Thursday, April 23, 2009

திருட்டுப்பயலோடு கூட்டா? வெளங்கிரும்.....(2009 பயணம் : பகுதி 15)

யாராவது கூட்டு வச்சுக்கலாமுன்னா உடனே கண்ணை மூடிக்கிட்டுக் கூடவே போயிடறதா? ஆள் தராதரம் பார்க்கவேணாம்? கள்ளனோடு கூட்டு என்ன வேண்டிக்கிடக்கு? அவன் கூப்ட்டானாம் இவர் ஒரு கேள்வியும் கேக்காமச் சேர்ந்துக்கிட்டாராம். நல்ல கதை....போங்க.

கள்ளனைப் பார்க்கிறோம். உள்ளம்கவர் கள்வன்தான். கள்ளர்பிரான் ஆஃப் ஸ்ரீவைகுண்டம். இவருக்குப் பால்பாண்டி(யன்) என்ற பெயரும் இருக்காம். கோயில் கதை(ஸ்தலபுராணம்) என்ன சொல்லுதுன்னா.... காலதூஷகன் என்ற பெயரில் திருட்டுத்தொழில்(??!!) செஞ்சுக்கிட்டு இருந்த திருடன், இவரையும் பிஸினெஸில் ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டின்னு கூட்டுச் சேர்த்துக்கிட்டான். ஒருமுறை அரண்மனையில் தொழிலில்(!) ஈடுபட்டிருக்கும்போது மாட்டிக்கிட்டான். தண்டனைக்காக விசாரிச்சப்பப், 'பார்ட்னர்' ஓடி ஒளிஞ்சுக்காம 'அவனில்' புகுந்து அரசருக்கு ஞானோபதேசம் செஞ்சுருக்கார். திருட்டுப்பயல் வாயிலே இவ்வளோ நல்ல விஷயங்கள் எப்படி வருதுன்னு ராஜாவுக்குத் திகைப்பு. கடைசியில் பெருமாள் காட்சியளித்து விளக்கினாராம். தொழில்தர்மம்!

நின்றபடி சேவை சாதிக்கிறார். எல்லாம் நல்லபடியே நடக்குது. நல்ல தரிசனம். நவகிரக லிஸ்ட்டில் இது சூரிய ஸ்தலம்.
இந்த நவதிருப்பதிகளைச் சுற்றிவந்தபோது முக்கியமா என் கண்ணில் பட்டது
என்னன்னா.....அர்ச்சனைப்பொருட்கள், வாஸ்து இன்னபிற விற்கும் வழக்கமான கோயில் வாசல் கடைகள், பிச்சைக்காரர்கள் அணிவகுப்பு, எங்கே வண்டியை நிறுத்தினாலும் ஓடிவந்து பார்க்கிங் சார்ஜ் வசூல் செய்யும் ஆட்கள் இப்படி ஒன்றுமே இங்கே இல்லை.

சொல்லிவச்சாப்புலெ எல்லாக் கோயில்களும் படு சுத்தமாவேற இருக்கு. பட்டரோடு பேச்சுக் கொடுத்ததில் தெரியவந்தது ஒரு அற்புதமான விஷயம்.
நம்ம டி.வி.எஸ் நிறுவனத்தார் இதை மேற்பார்வை செய்கிறார்களாம். அரசு கொடுக்கும் சம்பளம் ஆளுக்கு இருநூறு. ஆனால் டிவிஎஸ்காரர்கள் ரெண்டாயிரம் ஒரு ஆளுக்கென்று ஒன்பது கோயில்களுக்கும் தர்றாங்களாம். மொத்தப் ஊழியர்கள் இருநூறு பேர். இந்தக் கணக்கில் மாசம் நாலு லட்சம் செலவு. காசு காசுன்னு அலையும் பட்டர்கள் யாரையுமே இங்கே காணோம்!!!!

