Monday, October 14, 2019

ஸ்ரீ ஜகந்நாத் தரிசனம் (பயணத்தொடர், பகுதி 155 )

மூலவர்கள் இருக்குமிடம் கருவறை இல்லை... கருஹால்...... அத்தனாம் பெருசு !
பளிச்ன்னு கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் நடுநாயகமா சுபத்ரா வலதுபக்கம் பலராமர், இடதுபக்கம் கிருஷ்ணன்  !  நல்ல பெரிய உருவம். பெரிய பெரிய கண்கள். பார்வைக்குத் தப்பவே முடியாது!   ரெண்டு கைகளையும் நீட்டி வச்சுக்கிட்டு நம்மை உத்துப் பார்க்கறாங்க !!!!
ஆறடி உயர பலராமர், நாலடி உயர சுபத்ரா, அஞ்சடி உயர க்ருஷ்ணன்!!   மூணுபேரும் நல்ல உயரமான அலங்கார பீடத்தில் நிக்கறதால் (!)  இன்னும் உயரமாத் தெரியறாங்க !  ஒல்லி எல்லாம் இல்லை. நல்லா கிண்னுன்னு குண்டு உருவம்தான். (தினம்தினம் அம்பத்தியாறுவகை விருந்து சாப்பிட்டால் ஒல்லியாவா இருப்பாங்க? )

'அச்சச்சோ..... அப்படியெல்லாம் இல்லை.... எங்களை மரத்தில் செஞ்சு வச்சுருக்காங்க..... அதான்'னார்  பலராமர் :-)


வேப்பமரமாம்.  ஏன் சாமியை மரத்துலே செஞ்சு.....

நம்ம கிருஷ்ணனின் கடைசி சமாச்சாரம் யாருக்காவது நினைவிருக்கோ? (விவரம் தெரியாத நண்பர்கள் துளசிதளத்தில் பார்க்கலாம்!  )

ஜரா என்னும் வேடனின் அம்பு, இவன் காலில் தைச்சு அதனால்.... மரணம்.  ஆவிதான் பிரிஞ்சதே தவிர உடலுக்கு ஒன்னும் ஆகலையாம்!  ஜலசமாதி ஆக்கிட்டாங்க.  மரக்கட்டையாட்டம் தண்ணியிலே மிதந்து அப்படியே வந்துக்கிட்டு இருக்கான்.

இந்த மரம் தகதகன்னு நீல நிறத்தில் ஜொலிச்சுக்கிட்டு  மிதந்து  வந்தது,  ஒரு காட்டு மக்கள் கூட்டத்துலே ஒருத்தர்  கண்ணுலே பட்டதும் எடுத்துவந்து வச்சுக்கிட்டாங்க. நல்ல கட்டை, அதுலே இருந்த பளபளப்பும், அதிலிருந்து வந்த ஒரு ஆகர்ஷண சக்தியும், இனிய மணமும் இது அபூர்வப்பொருள்னு பட்டுருக்கு.  மரத்தை வச்சுப் பூஜை செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. கள்ளமில்லாத சனத்தின் அன்பு பார்த்துட்டு கிருஷ்ணரே அந்த மரத்தில் காட்சி கொடுத்துருக்கார்.  நீலமாதவான்னு பெயரும் சூட்டியாச்சு!

உத்கல நாட்டை ( கலிங்க நாட்டின் பழைய பெயர் உத்கல. இதுதான் நம்ம தேசிய கீதத்தில் வரும் 'த்ராவிட உத்கல வங்கா'!) ஆண்டுவந்த அரசன் இந்த்ரத்யும்னன் , மஹாவிஷ்ணுவின் பக்தன். அந்த  எதோ உளவாளிமூலம்.... காட்டுசனம் பூஜிக்கும் மரத்தைக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கணுமுன்னு  வர்றார். அவர் கண்ணுக்கு மட்டும் அந்த மரம் புலப்படவே இல்லை.....

ரொம்ப வருத்தத்தோடு திரும்பிப் போனவருடைய கனவில்  ஒரு இடத்தைக் காமிச்சு  'இந்த இடத்தில் இருக்கும் இந்த  மரத்தைக் கொண்டு வந்து என்னைச் செதுக்கு. நான் அதில் இருப்பேன்'னு ஸ்ரீ விஷ்ணு  சொல்றார்.  மறுநாள்  அந்த இடத்தைத் தேடிப்போக  கனவில் வந்த வேப்பமரம் அங்கே நிக்குது.  மரத்துக்குப் பூஜை செய்து அதை வெட்டிக் கொண்டு வர்றாங்க.

அடுத்த பிரச்சனை எப்படி, எதைப்போல் விஷ்ணுவை செதுக்குவது? கண்டவர் யார்?  தேவலோகத்துலே இருந்து விஸ்வகர்மாவை வரவழைக்கணுமோன்னு யோசிக்கும்போதே,    அப்போ அங்கே வந்த ஒரு கிழவனார் , 'நான் செதுக்கித் தர்றேன்.  தனி அறை வேணும். ஆனால்  என் வேலை முடியுமுன் யாரும்  அறைப்பக்கம் வந்து, ஆச்சா ஆச்சா ன்னு விசாரிப்பதெல்லாம் கூடாது'ன்னார். சரின்னு ஒத்துண்டார் அரசர்.

