Friday, April 29, 2011

எச்சூஸ்மீ....டைம் ப்ளீஸ் (ராஜஸ்தான் பயணத்தொடர் 6)

காஷிராம் அவ்தார் ஜஸ்வால், தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு வழிகாட்டிக்கிட்டே நம்மை ஹவா மஹல் வழியாவே சிட்டி பேலஸ் கூட்டிட்டுப்போனார். வண்டியை அரண்மனை கார் பார்க்கில் நிறுத்திட்டு ஒரு பெரிய வாசல் வழியா வெளியே தெருவுக்குப் போனோம். கோட்டை மதில்களுடன் அங்கே தனியா நின்னுக்கிட்டு இருக்கும் கட்டிடம்தான் ஜந்த்தர் மந்த்தர். உள்ளே போக கட்டணம் ஆளுக்கு இருவதுன்னு செலுத்திட்டு உள்ளே போனோம். வானசாஸ்த்திர நிலையம். மஹாராஜா ஸவாய் ஜெய் சிங் (இரண்டாமவர்) கணக்கானவர்ன்னு சொன்னேனே....அதேதான்.
உலகின் பாரம்பரியக் கட்டிடங்களில் இதைச் சேர்த்துருக்கு (World Heritage site)
ஜந்த்தர் மந்த்தர் நுழைவு வாயில்

கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் விளக்கம் சொன்னவரிடம் ஹிந்தியில் சொல்லுங்கன்னேன். நம்ம ப்ரதீபுக்கும் புரியணுமே. நம்ம மஹாராஜா ஸவாய் ஜெய்சிங் (இந்தப்பெயரில் இவர் இரண்டாவது மன்னர்) இந்தியாவில் அஞ்சு இடத்தில் இப்படி ஜந்த்தர் மந்த்தர் கட்டி வச்சுருக்கார். ஜெய்ப்பூர், தில்லி, மதுரா, வாரணாசி அண்ட் உஜ்ஜயினி. இவைகளில் இப்போ நாம் நின்னுக்கிட்டு இருக்கோமே இந்த ஜெய்ப்பூர் ஆப்ஸர்வேட்டரிதான் பெருசு. பொதுவா ஆப்ஸர்வேட்டரியில் நாம் பார்க்கும் சின்னச்சின்ன யந்திரங்கள், டெலஸ்கோப் இப்படி ஒன்னும் இங்கே இல்லை. எல்லாமே மார்பிளும் செங்கலும் வச்சுக் கட்டினவைகள்.. இயந்திரங்கள் எல்லாமே இப்படித்தான் செஞ்சு வச்சுருக்காங்க. இயற்கையான சூரியன் ஒளியையும் , இந்த ஒளி செங்கல்லால் கட்டி வச்சுருக்கும் பகுதிகள் மேல் விழும்போது அதன் மூலம் ஏற்படும் நிழல்களைக் கணக்கு வச்சு மணி பார்க்கறது மட்டுமில்லாம சூரியன் சஞ்சரிக்கும் பாதை, ராசி, நட்சத்திரம், இப்படி ஒரு பஞ்சாங்கமா செயல்படுது இது.

சமஸ்கிரதத்தில் ஜந்த்தர்னு சொன்னால் யந்த்ரா (இன்ஸ்ட்ருமெண்ட் ) என்றும் மந்த்தர் என்பதுக்கு சூத்திரம் (ஃபார்முலா) என்றும் பொருளாம்.
ராஜ் யந்திரா, க்ராந்தி யந்திரா, ராஷிவலயாச் யந்திரா, திஷா யந்திரா, இப்படி ஏகப்பட்டக் கருவிகள். எல்லாமே கல்வச்சுக் கட்டியவைகள்தான். இந்தக் கணக்கெல்லாம் சரியான்னு டபுள் செக் பண்ணிக்க ஜெய்ப்ரகாஷ் யந்திரான்னு இன்னும் ஒன்னு இங்கேயே இருக்கு.
விமானத்துலே இறக்கையில் பொருத்தி இருக்கும் எஞ்சின் போல அசப்பில் இந்தப் பக்கம் ஒன்னும் அதுக்கு எதிர்ப்பக்கம் ஒன்னும் இருக்கு. இது தக்ஷணாயணம், உத்தராயணம் காலங்களுக்கானதாம். நரிவல்யா யந்திரமுன்னு பெயர்.
ரெண்டா வெட்டுன C மாதிரி வளைஞ்ச பளிங்குகல்லில் மணி, நிமிஷம், விநாடி எல்லாம் இஞ்ச் டேப் மாதிரி கோடுகோடா பாகம் போட்டுப் பிரிச்சு வச்சுருக்கு. பக்கத்துலே நிற்கும் ஒரு 90 டிகிரி செங்கோணமுள்ள முக்கோண வடிவச் சுவற்றின் நிழல் அதுலே விழும் இடத்தை வச்சு அப்போதைய மணியைத் தெரிஞ்சுக்கலாம்.இந்த சுவத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு உடைஞ்ச சி. சுருக்கமாச் சொன்னால் ஒரு C யை ரெண்டா வெட்டி பக்கத்துக்கொன்னா வச்சுருக்காங்க.
சின்ன டயல்

