Thursday, April 30, 2009

வெங்கட்டும் வரதராஜனும். திருநெல்வேலிக்கே அல்வாவா?......(2009 பயணம் : பகுதி 18)

'அசல்' கடையில் ஒரு பத்துப் பதினைஞ்சுபேர் கூட்டமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஒருகிலோ பொதியோடு கோபால் திரும்பிவந்தார். ஏற்கெனவே பாக்கெட் போட்டு வச்சுருக்காங்களாம், ஒருகிலோ அரைக்கிலோன்னு. விலை? அநியாயத்துக்கு ரொம்பவே மலிவு. வெறும் நூறுரூபாய்தான் கிலோவுக்கு. ஒரு மாசம்வரை கெடாதாம், வெளியே வச்சுருந்தாலுமே. 'சிங்' முகத்தில் சிரிப்பே இருக்காதுன்னார் உலகநாதன். .

மறுநாள் காலை ஏழுமணிக்கு வந்துருவேன்னு சொல்லிட்டுப்போனார், நாங்க அறைக்குப் போனோம். கதவின் குமிழைத் திருப்புனதும் திறந்துருச்சு. பூட்டாமலா காலையில் கிளம்பி இருக்கோம்? இவரைக்கேட்டால் இழுத்து மூடினேன். ஆனால் குமிழைத் திருப்பிப் பார்க்கலைன்றார். உலகமெல்லாம் சுத்துற ஆளு கதவைப் பூட்டலைன்னா எப்படி? ஆஹா.... புரிஞ்சு போச்சு அவருக்கு. பொதுவா எல்லா ஹொட்டேலிலும் இருக்கும் ஆட்டோ லாக்ன்னு நினைச்சுச் சாத்திட்டு வந்துருக்கார். ஊம்....இருக்குமோன்னு, இன்னொருக்கா செக் பண்ணிப்பார்த்தால் சாவி போட்டுத் திருப்புனாத்தான் பூட்டுது.

அறைக்குள்ளே போய்ப் பார்த்தால் எல்லாம் சரியாத்தான் இருக்கு. திருநெல்வேலிக்காரங்க, அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்கன்னு புரிஞ்சது. நம்ம ஆர்யாஸிலேயே போய் சாப்பிட்டோம். இடியாப்பம் கிடைச்சது. அவருக்குக் குருமாவும் எனக்கு சக்கரையுமா. அப்படியே முன்பக்கப் படிகளில் இறங்கி ஒரு வாக் போனா.......

ரெண்டு லேடீஸ் வந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆன்மீக மீட்டிங் (ராஜயோகமாம்) இங்கே எங்கே நடக்குதுன்னாங்க?
க்யா மாலும்? லௌகீகம்தான் இந்த க்ஷணத்துத் தெரியுது நமக்கு. பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு அரைமணிநேரம் நெட்டிலே உலாவி மெயில் பார்த்துக்கிட்டு இந்தப் பக்கம் நடந்தால் ஒரு ம்யூஸிக் ஷாப் கண்ணுலே பட்டது. கால்கள் தானாக அங்கே போச்சுங்க. தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதே:-)

நாந்தான் அறுதப் பழசா சில படங்கள் வாங்கினேன். நூத்துக்கு நூறு, பாலாபிஷேகம் இப்படி. மலையாளப்படங்கள் இருக்கான்னு தேடுனா கொஞ்சம் இருக்கு. அதுலே நாடோடிக்காற்று, ஃபோட்டோகிராஃபர், நிவேத்யம் இப்படி. விற்பனைப்பெண் கிறிஸ்டி பயங்கர ஸ்நேகம். சிடி வேலை செய்யலைன்னா எத்தனை நாள் கழிச்சு வந்தாலும் மாத்தித் தருவாங்களாம். அட! இதையே சாக்கா வச்சு இன்னொருக்கா இந்தப் பக்கம் வந்துறணும்:-)

இருட்டுக்கடை அல்வா எப்படித்தான் இருக்குன்னு பார்த்துறலாமே! பொதியைத் திறந்தால் கருப்பும் இல்லாம ப்ரவுணாவும் இல்லாம ஒரு நிறத்துலே இருக்கு. பார்க்க அப்பீலா இல்லை. கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்தேன். பனங்கல்கண்டு இல்லைன்னாக் கருப்பட்டி ருசியும் வாசனையும் தெரியுது. கையிலே பிசுக்குன்னு ஒட்டாமல் நெய் நிறையதான் போட்டுச் செஞ்சுருக்காங்க. ஆனால் இன்னமும் புரியாத ஒன்னு என்னென்னா எப்படி நூறு ரூபாய்க்குக் கட்டுபடி ஆகுதுன்றதுதான்? போதும் ருசி பார்த்தது. அதான் ஃப்ரிஜ்லே வைக்காமலேயே கெடாதாமே. அண்ணன் அண்ணிக்கு எடுத்துவச்சுட்டேன்.

தெந்தமிழ்நாடுகளில் மாடு, யானைன்னு கட்டிப் போர் அடிச்ச காலம் மாறி இப்பெல்லாம் கார் ஓட்டிப் போர் அடிக்கும் காலம் வந்தாச்சேன்னு பாடலாம் போல இருக்கே. கும்பகோணம் போனப்ப இருந்தே இதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் இந்தப் பக்கங்களில் நீர்வளம் குறையாமல் இருப்பதால் சாகுபடி நல்லாவே இருக்கு. அதான் தெங்கும் வாழையுமா கண்நிறைஞ்சு கிடக்கே.
நடுத்தெருவில் (அக்கப்)போர்

குறுகலான சாலைகளிலும் இப்படிக் குவிச்சுப்போட்டு வைச்சிருக்கறது நல்லதுக்கில்லை. கொஞ்சம் ஒரு வண்டி போகும் அளவுக்காவது இடம் வுட்டுருக்கலாமோ? (அதுக்கேது இடம்?) வண்டிச் சக்கரங்களில் இந்த வைக்கோல்கள் சிலசமயம் மாட்டிக்கிட்டு விபத்தும் நடந்துருதாம். உலகநாதன் புலம்பலை ஊர்மக்கள் கேட்டுட்டாலும்......
காக்காத்தோப்பு பள்ளிவாசலைக் கடந்து திருவேங்கடநாதபுரம், போய்க்கிட்டு இருக்கோம். வழியெல்லாம் ஒரே செம்மண் பூமி. காணியெல்லாம் சிகப்பு என்றதால் இந்த ஊரைச் செங்காணின்னும் சொல்றாங்க. தென் திருப்பதியாம் இது. திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டு, அங்கே போகமுடியலைன்னா இங்கே கொடுத்தாலும் போதுமாம். இந்தக் காலத்துலே இருக்கும் பேங்கிங் நெட் ஒர்க்கைத் தூக்கிச் சாப்பிடும்விதம் அந்தக் காலத்துலேயே மக்களுக்கு வசதி பண்ணிவச்சுட்டார் சாமி:-)))) சரியான வசூல் ராஜா.

