Wednesday, September 27, 2006

ரெடிமேட் பகுதி 15


இருவத்திரண்டு விதமான தைய்யல். விதவிதமா தைக்கலேன்னாலும் அது என்னதான் செய்யுதுன்னு பார்த்துறணுமில்லையா?


ஒண்ணொண்ணா ஆரம்பிச்சேன். பூ, பட்டர்ப்ளை. முக்கோணம், பாம்பு ன்னுஒரே துணியிலே கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு ஓட்டுனதுலே என்ன டிசைன், எப்படி இருக்குங்கறது புரிஞ்சுபோச்சு. நல்லா இருக்குன்ற கணக்குலே பார்த்தா ஒரு பத்துதான் தேறும். ஜெகஜ்ஜால கில்லாடிங்க.ஒரேதா 22ன்னு கணக்கு காமிச்சிட்டாங்க.


இதுலே ரெட்டை ஊசிக்கூட இருக்கு. அதைப் போட்டுத் தைச்சா ரெண்டு வெவ்வேற கலர் நூல்களைச் சேர்த்துஒரே சமயத்துலே டிஸைன் செஞ்சுறலாம். நமக்குத் தெரிஞ்ச ஒரே கலர்ன்னு கறுப்பு & சிகப்பைச் சேர்த்துத் தைச்சுப் பார்த்தேன். அட்டகாசமா இருந்துச்சுன்னு சொல்லமுடியாது. பரவாயில்லாம இருந்துச்சு. இவ்வளவு 'நுணுக்கங்கள்' படிச்சபிறகு ச்சும்மா இருக்கலாமோ?


மேசை விரிப்புகள் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டேன். மகள் உடுப்புலே தேவை இருக்கோ இல்லியோ, ஒரு வரிசை டிஸைன் கட்டாயமாப் போச்சு. மகளும் மூணு வயசானதும் ப்ளே ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சாள். குழந்தையைக் பள்ளிக்கூடம் கொண்டு போக, கொண்டுவர ன்னு யாராவது ஒருத்தர் பாக்டரியிலே இருந்து உதவிக்கு வந்துருவாங்க.


இந்த ராஜபோக வாழ்க்கையை விட்டுட்டு இங்கே நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம். ராஜபோகம் 'மிஸ்'ஸாகப் போகுதுன்னு அப்பத் தெரியலை. அங்கிருந்து அனுப்புன வீட்டுச்சாமான்களும் வந்து சேர்ந்துச்சு. மெஷினை மறுபடி ஸ்டேண்டுலேபொருத்தித் தைக்கலாமுன்னு பார்த்தா............ அது சுத்தவே மாட்டேங்குது. இங்கே ரிப்பேர் செய்வாங்களான்னும் தெரியலை. ஒருவழியா விசாரிச்சு, அங்கே கொண்டு போனோம். சாமான்கள் இடம் மாறும்போது கீழே போட்டுருக்காங்கபோல. ரிப்பேர் செஞ்சுறலாம். அதுக்கு இவ்வளோ செலவாகுமுன்னு சொன்னாங்க பாருங்க, நான் மயக்கம் போட்டுவிழாத குறை. இந்த மெஷினோட விலையிலே சரி பாதி. இங்கே எல்லாத்துக்கும் இப்படி கொள்ளை விலைன்றது அப்பத்தான் உறைக்குது. சம்பளமும் அதிகமாத்தானே இருக்கு. அப்ப 'தானிக்கும் தீனிக்கும் சரி போயிந்தி'!!!


பைத்தியம் விலக வைத்தியம் செய்யணும்தானே? அப்பச் செலவைப் பத்தி யோசிக்க முடியுமா? ரெண்டு வாரத்துலே ரிப்பேர் செஞ்சது வீட்டுக்கு வந்துருச்சு. தைக்குதுதான். ஆனா.......... என்னவோ சரியில்லைன்னு ஒரு தோணல். ரொம்பக் கவலைப்பட நேரம் இல்லை. வீட்டுவேலைக்கு உதவின்னு யாரும் இல்லை. எல்லாம் நாமே. 'சம்மர்'ன்னு நாடே கொண்டாடுது,நமக்கோ பயங்கரக்குளிர். நாப்பதுலே இருந்து 18க்கு வந்திருக்கோம். கைகால் விறைச்சுப்போகுது, ஹீட்டருக்கு முன்னாலேயே உக்கார்ந்திருக்கோம். இதுலே தைய்யலாவது மண்ணாவது.


