Friday, July 21, 2017

சொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)

காலையில் கண்ணைத் திறக்கும்போதே   இன்றைய  கடமைகள் மனசில் வரிசை கட்டி நின்னது.   சரியா இருவத்திநாலு மணி நேரம் இருக்கு. என்னென்ன செஞ்சுக்கலாமுன்னு சின்னதா ஒரு திட்டம் போட்டுக்கிட்டோம்.
அனிதா சொன்னதுபோல.... உடுப்பு  சாயங்காலத்துக்குள் ரெடி ஆகுமான்னு மனசிலொரு சின்ன சந்தேகம்,  ஓரமா உக்கார்ந்துக்கிட்டு லேசா அரிச்செடுக்குது.

முதல் வேலையா  நாம் முன்னே  குடிஇருந்த செக்டர் 21க்குப் போகணும். எனக்கொரு தோழி அங்கே இருக்காங்க.  நாம் இருந்த வீட்டுக்குப் பக்கம்தான். ரெண்டு நிமிச நடை.  அங்கே இருந்தவரை, அவுங்க வீட்டுக் கருவேப்பிலைதான் நம்ம சமையலுக்கு!   சாம்பார் ரசத்துலே போட்டால் நல்லா ருசியா இருக்கும்னு எனக்குச் சொன்னாங்க :-)  ஆஹா....  அப்படியா? அது சரி.....

இங்கே கருவேப்பிலை கடையில் இல்லவே இல்லை. விசாரிச்சுக் களைத்த நிலையில் புதுத்தோழி நீருவிடம் சொன்னால்..... வீட்டு வாசலில் நிக்கும் செடியைக் காமிச்சு, 'இஸ் மே ஸே தோட் கி ஜாயியே. சாம்பார் ரஸம் மே ச்சோடேங்கேத்தோ பஹூத் டேஸ்ட்டி ஹோத்தா ஹை' ன்னாங்க. ஆஹாங்...... அப்படியா?

"எப்ப வேணுமுன்னாலும் பறிச்சு எடுத்துக்கிட்டு போங்க. பூரா துனியா தோட் கி ஜாதா யஹாங் ஸே."

ஓஹோ......தேங்க்ஸ் ஜி.

வர்றோமுன்னு தகவல்  சொல்லலாமுன்னா   ஃபோன் நம்பரை நம்ம லிஸ்ட்டுலே காணோம். (நல்ல தோழி... நான்!)  ஒரு ஆட்டோ  பிடிச்சு அங்கே போய்ச் சேர்ந்தோம்.  சண்டிகரில் பொதுவா  இந்த அஞ்சு வருசத்தில்  அவ்வளவா மாற்றங்கள் ஏதும் தோற்றத்தில் இல்லை.  ஆளாளுக்கு அவுங்க இஷ்டம்போல் ஒன்னும் செஞ்சுக்க முடியாது. நகர அமைப்பு அப்படி. இதுக்கான சட்டதிட்டங்கள் தனி !
நம்மைப் பார்த்த தோழிக்கு  அப்படி ஒரு மகிழ்ச்சி.  அவுங்களவர்  ஆஃபீஸ் போய் இருந்தார்.  அவருக்கு நல்ல பெரிய உத்யோகம்.  ஃபோன் செஞ்சு விவரம் சொன்னாங்க தோழி. அடுத்த கால் மணியில் அவர் வீட்டுக்கு வந்துட்டார். கை நிறைய  பலகாரங்கள் ஃப்ரம் கோபால்ஸ் :-)

நமக்கு அவுங்க  இப்போ சம்பந்தியாயிட்டாங்கன்னு தெரிஞ்சு எனக்கும்  சந்தோஷம்!  மகன், தென்னிந்தியப் பொண்ணைக் கல்யாணம்கட்டி இருக்கார்!
ஒருமணி நேரம் போனதே தெரியலை. கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு.  எங்களையெல்லாம் சேர்த்து க்ளிக்க  ட்ரைவர்  இருக்கார் !  செல் ஃபோன் கேமெரா வந்தபிறகு அநேகமா எல்லோருமே நல்லாத்தான் படம் எடுக்கறாங்க :-)
அங்கிருந்து அப்படியே  பொடி நடையில் நாம் இருந்த பழைய வீட்டுக்குப் போனோம்.  ரெண்டு நிமிச நடை. இந்த வீடுதான்.  மாடியிலே நாமும் கீழே ஓனரும்.  இப்போ  வேற யாரோ குடி இருக்காங்களாம்.
ஓனர் (இவரும் அரசாங்க அதிகாரிதான்)  வேலைக்கும்,  ஓனரம்மா ஒரு கல்யாணத்துக்கும்  போயிருந்தாங்க.  மகள் வீட்டுலே இருந்தாங்க.  நாம் அங்கே இருந்தப்ப மகள் தில்லியில்  மருத்துவப்படிப்பு. இப்போ இங்கே  மருத்துவர்.  இன்றைக்கு  டே ஆஃப். ஆஹா.... நல்லதாப் போச்சு.  முதல்லே பிக்ஸியைப் பத்தித்தான் விசாரிப்பே!  அவன்  ப்ரீடருடைய பண்ணைக்கு  அப்பவே  போயிட்டான்.  நல்லா இருக்கானாம்.

'நம்ம தெரு'வைக் கொஞ்சம் க்ளிக்கிட்டு, இன்னொரு ஆட்டோ பிடிச்சு அறைக்கு  வந்தோம். வெயிலில் சுத்தக்கூடாதுன்னு நம்மவர் கட்டளை.
எனக்கு குஜராத் எம்போரியம் போகணும்.  யானை ப்ரிண்ட் துணிகள் பெரும்பாலும் அங்கேதான் கிடைக்கும். சண்டிகரில் இன்னொரு பெரிய கஷ்டம் என்னன்னா...... இந்த செக்டர் நம்பர்கள்.  ஏரியாவுக்கு பெயர்கள் கிடையாதுன்றது ஒரு விதத்தில் நல்லது... இல்லேன்னா அரசியல்வியாதிகள் நகர் நகரா உருவாகி இருப்பாங்க  :-)


இந்த நம்பர்கள் கூட  ஆறாவது செக்டர் பக்கத்துலே ஏழாவது, ஒன்பதுக்குப் பக்கத்துலே பத்துன்னு இருக்காது.  அப்படியும் இப்படியுமா ஒரே எண்கள் குழறுபடியாத்தான் இருக்கு.

