Wednesday, November 29, 2017

ஸ்ரீதேவியின் வாக்கு பலித்தது! (இந்திய மண்ணில் பயணம் 82 )

எண்ணி மூணாம்நாள் இப்படி  நம்ம ஸ்ரீதேவியின் வாக்கு பலிக்குமுன்னு  கனவிலும் எதிர்பார்க்கலை!  உண்மையான  ஆசிகளின் மகிமை இதுதான் போல!  அதுவும் ரெண்டு முறை நூத்தியெட்டு ஸேவிச்ச நல்ல மனசு!

நேத்து சாயங்காலம் என்ன ஆச்சுன்னா....  நாம்தான் காட்டுமன்னார் கோவில் வீரநாராயணரை தரிசனம் பண்ணிக்கிட்டுத் திரும்ப கும்பகோணம் வந்தோமில்லையா.....  அப்பவும்  கங்கை கொண்ட சோழபுரம் வழியாத்தான் வந்தோம்.  கோவில் அப்போ திறந்துருக்க மாட்டாங்க என்பதால்   அங்கே போகாமல் நேரா ராயாஸ் என்று  முடிவு. அப்படியே  போய்க்கிட்டும் இருக்கோம்....

ஆனால் பாருங்க....   எதுவுமே  கண்ணுலே பட்டபிறகு  போகாமல்  இருக்க முடியுதா?  பசி மயக்கமோ என்னவோ அரைத்தூக்கத்தில்  இருந்தவ கண்ணில் கோயில் போர்டு விழுந்துருச்சு. ஜெர்க் ஆனேன்.  இந்த வழியாவா வர்றோம்!  பூமாவைப் பார்த்துட்டே போகலாமே....  போனமுறை வந்தப்ப  குழந்தை    கேம்ப் போயிருந்தாள்... சந்நிதி திறக்கலைன்னா கூடப் பிரச்சனை இல்லை.... இவளைப்பார்த்தால்  அவனையே பார்த்த பலன் தான் :-)
வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி உள்ளே போனால் ரெண்டு தரிசனமும்  கிடைச்சது! ஏற்கெனவே பலமுறை  பதிவில் எழுதுன  கோவில் என்பதால்  இதைப்பத்தி எழுதப்போறதில்லைன்னு  நம்மவரிடம் சொன்னேன்.
விண்ணிலும் மண்ணிலும், இந்த ஈரேழு உலகத்திலும் எதற்கும்  எந்த விதத்திலும்  ஒப்புவமை சொல்ல  முடியாத  அந்த  ஒப்பில்லாதவனைப் பார்த்து  வணங்கிட்டுப்போகணும்.  அம்புட்டுத்தான்!  அதே போல ஆச்சு.
பூமாவும்  தன்னந்தனியா போரடிச்சு நின்னுக்கிட்டு இருந்தாள்.  பாகரைக்கூடக் காணோம்..... இப்பத்தான் கோவில் திறந்துருக்கு.  பக்தர்கள் வர நேரமாகும்.... இன்றைக்கு விசேஷம் ஒன்னும் இல்லை.....  எல்லாம் ஏறக்கொறைய ஏகாந்தம்தான் :-)
மொத்தமே காமணிதான் அங்கே!  நம்ம துளசிதளத்தில் ஏற்கெனவே  எழுதுனதுலே   ஒரு  ரெண்டு     சாம்பிள்   இங்கே....   அப்போ பார்க்கலைன்னா... இப்போ பார்த்துக்கலாம்....  :-)

1  ஒப்பிலி

 ஒப்பிலி






ஐயாவைப் பார்த்த கையோடு   அடுத்த பத்தே நிமிட்டில்   அம்மா!  இது நம்ம கோவில் இல்லையோ!    நாச்சியார்கோவில்!  வஞ்சுளவல்லி இடுப்பில் சாவிக்கொத்து இருக்குதானேன்னு  பார்த்ததும், கல்கருடருக்கு  வணக்கம்  சொன்னதுமா , சட்டுன்னு ஒரு வலம் வந்ததுமா இங்கேயும் இருவது நிமிட் தான்!  கருவறையில் நல்ல கூட்டம்,  எங்கூர் கணக்கில்!  (நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க !) மாப்பிள்ளை வீட்டுக்கல்யாணப் பார்ட்டிகள்தான் கூட்டமா நிக்கறாங்க!
நாச்சியார் கோவிலில் எனக்கு ரொம்பப்பிடிச்சது, பெருமாளை நாம் தெருவில் இருந்தே  பார்க்கலாம்.   அவருக்கும் அப்படித்தான். நின்ன இடத்துலே இருந்தே    வாசல்வழியா   போறவர்றவங்களுக்கு  ஆசி வழங்கறாப்போலதான் கோவில் அமைப்பு!

 நாச்சியார் கோவில்  சாம்பிள்ஸ் :-)

1 நாச்சியார்

2  நாச்சியார்

இந்த ரெண்டு கோவில்களுமே திவ்யதேசக் கோவில்கள்தான்! கும்மோணம் போகும்போதெல்லாம் தவறாமல் தரிசிக்கும் கோவில்கள்தான் இவை. இந்தக் கும்பகோணத்துலேயே....   பதினொரு திவ்ய தேசக்கோவில்கள் இருக்கு!  ரெண்டு மூணு நாள் தங்கினா  கோவில்களை பார்த்துக்கலாம்தான். ஆனால் இங்கே கோவில் தவிர்த்து  சிற்பக்கலையின் உச்சம் தொடற சமாச்சாரங்கள் பலதும் இருக்கே.....    பேசாம ஒரு ரெண்டு வாரம் தங்கி... இதே வேலையா இருந்தால்.....  நினைக்கும்போதே.... 'ஜிவ்'ன்னு  இருக்கு !!!