காலை ஆறுமுதல் பனிரெண்டு வரை இடதுபக்கமும் பகல் பனிரெண்டு முதல் மாலை ஆறுவரை வலப்பக்கமும் நிழல் விழுது. இது சின்ன சன் டயல். சாம்ராட் யந்திரமுன்னு பெயர். காஷிராம் விளக்கிக்கிட்டே இப்போ மணி எத்தனைன்னு கேக்கறார். கோடுகளைப் பார்த்து எண்ணிச் சொல்லணும். நான் இயல்பா கையைத் தூக்கி என் கைகடிகாரத்துலே பார்த்துட்டு ஒன்பதேகால்ன்னு சொன்னேன். இல்லையாம் அப்போ மணி எட்டு நாப்பத்தியாறு! எப்படி? எப்படி?
இண்டியன் ஸ்டேண்டர்ட் டைம் அலஹாபாத் பக்கத்துலே இருக்கும் மிர்ஸாபூர் என்னும் டவுனில் இருந்துதான் கணக்கெடுக்கப்படுது. ஆனால் ஒரு தீர்க்கரேகைக்கு 4 நிமிசம் என்ற கணக்கு ஒன்னு இருக்கே. அதைவச்சுத்தான் உலகநாடுகளில் நேரத்தைக் கணக்குப் பண்ணறாங்க. அலகாபாத், ஜெய்ப்பூர் இந்த ரெண்டு இடத்துக்கும் இடையிலே 7.25 தீர்க்கரேகைகள் வித்தியாசம் இருக்கு. ரெண்டும் ரெண்டு கோடியில் இருக்கும் ஊராச்சே. அதனால் 29 நிமிச வித்தியாசம் இருக்காம். உண்மையான ஜெய்ப்பூர் நேரத்தோடு 29 நிமிசம் சேர்த்தால் ஐ எஸ் டி. கிடைக்கும்.
இன்னொரு பக்கம் மார்பிளால் செஞ்ச பெரிய கிண்ணம் தரையிலே பதிச்சுவச்சமாதிரி. இது துருவ யந்திரம். இதன் கரையில் நாலுபாகமாப் பிரிச்சு 90 டிகிரிக் கணக்குலே வச்சுருக்காங்க. ஸீரோ டிகிரிக்கும் 180 டிகிரிக்கும் ஒரு கம்பி. 90க்கும் 270க்கும் ஒரு கம்பி. ரெண்டும் ஒன்னையொன்னு வெட்டும் இடத்தில் ஒரு தகடு. அந்தத் தகட்டின் நிழல் விழும் இடத்தில் அப்போதைய ராசி, நட்சத்திரம் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். எந்த இடமுன்னு நமக்குக் காமிக்க அங்கே கட்டிவிட்டிருக்கும் கயிற்றின் ஒரு முனையில் உள்ள சின்னக்குச்சியால் அந்தத் தகட்டைத் தொட்டு அதன் ஆடும் நிழலில் நமக்கு என்ன ஏதுன்னு காமிக்கிறார் காஷிராம்.


சில கிண்ணங்களுக்கு உள்ளில் படிகள் வேற இருக்கு. கீழ்தளத்துலே இருக்கும் வாசல்வழியா அதுக்குள்ளே போகலாம். ஜோதிடர்களும் வானசாஸ்த்திரம் படிக்கும் மாணவர்களும், நிபுணர்களும் அதுவழியாப்போய் கோணங்கள் எல்லாம் அளந்து கற்றுக்கொள்வார்களாம். ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்த்துக் குறிக்க இதைத்தான் அப்போதெல்லாம் பயன் படுத்துவாங்களாம். இப்பவும் சிலர் இங்கே வந்து பார்த்து குறிப்பெடுத்துக்கிட்டு போறாங்களாம்
ப்ரவுன் நிறத்தில் படிகள். கீழ்தளத்தின் கதவைத் திறந்து இதில் ஏறிப்போய்ப் பார்க்கலாம்

அவர் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிக் கேட்டுக்கிட்டேவர்றார் நம்ம கோபால். ரொம்ப வருசத்துக்கு முன்னே தில்லியில் இருக்கும் ஜந்த்தர் மந்த்தர் போனப்பவும் எல்லாத்தையும் பார்த்தோம். அப்ப கைடு வச்சுக்கலை. அதனால் சரியா ஒன்னும் புரியலை. இப்ப? கைடு சொல்றார்...... ஆனாலும் ஒன்னும் சரியாப் புரியலை. ஆனால் இது காலம் காட்டும் கருவின்னு மட்டும் நல்லாப் புரியுது:-)
பெரிய டயல்

