Wednesday, October 31, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 41

28/1
கண்ணாடிக்கடை 'டான்' ஃபோன் செஞ்சு, இன்னைக்கு மத்தியானம் கண்ணாடி வராது. அதைச் சரி செய்யறப்ப உடைஞ்சிடுச்சு! வேற ஒண்ணு செஞ்சு,
செவ்வாய்க்கிழமை போடறேன்''னு சொல்லிட்டார். சரி. ஆவுறது ஆவட்டும்! அதான் மத்த ரெண்டு படுக்கை அறைகளின் வார்ட்ரோப்
ஸ்லைடிங் கதவுகளில் ரெண்டு மீட்டர் உயரக் கண்ணாடி போட்டுருக்கே. அதுலே பார்த்துக்கிட்டா ஆகாதா?



சோஃபா இன்னைக்கு டெலிவரி செய்யறாங்க. ஆனா எப்பன்னு தெரியாது. ஃபோன் செஞ்சு விவரம் கேட்டிருக்கேன்.
மத்தியானமா 1 மணிக்கு மறுபடி ஃபோன் செஞ்சுகேட்டா, அவுங்க இப்பத்தான் டெலிவரி வண்டியிலே ஏத்திக்கிட்டு இருக்காங்களாம்!
நமக்கு ஃபோன் செய்யணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறப்ப நாமே ஃபோன்லே கூப்பிட்டுட்டோமாம்! அடாடாடா......




நானும் இவருமா உடனெ அங்கே போனோம். சோஃபா வந்துருச்சு! பூதம் மாதிரி இருக்கு! எல்லா இடத்தையும் இது ஒண்ணே அடைச்சிடுச்சு! வீடு ரொம்பச் சின்னதாத் தெரியுது:-) அஞ்சு இருக்கையில் நாலு இருக்கையை
ரெக்ளைனராப் பண்ணிக்கலாம். கோபால் ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டு
இருந்தாரேன்னு வாங்கிப்போட்டாச்சு.



அப்புறம் 2.30க்கு மோஷீன் வராராம்!அங்கே 2.25க்குப் போனேன். அவர் ஸ்பாவோட டைல்ஸ் ஃபிக்ஸ் செஞ்சுட்டார். அவசியம்னா
எப்படித் திறக்கணும்ன்னும் சொன்னார். ஒரு ச்சின்ன ஜன்னல் போல இருக்கு. அந்த டைலை நெம்பித் திறந்தா உள்ளெ இருக்கும் பம்ப், மோட்டாரில் ரிப்பேர் செஞ்சுக்கலாமாம். அப்படியே அந்தக் கட்டைச் சுவர்லே கூர்மையா இருந்த ட்ரிம் மெட்டல் ஃப்ரேமை இழைச்சுக் கொடுத்தார். இல்லைன்னா ஆபத்தாச்சே! கையை வெட்டிருமே!



நான் கொஞ்சநேரம் அங்கெயே இருந்து மத்த ரெண்டு படுக்கை அறைக் கர்ட்டெயினுக்கெல்லாம் ஹூக் போட்டேன். அப்பத்தான் கவனிக்கறேன்
ரெண்டு விதமானது வாங்கி வந்திருக்கோம். அவ்வளவு கவனம்...!!!!!! பார்க்கலாம். சாயந்திரம் இவர் வந்தபிறகு முடிஞ்சா அதுங்களைப் போட்டுறலாம்!





சாயந்திரம் மறுபடியும் போய் கர்ட்டெயின் போட்டுட்டு வந்தோம். மாஸ்டர் பெட் ரூமுக்குள்ளே இருக்கற குட்டி ஜன்னலுங்களுக்குத்
துணி வாங்கித்தான் தைக்கணும்! தெர்மல் பேக்கிங் இருக்கறதாலே கவனமாத்தான் தைக்கணும். ஊசிவேற சீக்கிரம் தேஞ்சிரும்(-: வீட்டுக்குள் இருக்கும் சூட்டை வெளியிடாமல் இருக்கத்தான் இந்த தெர்மல் துணி போடறது.


சாதாரண துணிகளில் நல்லபக்கத்தில் அழகான டிஸைன்கள் இருக்குல்லையா? அதுக்கு அடுத்த மறுபக்கத்தில் ரப்பர் கோட்டிங் ஒருவித அக்ரிலிக் இன்சுலேஷன் கொடுத்துருக்கும். டிஸைன் பக்கம் நமக்குத் தெரியும்படியாப் போட்டுக்கணும். வெளியே இருந்து பார்த்தால் எல்லா வீடுகளிலும் வெள்ளைத் திரைச்சீலையாத்தான் இருக்கும்:-)))

29/1
இன்னைக்கு இவர் சீனாவுக்குப் போறார். காலையிலே கோயிலுக்குப் போயிட்டு அப்படியே 'ஃபிட்ஸெரல்ட் அவென்யூ'லே
இருக்கற 'மில்லர்ஸ்'க்குப் போய் மேட்சிங் துணி வாங்கியாச்சு! வீட்டுக்கு வரும்போது அப்படியே அங்கெயும் போய் ஒரு பார்வை(யும்) பார்த்துட்டு வந்தாச்சு!
நாளைக்கு அங்கே சாவகாசமாப்போய் கொஞ்சம் சுத்தப்படுத்தணும்!



30/1
மத்தியானம் 1 மணிக்குக் கிளம்பினேன். அதுக்கு முன்னாலே மாஸ்டர் பெட்ரூமுக்குப் போட ரெண்டு சிங்கிள் கர்டெய்ன் தைச்சேன்.
கொஞ்சம் துணிங்க, நேத்து தேய்ச்சு வைச்ச பாத்திரம்ங்கன்னு எடுத்துக்கிட்டு அப்படியே நம்ம வேக்குவம் க்ளீனரையும் கொண்டு போனேன்.
சாமான்கள் எல்லாம் அடுக்கி வச்சிட்டு, வீடு முழுசும் வேக்குவம் க்ளீனரால் சுத்தம் செஞ்சு, ரெண்டு டாய்லெட்டையும் சுத்தம் செஞ்சேன்.
நம்ம பாத்ரூமை மோப் பண்ணிட்டு, துணிங்களை அடுக்கிட்டுக் கொஞ்சநேரம் படுத்திருந்தேன். புது லெதர் சோஃபா நல்லாதான் இருக்கு! முதுகு வலி கொல்லுது.



இன்னும் இவர்கிட்டே இருந்து ஃபோன் ஒண்ணும் வரலை! அதுவேற கவலையா இருக்கு!


சொல்லி(எழுதி)வாய் மூடலை. இதோ ஃபோன் பெல் அடிக்குது! இவர்தான். நல்லா இருக்காராம். மத்தியானம் கூப்பிடப்ப நான்
இல்லையாம்! அங்கெ போயிருந்தேன்னு சொன்னேன்.



31/1
11.10க்கு ஃபிஸியோ போயிட்டு வந்தேன். அப்புறம் ஈவ்லின் வந்தாங்க. சாப்பிட்டுட்டு, அங்கெ போனோம். ரெண்டு பாக்ஸ் துணிங்களும் கொண்டு போனோம்.
சாயந்திரம் 7 மணிக்கு இந்தப் பசங்களுக்கு 'கேட் ஃபுட்' வாங்கக் 'கவுண்ட் டவுன்'போனேன். அப்போ இன்னும் 3 அட்டைப்பெட்டிகளைக் கொண்டுவந்தேன்.


இங்கெ சூப்பர் மார்கெட்டுகளில் சாமான்கள் வரும் கார்ட்டன்களை ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள். அதில் நல்ல தரமானதாப் பார்த்து எடுத்துக்கிட்டு வந்தால் நமக்கு ஸ்டோரேஜ்க்கு ஆச்சு. எல்லாம் இலவசம்தான்.அவுங்களுக்கு அது வேஸ்ட்.கழிச்சுக்கட்டணும். நமக்கு அது தேவை. அது நிறையத் துணிங்களைக் கொண்டு போனேன். என் பக்கத்து வார்டுரோப்(311) க்ளியர் செஞ்சாச்சு! அங்கே எல்லாத்தையும் என் பக்கமா(???) அடுக்கி வச்சிட்டு வந்தேன். மொத்தம் கட்டம்கட்டமா 22 ஷெல்ஃப் இருக்கு. அதுலெ ஒரு அஞ்சு இல்லெ ஆறு கோபாலுக்குக் கொடுத்துரணும். பாவம்......

நாளைக்கு இன்னும் கொஞ்சம் கொண்டு போகணும்! இனி தினமும் இந்த வேலைதான்.



1/2
இன்னைக்கும் கொஞ்சம் சாமான்கள் கொண்டு போனேன். மகளோட, என்னோட சல்வார் கமீஸ் எல்லாம் கொண்டு போய் அடுக்கினேன்.
அப்படியே நம்ம மூணாவது ரூம் மரக் கப்போர்டுலே இருக்கற புடவைங்க, ப்ளவுஸ் எல்லாம் கொண்டுபோய் அடுக்கிட்டு வந்தேன்.



2/2
இன்னைக்கு புக்ஸ், மத்த சாமான்கள் கொஞ்சம் கொண்டு போனேன். மகள் இன்னைக்கு சாப்பிடவர்ற நாளாச்சே! ஆலனும், மகளும் வந்துருந்தாங்க. அப்புறம் அவுங்க உதவறேன்னு சொன்னதாலே பட்டுப் புடவை பீரோவை
எடுத்துக்கிட்டுப் போனோம். அங்கெ வச்சு எல்லாப் புடவைங்களையும் அடுக்கி வச்சாச்சு!
அவளுக்கு இப்ப அந்த வீடு, அந்த சோஃபா எல்லாம் ரொம்பவே பிடிச்சுருக்காம்! தினமும் வருவாளாம்!!!!!!!
இவர் அங்கே ஃபோன் செஞ்சார். நல்லா இருக்காராம். பின்னே? சுதந்திரம்:-))))




3/2
இன்னைக்கு மத்தியானமாத்தான் போனேன். கண்ணாடி போடறதுக்கு வரேன்னு சொல்லியிருக்காரு 'டான்' பகல் 1.30க்கு!
கண்ணாடி போட்டாச்சு.அப்புறம் வாஷ் பேஸின் மேலே ( முந்தி வச்சது, லூஸ் ஆகி கீழே விழுந்துருக்கு. நல்லவேளை உடையலை. கீழே கார்பெட்
மெத்துமெத்துன்னு இருக்கே ) ப்ளேன் கண்ணாடியும் சரியா வச்சுக் கொடுத்திட்டுப் போனார்.



நான் அங்கிருந்து ஃப்ரெஷ்சாய்ஸ் போய் கொஞ்சம் சாமான்கள் வாங்கிக்கிட்டு வந்தேன். 3.30க்கு எலிநோர் வந்தாங்க! அவுங்களுக்கு
ரொம்பவே பிடிச்சுப் போச்சாம். கொஞ்சம்(!) பொறாமையாவும் இருக்காம்!
கொஞ்சம் கொஞ்சமா சாமான்கள் கொண்டு போய்க்கிட்டு இருக்கேன்!
சாயந்திரம் கிங் ஃபோன்லே மெஸ்சேஜ் விட்டிருந்தாரு. என்னன்னு கேட்டேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்து 2 நாள் ஆச்சாம்.
வாஷ்பேஸின் முன்னுக்கு பலகை அடிக்க அளவு எடுக்கணுமாம். நாளைக்கு சாயந்திரம் 8 மணிக்கு வரேன்னார். அவரோட அண்ணன்
எப்படி இருக்கார்னு கேட்டதுக்கு பதில் வந்தது, 'அவர் இறந்துட்டாராம்' அடப்பாவமே(-:.




அப்புறம் லக்ஸ் டோனி ஃபோன் செஞ்சார், எப்ப 'டெமோ' காமிக்கறதுன்னு கேட்டு? நாளைக்குக் காலை 9.30 மணின்னு சொல்லிட்டு
அப்படியே,அட்வான்ஸ் போக மீதி இருக்கறதுக்கு செக் கொண்டுவந்துருங்கன்னார். இந்த ஆளுங்களுக்கு பணம் ஒண்ணே குறி! நான் சொன்னேன், 'கோபால் ஊரிலே இல்லை. உடனே காசு வேணும்ன்னா
'டெமோ'வை அடுத்தவாரம் வச்சிக்கோ'ன்னு!




அதுக்கு, 'இல்லையில்லை, நாளைக்கே வரேன். கோபால்
வந்தபிறகு செக்கைக் கொடுங்கன்னு' சொன்னார்.




இந்த 184$க்காக கட்டுன வீட்டை விட்டுட்டு ஓடிருவமா?

தொடரும்.................

லா.ச.ரா

'நினைவலைகள்' என்னும் சொல்லை 'சிந்தா நதி'யில் பார்த்தேன்.
இவர்தான் எல்லா அலைகளுக்கும் முன்னோடியா?

ஜனனி, கங்கா,அரவான், புற்று இப்படி மறக்கமுடியாதவை மனதுக்குள் வட்டம் போடுது.

எத்தனைதான் படிச்சாலும், அந்தக் காலத்தில் (விகடனோ இல்லை குமுதமோ ஞாபகம் இல்லை) வந்த ஒரு சிறுகதை மட்டும் எங்கள் நெஞ்சில் பதிஞ்சு போயிருக்கு.

ஏழைக் குடும்பத்தில், சாப்பிட ஒன்னுமில்லாத நிலையில், எங்கோ யார் தோட்டத்திலோ இருந்து கொண்டுவந்த கத்தரிப்பிஞ்சுகளை ஒரு ச்சின்ன அடுக்கில் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் குழந்தைகள் எல்லாரும் கூடத்தின் தரையில் படுத்து உருள்வார்கள்.

கத்தரிக்காயை அதுவும் ச்சின்னச் சின்ன குண்டுக்கத்தரிக்காயைப் பார்த்ததும்
நேரா லா.ச.ரா வீட்டுக்குப் போயிரும் எங்கள் மனசு.

இங்கே இந்த 'எங்கள்' எங்க கோபாலையும் சேர்த்துத்தான்.

எழுத்து....மரணமில்லாப் பெருவாழ்வு இல்லையா?


அன்னாரின் மறைவு.......


அவருக்கு ஆன்ம சாந்தி கிடைக்கணும். குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம்.

Sunday, October 28, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 40

25/1
இன்னைக்கு செவ்வாய்க் கிழமையாச்சே! லைப்ரரி வேலைக்குப் போகணும். காலையிலேயே (9.45க்கு) கார்பெட் போடுற ஆளுங்க ஃபோன் செஞ்சு எப்ப




வீட்டைத் திறக்க வரமுடியும்ன்னு கேட்டாங்க. நான் பகல் 12க்கு அப்புறம்தான்னு சொன்னேன். சாவி தரமுடியுமான்னு
கேட்டாங்க. அங்கெ செக்யூரிட்டி அலாரம் போட்டுருக்கோமே. எப்படி 'கோட்' நம்பர் தரமுடியும்?




இவர்கிட்டே சொன்னேன். நான் போயிருப்பேனேன்னு சொல்றார். இவருக்கு எப்ப மீட்டிங், எப்ப ஃப்ரீன்னு யாருக்குத் தெரியுது?


அப்புறம் என்னை 12க்கு லைப்ரரியிலே வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னார். அப்படியே வரவும் வந்தார். அங்கே போனா,
ரெண்டு ஆளுங்க காத்துக்கிட்டு இருந்தாங்க. அதுலே ஒருத்தர் நம்ம வீட்டுக்கு (311க்கு) அஞ்சு வருசத்துக்கு முன்னாடி கார்பெட் போட்டவர்!
எனக்கு ஞாபகம் இல்லே, ஆனா இவருக்கு நல்லா நினைவு இருக்கு! ஒருவேளை எனக்கு 'செலக்டிவ் அம்னீஷியா'வோ?




அவுங்களை விட்டுட்டு நாங்க வந்துட்டோம். தெரிஞ்ச ஆள்தானேன்னு ஒரு மெத்தனம்! இவர் சாப்பிட்டுட்டு போனார். 1.15க்கு எனக்கு
ஃபோன் செஞ்சு அவுங்க வேலை நடக்குது, 'அண்டர்லே' போடறாங்கன்னு சொன்னார். என்னை மெதுவா அங்கெ போனாப் போதும்ன்னு
சொன்னார். ஆனா நான் 2.30க்கு போறேன்னு சொல்லிட்டேன். அதே மாதிரி போனேன். அங்கே போட்டே முடிச்சிட்டாங்க! அப்புறம் கார்பெட் எப்பன்னு

கேட்டேன். அநேகமா நாளைக்கே போடலாம். எதுக்கும் சாயந்திரம் ஃபோன் செஞ்சு சொல்றேன்''னுட்டு போனாங்க!


நானும் கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டு வந்துட்டேன்! பார்க்க நல்லாத்தான் இருக்கு! ' டர்போ கோல்ட்'னு இருக்கும் பேருக்கேத்த மாதிரி கொஞ்சம் மினுமினுப்பா இருக்கு. கால் வச்சா அப்படியே சர்ன்னு உள்ளே அமுங்காமக் கொஞ்சம் மெதுவா....... மெத்துமெத்துன்னு இருக்கு.


அண்டர்லே(underlay)ன்னு ஒரு ஃபோம் மாதிரி இருக்கும் ஷீட்களை முதலில் தரையில் விரிச்சுட்டு, அதுக்கு மேலேதான் கார்பெட் போடறாங்க. அந்த ஃபோமின் தரத்தையொட்டித்தான் கார்பெட் காலுக்கு மெத்துன்னு இருக்குமாம்.


நம்மது ஹார்ட்வேரிங் கார்பெட் என்றதால், இப்ப மார்கெட்லே இருக்கும் ரொம்ப நல்ல தரமான அண்டர்லே ஃபோம் போடச் சொல்லி இருக்கோம்.




கார்ப்பெட்களிலும் பலவிதங்கள் இருக்கு. காலுக்கு மெத்துமெத்துன்னும், புசுபுசுன்னு இருக்கறதும் பார்க்க அழகுன்னாலும், நாள்பட உழைக்காது. அதுக்குக் கட்பைல் கார்பெட்ன்னு சொல்றாங்க. அழுக்குகள் அதுலே உள்ளெ இறங்கி நின்னுரும். நாம் வேக்குவம் க்ளீனர் ப்ரஷ்லே அழுத்திச்
.சுத்தம் பண்ணும்போது அங்கங்கே திரித்திரியா இளகி வந்து க்ளீனர்லெ இழுபட்டுப்போகும்.

இதுக்குமேலே ஃபர்னிச்சர் மார்க்ஸ் வேற படிஞ்சு அந்த இடம் சீக்கிரம் இத்துப்போகுமாம். பொழுதண்ணிக்கும் மாத்திக்கிட்டு இருக்க முடியுமா? அதுக்கு லூப் பைல்தான் நல்லது. இழை அறுபடாம சுத்திச் சுத்தி இருக்கும்



கொடுக்கற காசுக்கு நாயா(??) உழைக்கணும், நமக்கெல்லாம்:-))))கிடைக்கும் 100 % ஆட்டு ரோமத்தில் செஞ்சதுன்னா குளிர்காலத்தில் வார்ம் ஆகவும், வெய்யில் காலத்தில் இதமாவும் இருக்குமாம்.



