Tuesday, August 18, 2009

ஆரம்பிச்சதை முடிக்காமல் ......

சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாமுன்னு மனசு நினைச்சாலும் உடனடியா எழுதிறலாமே என்ற உந்துதல் இல்லாமப் போயிருது. விட்டுத் தொலைக்கலாமுன்னா..... ஐயோ..... காலைச் சுத்துன பாம்பு.

போனவாரம் நடுவில் ஒரு விழாவுக்குப்போனேன். முக்கியக் காரணம் யேசுதாஸ் பாட்டு. ப்ளஸ் பாய்ண்ட்டா நடிகை பானுரேகா வர்றாங்க. இன்னும் கூடுதல் வரவா ரசூல் பூக்குட்டி, நாகேஷ் குகுனூர்,ராகேஷ் மெஹ்ரா, நிகழ்ச்சி அறிவிப்பாளரா ஷ்ருதி ஹாஸன் இப்படி அமைஞ்சதால் சுவாரசியமா இருக்கும் என்ற தோணல்தான்.

ஆசை ஆசையாத் தன் முதல் படம் 'காதல் புத்தகம்' எடுக்கும்போது அதை முடிக்குமுன்பே படப்பிடிப்பில் விபத்துக்குள்ளாகி அவசரமா உலகைவிட்டுப் பிரிஞ்ச மகனின் நினைவாகத் தந்தை ஏற்படுத்திய அறக் கட்டளை. 25 வயசுன்றது சாகற வயசா? ஹூம்..... சம்பவம் நடந்த நாள் பனிரெண்டு ஆகஸ்ட். ( ஓ அதான் வார இறுதிவரைக் காத்திருக்காமல் அதே தேதியில் விழாவோ?)

மகனின் கனவையே தாங்களும் கண்ட மற்ற இளையவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கனவுத்தொழிற்சாலையில் நுழைஞ்சு புதுசாப் படம் இயக்கியப் புத்தம்புதிய இயக்குனர்களில் ஒருவருக்குத் தன் மகனின் பெயரில் உள்ள அறக்கட்டளையின் மூலம் விருது ஒன்றை வழங்குறார் தந்தை மாருதி ராவ். இவரும் ஒரு நடிகர்தான். தெலுங்கு சினிமா. பல தமிழ்ப் படங்களிலும் இவரை நீங்க பார்த்திருக்க வாய்ப்புண்டு. இதோ இவரோட புகைப்படம். நினைவுக்கு வருதுங்களா? இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர்ன்னு பலமுகங்கள் கொண்டவர்.

காமராசர் அரங்கம் மிகப்பெரியது. ரெண்டாயிரம்பேர் வரை கொள்ளளவு. நல்ல இடமுன்னு(??) நினைச்சு ஒரு இடத்தில் அமர்ந்தோம். ரெண்டு நாளுக்கு முன்பே தினசரியில் விளம்பரம் வந்திருந்தது. அன்னிக்கே போய் இடம் புக் பண்ணியிருந்தால் முதல் மூணு வரிசைகளில் கிடைச்சிருக்கும். இப்போ நமக்கு நாலாவது வரிசை. நடுவில் இருக்கும் நடைபாதையையொட்டி. சின்னத்திரை நடிகர்கள் சிலர் வந்துருந்தாங்க. என் வரிசைக்கு அடுத்து வேணு அர்விந்த். (அரசி எப்போ முடியுமுன்னு கேட்டிருக்கலாமோ? )

ஒரு வீடியோக்ராஃபர் ஸ்டாண்டு வச்சுக் கெமராவைப் பொருத்திக்கிட்டு இருந்தார். கொஞ்ச நேரத்தில் அரங்கம் நிறைஞ்சது. அதே சமயம் ஏழெட்டு வீடியோக்காரர்கள் வந்து அடைசலா நின்னுக்கிட்டு இருந்தாங்க. அரங்கத்தின் பணியாளர்கள் வரிசையை ஒழுங்குபடுத்தறோமுன்னு முன்னும் பின்னும் பாய்ந்ததோடு சரி. இதுலே 'போட்டோ எடுக்கக்கூடாது'ன்னுச் சொல்லிக்கிட்டே போனாங்க. மக்கள் யாரும் அதை சட்டை செஞ்சதாத் தெரியலை. நம்மூருலே சட்டம், விதி இதெல்லாம் ஆளாளுக்கு வேற இல்லையா? வம்பு வேணாமுன்னு கெமெராவை உள்ளே வச்சுட்டேன். ஆனால் நமது அண்டை அயலார் செல்லில் எடுத்துத் தள்ளிக்கிட்டுத்தான் இருந்தாங்க.