தனி மாளிகை ஒதுக்கப்பட்டது. பூட்டிய அறைக்குள்ளே  மரத்தைச் செதுக்கும்  'உளியின் ஓசை'  கேக்குது  :-)
ஒரு பத்துப்பதினைஞ்சு நாட்களுக்கப்புறம்,  அறையில் இருந்து ஒரு சத்தமும் வரலை.  தச்சுவேலைத்  தாத்தாவுக்கு என்ன ஆச்சோன்னு  ராணியம்மாவுக்குக் கவலை.  தொண்டுக்கிழம்... ஒருவேளை மண்டையைப் போட்டுருச்சோ....   ராஜா எவ்ளோ சொல்லியும் கேக்காமல், அறையைத் திறந்து பாருங்கன்னு நச்சரிக்கிறாங்க. மனைவி சொல்லைத் தட்டமுடியுமா?

அறைக்கதவைத் திறந்தால்.....  பாதி செதுக்கிய நிலையில் சிலை இருக்க, வேற யாரையும் காணோம்.....  கிழவர் எங்கே?  வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதையாகிருச்சேன்னு  ராணியம்மா புலம்பறாங்க.....

அப்ப அசரீரி கேட்டது.....  "வருத்தப்படாதே....  இனி இப்படித்தான் இருப்பேன்.  ஜகந்நாத் என்ற என் பெயரில் ஒரு கோவில் கட்டி இதையே வச்சு பூஜை செய்.  கோவிலை அரண்மனைக்குள் கட்டாமல் வெளியில் எல்லா மக்களும் வந்து பூஜிக்கும் முறையில்  கட்டு"

ராணியம்மாவுக்கு,  ரொம்ப துக்கமாப் போச்சு.  'அரண்மனைக்குள் பக்கத்தில் வச்சு , தினமும் உன்னைப் பூஜிக்கணுமுன்னு ஆசை ஆசையா இருந்தேன். இப்படிச் சொல்கிறீரே ஸ்வாமி'ன்னு கேட்க,  'வருஷத்தில் எட்டுநாள் உன் அரண்மனைக்கு நானே வந்து உன்னோடு இருப்பேன்,இது என் வாக்கு'ன்னு பதில் வந்துருக்கு!

அதே போல ஒரு கோவில் கட்டி (ஜகந்நாத் மந்திர்)
மரச்சிலையை வச்சு பூஜிக்கிறாங்க.  இதெல்லாம்தான் ஆதிகாலத்து சமாச்சாரம்.   அதுக்கப்புறம்தான் பலராமர் சிலையும்  கூடச் சேர்ந்தது.  கிபி ஏழாம் நூற்றாண்டில் சக்தி வழிபாடு தீவிரமான காலக்கட்டத்தில்தான்  விஷ்ணுவின் தங்கையான விஷ்ணுதுர்கை வழிபாட்டின் காரணம், கிருஷ்ணனின் தங்கை சுபத்ராவின் சிலையும்  சேர்ந்து மூணு சிலைகளாக் கருவறையில்  கூட்டமாப் போயிருச்சு.  இப்போ நாம் பார்க்கும் இந்தக் கோவிலைக் கட்ட ஆரம்பிச்சது பதினோராம் நூற்றாண்டில்தான்.
மூலவர்களைக் கையெடுத்துக் கும்பிட நமக்கு அவகாசம் கொடுக்காமலேயே  'தக்ஷிண், தக்ஷ்ண் டாலோ'ன்னு   பணம் நிறைஞ்சு வழியும்  பெரிய தாம்பாளத்தைத் தட்டித்தட்டி, கையையும் பலமா ஆட்டி ஆட்டிக் கத்தறார் பண்டா... காசை எடுக்கச் சட்டைப்பையில் கைவிடுவதைப் பார்த்துத்தான் அவர் மனசு சமாதானமாகுது. (இன்னும் கொஞ்சம் மெள்ள எடுத்துருக்கலாமோ..... அதுவரை சாமிக்கு முன்னால் நிக்க முடியுமே! ) சட்னு நம்மவர் ஒரு நல்ல தொகையைத் தட்டில் போட்டதும்,  'அங்கே மூணுபேர் (சாமிகள்தான்) இருக்காங்க. இன்னும் போடு' ன்னு அதட்டறமாதிரிச் சொல்றார் அந்த பண்டா. இன்னொருக்கா இவர் காசைப் போட்டதும், இன்னும் இன்னும்னு கை காமிக்கிறார். எல்லாம் போதுமுன்னு நான் 'நம்மவராண்டை'  சொன்னேன். (ரெண்டாவது பிடி அவலை வாயில் போட்டுக்க விடாமக் கையைப் பிடிச்சாளாம் மனைவி ! )   வெள்ளையா என்னவோ ப்ரஸாதமுன்னு  இவர் கையிலே கொடுத்தாருன்னு நினைக்கிறேன். எனக்கொன்னும் தரலை :-)