நாம் தெரிஞ்செடுத்தது இயற்கை நிறத்தில், லேசா க்ரே இழைகள் கலந்த லூப் பைல்தான். படுக்கை அறைக்கு மட்டும் இதே வகையில் க்ரே வுக்குப் பதிலா ப்ளூ கலந்தது. Godfrey Hirst என்ற கம்பெனி, ஆஸ்தராலியாவில் தயாரிச்சது. இங்கே உள்ளூர்லே தயாரிச்சது கூட நல்லாதான் இருக்கு. ஆனா ஃபாரின் மோகம் யாரை விட்டது? அங்கெ ஆஸியிலும் நியூஸி கார்பெட் போட்ட வீடுகளை விசேஷமாக் குறிப்பிட்டுச் சொல்றாங்க.:-))))



26/1
இன்னையோட சுநாமி வந்து ஒரு மாசம் ஆயிருச்சு! மூணு லட்சம் உயிருங்க போயிருச்சுன்னு சொல்றாங்க! ஐய்யோன்னு இருந்துச்சு! ப்ச்.....


'ட்ரண்டி மிர்ரர்' ஆள் டான் ஃபோன் செஞ்சு கண்ணாடிங்க தயாரா இருக்கு. எப்ப வந்து போடறதுன்னு கேட்டார். எப்ப முடியும்னு
கேட்டேன். பகல் 1 மணிக்குன்னா வருவாராம். சரின்னுட்டு பக்கத்து வீட்டுக்குப் போய் ஃபிஸியோ நேரத்தை மாத்தலாம்ன்னு நினைச்சேன்.
நல்ல வேளையா காலையிலேயே 10.50க்கு நேரம் இருக்குன்னாரு நம்ம ஃபிசியோ. அங்கே போயிட்டு வந்து சமைச்சு சாப்பிட்டு, பகல் 1 மணிக்கு
அங்கெ போனேன். கண்ணாடி போட டானும் இன்னோரு ஆளும் வந்திருந்தாங்க!



வெளியே நம்ம வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையேஃபென்சிங்கும் போட்டு முடிச்சிருந்தாங்க வேற ஆளுங்க! நல்லாதான் இருக்கு!


கண்ணாடி போட ஆரம்பிச்சாங்க. ஃபோயர் மாடம் கோணயா இருக்கு! அட்ஜஸ்ட் செஞ்சு போட்டாச்சு. இன்னோரு மாடத்துக்குக் கண்ணாடி
கொஞ்சம் பெருசா இருக்கு. அதை அந்த மற்ற ஆளு திருப்பி எடுத்துக்கிட்டுப் போய் சரி பண்ணிட்டு வந்தார். அதுக்குள்ளே ஹால் டேபிள்
வரப்போற இடத்துக்கு மேலே வளைவு வர்ற கண்ணாடி மாட்டியாச்சு. அட்டகாசமா இருக்கு!







அப்புறம் பாத் ரூம். அங்கே அளவு சரிதான். ஆனா டிமிஸ்டர் போடற ஒயர் உள்ளே போக ஒரு வெட்டு வெட்டினாங்க. கண்ணாடிக்குப்
பின்னே மறைஞ்சிடும்! ஆனாலும் மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு!
அப்புறம் நம்ம பாத் ரூம்! அங்கெயும் கோணதான்! இப்ப என்ன செய்ய முடியும்? சரி போட்டுருங்கன்னு சொல்லிட்டேன். வேற வழி?
இப்ப பெரிய கண்ணாடி ஹால்வே காரிடாருக்கு வருதே அது! அதைப் போடறப்ப ரொம்ப டைட்டா இருந்து, ஒரு ஸ்க்ராட்ச் ஆயிருச்சு!
சின்ன சிப்தான். ஆனாலும் கொண்டுபோய் சரி பண்ணிட்டு வெள்ளிக்கிழமை போடறேன்னு சொன்னார் டான். முதல்லெ நைஸாக் கேட்டுப்பார்த்தார், 'ரொம்பச் சின்னதாத்தான் உடைஞ்சிருக்கு. பார்த்தாத் தெரியாது. நீங்க சரின்னு சொன்னாப் போட்டுடறேன்'. அது ஸ்க்ரூ வர்ற இடம். நாளைக்கு அப்படியே அங்கெ விரிசல் விட்டுருச்சுன்னா? வேணாம். நல்லதாவே போடுங்கன்னேன். அவர் சொல்லலைன்னா அப்படி ஆனதே எனக்குத் தெரிஞ்சிருக்காது:-))))



நாங்களும் நம்ம வீட்டுலே இருந்து ரெண்டு கண்ணாடி, (ஏரோப்ளேன் இருக்கறதும், கோலம் கடைக்கு வாங்குன தங்க பட்டை போட்டதும்)
எடுத்துக்கிட்டு போனோம். அதை ஏரோப்ளேன் கண்ணாடி வாஷ் பேஸினுக்கும், தங்க ஃப்ரேம் கண்ணாடியை பவுடர் ரூமுக்கும் போட்டுக்
கொடுத்தார் டான்.


நாளைக்கு காலையிலே 8 மணிக்கு கார்ப்பெட் போட வராங்க!


27/1
காலையிலே எட்டு மணிக்கு இவர் அங்கெ போயிட்டார். கலர் சரியானதான்னு பார்க்க சொல்லி அனுப்பினேன். 'சரியா இருக்கு' அங்கிருந்து ஃபோன்லே சொன்னார்.


வீட்டுவேலைகளை முடிச்சிட்டு 11 மணிக்கு அங்கெ போனப்ப முக்கால்வாசி வேலை முடிஞ்சிடுச்சு! எப்ப முடிப்பீங்கன்னு கேட்டதுக்கு
பகல் 2 இல்லேன்னா ரெண்டரை ஆயிரும்ன்னு சொன்னாங்க. பாக்கியாகும் பெரிய துண்டு கார்பெட்ங்களை வச்சிட்டுப் போங்க. மிதியடி செய்யணும்ன்னு சொல்லிட்டு வந்தேன்.




12.45 க்கு இவர் ஃபோன் செஞ்சு சொல்றாரு அவுங்க கார்ப்பெட் போட்டு முடிச்சிட்டாங்களாம்! நாலரை மணி நேரத்துலே முடிச்சிட்டாங்க!
அஞ்சுபேர் வந்திருந்தாங்களே! அதனாலே சீக்கிரம் முடிஞ்சிட்டிருக்கு! தடுப்புகள் இல்லாம ஓப்பனா நிறைய இடம் இருக்குல்லையா. ஒரேதா இழுத்துப் போட சுலபமா இருந்துச்சாம்.







சாயந்திரம் ஒரு ஆறேமுக்காலுக்குப் போய், தெர்மல் கர்ட்டெயின் போட்டோம். சாமி ரூமுக்கு ஒரு மறைவா அந்த 3.2 மீட்டர் அகலத்துக்கு லேஸ் கர்ட்டெயின் ராடும் ஃபிக்ஸ் செஞ்சிட்டு அந்த கர்ட்டெயினையும் போட்டோம்.


இது ஒரு பெரிய வெட்டிமுறிக்கற வேலை இல்லேன்னாலும் ரொம்ப 'நொச்சு' பிடிச்ச வேலை! ஹூக் மாட்டி, கயிறை இழுத்துக் கட்டி,
ராடுலே இருக்கற ஹூக்கோட சேர்த்து மாட்டணும். அந்த ஹூக்குக்கும், துணியிலே இருக்கற ஹூக்குக்கும் இடைவெளி சரிசமமா இருக்கணும்.
அதுக்காக இது எத்தனை, அது எத்தனைன்னு எண்ணணும். ங்கொய் ங்கொய்''ன்னு வேலை!



ச்சும்மா ஃபார்மல் லவுஞ்சில் மட்டும் போட்டு முடிச்சோம். லைட்டெல்லாம் போட்டுட்டு வெளியேபோய்ப் பார்த்தால் ஒண்ணும் தெரியலை! இவருக்கு
ரொம்பவே திருப்தியா இருக்கு!



சின்ன அலங்காரப் பொருள்கள் சிலதைக் கொண்டுபோய் வச்சோம். இதுக்கே ராத்திரி 9 மணி ஆயிருச்சு!


தொடரும்.................

Friday, October 26, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 39


20/1
என்னமோ பரிட்சைக்குப் போறதுபோல இருக்கு.
இன்னைக்குத்தான் பில்டிங் இன்ஸ்பெக்ஷன் ஃபைனல்! காலையிலே 10.30க்கு வராங்களாம்! நாங்க அங்கெ சீக்கிரமாவே போயிட்டொம்.
இவர்தான் வீட்டையெல்லாம் நல்லா ப்ரூம் போட்டு ப்ரஷ் செஞ்சுவச்சார். நான் கொஞ்சம் 'மணி ப்ளாண்ட் எடுத்துக்கிட்டுப் போனேன்.
கொஞ்சம் அலங்காரம் இருக்கட்டும்ன்னு! நாம்தான் இதை 'மணி ப்ளாண்ட்'ன்னு சொல்றோம். இதுக்கு இங்கத்துப் பேர் 'டெவில்ஸ் ஐவி' ஒருவேளை பணம், சாத்தான் ன்னு மறைமுகமாச் சொல்றாங்களோ? நேத்தே நம்ம பில்டர் எல்லா ரப்பிஷ்ம் எடுத்துட்டுச் சுத்தம் செஞ்சு வச்சார். '



இன்ஸ்பெக்டர் வந்தாச்சு! ச்சும்மா அங்கும் இங்கும் பார்த்துட்டு, கிச்சன்லே ஒரு ட்ரா இழுத்துப் பார்த்துட்டு, டாய்லெட்டை ஃப்ளஷ் செஞ்சு
பார்த்துட்டு, சரின்னுட்டாரு. கெஸ்ட் டாய்லெட்லே உள்ளெ விளக்கு சுவிட்சைத் தேடுனாரு போல, கோபால் சொன்னாரு அது வெளியே
வச்சிருக்கு. ஆளுங்க உள்ளெ போறதுக்கு முன்னாலெ விளக்கு வரட்டும்ன்னு''!



அடுப்பு தரையில் இருக்குல்லையா....அது ஒரு பலகை மேலே உக்காரணுமாம். அதுக்கு ஒரு அஞ்சு செ.மீ உயரப் போர்டு வைக்கணுமுன்னு சொன்னார். அப்புறம் அடுப்போட ரெண்டு பக்கமும் சுவத்திலே ஹூக் போட்டு ஒரு சங்கிலியாலே கட்டிப் போடணுமாம். (இல்லேன்னா ஓடிப்போயிருமா? ) வாய்வரைக்கும் வந்த வார்த்தையை முழுங்குனேன். எல்லாம் சேஃப்டிக்காகவாம். முன்னாலே சரிஞ்சு விழுந்துருமாமே. இவ்வளோ பெரிய அடுப்பு சரியுமா? சரி. அவுங்களோட சட்ட திட்டங்கள். செஞ்சுரலாம்.



மத்த ரெண்டு பெட் ரூமுக்குப் பக்கத்துலே ஸ்மோக் அலாரம் வைக்கலை. அது மூணு மீட்டருக்குள்ளெ இருக்கணுமாம். நான் சொன்னேன்
பேட்டரியிலே வேலை செய்யற ஒண்ணை வாங்கி அந்த பாத்ரூம் வாசலிலே வச்சுட்டா ரெண்டு ரூமுக்கும் ஆச்சுன்னு .அதை க்ரேக் வைக்கறேன்னு சொன்னாரு.அந்த இன்ஸ்பெக்டர் ஒரு டெம்ப்ரரி சர்ட்டிஃபிகேட் எழுதிக் கொடுத்துட்டுப் போனார். சரியானது அப்புறம் அனுப்புவாங்களாம்!


மத்தியானம் நாங்க மறுபடியும் கார்பெட் வேட்டைக்குப் போனோம். இப்ப என்ன டிஸைன், எவ்வளவுன்னு எல்லாம் விவரம் இருக்கறதாலே (மொத்தம்
மூணு இடத்துலேதான் இது கிடைக்குதாம். அதான் ஒண்ணு இல்லைன்னு ஆயிருச்சே ) ரெண்டே இடம்தானே சீக்கிரம் பார்த்துடலாம்ன்னு
போனோம். ஜேட் ஸ்டேடியம் (இதை அநேகமா நீங்க டிவியில் பார்த்துருக்கலாம். இங்கேதான் க்ரிக்கெட் மேட்ச் நடக்கும்) பக்கத்துலே ஒரு கடையிலெ ஏற்கனவே பார்த்து வச்சிருக்கோம். அங்கே போறதுக்கு முன்னே நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே மந்தவெளித் தெருவிலே (மேண்டவில் ஸ்ட்ரீட்) ஒரு கார்பெட் கடையிலே ஸேல் இருக்கு ச்சும்மா அங்கெ போயிட்டுப் போலாம்ன்னு போனா அங்கெ நம்ம டிஸைன் இருக்கு. இதுதான் அந்த மூணாவது கடையாம்! அங்கே இருந்த அலிஸ்டர்கிட்டே விவரம் சொன்னோம். முதலிலே பத்தாயிரத்துச் சொச்சம் சொன்னாரு. அப்ப நான்
சொன்னேன், 'ஏற்கெனவே இன்னோரு இடத்துலே கேட்டு வச்சிருக்கேன். இப்ப இங்க கேக்கறேன். எது மலிவோ அங்கெ கொடுப்பேன்'னு!
அப்புறம் அந்த ஆளு சொன்னாரு எவ்வளோன்னு அளவெடுக்கணும்.
50 மீட்டர்ன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரத்துலே 9500க்கு
தரலாம்ன்னு சொன்னார். ஆனா எதுக்கும் அந்த ப்ளானைத் தாங்க அளந்துட்டு ஃபோன் செய்யறேன்னும் சொன்னார்.
(ஆமாமாம். ஊர் முழுக்க நம்ம ப்ளானைக் கொடுத்தப்ப இங்கெ கொடுக்க விட்டுப்போச்சு போல! இந்தாப்பா வச்சுக்கோ)
அங்கேயே நம்ம வைனலுக்கும் சொல்லியாச்சு! எல்லாத்துக்கும் ஒரு க்வோட் தரென்னு சொன்னாங்க.
நாங்க அந்த வீட்டுக்குக் கொஞ்சம் கொஞ்சமா சாமான்களை எடுத்துக்கிட்டுப் போலாம்ன்னு வேலையை தொடங்குனோம். இங்கத்து அடுக்களையிலே இருந்து கொஞ்சம் சாமான்கள் எடுத்துக்கிட்டுப் போனோம். மத்த சாமான்களை கார்பெட் போட்டதுக்கு அப்புறம்தான் வைக்கணும். அடுக்களைன்னா டைல்ஸ்தானே? கஷ்டம் இல்லைன்னு தோணுச்சு.
அதுக்குள்ளெ கார்பெட்க் கடை அலிஸ்டர் ஃபோன் செஞ்சு டிஸைன் ஒரே மாதிரின்னா ( நீளக்கோடு, குறுக்குக் கோடு) காசு கொஞ்சம் கூடும்.
நெடுக்கு, குறுக்குன்னா 9500 சரின்னாராம். மொதல்லே எது நெடுக்கு, எது குறுக்குன்னு தெரியலையெ...... அதுக்காக ஒருதடவை கடைக்குப் போனோம்.
அங்கே பார்த்தா அப்படி ஒண்ணும் ப்ரமாத வித்தியாசம் இல்லை! நாலு மீட்டர் அகலம் இருக்கே. அதுவுமில்லாம கன்டின்யூடா இல்லாம நடுவிலே ஒரு ப்ரேக் வருதுல்லே. அதுனாலெ குறுக்கு, நெடுக்காவெ இருக்கட்டும்ன்னு சொல்லிட்டு அட்வான்ஸ் கொடுத்தோம். செவ்வாய்க் கிழமை வீட்டுக்கு வந்து அளந்துட்டு வியாழன் கார்பெட் போட்டுடுவாங்களாம்! நல்லதாப் போச்சு! வைனல் க்வோட் 2300ன்னு சொன்னாங்க. அது ஜாஸ்தி, அங்கெ கார்பெட்டும்
வாங்கறதாலெ விலை குறைக்கணும்ன்னு சொன்னோம். அப்புறம் 2100க்கு தரேன்னாங்க. உடனே சரின்னு ஒத்துக்கிட்டோம்.ஹப்பர்லே
2700 சொன்னாங்களே! அது வர நாளாகுமாம். வர்றப்ப வரட்டும்!

21/1
தினமும் கொஞ்சம் சாமான் போகுது! இங்கே 'பன்னிங்ஸ்'ன்னு ஒரு பெரிய ஹார்ட்வேர் கடை இருக்கு. ஆஸ்தராலியன் கம்பெனி. உள்ளூர் வியாபாரத்தை அமுக்கறமாதிரி இங்கே கொஞ்சம் விலை மலிவு. வேற எந்தக் கடையிலாவது இதே சாமான் இவுங்களைவிட விலை குறைவுன்னு நாம் நிரூபிச்சால், அதைவிட இன்னும் 10 சதவீதம் குறைச்சும் தருவாங்க. செடிகள் முதல் வீடு கட்டும் சாமான்கள் வரைக் கொட்டிக்கிடக்கு. அங்கெ அருமையான லேஸ் திரைச்சீலைகள் கிடைச்சது. ரெடிமேட். கணக்குப்போட்டுப் பார்த்தால் நாம் துணி வாங்கித் தைக்கறதைவிட சில டாலர்கள் குறைவாவே இருக்கு. நமக்கு வேலையும் மிச்சம். அங்கெ இருந்து தேவையானதை வாங்கி வந்தோம். உள்ளெ லேஸ் கர்ட்டைன் போட ஆரம்பிச்சோம். நல்லா அழகா இருக்கு! இன்னும் ரெண்டு வாங்கி சாமி ரூமுக்குப் போடணும்ன்னு முடிவாச்சு!

அங்கெ போட நினைச்ச கண்ணாடி பை போல்ட் கதவுக்கு இன்னும் கொடேஷன் வரலை. மூணாயிரம் ஆகுமுன்னு வாய் வார்த்தையாச் சொன்னாங்க. யோசிக்கணும். அதுவரை லேஸ் திரைச்சீலை இருக்கட்டும்.
பன்னிங்க்ஸ் போனா அங்கெ அதை வாங்கிகிட்டு அப்படியே டவல் ரைல்ஸ் ரெண்டும் வாங்கினோம். ச்சின்ன சின்னதா சில பல சாமான்கள்
வாங்கிக்கிட்டே இருக்கணும்! அங்கெ வாழைமரம் விக்கறாங்க. ஆசையா இருந்துச்சு! அது ஒண்ணு வாங்கினோம். 20$தான். அருமையா இருக்கு! ஏற்கெனவே ஆக்லாந்துலே இருந்து ஒரு சமயம் வாங்கி வந்துக் கண்ணுக்குக் கண்ணா வச்சுக் காப்பாத்தும் நம்ம கருவேப்பிலைச்செடிக்கு ஒரு துணையாவும் இருக்கும்.
குளிர் ஊருலே இருந்தாலும், கனவு காண ஒரு ட்ராப்பிகல் கார்டன் வேணும்.
செம்பருத்திச்செடி கண்ணுலெபட்டப்ப அதையும் வாங்கிவச்சுருக்கேன். ரப்பர் மரக்கூட்டம் ஒண்ணு இருக்கு. இதுக்கெல்லாம், அங்கேயும் ஒரு கன்ஸர்வேட்டரி அமைச்சுக்கணும்


22/1
இன்னைக்கும் சாமான்கள் கொண்டு போனோம். அங்கே அடுக்கி வைச்சுட்டு, கண்ணாடி க்ளாஸுங்களையெல்லாம் புது டிஷ் ட்ராலெ
வச்சு சுத்தம் செஞ்சேன். நேரம் எடுக்குது. ஆனாலும் சத்தமே இல்லை. நல்லா அழகாக் கழுவிருச்சு!