உலகின் மிகப்பெரிய சன் டயல்


இது மட்டுமில்லாம இன்னொரு இடத்தில் அதே 90 டிகிரி கோணத்தில் முக்கோண டிஸைனில் இன்னுமொரு பெரிய சுவர்(சன் டயல்) இருக்கு. இதுதான் உலகிலேயே பெரியதாம். அங்கேயும் உடைந்த சி அமைப்பு. நேரம் பார்த்துக்கலாம்.
தூரத்தில் ஹவாமஹல் பின்புறம்

காஷிராம்கூட கிளம்பும்போதே ஹவா மஹலை உள்ளே போய்ப் பார்க்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அவரும்....அதுக்குள்ளே ஒன்னுமே இல்லை. வெளியே இருப்பது வெறும் ஃபஷாட்ன்னார். இப்போ நாம் நிற்கும் ஜந்த்தர்மந்த்தர் பெரிய சன் டயல் அருகில் இருந்து 'அங்கே பாருங்க. அதுதான் ஹவா மஹலின் பின் பக்கம். ஒன்னுமே இல்லை பார்த்தீங்களா? வெறும் சுவருன்னு சொன்னேன். சரியாப்போச்சுல்லே'ன்றார்.
12 ராசிகளுக்கான டயல்கள்


ஜந்த்தர்மந்த்தர் கட்டிடத்தின் உள்ளில் பனிரெண்டு ராசிக்கான தனித்தனிப்பகுதிகள் வேற வச்சுருக்காங்க. எல்லாத்துக்கும் ரெண்டுபக்கமும் சின்னச்சின்ன படிகள் வேற. இதுமட்டுமில்லாம வேற என்னென்னவோ கணக்குகள், யந்திரங்கள் இப்படி எல்லாமே சூரியனால் வரும் நிழலைவச்சே அமைஞ்சுருக்கு. கணித மேதைகளுக்கும் வான சாஸ்த்திரம் படிப்பவர்களுக்கும் இது இன்னும் சுவாரஸியமா இருக்கக்கூடும். நமக்கு? உலகிலேயே மிகப்பெரிய பழையகால அப்ஸர்வேட்டரியைப் பார்த்த திருப்தி:-)
இதுவும் ஒரு யந்த்ரா. இதன்மேல் குறுக்கும் நெடுக்கும் போட்ட கம்பிகளை பிடிச்சுத்தொங்கி அறுத்தெறியும் குரங்குகள் தொல்லையால் கம்பிகளைக் கழட்டி வச்சுருக்காங்க. அதான்.....எனக்கு இதில் நேரம் பார்க்க முடியலை!!!!


இதைக்கட்டி முடிக்க ஏழு வருசம் ஆகியிருக்கு 1728 லே ஆரம்பிச்சு 1734 இல் முடிச்சுருக்காங்க. மாடர்ன் கருவிகளோடு ஒப்பிட்டால் மணி காட்டுவதில் மஹா துல்லியம்!!!!! கூடிப்போனால் ஒரு விநாடி வித்தியாசம் வந்தால் அதிகமாம்.

பயங்கரக் கணக்கா இருக்கே!!!!!!!!!!!
மக்களைத் தன் கழுகுப் பார்வையால் அளக்கும் .....


கையில் கடிகாரம் கட்டாம இங்கே வந்து சரியான நேரம் சொல்லணுமுன்னு போட்டி வச்சா ஒருவேளை நான் ஜெயிக்கக்கூடும். கையில் கட்டலைன்னா என்ன? கைப்பையில் வச்சுருப்பம்ல :-)))))))))


தொடரும்..............:-)

Wednesday, April 27, 2011

கோவிந்த்ஜி.......... துளசி வந்துருக்கேன். (ராஜஸ்தான் பயணத்தொடர் 5)

ரெண்டாவது கேட்டில் நுழைஞ்சோம். வெய்யில் தாக்காமல் இருக்க நெடுகப் பந்தல் போட்டு தரைவிரிப்பும் போட்டுவச்சுருக்காங்க. நமக்கெல்லாம் ரெட்கார்பெட் வரவேற்புதான்! முதல் கேட்டில் நுழைஞ்சால் ஏதோ பார்க்குக்கு வந்துட்டோமுன்னு நினைப்பீங்க. வழி நெடுக பெஞ்சுகள் போட்டு உட்கார வசதி செஞ்சுவச்சுருக்காங்க. பாதை முடியுமிடம் பெரிய ஹால் வளைவு நெளிகளுடன் வாசல்கள் வச்ச மண்டபம். அரண்மனை மாதிரி இருக்கேன்னால்.... இது அரண்மனையின் ஒரு பகுதியேதான்!
மஹாராஜா ஜெய்சிங் அவர்கள்தான் மதுரா விருந்தாவனத்தில் கோவிந்த்ஜிக்குக் கோவில் எழுப்பினாராம். அவுரங்கஸேப் ஆண்ட காலத்தில் மதுராவில் இந்துக் கோவில்கள் இடிப்பு நடந்த சமயம் விருந்தாவனத்தில் இருந்த கண்ணனைக் காப்பாத்தி இங்கே கொண்டுவந்துட்டாங்க. மஹாராஜ இரண்டாவது ஜெய்சிங் இங்கே ஆமெர் கோட்டையில் ஒரு கோவில் கட்டிக் கிருஷ்ணரைப் பிரதிஷ்டை செஞ்சார்.