ராயாஸ் க்ராண்டுக்கு வந்து சேரும்போது மணி அஞ்சரை!  ரொம்ப சுத்தியாச்சு. இனி எங்கேயும் போக வேணாம். சீனிவாசனை, போய் சாப்பிட்டு  ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பியாச்சு.  அறைக்குப்போனப்ப, வாசலில் நின்னுருந்த  தம்பி,  காஃபி கொண்டு வரவான்னதும், கூடவே பஜ்ஜின்னார் நம்மவர் :-)
மறுநாள் கிளம்பறதால் கொஞ்சம் பேக்கிங், வலை மேயல் எல்லாம் முடிச்சோம். அப்பதான் கேக்கறார், 'நாளைக்கு  பூவராஹனைப் பார்த்துட்டுப் போகலாமா?'ன்னு!

ஹைய்யோ.... ஸ்ரீதேவி வாக்கு பலிச்சுருச்சா !!!    வழக்கத்துக்கு மாறா.... மறு வார்த்தை பேசாம , உடனே சரின்னேன்.

கெமெரா பேட்டரிகள், செல்ஃபோன்கள், பவர் பேங்க் எல்லாம் சார்ஜரில் போட்டாச்சு.  சார்ஜ் இல்லாததால்  பூமாவைக்கூட நாலைஞ்சு படத்தோடு நிறுத்தும்படியாச்சு.
ராச்சாப்பாட்டுக்கு  கீழே  ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் எனக்கு இடியப்பம், நம்மவருக்கு சப்பாத்தி குருமா. சாப்பாடானதும் எதிரில் இருக்கும் மஹாமகக்குளத்தாண்டை போய்ப்பார்க்கலாமான்னு  தோணுச்சு.  இப்ப ஒரு எட்டு மாசத்துக்கு முன்னேதானே கும்பமேளா  ஆச்சு. அப்போ  சுத்தம் செஞ்சு வச்ச இடத்தை, நல்ல கம்பித் தடுப்பெல்லாம் போட்டு வச்சுருக்காங்க.  இஷ்டம்போல் தண்ணிக்குள்ளே இறங்க முடியாது.  இப்படியே சுத்தமா மெயின்டெய்ன் பண்ணா ரொம்ப நல்லதுதான்!
குளத்தைச் சுத்தி ஒரு நடை போறோம்.  இதுதான் முதல் முறை!  கரைக்கு நாலுன்னு   சுத்திவர பதினாறு கோவில்கள் (சந்நிதிகள்)இருக்கு. விளக்கு வெளிச்சம் போதாமல் எல்லாம் முக்கால் இருட்டில். செல்லில் எடுத்த படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு.  கோணேஸ்வரர், இடபேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர்ன்னு  சந்நிதிகளில்   பதினாறு பெயர்  பலகைகள் இருக்கு.

தெற்குக்கரையாண்டை  இருக்கும்  ரெடிமேட் துணிக்கடைகளில் எட்டிப் பார்க்கலாமேன்னு போனோம். நான் பெண்கள் பகுதிக்குப்போய் எதாவது தேறுமான்னு பார்த்துட்டு வரும்போது  இவர்  குட்டிப் பாப்பா சைஸில் ஒரு பாவாடை சட்டை  எடுத்துக் கையில் வச்சுருக்கார். எல்லாம் நம்ம ஜன்னுவுக்குத்தான்.  பாவம்.... தீபாவளிக்கு எடுத்ததா இருக்கட்டும்!


ஊர் திரும்பியதும் போட்டு விட்டேன். அளவு சரியா இருக்கு :-)


இப்பெல்லாம் இவரும் ஆர்வமா துணிமணி நகை நட்டுன்னு நம்ம ஜன்னுவுக்கும் க்ருஷ்ணாவுக்கும் வாங்கறார். ஹைய்யோ!!!  எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு! நக்லியில் வாங்கினால் ஆகாதான்னு....   :-)

மறுநாள்  எட்டுமணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட். மினி டிஃபன்.  கூடவே நல்ல கும்பகோணம் ஃபில்ட்டர் காஃபி. 
ஒன்பதுக்கு செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம்.  அம்பத்திமூணரை கிமீ, ஒன்னரை மணி நேரப் பயணம். ஸ்ரீமுஷ்ணம் !!!

கோவிலுக்கு ரொம்ப முன்னாலேயே சாலை பிரியும் இடத்தில் (நடுவில்) பெரிய திருவடி கைகூப்பி வரவேற்கிறார்!   ரொம்பவே அழகு!

கம்பீரமா நிற்கும் ஏழு நிலை ராஜகோபுரம், அதுக்கு முன்னே திருமாமணி மண்டபமும் அதுக்குப்பின்னால் நிற்கும் ஜயஸ்தம்பமும். உச்சியில் அழகான மாடத்தில் பெரிய திருவடி கோவிலைப் பார்த்தபடி இருக்கார்!  இந்த மாடமே கொள்ளை அழகு!   இதுக்கு திருஷ்டிப்பரிகாரமா இருக்கட்டுமுன்னு   கம்பம் உசரத்துக்கு மின்சார விளக்கு போட்டு வச்சுருக்காங்க.  கூடுதல் றெக்கை.....    :-(
ராஜகோபுர வாசலிலேயே சிற்பங்களின் கொண்டாட்டம் ஆரம்பிச்சுருது.  ரெண்டு பக்கக் கருங்கல் சுவர்களில்  சின்னச் சின்ன  செவ்வக அளவில்  தெளிவான, அம்சமான சிற்பங்கள் கதை சொல்லுதே!

கோபுரவாசலைக் கடந்து உள்ளே  காலடி வைக்கிறோம். தாயும் புள்ளையுமா  கண்ணுக்கு முன்னால்....    சகுனம்  அருமை!
வாங்க உள்ளே போய்ப் பார்க்கலாம்....