இங்கேயே பல சாமான்களைக் கழுவிக் கொண்டுபோகணும்ன்னு என்னோட ப்ளான். ஆனா இந்த ஆக்ஸிடெண்ட் ஆனதுனாலெ வேலை
அவ்வளவா செய்ய முடியலை. இவரோ பதபதன்னு பதைக்கிறாரு. எல்லா ஸ்டீல் சாமானும் பிசுக்கா இருக்கு. ஆனா கேக்கற ஜாதி
இல்லையே. வம்பு வேணாம்ன்னு ச்சும்மா இருந்துட்டேன். யாராலே முடியுது? எப்பவும் மல்லுக்கு நிக்க! அங்கே போனப்புறம் சுத்தம்
செய்யலாம்ன்னா, கழுவி எங்கே காய வைக்கறது? இங்கேன்னா கன்ஸர்வேட்டரியிலே வச்சுட்டு, பூட்டிடலாம். சொன்னா கேட்டாத்தானே?
(இப்ப எதுக்கு அடி போடறேன்னுபுரிஞ்சிருக்குமே:-))))

23/1
லினன் கப்போர்டு அடுக்கலாம்ன்னு முடிவாச்சு! கழிச்சுக் கட்டுறதை செஞ்சிட்டு மீதியை எடுத்துக்கிட்டுப் போனோம். எல்லாம் பாத்துப்பாத்து
அடுக்கினோம். கண்ணாடிப் பாத்திரம் மத்தியானம் கொண்டு போகணும். டூரேயோட ஆள் பால்( அஞ்சுபிள்ளைக்காரன்)வந்து வெளியே
ஒரு ஸ்ப்ரே போட்டு சுத்தம் செஞ்சார். அவரோட ரெட்டைப் பசங்களும் வந்து என்னமோ தேச்சுக்கிட்டு இருந்துச்சுங்க!

மத்தியானம் போய் மத்த லேஸ் கர்ட்டெயின் எல்லாம் போட்டு முடிச்சோம். நாளைமுதல் இவர் வேலைக்குப் போயிடுவார். அதுக்குள்ளெ
சில வேலையை முடிக்கணும்ன்னு அவசரப்படராரு!

24/1
காலையிலெயெ ஒழுகுற கட்டரிங்கைச் சரி செய்ய மெட்டல் க்ராஃப்ட் ஆளு வருதாம்! இவர் உடனெ போனார். கார்பெட்டுக்கு அளக்க ஒரு ஆளு நாளைக்கு வர்றதா ஃபோன் வந்துச்சாம்! கேரியும் 12.30க்கு வந்து பாக்கி வேலையை முடிக்கப்போறாராம்!

எனக்கு இன்னைக்கும் ஃபிஸியோவுக்குப் போகணும். இன்னும் கார் ஓட்டிப் பார்க்கலை! வலிக்குமான்னு தெரியலை! அதனாலெ அங்கெ போய்
என்ன நடக்குதுன்னு பார்க்க முடியாது!

நானும் ஒரு வாரமா, அங்கெ போறப்ப கேமரா கொண்டு போகணும்னு நினைக்கறேன். படங்கள் எடுத்து நாளாச்சு! ஆனா மறந்து மறந்து போகுது! வேற வேற சாமான்கள் கொண்டு போறதாலெ இது மட்டும் மறந்துபோகுது! இன்னைக்குக் கட்டாயம் கொண்டுட்டு போகணும்!

சாயந்திரம் இவர் வேலையிலிருந்து வந்ததும் அங்கெ போனோம். மறக்காம கேமெராவும் கொண்டு போனோம். அங்கெ சில படங்கள் எடுக்கறப்பவே
'கார்டு ஃபுல்' அப்படின்னு சொல்லுச்சு நம்ம கேமெரா! இதைத்தான் விடியா மூஞ்சி வேலைக்குப் போனா.....ன்னு சொல்றதா?

நாளைக்கு கார்பெட்க்கு அளக்க வராங்க. கார்பெட் போட்டுட்டா அடியிலே இருக்கற குப்பையெல்லாம் அப்படியே தங்கிரும்! இந்த ஆளுங்க
அதையெல்லாம் 'கண்டுக்காம'த்தான் கார்பெட் போட்டுட்டு போயிருவாங்க! எல்லாம் 'பாப்பாத்தியம்மா மாடு வந்தது....கதைதான்!!!!

குப்பையெல்லாம் ப்ரஷாலே கூட்ட ஆரம்பிச்சோம். புழுதியெல்லாம் பறந்து பறந்து வேற இடத்துலே உக்காருது! சரின்னுட்டு நம்ம சென்ட்ரல்
வேக்கும் க்ளீனர் எடுத்து குப்பையை எல்லாம் ஒரு மாதிரி பெருக்கியாச்சு! கூட்டலும் பெருக்கலும்தான்!!!!!!!

இப்ப இடுப்பும் முதுகும் விண்டு விரியுது! ஒரே வலி! இனி நாளைக் கதை நாளைக்கு!

தொடரும்................

Thursday, October 25, 2007

கூப்பிட்ட குரலுக்கு.......


உண்மையைச் சொல்லணுமுன்னா பதிவுகளால் அல்லது பதிவர்களால் எதாவது நன்மை கிடைக்குமா?

கிடைக்கும். கிடைச்சது. அதுக்கு நன்றி நவிலல் பதிவுதான் இது.

கொஞ்ச நாளை(??)க்கு முன்னால் இப்படிக் கேட்டுருந்தேன்.



நண்பர்களும், நண்பிகளுமாக நிறையப்பேர் தொடர்பு கொண்டாங்க. அவுங்ககிட்டே பெயரை வெளியில் விடமாட்டேன்னு வாக்குத் தந்ததாலெ இங்கேயும் வெளியிடலை(-:

அவுங்களுக்கெல்லாம் முதல் நன்றி.

அப்ப ரெண்டாவது நன்றி யாருக்கு?

ஹா......... வாக்கு மீறிக்கட்டுமா ஒரே ஒரு முறை?

நம்ம மா.சி.தான் அவருடைய நண்பர் ஒருத்தரோட விவரம் அனுப்புனாருங்க.
அந்த நண்பர் பதிவர் இல்லை. ஆனா பதிவர்களோடு சம்பந்தப்பட்ட பெயர் உள்ளவர். என் பதிவுலக வாழ்க்கையில் பரிச்சயமான ரெண்டாவது கல்யாண் அவர்.

அவருக்குத் தகவல் அனுப்பினேன். தொழில்நுட்ப விவரங்களையெல்லாம் அவரோடு விவாதித்துக் கலந்துபேசி, பேனர் முழுமையடையச் செஞ்சவர் எங்க தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலை(வர்) கணேஷ். எப்படியாவது இதைச்
செயல்படுத்தியெ தீரணுமுன்னு இந்நாள் தலை(வர்)வேற சொல்லிக்கிட்டே இருந்தார்.


ஒவ்வொரு டிஸைனும் அவர் அனுப்புனதும், இங்கெ நம்ம மக்கள்ஸ் கிட்டே அதைக் காமிச்சு, அவுங்க ஆளாளுக்கு ஒண்ணு சொல்ல அதைச் சேர்க்கலாமா, இல்லை விட்டுரலாமான்னு சிலபல விவாதங்கள் இங்கெ எங்களிடையில் நடத்தி, அப்புறம் கல்யாணுக்கு அனுப்பின்னு போய்க்கிட்டு இருந்துச்சு.கல்யாணுடன் எங்கள் இமெயில் தொடர்பு எக்கச்சக்க எண்ணிக்கையில் இருந்துச்சு. பாவம் மனுஷர் நொந்து நூலாகி இருப்பார்:-) நொச்சுநொச்சுன்னு நாங்கள் சொல்லிக்கிட்டு இருந்த எல்லா மாற்றங்களுக்கும் பயந்து ஓடாம நின்னு நிதானமா கால்பதிச்சு விளையாடுனார் நம்ம கல்யாண். அதுக்கே அவரைப் பாராட்டணும்!



நியூஸியின் அடையாளங்கள் அதுலெ கண்டிப்பா இருக்கணும். எங்க தமிழ்ச்சங்கத்தில் லொகோ இருக்கணும்னு ரொம்ப டிமாண்ட் செஞ்சுட்டோம்.
இதுக்கிடையில் 'மவுண்ட் குக்' படம் போடலாமுன்னு அதுக்குப் பின்னால் (மலைக்குப் பின்னால் இல்லைங்க) கொஞ்சம் அலைச்சல். பேனர் அளவு, கொஞ்சம் பெருசு என்றதால் நல்ல தெளிவான தரத்தில் உயர்ந்த படம் தேவையா இருந்துச்சு.


ஒரு வழியா எல்லா வேலைகளையும் முடிச்சு அவர் அனுப்பின சி டி வந்து சேர்ந்ததும், ஆரம்பிச்சது இன்னொரு ஓட்டம். அதை இங்கே ப்ரிண்ட் செஞ்சுக்கணுமே. மொத்தம் ரெண்டே இடம்தான் இங்கே இந்த வேலைக்கு இருக்கு. இங்கெ இன்னும் டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் வரலை(-: நாம்தான் அதையும் ஆரம்பிச்சு வைக்கணுமோ? :-))))))


இதுக்கிடையில் பேனர் சம்பந்தமா உதவிக்கிட்டு இருந்த கணேஷ், ஆஸ்தராலியாவுக்குக் குடியேறிட்டாருங்க.

தமிழ்ச்சங்கத்தின் இந்த வருட நவராத்திரி விழாவில் நம்ம பேனரை திறந்துவைக்கும் நிகழ்ச்சியும் நடந்துச்சு. ப்ரைஸ் அடிச்சது யாருக்குங்கறீங்க?
அடியாளுக்குத்தான். ( இது வேற அடியாள். அடியேனுக்குப் பெண்பால்)


தலைவரையே திறந்து வைக்கச்சொன்னேந்தான்..... ஆனா அவர்தான், இதுலெ உங்க பங்கு இல்லைன்னா இது நடந்திருக்காது ( அவர் ஆட்சி காலத்தில்?) நீங்கதான் சரியான தேர்வுன்னுட்டார்.

நம்புனவங்களைக் கைவிட்டதா சரித்திரம் இருக்கா?

நைஸா, எங்க இவரையும் கேட்டேன், 'நீங்க திறந்து வைக்கறீங்களா?' (ச்சும்மா )

ஐயோ..அதெல்லாம் வேணாம். இது உனக்குக் கிடைக்கும் கெளரவம்(!!) நீயே செஞ்சுருன்னார்.(அது....)

கூடவே ரெண்டு வார்த்தையும் பேசணுமுன்னு தலைவர் கேட்டுக்கிட்டார்.
கரும்பு தின்னக் கூலியா? அதெல்லாம் குறை வைக்கமாட்டொம்லெ.
நமக்குத் தொழிலே பேச்சுதானே? :-)))))

திறப்பு நிகழ்ச்சியை ஒரு ரெண்டு நிமிஷ வீடியோ எடுங்கன்னு சொன்னதுக்கு,
ஆஹா ஆஹான்னு 'மணல் கயிறு கிஷ்மு'போலத் தலையை ஆட்டிட்டு,
நிகழ்ச்சியைக் கவனிச்சுக்கிட்டு வீடியோவைக் கோட்டை விட்டுட்டார் நம்மாள். ஆனந்தகண்ணீர் பொங்கிவந்து காட்சியை மறைச்சிருக்கும். இல்லே?


மேலே நிழல்

கீழே நிஜம்




மேடையில் நம்ம மா.சி, கல்யாண், இன்னும் உதவ முன்வந்த பதிவுலக நண்பர்கள், சரியான சமயத்தில் புலம்பெயர்ந்துபோன கணேஷ்ன்னு எல்லாரையும் நினைவுபடுத்தி நன்றி கூறினேன்.

இது நம் பதிவுலக நண்பர்களுக்குக் கிடைச்ச வெற்றி. இந்தக் கைங்கரியத்தில்
உதவ முன்வந்த நல்லுள்ளங்களுக்கும், கல்யாணை அறிமுகப்படுத்திய மா.சி.க்கும் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றி நன்றி நன்றி.

நண்பர் கல்யாண் அவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.

Tuesday, October 23, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 38

18/1
காலையிலே க்ரெளட்டிங் போட எட்டு மணிக்கே ஆளு வந்தாச்சு! இந்த ப்ளம்பர்தான் 7.30க்கு வரவேண்டியவர் வரலை! அப்புறம் இவர் ஃபோன்
அடிச்சப்ப 11 மணிக்கு வரேன்னுட்டும் வரலையாம்! ச்சீன்னு இருக்கு.
இன்னைக்கு லைப்ரரி முடிஞ்சதும் அங்கே ஃபென்ஸிங் போடற வேலைக்கு அளந்து பார்த்து க்வோட் தர ஒருஆளு வரார்ன்னு போனோம். பக்கத்து வீட்டுப்பக்கம் 'ஹோ'ன்னு கிடக்கே. இன்னும் ஏதாவது மரம்கிரம் விழுந்து தொலைச்சால்? அங்கே குடியேறுமுன்னே கூடியவரை எல்லா வேலைகளையும் முடிச்சுக்கணுமுன்னு நினைக்கிறேன்.
அந்த ஆளும் 12.15 வரை வரலை. நாங்க வந்துட்டோம்.


மகள்கிட்டே சொல்லி ஆர்டர் செஞ்ச ஐ லிட் விளக்கு வந்துருச்சாம்! இவர்போய் வாங்கிக்கிட்டு வந்தார்.
வீட்டுக்கு வந்து பகல் சாப்பாடு சாப்பிடறப்ப ஃபென்ஸிங் ஆளு ஃபோன் செஞ்சார். ப்ளம்பரும் 1 மணிக்கு வரேன்னுசொன்னதாலெ இவர்
உடனே கிளம்பிப் போயிட்டார்.


நான் 1.30க்கு ஃபிஸியோதெரபிக்குப் போனேன். முதுகு & இடுப்பு வலி என்னைத் தின்னுகிட்டு இருக்கே! நல்லவேளை, நம்ம பக்கத்து வீடுதான் பிஸியோவின் க்ளினிக். 2.20க்கு வந்துட்டு ஃபோன் செஞ்சு கேட்டேன். ப்ளம்பர் வந்து வேலை நடந்துக்கிட்டு இருக்காம்! மழைதான் வரப்போகுது!

நாலுமணிக்கு இவர்கூட அங்கெ போனேன். இந்த இடுப்புவலி இருக்கறதாலெ என்னாலெ கார் ஓட்டிக்கிட்டுப் போகமுடியுமான்னு தெரியலை!


அடுக்களையிலே டிஷ் வாஷர்ங்க, ஸிங் அப்புறம் ரெண்டு பாத் ரூமுங்கன்னு பைப் கனெக்ஷன் குடுத்திருந்தது!


நம்ம வாஷ் பேஸினுக்கும் பைப் போட்டாச்சு! அந்தக் கண்ணாடியை மூடி வைக்கலாம். ஏதாவது கனமா விழுந்துடுமேன்னு அதுவந்த பாக்ஸ்லே இருந்து தெர்மாகோல் பேக்கை எடுத்தா அதுக்குள்ளெ ஒரு அட்டைப் பெட்டி இருக்கு! கண்ணாடிக்குப் பொருத்தமானது எல்லாம் அதுலேயே வந்திருக்கு!
ஆனா யாருமே அதைப் பார்க்கலை! பாக்கிங்கைக்கூட ஒழுங்காப் பிரிச்சுப் பார்க்க முடியாதா இந்த மக்களுக்கு(-: ஆனா இந்த இந்த சிங்க் வேலை யாருது? கிங்கோடதா? இல்லையாமே.......... கண்ணாடிக்கு பீடம் வச்சதுதான் அவரோட வேலையாம். மத்தபடி வேஸ்ட் ட்ராப், கனெக்ஷன் எல்லாம் ப்ளம்பரோடதாம். என்னாங்கடா இது............

எல்லாம் அரைவேலை அண்ணாச்சிங்க. ப்ளம்பர்கிட்டே காமிச்சு அதையே ஃபிக்ஸ் பண்ணச் சொன்னேன். இதெல்லாம் தனியா வாங்கியாங்கன்னு சொல்லி, நாம் கடைகடையா அலைஞ்சு வாங்கின வேஸ்ட் ட்ராப் எல்லாமெ வேஸ்ட்தான்! இதோட ரசீதை எங்கே வச்சோம்ன்னு தேடி எடுக்கணும். ரசீதில்லாம திருப்பிக் கொடுக்க முடியாது.


இனி கிங் திரும்பி வந்ததும் வாஷ் பேஸின் ஸ்டாண்ட் முகப்புக்கு அடுக்களைக்கு மேட்சா வரும் இருடியம் கலர் போர்ட் வச்சு சரி செய்யணும்.
லாண்டரியிலேயும் பைப்பை வச்சாச்சு! வாஷிங் மெஷினுக்கும் கனெக்ஷன் கொடுத்தாச்சு! இன்னும் நம்ம பாத்ரூம்தான் பாக்கி.


நாளைக்கு காலையிலே 9க்கு வரேன்னுட்டு போயிட்டார் ப்ளம்பர். வந்தாதான் வேலை நடக்கும். வருவாரான்னு தெரியலையே!


19/1
இவருமட்டும் காலையிலே எட்டேமுக்காலுக்குப் போனார். எனக்கு இன்னைக்கு 8.50க்கு ஃபிஸியோ போகணும்! இங்கேயும் ஒரு நாளுக்கு ஒரு நேரம்:-)


பத்தரை மணிக்கு வந்து, என்னையும் கொண்டுபோனார். நம்ம பில்டரும் வரேன்னு ஃபோன் செஞ்சாராம். மைட்டர் 10 க்குப்
போய் ரெண்டு டோர் ஸ்டாப்பர் வாங்கிக்கிட்டுப் போனோம்.
க்ரேக் வந்ததும் என்னென்ன செய்யணும்ன்னு சொன்னேன். எல்லா டாய்லெட்லேயும் பேப்பர் ஹோல்டர் போட்டாச்சு. கதவுங்களுக்கும்
ஸ்டாப்பர் போட்டாச்சு. நம்ம பாத்ரூமுக்கு ஷாம்பூ வைக்க ஒரு கண்ணாடி ஸ்டேண்ட் வாங்கியிருந்தது போடணும். இப்பப் பார்த்தா
அதை எப்படி ஃபிக்ஸ் செய்யணும்ன்னு தெரியலையாம். க்ரேகை அங்கே நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ் போய் பார்த்துட்டுவரச் சொன்னேன்.
பார்த்துட்டு வந்து சொல்றாரு அவுங்க தப்பான ஃபிட்டிங் கொடுத்துட்டங்களாம். இவுங்க எல்லாம் என்ன வேலை செய்யறாங்க. எடுத்துக் கொடுக்கும்போது சாமான்களைப் பார்க்கவே மாட்டாங்களா?


சொல்லி வாய் மூடலை. ப்ளம்பர் சொல்றாரு, நாம வாங்கிவச்ச டாய்லெட் அந்த இடத்துக்கு சரிவராதாம்! பைப் வெளியே தெரியுமாம்.
அதுக்கு முதலிலேயே பைப்பைத் தள்ளிப் போட்டிருக்கணுமாம்!
சரி. அந்த பைப்பை போட்டது நீதானே? முதலிலேயே எந்த மாதிரி டிஸைன் டாய்லெட்ன்னு சொல்லியிருக்கோம் இல்லையா? அதுக்கேத்தமாதிரி
ஏன் பைப் செட் செய்யலை?


