Friday, January 31, 2014

சிங்கைச் சீனுவின் கோவில்.


மாலை நாலுமணிக்கு மேல்கிளம்பி நிதானமா நடந்து  சிங்கைச் சீனுவின் கோவிலுக்குப் போனோம். சிங்கைச் சீனுவுக்குன்னே நான் ஒரு ஸ்பெஷல்  வச்சுருக்கேன்.  அங்கேயே ஒரு ஓரமா உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பேன்.   அதனால் பயணங்களில் மறக்காமல் விஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து) புத்தகம் கையோடு கொண்டு போவேன். எப்ப ஆரம்பிச்சதுன்னு சரியா நினைவில்லை. இப்ப இந்தப் பழக்கம் நம்ம கோபாலுக்கும்  தொத்திக்கிச்சு.

கோவிலுக்குள் நுழைஞ்சதும் கோபுரவாசலில் இருந்தே பெருமாளுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு புள்ளையாரில் இருந்து ஆரம்பிச்சுக் கோவிலை வலம் வருவோம். தாயார், ஆண்டாள், துளசி மாடம் எல்லாம்  தரிசனம் ஆனதும் கடைசியில்  ஆஞ்சிசந்நிதியில் ஒரு கும்பிடு.


பிறகு நேராப்போய் பெருமாளின் முன்னால் நின்னுருவோம். இங்கே நோ ஜருகு என்பதால் மனம் நிறையும் அளவுக்கு கண்ணால் தரிசித்து மனசுக்குள்ளே அவரைக் கொண்டுபோய் பிரதிஷ்டை செஞ்சுக்கலாம்.
பெரிய திருவடி.

மூலவரும் உற்சவரும்.

மேலும் கோவிலில் கேமெரா பயன்படுத்த தடை ஏதுமில்லை. மூலவரைக்கூடக்  க்ளிக்கலாம்.

இங்கே புள்ளையார் சந்நிதியிலேயே அதே மேடையில்  வேல் உருவில் முருகன் இருக்கார்.  இன்னிக்கு அங்கே  வேலுக்கு பதிலா  முருகனின்  விக்கிரஹம் இருந்துச்சு. புள்ளையார் சந்நிக்கு முன்னால் ஒரு ரிஷப வாகனம் வேற!  என்னடா இது......  சிவன் கோவில் சமாச்சாரமெல்லாம் இங்கே  இருக்கேன்னு விசாரிச்சால்,  சிவன் இங்கே விஸிட் வரப்போறாராம்.

மச்சினன் வீட்டுக்குப் போகவர இருந்தால் நல்லதுதானே! மாமன் மச்சானுக்குள்ளே எந்த விரோதமும் இல்லை. மனுசங்கதான் சைவம் வைஷ்ணவமுன்னு  பிரிஞ்சு நின்னு சண்டை போட்டுக்கறாங்க.  இப்பக் காலப்போக்கில் எவ்வளவோ மாற்றங்கள்  வந்து போச்சு. எங்க அம்மம்மா சிவன் கோவிலிருக்கும் தெருவில்கூடப் போகமாட்டாங்க. அப்படி ஒரு ஆங்காரம்:(
 தாயாரும் ஆண்டாளும்.


சந்தியா காலப் பூஜைக்கு ஏற்பாடாகுது.  சந்நிதியைத் திரைபோட்டு மறைச்சிருக்க,  திரையில் வழக்கமான சங்கு சக்ர திருமண் இல்லாம அங்கே ஸ்ரீ வேணுகோபாலன் குழலூதிக்கிட்டு இருக்கார். ஆஹா.... சகுனம் சூப்பர்! புதுசா  அங்கே வச்சுருக்கும் டிவியில் முன்னெப்பவோ  நடந்த  பூஜைகளைக் காமிக்கிறாங்க. அடடா.... என்ன ஒரு மலர் அலங்காரம்!  7677



ஷோடஸ  உபசாரம் முடிஞ்சது. மக்களுக்குத் தீப ஆரத்தி, தீர்த்தம் , சடாரி எல்லாமும் கிடைச்சது. மனநிறைவோடு கிளம்பி செராங்கூன் சாலையில் நடந்து  பொங்கல் சந்தைக்குப் போறோம். போகும் வழியில் மசூதிக்கு அந்தப்பக்கம் இருந்த ஒரு காலி இடத்தில் பெரிய  கொட்டகை போட்டுக்கிட்டு இருக்காங்க. தைப்பூசத்துக்கு  அன்னதானம் நடத்தவாம்.



நம்ம சீனு கோவிலிலும் நாளை  16 ஆம் தேதி பகல் 12 மணி முதல்  17 ஆம்தேதி பகல் 3 வரை தொடர்ச்சியா அன்னதானம் நடக்கப்போகுதாம். அனைவரும் வருகன்னு  ஒரு விளம்பரம் வச்சுருந்தாங்க. ஓஹோ.... அதான்  இன்னிக்குப் பாத்திரங்களைக் கழுவி கமர்த்திட்டாங்களா?

தைப்பூசத்துக்கு  என்னென்ன வேண்டுதல்களுக்கு  அரசின் அனுமதி கிடைச்சிருக்குன்னு சொல்லும்  போஸ்டர், பால் குடம், பால் காவடி, அலகு,  வேல்காவடி , ரதக் காவடி முதலியவைகளுக்கான கட்டண விவரம், எத்தனை மணிக்கு அவுங்க முறை வருது. அதுக்கு  என்ன நிறச் சீட்டுன்னு எல்லாத் தகவலும் அடங்கிய பேனரும் வச்சுருந்தாங்க.


