Friday, November 24, 2017

தந்தையைப் பின்பற்றிய தனயன்(இந்திய மண்ணில் பயணம் 80 )

 ராயாஸில் இருந்து கிளம்பி அணைக்கரை வழியாக் காவேரியைக் கடந்து,   கங்கைகொண்ட சோழபுரம் வந்து சேரும்போது  சரியா ஒரு மணி. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கட்டி இருக்கார்,  ராஜராஜசோழனின்  மகன் ராஜேந்திர சோழன்னு  வாசிச்சது முதல்  போகணும் என்றது  என்  கனவு. அது இன்றைக்கு இப்படி சட்னு நிறைவேறுமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை !
ரொம்பச் சின்ன ஊரா இப்போ இருக்கு.  செம்மண் பூமியோ.....
இந்தக் கோவிலை உலகின் பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துருக்கு.   இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருக்கு.
தாத்தா கட்டுன தஞ்சை பெரிய கோவில்,  மகன் கட்டுன  கங்கைகொண்ட சோழபுரம்  ப்ரஹதீஸ்வரர் கோவில், பேரன் கட்டுன ராஜராஜேச்சரம் என்ற தாராசுரத்து  ஐராதவதேஸ்வரர் கோவில் இப்படி மூணு தலைமுறை சோழர்கள் கட்டுன இந்த மூணுகோவில்களுமே நம்ம நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் கட்டடக்கலை நுணுக்கங்கள் நிறைஞ்சவைதான்.

ஆனாலும்....  வடக்கே இருக்கும் தாஜ்மஹல்தான்  இந்தியான்னதும் வெள்ளையர்களின் விருப்பப்பட்டியலில்  இடம் பிடிச்சுருது, இல்லே?  

முக்காவாசி வெள்ளைப் பயணியர்  தென்னிந்தியா பக்கமே வர்றதில்லை.  வாரணாசி,   தில்லி, ஆக்ரா, ராஜஸ்தான்னு  முடிச்சுக்கறாங்க. ப்ச்....


தஞ்சைப்பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கும்  வெறும் இருவது  வயசுதான் வித்தியாசம்!   அப்ப  அந்தக் கோவிலை நிர்மாணித்த சிற்பக்கலைஞர்கள்  பலர் இங்கேயும் கூட வந்திருந்து  சிற்பங்களைச் செதுக்கி இருக்கலாம், இல்லே?
வலைக்கம்பி அடிச்சு வச்ச பெரிய வளாகம்.  கம்பியினூடா பசும்புல்தரை பளிச்! 

வண்டியை நிறுத்திட்டு உள்ளே போறோம்.  இடதுபக்கம் ஒரு  ஓலைக்குடிசைதான்  ஆஃபீஸோ?  இல்லை. செருப்பு வைக்கும் இடம்.  காலணி பாதுகாப்பும்  ஒரு தீனிக்கடையுமா இருக்கு.   உள்ளே போகவும் கேமெராவுக்கும் கட்டணம் இருக்கான்னு  கேட்டால்...  அப்படி ஒன்னும் இல்லைன்னுட்டார்.  கோவில் என்பதால் கட்டணம் இல்லைன்றது சரி. ஆனால் கெமெராவுக்கு ஒரு கட்டணம் இருந்தால்   பராமரிப்பு செலவுக்கு ஆகாதோ?

செருப்பை விட்டுட்டு நடந்து போறோம்.  பகல் ஒருமணி வெயில் கல் தரையெல்லாம் பொள்ளுது.... வேற வழி இல்லாமல் புல் இருக்குமிடத்தில்தான்  போயாகணும்.  ப்ச்.....   சனம் நடந்து நடந்தே....   ரெண்டு பக்கமும் பாதை உருவாகி இருக்கு.....


அதோ  கண்ணெதிரில்  கம்பி போட்ட கேட்டுக்குள்ளே என் கனவு !
கேட்டுக்கு ரெண்டு பக்கமும் துவாரபாலகர்கள்!  கொஞ்சம் உடைஞ்சு  இருக்கறதைப் பார்த்தால்....  இங்கே அகழ்வாராய்ச்சி செஞ்ச சமயம் கிடைச்ச சிலைகளை இங்கே வச்சுவிட்டது போல எனக்குத் தோணுது....
ராஜகோபுரம் கிடையாது. உள்ளே போகும் நுழைவுவாசல்  கோபுரம் இல்லாத  வகையில்  ரெண்டாப் பிரிஞ்சு வழி விடுது! 

கேட்டின் ஒரு பகுதியைத் திறந்து உள்ளே போறோம். பலிபீடம், அடுத்து நந்தி! ச்சும்மாத் தரையிலே உக்கார்ந்துருக்கு.  தலைக்குக் கூரை இல்லை. திறந்த வெளியில் காத்தும் மழையும் வெயிலும்.....   பாவம்....

சுதை நந்திதான். தஞ்சை போல கருங்கல் இல்லை. ஏற்கெனவே  தஞ்சைக் கோவில், கங்கை கொண்ட சோழபுரக்கோவில் ஒற்றுமை, வேற்றுமைன்னு பரவலா அங்கங்கே வாசிச்சு வச்சது லேசா நினைவுக்கு வருது.

தஞ்சையை விட பெரிய நந்தி, பெரிய  சிவலிங்கம், பெரிய  அம்மன். ஆனால்  கோபுர உயரம்  தஞ்சையை விடக் குறைவு,  அந்தக் கோவில்  ஆண்மையின் மிடுக்கோடு, இந்தக் கோவில் பெண்மையின் நளினத்தோடுன்னு.....


இப்படி எல்லாம் வாசிச்சு வச்சவள், கோவில் திறந்துருக்கும் நேரத்தைக் கோட்டை விட்டுருக்கேன்.....   தொல்லியல்துறை கவனிப்பு என்பதால்  காலை முதல் மாலை வரை திறந்துதான் இருக்கும் என்ற மெத்தனம்தான்  :-(
நந்திக்கு எதிரில்  நல்ல உயரமான மேடையில் கோவிலைக் கட்டி இருக்காங்க. அந்த மேடைக்குப்போகும் படிகளில் ஏறிப்போனால்.... மேடையிலும் ஒரு சின்ன நந்தி சந்நிதி வாசலைப் பார்த்தாப்லெ உக்கார்ந்துருக்கு. அங்கேயும் சின்னதா ஒரு பலிபீடம் நந்திக்குப் பின்னால்.


ஒற்றுமைன்னு பார்த்தால்  மூலவர்களுக்கு அங்கேயும் இங்கேயும் ஒரே பெயர்கள்தான்.  ப்ரஹதீஸ்வரர், ப்ரஹன்நாயகி,  பெருவுடையார், பெரியநாயகி !

சாத்தி இருக்கும் சந்நிதியைப் பார்த்து கும்பிட்டுக்க வேண்டியதுதான். சந்நிதி வாசலாண்டை ஒரு புள்ளையார் இருக்கார்.  அவருக்கும் ஒரு கும்பிடு.  வாசலுக்கு ரெண்டு பக்கமும் துவாரபாலகர்கள்!  பெரிய  உருவங்கள்தான்.  அந்தாண்டை மூலையில்  செல்லம் ஒன்னு பரிதாபமாப் படுத்துருந்துச்சு.  ப்ச்....  நிழல்தேடி வந்துருக்கு .....


நாம் இப்போ உயரமான மேடையில் நிக்கறப்பப் பார்த்தால் சுத்திவர நல்ல பசுமை.  நமக்கு இடப்பாகம்  சிரிச்ச முகமுள்ள சிங்கம்!  ஏறக்குறைய  முன்னால் உக்கார்ந்திருக்கும் நந்தியின் அளவுதான்.  சிங்க வயித்துப்பகுதியில் சின்னதா ஒரு கம்பிக்கதவு.  உள்ளே கிணறு இருக்கு!

