Friday, September 29, 2006

எவ்ரிடே மனிதர்கள் -18 கஸ்தூரி

"கஸ்தூரி ஆண்ட்டி வீட்டுலே பூஜைக்குக் கூப்புட்டுருக்காங்க, வர்றியா?"


"வாட் பூஜை? யூ நோ தட் ஐ டோண்ட் பிலீவ் இன் காட்"


" அது பரவாயில்லை. உனக்குத்தான் புடவை கட்டிக்கப் பிடிக்குமே. ஒரு ச்சான்ஸ் கிடைச்சிருக்கு."


" புடவையா? ................ஓக்கே."


எப்படியோ புடவைன்ற தூண்டிலைப் போட்டு மகளை இழுத்துக்கிட்டு பூஜைக்குப் போனேன். இவ நல்லா உயரமா இருக்கறதாலே புடவை கட்டினாக் கொஞ்சம் அழகாத்தான் இருக்கு. அதிலேயும் அங்கே வர்ற நம்ம சங்காதிகள் " யூ லுக் ஸோ நைஸ்"ன்னு சொல்றது இவளுக்கும் பிடிச்சிருக்கு.


அதே சமயம், நம்ம பழக்க வழக்கங்கள், கலை கலாச்சார விஷயங்களை இவ மனசுலே ஒரு மூலையில் எங்கியாவது விதைக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு.
இங்கே நாங்க வந்தப்பதான் தமிழ்நாட்டுக்காரங்க யாருமெ இல்லையே. அதுக்கப்புறம் ஒரு சிலர் வந்தாலும் அவ்வளவா பூஜை, புனஸ்காரம்னு இல்லை. எப்பவாவது ஒருத்தரை ஒருத்தர் விஸிட் பண்ணறதோட சரி.எட்டு வருசம் கழிச்சுத் தமிழ்ச்சங்கம் தொடங்குன பிறகுதான் கொஞ்சம் கலை, மொழின்னு பசங்களுக்கு அறிமுகம் ஆச்சு.


இந்தக் காலக்கட்டத்துலேதான் நம்ம டி.என். கிருஷ்ணன், வயலின் வித்தகர் இங்கே நம்ம ஊருக்கு ஒரு நிகழ்ச்சி கொடுக்க வந்துருந்தார். காஞ்சமாடு கம்பங்கொல்லை பார்த்த மாதிரி பாய்ஞ்சோம். நூறு பேருக்கும் கம்மியாத்தான் அரங்குலே இருந்தாங்க. அப்பத்தான் அங்கே வச்சு நம்ம கஸ்தூரியைப் பார்த்தோம். குளிருக்குப் பயந்து நாங்கெல்லாம் கம்பளி உடுப்புலே புதைஞ்சுக்கிட்டு இருந்தப்பப் 'பளிச்'னு பட்டுப்புடவை நம்ம கண்களை இழுத்துருச்சு.


சிங்கப்பூர்க்காரவுங்களாம். பேச்சுவாக்குலே, இங்கெ அவுங்க வந்து ஒரு மாசம் ஆச்சுன்னு சொன்னாங்க. மகன் யூனியிலே படிக்கிறாராம். நம்ம வீடு யூனிக்குப் பக்கத்துலேதானே இருக்குன்னு சொல்லி அவுங்க வீடு எங்கேன்னுகேட்டா.......... இடம் சொன்னாங்க. அட! நம்ம தெருவுக்கு எதுத்த தெரு. இவ்வளோ போதாதா?


சிங்கப்பூர்லே இருந்துட்டு இங்கே வந்துருக்காங்க. ஆனா கோவைதான் சொந்த ஊராம். மலேசியாக்காரரைக் கல்யாணம் கட்டி, சிங்கப்பூர்லெ பல வருசங்கள் இருந்துட்டு, இப்ப இங்கெ வந்துருக்காங்க. சிங்கையிலே டீச்சரா வேலை பார்த்துருக்காங்க. ரேடியோவுலே பாட்டெல்லாம் பாடி இருக்காங்க.
நம்ம தமிழ்ச்சங்கத்துலே நாங்க ஆரம்பிச்சிருந்த தமிழ் வகுப்புகளுக்கு முறையான ஆசிரியர்கள் இல்லாம நாங்களே வாரம் ஒருத்தர்ன்னு வகுப்புகள் நடத்திக்கிட்டு இருந்தோம். புள்ளைகள் எல்லாம் ஒண்ணு, டீச்சர்கள் மட்டும் வெவ்வெறு. இதுனாலே என்ன பாடம் நடத்தறோம், பிள்ளைகள் எவ்வளவு தூரம் அதைக் கத்துக்கிட்டாங்கன்னு பார்க்க ஒருதொடர்பில்லாம இருந்துச்சு. அதுலேயும் எங்க வீட்டுக்காரர் வகுப்பு எடுக்கப்போனா, வெறும் ரிவிஷன் வச்சே சமாளிச்சுருவார். இப்ப கஸ்தூரிக்கு ப்ராப்பர் டீச்சிங் அனுபவம் இருந்ததாலே அவுங்களையே டீச்சராப் புடிச்சுப் போட்டுட்டோம்.
அவுங்களும், இதுக்கெல்லாம் அசராம, சிங்கைப் பாடத்திட்டத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் வரவழைச்சு வகுப்பு நடத்தினாங்க. எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்துருச்சு. மொழியின் கூடவே நம்ம கலைகளும் வளரணும்தானே?தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள், விழாக்கள் இதுக்கெல்லாம் கஸ்தூரியின் பாட்டு இல்லாமல் முடியாதுன்னும் ஆகிருச்சு.நாந்தானே கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர். எனக்கும் இவுங்களை விட்டா வேற யார் இருக்கா?


கொஞ்சநாளிலே இங்கே சிலருக்குப் பாட்டுக் கத்துக்கற ஆர்வம் உண்டுன்னு தெரிஞ்சதும் பாட்டு வகுப்பும் ஆரம்பிச்சாங்க.வாரம் ஒரு நாள் அவுங்க வீட்டுலெ 'ச ப ச'ன்னு இருந்துச்சு. இங்கே இருக்கும் யூனி நூலகத்துலேயும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இப்படி படு பிஸியா இருந்தாலும், நம்ம பண்டிகைகள், நல்ல நாள், கிழமைகள்ன்னு வந்தா எதையும் விடாமக் கொண்டாடுவாங்க. எங்களைப்போல வீட்டுவரையில் கொண்டாடாம, எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டாடுவாங்க. அதுலெ பாட்டு, நடனம்ன்னு கலை நிகழ்ச்சிகளும் இருக்கும்.



இங்கே எங்களுக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் குஷியாப் போச்சு. மத்த தோழியர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு.உள்ளேயே ச்சும்மாக் கிடக்கற புடவை, நகைகளை வெளியே எடுக்கறது, உடுக்கறதுன்னு ஜாலிதான். ஆனா வீட்டு ஆம்பிளைகளுக்குத்தான் கஷ்டமாப் போச்சு. 'புடவையெல்லாம் வேணாம், இங்கே யாரு கட்டறா?'ன்னு சொல்லி அவுங்க வயித்துலேயும், பர்ஸுலேயும் பாலை வார்த்துக்கிட்டு இருந்தோமா, இப்பக் கஸ்தூரி வருகையாலே, 'கட்டிக்கப்புடவையே இல்லை. இன்னும் நாலு வாங்கிக்கணும்'னு ஆச்சு.


புடவைன்னதும்தான் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. கஸ்தூரி எப்பவும் புடவைதான் கட்டுவாங்க. நாங்கெல்லாம் குளுருக்குப் பயந்து அதையெல்லாம் ஏறக்கட்டி நாளாச்சு. பட்டுப்புடவைகள் எக்கச்சக்கமா வச்சிருக்காங்க. அந்தக் காம்பினேஷன்கள் பார்த்து வச்சுக்கிட்டு அடுத்தமுறை ஊருக்குப் போறப்ப மறக்காம வேற காம்பினேஷன்லே வாங்கிவர ஆரம்பிச்சோம்:-)))


சிங்கையிலெ ரொம்ப நாளா இருந்ததாலெ மலேசியர்கள், சீனர்கள்ன்னு அவுங்களுக்கு நட்பு வட்டம் இருந்துச்சு.இங்கே தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள்ன்னு அந்த வட்டம் இப்ப ரொம்பப் பெரூசாவே ஆகிருச்சு. அவுங்க வீட்டு நவராத்திரி கொலுவுக்கு பகுதிவாரியா விருந்தாளி வருகை . அதுவும் ஒரு விதத்துலே நல்லதுதான்.


எல்லாரும் கூடும்போது பொது மொழியா இங்கிலீஷ் வந்துருதே. இந்தியை வச்சுக்கலாமுன்னா சிலருக்கு மொழித்தகராறு.இன்னொருத் தமிழ்க்காரரைப் பார்த்தவுடன் தமிழ் தானாய் வந்துருது. அக்கம்பக்கம் உக்கார்ந்து இருக்கறவங்களுக்கு மொழி தெரியலைன்னா அது ஒரு சங்கடம். அநாகரிகமும் கூட. தமிழ்லே பேசிட்டு, அடுத்தவங்களுக்காக அதை ஆங்கிலத்துலே மொழி பெயர்த்துக்கிட்டுன்னு ஒரே சல்லியம் போங்க. அதனாலெ எங்களுக்கு இந்தப் 'பிரித்தழைக்கும் கொள்கை' பிடிச்சுப்போச்சு.


இந்தக் காலத்துலே விரதங்கள், பூஜைகள் எல்லாம் சம்பிரதாயமா செஞ்சுக்கிட்டு இருக்கறதே பெரிய விஷயம் இல்லையா?எங்க வீட்டுலே நடக்கும் பூஜைகளுக்கு நம்ம கஸ்தூரிதான் ஆஸ்த்தான பண்டிதர். லேடி பண்டிட். நம்ம வீடு எவ்வளோ முன்னேறிடுச்சுப் பாருங்க. நல்லா நடத்தி வைப்பாங்க. நமக்கும் சரி, நம்ம விருந்தினர்களுக்கும் சரி, பூஜை முடிஞ்சாப் பூரணத்திருப்தி.



நடத்தி வைக்கும் பண்டிட்டுக்குத் தட்சிணை கொடுக்கணும் இல்லையா? நாங்களும் எதோ 'சாஸ்த்திரத்துக்கு'த் தட்சணை கொடுப்போம். உடனே அதை அப்படியே எங்ககிட்டே திருப்பித் தந்து, கோயிலுக்குப் போகும்போது அங்கெ உண்டியல்லே சேர்த்துறச் சொல்லிருவாங்க. சாமிக்கும் ஒரு வருமானம் ஆச்சு:-))



இவ்வளோ ஆச்சாரமா இருக்காங்களே, அப்ப மடிசஞ்சியா இருப்பாங்கன்னு நினைச்சுறக்கூடாது. நல்ல நகைச்சுவையோடு ஜாலியாப் பேசுவாங்க. வயசு,காசு பணம், சாதி வித்தியாசம் ஏதும் இல்லாம எல்லாத் தரப்புலேயும் நண்பர்கள் இருக்காங்க.அவுங்களோட ஒரு மருமகள்கூட இங்கத்துப் பொண்ணுதான்.


இப்ப எதுக்கு மாஞ்சுமாஞ்சு கஸ்தூரியைப் பத்திச் சொல்றேனா? அவுங்க இந்த ஊரைவிட்டு வேற ஊருக்குப்போறாங்க. எங்களுக்குத்தான் கொஞ்சம் கை உடைஞ்சதுபோல இருக்கப்போகுது.


பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))



அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?


அடுத்த வாரம்: மீனாட்சியம்மா


நன்றி: தமிழோவியம்

Wednesday, September 27, 2006

ரெடிமேட் பகுதி 15


இருவத்திரண்டு விதமான தைய்யல். விதவிதமா தைக்கலேன்னாலும் அது என்னதான் செய்யுதுன்னு பார்த்துறணுமில்லையா?


ஒண்ணொண்ணா ஆரம்பிச்சேன். பூ, பட்டர்ப்ளை. முக்கோணம், பாம்பு ன்னுஒரே துணியிலே கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு ஓட்டுனதுலே என்ன டிசைன், எப்படி இருக்குங்கறது புரிஞ்சுபோச்சு. நல்லா இருக்குன்ற கணக்குலே பார்த்தா ஒரு பத்துதான் தேறும். ஜெகஜ்ஜால கில்லாடிங்க.ஒரேதா 22ன்னு கணக்கு காமிச்சிட்டாங்க.


இதுலே ரெட்டை ஊசிக்கூட இருக்கு. அதைப் போட்டுத் தைச்சா ரெண்டு வெவ்வேற கலர் நூல்களைச் சேர்த்துஒரே சமயத்துலே டிஸைன் செஞ்சுறலாம். நமக்குத் தெரிஞ்ச ஒரே கலர்ன்னு கறுப்பு & சிகப்பைச் சேர்த்துத் தைச்சுப் பார்த்தேன். அட்டகாசமா இருந்துச்சுன்னு சொல்லமுடியாது. பரவாயில்லாம இருந்துச்சு. இவ்வளவு 'நுணுக்கங்கள்' படிச்சபிறகு ச்சும்மா இருக்கலாமோ?


மேசை விரிப்புகள் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டேன். மகள் உடுப்புலே தேவை இருக்கோ இல்லியோ, ஒரு வரிசை டிஸைன் கட்டாயமாப் போச்சு. மகளும் மூணு வயசானதும் ப்ளே ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சாள். குழந்தையைக் பள்ளிக்கூடம் கொண்டு போக, கொண்டுவர ன்னு யாராவது ஒருத்தர் பாக்டரியிலே இருந்து உதவிக்கு வந்துருவாங்க.


இந்த ராஜபோக வாழ்க்கையை விட்டுட்டு இங்கே நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம். ராஜபோகம் 'மிஸ்'ஸாகப் போகுதுன்னு அப்பத் தெரியலை. அங்கிருந்து அனுப்புன வீட்டுச்சாமான்களும் வந்து சேர்ந்துச்சு. மெஷினை மறுபடி ஸ்டேண்டுலேபொருத்தித் தைக்கலாமுன்னு பார்த்தா............ அது சுத்தவே மாட்டேங்குது. இங்கே ரிப்பேர் செய்வாங்களான்னும் தெரியலை. ஒருவழியா விசாரிச்சு, அங்கே கொண்டு போனோம். சாமான்கள் இடம் மாறும்போது கீழே போட்டுருக்காங்கபோல. ரிப்பேர் செஞ்சுறலாம். அதுக்கு இவ்வளோ செலவாகுமுன்னு சொன்னாங்க பாருங்க, நான் மயக்கம் போட்டுவிழாத குறை. இந்த மெஷினோட விலையிலே சரி பாதி. இங்கே எல்லாத்துக்கும் இப்படி கொள்ளை விலைன்றது அப்பத்தான் உறைக்குது. சம்பளமும் அதிகமாத்தானே இருக்கு. அப்ப 'தானிக்கும் தீனிக்கும் சரி போயிந்தி'!!!


பைத்தியம் விலக வைத்தியம் செய்யணும்தானே? அப்பச் செலவைப் பத்தி யோசிக்க முடியுமா? ரெண்டு வாரத்துலே ரிப்பேர் செஞ்சது வீட்டுக்கு வந்துருச்சு. தைக்குதுதான். ஆனா.......... என்னவோ சரியில்லைன்னு ஒரு தோணல். ரொம்பக் கவலைப்பட நேரம் இல்லை. வீட்டுவேலைக்கு உதவின்னு யாரும் இல்லை. எல்லாம் நாமே. 'சம்மர்'ன்னு நாடே கொண்டாடுது,நமக்கோ பயங்கரக்குளிர். நாப்பதுலே இருந்து 18க்கு வந்திருக்கோம். கைகால் விறைச்சுப்போகுது, ஹீட்டருக்கு முன்னாலேயே உக்கார்ந்திருக்கோம். இதுலே தைய்யலாவது மண்ணாவது.


குழந்தைக்கு நாலரை வயசு. இங்கெ அஞ்சாவது பிறந்த நாள் அன்னிக்கே பள்ளிக்கூடத்துலே சேர்த்துறலாம். இன்னும் ஆறுமாசம் இருக்கே. அதுவரை கிண்டர்கார்டன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்னு அதைப் பத்தி விசாரிச்சோம்.பள்ளிக்கூடத்துலே இடம் இல்லையாம். ஆனால் தாயோ தகப்பனோ கூடவே இருந்துக்கறதா இருந்தால் சேர்த்துப்பாங்களாம்.வேக்கன்ஸி வரும்போது ( அஞ்சு வயசு வரவர ஒவ்வொரு புள்ளையா ப்ரைமரி ஸ்கூலுக்குப் போகுமுல்லெ) நம்மபிள்ளைக்கு இடம் கிடைச்சா, அப்பா அம்மா கொண்டு வந்து விட்டுட்டுப் போலாமாம்.


