Friday, April 22, 2011

யாரங்கே...? Gகோ அண்ட் பெயிண்ட் த டவுன் பிங்க்!!!!!!!!(ராஜஸ்தான் பயணத்தொடர் 3)

ஆமெர்லே கோட்டை கட்டி ஆண்டுக்கிட்டு இருந்த ராசா......11 கிலோமீட்டர் தள்ளி புதுசா ஒரு நகரத்தை நிர்மாணிச்சார். முக்கிய காரணம் தண்ணிப் பஞ்சம். மக்கள் தொகைப் பெருகப்பெருக தண்ணி சேமிப்பு குறைஞ்சுக்கிட்டே வந்துருக்கு. இது 1727 வது வருசம். மகாராஜா சவாய் ஜெய் சிங் அரசாண்ட காலம். புது நகரம் எப்படி இருக்கணுமுன்னு பயங்கரமாப் ப்ளான் போட்டுருக்கார். சம்பத்தப்பட்ட பல புத்தகங்களைத் தேடிப்பிடிச்சு வாசிச்சார். அப்போ மட்டும் இணையம் இருந்துருந்தால்........ இன்ஃபர்மேஷன் கொட்டிக் கிடந்துருக்கும்! ராசா ரொம்பக் 'கணக்கு'ப் பாக்கறவர். வாஸ்து அபிமானி. கட்டிடக்கலையில் அதீத ஆர்வம் உள்ளவர். வானசாஸ்த்திரப் பைத்தியம் வேற

அரசாங்கத்துலே கணக்கு வழக்கு பார்த்துக்கிட்டு இருந்த வித்யாதர் பட்டாச்சார்யா என்றவரைத் துணைக்கு வச்சுக்கிட்டு பக்காவா திட்டம் தீட்டி நகர நிர்மாணம் தொடங்கி நாலு வருசத்துலே கட்டி முடிச்சுட்டாங்க. ஜெய் சிங் ராஜா கட்டியதால் ஜெய்ப்பூர் என்று நாமகரணம் ஆச்சு. ஊரை ஒன்பது பகுதியாப் பிரிச்சு அதுலே நடுவிலே ரெண்டு பகுதி அரண்மனை சமாச்சாரங்களுக்கு ஒதுக்குனாங்க. மற்ற ஏழும் மக்களுக்கு. கடை கண்ணி எல்லாம் எங்கெ இருக்கணும், ஊருக்குள்ளே வர்றதுக்கு வழி எத்தனை வேணும் இப்படி எல்லாம் கணக்கோ கணக்கு. கோட்டைச்சுவர் மாதிரி சுத்திவரக் கட்டி ஏழு கோட்டை வாசல்கள் வச்சாங்க. அதுலே ஒரு வாசல் வழியா நுழைஞ்சு நாம் நகரத்துக்குள்ளே போறோம்.


எல்லாக் கட்டிடத்துக்கும் செங்கல் நிறம் கலந்த ரோஜா வண்ணம் அடிச்சு வச்சுருக்கு. அதனால்தான் இதை பிங்க் சிடின்னு சொல்றாங்க. ,ஒட்டையா விடாம, வளைவும் நெளிவுமா எல்லாக் கட்டிடங்களின் மாடியிலும் ஒரு கலை அழகு இருக்கத்தான் செய்யுது. வரிசை வரிசையாக் கடைகள் கடைகள் கடைகள். கீழ்தளம் முழுசும் விதவிதமான கடைகள். சிகப்பு ஆரஞ்சு மஞ்சள் நிறங்களில்தான் பெண்களின் உடைகள் பெரும்பாலும் துணிக்கடைகளின் முகப்பில் தொங்குது. நம்ம பச்சையை அவ்வளவாக் காணோம்:( கடைத்தெருன்னு ஒன்னை மட்டும் தனியா சொல்லிக்க முடியாது. குறுக்கும் நெடுக்குமா.......... ஹைய்யோ இவ்வ்ளோ கடைகளை ஒரே இடத்தில் நான் என் ஜென்மத்துலே இதுவரை பார்த்ததே இல்லை!!!!