ராஜேந்திர சோழன்,  கங்கை வரை படையெடுத்துப்போய்   ஜெயித்து வந்தப்ப,  அந்த வெற்றியைக் கொண்டாட இந்தக் கோவிலைக் கட்டுனதாகவும்,  அப்போ போரில் தோற்ற மன்னர்கள் தலையில் கங்கை நீர் இருக்கும் குடங்களைச் சுமந்துவரச் செய்து இங்கே மூலவருக்கு அபிஷேகம் செஞ்சபிறகு, அந்த அபிஷேக நீரை இந்தக் கிணத்துலே  சேர்த்து விட்டதாகவும் கூட வாசிச்சுருந்தேன்.   கோவிலுக்கு வரும்போதெல்லாம்  கிணத்துத் தண்ணீரைத் தன் தலையில் தெளிச்சுக்கும் வழக்கம் இருந்ததாம்! 

புனைவா என்னன்னு தெரியலை.... ஒருவேளை இருக்கலாம்......  ஆனால் லாஜிக் உதைக்குது....  போகட்டும்.... சிங்கம் இருக்குன்றது உண்மை.  சிங்கக்கிணறு?  கிணத்துக்கு மேலே சிங்கம்  வந்து உக்கார்ந்தது எப்போ? அந்தச் சின்னக்கதவு மூலம்  இறங்கிப்போய் தண்ணீர் இறைப்பாங்களா?  ஆனா ஒரு உண்மையை ஒத்துக்கணும். சிங்கம் நெஜமாவே நல்ல அழகு! கம்பீரமும் கூட!

பெரிய நந்திக்கு வலதுபக்கம் தனியா ஒரு சின்னக்கட்டடம். மூடி இருந்தது. இதுதான் அலுவலக அறைன்னு நினைக்கிறேன்.
கோவிலை வலம் வந்து அப்படியே பார்த்துக்கலாமேன்னு  போனோம். ஒன்றிரண்டு 'கடலைகள்' அங்கங்கே. மத்தபடி  ஒரு சின்னக்குழு ஒன்னு (அஞ்சாறுபேர் இருப்பாங்க)  சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் போற போக்கில் கொஞ்சம் (!)க்ளிக்ஸ்.  இந்தப்பக்கம் ஒரு  கட்டடம் மேல்பகுதி இடிஞ்ச நிலையில்..... 



புதையுண்டு கிடந்த சிற்பங்களையும்,  பழுதுபார்க்கும்போது கிடைச்ச சிற்பங்களையும்  ஒரு மேடையில் வச்சுருக்காங்க.  அதுலே ஒரு விஷ்ணு ரொம்பவே அழகு!   உடைஞ்சு போய், தலை இல்லாத சிற்பங்களைப் பார்க்கும்போது மனசுக்குக் கஷ்டமாப்போச்சு.
இன்னொரு தனிச்சந்நிதி இருக்கேன்னு பார்த்தால் மகிஷாசுரமர்த்தினி. வாசலில் நிற்கும் வாகனங்கள் ரெண்டு.  சிங்கத்தைப்பார்த்தால் வெளியூர் போல இருந்துச்சு.


அப்பதான் பார்த்தேன்...வளாகத்தில் இருக்கும் ஒரு உடைஞ்ச பீடத்தாண்டை ரெண்டு வெள்ளையர்களும் ஒரு இந்தியப்பெண்ணும்  குனிஞ்சு  நின்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க.  இந்தாண்டை   ஒரு  இளைஞரும், நடுத்தர வயதுக்காரரும்.
என்ன நடக்குதுன்னு நாங்களும் போனோம். சின்னதா ஒருமண் அகல்விளக்கை அந்த உடைஞ்ச கல்பீடத்துலே வச்சு அதை உள்ளங்கையால் மூடினால், விளக்கு நகர்ந்து போகுதாம்.  வெள்ளையர்களுக்கு  அந்த இந்தியப்பெண் (கைடு) விளக்கிச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  நகருது பாருங்க....
நெசமாவா?

அவுங்க போனதும்  அந்த இளைஞர் முறை.  நகருதுன்னுதான் அவரும் சொல்றார். நாம் சும்மா இருக்கலாமா? நம்மவர் நகர்தலை உறுதிப் படுத்தினார்.  என்முறை வந்தப்ப.... சின்னதா நிமிஷநேர வீடியோ:-)
சந்நிதிகள் மூடி இருன்னாலும்... முன்மண்டபங்களையாவது பார்க்கலாமுன்னு கோவிலுக்குள் போனோம்.  இளைஞருக்கு நல்ல சிரிச்ச முகம். பேச்சுக்கொடுத்தப்பதான் தெரிஞ்சது  இவர் திரைஉலக சம்பந்தம் உள்ளவர்னு.

