Friday, November 17, 2017

காசிக்குப் போகாமலேயே பாவத்தைத் தீர்க்கணுமா? (இந்திய மண்ணில் பயணம் 77 )

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கே...  காலையில் கண் முழிச்சதும்  இங்கே குளம் பார்க்கணும்.  கரைக்கு  இந்தாண்டை இருக்கும் கோவில் கோபுரத்தைப் பார்த்து கும்பிடு போட்டுக்கணும். சூரியன் வந்துட்டானான்னு  தேடணும் :-)  அதே போல் எல்லாம் ஆச்சு.  கோபுரதரிசனம்  கோடி புண்ணியம் இல்லையோ?
அந்தக் கோவில் என்னன்னு தெரியலையேன்னு....  கெமெரா மூலம்   கோபுரத்தைக் கிட்ட வரவழைச்சுப் பார்த்தேன். காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் !  போகணுமுன்னு தோணல். இன்றைக்கே போனால் என்ன?

அறைக்குத் திரும்பினால் காஃபி வந்து காத்திருக்கு!  நம்மவர்  சொல்லி இருக்கார்!  அப்போ அவ்ளோ நேரமாவா ஜன்னலாண்டை  நின்னுருக்கேன்!

சட்னு குளிச்சு முடிச்சுத் தயாராகிக் கீழே வந்து ரைஸ் அன் ஸ்நாக்ஸ் போனோம்.  நம்ம  ஹயக்ரீவா போலவே   ராயாஸ்லேயும்   காலை உணவு  ஹொட்டேல் தராது.  அறை வாடகை குறைவு என்பதால் இது பிரச்சனையே இல்லை. தோ....வாசலில் எல்லாம் கிடைக்குதே!

எதிரில் இருக்கும் கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம்.  ராஜகோபுரம் பளிச்ன்னு புது வண்ணங்களோடு இருக்கு.  இங்கே மஹாமகத்து சமயம், இந்தக் கோவிலுக்கு ரொம்பவே மகத்துவம் என்பதால்  இப்போ ஒரு எட்டு மாசத்துக்கு முன் நடந்த கும்பமேளாவுக்காக புதுவண்ணம்  பூசி இருக்கலாம்.
தெருவின் ஆரம்பத்துலேயே கோவிலுக்கு ஒரு அலங்கார வாசல் வேற வச்சுருக்காங்க. ஆனா  இதுலே அஷ்டலக்ஷ்மிகள் இருக்காங்களே!!!
சனம் பாவம் தீர்த்துக்கப் புண்ணிய நதிகளில் போய் நீராடுவது  பழக்கம்.  செஞ்ச பாவம் எல்லாம் அப்படியே  உடம்பில் இருந்து தண்ணியோடு போயிரும்னு ஒரு நம்பிக்கை. (மனசு அழுக்கை  போக்க என்ன பண்ணனும்? )
மக்கள் பாவமூட்டைகள் எல்லாம் புனித நதிகளில் கரைஞ்சு நதிக்கு பாரமாப் போயிருது.  பாவம் இந்த நதிகள்.  எல்லாம் பெண்கள் வேற!  அடுத்தவங்க  பாவத்தைச் சுமக்கும் பெண் ஜென்மங்கள்  :-(
நம்ம நாட்டுலே பாருங்க..... ரெண்டே  ரெண்டு நதிகளைத் தவிர எல்லாமே  பெண் நதிகள்தான்! செவன் அவுட் ஆஃப் நயன்.
ஒரு கட்டத்தில் பாவமூட்டையின் கனம் தாங்கமுடியாமல்  நதிகள் எல்லாம் சேர்ந்து பேசி (நதிநீர் இணைப்பு !) சிவபெருமானிடம்  முறையிடறாங்க. அவரும்  ஐயோ பாவம்.... இந்த நதிகள்னு,   பாவம் போக்கும் உபாயம் ஒன்னு சொல்றார்!
"நீங்க எல்லோரும் காசி மாநகரத்துக்கு  வந்துருங்க. நான் உங்களையெல்லாம் ஒரு இடத்துக்குக் கூட்டிப்போறேன். அங்கே போனதும்  உங்க மேல் இருக்கும் அடுத்தவர்களின் பாவமூட்டை  உங்களைவிட்டு அகலும்."

கங்கை, யமுனை,  சரஸ்வதி, நர்மதா , காவேரி, கோதாவரி,  சரயு, கோதாவரி, சிந்துன்னு எல்லோரும் காசிக்குப்போய்ச் சேர்ந்தாங்க.