பள்ளிக்கூடம் அவ்வளோ கிட்டக்க இல்லை. கார்லே போனால் ஒரு ஆறு நிமிஷம் ஆகும். இருக்கறதோ ஒரே ஒரு கார். அதை இவர் வேலைக்கு எடுத்துக்கிட்டுப் போயிருவார்.மகளொ ரெண்டுங்கெட்டான். அவளாலே அவ்வளோதூரம் நடக்கமுடியாது. என்னாலெ அவளைத் தூக்கிக்கிட்டும் போக முடியாது. காலையிலே இவரோடு கிளம்பிறலாமுன்னா, எட்டுமணிக்கே எங்களை பள்ளிக்கூட வாசலில் இறக்கிட்டுப் போயிட்டார். ஒம்போது மணி பள்ளிக்கூடத்துக்கு பூட்டுன கதவுக்கு முன்னாலெ குளிருலே நடுங்கிக்கிட்டே உக்கார்ந்திருக்கணும். ஒரே ஒரு நாள் அனுபவமே வாழ்க்கையை வெறுக்கும்படி செஞ்சுருச்சு. 11.30க்கு பள்ளிக்கூடம் முடிஞ்சு அங்கங்கே நின்னு நிதானமா , ரோடு ஓரம் போட்டுவச்சிருக்கற பெஞ்சுங்களை ஒண்ணுவிடாம உக்கார்ந்து பார்த்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு மணி ஆகி இருக்கும்.


அங்கங்கே கடைகளுக்குள்ளெ நுழைஞ்சு எதாவது புதுசா பொம்மை, விளையாட்டுச் சாமான்னு வாங்கிக் கொடுக்கணும்.ஒரு பேக்கரியிலே கேக்குத் துண்டம், லாமிங்டன்னு தீனி. நடக்க வைக்கக் கொடுக்கும் பக்ஷீஸ். காலையில் பள்ளிக்கூடம்போக டாக்ஸி. ("மகளொட கல்வி முக்கியம். டாக்ஸி செலவைப் பார்க்காதே" இது அப்பா!)


இது ஒரு பக்கமுன்னா..... பள்ளிக்கூடத்துலே இன்னொரு கதை. இந்தமாதிரி அம்மாங்க கூடவே இருக்காங்க பாருங்க, அவுங்களுக்குஒரு பேர் இருக்கு. மதர் ஹெல்ப்பர். ரெகுலரா என்ரோல் செஞ்ச பிள்ளைகளுடைய அம்மாக்களும் தினம் ஒருத்தர்மதர் ஹெல்ப்பரா வரணும். அதுக்கு ரோஸ்ட்டர் போட்டு வச்சுருவாங்க. என்னைமாதிரி இடமில்லாத பிள்ளைகளோட அம்மாக்கள் தினமுமே மதர் ஹெல்ப்பரா அங்கெ நிக்கணும். டீச்சருங்க எல்லாம் ராணிகள். நாங்கெல்லாம் சேவகம்.அதுலே என் கேட்டகரி அடியாருக்கு அடியா(ள்)ர்.


இது அரசாங்கம் நடத்துற பாலர்பள்ளி. இலவசம். ஆனா வாரக் கடைசியில் பிள்ளைங்க ஒவ்வொருத்தரா வரிசையில்போய் டீச்சருக்கு முதுகைக் காமிச்சு நிக்கறாங்க. டீச்சர் ஒரு ப்ரவுன் கலர் என்வலப்பைச் சட்டையின் முதுகில் பின் போட்டுக் குத்தி வைக்கிறாங்க. அதுலெ நாம் டொனேஷன் எதாவது போட்டுத் திங்கக்கிழமை கொண்டுபோய்க் கொடுக்கணும். நிர்பந்தம் இல்லை. ஆனா எல்லாரும் கொடுப்போம். அதெ போல தினமும் எதாவது ரெண்டு பழங்கள்ஆரஞ்சோ, ஆப்பிளோ கொண்டு போகணும். அங்கெ ஒரு கூடை இருக்கும். அதுலெ போட்டுறணும்.பத்தரை மணிக்கு அந்தப் பழங்களையெல்லாம் மதர் ஹெல்ப்பர் கழுவித் துண்டங்கள் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் விநியோகிக்கணும். இது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. பசங்க வயத்துக்குள்ளே பழங்கள் போக நல்ல ஏற்பாடு. ஒண்ணைப் பார்த்து இன்னொண்னும் கீழே வீசாமத் தின்னுதே, அதுவரைக்கும் நல்லதுதானே?


ஒரு அறையிலே தரையிலே இருக்கும் விளையாட்டுச் சாமானையெல்லாம் சேகரிச்சு அந்தந்த இடத்துலே ஒழுங்காஅடுக்கிவச்சுட்டுத் தலை நிமிரும்போது இன்னொரு பிள்ளை ஓடிவந்து எல்லாத்தையும் டமடமன்னு தள்ளி வீசி எறிஞ்சுட்டுப் போகும். அதையெல்லாம் மறுபடி அடுக்கணும். நாம அடுக்கி முடிச்சது எப்படித்தான் இந்தப் புள்ளைகளுக்குத் தெரியுதோ,இன்னொண்ணு ஓடிவரும் அதையெல்லாம் தள்ளறதுக்குன்னே. பல்லைக் கடிச்சுக்கிட்டு இதையெல்லாம்கூடச் செஞ்சுறலாம்,ஆனா முகத்தை புன்சிரிப்பா வச்சுக்கிட்டே இருக்கணுமே அதுதான் படா பேஜார். இன்னொருத்தர் பிள்ளைங்ககிட்டே கோபம் காட்ட முடியுமா?


உள்ளெ இந்த கலாட்டான்னா, வெளியே மணல் போட்டு வச்சுருக்கற இடத்துலே விளையாடற பிள்ளைங்களுக்குத் தலை, மூஞ்சு வாயெல்லாம் மணல். வெள்ளைக்காரப் பசங்களுக்கு முடி கொஞ்சம் மெல்லிசா இருக்கு. அவ்வளோ அடர்த்திஇல்லை. ச்சின்னமுடி வேற. மணல் பட்டாலும் தலையை ஒரு உதறு உதறுனா முக்காவாசி கீழே விழுந்துரும்.நம்ம பசங்களுக்கு திக்கான முடியிலெ மணல் மாட்டிக்கிட்டு ஒரே நறநற. தினம் ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டுனதுலேமுடி சரியாக் காயாம ஜுரம், மூக்கு ஒழுகறது, இருமல்னு அது ஒரு கஷ்டம். இந்த அதிகப்படி வேலைகளாலெ நானே துவண்டு போயிட்டேன்.


ரெண்டு வாரம் இப்படியே போச்சு. ரெண்டாவது வாரக் கடைசி நாளில் ஒரு பையன் ( பேர் ஜோஷுவா) மகள் தலையிலே மணலைக் கொட்டுனதுமில்லாமல் அவளை அடிச்சுட்டான். வாழ்க்கையிலே முதல் அடி. அதிர்ந்து போனது மகள் மட்டுமில்லை,நானும்தான். மகளுக்கு அழுகையை நிறுத்தவே முடியலை. சமாதானப் படுத்தியும் தேம்பல் நிற்கவே இல்லை. வீட்டுக்குவந்தும் அழுகைதான், 'பள்ளிக்கூடம் வேணாம் பள்ளிக்கூடம் வேணாம்'னு. மறுநாள் காய்ச்சல் தீ மாதிரி காயுது. இங்கே வீக் எண்டுலே டாக்டர்களைப் பார்க்க முடியாது. எமர்ஜன்ஸி க்ளினிக்னு ஒண்ணு வெள்ளிக்கிழமை சாயந்திரம் அஞ்சு முதல் திங்கக்கிழமை காலை 9 வரை திறந்திருக்கும். மொத்த ஊருக்கும் இது ஒண்ணுதான். அங்கே போனா மூணுநாலுமணி நேரம் காத்திருப்பு எல்லாம் சர்வ சாதாரணம். அங்கே போய் அரைநாள் இருந்து மருந்து வாங்கிக்கிட்டு வந்தோம். அது என்னமோ தெரிலைங்க, இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் வீக் எண்டுதான் உடம்பு சுகமில்லாப் போகுது. ஆரம்பக் காலங்களில் ஏறக்குறைய ஒவ்வொரு வீக் எண்டும் இங்கே போயிருக்கோமுன்னா பாருங்க.


திங்கள் கிழமை வந்துச்சு. நாங்க பள்ளிக்கூடத்துக்குப் போகலை. இன்னும் நாலு மாசத்துலே ரெகுலர் ஸ்கூலுக்கேப் போனாப் போதுமுன்னு முடிவாச்சு. புதன்கிழமை வாக்குலெ பள்ளிக்கூடத்துலே இருந்து போன் போட்டுக் கேட்டாங்க,ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரலைன்னு. குழந்தைக்குப் பிடிக்கலை. இனிமே வரமாட்டோமுன்னு சொன்னேன். நாங்க பார்த்துக்கறொம், நீங்க கூடவே இருக்க வேணாமுன்னு சொன்னாங்கதான். ஆனா ......... எனக்கு விருப்பம் இல்லை.


இந்த நாட்டுலே பெத்தவங்களே குழந்தையை அடிக்க உரிமை இல்லை. அது ஒரு க்ரைம். மத்தவங்கஅடிக்கலாமா? ஊரார்கிட்டே அடி வாங்கவா பிள்ளையைப் பெத்துருக்கோம்?


இப்ப எனக்கு இருக்கற மெச்சூரிட்டி(???) அப்ப இல்லேன்றதும் ஒரு காரணம்.

Sunday, September 24, 2006

ஆண்டு நிறைவு(கள்)




இங்கே நம்ம ஊர்லே இருக்கற கடைகள், சூப்பர் மார்கெட் உள்பட எப்பப் பார்த்தாலும்' Birthday Sale'ன்னு போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஆன்னா ஊன்னா இவுங்களுக்கு 'பர்த் டே' வந்துருமே. 'உண்மையான சேல் தானா?'ன்னு பார்க்கணும்னு சொல்வேன்.


தராளப் பிரபுங்களைப்போல 99 செண்ட்ன்னு விலை போட்டு வச்சுருப்பாங்க. ஒரு செண்டு காசையெல்லாம் தூக்கியே பலவருஷமாச்சு. அஞ்சு செண்ட் தான் ஆரம்பம். இப்ப அதையும் தூக்கியாச்சு. தொலையட்டுமுன்னு பார்த்தா....... 'இங்கத்துக் காசெல்லாம் கனம் கூடி இருக்கு.பர்ஸ்லே வச்சாத் தூக்கிக்கிட்டுப் போகமுடியலை'ன்னு சமீபத்துலேதான் கண்டு பிடிச்சாங்க(ளாம்)


தூக்கு அதையும்னு சொல்லியாச்சு. அம்பது, இருவது, பத்து காசுகள் இதையெல்லாம் வேற ரூபத்துலே கனம் குறைச்சுப் பண்ணியாச்சு. பழைய காசுகள் அடுத்த மாசத்தோட அம்பேல். சீக்கிரம் அதையெல்லாம்செலவு பண்ணி (தொலைச்சு)ருங்கன்னு டிவியிலே வந்து தினம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.


என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்?........ஆங்..... 99 செண்ட். மக்களுக்கும் தெரியும், கடைக்காரர்களுக்கும் தெரியும் எல்லாத்தையும் ஸ்விஸ் ரவுண்டப் செஞ்சுருவாங்கன்னு. இன்னும் எதுக்காக 1.94, 3.36 , 7.98ன்னு பிலிம் காட்டுறாங்க?


போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு இப்ப போஸ்ட் ஆபீஸுலே ஒரு தகராறு. உள்ளூர் மெயிலுக்கு 45 காசுஸ்டாம்ப். பத்து ஸ்டாம்ப் இருக்கற புக் வாங்கிட்டோமுன்னா வேலை முடிஞ்சது. வேணுங்கும்போது ஒண்ணொண்ணா எடுத்துக்கலாம். சரிப்பா, இப்ப ஒரே ஒரு லெட்டர் அனுப்பணுமுன்னா 45 காசு ஸ்டாம்பை எப்படி வாங்குறது? அதான் அஞ்சு காசு இப்ப புழக்கத்தில் இல்லையே? குறைஞ்சது ரெண்டு ஸ்டாம்பு வாங்கிக்கணும்.ஆனா எனக்கு ஒண்ணு போதும். அப்ப எப்படி?
50 காசு நான் கொடுக்கணுமா? அஞ்சு காசு நான் ஏன் கூடுதலாக் கொடுக்கணும்? நேர்த்திக்கடனா? இல்லே 45 காசு ஸ்டாம்புக்கு 40 காசு வாங்கிக்குவாங்களா? அஞ்சு காசு கம்மியா ஏன் வாங்கிக்கணும்? கணக்குலே உதைக்காதா?


தலையைப் பிச்சுக்கிட்டு இருக்கு அரசாங்கமும் தபால்துறையும்:-)


அவுங்க ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை 'பர்த் டே'யைப் பார்க்கலாம்.
வருசத்துக்கொரு தடவை எத்தனையோ விஷயம் வருது போகுது. வாலாயமா வர்றதுன்றதாலே அதை அப்படியேவிட்டுற முடியுதா? இந்தப் பதிவுலே போட்டுருக்கற படம்கூட இப்படி வருசாவருசம் வந்து போறதுதான். ஆனா ஒவ்வொரு வருசமும் ஒரு அழகு, ஒரு அனுபவம்,ஒரு வளர்ச்சி. இல்லீங்களா?


கடைகண்ணிகளுக்கு மட்டும்தான் பொறந்தநாள் வருமா? மனுஷாளுக்கு வராதா? மத்த ஜீவராசிகளுக்கு வராதா? இல்லே பதிவுகளுக்குத்தான் வராதா?
வருமுல்லே? அப்படி இன்னிக்கு (எனக்குத் தெரிஞ்சவரை)ஒரு பதிவுக்கு பிறந்தநாள் வந்துருக்கு. ரெண்டு வயசு முடிஞ்சுருக்கு. தட்டுத்தடுமாறி நடைபழகிக்கிட்டு இருக்கும் இதுக்கு உங்கள் வழக்கமான ஆதரவு எப்பவும் வேணும்.நிறைய நண்பர்களையும், தம்பி தங்கைகளையும், ஒரு அண்ணனையும் கூட இதுமூலமா சம்பாரிச்சு இருக்கேன்னா பாருங்களேன்.


அதெப்படி 'டாண்'னு இதெல்லாம் நினைவு இருக்கு?


ஏன் இல்லாம? இன்னிக்குத்தானே என் மாமியார் 50+ வருசங்களுக்கு முன்னே வெளியிட்ட ஒரு பதிவின் பிறந்தநாளும் வருது.

இந்தப் பதிவை என் இனிய மறுபாதிக்கு சமர்ப்பிகின்றேன்.


அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

Friday, September 22, 2006

கொலுவுக்கான அழைப்பு




"கொலு வைக்கறது எப்படி? "


"இது தெரியாதா என்ன? பொம்மைகளை கொலுப்படியில் அடுக்கி வைக்கணும்."


"அந்தப் படிகளை எப்படிக் கட்டப்போறே?"


"இது தெரியாதா என்ன? வழக்கமான டெக்னிக்தான். வீட்டுலே இருக்கற வீடியோ கேஸட்டுகள் பாக்ஸ் எங்கே இருக்குன்னு பார்த்து இங்கே கொண்டுவந்து வையுங்க."


"ம்........வச்சாச்சு."


"எத்தனை படிகள் வைக்கலாம்? ஒரு அஞ்சு போதும். என்ன சொல்றீங்க?"


"அஞ்சு படி போதுமா? சரி. அஞ்சு."


"உங்க இஷ்டப்படியே அஞ்சு படி வச்சுக்கலாம்."

"ஹா..........ங்........."

"அதுலே இருந்து கேஸட்டுக்ளை எடுத்து ஒண்ணு மேலே ஒண்ணா அடுக்குங்க. ரெண்டு வரிசை இல்லேன்னா மூணு வரிசை போதும். ஆனா ஒவ்வொரு வரிசையிலும் 15 கேஸட் வச்சிருங்க."


"உயரம் ரொம்பக் குறைச்சலா இருக்கேம்மா. "


"நீங்கதானே அஞ்சு படி போதுமுன்னு சொன்னீங்க."


"நானா....?"


"பின்னே? இப்ப பன்னெண்டு பன்னெண்டா அதே மூணு வரிசை."


