Friday, September 15, 2006

சிக்கு புக்கு ரயிலே (பாகம் 1)



யாரும் ஓட வேண்டாம். எடுத்தவுடனே ஒரு 'டிஸ்கி' போட்டுக்க்கறேன். பதிவு கொஞ்சம்(??) நீளமாப் போனதாலே ரெண்டு பகுதி(தான்) வரப்போகுது.


ஹய்யாரே ஹய்யா.......... ரயிலிலே போறதுன்றது இப்பெல்லாம் ஆடம்பரமாப் போச்சு.எங்கே போணுமுன்னாலும் கார்தான். இந்தத் தீவுலே இருந்து அடுத்த தீவுக்குப் போணுமா?அப்பவும் கார்தான்! காரோடு அங்கே போயிட்டு, காரையும் படகுலேயே ஏத்திக்கிட்டுப் போய்வர்றதுதான். அங்கே போய் இறங்குனவுடனே சுத்திப் பார்க்க வண்டி வேணுமா இல்லையா?


ரயில்லே போறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், நாங்க ச்சின்னப்பிள்ளைகளா இருக்கும்போது, 'பட்டணத்துக்கு'ப் போறதுன்னாவே கொண்டாட்டம்தான். என்னதான் மெயில்,எக்ஸ்ப்ரெஸ்ன்னு இருந்தாலும் பாஸெஞ்சர் வண்டின்னா இன்னும் மஜா. ஆனா...........வீட்டுலே அம்மா சம்மதிக்க மாட்டாங்க. சாயந்திரமா ரயில் ஏறுனா, மறுநாள் காலையில் பட்டணம்.


ரயில்லே போறதுக்கு அப்பெல்லாம் முக்கிய ஆக்ஸெசரி 'ரயில் கூஜா'. கூஜா மேலே எனக்குத்தீராத ப்ரேமை. என்னை, அக்கா தூக்கிக்கணும், நானு கூஜாவை. பாவம் அக்கா. வயசுப் பொண்ணு,இடுப்பிலேயா குழந்தையைத் தூக்கிக்கும்? ஸ்டைலா இடது கையை மடிச்சுத் தூக்கும். என் கையில் இருக்கும் கூஜா அக்கா முதுகில் உரசிக்கிட்டு............ ச்சீச்சீ..... ராட்சஸி. யார்? எல்லாம் நாந்தான்(-:


ஒவ்வொரு ஜங்ஷன்லேயும் ரயில் அப்பெல்லாம் அரைமணி நேரம்கூட நிக்கும்.கீழே இறங்கி தண்ணீர் பிடிச்சுக்குவோம். ப்ளாட்பாரத்துலே நடந்துபோய் அங்கே கொஞ்சம் வேடிக்கை. வண்டி எங்கே 'விட்டுட்டு'ப் போயிறப்போகுதோன்னு ரொம்பப் பக்கத்துலேயே இருப்பேன். அண்ணன் மட்டும் கொஞ்சம் வீரதீர பராக்கிரமத்தைக் காமிக்க இந்த நேரத்தைப் பயன்படுத்திக்குவாரு. விஸில் ஊதுனவுடன் பாய்ஞ்சு ஏறிக்குவார்..



நல்லா விவரம் தெரிஞ்சபிறகு ரயில் ஸ்டேஷனுக்குப் பக்கத்துலே வீடு. அம்மாவுக்குச் சுகமில்லை. அக்கா வந்து உதவிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கு அப்ப மூணு பிள்ளைங்க. மூணாவதுக்கு ஒரு வயசு. பொழுதண்ணைக்கும் 'நைய் நைய்'ன்னு அழும். அதுக்கு வேடிக்கை காமிக்கற ( எல்லாம் காலம். நான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளையா இருந்து ச்செல்லம் கொஞ்சுனதெல்லாம் போச்சு) வேலை/கடமை பத்துவயசுக்காரி எனக்குத்தான். 'ரயில் பார்க்கலாம் வா'ன்னு கூட்டிக்கிட்டுப் போயிருவேன்.


