Friday, November 10, 2017

லலிதையும் ஸ்ரீதேவியும் பின்னே துள்ஸியும்.... (இந்திய மண்ணில் பயணம் 74)

தூங்கப்போகுமுன்....  'ஏங்க  நாளைக்குக் காலையில் நாலு மணிக்கு...'ன்னு ஆரம்பிக்கும்போதே...  'நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்குப் பயணம் இருக்கு'ன்றார் இவர்.

"அதான்....நாளைக்குக் கிளம்பிடுவோமில்லே....   ஆண்டாள் கூடவே  அம்மா மண்டபம் வரை....  "

"அதான் இன்றைக்கு ஆண்டாளைப் பார்த்தாச்சுல்லே! நாளைக்குக் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுப்பறேன்"

எழுப்பிட்டாலும்..........

பின்தூங்கி பின் எழும் பழக்கம் எனக்கு என்பதால்தான் பிரச்சனையே....
காலையில் விழிப்பு வந்தபோது மணி ஆறு பத்து. சுத்தம்..... அப்படியும் கீழே ஓடிப்போய் தெருவைப் பார்த்தேன்.  நம்மைக் கடந்துபோகும்போது  கண்ணில் படமாட்டாளா?

"போயாச்!"   சொன்னவர்  கீழே இருக்கும் செக்யூரிட்டி.

ஆனது ஆச்சுன்னு  குளிச்சு தயாராகி  காலை காஃபிக்கு கீழே பாலாஜி பவனில் சரணடைந்தோம்.  டிஃபன் ரெடியாம்.  ஆய்க்கோட்டே.... இட்லி வடை பொங்கல் காஃபி .  சாப்பிடும்போது ஒரு குட்டி தோசையும் வந்தது! மினி டிஃபனாம் :-)

அறைக்குப்போய் துணிகளை பேக் செஞ்சு முடிச்சுட்டுக் கோவிலுக்குப் போனோம். இணக்கமான புன்னகை  கவுன்ட்டர் இன் சார்ஜிடமிருந்து.  இன்றே கடைசின்னு தகவலும் சொல்லியாச்:-)

கோவிலில் நல்ல கூட்டம்!  நம்மவராண்டை சொன்னேன்.... 'ஓடக்கூடாது. நின்னு நிதானமாப் பார்த்துட்டுத்தான்  போகணும் ' தலையாட்டினார் :-)
ரங்கவிலாஸ் மண்டபத்தையொட்டி இருக்கும் கல்கொடிமரத்தில் ஆரம்பிக்கலாம்.  பூட்டுக்கள் அளவு கொஞ்சம் குறைஞ்சுருக்கு  :-)
தேங்காய் உடைக்கும் அமைப்பும், தேங்காய்த் தண்ணீர் பிடிச்சுக்க அண்டாவும்!  அட!   இது எப்போ?
ஒன்பது படிகள் ஏறிப்போகும் அளவுக்கு  இருக்கும் பெரிய பலிபீடத்தில் சுத்திவர சிற்பவேலைகள்.  இதென்ன நாய்க்குட்டியைத் தூக்கி வச்சுக் கொஞ்சறாப்போல இருக்கே!!!
பீடத்தைச் சுத்திப் பார்க்க முடியாமல் ஒரு பக்கம் ஆஞ்சிக்கான சந்நிதி ! பிற்சேர்க்கையாக இருக்கலாம்.
இப்பச் சக்கரத்தாழ்வாரா இல்லை உள் ஆண்டாளான்னு  யோசிக்கும்போதுதான்.... ரெண்டும் வேணாம். பேசாமக் கண்ணாடி அறை ஆண்டாளைப்போய் தரிசிக்கலாம்னு சட்னு ஒரு தோணல்.

