Wednesday, November 01, 2017

அழகை அழகுன்னுதான் சொல்லணும்!(இந்திய மண்ணில் பயணம் 70)

உத்திரை வீதி (கிழக்கு) வரைக் கொஞ்சம் போகவேண்டி இருக்கு. அக்காவைப் பார்த்துட்டு ஒரு ஹை சொல்லிட்டு வரணும்! நெருங்கிய தோழியின்  அக்கா நமக்கும் அக்காதானே?  அக்கா கையால் காஃபி ஒன்னு குடிச்சுட்டு வான்னு தோழியின் அன்புக்கட்டளை எப்போதும்  ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர்:-)  ஆனால் நாம் போற நேரம் காஃபிக்கானது இல்லை :-(
இந்தத்  தெருவில் இன்னுமொரு விசேஷம் இருக்கு!  நம்ம ஆண்டாளின்  அறை இங்கேதான்.  பாவம்.... உடல்நிலை சுகமில்லை. சக்கரை இருக்காம் உடம்பில். அதனால்  கோவில் வேலைகளில் காலை அபிஷேகத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துட்டு அறைக்குப் போயிடறாள்.  ரங்கவிலாஸில் இருக்கும்  மணல் நிரப்பிய இடம் இப்பெல்லாம் காலியாத்தான் இருக்கு.

உண்மையில் இந்தத் தெருவில் மூணு விசேஷம் உண்டு.  மூணாவது வெள்ளைக் கோபுரம்!  அதன் வழியா நுழைஞ்சால்  மணல்வெளி நிகழ்ச்சிகளைப் பார்க்க ரொம்ப நடக்க வேணாம்!

அக்கா வீட்டில்தான் இருந்தாங்க. தினம் ஸ்ரீராமஜெயம் எழுதும் வழக்கம். இன்னொரு  நோட்புக்கில் ஸ்ரீராமா எழுதறாங்க. இதுக்குன்னே நோட்டுப் புத்தகங்கள்  கிடைக்குதாமே! எழுதி முடிச்சுட்டுக் கோவிலுக்குக் கொடுத்துடலாமாம்.

அப்பதான் எனக்கு நம்ம சண்டிகர் கோவில் விஷயம் ஒன்னு நினைவுக்கு வந்தது!  அங்கே சபா ஹால் தூண்கள் ஒவ்வொன்னுக்கு அடியிலும், அஸ்திவாரம் போடும்போதே  ஒரு லக்ஷம் ராமஜெயம் வச்சுருக்கறதா நம்ம ராஜசேகர் சொல்லி இருந்தார். அப்புறம்  ராஜகோபுரத்துக்கு அஸ்திவாரப் பூஜை போட்டப்ப நாமும் அதில் கலந்துக்கிட்டு ராமஜெயத்தை வச்சோமே!
நாம் எழுதிட்டு, பேங்க்லே  ஐ மீன் புண்ணிய பேங்க்லே  டெபாஸிட் பண்ணிட்டா, தேவையான இடத்துக்கு அனுப்பிடறாங்க போல!  கொஞ்சம் இதைப்பற்றி விசாரிக்கணும்.  ஜஸ்ட் தெரிஞ்சுக்கறதுக்காகத்தான். நான் இப்படியெல்லாம் உடம்பு வணங்கி எழுதற ஆள் இல்லை....ப்ச்..... எனக்கு பக்தி போதாதுப்பா.....

அக்கா மட்டும் தனியா இருக்காங்களேன்னு  விசாரிச்சால் அத்திம்பேர்  பூ வாங்கப் போயிருக்காராம்.   உதிரிப்பூக்கள்தான்!   அதையும் கட்டிக் கோவிலுக்கே கொண்டு போய் அர்ப்பணிக்கிறதுதான்!   எப்பவும் பெருமாளுக்குன்னே எதாவது  ஒரு ஸேவை ! பெருமாள் பக்கத்துலே இருக்கணுமுன்னே  வேலை ஓய்வுக்குப்பிறகு ஸ்ரீரங்கத்துக்கு  இடம் மாத்திக்கிட்ட புண்ணியாத்மாக்கள்!
கோவில் காலண்டரைப் பார்த்து  என்ன விசேஷமுன்னு க்ளிக் பண்ணிக்கிட்டேன். காஃபி சாப்பிடச் சொன்னாங்கதான்....  கொஞ்ச நேரத்துக்கு முன்னால் காஃபி குடிச்சாச்சே.  அதுவும்  இன்றைக்கு  அதுவே ரெண்டாவது இல்லையோ.....  இப்பெல்லாம்  ஒருநாளைக்கு  காலையில் ஒன்னு  மாலையில் ஒன்னுன்னு ரெண்டே  காஃபிதான். வயசாறதே.....