தென் திருப்பதின்னு ஏராளமான கோவில்கள் அங்கங்கே இருக்கு பாருங்க. எதுலே வேணுமுன்னாலும் காணிக்கையைச் சேர்த்துறலாமாம். இது போதாதுன்னு இப்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமே இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் கட்டிக்கிட்டு இருக்காம். அதானே 'வர்றதை' ஏன் விடணும்? இன்னும் நம்ம வெங்கடநாராயணா ரோடில் இருக்கும் தேவஸ்தான ஆஃபீஸில் 'மொட்டையடிக்கும்' ஏற்பாடு வரலை போல இருக்கே!
மேலத் திருவேங்கடநாதபுரம். அழகான அளவான கோவில். ஒரு சின்னக் குன்றின்மேல் இருக்கு. இந்தக் கோவில் இருக்கும் விவரமே எங்களுக்கு உலகநாதன் சொல்லித்தான் தெரியும். அதான் நேத்தே நவதிருப்பதிகளையும் பார்த்து முடிச்சாச்சே. இன்னிக்கு நம்ம காந்திமதியையும் நெல்லையப்பரையும் சேவிச்சுக்கணுமுன்னு சொன்னப்ப, என்னோட பெருமாள் ஆசையை எப்படியோ புரிஞ்சுக்கிட்ட மாதிரி, காலையில் கிளம்புனீங்கன்னா ஒரு பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு, வரும்போது நெல்லையப்பரைத் தரிசிக்கலாமுன்னு ஐடியா கொடுத்தார்.
கோவிலில் இருந்து ஊரைப் பார்த்தால்.....

தினம்தினம் ஆர்யாவில் (நேத்து ஒருநாள்தான் சாப்புட்டு இருக்கோம், அதுவே தினம்தினமா?) என்ன ப்ரேக் ஃபாஸ்ட்? வேற எங்கியாவது போகலாமுன்னு சொன்னப்ப, 'ஜானகிராமன்' போகலாம்னு உலகநாதன் கூட்டிப்போனார். (ஜானகிராமன்......ஆஹா....எங்க மாமா ஒருத்தர் இந்தப் பெயரில் இருந்தார். காந்திக் காங்கிரஸ் ஆளு. கதர்தான் போட்டுக்குவார். கூடவே ஒரு குல்லாவும்)அருமையா இருக்கு அந்த ரெஸ்டாரெண்ட். ரெஸ்ட்ரூம் வசதி அமோகம். நீட் & டைடி.(அப்பப்ப இந்த ரெஸ்ட்ரூம்களைப் போகறபோக்கில் சொல்லிட்டுப் போறது எதுக்குன்னா..... பயணிகளுக்கு, முக்கியமாப் பெண் பயணிகளுக்குப் பயனா இருக்குமேன்னு. ச்சும்மா டிப்ஸ்)

மெனுகார்டைப் பார்த்தால் இதுக்குமுன்னே இதையே எங்கியோ பார்த்த ஞாபகம். ரெண்டு வினாடிக்குப் பிறகு புரிஞ்சது. ஆர்யாஸ் ரெஸ்ட்டாரெண்டில் இதை, இதே ஆர்டரில் பார்த்துருக்கோம். அதோட ஃபோட்டோக் காப்பியா என்ன?

எதையும் தீர விசாரிக்கணும். அப்ப உண்மை தெரிஞ்சுரும். தெரிஞ்சதே..... இந்த ஜானகிராமனும், ஆர்யாவும் ஒரே குடும்பமப்பா:-)))) சிஸ்ட்டர்ஸ். ஆனா ஆர்யாவில் ஃபேமிலி ரெஸ்ட்டாரெண்ட். டைனிங்ஹால் நடுவில் குழந்தைகள் ஏரியா. விளையாட இடம் நல்லாவே இருக்கு. நேத்து இரவு புள்ளைகள் பாட்டுக்கு விளையாட, அம்மாக்கள் கையிலே தட்டை எடுத்து வச்சு, ஊட்டிக்கிட்டு இருந்தாங்க. ஜானகிராமில் ப்ரைவஸிக்காக க்யூபிக்கிள். ஒரு காலத்துலே ஜானகிராமனுக்கு வந்த ஜோடிகள் அப்படியே இப்ப ஆர்யாவுக்கு ஷிஃப்ட் ஆகி இருப்பாங்க.

ஆர்யா ரெஸ்ட்டாரண்ட்

பாருங்க, பெருமாளைவிட்டுட்டு அனுமாரைப் பிடிச்ச கதையா.....சொல்லிக்கிட்டு இருந்ததை விட்டுட்டு....

விழாவுக்காக அலங்கரிச்சக் கொடிமரம்

திருவேங்கடநாதர் அச்சு அசலா நம்ம வெங்கிதான். அழகான அலங்காரத்தோட ஜொலிக்கிறார். கோவிலில் பட்டரைத் தவிர ஈயும் காக்காயுமா நாங்க ரெண்டே பேர். திவ்யமான தரிசனம். தரிசனம் ஆனதும் மண்டபத்தில் கொஞ்ச நேரம் பட்டரோடு பேசிக்கொண்டிருந்தோம். அவர் திருமண் இட்டிருந்த வகை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அழகா இருக்குன்னு சொன்னேன். (அழகை அழகுன்னு சொல்லித்தானே ஆகணும்?)

தென்திருப்பதி பட்டர் (பெயர்? சூர்யாவா, பாஸ்கரான்னு நினைவில்லே)

நாப்பது வருசப் பழக்கம்னு சொல்லிச் சிரிச்சார். கருடாழ்வார் இங்கு ஒரு தினுசா இருக்கார் பார்த்தீங்களான்னார். சரியாக் கவனிக்கலையேன்னு எழுந்துபோய்ப் பார்த்தேன். அட! வழக்கமா இருக்கும் ரெண்டு ரெக்கைகளையும் மடிச்சு வச்சுக்கிட்டு, ரெண்டு தோளிலும் சங்கு சக்கரத்தோடு காட்சி தர்றார்.

