Monday, January 10, 2005

போலீஸ் அடி! தொடர்ச்சி....

நலம் விசாரித்துப் பின்னூட்டங்களிலும், தனி மடல்களிலும் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
போன பதிவின் தொடர்ச்சி......


போலீஸ்காரர் வந்து, விபத்து எப்படி ஆச்சு, என்னன்னு விவரம் எல்லாம் விசாரிச்சிட்டு, இவரோட லைசன்ஸை
வாங்கிக்( பிடுங்கிக்)கிட்டாராம். அப்ப ஆம்புலன்ஸும் வந்துருச்சு! எனக்கு நினைவு இருந்துச்சு. அதே சமயம் லேசா
மயக்கம் வர்றமாதிரியும் இருந்துச்சு. சுத்தி நின்னவங்களிலே யாரோ தண்ணி பாட்டிலைக் குடுத்தாங்க. என் முகத்துலே
தண்ணி தெளிச்சுக்கிட்டே இருந்தாங்க. இவரு என்கிட்டே என்னென்னமோ பினாத்திக்கிட்டு ( தமிழ்லெதான்) இருக்கார்.
மகளையும் கைத்தொலைப் பேசியிலே கூப்பிட்டு, அம்மாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிப்போச்சுன்னு சொல்றார்.

ஆம்புலன்ஸிலே ரெண்டு பெண்கள் இருந்தாங்கபோல, என்னாலெதான் தலையைத் திருப்ப முடியலையே! அவுங்களிலே
ஒருத்தர் நான் விழுந்ததிலே இருந்து அப்படியெ நகராம இருக்கேனான்னு உறுதிப் படுத்திக்கிட்டு, என் கிட்டே என் பிறந்த
தேதி என்னன்னு கேட்டாங்க. எனக்கு நினைவு பூரணமா இருக்கான்னு தெரிஞ்சுக்கிறதுக்காம்! பதில் சரியான்னு இவர்கிட்டே
கேட்டுக்கிட்டாங்க. அப்புறம் கழுத்துக்கு ஒரு ஸ்டிஃப் காலர் போடப்போறோம். அது ரொம்ப 'அன்கம்ஃபர்ட்டபிளா' இருக்கும்
கொஞ்சம் பொறுத்துக்குங்கன்னு ஒரு காலர் மாட்டிட்டாங்க. தொண்டைக் குழியை அடைக்கிறமாதிரி அது அழுத்துது!

இப்ப, வலிக்கு நம்பர் கேட்டாங்க. இது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். நம்பர் சொல்லுன்னா என்னான்னு
சொல்றது? ஸீரோன்னா வலியே இல்லையாம். பத்துன்னா பயங்கர வலியாம்! ஆனா, வலியிலே இருக்கறவங்களுக்கு
அவுங்க வலி பிரதானமாத்தானே தெரியும்? எனக்கோ உயிர் போறமாதிரி வலிக்குது.( ஆமா இந்த 'உயிர்போற வலி'ன்னு
சொல்லுறமே, 'அப்ப' அந்த வலி எப்படியிருக்கும்ன்னு நிஜமாவெ நமக்குத் தெரியாதுதானே? அது எப்படி இருக்கும்ன்னு நமக்கு
முன்னாலே இறந்துபோனவுங்க யாராவது வந்து சொன்னாத்தான் தெரியும். இல்லையா?) ரொம்ப வலியா? கொஞ்சமா? தாங்கறமாதிரி இருக்கா?
இப்படிக் கேக்காம வலிக்கு 'மார்க்'போடச் சொல்றாங்க. நானு பத்துன்னு சொன்னேன். அவ்வளோதான்! அதுக்குள்ளே என்னை
ஆம்புலன்ஸுலே ஏத்தியாச்சு. வலி நிவாரணி தரோம்ன்னு சொன்னாங்க. என்ன மருந்துன்னு நான் வாய்குழறிக்கிட்டே கேக்கறேன்.
அதுதான் தொண்டையை அடைச்சிக்கிட்டு காலர் மாட்டியிருக்கே!