இந்த சிலை ஏறக்கொறைய அஞ்சாயிரம் வருசம் பழமையானதாம். இதுக்குக் கதை ஒன்னு இருக்கணுமே? இருக்கே!

ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன் கிருஷ்ணரின் மறைவுக்குப்பின் அநேக வருசங்கள் கழிச்சுப் பிறந்தவர். குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்கள் முக்கியமாக அபிமன்யுவின் மனைவி உத்திரை, கிருஷ்ணன் இப்படி இருந்தார் அப்படி இருந்தார்ன்னு சொல்லி வர்ணிக்கும்போது நமக்குத் தாத்தாவைப் பார்க்கக் கொடுத்து வைக்கலையேன்னு இவருக்கு இருக்கும். ஒரு சமயம் கேள்விப்பட்ட அழகையெல்லாம் மனசில் வச்சுக்கிட்டு ஒரு சிலையை உண்டாக்குனார். அதைப் பாட்டியிடம் காமிச்சப்ப....பாதம் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இருந்தாப்பலே இருக்குன்னாங்க. இன்னொரு சிலை வடிச்சார். அதைப் பார்த்த பாட்டி வயிற்றுப்பகுதி மட்டும் சரியா கிருஷ்ணனுக்கு இருந்தமாதிரியே இருக்குன்னாங்க. மூணாவதா ஒரு சிலை செஞ்சு காமிச்சவுடன், முகம் இப்பச் சரியா கிருஷ்ணர் மாதிரியே இருக்குன்னாங்களாம் அந்தப் பாட்டி. முதல் சிலைக்கு ' மதனமோகனா'ன்னு பெயரும் ரெண்டாம் சிலைக்கு 'கோபிநாத்' என்ற பெயரும் மூணாவது சிலைக்கு 'கோவிந்த்' என்ற பெயரும் வச்சு வழிபட்டுக்கிட்டு இருந்தாங்க.
அன்னியர்கள் படையெடுப்பால் சிலைகள் பாதுகாப்புக்காக அங்கே இங்கேன்னு போய் இப்போ மூணுமே ராஜஸ்தானில் இருக்கு. ரெண்டு சிலைகள் ஜெய்ப்பூரிலும் ஒரு சிலை கரோலி என்ற கிராமத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரே நாளில் சூரிய உதயம் முதல் சூரியன் அஸ்தமிக்கறதுக்குள் இந்த மூன்று கோவில்களிலும் போய் ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசிச்சால் முழுசா அவரைக் கண்ட பலன் கிடைக்குமாம். ( இப்படித்தான் நம்ம தமிழ்நாட்டுலே திருமுல்லைவாயில், திருவொற்றியூர், மேலூர் (இதுவும் சென்னைக்குப் பக்கத்தில்தான் இருக்கு. சென்னை பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ளது) இந்த மூன்று கோவில்களிலும் ஒரே நாளில் கொடி இடை, வடிவுடை, திருவுடை அம்மன்களைத் தரிசிக்கணும்னு சொல்றாங்க. இந்த மூன்று அம்மன் சிலைகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவைகளாம்.