கரி இஞ்சிந்தான். கபகபன்னு புகையைத் துப்பிக்கிட்டு வரும். மேலே ஓவர்பிரிஜ்லே நின்னுக்கிட்டு அந்தப் புகைவர்ற சிமினியைப் பார்க்கணும். நாலஞ்சு ரயில் போனபிறகு வீட்டுக்குத் திரும்புவோம். வேற யார்வீட்டுப் பசங்களோ வருதுன்னு முதல்லெ அக்கா பயந்துட்டாங்க. அதான் கரிபிடிச்ச மூஞ்சிகளோடு இருந்தோமே.


படிப்பு முடிஞ்சு, வேலைக்குப்போன காலத்துலேயும் ரயிலுதான். ஆனா மின்சார ரயில். கரி இஞ்சினுங்க கொஞ்சம்கொஞ்சமா மறையத்தொடங்கி டீஸல் இஞ்சினு வந்துருச்சு. கல்யாணம் கட்டுன புதுசுலே விசாகப்பட்டினத்துக்குப் போறேன். ராத்திரி வண்டி. ரொம்ப வேடிக்கை பார்க்கறதுக்கு இல்லை. மறுநாள் பொழுது விடிஞ்சபிறகு, 'தடதட'ன்னு கோதாவரி ஆத்துப் பாலத்துலே வண்டி போகுது. ஹய்யோடா.... எவ்வளோ பெரிய பாலம். பக்கத்துலே இருந்தவங்கஒரு காசைச் சுண்டி விட்டாங்க தண்ணிக்குள்ளே. கையெடுத்துக் கும்பிட்டாங்க நதியை. ஓஓஓஓஓஓ அப்படியா சேதி.அவசரஅவசரமா நானும் ஒரு காசை எடுத்துத் தண்ணியிலே எறிஞ்சேன். விஷ்ஷிங் வெல்?


அதுக்கப்புறமும் நிறையதடவை ரயிலில் போயாச்சு. ஒரு சமயம் பிருந்தாவன்லே பெங்களுர் போனதுலே ஒரு கஷ்டமான விஷயம். அப்பெல்லாம் பிருந்தாவனை விட்டா வேற வேக ரயில் கிடையாது. காட்பாடி தாண்டுனவுடனே திடீர்னு ரயில் நின்னுபோச்சு. பத்து நிமிசம்போல ஆயிருச்சு. யாரோ ஒரு பொண்ணு, கைக்குழந்தையோட ரெயில் முன்னாலெ பாஞ்சுருச்சாம். சேதி கேட்டதும் குலை நடுங்கிப்போச்சு. அன்னைக்கெல்லாம் மனசே சரியில்லை.


கேரளாவுலே இருந்தப்ப நம்ம வீட்டையொட்டி ரயில் பாதை. மாடி வெராந்தாவுலே நின்னா போகவர்ற ட்ரெயினை கொஞ்சம் கையை நீட்டுனாப்போதும் தொட்டுறலாமுன்னு தோணும். அப்படி ஒரு ஆங்கிள். அதுவும் ஒரு ஐ லெவல்லே இருக்கும். ராத்திரியிலே அங்கே கடந்து போற ஐலண்ட் எக்ஸ்ப்ரெஸ், வெள்ளையா நல்லா ட்யூப்லைட் வெளிச்சத்தோட இருக்கும். பொட்டியிலே இருக்கற ஆளுங்கெல்லாம் பளிச்னு தெரிவாங்க. தினமும் அந்த ட்ரெயின் போறதைப்பார்த்துட்டுத்தான் தூங்குவேன்.


பூனாவுக்கு வந்தப்புறம் நாங்க இருந்த ஒரு வீட்டுக்குப் பின்புறம் ரெயில்வே லைன் இருந்துச்சு. கடைசி வீடுன்றதாலே திறந்த வெட்டவெளி. நம்ம போர்ஷன் இருந்தது மாடியிலே. அடுக்களை ஜன்னலைத் திறந்து வச்சா ரெயில் பார்க்கலாம்.ஆனா பேய்க் காத்து. அப்படியும் ரெயில் சத்தம் கேட்டவுடன் ஜன்னலைக் கொஞ்சூண்டாவது திறந்து பாக்கறதுதான்.
அங்கெ கிடைச்ச நண்பருக்கு நண்பரின் மகன் ஒரு ரெயில் பைத்தியம். ரயில் ஓட்டிக்கிட்டுப் போறதுதான் அவன் வாழ்க்கையின்(???) லட்சியமா இருந்துச்சு. தப்பே சொல்ல முடியாது, பையனுக்கு வயசு வெறும் நாலுதான்.நம்ம வீட்டுக்கு வர்றதுன்னா ஏகக்குஷி. வெறும் தண்டவாளத்தைப் பார்த்தெ புல்லரிச்சு நின்னுருவான். எனக்குச் சரியான தோழன்.


