Wednesday, November 22, 2017

அவள் பெயர் தெய்வநாயகி (இந்திய மண்ணில் பயணம் 79 )

பனிரெண்டு நிமிட்டில்  தாராசுரம் போயாச்சு! நம்மவர்  ஐராவதேஸ்வரரை நோக்கி வெளிமுற்றத்துப்  படிகளில் இறங்கிப்போறார்.  எனக்கென்னவோ....  கோவிலுக்கு முன்னால் இருக்கும் சிதிலமான இன்னொரு கோவிலுக்குப் போய்ப் பார்க்கணுமுன்னு  இருக்கு.  அங்கே போயிட்டு வரலாமுன்னு சொன்னேன்.
ஐய்ய....  அது கோவில் இல்லை.  இந்தக் கோவிலுக்கு வரும் வாசல்னு சொல்றார் இவர்.  நெசமாவா.....   ஆமாம். அது ராஜகோபுர வாசல். கோபுரம்  கட்டலை போல.... இல்லே ஒருவேளை  கட்டுன கோபுரம்  இடிஞ்சு போயிருச்சா? ஸ்டைலே இப்படித்தானோ?
இன்னும் நல்லாக் கவனிச்சால்..... நாந்தான் அங்கே கோவில் இருக்குன்னு நினைச்சு ஏமாந்துருக்கேன். இப்படித்தான் பாலியில்  ஒரு டிஸைனை ரெண்டா வகுந்து  இடவலம் மாற்றி வச்சதுபோல் இருப்பதைப் பார்த்து அந்தாண்டை என்ன கோவில்னு நினைச்சு குழம்பினது :-)
அப்ப   நாமெல்லாம் பின்வாசல் (?) வழியாதான் வந்துக்கிட்டு இருக்கோமா!!!

அம்மன் சந்நிதி இங்கே தனிக்கோவிலா பக்கத்துலேயே இருக்குன்னு தெரிஞ்சாலும் போனமுறை நேரம் அமையலை. இங்கே ஐராவதேஸ்வரர் கோவிலுக்குள்ளே நுழைஞ்சபோது  அப்படியே நம்மைக் கட்டி இழுக்கப்போகுதுன்னு  யாருக்குத் தெரியும்? அப்படியும்  முக்கால்வாசி பாக்கி வச்ச மாதிரிதான்! நாப்பாதாயிரம் சிற்பங்கள்!!!!   மூணு மணி நேரம் எப்படிப்போதும்?  மூணு மாசம் வேணாமோ?

அப்போ ஐராவதேஸ்வரர் கோவிலைப்பற்றி எழுதுனது இங்கே!

இப்பவும் நேரக்குறைவுன்றதால் முதலில் அம்மன் கோவிலைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துடலாமேன்னு.....
நம்ம ஜம்புலிங்கம் ஐயா அப்பவே கேட்டார் அம்மன் கோவிலைப் பார்க்கலையான்னு....    வேளைன்னு ஒன்னு வரணுமே....  இப்ப  வந்துருக்கு :-)

தொல்லியல்துறையின் கண்காணிப்பில் இருப்பதால் இடம் பளிச்!

நம்மைத் தவிர வேற யாரையுமே கண்ணுலே காணோம்!  இந்த மாதிரி இடங்களில் விளக்கிச் சொல்ல ஒரு வழிகாட்டி இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்?  சுற்றுலாத்துறையில் கைடு சர்வீஸ்  ரொம்ப முக்கியம் இல்லையோ?

குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் என்னும் நூலில்  அருமையான விவரங்கள் இருக்குன்னும்  நம்ம ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் எழுதி இருந்தார். இதைப்போல கோவில் விவரங்கள் உள்ள புத்தகங்களையாவது அந்தந்தக் கோவில்களில் விற்பனைக்கு  வச்சால் கூட நல்லா இருக்கும்!

