Monday, August 31, 2009

கர்ணன்கள்

பாரதம் மகாபாரதமுன்னு ஒரு விழா(அப்படித்தான் சொல்லணும் ) நடந்துக்கிட்டு இருக்கு. இதுலே ஒவ்வொருநாளும் ஒரு முக்கியப் பாத்திரத்தின்(அந்தப் பாத்திரமல்ல, இது கதாப் பாத்திரம்) அறிமுகம். கதை மாந்தர்ன்னு சொல்லாம். அரசனா இருந்தால் என்ன? ஏழையா இருந்தால் என்ன? மனித குணங்கள் முற்றிலும் முரண்பாடுகள் உள்ளதுதானே? எந்த தருமமும் நியாமும் அந்தந்த சமயத்துலே அது சரின்னுதான் எடுத்துக்க வேண்டி இருக்கு.

நேற்று நம்ம கர்ணன். இந்தப் பெயரைக்கேட்டதும் சிவாஜிகணேசனின் கர்ணன் மனக்கண்ணீல் வந்து நிற்பதைத் தடுக்க முடியாது. படமா அது? அப்பப்பா....எத்தனை முறை பார்த்தோமோ அத்தனை முறையும் ரசிச்சோம். பாட்டுகள் ஒவ்வொன்னும் அருமையிலும் அருமை. நடிகர்கள் தேர்வு, இசை, கலைன்னு ஒன்றோடு ஒன்று கை கோர்த்து அழகா அமைஞ்சது அது.

இந்தக் கர்ணனை மனசுலே இருந்து எடுக்கவே முடியாதுன்னாலும் இன்னொரு கர்ணனையும் பார்க்கலாமேன்னு 'காற்றுவெளி'யுடன் கலந்து போனோம். (பதிவுலக நண்பர்கள் சிலரையும் அங்கே சந்திச்சேன்) சொன்ன நேரத்துக்குச் சரியா ஆறே காலுக்கு ஆரம்பிச்சுட்டாங்க. திரை விலகியது. கொஞ்சம் இருட்டான போர்க்களக் காட்சி. பேராரவத்துடன் போர் நடக்கும் நிகழ்ச்சி. ஓசையே எல்லாத்தையும் சொல்லுது. வெள்ளை உறையில் உறைஞ்சு நிற்கும் சிலை. மெதுவாக உறை கழன்று மேலே போகப்போக உள்ளே இருந்து உருவம் வெளிப்படுது. அட! நம்ம நாஸர்.

கர்ணன், போர்க்களத்தில் நின்று, தன் வாழ்வில் நடந்தவைகளை எல்லாம் ஒருமுறை திரும்பிப்பார்க்கிறா(ர்)ன். எத்தனை எத்தனை அவமானங்கள்..... வேறு நடிகர்கள் யாரும் மேடையில் இல்லை. மோனோ ஆக்டிங். தன்னைத் துளைத்த அம்புகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறான். 'பாரதம் சொல்கிறது அர்ஜுனனின் அம்பால் இறந்தேன் என்று. ஆனால் நான் பட்ட அவமானங்களும் அவச்சொற்களும் என்னை எப்போதோ கொன்றுவிட்டன' இந்த வசனம் சொல்லப்பட்டபோது, என் கண்ணில் துளிர்த்த கண்ணீரே சாட்சி..... நடிப்பு எப்படி இருந்துருக்குமுன்னு சொல்ல.



முப்பத்தியஞ்சு நிமிஷம். மேடையில் ஒருவர் மட்டும். வீராவேசமான பேச்சு ஒன்னும் இல்லை. ஒரு சாதாரண மனித மனத்தின் குமுறல்கள். மகாபாரதத்தில் வரும் மாந்தர்களில் அநியாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டவர் வரிசைன்னா முதல்லே கர்ணனைத்தான் சொல்லணும். துரியோதனனால் அரசன் என்று முடிசூட்டப்படும்வரை, (ஜனிச்ச நிமிஷம் தொட்டு அனாதைக் குழந்தையாய் ஆத்துலே பயணம்) வளர்ந்துவந்தக் காலக்கட்டங்களில் பட்ட அவமானங்கள் சொல்லிலே அடங்குமா?
நிகழ்ச்சி முடிஞ்சதும் நன்றி கூறும்போது, 'நான் ஒருத்தன் தான் உங்கள் கண் முன்னே. எனக்குப் பின்னால் ஒரு பெரும்படையே இருந்ததால்தான் இந்த நிகழ்ச்சியை உங்க கண் முன்னால் நடத்த முடிஞ்சது'ன்னு சொல்லி மேடை அமைப்பு முதல், நாடக இயக்கம்வரை பங்கேற்றவர்களை அருமையாக அறிமுகப்படுத்தினார். இது ஒரு அடவு ஃபவுண்டேஷன் தயாரிப்பு. தயாரிப்பு வடிவமைப்பு கமீலா நாசர். புருஷோத்தம், ரஃபி, நடேஷ், போளி வர்கீஸ், சந்திரா, ஃப்ரான்ஸிஸ் கிருபா, சந்தோஷ், பாஸ்கராஸ், எம்.ஜி. ஸ்வாமி, அனீஸ், வேலு, பேராசியர் ரகுராமன், கருணா பிரஸாத் இப்படி ஒரு பெரும்படையேதான். சந்தேகமே இல்லை.
உழைப்பு உழைப்பு உழைப்பு. எவ்வளவு உழைச்சாங்கன்றதைப் புரிஞ்சுக்க முடிஞ்சது.


கடைசியில் வெளியே வந்தப்ப, நாஸரையும், அவர் மனைவி கமீலா நாசரையும் சந்திக்க வாய்ச்சது. மழுமழுன்னு மொட்டைத்தலையுடன், உசரமாக நின்னுக்கிட்டு இருந்த ஒருவரும் அவர்கூடவே இருந்த இன்னொருவரும் 'கர்ணனுடன்' பேசிக்கிட்டு இருந்தாங்க.(அரிகிரி அசெம்ளிக்காரர்களாம். டிவி பார்த்தால்தானே தெரிஞ்சுருக்கும்?) நடிப்பு அபாரமுன்னு பாராட்டினோம். கோபால் கேட்டார்,'எப்படி சார் அவ்வளோ பெரிய டயலாக்கை மறக்காமல் பேசுனீங்க'ன்னு:-)))) அரைமணிக்கும் மேலா ஒருத்தர் பேசணுமுன்னா(அதுவும் போர்க்களத்தில், போர் அடிக்காம!!)

'நான் என்ன பெருசாச் செஞ்சுட்டேன். நாட்டியம் ஆடுனவங்களை விடவா?'ன்னார். பெரியமனசு. பெரிய மனுசர்.

எங்க 'அக்கா'வின் கணவருக்கு உங்க மூக்கேதான். நாஸர் மூக்குன்னு கலாட்டா செய்வோம்' அபத்தமாச் சொன்னது நான். ஆனா....மனுசர் அதையும் ரசிச்சுச்சிரிச்சார்.


பி.கு: அந்த நாட்டியத்தைப்பத்தி அடுத்தபதிவில் எழுதறேன்.

Friday, August 28, 2009

தமிழ்மணம் சிருஷ்டிகர்த்தா அல்வா

தமிழ்மண நட்சத்திர அல்வான்னும் இதைச் சொல்லலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூசணிக்காய் : கால் கிலோ

சர்க்கரை: ஒரு கப்

நெய் : கால் கப்

முந்திரிப்பருப்பு: கால் கப்பு(பயந்துறாதீங்க பத்தோ பதினைஞ்சோதான் இருக்கும்)

ஏலக்காய்: நாலஞ்சு

குங்குமப்பூ: ஒரு கிள்ளு ( வெதுவெதுன்னு இருக்கும் ஒரு கால் டீஸ்பூன் பாலில் ஊறவச்சால் நலம்.ஆமாம்.... வேற வேலை இல்லைன்னா...வேணாம். அப்படியே சேர்த்தாக் குடியா முழுகிரும்?)


கலர்: இளமஞ்சளோ, இல்லை ஆரஞ்சு நிறமோ உங்கள் தேவைக்கு.


பூசணிக்காயோட கெட்டித்தோலையும், குடலையும்(??) வெட்டி எடுத்து வீசிடலாம். வெள்ளைப்பகுதியை அப்படியே காரட் துருவியில் சின்ன ஓட்டையா இருக்கும் பகுதியில் துருவி வச்சுக்குங்க.

ஒரு கனமான அடியுள்ள வாணலியில்(இப்படித்தான் எழுதணுமுன்னு சாஸ்த்திரம். வாணலி இல்லேன்னா? நல்ல நான் ஸ்டிக் ஃப்ரை பேன் இருந்தாலும் போதும்.)கொஞ்சம் நெய் ஊத்தி அடுப்பிலே வச்சு (இளந்தீயா இருக்கணும்) முந்திரிப்பருப்பை பொன்னிறமா வறுத்து எடுத்துக்குங்க.

அதே வாணலியில் துருவுன பூசணியைக் கொஞ்சம் லேசாப் பிழிஞ்சுட்டுப் போட்டு வதக்குங்க. பச்சைவாசனை போகணும்.அப்படியே சட்னு வெந்தும் போயிரும். இப்போ அதுலே சக்கரையைச் சேர்த்துக்கணும். ஒரு கப்ன்னு சொல்லி இருக்கு. ஆனால் விருப்பமுன்னா இன்னும் கொஞ்சம் ஒரு கால் கப் கூடச் சேர்த்துக்கிட்டா தப்பே இல்லே ( எனக்குக் கொஞ்சம் இனிப்புக் கூடுதலா இருந்தாத்தான் பிடிக்கும் ஹிஹி)

தண்ணிகிண்ணி சேர்க்காதீங்க. பூசணித் தண்ணியிலேயே சக்கரை இளகிரும். கைவிடாமல் கிளறணும். பார்த்து.... த்ளக் ப்ளக்குன்னு கொதிச்சு மேலே சிதறும். கவனமா இருங்க. சூடான பாகு மேலே விழுந்தால் தோல் எரியும்.

ஒருமாதிரி எல்லாம் சேர்ந்து இளகி கட்டியா வரும்போது குங்குமப்பூவைச் சேர்த்துக்கலாம். இந்த இளமஞ்சள் நிறமே போதும்னுன்னா அப்படியே விட்டுறலாம். கலர் (பார்க்க) ரொம்பவே பிடிக்குமுன்னு இருக்கும் மக்கள்ஸ், உணவுப்பொருளில் சேர்க்கன்னே கிடைக்கும் ஃபுட் கலரில் மூங்கில்குச்சி விட்டு, ரெண்டே ரெண்டு சொட்டு விடுங்க.(பேம்பூ ஸ்க்யூவர் கிடைக்குதுல்லே அதுலே ஒரு பாக்கெட் வாங்கி வச்சுக்குங்க. ஆயிரம் பயன் இருக்கு இதுக்கு. இட்லி வெந்துச்சான்னு பார்க்கறதுலே இருந்து, பலகாரம் பொரிக்க அடுப்பில் வச்ச எண்ணெய் போதுமான சூடு வந்துச்சான்னு சோதிக்கறவரைக்கும்)

கால் கப்பு நெய்யில் மீதி இருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமா ஊத்திக் கிளறிக்கிட்டே இருங்க. அல்வா அப்படியே பாத்திரத்தின் ஓரத்தை விட்டுச் சுருண்டு வரும்போது, வறுத்த முந்திரியையும், பொடிபண்ணி வச்சுருக்கும் ஏலக்காய்த்தூளையும் தூவி, ஒரு தட்டுலே எடுத்து வச்சுக் கத்தியால் சமமாப் பரத்தி விடுங்க. கொஞ்சம் ஆறுனதும் துண்டு போட்டுக்கலாம்.(தோளிலா????)



மேலே சொன்ன அளவுக்கு மொத்தமே, மொத்தையா ஒரு டென்னிஸ் பந்து அளவுக்குத்தான் வரும். இதுக்குப்போய் தட்டு, கத்தி இதெல்லாம் கட்டாயம் வேணுமா? (அப்புறம் அதையெல்லாம் கழுவும் நபருக்கு வேலை கூடிறாதா என்பவர்கள்) ஒரு கிண்ணத்தில் வழிச்சுப் போட்டு, ஸ்பூனால் பறிமாறலாம்.