திரை உயர்ந்ததும் முதலில் யேசுதாஸ் அவர்களின் கச்சேரி. ஒலிபெருக்கிக்கு என்ன ஆச்சோ..... சுகானுபாவமா இருக்க வேண்டிய நிகழ்ச்சி கொஞ்சம் இரைச்சலாகவும், லேசா எரிச்சலூட்டும்விதமா மாறிக்கிட்டே போகுது. பி' சுசீலா வந்துருந்தாங்க. கொஞ்ச நேரத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ் வந்தார். 'நமஸ்காரம்' 'ன்னு யேசுதாஸ் சொன்னதை அவர் கவனிக்கலை போல. இன்னொருமுறை சற்று உரக்கவே 'நமஸ்காரம் அண்ணா'ன்னார்.

மலையாளம், கன்னடம், ஹிந்தி மராத்தின்னு குஜராத்தின்னு பாடல்கள் வருதே தவிர ........... 'குறையொன்றுமில்லை' பாடுங்கன்னு முன்வரிசை ரசிகர் ஒருவர் கேட்டுக்கிட்டார். ம் ம் ன்னு ஒரு தலையாட்டல். நடுவிலே ஒருமுறை அரங்கத்தைப் பார்த்து 'நீங்க எல்லாம் அமைதியாக் கேட்டாத்தான் பாட்டுப் பாடமுடியும் என்று சின்னதா மிரட்டல். நம்ம ஜனங்களுக்கோ பேசணும். பேசணும் பேசிக்கிட்டே இருக்கணும்,இல்லையா?

கடைசிவரை தமிழில் ஒரு பாட்டும் பாடாமலேயே ஒன்னரை மணி நேரக் கச்சேரி முடிஞ்சது. பார்வையிழந்தவர் கேட்ட கச்சேரி என்பது போல மேடையில் என்னதான் நடக்குதுன்னு தெரியாம இண்டு இடுக்கில் தெரிவதை வச்சு அனுமானிச்சுக்கிட்டு இருந்தோம் அரங்கத்தில் இருந்த அனைவரும். இது வீடியோக்ராஃபர்கள் நீங்கலாக..

நிகழ்ச்சிக்கு நடுவில் ரேகா வந்துட்டாங்க. பலாப்பழத்தில் ஈ மொய்ச்சதுபோல போட்டோகிராஃபர்கள் அவுங்களைச் சுற்றியே ஓடியாடிக்கிட்டு நின்னாங்க. மற்ற விஐபிகளை யாரும் கண்டுக்கிட்டதாகவே தெரியலை.

பாட்டு முடிஞ்சதும் பெரிய திரையில் ஒரு குறும்படம் காமிக்கப்போறோமுன்னு ஸ்ருதி ஹாஸன் வந்து அறிவிச்சாங்க. அரங்கின் நடுவிலும், இரண்டு ஓரங்களிலுமாக மூணு திரைகள். இளைஞர் ஒருவர் வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு சொல்லிப் பார்த்துக்கிட்டே இருக்கார். பதற்றம் கூடி வருது. அவருடைய நண்பர்கள் எல்லாம் கலாட்டா செய்யறாங்க. மறுநாள் இயக்குனர் தேர்வுக்குப் போறார். வீட்டில் அப்பா அம்மா எல்லோரும் தைரியம் சொல்லி வாழ்த்தி அனுப்பறாங்க. நம்ம நாசர்தான் அப்பா. தேர்வு முடிஞ்சு வந்த இளைஞர் யாரோடும் பேசாமல் அவருடைய அறைக்குப்போய்க் கட்டிலில் விழுந்து விம்மறார். கண்ணீர் ஆறாகப்போகுது. தயங்கித்தயங்கிப் பெற்றோர்கள் அறைக்குள்ளே வந்து ஆறுதல் வார்த்தைகள் சொல்ல ஆரம்பிக்கும்போது இளைஞர் 'சடார்' னு எழுந்து அவருடைய அப்பாவை இறுக்கக் கட்டிப்பிடிச்சு, 'என்னைத் தேர்வு செஞ்சுட்டாங்க. நான் படம் இயக்கப்போறேன்'னு குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி தர்றார். படத்தின் பெயர் 'ப்ரேம புஸ்தகம்' (ம் தான். புஸ்தகமு, இல்லை)