பேசாமத் தமிழ்நாட்டுக் கோயில்கள் பொறுப்புகளை இப்படி கம்பெனிகள் ஏற்று நடத்துனா அருமையா இருக்கும் இல்லே? கும்பிடும் இடத்துலே நிம்மதியாவது கிடைக்கும்


ஒரு கோவிலிலே தரிசனம் ஆனதும் 'கீழே விழுந்து ஸேவிச்சுக்கோங்க'ன்னார் ஒரு பட்டர். நமக்குத்தான், 'கோவிலில் தரிசனம் செய்வது எப்படி?'ன்னு முந்தி எப்பவோ படிச்சு, மனசுக்குள்ளே இருந்த குறிப்புகள் எல்லாம் வேண்டாத நேரத்தில் 'டாண்'னு நினைவுக்கு வருமே! கொடிமரத்துக்கு வெளியே இருந்துதானே நமஸ்கரிக்கணுமுன்னு தயங்கி அதைச் சொல்லவும் செஞ்சேன். 'அதெல்லாம் நம்ம கோவிலில் இல்லை. நம்ம பெருமாள் ஒன்னும் சொல்ல மாட்டார். நன்னா விழுந்து ஸேவிங்கோ'ன்னார். ஆஹா.... உடனே சட்னு விழுந்து கும்பிட்டேனா? அப்படியா இருக்கு உடம்பு? விழறதுமாதிரி பாவலா காட்டி அரைஉடம்பைக் குனிக்கவே...... விடிஞ்சுரும்(-:
இது வழியில் பார்த்த இன்னொரு தாமரைக் குளம்

கதைபேசிக்கிட்டு நிக்காம அடுத்த கோவிலுக்கு ஓடுனோம். இன்னிக்கே இந்த ஒன்பது கோவில்களைப் பார்த்துறமுடியுமுன்னு நம்ம உலகநாதன் சொன்னார். எல்லாம் கொஞ்சம் பக்கத்து பக்கத்துலேதான். தாமிரபரணி நதிக்கு ஒரு புறம் ஆறும், மறுபுறம் மூணுமா அமைஞ்சுருக்கு எல்லாமே!
போகும்வழியில் ஒரு பெரிய சாலையில் சேருமிடத்தில் சுவத்தில் இப்படி(யும்) ஒன்னு. பணவீக்கம் பார்த்துருக்கோம். இப்படி 'காலநிலை'யும் வீங்குமா என்ன? கண்ட்ரிடாக்குட்டர்ஸ், தமிழைப் படுத்தும் பாடு!
மீண்டும் தாமிரபரணியைக் கடந்து போகும்போது கண்ணில் பட்டது ஆறு மட்டுமா? நதிக்கரை சுப்ரமணியர் . நதியோரமாக் கோயில் கொண்டிருக்கார். கோவில் படித்துறையில் குளிச்சுத் துவைச்சு ஒரு டோபிகாட் மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க.
(இதுதான் குறுக்குத்துறை முருகன் கோவிலோ?)

குறுக்குத்துறையாருக்கும் ஒரு கதை இருக்கு. திருச்செந்தூர் கோவிலுக்காகச் செஞ்ச முருகன் சிலையாம். ஆனால் இவருக்கு இந்த இடம் பிடிச்சுப்போச்சுன்னு இங்கேயே நின்னுட்டார். திருச்செந்தூர் கோவில் முருகன் காணாமல் போயிட்டாராம். என்னடா இது வம்புன்னு புதுசா இன்னொன்னு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்குள்ளே காணாமப்போனவர் திரும்பக் கிடைச்சுட்டார். அப்ப புதியவரை என்ன செய்யறது? ஆத்தோரம் கோயில் கட்டிப் பிரதிஷ்டை ஆச்சு. தினப்படி இங்கே குளிக்கவரும் ஆசாமிகள், குளிச்சு முடிச்சுப்போகும்போதே சாமியைக் கும்பிட்டுக்கலாம். டூ இன் ஒன்:-)

பக்கத்துலே வெறும் ரெண்டரைக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு ஸ்ரீவரகுணமங்கை. கோபுரம் கொள்ளை அழகு. இதைப்போலவே இங்கே இருக்கும் கோயில் குளம் அட்டகாசமா இருக்கு. இந்த ஊரை 'நத்தம்'ன்னு சொல்றாங்க. (மதுரைக்குப் பக்கத்துலேகூட ஒரு நத்தம் இருக்குல்லே?)




மூலவர் விஜயாசனப்பெருமாள். பெயருக்கேத்தபடி ஆசனத்தில் அமர்ந்த திருக்கோலம். சந்திரஸ்தலமுன்னு சொன்னாங்க. அரவிந்தலோசனனைக் காணலாமுன்னு ரெட்டைத் திருப்பதின்னு சொல்லும் தொலைவில்லி மங்கலம் போனோம். கோயில் பூட்டி இருந்துச்சு. இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம். மணியோ இப்ப ஒன்னு. ரெண்டுவரை பசியோடு இங்கே காத்திருக்கவேணாம். போய்ச் சாப்புட்டு வரலாமுன்னு கிளம்பிட்டோம்.