குழந்தைக்கு நாலரை வயசு. இங்கெ அஞ்சாவது பிறந்த நாள் அன்னிக்கே பள்ளிக்கூடத்துலே சேர்த்துறலாம். இன்னும் ஆறுமாசம் இருக்கே. அதுவரை கிண்டர்கார்டன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்னு அதைப் பத்தி விசாரிச்சோம்.பள்ளிக்கூடத்துலே இடம் இல்லையாம். ஆனால் தாயோ தகப்பனோ கூடவே இருந்துக்கறதா இருந்தால் சேர்த்துப்பாங்களாம்.வேக்கன்ஸி வரும்போது ( அஞ்சு வயசு வரவர ஒவ்வொரு புள்ளையா ப்ரைமரி ஸ்கூலுக்குப் போகுமுல்லெ) நம்மபிள்ளைக்கு இடம் கிடைச்சா, அப்பா அம்மா கொண்டு வந்து விட்டுட்டுப் போலாமாம்.


பள்ளிக்கூடம் அவ்வளோ கிட்டக்க இல்லை. கார்லே போனால் ஒரு ஆறு நிமிஷம் ஆகும். இருக்கறதோ ஒரே ஒரு கார். அதை இவர் வேலைக்கு எடுத்துக்கிட்டுப் போயிருவார்.மகளொ ரெண்டுங்கெட்டான். அவளாலே அவ்வளோதூரம் நடக்கமுடியாது. என்னாலெ அவளைத் தூக்கிக்கிட்டும் போக முடியாது. காலையிலே இவரோடு கிளம்பிறலாமுன்னா, எட்டுமணிக்கே எங்களை பள்ளிக்கூட வாசலில் இறக்கிட்டுப் போயிட்டார். ஒம்போது மணி பள்ளிக்கூடத்துக்கு பூட்டுன கதவுக்கு முன்னாலெ குளிருலே நடுங்கிக்கிட்டே உக்கார்ந்திருக்கணும். ஒரே ஒரு நாள் அனுபவமே வாழ்க்கையை வெறுக்கும்படி செஞ்சுருச்சு. 11.30க்கு பள்ளிக்கூடம் முடிஞ்சு அங்கங்கே நின்னு நிதானமா , ரோடு ஓரம் போட்டுவச்சிருக்கற பெஞ்சுங்களை ஒண்ணுவிடாம உக்கார்ந்து பார்த்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு மணி ஆகி இருக்கும்.


அங்கங்கே கடைகளுக்குள்ளெ நுழைஞ்சு எதாவது புதுசா பொம்மை, விளையாட்டுச் சாமான்னு வாங்கிக் கொடுக்கணும்.ஒரு பேக்கரியிலே கேக்குத் துண்டம், லாமிங்டன்னு தீனி. நடக்க வைக்கக் கொடுக்கும் பக்ஷீஸ். காலையில் பள்ளிக்கூடம்போக டாக்ஸி. ("மகளொட கல்வி முக்கியம். டாக்ஸி செலவைப் பார்க்காதே" இது அப்பா!)


இது ஒரு பக்கமுன்னா..... பள்ளிக்கூடத்துலே இன்னொரு கதை. இந்தமாதிரி அம்மாங்க கூடவே இருக்காங்க பாருங்க, அவுங்களுக்குஒரு பேர் இருக்கு. மதர் ஹெல்ப்பர். ரெகுலரா என்ரோல் செஞ்ச பிள்ளைகளுடைய அம்மாக்களும் தினம் ஒருத்தர்மதர் ஹெல்ப்பரா வரணும். அதுக்கு ரோஸ்ட்டர் போட்டு வச்சுருவாங்க. என்னைமாதிரி இடமில்லாத பிள்ளைகளோட அம்மாக்கள் தினமுமே மதர் ஹெல்ப்பரா அங்கெ நிக்கணும். டீச்சருங்க எல்லாம் ராணிகள். நாங்கெல்லாம் சேவகம்.அதுலே என் கேட்டகரி அடியாருக்கு அடியா(ள்)ர்.