இன்னொருக்கா போய் காய்கறிக்கடையில் நின்னேன். காய்களை விடுங்க..... இந்தக் கீரைகள் எப்படி தளதளன்னு  இருக்கு பாருங்க.  முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, புளிச்சக்கீரை  எல்லாம்கூட இருக்கு! ஹூம்.... கொடுத்து வச்ச சிங்கைவாசிகள்!

மாடுகளைப்போய் பார்த்துட்டு அப்படியே அங்கே மேடையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு கண்ணை ஓட்டினேன்.  ரொம்ப சுமாரா இருக்கு.  சினிமாப் பாட்டுகளைப் பாடிக்கிட்டு இருக்காங்க.  எல்லாமே  அபஸ்வரம். லோக்கல் டாலண்ட்களை ஊக்குவிக்கத்தானே வேணும் இல்லையோ! அரங்கு நிறைஞ்ச மக்கள் வெள்ளம்.  உள்ளே நுழையும் வாசலிலேயே அன்னதானம் நடக்குது.  ரொம்பப்பெரிய வரிசை.  ஜஸ்ட் க்ளிக்கிட்டு நகர்ந்துட்டோம்.

  இன்னொரு மேஜையில் ரெண்டடித் துண்டுகளாய் கரும்பை வெட்டி வச்சுருக்காங்க. இலவசம்தானாம்.  சரி. அவர்கள் மனதை நோகடிக்கலாமா?  ஊஹூம்:-)))))

கோமளவிலாஸில் லைட்டா டிஃபன் முடிச்சுக்கிட்டோம்.

மெயில் செக் பண்ணிக்க மணிக்கு 2 டாலர்னு  போர்டு பார்த்துட்டு  அங்கே கூட்டிப் போனார். கோபால். எனக்கு கோல்ட் டர்க்கி  வந்துருமோன்ற பயம்தான். பாவம்.:-) நாம் தங்கி இருக்கும்  ஹொட்டேலிலும் இண்ட்டர்நெட் தொடர்பு  வாங்கிக்கலாம். ஆணால் மணிக்கு 6 டாலர் என்பது எனக்கு அநியாயமாத் தெரிஞ்சது.அதிலும் குறைஞ்சது ரெண்டு மணி நேரம் வாங்கணுமாம்.  சென்னையில் நாம் வழக்கமாத் தங்கும் கெஸ்ட் அபார்ட்மெண்டில்  இலவச  இணையத் தொடர்பு தர்றாங்க. நமக்கு எப்ப வேணுமுன்னாலும் நம்ம கணினியைப் பயன்படுத்திக்கலாம்.  இங்கே இவ்ளோ பெரிய ஹொட்டேலில்  எதுக்கெடுத்தாலும் காசு , காசு:(

மறுநாள் காலையில் கொஞ்சம் நிதானமாக எழுந்து  கடமைகளை முடிச்சுட்டுக் கோவிலுக்குப் போனோம். முருகர்  தன்னிடத்தில் மீண்டும் வேலை வச்சுட்டுக் காணாமப் போயிருந்தார்.  தரிசனம், சகஸ்ரநாமம் எல்லாம் ஆச்சு. அறைக்கு வந்து மாத்திரையை முழுங்கிட்டுப் படுத்துட்டேன். காய்ச்சல் கூடி இருக்கு.

மாலை அஞ்சு மணி அளவில் ஜுரம் விட்டதும் மாலை உலாவுக்குத் தயாரானேன். பொங்கல் சந்தையில் மக்கள் கூட்டம். தைப்பூசத்துக்குத் தண்ணீர் பந்தல் பேனர் வைக்கும் வேலை ஒன்னு பக்கத்திலே !  காணும் பொங்கல் ஆச்சே. இதுவரை ஒரு நட்புகளையும் சந்திக்கவே இல்லையேன்னு  மனதில் ஒரு நெருடல். எல்லாம் காய்ச்சல் படுத்தும் பாடு:(

நம்ம கோவி.கண்ணனுக்கு மட்டும் சிங்கையில் இருக்கும் விவரத்தையும் மறுநாள் நியூஸி கிளம்பும் சமாச்சாரத்தையும்  டெக்ஸ்ட் அனுப்பி இருந்தார் கோபால். ஏதோ முக்கிய வேலையில் இருப்பதாயும்,  சந்திக்க இரவு 11 மணிக்குமேல் ஆகுமே என்றவர், மறுநாள் காலை வேலைக்குப்போகும் வழியில் வந்து சந்திப்பதாகச் சேதி அனுப்பினார்.

மகளுக்கு ஒரு சில சாமான்கள் வாங்க பூகி ஜங்ஷனுக்கு  ஒரு டாக்ஸி பிடிச்சுப்போனோம். வழக்கமா நடந்துதான் போவேன். இப்பக் கொஞ்சம் உடம்பு முடியலை:( டாக்ஸி ஸ்டேண்ட் போகும் வழியில்  ரெண்டு மூணு வலை அடிச்ச ட்ரம்வச்சு தீயில் ஆஹுதி நடக்குது.  சீனர்கள்! பக்கத்துக்கோவிலில் இருக்கும் பழைய காகிதங்களைக் கொண்டு வந்து எரிச்சுக்கிட்டு இருக்காங்க. வரப்போகும் புது வருசத்துக்கான க்ளீனிங் அப்.






