Friday, January 28, 2022

ஜூலை மாசம் வந்தால் .....

குளிரைத்தவிர வேறென்ன இருக்கு ?  மிட் விண்ட்டர் என்ற பெயர் !  இங்கே ஜூன் ஜூலை ஆகஸ்ட்னு மூணுமாசம் தான் (!) குளிர்காலமாம் !!!!  அப்ப இதுக்கு ரெண்டு மாசம் முன்னே பின்னேன்னு வரும் நாலு மாசங்கள் எந்தக் கணக்கில்  வருதுன்னு  சொல்லமாட்டேங்கறாங்க :-(

சநாதன தர்ம சபாவில் ராமாயணம் வாசிப்பது, பூஜை எல்லாம் வழக்கம்போல் வாரம் ஒருமுறை செவ்வாய்களில்.   சிலசமயம் வெள்ளிகளிலும்.  நேரம் சரியாக அமைஞ்சால் போய் வருவோம்.

சனிக்கிழமைகளில் நம்ம ஹரேக்ருஷ்ணா  கோவிலுக்குப் போய் வரும் வழக்கம் பல வருஷங்களா  இருந்தாலும்  அரசு சொல்லும் விதமாத்தான் இப்பெல்லாம் . லாக்டௌன் லெவல் அனுசரிச்சுக் கோவில் திறந்து மூடறாங்க.

நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்திலும் இப்படியேதான்.  லெவல் அனுசரிச்சு நேரில்,  இல்லைன்னா ஸூமில்.... தான் பூஜையும் பஜனையும். இந்த மாசப்பூஜையை  உள்ளூரில் இருக்கும் நேபாள் பண்டிட்கள் வந்து நடத்திக்கொடுத்தார்கள்.


கோவிட் அரக்கனின் பிடியில் இருந்து நம்மைக் காப்பாத்த  அரசு தடுப்பூசி போடச் சொல்லுது.  முதலில் மருத்துவத்துறை மக்கள், பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் தொழில் சார்ந்த மக்கள் இப்படித் தரவரிசை போகுது.  சீனியர் சிட்டிஸன்  வரிசையில் நமக்கான ஊசியை ஜூலை முதல் வாரம்  போட்டாங்க.  இன்னும்  மூணு வாரத்துக்குப்பிறகு   ரெண்டாம் தடுப்பூசி போடுவாங்களாம்.

ஊசி போட்ட நாள் இரவு லேசா உடம்பு காய்ஞ்சது.  சின்னதா கைகால் வலி. எப்பவும் இருக்கறவலி போலத்தான். ஆனாலும் பழி போட ஊசி இருக்கே இப்ப :-)
நம்ம தமிழ்ச்சங்கத்தில் குளிர்கால ஒன்று கூடல், அன்றைக்கு. சங்கத்தை ஆரம்பிச்சு வச்ச ஆத்மாக்கள் போகாமல் இருக்க  மாட்டாங்கதானே ?  நிறைய புது அங்கங்கள். தமிழ்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையும் கூடி இருக்கு.  பிள்ளைகள் எல்லாம் செல்லம்போல் இருக்காங்க.  பாட்டு, நடனம்,  நாடகம்னு  அமர்க்களம்தான். சங்கம் ஆரம்பிச்சு நடக்கும்  கால் நூற்றாண்டு காலத்தில் முதல்முறையாக,  இந்தியத் தமிழர், தலைவராக  இருக்கார்.  
(இங்கே இந்தியத் தமிழர்கள் சங்கம் ஒன்னு புதுசா ஆரம்பிச்சு  மூணுவருஷமா நடக்குது என்பது கூடுதல் தகவல். CITA : Canterbury Indian Tamils Association)

இந்த வருஷ ஆரம்பத்தில் (2021) நம்ம அடுக்களைப்பக்கம் இருக்கும் கன்ஸர்வேட்டரியைப் புதுப்பிக்க ஏற்பாடு செஞ்சுருந்தோம்.  அவுங்க வந்து இடம் அளந்துக்கிட்டுப்போய், செலவுக்கான தொகையைச் சொல்லி, நாம் அதை அங்கீகரிச்சுன்னு  ... வேலை ஆரம்பிச்சதே மார்ச் கடைசி வாரம்தான். சரியா அதே சமயம் 'நம்மவருக்கு' கண் சிகிச்சை வேற ! ஆச்சு பத்து மாசம் இன்றோடு.  இன்னும் பூரணகுணம் கிடைக்கலை.  நமக்கு நேரம் சரி இல்லை போல.... கண்ணில் பிரச்சனைகளா வந்துக்கிட்டே இருக்கு. பெருமாள்தான்  பார்த்துக்கணும்.
இதுக்கிடையில்  பயணம் ஏதும் போக முடியாமல் காலில் குண்டு கட்டி விட்டது போல இருக்கு. உள்ளுர் பயணமாவது போய் வரலாமுன்னா..... அங்கே கொரானோ கம்யூனிட்டி கேஸ், இங்கே  கொரானா ன்னு  பயம்வேற காமிச்சுக்கிட்டு இருக்காங்க.  நாஞ்சொல்லலை.... தினம் மதியம் ஒரு மணிக்குக் கொரோனா டிவியில் வந்துரும்னு.....

 சீனர்கள் மேல் கோபம் வருது.... ஆனால் இங்கே நமக்கான காய்கள் ஒன்னு ரெண்டு வாங்கிக்கணுமுன்னா  சீனக்கடைக்குத்தான் போகணும். வீட்டாண்டை வேற இருக்கே!


ஒருநாள் அங்கே  நம்ம நார்த்தங்காய் கிடைச்சது. விடமுடியுதா ? வடக்குத்தீவில் இருந்து வந்துருக்கு. நம்மூரில் சுருள்சுருளா வெட்டி உப்பிலிட்டு வைப்பாங்க பாருங்க.... அதையே  செஞ்சு பார்த்தேன். முதல் முறைக்கு நாட் பேட். எல்லாஞ்சரி. வெயில் எங்கே இருக்கு காயவைக்க ? எடு அந்த சொந்த சூரியனை !   இந்த நார்த்தங்காய்க்கு இங்கே Kaffir Lime னு பெயர்.  உள்ளூர் நர்ஸரியில் ஒரு செடி வாங்கி வந்து வச்சுருக்கேன்.  அதுலே  காய் வந்துட்டால்....  ஊறுகாய் பிஸினஸ் ஆரம்பிச்சுறலாம் :-)

நம்ம வீட்டு ஸ்ட்ராபெர்ரி கொய்யாவேற எக்கச்சக்கமாக் காய்ச்சுப் பழுத்துக்கிடந்தது. இதை வச்சு நம்ம எலந்தைவடை (! )செஞ்சு பார்க்கலாமான்னு தோணுச்சு. செஞ்சாச். நிறம்தான் சிகப்பா இருந்ததே தவிர ருசியில் ஒன் னும் அவ்வளவா மாற்றம் இல்லை.
இப்படித்தான் சமையல் பரிசோதனைன்னு ஆரம்பிச்சா.... அப்படியே ஒவ்வொன்னா.... வேற ஏதாவது அலங்காரம்னு ஆரம்பிச்சா அதுலேயேன்னு 'போனாப் போன இடம், வந்தா வந்த இடம்னு ' நாளைத் தள்ளிக்கிட்டு இருக்கேனே ஒழிய, உக்கார்ந்து எழுதலாமுன்னு தோணவே இல்லை.  மனசுக்குள்ளே இதை எழுதணும் அதை எழுதணுமுன்னு  அதுபாட்டுக்குச் சேர்ந்துக்கிட்டே இருக்கு.  இதுவும் கடந்து போகுமுன்னு சொல்றாங்களே... அப்படியே ஆகக்கடவது.

துளசிதளத்தில்தான் பதிவுகள் வரலையே தவிர, ஃபேஸ்புக்கில் தினமும் ஆஜர் சொல்லிக்கிட்டுத்தான் இருந்தேன். அதுவும் இல்லைன்னா....  அந்தமான் சிறைவாசமா இருந்துருக்கும்........
இவ்ளோ கலாட்டாவிலும் ரொம்பவே திருப்தியா இருந்தது ரஜ்ஜு மட்டுமே !  ஹாஸ்டல் போக வேணாமே :-) 
யோகா வகுப்பில் சேர்ந்துருக்கோமுன்னு சொன்னேனோ....  வாரத்துக்கொருநாள் ஒரு மணி நேரம் வகுப்பு.  பயங்கர ஆசனம் எல்லாம் போட வேணாம்.   கொஞ்சம் வயதுபோனவர்களுக்கான ஸ்பெஷல் இது. அம்பதுக்குப்பின் :-)   மூச்சுப்பயிற்சிதான் முக்கியம். கூடவே சின்ன சின்ன உடற்பயிற்சிகள். நாற்காலியில் உக்காந்தபடியே செய்யலாம். முக்கியமா  உடலை நல்ல பேலன்ஸில் வச்சுக்கறதுக்கான பயிற்சி.  கொஞ்சம் வயசாக ஆக....  எப்பவாவது சட்னு கீழே விழுந்து வச்சோமுன்னா... அதன்பிறகு நடமாட முடியாமப்போயிருதேன்னு .......  ஸ்போர்ட்ஸ் கேண்டர்பரி இதை நடத்துது. குழுவில் ரெண்டுபேருக்குப் பயிற்சி கொடுத்துருக்காங்க.  அவுங்கதான் வகுப்பை நடத்திக்கிட்டுப் போவாங்க. மாசம் ஒருமுறை, ஸ்போர்ட்ஸ் கேண்டர்பரி பயிற்சியாளர் வந்து நாம் யோகா செய்யும் லக்ஷணத்தை நேரில் வந்து பார்த்துட்டு, இன்னும் சில புது யுக்திகளைச் சொல்லிக் கொடுத்துட்டுப் போவாங்க.

நாங்க ஒரு முப்பதுபேர் இந்தக்குழுவில் இருக்கோம். வெறும்  Chair யோகா மட்டும் செய்யாம  அப்பப்ப Food Yoga வும் செய்வோம். கொண்டாடக் காரணங்களா இல்லை ?  எல்லோரும் மனசால் இணைஞ்சுட்ட காரணத்தால்   யோகா வகுப்பு தவிர , அப்பப்ப சின்னதா பிக்னிக்,  எங்கியாவது தோட்டத்தில் நடக்கப்போறது, வீட்டுப் பூஜைகள்,  பாலிவுட் ம்யூஸிக் நைட்ன்னு தாளிச்சுக்கிட்டு இருக்கோம்.  கடவுளே.... கண் படாமல் இருக்கணும். டச் வுட் :-)

ஆடி மாசம் பொறந்துருச்சு. நம்ம மாரியம்மன் கோவிலில் விழான்னு ஏற்பாடுகள் ஆரம்பிச்சுக் கோவிட் காரணத்தால் விழா நின்னு போச்சு.  பாவம்.... அம்மன். வீட்டுலே மாவிளக்கு போட்டு, மன்னிப்புக் கேட்டுக்கிட்டேன். 
என்னென்னவோ பரிசோதனைகள் காய்கறி உலகத்தில் நடந்துக்கிட்டு இருக்கு. தங்கத் தண்ணிப் பழம் அதுலே ஒன்னு.... ஒரு சின்னத்துண்டு வாங்கியாந்தோம்.  நிறம்தான் வேறே... ருசி பழசுதான்.  ஏற்கெனவே கிவி பழத்தைத் தங்கம் ஆக்கியாச்சு தெரியுமோ !

கவலைப்படாதே... எல்லாம் சரியாகுமுன்னு சொல்றாரோன்னு நினைச்சு ஒரு புத்தரும் புதுவரவானார்.

நல்ல குளிரும் பனியுமா நாட்கள் போகுது.  சதர்ன் ஆல்ப்ஸ் மலைகளில் பனி உறைஞ்சு கிடக்கு.... ஒருநாள் போகணும்.  கொஞ்சம் வெயில் வரட்டுமுன்னு ஒரு  காத்திருப்பு.

முதல் ஊசி போட்டு மூணுவாரம் ஆனதும் ரெண்டாவதும் ஆச்சு.  இனி நமக்கொன்னும் வராது. பயணம் போக விட்டுருவாங்கன்னு கொண்டாட்ட மனநிலையில்  பிகானிர்வாலா என்னும் ரெஸ்ட்டாரண்ட்க்குப்போய் பகல் சாப்பாட்டை (!)  முழுங்கிட்டு வந்தோம்.  ஊசி போட்டா கை வலிக்கும்ல. சமைக்க முடியாதே.....  :-)





நம்ம தமிழ்ப்புத்தக மன்றத்தில்   'வாசிக்கலாம், வாங்க' ன்னு ஒரு நிகழ்வு.  பெரியவங்களுக்குமே இப்போல்லாம் புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கும் வழக்கம் போயிருச்சே...  அதை ஊக்குவிக்கவும்,  பிள்ளைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் தூண்டவும், முக்கியமா பிள்ளைகள் தமிழில் பேசவும்னு தான்.  பிள்ளைகளைக் கதை  சொல்ல வைக்கும் முயற்சியில்  வெற்றிதான்னு சொல்லலாம். தாயும் தந்தையுமா நல்லாவே பயிற்சி கொடுத்துருந்தாங்க.


