Wednesday, July 12, 2017

மதுபன் ஆஷ்ரம் மின்னுது! (இந்திய மண்ணில் பயணம் 29)

இன்றையப் பொழுது விடிஞ்சதும் வழக்கமான கடமைகளை, வேறென்ன... வலை மேயறதும்,  எதிரில் தெரியும் கங்கையைக் கிளிக்கிறதுதான்  ...
முடிச்சுக்கிட்டு ரெடியாகி  'ஸிட்டிங் எலெபென்ட்' போனோம்.  இந்த அறையை நேத்து எடுத்ததில் இருந்து  எனக்கொரு  இருமல் இடைவிடாமல்.  யாரோ சிகரெட் புகைச்சுருக்காங்க போல.... நாம் விட்டுப்போன இந்த நாலு நாளில்....   ஹௌஸ் கீப்பிங்கைக் கூப்புட்டுக் கொஞ்சம் ஸ்ப்ரே பண்ணச் சொல்லிட்டு  ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போயிட்டோம்.

சொன்னேனோ... கங்கா வியூ காரிடார் எல்லாம் ரொம்ப அழகான பெயின்டிங்ஸ், யானைகளோடு  இருந்துச்சுன்னு?   இங்கே பாருங்க குழலூதும்  கண்ணன்.  அலங்காரமில்லாத  சிம்பிள் கண்ணன்!

அவல் உப்புமாவும்  வேகவச்சக் காய்கறிகளும்,  ஒரு தோசையுமா இன்றைய  ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம்.  நம்மைப் பார்த்ததும்,   தோசை போட ஆள் வந்துருச்சுன்னு  மேனேஜர் (தகவல்)  சொன்னார் :-)

அறைக்கு வந்து  கொஞ்சம்  பேக்கிங் எல்லாம் சரி பண்ணி, ஹேண்ட் பேக் காலி செஞ்சப்பதான், கல்பவிருக்ஷத்தின் இலை  ஒன்னு  அதுலே போட்டு வச்சது , பார்த்தேன். அடடா....  காய்ஞ்சு கிடக்கே!  எப்படி ஆனாலும் இதை நியூஸி  வரை கொண்டு வரமுடியாது என்பதால்  கங்கையிலேயே போடணும்.
இங்கே நியூஸியில் நாட்டுக்குள்ளே ஒரு இலையோ, பூவோ,  இன்னும் கிருஷ்ணன் கீதையில் சொன்ன   சமாச்சாரங்கள்  எதுவும் கொண்டு வர அனுமதி இல்லை. பிடிச்சுட்டால் பத்தாயிரம்  டாலர் வரை தண்டம் கட்டணும்.

ஹவுஸ்கீப்பிங் லேடி, அறைக்கு வந்து 'இப்ப  அந்த  புகை மணம் போச்சா'ன்னு கேட்டாங்க. ஓரளவு பரவாயில்லை.  ஜன்னல்களைத் திறக்க முடிஞ்சால் சரியாகும். ஆனால் ஜன்னல்களைத் திறக்கமுடியாமல் அமைச்சுருக்காங்க. கோடி அறை என்பதால்  வெராந்தா காத்தாவது உள்ளே வரட்டுமுன்னு கொஞ்சநேரம் திறந்தே வச்சுருந்தேன்.

சரியா ஒன்பதுக்கு வண்டி வந்துருச்சு.   எப்பவும் பாருங்க, நமக்குப் பிடிச்ச இடத்தை விட்டுக் கிளம்பப்போறோமுன்னு  தெரிஞ்சதுமே பாசம் பொத்துக்கிட்டு வரும், இனி எப்போன்னு மனசு ஏங்கும், இல்லை?

நேத்து வர்றவழியில் ஒரு புதுக்கோவிலைப் பார்த்தமே....  பூரி ஜகந்நாத கோபுர ஸ்டைலில்....  அது என்னன்னு பார்த்துட்டுக் கிளம்பலாமேன்னேன். போயிட்டுப்போயிட்டு வரவேணாம். செக்கவுட் பண்ணிக்கிட்டே கிளம்பலாமுன்னார் நம்மவர்.  இல்லே ,  போயிட்டு வந்து பிறகு செக்கவுட் பண்ணிக்கலாமுன்னேன்.
கீழே வந்து  புதுசா வந்துருக்கும் ட்ரைவரிடம்,  ரிஷிகேஷில் இருந்து  மேலே போகும் வழியில் போகச் சொன்னதுக்கு லேசா முறைச்சமாதிரி இருந்துச்சு.
வெள்ளைக்கோபுரமுன்னு அடையாளம் சொன்னேன். நம்ம திருப்பதி தேவஸ்தானக்கோவிலைத் தாண்டிப்போறோம்.  'திரும்பி வரும்போது  வரேண்டா'ன்னேன்.   சரியான இடம் தெரியாம  வெள்ளைக் கோபுரத்தைத்  தாண்டுனதும்,  இந்தக் கோவில்தான்னதும், ஒரு சின்ன முறைப்போடு   யூ டர்ன் எடுத்துக் கோவிலாண்டை விட்டார் ட்ரைவர். பெயர் ஆனந்த்.  முகத்துலே ஆனந்தத்தின் சுவடே இல்லை.... போயிட்டுப்போகுது போங்க....
கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சதும்தான் இது இஸ்கான் கோவில்னு தெரிஞ்சது. உடனே  பாசம் பொங்குச்சு.  முப்பது வருசத் தொடர்பு இல்லையோ!