பூசனிக்காய் வாங்கிவச்சு நாலைஞ்சுநாள் ஆச்சு. இன்னும் செஞ்சுபார்க்க நேரம் வரலை. அதனால் பதிவுக்கானப் படத்தைப் பதிவு போடச் சொன்னவரின் பதிவில் இருந்து சுட்டுட்டேன்.


அச்சச்சோ....... எவர்ஸில்வர் கிண்ணத்தை விட்டுட்டு எல்லாரும் இந்தப் பக்கம் கண்ணாடிக் கிண்ணத்துக்கு வாங்க. (இதுவும் சுட்டதுதான். படம் எடுத்தவருக்கு நன்றி)

இதுக்குத்தான் கவனமா இருக்கோணுங்கறது. ஏம்ப்பா கே ஆர் எஸ், ஒரு நல்ல படமாப் பார்த்துப் பதிவில் போட்டுருக்கலாமுல்லே?

Thursday, August 27, 2009

புதிய தலைமுறை

பார்த்துட்டுக் கருத்து(எதாவது இருந்தால்?) சொல்லுங்கன்னு பழைய தலைமுறை ஆளான என்னைக் கேட்டுருந்தார் நண்பர். ஆஹா.... நம்மை(யும்) மதிச்சு ஒருத்தர் கேக்கறாருன்னா விடலாமா? இல்லே விடத்தான் முடியுமா? அனுப்புங்கன்னு சொல்லி, அவர் அனுப்புனது எனக்குக் கிடைச்சது.

பதிவின் தலைப்பைப் பார்த்தீங்கல்லே.... அதுதான் வெளிவரப்போகும் புதுப் பத்திரிக்கை/ இதழின் பெயர். இது, இப்போ என் கையில் இருப்பது, விற்பனைக்கு அல்ல-தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு இருக்கு.

அட்டை நீங்கலா நாப்பத்தியெட்டே பக்கங்கள். ஹோட்டல் தோசை மாதிரித் தேசலா இருக்கோ? வார இதழா, மாதம் இருமுறையா, இல்லே மாதம் ஒன்றா? என்ன மாதிரின்னு இன்னும் புரிபடலை. கைக்கு அடக்கமாச் சுருட்டி வச்சுக்க வசதியா இருப்பதைப் பார்த்தால் வார இதழா இருக்கும் வாய்ப்பு அதிகம்.

திறந்ததும், லேடீஸ் ஃபர்ஸ்ட்ன்னு விளையாட்டு வீராங்கனை(?)களைப் பற்றிய கட்டுரை. ஜி.கோமளா அவர்கள் எழுதியது. அதுக்குத் தலைப்பு 'வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்' ஆஹா..... செண்டிமெண்ட்டா 'டச்' பண்ணிட்டாங்க. தமிழ் சினிமாக்களில் முதல் காட்சியில் வெற்றி வெற்றின்னு கூவிக்கிட்டே வரும் நாயகனின் 'பாவம்'. Bhavam ன்னு படிங்க.

அதுக்கு அடுத்து, முக்கியமான சேதி ஒன்னு. பார்த்ததும் எனக்கு வியப்புதான். பரவாயில்லையே நம் அரசு! வசதி இல்லாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் 'உதவி காத்திருக்கு' கல்வி கற்பதற்கான கல்வித் தொகை. கல்விக்கான செலவே பெரும்சுமையா மாறி மனுசனை நசுக்கும் இப்போதையச் சூழலில் உதவி செய்ய சில நிறுவனங்களும், அரசும் சேர்ந்து செய்யும் இந்த உதவி ஞாலத்தின் மானப் பெரிது. உண்மையில் தகுதியானவர்களுக்கு இது போய்ச் சேரணும் என்பதுதான் என் ஆசை.

நமக்குப் பரிச்சயமான பெயர்களைப் பார்த்ததும் உள்ளம் கொஞ்சம் துள்ளுமே.... லேசான ஒரு துள்ளல். நம்ம அதிஷா, யுவகிருஷ்ணா எழுதிய எஞ்ஜினீயரிங் கவுன்சிலிங் பற்றிய ஒரு கட்டுரை. உண்மையைச் சொன்னால் இந்தக் கவுன்சிலிங்கைப் பத்துன ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. அதான் பழைய தலைமுறைன்னு முன்னாலேயே சொல்லிட்டேனே. அப்பப்போத் தினத்தாள்களில் கவுன்சிலிங் ஆரம்பம், ரெண்டாம் கட்டம், மூணாங்கட்டமுன்னு வரும்போதெல்லாம் அது என்னவா இருக்குமுன்னு யோசிச்சு முழிச்சுருக்கேன். இப்போ, இதைப் படிச்சதும் நல்லாவே விளங்கிருச்சு.

தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் எனக்கு, இங்கே ஒரு சினிமா விமரிசனமும் போட்டுருந்தது பற்றி வியப்பு ஏதும் இல்லை. ஆனால்....இந்தப் படத்தைப் பற்றி வலைப்பூக்களில் என்ன சொல்றாங்கன்னு கொசுறா ஒரு விவரம் தந்துருந்தாங்க பாருங்க. அது..... சூப்பர்.

கேள்வி நேரம் பகுதி. தொகுத்தவர் கவின் மலர். ஊடகத்துறை, மார்க்கெட்டிங் துறை மாணவர்கள் இயக்குனர் சீமானிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். சினிமா, அரசியல், மொழின்னு கலந்துகட்டி அடிச்சு ஆடியிருக்காங்க ரெண்டு தரப்பும். மொழிக்கலப்புதான் மிகப்பெரிய ஆபாசமாம். சீமான் சொல்லி இருக்கார்.

சிந்தனைகள் எங்கே இருந்தும் வரலாம். அது கடவுளைப்போல! இப்போ மின்னஞ்சலில் வந்துருக்கு ரிஷி (குமார்) மூலம். இதுக்கு ஒரு ஓவியம் வரைஞ்சுருக்கார் வாசுதேவன். அட்டகாசம் போங்க.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஜி. ஐஸ்வர்யா (எவ்வளவு பொருத்தம் பாருங்க) நம்ம இளைஞர்களுக்கிடையே பெருகிவரும் சர்க்கரை நோய், மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை.


தல சொல்லிட்டார் எப்பேர்ப்பட்ட பைக், எப்படிப் பார்த்து வாங்கணும் என்பதை. தற்கால இளைஞர்களுக்கான அடையாளங்களில் ஒன்னு பைக். ஆக்ஸசரீஸ்ன்னு வச்சுக்கலாம். விலாவரியா விஷயத்தைச் சொன்ன அந்தத் தலயின் பெயரைச் சொல்லலையே....

கவிதை ஒன்னு. நமக்கும் அதுக்கும் காத தூரம் என்பதால் எஸ்கேப்பு. ஆனா கவிதாயினி நமக்குத் தெரிஞ்சவங்கதான். உமாஷக்தி.

நட்ட நடுப்பகுதிக்கு வந்துட்டோம். அட்டகாசமா இருக்கு. நம்ம ஜனநாயகம் மக்களுக்காகத்தான் என்பதில் ஐயமே இல்லை. யாரோட கைவண்ணம்? பாராட்டுகளை அள்ளித்தர்றேன்.

பைக்கில் ஒரு பயணம். பயணக்கட்டுரை எனக்குப் பிடிக்கும். அதிலும் இது 'சரித்திர சம்பந்தமுள்ள இடம்'! ஆர்வத்துக்குக் கேக்கணுமா? எம்.பி. உதயசூரியனாம். நடையும் அருமை.

சினிமாவை விட்டுத் தொலைக்க முடியுதா? இங்கேயும் சினிமாவுக்குச் சில பக்கங்கள். ஆனால்...... நல்லவேளையா.....நடிகையின் படங்கள்,அவுங்க சொந்த சமாச்சாரங்கள் இப்படி ஒன்னும் இல்லை. தைரியமாப் படிக்கலாம். சினிமாவில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வெற்றி அடைஞ்சாங்க சில இளம் இயக்குனர்கள்ன்னு கல்யாண் குமார் எழுதி இருக்கார்.

மக்களுடைய ரசனைகள் மாறிவரும் இந்தக் காலத்தில், 'ஏதோ மக்களே நேரில் போய்க் குத்துப்பாட்டு இன்னபிற அம்சங்கள் வேணுமுன்னு தயாரிப்பாளர், இயக்குனர் வீட்டுவாசலில் தவங்கிடந்துக் கெஞ்சுறதைப்போலப் பில்ட் அப் கொடுத்துக்கிட்டுச் சினிமா என்ற அருமையான கலையைச் சீரழிக்கும் பலர் இதைக் கட்டாயம் படிக்கணும். புதிய சிந்தனையுடன் புதிய இயக்குனர்கள் வந்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களைப் பாராட்டத்தான் வேணும். இப்படிப்பட்டச் செய்திகள் மூலம் வாசகர்கள், திரைப்பட ரசிகர்கள் ரசனையையும் உயர்த்தலாம். எல்லாத் தொழிலையும் போல இதுவும் ஒரு சீரியஸான தொழில்.

கார்ட்டூன் ரசிகர்களுக்காக ரெண்டு பக்கச் சிரிப்புப் படம். வைரமுத்து, தன் அச்சம் தவிர்த்தது எப்படின்னு ஒரு ரெண்டு பக்கம். சுநாமியைப் பின்புலனாக வச்சு ஒரு நல்ல கதையை அருணா ஸ்ரீனிவாசன் எழுதி இருக்காங்க. கதை நாயகன் போல இன்றைய இளைஞர்கள் எல்லோரும் இருந்தால்..... புதியதோர் உலகம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன், நியாயம் நேர்மை நம்பிக்கைக்களுடனும் இளைஞர் சமுதாயம் ஒன்னு உருவாகணும் என்ற ஆதங்கம் படிக்கும் நமக்கும் வந்துருது.

தர்மம், நியாயமுன்னு சொல்லும் இந்த நேரத்தில், தேர்தல் முடிவுகளும், விடைத்தாள்கள் திருத்தமும், இதுக்குண்டானத் தேர்வுத்துறை ஆணையமும் மாணவர்கள் சமூகத்துக்கு ஏற்படுத்தும் மன உளைச்சல்களைப் படிச்சதும் கொஞ்சம் அரண்டுதான் போயிட்டேன். இப்படியெல்லாமா நடக்குது? மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த இல.கிருஷ்ணகுமாருக்கு நன்றி.

கணியன் பக்கங்களைப் பார்த்ததும் அசந்து நின்னேன். எல்லாமே ஓசிதானாம். கணினியில் தமிழ் எழுத என்ன செய்யலாமுன்னு விவரமாக் கொடுத்துருக்கார். வலைப்பதிவுகள், பதிவாளர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. இன்னும் புதுப் பதிவாளர்கள் வரணும். இன்னும் பல விஷயங்களைப் பற்றி ஆரோக்கியமான பதிவுகள் வரணும் என்று வலை உலகமே எதிர்ப்பார்ப்புகளோடு இருக்கு. இ'கலப்பையால் எளிதாக உழுது தமிழ் விதைக்க நம்ம மக்கள் முன்னுக்கு வருவாங்க. வரணுமுன்னு எல்லோரையும் போலவே நானும் நினைக்கிறேன். கடந்த அஞ்சு வருசங்களாக, இணையத்தில் தமிழில் எழுதும் பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதால் கணியன் பக்கத்தைக் கூடுதல் கவனத்தோடுப் படிச்சுப் பார்த்தேன்:-)

மொழி பெயர்ப்பு இலக்கியமுன்னு ஒன்னு அதிக அளவில் வேகமா வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கும் காலம் இது. அருமையான விஷயங்களை அவரவர்களுடையத் தாய்மொழியில் படித்துணர ஏதுவா மொழிபெயர்ப்புச் செய்யும் எழுத்தாளர்களுக்குப் புத்தக உலகில் நிறைய மதிப்பு கூடி வருவது நல்ல விஷயம்தான். அந்த வகையில் கே.ஆர்.மணியின் 'எங்கே போனது என் அல்வாத் துண்டு'க்கு ஒரு அறிமுகமும் வந்துருக்கு.

