Saturday, July 08, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: மாங்காய் தொக்கும் மாங்காய் ஊறுகாயும்

எல்லாம் நம்ம வீட்டு மாமரத்துக் காய்கள்னு சொன்னால் நம்பணும், ஆமா...

பொதுவா ஜூன் மாசம் முடியறதுக்குள்ளேயே  நம்ம மாமரத்துலே  இலைகள் உட்பட எல்லாமே உதிர்ந்து போய் மொட்டையாத்தான் கிடக்கும். கீழே மரத்தடியில்  மாங்காய்க்குவியல்களும்.... சீண்டுவாரில்லாம  இறைஞ்சு கிடக்குதான். ரெண்டே பேர் உள்ள வீட்டில் எவ்ளோன்னுதான் தின்னு தீர்க்கறது?
பறவைகள் தின்னுட்டுப்போகட்டுமுன்னு  விட்டுருவேன்.

இந்த வருசம்  அதென்னவொ கால நிலையில் சின்னதா ஒரு மாற்றம். வசந்த காலத்தில் வரவேண்டிய ஏர்லி ச்சீயர்ஸ் பூக்கள்  குளிர்கால ஆரம்பத்துலேயே  பூத்துருக்கு....  என்னவோ போங்க... கலி முத்திண்டுதான் வருது...

மாங்காய் பச்சடி வாராவாரம் தின்னு  அலுத்தே போச்சுன்னு கொஞ்சம் ஊறுகாய் போட்டுக்கலாமேன்னு  மரத்தாண்டை ரெண்டு காய் பறிக்கப்போனேன்.  ஏணியில் ஏறி நல்லதாப் பறிக்கணும்.  சீஸன் முடிஞ்சதாலே  தொட்ட கையில் குடுகுடுன்னு  விழுது.  பாத்திரம் நிறைஞ்சே போச்சு!
என்னுடைய மலேசியத் தோழி ஊருலே இல்லை.  இருந்தா....   அவுங்களுக்குக் கொடுத்துடலாம்.   மாங்காய் பை (Pie)பண்ணுவாங்க.

மாங்காய் தொக்கு பண்ணிவச்சால் ஒரு மாசத்து வரும்.  கூடவே இவருக்குப் பிடிச்ச இன்ஸ்டன்ட் ஊறுகாய் ஃபிஜி ஸ்டைல்.

மாங்காய்களைத் தோல் சீவிட்டு, ஃபுட் ப்ராஸசர்லே போட்டுத் துருவிக்கணும்.

கையால் துருவினாலும் சரி. ஆனால் நேரம் எடுக்கும். இதுன்னா நிமிஷமா ஆயிரும்:-)
அடுப்பில் ஒரு பெரிய வாணலியை ஏத்தி அதில் எண்ணெய்  கொஞ்சம் ஊத்திச் சூடானதும், கடுகு, பெருங்காயப்பொடி, வறுத்து  அரைச்ச வெந்தயப்பொடி சேர்த்துக் கலக்கி, கடுகுவெடிச்சதும், கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறினதும், துருவி வச்ச மாங்காயைக் கொட்டி(வாணலியில்தான்)  மிதமான தீயில்  வதக்கணும்.  மாங்காயின் அளவைப் பொறுத்து  நேரம் எடுக்கும். நமக்கு ஒரு  இருவது நிமிட்ஸ் ஆச்சு.
சமையல் ட்ரெய்னீக்கு இந்த  வேலையைக் கொடுத்தாச்சு.  கலக்கல், கிளறல்  ரொம்பவே பிடிச்ச  வேலைதான் :-) ஓரளவு வெந்து நிறம் மாறினதும் உப்புத்தூளைச் சேர்த்து இன்னும் ஒரு அஞ்சு நிமிட் கலக்க வச்சு, அப்புறமா இங்கே உள்ளூரில் இந்தியன் கடைகளில் கிடைக்கும்  அச்சார் மசாலா சேர்க்கணும். நான் ஒரு ஏழெட்டு டீஸ்பூன் சேர்த்தேன். ஐயோ ஐயோன்னு  ட்ரெய்னீ கத்திக்கிட்டு இருந்தார்.  இத்தனைக்கும் நான் போட்டது கடாயில் வேகும் மாங்காய்த் துருவலில்தான் .
எண்ணெய் இனி சேர்க்கணும்.        இதயம் நல்லெண்ணெய் இப்ப இங்கே கிடைக்குது என்பதால்  அதுலே ஒரு  முக்கால் கப் வரை  வேகும் மாங்காயில் கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக்கிளறிக்கிட்டே இருக்கணும்.  மாங்காய் நடுவில் சின்னதா குழி தோண்டி அதில் எண்ணெய் ஊத்துனால்.... அப்படியே அது சூடாகிரும். சுட்ட எண்ணெயைக் கலந்தாப்போலவும் ஆச்சு.
ஒரு கட்டத்தில்  எண்ணெய் பிரிஞ்சு வர்றதுபோல் தெரியும்போது ஸ்டவ் ஆஃப்.  நல்லா ஆறியதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கலாம்.