நீட்டிமுழக்கிச் சொல்றேனே தவிர இதெல்லாம் ரெண்டு மூணு நிமிஷத்துக்குள்ளேயே  நடந்துருச்சு.... தரிசனம் முடிச்சதும் அப்படியே நமக்கிடதுபக்கம் நேராப்போய் அங்கிருந்த சின்ன வாசல் மூலம் வெளியேறிட்டோம். அப்பதான் தெரிஞ்சது நாம்  படிகளேறி தரிசிக்க வந்ததும் பக்கவாட்டு வாசல்னு!  (போகட்டும் ...  இடும்பிக்கு எப்பவும் தனி வழி இல்லையோ ! ) 

ஹரிஷங்கர் முன்னால் வேகநடைபோட,   நாமும் பின்னால் ஓட(!)வேண்டியதாப் போச்சு.  மற்ற சந்நிதிகளைக் காண்பிக்கிறாராம்!  கல்பதாருன்னு ஒரு  ஆலமரச்சுவட்டில் இருக்கும் குட்டி சந்நிதியில் காசி விஸ்வநாத் மஹாதேவ் இருக்கார். வழக்கமான லிங்க ரூபத்தை விட்டுட்டு, வெறும்  படம்தான். அடுத்து இதே போல சின்னதா இன்னும் ரெண்டு சந்நிதிகள்.... விளக்கில்லை, வெளிச்சமும் இல்லை..... நல்லா உத்துப் பார்க்கணும். ஸ்ரீராம்சந்த்  &  ஸ்ரீ நர்ஸிங். கற்சிலைகள்தான்....

இந்தாண்டை மரத்தைக் கடந்துபோனால்.... பதீத பாவன சந்நிதி. ரொம்பப் பெரிய ஆஞ்சி !  பூக்கள் அலங்காரத்தில் அட்டகாசமா இருக்கார். அவருக்கு எதுத்தாப்போல் சந்து மாதிரிப் போகும் வழியில் இன்னும் சிலபல சந்நிதிகள். ஒரு புள்ளையார் இருந்தார்.

இந்தாண்டை போனால் ஆனந்த் பஸார்னு ஒரு நுழைவுவாசல்.  மார்கெட்டுக்குள் வந்துட்டோமோ ன்னு  பார்த்தால் ப்ரஸாதம் விற்குமிடம். சரியா சந்தைக்கடைப் போலத்தான் இருக்கு!  மண்சட்டிகளில்  சமைச்சு வச்சதை அப்படியே கொண்டுவந்து வச்சுருக்காங்க.  அங்கங்கே மண்சட்டிகள் பரத்தி வச்சு  ஒவ்வொரு குவியலுக்கும் ஒருத்தர் உக்கார்ந்து விக்கறார். நமக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வாங்கிக்கலாம்.   நாம் ஒன்னும் வாங்கிக்கலை....  (இங்கத்து அரிசியில் நம்ம பெயரை 'அவன்' எழுதலை)
சனம் அங்கங்கே உக்கார்ந்து சாப்பிடறாங்க. பிள்ளைகுட்டிகளுடன் பெரிய குடும்பங்கள்  அப்படியே முழுச்சட்டிகளையும் வாங்கிவந்து வச்சு வட்டம்போட்டு உக்கார்ந்துருக்காங்க.
உலகின் மிகப்பெரிய அடுக்களை இதுதானாம். விறகடுப்பில் மண்சட்டி சமையல்தான் !  தினமும் ஒரு லக்ஷம் பேர் சாப்பிடும் அளவில் சமையல் நடக்குதாம்! ஏழுநூறு  சமையல்க்காரர்கள் இருக்காங்களாம்,  ஒரு தொகை கட்டினால் அடுக்களைக்குள் போய்ப் பார்க்க முடியுமாம். இதெல்லாம் அப்புறம் தெரிஞ்சுக்கிட்ட சமாச்சாரம்.... நல்ல ச்சான்ஸை கோட்டை விட்டுட்டோமேன்னு மனசு பரிதவிச்சது உண்மை.....
ஹரிஷங்கர் அதோ  காத்திருக்கார்.... வாங்க கூடவே போய் கோவிலைச் சுத்திப் பார்க்கலாம்....

தொடரும்....... :-)

PINகுறிப்பு:  கோவிலுக்குள் படங்கள் எடுக்கத்தடை என்பதால் நம்ம கூகுளாண்டவர் அருளிச்செய்த படங்களில் சில இந்தப்பதிவில் உள்ளன!  படங்களின் உரிமையாளர்களுக்கு நம் நன்றி !


Friday, October 11, 2019

ஜகத்துக்கு அதிபதி, தன் அண்ணன் தங்கையுடன் ! (பயணத்தொடர், பகுதி 154 )

கோவிலாண்டைன்னா  கோவிலாண்டையே இல்லை.... கோவில் வாசலுக்கு ஒரு கிமீ இருக்கும்போதே சாலையில் தடுப்பெல்லாம் வச்சு வாடகை வண்டிகளை நிறுத்திடறாங்க. இங்கிருந்து பார்த்தால் சாலை முழுக்க மக்கள் நடமாட்டம். இதுலே  சாலையிலேயே சாலைப்பாதைக் கடைகள் வேற !