 இதைக்கூட தன் உள்ளங்கையை விரித்து  விரல்களில் கணு கணுவா இருக்கும் பகுதியைக் காமிச்சு  'இப்படி'ன்னு  சொல்லிக்கூடக் கொடுத்தார் நண்பர். எதாவது புரிஞ்சால் தானே?  அது ஆச்சு  அஞ்சு வருசம் என்பதால் சுத்தமா மறந்தே போச்சு.

படத்துலே பார்க்கும்போது   எல்லாம் அடுத்தடுத்துத் தெரியும். ஆனால்  நேரில்  அங்கே பார்க்கும்போது நமக்குத் தலையும் வாலும் உடம்பும் புரியாது. இதைப்பத்தி ஏற்கெனவே  அங்கே போனதும் புலம்பித் தள்ளியாச் :-) அங்கே இருந்த சமயம், ஒரு பெரிய  வரைபடம் வாங்கி சுவத்தில் ஒட்டி வச்சுருந்தேன்.  அப்பமட்டும் புரிஞ்சுருக்குமுன்னா  நினைக்கறீங்க?
இப்பத்திய பிரச்சனை என்னன்னா.....    வாடகை வண்டி எடுத்தால் ட்ரைவருக்கு செக்டர் நம்பர் சொல்லணும். அதுவும் ஒவ்வொரு செக்டருக்கும்  ஏ பி சி டின்னு நாலு உட்பிரிவும் இருக்கே....  அது உள்பட.
'வலை இருக்கக் கவலை ஏன்'னு   நம்பரைக் கண்டுபிடிச்சு நாலுமணி வாக்குலே கிளம்பினோம். ஆட்டோதான் வாசலில் நிக்குதே.  அங்கே போனா யானைகளையே காணோம். ட்ரெண்ட் மாறிப் போச்சு போல....  அக்கம்பக்கம்  இருக்கும் கடைகளில் பார்த்தால் நல்ல ஸல்வார் ஸூட் செட்டுகள் இருக்கு.  ம்ம்ம்.... சொல்ல மறந்துட்டேனே....   இங்கெல்லாம் துணிகளுக்கு ஒரு செக்டர், ஊசிக்கு ஒன்னு, நூலுக்கு ஒன்னு  எல்லாத்துக்கும் தனித்தனி வேற!  வரிசையா  பாங்க், வரிசையா  ஃபோன் கம்பெனின்னு.....


ரொம்ப விலை மலிவாயும்,  அழகழகான டிஸைன்களுமா  இருக்கறதை விட முடியுதா? அதான் எக்ஸ்ட்ரா லக்கேஜுக்கு பணம் கட்டி இருக்காரே.....   ஒரு கடைக்குள் போய்ப் பார்த்து  நாலு செட் வாங்கியாச்சு :-)

அடுத்து இன்னொரு ஆட்டோவில் செக்டர் 31 D.   நம்ம முருகர் இருக்கார்  அங்கே! ராஜகோபுரத்தைப்  பகல் வெளிச்சதில் முதல்முதலாப் பார்க்கிறேன்.  கொஞ்சம் ஒல்லி உடம்புதான்.  கோபுரம் கட்டுமுன்  பயன் படுத்திக்கிட்டு இருந்த  வழிக்கு மேல் அலங்கார அமைப்பு வச்சு கேட் போட்டுருக்காங்க.
இதுக்குள்ளே போனால்  பின் பக்கத்து  வளாகத்தில்   வடக்கர்களின் கோவில் (எல்லா சாமிகளும் உண்டு. பளிங்குச்சிலைகள்) வரும். அதுக்குத் தனி வழி வச்சுருக்காங்களான்னு பார்க்க விட்டுப்போச்சு.  கேட் பக்கத்தில் ஒரு பூக்கடை ஒன்னு !  இதெல்லாம் புதுவரவு !
கோவிலுக்குள்ளே போய்  முருகனையும், அவன் மாமன், மாமி, தாய் தகப்பன்னு  எல்லாரையும் கும்பிட்டுக்கிட்டோம்.  வேதபாடசாலைப் பசங்கள்  பழைய வழியில்,   இப்போ புதுசா வந்துருக்கும்  அக்னிகுண்டத்தாண்டை  விளையாடிக்கிட்டு இருக்காங்க.
இந்த அக்னிகுண்டமே  முந்தி கோவிலுக்குள்  அம்மன் சந்நிதிக்கும், நவகிரக சந்நிதிக்கும் இடையிலே இருந்ததுதான். இப்ப திறந்த வெளி என்றதால் புகைப் பிரச்சனை இல்லாம இருக்கும்!  உள்ளே இருந்த காலத்திலும் புகைப் பிரச்சனை இல்லை.  ஹோமகுண்டத்துக்கு மேலே   ஸீலிங்கின் உட்புறத்தில்  ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் போல ஒன்னு  வச்சு  அது புகையை இழுத்துக்கும் விதமா டிஸைன் செஞ்சு வச்சுருந்தார்  ராஜசேகர்.