 கண்ணாடிப் பாத்திரம் நல்லது.  மாங்காய்ப் புளிப்பு,  பாத்திரத்தைக் கெடுக்க முடியாது.  ஃப்ரிஜில் வச்சு  அது தீரும்வரை பயன்படுத்திக்கணும்.   சும்மாத் தின்னு பார்த்தால் கூட கார ஹல்வா மாதிரி இருக்கே!!!

வேலையோட வேலையா  இன்னொரு  இன்ஸ்டன்ட் ஊறுகாயும் செஞ்சாச்.

கேரட் ஒன்னு  எடுத்துக்  கழுவிட்டு,  தேவையானால் தோலை சீவிக்கலாம். இங்கே இளந்தோல் என்பதால் சீவலை. அதை ஜூலியன் வகையில் நறுக்கிக்கணும். 'அதென்ன ஜூலியன், ஏலியன்னுக்கிட்டு? ஸ்ட்ரிப்ன்னு சொன்னா எனக்குக் கட் பண்ணத்தெரியாதா' ன்னார்  ட்ரெய்னீ :-)

கேரட் ஜூலியனை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சம் விநிகர் சேர்க்கணும். நான் ஆப்பிள் சைடர் விநிகர் சேர்த்தேன்.  கொஞ்ச நேரம் ஊறட்டும். கேரட்டை மாங்காய் ருசிக்குக் கொண்டு வரலாம் ....
கேரட்டின் அளவைப் பொறுத்து    மாங்காயையும்  ஒன்னோ ரெண்டோ எடுத்து  இதே போல் ஜூலியனாக்கணும்.
இப்ப கேரட்டில் இருக்கும்  விநிகரை  வடிகட்டி எடுத்துடலாம்.  கேரட்டும் மாங்காய்களும் சேர்த்துப் போட்டு, ஒரு ஸ்பூன் உப்புப்பொடியும் போட்டுக் கலக்கி வைக்கணும்.
ஒரு வாணலியில்  எண்ணெய்  சேர்த்து, சூடானதும் கொஞ்சம் கடுகு, பெருங்காயம், வெந்தியப்பொடி சேர்த்து, கடுகு வெடிச்சதும் அடுப்பை அணைச்சுட்டு,  ஒரு டேபிள் ஸ்பூன்  அச்சார் மசாலாவை  வாணலியில் போட்டு கலக்குனதும்  அதை எடுத்து கேரட் மாங்காய் கலவையின் தலையில் ஊத்துனால் ஆச்சு.  தின்னு பார்த்துட்டுத் தேவைன்னா,  உப்பு போட்டுக்கலாம்.
இது  ரெண்டு நாளைப் பயன்படுத்தலாம். மறக்காமல் ஃப்ரிஜ்லே வச்சுடணும். இப்ப குளிர்காலம் என்பதால் மூணுநாள் வரை தாங்கும்தான்.


       

PIN குறிப்பு:  ரொம்ப முக்கியமானது......  எங்க வீட்டுலே,  பாட்டியை மாங்காய்னு சொல்வோம் !   Granny....  Granny Smith. :-)

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


16 comments:

said...

அதென்ன மாங்காய் ஆப்பிள் மாதிரி இருக்கு!

said...