மழையைக் கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல் மாடுகளும் மனிதர்களும் நடமாடிக்கிட்டே இருக்காங்க.  நல்லவேளை... சாலைக்கு நடுவில் நெடூகத் தடுப்பு வச்சுருப்பதால் எதிரும் புதிருமா குறுக்கும் நெடுக்கும் புகுந்து வரும்  போக்குவரத்தின் சல்யமில்லை.....
 மழைக்கிடையிலும் சாலையைச் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க. ஆனால் நம்ம சனம் லேசுப்பட்டதா?   தின்னுட்டுத் தூக்கிப்போடுது.....

நாங்களும் நடந்துநடந்து ஒரு இடத்தில் ஜகந்நாத் கோவில் ஆஃபீஸ் பார்த்துட்டு அங்கே விவரம் எதாவது கிடைக்குதான்னு போனோம்.  பயங்கரக்கூட்டம்.  பலரும் மழைக்கு ஒதுங்குனாப்போல இருக்கு, ஒரு செல்லம் உட்பட.....  இன்னும் கொஞ்ச, வலதுபக்கம் நடந்து போனால்  கோவில் வாசல் வருமாம்.

போக்குவரத்தை நிறுத்தி வைச்சுட்டாங்கன்னு நம்மை ஏமாத்திட்டாரோ அந்த ஆட்டோக்காரர்னு ஒரு சம்சயம். விசாரிச்சதில் கார்களுக்குத்தான்  இப்படியாம். ஆட்டோ வரலாமாம். இதை நைஸா தன்னுடைய ஆட்டோவுக்குப் பயன்படுத்திக்கிட்டார் அந்த ஆள்.  தான் ஓட்டறது கார்ன்னு எண்ணம் போல.....போற வழியிலே கோவில் கோபுரமும், சுதர்ஸனச் சக்ரமும், அதில் பறக்கும் கொடியும் கண்ணில் பட்டது.   இந்தாண்டை மூணு ரதங்கள்..... மனசு தடதடன்னு இருக்கு.....

க்ளோக் ரூமைத் தேடி நடக்கும்போது, இவ்வளவு கூட்டத்திலும் நம்மைக் கண்டுபிடிச்சுட்டார் ஹரிஷங்கர். நம்ம  புரொஹித் அவர்களின் மகன்.  'க்ளோக் ரூம் ஒன்னும் வேணாம். அந்தாண்டை வாசலுக்கெதிரா நம்ம  இடம் இருக்கு. அங்கே வச்சுட்டுப் போகலாமு'ன்னு சொன்னதால் அவர் கூடவே மக்கள் வெள்ளத்துக்குள் நுழைஞ்சு நீந்திப்  போனோம். அங்கே போனால், இதுவும் இவுங்க ஹொட்டேல்தான்!  பிஷ்ணுபவன் லாட்ஜ்.

'அடடா....  தெரிஞ்சுருந்தால் இங்கே வந்தே தங்கி இருக்கலாமே'ன்னு தோணுச்சு.  'நம்மவர்'தான் ரொம்ப இரைச்சலா இருக்கும் இடமுன்னு சொன்னார். உனக்குக் கடல் பார்க்கணுமேன்னுதான்  பேலஸில் புக் பண்ணினேன்.

காசை மட்டும் எடுத்துச் சட்டைப்பையில் போட்டுக்கிட்டு, காலணி, பர்ஸ் (தோலில் செஞ்சதாச்சே!  தோல்பொருட்கள் கொண்டுபோகக்கூடாத இடங்களுக்கு, காசு வச்சுக்கன்னு சின்னதா அழகான துணி பர்ஸ் ஒன்னு நம்ம புதுகைத் தென்றல்  கொடுத்துருந்தாங்க. அதைக் கையோடு கொண்டும் வந்துருந்தேன். ஆனால் பாருங்க அதுக்குள்ளே கொஞ்சம் காசு வச்சுட்டு ஸிப்பை இழுத்து மூடும்போது, ஸிப் கையோடு வந்துருச்சு. அதனால் அறையிலேயே வச்சுட்டு வந்தேன். ஊருக்குப்போய் ஸிப்பைச் சரியாக்கணும்! )

 செல்ஃபோன்களை அங்கே ரிஸப்ஷனில் கொடுத்து வச்சுட்டு தெருவைக் கடந்து எதிர்வாடைக்குப் போனால்..... கைகால்  கழுவ  வரிசையா குழாய் வச்சுருக்காங்க.  கால்களை நனைச்சுட்டு ரெண்டு எட்டில் கோவிலின் புலி வாசல் (மேற்கு வாசல்) வழியாக  உள்ளே நுழைஞ்சோம். வாசலில் எலக்ட்ரானிக் கேட், போலிஸ் எல்லாம் இருக்கு. யாரையும் உபத்ரவிக்கலை.

