Monday, April 08, 2024

மாக்கோலம் கூட போட்டாச் :-)

க்றிஸ்மஸ் பண்டிகை சமீபிச்சுருச்சு. இன்னும் மூணே நாட்கள்தான் நடுவிலே.........  விடுமுறைக்காலம் தொடங்குமுன் இந்தவருஷத்துக்கான சமாச்சாரங்களை  முடிக்கணும்தான் !
கண்ணாடிக்குமிழில் வைக்கச் சின்ன மரத்தேடல் இன்னும் முடியலை. ஒரு கடையில் ஒரு பொண் குழந்தை எனக்காகக் காத்திருந்தாள். வீட்டுக்குக் கூட்டிவந்தேன். ஏறக்குறைய நம்ம ஜன்னுவின் உயரம் ! யூரோப்பியன். அவளை நம்மவளா மாத்தணும். 'நம்மவன்' வந்து பார்த்துட்டு ஓக்கேன்னான் ! 


முதலில் கண்களை மாத்தணும். பழைய உடுப்புகளைக் களைஞ்சு நம்ம ஸ்டைல் உடுப்புகளைப் போட்டுவிடணும். அப்படியே கொஞ்சம் அலங்காரமும். நம்ம ஜன்னுவின்  உடைகளையும் நகைகளையும் இரவல் வாங்கினேன். இனி  பெயர் வைக்கணும். ஜன்னுவின் களித்தோழி என்பதால்  பெயரும் அவள் பெயருக்குப் பொருத்தமா இருக்கணும்.  அன்னு என்று முடிவாச்சு. அனுஷ்காவின் சுருக்கம்.  ஜன்னு &  அன்னு !  நல்லா இருக்குல்லே !
ஒரு வெட் க்ரைண்டர் ஒன்னும் இன்றைக்கான வரவு. மார்ச் மாசம்தான்  பழசு , பாதி அரைக்கையில் மண்டையைப்போட்டுருச்சுன்னு ஓடிப்போய் ஒன்னு வாங்கியிருந்தோம். அது ப்ரெஸ்டீஜ். அப்போதைக்கு ஓக்கே என்றாலும் கழட்டிக் கல் எடுக்க ரொம்பவே கஷ்டமா இருந்தது.  புதுசா வேற மெஷீன்கள் வந்துருக்குன்னு போய்ப் பார்த்தால்  அல்ட்ரா  மினி இருந்தது.  அதன் உபயத்தால் வாசலில் மாக்கோலம் :-))))
நம்ம நண்பருக்கு  அவர் துறையில் தேர்வுகள் முடிஞ்சு நியூஸி அங்கீகாரம் வழங்கும் தனிப்பட்ட விழாவுக்குப் போயிருந்தோம். இவர் இந்திய வாழ்க்கையில் ஹைதராபாத், பூனா என்ற ஊர்களில் இருக்கும் தாஜ் ஹொட்டேலின் செஃப். இங்கே வந்ததும்  சிலபல ஊர்களில் வேலையில் இருந்துவிட்டு, நம்ம ஊருக்கு வந்து ஒரு  ஏழெட்டு வருஷம் ஆகிருக்கு.  (இவர் நம்மூருக்கு வந்தது நமக்கு நல்லதாப் போச்சு ! நம்ம வீட்டு விசேஷங்களுக்கு இவர்தான் பொறுப்பு ! ) விழாவில் லெவல் 3 & 4 க்கான  New Zealand Certificate வழங்குனாங்க. வாழ்க்கையில் முன்னேறணும் என்றால்  நம் துறையில் அப்படியே நின்னு போகாமல் மேற்படிப்பு,  பயிற்சின்னு நம் தகுதியை மேலும் மேலும் வளர்த்துக்கணும் ! 'நம்மவர்' போலவே இவரும் ஆர்வமா இருப்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு !
வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்புக்குக் காத்திருந்தோம். சின்னவன் வந்தான்.  அவனுக்கும் அக்காக்களைப் பிடிச்சுப்போச்சு !

நம்ம தாமரைக்குளத்தில்  புதுச் செடியிலும் பூ !  வாங்கிவச்சு வருஷம் மூணாச்சு. போன வருஷம் குட்டியா ஒன்னு நானும் இருக்கேன்னு வந்து போனது, இப்பத்தான் முழுப்பூவா மலர்ந்துருக்கு !  ஆப்ரிகாட் நிறம் னு ஆசையோடு வாங்கிவந்தால். கொஞ்சம் வெளிறிய ஆப்ரிகாட்டா வந்துருக்கு. பலம் இல்லை போல...... வெஜிடேரியன் இல்லையோ !!!!

க்றிஸ்மஸ் நாளும் வந்துருச்சு. நாடு முழுசும் ஒரு கடையும் திறந்துருக்காது.  எங்கோ ஒரு தெருமுனை டைரியும், பெட்ரோல் பங்கும்தான் திறந்துருக்கும். டிவியில் கூட விற்பனை சம்பந்தமுள்ள எந்த கமர்ஸியலும் இருக்காது. குட் ஃப்ரைடேவுக்கும் ஈஸ்டர் நாளுக்கும் கூட  இப்படித்தான் ! 

 பொதுப்போக்குவரத்து பஸ்கள் மட்டும் ஓடும். பொதுவாகவே பஸ்ஸில் வேலைநேரங்களில் (8 -6 ) பத்திருபது ஆட்கள் இருந்தால் அதிகம்.  பாக்கி நேரங்களில் ஒன்னு ரெண்டு பேர் இருந்தால் ட்ரைவருக்கு அதிர்ஷ்டம்.  பயமாகவும் இருக்காது.  இப்போ க்றிஸ்மஸ் நாளுன்னா... சுத்தம். ஆளில்லா பஸ் ஊர் சுத்திக்கிட்டு இருக்கு!