அங்கிருந்து கிளம்பி  ரங்கா கோபுரவாசலுக்கே வந்துட்டோம். செருப்பை விடணுமே.....
ரங்கவிலாஸ் முற்றம் கலகலன்னு இருக்கு இப்போ!  முதல்லே போய் கெமெரா டிக்கெட் வாங்கினேன்.  அதென்னவோ கவுன்ட்டரில் இருக்கும் பெண்மணியோடு   நமக்குக் கொஞ்சம் பரிச்சயம் ஆகித்தான் இருக்கு.   காலையில் எனக்குக் கிடைச்ச மிரட்டலை (!) சொல்லி,  'காலையில் கோவில் திறக்கும்போதே கவுன்ட்டரையும் திறந்துட்டால் பிரச்சனை இல்லை பாருங்க'ன்னதும் சிரிக்கிறாங்க.

அடுத்த முறை  ரெண்டு மூணு நாளைக்குச் செல்லும்படியான டிக்கெட்ஸ், சீஸன் டிக்கெட்ஸ் எல்லாம்  விற்கச் சொல்லி ஆலோசனை  கொடுக்கணும் :-)
ரங்கவிலாஸ் மண்டபத்துக்கு அப்பால் அகலங்கன் திருவீதியில்   இருக்கும் ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு, ஸ்ரீ சுதர்ஸனருக்கு இங்கிருந்தே ஒரு கும்பிடு ஆச்சு.  அப்பாலிக்கா வர்றேன்னு  மனசால் சேதி அனுப்பினேன்.

உள் ஆண்டாளை தரிசனம் பண்ணி, வெளிப்புறச்சுவரில் இருக்கும் திருப்பாவை பாசுரங்களைக் க்ளிக்கிட்டு, நம்ம தூமணி மாடத்துப் பாடுன கையோடு பக்கத்துலே இருக்கும் வேணுகோபாலன்  சந்நிதிக்குப் போறோம்.  ஸ்ரீரங்கத்து சந்நிதிகளிலேயே   ரொம்ப அழகா இருப்பது இதுதானாம்!  நான் மட்டுமில்லை.... கோவில்  வரலாறு புத்தகமே சொல்லிக்கிட்டு இருக்கு!
ஆண்டாள் சந்நிதிக்குத் தட்டுத்தடுமாறி வந்த பெரியவருக்குப் படிகள் ஏறமுடியாத இக்கட்டில் நம்மவர் ஓடிப்போய் அணைத்துப்பிடித்து  படிகளில் ஏற்றிக்கொண்டுவந்து விட்டார்.எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு!  நல்ல மனிதர், நல்ல இதயம். நல்லா இருக்கணும்!
 வேணுகோபாலன் சந்நிதியில் வெளிப்புறச் சுவர்களிலேயே  அழகு ஆரம்பிச்சுருது :-)


சுத்திச்சுத்திப்போய் க்ளிக்கணும் :-)  இதையொட்டிய  மண்டபத்தில் இருக்கும் ஒரு தூணைக்கூட விட்டுவைக்காமல் சிற்பங்களைச் செதுக்கித் தள்ளி இருக்காங்க. கொஞ்சம் நிறையவே ஸ்ருங்காரச் சிற்பங்கள் இருக்கு!    அதானே....  வேணு கோபாலனுக்குச் சொல்லித்தரணுமா?
இங்கே மண்டபத்தில்  தூண்களைப் படம் எடுப்பதைக் கவனிச்சுட்டு, ஒரு  பெண்மணி, தயக்கதோடு  'என் பையனை ஒரு படம் எடுப்பீங்களா?'ன்னு கேட்டாங்க. க்ளிக் க்ளிக் ஆச்சு. படத்தைக் காண்பித்தேன். மகிழ்ச்சி.

ஆனால் மகிழ்ச்சியை மீறிய ஒரு கவலை முகத்தில் இருக்கேன்னு  லேசா  விசாரிச்சேன். அதுக்குள்ளே பக்கத்தில் உக்கார்ந்திருந்த மாமியார் சொல்றாங்க, 'ரொம்பக் கவலைப் படுதுமா!'
"ஏன்? எதுக்கு?"