கடைத்தெருவில் இருக்கும் வரிசைக் கட்டிடங்களின் தோளோடு தோள் சேர்ந்தமாதிரி நிக்குது இந்த ஜெய்ப்பூருக்கே 'லேண்ட் மார்க்'கா இருக்கும் ஹவா மஹல். பெரிய மைதானத்துலே நடுவில் அழகா நிக்குமுன்னு நான் செஞ்சு வச்சுருந்த கற்பனை 'டமால்'னு கீழே விழுந்துச்சு! இப்படியா கூட்டத்தோடு கோவிந்தா போடனும்? அஞ்சு மணிக்கே மூடிடறாங்க. நாளைக்கு எப்படியும் உள்ளே போய் பார்க்கணும். மஹலுக்கு முன்னால் ப்ளாட்பாரத்தைச் சின்ன கம்பிவேலி போட்டு தடுத்து வச்சுருக்காங்க.
இன்னொரு நகரவாசல் வழியா வெளியே வந்தோம் ராம்நிவாஸ் தோட்டமாம். அதுக்குள்ளே போக சாலையிலேயே கேட் போட்டு வச்சுருக்கு. கண்ணுக்கு நேரா அற்புதமான அலங்காரத்தோடு ஒரு கட்டிடம். ஆல்பர்ட் ஹால்.
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் ஆல்பர்ட் 1853 ஆம் ஆண்டு இந்த சமஸ்தானத்துக்கு வந்துருக்கார். (இவர்தான் பின்னாளில் ஏழாம் எட்வர்ட் என்ற பெயரில் பட்டத்துக்கு வந்தவர்) அவர் வருகையைக் கொண்டாட ஊர் முழுக்க இந்த பிங்க் நிறத்தை அடிக்க வச்சுருக்கார் இரண்டாம் ஸவாய் ராம் சிங் ராஜா. பெயிண்டிங் த டவுன் பிங்க்!!!!

இப்ப இந்த ஆல்பர்ட் ஹால் ம்யூஸியமா மாற்றப்பட்டிருக்கு. அதைச் சுற்றிப்போகும் சாலையில் இடதுபக்கமாவே போனால் ஒரு குன்றும் அதன்மேல் இருக்கும் கோட்டையும் கண்ணுலே படுது. மோதி டூங்ரி. (முத்துமலை) இதன் அடிவாரத்தில் பரந்து விரிந்த ஒரு பெரிய தோட்டத்தில் முத்தைப் பழிக்கும் வெண் நிறத்தில் பளிச்ன்னு நிக்குது பிர்லா மந்திர். பெரிய பார்க்கிங் வசதிகள். நாலைஞ்சு டூரிஸ்ட் பஸ்கள் வந்து நிக்குது. கூட்டம்கூட்டமா மக்கள்ஸ் வந்து இறங்குறாங்க. இந்தக் கோவில்களில் இறை நம்பிக்கை உள்ள அனைத்துலகத்தினருக்கும் அனுமதி என்பதால் கூட்டத்துக்கு எப்பவும் குறைவே இல்லை. இறைவன் எல்லோருக்கும் பொது! 1988 இல் கட்டி இருக்காங்க. கோவிலுக்கு உள்ளே மட்டும் படங்கள் எடுக்க அனுமதி இல்லை:( இந்த பிர்லா குடும்பத்தினர் நாடு முழுக்க அங்கங்கே கோவில் கட்டிவிடுவதையே டைம்பாஸ் ஆக்கிக்கிட்டாங்க போல.

மல்லிச்செடிகள்!
தோட்டம் முழுக்க குண்டுமல்லிச் செடிகளின் வரிசை. எல்லாம் மொட்டு விட்டுருக்கு. பூக்கும் காலம் வந்தால் முத்துமலையையே தூக்கிட்டுப்போயிரும் வாசம்!!! தோட்டத்தில் ஒரு மண்டபம் கட்டி மனிதரூப சிவனை வச்சுருக்காங்க. அவரும் ஜடாமுடியும் புலித்தோலுமா ஹாய்யா உக்கார்ந்துருக்கார்.

பக்தர்கள் உள்ளே போகும் வழி


பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயணன் கோவில். மூணுவித கோபுரங்களோடு இருக்கு. எலக்ட்ரானிக் கேட் கடந்து கருவறைக்குப் பக்கத்தில் இருக்கும் வாசல்வழியா உள்ளே போறோம். மஹாவிஷ்ணுவும் லக்ஷ்மியுமா ஆளுயர அளவில் நிற திருக்கோலம். பளபளன்னு பளிங்கு!! திவ்யமான அலங்காரங்கள். ஒரு பக்கம் பட்டர் ஒருத்தர் தீர்த்தம் வழங்கறார்.
சிட்டுக்குருவி ஒன்னு ரொம்ப ஜாலியா சாமிகிட்டே போய் அவருக்கு முன்னால் இருக்கும் பிரசாதத் தட்டில் ஒரு கொத்து எடுத்து விழுங்கி, பக்கத்துலே வலம்புரிச் சங்கில் இருக்கும் தீர்த்தத்தில் ஒரு துளி குடிச்சது. பிறகு பறந்துபோய் விஷ்ணுவின் தோளில் அமந்து சிறுபேச்சு. இங்கே அங்கே தாவல். மறுபடி பிரசாதம், தீர்த்தம் இப்படி வாழ்க்கையை அணுஅணுவாக் கொண்டாடிக்கிட்டே இருக்கு!!!!