இங்கே வரும்போதே இன்னொரு கோவில் இருக்கறதைக் கவனிச்சேன். வரும்போது பார்த்துக்கலாமுன்னு நினைச்சதை மறக்காமல், அங்கேயும் போனோம். கீழத் திருவேங்கிடநாதபுரம். இதுவும் பெருமாள் கோவில்தான். வரதராஜப் பெருமாள். சின்னக்கோயிலாத்தான் இருக்கு. மண்டபத்தில் ஏறிப்போனதும், புதுசா பளபளன்னு மின்னும் கருடவாகனம் கண்ணைப் பறிக்குது. இவர் சமீபத்திய வரவு. மூலவராக ஸ்ரீதேவி & பூதேவி சமேதராய் நின்றவண்ணம், கேட்கும் வரங்களையெல்லாம் தரும் வரதராஜர். பட்டர் நிதானமா தீபாராதனை செஞ்சார். இங்கேயும் நமக்கு ஏகாந்த தரிசனம்தான்.

உற்சவர் கீழத்திருப்பதி

சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆனதும் கொஞ்சம் பூவோடு ரெண்டு ரூபாய் நாணயம் ஒன்னும், ஸ்ரீவரதராஜப்பெருமாளின் சிலபடங்களும், நவதிருப்பதிகள் ஸ்டிக்கர்ஸ் பிரசாதமாத் தந்தார். எதுக்கு இந்தக் காசு?இங்கிட்டு இருந்து அங்கிட்டுப்போறது எப்படி அங்கிட்டு இருந்து இங்கிட்டு வருது? பொதுவா நாம்தானே கோயிலுக்குக் காசு போடுவோமுன்னு குழப்பம்.
இந்தக் காசைப் பத்திரமா வீட்டுலே வச்சுக்கிட்டா ரொம்ப நல்லதுன்னார். ஏனாம்? இங்கே எம் பெருமாள் நான்கு கைகளில் பின்னால் இருக்கும் ரெண்டு கைகளில் வழக்கமான சங்கும் சக்கரமும், மற்ற இரண்டு கைகளில் வலது கையில் அபயஹஸ்தம், இடது கையில் கதாயுதமாவும் இருக்கார். இந்த வலது உள்ளங் கையில் தனரேகையுடன் காட்சி தர்றார். அந்தக் கையில் காசு வச்சு எடுத்துக்கிட்டுப்போய் வீட்டுலே வச்சுக்கிட்டால் செல்வம் குறையாமல் இருக்குமுன்னு மக்கள் நம்பிக்கை (எப்படியோ ஏற்பட்டுப்போச்சுன்னு வையுங்க)

தலவரலாறு

இதெல்லாமொன்னும் தெரிஞ்சுக்காம 'தேமே' ன்னு (தெய்வமேன்னு சொல்வதன் சுருக்) போனதால் பட்டரே நமக்கு 'நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்'ன்னு கொடுத்துருக்கார். இந்தக் கோயில் சுக்கிரஸ்தலமாம். பிரகாரம் சுற்றலாமுன்னு படி இறங்குனதும், மடப்பள்ளியில் இருந்து, கையில் பாத்திரத்துடன் வந்தவர் நம் கைகளில் ததியோன்னம் வைத்தார். நல்ல இதமான சூட்டில் இருந்துச்சு, வழக்கமா ஆயிரம் யோசனை செய்யும் நான் என்னை அறியாமலேயே வாயில் போட்டுக்கிட்டேன். கோபால், 'இது என்ன விபரீதம்?' என்றதுபோல் முழிச்சாரா..அப்பத்தான் 'அடக்கடவுளே...என்ன காரியம் செய்துவிட்டேன்'னு விளங்குது. 'க்ருஷ்ணார்ப்பணம்'னு சொன்னேன்.

முள்காடாய் இருந்த இடமாம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா நல்லா ஆகி வருது. அனுமன் சந்நிதியில் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர். சிகப்பு மூக்கோடு இருக்கார். செந்தூரமோ? வரப்ரஸாதியாம். மனசுக்கு ரொம்பவே நிறைவான தரிசனம் இன்றைக்கு.

காஞ்சிபுரம் வரதனுக்கு வேண்டுனதை இங்கே கொடுக்கலாமாம். குன்றின்மேல் தென் திருப்பதின்னா, இங்கே இது தென் காஞ்சி.

நல்லா பிராஞ்ச் ஆஃபீஸ் வச்சுருக்காருப்பா சாமி!!!!

தொடரும்.........:-)

Tuesday, April 28, 2009

நவமுன்னு ஆரம்பிச்சது தசத் திருப்பதிகளா ஆயிருச்சே.....(2009 பயணம் : பகுதி 17)

நவமுன்னு நான் நினைச்சதை இப்படித் தசமாக 'அவன்' முடிச்சுவைப்பான்னு நான் கண்டேனா என்ன? மணிவேற நாலாகப்போகுது. இன்னும் நாலு இடம் போகணும். திருப்புளியங்குடி அடுத்த இடம். ஸ்ரீ பூமி பாலகர் என்ற காயாசினவேந்தன். ரொம்பவே ஹாயாப் படுத்திருக்கார். நாபியிலிருந்து தாமரைத் தண்டு கிளம்பிப் பூத்துருக்கு. அதுலே ப்ரம்மா 'ஜம்'னு உக்கார்ந்துருக்கார். அருமையான தரிசனம். உள்பிரகாரம் சுத்தி வரும்போது அங்கே இருந்த ஒரு சாளரம் வழியாப் பார்க்கணுமாம். பார்த்தேன். ஹைய்யோ...... பெருமாளின் பாதங்கள். 'சிக்'கெனப் பிடிக்கணும் போல இருந்துச்சு. புதன் ஸ்தலம்.
வழியில் கண்டப் பச்சைவயலில் வெள்ளைப்பறவைகள்

