Tuesday, April 30, 2024

மலர்களே.... மலர்களே.....

எப்பவுமே அலுக்காத ஒரு பொழுதுபோக்குன்னா எங்க ஹேக்ளி பார்க் போய்வர்றதுதான். ஊருக்கு நடுவிலே இருக்கு ! சுமார் 180 வருஷங்களுக்கு முன்  பார்க்கைச் சுத்திதான் நகரத்தையே நிர்மாணிச்சுருக்காங்க.  நகரமே , நியூஸியின் கார்டன் ஸிட்டி  என்றுதான் பெயர் வாங்கியிருக்கு !  
இங்கே வருமுன்,  கோபால்   வாங்கிவந்த க்றைஸ்ட்சர்ச் நகரப் படப்புத்தகம் பார்த்துட்டு, நாம் அங்கே போயிட்டால் தினமும் பார்க் போய் வரணும்னு நினைச்சுருக்கேன்.  நெனப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு சும்மாவாச் சொல்லிவச்சுருப்பாங்க ? 
தினமும் முடியறகாரியமா ? மாசம் ஒரு முறை போய் வந்தாலே அதிகம் இல்லையோ ! அதுவும் நடக்கலை.  குறைஞ்சபட்சம்  மூணுமாசத்துக்கொருமுறை ? அதான்   ஃபோர் சீஸன்ஸ்  ஊரில் இருக்கோமே......... ஊஹூம்..... வருஷம் ஒருக்கா கோடையில் மட்டுமே வாய்க்குது ! பொதுவா க்றிஸ்மஸ் தினம்தான் அமையும். அது தவறினால் புதுவருஷம். வேறெங்கும் போக முடியாதில்லை தானே ? 





இந்த முறை புதுவருஷ நாள்,   காலையில் நம்ம ஹரேக்ருஷ்ணாகோவில், மாலையில் நம்ம புள்ளையார் கோவில், இடைப்பட்ட நேரத்தில்,  வீட்டில் சின்னத் தொட்டிச் செடிகளுக்கு பெரிய தொட்டி  மாற்றம் , குங்குமப்பூ பூண்டுகளை நட்டுவைத்தல் என்று  கொஞ்சம் பிஸியாத்தான் போச்சு.  ராத்ரி ஒன்பதுக்கு மேலாகியும் கூட    சூரிய வெளிச்சம் இருந்தது அருமை. இனி ஒரு மூணு மாசங்களுக்கு இப்படித்தான் !











அதனால்  மறுநாள் நம்ம தோட்ட உலாவை நடத்தினோம்.  நாலு சீஸன்களில் ஒவ்வொன்னும் ஒருவித அழகுதான் ! முக்கியமாக் கோடையில் பசுமையும் மலர்களுமே ப்ரதானம். அதனால் பதிவில் எழுத்தைக் குறைத்துப் பசுமையை  ரசிப்போமா !!!!









Friday, April 26, 2024

முடிவும் ஆரம்பமும்

அதி ஏமி பழமொழி செப்புதாரு....... *** குதிரைக்குச் சறுக்குனதே சாக்கு...... 
அதேதான்..... எப்படா சனத்தின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கலாமுன்னு பார்த்துக்கிட்டே இருந்த நம்மூர் சிட்டிக்கவுன்ஸிலுக்கு.... இந்த சனியன் பிடிச்ச கொரோனா ஒரு  வாய்ப்புக் கொடுத்துருச்சு.  வீடடங்கிக்கிடங்க.....  கூட்டம் சேரக்கூடாது..... 

மேலே படம்: நம்ம துளசிதளத்தில் இருந்துதான் !
 
நம்மூர்லே ஊருக்கு நடுவிலே ஒரு பெரிய பார்க் இருக்கு !  வருஷக்கடைசி நாள் அங்கே பாட்டுக்கச்சேரி நடக்கும். சாயங்காலம் ஒரு ஆறு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 ஆனதும் வாணவேடிக்கை நடத்தி,    ஹேப்பி நியூயியர் எல்லாஞ்சொல்லி முடிப்பாங்க.  விடுமுறைக்காலம் என்றபடியால் கூட்டத்துக்குக் குறைவிருக்காது.
நாங்க இங்கே வந்த புதுசுலே  போய்வருவோம். பிக்னிக் மாதிரி சோத்து மூட்டை, பாய் எல்லாம் கொண்டு போகும் சனம். அப்ப அதாவது 36 வருஷத்துக்கு முந்தி  சனமும் சரி, சிட்டிக்கவுன்ஸிலும் சரி கொஞ்சம் வெள்ளந்திகள்தான்.