"ஃபிஜித்தீவுலே 'சுகர் ட்ரெயின்' ஓடுது. இலவசமாவே போகலாம்". இப்படித்தான் சொன்னார் நம்மை இந்தியாவுலே சந்திச்ச பிஜிக்காரர். மனக்கோட்டைக் கட்டிக்கிட்டு அங்கெ போய்ப்பார்த்தா.................ட்ரெயின் இருக்கு. கரும்பை ஏத்திக்கிட்டுப் போகுது. ஆனா மக்கள் ஏறிக்கிட்டுப்போக ரெயில் பெட்டி கிடையாது.ரயிலும் எதோ பொம்மை ரயில் மாதிரி இருக்கு. அது போற வேகத்தைவிட நானே நல்லா நடப்பேன். ஓட்டற எஞ்சின் ட்ரைவருக்கே நிக்க இடமில்லை. இதுலே நாம?


இந்தியாவுக்கு ஒரு சமயம் வந்தப்ப டெல்லிக்குப் போகச் சான்ஸ் கிடைச்சது. ரெண்டு நாள் போய்க்கிட்டு இருக்கலாமுன்ற ஆசையிலே ரயிலுக்கே என் ஓட்டு. பயணம் ஆரம்பிச்சதும் மனசெல்லாம் நொறுங்கிப் போச்சு. அது என்ன ஏஸி காரோ?வெளியே நடக்கறது(??) ஒண்ணுமே தெரியாமஃப்ராஸ்ட்டட் கண்ணாடி. வேடிக்கையா பாழா? வெளியே இப்படீன்னா, உள்ளே? ரெண்டு ச்சின்னப்பிள்ளைகளோட பயணம் செய்யுற பெற்றோர்கள். புள்ளைங்க அழுதவாயை மூடலை ரெண்டு நாளும். ரயிலுக்கு இனிமே ஓட்டுப் போடுவியா போடுவியான்னு என்னையே செருப்பால அடிச்சுக்காத குறை. திரும்பி வர்றதுக்கு இருந்த டிக்கெட்டை முதல்லெ ரத்து செஞ்சுட்டு, சென்னைக்கு இண்டியன் ஏர்லைன்ஸ்லே திரும்பினோம். அப்ப இது மட்டும்தான். மத்த ஏர்லைன்ஸ் ஒண்ணுமே இல்லை.


அதுக்கப்புறம் சில வருசம் கழிச்சு இங்கே வந்து சேர்ந்தாச்சு. பொன்னு மாதிரி மூணே ரயிலுங்க இங்கே ஓடிக்கிட்டு இருந்துச்சு. வடக்கே போக ஒண்ணு, தெக்கே போக ஒண்ணு, மேற்கே போக ஒண்ணு. கிழக்கே ஏன் போகலைன்னு கேக்கமாட்டீங்க தானே? கிழக்கே கடல்தான்.


கொஞ்ச நாளுலே தெக்கே போற வண்டிக்கு வச்சாங்க ஆப்பு. ஆளுங்க ரொம்பப் போறதில்லையாம். நஷ்டமா ஓடுதாம்.இங்கே ஒரு ஆளுக்கு டிக்கெட் வாங்கற காசுலே நாலுலெ ஒரு பாகம் செலவு செஞ்சா கார்லே நாலு பேர் போயிட்டு வந்துறலாம். பகல் கொள்ளை. அப்புறம் எப்படி ஆள் சேருமாம்?