கோஷ்டத்தில் இருக்கும்  சாமி சிலைகளுக்கு  அபிஷேகம், குளியல் எல்லாம்  தினப்படி நடக்கும் போதும், ஒரு சொட்டுத் தண்ணீர் வெளியே வழியாமல்  உட்புறமா  உறிஞ்சி எடுக்கும் விதமா  பைப் லைன் எல்லாம் அமைச்சுக் கட்டுனது,  இந்தக் கோவில்.  நம்ம ராஜசேகர்,  விமானக் கட்டுமானம்,  அதில்  ஃப்யூல் உறிஞ்சி எடுக்கும் மெக்கானிசம் எல்லாம் தெரிஞ்ச  ஏர்க்ராஃப்ட் எஞ்சிநீயர் என்பதால் முருகனுக்கும் நல்லதாப் போயிருச்சு:-)

நாளைக்குக் கிளம்பறோமுன்னு  ஆஞ்சிகிட்டேயும் முருகனிடமும்  சொல்லிட்டு,  இன்னொரு ஆட்டோவில்  செக்டர் 17க்குப் போறோம்.  வழியில்  19 இல் ஒரு துப்பட்டாக் கடையில் சின்னதா ஒரு  பர்ச்சேஸ்.  நம்ம யானை கமீஸுக்கு  துப்பட்டா ஒன்னு :-)
சரியா ஆறு மணிக்கு  'போஷாக்' போய்ச் சேர்ந்தோம்.  அனிதா இருந்தாங்க. நம்மைப் பார்த்ததும் சிரிச்ச முகத்தோடு ஒரு வரவேற்பு. கீழே பேஸ்மென்டுக்கு ஆள் அனுப்புனதும்  டெய்லர் வந்துட்டார்.  உடைகள்  பொதியைத் திறந்து  காமிச்சாங்க.  சரியாத்தான் வந்துருக்கு.  நாம் சொன்ன மாற்றங்கள் எல்லாம் செஞ்சுருக்காங்க.  டெய்லர்  கையோடு வச்சுருந்த  மெஷரிங் டேப்பால்  நாம்  கொடுத்த அளவும் உடுப்பு அளவும்  சரியா இருக்குன்னு அளந்து காமிச்சார். நல்ல நீட் ஒர்க்.  இந்த ட்ரெஸ் டிஸைன் பண்ணவங்க பாலிவுட் டிஸைனர்களில் ஒருவரான அனிதா டோங்ரே.

நல்லபடியா பேக் செஞ்சு கொடுத்து, கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்கும்போது  வெளியே எடுத்து   வார்ட்ரோபில் எந்தமாதிரி தொங்க விடணும் என்பதெல்லாம் சொல்லி, அதுக்குண்டான விசேஷ  ஹோல்டர் எல்லாம் கொடுத்தாங்க. கல்யாண ஃபோட்டோ அனுப்புங்கன்னு  கூடவே ஒரு  வேண்டுகோளும்.
(கல்யாணம் நல்லபடியா  முடிஞ்சதும் படம் அனுப்பி வச்சேன்.  டிஸைனருக்கும்  தனி  மடலில் அனுப்பினேன். ரெண்டு இடங்களில் இருந்தும் பதிலும் வந்துச்சு.  அவுங்களுக்கும் நமக்கும்  மகிழ்ச்சி & மகிழ்ச்சி :-)  

உடுப்புப் பொதி நல்ல கனம்!  ஆறு கிலோ  இருக்கு.  இதே செக்டர்தான் என்றாலும்   தூக்கிக்கிட்டு  ஹொட்டேல் வரை நடக்க முடியாது.    எதுக்கு இருக்கு ஆட்டோ?  தீஸ் ருப்யா!

அறைக்கு வந்ததும்  பெட்டிகளை  ரீ அரேஞ்ச் செஞ்சு உடுப்புகளைக் கசங்காமல் வச்சார் நம்மவர்.   வந்த வேலை முடிஞ்சது.  இனி  டின்னர்  போயிட்டு வந்து  ரெஸ்ட் தான்.  காலையில்  இங்கிருந்து கிளம்பறோம்.

தொடரும்...........  :-)Wednesday, July 19, 2017

சென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா :-( (இந்திய மண்ணில் பயணம் 32)

நம்ம  ஷிவாலிக்வியூ ஹொட்டேல் இருப்பதே செக்டர் 17தான். இதுதான் சண்டிகரின் மெயின் ஷாப்பிங்  சென்ட்டரும் கூட.  கடைகள் பத்து  மணிக்குத்தான் திறக்கறாங்க என்பதால் நாமும் கொஞ்சம் நிதானமாகவே கிளம்பினோம். கீழே ரெஸ்ட்டாரண்டில் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. பஃபேதான்.  ஊத்தப்பம் இருந்தது.  பார்த்தேன் :-)

 மகள் கல்யாணத்துக்கான உடுப்பு வாங்கிக்கணும். அதுவுமே கூட  நம்ம இஷ்டத்துக்கு வாங்க முடியாது !  டிஸைன், கலர்  எல்லாம் மணப்பெண் விருப்படி இருக்கணும்தானே?  நாம் சண்டிகரில்  கொஞ்சநாள் வசித்தப்ப,  மகள் கல்யாணத்துக்கு  உடைகள் இங்கே வாங்குவோமுன்னு கனவில் கூட நினைச்சதில்லை.

மகளுடைய  கல்யாணம் நிச்சயமானதும்,  மணப்பெண் உடுப்பு என்னன்னு தீவிரமா உக்கார்ந்து பேசுனப்பதான்....  பொதுவா வெள்ளைக்காரங்க போட்டுக்கும் கல்யாண கௌன் மேலெ அவளுக்கு  அவ்வளவா ஆசை இல்லைன்னும்,  கொஞ்சம் இண்டியன் டச் இருக்கணுமுன்னு  ஆசைப்படறதாகவும் சொன்னதே எனக்கு பெரிய மகிழ்ச்சி.  புடவை அழகு என்றாலும் கூட  ஒருமுறைக்குப்பின்  கட்டிக்கவும் இங்கே என்ன சான்ஸ் இருக்கு?  லேய்ங்கா (காக்ரா)வாங்கினால் பார்ட்டி ட்ரெஸாக் கூடப் பயனாகும்.