விளம்பரங்கள் இல்லாமப் பத்திரிக்கை நடத்துவது, பொருளாதார ரீதியில் ரொம்பக் கஷ்டம் என்றாலும் எல்லாத்துக்கும் அளவுன்னு ஒன்னு இருக்குல்லே? வாசகரின் வாசிப்புத் தடைபடாத வண்ணம் அட்டைகளில் மட்டுமே விளம்பரங்கள் என்னும் ஐடியா ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

பத்திரிக்கையின் அமைப்பு, லே அவுட் மற்றும் இன்னபிற டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பத்தி நான் ஒன்னும் சொல்லலை. (தெரிஞ்சாத்தானே/) ஒரு சாதாரண வாசகியா, வெளிவரப்போகும் புதுப் பத்திரிக்கையை ஆழ்ந்து பார்த்துப் படிச்சு, உணர்ந்ததுதான் மேலே சொன்ன எல்லாமும். ஒன்னுரெண்டு எழுத்துப்பிழைகள் கண்ணிலே பட்டன.(நான் வேணுமுன்னா ப்ரூஃப் ரீடரா வரவா?)

எஸ் ஆர் எம் கல்விக்குழுமத்துடன் இணைந்து வரப்போகும் இந்த புதிய தலைமுறைக்கு நம்ம மாலன் அவர்கள் ஆசிரியர். இன்னும் ஆசிரியர் குழுவில் யார் யார் இருக்காங்கன்னு தெரிஞ்சால் மகிழ்ச்சியா இருக்கும். நமக்குத் தெரிஞ்ச பெயர்கள் என்றால் மகிழ்ச்சி ரெட்டிப்பாகும் சாத்தியம் உண்டு. (ஆமாம்....மாலன் அவர்கள் ஒன்னும் எழுதலையா இதுலே? )அடுத்த மாதம் முதல் இளைஞர்களுக்கான இந்த இதழ் வெளிவரப்போகிறது.

வெற்றி பெறணுமுன்னு வாழ்த்துகின்றேன்.

இதழை அனுப்பிவைத்த நண்பர் கல்யாண் குமாருக்கு என் நன்றிகள்.

Sunday, August 23, 2009

துரும்பை(யும்) கிள்ளிப்போடாமல்.....

இந்தியாவில் வாழ்க்கை ரொம்பவே சுலபமுன்னு நினைப்பு. அதிலும் பண்டிகைக் காலமுன்னா...... மாய்ஞ்சு மாய்ஞ்சு 'ஆக்கி' எடுக்கும் காலம்போய் எல்லாமே ரெடிமேடுன்னு ஆகியிருக்குன்னு விளம்பரங்கள் சொல்லுதே. (எல்லாம் தினமலர் தினகரன் வகையறாக்களில் ஈ எடிஷனில் பார்ப்பதுதான்)

எந்த நாட்டில் இருந்தாலும் புள்ளையாரை மட்டும் விடறதா இல்லைன்னு தெரிஞ்சவகையில் கொழுக்கட்டைச் செய்யறதுண்டு. பாவம் 'அவரும்' வெந்ததையும் வேகாததையும் தின்னே பழகிட்டார். நாஞ்சொல்றது புள்ளையாரை! யாரும் வரிகளுக்கிடையில் படிக்க வேணாம்,ஆமாம்.
ஒரு பண்டிகையாவது இந்தியாவில் 'கொண்டாடிடமுன்னு' ஒருக் குறிக்கோள் மனசுலே ஏறி உக்காந்துக்கிச்சுன்னாப் பாருங்களேன். போனவாரம் 'ஒரு' கிருஷ்ணஜெயந்தி வந்துச்சா.... அப்பவே நம்மக் குறிக்கோள் நிறைவேறாமப் போச்சு. அடுத்தமாசம்தான் நமக்குன்னு நாச்சியார் வேற சொல்லிட்டாங்களா..... அப்பீல் ஏது?

புள்ளையார்ச் சதுர்த்தி இந்த ஞாயிறுன்னுத் தெரிஞ்சதும் அதே 'ஈஸிப்பீஸிக் கொண்டாட்டம் ' நினைவுக்கு வருது. சனிக்கிழமைக் கோயிலுக்குப்போகும் வழியில்....பிள்ளையார் ஃபேக்டரியைப் பார்த்தேன். களிமண் கணபதி. ஆஹா.....கொசுவத்தி...... ஒரு நாப்பது வருசம் இருக்குமா? தாராளமா! வாங்கிறலாம்........

தெருவுக்கு ரெண்டு பக்கமும் புள்ளையார்கள் விற்பனைக்கு. ஆனாலும் நாம் நிக்கும் பக்கத்தைவிட எதிர்ப்புறம் இன்னும் அழகாக இருக்கோ? இக்கரைக்கு அக்கரைப் பச்சை. கூட்டம் அங்கேதானே அம்முது......அங்கேயே போய் வாங்கலாம்.


புள்ளையார் விற்கும் அம்மா, புன்சிரிப்போடு வாங்கம்மான்னு கூப்புட்டாங்க. ஆஹா.... சிரிச்ச முகமுள்ள விற்பனைப் பொண்ணுகளையே இதுவரை எந்தக் கடையிலும் பார்க்கலையே... சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ், பழமுதிர்ச்சோலை இப்படிக் கொஞ்சம் பெரிய கடைகளில் எல்லாம் என்னத்தையோ பறி கொடுத்தாப்போலவும், கொஞ்சம் சடச்சுக்கிட்டும் சிநேகபாவம் முகத்தில் துளியும் இல்லாதவர்களையும் பார்த்து ( எல்லாம் சின்னப் பொண்களப்பா..... வயசும் இருபது இருந்தால் அதிகம்) நொந்து நூடில்ஸ் ஆகி இருந்த எனக்கு இந்தம்மா, பாலைவனத்தில் பசுஞ்சோலை.

நம்ம பிள்ளையாரைத் தெரிஞ்செடுத்தவுடன் அவருக்கான 'ஆக்ஸெஸரீஸ்' பரபரன்னு தானா நம்ம கண் முன்னால் நீட்டப்படுது பல திக்குகளில் இருந்தும்! குடையைக்கூட மடக்கிக்கலாமாம்! பேஷ் பேஷ்.


ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே நோகாம நோம்பு கும்பிட வழிச் சொல்லித்தராங்க. ஸ்பெஷல் பேக் ஒன்னு வாங்கியாச்சு. சின்னதா ஒரு பை. அதுநிறைய 'கூடீஸ்' திரட்டிப்பால், அதிரசம், லட்டு, ரெண்டு விதமானக் கொழுக்கட்டைகள், முறுக்கு, தட்டை, மனோகரம், தேன்குழல், கணேஷ் தர்ஷன்னு ஒரு சிடி (2500 பிள்ளையார்களின் அபூர்வத் தொகுப்பாம்) ஒரு புத்தகம்( விநாயகர் அகவல், 'ககார' சகஸ்ர நாமாவளி)மற்றும் திருவானைக்காவல் ஸ்ரீ வல்லப கணபதியின் படம். கூடவே ஒரு முக்கால் அடி உயரத்தில் ஒரு களிமண் பிள்ளையார். அட! இவரும் வருவார்ன்னு தெரியாமப்போச்சே. பரவாயில்லை டபுள் டபுள்:-) இதுவே தாராளம். கொண்டாத்துக்குக் கேட்பானேன்:-)

துரும்பைக் கிள்ளிப்போடலைன்னு 'சாமி' நினைச்சுக்கப்போறாரேன்னு சுண்டல் செய்யப்போறேன். குக்கரில் வேகுது. அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவலை, சாமிக்குப் படிச்சுக் காமிச்சேன். அதுலே ஒரு வரி 'சட்'னு என்னை எங்கியோ இழுத்துப் போச்சு

'மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்......'

???????????????????????????????????


உங்க அனைவருக்கும் பிள்ளையார்ச் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

ஹேப்பி பர்த்டே, கணேசா!

Wednesday, August 19, 2009

துளசி விலாசில் அஜந்தா ஆப்பச்சட்டி

இதுவரையில் குழியான ஒரு கடாய்/வாணலியில்தான் இந்த வஸ்துவைத் தயாரிச்சுக்கிட்டு இருந்தேன்.
சிங்காரச்சென்னையில் சரவணபவனில் ஒருநாள் ஆப்பம் தின்ன கையோடு ஆப்பஜுரம் வந்துருச்சு. ஆப்பம் செய்யும் ப்ராப்பர் பாத்திரம் ஒன்னு வாங்கிக்கணுமுன்னு சொல்லி வாயை மூடலை, கண்ணெதிரே கடை. உணவகம் பக்கத்துலே நாலைஞ்சு கடை தாண்டி இருந்த பாத்திரக்கடையிலே நுழைஞ்சு விசாரிச்சதுலே கிடைச்சது அஜந்தா ஆப்பச்சட்டி. சின்னதா அழகா இருக்கு. இதுக்கு ஒரு துணை இருக்கட்டுமேன்னு, ப்ரிமியர் குழியப்பச் சட்டி ஒன்னும் வாங்கினோம்.


அந்தக் காலத்துலே எங்க வூட்டுப்பின்னாடி ஒரு ஆயா ஆப்பம் சுட்டுப் பொழைச்சுக்கிட்டு இருந்தாங்க. தினம் கல்லுரலில் மாவு மய்ய அரைச்சு வைப்பாங்க. சிலநாள் காலையில் அங்கேபோய் வேடிக்கை பார்ப்பேன். வாயகலமான மண் சட்டி ரெண்டு. ஒன்னுலே தீக்கங்கு இருக்கும். மாவு ஊத்தி ஆப்பம் சுடும் சட்டியில் கொஞ்சமா எண்ணெய் தொட்டுத் தேச்சுட்டு நீர்க்க இருக்கும் மாவை ரெண்டு கரண்டி மோந்து ஊத்திட்டு சட்டியை ரெண்டுபக்கமும் பிடிச்சு அப்படியே ஒரு சுழற்று சுழற்றுவாங்க. திருப்பி அதை அடுப்பில் வச்சுட்டு மேல்மூடியாத் தீக்கங்கு இருக்கும் சட்டியால் மூடுவாங்க. ரெண்டே நிமிஷம். சிறகை விரிக்கும் வெண்புறா போல சட்டியை விட்டுத் தானே கிளம்பிவரும் ஓரங்களைப் பிடிச்சு வெளியே எடுத்துருவாங்க. இதுலே சிலர் முட்டையைக் கொண்டுவந்து கொடுத்து முட்டையாப்பம் போட்டுவாங்கிக்கறதும் உண்டு. தொட்டுக்கன்னு ஒரு தேங்காப்பால். பாலுன்னு சொல்லமுடியாத பால்நிறத் தண்ணி. அதுலே ஏகத்தும் சீனி போட்டுக் கலந்து வச்சிருப்பாங்க. அதுலே ஒரு கரண்டி மோந்து ஆப்பத்தின் தலையில் ஊத்துனா சுவையான ஆப்பம்.

செட்டிநாடு உணவு வகைகள்ன்னு இப்போச் சென்னையில் எங்கே பார்த்தாலும் புது மவுஸ் ஏறிக்கிடக்கு. ஆப்பத்துக்குக் குருமான்னு ஒன்னும் கொடுக்கறாங்க. நல்ல வேளையாச் சாய்ஸ் இருக்கு என்னைப்போல காரம் ஆகாத ஆட்களுக்கு. தேங்காய்ப் பால். ஆயாக் கடைப் பாலைவிடப் பரவாயில்லைன்னு சொல்லத்தக்க ரகம்.

துளசி விலாஸ் ஆப்பத்துக்குன்னே ஒரு ரசிகர் இருக்கார். எனக்கு ஆப்பம் செய்யத் தெரியுமுன்னு சொன்னதும் மலர்ந்த முகத்தை நீங்க பார்த்திருக்கோனும். அவர் ஒரு மருத்துவர் என்பதும், தற்சமயம் ஆஸியில் இருக்கார் என்பதும் இங்கே கூடுதல் விவரம். நம்ம ஆப்பம் ஹெல்த் சர்ட்டிஃபிகேட் வாங்கிருச்சு. இதெல்லாம் ஒரு 28 வருசத்துக்கு முன்னால் நடந்த 'கதை'

நவநாகரிகமானப் புதுச் சட்டி வந்தவுடன் ஆப்பத்தை விடறதில்லைன்னு அரைச்சு வச்சேன். அன்று சில தோழிகளுடன் வெளியே போயிட்டு வந்தப்ப...... அவசரமில்லைன்னா வீட்டுக்குள்ளே வந்துட்டுப் போங்க. சோதனை இருக்குன்னதும் ஆடிப்போயிட்டாங்க. மனோதைரியம் இல்லாத மக்கள்ஸ்(-: வீட்டிலே இல்லாத வேலையையெல்லாம் மனக்கண்ணில் கொண்டுவந்து, 'ரொம்ப அவசரமாப் போகவேண்டி இருக்கு. இன்னொரு நாள் வரேன்'னாங்க. ஆப்பம் தின்ன அதிர்ஷ்டம் இல்லை(-:

புதுச்சட்டியில் செஞ்சுப் பார்த்தப்பச் சூப்பரா வந்துச்சு. வெறும் பாலைக் காய்ச்சி அதோடு தின்னு பார்த்தேன். அதி சூப்பர்.