மேற்காலே போற வண்டி ஒரு எக்ஸ்கர்ஷன் ட்ரிப் வண்டி.ஏறக்குறைய பாதி தூரத்துலே ஒரு மலைத்தொடர் இருக்கு.அந்த மலையைக் குடைஞ்சு ரெயில்பாதை போட்டுருக்காங்க. நாங்க அந்த மலைத் தொடர்வரை பலமுறை காருலே போயிட்டு வந்துருக்கோம். எல்லாம் இயற்கை அழகை ரசிக்கத்தான். மலைமேலே ஏறிப்போனா ரெண்டு மூணு அருவிங்க இருக்கு, 'ப்ரைட்ஸ் வெய்ல், பஞ்ச் பவுல்'ன்னு. இங்கே வந்த புதுசுலே ஒரு ஆர்வக்கோளாறுலே அந்த 'பஞ்ச் பவுல் போய் வந்தோம். தெளிவான தண்ணி. தொடவே முடியாத அளவுக்கு ச்சில்லுன்னு இருந்துச்சு. இப்ப அங்கெ மலை ஏறிப்போக நம்மாலெ ஆகாது. அப்ப தெரியாத்தனமா ஏதோ ஒரு குருட்டு தைரியத்துலெ போனது.


இங்கே ஒருக்கா ரயில் ஏறிப்பார்க்கணுமுன்னு ஆசை இருந்தாலும், பகல் கொள்ளையைப் பார்த்து பயந்துக்கிட்டு இருந்தோம். போன மாசம் குளிர்கால ஸ்பெஷல்ன்னு ஒரு தள்ளுபடி அறிவிச்சாங்க. 50 சதமானம் கழிவு. இதைவிட்டா வேற ச்சான்ஸ் கிடைக்காது. பெட்ரோல்வேற தாறுமாறா விலை ஏறிக்கிடக்கு.பேசாம இதுலே போய் வரலாமுன்னு தோணிப்போச்சு.
பாதி வழி போனாலும் அதே காசு. கடைசி வரை போனாலும் அதே காசு( எல்லாம் ப.கொ) அன்னிக்கே திரும்பிவர்ற ப்ளான். ரெண்டு நாள் கழிச்சுப் போய்வர டிக்கெட் வாங்கியாச்சு. 20 நிமிஷத்துக்கு முன்னாலே ஸ்டேஷனுக்கு வந்துறணுமாம். நம்ம காரை அங்கே விட்டுட்டுப் போகலாமாம். அதுக்குப் பார்க்கிங் சார்ஜ் இல்லையாம். தாராளப் பிரபுங்க.


ஃப்ளாஸ்க்லே பாலும் தண்ணியுமாக் கொதிக்கவச்சு நிரப்பிக்கிட்டேன். டீ, சக்கரை, மக், குடிதண்ணி, எலுமிச்சம் சாதம்,சிப்ஸ், இன்னும் சில தீனிகள் எல்லாம் பக்காவா ரெடி. காலையில் எட்டேகாலுக்கு வண்டி. எட்டுமணிக்கே ஸ்டேஷனுக்குப் போயாச்சு. அங்கே ஒரே கூட்டம். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளாக் குவிஞ்சிருக்காங்க. முப்பதுபேருக்குக் குறையாம இருக்காங்க. நம்ம ரிஸர்வேஷனைக் காமிச்சதும் ஸீட் அலகேஷன் ஆச்சு. அன்னிக்கே திரும்பி வர்றதாலே அதுக்கும் சேர்த்து ரெண்டு போர்டிங் பாஸ் கொடுத்தாங்க.


வெளி பில்டிங்குலே இருந்து ப்ளாட்ஃபாரம் போக ஒரு ஆட்டோமாடிக் கதவு. அதுக்குள்ளே போனா ரெயில் நின்னுக்கிட்டு இருக்கு. இடம் பார்த்து உக்கார்ந்தாச்சு. நடுவிலே நடைபாதை விட்டு ரெண்டு பக்கமும் நடுவிலே ஒரு மேஜை போட்டு நவ்வாலுபேர் உக்காரலாம். நம்ம பெட்டியை நோட்டம் விட்டா ஒரு பத்துப்பேர் இருந்தாங்க.( நாலு பேருக்குமேலே இருந்தா அது கூட்டம் எனக் கொள்க)


உள்ளெ ஒரு கேஃபே கவுண்ட்டரும் இருக்கு. ஸ்நாக்ஸ் ஆன் ட்ராக்ஸ் (Snacks on Tracks).மெனு கார்டு எல்லாம் அட்டகாசமா ஒவ்வொரு மேசையிலும் வச்சிருக்காங்க. சாப்பாடுகள், காஃபி டீ & குடி வகைகள்( இது இல்லாமலா?)