நமக்கு நல்லதாப் போடலாம்ன்னுதான் கொஞ்சம் விலைகூடிய டாய்லெட் வாங்கினோம். இப்ப மத்த பாத்ரூம்லே போட்டதே வாங்கணும்.
இதைத் திருப்பிக் கொடுத்துடலாம். ப்ரச்சனை இல்லை. ஆனாலும் நமக்கு வேண்டியது கிடைக்காது.......அட்ஜஸ்ட்மெண்ட்!!!!!!!! காம்ப்ரமைஸ்!!!!!


இவர் உடனே மாஸ்டர் ட்ரேட்க்குப் ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொன்னார். அது வர ரெண்டு நாள் ஆகுமாம். இந்த ப்ளம்பரை இப்ப
விட்டுட்டா மறுபடி பிடிக்கறது கஷ்டமாச்சே! வேற வழி என்னன்னு கேட்டப்ப, நாமே அவுங்களோட வேர்ஹவுஸில் போய் எடுக்கறதா
இருந்தா இப்பவே கிடைக்குமாம்! இவர் ஓடுனாரு. கொஞ்ச நேரத்துலே கொண்டுவந்துட்டார்.


நான் அதுவரைக்கும் அங்கெயே உக்கார்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிச்சுக்கிட்டே இருந்தேன். ஒரு காப்பி கொண்டு வச்சது நல்லதாப்
போச்சு. இவர் வந்தவுடனெ நான் கார்லெ போய் உக்கார்ந்துகிட்டு, அங்கே வச்சிருந்த வாழைப்பழத்தைச் சாப்பிட ஆரம்பிச்சேன்.
இவர் ஓடி வரார். என்னன்னா, அவர் கொண்டுவந்த டாய்லெட் தப்பான டிஸைனாம். நமக்கு 'எஸ்' ட்ராப் வேணுமாம். ஆனா 'பி ட்ராப்'
கொடுத்துட்டாங்களாம். மறுபடி ஓடு...........



இவர் புலம்பிக்கிட்டே வரார். கொண்டு போறதுக்குள்ளெ ப்ளம்பர் போயிடுவானென்னு பதறரார். தெருமுனையிலே திரும்புறப்பவே
ப்ளம்பரின் வண்டி இன்னும் நம்ம வீட்டு முன்னாலெ நிக்கறதைப் பார்த்ததும்தான் உயிரே வந்துச்சு! போய்ச் சேர்ந்தப்ப இன்னும்
சில வேலைகளை முடிச்சிக்கிட்டு இருந்தாங்க. இந்த டாய்லெட்டையும் போட்டு முடிச்சாச்சு. அப்புறம் நான் போய் எப்படி வந்திருக்குன்னு
பார்க்கறேன்.....! ம்ம்ம்ம்ம்.... இருக்கற இடத்தை சென்டர் செய்யாம ஒரு பக்கமா இருக்கு! இதைப் போடறதுக்கு முன்னாலெயே
டாய்லெட் பேப்பர் ஹோல்டரை பதிச்சாச்சு! எல்லாமெ ஒரு விதம்தான்.......... அதை எடுத்தா அங்கே டைல்ஸ்லே ஒரு ஓட்டை
வந்துருமே! சரி. இது இப்படித்தான் அமைஞ்சதுன்னு நினைச்சுக்கிட்டேன்!


அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு, 'ஹப்பர்ஸ்' கடைக்குப் போனோம். அங்கே இன்னோரு கூத்து!

காலையிலேயே ஃபோன்லெ அந்த ஆளு (சேல்ஸ்மேன்) ஷேன் 9500 ஆகும்ன்னு சொன்னார். நாங்க போனப்பவும்
அதையேதான் சொன்னார். ஆனா சொன்ன விதம்?


" எங்க கடை உரிமையாளர் இப்ப லீவுலே இருக்கார். அவர்கிட்டே கேட்டுட்டு உங்களுக்கு விலை குறைச்சுத் தரேன். நீங்க
50 மீட்டர் கார்பெட் வாங்கறதாலே விலை கட்டாயம் குறைக்கலாம்"
முதல்தடவை போனபோது இது அவரே எங்ககிட்டே சொன்னது!
இன்னைக்கு? '9500 ஆகும். அதுக்குக் கீழே விலை குறைக்க முடியாது. ஐ டோண்ட் கேர் இஃப் யு ஆர் நாட் பையிங்'ன்னு அவரோட 'பாஸ்' சொன்னாராம்.



என்ன விலை போட்டிருக்காங்கன்னு பார்த்தா அவுங்க ஏற்கெனவே போட்டிருக்கற 'ஸேல் ப்ரைஸ்'தான்! எங்கே குறைச்சாங்க? ஆனா கார்பெட்
போடும் லேயரிங் சார்ஜ் மட்டும் குறைச்சுருக்காங்க. அதுக்கு வேற சப் காண்ட்ராக்ட். அது போகட்டும்.


" எங்க பாஸ் இப்படிச் சொல்லிட்டார். அவர் பேச்சை என்னாலே மீற முடியாது. சாரி"


இப்படிச் சொல்லியிருந்தா, சரின்னு அங்கெயே வாங்கி இருப்பேன்!
கொஞ்சம் கொஞ்சமா இவரே 'பாஸ்' ஆயிட்ட மாதிரி, 'ஐ டோண்ட் கேர் இஃப் யு ஆர் நாட் பையிங்'ன்னு சொன்னதும் எனக்குக்
கோவம் வந்துருச்சு! நாம என்ன சும்மாவா வாங்கறோம். வைனல் சேர்த்துக் கிட்டத்தட்ட 12,000 டாலர்! நம்ம ஊர்க்கணக்குலே
மூணு லட்சத்து அறுபதாயிரம்! ச்சும்மா வருதா? நீ இல்லேன்னா ஆயிரம் கடை! உனக்கு எங்க காசுவர்றதுக்கு கொடுப்பனை
இல்லென்னு நினைச்சுக்கிட்டு வந்துட்டோம்!


வர்ற வழியிலேயே ஃபோன். 'ப்ளம்பிங் வொர்ல்ட் கேஸ்' ஆளு வந்து எல்லாத்தையும் சரியா கனெக்ஷன் ஆகி வேலை செய்யுதான்னு பார்க்க வர்றாராம்! அவர் ஒரு சான்றிதழ் கொடுக்கணும். அப்பத்தான் கடைசி இன்ஸ்பெக்ஷன் வேலை நடக்கும்!


வந்து பார்த்துட்டு, புது அடுப்பு எப்படி வெலை செய்யுதுன்னு காமிச்சார். அப்படியே சுடுதண்ணியோட வெப்பநிலை சரி செய்யறது எல்லாம்
செக் பண்ணிட்டு நாங்க என்ன செய்யணும்ன்னும் சொல்லிக் கொடுத்துட்டு அப்படியே ஒரு சர்ட்டிஃபிகேட் எழுதிக் கொடுத்துட்டுப் போனார்!



மத்தியானமா 1.30க்கு மில்லர்ஸ் ஆளுவந்து கர்ட்டெயின் ட்ராக் போட ஆரம்பிச்சார்! பேரு ட்ராவர். அப்பத்தான் தெரியுது ஜன்னலுங்களைக்
கொஞ்சம் கோணையா வச்சிருக்கறது!!!!!!!!!!!!!!! அட்ஜஸ்ட் செஞ்சு போட்டாச்சு!

தொடரும்....

------------------------------------

Sunday, October 21, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 37

11/1
நம்ம லைப்ரரி, கிறிஸ்மஸ் லீவு முடிஞ்சு நேத்துத் திறந்துட்டோம்.! எனக்கு இன்னைக்கு ட்யூடி இருக்கு. அதுக்குப் போயிட்டு மத்தியானம்
புது வீட்டுக்குப் போனோம்! ஒரு மணிக்கு 'மில்லர்ஸ்' கடை 'கே புல்லன்' வந்து ஜன்னலுங்களை அளந்தாங்க!


அப்புறம் இன்னும் சில இடங்களிலே கார்ப்பெட் பார்த்தோம். ப்ளென்ஹம் ரோடு கென்னடி ஃப்ளோரிங்''லே முன் வாசலுக்கு
கோலம் டிஸைன் போட கலர் தெரிந்தெடுத்துச் சொல்லிட்டு வந்தோம்.
மில்லர்ஸ் ஃபோன் வந்தது. அங்கேயும் 1050 டாலர்தான் சொல்றாங்க. அட்லீஸ்ட் இங்கே கர்ட்டன் ஸ்பெஷலிஸ்ட் என்றபடியாலே
இவுங்களுக்கு அனுபவம் இருக்குமேன்னு அங்கெயெ கொடுக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம். ஒருதடவை சின்னப் பொண்ணுன்னு இரக்கப்பட்டுப்
'பட்டது' போதாதா? நம்ம ரைலாக் பொண்ணைத்தான் சொல்றேன்!


சாயந்திரம் நம்ம கிங் வந்து வாஷ் பேஸின் ஸ்டாண்ட் ஃபிக்ஸ் செஞ்சார். நாளைக்கு அமெரிக்கா போறாராம். வர ரெண்டு வாரம் ஆகுமாம்.
அவரோட அண்ணனுக்கு உடம்பு சரியில்லையாம்!


12/1
காலையிலே 9 மணிக்கு கிங்கோட ஃபோன். அந்த ஸ்டேண்டுக்கு ரெண்டு ஸ்க்ரூ போட்டு வைக்கப்போறாராம். ப்ளம்பர் வந்து உடைச்சுடுவார்
என்ற பயம்தான்! பாவம் ஊருக்குப் போற அவசரத்திலும் இதே ஞாபகம்! வெள்ளைக்காரன் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கவே மாட்டான்!
இன்னைக்கும் கார்பெட் வேட்டைதான்! ஹப்பர்லேதான் கொஞ்சம் விலைமலிவா இருக்கு. 9700 சொல்றாங்க! அங்கெயே வைனல்க்கும்
சொல்லிட்டு வந்தோம்!

13/1
இன்னைக்கு 'போகிப் பண்டிகை!' இன்னையோட மார்கழி மாசம் முடியுது! காலையிலே பில்டர்கிட்டேயிருந்து ஃபோன். அங்கே வெளியே
காத்திருக்காராம். இவர்போய் என்ன செய்யணும்ன்னு சொன்னார். நம்ம பாத்ரூமிலே வேஸ்ட் பைப் சரியில்லையே. அங்கே பழையபடி
தோண்டியாச்சு! ஆரம்பிச்சுட்டாங்கப்பா............இன்னும் எத்தனை இடத்துலே மறுபடி தோண்டறது இருக்கோ!


அப்புறம் 10.30க்கு நாங்க போனோம். அந்த கார்பெட் துண்டுங்களை வச்சுப் பார்த்தோம். வைனல் நல்லாவே இருக்கு. கார்பெட்டும் பரவாயில்லை!
அங்கிருந்து கிளம்பி, ஒரு வீடு (விலைக்கு வருது 'ஓப்பன் ஹோம்') பார்த்துட்டு அங்கிருந்து ஹப்பர்ஸ் போனோம். வைனல், கார்பெட் ரெண்டும்
முடிவு செஞ்சாச்சு! ஆனா விலைதான் $11944 வருது. இதைக் கொஞ்சம் குறைச்சுத்தந்தா வாங்கலாம்ன்னு முடிவு. சொல்லிட்டு வந்தோம்.
அதைப் போடறதுக்கும் இந்த மாசக் கடைசி 31க்கும், மறுநாளுக்கும் ஏற்பாடு செஞ்சாச்சு. பார்க்கலாம் எப்படிப் போகுதுன்னு!


மில்லர்ஸ் கே புல்லன் கூப்பிட்டு வெறும் நெட் கர்ட்டெயின் $940 வருமாம். கொள்ளை! அப்புறம் விவரம் கேட்டேன். 42 மீட்டர் துணி
வேணுமாம். 8.95மீட்டர். 72$க்கு டேப்பும் ஹூக்கும் பாக்கி தையல் கூலியாம்! நானே தைக்கறேன்னு சொன்னேன். நாளைக்குக்
காலையில் போய் அதைப் பத்திப் பேசணும்! நானே தைச்சா 415லே வேலை முடிஞ்சிடும்! 525 மிச்சம் பிடிக்கலாம்!


மத்தியானமா இரும்பு கேட் & ஃபென்ஸிங் செய்யற இடத்துக்குப் போனோம். அங்கே கேரி என்றவர், (அவரே அந்த நிறுவனத்தின் உரிமையாளர்) எல்லா டிஸைன்களையும் காட்டினார். நாளைக்குக் காலையிலே 8 மணிக்கு நம்ம சைட்டுக்கு வந்து அளந்துகிட்டுப் போயிட்டு அப்புறமா என்ன
செலவாகும்ன்னு க்வோட் கொடுப்பாராம்!


14/1
இன்னைக்குப் பொங்கல் பண்டிகை! தை மாசம் பொறந்தாச்சு. ராத்திரி சரியாவே தூங்கலை. ஒரே வலி! இடுப்பு விட்டுப் போகுது! காலையிலே நிதானமாத்தான் எழுந்தேன். இவர் எட்டு மணிக்கு அங்கே போயிட்டு கொஞ்ச நேரத்துலெ திரும்பி வந்தார். கேரி வந்து அளந்தாச்சாம்!


இன்னைக்கு சக்கரைப் பொங்கல், வடை செஞ்சேன். அவ்வளவுதான்! வேற ஒண்ணும் செய்ய முடியாது. வலி நம நமன்னு பிடுங்கிக்கிட்டே
இருக்கு!

சாப்பாடானபிறகு, டைல்ஸ் கடைக்குப் போய் ஆர்டர் கொடுத்திருந்ததை வாங்கிக்கிட்டு வந்தோம்! நாளைக்குப் பால் காய்ச்சலாம்ன்னு இருக்கு!
அதுக்குண்டான சாமான் எல்லாம் எடுத்து வைக்கணும்! சூரியன் உதிக்குமுன்னே பூஜை பண்ணிட்டா நல்ல நேரம் தேடவேணாமுன்னு எங்க
பாட்டி சொன்னது( இதெல்லாம் மட்டும் தேவைக்குன்னு நினைவு டாண் னு வந்துரும்!) இங்கே இப்ப கோடைகாலம். பகல்நேர சேமிப்பு ஒரு மணிநேரம் கடிகாரத்தை முன்னோக்கி மாத்தியிருக்காங்க. உலகின் கோடியில் இருக்கோமா...... அதுலே சூரியனும் ஊருக்கு முன்னாலே வந்துருவான்!

15/1
நாள் நல்லா இருக்காம். இன்னைக்குப் பால் காய்ச்சணும்! அதுக்காக காலையிலே 4 மணிக்கே எழுந்து குளிச்சு, கொஞ்சமா ஒரு ப்ரசாதம் பண்ணி எடுத்துக்கிட்டு (எல்லாம் நம்ம கேசரிதான்)
அஞ்சரைமணிக்கு அங்கே போனோம். போறப்ப நம்ம நண்பர் கணேஷ் வீட்டுக்குப் போய் அவரையும் கூட்டிக்கிட்டுப் போனோம்!


என் இஷ்டம்ன்னு விட்டா என்னுடைய க்ரஹப்பிரவேச ப்ளான் வேறு மாதிரி. எதுக்கும் இவர் ஒத்துவராம இருந்ததாலே உனக்கும் வேணாம் எனக்கும் வேணாமுன்னு இப்படி வைச்சாச்சு! என் ப்ளான்படி வீட்டுக்குள் வரவேண்டிய மாடுகளும் கன்றுகளும் இப்ப அடுக்களை ஜன்னல்கட்டையில் உக்கார்ந்துருக்காங்க.


அங்கே ஸ்வாமிப் படம் வைச்சு, விளக்கு ஏத்தி, பாலைக் காய்ச்சியாச்சு! நேத்தே 'கேஸ் சிலிண்டர்' வந்துருச்சு. ஆனாலும் அந்த அடுப்பு
விவரம் சரியாத் தெரியாததாலே, ஒரு சின்ன 'ரைஸ் குக்கர்' வச்சு அதுலேயே பாலைப் பொங்க வைச்சேன்!



அப்புறம் ப்ரசாதம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். எட்டு மணிக்கு மோஷீன் வந்து பாக்கி இருக்கற வேலையை முடிக்கப்போறாராம்!
மோஷீன் வந்து நம்ம பாத்ரூம் ஷவர் ஏரியாவுலே வேஸ்ட் பைப்பை சரியா வச்சு அங்கே காங்க்ரீட் போட்டார். அதுக்கே கிட்டத்தட்ட பாதிநாள்
முடிஞ்சிடுச்சு!


பாக்கியான மற்ற டைல்ஸ் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்தோம். நேத்து வாங்கிவந்த டைல்ஸ் குறைவா இருக்காம்! நாம் 18 கேட்டிருந்தோம்.
அவுங்க நமக்குத் தந்த பெட்டியிலே 11தான் இருக்காம். இன்னும் 7 வேணுமே! நேத்தே விவரத்தைப் போன்லே சொன்னோம். அவுங்க
7 தரேன்னு சொல்லியிருந்தாங்க. அதையும் வாங்கிக்கிட்டு அப்படியெ கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.


சாயந்திரம் நம்ம தமிழ் சங்கத்திலே ஒரு மீட்டிங். ட்சுநாமியிலே இறந்தவங்களுக்காக ஒரு நினைவு அஞ்சலி! அப்புறம் மகளும் வந்தாள்.
கொஞ்சம் பிரசாதம் கொடுத்து அனுப்புனேன்.

16/1
இன்னைக்கு 'மில்லர்ஸ்' கடையிலே ரெடிமேட் தெர்மல் பேக் உள்ளத் திரைச்சீலைகள் வாங்கினோம். இங்கே அங்கேன்னு அலைஞ்சு பார்த்ததிலெயெ நேரம் போயிடுச்சு!

17/1
காலையிலெ எட்டு மணிக்கு மோஷீன் வந்தாச்சு. சாயந்திரம் வரைக்கும் வேலை செஞ்சுக்கிட்டே இருந்தார். ஒருவழியா டைல்ஸ் போட்டு
முடிச்சாச்சு! நாளைக்கு க்ரெளட்டிங் போடுவாராம்!


கேரியும் வந்து லைட்டிங் வேலைகளையெல்லாம் 99% முடிச்சுட்டார்.காலிங் பெல் போட்டாச்சு!
ஆன்ஸ்யூட் பாத்ரூம் ஷவர்க்கு கண்ணாடி அளவெடுக்க ஆளுங்க வந்தாங்க.
வார்டுரோப் போடற ஆளு வந்து வேலையை ரொம்ப நீட்டாச் செஞ்சுட்டுக் காசு வாங்கிக்கிட்டுப் போனார்!




ரைலாக் ஆளுங்க லீசாவும் டோனியும் வந்து அவுங்களோட வேலை நேர்த்தி(?)யைப் பார்த்துட்டுப் போயிருக்காங்க.

வந்து எல்லாத்தையும் சரி செய்யப் போறாங்களாம்!
நாங்க மாஸ்டர் ட்ரேடுலே போய் வேஸ்ட் மாஸ்டர் வாங்கிக்கிட்டு வந்தோம். நாளைக்குக் காலையிலே ப்ளம்பர் வராராம்!


தொடரும் ........