தொடரும்....  :-)


Monday, November 27, 2017

வா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே? (இந்திய மண்ணில் பயணம் 81 )

அதுவரை இங்கே போகணுமுன்னு ஒரு திட்டமும் இல்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தைப் பார்த்துட்டு மெயின் ரோடுக்கு வந்து சேர்ந்தால்  'இதோ இங்கே வா'ன்னு கூப்பிடறாப்போல கண்முன்னால் கடந்து போன பஸ் சேதி  சொன்னதோ?
எங்காத்து வேளுக்குடின்னு நான் பெயர் வச்சுருக்கும் எங்க தாம்பரம் அத்தையைப் பத்தி  துளசிதளத்தில் அப்பப்பச் சொல்லி இருக்கேன்.  நீண்டகால வாசக நண்பர்களுக்கு நினைவு இருக்கலாம்.  'இந்த கும்பகோணம் போயிட்டு வந்தேன்,  சிதம்பரம் போனேன், சீரங்கம் போயிட்டு வந்தேன்'னு  போய் வந்த  கோவில் விவரங்களைச் சொல்லும்போது  'காட்டுமன்னார்குடி போகலையா'ன்னு எப்பவும்  கேப்பாங்க. 'போணும். ஒருநாள் போவேன்'னு சொல்லி சமாளிச்சுருவேன்.  அது எங்கேயோ இருக்குன்னு ஒரு எண்ணம்.
இப்ப பஸ்ஸில் எழுதி இருந்ததைப் பார்த்ததும் காட்டுமன்னார்குடிக்கே போகலாமுன்னு  தோணுச்சு. நம்மவரும் அவர் செல்லில் கூகுளாரைக் கேட்டுப் பார்த்துட்டு, ரொம்பப்பக்கம்தான், ஒரு பதினெட்டு கிமீ தூரமுன்னு சொன்னார்.

அட! அவ்ளோதானா? சலோ....    ரெண்டுங்கெட்டான் நேரம். போட்டும்.... அங்கே போய் தேவுடு காத்தால் ஆச்சு !
கண்ணுக்கெட்டிய தூரம்,  போற வழியில் பசுமை!

தாம்பரம் அத்தைக்கு ஏன் இந்த ஊர் மேல் இவ்வளவு கரிசனம்? பொறந்த ஊர்ப் பாசம். 'அங்கே கோவிலுக்குப் போனால்  நாதமுனி ஸ்வாமிகள் எழுதுன ' 'ஆராவமுதே அடியேனுடலம் நின்பாயே......' தொடங்கி பத்துப்  பாசுரம் ஒரு கல்வெட்டுலே செதுக்கிச் சுவரில் பதிச்சுருப்பாங்க. அதைக் கட்டாயம் பார்த்துட்டு வாங்க'ன்னும் சொல்வாங்க.

  அதுலே  அப்படி என்ன விசேஷம்?    முக்கியமான  பல விசேஷங்கள் இருக்குன்னாலும்.... தாத்தா (தாம்பரம் அத்தையின் தகப்பனார்) கோவிலுக்குச் செய்த உபயம்னு ஒரு சின்ன விசேஷம் இருக்காமே அங்கே! அதான் அந்தப் பளிங்குக் கல்வெட்டு!

அப்ப... பெரிய விசேஷம்ன்னா?

 இது மிகப்பெரிய விசேஷம்....  நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்!

இன்றைக்கு நாமெல்லாம் கொண்டாடும் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்  நமக்குக் கிடைச்சது...... எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம்.

ஆதிகாலத்தில் இந்த ஊரின் பெயர் வீரநாராயணபுர சதுர்வேதமங்கலம்.
பின்னே இப்போ ஏன் காட்டுமன்னார்கோவில்/ காட்டுமன்னார்குடி   (மன்னார்குடின்னாவே பயமா இருக்குப்பா)னு சொல்றாங்க.
 காட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.

எதைக் காட்டுனாராம்? (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்?)

பிரபந்தங்களைத்தான். வேறென்ன?

சரி... கதையைப் பார்ப்போம்.

இந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்கநாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை,

'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும், மழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'
ன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.

'இப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே? தெரிஞ்சா அதையும் பாடுங்க'ன்னார்.

'நாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்'னு சொல்லிட்டாங்க.

திருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.

'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)

கோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' ........

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

திருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,
' திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. நாலாயிரம் பாடல்கள் இருக்குன்ற விவரமே அப்பத்தான் தெரிஞ்சதுன்னும் சொல்லலாம்.

 அதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத்தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம். அரையர்கள் கையில் வச்சுருக்கும் தாளங்கள் கூட ஒன்னு நம்மாழ்வார், இன்னொன்னு நாதமுனிகள்னு சொல்றதும் உண்டு!

நாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம்.

மேலே சொன்ன கதை, நம்ம துளசிதளத்திலே எட்டு வருசங்களுக்கு முன்னால் எழுதுனது.   முழுக்கதையைச் சொன்னது  எங்க தாம்பரம் அத்தைதான்.  நேரம் இருந்தால் இங்கே எட்டிப் பாருங்களேன் :-)


இது இப்படி இருக்க,  நாமெல்லாம் இப்போ நூத்தியெட்டு பித்துப்பிடிச்சுக் கிடக்கறோமே.... அப்படி நூத்தியெட்டு திவ்யதேசம் ஸேவிக்க முடியாத நிலைன்னா , இங்கே வந்து  வீரநாராயணரை வணங்கினாலே  நூத்தியெட்டு தரிசனம் செஞ்ச பலன் கிடைச்சுருமாம்!

அப்படியா?  எப்படி?

வாங்க.... நாம் இப்படிக்கா போவோம்......

ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்ச கோவில்கள்தான் திவ்யதேசங்கள் என்ற  பட்டியலில் வருது.  ஆனால்  அவுங்க எல்லோரும் எந்தெந்த கோவில்களைப் பற்றிப் பாடி இருந்தாங்கன்னு  எப்படித் தெரியும்?  வெவ்வேற காலக் காட்டத்தில் வெவ்வேற இடங்களில் பாடின பாசுரங்கள் ஆச்சே....

இப்பதான் மேலே சொன்ன சம்பவத்தில் இருக்கும்  ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள் வர்றார்.  அவர் முயற்சியாலும், நம்மாழ்வாரின் அருளாலும் அங்கங்கே சிதறி இருந்த  பாசுரங்களின் தொகுப்பு கிடைச்சது.  அதை வச்சுத்தான் இந்த நூத்தியெட்டு பட்டியலும் தயாராச்சு ! (காதைச் சுத்தி மூக்கைத் தொட்டுட்டேனோ!!!)