டாண்ன்னு எட்டேகாலுக்கு வண்டி கிளம்பிருச்சு. PA சிஸ்டத்துலே ட்ரைவர் எல்லோரையும் வரவேற்று, அவரோட க்ரூ மெம்பர்கள் பேரையும் சொல்லி அன்னிக்குப் ப்ரோக்ராமைச் சொன்னார். அவரேதான் நம்ம கைடு. முதல் அஞ்சு நிமிசத்துக்கு நம்ம வீடு எங்கே இருக்கு, இங்கெயிருந்து பார்த்தாத் தெரியுதான்ற ஆராய்ச்சி. நம்ம வீட்டாண்டை இருக்கும் சர்ச் கோபுரம் தெரிஞ்சது. வீட்டையே பார்த்தமாதிரி ஒரு திருப்தி. ( என்னா இது ச்சின்னப்புள்ளைத்தனமால்லே இருக்கு!)


வழக்கமா ரோடுலெ இருந்து பார்க்கற ரயிலுக்கும், ரயிலுக்குள்ளெ இருந்து பார்க்குற ரோடுக்கும் பெரிய வித்தியாசம் இருக்குதுங்கோவ். ஒரு வழியா சிட்டி லிமிட்டைத் தாண்டிட்டோம். ரெண்டு பக்கமும் ஆடுங்களா மேயுதுங்க. எங்கநாட்டுலே மனுஷரைவிட ஆடுங்க ஜாஸ்த்தி. ஆளுக்கு 12 ஆடு இருக்கு. ஏறக்குறைய 5 கோடி ஆடுங்க.இன்னும் குளிர்காலமே முடியலை. அதுக்குள்ளே சில ஆடுங்க குட்டி போட்டுருக்குங்க. 'மழை பெய்யறதும், புள்ளை பெறக்கறதும் மகாதேவனுக்கே தெரியாதாமே' (இந்த இடத்துலே மகாதேவன்= கடவுள்) ச்சும்மாவே துள்ளித்துள்ளி குதிக்குதுங்க இந்தக் குட்டிங்க.

( அடுத்த பகுதி விரைவில்)

19 comments:

said...

பதிவு பேரைப் பாத்ததுமே முடிவு பண்ணியாச்சு என்ன பின்னூட்டம் போடலாமுன்னு. அது

கூகூ சிக்கு புக்கு சிக்கு புக்கு சிக்கு புக்கு சிக்கு புக்கு கூஊஊஊஊ...

கடகட வண்டி காமாட்சி வண்டி
கிழக்கே போகுது மீனாட்சி வண்டி
கொசுவர்த்தி சுத்து டீச்சரோட வண்டி
கூஊஊஊஊஊ

அப்புறம் படிக்கும் போது, இதைப் பார்த்தேன்..

//கிழக்கே ஏன் போகலைன்னு கேக்கமாட்டீங்க தானே?//

கேட்க மாட்டோமே. அது மீனாட்சி வண்டியாச்சே. மதுரையில் வேணா ஓடும். நியூசியில் ஓடுமா? ஹிஹி

சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்க. படிச்சிட்டு ட்ரெயினைப் பிடிக்கணும்!

said...

வாங்க கொத்ஸ்.

சரியான பாட்டாப் புடிச்சுப்போட்டுட்டீங்க.:-))))

said...

ரயிலு??
நாகப்பட்டிணத்தில் அப்பாவுக்கு அங்குதான் வேலை ஆனாலும் நாங்க பார்த்ததோ வேற!! :-))
அதெப்படிங்க ஊர் ஊரா போயிருக்கீங்க??
விஜயவாடா
கேரளா
டெல்லி
பிஜி
தற்போது அங்க..
ஏதோ போங்க..எங்களுக்கும் சில விஷயங்கள் இதன் மூலம் கிடைக்குதல்லவா.
அது போதும்.

said...