=========================

Thursday, October 18, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 36

5/1
புதுவருசத்து லீவு முடிஞ்சு எல்லாரும் வேலைக்கு வர ஆரம்பிச்சாச்சு.
சில இடங்களில்தான் ரெண்டு மூணு வாரம்னு வருசாந்திர லீவு வுடுவாங்க.
மத்தியானம் டைல்ஸ் டெலிவரி எடுக்க இவர் போனார். அது கனமா இருக்குமே! அதைத் தூக்கிட்டு இடுப்புப் புடிச்சுக்கிட்டா அதுவேற வம்பு!
அதனாலெ யாரையாவது உதவிக்குக் கொண்டுபோங்கன்னு சொன்னேன். நான் தான் இடுப்பு ஒடிஞ்சு கிடக்குறேனே! மகளோட நண்பர் வந்தாராம். நேத்தும் ஆஸ்பத்திரிக்கு வந்து ரொம்ப நேரம் இருந்துட்டுப் போனாராம்.
ட்ரைலர் கொண்டுபோய் அப்படியே பெல்லட்டுலே கொண்டுவந்ததைப் பிரிச்சு அடுக்கிட்டாங்களாம்! பாவம் அந்தப் பிள்ளை. நல்லா இருக்கட்டும்! ராத்திரிக்கு அவுங்க ரெண்டு பேருக்கும் 'தண்டூரி பேலஸ்''லே சாப்பாடு வாங்கிக் கொடுத்தோம். ச்சும்மா ஒரு நன்றிக்குத்தான்!





சாயந்திரம் மோஷீன் ( டைல்ஸ் போடறவர்) வந்து பார்த்துட்டுத் தண்ணீர் வெளியே போறதுக்கு வச்ச பைப் சரியில்லேன்னு ஒரு பாட்டம்
அழுதுட்டுப் போனாராம். ஆளாளுக்கு ஒண்ணு சொல்லிக்கிட்டெ இருக்காங்க. அந்த ஆளு முதல்லேயே பில்டர்கிட்ட எப்படி இருக்கணும்ன்னு
சொல்லியிருக்கலாம். அட்லீஸ்ட் நம்ம கிட்ட சொல்லியிருக்கலாம்தானே. இப்ப சொல்றார் பில்டருக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்ன்னு!



கிங் வந்து வாஷ்பேஸின் டிஸைன் காமிச்சார். நல்லா இருக்கு. சரின்னு சொல்லிட்டேன்! அதுக்கு பைப் வாங்கணும்!


6/1
இன்னைக்கு ரெண்டு பாத்ரூமுக்கும் அண்டர்டைல் ஹீட்டிங் போட ஆள் வந்துச்சு. இவர் 9 மணிக்குப் போய் கதவைத் திறந்து வச்சார்.
ஒரு மணி நேரத்துலே போட்டாங்களாம். அப்படியே அடுக்களையிலே ஒயர் நல்லா இருக்கா, டேமேஜ் ஆச்சான்னு செக் செஞ்சாங்களாம்.
எல்லாம் நல்லாத்தான் இருக்காம்!




மத்தியானம் 'ஒடஞ்ச' இடுப்போட மில்லர் கடைக்கு திரைச்சீலை பார்க்கப் போனேன். அங்கிருந்து 'ஜான் டைலர்' கடைக்குப் போய்
அங்கே வைனல், கார்பெட் எல்லாம் பார்த்துட்டு செலக்ட் செஞ்சுட்டு வந்தோம். இங்கே கார்பெட் 180$ ஒரு மீட்டர். நம்மாலெ கட்டுபடியாகாது! இதே டிசைன் வேற இடத்துலே பார்க்கணும்! எதானாலும் நாளைக்கு பகல் 2 மணிக்கு அந்தப் பொண்ணு கரேன் வராங்க, ஜன்னலுங்க அளவெடுக்க!


இடுப்புவலி இன்னைக்கு ரொம்ப ஜாஸ்தி. நம்பர்லே சொல்லணும்ன்னா 9 ! மகள் வாங்கிவந்த ஹாட்வாட்டர் பாட்டில் ( பாட்டில் என்ன பாட்டில்
எல்லாம் ரப்பர் பேக்தான்) ரொம்ப உபயோகமா இருக்கு! அதுலே சூடுதண்ணீ ரொப்பி வச்சிக்கிட்டு இருக்கேன். முதுகுக்கு இதமா இருக்கு!



7/1
காலையிலே எட்டு மணிக்கு மோஷீன் வந்துட்டாரு. கூடவே ஒரு அசிஸ்டெண்ட். வேலையை ஆரம்பிச்சாச்சாம். இவர் வந்து சொன்னாரு.
அப்படியே கொஞ்சம் ஃபோட்டொ எடுத்துட்டு வந்தாரு.
நான் ஒரு மணிக்கு அங்கெ போனேன். பவுடர் ரூம், பாத்ரூம் போட்டுட்டாங்க.






இப்ப ஆன்ஸ்யூட் பாத்ரூம். நம்ம பில்டர் சரியாவே ஃப்ரேம்
அடிக்கலே.எல்லாம் ஒண்ணும் பாதியுமா! 'மால்கம்'(ப்ளம்பர்) வந்து பார்த்துட்டு, வேஸ்ட் வச்சது சரியில்லைன்னுட்டுப் போனார். அந்த இடத்தை விட்டுட்டு மத்த இடத்துலே இப்ப வேலையை முடிக்கணும்ன்னு முடிவாச்சு!




ஒண்ணு பார்த்துட்டோம். எல்லோரும் அடுத்தவங்களைக் குறை சொல்லிக்கிட்டே இருக்காங்க! யாரோட வேலை எதுன்றது இன்னுமே புரியலை!


அடுத்து ஒரு வீடு கட்டுனா, முதல்லே பில்டர், ப்ளம்பர், எலக்ட்ரீசியன், டைல்லர் வெளியே பூசறவங்க, பெயிண்டர் எல்லோரையும் கூப்பிட்டு
ஒரு மீட்டிங் வச்சு, எல்லோரும் எப்படி அடுத்தவங்களோட சேர்ந்து வேலை செய்யணும்ன்னு சொல்லி, யார் யாரு என்ன வேலைன்னு
க்ளியர் கட்டாப் பேசி முடிவு செய்யணும்! ( விடிஞ்சது போ, இந்த ஆசைவேற இருக்கா?)



முதல்லே இந்த வீடு முடியட்டும்! இதுவரைக்கும் வேலை செஞ்சவுங்கள்லெ நல்லா நம்பகமான வேலைன்னா நம்ம கிங் மட்டும்தான்!
மத்தவுங்க எப்படியோ வேலையை முடிச்சிட்டுக் காசு வாங்கறதுலேயே இருக்காங்க!



ரெண்டு மணிக்கு அந்த ஜான் டெய்லர் கடை கரேன் வந்து ஜன்னலுங்களை அளந்துகிட்டுப் போயாச்சு! நாளைக்கு 10 டு 1 கடை
இருக்காம். நாம போய்ப் பார்த்து கர்ட்டெய்ன் ராட் முடிவு செய்யணும்!



8/1
ராத்திரி சரியான தூக்கம் இல்லே. முதுகு பயங்கர வலி! வலியாலெ எனக்குக் கோவம் வருது! இவர் உதவி செய்யறேன்னு சொல்லிக்கிட்டே
இருப்பார். ஆனா செஞ்சாலும் அது நமக்கு வேண்டப்பட்டதா இருக்காது. சொன்னா இவருக்கும் மூக்குக்கு மேலே கோவம்! ரெண்டுபேரும்
மாறி மாறிக் கத்திக்கிட்டே இருக்கோம்.



காலையிலே 8க்குப்போய் கதவைத் திறந்தார். டைல்லர்ஸ் வந்திருக்காங்க.
10 மணிக்கு நாங்க போனோம். ரெண்டு இடம் முடிச்சாச்சு! க்ரெளட் போட்டுகிட்டு இருந்தாங்க! சுவர்லே டைல்ஸ் எப்படிவரும்ன்னு சொன்னாங்க.
தரை மட்டம் சுமாரா இருக்கறதாலெ நாம நினைச்சபடி இருக்காதாம்! எப்படியோ தொலையட்டும்ன்னு இருக்கு!


அப்புறம் ஜான் டெய்லர் கடை கரேனைப் பார்த்து என்ன மாதிரி ஃபினியல், எந்தக் கம்பின்னு சொல்லிட்டு வந்தோம். அவுங்க ஒரு க்வோட் அனுப்புவாங்க.



அப்படியே 'ஹப்பர்ஸ்'லே கார்பெட் சாம்பிள் வாங்கிட்டு வந்தோம். அதுக்குப் பக்கத்துக் கடையிலே இருந்து காலமெ ஃபோன் வந்தது. நாம கேட்ட
சோஃபா வந்திருக்காம். அதையும் போய்ப் பார்த்துட்டு நாலு இன்ஸ்டால்மெண்ட்டா (வட்டி இல்லையாம்) காசு அடைக்கலாம்ன்னு அவுங்க சொன்னதாலெ ஆர்டர் கொடுத்துட்டு வந்தோம்.
அப்பவே மணி 1.30 ஆயிருச்சு. மோஷீன் வேலையை முடிச்சாச்சாம். போய் வீட்டைப் பூட்டிட்டு வந்தோம். சுவத்துலே கொஞ்சம் பதிச்சு வச்சிருக்காங்க!



நாளைக்கு ஞாயிறாச்சே! நாளை மறுநாள் மறுபடி காலையிலே 8 க்கு வராங்களாம்!


9/1
ஒரு பத்துமணிக்கு போன் வந்தது. கூப்பிட்டது நம்ம கிங். 11 மணிக்கு லாண்டரி டைல்ஸ் பதிக்க வராறாம். கோபால்தான் 11 மணிக்கு
அங்கெ போனார். ச்சும்மா ஒரு 8 டைல்ஸ்தான். சீக்கிரம் முடிச்சாச்சு. மறுபடி சாயந்திரம் 6 மணிக்கு வந்து க்ரெளட்டிங் போடப் போறாராம். கிச்சன் & லாண்டரி ஏரியா கிங்கின் பொறுப்பு.




மத்தியானமா நாங்க ரெண்டுபேரும் போய் ஒரு பார்வை பார்த்துட்டு ஒரு 'பெருமாள்' படத்தை மாட்டிட்டு வந்தோம். அங்கிருந்து 'ப்ளேஸ்
மேக்கர்' போய் லாண்டரி டப்புக்கு ஒரு ஸின்க் பைப் வாங்கினோம். அப்படியே சில ஃபர்னிச்சர் கடைங்களுக்குப் போனோம். ஒரு
ஹால் டேபிள் வாங்கத்தான். ஒண்ணும் சரியா இல்லே. ஆனா ஒரு இடத்துலே சூப்பர்கிங் பெட் ஹெட் கிடைச்சது. $279. நேத்துப் பார்த்த
இடத்துலே 414$. இது அதைவிட மலிவாச்சே. உடனே ஆர்டர் கொடுத்துட்டோம்.


முந்திமாதிரி இல்லாமல் வாரம் ஏழுநாளும் கடைகள் திறந்துவைக்கறது எவ்வளோ வசதியா இருக்கு பாருங்க:-)

10/1
இன்னைக்கும் மோஷீனும் உதவியாளரும் வந்து டைல்ஸ் போட்டாங்க. நாங்க இந்த கார்ப்பெட் செலக்ஷனுக்காக அங்கெ இங்கேன்னு சுத்திக்
கிட்டு இருந்தோம். அப்ப மோஷீன் ஃபோன்லெ கூப்பிட்டுச் சொல்றார், சுவர் டைல்ஸ் பத்தாதாம்! தப்பாக் கணக்குப் போட்டுட்டாராம்!
இன்னும் ஒரு 12 டைல்ஸ் வேணுமாம்! சரின்னுட்டு அங்கே போய்ப் பார்த்துட்டு, மறுபடி டைல்ஸ் கடைக்குப் போய் ஆர்டர் கொடுத்தாச்சு!
அதுவும் ஆக்லேண்டில் இருந்து வரணுமே! அது வெள்ளிக்கிழமைதான் வருமாம்!



ஜான் டெய்லர் கடை கரேன் ஃபோன் செஞ்சு 1050 டாலர் ஆகும், இந்த கர்ட்டெய்ன் ட்ராக் மட்டும் போடன்னு சொன்னாங்க. ஏதானாலும் நாளைக்கும் இன்னோரு க்வோட் கொடுக்க ஆளு வருதே. அதையும் பார்த்துக்கிட்டு முடிவு செய்யலாம்ன்னு இருக்கோம்.


தொடரும்.....................

-----------------------

Tuesday, October 16, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 35

1/1/05
இன்னைக்கு மத்தியானம் 12.30க்கு கோபால் வந்துட்டார். சாப்பிட்டதுக்கு அப்புறம் அங்கே போனொம். என்னென்னெ வேலை நடந்துச்சுன்னு
சொன்னேன். கதவுங்களுக்குப் பெயிண்டிங் சரியா இல்லைன்னு ஒரு அபிப்ராயம். என்னன்னு பார்க்கணும். சாயங்காலம் கோவிலுக்குப் போய்வரணும். எல்லாருக்கும் புதுவருசம் நல்லபடியா இருக்கணும்.


2/1
கிங் 11 மணிக்கு வர்றதா ஃபோன் செஞ்சார். அங்கே போனோம். அடுப்புக்குப் பின்னாலெ வைக்கற 'ஸ்ப்ளாஷ் பேனல்' கண்ணாடியை
சரியா வச்சு அதுக்கு சிலிகான் போட்டு ஒட்டிட்டுப் போனார். நாங்க அதுக்கப்புறம் சண்டே மார்கெட் போயிட்டு அப்படியே 'மைட்டர் 10'க்குப்
போய் ஸ்பைரல் லைட் ஒண்ணே ஒண்ணு வாங்கிவந்து போட்டுப் பார்த்தோம். கொஞ்சம் வெளியே நீட்டுதுன்னு ஒரு தோணல்.


அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிட்டுட்டு, லைட்டிங் கடைக்குப் போய் ஒடஞ்ச கண்ணாடிக்கு ரீப்ளேஸ்மெண்ட் வந்ததை வாங்கிக்கிட்டு
(பல்பும் குடுத்தாங்க!)வந்தோம்! இந்த பல்பு ஒரு நோணாவட்டம். வெறுங்கையாலெ தொடக்கூடாதாம். நம் கையில் இயற்கையாக இருக்கும்
எண்ணெய்ப்பசை அதில் ஒட்டிருமாம். ஒட்டுனா? அந்த இடம் மட்டும் சூடாகி
பல்ப் வெடிச்சுருமாம். ஒரு டிஷ்யூ பேப்பர்லெ பிடிச்சுக்கிட்டுத்தான் பல்ப் மாத்தணுமாம். ஒரு இஞ்சு நீளம்தான் இருக்கு. இதுக்கு இப்படி ஒரு சவரட்சணை:-)


3/1
இன்னைக்கும் அங்கெ போனோம். இப்ப கிறிஸ்மஸ் லீவு நடக்குது. இவர் 24 தேதிக்குத்தான் வேலைக்குப் போவார். கொஞ்ச நேரம் ச்சும்மா
ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு அப்படியே மாஸ்டர் பெட்ரூம்லே இருக்கற ஸ்ட்ரிப் லைட் பல்பு புதுசு போட்டுட்டு வந்தோம். கொஞ்சம் ஃபோட்டோவும்
எடுத்தேன். அதையெல்லாம் இந்தக் கம்ப்யூட்டரில் போடும்போது ரொம்பத் தகராறு!


4/1
காலேல ஒரு 10 மணிக்குப் போய் சும்மாகொஞ்சநேரம் இருந்துட்டு, அப்படியே ஜன்னலுங்க அளவெல்லாம் எடுத்தோம். திரைச்சீலை போடணுமே!
இது ஒரு வேலையத்த வேலை! கண்ணாடியா வைக்கறதாம் அப்புறம் துணியான துணிபோட்டு மூடறதாம்.




மத்தியானம் ப்ளேஸ்மேக்கர் போய் ஷெல்ஃப் பலகை பார்த்துட்டு அப்படியே காய் வாங்கப் போனோம். வாங்கிக்கிட்டு பேசாம வந்திருக்கலாம்.
விதி நம்மளை பீச்சுக்குக் கொண்டு போச்சு! அங்கே ஒரு மரத்துக்கு முன்னாலேதான் பார்க்கிங். ஒண்ணும் தெரியலே. வேற இடத்துலே
நிறுத்தலாம்ன்னு பார்த்தா ஒரு இடம் இருந்துச்சு. அங்கே இடம் இருக்குன்னு இவர்கிட்டே சொல்லிட்டு, அந்த இடத்துக்கு நான் நடந்து போய்கிட்டு இருக்கேன்.


இவர் வண்டியை வேகமா ரிவர்ஸ் எடுத்துக்கிட்டு வந்து என்னைக் கவனிக்காம பின்னாலெ இருந்து மோதிட்டார். அப்படியே கத்திக்கிட்டேக்
கீழே மூட்டையாட்டம் விழுந்துட்டேன். வலி பயங்கரமா இருக்கு. என்னவோ ஆயிருச்சு! கடவுளே, இடுப்பை ஒடிச்சு வச்சுராதே. அதுக்குப்
பதிலா உயிரை எடுத்துக்கோன்னு மனசுலெ கும்பிடறேன்.




இவர் பயந்துட்டார். பக்கத்துலே வந்து தரையிலே உக்கார்ந்துக்கிட்டு அழறார். அக்கம்பக்க ஆளுங்க ( பீச்சுக்கு வந்தவுங்கதான்)உதவி செய்ய
றாங்க. தலைக்கு ஒரு டவல் வச்சாங்க. அதுலெ ஒரு நர்ஸ் இருந்தாங்கபோல. பல்ஸ் எல்லம் செக் செஞ்சாங்க. எனக்கு நினைவு இருக்கு.
ஆனா நகர முடியலே. மயக்கம் வரமாதிரி இருக்கு. இவுங்கெல்லாம் மூஞ்சிலெ தண்ணி தெளிக்கறாங்க! நல்லவேளை விழுந்தப்பத் தலையிலே அடி படலே!



உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டாச்சு. இவரு புலம்பிக்கிட்டு இருக்கார். எப்பப் பார்த்தாலும் ஒரு அசட்டுத்தனமான வேகம்!
இல்லேன்னா அசமஞ்சம்மாதிரி மெதுவா இருக்கறது! இடைப்பட்டமாதிரி இருக்கத்தெரியாதா? எதுக்கு பதபதன்னு பதைக்கறது!




ஆம்புலன்ஸுக்கு முன்னாலே போலீஸ் வந்துருச்சு! இவரோட லைசன்ஸை வாங்கிக்கிட்டாங்களாம்! அதுக்குத்தான் அழுதாருபோல.
அப்புறம் ஆம்புலன்ஸ் வந்துச்சு. எனக்கு கழுத்து அசையாம காலர் போட்டாங்க. அப்படியே தூக்கி ஸ்டெச்சர்லெ வச்சு வண்டியிலெ ஏத்தினாங்க.
நான் நல்ல கனமாச்சே. கஷ்டப்பட்டாங்கன்னு நினைக்கறேன்.



அதுக்கப்புறம்தான் கொடுமை! ஆஸ்பத்திரியிலே போனா சர்ஜரி செய்வாங்கன்னு இப்பவே நரம்பைத்தேடி ஊசி குத்தி வைக்கறாங்களாம்.
எனக்கோ வெயின் சட்டுன்னு கிடைக்காது! பல இடத்துலே ச்சும்மா குத்திக் குத்திப் பாக்குதுங்க! கையெல்லாம் ஓட்டை போட்டுட்டுத்தான்
நிப்பாங்க போல! நேரம் ஓடிக்கிட்டே இருக்கு வண்டி கிளம்புற வழியைக் காணோம். பல்ஸ், பி.பி செக் செய்யறாங்க.வலியோ உயிர்
போகுது.வாந்தி வரமாதிரி இருக்கு. இவர் மகளைப் ஃபோன்லெ கூப்பிட்டு விஷயம் சொன்னார். அப்புறம் யார்கிட்டேயோ ஃபோன்லே
பேசறார். வண்டி ஒருவழியாக் கிளம்புச்சு! வேகமாப் போறபோது படுத்துக்கிட்டே இருக்கறது தலை சுத்துது. ஆபத்து அதிகமில்லைபோல, சைரன் சத்தத்தைக் காணொம்?