இது அரசாங்கம் நடத்துற பாலர்பள்ளி. இலவசம். ஆனா வாரக் கடைசியில் பிள்ளைங்க ஒவ்வொருத்தரா வரிசையில்போய் டீச்சருக்கு முதுகைக் காமிச்சு நிக்கறாங்க. டீச்சர் ஒரு ப்ரவுன் கலர் என்வலப்பைச் சட்டையின் முதுகில் பின் போட்டுக் குத்தி வைக்கிறாங்க. அதுலெ நாம் டொனேஷன் எதாவது போட்டுத் திங்கக்கிழமை கொண்டுபோய்க் கொடுக்கணும். நிர்பந்தம் இல்லை. ஆனா எல்லாரும் கொடுப்போம். அதெ போல தினமும் எதாவது ரெண்டு பழங்கள்ஆரஞ்சோ, ஆப்பிளோ கொண்டு போகணும். அங்கெ ஒரு கூடை இருக்கும். அதுலெ போட்டுறணும்.பத்தரை மணிக்கு அந்தப் பழங்களையெல்லாம் மதர் ஹெல்ப்பர் கழுவித் துண்டங்கள் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் விநியோகிக்கணும். இது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. பசங்க வயத்துக்குள்ளே பழங்கள் போக நல்ல ஏற்பாடு. ஒண்ணைப் பார்த்து இன்னொண்னும் கீழே வீசாமத் தின்னுதே, அதுவரைக்கும் நல்லதுதானே?


ஒரு அறையிலே தரையிலே இருக்கும் விளையாட்டுச் சாமானையெல்லாம் சேகரிச்சு அந்தந்த இடத்துலே ஒழுங்காஅடுக்கிவச்சுட்டுத் தலை நிமிரும்போது இன்னொரு பிள்ளை ஓடிவந்து எல்லாத்தையும் டமடமன்னு தள்ளி வீசி எறிஞ்சுட்டுப் போகும். அதையெல்லாம் மறுபடி அடுக்கணும். நாம அடுக்கி முடிச்சது எப்படித்தான் இந்தப் புள்ளைகளுக்குத் தெரியுதோ,இன்னொண்ணு ஓடிவரும் அதையெல்லாம் தள்ளறதுக்குன்னே. பல்லைக் கடிச்சுக்கிட்டு இதையெல்லாம்கூடச் செஞ்சுறலாம்,ஆனா முகத்தை புன்சிரிப்பா வச்சுக்கிட்டே இருக்கணுமே அதுதான் படா பேஜார். இன்னொருத்தர் பிள்ளைங்ககிட்டே கோபம் காட்ட முடியுமா?


உள்ளெ இந்த கலாட்டான்னா, வெளியே மணல் போட்டு வச்சுருக்கற இடத்துலே விளையாடற பிள்ளைங்களுக்குத் தலை, மூஞ்சு வாயெல்லாம் மணல். வெள்ளைக்காரப் பசங்களுக்கு முடி கொஞ்சம் மெல்லிசா இருக்கு. அவ்வளோ அடர்த்திஇல்லை. ச்சின்னமுடி வேற. மணல் பட்டாலும் தலையை ஒரு உதறு உதறுனா முக்காவாசி கீழே விழுந்துரும்.நம்ம பசங்களுக்கு திக்கான முடியிலெ மணல் மாட்டிக்கிட்டு ஒரே நறநற. தினம் ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டுனதுலேமுடி சரியாக் காயாம ஜுரம், மூக்கு ஒழுகறது, இருமல்னு அது ஒரு கஷ்டம். இந்த அதிகப்படி வேலைகளாலெ நானே துவண்டு போயிட்டேன்.


ரெண்டு வாரம் இப்படியே போச்சு. ரெண்டாவது வாரக் கடைசி நாளில் ஒரு பையன் ( பேர் ஜோஷுவா) மகள் தலையிலே மணலைக் கொட்டுனதுமில்லாமல் அவளை அடிச்சுட்டான். வாழ்க்கையிலே முதல் அடி. அதிர்ந்து போனது மகள் மட்டுமில்லை,நானும்தான். மகளுக்கு அழுகையை நிறுத்தவே முடியலை. சமாதானப் படுத்தியும் தேம்பல் நிற்கவே இல்லை. வீட்டுக்குவந்தும் அழுகைதான், 'பள்ளிக்கூடம் வேணாம் பள்ளிக்கூடம் வேணாம்'னு. மறுநாள் காய்ச்சல் தீ மாதிரி காயுது. இங்கே வீக் எண்டுலே டாக்டர்களைப் பார்க்க முடியாது. எமர்ஜன்ஸி க்ளினிக்னு ஒண்ணு வெள்ளிக்கிழமை சாயந்திரம் அஞ்சு முதல் திங்கக்கிழமை காலை 9 வரை திறந்திருக்கும். மொத்த ஊருக்கும் இது ஒண்ணுதான். அங்கே போனா மூணுநாலுமணி நேரம் காத்திருப்பு எல்லாம் சர்வ சாதாரணம். அங்கே போய் அரைநாள் இருந்து மருந்து வாங்கிக்கிட்டு வந்தோம். அது என்னமோ தெரிலைங்க, இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் வீக் எண்டுதான் உடம்பு சுகமில்லாப் போகுது. ஆரம்பக் காலங்களில் ஏறக்குறைய ஒவ்வொரு வீக் எண்டும் இங்கே போயிருக்கோமுன்னா பாருங்க.