இறந்த உயிர்களுக்குப் படையல் போட்டுருக்காங்களாம்.


தொடரும்.......:-)

பின்குறிப்பு:  இன்று சீனப்புத்தாண்டு கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.





Wednesday, January 29, 2014

முன்னும் பின்னும் சிங்கை

ரொம்பவும் அலைச்சல் இல்லாம எங்க ஊரில் இருந்து இந்தியா குறிப்பாக சென்னைக்கு வரணுமுன்னால்  சிங்கப்பூர் ஏர்லைன்ஸை விட்டால் வேற போக்கிடம் இல்லை. சென்னைக்குப் போறோமுன்னா  கிளம்பின அன்றே  போய்ச் சேர்ந்துறலாம்.  15 மணி நேரப்பயணம். இடையில்  ஒரு ரெண்டு மணி நேரம் சாங்கியில்  வேடிக்கை உண்டு. நியூஸியில் காலை 9க்கு வீட்டை விட்டால் 21 மணி கழிஞ்சதும் சென்னை வீடு.

இந்த முறையும் அவ்வாறே  வேடிக்கை பார்த்தபடி நடந்தோம்.  பயணத்தில் கொடுத்த சாப்பாடுகள் யக்:(  இதுலே  'பன் மட்டும் சாப்பிடும்படி  இருக்கு'ன்னு  கோபால் சொன்னதால் எனக்கொரு பன் வேணுமுன்னு கேட்டதுக்கு  இல்லைன்னு சொன்ன புண்ணியவதி,  கொஞ்சநேரம் கழிச்சுக் கொண்டு வந்து தந்தபோது,  வேண்டியதில்லைன்னு  சொன்னேன். பசி காணாமல் போயிருந்துச்சு!

கிறிஸ்மஸ் & புதுவருசக் கொண்டாட்டமா   சாங்கியில் மலர் அலங்காரங்கள் அழகா இருந்துச்சு. ஸேண்ட்டாகூட பனிமூடிய குடிலில் இருந்தார்.  கொலாஸியம் ஒன்னு  வச்சுருந்தாங்க.  ரெண்டாவது டெர்மினலில்  புதுசா நகைக்கடை ஒன்னு வந்துருக்கு. 22 கேரட் சமாச்சாரம்.  சாங்கியின் முதல்கடை!  நெருங்கிய  சொந்தமொன்றில் பிறந்திருக்கும் புதுப்பூவுக்காக  ஒரு சங்கிலி  (மெல்லிசாதான். குழந்தைக்குக் கழுத்து கனம்  தாங்கணுமே) வாங்கினோம்.  சாங்கி ஷாப்பிங் என்று  பயணிகளை ஊக்கப்படுத்த  ஆளுக்கு 40 டாலர் கிஃப்ட் கூப்பான் கொடுக்கறாங்களாம்.  அதுலே போய் உங்க ரெண்டு பேருக்கும் கூப்பான் வாங்கியாந்தால்  எம்பது டாலர்  குறைச்சுக்கொடுத்தால் போதும் என்று நகைக்கடைப்பெண் சொன்னாங்க. அட!  விடுவானேன்னு  நம்ம பாஸ்போர்ட்டைக் காமிச்சதும்   ரெண்டு கூப்பான் கிடைச்சது.  நகைக்கடையில் ட்யூட்டி ஃப்ரீ விலை. கூடவே மைனஸ்  80 டாலர்.   செராங்கூன் சாலையில் இவுங்க கடை இருக்காம்.

ஒரு காஃபி இருந்தால் தேவலைன்னு மாடிக்குப்போனால்...........  ஒரு அண்டா கொள்ளளவில்  ஒரு  மக் .  ஒரே ஒரு அண்டா மட்டும் வாங்கி நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணியும் அரை அண்டா மீந்து போச்சு!

ஸேண்டா குடிலுக்குப் பக்கத்தில்  இன்னொரு கிஃப்ட் குடில்.  சாங்கியில்  செலவழிக்கும் ஒவ்வொரு 100 டாலருக்கும் ஒரு  சாஃப்ட் டாய் கொடுக்கறாங்க. ஓக்கே. குழந்தைக்கு ஒரு பொம்மையும் ஆச்சு:-)

இந்தியாவில் நடந்தது என்ன?  இப்ப எழுதும் சிங்கைப்பகுதியை முடிச்சுட்டு  விவரமாச் சொல்றேன்.சரியா?
இந்தியப்பயணம் முடிஞ்சது   பொங்கலன்றுதான்.  குடும்பப் பொங்கலா அமைக்கப்பட்டது அது. ஒரு குடும்பப்பாட்டு மட்டும் இருந்திருந்தால் ரொம்பவே பர்ஃபெக்ட்டா இருந்துருக்கும் என்பது என் எண்ணம். உறவுகளிடம் சொன்னபோது பாட்டுத் தேடும் பொறுப்பை  ஏத்துக்கிட்டு  மகிழ்ச்சியாத் தேடிக்கிட்டு இருக்காங்க. கிடைச்சதும் சொல்றேன்:-)