ஆகக்கூடி நூத்தியெட்டுக்கு முன்னோடி நம்ம நாதமுனி ஸ்வாமிகள்தான். அவர் அவதரிச்ச புண்ணிய தலம் இந்த காட்டும்மன்னார்கோவில் என்பதால் இங்கே வந்தாலே நூத்தியெட்டு திவ்யதேசங்களைத் தரிசிச்ச பலன் கிடைச்சுரும் என்பது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.  நம்புனால்தான் சாமி! தெரியுமோ?

ஆச்சாரியப் பரம்பரையும் இவரில் இருந்தே ஆரம்பிச்சது.  முதல் ஆச்சாரியர் இவர்தான்! 

இன்னுமொரு சுவாரசியமான  சேதி....

நாதமுனி ஸ்வாமிகள் முன்னிலையில்தான் ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிக்கு முன்னே இருக்கும்  மண்டபத்தில் கம்பராமாயணம் அரங்கேறியது!  அந்த மண்டபம்  இதுக்குப்பின் கம்பர் மண்டபம் என்றே  அறியப்படலாச்சு!

இந்தக் காட்டுமன்னார்குடிதான் ஆளவந்தாரின் அவதார ஸ்தலமும்!   இவரும் ஆச்சார்ய பரம்பரையில்  ரொம்பவே புகழ் பெற்றவர்.  பொறந்ததும் வச்ச  பெயர் யமுனைத்துறைவன். (ஹைய்யோ.... என்ன அழகான பெயர், இல்லை!)இவருக்கும் நம்ம நாதமுனி ஸ்வாமிகளுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு தெரியுமோ?  தாத்தாவும் பேரனும் !  ஆனா தாத்தா  சாமிகிட்டே போன பின் ரொம்ப காலம் கழிச்சுத்தான் பேரன் பிறந்துருக்கார்!
ஊருக்குள்ளே நுழைஞ்சுட்டோம்.  போஸ்டர் ஒன்னு கண்ணில் பட்டது!   ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும்.....    ஒரு பக்கம் துக்கம்தான்.  பெண் ஜென்மம் பிறக்கும்போதே  போராட்டம்தானா?   ப்ச்....
கோவிலை நோக்கிப்போகும் வழியில் பூக்கடைகளில் சரஞ்சரமாய் மாலைகள். சரியான வழியில்தான் போறோமுன்னு உறுதியாச்சு. அதோ கோபுரம் தெரியதே!   மணி இப்போ ரெண்டே முக்கால். நாலு மணிக்குக் கோவில் திறக்கும்வரை என்ன செய்யலாம்.... தேவுடு காக்க வேண்டியதுதான்ன்னு  நினைப்போட கோவில் வாசலுக்குப் பக்கம் வண்டியை நிறுத்தினா.........

நிறுத்தினா?

கோவில் திறந்துருக்கு!  வாசலில்  இருந்த பெரியவர், சீக்கிரமாப் போங்க.  மூடிடப்போறாங்கன்னு  சொல்றார்!  பெருமாளே.... பெருமாளேன்னு வேறொன்னையும் கவனிக்காமல் உள்ளே ஓடறோம்.

கருவறையில் நின்ற கோலத்தில்... ஹைய்யோ.... என் பெருமாள்!  கூடவே தேவியர்!   ஆதிகாலத்தில் மரச்சிற்பமாக இருந்ததை  பதிமூணாம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னர், சுதை உருவமா மாத்தி இருக்காராம்!

கண் நிறைய  காட்சி கொடுத்துட்டார்.   தீர்த்தமும் துளசியும் கிடைச்சது. இன்னும் நல்லா ஊன்றிக் கவனிக்கத் தயார் ஆகும்போதே....  சரேல்னு திரை இழுத்துட்டார் பட்டர் ஸ்வாமிகள்!

விக்கிச்சு நின்னேன்.  வெளியே வந்த பட்டர் ஸ்வாமிகள் ,  'இனி  நாலு மணிக்குத்தான் தரிசனம் என்றவர் கூடவே   அஞ்சு மணி ஆனாலும் ஆகும். எல்லோரும் இப்பத்தான் கிளம்பிப்போனா. வர்றதுக்கு  லேட் ஆகும் 'என்றார்.

ஙே.....
  நாலுநாளாய் நடந்த     பவித்ரோற்சவம் இன்றைக்கு   முடிஞ்ச விவரம் கிடைச்சது. விழா முடிய இவ்ளோ நேரம் ஆகி, பனிரெண்டுக்கு நடை சாத்துவது இன்றைக்கு மூணு மணி ஆகியிருக்கு.
விளக்கம் கிடைச்சது.

கருவறையை பூட்டிக்கிட்டு  விடுவிடுன்னு கிளம்பினார் பட்டர்பிரான்.  கையில் இருக்கும் கேமெராவைக் காமிச்சு அனுமதி உண்டான்னு கேக்கறதுக்கு  முந்தியே.... வெளியே படம் எடுத்துக்கலாமுன்னு சொல்லி  காலை வீசிப்போட்டுப் போயே போயிட்டார்.

உனக்காகத்தான் காத்திருந்தேன்னு  பெருமாள்  சொன்னாப்பல தோணல் எனக்கு.  நினைப்புதான்.... 
வலம்  போகலாமேன்னு  ஒரு சுத்து.  எல்லா சந்நிதிகளும் மூடியாச்சு பாருங்க. ஏகாந்த வலம்தான் நமக்கு.
நிதானமாக வலம் வந்தோம்.  ஆண்டாள் சந்நிதியில்   'தூமணி  மாடத்து.... '  ஆச்சு.


ஒரு சுத்து முடிச்சு முன்பக்கக் கொடிமரத்தாண்டை  வரும்போதுதான்  கோவிலை மூட வேண்டிய   ட்யூட்டியில் இருக்கும் காவல்காரர்  நமக்காகக் காத்துருப்பதைக் கவனிச்சோம்.  அவ்ளோதான்....  நம்மவர்  கிளம்பு கிளம்புன்னு  அவசரப்படுத்தறார்.  நானும் இங்கே அங்கேன்னு நாலைஞ்சு க்ளிக்ஸ்.