அடடா...... என்ன காட்சி!!!! அடுத்த ஜென்மம் இருந்தால்....அதுலே பூனையா (அதும் நியூசியில் மட்டுமே) பிறக்கும் வரம் வேண்டணும் என்ற ஐடியாவில் சின்ன மாற்றம் செஞ்சுக்கலாம் போல இருக்கே! குருவி அதுவும் பிர்லா கோவில் குருவி ஓக்கேன்னு சாமிகிட்டே கேக்கணும்.
வலையில் சுட்ட படம். ஆண்டவருக்கு நன்றி.

கருவறையைச் சுற்றி இருக்கும் பிரகார நடைபாதையில் நமக்கு ரெண்டு பக்கமும் பளிங்கில் செதுக்கிய காட்சிகள். கங்கை வானத்தில் இருந்து இறங்கி வருதல், சீதா சுயம்வரம், சமுத்திரமந்தன்(பாற்கடலைக் கடைதல்) குருகுலத்தில் பிள்ளைகள் கற்றல், கண்ணனின் ராசலீலா, காளிங்கமர்த்தனம், ராஜசூய யாகம், வியாஸர் சொல்லச்சொல்ல தந்தப்பேனாவால் புள்ளையார் பாரதம் எழுதுதல் இப்படி எல்லாமே அருமை. இந்த வகைப்பளிங்கு ஏதோ சோப்புக் கட்டி போல செதுக்கி எடுக்க ஏதுவா இருக்கும் போல. நிகுநிகுன்னு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சித்திரங்கள் சிற்பங்கள் எல்லாமே உயிரோட்டமான ஜொலிப்புடன். திரு அண்ட் திருமதி பிர்லாவுக்கு வெளிப்பிரகாரத்தில் சிலைகள் வச்சுருக்காங்க. அந்தம்மா சேலைக் கொசுவம்கூட துல்லியமா வந்துருக்கு!
நாம் வெளிவரும் வாசல் ஜெயின் கோவில் டிஸைனில் அமைஞ்சுருக்கு. வாசல் மாடத்தில் பளிங்குப்பிள்ளையார் தேவியருடன் இருக்கார். அவர் தலைக்கு மேல்புறமா பார்வதிபரமசிவன். சர்ச்சுகளில் இருக்கும் ஸ்டெய்ன் க்ளாஸ் சித்திரங்கள் போல நாம் கோவில் உள்ளே போகும் வாசல் முகப்பில் சரஸ்வதி, புள்ளையார், லக்ஷ்மி இருக்கும் ஜன்னல். இன்னும் சிலபல சித்திரக் கண்ணாடிகள். ஆனால் எடுத்த படங்களில் சரியாகத் தெரியலை:(
மோதி டூங்ரியில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. அங்கே ஏதோ பழுது பார்ப்பதால் மூடி வச்சுருக்காங்கன்னு சொன்னதால் கணேஷ் மந்திருக்கு மனசுக்குள்ளே வணக்கம் போட்டுட்டு வந்தவழியாவே திரும்பினோம். ஒரு ஆஸ்பத்திரிக்கு 'கெட் வெல்'ன்னு பெயர் வச்சுருக்காங்க. வெரி குட். ரொம்பப் பிடிச்சுருக்கு!

கடைவீதிகள் எல்லாம் விளக்கு வெளிச்சத்தில் பளபள. ஹவா மஹல் ஃபோகஸ் லைட்டில் நான் இங்கே இருக்கேன்னு சொல்ல, அந்த ஜன்னல் துளைகளில் வண்ண வண்ண விளக்குகள். நாளைக்கு வந்து பார்க்கணும். பொம்மைக் கடைகளில் ஷாப்பிங் கொஞ்சம் செய்யலாமான்னா..... வண்டி நிறுத்தும் இடம் ஒன்னும் கிடைக்கலை. இருட்டில் புது ஊரில் என்ன ஏதுன்னு புரிஞ்சுக்கக் கஷ்டம்தானே? ப்ரதீப்புக்கும் ஓய்வு கொடுக்கணும். காலையில் இருந்து ட்ரைவிங்............ பாவம் இல்லையா?