ஆத்துக்கு அந்தப் பக்கம் கோயில் தெரியுது

இந்த நவதிருப்பதிகளில் காலையில் அஞ்சரைக்குக் கோவில் திறக்கும் வழக்கமெல்லாம் இல்லை. ஆஃபீஸ் டைம்( இந்தச் சொல் தோழியின் தனிமடலில் இருந்து) மாதிரி காலை ஏழில் இருந்து பனிரெண்டு, அப்புறம் மாலை அஞ்சு முதல் எட்டுன்னு மூணு கோயில்களும், ஏழரை முதல் பன்னெண்டு. பனிரெண்டரை இப்படி விதவிதமான டைமிங்ஸ் இருக்கு. சில கோயில்களில் லஞ்ச் டைம் பனிரெண்டு முதல் ஒன்னு. மாலை அஞ்சரைக்கே ஆபீஸை.... இல்லையில்லை...கோவிலைப் பூட்டிடறாங்க. கோவில்கள் கொஞ்சம் ஒதுக்குப்புறமா இருப்பதும் காரணமா இருக்கலாம்.
நீங்க யாராவது இங்கே போய்வரணுமுன்னா...கோயில் நேரங்களைப் பார்த்துக்கிட்டு அதுக்குச் சரியாத் திட்டம் போட்டுக்குங்க. மேலே படம் உங்களுக்காகவே:-)
உலகநாதன் ஒரு ஐடியாக் கொடுத்தார். மத்த ட்ரைவர்களைப்போல் இல்லாமல் இவர் ஏறக்கொறைய நம்ம வயசுக்காரர். சின்னப்புள்ளைத்தனமா இல்லாமச் சரியாத்தான் சொல்றார். செஞ்சுருவோம்.

தொடரும்........:-))))

39 comments:

said...

டீச்சர் குறுக்குத்துறை முருகன் கோயில் திருநெல்வேலில இருக்கு. ஜங்சனுக்குப் பக்கத்துல பாலத்துக்குப் பக்கத்துல இருக்கு. அதுதான் நீங்க சொல்ற திருச்செந்தூர்....கோயில்.

சின்னக் கோயில்தான். ஆனா எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிக்கும். நெறைய வாட்டிப் போயிருக்கோம்.

நவதிருப்பதிக்கெல்லாம் போனதில்லை. ஆனா அறுபடை வீடுகளுக்கும் போயிருக்கேன். பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் சரவணபவாநந்த ஞானகுருவே!

said...

// இப்படி 'காலநிலை'யும் வீங்குமா என்ன? கண்ட்ரிடாக்குட்டர்ஸ், தமிழைப் படுத்தும் பாடு! //

அதெப்படி அங்கிங்கெனாதபடி தமிழகம் முழுக்க வியாபித்திருக்கு?

அளவு, நிறம் மற்றும் வார்த்தைகள்

said...

அன்பின் துளசி

படங்கள் அருமை - வர்ணனிகள் அருமை - புத்தக்மாகப் போட்டு விடலாமா பதிவுகளை

சூப்பராக் கலக்கறீங்க - சாஷ்டாங்க நமஸ்காரம் - பெருமாளே சொன்னதுக்கப்புறம் ...... நினைத்துப் பார்த்தேன்

said...

ராகவன், முருகர்க்காக வந்துட்டாரு பாத்தீங்களா.:)
துளசி ,
க்காந்திமதிஅம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் இதெல்லாம் நெல்வேலிக்கே சொந்தம். முருகன் அப்பப்போ தாமிரபரணியில் முங்கி எழற மாதிரி வெள்ளமெல்லாம் வரும்னு கேள்வி. யாரு பார்த்திருக்கா:(
அந்த அரவிந்த லோசனன்தான் நான் சொன்னேன் இல்லையா,எங்க சின்ன மாமி அவங்க கனவுல வந்து பாடச் சொன்னாராம்.

said...

வாங்க ராகவன்.

பதிவு எழுதும்போது உங்களை அடிக்கடி நினைச்சுக்கிட்டேன்.