"ஆச்சு."


"அடுத்து ஒம்போது ஒம்போதா மூணு"


"கேஸட் பத்தாது போல இருக்கே. இன்னொரு பாக்ஸ் கொண்டு வரவா?"


"உங்க இஷ்டப்படியே கொண்டு வாங்க."


"பயங்கர கனமா இருக்கேம்மா."


"இருக்காதா பின்னே? இப்ப ஆறு ஆறாய் மூணு வரிசை. இப்பக் கடைசிப் படிக்கு மும்மூணாய் மூணு. அஞ்சு படி வந்துருச்சா? போதுமாப் பாருங்க."


"போதும். போதும். தாராளம். மேலே என்ன கலர் துணி விரிக்கப் போற? அந்த ப்ளூ போட்டுறலாமா? "


"ம்ம்ம்ம்ம்ம்ம் போன வருஷம் ப்ளூதான் போட்டேன். இந்த க்ரீம் கலர் நல்லா இருக்கா? "


"நல்லாதான் இருக்கு."


"அப்ப உங்க இஷ்டப்படியே இந்த க்ரீம் கலர்! துணியை ரெட்டையா நீளமா மடிச்சு அப்படியே படிகள் மேலே கவர் பண்ணி உள்ளுக்குள்ளே பின்பக்கமா ஒவ்வொரு வரிசையிலும் செருகிவிடுங்க. சுருக்கம் வரக்கூடாது. ஆச்சா?"



"சைடுலே வெளியே நீட்டாம மடிச்சு ஒரு டேப் போட்டு ஒட்டிறவா?"


"உங்க இஷ்டப்படியே செய்யுங்களேன். என்னைக் கேக்கணுமா என்ன?"


"இப்பச் சரியா இருக்கான்னு பாரு."


"ம்ம்ம்ம் அந்த பொம்மைகளையெல்லாம் எடுங்க. இப்படி என் கைக்கு எட்டுற தூரத்திலே வச்சிருங்க."


"எதாவது கணக்கு இருக்கா எப்படி அடுக்கணுமுன்னு?"


"அதெல்லாம் பிரச்சனை இல்லை. அவள் விகடன்லெ அனுராதா ரமணன் கொலு பொம்மைகளைஎப்படி அடுக்கணுமுன்னு விவரிச்சு இருக்காங்களாம்."


"அப்ப அதே மாதிரி அடுக்கினாப் போதும்,இல்லையா?"


"ஏங்க இது நம்ம வீட்டுக் கொலு இல்லையா? நமக்குத் தெரிஞ்ச மாதிரி அடுக்கினாப் போச்சு."


"சரி. முதல் படியிலே என்ன வைக்கலாம்? "


"சாஸ்த்திரப்படி மரப்பாச்சி பெருமாளும் தாயாரும். அந்தச் சின்னக் கலசம், ரெண்டு பக்கமும் குத்துவிளக்கை வச்சுறலாம். அசங்காம எடுத்து வச்சு ப்ளக் போட்டு ரெடியா வச்சுருங்க."


"வச்சாச்சு."


"அடுத்தபடியில் பிள்ளையார்களை வச்சுறலாம்."


"கிருஷ்ணனை வைக்கலையா? "


"பிள்ளையார்கிருஷ்ணரை வச்சாப் போறது. ரெண்டு பேரும் சேர்ந்து அழகா இருக்குமே."


"மூணாவது படிக்கு?"


"யானைகள்தான்."


"நாலாவதோ? "


"கொஞ்சம் ச்சின்ன மிருகங்கள் வைக்கலாமுன்னு பார்க்கறேன். அந்த ச்சின்ன சைஸ் யானைகளையெல்லாம் தாங்க."


"அப்ப அஞ்சாவதுக்கும் யானை எதாவது வைக்கப் போறியா?"

"ஆமாமாம். அந்த குட்டியூண்டு சைஸ் யானகளையே வச்சுக்கலாம். "

"என்ன தீம் இந்த வருஷம்?"


"எல்லாம் யானைத் தீம்தான். அதான் நமக்கு ஆகி வருது."

"இங்கே பாருங்க, நாம் கொலுவுலே என்ன பொம்மை வைக்கிறோமுன்றது முக்கியம் இல்லை. எவ்வளோ ஆத்மார்த்தமா வைக்கிறோமுன்னுதான் பார்க்கணும். அதுவுமில்லாம சிரத்தையா மனசார கடவுளைக் கும்பிடணும், இந்த உலகம், அதிலுள்ள உயிர்கள் எல்லாம் நல்லா வளமா இருக்கணுமுன்னு."


"தினம் நைவேத்தியம் உண்டா இல்லையா?"


"ஏன் இல்லாம? பழங்கள்தான். தினம் ஒரு வகை. ஹெல்தி ஃபுட்தான் நல்லது."

"அப்ப ஸ்பெஷலா ஒண்ணுமே இல்லையா? "

"கொலுவுக்கு ஸ்பெஷல் பதிவு உண்டு. நம்ம வலை நட்புகளையெல்லாம் அழைக்கணுமே.இவ்வளோ தூரத்துலே வேற இருக்கோம். இண்டெர்நெட் யுகமாச்சே. பேசாம வாய்ஸ் மெயிலில் பாட்டுப் பாடி அனுப்பச் சொல்லணும். இவ்வளோ கேக்கறீங்களே,இப்படி ஒரு நிமிஷம் உக்காருங்க. சாமிக்கு ஆரத்தி எடுத்துறலாம். இப்ப நீங்க ஒருபாட்டுப்பாடி கொலுவை ஆரம்பிச்சு வையுங்களேன்."


"எனக்கு ஒரே ஒரு பாட்டுதான் தெரியும். அதையே பாடலாமா? "


"தாராளமா.........."

"எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச்சொல்லி.....
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்"


" நல்ல பாட்டுதான். நல்லாவும் பாடுனீங்க"

"அல்லான்னு சொல்லிட்டேனே பரவாயில்லையா? "

"கடவுளுக்கு பேதமே கிடையாது. தப்பே இல்லை."

இன்னிக்கு அமாவசைக்கு ரெண்டு பொம்மை எடுத்து வைக்கலாமுன்னு ஆரம்பிச்சு, கொலுவை அடுக்கியே வச்சாச்சு.

அவுங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்துட்டு பாட்டுப் பாடி அனுப்பிவிடுங்க.பாடத்தெரியலை இல்லை முடியலைன்னா வருகைப் பட்டியலில்பதிஞ்சு வையுங்க.

எத்தனைபேர் வராங்கன்னு தெரிஞ்சால்தான் சுண்டலுக்கு ஏற்பாடு செய்ய முடியும்:-)

Wednesday, September 20, 2006

எவ்ரிடே மனிதர்கள் -17 ஷஃபி

ஆட்டோமாடிக் லாக் பூட்டிக்கிச்சு. படி இறங்குற சமயத்துலே இஸ்த்திரி போடக் கொடுத்த துணிகளை எடுத்துக்கிட்டு மேலே வர்றாங்க மணிகண்டனோட அம்மா. கையோட வாங்கி வச்சுட்டுப் போயிறலாமுன்னுக் கதவைத் திறக்கறோம்........... அடக் கடவுளே! ஏடாகூடமாப் பூட்டிக்கிச்சோ? திறக்க வரலை(-:


இப்போ என்ன செய்யறதுன்னே புரியலை. வீட்டுச் சொந்தக்காரருக்கு போன் போட்டா, அவர் வீட்டுலே இல்லை.கிளம்புனது கிளம்பியாச்சு. வந்து பார்த்துக்கலாமுன்னு வெளியே போயிட்டோம். கோமளாஸ்லே சாப்பாடு. பக்கத்து பில்டிங்லே போய் மணி ச்சேஞ்ச் வசதி இருக்கான்னு பார்த்துக்கிட்டு இருந்தப்ப, அங்கே இருந்த ஒரு கடைக்காரர் பணம் மாத்திக் கொடுக்கறேன்னு சொல்லி, பையனை அனுப்பிவிட்டிருந்தார். வர்றவரைக்கும் எதோ பேசிக்கிட்டு இருந்தப்பத்தான், கொஞ்சம் விஸிட்டிங் கார்டு ப்ரிண்ட் செஞ்சுக்கணுமேன்ற நினைவு வந்துச்சு. கடைக்காரரும், அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் செஞ்சு தருவாருன்னு அவருக்கு போன் போட்டார் .. ... பத்து நிமிஷம் வெயிட் செஞ்சா அவர் வந்துருவாருன்னதும் சரின்னோம்.வீட்டுக்குத் திரும்பலாமுன்னா பூட்டைத்தான் திறக்க முடியலையே. அங்கே இருந்தே மறுபடியும் வீட்டு ஓனரைப் போன்லே பிடிச்சு விஷயத்தைச் சொன்னதும் இதோ கிளம்பி வரேன்னார்.


வீட்டைத் திறக்கறது எல்லாத்தைவிடவும் முக்கியமாச்சேன்னு, கடைக்காரர்கிட்டே எங்க வீட்டு போன் நம்பரைக் கொடுத்துட்டு வீட்டைப் பார்க்க ஓடுனோம். நாங்க போகவும், ஓனர் வரவும் சரியா இருந்துச்சு. அவர் என்னவோ செஞ்சு ஃபோர்ஸ் பண்ணிக் கதவைத் திறந்துட்டார். இப்பப் பூட்டைச் சரி செய்யணுமே....... அதுக்கு மல்லாடிக்கிட்டு இருந்தார்.


அப்பத்தான் கடைக்காரர் சொன்ன நபர்கிட்டே இருந்து போன் வருது. விலாசம் சொன்னா நேரில் வரேன்னார்.எங்களுக்கோ விலாசம் எல்லாம் சொல்ல விருப்பம் இல்லை. ப்ளாட் நம்பர் எல்லாம் சொல்லாம, கீழ்தளத்துலே இருக்கற ப்ரவுஸிங் செண்ட்டருக்கு வந்துறச் சொன்னோம். அப்படி வந்தவர்தான் ஷஃபி.


நானும் தோழியுமா வியாபார விஷயமா அப்ப இந்தியாவுக்கு வந்திருந்தோம். விஸிட் கார்டு அடிச்சுக்கறதுலே இருந்து,இங்கே தொடங்கப்போற கடைக்குச் சாமான்கள் வாங்கறதுன்னு ஏகப்பட்ட வேலைகள் இருந்துச்சு. கையோடு கொண்டுவந்துருந்த ஃபைலில் இருந்து நிறைய சாம்பிள் கார்டுகளைக் காமிச்சார் ஷஃபி. எங்க மனசுலே இருந்த டிஸைனைச் சொல்லி வரைஞ்சு காமிச்சு ஒரு மாதிரி புரிய வச்சோம். அதுக்கேத்த மாதிரி செஞ்சுகிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனார்.


"நீங்க என்ன ஜாதி மேடம்?"


சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. தோழிக்கோ அவ்வளவாத் தமிழ் தெரியாது.


" ஆமாம். தமிழ் நாட்டுலே ஜாதி என்ன கேட்டா 7 வருசம் ஜெயில்னு எப்பவோ சொன்னாங்களே....... அதுஇன்னும் அமுலில் இருக்கா?"


" என்ன மேடம் நீங்க? ஹிஹி..... ச்சும்மாத்தான் கேட்டேன் மேடம்"


" ஓஓஓஓஓ அப்படியா...? நான் மனுஷ ஜாதி"


" சரியாச் சொன்னீங்க மேடம். நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு நான் எதிர் பார்த்தேன். அதுக்குத்தான் இப்படிக் கேட்டேன் மேடம். நானும் உங்களைப் போலத்தான் மேடம். ஜாதி என்னங்க ஜாதி? மனுசங்க எல்லாம் ஒண்ணுதான்னு இருப்பேன் மேடம்"


இதுதான் ஷஃபி. இடத்துக்குத் தகுந்தாப்போல பேச்சு. இப்படி இல்லேன்னா பிழைக்கவும் முடியாதுதான். ஆனா நொடிக்குநொடி இந்த 'மேடம்' தான் பாடாய்ப் படுத்துது. இங்கே கடைகண்ணிகளிலும், மத்த இடங்களிலும் இதே ரோதனைதான்.மரியாதையாப் பேசறதுக்காக இந்த 'மேடம்' வருது போல.


கார்டு ரெடியாம். சாம்பிள் கொண்டு வரேன்னதும் நாங்க இங்கே ஒரு ரெஸ்டாரண்டுக்கு வரச்சொல்லிட்டோம். பிஸினெஸ் டின்னர்? தங்கி இருந்த இடத்துக்கு யாரையும் வரவழைச்சுப் பேச வேணாமுன்னு ஒரு முடிவு. டிஸைன் நல்லாத்தான் இருந்துச்சு. அதையே ப்ரிண்ட் செய்யச் சொல்லியாச்சு. இன்னும் எங்களுக்குத் தேவையான சாமான்களுக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னார். எங்களுக்கு நல்ல டிஸ்கவுண்டிலே சாமான்கள் இங்கே இருந்து வாங்கிக்கவும், அதையெல்லாம் அவுங்களே ஷிப்பிங் பண்ண ஏற்பாடு இருக்குன்னு சொன்னோம்.


"அவுங்களுக்கு என்னை இண்ட்ரட்யூஸ் பண்ணிருங்க மேடம். நான் உங்களுக்கு ஏஜண்டா இருக்கேன். எல்லா ஆர்டர்களையும் சரிபார்த்து அனுப்பி வச்சுருவேன்"


" அப்படி ஒருத்தர் வேணும்தான். அங்கே கடை எப்படிப் போகுதுன்னு பார்த்துக்கிட்டுச் சொல்றேன்"


" துணிமணிகளுக்கு எனக்குத் தெரிஞ்ச சேட் இருக்கார் மேடம். அவர் மூலமா வாங்கலாமா?"


" வேணாங்க. எங்களுக்கு எக்ஸ்க்ளூஸிவா புடவைகள் அனுப்ப ஒரு ஏஜண்ட் ஏற்கெனவே இருக்காங்க"


"நீங்க ரெண்டு பேரும் தைரியமா இப்படி பிஸினெஸ் தொடங்கறீங்க பாருங்க இது நல்லாப் போகும் மேடம். நீங்க இந்து, அவுங்க( என் தோழி)கிறிஸ்டியன், நானு முஸ்லீம். இப்படி எல்லா மதமும் சேர்ந்து ஒத்துமையா ஒரு காரியம் செய்யறப்ப அது எப்பவும் ஜெயிக்கும் மேடம்"


நாங்க சந்திச்ச பலரில், சிலர் கேட்டதுபோல இவரும் 'இங்கே இந்த நாட்டுக்கு வர நாங்க உதவி செய்ய முடியுமா'ன்னு கேட்டார். எல்லாருக்கும் சொன்ன பதிலையே இவருக்கும் சொல்லி வச்சோம், நெட்லே எல்லா விவரமும் இருக்கு. பார்த்து அப்ளை செய்யுங்கன்னு.


ஷஃபிக்கு ரெண்டு பெண் குழந்தைகளாம். எட்டும் அஞ்சும் வயசாம். தங்கச்சிங்க ரெண்டு பேருக்கு இன்னும் கல்யாணம் முடியலையாம். அதுக்காக வேலைக்கு மிடில் ஈஸ்ட் போகலாமுன்னு ஒரு எண்ணம் இருக்காம். அப்பாஅம்மா சம்மதிக்கலையாம். பிள்ளைங்களை விட்டுட்டுப்போக மனசு வரலையாம்.


பேச்சுவாக்குலே இங்கே ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க ஐடியா இருக்கறதாச் சொல்லவும், 'என் மனைவி நல்லா சமைப்பாங்க மேடம். நானும் சமைப்பேன். ஆனால் அவுங்க போல வராது மேடம். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குவந்து ஒருதடவை சாப்பிட்டுப் பார்க்கணும் மேடம்'ன்னு ஆரம்பிச்சுட்டார்.

எங்களுக்கு இந்த மாதிரி யார் வீட்டுக்கு போகவும்,சாப்பிடவும் விருப்பம் இல்லாததாலெ சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்கறதே கஷ்டமாயிருச்சு.
சிலநாட்கள் சில பொருட்களை மாதிரிக்காகக் கொண்டு வந்து காமிச்சார்தான். அதுலே ஒண்ணும் சரியான தரமா இல்லைன்றதுதான் விஷயம். கண்ட சாமான்களையும் வாங்கிக்கற எண்ணம் எங்களுக்கு இல்லை. இதுபோல ஒவ்வொரு சந்திப்பும் வீட்டுக்கு வெளியிலேயே இருந்துச்சு. அப்பப்ப அவருடைய சேவைக்குப் பணம் கொடுத்துக்கிட்டே வந்தோம். ஒவ்வொரு முறையும் வீட்டுக்குச் சாப்பிட வரணுமுன்னு வற்புறுத்திக்கிட்டே இருந்தார்.