ஒரு நாள் மகாராஜா இரண்டாம் ஜெய்சிங் அவர்களின் கனவில் தோன்றி அரண்மனையில் இருக்கும் சந்திர மஹலில் இருக்க விருப்பமுன்னு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதன் பேரில் மலைமேல் ஜெய்நிவாஸ் சூரஜ் மஹல் மாளிகையில் இருந்தவரை பிங்க் சிடி அரண்மனை மாளிகை ஜெய்நிவாஸ் தோட்டத்துக்குள்ளே இருக்கும் சந்திர மஹலுக்குக் கொண்டுவந்துட்டாங்க. அரண்மனையில் இருந்து பார்த்தால் கிருஷ்ணர் தெரிவாராம்.
சும்மாச் சொல்லக்கூடாது...இந்த சந்த்ர மஹல் பளிங்குத் தூண்களோடும். சுவர் விதானம் எல்லாம் அழகான பிங்க் நிறத்தில் வெள்ளை வண்ண வேலைப்பாடோடும் அட்டகாசமா இருக்கு!
சிக்கன் குர்த்தாவில் உள்ள வேலைப்பாடுகள் போல நேர்த்தியா இருக்கு பாருங்க.
நாம் கோவிலுக்குள் போன சமயம் வெளியே பெருக்கி வாரிச் சுத்தப்படுத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு பெண்மணி. காலையில் கிளம்புனது முதல் கவனிச்சுக்கிட்டே இருக்கேன் அங்கங்கே துப்புரவுத் தொழிலாளிகள் பெரிய துடைப்பம் ஒன்னை ரெண்டு கையாலும் பிடிச்சுக்கிட்டுப் பெருக்கறதை. கைக்கு அடங்காமல் இம்மாம் பெரிய துடைப்பமா? பேசாம ரெண்டு மூணு இங்கிருந்தே வாங்கிக்கிட்டுப் போலமான்னு (பார்ட் ஆஃப் த ஷாப்பிங்) தோணல்.. பேச்சுக் கொடுத்தப்பத் தெரிஞ்சது தென்னங்குச்சிக்களுக்கு இடையில் ஒரு கட்டைவச்சுக் கட்டி இருக்காங்களாம்! இது இங்கத்து ஸ்டைல்!!!! ஆமாம்....இப்படிக் கைக்கு அடங்காம இருந்தால் பெருக்கும்போது கை வலிக்காதோ?
மழைத்தண்ணி வெளியேற மாடு வாய் வச்சுருக்காங்க:-) எல்லா இடத்திலும் விளக்கேத்தி அசிங்கம் பண்ணாமல் இருக்க அங்கங்கே விளக்கு ஏற்றி வைக்க ஸ்டேண்ட்
திரைபோட்டு வச்சுருக்கும் சந்நிதிக்கு முன்னால் பக்தர்கள் பலர் இங்கும் அங்குமா உக்கார்ந்திருக்காங்க. சரியா எட்டுமணிக்குத்தான் தரிசனமாம். தினமும் ஏழு முறை தரிசனம். காலையில் நாலு மாலையில் மூணு காலையில்

5 முதல் 5.30,
8 முதல் 9.15,
9.45 முதல் 10.30,
11.15 முத்ல் 11.45

கோவிலைச் சாத்திட்டாங்கன்னா.....மாலையில்

5.30 முதல் 6
6.30 முதல் 7.45
8.45 முதல் 9.15
டைம் டைமுக்குத் திரையைத் திறந்து மூடிடறாங்க. இப்போ மணி ஏழு முப்பத்தியஞ்சுதான். கொஞ்சங்கொஞ்சமா மக்கள்ஸ் வந்துக்கிட்டு இருக்காங்க. அங்கங்கே உக்கார்ந்து திரை விலகுமான்னு ஒரு ஏக்கப் பார்வையுடன் சிலர் பஜன் பாடிக்கிட்டு இருக்காங்க. சந்நிதி ஒரு மேடைமேல் இருக்கு.


கோவிலோட வலைப்பக்கத்தில் ஆரத்தி எடுப்பதை வீடியோவாப் போட்டுருக்காங்க. அப்படியே கிருஷ்ணனையும் பார்த்துக்குங்க. நானும் இந்த ஆரத்தியை இப்படித்தான் இதைத்தேடும்போது பார்த்தேன்.
பக்கவாட்டில் இருக்கும் ஒரு வழியை எட்டிப்பார்த்தால் புழக்கடை தெரியுது. அந்த வாசலுக்குப்போனால் கண்ணுக்கெதிரா இருக்கும் மலையின் மேல் ஒரு கோட்டை! பெரிய முற்றத்தில் செயற்கை நீரூற்றுக்கான ஏற்பாடு. ஆனால் சொட்டுத்தண்ணி இல்லை. புறாக்கள் எக்கச்சக்கமா தரையே தெரியாத அளவுக்கு நிறைவா உக்காந்துருக்குக.
தூரத்தே மலைக்கோட்டை!
இந்தப்பக்க வாசலில் உள்ளே போனால்.... ரசோயி. பயந்துறாதீங்க மடப்பள்ளிதான்.! பெரிய பெரிய ட்ரேக்களில் என்னவோ இனிப்புகள் செஞ்சு வச்சுருக்காங்க. கிளிக்குனதும் இங்கே க்ளிக்கக்கூடாதுன்னாங்க. ஏன்? கெமெராவுக்கு கட்டணம் கட்டணுமாம். சரின்னுட்டு கவுண்ட்டருக்குப்போனால் அது சாத்திக் கிடக்கு. சும்மாச் சுத்திச்சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். சந்நிதிக்கு நேரா சின்ன கம்பித்தடுப்புக்கு அப்பால் பெரிய தோட்டம், நெடுக செயற்கை நீரூற்றுக்கான ஏற்பாடுகள். அது முடிவடையும் இடத்தில் அரண்மனைக் கட்டிடம்.
கம்பித்தடுப்புக்கு அப்பால்
மயிலி

மயிலன்


தோட்டத்தில் மயில் நடமாட்டம் ஏராளம். பெண்கள் உலாத்திக்கிட்டு இருக்க, ஆண்கள் மட்டும் நீளமான தோகையை மூக்கால் நீவிவிட்டுக்கிட்டு 'கொஞ்சம் சீவிவிட்டால் என்ன'?ன்னு கேக்குதுங்க.
கம்பி கேட்டுக்குப் பக்கத்தில் ரெண்டு முயல் குட்டிகள் மஞ்சள் சட்டையில். சின்னது சிரிச்ச முகத்தோடும் பெருசு காலங்கார்த்தாலே இங்கே கூட்டிட்டு வந்த குடும்பத்தை நொந்துக்கும் முகத்தோடும்!