முகப்பு மண்டபத்தாண்டை ராமருக்கு  ஒரு ஜெயஸ்தம்பம்.  இதைப்போல ஒன்னு  காசியில் பிர்லா மந்திர் தோட்டத்தில் பார்த்த நினைவு.
அவசரமா உள்ளே ஓடுனதால்.... இப்பதான் நிதானமா பலிபீடம், கொடிமரம் , சின்னதா ஒரு சந்நிதியில் இருக்கும் பெரிய திருவடி எல்லாம் ஸேவிச்சுக்கிட்டோம்.
அப்பதான்  கல்வெட்டு ஞாபகம் வர்றது.  எங்கேன்னு யாரை விசாரிக்க?  பெருமாள் இதுக்கும் பதில் ரெடி பண்ணிட்டார்.  கருடன் சந்நிதியாண்டை ஒரு பட்டர் என்னமோ தூக்கிண்டு  வந்துக்கிட்டு இருந்தார்.   ஓடிப்போய் அவரைக் கேட்டேன்.
 மூலவர் சந்நிதியாண்டை இருக்காம்!  அடடா.... நமக்குத் தெரியாமல் போச்சே....

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே
கோபுரவாசலுக்குள் நாம் நுழையும்போது நடக்கிடது பக்கம் கோவில் நந்தவனம். நம்ம வேளுக்குடி ஸ்வாமிகளின் கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்  கவனிச்சுக்கறாங்க.
ராஜகோபுரத்தைப் பார்த்தாப்லே  கோவிலுக்கு எதிரில் கொஞ்ச தூரத்தில்  ஆஞ்சிக்குத் தனிச்சந்நிதி! தனிக்கோவில்னும் சொல்லலாம்.  அருள்மிகு  அனுக்ரஹ ஆஞ்சநேயர் திருக்கோவில்! கும்பிடு போட்டுட்டு ராம ராம ராம ராம சொல்லிக்கிட்டே  கிளம்பினோம்.
கோவில் திருக்குளம் பரவாயில்லாமல் சுத்தமாவே இருக்கு. நிறைய தண்ணீரும் கூட!  பக்கத்துலேயே புள்ளையார் கோவில் ஒன்னு. செங்கழுநீர் பிள்ளையார் ஆலயம்!

மணி மூணேகால்!  கொஞ்சம் பெரிய ஊரா இருக்கே.... இங்கே சாப்பிட எதாவது கிடைக்குமான்னு பாருங்கன்னு  நம்ம சீனிவாசனிடம் சொன்னார் நம்மவர்.  பாவம் அவரும் பட்டினியா இருக்காரே...
ஹோட்டல் கிருஷ்ணவிலாஸ், கச்சேரித்தெரு. உள்ளே சுத்தம். ஐ மீன் படு சுத்தம்! சாப்பிட ஒன்னுமே இல்லை.   மத்யானம் சாப்பாடுக் கடை முடிஞ்சு இனி  நாலு நாலரைக்குத்தான்   .....     காஃபியாவது கிடைக்குமான்னால்.... இனிமேத்தான் டிகாக்‌ஷனே இறக்கணும். பால் வேற இன்னும் வரலை.

ஓ.... வாசலில் ஐஸ் க்ரீம் போர்டு இருக்கே....  அப்ப அதுவாவது...

ஊஹூம்....

எப்பவும் பயணத்தில் சிறு தீனி கொஞ்சம் வச்சுக்கறது உண்டு. ஆனால் அந்தப் பை  ராயாஸ் அறையில் இருக்கு.

காலையில்  சக்கரத்தாழ்வார் கொடுத்த தேங்காய் .... அதுவும் தானாம்....

அணைக்கரை வழியா கும்பகோணம் திரும்பறோம்.... இப்போ....

வர்ற வழியெல்லாம் எப்படிக் கடைசி நிமிஷத்துலே காட்சி கொடுத்துட்டான்னு  பேச்சுதான்!

தொடரும்.......


PINகுறிப்பு:  கோவிலில் எடுத்த படங்களை அங்கங்கே தூவிட்டேன்.  வரிசையில் இருக்காது....      மன்னிச்சு


Friday, November 24, 2017

தந்தையைப் பின்பற்றிய தனயன்(இந்திய மண்ணில் பயணம் 80 )

 ராயாஸில் இருந்து கிளம்பி அணைக்கரை வழியாக் காவேரியைக் கடந்து,   கங்கைகொண்ட சோழபுரம் வந்து சேரும்போது  சரியா ஒரு மணி. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கட்டி இருக்கார்,  ராஜராஜசோழனின்  மகன் ராஜேந்திர சோழன்னு  வாசிச்சது முதல்  போகணும் என்றது  என்  கனவு. அது இன்றைக்கு இப்படி சட்னு நிறைவேறுமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை !
ரொம்பச் சின்ன ஊரா இப்போ இருக்கு.  செம்மண் பூமியோ.....
இந்தக் கோவிலை உலகின் பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துருக்கு.   இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருக்கு.
தாத்தா கட்டுன தஞ்சை பெரிய கோவில்,  மகன் கட்டுன  கங்கைகொண்ட சோழபுரம்  ப்ரஹதீஸ்வரர் கோவில், பேரன் கட்டுன ராஜராஜேச்சரம் என்ற தாராசுரத்து  ஐராதவதேஸ்வரர் கோவில் இப்படி மூணு தலைமுறை சோழர்கள் கட்டுன இந்த மூணுகோவில்களுமே நம்ம நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் கட்டடக்கலை நுணுக்கங்கள் நிறைஞ்சவைதான்.

ஆனாலும்....  வடக்கே இருக்கும் தாஜ்மஹல்தான்  இந்தியான்னதும் வெள்ளையர்களின் விருப்பப்பட்டியலில்  இடம் பிடிச்சுருது, இல்லே?  