வலை எதுக்கு இருக்காம்?  மேய்ச்சலில் பலவிதமான  வகைகளைப் பார்த்ததும்  சரின்னுட்டதால், பயணத்துலே இவ்ளோதூரம் போகப்போறோமே.... அப்படியே  சண்டிகரில் வாங்கிக்கலாமுன்னு  முடிவு செஞ்சோம்.
இந்த செக்டர் 17 ஷாப்பிங்  ஏரியா ரொம்பவே பெருசு.  மால் என்று சொன்னாலும்...  பெடஸ்ட்ரியன் மால் என்றே சொல்லணும்.  பிரமாண்டமான கட்டடங்கள்  எல்லாம் இல்லை.  சண்டிகர் நகர அமைப்பில்  இந்த பிரமாண்டங்களுக்கு அனுமதி இல்லை. அதிகப்படி தரைதளம் தவிர மேலே ரெண்டு/ மூணு மாடிவரைதான். கட்டடங்களும்  ஒன்னோடொன்னு  இடிச்சுக்கிட்டு நிக்காது. ஒரு சாம்பிள் படம் இங்கே பாருங்க.
திறந்த வெளி தாராளமாக இருக்குமிடம். அங்கங்கே மரங்கள். நீரூற்றுகள்னு  பார்க்கவும்  நல்லாவே இருக்கும்.  கலைநிகழ்ச்சிகள் கூட  இந்தத் திறந்த வெளியில் நடத்துவாங்க.  சுருக்கமாச் சொன்னா இதுதான்  சண்டிகரின் மெரினா பீச் :-)  கடைகளுக்கு  முன்னால்  அகலமான வராந்தா  ஓடும்.  நிம்மதியாக நடக்க முடியும்.  சும்மா ஒன்னும் வாங்காமல் சுத்திப் பார்த்தாலே  ஏழெட்டு கிலோமீட்டர் நடந்துருப்போம்.
கட்டடத்துக்குள் இருக்கும் கடைகளைத்தவிர  திறந்த வெளியில்  ஏகப்பட்ட சிறு வியாபாரங்கள். கைவினைப் பொருட்கள் வாங்க வேறெங்கேயும் அலைய வேணாம்.  பேரம் பேசிக்கலாம் என்பது கூடுதல்  சுவாரஸ்யம் :-)
பார்க்கிங் கூட பிரச்சனையே இல்லை. எப்படியும் இடம் கிடைச்சுரும். நமக்குத்தான் இப்ப வண்டி கிடையாதே :-)ஏழெட்டுக்  கடைகளுக்குள்  போய் வந்துக்கிட்டு இருக்கோம். எதுவும் சட்னு எனக்கே  பிடிக்கலை.  அப்புறம்  ஒரு கடையில் (இது  மணமக்களுக்கான விசேஷக் கடைகளில் ஒன்னு)  நாலைஞ்சு  உடுப்புகள் நல்லாவே இருக்குன்னு அவைகளைப் படங்களாக  மகளுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம்.   நியூஸியின் நள்ளிரவு வரை மகள் லைனில் இருக்கணுமுன்னு  சொல்லி இருந்தேன்.
இங்கேயும் அங்கேயுமா தகவல்கள் பரிமாறி கடைசியில்  ஒரு உடுப்பு  தேர்ந்தெடுத்தாச்சு. நம்ம அளவின்படி தைச்சுக்  கொடுப்பாங்களாம். அளவெல்லாம் எழுதிக்கொடுத்து,  உடையில் சில மாற்றங்கள்  செய்யச் சொல்லி  எல்லாம்  ஒருவழியா முடிஞ்சது.

பொதுவா இந்த மாதிரி உடைகளை சினிமாவிலும், இங்கே  நியூஸியில்  வடக்கர்கள் அதிகமா வரும் விழாக்களிலும் (அதிலும்  அப்பதான் ஊரில் இருந்து புதுசா இங்கே வந்தவங்களா இருக்கணும்!) பார்த்துருக்கேன் என்றாலும் கூட  இப்படித் தொட்டுப் பார்த்ததெல்லாம் இல்லை.  உடுப்பைத் தூக்கி எடுத்துக் காமிக்கும் உதவியாளர் ஏன் ஒரு பக்கமா சாயறாருன்னு  நான் அதைக் கையில் வாங்குனப்பத் தெரிஞ்சு போச்சு. யம்மாடி.... என்னா கனம்!   இதுவே அஞ்சாறு  கிலோவுக்குக் குறையாது போல!

நாளைக்கு  மாலை  எல்லாம் ரெடி ஆகணும்.  அதுக்கு அடுத்த நாள் காலையில் கிளம்பிருவோம்.
கடையில்  நம்மைக் கவனிச்சுக்கிட்ட அனிதா,  'சாயங்காலம் ஆறு மணிக்கு  வந்துருங்க.  நான் கேரண்டி'ன்னு வாக்கு கொடுத்தாங்க.

மணி ரெண்டாகப் போகுது. இங்கேயே  ஏகப்பட்ட  ரெஸ்ட்டாரண்டுகள் இருக்குன்னாலும்  நாம் போனது  ஸ்ரீரத்னம்.  முந்தி இது சாகர் ரத்னாவா இருந்தது.  இப்ப  வியாபாரம் கை மாறி இருக்கு போல!  நம்ம வகை சாப்பாடு நல்லாவே கிடைக்கும்.    இட்லி வடையும், தோசையும் ஃபில்டர் காஃபியுமா லஞ்ச் முடிஞ்சது.கடைகளின் வெராந்தா வழியாவும்,  மர நிழல்கள் இருக்கும் இடங்களிலுமா மெள்ள நடந்து  ஷிவாலிக் வியூ வந்து சேர்ந்தோம். நல்ல வெயில்.   நியூஸியில்  என்னதான் வெயில் மேலே ஆசை இருந்தாலும்  இங்கத்து    இந்திய  வெயிலில் நடக்க முடியறதில்லை. ரொம்ப களைப்பா  இருக்கு.  சண்டிகர்  ஒரு வேடிக்கையான  காலநிலை இருக்கும் ஊர். வெயிலும் கடுமை, குளிரும்  கடுமை.  இப்படி இருந்தும் எனக்குப் பிடிச்ச ஊர்களில் இதுவும் ஒன்னு!  நியூஸியில் இருக்கும் அத்தனை பூச்செடிகளின் வகைகளும் இங்கேயும் இருக்கு!