 கோவிலுக்கு நாலு புறமும் வாசல்கள்  வச்சுருக்காங்க.  கிழக்குத் திசையில் சிம்ஹவாசல் (ஸிம்ஹத்வார்), வடக்கு யானை   வாசல் (ஹாத்தி த்வார்), தெற்கு  குதிரை வாசல்(அஷ்வத் த்வார்) மேற்கில் புலிவாசல்.....  யானை குதிரை எல்லாம் சரி. உலகாளும் அரசன் ஜகந்நாதனின் படை. இந்தப் புலி எப்படி?  நம்ம புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர்  நினைவிருக்கோ? அவர் பெயரில் இது வ்யாக்ரவாசல்! ஆக மொத்தம் கிழக்கும் மேற்கும் சிங்கமும் புலியும், வடக்கும் தெற்கும் யானையும் குதிரையும் :-)

சம்ப்ரதாயப்படிக் கோவிலுக்குள் போகும் முகப்பு வாசல்  சிங்க (கிழக்கு)வாசல்தான். ஆனால்   முக்கால்வாசி ஊர்களில் எப்பவும் நமக்கு  பின்பக்க வாசலே அமையும். கார் பார்க் பொதுவா அந்தப் பக்கங்களில்தான் இருக்கும். அப்படியே ஏறிப் போயிருவோம்.  நம்ம  லக்ஷணம், இந்த ஹரிஷங்கருக்குக் கூடத் தெரிஞ்சுபோச்சு, பாருங்க. இப்பவும் சிங்கத்தை விட்டுட்டுப் புலிதான் கிடைச்சுருக்கு :-)
கோயிலுக்குள் போக கண்டிப்பா ஹிந்துகளுக்கு மட்டுமே அனுமதி.  தான் ஹிந்துவாக இருந்தும், தன்கூடவே மற்ற மதத்தினரைக் கூட்டிப்போக முயன்ற  இந்தியப் பெருந்தலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  வேற்று மதத்தவரை மணம் செய்த காரணத்தால் இன்னொரு பெருந்தலைக்கும் அனுமதி தரலை.
நம்ம இஸ்கான் ஸ்தாபகர் ஸ்ரீல ப்ரபுபாதா அவர்களும், தன்னுடைய வெளிநாட்டு பக்தர்களுக்கு (ஹிந்துவாக முறைப்படி மதம் மாறாத பக்தர்கள்) அனுமதி மறுக்கப்பட்டதால் தானும் கோவிலுக்குள் போகாம வந்துருக்கார். அதன் காரணமாத்தான்  புபனேஷ்வர் இஸ்கான் கோவிலில் பூரி ஜகந்நாதர் கோவில் மூலவர்களை அங்கத்துச் சந்நிதியில்  ப்ரதிஷ்டை பண்ணி, கோவிலுக்கு ஸ்ரீக்ருஷ்ணபலராம் மந்திர்னு பெயர் வைச்சதும்!

அந்தக் காலத்துலே  பாரதத்தில் ஹிந்துக்கள் மட்டுமேதானே இருந்தாங்க. அப்ப பிரச்சினை ஒன்னும் இருந்துருக்காது. அப்புறம் சமண, புத்தமதங்கள் கொஞ்சம் பரவி இருந்துருக்கு.  அதுக்குப்பின் அந்நியர் வந்து நாட்டைப் பிடிச்சு வலுக்கட்டாயமா  பலரை மதமாற்றம் செஞ்சுருக்காங்க.  ஆனால்   எது எப்படி ஆனாலும் அவரவர்  தன் மதச் சின்னங்களை தைரியமா நெற்றியில் தரிச்சும், மற்றபடி உடைகள் மூலமும் வெளிப்படுத்தி இருந்த காரணத்தால்  ஹிந்துக்கள் அல்லாதவர் யார்னு கண்டுபிடிக்க முடிஞ்சுருக்கும். ஆனால் இப்போ? 

பெரிய வளாகமா இருக்கு! சுத்திவர இருக்கும் மதில்சுவர் உயரம் ஏழு மீட்டர்னு  சொன்னார் ஹரிஷங்கர்.  நாலுலக்ஷத்து இருபதாயிரம் சதுர அடி வளாகமாம்!  (அம்மாடியோ!!!! ) பத்து ஏக்கர் என்றதை எப்படிப் பயமுறுத்திச் சொல்றார் , பாருங்க :-)

பதினோராம் நூற்றாண்டுலே  கலிங்க நாட்டில் கங்கப்பேரரசின்  ஆட்சி. அப்போ இருந்த அரசர் சோட்டா கங்கர், கோவிலைக் கட்ட ஆரம்பிச்சு,  பனிரெண்டாம் நூற்றாண்டில் அரசரா இருந்த  அனங்கபீம தேவரின் ஆட்சியில்  முடிச்சுருக்கார். இவர்  அரசர் அனந்தவர்மதேவரின் மகன். இம்மாம் பெரிய கோவிலைக் கட்ட  இத்தனை வருஷங்கள் ஆகித்தான் இருக்கும், இல்லே?

இந்தக் கோவில்கள் எல்லாம் வருமுன்னேயே ஸ்ரீஜகந்நாத்  அங்கே இருக்கார். ப்ராச்சீன்.... அஞ்சாயிரம்  வருஷமுன்னு சொல்றாங்க...