கடற்கரையில் பாறைகள் நிறைஞ்ச சூழலில் படப்பிடிப்பு நடக்குது. நல்ல கோணம் தேடி கடலுக்குள் நீண்டிருக்கும் உயரமான பாறையில் ஏறிப் பார்க்கிறார். இடத்தில் கவனம் கூடும்போது, பிரமாண்ட,மான அலை வந்து பாறையை மோதி மூடுகிறது. அடுத்த காட்சியில் அந்த இளைஞனின் கண்ணாடியும், கையில் வச்சுருந்த காகிதங்களும் தண்ணீரில் மிதந்துவந்து கரை ஒதுங்குது. ராஜீவ் மேனோன் எடுத்த படம், இந்த 'செகண்ட் இன்னிங்க்ஸ்'



முதல் படம் நனவாக்கும் எண்ணத்தில் மகிழ்ச்சியாக இருந்து மறைந்த அந்த இளைஞர்தான் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ். அவர் பெயரில்தான் (Gollapudi Srinivas National award ) இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் புது இயக்குனர் ஒருவருக்குத் தர்றாங்க. தமிழில் 'குட்டி' படம் இயக்கிய ஜானகி விஸ்வநாதன், 'தாரே ஸமீன் பர்' ஆமீர்கான் இவுங்கெல்லாம் கடந்த வருசங்களில் வாங்கினவர்களில் நமக்குப் பரிச்சயமான பெயர்கள். இந்த வருச விருது 'ஹரிஷ்சந்த்ராச்சி ஃபேக்டரி' என்ற மராத்திப் படத்துக்கு. இயக்குனர் பரேஷ் மொகாஷி. ஒன்னரை லட்சம், ரொம்பப் பெரிய தொகை இல்லைன்னாலும் விருதின் மதிப்பு காசுலேயா இருக்கு? அங்கீகாரம் விலை மதிப்பு இல்லாததாச்சே.

மகனின் மரணம் கொடுத்த மனசின் வலிக்கு இப்படியும் ஒரு மருந்து தெரிஞ்செடுத்த மாருதிராவ் குடும்பத்தைப் பாராட்டத்தான் வேணும்.

நம்ம கமல் திரைக்கு வந்து, இன்றோடு அம்பது ஆண்டுகள் நிறைவடைஞ்சதுன்னு மேடையில் ஸ்ருதியை அறிமுகம் செஞ்சுவச்சப்பச் சொன்னாங்க. களத்தூர் கண்ணம்மா ரிலீஸ் ஆனதும் ஆகஸ்ட் 12 தானாம்.