மாலை எட்டரைக்கு விமான நிலையம் வந்துட்டோம்.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸில்  செக் இன் பண்ணிக்கப் போனால், எதோ கல்யாண வீட்டுக்கு தவறுதலா வந்துட்டோமோன்னு திகைப்புதான். பட்டு வேஷ்டியும் பட்டுச் சட்டைகளுமாக  இருக்காங்க கவுண்ட்டர் மக்கள்ஸ். சின்னகிண்ணங்களில் சக்கரைப்பொங்கல் தந்து  பொங்கல் வாழ்த்துகள் சொல்லி  வரவேற்றாங்க. தரையில்  ரங்கோலி போல ஒரு  பொங்கல் அலங்காரம்.  இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

எட்டுகிலோ  கூடுதலா இருக்கு நம்ம பெட்டிகள். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்  பயணிக்குப் பத்து கிலோ எடை கூடுதலா தர்றோமுன்னு  தகவல் அனுப்பி இருந்தாங்க. எப்போதும் இருக்கும்  இருபது  கிலோ இப்ப முப்பது கிலோவா ஆகி இருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் கிடைக்கும் கூடுதல் இருபது  கிலோவுக்குப் புத்தகங்கள் வாங்கிக்கணும் என்று அடி போட்டுருந்தேன்:-)

இப்ப எட்டை என்ன செய்வது?   ஆட்டைத் தூக்கி மாட்டில் போடணும்.  செக் இன் பெட்டிகளில் இருந்து  சில சாமான்களை எடுத்து  கேபின் பேகில் வச்சார் கோபால்.  அநேகமா சரியாகி இருக்கனும்.  ஓக்கே ஆச்சு.  ஆனால் கேபின் பேகில் கூடுதல் எடை இருக்கே:(   லேப்டாப் வைக்கும் பையில்  ஒரு ஆறேழு புத்தகங்களை போட்டேன்.  பயணத்துக்கு ரீடிங் மெட்டீரியல்!

பொங்கல் ரங்கோலிக்கு முன் ரெண்டு வரிசையில் ஏர்லைன்ஸ் மக்கள் நின்னு படம் எடுத்துக்கிட்டாங்க. நானும் க்ளிக்கி வச்சேன்.  SIA வின்  நியூஸ் லெட்டருக்கு  போடணுமுன்னு  போஸ் கொடுக்கறீங்களான்னு  என்னையும் கோபாலையும் கேட்டாங்க.  ஆஹா... விடுவானேன்னு போய் நின்னோம்:-)  பொங்கப்பானை டிஸைன் போட்ட உடுப்பு வேற போட்டுருக்கேன் பொங்கல் ஸ்பெஷலா!



சரியான நேரத்துக்குக் கிளம்பி  சிங்கைக்குப் போய்ச் சேர்ந்தது விமானம். ரெண்டு நாள் தங்கும் உத்தேசம்.  நாம் தங்கப்போகும் ஹொட்டேலில் செக் இன் டைம் பகல் மூணு மணிக்குத்தான்.  காலை 6 மணிக்குப்போய்ச் சேர்ந்துட்டு பகல் மூணு வரை தேவுடு காக்க முடியாதுன்னு  முதல் நாள் அறை வேணுமுன்னு  மூணு நாளைக்கு ஏற்பாடு செஞ்சுருந்தார் கோபால். டாக்ஸி எடுத்து அறைக்குப்போகும் வழியிலேயே.... 'போனதும் சீனு சீனுன்னு ஆடாதே. கொஞ்ச நேரம்  ஓய்வெடுத்துக்கிட்டு நிதானமாக் கோவிலுக்குப் போகலாம். பகல் பனிரெண்டு வரை கோவில் திறந்துதான் இருக்கு' என்றார்.  எனக்கும்  மூணு வாரமா சரியான ஓய்வில்லாமல் உடல் அசதியாகத்தான் இருந்துச்சு.

அறைக்குப்போய் கொஞ்ச நேரம் படுத்தவள்  கண் விழிக்கும்போது  பதினொன்னரை மணி.  சட்னு குளிச்சு ரெடியாகி  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போனோம். மூணு நிமிச நிதான நடையில் கோமளவிலாஸ். சாலையைக் கடக்கும்போதே வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் நுழைஞ்சு ஒரு கும்பிடு.

செராங்கூன் சாலை முழுசும் பொங்கலுக்கு அலங்கரிச்சு இருக்காங்க.  பார்க்கவே அழகா இருந்துச்சு.  சில சைடு தெருக்களில் போக்குவரத்தை நிறுத்திட்டு   தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு  பொங்கல் சந்தை நடக்குது. ஹேஸ்ட்டிங் சாலை முகப்பில் ஒரு ரெட்டை மாட்டு வண்டி  நிக்குது. கொட்டாய்க்குள்ளில்  சின்னத் தடுப்பு வச்சு அதுக்குள்ளே பசுமாடுகள்!  சிங்கையில் எங்கிருந்து மாடு வந்துச்சு?  இன்னிக்கு மாட்டுப்பொங்கல் இல்லையா?  மாடுகளை ஊருக்குள்ளே கொண்டு வந்து காட்டிட்டுப் போறாங்க.  எல்லாம் வளமான 'வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்'. ஆஹா.... அதான் நீங்காத செல்வம் நிறைஞ்சுருக்கு சிங்கையில்!