மறுநாள் இதுக்குத் தோதா ஒரு தொட்டுக்க வேணுமேன்றக் 'கவலை'யில்
கொத்தமல்லி & புதினா சேர்த்து ஒரு சட்டினி அரைச்சேன். என்னை (முதல்முதலா)சந்திக்க வந்த தோழி ஆப்ட்டாங்க ஆப்பப் பரிசோதனைக்கு.

வெற்றி வெற்றி முழு வெற்றி.(சட்னி ரொம்ப நல்லா இருக்காம்)

ஆப்பம் செய்முறை:

தேவையானப் பொருட்கள்.

இட்லிக்குப் பயன்படும் புழுங்கல் அரிசி: அரைக் கப்

சோறு ஆக்கப் பயன்படும் பச்சை அரிசி: அரைக் கப்

உளுத்தம் பருப்பு : ஒரு மேசைக் கரண்டி ( ரெண்டு தேக்கரண்டி)

உப்பு: முக்கால் தேக்கரண்டி

விருப்பப்பட்டால்: தேங்காய் கால் மூடி. சில்லுன்னா ஒரு நாலைஞ்சு.


முதல் மூன்று பொருட்களை இரவில் படுக்கைக்குப் போகுமுன் ஊறவைக்கவும். இப்பவே நல்லாக் கழுவிட்டால் வேலை சுலபம்.

மறுநாள் லேசாக ஒருமுறை கழுவிட்டு மிக்ஸியில் போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்குங்க. தேங்காய் சேர்ப்பதா இருந்தால் முதலில் தேங்காயைப் போட்டு அரைச்சுக்கிட்டு அப்புறம் அரிசிக் கலவையைப் போடணும். நல்ல மைய்யா மசியணும். உப்பு சேர்த்துக் கலக்கி எடுத்து வச்சுருங்க. அடிக்கிற வெயிலுக்கு சுலபமாப் பொங்கிரும் இந்த மாவு.

அடுப்பில் ஆப்பச் சட்டியை ஏத்தி ஒரு துளி எண்ணெய் விட்டுக் கிச்சன் பேப்பரால் லேசாத் துடைச்சுக்குங்க. மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நல்லாக் கலக்கிக்கணும். தோசை மாவைவிடக் கொஞ்சம் நீர்க்க இருக்கணும்.அதுக்காக விளாவிடக்கூடாது:-)
ரெண்டு கரண்டி மாவை நடுவில் ஊத்திட்டு, ரெண்டு காதுகளையும் பிடிச்சு ரெண்டு சுத்து சுழட்டணும். நான் காதுகள்ன்னு சொன்னது ஆப்பச் சட்டியின் காதுகள்!



சட்டிக்குன்னு சட்டியுடன் வந்த மூடியைப்போட்டு மூடவும். அடுப்பு தீவட்டியா எரியக்கூடாது. மீடியமா இருக்கணும். ரெண்டு நிமிசம் கழிச்சுத் திறந்து பாருங்க. ஓரங்கள் பாத்திரத்தில் இருந்து கிளம்பி வந்துருக்கும். அப்படியே ஒரு ஓரத்தைப் பிடிச்சுத் தூக்கிறலாம். சூடோன்னு பயம் இருந்தால் மரக்கரண்டியால் எடுக்கலாம். எந்தக் காரணம் கொண்டும் உலோகக் கரண்டி, கத்தி இவைகள் வேணாம். நான் ஸ்டிக்கில் கீறல் விழுந்துரும்.

இப்ப அடுத்த ஆப்பத்துக்கு, அதே கிச்சன் பேப்பரில் ஒரு சொட்டு எண்ணெய்த் தொட்டுச் சட்டியைத் துடைச்சுட்டு, மாவை ஊத்துங்க. ஒவ்வொருமுறையும் மாவை நல்லாக் கலக்கிட்டு ஊத்தணும். இல்லேன்னா தண்ணி மேலாகத் தெளிஞ்சு நிக்குமுல்லே!

சட்னி:

புதினா : ஒரு கட்டு

கொத்தமல்லி இலை: ஒரு கட்டு

பச்சை மிளகாய் : நாலு

தேங்காய் : கால் மூடி

உளுத்தம் பருப்பு ரெண்டு மேசைக் கரண்டி

பெருங்காயத்தூள் : அரை தேக்கரண்டி

உப்பு : ஒரு முக்கால் தேக்கரண்டி

புளி: ஒரு கமர்கட் அளவு

எண்ணெய்: 2 மேசைக் கரண்டி

புதினா, கொத்துமல்லிக் கட்டுகளைப் பிரிச்சு இலைகளைக் கிள்ளி எடுத்து நாலைஞ்சுமுறை தண்ணீரில் அலசி மண் இல்லாமல் எடுத்து வடியவிடுங்க.

வெறும் வாணலியில் உ. பருப்பைப் பொன்னிறமாக இள ப்ரவுண் நிறத்தில் வறுத்துத் தனியா எடுத்து வச்சுக்குங்க. அதே வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊத்தி பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, பச்சை மிளகாய்களை ரெண்டா உடைச்சுப்போட்டு வதக்குங்க. அப்புறமா நீர் வடிய வச்ச புதினா, கொத்தமல்லி இலைகளைப் போட்டு நல்லா வதக்குங்க. வாணலி நிறை இருக்கும் இலைகள் அஞ்சே நிமிசத்தில் கைப்பிடி அளவாகிரும் விந்தை பாரீர்.

கொஞ்சம் ஆறினவுடன் உப்புப் புளி, தேங்காய் வறுத்துவச்ச உளுத்தம் பருப்பு எல்லாம் சேர்த்து அரைச்சு எடுங்க. பதம்? சட்னிப் பதம்தான், வேறென்ன?

விருப்பம் இருந்தால் அரைக்கரண்டி எண்ணெயில் கடுகு சேர்த்துத் தாளிச்சுக்கலாம். நான் தாளிக்கலை. போதும்...இத்தனை வருசங்களாத் தாளிச்சது....இன்னும் எண்ணெய் சேர்க்க வேணாமுன்னுதான்.

இந்தச் சட்டினி இட்டிலி, தோசை, தயிர்சாதம், சாம்பார் சாதம் எல்லாத்துக்கும் பொருத்தமாத்தான் இருக்கு.

ஆப்பம் ருசிபார்க்கணுமுன்னா துளசி விலாஸ்க்கு வருகை தரலாம். ரெண்டு நாளை முன்பாக அட்வான்ஸ் புக்கிங் செய்யணும். பதிவர்களுக்கு முன்னுரிமை உண்டு.


ஆரோக்கியமான உணவுப்பட்டியலில் ஆப்பம் என்றதையும் சேர்த்துக்கலாம். ஒருமுறை தேந்துளி பத்மா, முதியவர்களுக்கான உணவுகளைக் குறிச்சு ஒரு இடுகை போட்டாங்க. இதையும் அந்த லிஸ்ட்டுலே சேர்த்துக்கலாம். ஆனால்.... அமெரிக்காவில் ஆப்பச் சட்டி?
பேசாம ஆப்பச் சட்டி மொத்த வியாபாரத்துக்கு ஏஜன்ஸி எடுக்கலாமா?


ஒருவேளை ஆப்பக்கடை வச்சால் அதுக்கு விளம்பர வாசகம்:
ஆரோக்கிய உணவுக்கு ஆல்வேஸ் ஆப்ஸ்.

Tuesday, August 18, 2009

ஆரம்பிச்சதை முடிக்காமல் ......

சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாமுன்னு மனசு நினைச்சாலும் உடனடியா எழுதிறலாமே என்ற உந்துதல் இல்லாமப் போயிருது. விட்டுத் தொலைக்கலாமுன்னா..... ஐயோ..... காலைச் சுத்துன பாம்பு.

போனவாரம் நடுவில் ஒரு விழாவுக்குப்போனேன். முக்கியக் காரணம் யேசுதாஸ் பாட்டு. ப்ளஸ் பாய்ண்ட்டா நடிகை பானுரேகா வர்றாங்க. இன்னும் கூடுதல் வரவா ரசூல் பூக்குட்டி, நாகேஷ் குகுனூர்,ராகேஷ் மெஹ்ரா, நிகழ்ச்சி அறிவிப்பாளரா ஷ்ருதி ஹாஸன் இப்படி அமைஞ்சதால் சுவாரசியமா இருக்கும் என்ற தோணல்தான்.

ஆசை ஆசையாத் தன் முதல் படம் 'காதல் புத்தகம்' எடுக்கும்போது அதை முடிக்குமுன்பே படப்பிடிப்பில் விபத்துக்குள்ளாகி அவசரமா உலகைவிட்டுப் பிரிஞ்ச மகனின் நினைவாகத் தந்தை ஏற்படுத்திய அறக் கட்டளை. 25 வயசுன்றது சாகற வயசா? ஹூம்..... சம்பவம் நடந்த நாள் பனிரெண்டு ஆகஸ்ட். ( ஓ அதான் வார இறுதிவரைக் காத்திருக்காமல் அதே தேதியில் விழாவோ?)

மகனின் கனவையே தாங்களும் கண்ட மற்ற இளையவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கனவுத்தொழிற்சாலையில் நுழைஞ்சு புதுசாப் படம் இயக்கியப் புத்தம்புதிய இயக்குனர்களில் ஒருவருக்குத் தன் மகனின் பெயரில் உள்ள அறக்கட்டளையின் மூலம் விருது ஒன்றை வழங்குறார் தந்தை மாருதி ராவ். இவரும் ஒரு நடிகர்தான். தெலுங்கு சினிமா. பல தமிழ்ப் படங்களிலும் இவரை நீங்க பார்த்திருக்க வாய்ப்புண்டு. இதோ இவரோட புகைப்படம். நினைவுக்கு வருதுங்களா? இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர்ன்னு பலமுகங்கள் கொண்டவர்.

காமராசர் அரங்கம் மிகப்பெரியது. ரெண்டாயிரம்பேர் வரை கொள்ளளவு. நல்ல இடமுன்னு(??) நினைச்சு ஒரு இடத்தில் அமர்ந்தோம். ரெண்டு நாளுக்கு முன்பே தினசரியில் விளம்பரம் வந்திருந்தது. அன்னிக்கே போய் இடம் புக் பண்ணியிருந்தால் முதல் மூணு வரிசைகளில் கிடைச்சிருக்கும். இப்போ நமக்கு நாலாவது வரிசை. நடுவில் இருக்கும் நடைபாதையையொட்டி. சின்னத்திரை நடிகர்கள் சிலர் வந்துருந்தாங்க. என் வரிசைக்கு அடுத்து வேணு அர்விந்த். (அரசி எப்போ முடியுமுன்னு கேட்டிருக்கலாமோ? )

ஒரு வீடியோக்ராஃபர் ஸ்டாண்டு வச்சுக் கெமராவைப் பொருத்திக்கிட்டு இருந்தார். கொஞ்ச நேரத்தில் அரங்கம் நிறைஞ்சது. அதே சமயம் ஏழெட்டு வீடியோக்காரர்கள் வந்து அடைசலா நின்னுக்கிட்டு இருந்தாங்க. அரங்கத்தின் பணியாளர்கள் வரிசையை ஒழுங்குபடுத்தறோமுன்னு முன்னும் பின்னும் பாய்ந்ததோடு சரி. இதுலே 'போட்டோ எடுக்கக்கூடாது'ன்னுச் சொல்லிக்கிட்டே போனாங்க. மக்கள் யாரும் அதை சட்டை செஞ்சதாத் தெரியலை. நம்மூருலே சட்டம், விதி இதெல்லாம் ஆளாளுக்கு வேற இல்லையா? வம்பு வேணாமுன்னு கெமெராவை உள்ளே வச்சுட்டேன். ஆனால் நமது அண்டை அயலார் செல்லில் எடுத்துத் தள்ளிக்கிட்டுத்தான் இருந்தாங்க.