நானும் அறுபடைவீடுகளுக்கு பலவருசங்களுக்கு முன்னே போய்வந்தேன்.

கதிர்காமம்கூட அறுபடைவீட்டில் ஒன்னுதானா?

said...

வாங்க நான் நரேந்திரன்.


பல இடங்களில் வெவ்வேறு வகைகளில் இப்படி ஒரு தமிழ் விளையாட்டு இருக்கு:-)

said...

வாங்க சீனா.

புத்தகமா?

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி........

said...

வாங்க வல்லி.

ராகவனை நினைச்சுக்கிட்டுத்தான் பதிவே எழுதணும்:-))))

ஆமாம். என்ன பாட்டு பாடினாங்க சின்ன மாமி?

said...

// வல்லிசிம்ஹன் said...

ராகவன், முருகர்க்காக வந்துட்டாரு பாத்தீங்களா.:) //

வல்லீம்மா... நல்லாச்சொன்னீங்களே... முருகனுக்காக நம்ம வர்ரதா? நமக்காகல்ல முருகன் வரனும்! :-)

// துளசி ,
க்காந்திமதிஅம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் இதெல்லாம் நெல்வேலிக்கே சொந்தம். முருகன் அப்பப்போ தாமிரபரணியில் முங்கி எழற மாதிரி வெள்ளமெல்லாம் வரும்னு கேள்வி. யாரு பார்த்திருக்கா:( //

உண்மைதான். நானும் இதைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கும் போல.

said...

// துளசி கோபால் said...

வாங்க ராகவன்.

பதிவு எழுதும்போது உங்களை அடிக்கடி நினைச்சுக்கிட்டேன். //

ஆகா... அதானா எனக்கு அடிக்கடி விக்குச்சு :D

// நானும் அறுபடைவீடுகளுக்கு பலவருசங்களுக்கு முன்னே போய்வந்தேன்.

கதிர்காமம்கூட அறுபடைவீட்டில் ஒன்னுதானா? //

ஆற்றுப்படை வீடுகள்னு பாத்தா... எல்லாரும் மொதல்ல பழநி, அப்புறம் சுவாமிமலை, அப்புறம் திருச்செந்தூரு, அப்புறம் திருப்பரங்குன்றம், அப்புறமா திருத்தணி..அப்புறம் பழமுதிர்ச்சோலைன்னு சொல்வாங்க. கதைக்குப் பொருத்தமா நிகழ்ச்சிகள் வருதுல்ல அதுனால.

ஆனா வரிசை அப்படியில்லை... திருப்பரங்குன்றம்தான் மொதல்ல. திருச்செந்தூரு, பழநி, சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலைன்னு வரும். இதுல குன்றுதோறாடல்னு வர்ரப்போ பலப்பல ஊர்கள் இருக்கு. அதுல ஒன்னுதான் திருத்தணி. அந்தவகைல கதிர்காமமும் ஒன்னுதான்.

இதையெல்லாம் கே.ஆர்.எஸ் எடுத்துச் சொன்னா வாரியார் வாயால கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டேயிருக்கலாம். அவர எங்க? ஆளக்காணோம்?

said...

வல்லி சொன்னா மாதிரி குறுக்குத்துறை கோயில் மூழ்கும் அளவுக்கு வெள்ளமெல்லாம் வரும் அப்போது முருகனை மேம்பாலத்துக்கடியில் இருக்கும் சாலைக்குமாரர் கோவிலில் கொண்டு வைத்து விடுவார்களாம்.
இங்கே வெள்ளம் வந்தால் குடிசைவாசிகளை பள்ளிகளில் அடைக்கலம் கொடுக்கும் அரசாங்கம் போல்.
சமயத்தில் தைபூசமண்டபமே மூழ்கும் அளவு வெள்ளம் வந்திருக்கு.

said...

இவ்வளவு கோவில் இருப்பது இப்போது தான் தெரிகிறது.
மிக்க நன்றி.

said...

டீச்சர் பதிவும் சூப்பர்..ஜிரா பின்னூட்டமும் சூப்பரு ;-)

\\இதையெல்லாம் கே.ஆர்.எஸ் எடுத்துச் சொன்னா வாரியார் வாயால கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டேயிருக்கலாம். அவர எங்க? ஆளக்காணோம்?\\

இதுவும் சரிதான்...தல உடனே மேடைக்கு வரவும் ;)

said...

