அதி ஏமி பழமொழி செப்புதாரு....... *** குதிரைக்குச் சறுக்குனதே சாக்கு......
அதேதான்..... எப்படா சனத்தின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கலாமுன்னு பார்த்துக்கிட்டே இருந்த நம்மூர் சிட்டிக்கவுன்ஸிலுக்கு.... இந்த சனியன் பிடிச்ச கொரோனா ஒரு வாய்ப்புக் கொடுத்துருச்சு. வீடடங்கிக்கிடங்க..... கூட்டம் சேரக்கூடாது.....
மேலே படம்: நம்ம துளசிதளத்தில் இருந்துதான் !
நம்மூர்லே ஊருக்கு நடுவிலே ஒரு பெரிய பார்க் இருக்கு ! வருஷக்கடைசி நாள் அங்கே பாட்டுக்கச்சேரி நடக்கும். சாயங்காலம் ஒரு ஆறு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 ஆனதும் வாணவேடிக்கை நடத்தி, ஹேப்பி நியூயியர் எல்லாஞ்சொல்லி முடிப்பாங்க. விடுமுறைக்காலம் என்றபடியால் கூட்டத்துக்குக் குறைவிருக்காது.
நாங்க இங்கே வந்த புதுசுலே போய்வருவோம். பிக்னிக் மாதிரி சோத்து மூட்டை, பாய் எல்லாம் கொண்டு போகும் சனம். அப்ப அதாவது 36 வருஷத்துக்கு முந்தி சனமும் சரி, சிட்டிக்கவுன்ஸிலும் சரி கொஞ்சம் வெள்ளந்திகள்தான்.
கொஞ்சம் கொஞ்சமா, அப்பாவித்தனம் போய் எல்லாத்துலேயும் காசு பார்க்கும் கலை மனசுக்குள் வந்துட்டதால் ஈவண்ட் என்னும் பெயரில் தீனிக்கடைகள் நடத்த அனுமதி கொடுத்து, ( கடைக்காரர் குறிப்பிட்ட தொகை கொடுத்து , ஸ்டால் போட்டுக்கலாம்) பாட்டு, தீனின்னு கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிப்போனது தனிக்கதை. எல்லாம் சிட்டிக்கவுன்ஸில் ஏற்பாடுதான். அதுவும் நம்ம வரிப்பணத்துலேதான் !
ஆட்சி மாற்றம் வரவர..... வேண்டாதவைகளில் காசை தண்டம் பண்ணிக்கிட்டு, காசு பத்தலைன்னா வீட்டு வரியைத் தாறுமாறா ஏத்திக்கிட்டு அட்டூழியம் பண்ணிக்கிட்டுக் கிடக்கு இப்போ.
நவம்பர் அஞ்சாம்தேதி கைஃபாக்ஸ் டே வாணவேடிக்கை நடத்திக்கிட்டு இருந்ததை முதலில் நிப்பாட்டுச்சு. இப்ப என்னன்னா.... புதுவருஷம் பொறக்கச் சொல்ல நடக்கும் கொண்டாட்டம்.
நாங்க முதலில் ரெண்டு மூணு வருஷம் போயிட்டு வந்ததோடு சரி. அந்தப் பாட்டுக்கச்சேரி எல்லாம் சகிச்சுக்கிட்டு என்னால் அஞ்சாறுமணி நேரம் அங்கே இருக்கமுடியலை. இளையராஜா கச்சேரியா பாழப்போகுது ? அதனால், சரியா பதினொன்னரைக்குக் கிளம்பிப்போய், 12 மணிக்கு வாணவேடிக்கையைப் பார்த்துட்டு, கண்ணில் கண்டவருக்கெல்லாம் ஹேப்பி நியூயியர் சொல்லிட்டு வீட்டுக்குப் பனிரெண்டரைக்குள் வந்துருவோம். போகமுடியாத சமயங்களில் இருக்கவே இருக்கு டிவி. அதுலேயும் காமிப்பாங்க.
நாங்க இன்டர்நேஷனல் டேட் லைனில் குந்தியிருப்பதால் நாளின் ஆரம்பமும் உலகத்தின் முதல் புதுவருஷக்கொண்டாட்டமும் நியூஸியில் இருந்துதான் ஆரம்பிக்குது.
அப்ப கோடைகாலம் & டேலைட் ஸேவிங்ஸ் இருப்பதால் உண்மை நேரம் மணி பதினொன்னாக இருக்கும்போதே, இங்கே 12 மணின்னு மாத்தி வச்சதால் இன்னும் ஒரு மணிநேரம் முன்னாலேயே புதுவருஷம் வந்துரும். ஃபிஜியும் இதே டேட்லைனில்தான் என்றாலும் நமக்கு டேலைட் ஸேவிங்ஸ் இருக்கே !
இந்த அல்ப சந்தோஷத்துக்கும் ஆப்பு வச்சுட்டதால் டிவியில் ஆக்லாந்து நகர் கொண்டாட்டத்தைப் பார்த்துட்டுத் தூங்கிருவோம். எங்கூர் நகரசபை, இப்படிக் கஞ்சப்பிசுநாறி ஆயிருச்சேன்னு ரெண்டு வசையோடு புதுவருஷம் ஆரம்பம் ஆகுது இப்பெல்லாம். இவ்ளோ என்னத்துக்கு..... இவுங்க பண்டிகையான க்றிஸ்மஸ் தினத்துக்கு ஏறக்கொறைய ஒரு மாசம் இருக்கும்போதே க்றிஸ்மஸ் பரேடு ஒன்னு நகர மையத்தையொட்டி நடந்துக்கிட்டு இருந்துச்சு. நானும் பலமுறை நம்ம துளசிதளத்துலேயே எழுதியும் இருக்கேன். சின்னப்பசங்களுக்கு ரொம்பவே இஷ்டப்பட்ட கார்ட்டூன் கேரக்டர்ஸ் எல்லாம் ஊர்வலத்தில் வரும்போது அந்தப் பிஞ்சுகளின் சந்தோஷத்தைப் பார்க்கணுமே ! ஹைய்யோ !