திரை உயர்ந்ததும் முதலில் யேசுதாஸ் அவர்களின் கச்சேரி. ஒலிபெருக்கிக்கு என்ன ஆச்சோ..... சுகானுபாவமா இருக்க வேண்டிய நிகழ்ச்சி கொஞ்சம் இரைச்சலாகவும், லேசா எரிச்சலூட்டும்விதமா மாறிக்கிட்டே போகுது. பி' சுசீலா வந்துருந்தாங்க. கொஞ்ச நேரத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் வந்தார். 'நமஸ்காரம்' 'ன்னு யேசுதாஸ் சொன்னதை அவர் கவனிக்கலை போல. இன்னொருமுறை சற்று உரக்கவே 'நமஸ்காரம் அண்ணா'ன்னார்.

மலையாளம், கன்னடம், ஹிந்தி மராத்தின்னு குஜராத்தின்னு பாடல்கள் வருதே தவிர ........... 'குறையொன்றுமில்லை' பாடுங்கன்னு முன்வரிசை ரசிகர் ஒருவர் கேட்டுக்கிட்டார். ம் ம் ன்னு ஒரு தலையாட்டல். நடுவிலே ஒருமுறை அரங்கத்தைப் பார்த்து 'நீங்க எல்லாம் அமைதியாக் கேட்டாத்தான் பாட்டுப் பாடமுடியும் என்று சின்னதா மிரட்டல். நம்ம ஜனங்களுக்கோ பேசணும். பேசணும் பேசிக்கிட்டே இருக்கணும்,இல்லையா?

கடைசிவரை தமிழில் ஒரு பாட்டும் பாடாமலேயே ஒன்னரை மணி நேரக் கச்சேரி முடிஞ்சது. பார்வையிழந்தவர் கேட்ட கச்சேரி என்பது போல மேடையில் என்னதான் நடக்குதுன்னு தெரியாம இண்டு இடுக்கில் தெரிவதை வச்சு அனுமானிச்சுக்கிட்டு இருந்தோம் அரங்கத்தில் இருந்த அனைவரும். இது வீடியோக்ராஃபர்கள் நீங்கலாக..

நிகழ்ச்சிக்கு நடுவில் ரேகா வந்துட்டாங்க. பலாப்பழத்தில் ஈ மொய்ச்சதுபோல போட்டோகிராஃபர்கள் அவுங்களைச் சுற்றியே ஓடியாடிக்கிட்டு நின்னாங்க. மற்ற விஐபிகளை யாரும் கண்டுக்கிட்டதாகவே தெரியலை.

பாட்டு முடிஞ்சதும் பெரிய திரையில் ஒரு குறும்படம் காமிக்கப்போறோமுன்னு ஸ்ருதி ஹாஸன் வந்து அறிவிச்சாங்க. அரங்கின் நடுவிலும், இரண்டு ஓரங்களிலுமாக மூணு திரைகள். இளைஞர் ஒருவர் வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு சொல்லிப் பார்த்துக்கிட்டே இருக்கார். பதற்றம் கூடி வருது. அவருடைய நண்பர்கள் எல்லாம் கலாட்டா செய்யறாங்க. மறுநாள் இயக்குனர் தேர்வுக்குப் போறார். வீட்டில் அப்பா அம்மா எல்லோரும் தைரியம் சொல்லி வாழ்த்தி அனுப்பறாங்க. நம்ம நாசர்தான் அப்பா. தேர்வு முடிஞ்சு வந்த இளைஞர் யாரோடும் பேசாமல் அவருடைய அறைக்குப்போய்க் கட்டிலில் விழுந்து விம்மறார். கண்ணீர் ஆறாகப்போகுது. தயங்கித்தயங்கிப் பெற்றோர்கள் அறைக்குள்ளே வந்து ஆறுதல் வார்த்தைகள் சொல்ல ஆரம்பிக்கும்போது இளைஞர் 'சடார்' னு எழுந்து அவருடைய அப்பாவை இறுக்கக் கட்டிப்பிடிச்சு, 'என்னைத் தேர்வு செஞ்சுட்டாங்க. நான் படம் இயக்கப்போறேன்'னு குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி தர்றார். படத்தின் பெயர் 'ப்ரேம புஸ்தகம்' (ம் தான். புஸ்தகமு, இல்லை)


கடற்கரையில் பாறைகள் நிறைஞ்ச சூழலில் படப்பிடிப்பு நடக்குது. நல்ல கோணம் தேடி கடலுக்குள் நீண்டிருக்கும் உயரமான பாறையில் ஏறிப் பார்க்கிறார். இடத்தில் கவனம் கூடும்போது, பிரமாண்ட,மான அலை வந்து பாறையை மோதி மூடுகிறது. அடுத்த காட்சியில் அந்த இளைஞனின் கண்ணாடியும், கையில் வச்சுருந்த காகிதங்களும் தண்ணீரில் மிதந்துவந்து கரை ஒதுங்குது. ராஜீவ் மேனோன் எடுத்த படம், இந்த 'செகண்ட் இன்னிங்க்ஸ்'



முதல் படம் நனவாக்கும் எண்ணத்தில் மகிழ்ச்சியாக இருந்து மறைந்த அந்த இளைஞர்தான் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ். அவர் பெயரில்தான் (Gollapudi Srinivas National award ) இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் புது இயக்குனர் ஒருவருக்குத் தர்றாங்க. தமிழில் 'குட்டி' படம் இயக்கிய ஜானகி விஸ்வநாதன், 'தாரே ஸமீன் பர்' ஆமீர்கான் இவுங்கெல்லாம் கடந்த வருசங்களில் வாங்கினவர்களில் நமக்குப் பரிச்சயமான பெயர்கள். இந்த வருச விருது 'ஹரிஷ்சந்த்ராச்சி ஃபேக்டரி' என்ற மராத்திப் படத்துக்கு. இயக்குனர் பரேஷ் மொகாஷி. ஒன்னரை லட்சம், ரொம்பப் பெரிய தொகை இல்லைன்னாலும் விருதின் மதிப்பு காசுலேயா இருக்கு? அங்கீகாரம் விலை மதிப்பு இல்லாததாச்சே.

மகனின் மரணம் கொடுத்த மனசின் வலிக்கு இப்படியும் ஒரு மருந்து தெரிஞ்செடுத்த மாருதிராவ் குடும்பத்தைப் பாராட்டத்தான் வேணும்.

நம்ம கமல் திரைக்கு வந்து, இன்றோடு அம்பது ஆண்டுகள் நிறைவடைஞ்சதுன்னு மேடையில் ஸ்ருதியை அறிமுகம் செஞ்சுவச்சப்பச் சொன்னாங்க. களத்தூர் கண்ணம்மா ரிலீஸ் ஆனதும் ஆகஸ்ட் 12 தானாம்.

மேடையில் இருக்கைகள் எல்லாம் போட்டு முக்கிய விருந்தினர்களை உக்காரவச்சாங்க. அம்பத்தியஞ்சு வயசுக்கு நம்ம ரேகா நல்லா 'ச்சிக்'ன்னு இருந்தாங்க. ஆனா எதையும் பார்க்கமுடியாமல்............... அரண்கட்டி நின்ன வீடியோக்காரகளை.........
போதுமுன்னு எழுந்து வந்துட்டோம். நான் மட்டும் சிகப்பு சட்டையில் இருந்த வீடியோக்காரர் ஒருவர் அருகில் போய், "உங்க முதுகு சூப்பரா இருக்கு. எல்லோரும் பார்த்து ரசிச்சோம்'னு சொன்னதும் அவர் திகைச்சு முழிச்சார். 'மேடம் ....அதான் ரெண்டுபக்கமும் ஸ்க்ரீன்லே பார்க்கலாமே'ன்னார். 'அங்கே பார்க்கறதுக்கு, வேலை மெனெக்கெட அரங்கத்து ஏன் வரணும்? நீங்களே பாருங்க, திரையில் என்ன தெரியுது?'ன்னேன். அந்தத் திரை வெறும் திரையாகவே இருந்துச்சு.
எங்க பகுதியில் இருந்த மக்களுக்கு நான் என்னதான் போய்ச் சொல்லி இருப்பேனோன்னு சம்சயம். திரும்பி வரும்போது 'என்ன சொன்னீங்க?'ன்னு ஆவலாக் கேட்டாங்க. 'அவர் முதுகு சூப்பரா இருக்குன்னு பாராட்டிட்டு வந்தேன்'னதும் அங்கே சின்னதா மகிழ்ச்சி ஆரவாரம்.

Friday, August 14, 2009

கனவை விதைத்த ஞானபாநு.

கோலம் என்ற பெயரைக்கேட்டதும் அப்படியே கொசுவத்தித் தானாப் பத்திக்கிச்சு. சரியாச் சொன்னால் ஆறு வருசம் முந்தி இதே பெயரில் ஒரு கடையை எங்கூரில் (நியுசியில்) நானும் என் மலேசியத்தோழியுமாத் தொடங்கினோம். ஆறே மாசத்துலே புத்தி கொள்முதல் செஞ்சுக்கிட்டு வெற்றிகரமா பின் வாங்கியது வேற விஷயம்:-)

ஆறரை மணிக்கு விழா. அடிச்சுப்பிடிச்சுப் போய்ச் சேர்ந்தோம்.வாசலில் நின்னுகிட்டு இருந்தவரைக் காமிச்சு இதோ இங்கே நிக்கறார்ன்னு சொல்லி அவரோடு கை குலுக்கினார் கோபால். யாருன்னு ஒரு வினாடி முழிச்சேன். கண்ணுத் தெரியலைப்பா............கண்ணாடியைக் கழட்டிக் கையில் வச்சுருந்தேன். ஏஸியில் இருந்து வெளிவந்ததும் கண்ணாடி பூராவும் மூட்டம் போட்டுருச்சே.....உத்துப் பார்த்துட்டு, வணக்கம் சொன்னேன் ஞாநிகிட்டே.


கோலம் என்ற பெயரில் அறக்கட்டளை. நம் வீடு தேடிவரும் நல்ல சினிமாவுக்கு உத்திரவாதம். விழா நடந்த இடம் தென்னிந்திய திரைப்படச் சங்கம்.
இயக்குனர்கள் கே. பாலச்சந்தர்,பாலு மகேந்திரா, மகேந்திரன் மூவரும் வருகை தந்திருந்தார்கள். உள்ளே முதல் வரிசையில் ஒல்லியான உருவத்தில் ஒரு பெரியவர் இருந்தார். யாருன்னு தெரிஞ்சுக்காட்டா என் மண்டை என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு. கோமல் சுவாமிநாதன் என்றவுடன் 'தண்ணீர் தண்ணீர்' நினைவு வந்துச்சு. ஆனா அவர் இறந்து அஞ்சுவருசமாச்சுன்னு நம்ம உண்மைத்தமிழன் சொன்னார். (ஒருவேளை அவருடைய ஆவியோ? எனக்கு உண்மையாவே சந்தேகமா இருக்கு. அப்போ எடுத்த படத்தில் அவர் உருவம் தெரியலைன்றதை இப்போதான் கவனிச்சேன்.) நல்லாத் தெரிஞ்சா முகங்களில் நடிகர் ராஜேஷ் இருந்தார். அரங்கத்தின் கொள்ளளவு 220 ஆனால் 250 பேர் இருக்காங்கன்னார் ஞாநி. எனக்குப் பக்கத்து இருக்கையில் ஓய்வுபெற்ற சரித்திரப் பேராசிரியர் சுபத்திரா. இவுங்க ஞாநியின் தமக்கை. எனக்கோ....பழம்நழுவிப் பாலில் விழுந்த கதை. 'நிஜ உலக சரித்திர டீச்சரும் வலைஉலக சரித்திர டீச்சரும்' சந்திக்கறது லேசுப்பட்ட விஷயமா என்ன? :-)


முதலில் தாய்மண் வாழ்த்தாக , முண்டாசின் 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' முதல் பகுதி. கடைசிவரியை மட்டும் தாயே வணக்கம் என்று மாற்றிப் பாடினார் ஒரு இளம்பெண்.. வந்தே மாதரத்தை விட்டாச்சு!
(இதைத் தவறுதலாகத் தமிழ்த்தாய் வாழ்த்து என்று குறிப்பிட்டிருந்தேன். ஞாநி அவர்கள் பிழையைச் சுட்டியதும் மாற்றி இருக்கேன். நன்றி ஞாநி)

ஞானபாநு இயக்கிய குறும்படங்கள் பல திரையில் காமிச்சாங்க. அட! நம்ம ஞாநிதான் அந்த ஞானபாநுன்னு புரிஞ்சது. 'திருமதி ஜேம்ஸ் என்ன செய்ய வேண்டும்?' என்ற ஒரே ஒரு ரீல், ஒரே ஷாட் & ஒரே டேக்கில் எடுத்த படம் அட்டகாசமாக இருந்தது. அதில் கதாநாயகி ரோகிணி, வாயைத் திறந்து ஒரு சொல் பேசலை. வசனம் முழுசும் நாயகன் மட்டுமே. அதுலேயே கதை முழுசும் வந்துருது. கடைசியில் ஞாநி திரையில் தோன்றி திருமதி ஜேம்ஸ் என்ன செய்யணுமுன்னு நம்மையே கேட்டார். முடிவு மட்டும் இருவிதமாக் காமிச்சிருந்தார். சூப்பர் ஐடியா!