சிங்கையின்  பால்பண்ணை மாடுகள்தான் அவை. பண்ணை ஜோஹூர் பாரு அருகில்  சிங்கை எல்லையில் இருக்கு. விக்னேஷ் பால் பண்ணை.  நாலு பசுக்கள்,ரெண்டு கன்னுக்குட்டிகள், ரெண்டு வெள்ளாடுகள். எல்லோருக்கும் ஒரு கொம்புக்குச் சிகப்பும் இன்னொரு கொம்புக்குப் பச்சையுமா வர்ணம் தீட்டி இருக்காங்க. மாடுகளுக்குக் கழுத்தில் பூமாலையும், சலங்கையும்! பாவம்..... தலையை ரொம்ப அசைக்கவிடாமல் ரெண்டு பக்கமும் கயிறு போட்டுக் கம்பித்தடுப்போடு கட்டி வச்சுருக்கு.

 மாடுகளுக்கு நகரின் சூடு தாக்காமல் இருக்க  நாலைஞ்சு மின்விசிறி போட்டு வச்சுருந்தது  எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பாதிசனம் மாடுகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கு.  வாழைப்பழம் வாங்கி  வரிசையா ஒன்னொன்னுக்கும்  ஊட்டுது சனம். பாவம் மாடுகள்  வெறும் பழமே கொடுக்கறீங்களேன்னு  போரடிச்சுப் பார்க்குதுங்க.

கொட்டகையின்  முடிவில் மேடையும்  இருக்கைகளின் வரிசையும். இன்னும்கொஞ்ச நேரத்தில் கலைநிகழ்ச்சிகள் தொடங்குதாம்.  இன்னொரு பக்கம்  மேசை நாற்காலிகள் போட்டு  கோலம் வரைவது, தோரணங்கள் செய்வதுன்னு  கைவேலைகளைச் சொல்லிக்கொடுக்கும் இளம்பெண்கள்.

இன்னொரு தடுப்பு அமைப்பில்  பொங்கல் பானைகள் கரும்புகள், அடுப்புகள் என்றுபொங்கல் வைக்குமிடம். அமர்க்களம்தான் போங்க!


இங்கே  சிங்கையில் ஜனவரி பத்து தேதி முதலே கொண்டாட்டங்கள் துவங்கிருது. நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய ப்ரோஷர்ஸ்  கொடுத்தாங்க. லிட்டில் இண்டியா முழுசுமே கோலாகலமா இருக்கு! கேம்பெல் லேன் முழுசும்  போக்குவரத்தை நிறுத்திப்  பந்தல்போட்டு வச்சுருக்காங்க.  பொங்கல் விழா கிராமம் இது. ஃபெஸ்ட்டிவல் வில்லேஜ். ஜோதி புஷ்பக்கடையில் ஆரம்பிச்சு  தெருவை அடைச்சு பாத்திரபண்டங்கள்.  வரப்போகும் தைப்பூசத் திருநாளுக்கான  சாமான்களாக் கொட்டிக்கிடக்கு!

வழக்கம்போல்  கேம்பல் லேன் காய்கறிக்கடையைப் பார்த்து பெருமூச்சு விட்டுட்டு, டெக்கா மால் கீழ்தளத்துலே இருக்கும் சூப்பர் மார்க்கெட்டையும் சுத்தி வந்தோம். பலா, வாழை, மா என்று முக்கனிகளை  வாங்கிக்கிட்டு அறைக்குப்போனோம்.  நல்லவேளையா ஞாபகமா ஒரு கத்தியை செக் இன் லக்கேஜில் போட்டு வச்சது நல்ல பயன்:-)


தொடரும்............:-)


Friday, January 24, 2014

தைப்பூசத் திருநாளிலே.....பால் காவடி புஷ்பக்காவடி.....


சரியாச் சொன்னால் போன வெள்ளிக்கிழமை இதே நேரம்..... அரைத் தூக்கத்தில் இருந்தவளுக்கு பால்கனி கதவு திறக்கும் சத்தமும், முணுமுணுவென்று யாரோகூட்டமாக என்னமோ சொல்லும் மெல்லிய ஓசையும் காதில் விழுந்துச்சு. கண்ணைத் திறந்தால்.... பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்த கோபால், இங்கெ வந்து பாரு' என்றார்.

உச்சாணிக்
கொம்பில் இருந்து பார்க்கிறேன். சின்னச்சின்ன மஞ்சள் உருண்டைகள் நகர்ந்து போகுது. கவனிச்சுக்கேட்டால் அந்த ஓசை  'அரோகரா!'

பொழுது விடிஞ்சால் தைப்பூசம்.  இப்ப மணி  ராத்ரி பதினொன்னரைதான். அதுக்குள்ளே பால்குடம் போக ஆரம்பிச்சுருக்கே!
சரியாத் தெரியலைன்னேன்.  16 வது மாடியில் இருந்து பார்த்தால் அப்படித்தான்.  கீழே போய் பார்க்கலாமான்னார். உடை மாற்றிக்கொள்ள சோம்பல்.  லாங் ட்ரெஸ்க்கு மேலே ஒரு சால்வையைப் போர்த்திக்கிட்டுக் கிளம்பினேன்.

