Monday, November 30, 2009

செய்யும் வேலையில் கவனம் வேணும்

எந்த வேலை செஞ்சாலும் அதுலே எவ்வளவு கவனம் இருக்கணுமுன்னு இங்கே பார்த்தாலே புரிஞ்சு போகும்.

கொடியிடை?

உனக்குத் தலையிலே எதாச்சும் இருக்கா?

கழுத்து ஏந்தான் இப்படி.....


நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!



வாலோடுதான் நான் பேசுவேன்!

குரங்குமாதிரிக் கையைக் காலை ஆட்டாமக் கொஞ்சம் சும்மாத்தான் இரேன்.
யக்கா...புள்ளையைக் கூட்டியாரேன்.கொஞ்சம் பேன் பார்த்துவுடேன்.

Friday, November 27, 2009

ரெவ்வெண்டா வந்து இப்படிக் கூத்தடிச்சா?

ஜல்ஜல் ஜலக்கு ஜல் ஜல்.......தங்கச் சரிகைச்சேலை...... சேலெ....ஏஏஏஏஏஏஏ.......சினிமாத் தெருக்கூத்தைப் பார்த்துருக்கேன். அம்மன் கோவில் தீமிதித் திர்விளா(?)க்கு விரதம் இருக்கறவங்களும் வந்த சனமும் ராத்திரி முச்சூடும் தூங்காம இருக்கக் கூத்து கட்டறதையும் பார்த்திருக்கேன். இது இல்லாம ரெண்டு வர்சம் முந்தி 'திவாலி'க்கு நியூஸியில் நடந்த தெர்க்கூத்தும் ஓக்கே. ஆனா..... நெசத் தெருக்கூத்து எப்பத்தான் கிடைக்குமுன்னு இருந்தேனா......

ஸ்ட்ரீட் ப்ளே( தெருக்கூத்து) நடக்கபோகுது, எல்லாரும் ஓடியாங்கன்னு ரெண்டு நாளா தினசரியில் கூவிக்கினு இர்ந்தாங்க......

இண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் (இதுவரைக்கும் சரி). இதோட கூட்டு யாருன்னா..... ஸ்ரீ அரியக்குடி ம்யூஸிக் ஃபவுண்டேஷன். ஆஹா.....


கோபால்தான் சொல்லிக்கிட்டே இருப்பார், இந்த தமிழ்க் கலாச்சார நடனங்களையெல்லாம் ம்யூஸிக் அகாடெமியிலும், நாரத கான சபாவிலும் வச்சால் என்னன்னு? எப்பவும் இல்லைன்னாலும் இசை நடன நாடக விழா சமயத்திலாவது வைக்கணுமாம். காலம் போகப்போக மாற்றங்கள் வரலாமுன்னு சொல்லிவச்சேன்.

கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரைன்னு நையாண்டி மேளத்தோடு ரசிக்கணுமாம். மருதை.... அப்படித்தான் பேசும். முந்தி ஒரு காலத்துலே மவுண்ட் ரோடு (அப்ப இப்படித்தான் பெயர்) சஃபயர் தியேட்டரில் ஏன் தமிழ்ப் படம் காமிக்கலைன்னு கலகம் ஆரம்பிச்சு, கன்னித்தாய்(ன்னு நினைக்கிறேன்) படம் போட்டு, தியேட்டர் எல்லாம் வெத்தலை பாக்குத் துப்பிக் கலீஜாப்போச்சுன்னு ஒரு சேதி இருந்துச்சு.

இசைவிழா முடிஞ்சதும் சென்னைப் பூங்காக்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் விழா நடக்குது(அதான் நம்ம கனிமொழி பொறுப்பேத்து நடந்தறாங்களேங்க. அதுக்கு என்ன பேரு? மனசுலே இருக்கு. சட்னு எழுதும்போது நினைவுக்கு வரலை பாருங்க) இது முற்றிலும் இலவசம். யார் வேணுமுன்னாலும் போய் ரசிக்கலாம். சபாக்களில் வச்சா டிக்கெட் அது இதுன்னு கறந்துருவாங்களேன்னு என்னவோ சமாதானமாச் சொல்லி வச்சேன். சபாக்களில் அப்படியே வச்சாலும் எவ்வளவு ஆதரவு இருக்குமுன்னு தெரியலையே.....

கவலையே படவேணாம். மக்களுக்கு எல்லாமே பிடிக்குதுன்னு சொல்றாப்போல ஆர். கே. ஸ்வாமி ஆடிட்டோரியம், மயிலையில் கூத்துக்கு ஏற்பாடே ஆகிப்போச்சு. கூத்துப் பட்டறை முத்துசாமி ஐயா ( 32 வருசமாச்சு இவர் கூத்துப்பட்டறை ஆரம்பிச்சு. இவர் யாருன்னு அப்புறமா அவர்கிட்டேயே பெயர் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்) ஒரு சின்ன அறிமுகம் கொடுத்தார். ஆர்சுதிப்பட்டு ஆளுங்க, எங்கூருக்கு வந்து பாருங்கன்னு சொன்னதும் போய்ப் பார்த்தாராம். பிரகலாத சரித்திரம். 'எல்லாம் ரெவ்வெண்டு. நரசிம்மத்தைத் தவிர'ன்னார். அது சாமியாச்சே. அதனால் 'ஒன்னே ஒன்னு'. (அட! சிம்பிளாச் சொல்லிட்டாரு பாருங்க)
அசுரகுல குரு சுக்ராச்சாரியர் புள்ளையாருடன் கைகோர்த்துப் பாடுனார்.
ம்யூசிக் பார்ட்டி

திரை விலகுனதும் புள்ளையார் வந்தார். தீப ஆராதனை ஆச்சு. கட்டியங்காரன் கதை சொல்ல ஆரம்பிக்க, பின்பாட்டு முன்பாட்டு, ஸ்டேண்ட் வச்ச ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரான்னு கூத்து, களை கட்ட ஆரம்பிச்சது. இரண்யன்(கள்) வந்து பெஞ்சுக்கு மேலே போட்டுருந்த சிம்மாசனத்தில் தாவி ஏறி 'ஜங்'ன்னு இடியோசையுடன் உக்கார்ந்தாங்க. ஒவ்வொருமுறை எழுந்தோ, இல்லை குதிச்சோ உக்காரும்போதும் மறக்காமல் பாதங்களை ஒரு தட்டுத் தட்டி 'ஜல் ஜங்!
ஹிரண்யன்ஸ்


ப்ரகலாத் ஜோடி 1

பிரகலாதன்(கள்) வந்தாங்க அரசவைக்கு. (இனி எல்லாத்துக்கும் 'கள்'' போட்டுக்குங்க நீங்களே) ஹிரண்யாய நமோ என்று சொல்லச் சொன்னால் கொஞ்சம்கூட அசராமல் கடைசிவரை நாராயணாய நமோ சொல்லி அடிச்சு ஆடுனாங்க. குலகுரு கெஞ்சிப் பார்த்தும் மசியலை. குச்சியை வச்சு விளாசுறார்.(இவர் நடிப்பு அட்டகாசம்.) அரசனும் என்னென்னவோ 'கொடுமைகள்' செஞ்சும் ஒன்னுமே ஆகலை. ஹிரண்யனின் மனைவி வந்து மகனைக் கெஞ்சுகிறார், மிஞ்ச முடியலை. வாயில் தீயோடு காளி வந்து வீராவேசமா ஆடி, பெற்றோர்கள் பெயர் சொல்வதுதான் பிள்ளைகள் கடமைன்னாலும்....ஊஹூம்....
மனைவீஸ் ஆஃப் ஹிரண்யன்ஸ்


நாலு உபாயங்களும் பயன்படுத்தியாச்சு. 'இந்த நாராயணந்தான் நமது பரம விரோதி. என் அண்ணந்தம்பிகளைக் கொன்னுட்டு எங்கியோ போய் ஒளிஞ்சுக்கிட்டான். அறுபதினாயிரம் ஆட்களை அனுப்பித் தேடவிட்டும் கிடைக்கலை. இப்போ, மகனே பிரகலாதா.....நீ நைஸா அவனை இங்கே கொண்டுவந்துட்டே'ன்னு பாராட்டுனது ஜோர்!

காளி


கதையில் ஒன்றிப்போனால் குழந்தைப் பிரகலாதன் 'இங்கே' இளைஞனா இருப்பதை மறந்துறலாம்:-) கடைசியில் தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த நாராயணன் மேடையிலும் வந்தார். நரசிம்மம் ஆவேசமாக வந்து நிற்கமுடியாமல் துள்ளுது. சாமி வேசம் கட்டுனா, .ஆ'வேசம்' வந்துருமாம். பக்கத்து இருக்கை ஆர்சுதிப்பட்டுக்காரர் சொன்னார். காளியே ஒரு மார்க்கமா நின்னு ஆடுனதும் இதனால்தானோ!!!! ரெண்டு ஆட்கள் அமுக்கிப் பிடிசாலும் சிம்மம் அடங்கலை. இன்னும் ரெண்டு ஆட்கள் குடலை(?) முறுக்கிப் பிடிச்சுக்கிட்டு நின்னாங்க. வதம் முடிஞ்சது. நரசிம்மத்தினை அனைவரும் வணங்கி ஆசி பெற்றாங்க. கற்பூராதனை நடந்துச்சு. பார்வையாளரில் பலரும் மேடைக்குப்போய் நரசிம்மத்தைக் கும்பிட்டுக்கிட்டாங்க. கொஞ்ச நேரம் ஆக ஆக சாமி மலை ஏறுச்சு.
அமுக்கிப்பிடி....ஆவேசம் அதிகமாகுது.....