வளாகமே சூப்பர் சுத்தம்! பளிச்!  மதுபன் ஆஷ்ரம் என்ற பெயர்! சந்நிதிகள் மாடியில்!  படியேறிப்போனால்   கருப்புப் பளிங்கில் பெரிய திருவடி கருட்ஜி!
அவர் கண்ணுக்கு எதிரே....   அழகான சந்நிதி. மூணு பாகமா இருக்கும் ஒரே மண்டபம்!  சக்கரநாற்காலியில் ஒரு பக்தை சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
இந்தாண்டை ஸ்ரீ ப்ரபுபாதா தனி மண்டபத்தில். அவருக்கு முன்னால் ஒரு பண்டிட்(!) ஹார்மோனியம் வச்சுக்கிட்டு மெல்லிய குரலில் பஜன் பாடிக்கிட்டு இருக்கார்.  முன்னால் மைக் இருப்பதால் கோவில் முழுக்க பஜன் கேக்குது!
நடுவில்  ராதையும் க்ருஷ்ணனும்.  இவன் மட்டும் கருப்புப் பளிங்கில்!  வலப்பக்கம் ஸ்ரீநித்யானந்த், ஸ்ரீ சைதன்யா. இடப்பக்கம் ஸ்ரீ பல்ராம், ஸ்ரீ சுபத்ரா,ஸ்ரீ ஜகந்நாத் (பூரிக் கூட்டம்!)
தனி மண்டபத்தில்  ராமர் அண்ட் கோ. பக்கத்தில்  ஹனுமன் ஜி.
உள்ளே சுவர்களிலும், கோவில் வெளிப்புறச் சுவர்களிலும்  புடைப்புச் சிற்பங்களா ஏகப்பட்டவை.  அப்பழுக்குச் சொல்லமுடியாத அழகு ஒவ்வொன்னும்!  நல்லா கவனிச்சுச் செஞ்சுருக்காங்க!  இந்த அர்ப்பணிப்பும், ச்ரத்தையும்தான்  அவனுக்கு வேணும்.


ஓரமாப் போட்டுருந்த மேசையில் ஒரு கோவில்ஆள் வந்து உக்கார்ந்தார்.  கோவிலைப் பத்திக் கேட்டுக்கலாமேன்னு சமீபிச்சோம்.  'பச்சாஸ் ருப்யா தோ'ன்னார்.  எதுக்குன்னு கேக்காமலேயே நம்மவர் எடுத்து நீட்டுனார். ரசீது கொடுக்கும்போது, சின்னதா ஒரு பொதியும் கிடைச்சது. கொஞ்சம் இனிப்பும், ஒரு ஜகந்நாத்  படமும் இருந்தது.   புதுக்கோவிலுக்கான  ஃபண்ட் ரெய்ஸிங்.  அதிகாரமாக் கேக்காமல் கோவிலுக்கு நிதின்னு கேட்ருக்கப்டாதோ?  கொஞ்சம் அதிகமாவே கொடுத்துருப்போமே!





மதுபன் ஆஷ்ரம் கெஸ்ட் ஹவுஸ் வச்சுருக்காங்க.  புத்தம்புதுக் கட்டடம் என்பதால் எல்லாமே சூப்பரா இருக்கு.  இவுங்க வலைப்பக்கம் போய்ப்  பாருங்க. ஆன்லைன் புக்கிங் கூடப் பண்ணிக்கலாம்.

அங்கிருந்து கிளம்பிப்  பெருமாள் தரிசனம் நம்ம கோவிலில்.  நன்றி நவிலல் ஆச்சு.

கங்கா வியூ வந்து  செக்கவுட் பண்ணினோம். ஹரித்வார் சாலையில் போறோம்.  புதுசு புதுசா    ஆஷ்ரம்கள்  முளைச்சுருக்கு!   ஒவ்வொன்னும்  பிரமாண்டமா அழகோடு!
கங்கைப் பாலத்தைத் தாண்டும்போது....    இனி கங்கா எப்போ?
போன முறை பார்த்த ஜெயின் கோவில்  ரொம்பப்  பழசா இருக்கு.
சாலையில் எல்லாம் அழுக்கும் புழுக்கும்.....  ஊரையும் சுத்தமா வச்சால் என்ன தப்பு?