  இன்னொரு  சுவாரசியமான விஷயம் தெரியுமோ?  நம்ம சென்னையை விட இங்கே  சுத்தம் அதிகம் , வீட்டு வாடகையும் கம்மி!  சென்னை வீட்டுக்குக் கொடுத்த வாடகையில்  பாதிதான் இங்கே அதைவிட பெரிய வீட்டுக்குக் கொடுத்தோம்.  இங்கே வீட்டுக்கு அட்வான்ஸ் கூட  அதிகபட்சம்   ரெண்டு மாச வாடகைதான். சென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா  :-(

வந்த வேலை முடிஞ்ச நிம்மதியில்  வேறெங்கும் சுத்தப் போகலை.  அறையில் வைஃபை கிடைப்பதால் வலை மேயல், பகல் தூக்கம்னு பொழுது போயே போயிருச்சு. அப்பதான்  நம்ம கோவிலில் இருந்து சேதி வருது, நேத்து நாம் கொடுத்த செக்கை அவுங்க  கோவில்கணக்குலே கட்டியாச்சுன்னும், ஆனால் கோவில் கணக்குலே  பணம் வரவு  வைக்கலைன்னு.....   இது என்னடா புதுக் கஷ்டமுன்னு நாம் நம்ம பேங்க் பக்கம் போய்ப் பார்க்கிறோம்... நம்ம கணக்குலே இருந்து பணத்தை எடுத்துருக்காங்க. அப்ப அந்த க் காசு எங்கே போச்சு?  மேலும் கோவிலில் அந்தக் காசுக்கான   உடனடிச்     செலவு வாசலாண்டை காத்துருக்கு.

இதுலே கொஞ்சம் விசாரிப்பு என்ன ஏதுன்னு பார்க்கன்னும் நேரம் போயிருச்சு. அப்புறம் நம்மவர் கோவில்  அக்கவுண்டுக்கு நேரடியாவே  காசை அனுப்பிட்டார்.  பாவம் கோவில் மேனேஜ்மென்டுக்கு மன உளைச்சல் ஆகிப்போச்சேன்னு இன்னும் கொஞ்சம் கூடுதல் பணத்தைத் தான்  அனுப்பினார்.   திரும்ப  கோவில் அக்கவுண்ட் இருக்கும் பேங்கைக் கூப்பிட்டுப்பேசி இன்றைக்குக் காலையில் போட்ட செக்கை வாபஸ் வாங்கிட்டாங்கன்னது ஓக்கேன்னாலும்.... நம்ம கணக்கில் இருந்து எடுத்த காசு போன இடம் எதுன்னு  தலைவலி.    அப்புறம் தலைவலி தீர்க்கப்பட்டது :-)

இதுலே என்ன விசேஷமுன்னா... நம்மவர் முதலில் ஒரு தொகையை நினைச்சுருக்கார். அப்புறம்  அதைவிடக் குறைவான தொகைக்கு செக் எழுதியிருக்கார்.  முருகன் இதைக்  கவனிச்சுக்கிட்டே இருந்துருக்கான் போல... ஒரு திருவிளையாடல் பண்ணிப்புட்டான். முதலில் நினைச்சதைத்தான் கோவில் அக்கவுண்டுக்கு நேரடியா அனுப்பினாராம்.  இதெல்லாம் எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் சுபமாக முடிஞ்சபிறகுதான் என்னிடம் சொல்றார்.... 'இவன் பெரிய ஆளும்மா....  கொஞ்சம் குறைச்சு செக் எழுதுனதுக்கு  என்னமா வேலை காமிச்சு கூடக் காசு வாங்கிக்கிட்டான் பாரு'ன்னு!
"நீங்கதான் அவனுடைய பக்தனாச்சே.....  உங்களைப்போல அவனும் விவரமானவனாத்தானே இருப்பான்"

இப்ப கல்யாண உடுப்பின் கனத்துக்காக கூடுதலா  ஆளுக்கு ஒரு அஞ்சு கிலோவுக்கு எக்ஸ்ட்ரா பேகேஜுக்குப் பணம் கட்டினார் நம்மவர் ஆன்லைனில்.  ஏர்ப்போர்ட் போனபிறகு எடை பார்த்துட்டு வாங்கலாமேன்னேன்.  அதுக்கு  அங்கே போய்க் கட்டுனா  ரெண்டு மடங்கு !
எல்லா நாடுகளுக்கும் பஞ்சாபிகள் மட்டும் எப்படிக் கூட்டங்கூட்டமாப் போயிடறாங்கன்னு  பார்த்தீங்கன்னா......   மேலே  இருக்கு  சூக்ஷமம் :-)
சாயங்காலம்  ச்சும்மா ஒரு  வாக்கிங் மட்டும்தான்.  சாலையின் ரெண்டு பக்கங்களிலும் அகலமான நடைபாதைகள், வா வான்னு கூப்பிடுது!
ராத்திரி டின்னர்  முடிச்சுக்கிட்டு,  தோட்டத்தில் ஒரு நடை.  ஹொட்டேல் தோட்டம் கூட அழகாத்தான் வச்சுருக்காங்க.

அரசு நடத்தும் நிறுவனம்  இப்படித் தனியார் இடம் போல அருமையா இருக்குன்றதை....  நம்பத்தான் முடியலை.    ஏற்கெனவே  இங்கே  குப்பை கொட்டுன காலத்தில்  சில நம்ப முடியாதவைகள் எல்லாம் பார்த்துருக்கேன்.  எடுத்துக்காட்டு.....

அரசு நடத்தும்  சிறார் இல்லம்! 