"பையனைப் பத்துன கவலைதான்"

எங்க பெயரைச் சொல்லி அறிமுகம் செஞ்சுக்கிட்டு, அவுங்க பெயரை விசாரிச்சேன்.  ரேவதியாம்!  ஆஹா.... என் நெருங்கிய தோழியின் பெயர்னு  சொன்னதும்,   கொஞ்சம் சிரிப்பு வந்தது அவுங்க முகத்தில்!
கவலைப்பட்டே  ஷுகர் வந்துருச்சாம். 'அடடா.....   எனக்கும் கூடத்தான் இருக்கு. அதுக்காகக் கவலைப்பட்டுக்கிட்டே இருக்க முடியுமா?  டாக்டரிடம் காமிச்சு மருந்து மாத்திரைகள், உணவுக் கட்டுப்பாடு, கொஞ்சம் உடற்பயிற்சின்னு இருந்தால்  சமாளிக்கலாமே'ன்னு நம்ம ரெண்டு பைஸாவைச் சொன்னேன்.

பையனைப் பத்துன கவலையில்தான் சக்கரை வந்துருச்சுன்னு மாமியார் (இவுங்க பெயர் சின்னாத்தாள்) சொன்னாங்க.

'அப்படி என்ன கவலை பையனைப்பத்தி' ன்னதுக்கு  விளையாட்டுப் போக்காவே இருக்கானாம். பொறுப்பு வரலையாம்!

போச்சுடா.....  எருமையாட்டம் இருக்கும் எனக்கே பொறுப்பு இன்னும் வரக்காணோம்.... இந்தப் பிஞ்சு (வயசு என்ன ஒரு ஆறு இருக்குமா!) பொறுப்பில்லாம இருக்காமே!!!!!

"ஏங்க.... அதுக்கு ஏன் வேணுகோபாலன் கிட்டே வேண்டிக்கறீங்க?  அவன் சின்ன வயசில் ஆடாத ஆட்டமா?  இப்பெல்லாம் பசங்க பிஞ்சுலேயே பழுக்குதுங்க.... நீங்க இவன் இன்னும் குழந்தைத்தன்மையோட இருக்கானேன்னு  சந்தோஷப்படுங்க!  நல்லாப் படிக்கிறானா?"

"அதெல்லாம் நல்லாத்தாங்க படிக்கிறான்.  டீச்சர் கூட சொன்னாங்க... "

"அப்புறம் என்னத்துக்குக் கவலைப் படறீங்க?  சந்தோஷமா இருங்க, சக்கரை ஓடிப் போயிரும்! "

' உங்ககிட்ட பேசுனா மனசுக்கு சந்தோசமா இருக்குங்க.  கூப்புட்டுப் பேசலாமா'ன்னு கேட்டு நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டாங்க.   காசா பணமா ? ரெண்டு வார்த்தை ஆறுதலாப் பேசுனால் ஆச்சு இல்லீங்களா?

சக்கரத்தாழ்வாரைத் தரிசனம் பண்ணிக்கலாமேன்னு போனால் போற வழியில் இருக்கும் அமிர்தகலச கருடர் சந்நிதி திறந்துருக்கு!   இப்படிப் பார்க்கிறது இதுவே முதல் முறை!  உள்ளே போனோம்.
ஒரு முன்மண்டபமும்  கருவறையுமா இருக்கு!  யாரோ ஒரு குடும்ப வழிபாடு நடக்கப்போகுதாம்.  கேமெராவைப் பைக்குள் வச்சேன்.

நாலு  கைகளும்,  நாகாபரணம் எட்டுமா  உக்கார்ந்த நிலையில்  கிழக்கு பார்த்து ஸேவை சாதிக்கிறார்!   வலது மேற்கையில் கூஜா போல ஒரு பாத்திரம்!  அதுக்குள்ளேதான் அமிர்தம் இருக்கு!  இடது  மேற்கையில்   படமெடுத்தாடும் நாகத்தை அப்படியே கொத்தாய் பிடிச்சுருக்கார்!  மற்ற இரண்டு கீழ்க்கைகளும் கும்பிடும் பாவத்தில் !
 பாற்கடலை கடையும் சம்பவத்தில் வந்த அமுதத்தை மஹாவிஷ்ணு, மோஹினி  அவதாரம் எடுத்து தேவர்களுக்கு மட்டும் விளம்பிட்டு,    கடையும் வேலையில்  பங்கெடுத்த  அசுரர்களுக்கு நாமத்தைப் போட்ட கதை உங்களுக்குத் தெரியும்தானே?