ஞாநி அனைவரையும் வரவேற்று, தான் கனவு கண்ட 'கோலம்' பற்றிச் சொன்னார். நல்ல சினிமா பார்க்க ஏங்கும் மக்களுக்காக, நல்ல சினிமாக்களை எடுத்துத் தரணுமுன்னு ஞாநி கண்ட கனவுதான் கோலம். இதைப் பற்றி இன்றையக் குமுதத்தில் விவரம் வந்திருக்காம். சுருக்கமாச் சொன்னால் நாம் ஐந்நூறு ரூபாய் கட்டிப் பதிவு செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதத்தில் நல்ல கதையைப் படமாக எடுத்து நமக்கு அதன் டிவிடியை அனுப்பி வைப்பார்கள். குறைந்தபட்சம் ஆயிரம் பேர் பதிவு செஞ்சுக்கணும் என்று சொன்னார்.
இந்த முயற்சியை வாழ்த்த வந்துருந்த சிறப்பு விருந்தினர்களில் பாலு மகேந்திரா முதலில் பேசினார். மெல்லிய குரல். நல்ல சினிமா எதுன்னு தெரிஞ்சுக்க இந்தக் கால இளைய சமுதாயத்துக்குப் பயிற்சி கொடுக்கணும். இதுக்கு ஒரே வழி பள்ளிக்கூடத்துலே இதையும் ஒரு பாடமா வைக்கணுமுன்னு பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கிட்டார். இந்த வகுப்புக்கு மட்டும் யாருமே கட் அடிக்கமாட்டாங்கன்னும் சொன்னார். செலவும் அதிகம் இல்லை. ஒரு டிவிடி ப்ளேயரும், டிவிப் பொட்டியும் இருந்தால் ஆச்சுன்னார். பாடமா வச்சுட்டு அதுக்கும் மதிப்பெண் போட்டுறப் போறாங்களோன்னு எனக்குப் பயமா இருந்துச்சு. (நம்மூர் பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை எல்லா மதிப்பும் எண்களுக்குத்தான். புரிஞ்சுக்கிட்டுப் படிக்கிறாங்களான்னு யாரும் கவனிக்கறதில்லை. மனப்பாடம் செஞ்சுக் காகிதத்தில் வாந்தியெடுத்தாப் போதும். ஞாபகசக்தி யாருக்கு அதிகமோ அவன் ஜெயிக்கிறான். என்ன கொடுமை பாருங்க. இது என் கணிப்பு )

தன்னுடைய அபிமானக் கலைஞனான கமல் திரைக்கு வந்து அம்பது வருசம் நிறைவாச்சுன்னு பாலு மகேந்திரா மேடையில் சொன்னார். நமக்கு நேத்தே இது தெரியவந்துச்சு வேறொரு விழாவில். அதை அப்புறம் எழுதறேன்.

அடுத்து மகேந்திரன் ஞாநியின் புதுக் கனவு வெற்றி அடையணுமுன்னு வாழ்த்தி, அபூர்வராகங்களாக, அழியாத கோலங்களாக இருக்கணுமுன்னும் சொன்னார். கடைசியில் இந்த இயக்கத்தை ஆரம்பித்து வைத்து கே. பாலச்சந்தர் பேசும்போது தாய்க்கழகத்துக்கே திரும்பிட்டேன்னு சொன்னார்:-) நாடக வாழ்க்கையில் ஆரம்பிச்சுப் பெரிய திரை( அப்போ, அந்தக் காலக் கட்டத்தில் இந்தச் சின்னத்திரை ஏது?)அடுத்துக் கால ஓட்டத்தின் கணக்குப்படிச் சின்னத்திரையிலும் ஆடி ஓடி இப்போ திரும்பவும் நாடகத்துக்குத் திரும்பி இருக்கார். எல்லாம் ஒரு சுழற்சிதான்:-)

சினிமாவில் 'அஸிஸ்டண்ட் டைரக்டர்'ன்னு சொன்னால் கல்யாணத்துக்குப் பொண் கிடைக்கறதில்லையாம். நெசம்தான். இவுங்களுக்குக் கண்ணுலே காசையே காட்டலைன்னா யார் கட்டிக்குவா? வாழ்க்கைக்குப் பணம் என்ற விசயமும் ரொம்பத் தேவையா இருக்கே. அதனால் சினிமாவுக்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் வேற வேலையைப் பார்த்துப் பொண்ணு கட்டிக்கிட்டு. அப்புறமா இங்கே வந்துருங்க. 'சினிமாக்காரன்னா அப்படி'ன்னு அவுங்க சொல்றமாதிரிதானே நாமும் நடந்துக்கறோமுன்னார்.

தமிழனையும் சினிமாவையும் பிரிக்கமுடியாதுன்னு நான் அடிக்கடி சொல்வேன் பாருங்க.....அதையே பாலச்சந்தர் மேடையில் சொன்னதும் எனக்கு அப்படியே உச்சி குளிர்ந்துருச்சு. (நம்ம பேச்சை எப்போ கேட்டாராம் இவர்:-)..)

"தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. தமிழனின் அரசியல்கூட அதே சினிமா மூலம்தான்"





ஞாநியின் முயற்சி வெற்றி பெற, இந்தத் திரையுலக மும்மூர்த்திகளும் கைகொடுப்போமுன்னு உறுதி சொன்னாங்க. புதுவிதமான கதைகள், புது நடிகநடிகையர், புது இயக்குனர்கள் இப்படியெல்லாம் உருவாகப்போறாங்க. (நமக்கும் எதாவது நடிக்கச் சான்ஸ் கிடைக்குதான்னு பார்க்கணும்)

இயக்குனர் பாலச்சந்தர், ஞாநிக்கு சொன்ன அதி முக்கியமான சொற்கள்,

"குவாலிட்டியை எப்பவும் காம்ப்ரமைஸ் பண்ணக்கூடாது"

வணிக சினிமாவை விட்டுட்டு , இடைபட்டப் பாரலல் சினிமாக்களை எடுத்து நமக்குத்தரப் போறாங்க. அதுவும் வீட்டுக்கே வரப்போகுது. நானும் அதுக்கு விமரிசனம் எழுதத்தான் போறேன்ற நம்பிக்கையோடு, எழுத இன்னும் சில சுவாரசியமான விஷயங்களையும் (எல்லாம் தானாக் கிடைக்குதே!) சேகரிச்சுக்கிட்டு வந்தேன்.

பகல் கனவும் பலிக்கும், அது சமூகத்துக்கு நன்மை தருவதாக இருந்தால்!


பி.கு: மேலோட்டமாத்தான் எல்லாத்தையும் எழுதி இருக்கேன். காரணம்? உண்மைத்தமிழனும் விழாவுக்கு வந்துருந்தார்!

Monday, August 10, 2009

வாழ்க்கையில் முதல்முதலா......

நம்ம மக்கள்ஸ் பரிசு வாங்குவதைக் கொண்டாடப் போயிருந்தோம். விழா மாலை நேரம்தான். ஆனால் அன்று பிற்பகல் நடக்கும் எளக்கிய சந்திப்புதானே நமக்கு முக்கியம்:-) அதிலும் நம்ம எஸ்.ரா. பேசறார். கட்டாயம் கேக்கத்தான் வேணும்.

ஒன்னும் எழுதத்தோணலை. காதும் மனமும் நிறைஞ்சுபோச்சு. விருது வாங்கப்போறவங்க, அவுங்க அனுபவங்களைச் சொன்னாங்க.

நம்ம எஸ்.ரா


நம்ம நாகூர் ரூமி



பிற்பகல் நிகழ்ச்சியில் நாச்சியாரையும், நுனிப்புல்லையும் சந்தித்தேன். ஒரு சின்ன இடைவேளையா ஒரு மணி நேரம். மாலை நிகழ்வுக்குத் திரும்பிப்போனால்.............. பயங்கரக் கூட்டம். (நாலுபேருக்குமேல் இருந்தால் கூட்டம் என்று கொள்ளவேண்டியதில்லை. இது நியூஸியா என்ன?)
தங்க மயிலோடு தங்க முருகன்கள்



நல்லி குப்புசாமிச் செட்டியார், தொலைக்காட்சி நடராஜன், நீதியரசர் லட்சுமணன்னு மேடையில் இருந்தாங்க. பேச்சுகள், நூல்வெளியீடு, பொன்னாடை போர்த்தல், விருது வழங்குதல், க்ரூப் ஃபோட்டோஸ் என்று சம்பிரதாயங்களை மீறாமல் எல்லாம் செவ்வனே நடந்தது. தெரிஞ்ச பெயரும் தெரியாத முகங்களுமாய் இருந்த நம்ம மக்களில் பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக அமைஞ்சது இந்த விழா.
நம்ம அண்ணாகண்ணன்

நம்ம பத்ரி




நம்ம கவிதாயினி மதுமிதா


நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர்



எஸ். சங்கரநாராயணன், சிலபுத்தகங்களைக் காமிச்சு, 'எதுவேணுமுன்னாலும் எடுத்துக்கோ'ன்னார். மனக்குப்பை எடுத்துக்கிட்டேன். 'ஆஹா.... சரியான தேர்வு'ன்னு கோபாலுக்குப் பயங்கர மகிழ்ச்சி:-))))

எல்லாரும் இருந்து சாப்புட்டுட்டுப்போகணும், உங்களுக்காக ஆக்கிவச்சுருக்குன்னு விழாக்குழுவினர் விடுத்த வேண்டுகோளை, நீதியரசர் இருக்கும்போது நாமும் ஜஸ்டிஃபை பண்ணித்தானே ஆகணும்? கலியாண விருந்து , இலை போட்ட சாப்பாடு. குலாப்ஜாமூன், ஐஸ்க்ரீம், பீடான்னு எதையுமே விட்டுவைக்கலை. சுமார் 600 பேர்கள் இருக்கலாம்.
எல்லாம் இனிதே முடிஞ்சது.

Friday, August 07, 2009

நம்ம 'தல' இப்போ அப்பா!!!!

பதிவுலக நட்புக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

நம்ம பாலபாரதிக்குப் பதவி உயர்வு.

அப்பா

ஆண் குழந்தை

தாயும் சேயும் நலம்

நம் அனைவரின் அன்பும் ஆசிகளும் புதுப் பூவுக்கு.

மிஸ்டர் & மிஸஸ் 'தல' க்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

Wednesday, August 05, 2009

மஞ்சக் கலரு ஜிங்குச்சாம் செகப்புக் கலரு ஜிங்குச்சாம் பச்சைக் கலரு.....

குப்பை கெட்ட கேடு...இது என்னமாப் படுத்துது பாருங்க நம்ம வாழ்க்கையை. உலகத்துலேயே அதிகம் குப்பை போடும் ஆட்கள் நியூஸி மக்கள்தானாம். ஒரு வாரத்துக்கு 22 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துறாங்கன்னு புள்ளிவிவரம் சொல்லுது. இதெல்லாம் மக்கிப்போக 500 வருசம் ஆகுமாம்.