 தலபுராணம்  கிடைச்சால்  நம்மவர் உடனே வாங்கிருவார். எனக்கு எழுத மேட்டர் தேத்தித் தரும் ஆர்வம்தான் :-)
முகப்பு வாசலைக் கடந்து உள்ளே போறோம்.   கண்ணை அப்படியே இழுத்து நிறுத்தும் மண்டபம். உச்சியில்  கஜலக்ஷ்மியா என்ன?  இது சிவன் கோவில் இல்லையோ?   நந்தி  மதில்மேல் இருக்காரே....
உயரமான மண்டபத்தின் கீழ்ப்புறம் யானை வரிசை!  அதன் கீழ் மூணு பகுதியா சிற்பங்கள். எல்லாத்தையும் விட அதிசயமாத் தெரிஞ்சது  ரெண்டு பக்கங்களிலும் இருக்கும்  விசித்திரமான  மிருகம்!  அதில் சவாரி செய்யும் மனிதன்!  யானை, சிங்கம், யாளி எல்லாம் சேர்ந்த ஒரு கலவை!
மண்டபத்திற்குள் ஏறிப்போகப் படிகள்   இரு பக்கங்களில் இருக்கு.   வலம்  போகும் வழியில்  இருக்கும் படிகளில் ஏறி,  மண்டபத்தில்   நந்தியும் பலிபீடமும் கருவறையைப் பார்த்தபடி இருக்க, நாம்  நந்தி ஸாருக்கு ஒரு கும்பிடு போட்ட கையோடு கருவறை நோக்கிப்போறோம்.  நமக்கிடதுபக்கம் புள்ளையார்!  அவரை வணங்கிட்டு நேரே போக வேண்டியதுதான்.மஞ்சள் புடவையில் தெய்வநாயகி.  இவளுக்குப் பெரிய நாயகி, வேத நாயகின்னு இன்னும் ரெண்டு பெயர்கள் இருக்கு! குருக்கள்   வந்து பூஜையை முடிச்சுட்டு, விளக்கு ஏத்தி வச்சுட்டுப் போயிருக்கார்.  தன்னந்தனியே நிற்கும் அம்மனைப் பார்த்தால் எனக்கு மனசில் பாவமா இருந்தது உண்மை.

பனிரெண்டாம் நூற்றாண்டு கோயில்.  அந்தக் காலத்துலே  கொண்டாடி இருக்கும் சனம்! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்தானே?
பக்கத்துக் கோவிலில்  அம்மனுக்கு ஒரு தனி  சந்நிதி இருக்கு,  வாசலில் துவாரபாலகிகளோடு!  இங்கேதான் தன்னந்தனியாக.....       ஆமாம்....

தனிக்கோவில் அப்புறமாக் கட்டி இருக்கலாமோ?  அம்மன் சந்நிதியில்  மூலவருக்கு முன்னால் சிம்மம் வச்சுருப்பாங்கதானே?  இங்கே ஏன் நந்தி இருக்கார்?  அந்தந்த தெய்வத்துக்கு அவரவர் வாஹனம் இல்லையோ? வடக்கே எல்லாம் அம்பாள் சந்நிதியில் ஆமை இருக்கும். அது அவள் வாஹனம்! 

வெளிப்புறத்தை வலம் வர்றோம்.  கோஷ்டத்தில் இருக்கும் சிலைகள் கொள்ளை அழகுன்னா.....வெளிப்புறச் சுவர்கள் முழுசும் சிங்கங்களின் வரிசை!   எல்லாம் நின்றமேனிக்கு நாக்கைத் தொங்கப்போடுதோ? சிங்கமா இல்லே யாளியா?

விதவிதமான பலகணிகள் வேற!    எப்படித்தான் செதுக்குனாங்களோ!!! கோவிலுக்குள் போயிட்டால் வெயிலே தெரியாது.....