\\ முந்தி எப்பவோ படிச்சு, மனசுக்குள்ளே இருந்த குறிப்புகள் எல்லாம் வேண்டாத நேரத்தில் 'டாண்'னு நினைவுக்கு வருமே! கொடிமரத்துக்கு வெளியே இருந்துதானே நமஸ்கரிக்கணுமுன்னு தயங்கி அதைச் சொல்லவும் செஞ்சேன்.\\

டீச்சர் அந்த குறிப்புகள்+ஏன் கொடிமரத்துக்கு வெளியில வந்து நமஸ்கரிக்கணுமுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

said...

கோபி,கோவிலுக்கு உள்ள போகும்போட்து கொடிமரத்தை நமஸ்காரம் செய்து,பலிபீடத்துக்கு நமஸ்காரம் செய்துட்டுன்னு வழிமுறைகள் இருக்கு இல்லையா. அது போல வெளில வரும்போது கருடன்கிட்டச் சொல்லிட்டு,
வெளில வந்து கொடிமரத்துக்கும் பைபை சொல்றதுதான் முறைன்னு பெரியவங்க சொல்லிக் கேள்வி.
துளசிம்மா நீங்களும் சொல்லுங்கொ.

said...

நானானி,நானும் தாமிர பரணி வெள்ளத்தைப் பார்த்தேன்.

@ ராகவன், அதென்னமோ உண்மைதான். காவாவா கந்தா இல்லையா. அதுவும் நீங்க சொன்னா அவர் காத்துக் கொண்டா இருப்பார்.
!!!

said...

சாமிய கும்பிட்ட கையோட வரலாறும் விசாரிச்சு சொல்றீங்க. நல்லா இருக்கு.இந்த தாமிரபரணி தண்ணீர்தான் அல்வாவோடருசியின் ரகசியமாம். நதிக்கரை முருகன் ஏகாந்தமா இருக்கார்.இதுவே சாலைக்குமாரசாமி கலகலப்பான இடத்தில் இருக்கிறார்.

said...

வாங்க நானானி.

பாலத்தைக் கடக்கும்போது பார்க்கும் தாமிரபரணி ஆற்றின் அகலத்துக்கு வெள்ளம் வந்தால் நிச்சயமாக் கோயில் முழுகும் அளவுக்குப்போயிரும்தான்.

சாமி(சிலை)க்கும் நாம்தான் பாதுகாப்பு இல்லையா? :-)))))

said...

வாங்க குமார்.

இன்னும் ஏராளமான கோயில்கள் இருக்கு. நாம் போனது ஒரு அஞ்சு சதமானம் இருக்கலாம். ஆனால் நாம் போனது எல்லாமே முன்னூறு நானூறு வருசமானவைகள்.

said...

வாங்க கோபி.

ஏன் எதுக்குன்னு தெரியலை. ஆனா இங்கே ஒருத்தர் எழுதுனதைப் பாருங்க. புரியும்.

http://vallipuramwebscom.blogspot.com/2008/10/blog-post_6331.html

said...

வாங்க வல்லி.

கருடர்கிட்டே சொல்லிட்டுப்போறதும் வர்றதும்தான் எப்பவும் என் கணக்கு:-))))

கோபிக்குக் கொடுத்த சுட்டியில் பாருங்க.

said...

வாங்க ஐம்கூல்.

முருகனுக்கு என்னங்க..... அவர் நிம்மதியா இருந்து நம்மைக் கவனிச்சுக்கிட்டே இருக்கார்.

தனியோ கலகலப்போ அவருக்கு எல்லாமே வேண்டி இருக்கே:-)

said...

ஒன்னு நிச்சயம் , இந்த பதிவயும் , போட்டோக்களையும் பார்த்தா, வாயப்பு கிடைச்சா நம்பளும் போய் பார்க்கனும்னு ...நினைக்க தோன்றுகிறது ..நிறைய பாருங்கள், எழுதுங்கள்.

said...

வாங்க அது ஒரு கனாக்காலம்.

சந்தர்ப்பம் அமைஞ்சால் விடாம நிச்சயமாப் போய்ப் பாருங்க.

(இன்னும் தொடர் முடியலை)

said...

பாட்டன் காலத்து கோயில்,குளம் கட்டிட அமைப்பு திட்டங்கள் பிரமிப்பை ஏற்படுத்துவை எப்பொழுதும்.

said...