 நம்மவர்வேற ...  கொடிமரத்தில் இருந்து ஆரம்பிக்கறதைப் பார்த்துட்டு அரண்டு போய் நிக்கறார்.  இந்தக் கணக்குலே பார்த்தால்  முழுசும் முடிக்க ரெண்டுநாள் ஆகாதோ?  கண்ணில் தெரிஞ்ச திகிலைப் பார்த்ததும் ரூட்டை மாத்திட்டேன்  :-)

 சரி சரி.... எதானாலும் முதலில் நம்ம பெரிய,  பெரியதிருவடியை தரிசனம் பண்ணிக்கிட்டு கருடமண்டபம் வழியாப்போகலாம்.   விடுவிடுன்னு கார்த்திகை கோபுரவாசலுக்குள் நுழைஞ்சேன். சந்நிதி திறந்துருக்கு!   ஒரு நிமிஷம் கண்ணை மூடி  அவரை மனசுக்குள் இருத்திக் கும்பிட்டேன். 
மண்டபத்தின் அந்தாண்டைப் பக்கம் இருக்கும் பிரசாத ஸ்டால்தான் மக்களை கவர்ந்து இழுக்குதோன்னு சம்ஸயம் :-)

வாகனங்களுக்குக் கவசம் தயாரிக்கும்  வேலை செய்யறவங்க வந்து வேலையை ஆரம்பிச்சுருந்தாங்க. அந்தாண்டை நம்ம ஆண்டாளின் இடம் காலி.  மணல் நிரப்பிய தரையைப் பார்த்ததும்....  குழந்தைக்கு உடம்பு சரியாகணுமேன்ற கவலை வந்துச்சு. பெருமாளே   கொஞ்சம் தயை காமிக்கப்டாதோ?  எதா இருந்தாலும்  கர்மா மேல் பழியைப் போட்டால் ஆச்சுன்னு இருக்கானோ என்னவோ?
மண்டபம் மண்டபமா விரிஞ்சு போறது ஒரு பக்கமுன்னா.... ஒவ்வொரு மண்டபத்திலும் எக்கச் சக்கமான தூண்கள் ஒரு பக்கம். ஒரு ஒத்தைத் தூணைக் கூடச் சும்மா விட்டுவைக்காமல்  சிலைகளையும் சிற்பங்களையும் செதுக்கி  வச்சுருக்காங்க அந்தக் காலத்தில்!  இந்த கருட மண்டபத்தில் மட்டும் இருநூத்திப் பனிரெண்டு தூண்கள் இருக்குன்னா பாருங்க !!
ஆர்யபடாள் வாசலுக்குள் போகாம, இடப்பக்கம் இருக்கும்  ஸ்ரீகொட்டாரம் பார்த்துட்டே போகலாம். போனமுறை இடிஞ்ச நிலையில் இருந்ததைப் பழுது பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அநேகமா வேலை முடிஞ்சுருக்கும்னு  செங்கமலவல்லி நாச்சியார் சந்நிதிக்குள் போனால்.... 
நெசமாவே வேலைகள் முடிஞ்சு பளிச்ன்னு நிக்குதுகள் !  ஒன்னு மட்டும் இன்னும் பெயின்டுக்குக் காத்து நிக்குது!   கோவிலுக்கு நெல் அளக்குறவங்க, பெருமாளை ஏமாத்தாமல் அவருக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுத்தாலே இந்த அஞ்சும் நிரம்பி வழிஞ்சுரும்! 

மேலப்பட்டாபிராமர் சந்நிதி மூடி இருக்கு. அடுத்துள்ள  நம்மாழ்வார் சந்நிதி திறந்துருக்கு. நாம் போற சமயம் எது திறந்து இருக்கோ அங்கெ போய் கும்பிட்டுக்கணும். கோவில் முழுசும் எல்லா சந்நிதிகளும் திறந்துருந்த காலம் ஒன்னு அந்தக் காலத்தில் இருந்துருக்கும். இனி இல்லை என்பதே உண்மை....

கிடைச்சவரை பாக்கியம். தீர்த்தக்கரை வாசுதேவர் அருள்பாலித்தார். தன்வந்திரியும் நம்மை ஏமாத்தலை.  இவருக்கு நல்ல டிமாண்டு இருக்கு  இப்போ!  தனியாக அறிவிப்பு எல்லாம் போட்டு வச்சுருக்காங்க.   இந்தச் சந்நிதி திறக்கும் நேரம்கூட எழுதிப்போட்டுருக்காங்க. குடும்ப ஆரோக்கியம் என்னும்  கொக்கியைப் போட்டு,  தங்கக்கவசம் சார்த்தினால்.... (நோய் நொடி உன் வம்சத்துக்கே இல்லை !)நல்லது. வெறும் ஆயிரத்து ஐநூறுதானாம்!
இந்த சந்நிதிக்கு நேரெதிரேதான் சொர்கவாசல் கதவு. எப்பவும் என்னைப் பிடிச்சு இழுக்கும் இடம் இது! 