அப்போ பாத்திரத்தில் மீந்து போன அமிர்தத்தை,  தேவேந்திரன் அரண்மனையில் கொண்டு போய் வைக்கும் ட்யூட்டி  பக்ஷிராஜனான கருடனுக்குத்தான் !  அப்படி எடுத்துக்கிட்டுப்போகும் வழியில்  பாத்திரம் தளும்பி  ஒரு நாலு சொட்டு நாலு இடத்தில் விழுந்துருது! அந்த இடங்களில்தான்  கும்பமேளா  நடக்கும். நம்ம கும்பகோணமும் அந்த நாலில் ஒன்னு கேட்டோ!

அது ஒருபக்கம் இருக்க.... இப்ப இன்னொரு கதையைப் பார்க்கலாம்.

 காஸ்யப முனிவருக்கு ரெண்டு மனைவிகள். கத்ரு, வினதைன்னு பெயர்கள்.  மூத்தவளுக்கு ஆயிரம் பிள்ளைகள் !  சின்னவளுக்கு ரெண்டே ரெண்டு!

மூத்தது பெத்த அத்தனையும் நாகங்கள்!   சின்னவள் பிள்ளைகள் தான் கருடனும், அருணனும்!  கருடன் , பெருமாளுக்கு வாகனமாவே போயிடறார்.  அருணன் வாகன ஓட்டியாக சூரியனிடம் வேலை பார்க்கிறான்.

கத்ருக்கு எப்பவும் வினதையைக் கண்டால் ஆகவே ஆகாது.  ஒருசமயம், இந்திரனின் குதிரை உச்சைச்சிரவஸ்  என்ற (வெண்)குதிரை  என்ன நிறமுன்னு  வினதையைக் கேக்க, அவள் வெள்ளைன்னு சொல்றாள். 'இல்லை. அது கருப்பு. என்ன பெட் கட்டுறே'ன்னதும்,  தான் சொன்னது சரியான விடைன்றதால்,  அலட்டிக்காம உங்க  விருப்பமுன்னு சொல்லிடறாள் வினதை! தோத்துப்போறவங்க ஜெயிக்கறவங்களுக்கு அடிமையா இருக்கணுமுன்னு  சொல்லிட்டு,  நாளைக்கு நாம் ரெண்டு பேரும்  நேரில் போய் என்ன நிறமுன்னு பார்த்துட்டு வரலாமுன்னாள்  கத்ரு.

தன்னுடைய ஆயிரம்  மக்களைப்பார்த்து, நாளைக்கு நானும்  சித்தியும் இந்திரலோகத்துக்குப் போறோம்.  நீங்க எல்லோரும் உடனே அங்கே போய், அந்த வெள்ளைக்குதிரை உடம்பை நல்லாச் சுத்திக்குங்க. ஒரு துளி வெள்ளை நிறம்கூட வெளியே தெரியப்டாது. ஜாக்கிரதைன்னாள்.  அதுகளும் அம்மா சொன்னபடியே செஞ்சதுகள்!

மறுநாள் கத்ருவும் வினதையும் இந்திர லோகத்துக்கு,  உச்சைச்சிரவஸைப் பார்க்கப்போனாங்க.  கொஞ்சதூரத்துலே  நின்னு பார்த்து, 'அதோ தெரியுது பார் குதிரை. இப்போ சொல்லு அது என்ன நிறம்னு? '

வெள்ளைக்குதிரை ஏன் இப்படிக் கருப்பா இருக்குன்னு புரியாமல்....  முழிச்ச வினதை,  'அது வெள்ளைதான். ஆனா இப்ப ஏன் இப்படிக் கருப்பா இருக்குன்னு தெரியலை'ன்னாள்.

'பந்தயத்துலே நீ தோத்துப்போயிட்டே...  இனி நீ என் அடிமை'ன்னுட்டாள் கத்ரு.  அடிமை வாழ்க்கையில் மனமும்  உடலும் நொந்து கிடக்கும் தாயைப் பார்த்த  கருடனுக்கு மனசு தாங்கலை.