சிங்கையில்  ஹொட்டேல் க்ராண்ட் சான்ஸ்லெரில்  ரெண்டு நாளாத் தங்கி இருக்கோம். அறை எண் ரெட்டைப்படையாக் கிடைச்சதும் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி. செராங்கூன் சாலை வ்யூ கிடைக்கும். இந்த ஹொட்டேல், நம்ம வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஜஸ்ட் பின்பக்கம் இருப்பதால்  கோபுர வ்யூவும் கேரண்டி.  நம்ம அதிர்ஷ்டம் பாருங்க..... கோவிலில் புதுக் கட்டிடங்கள் எழுப்பி விரிவுபடுத்தும் வேலை நடப்பதால்  கோபுரங்களுக்கெல்லாம்  படுதா மறைப்பு இப்போ. எப்படியும் வரும் ஜூன் மாசம் குடமுழுக்கு நாள் குறிச்சுட்டாங்க என்றபடியால் அடுத்தமுறை வரும்போது பளிச் கோபுரம் மின்னத்தான் போகுது!

கீழே வந்தப்ப 'அரோகரா' பெருசாக் கேட்டது. கைலாஷ் பர்பத் வாசலுக்கு  வந்து நின்னோம். மூணு லேன் உள்ள செராங்கூன் சாலையில் (இது ஒரு வழிப்பாதை)  ஒரு லேன் முழுக்க கம்பித்தடுப்பு  வச்சுருக்காங்க. அதுக்குள்ளே பால்குடம் சுமந்து  நடந்து போகும் பக்தர்கள். வீரமாகாளியம்மன் கோவிலைக்கடந்து போகுமுன்  ஒரு தேங்காயை கம்பித்தடுப்புக்கு வெளியே  அம்மனைக் கும்பிட்டபடி  சூறைத்தேங்காயா உடைச்சுட்டுப் போறாங்க. சாலையில் அந்தப்பகுதியில் உடைக்கபட்ட தேங்காய்ச்சில்லுகள்  சாலை முழுசுமாச் சிதறிக்கிடக்க, மற்ற ரெண்டு லேன்களில் போகும் வண்டிகள் சட்னி அரைச்சுக்கிட்டே  போய்க்கொண்டிருக்கு!  எத்தனை பஞ்சர் கேஸ்களோ!

ரெண்டு எட்டு வச்சு கோவில் பக்கம் போனால்  அந்த நேரத்திலும் சந்நிதி திறந்தே இருக்கு!  அம்மனும் அசராமல் அருள் பாலிச்சுக்கிட்டு இருக்காள்.  பதின்மவயது  'இளம் தாய்'  கேஸ்பருடன் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாங்க.  க்யூட் லிட்டில் டாக். Maltese வகை. அம்மாவைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஒரு பயத்தோடு ஊர்வலத்தை  வேடிக்கை பார்க்கிறான். ரெண்டு வயசு ஆகுதாம்.  முடி வெட்டிக்கிட்டதால் இளைச்சுப் போனமாதிரி தெரிஞ்சான்:-)  பக்கத்து அடுக்குமாடியில் வாசம்.

ஒரோரு தனிக் குழுவா பால்குட வரிசை  தங்களுக்கான பாட்டு, கோஷம் என்று போய்க்கிட்டே இருக்காங்க. பெருமாள் கோவிலில் இருந்து கிளம்பி  டேங்க் ரோடு தண்டாயுதபாணி கோவில்வரை பாத யாத்திரை.  நாங்களும் சுமார் ஒரு மணி நேரம் போல நின்னு வேடிக்கை பார்த்துட்டு அறைக்கு வந்து மீதித் தூக்கத்தைத் தொடர்ந்தோம். நடுவில் கொஞ்சம் விழிப்பு வந்தவுடன் மீண்டும் பால்கனிக்குப்போய் நின்னேன்.  ஊர்வலம் போகும்  ஓசை கேட்டதே தவிர சாலை விளக்குகள் எல்லாம் அணைஞ்சு இருந்துச்சு.  பரிவுடன் இவ்வளோ  ஏற்பாடுகள் செஞ்ச அரசு  விளக்குகளை அன்று ஒரு நாளுக்கு விட்டு வச்சுருக்கக்கூடாதா?

காலையில் ஒரு ஏழரைக்குக் கிளம்பி  நம்ம கோமள விலாஸில் இட்லி அண்ட் காஃபியை முடிச்சுக்கிட்டு  ஊர்வலத்துக்கு ஒதுக்கிய பக்கம் கம்பித்தடுப்பை ஒட்டியே  நம்ம சீனுவை தரிசிக்கப் போய்க்கிட்டு இருக்கோம்.  தெருமுழுக்கச் சட்னி அரைச்சது போதுமுன்னு  கம்பித்தடுப்புக்குள்ளே  தேங்காய் உடைக்கத் தொட்டி ஒன்னைக் கொண்டு வந்து வச்சுருந்தாங்க. சூப்பர்!