கொஞ்சம் கொஞ்சமா, அப்பாவித்தனம் போய் எல்லாத்துலேயும் காசு பார்க்கும் கலை  மனசுக்குள் வந்துட்டதால்  ஈவண்ட் என்னும் பெயரில் தீனிக்கடைகள்  நடத்த அனுமதி கொடுத்து, ( கடைக்காரர் குறிப்பிட்ட தொகை கொடுத்து , ஸ்டால் போட்டுக்கலாம்)   பாட்டு, தீனின்னு கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிப்போனது தனிக்கதை. எல்லாம் சிட்டிக்கவுன்ஸில் ஏற்பாடுதான். அதுவும் நம்ம வரிப்பணத்துலேதான் !

 ஆட்சி மாற்றம் வரவர..... வேண்டாதவைகளில் காசை தண்டம் பண்ணிக்கிட்டு,  காசு பத்தலைன்னா வீட்டு வரியைத் தாறுமாறா ஏத்திக்கிட்டு  அட்டூழியம் பண்ணிக்கிட்டுக் கிடக்கு இப்போ. 

நவம்பர் அஞ்சாம்தேதி கைஃபாக்ஸ் டே  வாணவேடிக்கை  நடத்திக்கிட்டு இருந்ததை முதலில் நிப்பாட்டுச்சு.  இப்ப என்னன்னா.... புதுவருஷம் பொறக்கச் சொல்ல நடக்கும் கொண்டாட்டம்.

நாங்க முதலில் ரெண்டு மூணு வருஷம் போயிட்டு வந்ததோடு சரி.  அந்தப் பாட்டுக்கச்சேரி எல்லாம் சகிச்சுக்கிட்டு என்னால் அஞ்சாறுமணி நேரம் அங்கே இருக்கமுடியலை. இளையராஜா கச்சேரியா பாழப்போகுது ?  அதனால், சரியா பதினொன்னரைக்குக் கிளம்பிப்போய்,  12 மணிக்கு வாணவேடிக்கையைப் பார்த்துட்டு,  கண்ணில் கண்டவருக்கெல்லாம் ஹேப்பி நியூயியர் சொல்லிட்டு வீட்டுக்குப் பனிரெண்டரைக்குள் வந்துருவோம்.  போகமுடியாத  சமயங்களில் இருக்கவே இருக்கு டிவி. அதுலேயும் காமிப்பாங்க.

நாங்க இன்டர்நேஷனல் டேட் லைனில் குந்தியிருப்பதால் நாளின் ஆரம்பமும்  உலகத்தின் முதல் புதுவருஷக்கொண்டாட்டமும் நியூஸியில் இருந்துதான் ஆரம்பிக்குது. 

அப்ப கோடைகாலம் &  டேலைட் ஸேவிங்ஸ் இருப்பதால் உண்மை  நேரம் மணி பதினொன்னாக இருக்கும்போதே, இங்கே 12 மணின்னு மாத்தி வச்சதால் இன்னும் ஒரு மணிநேரம் முன்னாலேயே புதுவருஷம் வந்துரும். ஃபிஜியும் இதே டேட்லைனில்தான் என்றாலும்  நமக்கு டேலைட் ஸேவிங்ஸ் இருக்கே !