தொடரும்.......:-)Monday, July 17, 2017

கூப்ட்டுட்டான்டா....... கூப்டுட்டான் ....(இந்திய மண்ணில் பயணம் 31)

இந்த ஷிவாலிக்  வ்யூ  ஹொட்டேல் , சண்டிகர் அரசு நடத்துது.  எனக்கு ரொம்பவும்  பிடிச்ச இடம்தான்.  நல்ல வசதிகள்.  அறைகளும் தாராளமா இருக்கும். ப்ரேக்ஃபாஸ்ட்டும், டின்னரும் இங்கே  அறை வாடகையில் சேர்த்தி என்பதால் அல்லாட வேணாம்.    முக்கியமா இது இருப்பது  சண்டிகர் நகரின் அதி முக்கியமான ஷாப்பிங் ஏரியா!

அறைக்குப் போய்ச் சேர்ந்தா.....   அது  பழைய பகுதி.  புகை பிடிக்க  அனுமதி உள்ள தளம்.  பதறி அடிச்சு, வரவேற்பில் 'நான் ஸ்மோக்கிங் ஃப்ளோர்'  கேட்டுருந்ததை  நினைவுபடுத்தினேன். அதுக்குள்ளே நம்மவர்  திடுதிடுன்னு போய் துவைக்க வேண்டிய துணிகளை ஊறவச்சுட்டார் :-)

மன்னிப்பு கேட்டுக்கிட்டு  வேற அறை மாத்தினாங்க.  அது    நாம் போனமுறை  (ஊரை விட்டுக் கிளம்புன சமயம்)  இருந்த அதே அறை !  துணி பக்கெட்டைத் தூக்கிக்கிட்டு லிஃப்டில்  அங்கே போனோம் :-)
துணி துவைப்பது,   முக்கியமா உள்ளாடைகளைப் பயணத்தில் துவைச்சு உலர்த்துவது  கொஞ்சம் கஷ்டம்தான்.  ரெண்டு நாளைக்கு மேல் ஒரு இடத்தில் தங்கும்போது துவைச்சுக்கணும்.  மற்ற உடைகளை  ஹொட்டேல் லாண்ட்ரி சர்வீஸுக்கு அனுப்பிடலாம். பிரச்சனை இல்லை.

வேலைகளைச் சட்னு முடிச்சுட்டு தயாராகி உடனே கிளம்புனது நம்ம முருகன் கோவிலுக்கு. வர்றோமுன்னு   சொல்ல வேண்டியதில்லை.  அப்படியே போகலாமுன்னா  நம்மவர் கேக்கலை.   ராஜசேகருக்கு (தலைவர்) சொல்லிட்டார்.  இந்த செல்ஃபோன்களால் தொல்லைகளும் இருக்கு :-)

ஒரு ஆட்டோ பிடிச்சு  கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  எப்போ நான் கடைசியா இங்கே முருகனைப் பார்த்தேன்?   ஜூலை 24 , 2011.  அதெப்படி இப்படி  நாள் நக்ஷத்திரத்தோட ஞாபகம் இருக்கும்?  இந்தியாவில் கொஞ்சநாள் குப்பைகொட்ட வந்துட்டு,  நியூஸிக்குத்  திரும்பிய தினம் அது. முருகனுக்கு பைபை சொல்லிட்டு வந்தோம். அன்று ஒரு ஆடி வெள்ளிக்கிழமையாக(வும்) இருந்தது !

அப்போ பார்க்காதவங்க இப்போ பார்க்க  ஒரு  ச்சான்ஸ் இங்கே :-)நேத்துதான் நவராத்ரி ஆரம்பம் என்பதால் கோவிலில் கொலு வச்சுருப்பாங்கன்னு  ஆசை ஆசையாப் போய், ஏமாந்தும் போனேன்  :-(

ராஜகோபுரம் கட்டி முடிக்கும் நிலையில்தான் நாங்க ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தோம். அதுக்குப்பிறகு  ஒரு வருசம் கழிச்சு நம்மவர் மட்டும் ஆஃபீஸ் வேலையா ஹிமாச்சல் ப்ரதேஷ் போய் வந்தார்.  அப்போ கோவிலுக்குப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு,  படங்கள் எடுத்து வந்தார்.  பார்க்கவே பரவசமா இருந்துச்சு. எப்போ பார்க்கப்போறோமுன்னு கூட  நினைச்சேன்.  ஆனா பாருங்க....  எதோ ஒரு சாக்கு வச்சு நம்மை வரவழைச்சுட்டான்  முருகன்.  அதென்னவோ தெரியலை என் மேலே அவனுக்கு ஒரு இது :-)   ஒருவேளை என் ஜென்ம நக்ஷத்திரம் கூடக் காரணமா இருக்கலாம்  :-)    விசாகம்  !   இவராண்டை புடவைகள் கூடகொடுத்து விட்டுருக்கான்,  தெரியுமோ?

கோவிலில் சந்நிதிகள் நிறைய  வந்துட்டதால்    கொலு வைக்க இடம் இல்லாமல் போயிருக்கு!
ராஜகோபுரம் வழியா உள்ளே போய்  சாமி நமஸ்காரம் பண்ணிக்கிட்டுப் பழைய குருக்களைத் தேடினால் காணோம். புது குருக்களாண்டை விசாரிச்சால்   அவருக்குத் தெரியலை .
அதுக்குள்ளே நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர் வந்துட்டார்.  லார்ட் கார்த்திகேய   ஸ்வாமி பக்த ஜன சபா & கோவில் ட்ரஸ்ட் தலைவர் இவர்தான்.   வடக்கே பொதுவா முருகன்னு சொல்றதில்லை. நாம் பாட்டுக்கு  முருகா முருகான்னா.... அவுங்க சேவலைச் சொல்றோமுன்னு நினைச்சுக்கறாங்க.  சேவல் கொடியோனை நாம் முருகான்னு சொல்றதும் சரியாத்தான் இருக்கு :-)
குசலவிசாரிப்புகள் நடந்ததும்,  நமக்கான ஸ்பெஷல் தீபாராதனை.  ஏற்கெனவே ஆச்சுன்னு சொன்னாலும் விடலை.  படம் எல்லாம் எடுக்கலையான்னு  கேட்டார்.  இல்லைன்னேன்.   சண்டிகர் வாழ்க்கையில் கோவிலுக்கு அஃபீஸியல் ஃபொட்டொக்ராஃபர் நாந்தான்.  கருவறையைப் படம் எடுக்க எனக்கு அனுமதி இருந்தது அப்போ. இப்பத் தயங்குனதும்....  'உங்களுக்கு இப்பவும் அனுமதி இருக்கு'ன்னார்.
போதாதா?  பூந்து வெளையாடிட மாட்டேனா என்ன?  :-)
இவர்தான்  நம்ம ஆஞ்சிச் செல்லம் :-) எவ்ளோ க்யூட் பாருங்க !