காக்கைன்னா கரைந்துண்ண வேணாமோ? அதென்ன தனியா கபளீகரம்.......


இன்னும் கால்மணி காத்திருக்கணும் திரை விலக. அவ்ளோ நேரம் இருக்கமுடியாது. போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு ரெடியாகணுமுன்னு இவர் குதிக்கிறார். சரி போயிட்டு கைடு கூட வரலாமுன்னு கிளம்பிட்டோம். ஆட்டோகாரர் சொல்றார் இன்னொரு பழைய கோவில் இருக்கு. அங்கே கொண்டு போறேன்னு. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடாதுன்றதுபோல...... வேணாம். நேரமாயிருச்சு. ஹொட்டேலுக்குக் கொண்டு போங்கன்றார் கோபால். தன்னோட செல் நம்பரைக் கொடுத்து இங்கேதான் (பேப்பர் படிச்சுக்கிட்டு?) இருப்பேன். வேற இடங்கள் சுத்திப் பார்க்கணுமுன்னா கூப்புடுங்கன்னார் ஆட்டோக்காரர்.

ஹொட்டேல் டைனிங் ரூமில் சுமாரான கூட்டம். பஃபே ஸ்டைல் ப்ரேக்ஃபாஸ்ட். பரவாயில்லை. நல்லாவே இருந்துச்சு. இட்லி சாம்பார் வச்சுருந்தாங்க. சின்னச்சின்ன ஊத்தப்பங்களும். சவுத் இண்டியன் வகைக்கு!

தொடரும்................:-)

Monday, April 25, 2011

லேண்ட் மார்க் ஆஃப் ஜெய்ப்பூர் (ராஜஸ்தான் பயணத்தொடர் 4)

கிழக்கு வெளுக்கும்போதே சட்னு எழுந்து தயாரானேன். 'எதுக்கு இவ்வளோ சீக்கிரம் எழுப்பறே? இன்னிக்கு நிறைய சுத்த வேண்டி இருக்கும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்க'ன்னார் கோபால்.

'கடைகள் எல்லாம் திறந்துட்டாங்கன்னா..... ட்ராஃபிக், கூட்டம் வந்துரும். இப்ப ஹவா மஹல் போய் பார்த்துட்டு க்ளிக்கிட்டு வரலா'முன்னேன்.
காலை ப்ரேக் ஃபாஸ்ட் இங்கே ஹோட்டேலில் தர்றாங்க. எட்டுமணிக்குள்ளே திரும்பிவந்து ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டோமுன்னா ஆச்சு. ஒன்பது மணிக்கு ஒரு கைடு வர்றார். ப்ரதீப் மெதுவா தயாராகட்டும். நாம் ஒரு ஆட்டோ பிடிச்சுக்கலாமுன்னு முடிவாச்சு.

ஏழுமணி. கீழே வந்தோம். சாலை வெறிச்சுன்னு இருக்கு. டூரிஸ்ட் பஸ்கள் நாலைஞ்சு மட்டும் சின்ன உறுமலோடு நிக்குதுங்க. நிம்மதியா உக்கார்ந்து தினசரியில் மூழ்கி இருந்த ஆட்டோக்காரரிடம் 'கொஞ்சம் சுத்திட்டு வரணும் ஹவா மஹலாண்டே'ன்னோம். 150ன்னார். போகட்டும் அஞ்சு டாலர்னு பேரம் பேசலை.

வழிநெடுகத் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களைக்கூட்டி மலைபோல் குப்பைகளைக் குவிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு தொழிலாளிக்குப் பின்னும் நாலு நாய் என்ற கணக்கில் ஒரு கூட்டம் பின்னாலேயே போகுது. பத்திருபதடிக்கு ஒன்னுன்னு பெரிய பெரிய கேன்களில் பால் வச்சுக்கிட்டு முடிச்சுமுடிச்சாச் சின்னக்கூட்டம்.


இந்த நகரம்தான் அகில இந்தியாவிலேயே திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரம் என்ற பெருமைக்கு உரியது. சும்மாச் சொல்லக்கூடாது..... நல்ல அகலமான சாலைகள். ரத கஜ துரக பதாதிகள் கஷ்டமில்லாமக் காலை வீசிப்போட்டு நடக்கணுமேன்னு..... ராசா ரொம்ப யோசிச்சுக் கட்டுனது. நேத்து ராத்திரி இதுவழியாப் போனப்ப இருட்டுலே அகலம் ஒன்னும் சரியாத் தெரியலை. ப்ளாட்ஃபாரம் முழுசும் கடைகள் நீட்டிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் ஜேஜேன்னு இருந்துச்சே!