இந்த இடத்துலே ஒண்ணு சொல்லணும். இங்கே ஆஸ்பத்திரிகளிலே வலி நிவாரணின்னு சொன்னா அது மார்ஃபின் தான்! எனக்கோ
அது அலர்ஜி! வலியை நிவாரணம் பண்ணாம, வாந்தி வாந்தியாவந்து இன்னும் மோசமான வலியைக் கொண்டு வந்துரும். எல்லாம்
அனுபவப் படிப்பினைதான்! நான் நினைச்ச மாதிரியே அவுங்க மார்ஃபின் தான் தரப்போறாங்களாம். ஐய்யோ அது வேணாம்ன்னு
கை ஜாடை காட்டினேன். அதுக்குள்ளெ 'வெய்ன்' தேடுறாங்க. இவர் கேக்கறாரு, என்னத்துக்குன்னு. சர்ஜரி பண்ணனும்ன்னா
வேண்டியிருக்கும்னுட்டு, ரெண்டு கையிலேயும் மாறி மாறிக் ஊசியாலெ குத்திக்கிட்டு இருக்காங்க. கத்தக்கூடத் தெம்பில்லாம இருக்கு.
அஞ்சாறு இடத்துலே குத்திப் பார்த்துட்டுப் புறங்கையிலே நரம்பைக் கண்டுபிடிச்சு ஊசியைக் குத்திவச்சிட்டாங்க.சர்ஜரின்னு கேட்டதும்
இவரோட பயம் கூடிப்போச்சு போல, என் தலைமாட்டுலெ உக்கார்ந்துக்கிட்டு இன்னும் புலம்பிக்கிட்டே எல்லாக் கடவுளுங்களையும்
கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்!

வண்டி கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போய்க்கிட்டு இருக்கு. படுத்துக்கிட்டு போறது வாந்தி வர்றமாதிரியும் மயக்கமாவும் இருக்கு! பதினேழு
வருசப் பழக்கமுள்ள தெருவுங்கதான். ஆனாலும் எங்கேயோ போறமாதிரி இருக்கு. நிறையதடவை ஆம்புலன்ஸ் சவாரி செஞ்சுருக்கேன்.
அதெல்லாம் பேஷிண்ட் கூடப் போனது! இந்த நாட்டுக்கு வந்த நாளிலே இருந்து ( இங்கேதான் எல்லாம் டூ இட் யுவர்செல்ஃப் ஆச்சே)
வீட்டுக்கு மெயிண்டனன்ஸ் பண்றேன் பேர்வழின்னு ஏதாவது செஞ்சிட்டு ஆம்புலன்ஸிலே போற பழக்கம்! சுருக்கமாச் சொன்னா
நம்ம வீட்டுலே இவர் ஒரு 'டிம் த டூல்மேன் டெய்லர்'. ஒருவழியா வண்டி நின்னுச்சு. கதவைத் திறந்த்வுடனே என் மகள் உள்ளே
ஏறிவந்து அம்மா அம்மான்னு கூப்பிடறாள்.அவளுக்கும் இந்த மாதிரி எமர்ஜென்ஸிக்கு ஓடி வர்றது இது எத்தனாவது தடவையோ! எல்லாம்
அப்பாவைப் பார்க்க ஓடிவர்றதுதான்! எல்லா ப்ரொசிஜரும் அத்துப்படி!

ரொம்ப நீட்டிவலிக்காம சுருக்கமாச் சொல்ல முயற்சிக்கட்டுமா?

ஏழெட்டு எக்ஸ்ரே, ரெண்டு டாக்டருங்கன்னு வந்து பார்த்துட்டு கழுத்துலே எலும்பு முறிவு இல்லேன்னு சொல்லி ஒருவழியா அந்தக் காலரைக்
கழட்டினாங்க! இடுப்பு பிரதேசத்துலே தாங்கமுடியாத வலி இருந்தாலும், இந்தப் பட்டையைக் கழட்டுனதே ரொம்ப ஆசுவாசமா இருந்துச்சு!
இன்னும் ரெண்டு டாக்டருங்க வந்து 'ஏன் வலி நிவாரணி வேண்டாம்ன்னு சொல்றீங்க? வாந்தி தான் காரணம்ன்னா அதுக்கு ஒரு ஊசி போடறோம்.
கட்டாயம் வலி நிவாரணி எடுக்கணும்'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. 'தேர் இஸ் நோ நீட் டுபி இன் பெயின்'என்றதுதான் திருப்பித்
திருப்பிச் சொல்லப்பட்டது!