திங்கள் கிழமை வந்துச்சு. நாங்க பள்ளிக்கூடத்துக்குப் போகலை. இன்னும் நாலு மாசத்துலே ரெகுலர் ஸ்கூலுக்கேப் போனாப் போதுமுன்னு முடிவாச்சு. புதன்கிழமை வாக்குலெ பள்ளிக்கூடத்துலே இருந்து போன் போட்டுக் கேட்டாங்க,ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரலைன்னு. குழந்தைக்குப் பிடிக்கலை. இனிமே வரமாட்டோமுன்னு சொன்னேன். நாங்க பார்த்துக்கறொம், நீங்க கூடவே இருக்க வேணாமுன்னு சொன்னாங்கதான். ஆனா ......... எனக்கு விருப்பம் இல்லை.


இந்த நாட்டுலே பெத்தவங்களே குழந்தையை அடிக்க உரிமை இல்லை. அது ஒரு க்ரைம். மத்தவங்கஅடிக்கலாமா? ஊரார்கிட்டே அடி வாங்கவா பிள்ளையைப் பெத்துருக்கோம்?


இப்ப எனக்கு இருக்கற மெச்சூரிட்டி(???) அப்ப இல்லேன்றதும் ஒரு காரணம்.

28 comments:

said...

இப்படி அமெரிக்கா பக்கம் தேவலாம்...

எப்பவேணாலும் பள்ளிகூடத்தில சேத்துக்குவாங்க....

இங்க எல்லா பள்ளிகூடங்களுக்கும் பொதுவான பஸ்கள். எல்ல குழந்தையும் கூப்பிட்டு போய் விட்டுவிட்டு... அவங்களே திரும்ப விட்டுவிடுவாங்க...

கின்டர்கர்டெநில் எல்லாம் பசங்களையும் அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செய்ய சொல்லிகொடுகிறாங்க.....
ஒரு பையன் எதாவது செய்தால் அதை அவன் தான் திரும்ப கரெக்டாக செய்யவேண்டும்.
சாப்பாடு கூட அவங்க குடுகிற நேரத்தில் சாப்பிட்டுமுடித்துவிடவேண்டும். யராவது கொஞ்சம் லேட் பண்ணாலும் போது, சாப்பாடு தட்டை எடுத்து ட்ரஷ்-ல போட்டுவிடுவாங்க... அதனால குழந்தைகள் எல்லாம் சாப்பிடுவிடும்.

அடிபடுரது அடிவாகுவது எல்லாம் எல்லா இடத்திலையும் இருக்கு....

நாட்டுக்கு... நாடு வாசபடிதான்...

said...

ரெடிமேட் தையலில் ஆரம்பித்து.... பசங்க பள்ளிகூடத்துக்கு நல்லாவே வந்துயிருகீங்க....

said...

"இப்ப இருக்கிற மெச்சூரிட்டி அப்ப இல்லே என்பதும் ஒரு காரணம்"

ஹக் ஹக்

said...

இப்ப எனக்கு இருக்கற மெச்சூரிட்டி(???)
கரெக்ட் தான்!! 25 வயதுக்கு மேல் விழுகிற ஒவ்வொரு அடியும் பாடம் தான்.
அப்பகூட முதிர்ச்சி வரவில்லையென்றால் எப்படி??
தன்னால் வரும் அவரவருக்கு கொஞ்சம் மேலே கீழே இருக்கும்.

said...