வாங்க ராஜநடராஜன்.

முற்றிலும் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை.

கனவுகூடக் காணமுடியாது இப்படி ஒன்னு கட்டமுடியுமுன்னு

said...

டீச்சர்
எனக்கு விக்குச்சா விக்கலையா? சரியா தெரியலையே! நினைச்சிக்கிட்டீங்களா என்ன?

அதான் உள்ள வரதா இல்ல எட்ட இருந்து பாக்குறதா-ன்னு யோசிச்சிங்! :))

அதுவும் என்னப்பன் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனுமான வைத்த மா நிதி இருக்கான்! அதான் கண்ணு மேல கண்ணு வச்சி அவனைப் பாத்துக்கிட்டே இருக்கேன்! :)

said...

// G.Ragavan said...
நவதிருப்பதிக்கெல்லாம் போனதில்லை. ஆனா அறுபடை வீடுகளுக்கும் போயிருக்கேன்//

ஜிரா-வின் அப்பா என்னை அவிங்க ஊருக்கு அழைச்சிருக்காரு!
"நீ வாப்பா, நாம நவதிருப்பதிக்கும் போய் வருவோம்"-ன்னு வடபழனி முருகப் பெருமான் சாட்சியா சொல்லி இருக்காரு! :))

மேட்டிலுயர் நவமான திருப்பதித் தலங்காணும் நாரணானந்த குருவே! :)

said...

பதிவும் படங்களும் சூப்பரோ சூப்பர்....

said...

வாங்க கே ஆர் எஸ்.

எல்லாம் விக்கித்தான் இருக்கும். எத்தனை பேர் நினைச்சோம்.
'மாநிதி' மேலே கண்ணுவச்சுட்டாப் பார்த்துக்கிட்டே இருந்துதானே ஆகணும்:-)

ஜீராவின் அப்பாகூடப் போகும்போது போனாப்போகட்டுமுன்னு ஜீராவையும் கூட்டிப்போங்க. அவர் இன்னும் பார்த்ததே இல்லையாம்.

said...

வாங்க தீப்பெட்டி.

பாராட்டுனதுக்கு நன்றி.

மீண்டும் வருக(அடுத்த பதிவுக்கு)

said...

//கதிர்காமம்கூட அறுபடைவீட்டில் ஒன்னுதானா?//

கதிர்காமம் அருணகிரியார் முதலான முருகனடியார்கள் பல பேர் பாடிய "திருப்புகழ்த் தலங்களில்" ஒன்று!

ஆனால் அது அறு படை வீட்டில் வாராது!

குன்று தோறாடல் என்பது ஐந்தாம் படை வீடு என்றாலும் அதில் திருத்தணிகையே தலையாயது!

வேறு எங்கெங்கு குன்றின் மீதெல்லாம் முருகன் ஆடுகின்றானோ, அதுவும் குன்று தோறாடலில் சேரும்!

ஆனால் கதிர்காமத்தில் குன்று இல்லை!
அதனால் அது அறு படை வீட்டுப் பட்டியலில் வாராது!

பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றில் அமர்ந்த பெருமாளே!

said...

//அந்த குறிப்புகள்+ஏன் கொடிமரத்துக்கு வெளியில வந்து நமஸ்கரிக்கணுமுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்//

எந்த ஆலயத்திலும், உள்ளேயே சிறு சிறு சன்னிதிகள் பலப்பல திசைகளில் இருக்கும்! புதுசா போறவங்களுக்கு எந்தத் திசையில் எது இருக்கு-ன்னு தெரியாமல், மூலத்தானத்தில் விழுந்து கும்பிட்டால், கால்கள் மற்ற சன்னதிகள் நோக்கி, தெரியாமல் நீளூம்! நந்தி தேவர், கருடன் பால் நீளவும் வாய்ப்புண்டு!

ஆலயத்தில் ஒரே இடத்தில் தான் இந்த வகையான பிரச்சனையே இருக்காது! அது தான் கொடி மரம்!

கொடி மரத்தின் அருகே எப்படி வீழ்ந்து வணங்கினாலும், பிற சன்னதி நோக்கிப் பாதம் நீளுதல் நிகழாது என்பதால் தான் கொடி மரத்துக்குக் கீழே வீழ்ந்து சேவிக்க வேணும்!