அறைக்கு வந்து சேர்ந்தோம். கீழே ஆளில்லாத முற்றத்தில் பீங்கான் கிண்ணங்களில் ஜலதரங்கம் வாசிச்சுக்கிட்டு இருந்தார் கலைஞர் ஒருவர். எல்லாம் பழைய பாட்டுகள். ஹிந்திப் படங்களில் வந்தவை. திடீருன்னு டும்மா சத்தம். என்ன நடக்குது? கொஞ்சநேரம் நிம்மதியா ஓய்வெடுக்க விடமாட்டாங்களே....... ஜன்னலில் எட்டிப் பார்த்தால்..... பராத். மாப்பிள்ளை ஊர்வலம். மல்லிகை மலர் திரையில் முகம் மறைத்து அலங்காரக் குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை வர அவருக்கு முன்னால் உறவினரும் நண்பர்களுமா ஆடிக்கிட்டே போறாங்க.
ஒரு காலத்துலே இந்த மாப்பிள்ளை ஊர்வலம் (ஜானவாசம்) ஏற்படுத்துனதே மாப்பிள்ளையின் யோக்கியதையைத் தெரிஞ்சுக்கத்தானாம். தமிழ்நாட்டுலே முகத்திரை எல்லாம் இல்லை. பளிச்சுன்னு முகம் தெரியும். வடக்கே...... போகட்டும் பெண்கள் முக்காடு போட்டுக்கும் பழக்கம் இருக்கே. அதுக்குப் பரிகாரமா ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் அன்றைக்கு ஒரு நாளாவது முகத்திரை இருக்கட்டுமேன்னோ!!!!!

நமக்குன்னு வந்து வாய்க்குது பாருங்க சம்பவங்கள்...... நிச்சிந்தையா இருக்க விடாதே........

தொடரும்..................:-)


19 comments:

said...

நல்ல கட்டுரை… ஹவாமஹல் நாங்கள் பகலில் மட்டுமே பார்த்தோம். இரவு நேரம் விளக்கு வைத்தபின் இன்னும் அழகாய் காட்சி அளித்திருக்கும் போல…. தொடரட்டும் பின்க் சிட்டி ஊர்வலம்….

said...

ஜெய்ப்பூர் நகரம் பற்றி நல்ல அறிமுகமும் புகைப்படங்களும்

said...

உள்ளேன் டீச்சர் ;)

said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இருக்கு என் பதிவுல..
மறக்காம,மறுக்காம எழுதுங்க..

said...

ஜெய்ப்பூரை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்
பகிர்வுக்கு நன்றி

said...

"ஹவா மஹல்' ஒளியில் சூப்பராக இருக்கிறது.

பிர்லா மந்திர் முத்தாய் பளிச்சிடுகிறது.

said...

வட நாட்டில் சாமி சிலைகள் வித்யாசமாக இருக்கும். ஆனால் இதில் உள்ள சிலைகள் தமிழ்நாட்டில் இருப்பது போலவே இருக்கிறதே?

said...

தாமதமா பதில் சொல்றதுக்கு எல்லோரும் மன்னிச்சுருங்க ப்ளீஸ்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆமாம். இரவில் இன்னும் அழகாத்தான் ஜொலிச்சது. அதையும் விட்டுவைக்கலை. வரும் பகுதிகளில் விளக்கம் வரும்:-)

said...

வாங்க ஷண்முகவேல்.

சந்தர்ப்பம் கிடைச்சால் தவறவிடாமல் போய் ரசித்து வர வேண்டிய மாநிலம்தான் இந்த ராஜஸ்தான்.

said...

வாங்க கோபி.

கடைசி பெஞ்சா????????????

said...

வாங்க அறிவன்,

சுட்டி கொடுக்கப்படாதோ???????

said...

வாங்க சிவகுமாரன்.

எல்லாம் 'கண்ணால் கண்டபடி' வகையில் வந்துக்கிட்டு இருக்கு:-))))

said...

வாங்க மாதேவி.

ச்சும்மா ஊர் சுற்றிப் பார்த்தால் எல்லா இடமும் பளிச் தான்:-)))))

said...

வாங்க ஜோதிஜி.

அப்படி ஒன்னும் ரொம்ப வித்தியாசம் இல்லைங்க. என்ன ஒன்னு நம்ம பக்கம் கருங்கல்லில் செதுக்குவதை இங்கே வெள்ளைப்பளிங்கில் செதுக்கி வச்சுடறாங்க. இந்தக் கல் ரொம்ப மிருதுவா இருப்பதால் அப்படியே இழைக்கமுடியுது.

கறுப்புப் பளிங்கு மட்டும் கண்ணனுக்கே!

said...

துளசி மேடம்..

மாப்பு...

இங்க பாருங்க..

said...

வாங்க அறிவன்.

அடடா..... நம்ம மேலே இத்தனை நம்பிக்கையா!!!!!!!

கொஞ்சம் டைம் கொடுங்க. எழுதிடலாம்.

said...

பல தளங்களில் எழுதும் நீங்களும் என்னைக் கவர்ந்த பதிவு எழுத்தாளர்களில் ஒருவர்..இன்னும் பலர் இருக்காங்க..ஆனால் அவங்க பக்கத்தில எல்லாம் சமீபத்திய இரண்டு வருடங்களில் பதிவையே காணும்..

சீக்கிரம் எழுதுங்க..நன்றி.

said...

pink city super city!