இந்த அல்ப சந்தோஷத்துக்கும் ஆப்பு வச்சுட்டதால் டிவியில் ஆக்லாந்து நகர் கொண்டாட்டத்தைப் பார்த்துட்டுத் தூங்கிருவோம்.  எங்கூர் நகரசபை, இப்படிக் கஞ்சப்பிசுநாறி ஆயிருச்சேன்னு ரெண்டு வசையோடு புதுவருஷம் ஆரம்பம் ஆகுது இப்பெல்லாம்.  இவ்ளோ என்னத்துக்கு..... இவுங்க பண்டிகையான க்றிஸ்மஸ்  தினத்துக்கு ஏறக்கொறைய ஒரு மாசம் இருக்கும்போதே க்றிஸ்மஸ் பரேடு ஒன்னு நகர மையத்தையொட்டி நடந்துக்கிட்டு இருந்துச்சு. நானும் பலமுறை நம்ம துளசிதளத்துலேயே எழுதியும் இருக்கேன்.  சின்னப்பசங்களுக்கு ரொம்பவே இஷ்டப்பட்ட  கார்ட்டூன் கேரக்டர்ஸ் எல்லாம் ஊர்வலத்தில் வரும்போது அந்தப் பிஞ்சுகளின் சந்தோஷத்தைப் பார்க்கணுமே !   ஹைய்யோ !

நேரமிருந்தால் ஒரு சாம்பிளுக்கு கீழே இருக்கும் சுட்டியில் பாருங்க !

https://thulasidhalam.blogspot.com/2014/12/blog-post_19.html

அதை நடத்த செலவு ரொம்ப ஆகுதுன்னு சொல்லி இப்ப ஒரு அஞ்சாறு வருஷமா அதையும் நிறுத்திவச்சுக்கும் கொடுமையை என்ன சொல்ல ? உள்ளூர் மக்களிடம் 'கறக்கும்' வீட்டுவரிகளில் வீட்டுக்கு ரெண்டு டாலர்னு ஒதுக்குனாக்கூட யதேஷ்டம். வளர்ந்த பிள்ளைகளுக்கு தகப்பன்தான்  சாண்ட்டான்னு தெரியும். சின்னப்பிஞ்சுகளுக்கு ????? ஹூம்.... ரொம்ப அல்பத்தனமான புத்தி இருக்கும் மக்களால் ஊராட்சி நடக்குது.... 

மேலே படம்: நம்ம அன்பு விநாயகர் ப்ரதிஷ்டையின்போது !

இப்படிப்போகும் காலக்கட்டத்தில் நம்மூருக்குப் புள்ளையார் கோவில்கள் ரெண்டு வந்துருச்சு. நம்ம வீட்டாண்டை இருக்கும் கோவில் 2022 ஆகஸ்ட் மாசமும்,   இன்னொரு பேட்டையில் இருக்கும் கோவில்  அதே வருஷம் டிசம்பர் மாசமுமாய்  ஆரம்பிச்சாங்க.  அந்த வருஷம் வீட்டாண்டை இருக்கும் கோவிலில்  புதுவருஷக்கொண்டாட்டத்துக்கு, டிசம்பர் முப்பத்தியொன்னாம் தேதி  ராத்ரி பனிரெண்டுக்கு சகஸ்ரதீபம் தரிசனமுன்னு தொடங்கி வச்சார் அன்பு விநாயகர்.   நாங்களும் ஒரு பதினொன்னரைக்குக் கிளம்பிப்போய், ஆயிரம் விளக்கேத்த சின்ன உதவிகள் செஞ்சோம்.  சீனியர் சிட்டிஸன் என்ற கௌரவம் நமக்குன்றபடியால்  முதல் விளக்கை ஏத்தி வைக்கும் வாய்ப்பும் கிடைச்சது.


அதேபோல் இந்த வருஷமும் 2023 முடியும் சமயம் சகஸ்ரதீபம் தரிசனம் ஏற்பாடு செஞ்சுருக்காங்க. 'வழக்கம்போல்' நாங்களும் போய்ச் சின்னச் சின்ன உதவிகள் செஞ்சுட்டு,  முதல் விளக்கை ஏத்திவச்சேன்.  கொஞ்சநேரத்தில் இன்னும் சிலர் வந்தாங்க.  சின்னதாப் பூஜைகள் நடத்தி முடிச்சு, இனிப்புகள் விநியோகம் செஞ்சு வீட்டுக்கு பனிரெண்டேமுக்காலுக்கு வந்தோம். இனிமே இப்படித்தான் நடக்கும், நடக்கணும்.






மறுநாள் ஜனவரி ஒன்னு..... அப்பாடா......  இருபது இருபத்திமூணை ஒரு வழியா முடிச்சுட்டேன் ! 