கலைவாணர் என்.எஸ்,கே யின்
கிந்தனார் காலட்சேபம் கேட்ரிக்கேளா?

முடிஞ்சா தேடிப்பிடிச்சு படியுங்க;பதிவு
போடுங்க{இதாம்பா பெரிசுகள்ட்டே
தொல்லை. இப்பத்தெ பற்றி ஏதாச்சும்
சொன்னா ஒடனே எப்பத்தியோ நிகழ்ச்சி பற்றி ஏதாவது ஆரம்பிச்சுடும்}

என்னாலெ தேடமுடியாது.'பைத்தியக்காரன்'
படத்திலே இது வரும்.
இல்லாங்காட்டி 'நல்லதம்பி'ய
பாருங்க{கேளுங்க}

said...

வாங்க குமார்.

பொறந்ததுலே இருந்து இப்படி ஊர் ஊராப் போய்க்கிட்டு இருக்கற நாடோடி நான்.

வாழ்நாளிலே அதிகம் இருந்த இடமுன்னா இப்ப இருக்கறதுதான். 19 வருசம்.

காலிலே சக்கரம்?

said...

சிஜி,
பூடகமாச் சொன்னா எப்படி?
இப்ப எங்கேன்னு போய்த் தேடறது?
மேல்விவரம் தாங்களேன் ப்ளீஸ்

said...

'கிந்தனார் காலட்சேபம்'- நந்தனார்
கதையின் 'உல்டா'. 'உல்டா'ன்னதும்
குறைத்து மதிப்பிடவேண்டாம்.இத்தகைய முயற்சி ஆங்கில இலக்கியத்தில் உண்டு. தமிழில் பம்மல் சம்பந்த முதலியார் முயன்றார். 'ஹரிச்சந்திரா'வை
'சந்திரஹரி'யாக எழுதினார்.உங்கள்
சிறுவயதில், சந்திரஹரி இசைத்தட்டு ஒலிபரப்பப்பட்டு கேட்டிருக்கக் கூடும்

கிந்தன் எனும் உள்ளடங்கிய ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்நாள் லட்சியம் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ரயிலை தரிசித்துவிட வேண்டும் என்பதுதான்.ரயில் பற்றிய அவனுடைய க்ற்பனைகள்.....

'கிந்தன் கதை' இசைத்த்ட்டாகவும்
வந்திருக்கக் கூடும்.என்.எஸ்.கே பிலிம்ஸின் 'பைத்தியக்காரன்' பட்த்திலும் கிந்தனார்காலட்சேபம் இடம்
பெறுவதாக நினைவு. இல்லாவிட்டால்
'நல்லதம்பி' திரைப்படம்

said...

ரயில்ல போறதே தனி சுகம் தான் அதுவும் எங்க ஊர்லேயிருந்து (கோவை)
மலைப்பாதை ரயிலில் ஊட்டிக்குப் போவததற்கு இணையான கண் கவர் காட்சிப் பயணம் வேறு எங்கு உள்ளது.?
உங்கள் ஊரில் இருக்கலாம்!
எழுதுங்கள்

said...

நன்றி சிஜி.

'கிந்தன்' என் கூட்டாளியா இருக்க வேண்டியவன்:-))))))

எனக்கு இன்னும் ரயில் மோகம் தீரலையாக்கும்.

said...

வாங்க வாத்தியாரைய்யா.
சுகமா?

வெளியே சொன்னா வெக்கக்கேடு,நான் இன்னும் ஊட்டி ரயிலில் போனதில்லைங்க. படத்துலே பார்த்ததோட சரி(-:

உள்ளூர் விசேஷங்களுக்குன்னே ஒரு ட்ரிப் அடிக்கணும். பார்க்கலாம், வாய்க்குதான்னு.

said...