அடுத்த கட்டமா.... பெரியவங்களைத் தமிழில் எழுத வைக்கணும். எப்பவும் கையில் வச்சுருக்கும் செல்ஃபோனிலேயே நாலு வரி எழுதப் பழக்கணும். பலருக்கு ஆர்வம் இருந்தாலும்  தமிழ் எழுத்துரு இல்லையேன்னு  எண்ணம்.
இதுசம்பந்தமா என்ன செய்யலாமுன்னு யோசிச்சு,  'எழுதிப் பழகலாம் வாங்க '  என்ற  தலைப்பில்  இகலப்பையைப் பிடிச்சு உழுதால் போதும்,   எப்படியெப்படி  எங்கே இருந்து  தரவிறக்கம் செய்யலாம், எப்படிப் பயன்படுத்துவதுன்னு காண்பிக்க  நம்மவர் ஒரு ஸ்லைடு ஷோ  ஏற்பாடு செஞ்சார். எழுத்துரு வந்தபின் எதை எழுத ஆரம்பிக்கறதுன்னு இருக்கும் தயக்கத்தை விரட்ட நான்  ஒரு விளக்கம் கொடுக்கறதுன்னு முடிவு செஞ்சு அப்படியே ஆச்சு. நமக்கென்ன பேசத்தெரியாதா ? 


நிகழ்வை ஏற்பாடு செய்த  நண்பர் செல்வகணபதி.
தமிழ் நூலகத்தில் இருந்து மூணு புத்தகங்கள் எனக்கு.

ஒரு நாப்பதுபேர் வந்துருந்தாங்க. ஓரளவுக்குப் பயனாக இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன். எடுத்தவுடனே பெரிய பெரிய பதிவுகள், வலைப்பக்கம் வச்சுக்கறதுன்னு போக வேண்டாம். இப்பப் பரவலா புழக்கத்தில் இருக்கும் ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே இங்லிஷில் நாலு வரி எழுதறதைப்போலவே ஒரு நாலு வரி தமிழில் எழுத ஆரம்பிங்க.  கொஞ்சநாள் பழகின பிறகு இன்னும் பத்துவரி கூடுதல்னு  எழுதிப்பழகலாமுன்னு சொன்னேன்.  கண்ணையும் காதையும் திறந்து வச்சு அக்கம்பக்கம் பார்த்தாலே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் சிக்கும். அதை சுவையாக எழுதணும். அவ்ளோதான், இல்லெ ?
https://www.facebook.com/1309695969/videos/556982709070964/

தமிழ்புத்தக மன்றதுக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சாங்க. அதுலே எனக்கும் ஒரு இடம் கிடைச்சது.   நம்ம  'முழிபெயர்ப்பில்'  வந்த மவொரி கதைகளை, அதுலே வாரம் ஒன்னுன்னு வெளியிட முடிவு.  அதுக்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் வேர்டுப்ரெஸ்லே !  அதென்னவோ என்னாலே லாகின் செஞ்சுக்கவே முடியலை.முந்தி ஒரு காலத்தில்  'தேசி பண்டிட்'  பக்கத்துலே அளந்துக்கிட்டு இருந்ததெல்லாம்  வேர்டுப்ரெஸ்தானே!  இப்ப என்னன்னா.... பழைய பாஸ்வேர்டில் வான்னு சொல்லுது. யாருக்கு ஞாபகம் இருக்கு ? ஙேன்னு முழிச்சுட்டு, மன்றத்தின் முக்கியஸ்தருக்குக் கதையை அனுப்பி விட்டு, அவரையே சேர்த்துறச் சொன்னேன். அப்படித்தான் ஆகிக்கிட்டு இருக்கு இப்பவும்.



Wednesday, January 26, 2022

40 ஆண்டுகளில் முதல்முறையாக.....

இந்த நாற்பது வருஷ வெளிநாட்டு வாழ்க்கையில் முதல்முறையாக , இந்தியக் குடியரசு தினத்திற்கான  அலங்காரங்கள்  செஞ்சுருக்கேன்.












மொத்தம் 17 அடையாளங்கள் இந்தியாவுக்கு இருக்காம்.  தேசியக்கொடி,  தேசிய கீதம், தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மலர்,  தேசிய மரம் , தேசியக்கனி, தேசிய நதி,   இப்படி.....

What are the 17 National Symbols of India?