இந்தக் கோவில்களைப் பார்க்கும்போது நம்ம தஞ்சை பெருவுடையார் கோவில் ஞாபகம் வர்றதைத் தடுக்க முடியலை.    ஏறக்குறைய அதே ஸ்டைலில் இருக்குதோ..... தாத்தா கட்டுனது தஞ்சையில், பேரன் கட்டுனது  இங்கே  தாராசுரத்தில்.  இந்த ஊருமே  அந்தக் காலத்தில்  பழையாறை என்ற பகுதியைச் சேர்ந்ததுதானாம்.  பழையாறைன்னதும்  பொன்னியின் செல்வனும் குந்தவையும் சட்னு வந்து மனசுக்குள்ளே மணை போட்டு உக்காந்துடறாங்க!

உடைஞ்ச சிலைகளை அங்கங்கே ஒருமாதிரி  பழுது பார்த்துருங்காங்க போல....
கல்லுக்கு கலர் மேட்ச் ஆகலை....  ஆதியில்  என்ன கல்லில் செதுக்கி இருப்பாங்க........
ஆனா ஒன்னு..... பக்கத்துக்கோவிலில் ஏராளமான சிற்பங்கள் இருக்குன்னாலும்....    இங்கே அம்மன் கோவிலில் இருப்பதுதான் ரொம்பக் கூட்டம் போடாம நீட் அண்ட் க்ளாஸியா இருக்குன்னு எனக்கொரு தோணல்.

மனசில்லா மனத்தோடு வெளியில் வந்தேன்.  பக்கத்துலே இருக்கும் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கும் போகணுமுன்னு சொல்லும்போதே....
நம்மவர் இன்னொரு பெயரை என் காதில் போட்டார் !!! இதுவரை நம்ம திட்டத்தில் இது இருக்குன்னே எனக்குத் தெரியாது!

நம்மவர்கிட்டே இருக்கும் பல நல்ல குணங்களில் ஒன்னு, நான் எப்பவாவது பேச்சு வாக்கில் இங்கே போகணும், அங்கே போகணுமுன்னு சொல்லி இருந்ததையெல்லாம்  கவனமா ஞாபகம் வச்சுருந்து, சமயம் வரும்போது அங்கே  கூட்டியும் போவார்.

பெயரைக் கேட்டதுமே மனசு பறக்க ஆரம்பிச்சது.  ராயாஸுக்குத் திரும்பினோம். சின்ன ஓய்வுக்குப்பிறகு கிளம்பணும்.   மணி இன்னும் பதினொன்னரை கூட ஆகலை.  பசி வேற இல்லைன்றதால்,  கொஞ்சம் ஜூஸ் மட்டும்  போதும். நம்ம சீனிவாசனை சாப்பிட அனுப்பிட்டு அவர் வரும்வரை  வலை மேயல்.

அவரும்  பசி இல்லைன்னுட்டு  டீ குடிச்சுட்டு வந்தார்.  பகல் ரெண்டு மணிக்குத்தான் சாப்பாட்டு நேரமாம்.

உச்சிவெயில் பாழாப்போகுதேன்னு   கிளம்பிட்டோம். ஒரு முப்பத்தியஞ்சு கிமீ பயணம்.....

தொடரும்.........  :-)


PINகுறிப்பு: தெய்வநாயகியைத் தரிசனம் செய்யப்போய்.... மனசுக்குள்ளே ஏகப்பட்ட கேள்விகள். அடுத்த முறை சென்னை போனதும்  தாராசுரம் புத்தகம் கிடைக்குமான்னு தேடிப் பார்க்கணும். கையேடு வாங்கின கையோடு இன்னொருக்கா  தாராசுரம் போகணும்.  பெருமாளிடம் கோரிக்கை வச்சுருக்கேன்.  பார்க்கலாமுன்னு  'இவர்' மூலம் சொல்லி இருக்கார் :-)

படக்குறிப்பு :-)  தெய்வநாயகி கோவில் ஆல்பம் ஒன்னு ஃபேஸ்புக்கில் போட்டுருக்கேன்.  விருப்பமும் நேரமும் இருந்தால் எட்டிப் பாருங்க !

16 comments:

said...

அப்பாடி... அவ்வப்போது நான் கூட சென்று வந்த இடங்களை பற்றி நீங்கள் எழுதும்போது ஒரு தனி உற்சாகம் வருகிறது! நானும் இங்கு ரசித்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.

said...