மேடையில் இருக்கைகள் எல்லாம் போட்டு முக்கிய விருந்தினர்களை உக்காரவச்சாங்க. அம்பத்தியஞ்சு வயசுக்கு நம்ம ரேகா நல்லா 'ச்சிக்'ன்னு இருந்தாங்க. ஆனா எதையும் பார்க்கமுடியாமல்............... அரண்கட்டி நின்ன வீடியோக்காரகளை.........
போதுமுன்னு எழுந்து வந்துட்டோம். நான் மட்டும் சிகப்பு சட்டையில் இருந்த வீடியோக்காரர் ஒருவர் அருகில் போய், "உங்க முதுகு சூப்பரா இருக்கு. எல்லோரும் பார்த்து ரசிச்சோம்'னு சொன்னதும் அவர் திகைச்சு முழிச்சார். 'மேடம் ....அதான் ரெண்டுபக்கமும் ஸ்க்ரீன்லே பார்க்கலாமே'ன்னார். 'அங்கே பார்க்கறதுக்கு, வேலை மெனெக்கெட அரங்கத்து ஏன் வரணும்? நீங்களே பாருங்க, திரையில் என்ன தெரியுது?'ன்னேன். அந்தத் திரை வெறும் திரையாகவே இருந்துச்சு.
எங்க பகுதியில் இருந்த மக்களுக்கு நான் என்னதான் போய்ச் சொல்லி இருப்பேனோன்னு சம்சயம். திரும்பி வரும்போது 'என்ன சொன்னீங்க?'ன்னு ஆவலாக் கேட்டாங்க. 'அவர் முதுகு சூப்பரா இருக்குன்னு பாராட்டிட்டு வந்தேன்'னதும் அங்கே சின்னதா மகிழ்ச்சி ஆரவாரம்.

18 comments:

said...

ஆஹா! துளசி சென்னை வாழ்க்கை எப்படி போகுதுன்னு இனிமே நான் கேட்கவே மாட்டேனும்க!! பெருந்தலைகளை பாக்கறீங்க்க! லெசா தீயற வாசனை வருதா? ஹூம்! இங்கேந்து புகை தான்! நல்லா அனுபவிங்க! நானும் சென்னை வரும் போது பரங்கி மலையை பெயர்த்து எடுக்கணும்ங்கற மாதிரி ஆயிரம் திட்டம் போட்டுக் கொண்டு தான் வருகிறேன். எதுவும் நடக்காமல் அடையாறு டூ கே கே நகர் ட்ரிப் மட்டும் அடித்து பாதி நேரம் ஆட்டோவில் காலம் கழித்து அந்த ஆட்டோக்காரருடன் காலம் எப்படியெல்லாம் மாறியிருகிறது என்று மனம் விட்டு பேசி அவருடன் ஃபிரெண்ட் பிடிப்பது தான் மிச்சம்.
இந்த முறை உங்களுடன் மட்டுமே சுத்தப் போகிறேன்.

சித்ரா

said...

teacher enakku oru dout intha nikalchiyal or ithai pathiya ungalin pathival enna uruppadiyana palan. pathuvu podaran kandathaiyum podanthinga. poi kanthakottam parthu antha kumaranin alagai eluthunga nalla kovil nigalchikalai eluthunga.

intha koothadikal samcharam elutha nattula niraiya poru irukkanga.

said...

டீச்சர் இப்படி ஏமாத்திட்டீங்களே..!

ரேகா போட்டோ எங்க மேடம்..?!!

said...

நல்ல விஸ்தீரணமான விவரிப்பு..

Anonymous said...

//ப்ளஸ் பாய்ண்ட்டா நடிகை பானுரேகா வர்றாங்க//

இவங்க யாரு, தெலுங்கு தேசத்தில கலைச்சேவை செய்யறாங்களா?

said...

அடடா என்ன ஒரு வீரதீரம். முதுகு காட்டிய வீரரை வெற்றி கொண்ட துளசி வாழ்க:)

said...

வாங்க சித்ரா.

சேர்ந்தே அந்தப் பரங்கிமலையைப் பெயர்த்தால் ஆச்சு:-)

நான் இன்னும் பரங்கிமலை ஏறலைப்பா(-:

said...

வாங்க பித்தன்.

சரியாப்போச்சு..... உலகின் முதல் கூத்தாடி அந்தக் கந்தனின் தந்தையாச்சே.....

கூத்தாடிகளைக் குறைச்சு மதிப்பிட முடியாது.....அவர்களும் மனிதர்கள்தானே?(இல்லைன்னே முடிவு கட்டிட்டீங்களா?)

நம்ம தளத்தின் ஆரம்பத்திலேயே எதைன்னாலும் எழுதுவேன்ன்னு ஒரு டிஸ்கி போட்டுவச்சுருக்கறதைப் பார்க்கலையா நீங்க?