சில மலையாளப்படங்களில்  சின்ன வேஷங்களில்   நடிச்சுருக்கார். அந்தக் காட்சிகளை தன் செல்ஃபோனில் சேமிச்சு வச்சுருந்ததைக் காட்டினார். நல்லாத்தான்  இருக்கு நடிப்பு. இப்போ பிரபலமா இருக்கும் சில(!) நடிகர்களின் நடிப்பைப் பார்த்ததால்.... இவருடைய நடிப்பும் ஆக்‌ஷனும் தேவலைன்னு தோணுச்சு. கதாநாயகனாகவே  நடிக்கலாம். நல்ல அம்சமான முகம்..
அப்புறம் முக்கியமான சமாச்சாரமா.... 'நெருப்புடா'ன்னு ஒரு படம் வந்துச்சாமே....   அதுலே  உதவி இயக்குனராகப் பணி புரிந்துருக்காராம்.  இதை அவருடைய அப்பா ஸ்வாமிநாதன் சொன்னார். 
 சொந்த வியாபாரம், விவசாயம் சார்ந்தது.  இன்றைக்கு  'டேட் வித் டாடி' என்று  அப்பாவோடு சின்னசுற்றுலா !  நல்லா இருக்கட்டும்!  தோளுக்கு மேல் வளர்ந்த தோழனுடன் இப்படிச் செலவளிக்க இந்தக் காலத்திலும் நேரம்  அமைஞ்சது பாக்கியம், இல்லையோ!

இந்த நிகழ்வைக் கொண்டாட செல்ஃபி எல்லாம் எடுத்துக்கிட்டோம். என்னுடைய கேமெராவிலேயே  ரெண்டு மூணு செல்ஃபி எடுத்தார் நம்ம ரத்னகுமார்!!    இதுலே என்ன வியப்பா?  இதை நம்ம பக்கம் திருப்பி வச்சால்  லென்ஸ் எந்தப் பக்கம் பார்க்குதுன்னே எனக்குப் புரியாது :-)

  இப்ப ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னே  புதுசா வாங்குன கேமெரா....வில்  செல்ஃபி எடுக்க என்னாலும் முடியும்.  ஸ்க்ரீனை நம்மைப் பார்த்தாமாதிரி திருப்பி வச்சுக்க முடியும். (  SONY DSC WX 500 180-degree tiltable LCD monitor)நானே தேறிட்டேன்னா பாருங்களேன் :-)

கலிகால சம்ப்ரதாயமான   செல் நம்பர், வாட்ஸ் அப் நம்பர்  எல்லாம் கொடுக்கல் வாங்கல் ஆச்சு. நம்மவருக்கு  இந்தப் பையரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  இங்கே நம்மூரில் கோவைப் பையர் ஒருத்தர் இருந்தார்.  படிக்க வந்தவர்தான்.  நமக்கு நல்ல நண்பராகவும் ஆனவர். இப்போ இங்கில்லை. அண்டை நாட்டுக்குத் தாவிட்டார். ஏறக்கொறைய  அவர் ஜாடையில்  இந்தப் பையர் இருந்ததுதான் காரணமுன்னு நினைக்கிறேன். 
எனக்கும் ரத்னகுமாரைப் பிடிச்சுப்போச்சு. காரணம்   அவருக்கு,  அப்பாவுடன் இருந்த  ஒட்டுதல்.  பிள்ளைகள்  பெற்றோருடன்  ஒட்டி இருப்பதே அதிசயமாப்போன காலக்கட்டம் இது, இல்லையோ!
வளாகம் சுத்தமான  பராமரிப்புடன்  பச்சைப்புல்வெளியுடன் அழகாவும் பெருசாவும் இருக்கு!  தஞ்சைக்கோவிலில் இவ்ளோ புல்வெளிகளைப் பார்த்த நினைவில்லை.  பரந்த புல்வெளியில் உடைந்த நந்தி ஒன்னு,  சின்ன வெட்கத்தோடு தலை சாய்த்து உக்கார்ந்திருக்கு.  அழகான  முகபாவனை!
கோவில் கோஷ்டத்தில்  அற்புதமான சிலைகள்!  புள்ளையாரும் தக்ஷிணாமூர்த்தியும் அருள் பாலிக்கிறாங்க. லிங்கோத்பவர் இருக்கார்.  பார்வதிபரமேஸ்வரர்கள் ராஜேந்திர சோழனுக்கு  ஆசி வழங்கறாங்க.