ரயில இப்பிடிப் பாதி வழியில நிறுத்தி வெச்சிட்டீங்களே துளசிம்மா:)) எப்ப அடுத்த பாகம் வந்து போய்த் திரும்பி வர்றது நாங்கெல்லாம்:)) கொஞ்சம் சீக்கிரம் வண்டியக் கிளப்புங்க.

said...

வாங்க செல்வா.

எஞ்சின் தண்ணி குடிக்கப்போயிருக்கு:-))

நாளைக்குக் கிளப்பிறலாம்.

க்கூஊஊஊஊஊஊஊஊஊ குச் குச்

said...

இரயில் மீது எனக்கும் மோகம் உண்டு. சிறுவயதில் பொழுதுபோக இரயில்நிலையம்தான். நீராவி இஞ்சினின் பலநிலை வளர்ச்சிகளை நானும் அசை போட்டேன். கண்ணில் கரி விழுந்தது போன்ற உணர்வு. ம்ம்.. நடத்துங்க!

said...

நமக்கு ரயில்ல தொலை தூரம் போற கொடுப்பினையே இல்லாம போச்சி!

நம்மளோட அதிகபட்ச ரயில்பயணமே தாம்பரம் to கோடம்பாக்கம் வரைதான்!

அடுத்த பதிவை விரைவில் போடுங்க!

said...

வாங்க மணியன்.

நம்மளிலே நிறையப்பேருக்கு ரயிலோடு சிநேகம் இருக்குல்லே?

அதுவே ஒரு சந்தோஷம்தான்.

said...

வாங்க தம்பி.

நீங்க 'தண்டவாளத்தைப் பத்திச்' சொல்றப்ப நான் அதுமேலே வழுக்காமப்போற ரயிலைப் பத்திச் சொல்லிட்டேன்.
ஒரு நாள் பேசாம 'தாம்பரம் டு கடற்கரை' போயிட்டு வரவேண்டியதுதானே? :-))))

said...

துளசி, என்னப்பா இத்தனை நல்லா ரயில்ல கூட்டிடுப் போயிட்டிங்க? இப்பவெ திருப்பி பழைய நாளுக்குப் போகலாமுன்னு தோணுது.
ஏதோ சிவாஜி படத்தில அவர் ரயில்வெ ஸ்டேஷன் மாஸ்டர். அப்போ ரயில் பார்த்தால் கம்பி கூட போடாத ஜன்னல்.
ரிசர்வேஷன் இல்லாமல் உள்ளே போக வழி?நானும் ரயிலைப் பைத்தியமாக சுத்தி வருபவள்.தண்டவாளங்களில் நடப்பதும் வேடிக்கை.எங்க ஊரில்ல் எப்பவாவதுதான் ரயில் வரும்.:-}}
அப்புறம் சிவஞனாம்ஜி வந்துடப்போறார். கிழங்கள் அசை போடறதைப் பாரேன்.என்று. முடிச்சுக்கறேன்.

said...

நம்ம வீட்டாண்டை இருக்கும் சர்ச் கோபுரம் தெரிஞ்சது. வீட்டையே பார்த்தமாதிரி ஒரு திருப்தி. ( என்னா இது ச்சின்னப்புள்ளைத்தனமால்லே இருக்கு!)//

உங்களுக்குள்ள அந்த சின்ன குழந்தை இருக்கறதுனாலதான் அப்ப நடந்ததையும் இப்ப நடக்கறா மாதிரி எங்க கண் முன்னால கொண்டு வரமுடியுது.. ரயில பிடிக்காத சின்ன குழந்தை இருக்க முடியுமா என்ன? நானும் சுமார் ஆறு வருசமா இந்த கரி எஞ்ஜின்ல பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ்லருந்து தினமும் செண்ட்ரல் வரைக்கும் பயணம் போயிருக்கேன்.. அது ஒரு சுகமான காலம்..

said...

டிபிஆர்ஜோ.

//ரயில பிடிக்காத சின்ன குழந்தை இருக்க முடியுமா என்ன?....

.. அது ஒரு சுகமான காலம்..//

சரியாத்தான் சொன்னீங்க. டீஸல் எஞ்சின் வந்தப்பிறகு வேகம் கூடியிருக்கே தவிர
பயணம் சுகம் இல்லாமப்போச்சு(-: