Wednesday, December 06, 2006

நற்செய்தி!


டிசம்பர் மாசம் எட்டாம் தேதி இப்படி ஒரு நற்செய்தியோடு தேவ தூதன் கேப்ரியேல், மரியத்துக்கு முன்னாலே தோன்றினாராம். அதென்ன நற்செய்தி?


"இந்தப் பூவுலகில் தேவ குமாரன் பிறக்கப் போறார். நீங்க(நம்ம மரியம்/ மேரியம்மா)தான்அந்தக் குழந்தையைப் பெத்தெடுக்கப் போறீங்க"


அதுக்கப்புறம் அந்தக் குழந்தை பிறந்ததும், மத்த விவரங்களும், புது மதம் தோன்றியதும் எல்லாம் ஊர் உலகத்துக்கே தெரியும்.


டிசம்பர் மாசம் ரொம்ப நல்ல மாசம். கிறிஸ்மஸ் வர்றதாலே மட்டுமில்லை,நமக்கும் இது மார்கழியாப் போயிருது. பெருமாளுக்கே உகந்த மாசம்.ஸ்ரீ கிருஷ்ண பகவானே மாதங்களில் 'அவர் மார்கழி' ன்னு சொல்லிட்டார்.



எங்கே பார்த்தாலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டங்கள்! ஊரே களைகட்டிக் கிடக்கு.இந்த மாசம் மூணாம்தேதி ஞாயித்துக்கிழமை எங்கூருக்கு 'சேண்ட்டா' வந்துட்டுப் போனார்.


இத்தனை வருசம், நம்மளைக் கடந்து போக ஒரு மணி நேரம் எடுக்கும் கிறிஸ்மஸ் சேண்ட்டா பரேடு இந்த வருஷம் 33% கூடுதல் நேரம் எடுத்துக்குச்சு. (ஹா...அங்கேயும் 33% ஆஆஆஆஆ)



இந்தோனேசியர்கள், சோமாலிகள், சீனர்கள், தாய்வான்காரர்கள், கொரியர்கள், ஜப்பான்காரர்கள்னு பல 'எத்னிக்' குழுக்களும் இப்பெல்லாம் ஊர்வலத்தில் பங்கெடுக்கறாங்க. சீன தேசத்தில் தடை செஞ்சிருக்கும் Falun Dafa ன்னு சொல்ற ஒரு ஆன்மீக(?)இயக்கம் சேர்ந்த ஒரு பெரியகூட்டம்( 'நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க' ன்னு நான் எப்பவும் சொல்றது இங்கே கணக்கில் வராது) சுமார் 100 பேருக்கு மேலே இருக்கும், ஒரே மாதிரி உடைகள் ஒரே நிறத்தில் அணிஞ்சு வந்தாங்க.


சீனர்கள் ஸ்பெஷாலிட்டியான 'லயன் டான்ஸ்' சிங்கம் 'எட்டி எட்டிப் பார்த்துச்சு. அந்த டும் சத்தமே ஒரு அழகான லயத்தோட வருது பாருங்க. கொஞ்சம் விட்டா நானும் ஆடியிருப்பேன்:-))) தூள் கிளப்பிட்டாங்க.


பாலே, அக்ரோபாடிக், பால் டான்ஸ்,டாப் டான்ஸ்ன்னு சொல்லிக்கொடுக்கற பள்ளிக்கூடங்களும், பாட்டு, இசைக்கருவிகள்ன்னு சொல்லித் தர்ற பள்ளிக்கூடங்களும் அவுங்கவுங்க மாணவ மணிகளை ஆட, பாடவிட்டுக் கூட்டிட்டுப் போனாங்க.



நாய்ஸ் க்ளப்( கென்னல் க்ளப்) அழகா நடை போட்டுப் போச்சு. பின்னாலெயே குட்டிக்குதிரைகள் வந்துச்சு.ஐய்யோ... எல்லாம் ச்செல்லம்போல....... பார்க்கவே ஆசையா பொம்மைங்க போல இருக்கே!


எங்க நாடுதான் ஆட்டுக்குப் பேர் போனதாச்சே. ஆளாளுக்கு 14 ஆடு இருக்கு. அதுலெ ஒரு நாலு இன்னிக்கு நகருக்கு விஸிட் அடிச்சது. இடைக்கிடைக்கு மார்ச்சிங் கேள்ஸ், பேண்ட் வாத்திய கோஷ்டி, ஹை லேண்ட் ம்யூஸிக் பேக் பைப் குழுன்னு போகும்போது, ச்சின்னப் பசங்களுக்காக சிம்சன் குடும்பம், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், மிஸ் பிக்கி & கெர்மிட்.


குழந்தைகள் கதைப் புத்தகத்திலே இருந்து நம்ம ஆலீஸ், ஹேன்ஸல் & க்ரேட்டல், மதர் கூஸ், ஹாண்டட் ஹவுஸ்னு ஒரு 80 நிமிஷம் போனதே தெரியலை.


பிக் பாய்ஸ்க்காக 'ஹார்லி டேவிட்ஸன்' பைக்! 'உர் உர்'ன்னு சத்தம் போட்டுக்கிட்டு, வெள்ளி போல மின்னும் மோட்டர் சைக்கிள்கள். கன கம்பீரமா 'உலகமே எனக்குப் புல்'ன்னு 'லுக்' கோடு, எஞ்சினை உறுமவிட்டுக்கிட்டு இருக்கும் லெதர் ஜாக்கெட் மனுஷனை அப்படியே பசை போட்டு ஒட்டுனாப்போல புடிச்சுக்கிட்டுப் பின்னாலே உக்காந்துருக்கும் லெதர் ஜாக்கெட் மனுஷிங்கன்னு அட்டகாசம் போங்க.


இங்கே இருக்கும் 'சின்மயா மிஷன்' மக்களும், நம்ம ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த மக்களும் நம்ம நாட்டுப் பாரம்பரிய உடையான புடவைகளை( ஏங்க இன்னும் பாரம்பரிய இந்திய உடை புடவைதானே? இல்லே சல்வார்கமீஸா மாறிப்போச்சா? ) அணிஞ்சு ஒரே கலர் ஃபுல்லா ( நமக்கு யூனிஃபார்ம் எல்லாம் சரிப்பட்டு வராது. அதானே பக்கத்து வீட்டு அம்மா/அக்கா வாங்குனது போல நாம் வாங்கிருவோமா என்ன? )வந்தாங்க.இங்கே ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு ஒரு ரதம்கூட இருக்கு. அதனாலே இது 'ரத யாத்திரை'(அட, நம்மூர் தேர்த் திருவிழாதாங்க)யாகவும் அமைஞ்சு போச்சு.


யானை இல்லாத திருவிழா உண்டோ? அதனாலே எங்கூருலே இருக்குற 'ஒரே யானை' அம்பாரியோடு 'அழகி'களைச் சுமந்து கன கம்பீரமா ஊர்வலத்துலே உருண்டு வந்துச்சு!





இன்னும் 19 நாள்தானே இருக்கு பண்டிகைக்கு. கடை கண்ணிகள் எல்லாம் ஜேஜே. நட்பும் பரிவும் காட்டவேண்டிய இந்த விழாக்காலத்தில் வண்டி நிறுத்த இடமில்லாம, கிடைக்கிற பார்க்கிங் ஸ்பேஸுக்கு போட்டா போட்டி. 'பரிவையெல்லாம் நான் ஷாப்பிங் முடிச்சுட்டுக் காட்டுறேன்'னு மனசுக்குள்ளே சொல்லிக்குவாங்களோ?


நம்ம பங்கு 'குட்வில்' என்னன்னா சேண்ட்டா ஊர்வலத்தில் இலவசமா என்னென்னவோ கொடுத்துக்கிட்டுப் போவாங்க பாருங்க, டிஸ்கவுண்டு கூப்பன், இலவச ஐஸ்க்ரீம், லாலி பாப் ன்னு இன்னபிற வகைகள். அதையெல்லாம் கையை நீட்டி நீட்டி வாங்கி( சிலசமயம், 'எக்ச்சூஸ்மீ'( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)ன்னுகூப்புட்டுக் கேட்டு வாங்கி, என் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த சில ச்சின்னப்புள்ளைங்களுக்குக் கொடுத்ததுதான்.


இங்கே எங்களுக்கு பெரிய லீவு இந்த சமயம்தான் வருது.கோடைகால விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் எல்லாம் 6 வாரத்துக்கு லீவு. இங்கெல்லாம் எல்லாமே வாரக் கணக்குத்தான்! வீட்டுவாடகை, பல பேருக்குச் சம்பளம் இதெல்லாம் கூட வாரக் கணக்குத்தான்.


பள்ளிக்கூடம் லீவு வுட்டா......... டீச்சருங்களுக்கும் லீவு தானே? அதான் நானும் லீவுலே போறேன்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு நீண்ட விடுமுறை. தமிழ்மணம் படிக்கக் கிடைக்குமா, ப்ரவுஸிங் செண்டர்களிலே தமிழில் தட்டச்சு செய்ய முடியுமான்னு கூட தெரியலை. போனமுறை ஒண்ணும் சரிவரலை. மடிக்கணினி இருந்தாலும் நெட் தொடர்பு கிடைக்குமான்னு தெரியலை. அதான் சொன்னேனே எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு விடுமுறைன்னு:-))))


நற்செய்தி எங்கேன்னு கேட்க்கும் 'வலைக் கண்மணி' களுக்கு........... இன்னுமா புரியலை?பள்ளிக்கூடம் லீவு வுட்டாச்சு கண்ணுங்களா:-)
மீண்டும் அடுத்த வருசம் வகுப்பு நடக்கும். கட்டாயம் எல்லோரும் வந்துருங்க.


எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ், புது வருஷம் & பொங்கல் வாழ்த்து(க்)கள்.

Monday, December 04, 2006

எவ்ரிடே மனிதர்கள் -25 நாகரத்தினம்

40 வயசு ஸ்ரீநிவாசனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அந்தவீட்டில் வலதுகாலை எடுத்து வச்ச 15 வயசு நாகரத்தினத்துக்குக் கிடைச்சது ரெடிமேடா மூணு பசங்கள். பன்னெண்டும், பத்தும், எட்டுமா. நாகரத்தினத்தின் புடவை முந்தாணியை ஏற்கெனவே பிடிச்சுக்கிட்டு நின்னுருந்த பத்துவயசுச் சிவராமனுக்கு முதல்லே ஒண்ணும் சரியாப் புரியலைன்னாலும்,அக்கா வீட்டுலே கூட விளையாட இன்னும் மூணுபேர் இருக்காங்கன்ற சந்தோஷம்.



'ரொம்பச் சின்னபொண்ணா இருக்காளே? அதெல்லாம் கல்யாண வளர்த்தியிலே வளர்ந்துருவா'. இது அம்மா தனத்தோட நினைப்பு.தனத்துக்குக் கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான். சிவராமனுக்கு நாலு வயசு அவனோட அப்பா செத்தப்ப. இந்த ஆறு வருஷமாப் படாத கஷ்டம் இல்லை. இதுலே நாகரத்தினம் மூத்தாள் பொண்ணு.



இதென்ன, இந்தக் குடும்பத்துக்கு மட்டும் 'ரெண்டாந்தாரம்' சாபமா? தனத்துக்குக் கல்யாணம் ஆனதும் இப்படித்தான். நாகரத்தினத்துக்கு அப்போ மூணு வயசாம். ஆறே வருசத்துலே புருஷன் போனப்ப ரெண்டு குழந்தைகளோட நின்ன தனத்துக்குச் சாப்பாடு போட்டதே 'சாப்பாட்டுக்கடை'தானாம்.


இந்த ஊர் ஒரு சின்ன டவுன். அக்கம்பக்கத்துலே ச்சின்னச்சின்ன பட்டிதொட்டிகளிலே இருந்து வியாபார விஷயமா டவுனுக்கு வந்து போற ஆளுகளுக்காக தெருவுக்கு நாலு 'சாப்பாடு தயார்'ன்ற போர்டுதான் பிரதானம். ஓட்டல் சோறுமாதிரி இல்லாம வீட்டுச் சமையல். வியாபாரம் பகல் பொழுது மட்டும்தான்.



ஒரு சோறு, குழம்பு,ரசம், மோர், பொரியல்,அப்பளம், ஊறுகாய்தான். வீட்டுக்கு ஆக்கற அதெ மாதிரி, கொஞ்சம் நிறைய சமைச்சாப் போதுமாம். ஒரே நேரச் சமையல்.பகல் சாப்பாட்டுலே மிஞ்சுனது ராத்திரி வீட்டாளுங்களுக்கு ஆச்சு. சந்தை கூடுற நாள் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலா சமைக்கணும்.


ஜனங்களுக்கும் ருசி பிடிச்சுப்போய், ஒவ்வொரு கடைக்கும்(??) வழக்கமா வந்து சாப்புடறவங்க கணக்கு ஒரு மாதிரி தெரிஞ்சிருக்கும். மேஜை, நாற்காலி எல்லாம் இல்லை. கூடத்துலெ தரையிலே இலை போட்டுத்தான் சாப்புடறது. பல வீடுகளிலே இது ஒரு சைடு பிஸினெஸ். நம்ம தனத்துக்கும் இப்ப வேற வழி இல்லாம இதுதான் பிழைப்பாப் போச்சு.


அம்மா கூடவே தினமும் சமையல் வேலையெல்லாம் செஞ்சு, சமைக்கறதுலே கில்லாடியாயிட்டா நாகரத்தினம்.
இப்பக் கல்யாணம் முடிச்சுப்போற வீட்டுலே 'சோத்துக்கடை' இல்லேன்றதே பெரிய ஆறுதலா இருந்துச்சாம். ஆனா தலைவலி போய் திருகுவலி வந்தாப்புலே, ஸ்ரீநிவாசனுக்கு மிட்டாய் வண்டி வியாபாரம். தினம் வெங்காயம் பச்சமிளகாய்மட்டும் கூடைகூடையா வெட்டணும். வாழ்க்கையை நினைச்சு அழுவறதா, இல்லே வெங்காயத்தை உரிச்சு அழுவறதா?



மூணு புள்ளைங்களும் கூடவே இருந்து வேலை செய்யுமாம். புருஷனும் உழைக்கப் பயந்தவர் இல்லை. காலையிலேபத்து மணி போல வேலையை ஆரம்பிச்சா, சாயந்திரம் அஞ்சு மணிக்கு பக்கோடா, மிச்சர், ஓமப்பொடின்னு பலகாரவண்டிக்குத் தேவையான அத்தனை சமாச்சாரமும் ரெடி.
அதுக்கப்புறம் குளிச்சு முடிச்சு, நல்ல சலவைச் சட்டையோட மிடுக்கா நடந்து வண்டியைத் தள்ளிக்கிட்டு சினிமாத் தியேட்டர் பக்கம் போயிருவார். ஆளும் நல்ல உயரமா, லட்சணமான மனுஷர். சிரிச்ச முகம். சினிமாலே முதல்காட்சித் தொடங்குனதுக்கப்புறம் அப்படியே வண்டியைத் தள்ளிக்கிட்டு ஊருக்குள்ளெ போறதுதான். 'உஸ் உஸ்'ன்னு பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தோட மினுங்கலா வர்ற வண்டிக்குன்னு அங்கங்கே வாடிக்கையாளர். பக்கோடா மட்டும் நிமிசத்துலே காலி ஆயிருதாம். பாதிப்பேர் வீட்டுலே தொட்டுக்க அதுதானே!


ஒரு சுத்து சுத்தி, திரும்ப சினிமாக் கொட்டாய்க்கிட்டே வர்றதுக்கும், ஆட்டம் விடறதுக்கும் சரியா இருக்குமாம். சரசரன்னு வியாபாரம், ராத்திரி ரெண்டாவது ஆட்டம் தொடங்குறதுவரை. வீடு வந்து சேர எப்படியும் ராத்திரி பதினோரு மணியாகும். புள்ளைங்க அதுக்குள்ளெ சாப்புட்டுத் தூங்கி இருக்கும். இவரும், பொண்டாட்டியுமாச் சாப்புட்டுட்டு, அன்னிக்கு கல்லாவை எண்ணுவாங்களாம். ஒரு கும்பா நிறைய, எல்லாம் சில்லரைங்களாத்தான் இருக்கும். எண்ணி முடிக்கவே நடுராத்திரியாயிருமாம்.



இப்படியே வருசங்கள் ஓடிப்போச்சு. தம்பி சிவராமன் மட்டும் கொஞ்சம் நல்லாவே படிச்சு, வாத்தியார் வேலைக்குப் போயிட்டார். நாகரத்தினத்துக்குன்னு குழந்தைங்க இல்லை. அதான் மூணு பையனுங்க இருக்காங்களே. அவுங்களும் இப்ப பெரியவங்களா வளர்ந்தாச்சு. வியாபாரம் இன்னும் அதேதான். ஆனா நாலு பலகார வண்டிங்களா ஆயிருச்சு.பலகாரம் செய்ய உதவிக்குன்னு ரெண்டு மூணுபேர் வேலைக்கும் இருக்காங்க.
நல்ல வருமானம். இப்பெல்லாம் ராத்திரி காசை எண்ணி முடிக்க நேரஞ் செல்லுது. சிலசமயம், கும்பாங்களை அப்படியே எடுத்துப் பீரோவுலே வச்சுட்டு, மறுநாள் காலையில் உக்காந்து எண்ணிக்கிட்டு இருப்பாங்க நாகரத்தினம். ஸ்ரீநிவாஸனுக்குகொஞ்சம் ஓய்வுதான் இப்பெல்லாம். வீட்டு வாசலிலேயே ஒரு கடை போட்டுக்கிட்டார். உக்காந்த இடத்துலே வியாபாரம்.பசங்க வண்டிகளை எடுத்துக்கிட்டுப் போறாங்க.



அறியாத வயசுலே கட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்த 'குழந்தைப் பொண்டாட்டி'க்கு அன்பையும் ஆதரவையும் தாராளமாவே கொடுத்த ஸ்ரீநிவாசன், தன் தம்பிக்கு எப்பவும் உதவி செஞ்சுக்கிட்டு இருந்த மனைவியை ஒரு நாளும் கடிஞ்சு ஒண்ணும் சொன்னதே இல்லையாம். அவர் கணக்குலே மச்சினனும் இன்னொரு குழந்தை.


நல்ல வசதி வந்தபிறகு, மனைவியைக் கூட்டிக்கிட்டு வட இந்தியாவுக்கு யாத்திரை போயிட்டு வந்தார். அது ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாலே. அந்தக் காலக் கட்டத்துலே, அவுங்க ஊர்லே இருந்து அமர்நாத், பத்ரிநாத், காசி, கயா, டில்லி, ஆக்ரான்னு போய் வந்தவுங்களை விரல்விட்டு எண்ணிறலாம். ஒவ்வொரு இடத்தைப் பத்தியும்சுவாரசியமாக் கதை போலச் சொல்லுவாங்க. தாஜ்மஹாலைப் பத்திக் கனா மட்டுமே கண்டுக்கிட்டு இருந்த நாங்க நாகரத்தினம் சித்தியையே ( நாங்கெல்லாம் அப்படித்தான் கூப்புட்டுக்கிட்டு இருந்தோம்) அதிசயமாப் பாப்போம்.