நேரமிருந்தால் ஒரு சாம்பிளுக்கு கீழே இருக்கும் சுட்டியில் பாருங்க !
https://thulasidhalam.blogspot.com/2014/12/blog-post_19.html
அதை நடத்த செலவு ரொம்ப ஆகுதுன்னு சொல்லி இப்ப ஒரு அஞ்சாறு வருஷமா அதையும் நிறுத்திவச்சுக்கும் கொடுமையை என்ன சொல்ல ? உள்ளூர் மக்களிடம் 'கறக்கும்' வீட்டுவரிகளில் வீட்டுக்கு ரெண்டு டாலர்னு ஒதுக்குனாக்கூட யதேஷ்டம். வளர்ந்த பிள்ளைகளுக்கு தகப்பன்தான் சாண்ட்டான்னு தெரியும். சின்னப்பிஞ்சுகளுக்கு ????? ஹூம்.... ரொம்ப அல்பத்தனமான புத்தி இருக்கும் மக்களால் ஊராட்சி நடக்குது....
மேலே படம்: நம்ம அன்பு விநாயகர் ப்ரதிஷ்டையின்போது !
இப்படிப்போகும் காலக்கட்டத்தில் நம்மூருக்குப் புள்ளையார் கோவில்கள் ரெண்டு வந்துருச்சு. நம்ம வீட்டாண்டை இருக்கும் கோவில் 2022 ஆகஸ்ட் மாசமும், இன்னொரு பேட்டையில் இருக்கும் கோவில் அதே வருஷம் டிசம்பர் மாசமுமாய் ஆரம்பிச்சாங்க. அந்த வருஷம் வீட்டாண்டை இருக்கும் கோவிலில் புதுவருஷக்கொண்டாட்டத்துக்கு, டிசம்பர் முப்பத்தியொன்னாம் தேதி ராத்ரி பனிரெண்டுக்கு சகஸ்ரதீபம் தரிசனமுன்னு தொடங்கி வச்சார் அன்பு விநாயகர். நாங்களும் ஒரு பதினொன்னரைக்குக் கிளம்பிப்போய், ஆயிரம் விளக்கேத்த சின்ன உதவிகள் செஞ்சோம். சீனியர் சிட்டிஸன் என்ற கௌரவம் நமக்குன்றபடியால் முதல் விளக்கை ஏத்தி வைக்கும் வாய்ப்பும் கிடைச்சது.
அதேபோல் இந்த வருஷமும் 2023 முடியும் சமயம் சகஸ்ரதீபம் தரிசனம் ஏற்பாடு செஞ்சுருக்காங்க. 'வழக்கம்போல்' நாங்களும் போய்ச் சின்னச் சின்ன உதவிகள் செஞ்சுட்டு, முதல் விளக்கை ஏத்திவச்சேன். கொஞ்சநேரத்தில் இன்னும் சிலர் வந்தாங்க. சின்னதாப் பூஜைகள் நடத்தி முடிச்சு, இனிப்புகள் விநியோகம் செஞ்சு வீட்டுக்கு பனிரெண்டேமுக்காலுக்கு வந்தோம். இனிமே இப்படித்தான் நடக்கும், நடக்கணும்.
மறுநாள் ஜனவரி ஒன்னு..... அப்பாடா...... இருபது இருபத்திமூணை ஒரு வழியா முடிச்சுட்டேன் !
வர்ற வாரத்திலிருந்து நடப்பு ஆண்டுக்கு வந்துவோம், சரியா ???
4 comments:
நடப்பு ஆண்டுக்கு வருவது சரி, பக்கமா வந்திட்டு மறுபடி தூரமா போயிடறீங்களே! புத்தாண்டு கொண்டாட்ட ஆற்றாமைகள் சோகம். இட்லி மொழுக்குன்னு இருக்கே!
வாங்க ஸ்ரீராம்,
ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும்போதும், அது சம்பந்தமுள்ள பழைய நிகழ்ச்சிகளுக்குள் மனசு தானாகப் போயிருது. எல்லாம் chain of thoughtsதான்.
இட்லி ரவை நான் பயன்படுத்தறது இல்லை. மாவு அரைக்கும்போதும் இட்லிக்கும் தோசைக்கும் சேர்த்தே வர்றமாதிரி அரைச்சுடறேன். அதான் பார்க்க மொழுக் னு இருக்கு போல !
பதிவில் எந்த நேரத்துலே வீட்டு வரிகள் ஏத்தறதைச் சொன்னேனோ.... கருநாக்கு......... நேத்திக்கு புதுச் செய்தியா டிவியில் வருது, எங்க சிட்டிக்கவுன்ஸில் வீட்டு வரிகளை 16% ஏத்தப்போறாங்கன்னு ! இந்த அநியாயத்தை எங்கே போய்ச் சொல்லியழறது ?
அன்பு விநாயகர் வணக்கத்துடன் புது வருட கொண்டாட்டம் தொடங்கியது மனதுக்கு மகிழ்ச்சியும் சிறப்பும்.
வாங்க மாதேவி,
புதுவருட வாழ்த்துகள் !❤️
Post a Comment