மெயின் கோவிலுக்கு  ரெண்டு பக்கமும் தனித்தனியான சந்நிதிகள். எல்லாமே மூடி இருப்பதால்  தரிசனத்துக்கு வாய்ப்பில்லாமல் போச்சு.
அம்மன் கோவில்னு சொன்னாங்க.  மெயின் கோவிலுக்குள்ளேயும் ஒரு அம்மன் சந்நிதி இருக்கே!

கோவிலோட வரைபடம் இது. பாருங்க ஒரு ஐடியா கிடைக்கும்!
மெயின் கோவிலுக்குள் ஏராளமான தூண்களுடன்  அற்புதமான சிற்பங்கள் இருக்காம். ப்ச்.....  கோவில்   திறந்து இருக்கும் நேரத்தை கவனிக்காமப் போயிட்டேனேன்னு என்னையே  நொந்துக்கிட்டேன்.  சரி. இப்பப் பார்த்தது ட்ரெய்லர்னு வச்சுக்கலாம். இப்பதான் இடம் தெரிஞ்சு போச்சே..... 


அடுத்த முறை காலை நேரத்தில் வந்தே ஆகணும்.  கோவில் திறந்துருக்கும் நேரம்  காலை  6 முதல் பகல் 12 &  மாலை  4 முதல் 8. நினைவில் வச்சுக்குங்க.

வெளிப்புறங்களில் கொஞ்சம் க்ளிக்கின கையோடு அங்கிருந்து கிளம்பிட்டோம்.    மணி இப்போ  ரெண்டேகால். சாப்பிடும் வகையில் சரியான  இடங்கள் ஒன்னும் இல்லைன்னு சீனிவாசன் சொன்னார். வாசலில் நீர்மோரும் தொட்டுக்க சில பதார்த்தங்களும்  இருந்தது.

மெயின் ரோடுக்கு வர்ற வழியில் இளநீர் கிடைச்சது. அது போதும், இப்போதைக்கு!


ஸ்டேட் ஹைவே 81 இல் வந்து சேர்ந்தாச் :-)
தாத்தா, மகன், பேரன்னு மூணு தலைமுறை சோழர்கள் கட்டிய  கலைநயம் மிகுந்த     கோவில்களைக் கொஞ்சமாவது பார்த்தோமேன்ற திருப்தி  இருக்கு இப்போதைக்கு!

கங்கைகொண்ட சோழபுரம் ஆல்பம் ஒன்னு ஃபேஸ்புக்கில் இப்பதான் போட்டேன். நேரம் இருந்தால் பாருங்க.

தொடரும்.... :-)




PINகுறிப்பு:   இப்போதான் கங்கைகொண்டசோழபுரம் பற்றிய விவரங்கள் ஒன்னு  அரச தொல்லியல்துறை போட்டது  எடுத்து வச்சுருக்கேன். அம்பத்தியேழு பக்கங்கள். நின்னு நிதானமா வாசிச்சு, குறிப்பெழுதிக்கிட்டு அடுத்த முறை போகணும். சுவாரசியமா இருக்கு!



11 comments:

said...

நான் போகும்போதும் இதே நேரம். கோவில் சாத்தி இருந்ததால் தரிசனம் செய்ய முடியவில்லை. அதே போல இதே இடத்தில் நானும் ஒரு செல்லத்தைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஒருவேளை அதே செல்லம்தானோ என்று சம்சயம் வருகிறது! படம் கிடைத்தால் அப்புறம் முகநூலில் ஷேர் செய்து,டேக் செய்கிறேன்!!!

அப்போது நிறைய புகைப்படங்களை உணர்ச்சி வசப்பட்டு முகநூலில் பகிர்ந்திருந்தேன். அங்கு சென்று வந்த சந்தோஷம் மறுபடி கிடைத்தது.

said...