எல்லாம் ரெவ்வெண்டா இருப்பதால் ஒருத்தர் மாற்றி மற்றொருத்தர்ன்னு பாடி ஆடிக் கதையை நகர்த்திக்கிட்டுப் போறாங்க. தொய்வில்லாம பாட்டுகள் வந்துக்கிட்டே இருக்கு. கூத்துக் கட்டுன எல்லோருக்குமே பாடாந்தரம் ஒன்னுபோல நினைவில் இருக்கு என்பதுதான் ஆச்சரியமா இருக்கு. அவுங்க பகுதி முடிஞ்சதும் உள்ளே போயிறாமல் ம்யூசிக் பார்ட்டிக்குப் பக்கம் நின்னு கூடவே பின்பாட்டுகள் பாடறாங்க நடிகர்கள் இதுலே 'ஆலாபனை' வேற! எல்லாரும். யார் வேணுமுன்னாலும் எந்தப் பகுதியை வேணுமுன்னாலும் செஞ்சுக்கலாம் என்ற அமைப்பு! நடுவிலே பிரகலாதனா இன்னொருத்தர் வந்து இடம் மாத்துனதை யாரும் பொருட்படுத்திக்கலை! எல்லாமே தமிழ்ப் பாட்டுகள். இலக்கண வரைமுறைக்குட்பட்ட சங்கீதமுன்னு முழுக்கச் சொல்ல முடியாட்டாலும் தாளம்போடவே வைக்குது. (பாடறியேன்....படிப்பறியேன்.....)
பிரகலாதன் ஜோடி 2

கோயில் திருவிழாச் சமயங்களில் பத்து நாள் நடக்கும் கூத்துக்களாம். இப்போ மூணு நாளாச் சுருங்கிப்போயிருச்சுன்னு வருத்தப்பட்ட இயக்குனர், இப்போ நமக்காக ரெண்டே மணி நேரத்துலே 'எல்லாத்தையும்' சொல்லி ஆடுவதில் உள்ள சிரமத்தைச் சொன்னார். நியாயம்தான்!
கூத்து இயக்குனர்


ஆடை ஆபரணங்கள் எல்லாம், தேவைக்கும் சௌகரியத்துக்கும் தகுந்தபடி. போட்டுருக்கும் பேண்ட்ஸ் மேலே ஜிலுஜிலுத்துணியைச் சுத்துனாலும் ஆச்சு! நரசிம்மத்தின் முகமூடி ஏகப்பட்ட கனமா இருக்குமோன்னு ஒரு எண்ணம். சரிவரத் தலையில் பொருத்திக்க முடியாம இருக்கு.
வதம் முடிஞ்சது


கனம் குறைஞ்சதா லேசான பேப்பர்மேஷேயில் செஞ்ச முகமூடிகள், தோளாபரணங்கள், க்ரீடங்கள் இருந்தால் வேசங்கட்டும் மக்களுக்குக் கஷ்டமில்லாம இருக்கும். இப்பத்தான் எத்தனையோ புது டெக்னிக் எல்லாம் வந்துருக்கே. (கோபாலின் ஐடியா) இதுக்குக் கூடுதலா ஆகும் செலவுகளைச் சமாளிக்கக் கலை மேம்பாட்டுத்துறை உதவலாம். மேடையில் இப்படி அப்படின்னு உதவ உலவும் மக்களுக்கும் ஒரு ஜிலு ஜிலு உடையைப் போட்டுவிட்டால் கண்ணை உறுத்தாம இருக்கும். இதையெல்லாம் கிராமங்களில் பொருட்படுத்தமாட்டாங்கன்னு சொன்னாலும்.............. ஸீனோட ஒன்றிப்போவது மக்களுக்குச் சுலபமா இருக்கேன்னுதான்.....

ஆங்............முக்கியமா, வெள்ளைக்குடலை எடுத்துட்டு ஒரு சிவப்புக் குடலை வைக்கலாம்:-))))
ICCR ரீஜனல் டைரக்டர் & கூத்துப்பட்டறை என்.முத்துசாமி


கூத்துக் கட்டுன ஆர்சுதிப்பட்டுக் கலைஞர்களுக்கும், நகரமக்களுக்காக இதை இங்கே ஏற்பாடு செஞ்ச ICCR Chennai இலாக்காவினருக்கும், கூத்துப்பட்டறை என்.முத்துசாமி ஐயா அவர்களுக்கும் நம் தமிழ்மண வாசகர் சார்பில் நம் ந்ன்றிகளை இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.

Wednesday, November 25, 2009

Hi தரா bad is not bad at all.

கண்ட்ரோல் டவரில் பேய் வசிக்குதாம். நவீன் சொன்னதும் தூக்கிவாரிப்போட்டுச்சு. நெசமாவா சொல்றீங்க?
ஆமாம் மேடம். புது ஏர்ப்போர்ட் கட்டுனதும் வந்து இறங்குன முதல் ப்ளைட் (அது எங்கே இறங்குச்சு? ) லேண்ட் ஆக வருமுன் ரன்வே முழுசும் கண்ணுக்குத் தெரியாமலேயே மறைஞ்சுருச்சாம்! (ஒன்னுமே தெரியாம பேய்கள் எல்லாம் இருட்டடிப்பு செஞ்சுருச்சோ?)
திரும்ப ப்ளைட்டை மேலே கொண்டுபோயிட்டு க்ளியரன்ஸ் கேட்டால் எல்லாம் க்ளியரா இருக்கு வாங்கன்னு சொல்ராங்களாம். இப்படி மூணு முறை நடந்ததும், 'என்னமோ ஏதோ'ன்னு ப்ளைட்டை சென்னைக்குத் திருப்பிட்டாங்களாம்.

"ஆங்..... அப்புறம்?"

இங்கே இன்னும் வேலைகள் பூர்த்தியாகாத நிலமையில் யாரும் வேலைக்கே வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. தனியா க்ரவுண்ட் கண்ட்ரோல் பணியாளர்கள் நிக்கப் பயப்படுறாங்கன்னு ரெவ்வெண்டு பேரா நின்னுக்குங்கன்னு நிர்வாகம் சொல்லி இருக்கு. மேலும் கட்டிடத் தொழிலாளர்கள் யாரும் வராம வேலை தடைப்பட்டு, கூட்டமா வந்து வேலை செஞ்சுட்டுப்போங்க. கூலி நிறையத் தர்றோமுன்னு சொல்லி ஒருவழியா வேலைகள் முடிஞ்சதாம். கம்யூனிஸ்ட் பேய்களா இருக்கலாமோ? தொழிலாளர் நலன்களுக்கு இதுங்களாவது பாடு பட்டுருக்கே!

ராத்திரி நேரங்களில் கண்ட்ரோல் டவர்களிலும் கொஞ்சம் கூடுதலான ஆட்களை வேலைக்கு இருத்தினாங்களாம். இப்பப் பேயெல்லாம் அடங்கி இருக்கும்:-)
டிபாச்சர் லவுஞ் அழகா நீட்டா இருக்கு. அசப்புலே பார்த்தால் எந்த வெளிநாட்டு விமானநிலையத்துக்கும் ஈடு கொடுக்கும் வகையில் அமைஞ்சுருக்கு. ஹைதை மக்கள் பெருமைப்பட்டுக்கலாம். என்ன ஒன்னு...... நகரில் இருந்து ரொம்ப தூஊஊஊஊஊரம்(-: ஆனால் வேற வழி? இவ்வளவு பெரிய இடம் நகருக்கு ரொம்பப் பக்கத்தில் கிடைப்பது கஷ்டம் இல்லையா? இது கிறைஸ்ட்சர்ச்சா என்ன? :-)))
இண்டிகோ ஏர்லைன்ஸில் வந்தோம். அதுலேயே திரும்பிப்போறோம். அடிச்சுப் புடிச்சு வந்தா வழக்கமான 'தாமதம்' ச்சும்மா ஒரே ஒருமணி நேரம்தான். அப்டீன்னு (ச்சும்மாங்காட்டியும்) சொல்லிவச்சாங்க. உண்மையைச் சொன்னால்...... 'விமானநிலையத்தில் பயணிக்கு மாரடைப்பு'..... நியூஸ் வந்திருக்கும்
முதலிலேயே சொல்லி இருந்தால்..... கொஞ்சம் நிதானமாகப் புறப்பட்டு இருக்கலாம். தாமதம் வழக்கம்போல் தினமும் இருக்குமோ? அநேகமா இது ஹொட்டேல் ரிஸப்ஷன் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கும் போல க்வாட்டர் டு சிக்ஸ்ன்னு சொன்னதுக்கு 'டான்'ன்னு கரீட்டா..... ஆறேமுக்காலுக்கு அலார்ம் கொடுத்தாங்க(-: இத்தனைக்கும் கோபால், ஃபைவ் ஃபார்ட்டிஃபைவ்ன்னு விளக்கம்வேற கொடுத்துருந்தார் மேஜர் சுந்தரராஜன் வசனம் மாதிரி!

கிளம்பி ஹொட்டெல் காம்பவுண்ட் கடக்கும் முன்பே, தற்செயலாக் கையைப் பார்த்தால்.....விரல்லே ஒன்னைக் காணோம்......... மோதிரம். திருப்பிப் போய் அறைச்சாவியை வாங்கி மேலே ஓடி.... படுக்கைக்கு பக்கத்து மேசை ட்ராவில் உக்கார்ந்துருந்ததை எடுத்துப்போட்டுக்கிட்டு..... ( ஒரு டிப்ஸ்: ஹொட்டேலில் நகைகளைக் கழற்றி வைக்க எப்போதும் அங்கே இருக்கும் கண்ணாடி க்ளாஸில் ஒன்னு எடுத்துக்குவேன். அது மேசை மேலே பளிச்ன்னு உக்கார்ந்துக்கிட்டு நம்மையே பார்ப்பதால் நமக்கு(ம்) மறக்காது. இந்த முறை என்னவோ வழக்கத்தில் இருந்து தவறியதுக்கு ஒரு தண்டனை) இதுலேயே ஒரு கால்மணி போயிருச்சு. ஆசியாவின் நீளமான மேம்பாலத்துலே வண்டியை விரட்டிக்கிட்டு, பேய்க்கதைக் கேட்டுக்கிட்டே வந்து சேர்ந்தால்......

இட்லி ஃபேக்டரி, ராஜஸ்தான் கைவினைப்பொருட்கள், நக்ஷத்ரா டயமண்ட் கலெக்ஷன்( ஏங்க யாராவது ஏர்ப்போர்ட்லே வைரம் வாங்குவாங்களா?) ஹைதை முத்து நகைகள் இப்படி கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

உங்கள் இருக்கையை நீந்துவதற்கு பயன்படுத்தவும்.. கண்ணெதிரில் இருந்த முன்ஸீட்டின் முதுகிலே இருக்கு! ஆமாம்..... ஒருவேளை தரையில் விழுந்துட்டால்..... 65 நிமிசத்துலே எதுவும் நடக்காதுன்னு........

சென்னைத் துறைமுகத்தைப் பறவை பார்வைப் பார்த்துக்கிட்டு, சமாதிகளுடன் மெரீனாவைக் கடந்துக் கத்திப்பாராவை எடுப்பதற்குள் நகர்ந்து போன பாலத்தைக் கவனிச்சுட்டு வந்து இறங்கி, 'பஸ் பிடிச்சு' வெளியில் வந்தால்...... பதினாயிரம் வாலாக்கள் வெடிச்சு பலத்த வரவேற்பு. நமக்கெதுக்கு இதெல்லாம்? நாலுநாள் ஊருலே இல்லைன்னா...... ஃபோர்மச்சா இல்லை? ..... மூவர்ணக் கொடிகள் கட்டிய வண்டிகள் பார்க்கிங் ஏரியா முழுசும்.

டெல்லியில் இருந்து வெற்றிவாகை (????) சூடி வந்து இறங்குன திருநாவுக்கரசருக்காம்... போயிட்டுப் போகுது. வளாகம் முழுசும் அவுங்க பங்குக்கான பொல்யூஷன் புகையும் (வெத்துவேட்டுக்) குப்பைக் காகிதமும்!
சென்னை ரொம்பத்தான் கசமுசான்னு கிடக்கு!

பி.கு: நாலு நாளைக்கு முன்னே இங்கே நம்மூட்டுக்கு ஒரு அவசர விஸிட்டா வந்துட்டுப்போன புதுகைத் தென்றலின் ரங்ஸ், சின்னதா ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். டிக்கெட்டை ஆன்லைனில் புக் பண்ணி இருக்கக்கூடாதாம்.!

நாலாயிரம் நம்மகிட்டே இருந்து எக்ஸ்ட்ராவா அடிச்சுட்டாங்க 'இண்டிகோ'க்காரங்க(-: விமானக் கொள்ளை!

அடுத்தமுறை வேற வழி பார்க்கலாம்:-) இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு அங்கே பார்க்கவேண்டிய இடங்கள். ஹைதராபாத் நாட் பேட் அட் ஆல்.

பயணத்தில் கூடவே வந்த அனைவருக்கும் நன்றி.

( இந்த கலாட்டாவில் சிவிஆரின் கல்யாணத்தைக் கோட்டைவிட்டுட்டேன். மணமக்களுக்கு நம் ஆசிகள்)

என்றும் அன்புடன்,
துளசி.

Monday, November 23, 2009

சிலப்பதி'ஹாரம்'

நம்ம பள்ளிக்கூடத்துப் பசங்களையே ஒன்னு சேர்த்து ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பது கஷ்டம். அதிலும் வெவ்வேற பள்ளிக்கூடத்துலே இருக்கறவங்களோடு சேர்ந்து ஒரு 'மெகா' நிகழ்ச்சியைத் தயாரித்து நேத்து ( இந்த மாசம் 21 நவம்பர் 2009) நம்ம கண்முன் காமிச்சவரைக் கேட்டால்..... 'கலைமாமணி'களுக்குள்ளே ஒத்துமை இருக்குன்னு உலகுக்குக் காமிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடுன்னு சொல்றார்.

முத்து விழாவாம். முத்துன்னா எத்தனாவது வருசமுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நம்ம அடுத்த இருக்கைகளில் இருந்த பெண்'மணி'கள் இருவரிடம் விசாரித்தேன். 25ன்னா தங்கம்....... (இல்லே 22 ன்னாத்தான் தங்கமுன்னு சொல்லணும். வாய்வரை வந்ததை அடக்கிக்கிட்டேன்)ம்ம்.... இல்லீங்களே அது வெள்ளி. ஓ..... தெரியலை.....(சுத்தம்) வீட்டுக்குப்போய் கூகுளிச்சால் ஆச்சு. (ஆஹா.... முத்துன்னா முப்பதாம்)
நடன ஒத்திகையின் போது சிவாஜி ராவ் அவர்கள் எடுத்த இந்தப் படம் நாளிதழில் வந்துச்சு. அவருக்கு என் நன்றி. (காப்பிரைட் இருக்குன்னா படத்தைத் தூக்கிடலாம், பிரச்சனை இல்லை.)

கிட்டத்தட்ட மூணுமாசம் ரிஹர்ஸல். அதுக்குமுன்னே பல வருசங்களா மனசுலே ஊறவச்ச திட்டம். கண்முன்னே அந்த 'உழைப்பை' பார்த்ததும் பிரமிப்பு! வெள்ளோட்டம் போல வச்சுக்கணுமுன்னோ என்னவோ டிக்கெட் விவரம் குறிச்சு விலாவரியாச் சொல்லாம ஒரு தொலைபேசி எண் கொடுத்து தினசரியில் வந்துருந்தது. நாரதகான சபாவில்தானாம். வேறொரு நிகழ்ச்சிக்கு ( தனஞ்ஜெயன் நடனம்) போனபோது அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கலாமான்னா..... நிகழ்ச்சி நடக்கும் நாளில்தான் அங்கே டிக்கெட் விற்பனையாம். இதுக்கும் நாரதகான சபா ட்ரஸ்ட்டுக்கும் சம்பந்தமொன்னும் இல்லை(யாம்) சரி..... வரப்போகும் இசைவிழாவுக்கான நிகழ்ச்சிப் பட்டியல் ஒன்னு கொடுங்கன்னு கேட்டு வாங்கினோம். அதுக்குமே சீஸன் டிக்கெட்டுகளும், உறுப்பினர்களுக்கான டிக்கெட்டுகளும் வித்தே போயிருச்சாம். அன்னாடம் நிகழ்ச்சிக்கு 24 மணி நேரம் முந்தி கிடைக்கலாமாம்.

மதுரை முரளிதரன் சிலம்பைக் கையில் எடுத்துட்டார். போனமுறை 'ராமாயணம்' பார்த்தது முதல் இவரோட நிகழ்ச்சி எதையும் கூடியவரையில் விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சுருந்தேன். ஆறரைக்கு நிகழ்ச்சி. எங்கே டிக்கெட் இல்லாமப்போயிருமோன்னு கொஞ்சம்(?) சீக்கிரமாவே போனதுக்கு இன்னொரு பலனும் கிடைச்சதுன்னு வையுங்க. அதைப் பற்றி அப்புறம் ஒரு நாள், 'கையில் கிடைக்கட்டும்':-)

நாம் கொடுத்த காசுக்கு லபிச்சது ஏழாவது வரிசை. நம்ம எஸ். ஜானகி அம்மா வந்து முன்வரிசையில் உக்கார்ந்தாங்க. ஆறேகாலுக்கு டிவிடி ஒன்னு போட்டு வச்சாங்க. இவர் எப்படி நடனமாட வந்தார்....... கொசுவத்தி.......


தங்கை மணிமேகலையை நடனம் கத்துக்க விட்டுட்டு, வகுப்பு முடிஞ்சதும் அவுங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போனா.............. டான்ஸ் டீச்சர் ,'ஏம்ப்பா.... நீயும் தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்கீங்களே. கூடவே சேர்ந்து ஆடலாமேன்னு எப்படியோ இழுத்து விட்டுட்டாங்க. நடுத்தரக்குடும்பம். 3500 ரூபாய்க்கு பரதநாட்டிய உடைகள் என்பதெல்லாம் பிரமிப்பா இருந்த காலம். எப்படியோ சமாளிச்சு இவ்வளவு தூரம் வந்தாச்சு. 120 வர்ணங்களை 35 வகை தாளங்களில் இயற்றி இருக்கார். பொதுவா வர்ணங்களில் தலைவி மட்டுமே தலைவனுக்காக உருகி உருகி பாடும் வகைகளே (எப்போ வருவாரோ............)எக்கச்சக்கமா இருக்கு. ஆண்கள் நாட்டியமாடும்போது அதுக்கேத்த பாடல்கள் அநேகமா ஒன்னும் இல்லையேன்னுதான் இவரே வர்ணங்களை இயற்ற ஆரம்பிச்சுருக்கார்.( இன்னொரு பிரமிப்பு)

இவருடைய நடன குரு அந்தக் காலக் கலைமாமணி சாமுண்டீஸ்வரி அவர்கள். திரு. தண்டாயுதபாணிப் பிள்ளையின் மூத்த சிஷ்யை. வாய்ப்பாட்டு மதுரை சேதுராமன் அவர்களிடம். ஆடலும் பாடலும் சேர்ந்தே வந்துருக்கு!

ந்ருத்யஷேத்ரா என்ற நடனப் பள்ளியை இவரும் இவர் மனைவி நடனக்கலைஞர் சித்ரா முரளிதரன் அவர்களும் நடத்திக்கிட்டு இருக்காங்க. பள்ளிக்கூடம் இவர்கிட்டே தானா வந்தது. இவரது குருவான சாமுண்டீஸ்வரி அவர்களின் தாய் ஸ்ரீமதி சமந்தகமணி பழனியாண்டி அவர்கள் ஆரம்பிச்சது. அவர்களுக்குப் பின் சாமுண்டீஸ்வரி அவர்களின் நிர்வாகத்தில் இருந்துவந்தது. இவுங்களுக்கு வெளிநாட்டில் போய் (பிள்ளைகளுடன்???) வசிக்க வாய்ப்பு வந்ததும் பழம்நழுவிப் பாலில் விழுந்தது போல் திரு. முரளிதரனிடம் வந்துருக்கு. சரியா இது நடந்து இப்போ வருசம் முப்பது! 'முத்து விழா' ஏன்? னு இப்போ நல்லாவே புரிஞ்சுருச்சு:-))) இன்றையக் கணக்குலே 200க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவமணிகளின் இருக்கு. ஹைய்யோடா....! (இன்னொரு பிரமிப்பு)

சிறுதுளி (Little Drops) என்ற ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு இன்றைய வரும்படி முழுசும் போகுது என்பது ஒரு உபரித் தகவல். பேஷ் பேஷ்!! ( இன்னொரு பிரமிப்பு. நல்லா இருங்க திரு & திருமதி முரளிதரன் அவர்களே)

பாரம்பரியமிக்கக் கலைக்குடும்பத்துலே இருந்து, சித்ரா இவருடன் சேர்ந்து நடனமாடவந்தவங்க. முரளிதரன் குடும்பத்துக்கு இவரை ரொம்பவேப் பிடிச்சுப் போச்சுன்னு குடும்பத்துலே பிடிச்சுப் போட்டுட்டாங்க:-)))) இவுங்க மகள் காவ்யலக்ஷ்மி , இந்தச் சின்ன வயசுலேயே என்ன(ம்)மா ஆடுறாங்கன்னு உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.

எங்க நாடு உள்பட எக்கச்சக்கமான வெளிநாடுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திட்டாங்க. டான்ஸ் ட்ராமா இவுங்க ஸ்பெஷாலிட்டி.

கண்ணகியா வந்த திருமதி பார்வதி ரவி கண்டசாலாவின் ஐடியாதானாம்...இப்படி வெவ்வேற நடனப்பள்ளிகளில் பயின்றவர்களை வச்சு நிகழ்ச்சி நடத்தலாம் என்பது. (சூப்பர் ஐடியா!)

பிரபல நடனமணிகளிடம் சேதி சொன்னபோது, வரவேற்பு பலமா இருந்துருக்கு. திருமதிகள் ரேவதி ராமச்சந்திரன், ஜெயந்தி சுப்ரமண்யம், அனிதா குஹா, உமா முரளிகிருஷ்ணா, கவிதா ராமு, பத்மலக்ஷ்மி சுரேஷ் இப்படிப் பல பெரிய நடனமணிகள் அவுங்கவுங்க பள்ளிகளில் பயிலும் ஒன்னாந்தரம் ஆடக்கூடிய நடனமணிகளைச் சிபாரிசு செஞ்சதோடு சிலர் தானே முன்வந்தும் இந்த நாட்டியநாடகத்தில் பங்கேத்துக்கிட்டாங்க.
முதல் ஸீன் வழக்கம்போல் பிரமிப்பு. ஞாயிறு போற்றுதும் திங்க:ள் போற்றுதும்..... 13 நடனமணிகள். திறந்தவாயை மூடலை நான்.