இந்தாண்டை சந்திரப்புஷ்கரணி.  அரைச் சந்திரன் வடிவில் திருக்குளம்.  தண்ணீர் கொஞ்சம் பச்சைதான். இறங்கிப்போக  படிகளும் வாசலும் இருக்குன்னாலும்....   மூடி வச்சுருப்பதால் போகமுடியலை. எப்போ லபிக்குமோ?
அடுத்து கோதண்டராமர் சந்நிதி வந்தாச்சு. தொட்டடுத்து பரமபதநாதர். உள்ளே கண்ணாடி ஆண்டாள்!  போற போக்கில் ராமரைக் கும்பிட்டுக்கலாமுன்னு போனால்.....
ஹைய்யோ!!!   அவருக்கான ஸ்பெஷல் பூஜைக்கான ஆயுத்தங்கள். எப்பவும் ஜிலுஜிலுன்னு போட்டுருக்கும்  தங்கக் கவசங்களைக் கழட்டி வச்சுருக்காங்க. எல்லோரும்  ஒத்தையாடை ஒன்னு  கட்டி நிக்கறாங்க!   சீதா ராமலக்ஷ்மணர்கள் உருவம்  கொஞ்சம் பெருசுதான்.  சராசரி ஆள் உயரத்தைக் காட்டிலும்  கூடுதல்  உயரம்!  'திருமஞ்சனம் இன்னும் கொஞ்ச நேரத்தில். இப்படி உக்காருங்கோ'ன்னார் பட்டர்!

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுக் கொடுக்குதே!  திருமஞ்சனம் பார்க்கக் கசக்குமா?  ஏற்கெனவே படியில் உக்கார்ந்துருந்த பெண்மணி, ஸ்நேகமாப் பார்த்து  உக்காருங்கன்னு சொன்னாங்க. இன்றைக்கு அவுங்கதான் ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்களாம். 
இங்கிலாந்து வாசம். இங்கே தாயும் தகப்பனுமா ரெங்கனை ஸேவிக்கன்னே  ரிட்டயர் ஆனதும் வந்துட்டாங்க. ஆச்சு பல ஆண்டுகள்!  இப்போ உடம்பு ரொம்பத் தள்ளலை. வீட்டை விட்டே வெளியே போக முடியலையாம். உதவிக்கு ஆள் இல்லாமல் முடியாது.  தனியா இனிமேலும் விட்டு வைக்கக்கூடாதுன்னு, பெண்களூருக்கு ஜாகை மாத்திக்கறாங்க. அங்கே பிள்ளையோடு இருக்கலாம்.

கண்ணைத் திறந்ததுபோல இருக்கு எனக்கு. பெருமாள் பெருமாள்னு கோவில் இருக்கும் ஊர்லே கடைசி காலம் வரை இருக்கலாமுன்னு ஆசைப்பட்டாலும்....  நம்ம கைகால் செயலா இருக்கும்வரைதான் எல்லாமே! உதவி இல்லாமல் ஒன்னுமே ஆகாதுன்ற நிலையில்  கோவிலாவது குளமாவது? போகட்டும் பெருமாளாவது   காட்சிக்கு எளியவனா இருக்கானோ?  ஊஹூம்.... மணிக் கணக்கா வரிசையில் நின்னு போவது வயசான ஆத்மாவுக்கு  பெரும்பாடு இல்லையோ....   கிடப்புன்னு ஆனப்புறம் பேசாம  ஸ்ரீரங்கமுன்னு அலையாம  இருக்குமிடத்தில் இருந்தே பெருமாளை நினைச்சுக்கிட்டு வாழும் வாழ்க்கைதான் த பெஸ்ட்!  எல்லாம் நிமிஷ  நேர வைராக்யம்தான்.   குரங்கு மனசு...  பிடிச்ச பிடியை விட்டுட்டாலும்.....