அது யாரு அந்தப் பையன். ஒரு கை பாத்துறலாம்.
உண்மைலே துளசி,
குழந்தை அடி வாங்கினா ஜுரம் வரது நமக்குத்தான்.
மெச்சுரிடி எப்போ வரும்?
நாமே அப்போ சின்னவங்க தானே. முடிவு எடுக்கரது எல்லாம் யோசிச்சா செய்வோம்.
அப்போ என்ன நிலைமையோ அதை
அனுசரித்துச் செய்வோம்.
இப்பக் கூட எனக்கு மெச்சுரிடி இருக்குனு சொல்ல மாட்டேன்.வி ஆர் ரூல்டு பை இமோஷன்ஸ்.

said...

//லாமிங்டன்னு //

இது என்னாங்க மேட்டர்?

said...

//ராஜபோகம் 'மிஸ்'ஸாகப் போகுதுன்னு அப்பத் தெரியலை//
//அப்ப 'தானிக்கும் தீனிக்கும் சரி போயிந்தி'!!!//

ஹா ஹா ஹா. உண்மையோ உண்மை!
டீச்சர். மிக அருமாயான பதிவு. புலம் பெயர்ந்த நம் மக்கள் எவ்வளவு பொறுப்பானவர்களாகவும் பொறுமைசாலிகளாகவும் மாறுகிறார்கள் பாருங்கள்!

//ரோடு ஓரம் போட்டுவச்சிருக்கற பெஞ்சுங்களை ஒண்ணுவிடாம உக்கார்ந்து பார்த்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு மணி ஆகி இருக்கும்//

நெருடியது!!
உங்க பதிவை அம்மா, அப்பா மற்றும் என் மணமான தங்கை ஆகியோருக்கு ஒரு print எடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அடுத்த முறை நாங்க ஊர்ஸ் போகும் போது பாசம் இன்னும் கூடும் :-):-)

said...

நேரில் பார்ப்பது போல இருந்தது படிக்கும் போது. அம்மாவும் மகளும் நடையாய் நடந்து வீட்டுக்கு வருவது, குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, காய்ச்சலில் குழந்தை விழுவது எல்லாமே. காலையில் நல்ல படித்தல்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

வாங்க எலிவால்ராஜா.

இங்கே ஜனத்தொகை குறைவு. நாடும் வெறும் 166 வருசம்தான் ஆச்சு.

நூறு ரூல்ஸ் வச்சுக்கிட்டு இன்னும் ட்ரயல் & எர்ரர் & லேர்ன் காலக்கட்டம்தான்.

இப்பத்தான் புள்ளைங்களை எங்கெங்கே தொடலாமுன்னு அறிக்கை விட்டுக்கிட்டு
இருக்காங்க.

New guidelines for early childhood and primary school teachers
have given the green light to touching( நேத்திய டிவி நியூஸ்)

இந்த அழகுலே இங்கே பள்ளிக்கூடம் அனுப்பாமலெயே வெறும் ஹோம் ட்யூட்டரிங் கூட
வச்சுக்கலாம். ஆனா அஞ்சு வயசானா புள்ளைங்க எதாவது ஒரு விதத்தில் படிக்கணும்.

//நாட்டுக்கு நாடு வாசப்படி// :-)))))

தைய்யல், பள்ளிக்கூடம், இன்னும் அது இதுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்:-)

said...

என்னங்க சிஜி,

இப்பவாவது கொஞ்சம் மெச்சூரிட்டி இருக்கறமாதிரி காமிச்சுக்கலாமுன்னு நினைச்சா
அதுக்கும் இப்படி ஆப்பு நியாயமா?

said...

அது சரி. படத்தில் அந்த தையல் மிஷினை இயக்கும் தையல் நாயகி, சுட்டிப் பெண்ணைப் பற்றிப் பதிவில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே :-)

//இந்த நாட்டுலே பெத்தவங்களே குழந்தையை அடிக்க உரிமை இல்லை. அது ஒரு க்ரைம்//
சுட்டிப் பெண்ணைக் கன்னத்தில் கிள்ளலாமா? போலீஸ் எல்லாம் வந்துடாதே? :-):-)

said...

குமார்,

நீங்க சொன்னது சரி. இப்பத் தமிழ்மணம் வந்தபிறகு கிடைச்சிருக்கற மெச்சூரிட்டி
இன்னும்

கொஞ்சம் அதிகம்தான்.:-)

said...