இவ்ளோ பெரிய, அழகான கோவிலை, வேற்று மதத்தவர் நாட்டுக்குள் நுழைஞ்சு ஆட்சியைப் பிடிச்சுக்கிட்டப்போ அழிக்க ஆரம்பிச்சதும்  உண்டு.  அது 1360 ஆண்டு.... ப்ச்.... (அவுங்க ஆட்சியில்தான் புபனேஷ்வர் கோவில் சிற்பங்களையெல்லாம் சிதைச்சதும்  நடந்துருக்கு  :-( எப்படித்தான்  மனசு வருதோ..... ஔரங்கஸேப் காலத்துலே  கோவிலையே இடிக்கப்போறேன்னு சொல்லி.....  கடைசியில் கோவிலை மூடி வச்சுட்டாதகவும்,  அவர் செத்தபின்தான் திரும்பக் கோவிலைத் திறந்தாங்கன்னும் ஒரு செய்தி உண்டு )  
கண்ணுக்கு நேரா  கோபுரத்துலே இருக்கும் சந்நிதி ஒன்னு. படிகள் அமைச்சுருக்காங்க.  நரசிம்மர் சந்நிதியாம்.  ஹரிஷங்கர்  விறுவிறுன்னு   இடம் வலமுன்னு போய் நிறையப் படிகள்  இருக்கும் இடத்துக்குக் கூட்டிப்போயிட்டார். படிகள் நீளத்துக்கு அகலமான வாசல்..  ரெண்டு ஓரங்களிலும்  காய்ஞ்ச புல்லில் செஞ்ச துடைப்பம் போல் ஒன்னு வச்சுக்கிட்டு உள்ளே காலடி எடுத்துவைக்கும் பக்தர்களுக்கு 'தர்ம அடி' கொடுத்துக்கிட்டு இருக்காங்க ரெண்டு பண்டாக்கள். (ஏற்கெனவே நம்ம நுனிப்புல் உஷாவின்  பூரி கோவில் விஸிட் வாசிச்ச நினைவில்) ஓரத்துலே ஏறிப்போகாமல் நடுவிலேயே போனேன்  :-) நம்மவருக்கும்  ஹரித்துவாரில் அடி வாங்குன நினைவு வந்துருக்கணும்! (உண்மையில் இந்த 'அடி' நம் பாவங்களையும் பீடைகளையும் அகற்றி, நம்மைத் தூய்மைப்படுத்திக் கடவுள் முன் போய் நிற்கும் தகுதியை ஏற்படுத்தும் ஐதீகம்தான்)

அகலவாசல் முழுசும் அணு அளவு இடம் விடாமல் பக்தர்கள் கூட்டம் அடை போல்! பெரிய ஹாலில் எள் போட்டால்  எள் விழும் வகையில்தான். திருப்பதி போல நெருக்கியடிக்கலை. இன்றைக்குக் கூட்டம் குறைவுன்னார் ஹரிஷங்கர்!

இந்த அலை அப்படியே முன்னால் போகும்போது நாமும் முன்னேறிப் போனோம். படியேறி வந்து உயரத்தில் ஆரம்பிச்சது, கொஞ்சம் கொஞ்சமாச் சரிஞ்சு ரெண்டு மூணு படிகளிறங்கி   திரும்பத் தரைத்தளத்து வந்துருது. அடுத்த அஞ்சாவது நிமிட்டில் இதோ  கருவறைமுன் நிக்கறோம். ஜகத்துக்கே அதிபதி, தன்  அண்ணன் தங்கையுடன் !
இடுப்பளவு தடுப்புக்குப்பின் பண்டாக்கள்.  (பட்டர்களைத்தான் வடக்கில் பண்டான்னு சொல்றாங்க ) வா வா, சீக்கிரம் வா ன்னு கையை ஆட்டி ஆட்டிக் கூப்பிடறாங்க..... ஜல்தி ஆவ்......


தொடரும்......:-)

PIN குறிப்பு:

நம்ம சிங்காரச் சென்னையில் இப்போ வடநாட்டுக் கோவில்கள் எல்லாம் நம்மைத் தேடி வந்தாச்சு. ஈஸிஆர் ரோடுபக்கம்தான்.... எல்லாமே.  ஒரு பத்து வருஷத்துக்கு முன்  சென்னை பூரி ஜகந்நாத் கோவில் போய் வந்தது இங்கே:-)

http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html

Wednesday, October 09, 2019

மைஸூர் வடையாம்ப்பா............. (பயணத்தொடர், பகுதி 153 )

காலையில் திரைச்சீலையைத் தள்ளிவிட்டால் இன்னும்  ஏழரை கூட ஆகலை....  எல்லா பெரிய நகரங்களையும்போல ட்ராஃபிக் பயங்கரமா இருக்கு! சென்னையைப்போல் கலந்துகட்டியா  இருக்காம நாலு சக்கரமும் ரெண்டு சக்கரமும் பாதையைப் பாகம் பிரிச்சுக்கிட்டு இருக்காங்க.