மேலும் புதுசா வந்த சந்நிதிகள், உற்சவர்கள்னு எல்லா சாமிகளையும் அறிமுகம் செஞ்சு விளக்கினார்.
உண்மையில் கோவிலைப் பத்திச் சொல்றதை விட ராஜசேகரைப் பத்திச் சொல்லத்தான் நிறைய இருக்கு எனக்கு!  முருகன் சரியான ஆளாப் பார்த்து தனக்கு சேவை செய்ய வச்சுக்கிட்டான்னு சொல்லணும். கில்லாடி....   ரெண்டு பேரும்தான்!

ராஜசேகருக்கு விமானப்படையில் வேலை.  மனைவி டீச்சர்.  கோவில் காசைக் கொள்ளையடிக்கும் மனம் இல்லாததால் கோவில் ரொம்ப நல்லாவே அபிவிருத்திஆகி இருக்கு!

இதே  மாதிரி இன்னொரு கோவிலையும் சொல்லணும். அது நம்ம அடையார் ஸ்ரீ அநந்தபத்மநாபன் கோவில்தான். இங்கேயும்  ஒவ்வொரு  முறை போகும்போதும்  கோவிலில் செய்து வச்சுருக்கும் கூடுதல் வசதிகளைப் பார்த்து   மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சென்னையில் என்னோட ஃபேவரிட் கோவில் இதுதான்.  சாமி காசை அபேஸ் பண்ணாத கோவில்கள் :-)

அரசாங்கம் கொடுத்த லிமிட்டட் ஸ்பேஸில்  இருக்கும் கோவிலுக்குள்  இத்தனை சந்நிதிகளை அமைச்சது க்ரேட்!  இடிச்சுத் தள்ளிக்கிட்டு நெருக்கமா இருக்கமாட்டாங்க கடவுளர்கள். அவுங்கவுங்களுக்குன்னு  இடம் ஓரளவு தாராளமாத்தான்  இருக்கு!  எட்டிப் பார்த்து பேசிக்கலாம் :-)
நவராத்ரி சமயமானதால் தினமும் கிருஷ்ணமாரியம்மனுக்கு  விளக்குப் பூஜை உண்டு.     வேலைநாள் வேற ...   எல்லோரும் வந்து சேரவேணமா?  அதனால் கொஞ்சம் லேட்டாத்தான்    விசேஷ பூஜைகள்  இங்கே தொடங்கும்.  நமக்காகத்தான் சாமி.  சாமிக்கு  நாம் எதுக்கு?
இந்தக் கோவில் ஏர்ஃபோர்ஸ் குடியிருப்பில்  இருக்கு.  தமிழர்கள் மட்டுமில்லாமல்  எல்லா இந்தியர்களும் வந்து கலந்துக்குவாங்க.  அதிலும் அவுங்களுக்கு நம்ம பிரஸாத வகைகள் அப்படிப் பிடிச்சுப் போச்சு. சாம்பார் சாதத்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட்!

அதுக்குள்ளே பழைய ஆட்கள் வந்து சேர ஆரம்பிச்சாங்க. எல்லோருக்கும் நம்மை அங்கே பார்த்ததும் ஆச்சரியம்!

ஏழேகாலுக்கு விளக்குப் பூஜை ஆரம்பிச்சது.  நாங்களும் மேடை மண்டபத்தில் உக்கார்ந்து பூஜை  பார்த்தோம்.
இந்தக் கோவிலில்  ஒரு பக்கம் சின்னதா மேடை அமைப்பு ஒன்னு இருக்கு.  எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம்.  விழாக்கால கலைநிகழ்ச்சிகள் அங்கேதான் எப்பவும். நாங்கெல்லாம்  மேடைக்கு  முன்பக்கம் தரையில் உக்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம்.
நவராத்ரியை முன்னிட்டுக் கலை நிகழ்ச்சிகள் (இன்றைக்கானது ) நடந்தது. குட்டிப் பசங்க செல்லம் போல் ஆடுனாங்க. நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பிள்ளைகளை அப்படியே விட்டுடாமல்,   மாலை மரியாதைகளுடன் கௌரவிப்பதில் ராஜசேகருக்கு இணையா இதுவரை நான் யாரையுமே கண்டதில்லை.  இதனால்  நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் ஆர்வம்  பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும்  வந்துருது பாருங்க.


மைக் பிடிச்சுருந்த ராஜசேகர்,  நம்ம சண்டிகர் வரவை அறிவிச்சு, நம்மை சபைக்கு முன்னால் வரவழைச்சுப் பொன்னாடை  போர்த்தினார். மாலை? அதுவும்தான் :-)    (வடநாடு முழுக்க துருக்க சாமந்திதான் எல்லாத்துக்கும்..  )  அதுமட்டுமில்லாமல்  பிரபல எழுத்தாளர்னு  தலையில் ஒரு க்ரீடமும்....  ஹா........திடீர்னு  மைக்கை என்னிடம் கொடுத்து, நீங்க பேசணுமுன்னதும் ஒரு விநாடி 'ஙே'.....   என்னத்தைப் பேசறது?  உங்களுக்கு எப்படி முருகனோடுள்ள  சொந்தமுன்னு  சொல்லுங்கன்னுட்டார்.