மாசறு பொன்னே வலம்புரி முத்தே.... என்றுக் கொஞ்சிக் குலவி கோவலனும் கண்ணகியும் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். (நாட்டிய நாடகமுன்னா எல்லோரும் ஆடிக்கிட்டேதான் இருப்பாங்க. ) அடுத்ததாக கோவலன், மனைவியை 'ஷாப்பிங்' கூட்டிக்கிட்டுப் போறார். கடைத்தெரு! பூக்கடை, அணிமணிகள் கடைகள் இருக்கு. சாமி ஊர்வலம் வருது.
சோழன் அரசவையில் மாதவியின் நடனம்


நாட்டியத்தில் சிறந்தவர்களுக்காக ஒரு போட்டி அறிவிப்பு ஒன்னு அரச சேவகர்களால் விளம்பரப்படுத்தப்படுது. மாதவி வந்து நாட்டியம் ஆடுறாங்க. கோவலன் அரசரைப் பார்க்க வருகிறான். ராஜாவுடன் நல்ல நட்பு போல. தோள் அணைத்து வரவேற்ற அரசருடன்( இது என்னப்பா? கைஸே பாய் ஸாஹப்ன்னு கேக்குறாப்போல! அரசன் என்னதான் நண்பனா இருந்தாலும் ஓரடி விலகி இருக்க வேணாமோ? ) இருந்து நாட்டியம் பார்க்கிறார். (தற்காலத்து சபாவிலே நடப்பதுபோல! அக்கம்பக்கத்து மக்கள் கொஞ்சநேரம் சும்மா இருந்துட்டாலும்...) அரசருடன் உரையாடிக்கொண்டே நடனத்தைப் பார்க்கிறான். மாதவிக்கு அன்பளிப்பாக ரத்தினமாலை ஒன்றையும், சிறந்த நடனமணி என்று அறிவித்து 'தலைக்கோல்' என்ற பட்டத்தையும் அரசர் அளிக்கிறார். இதெல்லாம் ஒரு கதை சொல்லியின் மூலம் அறிவிக்கப்படுகிறது.


ராஜா கொடுத்த ரத்தினஹாரத்தை வீட்டுலே வச்சுக்கப்படாதோ? அதை நல்ல விலைக்கு விற்கும்படி தோழியிடம் கொடுத்தனுப்ப அதோட விலையைக் கேட்டு ஆட்கள் மயங்கியே விழுந்துடறாங்க. கோவலன் வருகிறான். இடுப்பில் இருக்கும் பொன்முடிப்பை எடுத்துக்கொடுத்து மாலையை வாங்குகிறான். தோழி நல்ல விவரமுள்ள காரிகை. காசு சரியா இருக்கான்னு எண்ணி வாங்குகிறாள்:-) மாலை கை மாறுகிறது.

வீட்டுக்குக் கொண்டுவந்து மாலையை மனைவிக்கு அணிவித்து அழகு பார்க்கிறான்னு இத்தோட ஸ்டாப் ஆகி இருக்க வேண்டிய கதை.!
ஆனால் எல்லாம் விதியின் கையில்...... ஊழ்வினை(-:

மாதவி வீட்டுக்குப் போகிறான். மையல் கொண்டான். அவளுடனே 'குடும்பம் நடத்திக் குழந்தையும் பெற்றுக்கொள்கிறான். இதுலேகூட ஒரு நியாயம் இருக்கு பாருங்க. அங்கேயும் இங்கேயுமா 'ஆத்துலே ஒரு கால் சேத்துலே ஒரு காலுன்னு' ரெட்டை வாழ்க்கை வாழாம போன இடத்துலேயே தங்கிடறான். குழந்தைக்கு மணிமேகலை என்று பெயரிட்டுக் கொஞ்சி மகிழ்ந்து இருக்காங்க.

இந்திர விழா வருது. ஆட்டமான ஆட்டம். கோவலன், தனக்கு இன்னொரு பெண்மேல் மையல் வந்ததாக ஒரு பாடல் பாட, மாதவியும் இன்னொரு ஆடவன் தன்னை விரும்புவதாகப் பாடுகிறாள். அது நாந்தானா? ன்னு இவன் கேட்க, இவளும் விளையாட்டாக இல்லை என்று தலை ஆட்ட.......விளையாட்டு வினையாகிறது.. ஆஹா.... என்ன இருந்தாலும் 'பரத்தை' இப்படித்தான் இருப்பாள் என்று அவளைவிட்டுப் பிரிந்து 'பத்தினி' வீட்டுக்குத் திரும்ப வர்றான்.

(இங்கே கூட எதாவது நம் சொந்தக் கருத்துச் சொல்லணுமுன்னு கை துருதுருங்குது. கண்ணகி இடத்தில் நானிருந்தால் நடப்பதே வேற...அடக்கி வாசிக்கலாம்..... என்ன ஒன்னு...சிலை இருந்துருக்காது)

கண்ணகி துயரத்தால் வாடி இருக்காங்க. தோழி ஆறுதல் சொல்லித் தேற்றுகிறாள். உன் நல்ல மனசுக்கு இன்னும் கெடுதலா ஒன்னும் வராது. கட்டாயம் உன் கணவன் திரும்பி வரத்தான் போகிறான்' இப்படி..................

தோ.....வந்தாச்சு.

எல்லாப் பொருளும்தான் மாதவியோடு போச்சே................. வேறெங்காவது போய்ப் பொழைச்சுக்கலாமுன்னு மதுரைக்குக் கிளம்புறாங்க. வழியில் கவுந்தி அடிகளைச் சந்திக்கிறாங்க. அவுங்க ரெண்டுபேருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றி, வழித்துணையாப் போறாங்க. மதுரை நகருக்கு வெளியே இடையர் குடில். மாதரியும் அவள் மகள் ஐயையும் இருக்காங்க. தம்பதிகளை அவர்களிடம் ஒப்படைக்கிறார் கவுந்தி அடிகள்.

மறுநாள் கண்ணகியின் காற்சிலம்பொன்றை எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குள் போகிறான் கோவலன். இது இப்படி இருக்க.....மதுரை ஆளும் பாண்டியனும் கோப்பெருந்தேவியும் ஆடிப்பாடிக் கொண்டு (!!) இருக்கிறார்கள். அரண்மனையில் அரசியின் நகைகளைப் பொற்கொல்லன் ஒருவன் களவாடி விட்டான்.. நகைகள் திருட்டுப்போன விஷயம் மட்டுமே தெரிந்த அரசன் கோபத்தால் குமுறுகின்றான்.

கோவலன் பொற்கொல்லனைச் சந்தித்ததும், தன்னிடம் உள்ள காற்சிலம்பு ஒன்றை விற்றுத்தர வேண்டுகின்றான். , அரசியின் காற்சிலம்பு போன்ற அதே வேலைப்பாட்டுடன் இருந்த பொற்சிலம்பைக் கண்டதும் தன் களவை மறைக்கும் எண்ணத்துடன் அரசனை அணுகி அந்தக் காற்சிலம்பைக் காண்பித்து, அரசியின் நகைகளைத் திருடிய கள்வனைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்ல, உண்மைதானா என்று ஆராய்ந்து பார்க்காத பாண்டியன் கோவலனைச் சிரச்சேதம் செய்துவிடுகின்றான். (அச்சச்சோ....கதை போகும் வேகத்தில் நடையை மாத்திப்புட்டேனே............)

சேதி கேட்ட கண்ணகி அழுது புலம்பிக்கிட்டே....'தன் கணவன் கள்வனா என்று தேம்பி அழறாள். வானத்தில் இருந்து அசரீரி ஒலிக்குது 'இல்லை இல்லை'ன்னு. நீதி கேட்டு பாண்டியன் சபைக்கு வர்றாள். (இப்போதைய நீதி மன்றமா இருந்தா.............. ஒரு நாப்பது ஐம்பது வருசங்களாகும் கேஸ் விசாரணைக்கு வர). அரசியின் சிலம்பு முத்துப் பரல் என்று தெரிகிறது. தன்னுடையது மாணிக்கக் கற்கள் என்று கூறி சிலம்பை ஓங்கித் தரையில் வீசி உடைக்கிறாள்.

தவறுணர்ந்த பாண்டியன், மனம்தாங்காமல் மாரடைப்பில் மரணமடைந்தான். மதுரை நகரம் பற்றி எரிகிறது. தனியே நிற்கும் கண்ணகியைக் கோவலன் தேவருடன் வந்து அழைத்துப்போகிறான்.

மொத்தம் முப்பது பேர். முரளிதரன் அவர்களின் மனைவி சித்ரா, பாண்டியன் வேடத்தில் வந்து ஒரு கலக்குக் கலக்கிட்டார். நிகழ்ச்சிக்கு நடுவில் முன்வரிசையில் லேசான சலசலப்பு. கடைசியில்தான் தெரிஞ்சது மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வந்துருக்கார். இவருடன் மேடை ஏறியவர்கள் அவ்வை நடராஜன், சாரதா நம்பி ஆரூரான், பெயர் தெரியாத இன்னொரு பெண்மணி.

பொற்கொல்லராகவும் யானையாகவும் ஒருத்தரே வந்தார். யானை அசைஞ்சு அசைஞ்சு ஆடி வந்தது சூப்பர். பொற்கொல்லன் பாகத்தில் முக பாவம் அதி சூப்பர்.

அனைவருக்கும் பொன்னாடைகள் மாலை மரியாதைகள் நடந்துச்சு. நம்ம முரளிதரன் வழக்கமாத் தலையை மொட்டையாகவே வச்சிருப்பதைத்தான் பார்த்துருக்கேன். அவர்தான் கோவலனாக வந்தவர். விக் 'Wig' வைச்சவுடன் அவர் வயசுலே 30 'டான்'ன்னு குறைஞ்சு போச்சு. அதுவும் மனிதருக்கு உடம்பு படு ட்ரிம்மாக இருப்பதால் அட்டகாசமா இருக்கார். நாட்டியம் அருமை. அசுர உழைப்பு. ஒவ்வொரு பகுதியிலும் தெரிகிறது. பலவருஷப் பயிற்சியின் விளைவு........

பத்து வருசமாக மனசுலே வச்சு அதுக்கான முயற்சிகளை இடைவிடாமச் செஞ்சு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இந்த சிலப்பதிகாரத்தை எந்நாட்டவரும் புரிந்து கொள்ளும் வகையில் நம் கண்முன்னே கொண்டு நிறுத்துன ஸ்ரீ முரளிதரன் அவர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் நன்றி என்ற ஹாரத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

ஜானகி அம்மாவை மேடைக்கு அழைத்துப் பொன்னாடை மாலை மரியாதைகள் நடந்துச்சு. மருமகளின் நடனத்தை ரொம்பவே ரசிச்சுப் பார்த்தாங்க. மாதவிதான் இவுங்க மருமகள்! உமா முரளிகிருஷ்ணா)


பி.கு: 1: கதையின் போக்குக் கருதியே கோவலனை 'ன்' என்றே குறிப்பிட்டு வந்துள்ளேன். இது கோவலன் என்ற கதா பாத்திரத்துக்கு மட்டுமே. கோவலர், கோவலர் ன்னு சொன்னால் கேட்கவேக் கொஞ்சம் கேவலமா இருக்கேப்பா

2: பதிவின் நீளம் கருதி ( என்ன செய்யறது....நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட மூணுமணிநேரம் நடந்துச்சே) படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். பார்த்துக்குங்க.