ஆஸ்பத்திரிக்குப் போயிட்டோம். டாக்டர், நர்ஸ் வந்து பார்த்துட்டு சில கேள்விங்க கேட்டாங்க. எல்லாம் எனக்கு நினைவு இருக்கான்னு
பாக்கத்தான்! எக்ஸ்ரே எடுத்தாத்தான் தெரியும்ன்னு சொன்னாங்க. மகள் வந்துட்டா.. நண்பர்கள் கணேஷும் , சுபாஷும்
வந்தாங்க. அம்லு அவங்களொடபோய் நம்ம வண்டி பீச்சுலே இருக்கறதைக் கொண்டுவரணும்ன்னு ஏற்பாடு. இவரு ஓட்டமுடியாது, லைசன்ஸ்
இல்லையே! அவுங்க போனப்புறம் போலீஸ் வந்துச்சு. என்ன விவரம், நான் எப்படி இருக்கேன்னு கேட்டாங்க. இவர் எக்ஸ்ரேக்கு காத்திருக்கோம்ன்னு
சொன்னார். என்கிட்டே வந்து எப்படி இருக்கேன்னு எட்டிப் பார்த்தாங்க. ரொம்ப அடின்னா விவரம் தரணும்ன்னு சொல்லிட்டு, இவரோட லைசன்ஸைத் திருப்பித் தந்தாங்களாம்.



மகள் பீச்சில் இருந்துக் காரைக் கொண்டுவந்துட்டாளாம். எக்ஸ்ரேக்குக் கொண்டு போனாங்க. ரெண்டு மூணு எடுத்தாங்க. இன்னும் சில எக்ஸ்ரே எடுக்கணுமாம். நான் விவரம் சொன்னேன்.



அதுக்கு அப்புறம் டாக்டருங்க வந்து பார்த்துட்டு, கழுத்துலே இருக்கற காலரை எடுத்தறலாம். அங்கெ அடி, ஃப்ராக்ச்சர் ஒண்ணும் இல்லேன்னு
சொன்னங்க. அப்பாடா, நரகவேதனையா இருந்தது!




அதுக்கப்புறமும் எனக்கு வலி நிறையவே இருக்கு. வயித்தை அமுக்கோ அமுக்கோன்னு அமுக்கிப் பார்த்துட்டு இன்னோரு எக்ஸ்ரே எடுக்கணும்ன்னு
சொல்லி மறுபடி எக்ஸ்ரே இடத்துக்குப் படுக்கையைத் தள்ளிக்கிட்டே போனாங்க. எப்படா இந்த எழவெல்லாம் முடியும்ன்னு இருக்கு. வலிவேற ப்ராணன் போறமாதிரி இருக்கு.



வலி நிவாரணியா இங்கெ ஆஸ்பத்திரிங்களிலே கொடுக்கறது மார்ஃபின்தான். எனக்கு அது அலர்ஜி. வாந்தி வாந்தியா வந்து இன்னும் வலியை
ஜாஸ்தியாக்கிரும். அது வேணாம்ன்னு சொன்னதாலே டாக்டருங்களுக்கு ஒரே கவலை! வலி எத்தனை நம்பர்ன்னு கேட்டுகிட்டே இருக்காங்க.
வலிக்கு நம்பரா? ஸீரோன்னா வலி இல்லையாம்.10ன்னா ரொம்ப வலியாம்! அது என்ன கணக்கோ? வலியால துடிக்கறவங்களுக்கு அது
10ன்னுதானே தோணும்! 10 எப்படின்னு தெரிஞ்சாத்தானெ மத்த நம்பரைச் சொல்ல முடியும்?


அப்புறமும் ஏன் வலி நிவாரணம் எடுத்துக்கலே? எதுக்காக மார்ஃபின் வேணாம். வாந்திமட்டும் காரணம்ன்னா வாந்தி வராம இருக்க ஒரு ஊசி
போடறோம்ன்னு நச்சரிக்கறாங்க. வலியோ உயிர் போகுது. நானும் மாட்டேன் மாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அப்புறம்
இன்னோரு மருந்து தரோம். அதுலெ வாந்தி சிலசமயம் வரும், ஆனா ஊசியும் போடறோம்ன்னு சொல்லி அதைக் கட்டாயமாக் கொடுத்தாங்க.



வலி குறைஞ்சதென்னவோ நிஜம். அப்புறம் இன்னோரு ஊசி போட்டாங்க. கொஞ்ச நேரத்துலே இன்னோரு ஊசியும் போட்டாங்க.
நல்லவேளை குத்தலெ. ஏற்கனவே குத்திவச்ச வெயின் ட்யூப் வழியாத்தான் இதெல்லாம்!



இவருக்கு இப்ப பசின்னு நினைக்கறேன். இல்லே இல்லேன்னு சொல்லிகிட்டு நடந்துகிட்டே இருக்காரு. மகளும் இருக்கா. அவளுக்கும் நாளைக்கு வேலைக்குப் போகணுமே. வீட்டுக்குப் போன்னு சொன்னேன். கேக்கலே. அவளைப் போய் சாப்பிட்டுட்டு,
311 போய் பசங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு எனக்கு மாத்துத்துணி கொண்டுவரச் சொன்னேன். சரின்னு போனாள்.




அப்புறம் டாக்டருங்க வந்து பார்த்துட்டு, ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் செய்யணும்ன்னு சொன்னாங்க. இடுப்பிலே இடிச்சதாலெ சிலசமயம்
கிட்னி பழுதாக வாய்ப்பு இருக்காம். அதுக்கு செக் செய்யணுமாம்.
கொஞ்ச நேரம் ஆச்சு. மகள் திரும்ப வந்தாள். ஒரு ஹாட் வாட்டர் பேக் வாங்கி வந்திருந்தாள். ஐய்யோ பாவம் குழந்தைன்னு இருந்துச்சு! கரிசனம் இருக்குன்னு நினைச்சுக் கண் கலங்குச்சு.



அப்புறம் என்னை வீட்டுக்கு விடறதாச் சொன்னாங்க .மணி இப்ப 12க்குமேல் ஆயிருச்சு. ஒருவழியா வீடுவந்து சேர்ந்தோம். இனி 4 மணிக்கு
ஒருதடவை 2 நியூராஃபின் சாப்பிடணும்!
அஞ்சரைமணி நேரம் ஆஸ்பத்திரி வாசம்! யாரு நினைச்சா இப்படியெல்லாம் ஆகும்ன்னு? நல்லவேளை, முடக்காம கடவுள் காப்பாத்திட்டார்.
ஆனா வலிதான் அடங்கலெ!



இவருதான் பாவம்! குற்ற உணர்ச்சியாலெயும், பசியாலயும் தவிச்சுப் போயிட்டார். மணி எட்டானாவே படுக்கைக்குப் போற ஆளு. இப்ப
நேரம் ரொம்ப ஆயிருச்சே!


இதைப்பத்தி ஒரு ரெண்டு பதிவுலே அப்பவே புலம்பியாச்சு:-)
விவரங்கள் இங்கே இருக்குது.








( இந்தப் பதிவுக்குப் படம் இல்லேன்னா பரவாயில்லைதானே குமார் ? :-)


தொடரும்.......................

Monday, October 15, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 34


27/12
மனம் சோர்வா இருக்கு. நெட் முழுசும் 'சுநாமி' பத்திப் படிச்சிட்டுக் கலங்கிப் போயிட்டேன். இன்னைக்குப் போணுமா வேண்டாமான்னு நினைச்சப்ப, நம்ம எலிநோர் ஃபோன்லே கூப்பிட்டு இந்தியாவுலே நேர்ந்த பேரழிவைப் பத்திச்
சொல்லி வருத்தப்பட்டாங்க. பேச்சு அப்படியே வீட்டைப் பத்தி வந்தப்ப என்ன நடக்குதுன்னு கேட்டாங்க. நான் விவரம் சொன்னேன். அப்ப
அவுங்க ஒருநாளைக்கு என்னை அங்கே கூட்டிட்டுப் போறயான்னு கேட்டங்களா, நான் சொன்னேன், ஒரு நாள் என்ன ஒரு நாள்? இன்னைக்கே
கூடப் போலாம்ன்னு. அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எப்பன்னு கேட்டாங்க. இப்பன்னு சொல்லி, அவுங்க வீட்டுக்குப் போனேன். வெளியே தயாரா நின்னுகிட்டு இருந்தாங்க. எனக்கும் பேச்சுத்துணை வேண்டிய நேரம் அது.

அவுங்களுக்கு நம்ம வீட்டைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாயிருச்சு! நாங்க அங்கே பேசிக்கிட்டே ரொம்ப நேரம் இருந்தோம். அப்ப யாரோ
கதவைத் தட்டுற சத்தம்! யாருன்னு பார்த்தா நம்ம பெயிண்டர் டோனி! அவர் இந்த வெள்ளிக்கிழமை காலையிலே வந்து முன்கதவுகளை
பாலீஷ் பண்ணுவாராம். நேரம் 9 மணின்னு முடிவாச்சு! அப்படியே உள்ளே இருக்கற கதவுங்களுக்கு இன்னும் கொஞ்சம் பெயிண்ட் வேலை
செய்யணும்ன்னு காமிச்சேன். எல்லாம் பார்த்துக்கிட்டுப் போனாரு. நாங்க அப்புறம் இன்னும் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு ஒரு அஞ்சேகாலுக்கு எலிநோரை அவுங்க வீட்டுலே விட்டுட்டு வந்துட்டேன். 6 மணிக்கு செந்திலும், ரேவதியும் வராங்களாம். ச்சும்மா ஒரு விஸிட்தான்!

சாயந்திரம் இவர் ஃபோன் செஞ்சார். மத்தியானம் கூப்பிட்டாராம். நான் செல்ஃபோன் கொண்டு போகலை. இன்னைக்கு யாருமே வேலைக்கு
வரமாட்டாங்க. அப்ப என்னாத்துக்கு செல்ன்னு வச்சுட்டுப் போயிட்டேன். இவுங்க அப்பாவுக்குக் கண் ஆப்பரேஷன் செய்யணுமாம். அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டாராம். டிவியில் சுநாமிச் செய்திகள் காமிச்சுக்கிட்டே இருக்காங்களாம்.

ப்ச்......பாவம் மக்கள்.

28/12
இப்பத்தான் சாயந்திரம் ஆறேகாலுக்குப் போய் ஒரு அஞ்சு நிமிஷம் விளக்கு போட்டுட்டு, 'சாமிங்களை' அடுக்களை பெரிய 'பேண்ட்ரி'யிலே
வச்சிட்டு வந்தேன்.

கேரியோட ஃபோன் வந்தது. நாளைக்குக் காலையிலே 8 மணிக்கு வராராம். சீக்கிரம் எந்திரிச்சு வேலையை முடிச்சுக்கிட்டுப் போகணும் கதவைத் திறக்க!

29/12
காலையிலே எட்டு மணிக்கு முன்பே அங்கே ஆஜர். போறப்ப ஒரு சிமெண்ட் பூசற கரண்டியைக் கொண்டு போனேன். அதுதான் 'ஸ்க்ராப்பர்'
அங்கங்கேத் தரையில் கட்டிகட்டியா இருக்கற சிமெண்ட்டைச் சுரண்டி எடுக்கணும். காலுலெ தட்டுப்படுது.

கேரி வந்து வேலையை ஆரம்பிச்சாச்சு! அப்புறம் பல்ப் வாங்கறேன்னு போனார். அவர் கொண்டுவந்த பல்புங்க 'லாங் லைஃப்' லைட்தான் ஆனா தப்பான டிஸைன். 'ஸ்பைரல்' மாதிரி இருக்கறது வேணும். இது நீளமா இருக்கு(-:
அப்ப வாசக்கதவை யாரோ தட்டறாங்க. யாருன்னு பார்த்தா ஃபார்மர்ஸ் ஆளுங்க ஃப்ரிட்ஜ் கொண்டுவந்து இருக்காங்க! இப்பத்தான் நினைவு
வருது நாம் டிசம்பர் 29க்கு டெலிவரி சொன்னது! நல்லவேளை. நான் அங்கே இருந்தேன். உள்ளே கொண்டுவந்து வைக்கச் சொன்னேன்.
அதுக்குண்டான இடத்துலே சரியா உக்காந்துருச்சு!


அங்கேயிருந்து திரும்பறப்ப 'மைட்டர்10'க்குப் போய் பல்புங்க பார்த்தேன். நமக்கு வேண்டியது இருக்கு. ஆனா வேற ப்ராண்ட்!
'லக்ஸ்டெக்' விலை $5. 89, 6000 மணிநேரம் எரியுமாம்.
அப்புறம் கேரியைப் பார்த்தப்பச் சொன்னேன். அவரு கொண்டுவந்த 'ஃபிலிப்ஸ்' பல்ப் 10,000 மணி நேரம்ன்னு சொன்னார். அந்த பேக்லே
பார்த்தா 3 வருஷம் தினமும் 5.5மணின்னு போட்டிருக்கு. அதுவும் 6022 மணிநேரம்தான். தானிக்கு தீனி சரி!

கராஜ் டோர் ஓப்பனருக்கு பவர் கொடுத்தாச்சு. ரிமோட் கொண்டுபோய் செக் செஞ்சேன். வேலை செய்யுது. ஆனா ஒரே சத்தம். சிஆர்சி போடணும்!
மாஸ்டர் பெட்ரூம் ஹீட் பம்ப்பும் கனெக்ட் செஞ்சாச்சாம். அதையும் செக் செஞ்சு கொஞ்சநேரம் ஓடவிட்டேன். நாளைக்கும் காலேல எட்டு
மணிக்கு வரேன்னார். அடுக்களை பேன்ட்ரீ கப்போர்டு லைட்டு இப்ப வேலை செய்யுது! இன்னும் வார்டு ரோப் லைட்டுங்க போடணுமாம்.
அதோட ஒயர்ங்க உள்ளே மறைஞ்சிடுச்சாம். எல்லாம் இந்த ஜிப் ஆளுங்க பண்ண வேலை!

அப்புறம் வேலையை முடிச்சுட்டு ஃபோர்ஸ் போடச் சொன்னேன்.
ராத்திரி 7.30க்கு மகள் வந்து சாப்பிட்டபிறகு, நாங்க ரெண்டுபேரும் போனோம். லைட்டுங்களையெல்லாம் போட்டுப் பார்த்து அவளுக்குப்
பிடிச்சிருக்குன்னு சொன்னாள்!

30/12
காலையிலே எட்டுக்குப் போயிட்டேன். போறப்ப ஒரு ப்ரூம் ஸ்டிக் கொண்டுபோனேன். கேரி இன்னைக்கு 12 வரைதான் வேலை செய்றாராம்.
நான் சொன்ன பல்ப் 'ரெட்பாத்'லெ இல்லேயாம்! ,நாளான்னைக்கு கோபால் வந்துருவார். ரெண்டு நாளுதான்! அப்புறம் பார்த்து வாங்கலாம்ன்னு!
இன்னைக்குப் போயிட்டா அடுத்தவாரம் ஒருநாள் அநேகமா வியாழன் வந்து இன்னும் சிலதை முடிப்பாராம்! போறப்ப ஃபோர்ஸ் போடச்
சொன்னேன். அப்புறம் போய்ப் பார்த்துட்டு, கொஞ்சம் சுத்தம் செஞ்சிட்டு வரணும்!

ரெண்டேமுக்காலுக்குப் போனேன். தரையெல்லாம் ஒரே புழுதி! முன்பக்க ரூமும், லவுஞ்சும், லிவிங் ரூமும் நல்லா பெருக்கிக்கிட்டு
வந்தேன். நாளைக்குக் காலையிலே 9 மணிக்கு பெயிண்ட் ஆளுங்க வராங்க.
வெளியே வந்தப்ப பக்கத்து வீட்டு பொண்ணோட அம்மா (பேரு டயானாவாம்) கொஞ்சநேரம் பேசுனாங்க. நம்ம வீட்டை உள்ளேபோய்ப்
பார்த்தாங்களாம்! கேரிகிட்டே கேட்டாங்களாம்! ரொம்பப் பிடிச்சுடுச்சாம். என்ன கலர் கார்ப்பெட்ன்னுவேற பார்க்கணுமாம்! அப்புறம் எந்த மாதிரி ஃபர்னிஷிங்ன்னு வேற பார்க்கணுமாம். ஏன்னு கேட்டதுக்கு, நம்ம வேற கல்சர் ஆளுங்களாம். நம்ம கலர்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கணுமாம். நல்ல கதை? ஊஞ்சல் போட்டதும் அதுலெ உக்கார்ந்து ஆடிப் பார்க்கணுமாம்!!!!!


31/12
இந்த வருஷத்தோட கடைசி நாளு! காலையிலே அங்கே 8.50க்குப் போயிட்டேன். போறப்பயே ஊதுவத்தியும், ஒரு டவலும் கொண்டு போனேன்.
சாமிக்கு ஒரு ஊதுபத்திக் கொளுத்திக் கும்பிட்டுட்டு, அடுக்களையெல்லாம் டவலாலெ சுத்தமாத் துடைச்சேன்.

டோனி & க்ரூப் வந்தாங்க. எங்கெங்கே பெயிண்ட் பண்ணனும்ன்னு சொன்னேன். அடுக்களையிலும் அங்கங்கே கொஞ்சம் பெயிண்ட்
தீத்திக் கிடந்துச்சுல்லே, அதையும் சுத்தம் செய்யச் சொன்னேன்.
'மரீ' ஷவர் க்யூபிகிள் வச்சதுக்கு மேலே பெயிண்ட் செஞ்சு அதை நீட்டாச் செஞ்சுட்டார். 'மரீ. இங்கிலாந்துலெ பல வருசங்கள் இருந்துருக்கார். அங்கெ அவருக்கு நிறைய இந்தியர்கள் நண்பர்களாம். அங்கெ உள்ள 'கரி ஹவுஸ்' களுக்குப் போய்ப் பழக்கமாம். நம்முடைய கலைகள் , சாப்பாடுன்னு எப்பவுமே ஆர்வமாப் பேசுவார். முன்கதவுகளுக்கு ஆயில் போட்டுப் பாலீஷ் செய்யப் போறாங்க! நான் மத்த ரெண்டு பெட் ரூம் அந்த பாத்ரூம் எல்லாம் பெருக்கிச் சுத்தம் செஞ்சேன். மணி பத்துக்கு மேலே ஆயிருச்சு. எப்ப முடிப்பாங்கன்னு கேட்டதுக்கு 12 ஆயிரும்ன்னு சொன்னாங்க. நான் அப்ப வரேன்னுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

லைட்டிங் டைரெக்ட்லே இருந்து ஃபோன் வந்துச்சு. நம்ம வேனிட்டி லைட்டுலே உடைஞ்சுபோனக் கண்ணாடிக்கு பதில் கண்ணாடி வந்துருச்சாம்!
ஒரு பல்பும் கெட்டுப் போச்சுன்னு சொன்னேன். வாங்க, மாத்திறலாம்ன்னு சொன்னாரு அந்தப் பையன் ப்ரையன். எல்லாம் நல்ல பசங்க!

