சிகளை எடுத்து இந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி திருப்பணி தொடக்கமாக அஸ்திவாரம் தோண்டி அடிக்கல் நாட்டப்பட்டது. கோபுரத்தின் கூடவே ஒரு கொடிமரமும் கட்ட ஏற்பாடாகி உள்ளது.


 தமிழ்நாட்டில் இருந்து ஸ்தபதிகள் வந்து வேலைகளை ஆரம்பித்து விட்டனர். பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை மனம் உவந்து முருகன் ஏற்றுக்கொள்வதில் நம் யாவருக்கும் மகிழ்ச்சி. இந்த வேலை தடைபடாமல் மளமளவென்று நடந்து முடிப்பது எல்லாம் உங்கள் கையில் இருக்கிறது. கோபுர வேலைகளுக்குத் தேவையான செங்கல், மணல், இரும்பு, சிமெண்ட்டு, ஜல்லி, பெயிண்ட் என்று உங்களுக்கு விருப்பமான பொருட்களுக்கு நன்கொடை அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தத் திருப்பணியில் சேர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

 எஸ்.பி. இராஜசேகரன்,
பொதுச்செயலாளர்.

 திருப்பணிக்கு நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:

 Lord Murugan Bhaktha Samajam (Regd)
 Sri Karthikeya Swamy Temple
 Air Force Temple Complex
 sector 31 D Chandigarh- 160047

 வங்கியில் நேரடியாக பணம் செலுத்த:

Canara Bank SB Account # 1625101010866

 கோவிலில் வலத்தளத்தில் முழுவிவரத்தையும் பார்க்க. http://www.chandigarhtamilsangam.in/

 தொலைபேசித் தொடர்புக்கு: 0172 2611191 செல்பேசி எண் 09417340609 மின்மடல்: karthikeyaswamychd@gmail.com ========================================================================
ஏற்கெனவே கருவறை விமானம் ஒன்னு அழகிய சுதைச்சிற்பங்களுடன் இருந்துச்சு. டைனிங் ஹால் வழியா அங்கே போக வழியும் இருக்கு. உயரம் குறைவு என்றபடியால் தெருவில் இருந்து பார்த்தால் இது தெரியாது. மேற்கூரை முழுதும் தளம் அமைச்சு மொட்டை மாடியாகவும் நடுவிலே ஒட்டிப் பிடிச்சதைப்போல இந்த விமானமும் இருக்கும்.


 கட்ட ஆரம்பிச்சு நாலே மாசத்தில் அஞ்சு நிலையும் முடிஞ்சுருச்சு. நாங்க சண்டிகரில் இருந்து கிளம்பும் சமயம் அது. சுதைச்சிற்பங்கள் எல்லாம் இனிமேல்தான் செய்வோமுன்னு ஸ்தபதி தியாகராஜன் சொன்னார். அதுக்குதான் நாள் நிறைய ஆகுமாம்.இவருக்கு வெளிநாடுகளில் நிறைய கோவில்களுக்கு ஸ்தபதியா இருந்த அனுபவம். நம்ம சென்னை எல் பி ரோடில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சுக்கு எதிரில் இருக்கும் மாரியம்மன் கோவில் கூட இவர் கைவண்ணம்தான். மகாபலிபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில் படிச்சவர்.
பொம்மை செய்யறதைக் கூட இருந்து பார்க்க முடியலை என்று மனவருத்தப்பட்டேன். கோபுரத்தில் வச்சுப்பிடிக்க நிறைய காங்க்ரீட் சமாச்சாரங்கள் மோல்ட் பண்ணி வச்சுருந்தாங்க.


ஆச்சு. 15 மாசங்களில் எல்லா வேலைகளும் முடிஞ்சு கோபுரம் கும்பாபிஷேகத்துக்குத் தயாரா நிக்குது. ஸ்ரீதேவி பூதேவியருடன் ஸ்ரீநிவாசப்பெருமாள், பத்மாவதித் தாயாருடன் ஸ்ரீவெங்கடேசன், பாற்கடலில் பள்ளி கொண்ட அநந்த பத்மநாபன், வெண்ணைத்தாழிக் கண்ணன், காளிங்க நர்த்தனம், ஈசனும் உமையும் என்று அருமையான சிற்பங்களுடன் நூதனராஜ கோபுரம்!

 கோவிலுக்குள்ளே கடவுளர்கள் மீனாட்சி, நர்மதேஸ்வரர், காலபைரவர், பாலமுருகன், சரஸ்வதி ஆகியோருக்கு கூடுதல் சந்நிதிகளும் கட்டி இருக்காங்க.
விழாவுக்கான அழைப்பிதழ் இத்துடன் அனுப்புகிறேன். நேரில் போக முடிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மானசீகமா தரிசனம் செஞ்சு அருள் பெறலாம் எங்களைப்போல!

 முருகா முருகா! 


 PIN குறிப்பு: அதான் கோவில் கட்டி முடிச்சாச்சேன்னு இருக்காமல் பொருளுதவி செய்ய யாருக்காவது விருப்பம் இருந்தால் மேலே உள்ள இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஆவிக்கு சொன்னதே உங்களுக்கும்:-))))