அவர் மூலமா வாங்குன ஒருசில சாமான்களுக்குப் ஃபைனல் பேமெண்ட் கொடுக்க வேண்டி இருந்துச்சு. போன்லே எங்களைக் கூப்பிட்டு வரேன்னு சொன்னார். நாங்க தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குக் கீழே நிறைய கடைகண்ணிகள் இருந்துச்சு.அங்கே ஒரு இடத்துலே சந்திக்கறோமுன்னு சொல்லிட்டுக் கீழே போறதுக்காக ப்ளாட்டுக் கதவைத் திறந்தால்.........கதவுக்கு வெளியிலே நின்னுக்கிட்டு இருக்கார் ஷஃபி. தூக்கிவாரிப் போட்டுச்சு எனக்கு.
இதுவரை நாங்க எந்த ப்ளாட்டுலே இருக்கோமுன்னு அவருக்குச் சொல்லவே இல்லை. போன் நம்பர் மட்டும்தான் கொடுத்துருந்தோம். ஒருவேளை அதை வச்சு அட்ரஸை, தொலைபேசி விசாரணையில் தெரிஞ்சுகிட்டு இருக்கலாம்.ஆனால் எனக்கென்னமோ ரொம்ப 'நோஸி'யா இருக்கறதாப் பட்டுச்சு. கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துட்டு அவரை அனுப்பி வச்சோம். அதுக்கப்புறம் அவரோடு எந்தவிதமாவும் பேசவும் மனசுக்குப் பிடிக்கலை. அவரும் விடாம பலமுறை ஃபோன் பண்ணிக் கேட்டுக்கிட்டே இருந்தார். எங்களை வழி அனுப்ப ஏர்ப்போர்ட்டுக்கு வ்ர்றதாவும் சொல்லிக்கிட்டே இருந்தார்.


எதாவது செஞ்சு, வாழ்க்கையில் ஜெயிக்கணுங்கற வெறி நம்ம ஷஃபிக்கு இருந்துச்சு. இவர்கிட்டே எங்களுக்குப் பிடிச்சவிஷயம் நேரம் தவறாமை. சொன்ன நேரத்துக்குச் சரியா வந்துருவார். இன்னொரு விஷயம் எப்பவும் சிரிச்ச முகம்.கடைசியாச் சொல்லணுமுன்னா மரியாதையான பேச்சு.
பேசிப்பேசி ஆளுங்களை நைச்சியமா கன்வின்ஸ் பண்ணறதுலே ஷஃபி மாதிரி வேற யாரையும் நான் இதுவரை பார்த்ததில்லை.வெறும் 500 விஸிட்டிங் கார்டு கேட்ட எங்களை அஞ்சாயிரம் கார்டு வாங்கிக்கச் சம்மதிக்க வச்சதைச் சொல்லணும்!


அடுத்த வாரம்: கஸ்தூரி


நன்றி: தமிழோவியம்

Monday, September 18, 2006

ரெடிமேட் பகுதி 14

டிங்..... டிங்.....னு ரேடியோவிலே சத்தம் வந்தவுடனே தெரிஞ்சு போகும், மரண அறிவிப்பு வரப்போகுதுன்னு.டவுன்லே இருக்கற ஜனங்களைத்தவிர ஒவ்வொரு டவுனைச் சுத்தி இருக்கற 18 பட்டி மக்களும், இன்னும் சொல்லப்போனா நாடு முழுக்க இந்த ரேடியோவைத்தான் நம்பி இருக்கு.மக்களுக்கு எதாச்சும் சொல்லணுமுன்னா ரேடியோவிலே சொன்னாப் போதும்.


புயல் எச்சரிக்கை, நாட்டு நடப்பு, மரண அறிவித்தல் எல்லாமே இப்படித்தான். கடைகண்ணி, ஆஃபீஸ், தொழிற்சாலைன்னு எங்கேயும் மெலிசான குரல்லே ரேடியோ பாடிக்கிட்டும் சொல்லிக்கிட்டும் இருக்கும். 24 மணி நேர ரேடியோ. இதுலே ஹிந்திக்குத் தனிச்சானல். இந்த ஹிந்திப் பாட்டுகளுக்கிடையிலே திடீர்னு ஒரு தமிழோ, தெலுங்கோ, மலையாளமோ இல்லேன்னா எதாவது ஒரு இந்திய மொழியிலோ ஒரு பாட்டு வரும். எப்போ, என்னைக்குன்னு தெரியாது. இதெல்லாம் நம்மைமாதிரி ஆளுகளுக்கு ஒரு போனஸ்.


மரண அறிவிப்புலே, யார் இறந்தாங்க, அவுங்க யார்யாருக்கு என்ன வகையிலே சொந்தம், எப்ப சவ அடக்கம்,எங்கே எத்தனை மணிக்குன்னு விஸ்தாரமாச் சொல்வாங்க. பலருக்கும் சொந்தங்கள் கனடா, ஆஸ்தராலியான்னு இருக்கறதாலே சவ அடக்கம் பொதுவா ஒரு வாரம் தள்ளியே நடக்கும். அதுவரை?


இறந்தவங்க உடல், சவக்கிடங்குலே வச்சிருப்பாங்க. மரணம் நடந்த வீட்டிலே சவ அடக்கம்வரை அடுப்புப் பத்த வைக்கக்கூடாதுன்னு ஒரு சாஸ்த்திரம் இருக்காமே. அதனால் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இருந்துசமையல் செய்து கொண்டு போய்க் கொடுக்கறது வழக்கம். தினமும் சாயந்திரம் அவுங்கவுங்க மதப் பழக்கத்தை அனுசரிச்சு கீதையோ, பைபிளோ, குரானோ படிப்பாங்க.அப்பவும் அக்கம்பக்க மனிதர்கள் நண்பர்கள்ன்னு ஒருகூட்டம் போய்வரும்.


சவ அடக்கநாள் வந்துருச்சுன்னா, ரேடியோவில் சொன்ன நேரத்துக்கு மறுபடி எல்லாரும் போவாங்க. அங்கே இறந்தவர் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டுலெ நமக்குப் பழக்கமான ஒப்பாரி வகைகளொ,தாரை தப்பட்டை,சேகண்டி, சங்கோ இல்லாம அமைதியாத்தான் இருக்கும். முக்கியமா எல்லாரும் நல்ல நல்லஆடை ஆபரணங்களோடு வந்திருப்பாங்க. இது இறந்தவருக்குச் செய்யும் மரியாதைன்னு அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.


இப்படித்தான் ஒரு சாவு வீட்டுக்குப் போயிருந்தப்ப, இறந்தவரின் கடைசி மகள் போட்டுருந்த உடுப்பு டிஸைன் கண்ணுலே பட்டது. எப்பவும் புதுப்புது டிஸைன்களைப் பத்தியே சிந்திச்சுக்கிட்டு இருக்கற எனக்கு எங்கே போனாலும் இந்தக் கண் அலைச்சலை நிறுத்த முடியறதில்லை. சவப்பெட்டிக்குப் பக்கத்துலே உக்கார்ந்து அப்பாவையே பார்த்துக்கிட்டு இருக்கற பொண்ணை நான் பார்த்துக்கிட்டே இருக்கேன். அப்புறம்?......


ரெண்டேநாளுலே அதே டிசைன் உடுப்பு மகள் போட்டுக்கிட்டு இருந்தாள்!


இப்படி தினம் தைக்கிற உடுப்பு அன்னிக்குப் போடறதோட சரி. இன்னொரு நாளுக்குத்தான் வேற புதுசு வந்துருதே.நம்ம குழந்தையைக் குளிப்பாட்ட வந்துக்கிட்டு இருந்த தாதியம்மாவுக்கு ஒரு பேத்தி பிறந்துச்சு. என் மகளைவிடமூணு மாசம் ச்சின்னது. அந்தப் பாப்பாவுக்கு உடுப்புகளைக் கொண்டு போயிருவாங்க தாதியம்மா. அந்த ஊர்லே அப்ப கேரளத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் குடும்பத்தோட இருந்தார். அவரோட மனைவி கீதாவும் நல்லா தைப்பாங்க. அவுங்க குழந்தை 22 மாசம் பெரியவள். அவளுக்குத் தைக்கும்போது மீதம் வர்ற துணியிலே என் மகளுக்கும் ஒரு ச்சின்ன உடுப்பு தைச்சுக் கொண்டு வந்து கொடுப்பாங்க கீதா. ரெண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி உடுப்போடு விளையாடும்.வீடு முழுக்க இப்படித் துணிகளா இருந்தது அப்ப. அதுக்கப்புறம் ஆறு மாசம் கழிச்சு, கீதா குடும்பம் வேற நாட்டுக்குப் போயிட்டாங்க.


இப்படியே சில வருஷங்கள் போச்சு. இதுக்கு நடுவிலே மெஷீன் கொஞ்சம் தகராறு. அதுக்குப் போட்ட காசையெல்லாம் முதலாக்கியாச்சுதான். நஷ்டம் ஒண்ணும் இல்லை. மெஷீன் இல்லேன்னா கை ஒடைஞ்சதுபோல ஆயிறாதா? அப்ப என் பொழுது போக்கு?


சரியாத் தைக்காத கோபத்தில் மெஷினைக் கழட்டிக் கொண்டுபோய் புல்தரையில் போட்டுருவேன். போறப்ப வர்றப்பக் கோவமா லுக் விட்டுக்கிட்டு இருப்பேன். அதுக்குப் புரிஞ்சதோ என்னவோ........... கொஞ்ச நேரம் கழிச்சு வேற என்னசெய்யறதுன்னு தெரியாம திருப்பிக் கொண்டுவந்து ஸ்டேண்டுலே பூட்டுனா, தெய்வமேன்னு கொஞ்சம் தைக்கும்.இது சாதாரணக் கால் மெஷீந்தான். வேற ஒண்ணு புதுசா வாங்கிக்கலாமுன்னு விசாரிக்க ஆரம்பிச்சேன். பக்கத்துலே ரெண்டாவது ஊர்லே ( 44 மைல் தூரம்) ப்ரதர் சோயிங் மெஷீன் ஏஜண்ட் இருந்தார். இந்த ஊருக்கு அடிக்கடி போய்வர்றதுதான். அங்கெ ஒரு கடையிலே தமிழ் சினிமா வீடியோ டேப் கிடைக்கும். படம் எதாவது அவுங்களுக்கு வந்துச்சுன்னா,அவர் ஃபோன் போட்டுச் சொல்லுவார். இங்கிலீஷ்லே எழுதி இருக்கற படத்தோட பேரைத் தப்பும் தவறுமாப் படிப்பார்.குஜராத்திக்காரர். எப்படியோ அதை(யும்) புரிஞ்சுக்கிட்டு அவ்வளோ தூரம் போய் அதை வாங்கி வருவோம். இப்படி நம்மதமிழ் சினிமாத் தொடர்பு விட்டுப்போகாமக் கட்டிக் காப்பாத்துனோம். அதானே? கலை & கலாச்சாரத்தை அப்படியே விட்டுறமுடியுதா என்ன?


டேபிள் மாடல் மெஷீன்கள்தான் நிறைய வந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு, பழைய ஸ்டைலில் இருக்கற ஸ்டேண்டு மாடல் கிடைக்குமான்னு தேடுனதுலே அப்படி ஒண்ணு கிடைச்சது. 22 விதமான தையல், ஆட்டோமாடிக் பட்டன் ஹோல்,Zigzag தைய்யல்னு அமர்க்களமா இருந்துச்சு. எலெக்ட்ரிக் மெஷின்.


வாங்கிவந்து நம்ம ஸ்டேண்டுலே பூட்டியாச்சு. ஜோரா கஷ்டமே இல்லாம தைக்குது. அப்பப் பழைய மெஷீன்?


ஊசியை மட்டும் கழட்டிட்டு மகளுக்கு விளையாட்டுச் சாமானாக் கொடுத்துட்டேன்!

Saturday, September 16, 2006

சிக்கு புக்கு ரயிலே (பாகம் 2)





ஒரு மணி நேரத்துலே 'ஸ்ப்ரிங் ஃபீல்ட்' ஸ்டேஷன் வந்துச்சு. அஞ்சு நிமிஷம் நிக்குமாம். வெளியே வந்தால் கைக்கு எட்டும் தூரத்துலே வெள்ளிப் பனிமலை. எல்லாரும் 'க்ளிக் க்ளிக் க்ளிக்' இந்தியர் ஒருத்தர்( அநேகமா தென்னாப்பிரிக்காவா இருக்கலாம்) நம்மை படம் எடுக்கவான்னு கேட்டு நம்ம கேமிராவுலே எடுத்து உதவி(?) செஞ்சார். உள்ளெ ஏறிப்பார்த்த பிறகுதான் தெரியுது முக்கியமான விஷயமான 'பேக் ட்ராப்'பைக் கோட்டை விட்டுருக்கார். இந்த ஸ்டேஷனிலே'அந்த ஊர் பேக்கரியிலே இருந்து சுடச்சுட மஃப்பின் வந்துருக்கு. சீக்கிரம் போனா வாங்கலாமு'ன்னு நம்ம ட்ரைவர்/கைடுசொன்னார்.

பைனாப்பிள் & சாக்லேட் மஃப்பின். நல்லாவே இருந்தது.

ச்சின்னச் சின்னதா டன்னல்கள், ப்ரிட்ஜுகள்னு வந்துக்கிட்டு இருந்துச்சு. ஒவ்வொரு இடத்தையும் நம்ம கைடு வர்ணிச்சுக்கிட்டே இருந்தார். ரெயிலில் பெரிய பெரிய கண்ணாடி ஜன்னல்கள், தடை ஏதும் இல்லாம பார்க்க வசதியா இருந்துச்சு. எல்லாமே டபுள் க்ளேஸ்டு. 23 டிகிரியிலே உள்ளெ நல்லா அருமையான கதகதப்பு. வெளியே திறந்தவெளியிலே நின்னு படம் எடுக்கவும், வேடிக்கை பார்க்கவும் ஒரு ஓப்பன் டெக் இருந்துச்சு. மொத்தம்12 பெட்டிங்க. ரெஸ்ட்ரூம்/கழிப்பறைகள் எல்லாம் நீட் & டைடி.


ச்சின்ன ஆறுகள், ஓடைகள்ன்னு கடந்து போய்க்கிட்டு இருக்கோம். ஆள் அரவமே இல்லாத அத்துவானக்காடு. அங்கங்கேசில மாடுகள், ஆடுகள், சில இடங்களிலே குதிரைகள். இவுங்க எல்லாம் தண்ணீர் குடிக்க அங்கங்கே தண்ணீர்தொட்டி கட்டி வச்சிருக்காங்க. தண்ணீர் தீரத்தீர தானே நிரப்பிக்கும் வகைகள். நல்ல விஷயம்.


ஆர்தர்ஸ்பாஸ் என்ற ஸ்டேஷன் வந்துச்சு. இது கடல் மட்டத்துலே இருந்து 737 மீட்டர் உயரத்துலே இருக்கு. "இங்கே இருந்து ஒரு மலையைக் குடைஞ்ச டன்னல் வழியா ரெயில் போகப்போகுது. டன்னல் நீளம் எட்டரை கிலோ மீட்டர்.'வியூயிங் டெக்' கை மூடிருவோம். ( இல்லேன்னாமட்டும் குகைக்குள்ளே போறப்ப என்ன வியூ தெரியுமாம்?) ஏன்னா.....?தற்கொலை செஞ்சுக்கறவங்க அங்கே இருட்டுலே ரெயில்லே இருந்து குதிக்கிறாங்க'ன்னு கைடு சொன்னதும் ஆடிப்போயிட்டேன். சாவறவங்க எதுக்கு இருட்டுக்குள்ளெ குதிக்கணும்? ஒரு வேளை உயிர் போகாம பிழைச்சுட்டா உதவிக்கு யாரும்போக முடியாம நாறிடமாட்டாங்களா? என்ன அநியாயமா இருக்குடா சாமி.