Saturday, November 21, 2009

வாங்கலாம்.... வாங்களேன்

கண் முழிக்கும்போதே மனசு பரபரன்னு இருக்கு. இன்னிக்கு 'லேடீஸ் டே அவுட்'. இவருக்கு வேலை சம்பந்தமான ஒரு 'வேலை' இருக்காம். நவீன்கிட்டே ஏற்பாடு செஞ்சாச்சு...இவரை 'அங்கே' கொண்டுபோய் விட்டுட்டு வந்து 'எங்களை' பிக் பண்ணிக்கணும்.

காலையின் வேலைக்குப் போகும் வழியில் தென்றலின் ரங்ஸ்க்கு ஒரு கடமை இருக்கு. தங்க்ஸைக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கணும். எல்லாம் சொன்னது சொன்னபடிக்கு!

'ச்சலோ சார்மினார்' னு புறப்பட்டோம். வளையல் யாவாரம் பரபரப்பா நடக்கும் இடம். புதுகைத் தென்றலுடன் உல்லாசமாய்ப் பேசிக்கிட்டே அவுங்களுக்குத் தெரிஞ்ச கடைகளுக்குப் போனோம். கண்ணாடி வளையல்கள் கலர்கலரா ஜொலிக்குது. எதை வாங்க எதை விட?


சார்மினார்

ஹைதையில் பரபரப்பே இல்லாம ஒரு 'ஸப் ச்சல்த்தா ஹை'ன்னு கொஞ்சம் சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை போல! கடைகள் கண் திறக்கவே காலை பதினொரு மணி ஆகிருது. மகளுக்கும், இன்னொரு தோழிக்குமாகக் கொஞ்சம் வளையல்கள் வாங்கிக்கிட்டோம். எனக்குன்னு வாங்கிக்கலை. கண்ணாடி வளையல்கள் ஆசை மனசை விட்டுப்போய் பல வருஷங்கள் ஆகியிருந்துச்சு.( இதுக்குப்பின்னே ஒரு கதை இருக்கு. அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறில்' சொல்வேன்) நாம் சிலுப்பும் சிலுப்புக்குன்னு ஒரு மோர் மத்து வாங்கினேன். கடைஞ்சுறமாட்டேனா இனி:-))))
அங்கே இங்கேன்னு கொஞ்சம் க்ளிக்கினேன். 'பளிச்'ன்னு தேங்காய்ச் சில்லுகளை அழகா அடுக்கி வச்சுருக்கார் வண்டிக்காரர். மீந்து போச்சுன்னா என்ன செய்வார்? பக்கத்துலேயே ஒரு டப்பாவில் தேங்காய் மிட்டாய் இருப்பதைப் பார்த்து வச்சுக்குங்க:-)))) பச்சைப் பசேலுன்னு கீரைகள், காய்கறிகள், குண்டுகுண்டாக் கொய்யாப் பழங்கள், திருவிழாவில் பொரிகடலைக் குவியல்போல கூடைகளில் குவிச்சுவச்சுருக்கும் வளையல்கள் இப்படி. ஒரு இடத்துலே ஏதோ கிழங்கு, சின்ன வவ்வால்களை அடுக்கிவச்ச மாதிரி ஒன்னு வயலெட் நிறத்துலே இருக்குது. என்னவோ பெயர் சொன்னார் விற்பனைப் பையர். மனசுலே பெயர் தங்கலை(-:


குட்டி வவ்வால்?



முத்து பவழம் விற்கும் ஒரு கடையில் ரெகுலர் கஸ்டமராம் நம்ம தென்றல்! பவழச் சரங்கள் விலை சல்லிசாத்தான் இருக்கு. சின்னதா 100 பவழம் இருக்கும் சரம் 330 ரூபாய்தானாம். தய்வானில் இருந்து வருதாம். மகளுக்கு ஒரு கழுத்தணி வாங்கினேன். கடைகண்ணிகள் ரொம்பத் தாமதமாத் திறப்பதால் வியாபாரம் மாலை நேரங்களில்தான் சூடு பிடிக்குமாம். அதுவும் ரம்ஜான் காலங்களில் இரவு 12 வரை கடைகள் திறந்துருக்குமாம்.
மணி ஒன்னு ஆகப்போகுது. தென்றலின் செல்வங்கள் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துருவாங்கன்னு ஷாப்பிங்கை அ(த்)தோடு அப்படியே முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்து கோபாலையும் கூப்புட்டுக்கிட்டுப் பகலுணவுக்கு ஓடுனோம்.

வேலை முடிஞ்சு டாக்ஸியில் அறைக்கு வந்தவர் இணையத் தொடர்பு கிடைக்கலையே அதோட மாரடிச்சுக்கிட்டு இருந்துருக்கார். மூணுநாளா இதே கதிதாங்க. ஹொட்டேல் ரிஸப்ஷனில் நிறைய தடவை புகார் செஞ்சாச்சு. கம்ப்யூட்டர் ஆளு வந்தவுடன் அறைக்கு அனுப்பறோமுன்னு சொல்லிக்கிட்டேக் காலத்தை ஓட்டிட்டாங்க. கடைசியில் பார்த்தா...... நெட் கனெக்ஷனுக்குன்னே அங்கே மேசையடியில் ஒரு ஸ்விட்ச் இருக்காம். அது பவர் போனதும் நின்னுருமாம். பவர் வந்ததும் அதை மீண்டும் தட்டிவிட்டாத்தான் அறைகளில் இணையத்தொடர்பு கிடைக்குமாம். கவனமா மறந்துட்டாங்களாம். தட்டாம விட்டதுதான் தப்பாப் போயிருச்சு.

போதுண்டா சாமி......

சிக்கந்தராபாத் போய், தென்றலுக்கு ஆகிவந்த ஒரு உணவகத்துலே பகலுணவு ஆச்சு. 'தாலி' மீல்.:-))))) பிள்ளைகள் வந்துருப்பாங்களேன்னு அடிச்சுப்பிடிச்சு ஓடுனோம். ஆஷிஷ் & அம்ருதா ரொம்ப சமர்த்தா சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஸ்நாக்ஸ் மட்டும் சமையலில் சேராதா என்ன? கொஞ்சநேரம் அவுங்களோடு இருந்துட்டுப் பிரியாவிடை பெற்றோம்.
ஸ்நாக்ஸ் சமையல்!

ஹுஸைன்சாகரில் கால்கடுக்க நிற்கும் புத்தரை இதுவரைப் படம் எடுக்கலை. சரியான கோணம் (வண்டியில் போகும்போதே எடுக்கலாமுன்னா) அமையலை. இந்த ஏரியில் இருந்து அடிக்கடி மூக்கைப் பொத்திக்கும் மணம் ஒன்னு வீசுது. நாம் போன நாட்களில் இது...... ஐயோ.... படகு ஒன்னு புத்தர் காலடி வரை கொண்டு போகுதாம். மூச்சு இருந்தாத்தானே 'நடந்ததை' எழுதமுடியும்? வேண்டாத ரிஸ்க் வேணாம்.....

ராமதாஸு



பனி மூட்டமா? மசமசன்னு நிக்கிறாரே புத்தர்!

தியாகையர்

ஏரிக்கரைச் சாலையில் ஒரு ரவுண்டு போனோம். மெரினாவுக்கும் இதுக்கும் ஒத்துமை நிறைய. சிலைகளான சிலைகள். 33 இருக்காம். சாம்பிளுக்காக இதோ ரெண்டு. 'சீதைக்கு மடிமேல் இடம் கொடுத்த ஸ்ரீராமன், லக்ஷ்மணனோடு இருக்கும் தியாகைய்யர், பக்த ராமதாஸ் (பித்தன் வாக்கு, கவனிக்கவும்) விவேகானந்தர் இப்படி சிலரைப் புடிச்சுக்கிட்டு லும்பினி பார்க் வழியாப் போனப்ப..... 'லேபாக்ஷி' னு கண்ணுலே பட்டது. கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சி & விற்பனை. வாசலில் டெர்ரக்கோட்டா பொருட்கள் குவிஞ்சு கிடக்கு. ஒன்னொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. நானும் (கெமெரா கண்ணில்) அள்ளிக்கிட்டேன்.

கத்வால் புடவையாம். புடவையை விட அதைச் சுருட்டி வச்சுருக்கும் விதம்? பரோட்டாவுக்கு மாவை நீளமா உருட்டுவோம் பாருங்க. அதைப்போல அந்த ஆறுகஜத்தையும் உருட்டி, பாம்பாட்டம் வச்சுருக்காங்க. அஞ்சடி நீளப் பாம்பு!
போச்சம்பள்ளி, வெங்கடகிரி இப்படி எல்லா ஊர்ப் புடவைகளும் தனித்தனி ஸ்டால்களில். பாவம்........ஆண்கள்ன்னு ஒரு கதர் ஷர்ட்(ரெடிமேட்) ஸ்டால். சின்னதாக் கொஞ்சமா ஒரு ஷாப்பிங் நமக்கு. விலை கொஞ்சம் மலிவ்வாத்தான் இருக்கு நம்ம சென்னையைவிட. அதுக்காக..... வாரிக்கிட்டு வரமுடியுதா என்ன?
தென்றலோடு போகும் வழியில் அங்கே ஹைதையில் இருக்கும் ஏராளமான மேம்பாலங்கள் ஒன்றின் சமீபம் அழகான கோவில் ஒன்னு கண்ணில் பட்டது. நவீனிடம் சொல்லி அங்கே போனோம். கோபுரவாசலுக்கு நேர் எதிரா பிள்ளையார். அவருக்கு இடப்பக்கம் தனிச்சந்நிதியா ரெண்டு மனைவிகளுடன் முருகன், அவருக்கு இடப்பக்கம் உமா மகேஸ்வரன்(லிங்க ரூபம்) அடுத்த சந்நிதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இப்படி தனித்தனியா ஒவ்வொன்னும் ஒரே திசையைப் பார்த்து! சிவலிங்கத்துக்கு எதிர்ப்புறம் பெருசா ஒரு நந்தி. அதுக்குப் பின்னால் ஒரு கொடி மரம். அதுகுப் பின்னால் தெற்கே பார்த்தமாதிரி ஒரு ஹனுமன். அஞ்சு அடி இருக்கலாம். சிவந்த மூக்குடன் சேவை சாதிக்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் நவகிரக சந்நிதி.

எல்லா சந்நிதிகளிலும் ஒவ்வொரு குருக்கள் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தமும் சடாரியும் தர்றாங்க. எனக்கு ஆச்சரியமாப் போச்சு. பெருமாள் கோவிலுக்கே உரிய இந்தச் சடங்குகள் இங்கே..... எப்படி? அதிலும் நவகிரக சந்நிதிக்கும் தீர்த்தமும் சடாரியுமுன்னா...... பேஷ் பேஷ்!