என்னதான் வேலைகளுக்கு ஆளுங்கன்னு வந்துட்டாலும் பலகாரங்களை செய்யும்போது கவனமாப் பக்கத்துலே இருந்து பார்ப்பாங்க. முக்கியமானதுகளுக்குப் பதம் சொல்றதும், தேவைப்பட்டா, சுணங்காம அடுப்புக்குப் பக்கத்துலேபோய் உக்காந்து வேலையைச் செய்யறதும் பார்க்கவே அருமையா இருக்கும். நான் சின்னப்பொண்ணா இருக்கும்போது கூடவே இருந்து எல்லாத்தையும் கவனிச்சிருக்கேன். எனக்கு பலகாரம் செய்யவும், திங்கவும் ஆர்வம் வந்ததுக்கு நாகரத்தினம் சித்திக்கூட ஒரு காரணம்.



அடுப்பு வேலையெல்லாம் முடிச்சு, குளிச்சு ஒரு நல்ல சேலை எடுத்துக் கட்டிக்கிட்டு, மிதமான அலங்காரத்தோடு கோவிலுக்குக் கிளம்பிருவாங்க. கதைன்னா எனக்கு உசிரு. கதை பேசிக்கிட்டே போய்வருவோம். லீவு விட்டுட்டா எனக்குக் கொண்டாட்டம்தான்.


அந்த ஊர்லே இன்னொரு பழக்கம்கூட இருந்துச்சு. பட்டிதொட்டிலே இருந்து காய்கறி, மோர், கீரைன்னு வியாபாரம் பண்ணவரும் பெண்கள், காலையிலே சுமையோடு நடந்து வரும்போதே வழியிலே இருக்கற மரங்களிலே எது இருக்கோ அந்தந்த சீஸனுக்குத் தகுந்தாப்புலே புளியம்பழம், எலந்தைப் பழம், மாங்காய், மல்லாக்கொட்டைனு எதையாவது கொஞ்சம் பறிச்சு மடியிலே கட்டிக்கிட்டு வருவாங்க. சரக்கை வித்துட்டு வீட்டுக்குப்போற வழியிலே நாகரத்தினம்மா வீட்டாண்டை வந்து,அதைக் கொடுத்துட்டு, ஒரு பொட்டலம் காராசேவு, ஓமப்பொடின்னு ஒரு பண்டமாற்றல். நடைக்கஷ்டம் தெரியாம அதைத் தின்னுக்கிட்டே ஊர் போய்ச் சேர்ந்துருவாங்களாம்.



இப்படிச் சேரும் புளி, கடலை வகைகளை வெய்யிலிலே காய வச்சு நல்லா சுத்தம் செஞ்சு வீட்டுச் சமையலுக்குப்போக பாக்கியை அம்மா தனத்துக்கும், தம்பி வீட்டுக்கும் அனுப்புவாங்க.


சிவராமனுக்கும் கல்யாணம் ஆச்சு. புள்ளைங்களும் பொறந்தாங்க. அந்தப் புள்ளைங்களுக்கு வேண்டிய எல்லாத் துணிமணி நகை நட்டு எல்லாம் இவுங்க வாங்கித் தந்ததுதான். தம்பி பொண்டாட்டி மேலே அவ்வளோ பிரியம்.இல்லேன்னா மட்டும் வாத்தியார் சம்பளத்துலே ஏழு புள்ளைங்களை வளர்த்துட்டாலும்........ இதுலே சிவராமனுக்கு நாடகப் பைத்தியம் வேற. அதுக்கேத்த மாதிரி நண்பர்கள். தானே கதை, வசனம், டைரக்ஷன், நடிப்புன்னு சதா அமர்க்களம்தான். இவரைப் பத்திக்கூட ஒரு நாள் எழுதலாம்:-)))



நாகரத்தினத்துக்கு நிறைவேறாத ஆசை ஒண்னு இருந்துச்சுன்னா, அவுங்களை 'அம்மா'ன்னு வாய் நிறைய யாரும் கூப்புடலைங்கிறது. ஸ்ரீநிவாசனோட மூணு புள்ளைங்களும் அம்மான்னு கூப்புடாம எல்லாம் சிவராமனைப் பார்த்துக் 'காப்பி அடிச்சு' அக்கான்னு கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. பேரப் புள்ளைங்களையாவது பார்க்கலாமுன்னா இன்னும் பசங்க யாரும் கல்யாணம் கட்டலை. கல்யாணப் பேச்சை எடுத்தாலே கத்தறாங்களாம்.