எவ்வளவு அருமையாக இருக்கு பாருங்களேன், இந்த வழியில் பார்த்த வீடு


கிளம்பித் தொலைவிலி மங்கலம் வந்தோம். ரெட்டைத் திருப்பதிகளாம்.. ஊர்ன்னு ஒன்னும் இல்லை இங்கே. முதலில் இருப்பது ராகுவுக்குத்தான். அங்கே இருந்து ஒரு ஒரு கிலோ மீட்டர் போனால் கேதுவுக்கான கோவில். திரும்ப இதே பாதையில் தானே வரணும். முதலில் கேதுவுக்கே போனோம். இங்கு வரும்பாதை கோயிலோடு முடிஞ்சு போகுது. தேவர் பிரான் என்ற ஸ்ரீநிவாசன், நின்றே அருள்பாலிக்கிறார். கோவில் என்னமோ ரொம்பச் சின்னதுதான். முன் மண்டபத்தைத் தாண்டினால் சாமியைப் பார்த்துறலாம். . சுத்திவர விளை நிலங்கள்தான். ஆடுமாடு வந்து சல்லியம் செய்யாமல் இருக்க நல்லதா ஒரு கேட் போட்டு வச்சுருக்காங்க. ஆறரை வரை சந்நிதி திறப்புன்னு சுவரில் இருக்கு. ஆனால் அஞ்சரைக்கே நடை சாத்திடுறாங்க. நேரம் மாத்துனதை எழுத விட்டுப்போச்சோ என்னவோ!
இன்னிக்குக் காலையில், முதல் கோவில் பார்த்ததிலே இருந்து ஒரு பஸ் நிறைய பெங்களூருவில் இருந்து வந்திருக்கும் பயணிகள் நம்ம கூடவே அங்கங்கே தொடர்ந்துக்கிட்டு இருந்தாங்க. பொதுவா ஒருத்தரை ரெண்டு இடத்துலே பார்த்துட்டோமுன்னாவே, தெரிஞ்சவுங்கன்னு ஒரு சிநேகபாவம் வந்துருதுல்லே. அவுங்க பஸ் இங்கே நின்னுக்கிட்டு இருந்துச்சு. 'என்ன திடீர்னு மத்தியானம் உங்களைக் காணோமு'ன்னு ஒருத்தர் விசாரிச்சார். திருச்செந்தூர் போயிட்டோமுன்னு சொன்னோம். 'அடடா..... மிஸ் செஞ்சுட்டோமே'ன்னு அவருக்கு வருத்தம். அவுங்க டூர் ப்ரோக்ராமில் இல்லை போல (-:
இதுவும் போகும் வழியில் பார்த்த கோயில்தான். கேட் அடைச்சுருந்துச்சு.

ராகு ஸ்தலத்துக்கு வந்தோம். வெளியே மரத்தடி மேடையில் சின்ன அளவில் நாகர்களா இருக்காங்க. கூடவே சில சனி வாகனங்களும். கோணல் மாணலா சிலர் இழுத்து வச்சுருந்த நாகர்களைச் சரி பண்ணிவச்சேன். அப்போ ரெண்டு பைரவர்களும் வந்து நின்னாங்க. (இதெல்லாம் மதியம் திருச்செந்தூர் போகுமுன் வந்தமே, அப்ப)

அரவிந்த லோசனர். செந்தாமரைக் கண்ணன். அடடா..... பேரே எப்படிப் பிடுங்கித் தின்னுது பாருங்க. கோலமோ ஒரே 'இருப்பு'! தாயாரோ கருத்தடங்கண்ணி நாச்சியார். அழகான சின்னக் கோவில். தாமிரபரணியின் வாய்க்கால் ஒன்னு கோயிலுக்குப் பின்னம்பக்கம் ஓடுது.
இன்றைக்கான கடைசியாக் குளந்தையைப் பார்க்கிறதுதான் பாக்கி. பெருங்குளம் என்ற சிற்றூர். 'திருக்குளந்தை'க்கு வந்து சேர்ந்தோம். இன்னும் நடை திறக்கலை. வெளிப்புறம் விஸ்தாரமா இருந்த மண்டபத்தில் நம்ம 'பஸ் நண்பர்கள் 'கூடி இருந்தாங்க. நாமும் ஜோதியில் கலந்தோம். நெருக்கமாத் தொடுத்த மல்லிகைச் சரம் கொண்டுவந்து வித்தாங்க ஒரு பூக்காரம்மா. எட்டு ரூபாய் ஒரு முழம். இந்தியப் பயணத்தில் மட்டும்தானே பூச் சூட்டிக்க முடியும்? சான்ஸ் கிடைச்சால் விடலாமா? பெங்களூரு மக்களுக்கு இது ரொம்ப விலை அதிகமுன்னு ஒரு தோணல்.

நடுவில் இருந்த குட்டி மண்டபம் 'கஜ' பீடமாக இருந்துச்சு. அதுலே ஏறி உட்காந்து மணிக்கதவம் திறக்கக் காத்திருந்தோம். திருப்பதி பெருமாளைப்போலவே, ஸ்ரீநிவாசன் மூலவர். நின்ற திருக்கோலம். மார்பில் பச்சை மாமணி புரள சேவை சாதிக்கிறார். தாயார், சாக்ஷாத் நம்ம அலர்மேல் மங்கையேதான். உற்சவர்தான் இங்கே மாயக்கூத்தபிரான். ரொம்பவே அழகான விக்கிரகம்.

இங்கே அதிகாலை'' விஸ்வரூப தரிசனம் ஏழரைக்குத்தான். திருப்பதியில் என்னடான்னாப் பெருமாளைத் தூங்கவிடறதே இல்லை. நடுராத்திரிக்கே ரெண்டரைக்கு எழுப்பி விட்டுடறாங்க. நிம்மதியா ஒரு நாள் அவராலே இருக்கமுடியுதா? பாவம்.
பெருமாள் கோவில் பிரகாரங்களைச் சுற்றிவரும்போது கூண்டுக்குள் ஆழ்வார்களையும் பார்த்து சேவிச்சுக்குவோமில்லையா. இன்னிக்குக் காலையில் சுத்தும்போது பேச்சுவாக்கில் கோபாலுக்கு ஆழ்வார்களைப்பற்றிச் சொல்லி பனிரெண்டு பேர் இருப்பாங்கன்னேன். சொல்லிட்டு நானே எண்ணிப் பார்க்கிறேன், திக்குன்னு ஆகிருச்சு. பதினோரு பேர்தான் இருக்காங்க. எதையெடுத்தாலும் 'எண்ணிப் பார்க்கும் குணம்' இருக்கேன்னு இவர் சிரிக்கிறார். யார் இதுலே மிஸ்ஸிங்ன்னு கவனமாப் பார்த்தால்...... அது நம்ம ஆண்டாள்!