அப்பா அம்மா இங்கே இருப்பதால்  வருசத்துக்கு ஒரு தரம் கட்டாயம் வந்துட்டுப்போவேன். ரெங்கன் தரிசனமும் கிட்டும். இனிமே எங்கே வர்றது? வந்தாலும் நேரா பேங்களூர்தான். நானுமே பெருமாளை ரொம்ப மிஸ் பண்ணப்போறேன்.  அதான் இன்றைக்கு நம்ம வகையில்  பூஜைக்கு ஏற்பாடுன்னு சொன்னாங்க  லலிதா.

அப்பா அம்மா வரலையான்னதுக்கு  ரொம்ப நேரம் உக்கார முடியாதுன்றதால்  இங்கே பூஜை முடியும் நேரத்துலே வந்து சேர்ந்துப்பாங்கன்னு சொன்னாங்க.  அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டுத்தான் வந்தாங்களாம்.  எப்படியும் பனிரெண்டாகிடும்னு சொன்னதும்  நம்மவர் என் கண்களைச் சந்தித்தார்!  நான் மெள்ள என் கையைப் பார்த்தேன்.  பத்தாகப்போறது.
படங்கள் ஒன்னும் எடுக்கலை. ஆனால் ஒன்னு இருந்தால் தேவலையேன்னு கூகுளாரிடம் கேட்டால், இதோ இது உன்னோடதுதான்னு காமிக்கிறார் :-)

பெரிய பெரிய வெள்ளி அண்டாக்களில், குடங்குடமாத் தண்ணீர் கொண்டு வந்து ரொப்பிக்கிட்டு இருக்காங்க.  திருமஞ்சனம் ஆரம்பிச்சது.  சின்ன வெள்ளிக்குடத்தில்  தண்ணீர் மொண்டு  அதை நம்முன் நீட்டுனதும் நாம் தொட்டுக் கும்பிடறோம்.  ஸ்ரீ ராமருக்கு  அபிஷேகம் ஆறது. இன்னொரு குடம் வலத்தோளுக்கு, இன்னொன்னு இடத்தோளுக்கு.... இப்படியே சீதைக்கு, லக்ஷ்மணனுக்குன்னு குடங்குடமா நமக்கு முன் நீட்டறதும், நாம் தொட்டுக்கும்பிடறதுமுன்னு  நடந்துக்கிட்டே இருக்கு.  அண்டாவில் தண்ணீர் கொண்டு வந்து ரொப்பறதை இன்னும் நிறுத்தலை.  ஸ்பான்ஸார் செஞ்சவங்களுக்கு மட்டுமில்லாமல் நம்ம எல்லோருக்கும்  முன்னாலும் நீட்டி நீட்டித்  தொட்டுக்கும்பிடத் தர்றது பார்த்து மனசு நிறைஞ்சு போச்சு.

எதிர்பாராமக் கிடைச்ச அனுபவம். தேன் குடிச்ச நரியாட்டம் உக்கார்ந்துருக்கேன். 'இப்படி வாய்ச்சது  ஏதோ போன ஜென்மத்துலே  பெரியவங்க செஞ்ச புண்ணியம் இல்லையா'ன்னு  மெள்ள இவர் காதில் ஓதினேன். ஆமாம்னு தலையாட்டினார்:-)   இருந்து முழுசுமா அனுபவிச்சுட்டே போகணும்.

சந்தனமும், மஞ்சளும், தயிரும், தேனும், பாலும், இளநீருமா  வகைவகையா .....

ஒரு முக்கால் மணி நேரம் இப்படியே......   இதுக்கிடையில்  இன்னொரு பெண்மணி, தரிசனத்துக்கு வந்தவங்க எங்களோடு சேர்ந்து  உக்கார்ந்தாங்க.  அப்பப்ப எங்களோடு ரெண்டொரு வார்த்தை.  லலிதாவும் துள்சியுமா பதில் சொல்றோம்.  பட்டர் மிரட்டறார்.  "கொஞ்சம் பேசாம திருமஞ்சனத்தைக் கவனியுங்கோ"  அடடா.... இந்த வாயை வச்சுக்கிட்டு  நிமிஷ நேரம் மௌனமா இருக்க முடியுதா?  ப்ச்....