 ஊர்வலத்தில் காவடிகள் வர ஆரம்பிச்சு இருக்கு. முகம், நாக்கு, நெற்றி, கை  முதுகு தோள்பட்டை என்று அலகுகள் குத்திக்கொண்டு  கம்பிக்கூண்டு போல் இருக்கும் வேல்காவடிகளைச் சுமந்து கொண்டு  வர்றாங்க. ஒவ்வொரு காவடிக்காரருக்கும்  அவருடைய உற்றார் உறவினர், தனிப்பட்ட  மேளக்காரர்கள்  என்று சிறு  குழுவா வர்றாங்க. ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கிட்டு  பாட்டுகளைப் பாடியபடி போறாங்க. மேளம் அடிப்பவர்களுக்கு இன்னிக்கு பயங்கர கிராக்கி.  இசைப்புலியா இருக்கவேண்டியதுகூட இல்லை. ஒரு லயத்தோடு  'டும்'மத் தெரிஞ்சால் போதும் என்ற அளவே!  கூடவே  ரெண்டு நிமிசத்துக்கு ஒரு முறை 'வேல் வேல் வெற்றி வேல்,  வேலனுக்கு  அரோஹரா' இப்படி  கோஷங்கள்.




பக்தர்களின் அர்ப்பணிப்பும், அந்தச் சூழலும் நம்ம மனசையும் கட்டிப்போட்டுருது.  வேல் வேல் என்றதும்  வெற்றி வேல்,  முருகனுக்கு  என்றதும் அரோஹரா என்று முழங்கும் கூட்டத்தினருடன் நானும் பின்பாட்டுப் பாடிக்கிட்டே  அவர்கள் எல்லோரும் பெருமாள் கோவிலில் இருந்து வர  நாங்கள் பெருமாள் கோவிலை நோக்கிப்போறோம். ஊர்வலம் போகும்  வரிசையை ஒட்டி செராங்கூன் சாலையில் இருந்து பிரியும் தெருக்களுக்குள் வாகனங்கள் போகமுடியாமல்  கம்பித்தடுப்பு வச்சுருக்காங்க.  முதல்நாள் இரவு முதல்  மற்ற நாள் விடிகாலை 3 மணி வரை  வாகனங்களுக்கு அங்குபோக அனுமதி இல்லை.


சாலையைக் கடக்க நிற்கும்  பாதசாரிகளை  பத்து நிமிட்டுக்கு ஒருமுறை  தொண்டர் சிலர் போக்குவரத்தை நிறுத்திட்டு கடத்தி விடறாங்க. நல்ல வேலை!  இல்லைன்னா நம்மாலே கோமளவிலாஸ் போயிருக்க முடியாது:-)

ஊர்வலத்தையொட்டிய நடைபாதையில் அங்கங்கே தண்ணீர் (பந்தல்)  விநியோகம். அரை லிட்டர் குடி நீர் போவோர் வருவோர் அனைவருக்கும்  'அய்யா குடி, அம்மா குடி'தான்!  சில இடங்களில்  வாட்டர் அண்ட் கேஸரி!  நைஸ்:-)




ஊர்வலத்தில் நம்ம இஸ்கான் பக்தர்கள் ஒரு குட்டி ரதம் இழுத்து வந்தார்கள்.  பலராமன், சுபத்ரா, க்ருஷ்ணர்  ரதத்தின் மேடையில்.  ப்ரஸாத விநியோகம் உண்டு. எனக்கு  ஒரு பிஸ்கெட்டும் கொஞ்சம் வறுத்த வேர்க்கடலையும் கிடைச்சது.  தோள்ப்பையில் போட்டு வச்சேன்:-)

சிலர் சின்ன சப்பரம் போல்  உள்ளதை அவரவர் குலதெய்வத்தின்  படங்களாலும் அடையாளப்பொருட்களாலும் அலங்கரிச்சு   முதுகில் குத்திய  கொக்கியின் தொடர்பாய் வரும்  கயிற்றால் சப்பரத்தை இழுக்கறாங்க. வைணவத்தின் அடையாளங்களான  சங்கு சக்ர திருமண் அலங்காரத்துடன் பக்தர் ஒருவர் ஊர்வலத்தில் போறார்.

பால்குடம் ஏந்தும் பக்தர்கள் மட்டும்  சீருடை போல மஞ்சள் நிற சல்வார் கமீஸ் போட்டுருக்காங்க. ஆண்களும் பால்குடம் தலையில் ஏந்திப்போறாங்க. ஆனால் பெண்கள் யாரும் காவடி தூக்கலை!

பக்தர்களின்  அர்ப்பணிப்பும், ஆவேசமும், இறை நம்பிக்கையும் கண்டு மனசு  அதிர்ந்தது  உண்மை!  கொஞ்சம் விட்டிருந்தால் நானும் கூட்டத்தோடு நடந்து போயிருப்பேனோ என்னவோ!

காலில் செருப்பில்லாமல், இல்லை காலணியோடு  இப்படி எந்தவிதமான  கட்டுப்பாடுகளும் இல்லாமல்  சனம் மனசுக்குப் பிடிச்சமாதிரி  போகுது! வேண்டுதல் வேண்டாமை இலனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? பக்தியை மட்டும்தானே பார்க்கிறான்! வெளிவேஷம் எப்படி இருந்தால்தான் என்ன?

அங்கங்கே சில அயல்நாட்டவரும் பால் சொம்பைக் கையில் பிடிச்சுக்கிட்டு கூட்டத்தோடு நடந்து போறாங்க.  பால் சொம்புன்னதும்  சொப்பு மாதிரி இருக்கும்  சின்னச்சின்ன குடங்களில் பால் நிரப்பி அவைகளை  முதுகு முழுதும்  கொக்கிகளில் குத்தித் தொங்கவிட்டுக்கொண்டு  சிலர்.   எலுமிச்சங்காய்களை வரிசையா குத்தித் தொங்கவிட்டுப்போகும் சிலர் இப்படி வகைவகையாக பக்தர்களின்  வேண்டுகோள் சிலிர்க்கத்தான் வைக்கிறது!