வல்லி,

//வி ஆர் ரூல்டு பை இமோஷன்ஸ். //

இதுக்கு இப்ப உடம்பும் ஒத்துழைக்கணுமேப்பா.
ஓடிப்போய் அடிச்சுட்டு ஓடிவரமுடியறதா?

அதான் உக்காந்த இடத்துலேயே கொஞ்சம் கத்திக்கறது.
இல்லேட்டா ஒரு பின்னூட்டம் போட்டுக்கறது:-))))))

said...

கொத்ஸ்,

//லாமிங்க்டன்// இது பேர்தான் பிரமாதம்.

ஒண்ணுமில்லை. சாதாரண ஸ்பாஞ் கேக் சதுரமாப் பண்ணிக்கணும்.
அப்புறம் எட்டு இல்லே ஒம்போது செ.மீ அளவுலே அதை ஒரு க்யூபா கட் பண்ணிக்கணும்.
ராஸ்பரி சாஸ்/ராஸ்பரி ஜாம் கலந்த ஒரு திக்கான கலவையில் புரட்டி எடுத்து டெஸிகேட்டட்
கோகனட் லே இன்னொரு தடவை ஒட்டி எடுத்தால் தீர்ந்துச்சு.
இதுக்கே சாக்லேட் போட்டு வேற வகை ஆச்சு.

ஆறு துண்டுகள் உள்ள பேக் சுப்பர்மார்கெட் பேக்கரி செக்ஷனில் கிடைக்கும் பாருங்க.
ஒருவேளை உங்க ஊருலே வேற பேரோ என்னவோ?

said...

KRS,

கொஞ்சம் பொறுங்க. புத்தகமாப் போடற எண்ணம் இருக்கு. பேசாம அப்ப
அதையே வாங்கிக் கொடுங்க அம்மா, அப்பா & தங்கைக்கு.

( அப்பாடா... எப்படியோ ஒரு புத்தகம் வாங்க ஆள் கிடைச்சாச்சு.)

said...

வாங்க சிவகுமார்.

//காலையில் நல்ல படித்தல். //

இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்.

said...

KRS,

அந்தச்சுட்டிப்பெண் இப்போ கராட்டே, டெய்கொண்டோ எல்லாம் படிச்சுருக்கு.
பரவாயில்லைன்னா கன்னத்தைக் கிள்ளலாம்:-)

//பெண்ணைப் பற்றிப் பதிவில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே :-)//

அவுங்கதான் நம்ம 'கினிபிக்'. மதிப்பாச் சொல்லணுமுன்னா நம்ம மாடல்.
நான் தைச்ச உடுப்பு ஒண்ணு போட்டுருக்காங்க பாருங்க:-))))

said...

adada.. chinna paiyan thaane adichan? namma ooru madhiri samarasam samadanam ellam kidaiyada anga? :(

said...

குழந்தைகளுக்குள் அடித்துக் கொண்டால் பெற்றவர்களுக்குத்தான் ஜுரம் ஏறும். குழந்தைகளோ சில நிமிடங்களுக்குள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிடுவாங்க.

பெரியவங்க சண்டை தான் இந்தியா பாகிஸ்தான் வார் மாதிரி நீடிக்கும். குழந்தைகள் சண்டையில் பெரியவங்க தலையிட்டாலும் அப்படித்தான்.

said...

ராசமணி தொடர்கதையின் நிறைவுப் பகுதி வெளியாகிவிட்டது.

http://ava-1.blogspot.com/2006/09/12.html

கதை பற்றிய உங்கள் விரிவான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். நிறைகளை மட்டுமல்ல குறைகளையும்.

said...

பொற்கொடி,

வாங்க.


இங்கே எல்லாத்துக்கும் never mind, it's alright, naughty,
please don't do, say sorry இப்படித்தான்.

நாமோ வந்த புதுசு. ஒண்ணும் பழக்கவழக்கம் புரியாமக்கிடந்தோம் இல்லையா?

said...

வாங்க வலைஞன்.

அதெ அதெ. பிள்ளைங்க சேர்ந்துக்கும். பெரியவங்கதான் ஜென்மவிரோதியாப் போயிருவாங்க.

உங்க பதிவுக்கு அங்கெ பதில் தாரேன். தகவலுக்கு நன்றி.

said...

//தமிழ்மணம் வந்தபிறகு கிடைச்சிருக்கற மெச்சூரிட்டி
இன்னும் கொஞ்சம் அதிகம்தான்.:-)//


துளசியக்கா இது ரொம்பவே நிஜம்.

said...