 திருமஞ்சனம் முடிஞ்சு  தீபாரத்தி எல்லாம் ஆச்சு. இனி அலங்காரம். திரையை இழுத்து விட்ட பட்டர் , இன்னும் குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும். நீங்க வேற சந்நிதிக்குப் போறதா இருந்தால் போயிட்டு வாங்கன்னார்.
ஸ்பான்ஸார் செஞ்ச லலிதா மட்டும்,  அங்கேயே இருக்கப்போவதாச் சொன்னதும், அடுத்தாப்ல இருக்கும் கண்ணாடி ஆண்டாளைப் பார்க்க நாங்க போனோம். கூடவே ஸ்ரீதேவியும் வந்தாங்க. இவுங்கதான்  திருமஞ்சனத்துக்கிடையில் வந்து சேர்ந்துக்கிட்டவங்க.  நாங்க மூணு பேரும்  ஆண்டாளைதரிசனம் செய்ய பரமபத நாதர் சந்நிதிக்குள் போறோம்.   வைகுண்டநாதர் வழக்கம்போல் நால்வருடன் ஜொலிக்கிறார். அவருக்கு  வலதுபுறம் இருக்கும் ஆண்டாளின்  கண்ணாடி அலங்காரத்தைக் காணோம்.
ச்சும்மா வெறும் உற்சவ மூர்த்தியா நிக்கறாள்.  தலைப்பின்னல் அலங்காரம் எப்படி இருக்குன்னு கண்ணாடி இருந்தால்தானே தெரியும்?  எனக்கு ரொம்பவே ஏமாத்தம் :-(

பட்டரிடம் விசாரித்தேன். வேறமாதிரி டிஸைன் செய்யப் போறாங்களாம்.  'நிர்வாகம் ஏற்பாடு. நாமென்ன செய்ய முடியும்?' னார். குரலில் வருத்தம் இருந்ததோ!  எனக்கும் மனசுக்குள்ளே வருத்தமாத்தான் இருந்தது.
படம்: நம்ம துளசிதளத்தில் முந்தி வந்ததுதான். சுட்டுப்போட்டேன் :-)

வெளியே வந்து  மண்டபத் திண்ணையில் காலைத் தொங்கப்போட்டு உக்கார்ந்தோம்.   வரவர கீழே உக்கார்ந்துக்கறது கஷ்டமா இருக்கு. முழங்கால் வலி வேற... பிடுங்கி எடுக்கறதே....
குசலபிரச்சனம் ஆனப்பதான் தெரிஞ்சது அவுங்க ரெண்டு முறை நூத்தியெட்டு ஸேவிச்சு முடிச்சுருக்காங்கன்னு!  கையெடுத்துக் கும்பிட்டேன்.  நாம் சொல்லும் நூத்தியெட்டில் கடைசி ரெண்டு மேலுலகம் என்று சொல்றோமே... பூவுலகில் அதே பெயரில் ரெண்டு இடம் இருக்கு. மங்களாசாஸனம் செய்யப்படலைன்னாலும் அங்கே போய் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டால்  இங்கேயே நூத்தியெட்டு முடிச்ச திருப்தி கிடைக்குமுன்னு சொன்னாங்க ஸ்ரீதேவி!  திருப்பற்கடல், ஸ்ரீவைகுண்டம் என்று சின்ன கிராமங்கள் இருக்காம்.  திண்டிவனம் விழுப்புரம் வேலூர் ஏரியாவாம். அப்புறம்  சரியான விவரம் கேட்டு வச்சுக்கணுமுன்னு  இருந்தேன்.
அதுக்குள்ளே நம்மவருக்கு செல்லில் ஏதோ ஆஃபீஸ் விஷயம்.  அப்பதான் ஸ்ரீதேவி,  கேட்டாங்க ' சந்திரப்புஷ்கரணிக்குள்ளே நாலைஞ்சு சந்நிதிகள் இருக்கே, போய் பார்த்தீங்களா'ன்னு!  ஙே.............