கொடி மரத்துக்கு அருகிலேயே உள்ள பலி பீடத்தில், நம் மனத்து அகங்காரங்களையும் பலியிட்டு விட்டு,
இனி ஒன்றுமில்லை என்று கொடிக் கீழ் வீழ்ந்து சேவித்தால், கொடி போலவே மனமும் படபடவென்று மேலேறி பெருமானின் பட்டொளி வீசிப் பறக்கும் என்பது தாத்பர்யம்!

said...

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் உற்சவத் திருமேனிக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு!

இதை வடித்த சிற்பி, செய்து முடித்த பின், கள்ளப்பிரான் கள்ளச் சிரிப்பிலே கிறங்கிப் போய், தன்னையும் அறியாமல், பெருமாள் கன்னத்தைக் கிள்ளி விட்டானாம்!
கையில் உள்ள உளி கன்னத்தில் பட்டு, இன்னும் ஆழமான குழி விழிந்து இருக்கும் கன்னத்தை இன்றும் காணலாம்!

said...

//ஸ்ரீவரகுணமங்கை. கோபுரம் கொள்ளை அழகு. இதைப்போலவே இங்கே இருக்கும் கோயில் குளம் அட்டகாசமா இருக்கு//

ஆமாம் டீச்சர்!
பேரைப் போலவே ஸ்ரீவரகுண மங்கை ஊரும் அழகு! குளம் கோபுரமும் அழகோ அழகு!

ஆண்களுக்குப் பெண்கள் உபதேசம் செய்து வைத்த பஞ்ச பருவக் கன்னியர் தலம்! அதனால் தான் வர குண "மங்கை"!

இராமனின் மனைவி சீதை, அக்னி பகவானுக்குச் செய்த உபதேசம்!
புசுண்ட மகரிஷி மனைவி, சக முனிவரான ரோமச முனிவருக்கே செய்த உபதேசம்!
இறுதியாக சத்தியவான் மனைவி சாவித்திரி, எமதர்ம ராஜனுக்கு, தர்மம் என்றால் என்ன-என்று செய்த உபதேசம்!

இப்படி பெண்களை முன்னிறுத்தி ஆண்களுக்கு "குண" உபதேசம் செய்யுமாறு எம்பெருமான் அருளியதாலே...இது ஸ்ரீ வர + குண + மங்கை!

said...

//காசு காசுன்னு அலையும் பட்டர்கள் யாரையுமே இங்கே காணோம்!!!!//

ஆலய நிர்வாகம் மேலாண்மை வல்லுனர்களிடம்!
ஆலயக் கொள்கை அரசாங்கத்திடம்!

இப்படி இருந்தால் வணிக வளாகச் சுத்தமும், பக்தர்கள் என்பவர்கள் வாடிக்கையாளர்கள்! வாடிக்கையாளர் திருப்தியும் உடனே ஈடேறும்!

http://madhavipanthal.blogspot.com/2008/01/2008-part-2.html

இந்தப் பதிவிற்குத் தான் ஒரு தமிழ்மண விருதும் கிடைத்தது! :)

said...

வாங்க கே ஆர் எஸ்.

உங்களைத் தேடுனதுக்குக் கைமேல் பலன் கிடைச்சுருச்சு.

நீங்க சொன்ன கதை எனக்குப் புதுசு.

ஆனா உபதேசம் செய்யத் தெரியும்:-)))))

சென்னையில் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவள் பெயர் ஸ்ரீவர மங்கை. ஒருவேளை இந்த ஊர்க்காரியோ என்னவோ!!!!

said...

வணக்கம் ஜெயமோகனில் உலா வரும் போது உங்களிடம் முட்டிக்கொண்டேன். பாழ் நெற்றியில் திருமண் ஒட்டிக் கொண்டுவிட்டது.பயணக்கட்டுரை சுவையாக இருக்கிறது.--சித்தன் yugamayini.blogspot.com - chithankalai@yahoo.co.in

said...

வாங்க சித்தன்.

வணக்கம். நலமா?

ஒட்டிக்கொண்டத் திருமண்ணைத் தட்டிவிடாமல் இங்கு வந்ததுக்கு நன்றி.

பயணக் கட்டுரைத் தொடர் இன்னும் பலவாரங்களுக்கு வருமாயிருக்கும்.

தொடர்ந்து வருவீங்கதானே?