தொடரும்......  :-)


11 comments:

said...

குழலூதும் கண்ணன் கொஞ்சம் முருகன் சாயலில் இருக்காரோ!

பஜதாம் கல்பவிருக்ஷயாயா நமதான் காமதேனவே...

கரிய திருவடியாய் பெரிய திருவடி - அழகு.

எனக்கென்னவோ புதுசா இருக்கற கோவில்களை ஐடா பழைய வாசனையோடு இருக்கற கோவில்களை பார்க்கத்தான் ஆவல் ஜாஸ்தி! எங்கேயும் போறதில்லை, பார்க்கறதில்லைங்கிறது வேற கதை!

said...

அருமை.
இஸ்கான் கோவில் மிக அழகு.
நன்றி.

said...

இந்த மதுபன் ஆஸ்ரமத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். எல்லா இடங்களும் நல்லா இருக்கு. இருந்தாலும், புராதன ஆலயங்களின் சூழல் புதிய ஆலயங்களில் காணப்படுவதில்லை (எங்கும் இறை என்றபோதும்).

பழைய ஆலயங்களில், தூண்களில் கையைத் துடைக்கும் ஆசாமிகளைக் கண்டால், அங்கேயே அவர்களின் கையைத் தூணோடு சேர்த்துக்கட்டிப்போட வேண்டும் என்று தோன்றும்.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

பக்கத்துலே மயில் இருக்கறதால் அப்படித் தோணுதோ? மேக்கப் இல்லாமப் பார்க்கிறதால் ஒருவேளை இப்படி இருக்காரோ என்னமோ?

எனக்கும் பழைய கோவில்கள் பிடிக்கும் என்றாலும் புதுக் கோவில்களும் ஒரு அழகுதான். முக்கியமா சுத்தம்!

ஆனால் சில புதுக்கோவில்களில் ஏகப்பட்ட கெடுபிடி என்னும் போது எரிச்சலாத்தான் இருக்கும். அதனால் சில கோவில்களுக்குப் போவதையே தவிர்த்து இருக்கேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

வாசலில் பெரிய திருவடி இருக்கும் இஸ்கான் கோவிலைப் பார்த்தது எனக்கு முதல்முறை! எங்கூர் இஸ்கான் கோவில் முதலில் கோவில் மாதிரியான சம்ப்ரதாய அடையாளம் ஏதும் இல்லாமல் ஒரு வீடு போலத்தான் இருந்தது. நிலநடுக்கத்தில் இடிஞ்சு போன கோவிலுக்குப் பதிலாக புதுசாக் கட்டுன கோவில்.... இன்னும் சுத்தம். அந்த வீடு போன்ற தோற்றமும் இல்லாமல் எதோ ஒரு மரக்கட்டடமா இருக்கு. ஏன் இப்படிக் கட்டி இருக்காங்கன்னுகூட சிலசமயம் தோணும்..... ப்ச்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நான் உங்களைவிடக் கொடூரி. கட்டிப்போடத் தோணாது. வெட்டிப்போடத்தான் தோணும்....

said...

இஸ்கான் கோவில்களிலெல்லாம் வசூல் அதிகம்தான் சுத்தமாகவும் இருக்கும்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எனக்குத் தெரிஞ்சு பெங்களூரு இஸ்கான் கோவில்தான் பணம் கொழிக்குது. கோவில் என்றதை விட அங்கே கோவில்கடைகளில் வியாபாரம் எக்கச்சக்கமா இருக்கு! கோவிலுக்குள் போகவும் ஏகப்பட்ட கெடுபிடி.

சண்டிகர் இஸ்கான் கோவில் எல்லாம் அப்படி வசூல் இல்லை.

இங்கே எங்கூர் கோவில் சுத்தம். காசில்லாமக் கஷ்டப்படுது.....

said...

ஊரைச் சுத்தமா வெச்சால் என்ன ஆச்சு! உத்திரப் பிரதேசத்தில் எந்த ஊர் சுத்தமா இருக்கு! எல்லாமே அழுக்கு தான்! :(

மதுபன் ஆஸ்ரம் - பார்க்க நல்லா இருக்கு. அவர்களின் தளம் குறித்துக் கொண்டேன். பார்க்க வேண்டும்.

தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மதுபன் இப்போதைக்கு நல்லாவே இருக்கு. புதுசு பாருங்க :-)

said...

/ இங்கே பாருங்க குழலூதும் கண்ணன். அலங்காரமில்லாத சிம்பிள் கண்ணன்!/

முதல் ஆள் பின்னாடி. ரெண்டாவது ஆள் முன்னாடி. அப்படித்தானே! :)