காசி விஸ்வநாதரும்  காசி விசாலாக்ஷியுமா, நதிப்பெண்களையெல்லாம் கூட்டிக்கிட்டு  அங்கிருந்து கிளம்பி  பிரளய காலத்தில்  அம்ருதம் நிறைஞ்ச கும்பம் போய்ச்சேர்ந்த   புண்ணிய ஸ்தலமான கும்பகோணம் வந்தாங்க.
இந்த மாஹாமகக்குளத்துலே  இருபத்தியோரு புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதா ஒரு ஐதீகம்.  நதிப்பெண்களை  இந்த மஹாமகத் தீர்த்தத்தில்  முங்கச் சொன்னவுடன், அவுங்களும் முங்கி எழுந்தாங்க.  சுமந்துருந்த பாவ மூட்டை 'பணால்' ஆச்சு :-)

அப்ப இங்கே வந்த இந்த டூர் க்ரூப் முழுசும் இங்கேயே தங்கி நமக்கு அருள் பாலிக்கிறாங்க. இதுதான் தெய்வ மனசுன்றது!  நம்பும்   எல்லோருக்கும்  கருணை காமிக்க வேணும்!
இங்கே மஹாமகக்குளத்தில் நீராடி,  காசி விஸ்வநாதரையும், காசி விசாலாக்ஷியையும் வணங்கினால் அஷ்ட ஐஸ்வரியமும் லபிக்கும். ஓ.... அதுதான் வரவேற்பு வளைவில் அஷ்டலக்ஷ்மிகள் இருக்காங்களோ!!!!

மற்ற  புண்ணியத்தலங்களில்  பண்ணும் பாவம், காசிக்குப்போனால் தீரும். காசியில் பண்ணும் பாவம், கும்பகோணத்துக்குப் போனால் தீரும்.
கும்பகோணத்தில் பண்ணும் பாவம், இதே கும்பகோணத்தில் தீந்துருமுன்னு  நம்பிக்கை.  எழுதிப்போட்டுருக்காங்க.   நம்பணும். நம்புனால்தான் சாமி !

 அஞ்சு நிலை ராஜகோபுர வாசலுக்குள் நுழையறோம்.  கண்ணெதிரே கொடிக்கம்பம்.  கோபுரவாசலையே 'பார்க்கிங் ப்ளேஸா' பயன்படுத்துது சனம் :-(

கோவிலுக்குள் யாருமே இல்லை......   குருக்கள் கூட காலை உஷத்கால பூஜையை முடிச்சுக்கிட்டு சந்நிதி கம்பிக் கதவைப் பூட்டிக்கிட்டுப் போயிருக்கார்.  ஒருவேளை ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போயிருக்காரோ என்னவோ?
உண்மையான ஏகாந்த ஸேவை நமக்கு லபிச்சது!  காசி விஸ்வநாதரையும், காசி விசாலாக்ஷியையும் வணங்கினோம்.   மூலவர் கருவறை வாசல் மண்டபத்தில் நவநதிகளுக்கு ஒரு சந்நிதி. நல்ல ஆளுயரச் சிலைகள். நவகன்னிகைகள் சந்நிதி! நடுநாயகமா  நம்ம காவிரி!
பிரகாரம் வலம் வந்தோம்.   கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி!  இவருக்கு ஒரு  கம்பிக்கதவு போட்டுருக்காங்க.  ராயாஸ் உபயம்:-)
சின்ன மாடத்தில் நம்ம ஆஞ்சி. வீர ஆஞ்சநேயர். இன்னொரு மாடத்தில்  மகிஷாசுர 'வ'ர்த்தினி !


கோவில் நல்ல சுத்தமா இருக்கு என்பது  மகிழ்ச்சி.   குருக்கள் இருந்துருந்தால்  கொஞ்சம் கூடுதல் விளக்கம் கிடைச்சுருக்கும்.  படங்கள் எடுக்க அனுமதியும் வாங்கி இருக்கலாம்.  இப்ப நம்ம பொறுப்பே என்பதால் தயங்கித் தயங்கி ஏழெட்டுப் படங்களோடு முடிச்சுக்கிட்டேன்.   இது பாவக்கணக்கில் வருமோ?
வலம் முடிச்சு மூலவரை இன்னொருக்கா கும்பிடலாமுன்னு போனால் பக்தர்  ஒருவர், சண்டிகேஸ்வரர் முன்னால் நின்னு கும்பிட்டுக்கிட்டு இருந்தார்.  கொடிமரத்தாண்டையும் இன்னொரு பக்தர் !  உள்ளூர் மக்கள்னு நினைக்கிறேன். ஒருவேளை  ரெண்டு படத்தில் இருப்பவரும் ஒரே நபர்தானோ?   ஙே.....