கலர்ஃபுல் உடைகளில் பெண்கள் கூட்டம் ஒன்னு பூஜைப்பொருட்களோடு ஏதோ கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. பிங்க் நிறக் கட்டிடங்களின் வரிசை ரெண்டு பக்கமும். ஸவாய் மான்சிங் டவுன் ஹால் கட்டிடம் கம்பீரமா நீண்டு நிக்க அதுக்குப் பக்கத்துலே ஹவாமஹல். டூரிஸ்ட் பஸ்களில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் வந்து இறங்கி மஹலைப் படம் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. நம்ம ஐடியா அவுங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?

போக்குவரத்து இல்லாத சாலையின் எதிர்ப்பக்கம் போய் லாங் ஷாட்டில் படம் எடுக்கும் கூட்டத்தில், நாமும் ஜோதியில் கலந்தோம். வெள்ளைக்காரப்பயணிகள் சாலையின் குறுக்கும் நெடுக்குமா இஷ்டத்துக்கு நடந்து ( அவுங்க ஊரில் இப்படி நடக்கமுடியாது பாருங்க. அந்த ஆசையைத் தீர்த்துக்கிட்டாங்க போல! ) மஹலை அணுஅணுவாப் படம் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தாங்க. நாம் மாத்திரம் கம்மியா என்ன? பார்ட் பார்ட்டா நானும் எடுப்பேன், தைச்சும் போடுவேன்ல:-)))

தைச்சது

கூட்டம் எதையாச்சும் கையோடு வாங்கிப்போகாதா என்ற நப்பாசையில் இங்கே மட்டும் ஒரு சில கடைகள் திறந்து வச்சுக்கிட்டு இருக்காங்க. கலர்கலரா அலங்கரிச்சச் சின்னக்குடைகள் ஜெய்ப்பூர் ஸ்பெஷல்!

லேண்ட் மார்க்

சூரியன் உதயமாகி கதிர்கள் மஹலை நோக்கிப் பாயுது! 'பளிச்சுன்னு எப்படி ஜொலிக்குது பாருங்க'ன்னு வியப்புதான். கிழக்கு பார்த்த மாளிகையின் முன்னாலே ச்சும்மாத் தூக்கி நிக்கவச்ச அலங்காரச் சுவர்தானாம்.( fa·cade) அஸ்திவாரமே இல்லையாம். பின்னாலே சாதாரணக் கட்டிடம்தான். அரண்மனைப்பெண்டிர் முகம் காட்டக்கூடாது என்ற நியமம் இருந்த காலக்கட்டம். இப்படிக் கடைத்தெருவின் நட்ட நடுவில் இருக்கும் இடத்துலே தெருவழியா கொண்டாட்டம், ஊர்வலம், எல்லாம் போகாமலா இருக்கும்? டும்மா சத்தம் கேட்டால் என்ன நடக்குதுன்னு எட்டிப் பார்க்கும் ஆர்வம் எல்லோருக்கும் பொதுதானே? அதான் யார் கண்ணுக்கும் படாமல் வெளியே நடப்பதைப் பார்க்கன்னு இப்படி ஒரு சுவர் எழுப்பி வச்சுருக்கார் ராசா. இந்த ஜன்னல்கள் ஓட்டை வழியாக் காத்து வீசுவதைப் பார்த்து இதை ஹவா (இந்தியில் காற்று என்று பொருள்) மஹலுன்னு குறிப்பிட்டு அதே பெயர் நிலைச்சு நிக்குது இப்பவும்.

facade

மஹலைத் தொட்டடுத்து குறுக்கா ஒரு சாலை போகுது. ஒவ்வொரு நாற்சந்தியிலும் வட்டமான தொட்டி அமைப்பில் செயற்கை நீரூற்று, சிலைகள் இப்படி வச்சுருக்காங்க.. நாற்சந்தியின் எதிர்மூலையில் ஒரு கோவில். ஸ்ரீலக்ஷ்மிநாராயணன். நேத்தே பார்த்து வச்சுக்கிட்டதுதான்.

மும்முரமா தினசரியில் மூழ்கி இருந்த ஆட்டோக்காரரைத் தொந்திரவு செய்யாமல் நாங்களே நாற்சந்தியின் குறுக்கே கடந்தோம். ஒரு குதிரைவண்டி ஸ்டேண்ட். பக்கத்துலே புல்லுகட்டு விற்கும் சைக்கிள் ரிக்ஷாவண்டி. புல்லுகட்டு முழுசும் சிட்டுக்குருவிகள்!!!! ஓடி ஆடி, பாடி, பறந்து...கண்ணுக்கு விருந்து!
சுமார் இருவது படிகள் ஏறி கோவிலுக்குள் நுழைஞ்சோம். மேல் படிக்கட்டில் நின்னு பார்த்தால் நேர் குறுக்கா இருக்கும் ஹவா மஹலுக்கு வந்த டூரிஸ்ட் பஸ்கள் ஏராளமாக் கண்ணில் படுது.