// முக்காவாசி வெள்ளைப் பயணியர் தென்னிந்தியா பக்கமே வர்றதில்லை // Tourism to be developed, but we lack in basic facilities viz. toilets; Govt do not care;



அருமை நன்றி

said...

உண்மையில் தந்தையை மிஞ்சிய தனயன்தான். கோயிலுக்குச் சென்றால் வெளியே வர மனம் வரவே வராது. பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவின்மூலமாகச் சென்றேன். நன்றி.

said...

I am quite happy u r in our land.
had I known earlier, we would have also come .


subbu thatha.

said...

இந்தக் கோவிலுக்கு நேரம் ஒதுக்கிச் செல்லவேண்டும். இதைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன்.

ராஜேந்திர சோழனுக்கு, 10 வருடம் கஷ்டப்பட்டு ஆட்சியின் முடிவில் தந்தை ராஜ ராஜ சோழன் பெருவுடையார் கோவில் கட்டியபின்பு, உடனே ஏன், தானும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒன்றைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது? அதுவும் தந்தையின் கோவிலைப்போன்றே? ஒரே வித்தியாசம், சிங்கமுகக் கிணறு. கோவில் கட்ட ஆரம்பித்தபோது தந்தை உயிருடந்தான் இருந்திருப்பார். பெருவுடையார் கோவில் இன்னும் முழுமை பெற்றிராது (கிரமமாக எல்லாவற்றையும் ஆர்கனைஸ் செய்து மாமூலாக நடைபெறுவதற்கு பொதுவாக சில வருடங்கள் ஆகும்).

ஆச்சர்யம்தான்.

said...

வாங்க ஸ்ரீராம்..

உங்கள் படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். அவன் இவன் இல்லை! :-)

இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தால் காலை வேளையில் போய் வரணும். அப்பதான் கோவில் உள்ளே இருக்கும் அற்புதங்களை ரசிக்க முடியும்.

விரைவில் அமையணும் நமக்கு!

said...

வாங்க விஸ்வநாத்.

டூரிஸம் சரியா அமைச்சால் நாட்டுக்கு வருமானத்தை அள்ளலாம். அதன் அருமை தெரியாமல் இருக்காங்களேன்னு எப்பவும் எனக்கு மன வருத்தம்தான் :-(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்கள் கொடுத்து வைத்தவர்!!!!

said...

வாங்க, சூரி அத்திம்பேர்.

மீனாக்ஷி அக்கா சௌக்கியமா?

அடுத்தமுறை எல்லோரும் சேர்ந்து போகலாமா?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பொதுவா அரசர்கள் உயிருடன் இருக்கும்போதே அடுத்த பட்டத்துக்கு உரிய இளவரசர் முடிசூட்டிக்கொள்வதில்லையே...

ராஜேந்திரரும் வடக்கே படையெடுத்துப்போய் வந்த பிந்தானே புது தலைநகரம் ஒன்றை நிர்மாணிக்கும் எண்ணத்துடனும், பெருவுடையார் கோவிலைப்போல ஒன்று கட்ட வேண்டும் எண்ணத்துடன் செயல்பட்டிருப்பார். அந்த சமயம் தந்தை இவ்வுலகில் இருந்திருக்க வாய்ப்பில்லைன்னுதான் தோணுது!

நம்ம நாட்டு சோகம் என்னன்னா..... சரித்திர நிகழ்வுகளைச் சரியாக அந்தக் காலத்தில் யாரும் எழுதி வைக்கலை என்பதுதான்.

இருந்த கொஞ்சநஞ்ச சான்றுகளையும் நம்ம மக்களே அருமை தெரியாமல் அழிச்சுட்டாங்க...ப்ச்...

said...

கங்கை கொண்ட சோழபுரம் - சிற்பங்கள், குறிப்பாக சிதிலமடைந்த சிற்பங்கள் பார்க்கும்போது ஒரு வித வலி.....

நேரில் சென்று பார்க்க வேண்டும் - வாய்ப்பு கிடைக்கட்டும்.

தொடர்கிறேன்.