அதுக்கப்புறம் ஒவ்வொரு கோயிலிலும் கவனமா எண்ணிக்கிட்டே வந்தேன். எல்லாம் அந்த பதினொருவர். ஆழ்வார்களில் நம்ம ஆண்டாள் மட்டும்தான் பொண்ணு. என்னதான் ஆழ்வாரா இருந்தாலும் ஆண்கள் மத்தியில் தனியொருவளாய் நிற்க, 'அந்தக் காலத்து'ப் பொண்ணுக்குக் கொஞ்சம் கூச்சமாய் இருக்காதோ? அதான் தனிச் சந்நிதியில் ஆண்டாளம்மா இருக்காங்கன்னு சொல்லிவச்சேன். (சிவன்கோவிலில் இருக்கும் அறுபத்து மூவரில் பெண்கள் மூவர் இருப்பதால் அங்கே கூட்டத்தோடு கூட்டமா இருக்காங்க. த்ரீ ஈஸ் அ கம்பெனி. மேலும் தப்புத்தண்டா ஏதும் நடந்தாத் தட்டிக்கேக்க அந்த 'நாலு பேர்' இருப்பதால் மத்த எல்லாரும் இன்னும் பயபக்தியுடன் இருந்துருப்பாங்களே!)
'ராசி' கழுதை:-) ( போன பதிவுக்குப் போட்டுருக்கணும்)

இதுக்கு எதுக்கு அந்தக் காலம்...நான் படித்த(!) காலத்தில் எந்த ஊர்ப் பள்ளிக்கூடமுன்னாலும் (எல்லாம் போர்டு ஸ்கூல்தான்)
'கேர்ள்ஸ் டெஸ்க்' தனியா இருக்கும். அதுவும் 'ஏ' செக்ஷனில் மட்டுமே கேர்ள்ஸ். 'பி' செக்ஷன்னு சொன்னாலே பெரிய பையனுங்களாவும் படிப்பின் தரத்தில் கொஞ்சம் தாழ்ந்தும்தான் இருப்பாங்க. ஆறாவது ஏழாவதுக்குப் பிறகு பாய்ஸோடச் 'சும்மா'ப் பேசறதெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது.


பாவம் கோபால், நான் என்ன சொன்னாலும் (குறிப்பா இந்த கோவில் விஷயங்களில்) அப்படியே(வம்பு வேணாமுன்னு) நம்பிருவார்:-)))))

திரும்பித் திருநெல்வேலிக்கு வந்துக்கிட்டு இருக்கோம். பாலம் கடக்கும்போது, 'சுலோச்சன முதலியார் பாலமு'ன்னு முந்தி எப்பவோ கதைகளில் படிச்சது நினைவுக்கு வந்துச்சு. "அது எங்கே இருக்கு'ன்னு கேட்டதும், முதலில் கொஞ்சம் திகைச்ச உலகநாதன், 'இந்தப் பாலம்தாங்க, அது. இப்பப் பெயர் மாறிப்போச்சு. பழைய ஆளுங்களுக்குத்தான் தெரியும் இந்தப் பெயர்'ன்னு சொன்னார். பாலம் கடந்து ஊருக்குள்ளெ வரும்போது 'திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா'ன்னு ஒரு நியான் லைட் ஸைனோட ஒரு கடை. அட! இதை எப்படி மறந்தேன்?

உலகநாதன் சொல்றார் இது போலின்னு!!!! அசல் கடை நெல்லையப்பர் கோவில் பக்கத்துலே. இப்பவே போய் வாங்கிறலாம்னு அசலுக்குக் கொண்டு போனார். என்ன தைரியமா இப்படி போலிப்பெயர் வச்சு அதே ஊருலே வியாபாரம் செய்யறாங்களோ? அருவாள் பயமே இல்லையா? திருநெல்வேலின்னதும் ஆளாளுக்கு முதுகுக்குப் பின்னால் அருவாளோடு அலையுவாங்களோன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஊஹூம்..... எல்லாம் இந்தப் படங்கள் படுத்தும் பாடு. அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க இதுவரை நான் பார்த்த எல்லோரும்.
அசலும் ...மற்றதும் . வலப்பக்கத்தில் தெரிவது அல்வா இல்லை:-)))
இதைப் பத்தி நம்ம உலகநாதன்கிட்டே விசாரிச்சால் சிரிக்கிறார். சில குறிப்பிட்ட இனத்துலேதான் இன்னும் கொஞ்சம் இப்படி இருக்கு. அதுவும் சில கிராமப்புறங்களில். இப்போ அவனவனுக்கு வேலை வெட்டின்னு பொழப்பைப் பார்க்கறதுக்கே நேரம் சரியாப்போகுதுன்னார். கல்வியறிவு கூடக்கூட மக்கள் முன்னேற்றப் பாதையில் போறாங்கதானே?

தரமான கல்வி நிறுவனங்கள் எக்கச்சக்கமா இருக்கும் தேசம் அது. இங்கே நியூசியில் என் டாக்குட்டர் தோழி ஒருத்தர் அங்கேதான் படிச்சாங்க. நம்ம கோபால்கூட பாளையங்கோட்டையில்தான் பியூசி படிச்சாராம்.

தொடரும்.......:-)

Sunday, April 26, 2009

உன்னை விடமாட்டேன்னு குறுக்காலே புகுந்து இப்படி இழுத்தா.......(2009 பயணம் : பகுதி 16)