எக்ஸ்ட்ரா எஞ்சினுங்க வந்து சேர்ந்துக்குச்சு. ஏற்கெனவே ரெண்டு எஞ்சினுங்க இழுத்துக்கிட்டுப் போகுதுங்க. இப்பப் பின்னாலே மூணு எஞ்சினுங்க. 33 மீட்டருக்கு ஒரு மீட்டர்ன்ற கணக்குலே ஏத்தம். 1908 லே குகையை வெட்ட ஆரம்பிச்சாங்களாம். 5 வருசத்துலே முடிக்கணுங்கற திட்டம். ஆனா 15 வருஷம் வேளை இழுத்துருச்சாம். மலைக்கு ரெண்டு பக்கத்துலே இருந்தும் ஒரே சமயத்துலே வேலை ஆரம்பிச்சு வந்துக்கிட்டே இருந்தாங்களாம். இப்ப இருக்கறமாதிரி மாடர்ன் மெஷினரி இல்லாத காலக் கட்டம். கடைசியிலே ரெண்டு பகுதியும் இணைஞ்சப்ப வெறும் 19 மில்லிமீட்டர் இடைவெளி வித்தியாசம்தானாம். ஒண்ணொண்ணும் ஒரு பக்கம் போயிருந்தா கதை கந்தலாயிருக்கும்.


ரெயிலுக்குள்ளே மூணு ஜயண்ட் ஃபேன் வச்சு, பெட்டிகளுக்கு காத்தோட்டம் வந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு 25 நிமிஷம்ஆச்சு, வெளிச்சம் பாக்க. மொத்தம் 19 டன்னல்கள், 5 வயாடக்ட். இதுலே ஒரு வயாடக்ட்( viaduct) தெற்குத்தீவுலேயே உசரம் கூடியது. 73 மீட்டர் உயரத்துலே 146 மீட்டர் நீளம். இன்னொரு பாலத்துக்கு இந்த வருசம் வயசு 100 ஆச்சாம்.


இங்கே Coast to Coast ன்னு ஒரு ரேஸ் நடக்கும். அதுக்கு மேற்கே 'க்ரேமவுத்' என்ற ஊர்லே இருந்து ஆரம்பிச்சு,சைக்கிள், படகு, சைக்கிள், படகுன்னு மாறிமாறி வந்து கடைசியா ஓட்டத்துலே வந்து 'கிறைஸ்ட்சர்ச்'சுலே முடிப்பாங்க.அவுங்க எந்தெந்த இடத்துலே க்ராஸ்செஞ்சு வருவாங்கன்னெல்லாம் கைடு சொல்லிக்கிட்டே வந்தார். அந்தப் பாலங்களையும்காமிச்சார். (படங்கள்தான் இந்த ஸ்பீட்லே சரியா வரலை. பெட்டிக்குள்ளே இருந்து எடுத்ததெல்லாம் டபுள் க்ளேஸாலேரிஃப்ளெஷன் வந்துருச்சு) க்ரேமவுத்( Greymouth) வந்து சேரும்போது மணி பகல் 12.45. நாலரைமணி நேரமாயிருக்கு,231 கிலோ மீட்டர் தூரத்துக்கு.


இங்கே ஒரு மணி நேரம் நிறுத்தம். 1.45க்குக் கிளம்பி வந்த வழியே போகணும். இந்த ஒரு மணி நேரத்தை ஊரைச்சுத்திப் பார்த்துட்டு, திரும்பறப்ப சாப்புட்டுக்கலாமுன்னு முடிவு செஞ்சோம். முந்தியே சில தடவை வந்துட்டுப்போன ஊர்தான். அப்பக் கார்லே வந்தோம். சின்ன டவுன். க்ரே ரிவர் கடலோட கலக்குற இடம்தான் ஊர். மலைப்பாதையிலே வளைஞ்சு வளைஞ்சு கார் ஏறும்போது பயமா இருக்கும். நல்ல காலம் இப்ப அங்கேயும் புது வயாடக்ட் 'ரோடு ட்ரான்ஸ்போர்ட்'க்குப் போட்டுட்டாங்க. அது போட்டபிறகு நாங்க இந்த ஊருக்கு வரலை. பக்கத்துலே இருக்கற இன்னொரு ஊர்லே நிலக்கரி சுரங்கம்.அங்கே இருந்து நிலக்கரி இந்த ஊருக்கு வந்து ரயில் சவாரியிலே நாட்டோட கிழக்குப் பகுதிக்கு வந்துருது ஏற்றுமதிக்கு. இந்தவசதிக்குப் போட்ட ரெயில்பாதைதான் இப்ப டூரிஸ்ட் அட்ராக்ஷனா ஆயிருக்கு. ஒரு காலத்துலே தங்கச்சுரங்கமும் இருந்துச்சு.ஆனா எல்லாத்தையும் சுரண்டியாச்சுன்னு விட்டுட்டாங்க.


ஊர் அப்படிக்கு அப்படியேதான். முந்தி வந்ததுக்கு இப்ப ஒண்ணும் புதுசா மாற்றம் வந்துறலை. ஆங்........ புதுசா நவநாகரீக கழிப்பறை கட்டி வச்சுருக்காங்க. கலர் லைட்டுங்க ஜிகுஜிகுன்னு ஓடிக்கிட்டுப் பாட்டுவேற பாடுது. இவ்வளோஅட்ராக்ஷன் எதுக்குன்னு பார்த்தா......... இதுக்குத்தான். சட்டுப்புட்டுன்னு போயிட்டு வர்றவங்களுக்குத்தான் இது லாயக்கு போல.( மேல் விவரம் படத்தில்) நம்மூர்லேயும் இப்படி வசதிகள் செய்யற காலம் எப்ப வருமோ?உள்ளூர் நியூஸ் பேப்பர் புதுக் கட்டிடத்துலே இருக்கு. எல்லாமெ கண்ணாடி. உள்ளே ப்ரிண்டிங் மெஷீன் சுத்தறதைக் கொஞ்சம் வேடிக்கைப் பார்த்துட்டு வந்தோம். எல்லாம் இலவசப்பேப்பர்தான்.


திரும்பி வந்து வண்டியிலே நம்ம இடம் எதுன்னு பார்த்தா, போறப்ப இருந்த அதே பக்கம். போர்டிங் பாஸ் கலெக்ட்செய்ய வந்தவர்கிட்டே சொல்லிட்டு இன்னொரு பெட்டியிலே போய் எதிர்ப்பக்கமா உக்கார்ந்துட்டு வந்தோம். அப்பத்தானே ரெண்டு பக்கக் காட்சிகளும் முழுசாப் பார்த்த திருப்தி. இன்னொருக்கா கைடு சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டே சரியா சாயந்திரம் 6.05க்கு ஊர் வந்து சேர்ந்தாச்சு.




நல்ல ட்ரிப்தான். உலகப்புகழ் பெற்ற ரயில் பயணங்கள் பட்டியலில் இதுவும் இருக்காம். (எத்தனாவது ரேங்க்குன்னு யாரும் கேக்கப்பிடாது, ஆமாம். இருக்குன்றதே இப்பத்துப் பெருமை.) கூட்டம் இல்லை. நஷ்டத்துலே ஓடுது. ரயில் பெட்டிகளை 'அப் க்ரேடு' செய்யணும்( எல்லாம் அருமையாத்தான் இருக்கு. பொழுதண்ணிக்கும் ஒரு அப் கிரேடு என்ன வேண்டி இருக்கு?) அதுக்கு நிறைய செலவாகும். அதனாலே இந்த ரெயிலுக்கும் ஆப்பு வைக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்காங்களாம். நல்லவேளை, அதுக்கு முன்னாலே போய்வரச் சான்ஸ் கிடைச்சது.



நமக்கு வேணுமுன்னா இந்த டிக்கெட்டை ரிட்டர்ன் ட்ரிப்பை ஒரு நாலஞ்சு நாளைக்கும் தள்ளிப் போட்டுக்கலாம். 15 நாள்வரைக்கும் தள்ளலாமாம். அதுக்கெல்லாம் நேரம் கிடைக்கணும். நமக்கோ எப்பவும் காலிலே வெந்நீர் ஊத்திக்கிட்டமாதிரிபதைப்பு. அப்படியும் ஒரு பத்து மணிநேரத்துக்குக் கோபாலைக் கட்டிப்போட்டாச்சுல்லே:-)))))


திரும்பி வரும்போது ஒரு இந்திய இளஞ்ஜோடியைப் பார்த்தோம். தேன் நிலவுக்கு வந்திருக்காங்க. எந்த ஊருன்னு கேட்டோம், கோலாப்பூர்னு சொன்னதும், எனக்கு ஞாபகம் வந்தது 'ஆஹா...மஹாலக்ஷ்மி'கோயில்.நம்ம ஆளு சொல்றாரு 'ஓஓஓ அங்கே செருப்பு ரொம்ப ஃபேமஸ் இல்லே?'ன்னு. நேரம் இருந்தா வீட்டுக்கு வாங்கன்னு விலாசம் கொடுத்தோம்.மறுநாள் காலையிலே கிளம்பிடுறாங்களாம்.


நீங்களும் இந்தப் பக்கம் வந்தா கட்டாயம் இதுலே ஒரு ட்ரிப் அடிங்க. நல்ல வித்தியாசமான ஒரு அனுபவம்.

Friday, September 15, 2006

சிக்கு புக்கு ரயிலே (பாகம் 1)



யாரும் ஓட வேண்டாம். எடுத்தவுடனே ஒரு 'டிஸ்கி' போட்டுக்க்கறேன். பதிவு கொஞ்சம்(??) நீளமாப் போனதாலே ரெண்டு பகுதி(தான்) வரப்போகுது.


ஹய்யாரே ஹய்யா.......... ரயிலிலே போறதுன்றது இப்பெல்லாம் ஆடம்பரமாப் போச்சு.எங்கே போணுமுன்னாலும் கார்தான். இந்தத் தீவுலே இருந்து அடுத்த தீவுக்குப் போணுமா?அப்பவும் கார்தான்! காரோடு அங்கே போயிட்டு, காரையும் படகுலேயே ஏத்திக்கிட்டுப் போய்வர்றதுதான். அங்கே போய் இறங்குனவுடனே சுத்திப் பார்க்க வண்டி வேணுமா இல்லையா?


ரயில்லே போறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், நாங்க ச்சின்னப்பிள்ளைகளா இருக்கும்போது, 'பட்டணத்துக்கு'ப் போறதுன்னாவே கொண்டாட்டம்தான். என்னதான் மெயில்,எக்ஸ்ப்ரெஸ்ன்னு இருந்தாலும் பாஸெஞ்சர் வண்டின்னா இன்னும் மஜா. ஆனா...........வீட்டுலே அம்மா சம்மதிக்க மாட்டாங்க. சாயந்திரமா ரயில் ஏறுனா, மறுநாள் காலையில் பட்டணம்.


ரயில்லே போறதுக்கு அப்பெல்லாம் முக்கிய ஆக்ஸெசரி 'ரயில் கூஜா'. கூஜா மேலே எனக்குத்தீராத ப்ரேமை. என்னை, அக்கா தூக்கிக்கணும், நானு கூஜாவை. பாவம் அக்கா. வயசுப் பொண்ணு,இடுப்பிலேயா குழந்தையைத் தூக்கிக்கும்? ஸ்டைலா இடது கையை மடிச்சுத் தூக்கும். என் கையில் இருக்கும் கூஜா அக்கா முதுகில் உரசிக்கிட்டு............ ச்சீச்சீ..... ராட்சஸி. யார்? எல்லாம் நாந்தான்(-:


ஒவ்வொரு ஜங்ஷன்லேயும் ரயில் அப்பெல்லாம் அரைமணி நேரம்கூட நிக்கும்.கீழே இறங்கி தண்ணீர் பிடிச்சுக்குவோம். ப்ளாட்பாரத்துலே நடந்துபோய் அங்கே கொஞ்சம் வேடிக்கை. வண்டி எங்கே 'விட்டுட்டு'ப் போயிறப்போகுதோன்னு ரொம்பப் பக்கத்துலேயே இருப்பேன். அண்ணன் மட்டும் கொஞ்சம் வீரதீர பராக்கிரமத்தைக் காமிக்க இந்த நேரத்தைப் பயன்படுத்திக்குவாரு. விஸில் ஊதுனவுடன் பாய்ஞ்சு ஏறிக்குவார்..



நல்லா விவரம் தெரிஞ்சபிறகு ரயில் ஸ்டேஷனுக்குப் பக்கத்துலே வீடு. அம்மாவுக்குச் சுகமில்லை. அக்கா வந்து உதவிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கு அப்ப மூணு பிள்ளைங்க. மூணாவதுக்கு ஒரு வயசு. பொழுதண்ணைக்கும் 'நைய் நைய்'ன்னு அழும். அதுக்கு வேடிக்கை காமிக்கற ( எல்லாம் காலம். நான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளையா இருந்து ச்செல்லம் கொஞ்சுனதெல்லாம் போச்சு) வேலை/கடமை பத்துவயசுக்காரி எனக்குத்தான். 'ரயில் பார்க்கலாம் வா'ன்னு கூட்டிக்கிட்டுப் போயிருவேன்.


கரி இஞ்சிந்தான். கபகபன்னு புகையைத் துப்பிக்கிட்டு வரும். மேலே ஓவர்பிரிஜ்லே நின்னுக்கிட்டு அந்தப் புகைவர்ற சிமினியைப் பார்க்கணும். நாலஞ்சு ரயில் போனபிறகு வீட்டுக்குத் திரும்புவோம். வேற யார்வீட்டுப் பசங்களோ வருதுன்னு முதல்லெ அக்கா பயந்துட்டாங்க. அதான் கரிபிடிச்ச மூஞ்சிகளோடு இருந்தோமே.


படிப்பு முடிஞ்சு, வேலைக்குப்போன காலத்துலேயும் ரயிலுதான். ஆனா மின்சார ரயில். கரி இஞ்சினுங்க கொஞ்சம்கொஞ்சமா மறையத்தொடங்கி டீஸல் இஞ்சினு வந்துருச்சு. கல்யாணம் கட்டுன புதுசுலே விசாகப்பட்டினத்துக்குப் போறேன். ராத்திரி வண்டி. ரொம்ப வேடிக்கை பார்க்கறதுக்கு இல்லை. மறுநாள் பொழுது விடிஞ்சபிறகு, 'தடதட'ன்னு கோதாவரி ஆத்துப் பாலத்துலே வண்டி போகுது. ஹய்யோடா.... எவ்வளோ பெரிய பாலம். பக்கத்துலே இருந்தவங்கஒரு காசைச் சுண்டி விட்டாங்க தண்ணிக்குள்ளே. கையெடுத்துக் கும்பிட்டாங்க நதியை. ஓஓஓஓஓஓ அப்படியா சேதி.அவசரஅவசரமா நானும் ஒரு காசை எடுத்துத் தண்ணியிலே எறிஞ்சேன். விஷ்ஷிங் வெல்?


அதுக்கப்புறமும் நிறையதடவை ரயிலில் போயாச்சு. ஒரு சமயம் பிருந்தாவன்லே பெங்களுர் போனதுலே ஒரு கஷ்டமான விஷயம். அப்பெல்லாம் பிருந்தாவனை விட்டா வேற வேக ரயில் கிடையாது. காட்பாடி தாண்டுனவுடனே திடீர்னு ரயில் நின்னுபோச்சு. பத்து நிமிசம்போல ஆயிருச்சு. யாரோ ஒரு பொண்ணு, கைக்குழந்தையோட ரெயில் முன்னாலெ பாஞ்சுருச்சாம். சேதி கேட்டதும் குலை நடுங்கிப்போச்சு. அன்னைக்கெல்லாம் மனசே சரியில்லை.


கேரளாவுலே இருந்தப்ப நம்ம வீட்டையொட்டி ரயில் பாதை. மாடி வெராந்தாவுலே நின்னா போகவர்ற ட்ரெயினை கொஞ்சம் கையை நீட்டுனாப்போதும் தொட்டுறலாமுன்னு தோணும். அப்படி ஒரு ஆங்கிள். அதுவும் ஒரு ஐ லெவல்லே இருக்கும். ராத்திரியிலே அங்கே கடந்து போற ஐலண்ட் எக்ஸ்ப்ரெஸ், வெள்ளையா நல்லா ட்யூப்லைட் வெளிச்சத்தோட இருக்கும். பொட்டியிலே இருக்கற ஆளுங்கெல்லாம் பளிச்னு தெரிவாங்க. தினமும் அந்த ட்ரெயின் போறதைப்பார்த்துட்டுத்தான் தூங்குவேன்.


பூனாவுக்கு வந்தப்புறம் நாங்க இருந்த ஒரு வீட்டுக்குப் பின்புறம் ரெயில்வே லைன் இருந்துச்சு. கடைசி வீடுன்றதாலே திறந்த வெட்டவெளி. நம்ம போர்ஷன் இருந்தது மாடியிலே. அடுக்களை ஜன்னலைத் திறந்து வச்சா ரெயில் பார்க்கலாம்.ஆனா பேய்க் காத்து. அப்படியும் ரெயில் சத்தம் கேட்டவுடன் ஜன்னலைக் கொஞ்சூண்டாவது திறந்து பாக்கறதுதான்.
அங்கெ கிடைச்ச நண்பருக்கு நண்பரின் மகன் ஒரு ரெயில் பைத்தியம். ரயில் ஓட்டிக்கிட்டுப் போறதுதான் அவன் வாழ்க்கையின்(???) லட்சியமா இருந்துச்சு. தப்பே சொல்ல முடியாது, பையனுக்கு வயசு வெறும் நாலுதான்.நம்ம வீட்டுக்கு வர்றதுன்னா ஏகக்குஷி. வெறும் தண்டவாளத்தைப் பார்த்தெ புல்லரிச்சு நின்னுருவான். எனக்குச் சரியான தோழன்.


"ஃபிஜித்தீவுலே 'சுகர் ட்ரெயின்' ஓடுது. இலவசமாவே போகலாம்". இப்படித்தான் சொன்னார் நம்மை இந்தியாவுலே சந்திச்ச பிஜிக்காரர். மனக்கோட்டைக் கட்டிக்கிட்டு அங்கெ போய்ப்பார்த்தா.................ட்ரெயின் இருக்கு. கரும்பை ஏத்திக்கிட்டுப் போகுது. ஆனா மக்கள் ஏறிக்கிட்டுப்போக ரெயில் பெட்டி கிடையாது.ரயிலும் எதோ பொம்மை ரயில் மாதிரி இருக்கு. அது போற வேகத்தைவிட நானே நல்லா நடப்பேன். ஓட்டற எஞ்சின் ட்ரைவருக்கே நிக்க இடமில்லை. இதுலே நாம?


இந்தியாவுக்கு ஒரு சமயம் வந்தப்ப டெல்லிக்குப் போகச் சான்ஸ் கிடைச்சது. ரெண்டு நாள் போய்க்கிட்டு இருக்கலாமுன்ற ஆசையிலே ரயிலுக்கே என் ஓட்டு. பயணம் ஆரம்பிச்சதும் மனசெல்லாம் நொறுங்கிப் போச்சு. அது என்ன ஏஸி காரோ?வெளியே நடக்கறது(??) ஒண்ணுமே தெரியாமஃப்ராஸ்ட்டட் கண்ணாடி. வேடிக்கையா பாழா? வெளியே இப்படீன்னா, உள்ளே? ரெண்டு ச்சின்னப்பிள்ளைகளோட பயணம் செய்யுற பெற்றோர்கள். புள்ளைங்க அழுதவாயை மூடலை ரெண்டு நாளும். ரயிலுக்கு இனிமே ஓட்டுப் போடுவியா போடுவியான்னு என்னையே செருப்பால அடிச்சுக்காத குறை. திரும்பி வர்றதுக்கு இருந்த டிக்கெட்டை முதல்லெ ரத்து செஞ்சுட்டு, சென்னைக்கு இண்டியன் ஏர்லைன்ஸ்லே திரும்பினோம். அப்ப இது மட்டும்தான். மத்த ஏர்லைன்ஸ் ஒண்ணுமே இல்லை.


அதுக்கப்புறம் சில வருசம் கழிச்சு இங்கே வந்து சேர்ந்தாச்சு. பொன்னு மாதிரி மூணே ரயிலுங்க இங்கே ஓடிக்கிட்டு இருந்துச்சு. வடக்கே போக ஒண்ணு, தெக்கே போக ஒண்ணு, மேற்கே போக ஒண்ணு. கிழக்கே ஏன் போகலைன்னு கேக்கமாட்டீங்க தானே? கிழக்கே கடல்தான்.


கொஞ்ச நாளுலே தெக்கே போற வண்டிக்கு வச்சாங்க ஆப்பு. ஆளுங்க ரொம்பப் போறதில்லையாம். நஷ்டமா ஓடுதாம்.இங்கே ஒரு ஆளுக்கு டிக்கெட் வாங்கற காசுலே நாலுலெ ஒரு பாகம் செலவு செஞ்சா கார்லே நாலு பேர் போயிட்டு வந்துறலாம். பகல் கொள்ளை. அப்புறம் எப்படி ஆள் சேருமாம்?


மேற்காலே போற வண்டி ஒரு எக்ஸ்கர்ஷன் ட்ரிப் வண்டி.ஏறக்குறைய பாதி தூரத்துலே ஒரு மலைத்தொடர் இருக்கு.அந்த மலையைக் குடைஞ்சு ரெயில்பாதை போட்டுருக்காங்க. நாங்க அந்த மலைத் தொடர்வரை பலமுறை காருலே போயிட்டு வந்துருக்கோம். எல்லாம் இயற்கை அழகை ரசிக்கத்தான். மலைமேலே ஏறிப்போனா ரெண்டு மூணு அருவிங்க இருக்கு, 'ப்ரைட்ஸ் வெய்ல், பஞ்ச் பவுல்'ன்னு. இங்கே வந்த புதுசுலே ஒரு ஆர்வக்கோளாறுலே அந்த 'பஞ்ச் பவுல் போய் வந்தோம். தெளிவான தண்ணி. தொடவே முடியாத அளவுக்கு ச்சில்லுன்னு இருந்துச்சு. இப்ப அங்கெ மலை ஏறிப்போக நம்மாலெ ஆகாது. அப்ப தெரியாத்தனமா ஏதோ ஒரு குருட்டு தைரியத்துலெ போனது.


இங்கே ஒருக்கா ரயில் ஏறிப்பார்க்கணுமுன்னு ஆசை இருந்தாலும், பகல் கொள்ளையைப் பார்த்து பயந்துக்கிட்டு இருந்தோம். போன மாசம் குளிர்கால ஸ்பெஷல்ன்னு ஒரு தள்ளுபடி அறிவிச்சாங்க. 50 சதமானம் கழிவு. இதைவிட்டா வேற ச்சான்ஸ் கிடைக்காது. பெட்ரோல்வேற தாறுமாறா விலை ஏறிக்கிடக்கு.பேசாம இதுலே போய் வரலாமுன்னு தோணிப்போச்சு.
பாதி வழி போனாலும் அதே காசு. கடைசி வரை போனாலும் அதே காசு( எல்லாம் ப.கொ) அன்னிக்கே திரும்பிவர்ற ப்ளான். ரெண்டு நாள் கழிச்சுப் போய்வர டிக்கெட் வாங்கியாச்சு. 20 நிமிஷத்துக்கு முன்னாலே ஸ்டேஷனுக்கு வந்துறணுமாம். நம்ம காரை அங்கே விட்டுட்டுப் போகலாமாம். அதுக்குப் பார்க்கிங் சார்ஜ் இல்லையாம். தாராளப் பிரபுங்க.


ஃப்ளாஸ்க்லே பாலும் தண்ணியுமாக் கொதிக்கவச்சு நிரப்பிக்கிட்டேன். டீ, சக்கரை, மக், குடிதண்ணி, எலுமிச்சம் சாதம்,சிப்ஸ், இன்னும் சில தீனிகள் எல்லாம் பக்காவா ரெடி. காலையில் எட்டேகாலுக்கு வண்டி. எட்டுமணிக்கே ஸ்டேஷனுக்குப் போயாச்சு. அங்கே ஒரே கூட்டம். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளாக் குவிஞ்சிருக்காங்க. முப்பதுபேருக்குக் குறையாம இருக்காங்க. நம்ம ரிஸர்வேஷனைக் காமிச்சதும் ஸீட் அலகேஷன் ஆச்சு. அன்னிக்கே திரும்பி வர்றதாலே அதுக்கும் சேர்த்து ரெண்டு போர்டிங் பாஸ் கொடுத்தாங்க.


வெளி பில்டிங்குலே இருந்து ப்ளாட்ஃபாரம் போக ஒரு ஆட்டோமாடிக் கதவு. அதுக்குள்ளே போனா ரெயில் நின்னுக்கிட்டு இருக்கு. இடம் பார்த்து உக்கார்ந்தாச்சு. நடுவிலே நடைபாதை விட்டு ரெண்டு பக்கமும் நடுவிலே ஒரு மேஜை போட்டு நவ்வாலுபேர் உக்காரலாம். நம்ம பெட்டியை நோட்டம் விட்டா ஒரு பத்துப்பேர் இருந்தாங்க.( நாலு பேருக்குமேலே இருந்தா அது கூட்டம் எனக் கொள்க)


உள்ளெ ஒரு கேஃபே கவுண்ட்டரும் இருக்கு. ஸ்நாக்ஸ் ஆன் ட்ராக்ஸ் (Snacks on Tracks).மெனு கார்டு எல்லாம் அட்டகாசமா ஒவ்வொரு மேசையிலும் வச்சிருக்காங்க. சாப்பாடுகள், காஃபி டீ & குடி வகைகள்( இது இல்லாமலா?)


டாண்ன்னு எட்டேகாலுக்கு வண்டி கிளம்பிருச்சு. PA சிஸ்டத்துலே ட்ரைவர் எல்லோரையும் வரவேற்று, அவரோட க்ரூ மெம்பர்கள் பேரையும் சொல்லி அன்னிக்குப் ப்ரோக்ராமைச் சொன்னார். அவரேதான் நம்ம கைடு. முதல் அஞ்சு நிமிசத்துக்கு நம்ம வீடு எங்கே இருக்கு, இங்கெயிருந்து பார்த்தாத் தெரியுதான்ற ஆராய்ச்சி. நம்ம வீட்டாண்டை இருக்கும் சர்ச் கோபுரம் தெரிஞ்சது. வீட்டையே பார்த்தமாதிரி ஒரு திருப்தி. ( என்னா இது ச்சின்னப்புள்ளைத்தனமால்லே இருக்கு!)


வழக்கமா ரோடுலெ இருந்து பார்க்கற ரயிலுக்கும், ரயிலுக்குள்ளெ இருந்து பார்க்குற ரோடுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குதுங்கோவ். ஒரு வழியா சிட்டி லிமிட்டைத் தாண்டிட்டோம். ரெண்டு பக்கமும் ஆடுங்களா மேயுதுங்க. எங்கநாட்டுலே மனுஷரைவிட ஆடுங்க ஜாஸ்த்தி. ஆளுக்கு 12 ஆடு இருக்கு. ஏறக்குறைய 5 கோடி ஆடுங்க.இன்னும் குளிர்காலமே முடியலை. அதுக்குள்ளே சில ஆடுங்க குட்டி போட்டுருக்குங்க. 'மழை பெய்யறதும், புள்ளை பெறக்கறதும் மகாதேவனுக்கே தெரியாதாமே' (இந்த இடத்துலே மகாதேவன்= கடவுள்) ச்சும்மாவே துள்ளித்துள்ளி குதிக்குதுங்க இந்தக் குட்டிங்க.

( அடுத்த பகுதி விரைவில்)

Wednesday, September 13, 2006

Sonic Boom

நேத்துப் பகல் சுமார் மூணு மணி இருக்கும். வீட்டுலே ஒரு சின்ன பூசு வேலைக்குஒருத்தர் வந்து வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார். திடீர்னு ஒரு பெரிய 'இடி' சத்தம்.வீடே ஒரு குலுங்கு குலுங்குச்சு. வெளியே நல்ல வெய்யில் வேற. ஆகாயமோ மேகமே இல்லாம ரொம்பச் சுத்தம்.



எங்கியோ இடி இடிக்குதுன்னு ஒரு கணம் நினைச்சாலும் உள்ளே ஓடிப்போய்ப் பார்த்தேன்,பூசுவேலையில் சுவர் இடிஞ்சு விழுந்துருச்சோன்னு. ஊஹூம்....... நல்லவேளை அப்படி ஒண்ணும் இல்லை.


கொஞ்ச நேரத்துலேயே என்ன விஷயமுன்னு புரிஞ்சு போச்சு. விண் கல் விழுந்துருக்கு.சாயந்திரம் பூரா டிவியில் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ரேடியோ மட்டும் ச்சும்மா இருக்குமா?அதுபாட்டுக்கு அது பங்குக்கு( இப்ப நானும் என் பங்கைச் சொல்லிட்டேன்)


எப்படியோ எங்கூருக்கு இப்படி ஒரு விளம்பரம் கிடைச்சிருக்கு.


அதிகப்படி விவரம் இங்கே பாருங்க.


இது இப்படி இருக்க இன்னிக்கு வேற ஒரு நியூஸ். அந்த விண்கல் விலைக்கு வேணுமான்னு இங்கே 'ட்ரேட் மீ' ன்ற சைட்டுலே வந்துக்கிட்டு இருக்கு. விஞ்ஞானிகள் சொல்லிட்டாங்க,ஒரு கால்பந்து அளவு கல்லுதான் விழுந்துருக்கு. அதுவும் அட்மாஸ்ஃபியர்லே நுழைஞ்சதும் தூளாச் சிதறிடும்னு.


இப்ப எந்தக் கல்லை விக்கறாங்கன்னு தெரியலையே(-:


'போலிகள் ஜாக்கிரதை! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்'

ஆகக்கூடி மனுஷன் எதுலேயும், எப்பவும் பணம் பண்ணத் தயாரா இருக்கான்!

Monday, September 11, 2006

பேசுவோமா

அநேகமா இந்த வாரத்துக்கான கடைசி சினிமா விமரிசனமா இது இருக்கலாம், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்...........


"படத்துலே கதாநாயகியோட வீடுன்னு ஒண்ணு காமிக்கறாங்க. ரொம்ப நல்லா இருக்கு.இல்லீங்க."


"படத்தோட கதை என்னன்னு சொல்லாம இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?"


"அந்த வீடு, பால்கனி எல்லாம் நிஜம்மா நல்லாத்தான் இருக்கு."


"அப்பக் கதை?"


"கதாநாயகியோட கிராமத்துத் தாத்தா பாட்டி வீடுகூட நல்லாத்தான் இருக்குங்க."


"இது என்ன விமரிசனம்? கதை, நாயகன், நாயகி எல்லாம் சொல்றதில்லையா?"


"அந்தக் கிராமம்கூடத்தான் பச்சைப்பசேல்னு நல்லாவே இருக்கு. இல்லையா?"


"சரியாப்போச்சு. அப்ப டைரக்டர், இசை இதெல்லாமாவது சொல்லேன்"


" லொகேஷன் பரவாயில்லை"


" உங்கிட்டேப் பேசிப் பிரயோஜனமில்லை"


" ஏங்க இப்படிக் கோச்சுக்கறிங்க? அதான் பேசலாமா'ன்னு சொன்னேனே."


" அதுதான் படத்தோட பேராச்சேம்மா.இல்லே 'பேசுவோமா'வா?"


" சரிங்க. உங்க மனசு எதுக்கு நோகணும்? கோச்சுக்கறதைப் பார்த்தாப் பயமாத்தான் இருக்கு. சுருக்கமாச் சொல்லட்டா? நிழல்கள் ரவியோட மனைவி வடிவுக்கரசி!காதல்னு சொன்னாலெ பிடிக்காத நாயகி.
ஒரு கதை எழுதிப் பெரிய எழுத்தாளரா (????) ஆயிட்டார் நாயகன். பத்திரிக்கை ஆசிரியர் 'எவ்வளோ செலவானாலும் பரவாயில்லை. எழுத்தாளரைக் காப்பாத்துங்க'ன்னு டாக்ட்டர்கிட்டே சொல்றார்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதுக்கும் மேலே என்னாலெ விமரிசிக்க முடியாதுங்க."


"குனால் & ஷர்மிலி நடிக்கிறாங்கன்னாவது சொல்லேம்மா. ரெண்டரை மணி நேரம் படம் எடுத்து ஓட்டறாங்க. நீ ஒண்ணும் சரியாச் சொல்லலேன்னா எப்படி?"


" அதான் வீடு நல்லா இருக்குன்னு அப்பலே இருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன்லே,இன்னும் என்னான்னு சொல்றதாம்"


"உனக்கு ஆனாலும் லொள்ளு ஜாஸ்தி"


" சரி, சரி. ஏசாதீங்க. நான் பழைய நிலைக்குத் திரும்பணுமுன்னா மாத்துப்படம் பார்க்கணும்"


" என்ன மாத்து......? ஓஓஓஓஓஓஓஓ மாத்து மருந்து மாதிரி மாத்துப் படமா?

என்னா படம் போடட்டும்?"

" போடுங்க, குணா"

" அய்ய்யய்யோ......என்ன....? குணாலா?"


" இல்லீங்க. குணா. நம்ம கமலோட குணா"

Saturday, September 09, 2006

குருக்ஷேத்திரம்

படத்தில் நாயகன் பெயர் 'பாரத்'

படத்தில் நாயகி பெயர் ' வைஷ்ணவி'

வில்லன் பெயரை மட்டும் 'ஜாக்'னு வச்சுட்டாங்க.