நானும் வேணாம் வேணாம்ன்னு மறுத்துக்கிட்டே இருந்தேனா, அப்ப இன்னோரு டாக்டர் ஒரு மாத்திரையைக் கொண்டுவந்து இதையாவது
எடுங்க. இதுக்கு வாந்தி வராது. இது மார்பின் இல்லை. ஆனாலும் ஒரு ஊசி போட்டுடறோம். வாந்தியே வராதுன்னு சொன்னாங்களா, உடனே
மகளும், இவரும் என்னை வற்புறுத்தி அந்த மருந்தை எடுத்துக்க வச்சிட்டாங்க. நல்ல வேலை செஞ்சாங்க! வாந்தி வராததோட, வலியும்
கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருந்துச்சு!

இவ்வளவு நேரமும், நம்ம அறைவாசலிலேயே இருந்தது யாருன்னு நினைக்கறீங்க? நம்ம போலீஸ்காரர்தான்! டாக்டருங்ககிட்டேயும் விசாரிச்சிட்டு,
உள்ளெவந்து என்னையும் விசாரிச்சிட்டு போனார். அப்புறம் இவரோட லைசன்ஸைத் திருப்பிக் கொடுத்துட்டாராம்.ஆனா, மறுபடி ஒரு செக்கப்
செஞ்சு ரிப்போர்ட் அனுப்பணும்ன்னு சொல்லிட்டுப் போனாராம்.

இவ்வளவு நேரமும், நான் மனசுக்குள்ளே பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டே இருக்கேன், 'பெருமாளே, உயிர் வேணும்னா சட்டுன்னு
எடுத்துக்க. முதுகு அடிபட்டு வீல்சேர்லே உக்கார வச்சுடாதே'ன்னு!

இங்கெல்லாம் 'வீல்சேர் ஆக்செஸ்' இல்லாத இடமே இல்லை! அதுலேயும் இப்பல்லாம் பேட்டரியிலே ஓடுற 'மொபில் ஸ்கூட்டர்' சர்வ
சாதாரணமா இருக்கு. அதுலே போகணும். அது ரொம்ப ஜோரா இருக்கும்ன்னு எனக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான ஆசை! அதை
என் மகள் கிட்டே அப்பப்ப சொல்லவும் சொல்வேன், 'அம்மாவுக்கு வயசாச்சுன்னா இப்படி ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துடு. என்னாலெ
பார்க்கிங் தேடி அலைய முடியாது'ன்னு! இப்பத்தான் அப்படி இருக்கறவங்களோட கஷ்டம் புரியுது! அவுங்க மனசெல்லாம் எவ்வளவு துக்கப்படும்னு
நினைச்சுப் பார்க்கறேன். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தாத்தானே தெரியும்?

இதுக்கு நடுவிலெ நம்ம நண்பர்கள் சிலர் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாங்க. எமர்ஜென்ஸி ரூம்லே கழுத்துப் பட்டையோடப் படுத்திருந்ததைப்
பார்த்துட்டு ரொம்பவே பயந்துட்டாங்க!

அப்புறமும் பலவிதமான பரிசோதனைகள் எல்லாம் செஞ்சுட்டு, ராத்திரி ஒரு மணிக்கு வீட்டுக்குப் போகலாம்ன்னு சொன்னாங்க. அந்த
ஏழரைமணி நேரமும் இவர் புலம்பிக்கிட்டேதான் இருந்தார். எனக்கே ஐய்யோன்னு ஆகிப் போச்சு! என் ரெண்டு புறங்கையிலேயும்
பத்து காசு அளவுலே ஏழு ப்ளாஸ்டர் இருந்தது. நல்லாத்தான் குத்திப் பார்த்திருக்காங்க!