பளிங்குக் கல்வெட்டில்  முதலமைச்சரின்  சீர்மிகு பொற்கால ஆட்சியில் குடமுழுக்கு நடந்ததாக ஒரு தகவல். (நாம் அந்தக் கோவிலுக்குப் போனது அக்டோபர் 24, 2016.  அந்த சமயம் உடல் நலமில்லைன்னு  அப்பல்லோவில் இருந்தாங்க.  நலம் பெறணுமுன்னு  அன்னைக்கு வேண்டிக்கிட்டேன். இப்போ இந்தப் பதிவு எழுதும்போது  அவுங்க இந்த உலகில் இல்லை.... ப்ச்..... )

வண்டிக்குத் திரும்பும் போது குளத்தாண்டை அகத்திக்கீரை வித்துக்கிட்டு இருந்தார் ஒருவர்.  கண்ணைச் சுழட்டினால் மாடு ஒன்னும் அப்போ தென்படலை....  இருந்தால்  கொஞ்சம் வாங்கிக் கொடுத்துருக்கலாம். புண்ணியமா இருந்துருக்கும்....


சக்கரராஜா கோவிலுக்குப்போறோம்....  சாலைகளில்  இன்னும்  மக்கள் கூட்டம்  ஆரம்பிக்கலை....   பழைய ராயாஸ் அருகில்  பஸ் நிறுத்தம் ஒன்னு அருமை!!  வெயில், மழை கொள்ளாமல் பஸ் வரும்வரை  உக்கார்ந்து ஓய்வெடுக்கும் வகையில்  இருக்கு!  கும்பகோணம் நகராட்சி நல்லாதான் ஊரை கவனிச்சுக்குது!
கோவில் வாசலில் போய் இறங்கும்போது சரியா மணி ஒன்பதரை :-)

 தொடரும்.....:-)


12 comments:

said...

படங்கள் வழக்கம்போலவே அழகு. டெக்னாலஜியை உபயோகித்து கோவில் பெயர் தெரிந்து கொண்ட சமயோஜிதத்தை ரசித்தேன்.

said...

உங்கள் மூலம் காசி விஸ்வநாதர் கோவில் தரிசனம்.

படங்கள் வழமை போல சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி தொடர்கிறேன்

said...

காசி விசுவநாதர் கோவிலின் கடந்த கும்பாபிஷேகம்கண்டிருக்கிறோம் கருணாநிதியை கைது செய்த ஓரிரு நாட்களில் நடந்தது

said...

கும்பகோணத்துல ஒரு காசி விசுவநாதர் இருக்காரா... வடக்கத்திய ஆறுகளா இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்துதான் பாவமன்னிப்பு வாங்க வேண்டியிருக்கு. அப்படியே இன்றைய அரசியல் போல இருக்கு.

அகத்திக்கீரை எந்த மாட்டுக்கும் அன்னைக்கு கொடுத்து வைக்காமப் போச்சு.

காவிரித்தாய்க்கு கட்டிய சேலை நல்லா இல்லையே. கோவிச்சுக்கப் போறாங்க. கலரே ரொம்ப டல்லா சிந்தெடிக் மாதிரி இருக்கு.

said...

டீச்சர், பாவம் செய்யாமல் இருக்கறது எப்படின்னு சொல்றதுக்குப் பதிலா, சேர்த்த பாவத்தை எப்படித் தீர்ப்பதுன்னு ஐடியா சொல்றீங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு. தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

டெக்னாலஜி இஸ் கான் ஃபார் டூ மச் இல்லையோ :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கொடுத்து வைத்தவர் நீங்க. அந்த சமயம் அங்கே போக வாய்ப்பு கிடைச்சது அருமை!

said...

வாங்க ஜிரா.

அரசியல் எப்பவும் ஒன்னுபோலவே இருக்கு போல :-)

நம்ம பக்கங்களில் பொதுவா சிந்தெடிக் சேலை, கோவில் சிலைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. இது வடக்கர்கள் கோவிலில்தான் அதிகம். எல்லா சிலைகளும் ஜிலுஜிலுன்னு ஒரே டிஸைன்லே யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு இருக்கும்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தெரிஞ்சு செஞ்சபாவம், தெரியாமல் அறியாமையால் செய்த பாவம்னு பலரகங்களில் பாவம் இருக்கே!