வில்லனின் உதவிக்கு வரும் நண்பன் 'சாம்'

ச்சியர் லீடர்ஸ் நாலுபேரோட பெட்ரோல் பங்குலே போய் அங்கெ பெட்ரோல் விற்பனையைத் தவிரவேற என்னமோ செய்யறாங்கன்னு பெரிய பூதக் கண்ணாடியை வச்சுக்கிட்டு ஆராயறார் 'சாம்'


பதான் சூட் போட்டுக்கிட்டு வர்ற 'ஜாக்'குக்கு 'வைஷ்ணவி மேலே 'கிக்'
பாரத்தும், பதான் சூட்டும் நண்பர்கள். வைஷ்ணவி யாருக்குன்னு போட்டி வருது.


அமெரிக்காவுலே 20 வருசம் இருந்துட்டு, மகளை ஒரு 'தீவிரவாத சம்பவத்துலே' பறிகொடுத்துட்டு இந்தியாவுக்கு எட்டுவயசு மகனோடு திரும்பி வரும் நாயகன் & நாயகி.


( யாருங்க அந்த 'அமெரிக்க ஹாஸ்பிட்டல்' ஸீன் வச்சது? ரொம்ப அமெச்சூரா இருக்கு. ஆனாபேஷிண்டை ட்ராலியில் வச்சுத் தள்ள ரெண்டு வெள்ளைக்காரர்களைக் கரெக்ட்டாப் பிடிச்சுப்போட்டுட்டாங்க)


இன்னொருத்தன் மனைவியான வைஷ்ணவியை அடைய ப.சூ( பதான் சூட்) 'ரோஜா' செடிகளையும்,தோட்டத்தையும் மிதிச்சு, உடைச்சுப் பாழாக்குறார்.


நாயகன் & குடும்பம் வசிக்கும் இடம் 'மாதா' நகர். ரொம்ப சென்ஸிடிவ் ஏரியா. ஆனா 24 மணி நேர செக்யூரிட்டி இருக்கு. அதுவும் அப்பப்ப 'லேப்ஸ்' ஆயிரும்.


'ட்ராப் கேட்'லெ செக்யூரிட்டி நிக்கும் மரப்பொட்டிக்கும் ஜே.கே'ன்னு பேர் இருக்கே, அதைப் பார்த்துக் கதையைப் புரிஞ்சுக்கணும். க்ளோஸப் காமிக்கிறாங்க.


எட்டு வயசு மகனுக்கு நிஜத் துப்பாக்கிமேலே பயங்கர ஆசை. கட்டாயம் வேணும்னு துடிக்கிறான். பையன் பேர் சுபாஷ்.


படத்தின் ஆறுதல் 'தம்பு அங்கிள்.' ரிட்டயர்டு மிலிட்டரிக்காரர். அவரோட வசனங்கள் எல்லாம் ரொம்ப யதார்த்தமா இருக்கு. பாதி சாப்பாட்டுலெ கரண்டு போயிருது.

"இருட்டுலே எப்படி சாப்புடறது தாத்தா?" ( எட்டு வயசு)

" அதெல்லாம் கவலைப்படாதே.இருட்டா இருந்தாலும் கை நேரா வாயைக் கண்டு பிடிச்சுரும். நீ சாப்புடு " ( தம்பு அங்கிள்)

ப.சூ. வெயிஸ்ட்லே ஆயுதங்களை வச்சுருக்கு. அதைப் பார்த்துட்டு ப.சூ. கிட்டே பேசற வசனம் டாப்.


சத்திய ராஜ், ரோஜா, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய்ன்னு தெரிஞ்ச முகங்கள்தான். தம்பு அங்கிள்தான் யாருன்னு தெரியலை.'பாரதி மணி'ன்னு டைட்டில்லே வருது, அவரா இருக்குமோ? நல்லாத்தான் செஞ்சுருக்கார்.


கமெடிக்குத் தனி ட்ராக் ஓடுது. வடிவேலு. வத்தலகுண்டுலே இருந்து ச்சென்னைக்குப் போறார்.( ஆஹா.... என் வத்தலகுண்டு)


இசை புதுசா ஒருத்தர். ஐஸக் தாமஸ் கொட்டுக்காப்பள்ளி ( கொடுக்கப்புளின்னு இங்கிலீஷுலே இருக்கு!)

மார்ட்டின் தேவகுமார் பின்னணி இசை. ஸூப்பர்.
தேவையில்லாம கய்யாங் புய்யாங்ன்னு இல்லாம 'கொயட்டா' இருக்கு.


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஜெயபாரதி.


படம் எதைப் பத்திச் சொல்லுதுன்னு இன்னுமா உங்களுக்குப் புரியாம இருக்கும்?


ஜெய் ஹிந்த்!

அடடா.... ஒரு முக்கியமானதை விட்டுட்டேனே.... இது சத்யராஜின் 170வது படமாம்.

Friday, September 08, 2006

எவ்ரிடே மனிதர்கள் -16 மணி

வயசு வித்தியாசம் பார்க்காம யாரும் உங்ககிட்டே வந்து 'சட்'ன்னு கை நீட்டணுமா?

எதுக்கு அடிக்கவா? சேச்சே... அதுக்கெல்லாம் இல்லை.

எந்த ஒரு குழுவிலும் இருக்கும்போது 'எனக்குக் கைரேகை பார்க்கத்தெரியும்'னு சொல்லிப் பாருங்க.ஜோசியத்துல் கொஞ்சம்கூட நம்பிக்கையே இல்லைன்னு சொல்லிக்கறவங்களும், அப்படி என்னதான் தன்னைப்பத்திச் சொல்லப் போறிங்கன்னு கையை நீட்டுவாங்க.
நாங்களும் இந்த 'வித்தை' தெரிந்தமாதிரி கொஞ்சம் உதார் விடறதுதான். கையை நீட்டும் தோழிகளிடம்,என்னமோ ரொம்ப சீரியஸ்ஸாப் பார்க்கறதுபோல, கையை அப்படி இப்படித் திருப்பிக் கவனிச்சுப் பார்த்து,நம்ம விரலைவிட்டு எண்ணுறது போலெல்லாம் போஸ் கொடுத்துட்டு, உன் பேர் வசந்தின்னு வசந்திகிட்டேயே சொல்லி அடி வாங்குனதுண்டு. ஆனா யாருக்குத்தான் எதிர்காலத்தைத் தெரிஞ்சுக்கும் ஆசை விட்டது?


இப்படித்தான் கூட வேலை செய்யும் நண்பர் ஒருத்தர் ஜோசியம், கைரேகை பத்திப் பேச்சு வந்தப்ப,அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் 'நல்லாக் கைரேகை பார்த்துச் சொல்லுவார்'ன்னு சொன்னதும் மேலோட்டமா கலாட்டா செஞ்சேனே தவிர, அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கன்னு சொல்லி நண்பரைத் தொணப்பி எடுத்துட்டேன். மணிக்கு இது பிஸினெஸ் இல்லையாம். எப்பவாவதுதான் கை பார்த்துச் சொல்வாராம், அதுவும் ரொம்பச் சிலருக்குத் தானாம்.


வேற வழி இல்லாம ஒரு நாள் வில்லிவாக்கம் வரை போய்வரலாமுன்னு சொன்னார் நண்பர். கிளம்பியாச்சு.பஸ்புடிச்சு, விலாசம் தேடிப் போய்ச் சேர்ந்தப்பவே மசமசன்னு இருட்டிக்கிட்டு வந்துச்சு. கதவுலே கைவச்சதும் திறந்துக்கிச்சு. உள்ளெ ஆள் அரவம் இல்லை. லேசான வெளிச்சம்.'மணி, மணி'ன்னுநண்பர் கூப்பிட்டார். 'உக்காருங்க, குளிச்சுட்டு வந்துடறேன்'னு சத்தம் மட்டும் வந்துச்சு.


பழைய காலத்து வீடு. ஆளோடி, முற்றம்ன்னு இருந்துச்சு. முற்றத்தில் ஒரு துளசி மாடம். அதை ஒட்டி இருந்த வெராந்தாவில் சுவர் முழுசும் சாமிப் படங்கள். எங்கியோ தென் தமிழ்நாட்டு கிராமத்து வீட்டுலே இருக்கறது மாதிரி ஒரு தோற்றம்.


கொஞ்சநேரத்தில் பூஜைமணி சத்தம் கேட்டுச்சு. கையில் கற்பூரத்தட்டோடு வந்தவர் ரொம்பக் கச்சலா மெலிஞ்சுஇருந்தார். லேசான தாடி. கண்ணுலே கனத்த ஃப்ரேம் போட்ட கண்ணாடி. எட்டுமுழ வேட்டி, மேலே தோளைப் போர்த்தி ஒரு அங்க வஸ்த்திரம். எங்களைப் பார்த்து சிநேகமாச் சிரிச்சப்ப வெள்ளையா பற்கள் பளிச்.


கற்பூரத்தை நாங்கள் கண்ணில் ஒத்திக்கிட்டதும் தட்டை வச்சுட்டு வந்து எங்கள் முன்னாலெ பாயில் உக்காந்தார்.என்னவோ தெரியலை, சட்ன்னு நான் நாற்காலியிலிருந்து எழுந்து தரையில் உக்காந்தேன். நண்பரும் கீழே முற்றத்துலே காலைத் தொங்கவிட்டு உக்காந்துட்டார்.


மணிக்கு அன்னிக்கு ஆபீஸுலே நிறைய வேலையாம். கிளம்பி வரும்போதே நேரமாயிருச்சாம். நாங்க வர்றது முதல்லேயே தெரியுங்கறதாலே கதவைத் தாழ் போடாம வச்சிருந்தாராம்.


பொதுவா ஜோசியம், கைரேகை பார்க்கறவங்க விளக்கு வச்சபிறகு பார்க்கமாட்டாங்கன்னு எனக்கொரு எண்ணம் இருந்துச்சு. அதனாலே, இன்னொருநாள் வரச்சொல்லுவாரோன்னு யோசனையா இருந்தேன்.
மணியும் நண்பரும் ஒரு அஞ்சு நிமிஷம்போல அப்பா அம்மா வீடு வாசல்ன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. மணியின்அம்மா, அப்பா ஊருக்குப் போயிருக்காங்களாம். தஞ்சாவூர் பக்கம். நண்பருக்கு சொந்த ஊர் கும்பகோணம்.


பேசிக்கிட்டே இருந்தவர், இப்படி முன்னால் வந்து உக்காரும்மான்னு சொன்னார். கையை நீட்டுனதும் கவனமாப் பார்த்தார். எனெக்கென்னவோ வெளிச்சம் போதாதமாதிரி இருந்துச்சு. கூரையில் ஒரே ஒரு பவர் குறைஞ்ச லைட்.


ஒண்ணும் சொல்லாம கண்ணை மூடிக்கிட்டு ஏழெட்டு நிமிஷம் தியானம் செய்யறதுபோல இருந்தார்.


"நல்ல கைதாம்மா. அமோகமா இருப்பே"


எனக்கோ 'சப்'ன்னு போச்சு. விளக்கமா எதாவது சொல்வாருன்னு பார்த்தா, ஒண்ணும் காணமே!


கொஞ்சநேரம் அங்கே ஒரு நிசப்தம். இருட்டு வீட்டுலே குருட்டுப் பூனை மாதிரி இருந்தேன்.


" ரொம்ப வாய்த் துடுக்கு. எதாவது கஷ்டத்துலெ அப்பப்ப மாட்டிப்பே. ஆனாலும் முருகன் அருள்உனக்கு ரொம்ப இருக்கு. உதவி யார் ரூபத்துலேயாவது வரும். அப்படியே காப்பாத்தி விட்டுரும். உனக்குஅவுங்க யார், எப்படி வந்தாங்கன்றதுக் கூட தெரியாது."


" நான் முருகனைக் கும்பிடறது இல்லீங்களே" அசட்டுத்தனமா சொல்றேன்.( வாய் நீளம்,பக்குவம் போதாது)


" சரி வேணாம். கடவுள் நம்பிக்கை இருக்குல்லியா? கடவுள், உன்னோட இஷ்ட தெய்வம் இப்படி வச்சுக்கோயேன். நான் எப்பவும் முருகனைக் கும்பிடறதாலெ முருகன்னு சொன்னேன். ஓஹோன்னு இருப்பே"


தலையைத் தலையை ஆட்டுறேன்.


" சொந்த வீடு, பால்பாக்கியம் எல்லாம் இருக்கு. ஃபாரீனுக்குப் போயிருவே"
எனக்குத் தாங்க முடியலை. அப்பா அம்மா இல்லாமப்போயி ஹாஸ்டல் வாசம். பாஸ்போர்ட்ன்னு சொன்னா என்னன்னுக்கூடத் தெரியாது. இதுலெ சொந்த வீடு, பால் பாக்கியம், பாரீன்....?


" எல்லாம் நடக்கும். காலம் வரணும் இல்லையா? "


ஒண்ணும் பேசத் தோணலை. ரொம்ப இருட்டுமுன்னே பஸ்ஸைப் பிடிக்கணுமேன்னு கிளம்பிட்டோம். வர்ற வழியிலேயும் ஒரே யோசனைதான். நண்பர் என்னை பஸ் ஏத்திட்டு அவரோட பஸ்ஸுக்குக் காத்திருந்தார்.மறுநாள் வேலையில் பார்த்தப்ப, 'மணி சொன்னா அதேபோல நடக்கும். பாருங்க அப்புறம் நினைச்சுக்குவீங்க'ன்னார்.



கொஞ்ச நாளுக்கப்புறம் இதெல்லாம் நடக்குமுன்னு நானே நம்ப ஆரம்பிச்சிருந்தேன். ஆனா இதுக்காகன்னு ஒருமுயற்சியும் செய்யலை. காலம் பாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்துச்சு. இது நடந்து சரியாப் பத்து வருசத்துலே நான் இந்தியாவை விட்டு கிளம்பியாச்சு. அப்ப நண்பர் சொன்னதுபோல நான் மணியை நினைச்சுக்கிட்டேந்தான்.அதுக்கப்புறம் அடிக்கடி மணியை நினைச்சுக்குவேன்.


சிலரை வாழ்க்கையிலே ஒண்ணு ரெண்டுதடவைதான் சந்திச்சிருப்பொம். ஆனா எப்பவும் மனசுலெ இருப்பாங்க. சிலரைநினைவு வச்சுக்கவே முடியாது.
மணி சொன்னது எல்லாமே நடந்துச்சு, ஒண்ணைத் தவிர. அது?
பால் கறக்க மாடு வாங்கிக்கலை. ஆனா ஃப்ரிட்ஜ்லே குறைஞ்சது ரெண்டு லிட்டர் பாலாவது எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கு.

இப்படி ப்லொக் ஆரம்பிச்சு எழுதுவேன்னு அவர் சொல்லவே இல்லியே(-:


அடுத்தவாரம்: ஷஃபி


நன்றி: தமிழோவியம்
------------

Thursday, September 07, 2006

யுகா

ஆமாம். வெளி உலக ஆட்கள்(??) அதாங்க ஏலியனுங்க எப்படி இருப்பாங்க? பெரிய மண்டையும், கண்ணும், குச்சிபோல கையும் காலும் வச்சுக்கிட்டு இருப்பாங்களா?யார் இந்த உருவத்தை மொதல்லே நமக்கு அடையாளம் காமிச்சாங்க? எப்படி நாம் எல்லோரும் இப்படித்தான் இருக்குமுன்னு ஒத்துக்கிட்டோம்?


செத்துப்போனவுங்க எல்லாம் என்ன ஆவாங்க? பேய் பிசாசுங்க எப்படி இருக்கும்? வெள்ளைச்சீலை, வெள்ளைவேட்டி மட்டும்தான் கட்டுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விஎன் மனசுலே அப்பப்ப வந்து போகும்.


இதுக்கெல்லாம் விடை கொடுக்கறமாதிரி ஒரு படம் வந்துருக்குன்னு சொன்னா, நீங்க நம்புவீங்களா?


உலகத்துலெ அநியாயம் நடக்குதேன்னு பதறிக்கிட்டு, அங்கங்கே மக்களைக் கூட்டம்கூட்டமா அழிச்சுடலாமுன்னு ப்ளான் போடுதுங்க அகோரர்கள்னு சொல்லிக்கிற ஆவிகள்.


இந்தப் படத்துலெ நம்ம நாஸர் பெரிய விஞ்ஞானி. அவருக்கு ஒரு இளமையான(?) அசிஸ்டெண்ட்இருக்கணுமே? யெஸ். யூ அர் ரைட். இருக்காங்க, ஸ்வர்ணமால்யா.