கொடிமரத்தின் பக்கத்தில் கொஞ்சநேரம் உக்கார்ந்தோம். கண் எதிரில் ஒரு அறிவிப்பு எழுதி வச்சுருக்கு. இடது பக்கம் முக்கால்வாசி தெலுங்கிலும் வலப்பக்கம் ஆங்கிலத்திலும். கண்ணால் மேய்ஞ்சேன். ஒரே ஜிலேபி. ஊஹூம்..... வேலைக்காகாது. ******* ரூபாய் மட்டும் புரியுது. ஆங்கிலத்தில் அதே விஷயம். அப்பாடா..... இந்த ஆறு சந்நிதிக்கும் மேலே இருக்கும் கோபுரங்களுக்குத் தங்கக் கவசம் போர்த்தணுமாம். ******* செலவாகும். இதுக்குக் கொடுக்கறவங்க கொடுங்க.

ஆமாம்....இந்தக் கோவிலுக்குப் பெயர் என்ன? அறிவிப்பின் தலைப்பிலே ஜிலேபி. எழுத்துக்கூட்டிப் படிக்க 'முயற்சி' செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஸ்ரீ தெரியுது. பாக்கி? படிக்கத் தெரியாததுக்கு வாழ்க்கையில் முதல்முறையா நொந்துக்கிட்டு, மறுபடி வீட்டில் இருக்கும் ஃபைல்களில் கவனம் செலுத்தணுமுன்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டேன்.

அப்பப் பார்த்து ஒரு பெண்மணி கொடிக்கம்பம் அருகில் வந்து நிக்கறாங்க. ஒரே நொடி.. மானம் அவமானம் பார்த்தா வேலைக்காகாது......

" ஏமண்டி.... நா(க்)கு ச்சதுவேதானிகி (அந்தகா) ராது. அக்கட ஏமி ராஸியுந்தி?"
என்னை ஏற இறங்க (இரக்கமா ) ஒரு பார்வை பார்த்துட்டு 'ஸ்ரீ ஸ்ரிங்கேரி ஷாரதா பீடம் ஸ்ரீ சித்திவிநாயகா தேவஸ்தானம்'.

ஆஹா......

ரெண்டு எட்டு எடுத்து உள்ளே போனவங்க மறுபடி எங்ககிட்டே வந்தாங்க. அப்பத்தான் முகத்தைக் கவனிக்கிறேன். மனசு முழுசும் சந்தோஷம் பொங்கித் தளும்பி முகத்தில் வந்து நிக்குது. அச்சச்சோ.... எனக்குப் படிக்கத் தெரியலைன்னா அதுக்கு இவ்வளோ சந்தோஷப்படுவானேன்?

(பதிவர் நலம் கருதி நடந்த உரையாடலைத் தமிழில் கொடுத்துருக்கேன்)

எங்கே இருந்து வந்துருக்கீங்க? இங்கே சொந்தக்காரர்கள் இருக்காங்களா?

சென்னையில் இருந்து. (பதிவர் குடும்பத்தைப் பத்தி என்னன்னு விளக்குவது?) முதல்முறையா இங்கே வந்துருக்கோம்.

இந்தக் கோயிலைப் பார்க்கவா?

ஊரைச் சுத்திப் பார்க்கலாமுன்னுதான்.

எங்கே தங்கி இருக்கீங்க?

ஹொட்டேலில்தான்.

என்னென்ன பார்த்தீங்க?

அட ராமா..... சார்மினார் கோல்கொண்டா, ம்யூஸியம் எல்லாம் ஆச்சு.

எனக்கு ரெண்டு பசங்க. உங்களுக்கு?

ஒரு பொண்ணு.

ரெண்டு பையன்களில் பெரியவன், அவுங்க அப்பாகூடவே இங்கே பிஸினஸ் பார்த்துக்கறான். ரெண்டாவது பையன் அமெரிக்காவிலே. நாளன்னைக்கு வரான். இப்பதான் கொஞ்ச நேரமுன்னே ஃபோன் செஞ்சு சொன்னான்.

ஆஹா.... அப்படிப்போகுதா சேதி..... மகன் வரும் நல்ல சேதியைப் பகிர்ந்துக்கச் சாமியைத்தேடி வந்துருக்காங்க!

இன்னிக்கு 'ஆண்டியையும் அங்கிளையும்' இங்கே பார்க்கணுமுன்னே அந்த ஆண்டவன் என்னைக் கோவிலுக்கு வரவழைச்சுருக்கான், பாருங்க ஆண்ட்டி.'

தாயாரும் பெருமாளுமா வந்துட்டோம் போல! உங்க பெயர் என்னங்க?

புண்ணீயவதி.

ஆஹா....ரொம்பப் புண்ணியம் பண்ணவங்கதான். என் பெயர் துளசி.

நான் தினமும் துளசி பூஜை பண்ணுவேன் 'ஆண்ட்டி'.

அந்தப் புண்ணியம்தான் துளசியை நேரில் பார்த்துட்டீங்க. சாமிக்கு ஒரு எக்ஸ்ட்ரா நமஸ்காரம் பண்ணிக்குங்க. அப்புறம் பார்க்கலாம். வரட்டா?

இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் இருந்துருந்தா வீட்டுக்கேக் கூப்புட்டுட்டு போயிருப்பாங்க போல. முன்பின் அறிமுகம் இல்லாத ஆட்களிடம் எப்படி ரெண்டே நிமிசத்தில் குடும்ப விஷயம் எல்லாம் பகிர்ந்துக்கத் தோணுது? ஒருவேளை...வெளியூர்க்காரரா இருப்பதே ஒரு இணக்கத்தைத் தந்து அணுக வைக்குதோ?

மனிதமனமே விசித்திரங்கள் நிறைஞ்சது. சிலரைப் பார்த்தவுடனே மனசுக்கு வெறுப்பும், சிலரிடம் அன்பும், சிலரிடம் மரியாதையுமா என்னென்னவோ தோணிப்போகுது. இத்தனைக்கும் அவுங்களை நம்ம வாழ்வில் முதல்முறையாச் சந்திச்சு இருப்போம்!

அறைக்கு வந்து மூட்டை கட்டும் சமாச்சாரங்களை முடிச்சுட்டு காலையில் எழுப்பறதுக்கு ஒரு அலார்ம் கால் புக் பண்ணினோம். க்வாட்டர் டு ஸிக்ஸ்.
அஞ்சே முக்கால்ன்னும் ஒருதடவை அழுத்திச் சொல்லியாச்சு.

ஒம்பொது நாற்பதுக்கு ப்ளைட்.அப்படியே பின்னாலே கணக்குப் போட்டுக்கிட்டே போனால் ஏழரைக்குக் கிளம்புனாச் சரியா இருக்கும்................
(ஃப்ரேமுக்குள்ளே அடங்கமாட்டேன்னா எப்படி?)

தொடரும்....:-)

Friday, November 20, 2009

கொல்ல கொண்டா

ஆடுமாடு மேய்ப்பர்கள் இருக்கும் மலை. இப்படித்தான் தெலுங்கில் இதுக்குப் பொருள். கதையும் அப்படித்தான் போகுது. காகதீயமன்னர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலக் கட்டம். 1143 வது ஆண்டு. ராஜா ப்ரதாப் ருத்ரதேவ் என்ற அரசர் இந்தக் கருங்கல் மலைக்கருகே ஒரு மேய்ப்பனைச் சந்திக்கிறார். மலையின்மேல் ஒரு கோட்டை கட்டுனா நல்லா இருக்குமுன்னு பேச்சுவாக்கில் அவன் சொல்ல, அட! ஐடியா நல்லா இருக்கேன்னு ராஜா ஒரு குச்சா (கோட்டைன்னு சொல்ல முடியாது) கட்டுனாராம். ( இடையர் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதன்படி 'நடக்க முயற்சிப்பது' நமக்குப் புதுசா,என்ன?) இது சின்ன அமைப்பாக இருந்துருக்கணும். கொல்ல கொண்டா என்ற பெயர் காலம் போகப்போக மருவி இந்த இடத்துக்கே கோல்கொண்டான்னு நிலைச்சுருச்சு. ஆச்சு ஒரு 220 வருசம். ராஜா க்ருஷ்ண தேவ் ஆட்சி. இவுங்க தலைநகரம் வாராங்கல். இம்மாந்தூரம் வந்து கோட்டையை(?!) கவனிச்சுக்க முடியலைன்னு பாமினி ராஜ்ஜியத்துக்காரரான மொகம்மது ஷா என்பவருக்கு கொடுத்துட்டாராம். அவர் இதுக்கு ' மொகம்மது நகர்'ன்னு பெயர் வச்சுட்டார். அரசாங்க ஆவணங்களில் இந்த விவரம் பதிஞ்சது இப்பவும் இருக்காம்!

இது நடந்தது 1363. அப்ப இருந்து ஒரு 155 வருசம் பாமினி ராஜாங்கத்துக்கிட்டேதான் பொறுப்பு இருந்துருக்கு. அந்த பாமினி ராஜ்ஜியத்தில் அஞ்சு சுபேதார்கள், அரசருக்கு வேலை செஞ்சுருக்காங்க. அரசு ஆட்டம் கண்டதும் இந்த ஐவரும் தனித்தனியாச் சுயேச்சையா நாட்டின் வெவ்வேற பகுதிகளில் செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க. சுல்தான் க்யூலி (Sultan Quli) என்றவர் இந்த கோல்கொண்டா என்னும் மொஹம்மது நகர் பகுதியை எடுத்துக்கிட்டு (Qutub Shahi Dynasty )அவருடைய காலத்துக்குப் பின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரன் இப்படி ஏழு தலைமுறையா ஆட்சி செஞ்சாங்க. (இந்த ஏழுபேரின் சமாதிகளைத்தான் போன இடுகையில் பார்த்தோம்) அரசாண்ட காலக் கட்டம் 1518 முதல் 1687 வரை. முதல் மூணு தலைமுறைகளில்தான் கொஞ்சம்கொஞ்சமா இந்தக் கோட்டையை விரிவுபடுத்தி இப்போ நாம் பார்க்கும் நிலைக்குக் கொண்டுவந்துருக்காங்க. இதுக்கே 62 வருசம் ஆகி இருக்கு. (பாரசீகத்தில் பிறந்த இந்த க்யூலி, குதிரை வியாபாரம் செய்ய, பாமினி ராஜ்ஜியத்தில் அரசாங்க வேலையில் இருந்த மாமா வீட்டுக்கு வந்தவராம். ஏழு தலைமுறையா இங்கே நிலைச்சுட்டாங்க )

அதானே.... கருங்கல் மலையை வெட்டி அதுலே இருந்த எடுத்தக் கற்களாலேயே இத்தவை பெரிய கோட்டையைக் கட்டுறதுன்னா லேசுப்பட்டக் காரியமா? நவீன ரக மெஷீன்கள் எல்லாம் இல்லாத ஒரு காலத்தை மனக்கண்ணில் பார்த்துக்குங்க! ஒரே 'உளியின் ஓசை'யாத்தான் இருந்துருக்கும்!