12 அடிக்க 10 நிமிஷம் இருக்கப்ப 'அங்கெ' போனேன். எல்லாரும் வேலையை முடிச்சுட்டு ரெடியா இருந்தாங்க. ஃபேஷியாவிலே அங்கங்கே
பெயிண்ட் தீற்றல் இருந்ததுன்னு அவுங்க கிட்டே சொல்லியிருந்தேனில்லையா? அதையெல்லாம் சுத்தப் படுத்தி வச்சிருந்தாங்க! அது பெயிண்ட் இல்லையாம். ப்ளாஸ்டர் தெறிச்சிருக்காம்!

முன் கதவுக்கு ஆயில் ஒரு பாட்டிலிலே நமக்காக வச்சிருந்தாங்க. அது ரெண்டு வருஷத்துக்கு வருமாம்! கொஞ்சம் 'ராக், ஸ்டீல்வுல்' வச்சிருந்தாங்க.
எப்படிக் கதவுக்கு அப்ளை செய்யணும்ன்னு சொன்னாங்க. நல்ல ஆளுங்கதான்!

அவுங்க போனப்புறம் நம்ம பெட்ருமைச் சுத்தம் செஞ்சுகிட்டு இருந்தேன். கோபால் கூப்பிட்டாரு. சிங்கப்பூர் வந்து சேர்ந்துட்டாராம். இன்னிக்கு
சாயந்திரம் புறப்பட்டு நாளைக்கு இங்கே வந்துருவாராம். அப்பாடான்னு இருந்துச்சு! கணேசனை ஃபோன்லெ கூப்பிட்டு 'ஹாப்பி நியூ இயர்'
சொல்லச் சொன்னேன். என்ன புதுவருஷம் வேண்டியிருக்கு? அங்கங்கெ இந்த ட்சுநாமியாலெ ஒரு லட்சம்பேரு செத்துப் போயிருக்காங்க.
ஐய்யோன்னு இருக்கு.

அந்தப் பக்கமெல்லாம் சுத்தம் செஞ்சுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
சாயந்திரம் ஒரு டீ போட்டுக் குடிச்சுக்கிட்டு இருக்கப்ப ஃபோன் வருது. இது ஒரு வழக்கமானதுதான். அது எந்த வேளையானாலும் சரி,
நான் டீ கோப்பையைக் கையிலே எடுத்தவுடனே யாராவது வருவாங்க! ஆளு நேர்லே வரலேன்னாலும் ஃபோன் மூலமாவாவது
வருவாங்க! மணிக்கணக்கு எல்லாம் இல்லை. எனி ஒன், எனி டைம்.

யாருன்னு பார்த்தா நம்ம கிங். 5.20க்கு 29க்கு வரணுமாம். ஏதோ ஒரு வேலை இருக்காம். போனென். அடுப்புக்குப் பின்னாலே வர்ற
கண்ணாடிக்கு 'ஸ்டீல் க்ரே ஸ்பார்க்கிள் பேப்பர் ஒட்டணுமாம். அப்படியே டைல்ஸ் போட்டு முடிஞ்ச இடத்துலே சீலண்ட் ஒட்டணுமாம்.
அப்ப அங்கே கிங்கோட மனைவி கேத்தரீன் அந்த ஸ்பெஷல் பேப்பரை எடுத்துக்கிட்டு வந்தாங்க. அதுக்கு முன்னாலே அந்தக் கண்ணாடியை வெளியே எடுத்துத் தண்ணீ ஸ்ப்ரே செஞ்சு வச்சிருந்தாரு கிங். இப்ப அந்தப் பேப்பரைப் பிரிச்சு அளந்து தண்ணீரை ஸ்ப்ரே செஞ்சுகிட்டே உரிச்சுக் கண்ணாடிலே ஒட்டியாச்சு. அப்புறம் 'வொர்ம்' உண்டாகாம ஒரு ஸ்க்ரேப்பர்லே தேய்ச்சு வச்சிருக்கு. ரெண்டு நாளு அப்படியே இருக்கணுமாம். ஞாயித்துக்கிழமை மறுபடி அதை எடுத்து அடுப்புக்குப் பின்னலே பொருத்தணுமாம்.

சரின்னு சொன்னேன். அவுங்க போனப்புறம் அலாரம் போட்டுட்டுக் கதவை மூடிட்டு வந்தென். ச்சும்மா ஒரு 45 நிமிஷ வேலைதான். நம்ம 'ஜார்ரா' ஊஞ்சல் பலகைக்கு கால் அடிக்கச் சொன்னேன். உயரம் அளக்கணும்!
நாளைக்கு கோபால் வந்துருவார். கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!

தொடரும்............
நம்ம குமாருக்காகத் தேடி எடுத்தவை இந்தப் படங்கள் :-)
--------------------------------------------

Friday, October 12, 2007

'என்' பார்வையில் நவராத்திரி

எல்லாருக்கும் வணக்கம். ஒருநாளும் இல்லாத திருநாளா மரப்பாச்சியை அம்மா அலமாரியிலே இருந்து எடுத்ததுமே, எனக்கு 'ஆஹா....... என்னமோ நடக்கப்போகுது'ன்னு இருந்துச்சுங்க. இன்னும் கொஞ்சநேரம் எதையோ குடஞ்சிக்கிட்டு இருந்துட்டு,'அப்பாடா கண்டு பிடிச்சிட்டேண்டா'ன்னு கூவிக்கிட்டு வந்து தரையில் உக்கார்ந்தாங்க.


நான் கொஞ்சம் நோஸி. எங்க சுபாவமே அப்படித்தானாம். நான் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா? அதுகிடக்கட்டும். இப்ப நான் கண்டதை அச்சுப்பிசகாம உங்ககிட்டெ சொல்லணும்.

தாயைப் போல பிள்ளைன்னு பழமொழி இருக்காமே. அம்மாவுக்கும் எதுன்னாலும் உங்ககிட்டே சொல்லலைன்னா விடியாதாம்.அதெ பழக்கம் எனக்கும் இப்ப ஹி ஹி ஹி ஹி......

பையன், பொண்ணுன்னு ரெண்டு மரப்பாச்சிங்க நம்மவீட்டுலெ இருக்கு. முதல்லெ பொண்ணுக்கு உடை மாத்தினாங்க. நல்ல சிகப்புப் பட்டுப்பாவாடை,
அதுக்கு மேட்சிங் துப்பட்டா. வெள்ளி புட்டாப் போட்ட டிஸைன். என் முன்னாலெ பொண்ணு துணி மாத்திக்கறப்ப எனக்கு வெக்கம் பிடுங்கித் தின்னுச்சு. கொஞ்சம் அந்தப் பக்கமா தலையைத் திருப்பிக்கிட்டு ஒரு மாதிரி சமாளிச்சேன்.

போனமுறை ஊருக்குப் ( என்னை இங்கெ விட்டுட்டு)போனப்ப அங்கேயிருந்து நகைகள் வாங்கியாந்தாங்களாம். நெக்லெஸ், ஒட்டியானம், கம்மல், மூக்குத்தி, வளையல், கல் பதிச்ச நெத்தித் திலகம் இதெல்லாம் பொண்ணுக்காம். பையனுக்கும் குறைவைக்கலை.

தகதகன்னு தங்கக்கலர் பஞ்சகச்ச வேஷ்டி, அதுக்கு ஏத்த மேல்துண்டு, காதுக்குக் கடுக்கண், கழுத்துக்கு கல்வச்ச ஹாரம், கல் பதிச்ச நாமம்ன்னு கலக்கலா இருக்கு.

எனக்கு இந்த நகைநட்டு,குறிப்பாக் கல்வச்சுப் பளபளன்னு மின்னுற நகைன்னாவே ஒரு 'கிறக்கம்' இருக்கு. சொன்னா நம்ப மாட்டீங்க. அம்மாவோட படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் குட்டி அலமாரியில் கீழ்த்தட்டுலெ ச்சின்னச் சின்ன சில்க் பைகளை ஒரு நாள் வைக்கறதைப் பார்த்தென். இழுப்பறையா இருக்கு. எப்படி அதைத் திறக்கறாங்கன்னு கவனிச்சுக்கிட்டெ இருந்தென். சிலநாள் விடாம கைவிட்டு அந்தக் கைப்பிடியை இழுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தெனா.....'.அட! என்னாலெயும் திறக்க முடியுது.

மறுநாள் காலையில் அம்மா திறந்திருக்கும் ட்ராவைப் பார்த்துட்டு, அப்பாவைக் கோச்சுக்கிட்டாங்க. எதாவது எடுத்தா, திருப்பி அந்த ட்ராவை உள்ளெ தள்ளுனா என்ன?ன்னு. 'நான் ஏன் அதை திறக்கப்போறேன். நீயே திறந்துட்டு, உள்ளே தள்ளாம விட்டுருப்பே'ன்றாரு அப்பா.கொஞ்ச நேரம் நீயி, நானுன்னு கத்திட்டு மத்தவேலையைப் பார்க்கப்போயிட்டாங்க.

இன்னொருநாள் இப்படித்திறந்து சில குட்டிப்பைகளை வெளியே எடுத்து வச்சேன். அன்னிக்கும் அப்பா அம்மாக்கு ச்சின்னச் சண்டை வந்துச்சு. 'இங்கே பாருங்க. நம்ம வீட்டுலெ இதைத் திறக்கரது நீங்களும், நானும் இல்லைன்னா இவனான்னு என்னைக் காமிச்சுக் கேட்டாங்க. நானும் ஒண்ணும் சொல்லாம(?) கப்ச்சுப்ன்னு நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள் நடுராத்திரி. 'பூனையாட்டம்' ஒசைப்படாமப் போய் அந்த ட்ராவைத் திறந்தேன். வழக்கப்படி சில பைகளை வெளியே எடுத்து வச்சேன். அம்மா அரைத்தூக்கம்போல. சட்ன்னு விளக்கைப் போட்டாங்க. நான் அப்படியே ஃப்ரீஸ்.............. பலநாள் திருடன் ஒருநாள் ஆப்புடுவானாம்!

அப்பாவும் அம்மாவும் ஏன் இப்படி விழுந்துவிழுந்து சிரிக்கறாங்கன்னே தெரியலை.

அது இருக்கட்டும்.நானும் (!) சொல்லவந்ததை விட்டு வழிமாறிப் போய்க்கிட்டு இருக்கேன் பாருங்க.....பழக்க தோஷம்?

பளிச்ன்னு நகைகளைப் பார்த்ததும் மெல்லக் கையை நீட்டி எடுத்தேன். ரொம்பக் குட்டியா இருக்கறது கைக்குப் பிடிபடலை. அம்மா உடனே ஒரு
நெக்லெஸை எடுத்து என் தலையிலே வச்சுப் பார்த்தாங்க. ரொம்பப் பிடிச்சுப்போச்சு போல. 'அப்படியே அசங்காம உக்காருடா. கேமரா எடுத்துக்கிட்டு வரேன்'னு போனாங்க. எனெக்கென்ன பைத்தியமாப் புடிச்சுருக்கு ஆட்டம்போட?

வந்து 'க்ளிக்'குனாங்க. நான் ஒரு மயக்கத்துலெ இருந்தேன்:-)))) அப்புறம் எல்லா
அலங்காரமும் செஞ்சு முடிச்சாங்க. எனக்கில்லைங்க, அந்த மரப்பாச்சிகளுக்கு(-:
நவராத்திரி விழா வருதாம். வழக்கம்போல கொலு வைக்கணுமாம். கேஸட் பெட்டிகள் வெளியே வந்துருக்கு. மைலாப்பூர் ஃபெஸ்டிவல் போனப்ப அங்கெ இருந்து ஒரு ஜோடி மனுசர்களைக் கொண்டாந்துருக்காங்க. அவுங்களும், போனமாசம் இங்கே உள்ளூர்லெ வாங்குன வாத்துக்குடும்பமும்தான் இந்த வருஷ ஸ்பெஷல்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்தக் காஞ்சீபுரம்
செம்பருத்திப் புள்ளையாரை மறந்துட்டாங்களோ?

நீங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கொலுவுக்குக் கட்டாயம் வந்துருங்க. வீட்டுப்பிள்ளையா நான் ஒருத்தந்தான் இப்ப இருக்கேன். அதான் நானே உங்களை அழைக்க வேண்டியதாப்போச்சு.

எல்லாரும் கட்டாயம் வாங்க. பக்கத்து வீட்டு 'பூனி'யைத் தவிர யார் வேணுமுன்னாலும் தாராளமா வரலாம்.

இப்படிக்கு உங்கள் நண்பன்(??)

கோபால கிருஷ்ணன் கோபால்.

பி.கு: கோபால் என்றது என் 'சர் நேம்':-)

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 33

மதியம் மூணரைக்குப் போய் பால் & கேட் ஃபுட் வாங்கிக்கிட்டு அங்கெ போனேன், அலாரம் போட்டுவிட்டு வரலாம்ன்னு. இதொரு தொந்திரவு புடிச்ச வேலையா இருக்கு. கேரி இன்னும் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார். விளக்குகள் எல்லாம் வேலை செய்யுதாம். ஃபோயரில் உள்ள 'வாட்டர் ஃபால்ஸ்' அட்டகாசமாக இருக்கு! லவுஞ்சிலும் கிறிஸ்டல் லைட்ஸ் நல்லாவே இருக்கு! ஹாலோஜன் விளக்குகள் எல்லாம் போட்டாச்சு!
மற்ற லைட்டுகள்னு ஒரு சாதாரண குண்டு பல்ப்'' போட ஆரம்பிச்சார். இதையா 'ரெட்பாத்'லெ கொடுத்துருக்காங்க? நான் அதை வேண்டாம்னு சொன்னேன். நாங்கள் செலக்ட் செய்தது வேறே. ஸ்பிரிங் மாதிரி சுருண்டுள்ள லாங் லைஃப் வேணும். லாங் லைஃப் வெளியே நீண்டு இருக்குமே என்றார் கேரி. அதுக்குத்தான் சுருண்டு இருக்கறது போடறோம்ன்னு சொன்னேன்.
நம்ம பெட்ரூமிலே ட்ரெஸ்ஸர்க்கு போட்ட விளக்கில் ஒரு பல்ப் வேலை செய்யல்லை. கழட்டி வாங்கினேன். அடுத்த வாரம் கொண்டு போய்க்
கொடுக்கணும்!



வீட்டுக்குள்ளெ 'பவர்' வந்தால் ஹீட் பம்ப் ஒரு மணி நேரம் ஒடவிடுங்கன்னு அந்தப் பையன் ஆண்ட்ரூ சொன்னதாலே அதை ஆன் செஞ்சு
30 டிகிரிலே ஓட விட்டேன். ரெண்டு தான் வேலை செய்யுது. மாஸ்டர் பெட் ரூமுதுக்கு இன்னும் கனெக்ஷன் கொடுக்கலையாம்.


இனி கேரி புதன் கிழமைதான் வருவேன்னார். கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லிட்டு வந்தேன்.


அப்ப நம்ம பாசுதேவ், சசி & ஷிவானி வந்தாங்க. உள்ளெ ஒரு 'டூர்' கொண்டு போனேன். ரொம்ப 'இம்ப்ரெஸிவ்'வா இருக்குன்னு சொன்னாங்க. அவுங்க வீட்டுலே 'கிச்சன்லே மார்பிள் பெஞ்சு டாப் இருக்கு! இதைப்போய் நல்லா இருக்குன்றாங்க. எல்லாம் ஒரு மரியாதைக்குச் சொல்றது:-))))



அப்புறம் எல்லாக் கதவையும், ஜன்னலையும் செக் செஞ்சுட்டு வெளியே பூட்டிட்டு கார்கிட்டே போறேன், அந்த வெள்ளைக்காரப் பெரியவர்
வழக்கம்போல நின்னு பார்த்துக்கிட்டு இருக்கார். கொஞ்ச நேரம் நின்னு பேசுனேன். வீட்டின் பின் பக்க தோட்டம் பார்க்கலாமான்னு
கேட்டார். அவர் ஃபார்மர். அதனாலெ மண்ணுன்னா ஒரு ஆர்வம். கதவைத் திறக்காம பின்னாலெயே கொண்டு போனேன். நல்லதாப் போச்சு. பின்பக்கம்
ஒரு ஐ லிட் விளக்கு எரிஞ்சுகிட்டே இருக்கு. ரொம்ப அருமையான மண்ணா இருக்காம். நல்ல செடிகளா வையுங்கன்னார். என்னென்ன மரங்கள் வைக்கற ஐடியா இருக்குன்னு கேட்டார். இன்னும் முடிவு பண்ணலைன்னு சொல்லி வச்சேன். அவர்கிட்டே எதெல்லாம் நல்லதுன்னு கேட்டு வச்சுருக்கலாம். நல்ல ச்சான்ஸை விட்டுட்டேன்(-:




அவர் போனதும் கதவைத் திறந்து அலாரம் எடுத்துட்டு மாஸ்டர் பெட்ரூம் பக்கம் போய் அந்த லைட்டுக்கு ஸ்விட்ச் எங்கே இருக்குன்னு
எதுன்னு தேடி ரொம்ப நேரம் கழிச்சுக் கண்டு பிடிச்சேன். அணைச்சுட்டு வந்தேன்.


நாளைக்கு கிறிஸ்மஸ் பண்டிகை!



25/12
இன்னைக்கு யாரும் வேலைக்கு வரமாட்டாங்கல்லே?. அதால நிம்மதியாத் தூங்கினேன். தினமும் காலையிலெ 6 க்கு எந்திருச்சு, குளிச்சு
சாமி கும்புட்டு அங்கே 8க்கு முன்னாலெ போகணும். இன்னிக்கு லீவு! நான் எந்திரிக்கறப்பவே எட்டரை ஆயிருக்கு. பசங்கதான் பாவமா
வெளியே உக்காந்திருந்தாங்க! ஜிக்கு பண்ண அநியாயத்தாலே 'கேட் டோரை' மூடும்படி ஆனதால் யாருக்குமே உள்ளெ வரமுடியாம ஆயிருச்சுல்லே!
குளிக்கறப்ப ஒரு ஐடியா வந்துச்சு! இன்னைக்குக் கிறிஸ்மஸ் பண்டிகை. நம்ம புதுவீட்டுலே சாமி கும்பிடலாம்ன்னு!



எல்லா வேலையும் முடிச்சுட்டு 11 மணிக்கு சாமிப் படம், ரெண்டு ச்சின்ன விக்ரஹங்க ( புள்ளையார், லக்ஷ்மி)ஊதுவத்தி, ஸ்தோத்திரப்
புஸ்தகம், ரெண்டு வாழைப் பழம் ( ப்ரசாதம்!) கோலப் பலகை, உக்கார ஒரு டெனிம் விரிப்பு. ஊதுவத்தி ஸ்டேண்டு, வத்திப்பெட்டி எடுத்துக்கிட்டேன்.
அங்கே போய் அலாரம் எடுத்துட்டு, விரிப்பை விரிச்சு, பலகை வச்சு, அதும் மேல சாமி படம், விக்ரஹம் எல்லாம் வச்சு, ஊதுபத்திக் கொளுத்தி வச்சேன். இதுக்கு நடுவிலே ஹீட் பம்ப் ஆன் செஞ்சுகிட்டேன். ச்சும்மா 30 டிகிரி! இதமா இருக்கு


லக்ஷ்மி அஷ்டோத்திரம், கனகதாரா ரெண்டும் படிச்சேன். பாடுனேன்றதுதான் பொருத்தம். ஆனா, தொண்டை மக்கர். சொல்லத் தெரியாம ஒரு வலி. தொண்டையிலே கான்சரோ?