Following are the 17 national symbols of the Republic of India representing India’s culture and its identity. These are not just symbols But the pride of every Indian. 

S.NoTitleNational Symbols
1National FlagTiranga
2National AnthemJana Gana Mana
3National CalendarSaka calendar
4National SongVande Mataram
5National EmblemNational Emblem of India
6National FruitMango
7National RiverGanga
8National AnimalRoyal Bengal Tiger
9National Heritage AnimalIndian Elephant
10National Aquatic AnimalGanges River Dolphin
11National TreeIndian Banyan
12National BirdIndian Peacock
13National CurrencyIndian Rupee
14National ReptileKing Cobra
15National FlowerLotus
16National VegetablePumpkin
17Oath of AllegianceNational Pledge

 மேற்படி சமாச்சாரங்களில் வீட்டில் இருந்த ஒரு சிலவற்றை வச்சு அலங்காரம் ஆச்சு !

நல்லாத்தேடிப் பார்த்தும் தேசிய மனிதனைக் காணோம்!

நல்லவேளை  ..... அப்படிமட்டும் யாரையாவது குறிப்பிட்டு இருந்தால்............   ஐயோ....... 
 தப்பிச்சோம் !

நண்பர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியரசு தின வாழ்த்து(க்)கள் !


Monday, January 24, 2022

மா(ட்)டாரிகி Matariki

புதுசா இருக்கா ?  ரொம்பகாலமா  இங்கத்து மவொரிகளுக்கிடையில்  கொண்டாடப்பட்டு வரும் விழாதான் இது.  இது அவுங்க புதுவருஷ விழா !  ஆண்டுப்பிறப்பு !

இப்பதான் இதைப்பற்றிய விவரங்கள் சில வருஷங்களாய் வெளிவர ஆரம்பிச்சுருக்கு!

போன வருஷம் கொஞ்சம் பரவலாப் பேசப்பட்டது. இந்த வருஷம்  இன்னும் கொஞ்சம் அதிகமா ...... அநேகமா   வரும் காலங்களில் விஸ்வரூபம் எடுக்குமுன்னு நினைக்கிறேன்.

வருஷப்பிறப்பை விளக்கு ஏத்தி வச்சுக் கொண்டாடும் வகையில்,   நகரின் சில முக்கிய இடங்களை  வண்ண விளக்குகளால் அலங்கரிச்சு இருக்காங்க.  விளக்குன்னு வச்சால் கண்ணுக்கு முன்னால் கலர் பல்புகளால்  ஏத்தி வைக்கிறதில்லையாக்கும்..... எல்லாம் 'பெயின்டிங் தெ டௌன் ரெட் 'னு சொல்லும் விதமா.....   கண்மறைவில் இருந்து வரும் வண்ணங்கள்  பலநிறங்களில் மாறிமாறி வரும் வகையில் ஒரு அலங்காரம். 

இந்த ஒளிவண்ணங்கள் பூத்துவரும் நிகழ்ச்சிக்கு 'டீரமா மாய்  Tirama Mai' என்ற மவொரிப் பெயர் வச்சுருக்காங்க.  நாட்டின் மும்மொழிக் கொள்கையில் மவொரி இடம் பெற்றாலும்..... இந்த மொழிக்குன்னு ஒரு எழுத்துரு இல்லாததால் இங்லிஷ் எழுத்துகளையே பயன்படுத்திக்கிறாங்க. பல தீவு நாடுகளில் இப்படித்தான்  இருக்கு. நமக்கும் படிக்க எளிதாப் போச்சு, பாருங்களேன் !  பேசத்தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லது. கொஞ்சம் மெனெக்கெடணும்.... பார்க்கலாம்..... கிடைக்குதான்னு.....

நமக்கும் மவொரியர்களுக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்குன்னு ஏற்கெனவே மவொரி கதைகள் சிலதை 'முழி பெயர்க்கும் போது' தெரிஞ்சுக்கிட்டேன்.  கதைகள்  நியூஸிலாந்து புத்தகத்தில் அச்சு வடிவத்தில்  இருக்கு.  இங்கே நம்ம வலைப்பக்கத்திலும் இருக்கு :-)
 (பெயர் 'துளசிதளம்'  தேடினால் கண்டடைவீர்கள். கூகுள் பின்னே எதுக்கு இருக்காம் ? வலையை வீசிப்பாருங்க.... சிக்கும். )

மவொரிகளுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம்.  அதிலும் கடவுளே அனைத்தையும் படைத்தார். அவருக்கு உதவி செய்யவும், அவரின் கீழ் உலகைப் பராமரிக்கவும்  நிறைய உபகடவுள்கள்/ தேவதைகளையும் உருவாக்கினார்னு சொல்றாங்க.  வானமே தந்தை, பூமியே தாய். அப்புறம் காற்று, தண்ணீர், நெருப்பு, காடு, போர், காலநிலை, நிலநடுக்கம், மிருகங்கள், பறவைகள், இடி மின்னல், சூரியன், சந்திரன், காய்கனிகள், விளைச்சல்ன்னு ஏகப்பட்டத் தனித்தனி டிபார்ட்மென்ட்க்கான கடவுளர்கள் இருக்காங்க. சக்கரைவள்ளிக்கிழங்குக்குக்கூடத் தனிக்கடவுள் இருக்காருன்னா பாருங்க !
போகட்டும்.... இப்போ இந்த வருஷப்பிறப்பு விவரம் பார்க்கலாம்.




ஒன்பது நக்ஷத்திரங்களின் கூட்டம் வானில் தென்படும் காலத்தில்  ஆண்டுப்பிறப்புக்கான ஒருக்கம் நடக்கிறது. ஹா..... ஒன்பது நக்ஷத்திரங்களா ?  இந்த ஒன்பதுக்கும் தனித்தனிப்பெயர்கள்,  அதற்கு உண்டான தெய்வங்கள், அந்த தெய்வங்களுக்கு உரித்தான கடமைகள்,  இவைகள் எப்படி விண்ணுலகையும் மண்ணுலகையும்  நல்ல முறையில் ஆட்சி செய்வதுன்னு பலப்பல சமாச்சாரங்களைத் தெரிஞ்சுக்கும்போது  எனக்குக் கிடைச்சது வியப்பே !  வியப்பைத்தவிர வேறொன்றில்லை !

ஆமாம்.....  நமக்கும் நம்ம ஜோதிட முறையில்  நவக்ரஹங்கள்தானே  மேற்பட்ட வேலைகளை/ கடமைகளைச் செய்கின்றன இல்லையோ ? 

இந்த நட்சத்திரக்கூட்டம், ஜூன்/ஜூலை மாசத்தில்தான் நம்ம கண்களுக்குப் புலப்படும். மவொரி காலண்டரில் o Pipiri ki மாசத்துக்கும்  o Hōngongoi மாசத்துக்கும் இடையில் இருக்கும் காலம்.


மவொரிகளின் கோரிக்கையை அங்கீகரிச்சு இனி மவொரி புத்தாண்டுக்கும்  ஒரு அரசு விடுமுறை உண்டுன்னு , மந்திரி சபையில் முடிவு செஞ்சுருக்காங்க.  சந்திரக்காலண்டரை அனுசரிச்சு வர்றதால் வெவ்வேற தேதிகளில் 29 June to 11 July 2021.  வருதேன்னு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கான தேதி கூட முடிவு பண்ணியாச்சு.  இந்த வருஷத்துக்கு Matariki Fri, 24 Jun 2022. வருஷத்துக்குப் பத்து நாட்களா இருந்த அரசு விடுமுறைகள் இனிமேப்பட்டுப் பதினொன்னு ! 

பெரிய  திருவிழாதான் இது. வருஷப்பிறப்பு நாளுக்கு ரெண்டு வாரம் இருக்கும்போதே விழா ஆரம்பிச்சுருது. ரெண்டு வாரம் முடிஞ்சு அடுத்தநாள்  வருஷம் பொறக்குது. அரசு விடுமுறை!  முன்னேற்பாடுகளுடன் அரசு நடத்தும் வாணவேடிக்கையோடு விழா முடியும். ஆகமொத்தம் பதினைஞ்சுநாள் திருவிழா! 

இந்த விழா இல்லாமல், கடந்த நாப்பத்தியேழு வருஷங்களா இன்னொரு தனிப்பட்ட விழாவும் இதே ஜூன் மாசத்தில் நமக்கும் உண்டு.  வெளிநாட்டு வாழ்க்கைன்னு ஆரம்பிச்ச இந்த நாப்பது வருசங்களில் நம்ம விழாவுக்கே அரசு விடுமுறை பலசமயம் வாய்ச்சுருதுன்னா பாருங்க !  மாட்சிமைதாங்கிய மஹாராணியம்மாவின் பொறந்தநாளுக்கான அரசு விடுமுறை சமயமா அமைஞ்சுருக்கு !