வர்ற வாரத்திலிருந்து நடப்பு ஆண்டுக்கு வந்துவோம், சரியா ???


Thursday, April 25, 2024

வாளிக்குள் போட்டு வச்சுருக்கேன் !

ஒருவழியா வருஷக்கடைசிக்கு வந்துருக்கோம்.  டிசம்பர் மாசம் இங்கே நமக்குக் கோடை காலம் என்றபடியால் தோட்டத்தில் பூக்கள் வஞ்சனையில்லாமல் பூத்து நிக்குது ! 
ஆஹா.... வெய்யில் வந்தாச்சுன்னு  ரொம்பவே ஆடக்கூடாது..... அன்டார்ட்டிக்காவுக்குப் பக்கத்தில் இருப்பதால்  திடீர்னு குளிர்காத்து வந்து கொடுமைப்படுத்திட்டுப்போகும். 




 
பொதுவாவே  கோடையில் 22 டிகிரிவரைதான். அத்தி பூத்ததுபோல் 30, 31 வந்தாப் போதும், தெருவில் நாம் பார்க்கறவங்கெல்லாம் 'இண்டியன் சம்மர்'னு நம்மாண்டை சொல்லிட்டுப் போவாங்க.  இப்படிக்கூட ஒரு பெருமை இருக்கு பாருங்க. 

சுற்றுலாப்பயணிகள் கூட்டமும் கோடையில் அதிகம். பலநாடுகளில் டிசம்பர் மாசம் விடுமுறைக்காலமில்லையோ ! 

நமக்கும் கோடைகாலத்தில் வேலைகள் அதிகம்தான். தோட்டவேலையும் வீட்டுவேலைகளும் முதுகை ஒடைச்சுப்போட்டுரும்.  முக்கியமா இட்லிக்கு மாவரைப்பது! இது ஒரு வேலையான்னு  நினைக்கப்டாது.  இங்கே நம்ம வீட்டில் இட்லிக்கு மூணுநாள் வேலை.  நம்பமுடியலை இல்லை ?  முதல்நாள் ராத்ரி அரிசி ஊறப்போடணும். மறுநாள் காலையில் உளுந்து ஊறவைக்கலாம்.  ஒரு பத்துமணிக்குப் பக்கம் அரிசியை க்ரைண்டரில் போடலாம்.  எப்படியும்  மாவாட்டிமுடிக்க பதினொன்னரை ஆகிரும்.  கலந்து வைச்சால்.... மாலை ஏழுமணிக்குப்பக்கம் மாவு பொங்கி வந்தால்  அடிச்சோம் ப்ரைஸ் ! (அல்ப சந்தோஷி )

புழக்கடைக்கு ஓடிப்போய் புதினாவைக் கிள்ளிக் கொண்டுவந்து புதினா சட்னியோடு ஜமாய்ச்சுறமாட்டோமா என்ன ? 
போனா வராதுன்னுன்ற பட்டியலில் வெயில் இருப்பதால் இப்படி  ஒரு மூணு நாலு மாசங்களுக்கு  (அடுத்த எட்டுமாசத்துக்கும் சேர்த்தே)   இட்லி, தோசைன்னு வெளுத்து வாங்கிருவோம். நம்மூரில் பிரச்சனையில்லாமச் செய்யற பல வேலைகளுக்கும் இங்கே மெனெக்கெடணும். வெதர்மேன் என்ன சொல்றாரோன்னு பார்த்துட்டுத்தான் வீட்டு வேலைகளும். இப்ப இதெல்லாம் பழகிப்போச்சுன்னு வையுங்க. 

இங்கே வந்த புதுசுலே.... தயிர் தோய்க்கறதுதான் பெரும்பாடு.  உறைக்குத்திவச்ச பால் அப்படியே இருந்து நாறிப்போய், தூக்கிப்போட்ட நாட்கள்தான் அதிகம்.  நமக்குத் தயிர் இல்லாமல் சாப்பாடில்லை என்பதால் கொடுமையாக இருக்கும்.  தயிர் செஞ்சுக்கும் மெஷீன்ன்னு பலவிதமா வாங்கிப் பார்த்துருக்கேன்.  