  இந்தியர்களின்,  அதிலும் முக்கியமா   தமிழர்களின்  தேசிய குணம் 'பேச்சு எங்கள் மூச்சு'   இன்னும் ஒட்டிக்கிட்டுத்தானே இருக்கு! இல்லையோ?
பதிவு எழுதும் நினைவில் ,  சண்டிகருக்கு இடம் மாறி  வந்தப்ப,  பஞ்ச்குலா பெருமாள் கோவிலில்,  சண்டிகர் முருகன் நமக்கு அறிமுகமானது முதல் ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிட் போல  பேசிட்டேன் :-) அதுலே கொஞ்சம் நம்மவர் வீடியோ எடுத்துருந்தார்.
பெரியவர்களின் கோலாட்டம் ஒன்னு நவராத்ரி ஸ்பெஷல் ஐட்டம் !

விழா முடிஞ்சதும் ப்ரஸாதம் கிடைச்சது!
பழைய குருக்கள் வேற  இடத்துக்குப் போயிட்டார்.  முந்தி ஒரே ஒரு குருக்கள்தான் இருந்தார். தனி மனுசரா   அவருக்கும் விட்டுவிட்டுன்னு தான் இருந்துருக்கும். இப்போ புது குருக்கள் வந்தாச்சு.  கூடவே  வேதபாடசாலை ஒன்னும் ஆரம்பிச்சதால் அதுக்கும் ஒரு தனி ஆசிரியர், வேதம் படிக்க நாலு மாணவர்கள்னு  கோவிலே கலகலன்னு இருக்கு!  குருக்களும் சரி, வேதம் சொல்லிக்கொடுக்கும் வாத்யாரும் சரி இளைஞர்கள்தான்.
புது குருக்கள் ராஹுல்,  வாரணாசிக்காரர்.  சமஸ்க்ரதம்  அண்ட் ஆச்சாரம் முதுகலை பட்டதாரி.
வேதிக் முகேஷ் த்ருபாதி  மத்யப்ரதேஷ்காரர். வேத பாடசாலை ஆசிரியர்.
மாணவர்கள் பத்து, பதினொன்னு, பனிரெண்டு அண்ட் பதினாலு வயசுப்பிள்ளைகள்.  சிவம் சுக்லா (சித்ரகூட்) சுமன் (ஜார்கண்ட்)  அபிஷேக் அண்ட் கோபி  (பீஹார்)
கோபிக்கு  அம்மை போட்டுருக்கு. குளிக்க வார்த்தாச்சுன்னாலும்....   இன்னும் ஒரு வாரத்துக்கு ஓய்வெடுக்கட்டுமுன்னு  விட்டுருக்காங்க.  மற்ற பிள்ளைகள்தான் கோபாலோடு ஒட்டிக்கிட்டே இருந்தாங்க :-)
அதென்னவோ தெரியலை   எங்கே போனாலும் நம்ம கோபாலிடம் குழந்தைகள் வந்து ஒட்டிக்குவாங்க.  இங்கேயும்தான் :-)
மேலே படத்தில்  வலப்பக்கம் இருப்பவர்  நம்ம குணா (ப்ளூ ஷர்ட்)

கோவிலில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சாப்பாடு வகைகள்  சப்ளை செய்வது நம்ம கார்த்திக் ரெஸ்ட்டாரண்ட் குணாதான்.  நாம் இங்கே  ஊர்விட்டுப் போனபோது அவர் தனி மனிதர். இப்போ இந்த  அஞ்சு வருசத்துலே கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள்.
இதேபோலத்தான் நம்ம ரமேஷூம். இப்போ அவருக்கும் ரெண்டு குழந்தைகள்.  ரமேஷ் ரொம்ப நல்லாப் பாடுவார்.  முந்தியெல்லாம் தினமும் வேலைமுடிஞ்சு கோவிலுக்கு  அவர்     வர்றதுக்கும், நாங்க அங்கே போய்ச் சேர்றதுக்கும் சரியா இருக்கும். எல்லா சந்நிதிகளிலும்  போய் நின்னு  பாடுறதைக் கேக்கும்போது...  இந்த சின்ன வயசுலே எவ்ளோ பக்தி பாரேன்னு இருக்கும் , எனக்கு!

நம்ம குருவுக்குத்தான் இன்னும் ஜோடி கிடைக்கலை.  இவ்ளோ தூரத்துலே பொண்ணு கொடுக்கத் தயங்கறாங்களாம் ஊருலே!   சீக்கிரம் அவருக்கு ஒரு வழியைக் காட்டுன்னு அந்த முருகனையே வேண்டிக்கிட்டேன்.
மேலே படத்தில் துள்ஸிக்கு வலப்புறம் குரு, இடப்பக்கம் ரமேஷ்! 

நண்பர்கள் நம்மை ஹொட்டேலுக்குக் கொண்டு விடறேன்னு சொன்னாலும்.... நவராத்ரி வேலைகள் கோவிலில்  நிறைய இருப்பதால் வேணாமுன்னுட்டு , அவுங்க உதவியால் ஒரு  ஊபர் டாக்ஸி வரவழைச்சுக்கிட்டோம்.

எல்லோரையும் பார்த்த திருப்தி எங்களுக்கு.  விளக்குப் பூஜையும் தரிசிக்க முடிஞ்சதுன்னு ரெட்டை மகிழ்ச்சி.தொடரும்......:-)

PINகுறிப்பு:    சண்டிகர் ஸ்ரீ கார்த்திகேயஸ்வாமியையும்,  மற்ற பரிவார்களையும் தனி ஆல்பத்தில் போடத்தான் வேணும், இல்லையோ?     முருகன் தரிசனத்துக்கு  இங்கே க்ளிக்கலாம் :-)