நாமும் இந்த இடும்பியின்   சம்ப்ரதாயப்படி க்றிஸ்துவக் கோவிலுக்குக் கிளம்பினோம்.  முதலில் வீட்டாண்டை, பக்கத்துத்தெருதான் !  வழக்கம்போல் ஏகாந்த  தரிசனம் ராத்ரி பனிரெண்டுக்குக் குழந்தை பொறந்தாச் ! (உண்மையில் அப்போ நடுநிசி ஆகலை. டேலைட் ஸேவிங் காலம் என்பதால் பதினொன்னுதான், கேட்டோ !)



அங்கிருந்து கார்ட்போர்ட் கதீட்ரல்.  நாளும் கிழமையுமா மூடி வச்சுருக்காங்க. இது தாற்காலிகம்னு சொல்லிதான்  கட்டுனாங்க.  போறபோக்கைப் பார்த்தால் இது நிரந்தரமாகிரும்னு தோணுது.  13 வருஷங்களுக்கு முன் நிலநடுக்கத்தில் இடிஞ்சு போன எங்க க்றைஸ்ட்சர்ச் கதீட்ரலை இன்னும் கட்டிமுடிச்ச பாடில்லை.  அப்பவே பலநாடுகள் தாமாக முன்வந்து பழுது பார்த்துத் தர்றோமுன்னு சொன்னதை சர்ச் மேலிடம் ஒத்துக்கலை. கர்வமா இருந்துட்டு இப்போ கர்வபங்கம்.
ஒரு நாலைஞ்சு வருஷத்துக்குமுன்  பழுது பார்க்கறோமுன்னு ஆரம்பிச்சு வேலைகள் ஆமை வேகத்தில் (! ) நடந்துக்கிட்டு இருக்கு. மக்கள் பலரும் நம்மூர் என்ற அபிமானத்தில் பொருளுதவி செய்தோம்தான்.  இப்ப  அந்த நிதி போதாதாம். இன்னும் முப்பது மில்லியன் (மூணு கோடி டாலர் ) வேணுமாம். கொடுக்கலைன்னா   நடந்துக்கிட்டு இருந்த வேலையை அப்படியே விட்டுருவாங்களாம்.  விட்டுட்டுப்போங்க..... யாராலெ முடியும் என்ற நிலைக்கு  மக்கள்  வந்தாச்.  முந்தியெல்லாம் அந்தப் பக்கம் போனாலே கண்ணுலே ஜலம் வச்சுப்பேன். இப்போ  இல்லை.  கல்மனசு வந்துருக்கு இதுலே மட்டும். ப்ச்....

நல்ல வெயிலும் இருக்குன்னு அப்படியே கடற்கரைப் பக்கம் போனோம். நியூஸிக்குன்னே ஒரு வகை க்றிஸ்மஸ் மரம் இருக்கு, தெரியுமோ !


பொஹுட்டுக்காவா (  Pohutukawa) என்று மவொரி பெயர்.  மவொரி மக்களுக்கு  இது ரொம்பவே புனிதமான மரம்.  மவொரி போர்வீரர்  (young Maori warrior, Tawhaki )ஒருவருடைய  தகப்பனை, எதிரிகள் கொன்னுட்டாங்க. அவுங்களைப் பழிவாங்கணும். தன் ஒருவரால் முடியாத காரியம். உதவி வேண்டி  மேலுலகம் நோக்கிப் போறார். மவொரிகளின் கடவுள் நம்பிக்கை, கலாச்சாரத்தின் படி ஆகாயமே தந்தை, பூமியே தாய் !   இவருடைய பயணம் தோல்வியில் முடிஞ்சு அங்கிருந்து கீழே விழுந்துடறார். அவருடைய ரத்தம் தெறித்த இடத்தில் எல்லாம் சிகப்பு நிறமுள்ள பூக்கள்  பூக்கும் மரம் முளைச்சுருது.  அந்த மரம்தான் இந்த மரம் ! இப்ப மஞ்சப்பூவும்   வந்துருச்சு !    

 கடற்கரையையொட்டியே இந்த மரங்கள் முளைக்கும். பச்சையும் சிகப்புமா பார்க்கவே ஒரு அழகு ! எனக்கு ரொம்பவும் பிடிச்ச மரமும் கூட.  கோடையில் மலரும் பூக்கள், நம்ம க்றிஸ்மஸ் காலத்தோடு சேர்ந்து போச்சு ! 


மரங்களை ரசிச்ச கையோடு நம்ம சம்னர் வாழ் வரசித்திவிநாயகரையும் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு சில யானைகளையும் பார்த்துட்டு வந்தோம்.      ( இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்றேன் !) 

பண்டிகை நாளிலே சர்ச்சுலே ஆளைக்காணோம். ஊர்சனம் முழுக்க பீச்சுலே இருக்கு.

 கொஞ்சம் ஓய்வெடுங்க. இருட்டுனாவுட்டு  ஒரு இடத்துக்குப் போகலாம் !   


4 comments:

said...

அனுஷ்காவா?  ஆ...   அப்போ எனக்கு அன்னுவை ரொம்பப் பிடிச்சுப் போச்சு...  படங்களை ரசித்தேன்.

said...

ஜன்னு அன்னு சூப்பராக இருக்கிறார்கள். பேரன் ரசிப்பது அழகு.

said...

வாங்க ஸ்ரீராம்,

அவளிடமும் சொன்னேன் :-)

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா ! அவனுக்கு அக்காக்களைப் பிடிக்கிறதாம் !