நேரா, கத்ரு வீட்டுக்குப்போய்,  'என் அம்மாவை இந்த அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கணும். நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்'னு கெஞ்சிக் கேட்டதும், இந்திரலோகத்தில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் உன் தாய்க்கு விடுதலைன்னுட்டாள்!

இவரும்  இதோன்னு பறந்து தேவலோகம் போய், இந்திரனின் அரண்மனைக்குள் இருந்த  அமிர்த கலசத்தை அப்படியே தூக்கிக்கிட்டு  வந்துட்டார். இவர் பெருமாளுக்கு வேண்டப்பட்டவர் என்பதால்  யாரும் தடை ஒன்னும் சொல்லலை போல!

கத்ருவுக்குக் கலசத்தைப் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி!  அடிமை சாஸனத்தைக்  கொண்டு வந்து நீட்டினாள். இந்தக் கையாலே கலசத்தை  தர்ப்பைப்புல்  மேல் வச்சவர், அடுத்த கையாலே சாஸனத்தை வாங்கிக் கிழிச்சுப்போட்டார்.  அம்மாவுக்கு விடுதலை!

பிள்ளைகளுக்கு அமிர்தம் கொடுத்துட்டால் அதுகள் அழிவே இல்லாமல் எப்பவும் இருக்கும் என்ற ஆசையில் எல்லாப் பிள்ளைகளையும்  கூப்புடறாள்.  சரசரன்னு  வந்துக்கிட்டு இருக்காங்க. ஒன்னா ரெண்டா? ஆயிரமும் வரவேணாமோ?  அதுக்குக் கொஞ்சம் நேரம் ஆகத்தானே செய்யும்?

இதுக்குள்ளே இந்திரனுக்கு ,   கருடன்  கலசம்  கொண்டுபோன சமாச்சாரம் தெரிஞ்சு  அடுத்த நொடியில் கிளம்பி வந்து  கத்ரு வீட்டாண்டை தர்பை மேல் வச்சுருக்கும் கலசத்தைத் திரும்ப எடுத்துக்கிட்டுப் போயிட்டான்!

ஐயோ ஐயோன்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்து பார்க்கிறாள் கத்ரு.  பசங்களும் வந்துட்டாங்க. நோ கலசம், நோ அமிர்தம்......  கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலை....  அதுக்காக சும்மா இருக்க முடியுதா?  இந்தப் புல் மேலேதான்  அமிர்தகலசம் இருந்துச்சுன்னு அதை எடுத்து நாக்குலே நக்கிப் பார்த்ததும்,  அது நாக்கைக் கிழிச்சுருச்சு  :-(  தர்ப்பைப்புல்  ஓரம் நல்ல கூர்மையா இருக்கும், கேட்டோ!  அப்போ இருந்துதான் பாம்புகளுக்கு  ரெண்டா பிளவான நாக்கு அமைஞ்சதுன்னு.... ஒரு 'கதை' !

பதிவுலே கதை இல்லை, கதை இல்லைன்னு நம்மவருக்கு  ஆதங்கம்.  அதான்  ஒரு கதை விட்டுருக்கேன் :-) அதெப்படி எல்லா பதிவுகளிலும் கதை இருக்குமா என்ன?  என்னவோ போங்க......  

அமிர்த கலசத்தைக்  கொண்டு வந்த சமயம் கொடுத்த போஸில்  இந்த சந்நிதியில் நம்ம கருடர் இருக்கார்!

பதினாறு உபச்சாரங்களுடன் பூஜை ஆரம்பிச்சது.  நாங்களும் குடும்ப அங்கங்களுடன்  மண்டபத்தில் உக்கார்ந்து  நிதானமா நடந்த பூஜையைப் பார்த்தோம். இந்தாண்டை இருக்கும் கதவை காத்துக்காகத் திறந்ததும்  வேணுகோபாலன் சந்நிதி வெளிப்புறம்  தெரிஞ்சது.  உண்மையிலேயே  அழகான சிற்பங்கள்தான்!