குப்பையைக் குறை, குறைன்னு கவுன்ஸில் 'குரைச்சுக்கிட்டே இருக்கு. ஆனாலும் குப்பை சேருவதென்னமோ நின்ன பாட்டைக் காணோம். ( அதுக்காகப் பார்க்கும் இடங்கள் எல்லாம் பூக்கும் பிளாஸ்டிக்ன்னு நினைக்காதீங்க. ஒழுங்குமுறையா அதுகளைக் குப்பையில் சேர்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்) சென்னையில் இருந்து வந்த கணேசன் மாமா( நியூஸித் தோழியின் தந்தை) சொன்னார், 'உங்கூர் ரோடுலே இலை போட்டுச் சாப்புடலாம்' :-)

குப்பைப் பிரச்சனை, நகராட்சிக்குப் பெரிய தலைவலி. நாங்க நியூஸி போன புதுசுலே குப்பைக் கலெக்ஷன் எப்படின்னா ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நாள்ன்னு ஒதுக்கி, அன்னைக்குக் காலையில் ஏழரையில் இருந்து குப்பை வண்டிகள் வந்து வீடுவீடா நின்னு நாங்க வாசலில் கட்டி வைச்சுருக்கும் மூட்டைகளை வாரிப்போட்டுக்கிட்டு போகும். கைக்குக் கிடைக்கும் பைகளில் வாரி வைப்பதால் சிறுசும் பெருசுமாப் பொதிகள் இருக்கும்.

இது இல்லாமத் தோட்டத்துலே, புல் வெட்டும்போது வரும் புற்கள், செடிகொடி மரங்களை வெட்டி ஒழுங்குபண்ணும்போது வரும் கழிவுகள் இதையெல்லாம் நாங்களே கொண்டுபோய் ரெஃப்யூஸ் ஸ்டேஷன்னு அந்தந்தப் பகுதிகளில் இருப்பவைகளில் கொண்டுபோய் போட்டுட்டு வருவோம். அதுக்கு ஒவ்வொரு லோடுக்கும் ஒரு கட்டணம் கட்டணும். உள்ளே நுழையும்போதே நம்ம வண்டிகளை எடைபோட்டு மிசின் ஒரு சார்ஜ் சொல்லிரும்.

குளிர்காலம் முடிஞ்சு வசந்தம் வந்த சில வாரங்களில் தோட்டக் குப்பைகள் ஏகத்துக்கும் வந்துரும் என்றதால் 'இன்னிக்குக் குப்பைக்குக் காசு வேணாம். ஃப்ரீயாப் போ மாமே ன்னு கவுன்ஸில் ஒரு நாள் அறிவிக்கும். நாங்களும் இலவசத்தை விட முடியுதான்னு பாய்ஞ்சு பாய்ஞ்சு தோட்டத்தைச் சுத்தம் செஞ்சுக் குப்பைகளை வாரிக்கிட்டு ஓடுவோம்.

சில வருசம் கழிச்சுக் கவுன்ஸில் தேர்தல் வந்ததும் புதுசாத் தெரிஞ்செடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் புது ஐடியாக்கள் கொண்டு வந்தாங்க. குப்பையும் வாரணும், கூலியும் கூடக்கூடாது. கவுன்ஸிலோடக் குப்பை வண்டிகளை அனுப்பாமத் தனியாருக்கு டெண்டர் விட்டு, குறைச்சுக் கேக்கும் கம்பெனிக்கு அனுமதி கொடுத்துட்டாங்க. சிட்டிக்கவுன்ஸில்னு பேர் இல்லாத வண்டிகள் வந்துக்கிட்டு இருந்துச்சு. எங்களுக்கு ஒன்னும் வித்தியாசமாத் தெரியலை. ஆனா குப்பை சேகரிக்கும் கம்பெனிகள், வீட்டுக்கு ஒரு பை மட்டுமுன்னா தான் எடுப்போம்.அம்பாரமாட்டம் பைகளைக் குவிச்சா முடியாதுன்னுருச்சு. அதெப்படி ஒரு பைன்னு சொல்றது? பாக்கிக் குப்பையை எங்கேன்னு போடறது?


அடுத்த சில தினங்களில் கூடிப்பேசுனக் கவுன்ஸிலர்கள், சிட்டிக்கவுன்ஸில் பெயர் போட்டுப் பெரிய ப்ளாஸ்டிக் பைகளை வீட்டுவீட்டுக்குக் கொடுத்தறலாம். மக்கள் அதுலே குப்பைகளைப் போட்டு வைக்கட்டும். குப்பைக்காரர் எடுத்துப்போக லகுன்னுச்சு. கண்டகண்ட பைகளில் குப்பையை வச்சா எடுக்கவேணாம். ஆனாப் பைக் கணக்கு இல்லை. எத்தனை பை ஆனாலும் சரி, அதுலேச் சிட்டிக் கவுன்ஸில் பெயர் இருப்பதை மட்டும் எடுன்னு 'கலெக்டருக்கு' ஆர்டர். வீட்டு உரிமையாளர்களுக்குத் தகவல் சொன்னாங்க. கூப்பான் அனுப்புவோம். அதைக் கொடுத்துச் சூப்பர் மார்கெட்டில் 52 பை இருக்கும் பொதி இலவசமா வாங்கிக்கோ. வாரம் ஒரு பை குப்பைக்குன்னுச்சு. எங்கூட்டுலேக் குப்பை ரொம்ப. வாரம் ஒன்னு போதாதுன்னா? பிரச்சனை இல்லை. அதே சூப்பர் மார்கெட்டில் காசுக்கும் இதே பைகள் விற்பனைக்கு இருக்கும். வாரம் 52 வேணுமுன்னாலும் வச்சுக்கோ. அது உன் இஷ்டம். ஒரு பை ஒரு டாலர்.

காசுன்னதும் கை சுருங்குமா இல்லையா? அப்படியும் சில வாரங்களில் ரெண்டு பை அளவு குப்பை சேர்ந்துருதுதான். முக்கியமா பார்ட்டி, விழான்னு வரும் வார இறுதிகளில். எங்கூர் மக்களோ முக்கால்வாசி பார்ட்டி அனிமல்ஸ். பாட்டில் பாட்டிலா, கேன்கேனா குடிச்சுத் தீர்த்துருவாங்க. அங்கங்கே ரீசைக்கிள் பின்கள் வச்சுருந்தாலும் யார் இம்மாம் பெரிய அட்டைப் பொட்டியைத் தூக்கினு போகன்னுட்டு குப்பைப் பைக்குள்ளே திணிக்கப் பார்ப்பாங்க. ( இதையே கடையில் இருந்து வாங்கிவரும்போது மட்டும், கனமே தெரியறதில்லை என்பதுதான் ஆச்சரியம். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு பால், ஜூஸ் எல்லாம் கேன்தான்.அதுவும் மூணு லிட்டர் ப்ளாஸ்டிக் கேன்கள்.

அதுக்குள்ளே ரீசைக்கிளிங் முறையில் இதெல்லாம் சேர்த்துக்க சில ஏற்பாடுகள் ஆச்சு. 'குப்பைப் பைக்குப் பக்கத்துலே அட்டைப்பொட்டியோட பாட்டில், கேன் எல்லாம் வச்சுருங்க. நாங்க எடுத்துக்கிட்டுப் போயிருவோம். குப்பைப் பைக்குள்ளே வைக்காதீங்க ராசா'னு கவுன்ஸில் ஒரே அழுகாச்சி.

'ஆட்டும். செஞ்சுருவோம்' பனி விழும் காலங்கள். மழை நாட்கள் வரும்போது அட்டைப்பொட்டி அப்படியே ஊறிப்போய் எடுக்கும்போதே பிய்ஞ்சு பாட்டில் எல்லாம் தரையில் உருண்டு, கேன் எல்லாம் காத்துலே பறந்து அதைத் துரத்திப்பிடிக்க கலெக்டர் ஓடும்படியா ஆச்சு. யோவ், நான் ஒரு ஆள், குப்பையை எடுப்பேனா, ஒலிம்பிக்ஸ்லே ஓட ட்ரெயினிங் எடுப்பேனா..............

உக்காந்து யோசிச்சாங்க மறுபடியும். ஆஹா...ஐடியா ஆப்டுக்கிச்சு. பிளாஸ்டிக் க்ரேட் மாதிரி ஒரு கூடை தந்துறலாம். அதுக்குள்ளே மறுசுழற்சிச் சாமான்களைப் போட்டு குப்பைப் பைக்குப் பக்கத்துலே வச்சுட்டா அள்ளிப்போட்டுக்கிட்டுப் போய்க்கினே இருக்கலாம். குப்பை வண்டிக்கு நடுவிலே தடுப்பு வச்சுப் பிரிச்சுட்டா முன்னாலே கேன், பின்னாலே பை. சூப்பர் !!!! அந்தக் க்ரேட்டைப் பச்சை நிறத்துலே செஞ்சுட்டோமுன்னா மக்கள்ஸ் 'க்ரீன் கண்ட்ர்ரி இமேஜை'ப் புரிஞ்சுக்குவாங்க.

வீட்டுவீட்டுக்கு பச்சை க்ரேட் வந்துச்சு. தாராள மனசோடு இன்னும் ஒன்னு ரெண்டு கூடுதலா வேணுமுன்னா கவுன்ஸில் சர்வீஸ் செண்டரில் வந்து கேட்டு வாங்கிக்கினு போங்கன்னுச்சு. 'காட் மஸ்ட் பி க்ரேஸி' படம் நினைவிருக்குங்களா? கோக்கோ கோலா பாட்டில் இல்லாம யாருக்கும் வேலையே நடக்கலை பாருங்க. அதேதான். க்ரேட்டுக்கு ஆயிரத்தெட்டு பயன்கள் கண்டுபிடிச்சுறமாட்டோமா? நம்மூட்டுக்கே மூணு வந்துருச்சுன்னா பாருங்க. இத்தனைக்கும் 'குடிப் பார்ட்டி' இல்லாத வூடு:-)

இதுக்கே கவுன்ஸில் ஏராளமா நம்ம வீட்டுவரிப் பணத்தைச் செலவு செஞ்சுட்டோமுன்னு மொக்கை அழுகை அழுதுச்சு. இப்படி மூக்கால் அழுதுக்கிட்டே....உலகநாடுகள் பூராவும் குப்பைக்கு முடிவு கட்டணுமுன்னு தவிக்குது. நம்ம பங்குக்கு இன்னும் எதாவது செய்யலாமுன்னு கூடிக்கூடிப் பேசிக்கினு இருந்தாங்க. மக்கள் விரோதி ஒருத்தர் விபரீதமா யோசிச்சார்போல. 52 வாரம் 52 பைன்னு இருப்பதை மாற்றலாம். சப்ளையைப் பாதியாக்குனாக் குப்பையும் பாதியாகுமுன்னு 26 பைதான் கவுன்ஸில் கொடுக்கும். ரெண்டு வாரத்துக் குப்பையை ஒரு பையில் அடைச்சுருங்க. முடியாதவங்க காசு கொடுத்து எவ்வளோ வேணுமோ அவ்ளோ பை வாங்கிக்குங்க.

கொதிச்சுப் போயிட்டோம் அடப்பாவிகளா........ வீட்டுவரின்னு காசைப் பிடுங்கிக்கிட்டுக் குப்பையில் கையை வச்சுட்டியே..............இதையே ஒரு காரணமாக் காட்டி அடுத்து வந்த கவுன்ஸில் தேர்தல்களில் 'எங்களுக்கு ஓட்டுப் போட்டா மீண்டும் 52 பைகள் தரத் தயார்'ன்னு ஒரு கட்சி வியூகம் வகுத்துச்சு.