'திருச்செந்தூர் கோவிலைப் பகலில் மூடுறதே இல்லை. பேசாம அங்கே போய்ச் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டுக் கோவிலையும் தரிசிச்சுட்டு இங்கே வந்துறலாம்'. ஆஹா....ஒரே கல்லில் ரெண்டு மாம்பழம்(எனக்குக் காய் பிடிக்காது)
முக்கால்மணி நேரப் பயணம்தான். நிறைய பக்தர்கள் வருகையுடன் ஊரே ஜேஜேன்னு இருக்கு. இன்னிக்கு மகா சிவராத்திரிப் பண்டிகை. காவேரி உணவகத்தில் சாப்பிடலாமுன்னு எங்களை அங்கே இறக்கிவிட்டுட்டு வண்டியை நிறுத்திட்டுவரேன்னு போயிட்டார் உலகநாதன். இறக்கிவிட்ட இடத்தில் கண்ணுக்கு நேரா ஒரு தேநீர்க்கடை. ஹைய்யோ....
கண்ணைப் பறிக்குது வடைகள் மசாலும் மெதுவுமா. சில்லுக்கருப்பட்டி ஸ்டால் வா...அருகில் வா ன்னு மயக்குது. 'சொக்கா...இது எனக்கில்லை'ன்னு காவேரியில் எட்டிப்பார்த்தால் கால்வைக்க இடம் இல்லை. இதுக்கு எதிர்வரிசையில் அசோக் ன்னு ஒரு உணவகம். (வித்தியாசமான ஸ்பெல்லிங் பெயர்ப்பலகையில்)அங்கே போய்ப் பார்த்தோம். அங்கேயும் இடமில்லை. ஆனால் வெளியே மெனு எழுதிவச்சுருந்தாங்க. ஊஹூம்....ஒன்னும் சுவாரசியப்படலை.
இதுக்குள்ளே உலகநாதன் வந்துட்டார். காவேரியில் அவர் முதலில் நுழைஞ்சார். பெரிய டைனிங் ஹாலுக்குப் இடது பக்கம் இருக்கும் சின்ன டைனிங் ரூமில் எப்படியோ (?) இடம் கிடைச்சிருச்சு. (இதுக்கெல்லாம் கூட ஒரு டெக்னிக் இருக்குபோல.) மற்ற இருக்கைகளில் மக்கள் குடும்பம்குடும்பமா குழந்தையும் குட்டிகளுமா மொட்டைத் தலையோடும், கழுத்து 'நிறைய' ஜொலிக்கும் தங்க ஆபரணங்களோடும், பட்டுப்புடவைகளோடும் சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க. 'தங்கம் விலை கூடிப்போச்சு. தங்கநகை அணிஞ்சால் ஆபத்து, நகைத் திருடர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க' போன்ற தினமலர்/தினத்தந்தி செய்திகள் எல்லாம் ஒரு கணம் மனசுலே வந்து போச்சு. நமக்குத்தான் ஊர் உலகத்துலே இல்லாத பயம் இருக்கு!
தென்னிந்திய சைவ உணவு. பரிமாறுனவர் என்னை ஒரு பரிதாப 'லுக்' விட்டுட்டு, 'ஒன்னுமே சாப்புடலையேம்மா'ன்னார். 'ஒரு ஸ்பூன் நெய் மட்டும் தாங்க'ன்னேன். பில் எழுதும்போது, 'இது என்னம்மா... குழந்தைச் சாப்பாடு? அரை சாப்பாடுன்னு எழுதறேன். ரெண்டரை'ன்னார்.

முருகனைக் காணப்போனோம். முருகனடியார்கள் நம்ம ஜீரா, உண்மைத்தமிழன், விஎஸ்கே எல்லாம் என்கூடவே வர்றாங்க. கோவிலுக்குள் நுழைஞ்சதும், ஒரு குருக்கள் 'மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து அர்ச்சனை பண்ணிறலாம் இந்தப் பக்கம் வாங்க'ன்னு கூப்ட்டுக்கிட்டு போனார். ' நூத்தியோரு ரூபாயை இங்கே கட்டிச் சீட்டு வாங்கிருங்க'ன்னார். வாய்பேசாமல் சொன்னதைச் செஞ்சோம். கையில் ஒரு அர்ச்சனைத் தட்டுடன் பெயர்களைக்கேட்டுச் சங்கல்ப்பம் ஆச்சு. குடும்பத்துலே கோகியையும் விடலை நான்.
அப்போ அங்கே வந்த இன்னொரு குருக்களின் கையில் எங்களை ஒப்படைச்சு, என் அண்ணாதான். கூடவே போங்கன்னுட்டார். அண்ணன் எங்களை உள்ளே கூட்டிட்டுப்போனார். சந்தனக்காப்பில் மூலவர் மின்னறார். அவருக்கு முன்னே ஒரு பத்தடி இடம் இருக்கு. அதை ஒட்டி இந்தப் பக்கம் 'ப' வைக் கவுத்துப்போட்டாப்போல கம்பித் தடுப்பு. அதுக்குள்ளே வரிசைவரிசையா மக்கள்ஸ் உக்கார்ந்துருக்காங்க.

'ப'முழுசும் நிரம்பியாச்சு. அண்ணன் எங்களைக் கூட்டிட்டுப்போய் கம்பிக்கு 'அந்தப் பக்கம்' உக்காரவச்சுட்டார். மக்களுக்கு எங்கள் முதுகைக் காட்டறதான்னு நடுவில் இடம்விட்டு நானும் கோபாலும் ரெண்டு பக்கத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்தமாதிரி திரும்பி உக்காந்தோம். பின்னால் 'ப'வில் இருக்கறவங்களுக்கும் மறைக்காமல் இருக்குமே. ஹைய்யோ..... சாமிக்கும் எங்களுக்கும் எட்டே அடி தான் இருக்கு. கீழே மண்தரை, நறநறன்னு..... ஹூ கேர்ஸ்? முருகனே, எட்டும் இடத்தில். வேறென்ன வேணும்?

அர்ச்சனைகள், தீபாராதனைகள் எல்லாம் ஆச்சு. பதினைஞ்சு நிமிஷம் போனதே தெரியலை. வெளியே வந்ததும் 'எந்த அண்ணன் தம்பி நமக்கு உதவுனாங்க? முகம் ஞாபகம் இல்லையே....' எனக்குத் தெரிஞ்ச அண்ணன் தம்பி புள்ளையாரும் முருகனும்தான். அங்கே இருந்த சின்ன மண்டபத்தின் படியில் உக்கார்ந்தோம். அண்ணனோ தம்பியோ வந்து நம்மைக் கண்டுபிடிக்கட்டும்.
தம்பி எங்கிருந்தோ 'தோன்றினார்.' விபூதிப் பொட்டலம், சந்தனம் குங்குமம், தேங்காய் பழம் இருந்த பையை எங்களிடம் கொடுத்துட்டு, ஒரு சின்ன மாலையை கோபாலின் கழுத்தில் போட்டு ஆசீர்வதித்தார். கோயிலைச்சுத்தி ரொம்ப நீளத்துக்கு மேற்கூரை போட்டு நல்ல குளுமையா இருந்துச்சு. அப்படியே நடந்து கடல் பக்கம் போனோம். பாதிப்பேர் தண்ணியிலும் மீதிப்பேர் தரையிலுமாய் நல்ல கூட்டம்தான்.