அதுக்கப்புறம் நாங்களும் ஊரைவிட்டு வந்துட்டு அவுங்களோட தொடர்பே இல்லாமப்போச்சு. ஸ்ரீநிவாசன் இறந்துட்டாருன்னும்,பசங்க சொத்தையெல்லாம் பாகம் பிரிச்சுக்கிட்டாங்கன்னும், நாகரத்தினம் 'சித்தி', சிவராமன் வீட்டோடையே வந்துட்டாங்கன்னும் சில வருசங்களுக்கு முன்னே கேள்விப்பட்டதுதான்.

-------------
முடிவுரை:


இது இந்த 'எவ்ரிடே மனிதர்கள் தலைப்புலே 25 வது பதிவு.


இனியும் வேணுமா? வாழ்க்கையிலே நான் இதுவரை எத்தனையோ பேரைச் சந்திச்சிருக்கேன்.அவுங்க ஒவ்வொருத்தரையும் பத்தி எழுதணுமுன்னா ஒரு ஆயுட்காலம் போதாது. மனசுலே அப்பப்ப யாராவது வந்து போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. ஒவ்வொருத்தர்கிட்டே இருந்தும் ஒவ்வொரு நல்ல குணங்களைப் படிச்சிருக்கேன்.சிலர்கிட்டே இருந்து எப்படியெல்லாம் இருக்கக்கூடாதுன்னும் படிச்சிருக்கேன். வாழ்க்கை முழுசுமே ஒரு படிப்பினைதான்.


இப்ப யோசிச்சுப் பார்க்கறப்ப, நல்லா மனசுக்குள்ளெ அனுபவிச்சு எழுதுன தொடர் இதுதான். ஒவ்வொண்ணும் எழுதறப்ப அந்தந்தக் காலங்களுக்கே போயிருவேன். அப்ப அனுபவிச்ச ஒவ்வொரு உணர்வும் அப்படியே மனசுக்குள்ளெ வந்து உக்காந்துக்கும். பல நாள் எழுதமுடியாம அந்த நினைவிலேயே ஆழ்ந்து போயிருக்கேன். முதல் வாரமே அடுத்தவாரம் யாரைப் பத்தி எழுதப் போறேன்னு தீர்மானிச்சு அவுங்கப் பேரைப்போட்டு அனுப்பிர்றதாலே, அவுங்க நினைவாவே அந்த வார முழுசும் இருந்துருக்கேன். எனக்கே இது ஒரு புது அனுபவம்தான்.


உள்மனசுலே இருந்தவங்க சிலரையாவது உங்களுக்குக் காமிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நம் தமிழோவியம் ஆசிரியருக்கு என் உளமார்ந்த நன்றி. மீண்டும் எப்பவாவது சந்திப்போம்தானே?
உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்போடு விடை பெறும்,
துளசி கோபால்.


நன்றி: தமிழோவியம்
-------------


நமக்குள்ளே இருக்கட்டும்: மேலே சொன்ன முடிவுரை தமிழோவியத்துக்கு மட்டும்தான். உங்களுக்கு இல்லை(-:

தப்பிக்க முடியாது. இன்னும் எத்தனை பேர் இருக்காங்க. அப்படியெல்லாம் வுட்டுற முடியுமா? பின்னே பதிவுஎதுக்கு வச்சுருக்கோம்?

கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் இதே தொடரில் உங்களை ( கொடுமைப்) படுத்துவேன்,ஆமா:-)))))