இங்கெ இன்னொரு முக்கியமான விசயத்தையும் சொல்லிக்கிறேன். நம்மூர்லே பழைய பேப்பர் வாங்கும் பிஸினெஸ் கிடையாது. காசு கொடுத்துப் பேப்பர் வாங்குனாதானே அதை ஒழிச்சுக்கட்டனுமுன்னு ச்சும்மா இருந்தாலும்.......... ஓசிப்பேப்பர் வாரம் அஞ்சு நாள் நம்ம தபால் பெட்டிக்கே வந்துரும். கம்யூனிட்டி நியூஸ் பேப்பர், விளம்பரங்கள், கிறைஸ்ட் சர்ச் ஸ்டார்ன்னு பக்காவா ஒரு மாலைப் பத்திரிக்கை (இது நாங்க இங்கே வந்த புதுசுலே, அது ஆச்சு 21 வருசம். காசு கொடுத்து வாங்கும் தினசரி. மாலைப் பதிப்பு. )வியாபாரம் சரியாப் போகாம இதை நிறுத்தினாங்க. அப்புறம் ஒரு புண்ணியவான் இதைச் சும்மாத் தரலாம். ஊர் முழுசும் ஒருவீடு பாக்கி இல்லாம எல்லாருக்கும் சப்ளை செஞ்சுறலாம்.. குறைஞ்சது லட்சம் வீடுகள் இருக்கே. இதையேக் காமிச்சு விளம்பரம் வாங்கிச் செலவைச் சரிக்கட்டி லாபமும் பார்க்கலாம். வாங்கிப்போட்ட அச்சு இயந்திரமெல்லாம் வீணாப் போவானேன்னாரு. அப்படியே ஆச்சு. பழைய பேப்பர்களையெல்லாம் ஒரு சூப்பர்மார்கெட் ப்ளாஸ்டிக் பையில் வச்சு, பச்சைக் க்ரேட்லே மேலாக வச்சுருங்கன்னாங்க. இருக்கும் குப்பை பத்தாதுன்னு டெலிஃபோன் டைரக்ட்டரி வேற வருசாவருசம் புதுசாப் போட்டு ஊர்லே உள்ள எல்லா வீட்டுக்கும் ( போன் இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி) சப்ளை செஞ்சுருவாங்க. வெள்ளைப் பக்கம் மஞ்சப் பக்கம் ரெண்டும்தான். புதுசு வந்ததும் பழசை எப்படித் தள்ளிவிடறது? புதுசு வந்த அதே பையிலே பழசை வச்சு பச்சைக்கூடையில் போடுன்னாங்க. சென்னையில் பழைய டைரக்டரிக்கு ஆயிரம் பயன். கபாலி கோயில் பக்கம் சுடச்சுட பஜ்ஜி மடிச்சுத் தர்றாங்க

போன வருசம் நடந்த தேர்தலில் புது மேயர் வந்தார். ரேடியோவிலே 'டாக் ஷோ' நடத்திக்கிட்டு இருந்தவர். அவர் பங்குக்கு அவரும் சிந்திச்சு(??!!) வீட்டு வீட்டுக்கு மூணு குப்பைக்கான வீலி பின்(Wheeli Bin) சக்கரம் வச்சது தரலாம். மக்கள் அதை ஈஸியா உருட்டிக்கிட்டேக் கொண்டுவந்து வீட்டுக்கு முன்னாலே நடைபாதையில் வச்சுட்டாப் போதும். கலெக்டர் இயந்திரக்கை வச்சு எடுத்து[ப் போட்டுக்குவார். ஒரே ஒரு ஆள் வண்டி ஓட்டுனாப் போதும்ன்னார்.

(எங்கூருலே எல்லாம் நடைபாதை இருக்கு பாருங்க, அது நடக்கறதுக்கு மட்டுமேதாங்க பயனாகுது. அதை அடைச்சுக் குடிசை போட்டுக்கறதோ. இல்லை கடைகண்ணின்னு வச்சுக்கறதோ, அதுவும் இல்லைனா டு வீலர்களை நிறுத்தி வச்சுக்கும் பார்க்கிங் ஏரியாவா ஆக்கறதோ இல்லைங்க.... என்ன சனமோ போங்க)

மஞ்சக் கலர் பெரிய BIN பாட்டில், கேன், பேப்பர் இப்படி மறுசுழற்சிக்குப் போகும் பொருட்கள், சிவப்புக் கலர் மீடியம் சைஸ் BIN, மறுசுழற்சிச் செய்ய முடியாத சாமான்கள் மக்காத ப்ளாஸ்டிக் பை, இதெல்லாம் போட, பச்சைக் கலர் சின்ன BIN வீட்டு அடுக்களையில் வரும் காய்கறித்தோல், இறைச்சி எலும்பு, மீந்த சோறு, ரொட்டின்னு எதைவேணாலும் போட்டுக்க. வீட்டுத் தோட்டத்துலே செடிகளைத் தரிச்சோமுன்னா அதையும் போட்டுக்கலாம், புல்வெளியில் புல் வெட்டுவோம் பாருங்க அதைக்கூடப் போட்டுக்குங்க. ஆர்கானிக் சமாச்சாரங்கள், மக்கும் பொருட்கள் எதுவேணுமுன்னாலும் போடுங்க சொன்னாங்க. அட! புல் கட்டிங்ஸ் கொண்டு போய் கவுன்ஸில் டம்ப்லே போட ஆறு டாலர் அழுவறது மிச்சம்:-) ஜாலியோ ஜாலி. பனி காலத்தைத்தவிர மத்த நாட்களில் ரெண்டுவாரத்துக்கு ஒரு முறை புல்வெட்டத்தானே வேண்டி இருக்கு.

எப்போ வந்து குப்பையை எடுப்பீங்கன்னதுக்கு சிகப்பும் மஞ்சளும் ஒரு வாரம்விட்டு ஒரு வாரம். பச்சை மட்டும் எல்லா வாரமும் எடுப்போமுன்னாங்க. ஆறு மாசமா இதைப் பற்றிய விளக்கங்கள், அந்த BIN பார்க்க எப்படி இருக்கும், மூடித் திறப்பு எந்தப் பக்கம் பார்த்தாப்புலெ வைக்கணும், என்ன ஏதுன்னு படங்கள் எல்லாம் வீட்டுவீட்டுக்கு அனுப்பி எங்களையெல்லாம் எஜுகேட் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. முதியோர்க் கல்வி. 'யூ கேன் நாட் டீச் நியூ ட்ரிக்ஸ் டு த ஓல்ட் டாக்ஸ்'ன்னு பழமொழி இருக்குல்லே? இளசுகளுக்குச் சொல்லி வைக்கணுமுன்னு ஆரம்பப் பள்ளி முதற்கொண்டு எல்லாப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு விளக்கமான விளக்கம் சொல்லி அப்பா, அம்மா குப்பைக் கொட்டறது சரியான்னு நீங்கதான் பார்க்கணும். நாளைய உலகம் உங்கள் கையில். அது சுத்தமா இருக்கணுமுன்னா நீங்க எல்லாரும் சேர்ந்து குப்பைமேலே கண் வைக்கணுமுன்னு இதுக்குன்னே ப்ரோக்ராம் எல்லாம் போட்டு நடத்துனாங்க. கவுன்ஸிலோட இணையப் பக்கத்துலே எல்லாவிதமான ஐயங்களுக்கும் மறுபடி தயாரா வச்சுருந்தாங்க. நாங்களும் ஊர் உலகத்துக்கு வராத சந்தேகங்களையெல்லாம் உக்காந்து யோசிச்சுக் கேட்டு பதில் வாங்குனோம்.
நான் சென்னைப் பயணம் வர்றதுக்கு மூணு நாள் முன்னால் மூணு பின் வந்துருச்சு. வீட்டு விலாசம் எல்லாம் எழுதி, நாங்க சொல்லும்வரை மூடியைத் திறந்து(ம்) பார்க்காதே. மார்ச் 9 தேதிக்குத்தான் திறப்பு விழான்னுச்சு. எந்தெந்த வாரம் எது எதுன்னு சொல்லக் காலண்டர் அடிச்சு, எதெதுலே எதெது போடலாமுன்னு விளக்கம் அடிச்சு ஒட்டின்னு அமர்க்களமா இருந்துச்சு எல்லாம். அப்ப, இப்போ இருக்கும் பச்சை க்ரேட்? ச்சும்மா நீயே வச்சுக்கோ. அதுக்குப் பயனா இல்லைன்னுச்சு. நானும் கொஞ்சம் மொய்மொய் கிழங்கை நட்டுவைக்கத் தொட்டியாச்சுன்னு பயிர் வச்சேன். ஏற்கெனவே ஒன்னுலே வெங்காயம் நட்டு வச்சது ஏராளமாக் காய்ச்சது. ஒரு மூட்டை அரிசிகூடப் போட்டு வச்சுக்கலாம்ன்னா, அடிப் பாகத்துலே ஒரு ஓட்டையை வச்சுத் தொலைச்சுட்டாங்க(-:

கவுன்ஸில் நிர்ணயித்த சுபநாளில் கலர்கலராப் பின்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். சுபமுகூர்த்தம் என்னன்னா நம்ம ஏரியாவில் குப்பை எடுக்கும் நாளில் காலை ஏழரைக்கு முன்னால் அதுகளை நடைபாதையில் வச்சுறணும். ஏழு முப்பத்தியஞ்சுக்கு வச்சால்? எடுக்கமாட்டாங்க(ளாம்) கலெக்டர் வர்றதென்னமோ எட்டுமணிக்குப் பிறகுதான். சிலசமயம் மதியம் ஒருமணிகூட ஆகிரும். ஆனா நாம் மட்டும் பங்ச்சுவலா இருக்கணுமாம். யாராலே முடியுது.....ஏற்கெனவே லேட்டா எழுந்து அடிச்சுப்பிடிச்சு வேலைக்கு ஓடும்சமயம் யாருக்கு ஞாபகம் இருக்கு? குப்பைப் பையைக்கூட மொதநாள் ராத்திரியே வெளியே வச்சுத்தான் பழக்கம். ஒருநாள் நான் எட்டுமணிக்குத்தான் பச்சையை வச்சேன். பக்கத்துவீட்டுப் பச்சை இருக்கான்னு பார்த்துக்கிட்டுத்தான் வச்சது. யார் எங்கே இருந்து கவனிக்கிறாங்களோ.............. அன்னிக்கு நம்ம வீட்டுப் பச்சையைக் கண்டுக்காமப் போயிட்டார் கலெக்டர்(துரை)


BINனோட மூடி டிஸைன் சரியில்லைன்னு என்னோட அபிப்பிராயம். மூடி ஓவர்லேப் ஆனால்தானே அதுமேலே விழும் பனியோ மழையோ வெளியில் வழிஞ்சு போகும்? இதென்னன்னா வாய்க்குப் பொருத்தமில்லை. உள்ளே இருக்கும் பொருட்கள் முக்கியமா மஞ்ச BIN லே போடும் பேப்பர்கள், பச்சையில் போடும் அடுக்களைக் கழிவுகள் எல்லாம் ஊறி அசிங்கம் ஆகப்போகுது(-:

இன்னொண்ணு என்னன்னா.... பச்சை ரொம்பக் குட்டியா இருக்கு. அளவு போதாது. புல்வெட்டும் போது வரும் கழிவுகளுக்குப் போதலைன்னு சிலருடைய குமுறல்.

அழுக்கெல்லாம் ஒட்டிப் பிடிச்சு உள்ளே காய்ஞ்சு போகுது. உள்ளே கழுவ சிரமமா இருக்கு. ஒரு மீட்டர் உசரம், குனிஞ்சு சுத்தம் செய்யறது கடினம்ன்னு இன்னும் பலருடைய கேவல்கள்.

ஆனா.............ஒன்னு இந்த BIN களால் புதுசா வேலை வாய்ப்பொன்னு அகப்பட்டுருச்சு. தனியார் கம்பெனி ஒன்னு ஆரம்பிச்சு இருக்காங்க. ஃபோன் செஞ்சு சொன்னால் வீட்டுக்கு வந்து கழுவித் தந்துட்டுப் போவாங்களாம். ஒரு BIN க்கு ஆறே டாலர்தான் சார்ஜ்.

இது எப்படி இருக்கு?

பின் குறிப்பு: அய்ய..........வெறும் குப்பைன்னு இடுகையைத் தூக்கிக் கடாசிடாதீங்க...... இது துளசிதளத்தின் 901 வது பதிவுன்னு ப்ளாக்கர் சொல்லுது.


ன்னமோ புதுக் குழப்பம்.... பப்ளிஷ் செஞ்சவுடன் புத்தகம்போல ரெண்டு காலமாக் காமிக்குதே....... ப்ளொக்கரே ஆடிப்போயிருக்கோ!!!