பத்துமணிக்குதானே வண்டிக்குச் சொல்லி இருக்கோமுன்னு கொஞ்சம் நிதானமாவே எழுந்து குளிச்சு முடிச்சு ஒரு எட்டேகால் போல ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம்.  அங்கெதான் மைஸூர்  வடை இருந்துச்சு. போண்டான்ற பெயர் வடக்கில் இல்லை போல.... (நம்ம டோண்டு நினைவு வந்தது....) 

கொஞ்சம் நல்லா சாப்பிட்டுக்கோன்னார் 'நம்மவர்'.  பயணம் இருக்கு. அதிக தூரம் ஒன்னும் இல்லை ஒரு அறுபத்தினாலு கிமீதான். சாப்பாடானதும் வெளியே ஸ்வொஸ்தியைச் சுத்திப் பார்க்கப் போனோம்.  எப்பவும் தங்குமிடத்தைச் சுத்திப் பார்க்க நேரமே கிடைக்கறதில்லை....
அழகான தோட்டமும், அங்கங்கே சிலைகளுமா நல்லாத்தான் இருக்கு. பெரிய நீச்சல் குளம் வேற ! 'நம்மவர்' பயணம் என்று எப்போ எங்கே கிளம்பினாலும் ஒரு ஸ்விம்மிங் ட்ரங்க்ஸ் எடுத்து வச்சுக்குவார். அதைப் பயன்படுத்தத்தான் நேரமே வாய்க்கறதில்லை..... இப்பவும்தான்....

வரவேற்பில் இருக்கும் புள்ளையாருக்கு விளக்கேத்தி வச்சுருக்காங்க.
ஆச்சு மணி பத்து. வண்டி ரெடின்னதும் பொட்டிகளை எடுத்துக்கிட்டு செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பியாச்சு. புபனேஷ்வரை விட்டு வெளியில் போறதால் வண்டிக்குத் தனி ரேட்.  போகவர கொடுத்துடணும். டோல்ரோடு வேற  இடையில் வருது. எல்லாத்துக்கும் சேர்த்து பணம் அடைச்சுட்டுக் கிளம்பியாச்.
அதுவரை எங்கியோ ஒளிஞ்சுருந்த  வருணன்  வேகமா வந்து நம்மோடு சேர்ந்துக்கிட்டான். அருமையான சாலையா இருக்கு என்றாலும்  அடிச்சுப்பேயும் மழையில் எதிரில் என்ன இருக்குன்னே தெரியலை. ட்ரைவர் அஷோக்  சின்னப்பையனா இருக்கார். (  ட்ரைவிங் லைஸன்ஸ் எடுத்துருப்பாருன்னு நினைக்கிறேன்..... )  இளங்கன்று பயமறியாம விர்ன்னு ஓட்டிக்கிட்டு இருக்கு. 
'மெள்ளப்போப்பா அஷோக்கு.  நமக்கு அவசரம் ஒன்னும் இல்லை'ன்னதும் சரி சரின்னு தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு ஓட்டறார். வாயில் தம்பாக்கு இருக்கு. உப்பிய கன்னம் சொல்லுதே....

டோல்கேட்டாண்டை சின்னச் சின்ன ட்ரக்குகளை, டபுள் டெக்கராக்கி அதுலே பயணம்  போகும்  பக்தர்கள்  நெருக்கியடிச்சு  உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க.கூகுளார் ரெண்டரை மணி நேரம்னு சொன்னதுக்கு, நாம் இப்படி அடிச்சு ஊத்தும் மழையில் ஒன்னே முக்கால் மணி நேரத்துலேயே  ஊருக்குள் வந்துட்டோம்.   மழை கொஞ்சம் விட்டுருக்கு இப்போ.... ஒரு பழைய காலத்து வீட்டுக் கதவு அருமை!

இந்தியாவின் ஸ்வொச்ச் பாரத் ஐகான் இந்த ஊருன்னு   விளம்பரவளைவு வச்சுருக்காங்க.   கண்ணை மூடிக்கிட்டு வச்சுட்டாங்க போல.....  ப்ச்....
ஜமீந்தார் மாளிகைக்கு வந்துட்டோம். இங்கேதான் தங்கல். பூரி கோவில் புரோஹித் இதன் உரிமையாளர்.  நாம் வரும் விவரம் ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்ததால்  இவரே கோவில் தரிசனத்துக்கு எற்பாடு செஞ்சுருவாராம்.
சவாரி இருக்கும்போதே இத்தனை வேகத்தில் வந்தவர் திரும்பிப்போகும்போது எவ்ளோ வேகத்தில் போவாருன்னு நினைச்சாவே எனக்குக் கதி கலங்குது.....  பத்திரமாத் திரும்பிப்போகணுமே பெருமாளேன்னு வேண்டிக்கிட்டு, பகல் சாப்பாட்டுக்குக் கொஞ்சம் காசையும் கொடுத்து, 'நிதானமா ஓட்டிக்கிட்டுப்போப்பா'ன்னு சொல்லிட்டு உள்ளே போய் செக்கின் ஆச்சு.