"எப்பவும் அதுக்குப் போகும்வழி மூடியே இருக்கும். இப்போ திறந்துருக்கு. வாங்க நாம் போய் பார்த்துட்டு வரலாம்"

நம்மவர் செல்லில் பேசிக்கிட்டே, 'நீங்க போங்க'ன்னு கை காட்டினார். கோதண்டராமர் சந்நிதிக்கு இடப்புறம் இருக்கு, அதுக்குள்ளே போகும் வழி.  கம்பி கேட் வழியாக அதுக்குள்ளே போனோம்.  அந்தப் பக்கம் இருக்கும் ஒரு கிணற்றில்  இருந்துதான் திருமஞ்சனத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்து  ரொப்பறாங்க. அதான் கேட் திறந்துருக்கு! 
'உங்களுக்கு அதிர்ஷ்டம்தான்'னதும்,   'ஸ்ரீதேவியே கூட்டிப்போய் காமிக்கறாங்கன்னா  டபிள் அதிர்ஷ்டம்'னு  சொன்னேன்.   புஷ்கரணியின் இந்தக் கரையில் சின்னதா தோட்டம், செடிகொடிகள். இடையில்  நமக்கு வலப்புறமா அங்கங்கே சந்நிதிகள் ! இடப்பக்கம் ஒரு பெரிய புன்னை மரம்.  மரத்தடி மேடையில் நாகர்கள்,  அந்தப்பக்கம் யோகநரசிம்ஹர்!

சந்நிதிகள் எல்லாம் மூடித்தான் இருக்குன்னாலும், கம்பிக்கதவா இருக்கறதால்    உள்ளே பார்க்க முடிஞ்சது!


வியாசருக்கு ஒரு சந்நிதி.  ஆலிங்கன க்ருஷ்ணனுக்கு ஒன்னு. உள்ளே கண்ணனும் ராதையும்!    ஆலிங்கன போஸ்! வாவ்!

இன்னொரு சந்நிதி  வரதராஜப் பெருமாளுக்கு!  உள்ளே  வரதராஜரோடு  ஸ்ரீமுஷ்ணம் பெருமாளும் இருக்கார்.

இன்னும் நாம் ஸ்ரீமுஷ்ணம் போகலைன்னு  சொன்னதுக்கு, இங்கே தரிசனம் பண்ணிட்டீங்களே. அங்கேயும் கூப்பிட்டு தரிசனம் கொடுப்பார்னு சொன்னாங்க ஸ்ரீதேவி.  உங்க வாக்கு பலிக்கட்டும்!

இங்கே நமக்குத் தெரிஞ்சும் தெரியாமலும் ஏகப்பட்ட சந்நிதிகள்  கொட்டிக்கிடக்குன்னுதான் சொல்லணும். விவரம் தெரியாம வந்தோமுன்னா....  ஒரு  காவாசி பார்த்துட்டுப்போவோம்.

'இந்த மாதிரி பெரிய கோயில்களையெல்லாம் மாசக்கணக்கில் அங்கியே தங்கி துளித்துளியா ரசிக்கணும். ஆனா நடக்கிற காரியமா?...' இப்படி நம்ம அமைதிச்சாரல் ஒருமுறை பின்னூட்டி இருந்தாங்க.  சத்தியமான உண்மை ! 

 இப்ப ஒரே ஒரு குறை என்னன்னா.... நம்மவர்  இங்கே வந்தும் இதையெல்லாம் பார்க்கலையே....

முந்தியெல்லாம் ஆஃபீஸும் வீடும் தனித்தனியா இருக்கும். இப்ப நவீனகாலம் ஆனதால்.... ஆஃபீஸ்  இருபத்தினாலு மணிநேரமும் கூடவே இருக்கு செல்ஃபோன்  மூலமா...  ப்ச்....

உங்களால்தான் இவ்ளோ விவரமும், இந்த சந்நிதிகளும்  காணக்கிடைச்சதுன்னு  நிறைஞ்ச மனசோடு நம்ம ஸ்ரீதேவிக்கு நன்றி சொன்னேன். திரும்பக்  கேட் வழியாக் கோதண்டராமர் சந்நிதிக்கு வந்தோம்.

 'இன்னும் அலங்காரம் முடியலை.  நைவேத்யத்துக்குத் தளிகை   இப்பதான் தயாராகிண்டு இருக்காம். அக்காரவடிசல், புளியோதரை, திருக்கண்ணமுது ஸ்பெஷல்.  கட்டாயம்  இருந்து பிரஸாதம் வாங்கிக்கணும்' ப்ரிட்டன் லலிதா  அன்போடு சொன்னதுக்குப் புன்னகையுடன் தலையாட்டினேன். 