வாங்க ஹரிஹரன்.

வெகுஜனப் பத்திரிக்கையிலெ இருந்து மாறுபட்ட ஒரு வாசிப்பு
நமக்கு இந்த வலைப்பதிவுகள் மூலம் கிடைச்சிருக்குதானே?

அங்கே பத்திரிக்கை நிர்வாகம் அவுங்களுக்கு விருப்பமானதைப்
போடுவாங்க. நமக்கு ச்சாய்ஸ் இல்லை. இங்கே எல்லாம் நம் கையில்.

said...

டீச்சர், பிள்ளைகன்னா அப்படியிப்படித்தான் விளையாடும். நாங்கூட சின்னப்பிள்ளைல தூத்துக்குடியில மூனாப்பு கூடப் படிச்ச ராஜேஷ்ங்குற பையன் காதுக்குள்ள பென்சில வெச்சிக் கொடஞ்சிட்டேன். இத்தனைக்கும் அவன் ரொம்ப நல்ல நண்பன். அவங்க அம்மாவும் நல்லாத் தெரியும். அமைதியா வீட்டுக்கு வந்து ராகவன் இப்படிச் செஞ்சானாம். ராஜேசுக்குக் காது வலிக்குதுன்னு அத்தை கிட்ட சொல்லீட்டுப் போயிட்டாங்க. அதுக்கப்புறமும் அவங்க வீட்டுக்குப் பல வாட்டி போயிருக்கேன். ஆனா அவங்க சிடுசிடுத்ததேயில்ல. நா வழக்கமா அப்படிச் செய்யறதில்ல. ஆனா அன்னைக்கு ஏன் அப்படிச் செஞ்சேன்னு எனக்கே தெரியாது. அது மாதிரிதான் ஒங்க பொண்ணு விசயத்துலயும் நடந்திருக்கும். சின்னப்பசங்க கிட்ட சொல்லித் திருத்தப் பாக்கலாம். தப்பில்லை.

said...

அய்யய்யோ ராகவன்,

இப்ப ராஜேஷ் காது பிரச்சனை இல்லைதானே?

நீங்க சொல்றதுபோல பிள்ளைங்க பிள்ளைங்கதான்.
நம்மூர்லேன்னா புள்ளைங்களுக்கு எங்கே அடி கிடைச்சிருமோன்னு
ஒரு பயம் இருக்கும். இங்கெ அப்படி ஒண்ணும் இல்லையே.

மால்களிலே சில புள்ளைங்க தரையிலே அப்படியே உருண்டு அங்கப்பிரதட்சணம்
செஞ்சு அழும். அவுங்க அம்மா சொல்வாங்க,' ரிச்சர்ட்( எதோ ஒரு பேர் போட்டுக்குங்க)
ப்ளீஸ் ப்ளீஸ் , யூ ஆர் அ குட் பாய். கமான் மை லவ்'னு!

said...

குழந்தைகளை வளர்க்க பெத்தவங்க என்னென்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கிறாங்கன்னு உங்க பதிவைப் படிச்சதும் உணர முடிஞ்சது. இந்த ஜூரம் வர்ற விஷயத்துலயும் காரணம் இல்லாம அழற விஷயத்துலயும் நான் சின்னக் குழந்தையில நம்பர் ஒன்னாம். உங்களைப் போலவே பல வாட்டி 24 ஹவர்ஸ் க்ளினிக், ஆஸ்பத்திரின்னு பல தடவை என்னை ராத்திரில தூக்கிட்டு ஓடிருக்காங்களாம்.

ஒவ்வொருத்தருக்கும் உங்கப் பதிவைப் படிச்சதும் ஒவ்வொண்ணு தோணிருக்கு...எனக்கு ஏனோ இது தான் தோணுச்சு.

said...

வாங்க கைப்புள்ளெ.

இந்தப் பசங்களுக்கு வீக் எண்டுலேதான் எல்லாம் வரும். அங்கே 24 மணி நேரம் க்ளினிக்லே
போய் உக்காந்து 'தேவுடு காக்க' எல்லாத் தாய்தகப்பனுங்களுக்கும் 'கொடுத்து வச்சிருக்கு':-))))

புள்ளை வளர்க்கறது சுலபமில்லைப்பா. அதுவும் இந்தக் காலத்துலெ. கூட்டுக்குடும்பம் போயிருச்சுல்லெ?