வழக்கமாகப்போகும் பெருமாள் கோவில் முன்வாசலில் அன்று  நுழைய அனுமதி இல்லை. பக்கத்துலே பெருமாள் ரோடில் போய்  வலப்பக்கம் ரேஸ்கோர்ஸ்  சாலையில்  திரும்பி  அதுலே நடந்து போனால் நமக்கு வலப்பக்கம்  ஒரு பெரிய வாசல் கேட் உண்டு. இது நம்மபெருமாள் கோவிலின்   பின்பக்கத்து வாசல். இதுநாள்வரை இதன் வழியா நாங்க போனதே இல்லை!   தைப்பூசம் தினத்தன்று  சிங்கையில் உள்ளதே நமக்குப் புது அனுபவம் . அய்க்கோட்டே!!!!

அதில் நுழைஞ்சால்  சிறுசும் பெருசுமா வரிசையாக  காவடிகள். அந்தந்தக் குழுவினர்  தங்கள் காவடிகளை வச்சு, இன்னும் சில மங்கலப்பொருட்களுடன் பூசை போடறாங்க. பூசைமுடிஞ்சதும் அதைத் தூக்கிப் போறவர் தோள்களில் ஏற்றி கம்பி அழுத்தாமல் இருக்க ரெண்டு குட்டி மெத்தைகளை  இரு தோளிலும் வைக்கிறாங்க.  இனி வேலின் கடைசியில் உள்ள  சங்கியில் கோர்த்த  கொக்கிகளை  முதுகின் தசையில்  குத்திப்பிடிப்புக்குன்னது   தொடங்குது.  நிறைய திருநீறை  கொக்கி புகும் இடங்களில் பூசிவிட்டு சரக் சரக் என்று  ஒருத்தர் குத்தி வைக்கிறார்.  இந்தக் கலையில் இவர் நிபுணராக இருக்க வேணும்!  எத்தனை வருசப் பயிற்சியோ!

சீனர் ஒருவருக்கு அலகு குத்திக் கொண்டிருந்தார்கள். அவர் மனைவி விபூதித் தட்டுடன்!  என்ன நேர்த்திக்கடனோ!


ஒருமுறை  பங்குனி உத்திரம் சமயம் நானும் மகளும் சிங்கையில் இருந்தோம்.  வீரமாகாளியம்மன் கோவில் அடுத்து ஒரு காலி இடம் அப்போ. அங்கெதான்  இந்த கைலாஷ் பர்பத் இப்போ கட்டி இருக்காங்க. அங்கே  அலகு குத்திக்கிட்டு இருந்த  சிலரைப் பார்த்ததும் மகளின் முகம் போன போக்கைப்பார்க்கணுமே! பயந்துட்டாள் இப்படி சாமி கும்பிடுவாங்களான்னு!   பக்தி என்பது ஒரு போதைன்னு சொல்லிவச்சேன்.

காவடி தோளில் நல்லபடியாக  அமை(மர்)ந்ததும்  நம்ம சீனுவின் முன் பிரகாரத்தில் வந்து  கொடிமரத்தின் முன் கொஞ்சம் ஆடிவிட்டக் கோவிலை வலம் வந்தபின், செரங்கூன் சாலையில் ஊர்வலம் நகர ஆரம்பிக்கிறது. நேற்று இரவு முதல் கோவில் அடைக்கவே இல்லை.  மருமானுக்குப்போகும் பால்குடம், காவடி சமாச்சாரங்களைப் பார்த்து அருள் ஆசி வழங்குவதில்  ஒன்னரைநாள் பயங்கர பிஸி நம்ம சீனு!

தண்டபாணி கோவில்  இங்கிருந்து ஒரு நாலு   கிமீ தூரத்தில் இருக்கு.  செராங்கூன் சாலையில்  முஸ்தாஃபா கடந்து,  காளியம்மன் கோவில் வாசலில் தேங்காய் உடைத்துக் கும்பிட்டபின் டெக்கா மால் வரை போய்  Rochor Canal Road   தாண்டி  நேரா Dhoby ghat   கடந்து Clemenceau Avenue வழியாக Tank Road கோவிலுக்குப் போறாங்க.  இந்தக் கோவில் முதல் அந்தக் கோவில் வரை  போகும் வழியெல்லாம் கம்பித்தடுப்பு வச்சு நடந்து போகும் பக்தர்களுக்கு  எந்த  ஆபத்தும் இடிபாடும் வராம வசதிகொடுத்த  அரசை பாராட்டத்தான் வேணும்.

டேங்க் ரோடு தண்டாயுதபாணி தரிசனத்துக்கு இங்கே க்ளிக்கவும். நம்மவீடுதான் தைரியமா வாங்க.



பின் குறிப்பு:
 இந்த முறை பயணப்பதிவு ரிவர்ஸ் கியரில் ஓடப்போகுது!  எல்லாரும் சரின்னால்தான். இல்லைன்னா..........  வழக்கம்போல் ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம். சரியா?