திரும்பவும் ஒரு சுத்து சுத்திட்டு வரலாமுன்னு கிளம்பினோம். நமக்கு இன்னும் ரெண்டு, மூணு மணி நேரம்தான் ஸ்ரீரங்கத்துலே....
ஆயிரங்கால் மண்டபம், மணல்வெளி, சேஷராயர் மண்டபம் எல்லாம் போற போக்கில் பார்த்து அங்கங்கே க்ளிக்கிண்டே போறேன்.  தவிட்டறை வாசல்!  என்னன்னு தெரியலையே....





ஸ்ரீபோஜராமர் சந்நிதி, ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதின்னு  பெயர்கள் எல்லாம் தெளிவா எழுதி வச்சுருக்காங்க....  ஆனால் எல்லாம் மூடித்தான் இருக்கு.... அதான் கம்பியழி இருக்கே.... சந்நிதிக்கதவைத் திறந்து வச்சால்... குறைஞ்சபக்ஷம்  கம்பி வழியாக தரிசிக்கலாமில்லையோ....ப்ச்...

சொன்னவண்ணம் செய்த பெருமாள்தான் கூப்பிட்டு தரிசனம் கொடுத்தார்:-)
வழியெங்கும் நாலு கால் மண்டபங்கள் ஏராளம். 
பழுது பார்க்கறாங்க....   உடைஞ்ச கல் பகுதிகளில் சிமென்ட் பூச்சு.....   ஒட்டிப்பிடிக்குமே தவிர  கண்கடிதான்   :-(

தொடரும்....:-)

PINகுறிப்பு:  பதிவு நீண்டு போறதால்  அடுத்த பதிவில் மீதம் பார்க்கலாம். சரியா? இன்னும் நாம் கோவிலைவிட்டுக் கிளம்பலை, கேட்டோ :-)



12 comments:

said...

அழகான படங்கள்.

எத்தனை நேரம் இருந்தாலும் புதுசு புதுசாக ஏதோ காணக்கிடைக்கும். நின்று நிதானித்து பார்க்க நமக்கு பொறுமையும் வேணும், நேரமும் வேணும்!

தொடர்கிறேன்.

said...

அடேயப்பா..... படங்கள்! நானே சுற்றிப்பார்த்த திருப்தி!

said...

அருமை. நன்றி.

said...

ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசித்து எழுதுகிறீர்கள்

said...

இனிமே திருவரங்கம் போனா யார் கூட போகனும்னு தெரிஞ்சு போச்சு. :)

said...

எத்தனை முறை சென்றாலும் புதிதாகச் செல்வதுபோல இருக்கின்ற கோயில். ஒவ்வொரு முறையும் மனதில் கிடைக்கும் நிம்மதிக்கு இணை எதுவுமேயில்லை. உங்கள் பதிவினைப் பார்க்கும்போதுகூட அவ்வகையான உணர்வு ஏற்படுகிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நேரக்குறைவுதான் எப்பவும் புலம்பவேண்டி இருக்கு!

இன்னும் நிறையப் பகுதிகள் திறக்கப்படாமல் இருக்குன்னும் கேள்வி.

தூணில் இருக்கும் சிற்பங்களை மட்டும் படம் எடுக்கணுமுன்னாலும் அதுக்கே ஒரு முழு வருஷம் வேண்டி இருக்குமோ?

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

இன்னும்கூட சுத்தலாம். நேரமில்லாமல் போயிருதே!

said...

வாங்க விஸ்வநாத்,

வருகைக்கு நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.


அழகோ அழகு! ரசிக்காமல் இருக்கமுடியுமோ?

நன்றி!

said...

வாங்க ஜிரா.

பேசாம கோவிலில் ஒருபதிவர் சந்திப்பு வச்சுக்கிட்டுச் சிற்பங்களையும் சந்நிதிகளையும் ரசிக்கலாம்.

உள்ளூர் பதிவர்களையும் சேர்த்துக்கிட்டால் நமக்கு விருந்துதான் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எத்தனை முறை போனாலும் திருப்தியே வரமாட்டேங்குதே எனக்கு! பெரியவரை தரிசனம் செய்வதைவிடச் சும்மா கோவிலில் உக்கார்ந்துருந்தாலே மனசுக்கு நிம்மதி வந்துருது இங்கே!

அடுத்தமுறை முழுசா ஒரு வாரம் :-)