திரும்பவும் ஏழெட்டுப் படியேறி சந்நிதிக்கு போனால் நாம் த்வாரகையில் பார்த்த அதே ரூபத்தில் கருப்புப் பளிங்குக் கண்ணன். சந்நிதியில் பட்டர் தீர்த்தம் கொடுத்தார். படம் எடுக்கலாமான்னு அனுமதி கேட்டால்....' தாராளமா எடுத்துக்கோ. மூலவரை நல்லா எடுத்துக்கோ'ன்னார். இது எனக்கு ரொம்பப் பிடிச்சது. நம்ம பக்கங்களில் பல கோவில்களிலும் படம் எடுக்கக்கூடாதுன்னு தடா இருக்குல்லே? படம் எடுத்தால் மூலவரின் சாந்நித்யம் போயிருமாம்! எல்லாம் வல்ல இறைவன் ஃபோட்டோ எடுத்தால் பவர் குறைஞ்சுருவானா? நம்ம சிங்கை சீனுவைக்கூட படம் எடுத்துக்க எந்த ஒரு தடையும் இல்லை. கோவிலின் புனிதம் என்ன அங்கே கெட்டா போச்சு? வளம் கொழிக்கலையோ!!!!
மூலவர் லக்ஷ்மிநாராயணர்

புள்ளையார்
மூலவர் சந்நிதி

கருவறைக்கு வெளியே ரெண்டு பக்க சுவரிலும் சின்ன மாடத்தில் ஒரு பக்கம் புள்ளையாரும் இன்னொரு பக்கம் பார்வதி பரமசிவன் ரிஷபவாகனத்தில் இருப்பதுபோலும் சிலைகள். இன்னொரு சுவரில் ஆஞ்சநேயர் செந்தூரக்குழைவில். முன்மண்டபத்தில் இரண்டு பக்தைகள் உட்கார்ந்து ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மேலே விதானத்தின் கிண்ணக்கூரையில் அழகான வண்ணங்களால் ஆன டிஸைன்.
விதானம்

ரிஷபவாகனத்தில் பார்வதி பரமேஸ்வரன்

மூலவருக்கு எதிராக கண்ணனைக் கண்ணோடு கண் நோக்கும் விதமா நல்ல உசரமான தனிச் சந்நிதியில் பெரிய திருவடி... தரிசனம் முடிச்சுக்கிட்டு வெளிவந்து யஹா(ங்) ஸே வஹா(ங்)ன்னு ஹவா மஹலைக் க்ளிக்கோ கிளிக்குன்னு கிளிக்கிட்டு ஆட்டோவுக்குத் திரும்பிவந்தோம்.

கோவில் படியில் இருந்து

ஆட்டோக்காரர் பேப்பர் வாசிப்பதை இன்னும் முடிக்கலை! நாட்டு நடப்பு என்னன்னா.... ஒன்னும் இல்லையாம்!!!! அதையா இன்னும் மாய்ஞ்சு மாய்ஞ்சு வாசிக்கிறார்?????

'எதிரிலே கோவில் ஒன்னு இருக்கே அங்கே கொண்டு போகவா'ன்றார். அடராமா..... தினசரியில் நட்ட கண்ணை இப்போதான் எடுக்கறாரா? போய்ப் பார்த்தாச்சுன்னோம். இங்கே கோவிந்த்ஜி கோயில் இருக்குன்னார். ஆஹா..... ச்சலோஜின்னேன்.

கிளம்பி வந்தவழியாவே போய் இடதுபுறம் உள்ள சந்து(தெருவில்) நுழைஞ்சு லெஃப்ட் ரைட்டுன்னு போய் ஒரு குருத்வாரா முன்னாலே நிறுத்திட்டு அதோ அதுக்குள்ளே நுழைஞ்சு போங்கன்னு இடதுபக்கம் கை காட்டினார். வண்டிகள் நுழைய முடியாதபடி குறுக்குத் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.

வெளிவாசலிலே ஸ்ரீ கோபேஷ்வர் மஹாதேவ் (சிவன்) கோவில் ஒன்னும் சூலம் கையில் பிடிச்ச மா(த்)தா கோவில் ஒன்னும் இருக்கு. நாம் விருந்தாவனத்தில் பார்த்தது போல ரெட்டை வாசல் இருக்கும் பெரிய மதில் சுவரோடு டிகானா மந்திர் ஸ்ரீ கோவிந்த்தேவ்ஜி கோவில்! ஒன்னு ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த் மஹாப்ரபு வாசல். இன்னொன்னு ஸ்ரீ ஸ்ரீ கோராசந்த மஹாப்பிரபு வாசல்.

தொடரும்................:-)