இந்தக் கூட்டத்துக்கிடையிலும் எங்கிருந்தோ கொண்டுவந்த எலும்புடன் 2 ஒரு பைரவர். கார் பார்க்கில் நின்னு பார்க்கும்போது....அடிக்கும் மொட்டைவெய்யிலில் ராஜகோபுரம் வெள்ளையாய் மின்னுது.
கருடன்கள் சிலர் வானத்தில். வள்ளிக்குகைக்குப் போகும்வழின்னு ஒரு தகவல் பலகை. இதுமட்டும் என்னவோ மலையாளத்தில் எழுதிவச்சுருக்கு.
இங்கே வரணுமுன்னு நம்ம பயணத்திட்டத்தில் இல்லை. தானாய் அமைஞ்சது. மேஜிக் ஷோ போல எல்லாம் சட்னு ஒரு மணி நேரத்துக்குள்ளே..... சரியாச் சொன்னால் 54 நிமிஷம்! முருகா முருகா.... விடமாட்டேன்றயே....இப்படிக் கூப்ட்டுக்கூப்ட்டு தரிசனம் தர்றயேப்பா.....நீ நல்லா இரு:-)
விட்டதைப்பிடிக்கணுமேன்னு தூத்துக்குடி வட்டத்தை விட்டு திருநெல்வேலி வட்டத்துக்கு வந்தோம். வழியில் ஒரு இடத்தில் (வரதராஜபுரம் கிராம ஊராட்சி?) கிராமதேவதைகள் கோயில் போல ஒன்னு இருந்துச்சு. சிலைகள் ஏதுமில்லை.
அப்பன் கோவில் செல்லும் வழின்னு ஒரு போர்டு. கிராமங்களைக் கடக்கும்போது ஆலமரத்தடியைப் பார்த்தாப்போதும், நாட்டாமை பஞ்சாயத்து செய்யறாரான்னு கண்ணு தேடும். தமிழ்ச் சினிமா அதிகம் பார்க்கும் எஃபெக்ட்டு.

தொடரும்.....:-)

Thursday, April 23, 2009

திருட்டுப்பயலோடு கூட்டா? வெளங்கிரும்.....(2009 பயணம் : பகுதி 15)

யாராவது கூட்டு வச்சுக்கலாமுன்னா உடனே கண்ணை மூடிக்கிட்டுக் கூடவே போயிடறதா? ஆள் தராதரம் பார்க்கவேணாம்? கள்ளனோடு கூட்டு என்ன வேண்டிக்கிடக்கு? அவன் கூப்ட்டானாம் இவர் ஒரு கேள்வியும் கேக்காமச் சேர்ந்துக்கிட்டாராம். நல்ல கதை....போங்க.

கள்ளனைப் பார்க்கிறோம். உள்ளம்கவர் கள்வன்தான். கள்ளர்பிரான் ஆஃப் ஸ்ரீவைகுண்டம். இவருக்குப் பால்பாண்டி(யன்) என்ற பெயரும் இருக்காம். கோயில் கதை(ஸ்தலபுராணம்) என்ன சொல்லுதுன்னா.... காலதூஷகன் என்ற பெயரில் திருட்டுத்தொழில்(??!!) செஞ்சுக்கிட்டு இருந்த திருடன், இவரையும் பிஸினெஸில் ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டின்னு கூட்டுச் சேர்த்துக்கிட்டான். ஒருமுறை அரண்மனையில் தொழிலில்(!) ஈடுபட்டிருக்கும்போது மாட்டிக்கிட்டான். தண்டனைக்காக விசாரிச்சப்பப், 'பார்ட்னர்' ஓடி ஒளிஞ்சுக்காம 'அவனில்' புகுந்து அரசருக்கு ஞானோபதேசம் செஞ்சுருக்கார். திருட்டுப்பயல் வாயிலே இவ்வளோ நல்ல விஷயங்கள் எப்படி வருதுன்னு ராஜாவுக்குத் திகைப்பு. கடைசியில் பெருமாள் காட்சியளித்து விளக்கினாராம். தொழில்தர்மம்!

நின்றபடி சேவை சாதிக்கிறார். எல்லாம் நல்லபடியே நடக்குது. நல்ல தரிசனம். நவகிரக லிஸ்ட்டில் இது சூரிய ஸ்தலம்.
இந்த நவதிருப்பதிகளைச் சுற்றிவந்தபோது முக்கியமா என் கண்ணில் பட்டது
என்னன்னா.....அர்ச்சனைப்பொருட்கள், வாஸ்து இன்னபிற விற்கும் வழக்கமான கோயில் வாசல் கடைகள், பிச்சைக்காரர்கள் அணிவகுப்பு, எங்கே வண்டியை நிறுத்தினாலும் ஓடிவந்து பார்க்கிங் சார்ஜ் வசூல் செய்யும் ஆட்கள் இப்படி ஒன்றுமே இங்கே இல்லை.

சொல்லிவச்சாப்புலெ எல்லாக் கோயில்களும் படு சுத்தமாவேற இருக்கு. பட்டரோடு பேச்சுக் கொடுத்ததில் தெரியவந்தது ஒரு அற்புதமான விஷயம்.
நம்ம டி.வி.எஸ் நிறுவனத்தார் இதை மேற்பார்வை செய்கிறார்களாம். அரசு கொடுக்கும் சம்பளம் ஆளுக்கு இருநூறு. ஆனால் டிவிஎஸ்காரர்கள் ரெண்டாயிரம் ஒரு ஆளுக்கென்று ஒன்பது கோயில்களுக்கும் தர்றாங்களாம். மொத்தப் ஊழியர்கள் இருநூறு பேர். இந்தக் கணக்கில் மாசம் நாலு லட்சம் செலவு. காசு காசுன்னு அலையும் பட்டர்கள் யாரையுமே இங்கே காணோம்!!!!