செக்கவுட் டைம் காலை ஏழரையாம்.... அட ராமா....  வேறெங்கும் இப்படிக் கேள்விப்பட்டதுகூட இல்லையே....
 செக்கவுட் செஞ்சுட்டு அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு, லவுஞ்சில் ரெஸ்ட் எடுக்கலாமாம்.  வெளியே சுத்திட்டு வரப்போனாலும்  பெட்டிகள் பத்திரமா இருக்குமாம்.  என்னமோ போங்க....ஒவ்வொன்னு ஒரு ரகம்....
ரெண்டாவது மாடியில் அறை. பால்கனி கர்ட்டனைத் திறந்தால் பூரி கடற்கரை !  காத்து அப்படியே பிச்சுக்கிட்டுப் போகுது!  சுத்தமான கடற்கரை வேற !  ஹூம்..... (நம்ம மெரீனா....)
சரியா நாலுமணிக்குக் கோவில் வாசலுக்கு வரச்சொல்லி சேதி வந்தது.  நான் அதுக்குமுன்னாலேயே துடிச்சுக்கிட்டு இருந்தேன். இந்தப் பயணமே அந்த 'ஜாகர்நாட்டை' தரிசிக்கத்தான்....  'நம்மவர்'தான் கொஞ்சம் பொறுமையா இரு. முன்பின் தெரியாத இடம்.  புரோஹித்  கூடவே போறதுதான் நல்லதுன்னுட்டார்.பகல் சாப்பாட்டுக்குப் போயிட்டு வந்துடலாமுன்னு கிளம்பினோம். மாளிகை வாசலில் ஆட்டோ கிடைச்சது. அக்கம்பக்கம் எங்கே போகணுமுன்னாலும்  அம்பது  ரூ.  கொஞ்சதூரத்துலே இஸ்கான் ரெஸ்ட்டாரண்டு இருக்குன்னு அங்கே போய் இறங்கிக்கிட்டோம். இவ்ளோ கிட்டன்னா நடந்தே வந்துருக்கலாம். ஐநூறு மீட்டர்தான்.  மழையும் அழுக்குமா இருக்கும் சாலையில் நடப்பதும் கஷ்டம்தான் போங்க....

கோவிந்தாஸ் ரெஸ்ட்டாரண்ட்லே சைனீஸ் மெனு கூட இருக்கு!  (உண்மையில் சீன நாட்டில் இந்த மஞ்சூரியன் என்ற பெயரில் ஒன்னுமே இல்லை....    இது இந்தியக் கண்டுபிடிப்பாக இருக்கணும் ) நமக்கு வேண்டிய தால்பாத் கிடைச்சது. இங்கே ரெஸ்ட்டாரண்டு கூடவே கெஸ்ட் ஹௌஸூம்  இருக்கு.  சாப்பாடானதும்  ஒரு ஷேர் ஆட்டோவில் திரும்பி ஜமீந்தார் மாளிகைக்கு வந்துட்டோம்.  கோவில் இங்கிருந்து ரெண்டரை கிமீதூரம்தான்.  மூணரைக்குக் கிளம்பினால் சரியா இருக்குமுன்னு சொன்னார் 'நம்மவர்'

இந்த ஹொட்டேல் இருக்கும் சாலைக்குப் பெயரே சக்ரதீர்த்த ரோடு. எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு !  இங்கே கடல் பார்க்கும் அறைகள், தெரு பார்க்கும்  அறைகள்னு தனித்தனி ரேட்.   நம்ம கன்யாகுமரி மாதிரிக்  கடலைக்கூடக் காசாக்கலாம் !
ஃப்ரீ வைஃபை நல்லா வேலை செய்யுது.  கொஞ்ச நேரம் அதில் போக்கினேன். எதிரில் கடல் வேற இருக்கே... போதாதா?
மூணரைக்குக் கிளம்பி டைனிங் ஹால் வழியா ஹொட்டேல் வாசலுக்குப் போனோம். இந்த வாசல் சிலைகளோடு அருமையா இருக்கு!  வாசலில் ஆட்டோ கிடைச்சது.  செல்ஃபோன், தோலில் செஞ்ச பர்ஸ், ஹேண்ட் பேக், கெமெரா, Bபேக் Pபேக் இப்படி எதுவுமே கூடாதாம்.  கோவில் வாசலில் இருக்கும் க்ளோக் ரூமில் பொருட்களை வச்சுட்டுப்போக வசதி இருக்காம்.

சுருக்கத்துலே சொன்னால்  காசைத்தவிர வேறெதுக்கும் அனுமதி இல்லை ! அதனால் நான் கெமெரா இல்லாத வெறுங்கையாகவும், நம்மவர் காசு & செல்ஃபோன்களுமாத்தான் கிளம்பி வந்துருக்கோம். ஒரு அவசர ஆத்திரத்துக்கு செல் வேணுமுன்னுட்டார். நானும்  'ராமன்கூடவே போன சீதையாட்டம்   உங்க செல்லோடு என் செல்லும் இருக்கட்டுமே' ன்னேன் :-)

அதே அம்பது ரூபாய்க்கு கோவிலாண்டை இறக்கி விட்டார் ஆட்டோக்காரர்.

தொடரும்....... :-)