முக்காவாசி வெள்ளைப் பயணியர்  தென்னிந்தியா பக்கமே வர்றதில்லை.  வாரணாசி,   தில்லி, ஆக்ரா, ராஜஸ்தான்னு  முடிச்சுக்கறாங்க. ப்ச்....


தஞ்சைப்பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கும்  வெறும் இருவது  வயசுதான் வித்தியாசம்!   அப்ப  அந்தக் கோவிலை நிர்மாணித்த சிற்பக்கலைஞர்கள்  பலர் இங்கேயும் கூட வந்திருந்து  சிற்பங்களைச் செதுக்கி இருக்கலாம், இல்லே?
வலைக்கம்பி அடிச்சு வச்ச பெரிய வளாகம்.  கம்பியினூடா பசும்புல்தரை பளிச்! 

வண்டியை நிறுத்திட்டு உள்ளே போறோம்.  இடதுபக்கம் ஒரு  ஓலைக்குடிசைதான்  ஆஃபீஸோ?  இல்லை. செருப்பு வைக்கும் இடம்.  காலணி பாதுகாப்பும்  ஒரு தீனிக்கடையுமா இருக்கு.   உள்ளே போகவும் கேமெராவுக்கும் கட்டணம் இருக்கான்னு  கேட்டால்...  அப்படி ஒன்னும் இல்லைன்னுட்டார்.  கோவில் என்பதால் கட்டணம் இல்லைன்றது சரி. ஆனால் கெமெராவுக்கு ஒரு கட்டணம் இருந்தால்   பராமரிப்பு செலவுக்கு ஆகாதோ?

செருப்பை விட்டுட்டு நடந்து போறோம்.  பகல் ஒருமணி வெயில் கல் தரையெல்லாம் பொள்ளுது.... வேற வழி இல்லாமல் புல் இருக்குமிடத்தில்தான்  போயாகணும்.  ப்ச்.....   சனம் நடந்து நடந்தே....   ரெண்டு பக்கமும் பாதை உருவாகி இருக்கு.....


அதோ  கண்ணெதிரில்  கம்பி போட்ட கேட்டுக்குள்ளே என் கனவு !
கேட்டுக்கு ரெண்டு பக்கமும் துவாரபாலகர்கள்!  கொஞ்சம் உடைஞ்சு  இருக்கறதைப் பார்த்தால்....  இங்கே அகழ்வாராய்ச்சி செஞ்ச சமயம் கிடைச்ச சிலைகளை இங்கே வச்சுவிட்டது போல எனக்குத் தோணுது....
ராஜகோபுரம் கிடையாது. உள்ளே போகும் நுழைவுவாசல்  கோபுரம் இல்லாத  வகையில்  ரெண்டாப் பிரிஞ்சு வழி விடுது! 

கேட்டின் ஒரு பகுதியைத் திறந்து உள்ளே போறோம். பலிபீடம், அடுத்து நந்தி! ச்சும்மாத் தரையிலே உக்கார்ந்துருக்கு.  தலைக்குக் கூரை இல்லை. திறந்த வெளியில் காத்தும் மழையும் வெயிலும்.....   பாவம்....

சுதை நந்திதான். தஞ்சை போல கருங்கல் இல்லை. ஏற்கெனவே  தஞ்சைக் கோவில், கங்கை கொண்ட சோழபுரக்கோவில் ஒற்றுமை, வேற்றுமைன்னு பரவலா அங்கங்கே வாசிச்சு வச்சது லேசா நினைவுக்கு வருது.

தஞ்சையை விட பெரிய நந்தி, பெரிய  சிவலிங்கம், பெரிய  அம்மன். ஆனால்  கோபுர உயரம்  தஞ்சையை விடக் குறைவு,  அந்தக் கோவில்  ஆண்மையின் மிடுக்கோடு, இந்தக் கோவில் பெண்மையின் நளினத்தோடுன்னு.....


இப்படி எல்லாம் வாசிச்சு வச்சவள், கோவில் திறந்துருக்கும் நேரத்தைக் கோட்டை விட்டுருக்கேன்.....   தொல்லியல்துறை கவனிப்பு என்பதால்  காலை முதல் மாலை வரை திறந்துதான் இருக்கும் என்ற மெத்தனம்தான்  :-(
நந்திக்கு எதிரில்  நல்ல உயரமான மேடையில் கோவிலைக் கட்டி இருக்காங்க. அந்த மேடைக்குப்போகும் படிகளில் ஏறிப்போனால்.... மேடையிலும் ஒரு சின்ன நந்தி சந்நிதி வாசலைப் பார்த்தாப்லெ உக்கார்ந்துருக்கு. அங்கேயும் சின்னதா ஒரு பலிபீடம் நந்திக்குப் பின்னால்.


ஒற்றுமைன்னு பார்த்தால்  மூலவர்களுக்கு அங்கேயும் இங்கேயும் ஒரே பெயர்கள்தான்.  ப்ரஹதீஸ்வரர், ப்ரஹன்நாயகி,  பெருவுடையார், பெரியநாயகி !

சாத்தி இருக்கும் சந்நிதியைப் பார்த்து கும்பிட்டுக்க வேண்டியதுதான். சந்நிதி வாசலாண்டை ஒரு புள்ளையார் இருக்கார்.  அவருக்கும் ஒரு கும்பிடு.  வாசலுக்கு ரெண்டு பக்கமும் துவாரபாலகர்கள்!  பெரிய  உருவங்கள்தான்.  அந்தாண்டை மூலையில்  செல்லம் ஒன்னு பரிதாபமாப் படுத்துருந்துச்சு.  ப்ச்....  நிழல்தேடி வந்துருக்கு .....


நாம் இப்போ உயரமான மேடையில் நிக்கறப்பப் பார்த்தால் சுத்திவர நல்ல பசுமை.  நமக்கு இடப்பாகம்  சிரிச்ச முகமுள்ள சிங்கம்!  ஏறக்குறைய  முன்னால் உக்கார்ந்திருக்கும் நந்தியின் அளவுதான்.  சிங்க வயித்துப்பகுதியில் சின்னதா ஒரு கம்பிக்கதவு.  உள்ளே கிணறு இருக்கு!