இங்கே அபிஷேகம் முடிஞ்சு அலங்காரத்துக்குத் திரை போட்டதும் அந்தாண்டை இறங்கிப்போய்  கொஞ்சம் க்ளிக்கிட்டு வந்தேன் :-)
பூஜை முடிஞ்சு ப்ரஸாதம் கிடைச்சது!   வெண் பொங்கல்!  இதையே அமிர்தமா நினைச்சு  வாயில் போட்டுக்கிட்டேன்! இதுவரை பார்க்கக் கிடைக்காத சந்நிதியை பார்த்த திருப்தி எனக்கு.
வெளியே வந்தால் சக்கரத்தாழ்வார் வாசலில்  கூட்டம் அதிகமா இருக்கு.  அப்புறம் போகலாமுன்னு ரங்கவிலாஸுக்குள் போனால், நேத்து  ராமானுஜர் 1000 சிறப்புச் சொற்பொழிவு நடந்த இடத்தில்  சாமிக்குச் சார்த்தின புடவை, வேஷ்டிகள் எல்லாம் ஏலத்தில் விற்பனையாகுது!  புடவை ஒன்னு வாங்கிக்கலாமேன்னு பார்த்தால்  ஒரே வேஷ்டி மயம்.  கோவில் ஊழியரிடம் விசாரிச்சால், புடவை முடிஞ்சதாம். இப்ப வேஷ்டி மட்டும்தான் :-(
வாஹனங்களுக்குக் கவசம் தயாரிக்கும் வேலை நடந்துக்கிட்டு  இருக்கு! செப்புத்தகடுதான். அப்புறம் தங்க முலாம் பூசுவாங்களாம்!


மதுரகவி ஆழ்வார் சந்நிதி வெளியில் இருக்கும் பழைய காலத்து ஓவியங்கள் எல்லாம் நிறம் மங்கி பழுதாகிக்கிட்டு வருது...  சரி பண்ணாத் தேவலை. ஆனால் சரி பண்ணறேன்னு ஆரம்பிச்சுக் கெடுக்காம இருக்கணும்.

சந்நிதிக் கதவை மூடிக்கிட்டு இருந்தார் பட்டர்.  ஆழ்வார்கள் சந்நிதிகள், இன்னும்  அங்கங்கே  சின்னதும் பெருசுமா இருக்கும் சந்நிதிகள் எல்லாம்  பொதுவா மூடித்தான் இருக்கு.  திறக்கும் சமயம் நாம் அங்கே இருந்தால்  கொடுப்பினை.

மக்கள் அதிகமா வரும் சந்நிதிகளில்தான் பட்டர்களும் இருக்காங்க. அவுங்க திறந்து வச்சால்தான் இவுங்களும் போவாங்க..... இப்படி ... ஒரு  காலம்.... ஆழ்வார்கள் திருநக்ஷத்திரத்துக்கு மட்டும்  கட்டாயம் திறப்பு உண்டு போல!
ஆர்யபடாள் வாசலில்  அன்றைய நிகழ்ச்சி நிரல் எழுதிப் போட்டுருக்காங்க. அப்படியே உள்ளே போய் அன்னமூர்த்தியைக் கும்பிட்டுக்கிட்டேன்.  குறை ஒன்றுமில்லையாம்!
மணி  பனிரெண்டு. நம்மவர் களைச்சுப்போயிட்டார். வெயில் தாங்கறதில்லை. ரொம்பவும் கசக்கிப்பிழிஞ்சால் நல்லாவா இருக்குன்னு கிளம்பி ரங்கா கோபுர வாசலை நோக்கி நடக்கும்போதுதான், முற்றத்திலே நம்ம ஸ்ரீதர் கடையைக் காணோமேன்னு தேடுனதும்,  'அதோ அந்தக் கடைதான். நீ போய் பார்த்துட்டு வா'ன்னுட்டு, திருவந்திக்காப்பு மண்டபத்துலே உக்கார்ந்துட்டார். எல்லாம் ஒரு பயம்தான்!

அந்தக்கடைதானான்னு சம்ஸயமா இருக்கு. போர்டைக் காணோம்.

எனக்காக அங்கே கடையில் இருவர் காத்திருந்தாங்க.

தொடரும்........  :-)

17 comments:

said...

உங்க பதிவுகளில் அழகே நீங்க சொல்லும் கதைகள் தான்....

சோ சார் சொன்னது சரிதான்...

கதை இல்லாம என்ன துளசி அம்மா பதிவு.....

இன்றைய கதையும் அருமை....

ஸ்ரீரெங்கம் படங்களும் ரொம்ப அழகு...பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு....

said...