அருமை. ஆல்பமும் பார்த்தாச்சு

said...

Super. ஆல்பமும் பார்த்தாச்சே!

said...

அருமை நன்றி தொடர்கிறேன்

said...

தாராசுரத்தைப் பார்த்த நினைவை மீண்டும் கொண்டுவந்துவிட்டீர்கள். நான் அம்மன் சன்னிதியைப் பார்க்கவில்லை. தொடர்கிறேன்.

said...

தாராசுரத்துக்க்கு போகனும்ன்னு ரொம்ப நாள் ஆசைம்மா

said...

நானும் முதலில் தஞ்சை பெரிய கோவில் போல் உள்ளது என்று தான் நினைத்தேன்....பின் நீங்களும் அதையே சொல்லிருகீங்க....

தெய்வநாயகி அம்மனும்....கற்சிலைகளும் மிக சிறப்பு...

said...

எனக்குத் தெரிந்து அம்மன் சன்னதி என்பதானது தனியாக ஒரு கோயிலாக அருகில் உள்ளது இங்கு மட்டும்தான் என நினைக்கிறேன். நன்கு ரசித்து எழுதியுள்ளீர்கள். நான் இக்கோயிலுக்கு கடந்த வாரம்கூட சென்றுவந்தேன். எத்தனை முறை சென்றுவந்தாலும் பார்க்கப் பார்க்க ஆவலைத் தூண்டும் கோயில். நம்மவர்கள் இதுபோன்ற கலைப்பொக்கிஷங்களைத் தேடிப் பார்ப்பதோடு தம் வாரிசுகளுக்கும் இதுபற்றிக் கூறவேண்டும், அழைத்துச் செல்லவேண்டும். பதிவில் நீங்கள் கூறியுள்ள, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரணியன் அவர்களின் நூலை வாசிக்க வேண்டுகிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

எனக்கும் ஏற்கெனவே பதிவுகளில் இருக்கும் இடங்களைப் பார்த்தவர்கள் பின்னூட்டினால் ரொம்பவே மகிழ்ச்சிதான். அதே சமயம் நாம் சரியாச் சொல்லி இருக்கோமான்றதுக்கு ஒரு சாட்சி கிடைச்சுருதுல்லையோ!!!

said...

வாங்க சுப்ரமணியன் நாராயணன்.

மகிழ்ச்சி & மகிழ்ச்சி!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நானும் முதல் முறை அம்மன் சந்நிதி பார்க்கலை. ரெண்டாம் முறை போனபோது லபிச்சது!

said...

வாங்க ராஜி.

ஒருமுறை கண்டிப்பாப் பார்க்க வேண்டிய இடம்தான். காலையில் கொஞ்ச சீக்கிரமாப் போனீங்கன்னா....வெய்யில் சூடு பிடிக்கறதுக்குள்ளே நின்னு நிதானமாப் பார்க்கலாம். குறைஞ்ச பட்சம் ஒரு முழுநாள் ஒதுக்கப் பாருங்க. ரெண்டு கோவில்களையும் பார்க்க நேரம் சரியா இருக்கும். ஆயிரக்கணக்கில் சிற்பங்கள் இருக்குப்பா!!!

said...

வாங்க அனுராதா பிரேம்,

ரசிப்புக்கு நன்றிப்பா !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

கலைப்பொக்கிஷம்தான்! அள்ள அள்ளக்குறையாத அழகு!

குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்களின் புத்தகம் பற்றியே உங்கள் பதிவு மூலம்தான் தெரிய வந்தது.

அடுத்த பயணத்தில் புத்தகம் கிடைக்குமான்னு பார்க்கணும்.

said...

தாராசுரம் சிற்பங்கள் - ஆஹா என்ன அழகு. சிற்பங்களை ரசித்துப் பார்க்கவே, கூடவே புகைப்படமும் எடுக்கவே ஒரு முறை போக வேண்டும்.

தொடர்கிறேன்.