போகட்டும்....எப்படியோ உங்க மனசுலே தோணினதை அப்படியே சொன்னீங்க பாருங்க அதுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

நாலுபேருக்கு....ச்சீச்சீ...வேணாம்.ஒரே ஒருத்தருக்கு நல்லதுன்னாக்கூட எதுவும் தப்பில்லே!

said...

வாங்க உண்மைத்த்யமிழன்.

மூணாவது படம் உங்களுக்காகத்தான்:-)

இடப்பக்கம் ரெண்டாவதாத் தெரியும் சின்ன முகம் நம்ம ரேகாதான்!

said...

வாங்க கேபிள் சங்கர்.
நட்சத்திரம் திடீர்னு நம்ம வீட்டுக்கு வந்ததும் எப்படி வீடே ஜொலிக்குது பாருங்க!

பெருமையடிச்சுக்கறேன்னு நீங்கெல்லாம் நினைக்காம இருந்தால்..... ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன். நியூஸியில் வீடியோ, புகைப்படம் எடுக்கறதுக்குன்னே தனி இடம் ஏற்பாடுகள் அரங்கத்தில் செய்யப்பட்டு இருக்கும். அவுங்க அங்கே இருப்பதை நம்மால் பார்க்கவும் முடியாது. நமக்குத் தெரியும் ஒரே முதுகு, இசை நிகழ்ச்சின்னா மட்டும் அதை நடத்தும் கண்டக்டர் முதுகுதான்.

இங்கே அரங்கத்துலே அதற்கான ஏற்பாடுகள் செய்யலைன்னாலும் அவுங்களை முதல் வரிசையில் உக்காரவச்சுட்டா....ஓரளவு தொல்லை இருக்காதுல்லையா?

கல்யாண வீடுகளில் இன்னும் மோசம்.
அதான் கொஞ்சம் புலம்பி வைக்குறேன், இயக்குனரான உங்களிடம்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

அச்சச்சோ..... தெலுகுதேசம் காது.
எல்லாம் மன ஹிந்தி தேசம்தான்.

நம்ம ஜெமினிகணேசன் பொண்ணு ரேகாதான்ப்பா. முழுப்பெயரைச் சொன்னதும் 'ஆடி'ப் போயிட்டீங்கபோல:-)))))

said...

வாங்க வல்லி.

ஆமாம்ப்பா.....'புறமுதுகு காட்டிட்டீரே ஐயா'ன்னு சொல்லி இருக்கலாமோ?

நினைவு வச்சுக்கறேன்:-)

said...

முதல் பத்தில சொன்னது உண்மை. :)

போட்டோவை பெரிசாக்கினா நாகேஷும் ரேகாவும் தெரியறாங்க.. ம்.. நல்லா பொழுது போகுதுங்கறீங்க..

said...

ம்ம்ம்..கலக்குறிங்க டீச்சர்...உங்க புண்ணியத்துல பல நிகழ்ச்சிகளை பார்த்துக்கிட்டு இருக்கோம். ;)

said...

//அவர் முதுகு சூப்பரா இருக்குன்னு

பாராட்டிட்டு வந்தேன்//

வஞ்ச புகழ்ச்சி சூப்பர்.

said...

வாங்க கயலு.

டெல்லியில் இருக்கும் நீங்க கண்டுபிடிச்சீங்க, உள்ளூர் உண்மைத்தமிழன் 'எங்கே'ன்றார்:-)

said...

வாங்க கோபி.

கிடைக்கும் எதையும் விடப்போறதில்லை. அதே சமயம் அதையும் எழுதாம விட்டு வைக்கப் போவதில்லை:-)))))

said...

வாங்க கோமதி அரசு.

நம்ம பக்கம் மக்கள்ஸ் நொந்து நூடுல்ஸாகிட்டாங்க அன்னிக்கு. அரங்கத்தைக் கவனிச்சுக்கும் ஆட்கள் போகும்போதும் வரும்போதும் முறையிட்டும் பயன் ஒன்னும் இல்லை. அவுங்களாவது போய்ச் சொல்லி இருக்கலாமுல்லே? மக்கள் சொன்னதுக்குத் தலை ஆட்டிட்டு அவுங்கபாட்டுக்குப் போய்க்கிட்டே இருந்தால் நல்லவா இருக்கு?