ராஜேந்திர சோழன்,  கங்கை வரை படையெடுத்துப்போய்   ஜெயித்து வந்தப்ப,  அந்த வெற்றியைக் கொண்டாட இந்தக் கோவிலைக் கட்டுனதாகவும்,  அப்போ போரில் தோற்ற மன்னர்கள் தலையில் கங்கை நீர் இருக்கும் குடங்களைச் சுமந்துவரச் செய்து இங்கே மூலவருக்கு அபிஷேகம் செஞ்சபிறகு, அந்த அபிஷேக நீரை இந்தக் கிணத்துலே  சேர்த்து விட்டதாகவும் கூட வாசிச்சுருந்தேன்.   கோவிலுக்கு வரும்போதெல்லாம்  கிணத்துத் தண்ணீரைத் தன் தலையில் தெளிச்சுக்கும் வழக்கம் இருந்ததாம்! 

புனைவா என்னன்னு தெரியலை.... ஒருவேளை இருக்கலாம்......  ஆனால் லாஜிக் உதைக்குது....  போகட்டும்.... சிங்கம் இருக்குன்றது உண்மை.  சிங்கக்கிணறு?  கிணத்துக்கு மேலே சிங்கம்  வந்து உக்கார்ந்தது எப்போ? அந்தச் சின்னக்கதவு மூலம்  இறங்கிப்போய் தண்ணீர் இறைப்பாங்களா?  ஆனா ஒரு உண்மையை ஒத்துக்கணும். சிங்கம் நெஜமாவே நல்ல அழகு! கம்பீரமும் கூட!

பெரிய நந்திக்கு வலதுபக்கம் தனியா ஒரு சின்னக்கட்டடம். மூடி இருந்தது. இதுதான் அலுவலக அறைன்னு நினைக்கிறேன்.
கோவிலை வலம் வந்து அப்படியே பார்த்துக்கலாமேன்னு  போனோம். ஒன்றிரண்டு 'கடலைகள்' அங்கங்கே. மத்தபடி  ஒரு சின்னக்குழு ஒன்னு (அஞ்சாறுபேர் இருப்பாங்க)  சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் போற போக்கில் கொஞ்சம் (!)க்ளிக்ஸ்.  இந்தப்பக்கம் ஒரு  கட்டடம் மேல்பகுதி இடிஞ்ச நிலையில்..... 



புதையுண்டு கிடந்த சிற்பங்களையும்,  பழுதுபார்க்கும்போது கிடைச்ச சிற்பங்களையும்  ஒரு மேடையில் வச்சுருக்காங்க.  அதுலே ஒரு விஷ்ணு ரொம்பவே அழகு!   உடைஞ்சு போய், தலை இல்லாத சிற்பங்களைப் பார்க்கும்போது மனசுக்குக் கஷ்டமாப்போச்சு.
இன்னொரு தனிச்சந்நிதி இருக்கேன்னு பார்த்தால் மகிஷாசுரமர்த்தினி. வாசலில் நிற்கும் வாகனங்கள் ரெண்டு.  சிங்கத்தைப்பார்த்தால் வெளியூர் போல இருந்துச்சு.


அப்பதான் பார்த்தேன்...வளாகத்தில் இருக்கும் ஒரு உடைஞ்ச பீடத்தாண்டை ரெண்டு வெள்ளையர்களும் ஒரு இந்தியப்பெண்ணும்  குனிஞ்சு  நின்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க.  இந்தாண்டை   ஒரு  இளைஞரும், நடுத்தர வயதுக்காரரும்.
என்ன நடக்குதுன்னு நாங்களும் போனோம். சின்னதா ஒருமண் அகல்விளக்கை அந்த உடைஞ்ச கல்பீடத்துலே வச்சு அதை உள்ளங்கையால் மூடினால், விளக்கு நகர்ந்து போகுதாம்.  வெள்ளையர்களுக்கு  அந்த இந்தியப்பெண் (கைடு) விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  நகருது பாருங்க....
நெசமாவா?

அவுங்க போனதும்  அந்த இளைஞர் முறை.  நகருதுன்னுதான் அவரும் சொல்றார். நாம் சும்மா இருக்கலாமா? நம்மவர் நகர்தலை உறுதிப் படுத்தினார்.  என்முறை வந்தப்ப.... சின்னதா நிமிஷநேர வீடியோ:-)
சந்நிதிகள் மூடி இருன்னாலும்... முன்மண்டபங்களையாவது பார்க்கலாமுன்னு கோவிலுக்குள் போனோம்.  இளைஞருக்கு நல்ல சிரிச்ச முகம். பேச்சுக்கொடுத்தப்பதான் தெரிஞ்சது  இவர் திரைஉலக சம்பந்தம் உள்ளவர்னு.

சில மலையாளப்படங்களில்  சின்ன வேஷங்களில்   நடிச்சுருக்கார். அந்தக் காட்சிகளை தன் செல்ஃபோனில் சேமிச்சு வச்சுருந்ததைக் காட்டினார். நல்லாத்தான்  இருக்கு நடிப்பு. இப்போ பிரபலமா இருக்கும் சில(!) நடிகர்களின் நடிப்பைப் பார்த்ததால்.... இவருடைய நடிப்பும் ஆக்‌ஷனும் தேவலைன்னு தோணுச்சு. கதாநாயகனாகவே  நடிக்கலாம். நல்ல அம்சமான முகம்..
அப்புறம் முக்கியமான சமாச்சாரமா.... 'நெருப்புடா'ன்னு ஒரு படம் வந்துச்சாமே....   அதுலே  உதவி இயக்குனராகப் பணி புரிந்துருக்காராம்.  இதை அவருடைய அப்பா ஸ்வாமிநாதன் சொன்னார். 
 சொந்த வியாபாரம், விவசாயம் சார்ந்தது.  இன்றைக்கு  'டேட் வித் டாடி' என்று  அப்பாவோடு சின்னசுற்றுலா !  நல்லா இருக்கட்டும்!  தோளுக்கு மேல் வளர்ந்த தோழனுடன் இப்படிச் செலவளிக்க இந்தக் காலத்திலும் நேரம்  அமைஞ்சது பாக்கியம், இல்லையோ!