பேசாமத் தமிழ்நாட்டுக் கோயில்கள் பொறுப்புகளை இப்படி கம்பெனிகள் ஏற்று நடத்துனா அருமையா இருக்கும் இல்லே? கும்பிடும் இடத்துலே நிம்மதியாவது கிடைக்கும்


ஒரு கோவிலிலே தரிசனம் ஆனதும் 'கீழே விழுந்து ஸேவிச்சுக்கோங்க'ன்னார் ஒரு பட்டர். நமக்குத்தான், 'கோவிலில் தரிசனம் செய்வது எப்படி?'ன்னு முந்தி எப்பவோ படிச்சு, மனசுக்குள்ளே இருந்த குறிப்புகள் எல்லாம் வேண்டாத நேரத்தில் 'டாண்'னு நினைவுக்கு வருமே! கொடிமரத்துக்கு வெளியே இருந்துதானே நமஸ்கரிக்கணுமுன்னு தயங்கி அதைச் சொல்லவும் செஞ்சேன். 'அதெல்லாம் நம்ம கோவிலில் இல்லை. நம்ம பெருமாள் ஒன்னும் சொல்ல மாட்டார். நன்னா விழுந்து ஸேவிங்கோ'ன்னார். ஆஹா.... உடனே சட்னு விழுந்து கும்பிட்டேனா? அப்படியா இருக்கு உடம்பு? விழறதுமாதிரி பாவலா காட்டி அரைஉடம்பைக் குனிக்கவே...... விடிஞ்சுரும்(-:
இது வழியில் பார்த்த இன்னொரு தாமரைக் குளம்

கதைபேசிக்கிட்டு நிக்காம அடுத்த கோவிலுக்கு ஓடுனோம். இன்னிக்கே இந்த ஒன்பது கோவில்களைப் பார்த்துறமுடியுமுன்னு நம்ம உலகநாதன் சொன்னார். எல்லாம் கொஞ்சம் பக்கத்து பக்கத்துலேதான். தாமிரபரணி நதிக்கு ஒரு புறம் ஆறும், மறுபுறம் மூணுமா அமைஞ்சுருக்கு எல்லாமே!
போகும்வழியில் ஒரு பெரிய சாலையில் சேருமிடத்தில் சுவத்தில் இப்படி(யும்) ஒன்னு. பணவீக்கம் பார்த்துருக்கோம். இப்படி 'காலநிலை'யும் வீங்குமா என்ன? கண்ட்ரிடாக்குட்டர்ஸ், தமிழைப் படுத்தும் பாடு!
மீண்டும் தாமிரபரணியைக் கடந்து போகும்போது கண்ணில் பட்டது ஆறு மட்டுமா? நதிக்கரை சுப்ரமணியர் . நதியோரமாக் கோயில் கொண்டிருக்கார். கோவில் படித்துறையில் குளிச்சுத் துவைச்சு ஒரு டோபிகாட் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க.
(இதுதான் குறுக்குத்துறை முருகன் கோவிலோ?)

குறுக்குத்துறையாருக்கும் ஒரு கதை இருக்கு. திருச்செந்தூர் கோவிலுக்காகச் செஞ்ச முருகன் சிலையாம். ஆனால் இவருக்கு இந்த இடம் பிடிச்சுப்போச்சுன்னு இங்கேயே நின்னுட்டார். திருச்செந்தூர் கோவில் முருகன் காணாமல் போயிட்டாராம். என்னடா இது வம்புன்னு புதுசா இன்னொன்னு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்குள்ளே காணாமப்போனவர் திரும்பக் கிடைச்சுட்டார். அப்ப புதியவரை என்ன செய்யறது? ஆத்தோரம் கோயில் கட்டிப் பிரதிஷ்டை ஆச்சு. தினப்படி இங்கே குளிக்கவரும் ஆசாமிகள், குளிச்சு முடிச்சுப்போகும்போதே சாமியைக் கும்பிட்டுக்கலாம். டூ இன் ஒன்:-)

பக்கத்துலே வெறும் ரெண்டரைக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு ஸ்ரீவரகுணமங்கை. கோபுரம் கொள்ளை அழகு. இதைப்போலவே இங்கே இருக்கும் கோயில் குளம் அட்டகாசமா இருக்கு. இந்த ஊரை 'நத்தம்'ன்னு சொல்றாங்க. (மதுரைக்குப் பக்கத்துலேகூட ஒரு நத்தம் இருக்குல்லே?)




மூலவர் விஜயாசனப்பெருமாள். பெயருக்கேத்தபடி ஆசனத்தில் அமர்ந்த திருக்கோலம். சந்திரஸ்தலமுன்னு சொன்னாங்க. அரவிந்தலோசனனைக் காணலாமுன்னு ரெட்டைத் திருப்பதின்னு சொல்லும் தொலைவில்லி மங்கலம் போனோம். கோயில் பூட்டி இருந்துச்சு. இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம். மணியோ இப்ப ஒன்னு. ரெண்டுவரை பசியோடு இங்கே காத்திருக்கவேணாம். போய்ச் சாப்புட்டு வரலாமுன்னு கிளம்பிட்டோம்.

ஆத்துக்கு அந்தப் பக்கம் கோயில் தெரியுது

இந்த நவதிருப்பதிகளில் காலையில் அஞ்சரைக்குக் கோவில் திறக்கும் வழக்கமெல்லாம் இல்லை. ஆஃபீஸ் டைம்( இந்தச் சொல் தோழியின் தனிமடலில் இருந்து) மாதிரி காலை ஏழில் இருந்து பனிரெண்டு, அப்புறம் மாலை அஞ்சு முதல் எட்டுன்னு மூணு கோயில்களும், ஏழரை முதல் பன்னெண்டு. பனிரெண்டரை இப்படி விதவிதமான டைமிங்ஸ் இருக்கு. சில கோயில்களில் லஞ்ச் டைம் பனிரெண்டு முதல் ஒன்னு. மாலை அஞ்சரைக்கே ஆபீஸை.... இல்லையில்லை...கோவிலைப் பூட்டிடறாங்க. கோவில்கள் கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருப்பதும் காரணமா இருக்கலாம்.
நீங்க யாராவது இங்கே போய்வரணுமுன்னா...கோயில் நேரங்களைப் பார்த்துக்கிட்டு அதுக்குச் சரியாத் திட்டம் போட்டுக்குங்க. மேலே படம் உங்களுக்காகவே:-)
உலகநாதன் ஒரு ஐடியாக் கொடுத்தார். மத்த ட்ரைவர்களைப்போல் இல்லாமல் இவர் ஏறக்கொறைய நம்ம வயசுக்காரர். சின்னப்புள்ளைத்தனமா இல்லாமச் சரியாத்தான் சொல்றார். செஞ்சுருவோம்.

தொடரும்........:-))))