ஆகாயத்துலே இருந்து நட்சத்திர ரூபத்துலே பூமிக்கு அழிவு வந்துக்கிட்டு இருக்கு. இன்னொரு எழுத்தாளர்( வலைப்பதிவாளர் ? ) அகோரர்களைப் பத்தி விரிவா எழுதி வச்சிருக்காங்க. (இப்பத்தான் தமிழ்ப்புத்தகப் பதிப்புலகம் நல்லா இருக்கே. )



இதைப் பத்தி ஆராயப் போகுறதுக்கு முந்தி அப்பாகிட்டே டாடா சொல்லிட்டுப் போகலாமுன்னு, நாயகிவீட்டுக்கு வந்தா.................. அப்பாவே ஒரு அகோரர்னு தெரிய வந்துச்சு. சீனியர்கிட்டே இதைச் சொல்லலாமுன்னு போனா அவர் எழுத்தாளரைப் பத்திச் சொல்றார். ரெண்டு பேரும் எழுத்தாளர் அம்மா வீட்டுக்குப் போனா...........


அம்மாவை ஏற்கெனவே அகோரர்கள் தூக்கிட்டுப் போயாச்சு. அங்கே ஒரு கெமரா கிடைக்குது. அதுவழியாப் பார்த்தால் அருவமா இருக்கும் அகோரர்களைப் பார்க்க முடியுது. விஞ்ஞானிகள் ரெண்டு பேரும் அகோரர்களைத் தேடிக்கிட்டுக் காட்டு பங்களாவுக்குப் போயிடறாங்க.


கல்லூரி மாணவர் & மாணவிகள் கொஞ்சம்பேர் விஞ்ஞானியைத் தேடி ஆராய்ச்சி (????) செய்யறதுக்காக காட்டுபங்களாவுக்கு வராங்க. நீங்க யூகிச்சது போலவே அங்கெ இருக்கும் சமையல்காரர் அச்சுபிச்சுன்னு மர்மமாப் பேசுறார்.


ஒரு மாணவன் காணாமப் போறது, மாணவிகள் கதிகலங்கி நடுங்கறது எல்லாம் இருக்கு. நமக்கும் ஆயாசமா இருக்கு.அப்புறம் என்ன ஆச்சு? 'கொட்டாவி வந்துச்சு'ன்னு யாருங்க அங்கெ காமெண்ட் விடறது?
அகோரர்களொட ப்ளான் என்னன்னு கண்டு பிடித்தல், அதிலிருந்து உலக மக்களைக் காப்பாற்றுதல்னு 'விறுவிறுப்பா'சொல்றாங்க.


ஆனா ஒண்ணுங்க......... 'இப்படியும்கூட இருக்கலாமே, ஏன் இருக்கக்கூடாது?'ன்னு ஒரு நிமிஷம் நினைக்க வைக்கறாங்க பாருங்க அதுதான் டைரக்டருக்குக் கிடைச்ச வெற்றி.


ஆமாம் டைரக்டர் பேரைச் சொல்லலியே..... 'யார் கண்ணன்'


ம்யூ'சிக்' தீனா

Tuesday, September 05, 2006

மாவேலி வருந்ந திவசம் .........


மாவேலி வருந்ந திவசம் மனுஷ்யரெல்லாம் ஒண்ணு போலே.


வாமன ஜெயந்திதான் மாவேலி ( மகாபலி) வர்ற நாள். எல்லாருக்கும் வாமன அவதாரமும், மகாபலிச் சக்ரவர்த்தியின் வருஷாந்திர விஜயமும் தெரிஞ்சிருக்கும் தானே?
அது இன்னிக்குத்தான். ஓணம் பண்டிகை.


இந்த பண்டிகையை விவரிச்சுச் சொல்லணுமுன்னா இது 10 நாள் கொண்டாடற பண்டிகை.கடைசி நாள்தான் ஓணம்.
சிங்க மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரைஇருக்கும் 10 நாட்கள்தான் விழா நாட்கள்.


நம்ம தமிழில் சித்திரை முதல் பங்குனி ன்னு தமிழ் மாசங்கள் பெயர் இருக்குல்லையா.அதேதான் கேரளத்தில் 12 ராசிகளை வச்சு மலையாள மாசங்களா வரும். மேஷம்தொடங்கி மீனம் வரை. அந்தக் கணக்கில் சிம்மராசி மாசம்தான் சிங்க மாசம். தமிழில் ஆவணி.


சுமார் 1200 வருஷங்களுக்கு முன்னே இந்த விழா ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க.அப்பெல்லாம் ஒரு மாசம் கொண்டாடுனாங்களாம். இப்ப சொல்றமே 10 நாள் கோலாகலம்ன்னு,இதுவே இப்ப ஒரு நாளா சுருங்கிப்போச்சு.


ஒருவிதத்தில் இது கேரளத்தில் கொய்த்து காலம். அறுவடையெல்லாம் முடிஞ்சு ஜனங்கள் நிம்மதியா இருக்கற சீஸன்.


மகாபலியை வரவேற்க வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் முதல்நாளே ஆரம்பிக்குமாம். குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்னும் பூவை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.


ஓணத்தினத்தில் காலையிலே புது அரிசியை இடிச்சு மாவாக்கி இலையில் எழுதிய அடை, ஆவியில் புழுங்கிஅதைப் பாயாசம் செஞ்சு கடவுளுக்குப் படையல் வைப்பாங்க. இது அந்தக் காலத்தில். இப்பவோ? காலம் நேரம் எல்லாம் சுருங்கிப் போனதுனாலே என்னென்ன தில்லுமுல்லு பண்ணலாமோ அத்தனையும் செஞ்சு சடங்கு நடந்துருது.


சொந்த ஊரைவிட்டு பலநாடுகளில் போய் வசிக்கும் நமக்கெல்லாம் வார இறுதியை விட்டா நேரம் கிடைக்கறதில்லையே.அதனாலே சனிக்கிழமையன்னிக்கே இங்கே எங்க ஊர்லெ வாமன ஜெயந்தியும், மகாபலி( மாவேலி) யின் வருஷாந்திர விஸிட்டும்நடத்தி முடிச்சுட்டோம்.


மொத்தம் 100 பேர் பங்கெடுக்கறாங்கன்னு தெரிஞ்சது. வழக்கம்போல் ஓண சத்யா( ஓணம் விருந்து)வுக்கு மெனு போட்டோம். ஒண்ணு விடலை. அவியல், ஓலன், காளன், எரிசேரி, பருப்பு& நெய், சாம்பார், ரஸம், மோர், இஞ்சிக்கறி,தோரன், பப்படம், பழம், பாயாஸம்(பருப்புப் பாயாசம் & அடைப் பிரதமன்னு 2 வகை), வெண்டைக்காய் கிச்சடி, மெழுக்குபுரட்டி, சோறு, உப்பேறி, சர்க்கரைவ(பு)ரட்டின்னு சம்பிரதாயமான விருந்து.



எனக்குக் கிடைச்சது பாயாஸத்தில் ஒரு வகை. அடைப் பிரதமன். அரைக்கிலோ முந்திரிப்பருப்புப் போட்டு அடிச்சு தூள் கிளப்பியாச்சு.


இந்த வருஷம் நம்முடைய சிட்டிக் கவுன்சில் & கேண்டர்பரி பவுண்டேஷன் சேர்ந்து மூணாயிரம் டாலர்கள் எங்களுக்கு மொய் எழுதியிருந்தாங்க. எல்லாம் நம்ம காசுதான். வரியாக் கட்டறோம் இல்லையா? ஆனாலும் நம்முடைய நன்றியைக் காமிக்கணுமுன்னு நகரத் தந்தையைக் கூப்புட்டு இருந்தோம். வரேன்னு சொல்லி இருந்தார்.


சனிக்கிழமையன்னிக்குக் காலையிலே ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். (பாயாஸம் எடுத்துக்கிட்டுத்தான்) அங்கே அலங்கரிக்கும் பூக்களம் பொறுப்பு என்னோடது. இந்த வருஷம் இங்கே குளிர் ரொம்பக் கடுமையா இருந்ததாலே நம்ம வீடுகளில் எல்லாம் பூக்கள் ஒண்ணும் சரியா இல்லை. முதல் முறையா காசுக்குப் பூ வாங்கும்படி ஆச்சு.அதுலேயும் நல்ல கலர்களா அமையலை. ஒரு விதமா 'உள்ளது கொண்டு ஓணம்'னு சொல்ற பழமொழிக்கேற்பப் பூக்களம் போட்டு முடிச்சோம். உதவிக்குத்தான் யாரையும் காணலை. அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? அங்கே கலை நிகழ்ச்சியில் ஆடவந்த பிள்ளைகளின் அம்மாக்கள் ரெண்டு பேர் இருந்தாங்க.( பாவம், இந்தியன் பங்சுவாலிட்டி தெரிஞ்சுக்காம வந்துட்டாங்க!) ஒருத்தர் இலங்கை, இன்னொருத்தர் ராஜஸ்த்தான். அவங்க ரெண்டு பேரும் பூக்களம் போட படிச்சுக்கிட்டுப் போனாங்க நம்ம புண்ணியத்துலே.


கறுப்புப் பூனைகளோ, கார்களின் வரிசையோ, அடிப்பொடிகளோ,அணிவகுப்போ இல்லாம தனியா வந்து சேர்ந்தார் நகரத் தந்தை. அவர் மனைவி எங்கேன்னு கேட்டதுக்கு, அவுங்க நர்ஸ் வேலை செய்யறாங்களாம். ஏற்கெனவே யார்யார் என்னிக்கு வேலை செய்யணுங்கிற பட்டியல் போட்டுட்டதாலே இவுங்களுக்கு லீவு கிடைக்கலையாம். வார இறுதியாச்சே.( டாய்..... யாருடா அது அண்ணிக்கு லீவுகொடுக்கலே......... எட்றா சைக்கிள் செயினை........ கிளம்புங்கடா....... கீசிறலாம் கீசி.....)


விழா ஆரம்பிச்சது ஒரு சூரிய நமஸ்கார ஸ்லோகத்தோடு. பாடியது பீட்டர். அருமையான குரல். அதுக்கப்புறம் சங்கத்தலைவர் பேசுனார். அதுலே எனக்குப் பிடிச்ச ஒரு பாயிண்ட் அவர் பூக்களத்தைப் பற்றிச் சொன்னது. பொதுவா மகாபலியை வரவேற்கத்தான் இது போடறதுன்னு சொல்வோம். ஆனா இவர், பூக்களத்துலே இருக்கும் பூக்கள் நிறம், மணம் இதுவெல்லாம் வேறுபட்டு இருந்தாலும் ஒண்ணோடொண்ணு சேர்ந்து இணைஞ்சு அழகா இருக்கறதுபோல பலவித மனிதர்கள் நாம் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையா இருக்க வேணுங்கறதுக்கான ஒரு அடையாளம் இதுன்னார்.


நகரத் தந்தை ஓணம் விழாவுக்கான குத்து விளக்கேற்றி வைத்துவிட்டு அவருடைய பங்குக்கான பேச்சைப் பேசினார்.இந்த நகரத்தில் 150 வெவ்வேறு இன மக்கள் இப்ப இருக்காறாங்கன்னு நம்ம விஜயகாந்த் போல புள்ளிவிவரம் கொடுத்தார். எப்படி எல்லாரும் ஒரு டேப்பஸ்ட்டிரி போல இணைஞ்சு வாழணுங்கற அவசியத்தையும் சொன்னார்.இங்கே புதுசா குடியேறிவரும் மக்களுக்கு உதவி செய்ய ஒரு விசேஷ சேவை இருக்குன்னு சொல்லி, அதுக்குத் தலைவரானவரையும் ( சீனர்) அறிமுகம் செய்து வச்சார்.


கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பற்றி அவருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கும் படி ஆச்சு.பக்கத்து இருக்கையில் இருந்தாரே. பரதநாட்டிய நிகழ்ச்சியில் தில்லானாவை வெகுவாகப் பாராட்டினார். அப்புறம்ஒரு ச்சின்னப் பிள்ளையின் பாலிவுட் நடனம். பாட்டு என்ன? 'பண்ட்டி அவுர் பப்ளி'லே வர்ற 'கஜுராரே' பாட்டு.'க்ளாப் க்ளாப்'ன்னு கையை எல்லாம் தட்டிக்கிட்டுத் தாளம் போட்டு ரசிச்சார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தின்னுபாட்டுக்கள் & நடனங்கள். எனக்குத்தான் நிம்மதியா நிகழ்ச்சியைப் பார்க்க முடியலை. ஒண்ணொண்ணும் என்ன பாஷை,இந்தியாவில் எந்தப் பகுதியிலே பேசறாங்க, அந்தப் பாட்டுக்களுக்கு என்ன அர்த்தம்னு 'தொண தொண'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரே.


இதுக்கப்புறம் ஓண சத்யா. இதையும் வெகுவா ரசிச்சார். அவர் மக்களுக்கும், மனைவிக்கும் இந்த மாதிரியானசாப்பாடு ரொம்பப் பிடிக்குமாம். வாயைத் திறந்து சொன்னப்புறம் ச்சும்மா விட முடியுமா? பார்ஸல் செஞ்சு கொடுத்தோம். விருந்தோம்பல்?


இந்த வருஷம் ஓணம் பண்டிகை சிறப்பா நடந்துச்சு. அசல் பண்டிகை என்னவோ இன்னிக்குத்தான். பாலக்காட்டுத் தோழி ஒருத்தர் வீட்டுலே மத்தியானம் ஓண சத்யா. அவர் ப்ரத்யேகம் வராம் பரஞ்ஞு க்ஷணிச்சிட்டுண்டு. போகாதிருக்கான் நிவர்த்தியில்லா. ஞானொண்ணு போயி உண்டுவரட்டே?


அனைத்து வலைப்பதிவர்களுக்கும், கேரள நண்பர்களுக்கும் இனிய ஓணம் பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

Monday, September 04, 2006

க.க.க.கா x 2


மக்கள்ஸ் வேண்டுகோளுக்கிணங்கி நேத்துத்தான் நம்ம Baywatch பிள்ளையாரைப்படம் பிடிக்கப் போனோம். வசந்தம் தொடங்கி மூணாவது நாள். 17 டிகிரி வெய்யில்.ஆனா தெந்துருவக்காத்து வீச ஆரம்பிச்சதில் கொஞ்சம் 'சில்ன்னு ஒரு காத்து.'


வெய்யில், ஞாயித்துக்கிழமை & பகல்.இது மூணும் சேர்ந்த ஒரு சூப்பர் காம்பினேஷன்.கடற்கரை முழுசும் கூட்டமோ கூட்டம். ( நாலு பேருக்கு மேலே இருந்தால் அது கூட்டம் என்று கொள்க)


புள்ளையாரை மட்டும் புடிக்காம அந்த கேவ்ராக், குகை, அதை ஒட்டுனதண்ணி, பாறைகள், அதுலே ஒட்டிப்பிடிச்சு வளர்ந்துக்கிட்டு இருக்கற ச்சிப்பியினம்(mussels) அலை கொண்டு வந்து சேர்க்கிற(???) மீன்களைத் தின்ன வட்டம் போடும் ஸீ கல் கடல் காக்காய்கள், அதுகளைத் துரத்தும் அல்பட்ராஸ் என்னும் தாதாக்கள்,கடற்கரையில் ஓடவும் இன்ன பிற விஷயங்களுக்காகவும் வந்திருக்கும் நாய்கள், மேற்படி விஷயங்களைப்ப்ளாஸ்டிக் பையில் வாரி எடுத்துக்கிட்டுப் போகும் அப்பா அம்மாக்கள்( அட... நாய்ச் சொந்தக் காரர்கள்) எந்த ஜாதி, எந்த சைஸ் நாயைப் பார்த்தாலும் ஓடிப்போய் குசலம் விசாரிக்கும் லாஸி என்னும் வகை நாயக்கா,குளிர் காத்து அடிச்சாலும் கொஞ்சம்கூட அசராம ஈர உடையிலே கனூ (Canoe)வைத் தலையிலே சுமந்துக்கிட்டுவந்த பையன்னு கோலாகலமா இருந்துச்சா, அதையெல்லாம் முடிஞ்சவரை கேமராவுலே அடக்கிக்கிட்டு வந்தோம்.


எத்தனை படம் போட ப்ளோக்ஸ்பாட் விடுமுன்னு தெரியலை. அஞ்சோ ஆறோ?


சொல்லி முடிக்கலை. ப்ளோக் ஸ்பாட் ஒரே ஒரு படத்தை மட்டும் ஏத்துக்குமாம்.


போட்டும், இருக்கவே இருக்கு நம்ம ஃப்ளிக்கர். அதுலே நிறையப் படத்தைத் தூவி விட்டுருக்கேன்.


புள்ளையாரைப் பாத்துக்குங்கப்பா எல்லாரும்.


மதி, இப்படி முன்னாலே வந்து மொத ஆளா நில்லுங்கப்பு.


அதென்ன க.க.க.கா x 2?


கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம்
கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம்.