நிஜமாகவே படங்களைப் பார்க்க
வாயில் ஜலம் ஊறுது
படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை
என்னைப்போல சமையல் ஞான சூன்யங்கள் கூட
அழகாய்ச் செய்து விட முடியும் எனும்
நம்பிக்கை தருகிறது
வாழ்த்துக்களுடன்...

said...

teacher, why all mangoes look like apples?? (Kali kaalauthulae kannu seria theria mattenguthu((enakku))

said...

teacher, why all mangoes look like apples to me???

said...

பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது - இரண்டும்! :)

said...

கல்யாண மாங்காய் ஊறுகாய் செய்ய வில்லையா கச்சா மாங்கோ ஜூஸ் செய்யலாமே இரண்டும் செய்முறை எளிது. மாங்கோ ஜூஸ் செய்முறை எனது பூவையின் எண்ணங்களில் கொடுத்திருக்கிறேன் கைக்குஎட்டும் தூரம்மாங்காய் இருந்தால் பறிக்க எளிது. எங்கள் மரத்தில் உ உ உ உ யரத்தில் இருக்கிறது

said...

கடேசி படத்தில் இருப்பது ஆப்பிள்தான்.

said...

நிச்சயம் இது மாங்காய் இல்லை. ஆப்பிள்தான். சத்தியம் செய்கிறேன்.

said...

அம்சூர் பொடி சேர்க்காம கிரீன் ஆப்பிள்ல பண்ணின ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் வாசனைல இருக்குமா? ஒருவேளை ஜலதோஷம் இருந்தால் மாங்காய் ஊறுகாய்னு நினைச்சு சாப்பிடலாம்.

இருந்தாலும் உங்கள் வீடு கட்டும்போது 6 வித வித ஆப்பிள் மரங்களை எடுத்தீங்கங்கறதையே என்னால இன்னும் டைஜஸ்ட் பண்ண முடியல்ல. ஃப்ரெஷ் ஆப்பிள்போல இங்க கடைல கிடைக்கிற ஆப்பிள் வருமா? பச்சை ஆப்பிள் மரமே பார்க்க ரம்யமா இருக்கு.

said...

ஆப்பிளை ரொம்ப நல்லா சீவியிருக்கு. ஃபுட் ப்ராசசர்லயே இப்படி அருமையா சீவறதுக்கு ப்ரொவிஷன் இருக்கா? கையால இப்படி சீவமுடியாது.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

இங்கே நான் வச்ச பேருதான் இது. தெரிஞ்ச பெயரைத்தானே வைக்க முடியுது... இல்லையோ ? :-)

இந்தக் குளிருக்கு இங்கே மாமரம் வளரச் சான்ஸே இல்லை. :-(

said...

வாங்க ரமணி.

ஆஹா.... இதுக்குத்தான் ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் னு புத்தகத்துக்குப் பெயர் வச்சுருக்கேன். பொருத்தம் தானே?

said...

வாங்க பெருசு.

கலி காலத்துலே மாங்காயே ஆப்பிளாத்தான் காய்க்குமாம்!! :-) மாறுவேஷம்...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வீட்டுலே பாருங்க.... தொக்கு, இனிப்பு ஊறுகாய்னு அடிச்சு ஆடிக்கிட்டு இருக்காங்க ரோஷ்ணியம்மா :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இருக்கும் ரெண்டு பேருக்கு என்னன்னுதான் வகைவகையாச் செய்யறது... சொல்லுங்க.

எங்கூர் ஸ்டைல் கச்சா மேங்கோ ஜூஸ்தான் வருசம் முழுக்கக் குடிச்சுக்கிட்டு இருக்காரே கோபால் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

மொத்தம் 11 ஆப்பிள் மரங்கள். தப்பிப்பிழைச்சது இது ஒன்னுதான். வேலி ஓரமா இருந்தது நம்ம பாக்கியம்.

தோல்சீவ அதுக்குன்னே ஒரு மெஷின் இருக்காரே! நல்ல டிஸைன் தோல்சீவும் கருவியும் உண்டு. எலெக்ட்ரிக் இல்லை. மானுவல்தான் :-)

இங்கிருக்கும் குளிருக்கு மூக்கே மரத்துப் போறதும் ஒரு வசதிதானாக்கும், கேட்டோ :-)