இந்த நிகழ்வைக் கொண்டாட செல்ஃபி எல்லாம் எடுத்துக்கிட்டோம். என்னுடைய கேமெராவிலேயே  ரெண்டு மூணு செல்ஃபி எடுத்தார் நம்ம ரத்னகுமார்!!    இதுலே என்ன வியப்பா?  இதை நம்ம பக்கம் திருப்பி வச்சால்  லென்ஸ் எந்தப் பக்கம் பார்க்குதுன்னே எனக்குப் புரியாது :-)

  இப்ப ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னே  புதுசா வாங்குன கேமெரா....வில்  செல்ஃபி எடுக்க என்னாலும் முடியும்.  ஸ்க்ரீனை நம்மைப் பார்த்தாமாதிரி திருப்பி வச்சுக்க முடியும். (  SONY DSC WX 500 180-degree tiltable LCD monitor)நானே தேறிட்டேன்னா பாருங்களேன் :-)

கலிகால சம்ப்ரதாயமான   செல் நம்பர், வாட்ஸ் அப் நம்பர்  எல்லாம் கொடுக்கல் வாங்கல் ஆச்சு. நம்மவருக்கு  இந்தப் பையரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  இங்கே நம்மூரில் கோவைப் பையர் ஒருத்தர் இருந்தார்.  படிக்க வந்தவர்தான்.  நமக்கு நல்ல நண்பராகவும் ஆனவர். இப்போ இங்கில்லை. அண்டை நாட்டுக்குத் தாவிட்டார். ஏறக்கொறைய  அவர் ஜாடையில்  இந்தப் பையர் இருந்ததுதான் காரணமுன்னு நினைக்கிறேன். 
எனக்கும் ரத்னகுமாரைப் பிடிச்சுப்போச்சு. காரணம்   அவருக்கு,  அப்பாவுடன் இருந்த  ஒட்டுதல்.  பிள்ளைகள்  பெற்றோருடன்  ஒட்டி இருப்பதே அதிசயமாப்போன காலக்கட்டம் இது, இல்லையோ!
வளாகம் சுத்தமான  பராமரிப்புடன்  பச்சைப்புல்வெளியுடன் அழகாவும் பெருசாவும் இருக்கு!  தஞ்சைக்கோவிலில் இவ்ளோ புல்வெளிகளைப் பார்த்த நினைவில்லை.  பரந்த புல்வெளியில் உடைந்த நந்தி ஒன்னு,  சின்ன வெட்கத்தோடு தலை சாய்த்து உக்கார்ந்திருக்கு.  அழகான  முகபாவனை!
கோவில் கோஷ்டத்தில்  அற்புதமான சிலைகள்!  புள்ளையாரும் தக்ஷிணாமூர்த்தியும் அருள் பாலிக்கிறாங்க. லிங்கோத்பவர் இருக்கார்.  பார்வதிபரமேஸ்வரர்கள் ராஜேந்திர சோழனுக்கு  ஆசி வழங்கறாங்க.




மெயின் கோவிலுக்கு  ரெண்டு பக்கமும் தனித்தனியான சந்நிதிகள். எல்லாமே மூடி இருப்பதால்  தரிசனத்துக்கு வாய்ப்பில்லாமல் போச்சு.
அம்மன் கோவில்னு சொன்னாங்க.  மெயின் கோவிலுக்குள்ளேயும் ஒரு அம்மன் சந்நிதி இருக்கே!

கோவிலோட வரைபடம் இது. பாருங்க ஒரு ஐடியா கிடைக்கும்!
மெயின் கோவிலுக்குள் ஏராளமான தூண்களுடன்  அற்புதமான சிற்பங்கள் இருக்காம். ப்ச்.....  கோவில்   திறந்து இருக்கும் நேரத்தை கவனிக்காமப் போயிட்டேனேன்னு என்னையே  நொந்துக்கிட்டேன்.  சரி. இப்பப் பார்த்தது ட்ரெய்லர்னு வச்சுக்கலாம். இப்பதான் இடம் தெரிஞ்சு போச்சே..... 


அடுத்த முறை காலை நேரத்தில் வந்தே ஆகணும்.  கோவில் திறந்துருக்கும் நேரம்  காலை  6 முதல் பகல் 12 &  மாலை  4 முதல் 8. நினைவில் வச்சுக்குங்க.

வெளிப்புறங்களில் கொஞ்சம் க்ளிக்கின கையோடு அங்கிருந்து கிளம்பிட்டோம்.    மணி இப்போ  ரெண்டேகால். சாப்பிடும் வகையில் சரியான  இடங்கள் ஒன்னும் இல்லைன்னு சீனிவாசன் சொன்னார். வாசலில் நீர்மோரும் தொட்டுக்க சில பதார்த்தங்களும்  இருந்தது.

மெயின் ரோடுக்கு வர்ற வழியில் இளநீர் கிடைச்சது. அது போதும், இப்போதைக்கு!


ஸ்டேட் ஹைவே 81 இல் வந்து சேர்ந்தாச் :-)
தாத்தா, மகன், பேரன்னு மூணு தலைமுறை சோழர்கள் கட்டிய  கலைநயம் மிகுந்த     கோவில்களைக் கொஞ்சமாவது பார்த்தோமேன்ற திருப்தி  இருக்கு இப்போதைக்கு!

கங்கைகொண்ட சோழபுரம் ஆல்பம் ஒன்னு ஃபேஸ்புக்கில் இப்பதான் போட்டேன். நேரம் இருந்தால் பாருங்க.

தொடரும்.... :-)




PINகுறிப்பு:   இப்போதான் கங்கைகொண்டசோழபுரம் பற்றிய விவரங்கள் ஒன்னு  அரச தொல்லியல்துறை போட்டது  எடுத்து வச்சுருக்கேன். அம்பத்தியேழு பக்கங்கள். நின்னு நிதானமா வாசிச்சு, குறிப்பெழுதிக்கிட்டு அடுத்த முறை போகணும். சுவாரசியமா இருக்கு!