ஒருமாதிரி சாமியைக் கும்பிட்டுட்டு,,ஒரு பழத்தையும் தின்னுட்டு, ஒருதடவை வீட்டைச் சுத்திப் பார்த்துட்டு, ஹீட் பம்ப் ஆஃப் செஞ்சுட்டு,
அலாரம் போட்டுட்டு வந்துட்டேன். விரிப்பை மட்டும் லாண்டரி கப்போர்டுலே வச்சிருக்கேன். சாமிப் படத்தை அங்கேயே வச்சிட்டு வந்திருக்கேன். அந்த இடம் அவருக்கும் பழகட்டும்!



சாயங்காலமா கோயிலுக்குப் போனேன். இன்னிக்கும் 'ஏகாந்த சேவை'! நிஜமாவே ஏகாந்த சேவைதான். இவரும் ஊரிலே இல்லாததாலே
நான் மட்டும். இவரு இல்லாட்டா நான் காலையிலே போவேன். இப்ப கோடைகாலம். ராத்திரி 9 வரை வெளிச்சம் இருக்கேன்னு சாவகாசமா
சாயந்திரம் போனேன். ப்ரசாதம் கிடைச்சது! இவரோட கோயில் 'ட்யூடி'யெல்லாம் நான் செஞ்சேன்.



வர்றப்போ அப்படியே வீட்டுக்கும் (புது வீட்டுக்குத்தாங்க!)போய் ஒரு நிமிஷம் லைட் போட்டுட்டு ச்சும்மா ஒரு நிமிஷம் செக் பண்ணிட்டு
வந்தேன். நான் அங்கே போறப்போ, ஒரு கார் நம்ம வீட்டு முன்னாலெ நின்னுகிட்டு இருந்தது. என்னடா இது யாரா இருக்கும்ன்னு தெரியாம நான்
வண்டியிலேயே உக்காந்திருந்தேன். நம்ம வண்டியைப் பார்த்ததும் அந்தக் கார் மெல்ல நகர்ந்து, போயிருச்சு! போற வர்றவுங்க நின்னு நின்னு பார்த்துட்டுப் போறாங்க. நல்லதா கெட்டதான்னு தெரியலை!


இன்னைக்கு ராத்திரி இவர் சென்னைக்குப் போய்ச் சேருவார்.


26/12
இன்னைக்கு 'பாக்ஸிங்க் டே'! நம்ம தமிழ் சொஸைட்டி பிக்னிக் இருக்கு. அவ்வளவு தூரம் 'க்ரோயன்ஸ் பார்க்'குக்குத் தனியாப் போகணுமேன்னு
போகவேண்டாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன். அப்ப சங்கத் தலைவர் ஃபோன்லே கூப்பிட்டு, காலநிலை சரியா இல்லைன்னு இடத்தை மாத்திட்டோம். மிடில் பார்க் தெருவிலே ( நம்ம புது வீடு இருக்கற தெருவுதாங்க!) 'செயிண்ட் தாமஸ் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் க்ரெளண்ட்'லேன்னு சொன்னார். நம்ம(!) தெருவாச்சேன்னு நான் போனேன். எப்ப? 1 மணிக்கு மேலெ ஆயிருச்சு. அங்கே அப்பத்தான் 'பார்பெக்யூ' ஆரம்பிச்சு இருக்காங்க!
நான் ஒண்ணும் சாப்பிடாம மார்கழி மாசம்ன்னு சொல்லிட்டுக் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட்டேன். வர்றப்ப அப்படியே நம்ம வீட்டைத் திறந்து
பார்த்துட்டு ஒரு அஞ்சு நிமிசம் இருந்துட்டுத்தான் வந்தேன்.



மணி 3 ஆயிருச்சு. இந்தியாவுலே காலையிலே 7.30 ஆச்சு. ஃபோன் செஞ்சேன் இவரு பத்திரமாப் போய்ச் சேர்ந்தாரான்னு கேக்க. ராத்திரி
11 மணிக்குப் போனாராம். அப்ப இங்கே இன்னிக்குக் காலையிலே 6.30! 'எல்லாம் நல்லா இருக்காங்களாம். '


சாயந்திரமா நம்ம தேவி கணேஷ் கூப்பிட்டு திருவல்லிக்கேணியிலே கடல் கொந்தளிப்பு. தண்ணி ஊருக்குள்ளெ வந்துருச்சுன்னு சொன்னாங்க.
உடனே இவரைக் கூப்பிட்டேன். லைனே கிடைக்கலை. பலதடவை கூப்பிட்டுப் பார்த்தேன். ஊஹூம்......


மனசுக்கு கவலை வந்துருச்சு. நம்ம 'ப்ளாக்'லே செய்தி ஏதாவது உண்டான்னு கேட்டேன். அப்பத்தான் தெரியுது இது வெறும் சமாச்சாரமில்லே. பேரழிவுன்னு! ப்ளாக் நண்பர்கள் எல்லாம் விவரம் அள்ளித் தந்தாங்க. நம்ம இரா.மு. தனிமடல் அனுப்புனாரு. கவலை வேணாம். வீட்டு அட்ரஸ், ஃபோன் நம்பர் தாங்க. நான் போய் நேரில் பார்த்துட்டு வந்து மெயில்லே சொல்றேன்னு! நல்ல மனசு. அதுக்குள்ளெ திரும்பித் திரும்பி முயற்சி பண்ணதாலெ லைன் கிடைச்சிருச்சு. இவுங்க எல்லாம் நலம்தானாம். வேளச்சேரின்னதாலே ஆபத்து இல்லையாம். நாளைக்கு பெங்களூர் மச்சினர் வராரம். அவரோட எல்லோரும் 'பீச் பக்கம் பிக்னிக்' போறாங்களாம்!


எனக்கு 'திக்'ன்னு ஆச்சு. அங்கங்கே 5000 ஆளுங்க செத்துட்டாங்கன்னு நியூஸ் வருது. இன்னும் கடல் கொந்தளிப்பு 4 நாளைக்கு இருக்கும்
கடல் பக்கம் யாரும் போகவேணாம்ன்னு வார்னிங் வந்துக்கிட்டு இருக்கு. இவுங்க பீச்சுப் பக்கம் ஊர்சுத்தப் போறாங்களாம். 'திருந்தாத ஜென்மங்கள்!'
நான் கோவத்துலே ஃபோனை கட் செஞ்சுட்டேன். எப்படியோ போட்டும்.
----------------------------------------------------

Wednesday, October 10, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 32

இந்த ஊஞ்சல் பலகை நம்ம பெட் ரூம்லே வச்சிருக்கு. நேத்திலிருந்து அதைப் பார்க்கப்பார்க்க மனசுலெ ஒரு பயம் வந்துருச்சு. 'கிண்' ன்னு இருக்கு. பயங்கர கனம்! அந்த கனத்தை கூரை தாங்குமா? சிங்கப்பூர்லே இருந்து கொண்டுவந்த சங்கிலி தாங்குமான்னு ஒரே பயம். வயத்தைக் கலக்குது!




நான் கிங் கிட்டே கேட்டேன், அதே அளவிலெ பாதி கனத்துலே பலகை செய்ய முடியுமான்னு? சரி. செஞ்சுரலாம். அதுக்கு 150 -200
டாலர்தான்(!) ஆகும்ன்னு சொன்னார். கீழே சப்போர்ட் கட்டை அடிச்சு செஞ்சுருங்கன்னு சொல்லிட்டேன். ஏற்கனவே செஞ்சதை ஒரு காஃபி
டேபிளாக் கூட ஆக்கிரலாம்.



நாளைக்கு 7.30க்குப் போகணும்!





22/12
காலையிலே 7.25க்குப் போயிட்டேன். கதவைத் திறந்தாச்சு. கேரியும் வந்துட்டாரு & வேலையையும் ஆரம்பிச்சுட்டாரு!
பில்டரும் வந்தாச்சு! என்ன வேலைன்னு பேசியாச்சு! பவுடர் ரூமுக்கும், ஆன் ஸ்யூட்க்கும் காங்க்ரீட் நிரப்பனும். முன் வாசக் கதவுக்கு
இன்னோரு போல்ட் போடணும். அப்புறம் க்ளோத் லைனுக்கு அடிப் பீடம் காங்க்ரீட் போடணும். இன்னும் என்னன்னு தெரியலை!





நான் திரும்பி வரப்போ அப்படியே 'கவுண்ட் டவுன்' சூப்பர் மார்கெட் போய் சில அட்டைப் பெட்டிகளைக் கொண்டுவந்தேன். சாமான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பேக் செய்ய ஆரம்பிக்கணுமே!




அப்படியே சிட்டிக்குப் போய் லைட்டையெல்லாம் எடுக்கணும். போற வழியிலே கொஞ்சம் காய்கறி ஃபங்கி பம்ப்கின்''லே வாங்கினேன்.
லைட்டுக்கு 292 $ சொச்சம் ஆச்சு! முன்னாலெயே இவர் கொடுத்துட்டாருன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இல்லையாம். அவுங்க முன்னாலே காசு எடுக்கறதில்லையாம்!



திரும்பி வரப்போ பில்டரோட ஃபோன் வருது. க்ளோத் லைனுக்கு அடிப் பீடம் எவ்வளவு உயரம் வைக்கணும்ன்னு? நேரா அங்கெ போனேன். லேண்ட்ஸ்கேப் எந்த மாதிரின்னு தெரியலையே. அவர் சொன்னது ரொம்ப தரையை ஏத்தறது. நம்மளாலெ இப்ப அது முடியுமான்னு தெரியாது. கொஞ்சம் மட்டமா வைக்கச் சொன்னேன். புல்தரை போடணுமுன்னா சரியா இருக்கும்.
கொண்டு போன விளக்கை வச்சிட்டு கேரிக்கிட்டே சொல்லிட்டு வந்தேன். கிரேக் நடுப்பகலுக்குள்ளே அவர் வேலையை முடிச்சுடுவாராம். நான் 11.30 க்கு வரேன்னேன்..





அடுக்களை நல்லா செட் ஆயிருச்சு. கிங் ஒருவேளை மத்தியானம் லஞ்சு டைம்லே வருவாராம். மணி 11.30 ஆச்சே, இந்த க்ரேக் வேலையை அப்படியே விட்டுட்டுப் போயிடப் போறாருன்னு அங்கே போனேன். சில வேலைங்க வார்டுரோப் ஷெல்ஃப் திருப்பி அசெம்பிள் ( பெயிண்ட் அடிக்கரப்ப வெளியே எடுத்தது!) செய்யச் சொன்னேன். ஒரு வேலையைப் பத்துவாட்டி சொல்லணும். வசதியா மறந்துருவாங்க! ஓட்டுமேலே இருக்கற ப்ளாஸ்டிக்கை எடுக்கச் சொல்லியிருக்கேன். ஏணி வேணும். அதுக்கு கேரியோடதுதான் எடுக்கணும்ன்னு காத்திருந்தார் பில்டர். அங்கங்கே கொத்து கொத்தா இருக்கற தரையை கொஞ்சம் சிமெண்ட் பூசச் சொன்னேன். அவரோடது கல் கலந்ததாம். அதுனாலே கிங்கு கலக்கறதுலே கொஞ்சம் போட்டா நல்லா வரும்ன்னு சொன்னார்.





அப்பவே கிங்கும் போவும் வந்துட்டாங்க! கிச்சன் க்ரெளட் போட. அவுங்க வேலையை அவுங்க பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பில்டர் போயாச்சு.
நான் வீட்டுக்கு வந்துட்டு அப்படியே அர்பன் டைல்ஸ்க்குப் போய் லாண்டரிக்கு போடற டைல்ஸ் வாங்கிவந்தேன். ட்,ரிம் நாம வாங்கினா
35 டாலராம். அதுவே டைல்லர் வங்கினா 40% ஆஃப். 21க்கு கிடைக்குமாம். கிங்குகிட்டே சொல்லணும்.






வாங்கிவந்த டைல்ஸைக் கொண்டுபோனேன் ஒரு நாலு மணிக்கு. கேரி எங்கேயோ அவசரமாப் போணுமாம். வந்து வேலையைத் தொடருவாராம். போறப்ப ஃபோர்ஸ் போட்டு அலாரம் ஆன் பண்ணச் சொன்னேன். ஆனாலும் போய்ப் பார்க்கணும்.




இப்ப மணி 7.20. ஃபோன் அடிச்சேன். வேலை முடிஞ்சிடுச்சாம். நான் போய் அலாரம் போட்டுட்டு வரேன். சரியா?






23/12
இன்னைக்கும் காலேல எட்டுமணிக்கு முந்தியே போய் அலாரத்தை எடுத்தேன். எட்டுக்கு கேரி வந்ததும் சொல்லிட்டு, நான் வந்துட்டேன்.
அப்புறம் கொஞ்ச வேலைங்களை இங்கே செஞ்சுட்டு, போஸ்ட் ஆஃபீஸ் போணும், டெலீனா வீட்டுலே நம்ம பாத்திரம் இருக்கே அதையும்
எடுக்கணும்ன்னு போனேன்.




அப்ப கேரியோட ஃபோன் வருது! வேனிட்டி லைட்டு உடைஞ்சிருக்காம்!
என்னன்னு போய்ப் பார்த்தா நாம வாங்கி வந்தது மூணு.அதுலே ஒண்ணு மாட்டிட்டு, ரெண்டாவது எடுத்துப் பார்த்தப்ப உள்ளே உடைஞ்சு இருந்ததாம். அப்ப மூணாவதையும் பாருங்கன்னு சொன்னேன். பார்த்தா அது சரியா இருக்கு. உடைஞ்சதை எடுத்துட்டுப் போய் லைட்டிங் டைரக்ட் கடைக்குப் போனேன். அவுங்க வேற மாத்தித் தரேன்னாங்க. ஆனா அது 'இன்வெர் கார்கில்'( அட! இங்கேயும் கார்கில்?)
என்ற ஊர்லே இருந்து வரணுமாம். அநேகமா அடுத்த புதனுக்குத்தான் வருமாம். வர்றபோது வரட்டும். நாம் என்ன செய்ய?





வீட்டுக்கு வந்து விட்டுப்போன வேலையையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சேன். மகளுக்கு அந்த எதிர்க்கடையிலிருந்து 'ஐ லிட்' லைட்டுலே
விட்டுப்போன பாகம் கிடைச்சுதாம். கொண்டு வந்து கொடுத்தாள். மத்தியானம் ஒரு நாலுமணிப்போல அங்கே செடி வெட்டற கட்டர் கொண்டு போனேன். பக்கத்து வீட்டு மரம் நம்ம வீட்டுமேல சாயுது! புது கட்டரிங் பாழாயிடாதா? எத்தனை தடவை க்ரேக் கிட்டே சொன்னேன். காதுலே வாங்குதுங்களா?





அந்தச் சின்ன கட்டர்லே வெட்டறது கொஞ்சம் கஷ்டம்தான். ரெண்டு மூணு கிளை வெட்டுனேன். அப்புறம் அந்தப் பெரியக் கிளையையே
வெட்டிடலாம்ன்னு நினைச்சு, பக்கத்து வீட்டு மரம் ஆச்சே. அந்த ஆளுங்க கிட்டே அனுமதி வாங்கலாம்ன்னு போனேன். அந்த ஓனர்
பையன் 'கார்ல்' இருந்தாரு. வந்து பார்த்துட்டு, கட்டாயம் வெட்டணும்தான். எங்கிட்டே அறுக்க ரம்பம் இல்லையேன்னார். நான் வீட்டுலே போய்
கொண்டுவரேன்னு சொன்னேன். கிளம்பரப்ப கூப்பிட்டார். 'என்கிட்டே விக்கியோட அப்பாவின் 'செயின் சா' இருக்கு. அது இருக்கறதை மறந்துட்டேன். எப்பவும் என் கேர்ள் ஃப்ரெண்டு அப்பாதான் எல்லா உதவியும் செய்யறார். அதனாலே எந்தக் கருவிகளும் என்கிட்டே இல்லெ'ன்னார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி! நம்ம பொண்ணுக்கும் நாமதானே செய்யறோம்ன்னு நினைச்சுகிட்டேன். அந்த 'எலெக்ட்ரிக் செயின் சா' கொண்டு
வந்து ஒரே நிமிஷம். சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............மரத்தை (கிளையை) வெட்டியாச்சு!






எப்ப குடி வரேங்கன்னார். ஜனவரி கடைசி ஆகிடும்ன்னு சொன்னேன். அவுங்க கூட ஒரு போர்டர் இருக்கார். அவருக்கு நம்ம வீட்டைச் சுத்தி அரைமீட்டர் அகலக் காங்க்ரீட் ஏன் இருக்குன்னு ஆச்சரியமா இருக்காம்!



'நான் ரொம்ப சோம்பேறி. என்னாலே களை புடுங்க முடியாது. அதனாலே சுத்திச் சிமெண்ட் போட்டுட்டோம்'ன்னு சொன்னேன். அவுங்களுக்கு ஒரே வியப்பு!





இப்ப கேரியோட ஃபோன். அலாரம் போட்டா அது ஆர்ம் ஆகலையாம்.அப்படியே விட்டுட்டு வந்துருக்கேன்னார். நான் போய் இருந்தேன். போட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னேன். நாளைக்கு 8 மணிக்கு வராராம். ஒவ்வொருநாளும் வெவ்வேறு நேரத்துலெ வர்றாங்க. அதுக்கேத்தமாதிரி நான் 'ஆடணும்'






24/12
காலையிலே வழக்கம்போல 8க்கு முன்னாலெ போய்க் கதவைத் திறக்கணும்ன்னு 7.56க்குப் போய்ச் சேர்ந்தேன். கேரி ரெடியா இருந்தாரு. 'குட்!!!' மகள் கொண்டுவந்த ரீப்ளேஸ்மெண்ட் பாகம் கொடுத்தேன். இன்னைக்கு அரைநாள் வேலை செய்வாராம். போகும்போது 'ஃபோர்ஸ்'
போட்டு அலாரம் ஆன் பண்ணச் சொன்னேன். ஆர்ம் ஆகலைன்னா ஒரு ரெண்டுமூணு விநாடி அமுக்கச் சொன்னென். இதுதான் ரியல் ஃபோர்ஸ் கொடுக்கறது:-))))இதுக்கு அப்புறம் அநேகமா புதனுக்குதான் வேலை ஆரம்பிக்கலாம்! மறுபடியும் கேரியிடமிருந்து ஃபோன்! பல்க் ஹெட் லைட்டுக்கள் ஒன்று குறைகிறதாம். ஒன்பது வாங்கியிருக்கிறோம். அதுக்குண்டான இடத்தில் ஒயர் இணைக்காமல் இருப்பதால் மற்ற விளக்குகள் எப்படி வேலை செய்கிறதென்று பார்க்கமுடியவில்லையாம்! நான் உடனே, இன்னுமொரு விளக்கு வாங்கிக்கலாம் என்று சொன்னேன்.
அப்புறம் மகளுக்கு ஃபோன் செய்து, விளக்கு மாடல் நம்பரைக் கொடுத்து இன்னொன்று வேணுமுன்னு ஆர்டர் கொடுக்கச் சொன்னேன். மகளோட வேலையிடம் லைட் கடைக்கு எதிரே இருக்கறது வசதியாப்போச்சு.
அப்புறம் அவளும் ஃபோன் செய்து ஆர்டர் கொடுத்தாச்சு. ஆனால் ஜனவரி 15க்கு மேலேதான் வருமாம் என்றாள். அது பரவாயில்லை!





தொடரும்....................

==========================