நாலாவது தலைமுறை, பட்டத்துக்கு வந்த ஏழாவது வருசத்தில்(1587) கட்டுனதுதான் பாக்யநகர்.(இப்போதைய ஹைதராபாத்) புது நகர் கட்டுனதும் குதூப் சாஹி வம்சம் ஆண்ட காலம் முழுசும் பாக்யநகர்தான் தலைநகர். இவுங்க ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது அரசர் ஔரங்கசீப் படையெடுப்பினால். இவர் ரெண்டு முறை இந்தக் கோட்டைக்குப் படை எடுத்துருக்கார். முதல்முறை வந்தப்ப இவர் இளவரசர்தான். வயசு அப்போ 37. சண்டையில் ஜெயிப்பு. ஆனா அப்போ ஆட்சியில் இருந்த குதூப் ஷாஹி அரசர் சமரச உடன்படிக்கை செஞ்சுக்கிட்டு தன்னுடைய மகளை ஔரங்கசீப்பின் மகனுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டார். ( சரித்திரத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அரச வம்சத்துப் பெண்கள் பகடைக்காயாத்தான் உருட்டிவிடப்பட்டுருக்காங்க.) சம்பந்தி ஆனதுக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு கோட்டையை விட்டுட்டுத் திரும்பிப் போயிட்டார். அரச பதவிக்காக நிறையக் கொடுமைகள் செஞ்சு (அதெல்லாம் பெரிய கதை. அந்தக் கடலுக்குள்ளே பின்னொருநாள் மூழ்கலாம்) தன்னுடைய 47 வது வயசுலே(1658) அரசராகப் பட்டம் சூட்டிக்கிட்டார் ஔரங்கசீப்.
கோட்டைக் கொத்தளம்

பழைய தோல்வி மனசுலே அப்படியே பதிஞ்சுகிடந்துருக்கும் போல. பழிவாங்கணுமுன்னு தோணிப்போயிருக்கும்( நாவல் எழுத சரியான களம். நம்ம பதிவர்கள் யாராவது எழுதலாம்). 32 வருசம் கழிச்சு, 1687லே (69 வயசு) ரெண்டாவது முறையா படை எடுப்பு. இதுக்குள்ளே இங்கேயும் கோட்டைப் பாதுகாப்பை நல்லாவே பலப்படுத்தி இருக்காங்க. முற்றுகை எட்டுமாசம் தொடர்ந்தது. இந்த எட்டு மாசக் காலத்துலே சாமி கும்பிட இடம் வேணுமுன்னுதான் 'பேகம் ஹயட் பக்ஷி' சமாதிக்குப் பக்கத்துலே சின்னதா ஒரு மசூதி தனக்குமட்டுமேன்னு கட்டிக்கிட்டார். இந்த இடத்தை அவர் குறிப்பாத் தேர்ந்தெடுத்ததுக்கும் ஒரு காரணம் சொல்றாங்க. இந்த பேகம்தான் முதல் படையெடுப்பில் 'அந்த' சமரச ஐடியா கொடுத்தவுங்களாம்.

ரெண்டாவது முறையும் இந்தக் கோட்டையைப் பிடிக்கமுடியாமல்தான் திரும்பிப் போயிருக்கணும். ஆனா.....கூட இருந்தே குழி பறிக்கும் துரோகம் எக்காலத்துக்கும் பொது இல்லையா? அரசரின் 'தளபதி'களில் கோட்டையின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பானவரா இருந்த ஒருத்தர், நடு இரவில் கிழக்கு வாசலைத் திறந்து எதிரிப்படை உள்ளே நுழைய உதவி செஞ்சுட்டார். துரோகம் வென்றது(-: இது 1687வது வருசம்.

கடைசியில் அரசரைச் சிறைப்பிடிச்சு தௌலதாபாத் கோட்டைச் சிறையில் அடைச்சுட்டாங்க. 14 வருசம் அங்கே கிடந்துக் கடைசியில் மேலே போய்ச் சேர்ந்துட்டார் ஷாஹி வம்சத்தின் கடைசி அரசர். (Abdu Hasan Tana shahi)

ஔரங்கசீப் ( ஐயோ இதென்ன சீப் சீப்புன்னு சீப்பாக் கிடக்கு) இந்த ஔரங்கசீப்ன்னு நம்ம சரித்திரப் புத்தகங்களில் படிச்ச நினைவு மனசுலே பதிஞ்சு போனதால் இப்படியே எழுதவேண்டியாகிருது. Aurangzeb என்ற பெயரை நல்லாத்தான் தமிழ்ப் 'படுத்தி' இருக்கோம். கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் வேற்று நாட்டு மக்களின், இடங்களின் பெயர்களையெல்லாம் அப்போ இருந்த தமிழறிஞர்கள்தான் இப்படி எழுதணும், இப்படிச் சொல்லணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்களா இல்லை..... அரசாங்க து(வி)பாஷிகள் வேலையான்னு தெரியலை.

ஜெயிச்சுக் கோட்டையைப் பிடிச்சுட்டாலும் தானே இங்கே இருந்து அரசாள முடியுமா? டெல்லி வேலையெல்லாம் பின்னே யார் பார்ப்பது? தனக்குப் பிரதிநிதியா ஒருந்தரை கவர்னரா நியமிச்சுட்டுப்போனார் ஔரங்கசீப். இவர்தான் ருஸ்தும் தில் கான். 23 வருசம் ஹைதையின் பொறுப்பாளர். ஔரங்கசீப் மரணத்துக்குப் பின் பட்டத்துக்கு வந்த சீப்பின் மகன் கம் பக்ஷ் ( Kam Baksh) கவர்னரை கொன்னுட்டு தானே இந்த டெக்கன் பகுதியை ஆள ஆரம்பிச்சார். அதுக்கு அப்புறம் பஹதூர் ஷா ஆலம் இந்தப் பகுதிக்குள் புகுந்து இளவரசர் கம் பக்ஷ் கொல்லப்பட்டது எல்லாம் இன்னுமோர் தனிக்கதை. விடுங்க.....இந்த இடுகை ரொம்ப ரத்தம் பார்த்துருச்சு.

இப்படி ஆட்சிகளும் சிற்றரசர்களும் மாறி மாறிக் கடைசியில் 1947 வது வருசம் ஆந்திர மாநிலம் ஆச்சு. கடைசி அரசரா இருந்தவர் நவாம் மீர் ஒஸ்மான் அலி கான்.( Nawab Meer Osman Ali khan). இப்போதும் மாநிலத்தின் தலைநகரம் ஹைதராபாத் தான்:-)

அந்த ஏழு சமாதிகளில் இருந்து புறப்பட்டு ஒரு பத்து நிமிஷ ட்ரைவில் கோல்கொண்டாவுக்குள் நுழைஞ்சோம். சரித்திரக் கதைகளில் வாசிச்சதை நினைவுபடுத்தும் விதம் பெரிய மதிலில் உள்ள வாசலைக் கடந்து பயணிக்கிறோம். தெருக்களுடன் கூடிய ஊர். மக்கள் நடமாட்டம், கடை கண்ணின்னு இருக்கு.

(அதிகாலையில் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. கோட்டையின் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் கிராமங்களிலே இருந்து நகருக்குள், பால் தயிர், பூக்கள் காய்கறிகள் இப்படிப் பொருட்களை விற்பதற்குக் கொண்டு செல்லும் மக்களின் கூட்டமும், வியாபாரிகள் விலைகளையும் பொருட்களையும் கூவிக் கூவி விற்கும் சப்தமும், பண்டக சாலைகளில் பொருட்களை வாங்கி அடுக்கும் கூட்டமுமாக அந்த இடமே கலகலவென்றிருந்தது. குதிரையை மெதுவாக நடக்கச் செய்து, எல்லா வேடிக்கை விநோதங்களையும் பார்த்தவாறே அரண்மனை இருக்கும் பாதையில் போய்க் கொண்டிருக்கும் வீரன்(கதாநாயகன்) ஏதோ நினைவு வந்தது போல தன் இடுப்பைத் தொட்டுப் பார்த்தான். அரசருக்குக் கொண்டுபோகும் ஓலை பத்திரமாக இருக்கிறது)

சின்ன ஊர்தான். ட்ரைவர் நவீனுக்கு வழி தெரியாதா என்ன? வேடிக்கை பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தோம். மாலை ஆறுமணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி. நுழைவுச் சீட்டு வாங்கிக்கிட்டோம். கேட்டில் நுழைஞ்சதும் அருமையான புல்வெளி. சின்னதா நடுவில் ஒரு பாதை. பாதை முடியும் இடத்துலே கோட்டையின் வரைபடம் ஒன்னு இருக்கு. இங்கேயும் வழிகாட்ட வரவான்னு ஒருத்தர் கேட்டார். தலையை இடம் வலமாக ஆட்டிட்டு பெரிய மதில்சுவரைத் தாண்டிப்போனோம். இந்த மதிலுக்குத் திரைசீலைச் சுவர்ன்னு பெயராம். சுவரின் மேல்பகுதியில் இருக்கும் துவாரங்கள்,இடைவெளி வழியாக உள்ளிருந்தபடியே எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கறதுக்கான ஏற்பாடாம்.

இந்த இடத்தில், கோட்டையின் விளக்கம் வரைபடம் எல்லாம் இருக்கும் புத்தகம் ஒன்னு இருபது ரூபாய்க்குக் கிடைச்சது. Owais Firdos Khan publications.(OFK). ரொம்ப வசதியாப் போச்சு, இல்லேன்னா இவ்வளோ கதை உங்களுக்குச் சொல்லி இருக்கமுடியாது. ஏழு ராஜா சரித்திரம் அதைப் பார்த்துத்தான். புத்தகம் போட்ட புண்ணியவானுக்கு நன்றி சொல்லிக்கறேன்.

பெரிய கதவுகளைக் கடந்து உள்ளே காலடி வச்சோம். பலாஹிஸார் வாசல். இங்கே இருக்கும் ஆர்ச் வளைவுகளுக்கு மேலே இருக்கும் துளைகளின் வழியாக, போர் நடக்கும் காலங்களில் கோட்டை வாசலைத் திறக்க முயலும் யானைப்படைகளையும் வீரர்களையும் விரட்டக் கொதிக்கும் எண்ணெய், உருக்கிய ஈயம் எல்லாம் ஊத்துவாங்களாம்.
(அடப்பாவமே....யானை.........)