 இப்பக் காலம் மாறிப்போச்சு.  இந்தியன் கடைகளிலும் சூப்பர் மார்கெட்டிலும் தயிர் கிடைக்க ஆரம்பிச்சதும், (அதுவும் கோபாலா ! ) மெஷினையெல்லாம் தூக்கிப்போட்டாச்.  வேலை மிச்சம்.

வருஷக்கடைசிநாள் ஞாயிறாக அமைஞ்சுபோச்சு. சண்டே மார்கெட்டை ஒரு சுத்து சுத்திட்டு வரலாமுன்னு போனோம். வழக்கத்தைவிட நல்ல கூட்டம்.  நிறைய தாற்காலிகக் கடைகள் வேற! ஒரு இடத்தில்  எனக்கான ஒன்னு !  விடமுடியலை. 

வீட்டுக்குக் கொண்டுவந்து 'ஆராய்ஞ்சு' பார்த்ததில்  சின்னதா ஒரு சேதாரம்.  நோ ஒர்ரீஸ். நம்ம ரிப்பேர்ஷாப் இருக்கே :-)
போரோபுதூர் ரிலீஃப் பேனல்.  ஜாவாத்தீவில் இருக்கும் எட்டாம் நூற்றாண்டு புத்தர் கோவில் சமாச்சாரம்.  பேனலில் நம்ம இந்திரன் !  Dewa Indra
உலகத்துலேயே பெரிய புத்தர் கோவிலாம் ! 2500 சதுரமீட்டர்  பரப்பில் 2672 பேனல்களும் 504 புத்தர் சிலைகளும் இருக்காம் !

காட்டுக்குள்ளே எரிமலை சாம்பல் குவியலுக்குள்  ஒளிஞ்சுருந்த கோவிலை ஒரு ஆயிரம் வருசங்களுக்குப் பிறகுக் கண்டுபுடிச்சுருக்காங்க !

Borobudur was constructed between about 778 and 850 ce, under the Shailendra dynasty. It was buried under volcanic ash from about 1000years  and overgrown with vegetation until discovered by the English lieutenant governor Thomas Stamford Raffles in 1814. 

நம்ம அங்கோர்வாட் போல இன்னும் பிரபலம் அடையலை போல!  எனக்கும் இதைப் பார்த்தபிறகுதான் இப்படி ஒரு சமாச்சாரம் உலகில் இருக்குன்னு தெரியவந்தது !  அவுங்க சொல்லும் அளவின்படிப் பார்த்தால்  ஒவ்வொரு பேனலும் குறைஞ்சது  ஒரு சதுரமீட்டர் அளவு இருக்கணும். சின்னச் சின்னதா செதுக்கி, அப்புறம் இணைச்சுருப்பாங்க போல !  அப்படி இணைச்ச ஒரு பகுதிதான் இதுன்னு தோணுது ! இதுலேயே ரொம்பச் சின்னதா ஆறு பகுதி இருக்கு ,பாருங்க.
நமக்குக் கிடைச்சது எதோ ம்யூஸியத்தில் இருந்ததுபோல இருக்கு. கோவிலைக் கண்டுபிடிச்சபின் 1911 புனரமைப்பு நடந்துருக்கு. அப்புறம் 1983 ஆம் வருஷமும்'. அப்போ சிலபல பலகைகளை ம்யூஸியத்தில் வச்சுருக்கலாம். அதன்பின்  சிதைஞ்ச பலகைகளை யாராவது விற்றிருக்கலாம் என்பது என் யூகம். எப்படியோ.... நம்ம கைக்கு வந்துருக்கு ! 

வலைவீசுனதில் ஏராளமான படங்களும் விவரங்களும் கிடைச்சதை என்னால் நம்பவே முடியலை ! 
அற்புதம் என்ற சொல்லைத்தவிர சொல்றதுக்கு வேறொரு சொல் தெரியலை !
இந்தோநேஷியாவில் அபூர்வ சமாச்சாரங்கள் ஏராளம் இருக்கு !  !  நாம்தான் விவரமில்லாம  பாலி மட்டும் போயிருக்கோம்..... ப்ச்.....


போரோபுதூர்னு எழுதி நம்ம வாளிக்குள் போட்டுருக்கேன் !  நம்மது பாட்டம்லெஸ் பக்கெட், கேட்டோ !!!!!