உங்கள் பதிவுகளைப் படிக்கும்போதுகூட நாங்கள் புண்ணிய பேங்கில் டிபாசிட் செய்வதாக உணர்கிறோம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

said...

//எருமையாட்டம் இருக்கும் எனக்கே பொறுப்பு இன்னும் வரக்காணோம்// யானைதான் அழகு. ஹிஹிஹி

said...

படங்கள் அழகு.சில பேருக்கு கவலையே ஒன்றுமில்லை என்றாலும் அதுவே கவலையாகி விடும்! நம்ம சின்னாத்தா மருமக போல!!!

said...

படங்கள் கொள்ளை அழகு!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கதை சொல்லிக்குக் கூடுதல் மகிழ்ச்சி :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அப்படியே அவுங்கவுங்க கணக்குலே போட்டுடலாம் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

உண்மை. யானைதான் அழகு. ஆனால் புத்திசாலியா இருக்கே!

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்ம விசுவோட டயலாக் தான். கவலை இல்லையேன்னு கவலைப்படும் மக்கள்ஸ்.

said...

வாங்க பானுமதி.

ரசித்தமைக்கு நன்றி!

said...

திரு கோபாலின் கண் உபாதை போயிற்றா நீங்கள் சொலி நான் கவனிக்க வில்லையா

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

விசாரிப்புக்கு நன்றி.

அப்படி ஒன்னும் பூரண குணமாக சான்ஸே இல்லையாம். கொஞ்சம் பரவாயில்லை. ஒரு 2 % முன்னேற்றம். ஒரு ரெண்டு மூணு வருசம் ஆகலாமாம். ஒரு கண்ணில்தான் பிரச்சனை என்பதால் அடுத்த கண்ணுக்கு வேலைகூடுதல். ஒருமாதிரி பேலன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கார்.

said...

திருவரங்கம் போனாலே டீச்சர் எழுத்துல தாய்வீட்டுக்குப் போன மகிழ்ச்சியும் சுதந்திரமும் தெரியுதே. பதிவுகளும் பதிவுகளில் சொல்லப்படும் அனுபவங்களும் அப்படியப்படி.

ஆண்டாளுக்கும் சர்க்கரையா? காட்டில் இருக்கும் ஆனையை நாட்டில் வைத்து சோத்துருண்டை போட்டு அதுக்கும் சர்க்கரை நோயைக் கொடுத்துவிட்டோமே! அடடா!

said...

Women lie about their children because they assume if they praise them to others 'evil eye' will fall on the children.

said...

This blogpost is somewhat sad. Diabetes is all present. Almost everyone of middle age and above seems to have been affected, including the blogger. It wasn't so in the past. As Ragavan sarcastically asked it'll even pull God to itself. Scary :-(


said...

வாங்க ஜிரா.

தாய்வீடு.... உண்மைதான் போல! முந்தி ஒரு காலத்துலே திருப்பதியா இருந்தது. அப்புறம் ஒரு ஆறு வருசத்துக்கு முந்தி அவனுக்கும் எனக்கும் டெர்ம்ஸ் சரி இல்லாமப்போனதால்... தாய்வீட்டை(யே) மாத்திக்கிட்டேன் :-)

ஆண்டாள் சமாச்சாரத்துலே.... சோத்துருண்டை கூடவே இன்னொன்னும் இருந்ததே! சின்ன அண்டா காஃபி!

said...

வாங்க வினாயகம்.

முதல் வருகை போல இருக்கே! நன்றி.

கண்ணுபடப்போகுதுன்னு இதுக்கெல்லாமா பொய் சொல்வாங்க?

அப்புறம் அந்த சக்கரை..... பொதுவா நம்ம உடம்பில் இருக்க வேண்டிய சக்கரையின் அளவை ரொம்பவே குறைச்சு சின்ன எண்ணா ஆக்கிட்டதால் திடீர்னு பலரும் சக்கரை நோயாளியா ஆக்கப்பட்டுட்டாங்க. அதிலும் நம்ம ஆசிய நாடுகளில் இருப்பவர்களுக்கு சக்கரை அதிகமுன்னும் ஒரு பெயர் வந்துருக்கே.... என்னவோ போங்க.... ரொம்பப் பழைய காலத்துலே தனக்கு இன்ன நோய்னு கூடத் தெரியாம, மருந்து மாத்திரைகள் ஒன்னுமே இல்லாம வாழ்ந்து போன தலைமுறைகளை நினைச்சுக்கறேன்.