இங்கே நடுவிலே நின்னு கை தட்டினால் அந்த சத்தம் கோட்டையின் உச்சியில் தொலைவில் இருக்கும் மண்டபத்தில் கேட்குமாம். ஆளாளுக்குக் கைதட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நமக்குக் காது செவிடாயிரும் இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே நின்னால்(-:

அங்கே இருந்து குன்றின் உச்சியைப் பார்த்த கோபால் யானை இருக்குன்னார். எங்கே? எங்கே? அதோ அந்த வாசல் இருக்கு பாரு. அதுக்கு ரைட் ஸைடு. அட! ஆமாம். நீங்க சொன்னது ரொம்பவே 'ரைட்'

சமயம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போடப்போறேன்னு சொல்லுச்சு. நாலைஞ்சு படத்துக்காவது தேறணுமேன்னு கவலையாப் போயிருச்சு. பாதை இங்கே மூணாப் பிரிஞ்சது. இடது பக்கம் ஒரு நீளமான கட்டிடமும், நமக்கு வலப்புறம் கீழ்த்தளத்துத் தோட்டத்துக்கும் நேராப் போறது குன்றின்மேல் ஏறவுமுன்னு. கால்வலி வருமுன் குன்றேறலாம். கொஞ்சம் லேசான ஏத்தம். ரெண்டு பக்கமும் பெரிய பெரிய ஹால். படைவீரர்கள் தங்கும் இடமோ? வலது பக்கம் இருக்கும் ஹாலுக்கு கீழ்த்தளத்திலிருந்துதான் போகமுடியும்.ஆனால் அங்கே வரிசையா இருக்கும் ஜன்னல் போன்ற அமைப்பால் கீழே பார்க்கலாம். ஏதோ பிக்னிக் வந்த கூட்டமோ என்னவோ. பெரிய பாத்திரங்களை வச்சுச் சமைச்சு வரிசையா உக்கார்ந்து பந்தி நடந்துக்கிட்டு இருக்கு. இறைச்சிக் குழம்பை பெரிய ஜல்லிக் கரண்டியால் துழாவிவிட்டு, கறித்துண்டுகளைக் கோரி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். ஓக்கே.... படைவீரர்கள் இப்படித்தான் அந்தக் காலத்துலே இதை கிச்சன் & டைனிங்கா பயன்படுத்தி இருப்பாங்க. கண் முன் டெமோ:-)

இன்னும் கொஞ்சம் மேலே ஏறி வலப்புறம் திரும்பினால் இன்னொரு சுற்றுச்சுவர் வருது. படிக்கட்டும் ஆரம்பிக்கும் இடம்வரை நடந்தோம்.
முகலாய அரண்மனைகளில் வழக்கமாக இருக்கும் , தர்பார், திவானி ஆம், திவானி காஸ், இப்படி முக்கிய விருந்தினர்களை மன்னர் சந்திக்கும் இடங்கள் எல்லாம் இருக்கு. மன்னரின் இந்து மனைவிகளுக்காகக் கட்டிய தனித்தனி மாளிகைகள், பக்த ராமதாஸ் இருந்த சிறை, மசூதிகள், இப்படி அதுபாட்டுக்கு எங்கே பார்த்தாலும் பிரமாண்டமான கட்டிடங்களா இருக்கு. நல்லாச் சுத்திப் பார்க்கனுமுன்னா ஒரு அரை நாளாவது வேணும்.
பாக்யமதி மாளிகை

சாயங்காலம் கோட்டையில் ஒளி ஒலி ஷோ நடக்குது. அதைப் பாருங்கன்னு புதுகைத் தென்றல் பரிந்துரை செஞ்சுருந்தாங்க. தினமும் 7 முதல் 8 வரை ஆங்கிலத்திலும், 8 முதல் 9 வரை (செகண்ட் ஷோ) தெலுகு, ஹிந்தின்னும் இருக்காம். குளிர்காலத்துலே சீக்கிரம் இருட்டிப்போகுதேன்னு 6.30. 7.30ன்னு இருக்குமாம். இப்போ நவம்பர். குளிர் காலம் வந்தாச்சாம்.

எந்த இடத்துலே நடக்குமுன்னு தெரியலை. டிக்கெட் அங்கேயே கிடைக்குமுன்னு கீழே நுழைவுச்சீட்டு வாங்குன இடத்தில் சொல்லிட்டாங்க. உக்கார இருக்கை இருக்குமான்னு என் கவலை. இதுக்குண்டான ஏற்பாடுகள் ஒன்னும் இதுவரை கண்ணில் படலை. எல்லாம் தரையிலேதான் உக்காரணுமுன்னு கோபால் அடிச்சு விடறார்!
இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு பார்த்துட்டு இடப்புறம் படிக்கட்டு இல்லாம இருந்த பாதை வழியா நடந்து இன்னொரு பிரமாண்டமான கட்டிடத்துக்குள் நுழைஞ்சு வெளிச்சம் வந்த வாசலை நோக்கிப் போனோம்.


ஒலிஒளி நடக்குமிடம்

ஒரு முற்றத்தில் போய் முடியுது. செயற்கை நீரூற்று ஒன்னு வச்சுருக்காங்க. (வேலை செய்யலை) ஏராளமான ப்ளாஸ்டிக் நாற்காலிகள் போட்டு வச்சுருப்பதைப் பார்த்ததும் 'உயிர்' வந்துருச்சு(எனக்கு)
இந்த இருட்டு ஹால் வெளிச்சம் போட்ட பிறகு எப்படி இருக்குன்னு பாருங்க.


டிக்கெட் கொடுக்கக் கொஞ்சம் நேரம் ஆகுமாம். அதுவரை....அப்பாடான்னு சாய்ஞ்சேன். இந்த இடம் ப்ரேமாமதியின் மாளிகை(இருந்த) இடம். சிதிலமாகிப்போனச் சுவர்கள். 'மசமச'ன்னு இருட்ட ஆரம்பிச்சுருந்தது.

ஷோ ஆரம்பிக்கும்வரை மனக்கண்ணில் இன்னொரு ஷோ பார்த்தால் போச்சு. பழையபடி கற்பனைக் குதிரையில் ஏறிப்போனேன்.

ரெண்டாம் ஜாமம் முடிந்ததின் அடையாளமான மணியோசை தொலைவில் கேட்டது. இளவரசி **** உறக்கம் பிடிக்காமல் நந்தவனத்தில் பளிங்குக்கல் இருக்கையில் ஏதோ நினைவுகளுடன் அமர்ந்திருந்தாள். வானத்தில் பவனி வந்துகொண்டிருந்த சந்திரன் மேகத்திரையின் மறைவில் ஒளிந்தான். பெருமூச்சுடன் பார்வையை அப்புறம் செலுத்தும்போது....சலசலவென்று அசைந்தாடிய செடிகளின் பின்னாலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. வீல் என்று ஓசை வருமுன்னே முரட்டுக் கையொன்று அவள் வாயைப் பொத்தியது. மிரண்ட பார்வையுடன் இருந்தவளின் செவி அருகே மெல்லிய குரலில் இளவரசி என்றதும்..... இதுக்குத்தான் அந்தக் காலத்துலே ஏகப்பட்ட சரித்திர நாவல்களைப் படிச்சுத் தொலைச்சிருக்கக்கூடாதுன்றது)

ஆமாம். கதைகளில் எல்லாம் ரெண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம்ன்னு அரசர்கள் நடமாடிக்கிட்டு இருக்காங்களே...தூங்கவே மாட்டாங்களா? அந்தக் காலத்துலே எல்லாம் வெளிச்சம் போடறது கொஞ்சம் கஷ்டம்தானே. தீவட்டியை விட்டால் வேற! மாலை இருட்டுமுன்பே எல்லோரும் ராச்சாப்பாடு முடிச்சுட்டுச் சீக்கிரம் படுக்கை போட்டுருவாங்க. நீண்ட இரவுகளா இருக்கும். இப்போதைய 9 மணின்றது.... அப்போ அதுவோ???

உச்சியில் இருக்கும் மாளிகையில் இருந்து அரசர் மாறுவேடத்தில் கீழே இறங்கி வர்றார். காவலாளி திகைக்கிறான். 'உஷ்'.......ஓசைப்படாமல் மனைவிகளில் ஒருத்தர் மாளிகைக்குப் போறார். என்னதான் அரசரின் மனைவிகள் என்றாலும் சக்களத்திச் சண்டை, பொறாமை எல்லாம் இருக்காதா? (அய்ய...புத்தி போற போக்கைப் பாரேன்) அரசனா இருந்தாலும் புருஷன் என்ற பதவியின் நிலை..... கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்குது.

டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். ஒரு டார்ச் லைட்டை வச்சுக்கிட்டு ஒருத்தர் சீட்டுக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஸீட்டுக்காக. 50, 100ன்னு ரெண்டு வகை. கொஞ்சம் நல்ல இருக்கையாவே இருக்கட்டுமுன்னு வாங்கிட்டு வந்துட்டார். கொஞ்ச நேரம் ஆனதும் மக்கள் வரத்தொடங்கி இருக்கைகள் எல்லாம் அநேகமா நிறைஞ்சது. 300 மில்லி தண்ணியும், 250 மில்லி (மாம்)பழரசமும் 100க்கு மட்டும் கொண்டுவந்து கொடுத்தாங்க.

ஷோ ஆரம்பிச்சது. உரையாடல் வகையில் பின்னணிக்குரல். அமிதாப் பச்சன்.
பரவாயில்லை. நல்லாத்தான் இருந்துச்சு. அந்த வர்ண விளக்குகளில் இந்த இடம் ரொம்பவே ஸ்பூக்கியா....... கதையின் நடுவில் ஒரு ஸீனில் நீரூற்றிலே இருந்து பளீர்ன்னு நீர் பெருகி ஜாலம் காட்டுச்சு. வெரி நைஸ். ஏழேகாலுக்கு முடிஞ்சது. நிகழ்ச்சி பார்க்க வந்த மக்களில் பலருக்கு முன்னுரையில் சொன்ன ஆங்கிலம் 'ஒரு இடத்தில் மட்டும்' புரியலை. படம் எடுக்கவேணாமுன்னு தாழ்மையா அறிவிப்பு வந்துருந்தாலும்....... எரிச்சல் ஊட்டும்விதமா ஃப்ளாஷ் வேற போட்டுக்கிட்டு படமெடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தாங்க. என்ன ஜனங்களோ(-:

கீழே இறங்கி வரும்போது வழியில் அங்கங்கே மின்சார விளக்கு வச்சு கோட்டை கொத்தளங்களை இன்னும் கொஞ்சம் பயமாவும் வசீகரமாவும் காட்டியிருந்தது ரொம்பவே பிடிச்சது. பிடிச்சுக்கிட்டேன் சிலதை. இதே இடங்கள் பகலில் ஒருவிதமாவும் இரவில் ஒருவிதமாவும் இருக்கு!

ஸ்பூக்கி ?



ஒரே இடம் இரவிலும் பகலிலும்
இந்த மாதிரி இடங்களில் இருந்து போகும்போது அந்தப்புரமாதரைப் பற்றி எழும் அனாவசியச் சிந்தனைகள் வழக்கம்போல் இப்போதும் வந்து மனசுலே பாரம் ஏத்துனதென்னவோ நிஜம்.

கொஞ்சம் கனத்த மனத்துடன் அறைக்கு வந்து சேர்ந்தோம்.
கோட்டையில் இருந்து வெளிவந்தால் ஊர் இருட்டில் ஜொலித்தது:-)


தொடரும்........:-)