எனக்கு உக்கார முடியுது. நின்னுகிட்டே இருந்தாலும் பரவாயில்லெ! ஆனா படுத்தாத்தான் ஒரே வலி! நாலுமணி நேரத்துக்கு ஒருதடவைன்னு
வலிநிவாரணியா பனடாலை முழுங்கிக்கிட்டு இருக்கேன்! இங்கே இப்ப விடுமுறை சீஸன். இன்னைக்குத்தான் சில இடங்களிலே வேலை
ஆரம்பிச்சிருக்கு! நாளைக்குத்தான் ஃபிசியோதெரபிக்குப் போகப்போறேன்.

என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நண்பர் ஒருவர், நேத்து வீட்டுக்கு வந்திருந்தார். ச்சும்மாப் பேசிக்கிட்டு இருக்கறப்ப, எங்க இவர்
சொன்னார், 'முதுகுலே, கறுப்பா ரத்தம் கட்டுன அடையாளம் எல்லாம் இல்லெ. ஆனாலும் பயங்கர வலியா இருக்குதுன்னு சொல்றாங்க!
குனிய முடியாது, படுக்கையிலே இருந்து எழும்போது இன்னும் ரொம்ப வலி!'

அதுக்கு நம்ம நண்பர் ( திருப்பூர்காரர்) சொன்னார், 'போலீஸ் அடி மாதிரியா? பின்னிடுவாங்க. ஆனா உடம்புலே ஒரு அடையாளமும் இருக்காது!'

நேத்து நம்ம போலீஸ்காரர் ஃபோன் செய்து, என்னிடம் நலம் விசாரித்துவிட்டு, இவர்கிட்டே பேசணும்னு சொன்னார். 'கேர்லெஸ் ட்ரைவிங்'
என்ற பிரிவுலே இவருக்கு ஒரு நோட்டீஸ் கொடுப்பாங்களாம்!

நம்ம சுந்தர் சொன்னதுபோல 'ஊமைஅடி என்றான் முருகன் சத்தமாய்!'

அன்பு உள்ளங்களுக்கு நன்றி!


9 comments:

said...

துளசியக்கா,

அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்னும் வீடு திரும்பாத நிலையிலும் கூட வலைப்பதிவு நண்பர்களிடம் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் நினைப்பது மனதை நெகிழ வைக்கிறது.

நலம் பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனைப் ப்ராத்திக்கிறேன்

ப்ரியமுடன்,

கோபி

said...

mathipirkuriya Tualasi,
Neenga seekiram naalaiduveenga...
Kavalai vendaam...

Anpudan
Balaji-paari

said...

ஏன் உங்களை சிரமப்படுத்திக்கறீங்கன்னு கேக்கத்தோணிச்சு. இதை எழுதறது உங்களுக்கு ஒரு வடிகாலா இருக்கும்னா எழுதறது சரி. பழையபடி ஓடியாடி விளையாடுவீங்க, கவலையை விடுங்க.

said...

நீங்கள் நலம்பெற இயற்சக்திகள் அருள் புரியட்டும்.

திரு.கோபால் இடமிருந்து கார் சாவியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

said...

அன்புள்ள துளசி,

நீங்கள் விரைவில் நலம்பெற வேண்டுதல்கள்.

said...

அன்புள்ள துளசி,

இந்த வலியிலும், உங்கள் கஷ்டங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்....

விரைவில் முழுசுகம் பெற வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கிறிஸ்

said...

நீங்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்..

said...

நீங்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்..

said...

வாங்க பொதக்குடியான் & மற்ற நண்பர்களே.

வருகைக்கும் அனுதாபத்திற்கும் நன்றி.

ரொம்ப சீக்கிரமா வந்துட்டேனா?

மன்னிக்கணும். இப்பத்தான் முங்குனது பொங்குது;-))))