மதியம் வரை கொஞ்சம் அதிகமா நடந்துட்டதால்..... கால்வலி பின்னி எடுக்குது. அதுக்குண்டான வலி நிவாரண மாத்திரைகளை உள்ளே தள்ளிட்டு, ஆயுர்வேதத்தைலம் தேய்ச்சு சிஸ்ருஷை பண்ணி முடிக்கும்போதே மணி அஞ்சரை. அவசரமாக் கிளம்பிக் கோவிலுக்குப் போறோம். கும்மோணத்துக்குப் பெயர் வரக்காரணமா இருந்த கும்பேஸ்வரர் கோவில் வாசலில் நல்ல கூட்டம்.
இந்தக்கோவிலுக்கு நாம் இப்போ வர்றது மூணாம் முறை. போன ரெண்டு முறையும் இதே வாசலில் வந்து இறங்கினோம். அப்பவே நினைச்சேன்.... ராஜகோபுரம் இருக்கும் வாசல் வழியா அடுத்தமுறையாவது வரணும்னு. ஆனால் பாருங்க..... இப்பவும் இங்கேயே வந்திறங்கவேண்டியதாப் போச்சு. கூகுளாண்டவர் இதைத்தான் காமிக்கிறார்.
நுழைவு வாயில் மண்டபத்துலே வரிசை வரிசையாக் கடைகள். நகையும் நட்டுமாக் கண்ணைப்பறிக்கும் கடைகள் ஒன்னில் போய் நின்னேன். நம்ம பெருமாளுக்கு ஏதாவது வாங்கிப்போகணும்.
ஒரு மூணு அலங்கார நகைகளை வாங்கியாச்சு. ஒன்னுமே ஆகாதும்மா.... நான் கேரண்டீன்னு சொன்னக் கடைக்காரர் இவர்தான். அப்புறம் என்ன ஆச்சு ? நியூஸி வந்து யுகாதிக்கு புதுநகை போடலாமுன்னு எடுத்தால்..... ரெண்டு கற்களைக் (நீலம்) காணோம். ப்ச்......
போனமுறை பார்த்த மங்களத்தைக் காணோம். நல்லாவே இருட்டிப்போச்சு.... இன்னுமா நின்னுக்கிட்டு இருப்பாள்? போய் ரெஸ்ட் எடுக்கணும், இல்லையோ....
மேலே படம் : போனமுறை எடுத்தது.
வெளிப்ரகாரம் வந்துட்டோம். காலணியை எங்கே விடறதுன்னு புரியலை. கோவிலில் ஏதோ பராமரிப்பு வேலைகள் நடக்குதுன்னு அங்கங்கே மரக்கட்டைகள், குண்டும் குழியுமா தரை வேற. அங்கிருந்த கோவில் பணியாளரிடம், காலணி வைக்கும் இடம் விசாரிச்சால்.... 'இங்கேயே விட்டுட்டுப்போங்க' ன்னார். மொட்டைக்கோபுரம் ஏரியாவுக்குப் பக்கம்..... இருட்டுலே மசமசன்னு தெரிஞ்சது...
மூலவர் சந்நிதி.... அதோ ரொம்ப தூரத்தில்..... கும்பகோணத்துலேயே பெரிய கோவில் இதுதான்...... நல்லா சுத்திப்பார்க்கணுமுன்னால்..... நிறைய நடக்கத்தான் வேணும். பகல் வெளிச்சம் இருக்கும்போது வர்றதுதான் நல்லது..... ப்ச்....
பாடல்பெற்ற கோவில் இது! மஹாப்ரளயத்தில் எல்லாமே அழிஞ்சு போகுமுன் பிரம்மன் தன் அடுத்தமுறை படைப்புக்கான சமாச்சாரங்களையெல்லாம் கும்பத்துக்குள் வச்சு அதை இமயமலையின் உச்சியில் கொண்டு போய் வச்சுட்டார். ப்ரளயம் நடந்தப்ப வெள்ளத்தில் மிதந்துவந்த கும்பம் தங்கிய இடம் இது! அப்புறம் சிவன் தனது அம்பால் அந்தக் கும்பத்தை உடைச்சதும் அதிலிருந்து மணலில் சிந்திய அமுதத்தை மணலோடு வாரி எடுத்து அதை ஒரு சிவலிங்கமாப் பிடிச்சு வச்சு அதுலே ஐக்கியமாகி இங்கேயே தங்கிட்டார். மணல் லிங்கம் என்றபடியால் அபிஷேகம் கிடையாது! அபிஷேகப்பிரியன்... இப்படித் தனக்கே ஆப்பு வச்சுக்கலாமோ? பிடிச்ச பிடியில் உச்சி நுனி குவிஞ்சுருச்சு!
நந்திதேவர் அட்டகாசமா இருக்கார். இன்னொரு இடத்தில் தரைக்கும்கீழே ஒரு பள்ளத்திலும் ஒருவர் உக்கார்ந்துருக்கார் !

பெரிய உட்ப்ரகாரம் சுற்றி, அம்மன் சந்நிதிக்குப்போய் கும்பிட்டதும்..... கால் கெஞ்ச ஆரம்பிச்சது. இந்த முறையும் சரியாப் பார்க்கலை....... என்னவோ போங்க...... எப்பதான் வேளை வருமோ ?
திரும்பிப்போகும்போது கோவில்கடை வரிசைகளில் இன்னொரு இடத்தில் இன்னும் அழகழகானவைகள்.... கண்ணில் பட்டதை ரசிக்கலாம்தானே ?
யாரோ ஒருத்தர், ட்ரங்கு பொட்டி வாங்கிக்கிட்டு இருந்தார். ஹைய்யோ.... இதையெல்லாம் பார்த்தே அம்பது வருஷமாச்சே !!!! இன்னுமா கிடைக்குது ?
வெளியே வந்து, விஜியை வரச் சொல்லிட்டு, எதுத்தாற்போல் இருந்த வாழைப்பழக்கடையில் கொஞ்சம் பழம் வாங்கினோம். விதவிதமான பழங்களோடு வாழைத்தார்கள்.
இங்கே நியூஸியில் நம்ம ஊரில் அதிகம் விலையுள்ள பழமுன்னா அது வாழைதான். வருஷம் பூராவும் கிடைக்கும்..... ஆனால் ஒரே ஒரு வகை. தென்னமெரிக்க சரக்கு. Ecuador பெரிய சைஸ். கிலோவுக்கு ஒரு நாலு தான் நிக்கும். ப்ச்....
ராயாஸுக்குத் திரும்பும்போது, மஹாமகக்குளத்தாண்டை இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஒரு அஞ்சு நிமிட் போய்வரலாமுன்னு சொன்னேன். தினம் பொழுது விடிஞ்சதும் இந்தக் கோவில் கோபுரதரிசனம்தான் நமக்கு.
மூலவர் சந்நிதிக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தில் ஒரு குடும்ப நிகழ்வு நடந்துக்கிட்டு இருந்தது. நவக்ரக சந்நிதியில் போய் வணங்கிட்டு ராயாஸுக்கு வந்தாச்சு. கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் மணி ஒன்பதானதும் கீழே சாப்பிடப்போனால்..... ரெஸ்ட்டாரண்டில் பயங்கரக்கூட்டம். மாடியில் இடம் இருக்காம். ஆனால் லிஃப்ட் வசதி இல்லை. அடராமா.....
ஹொட்டேல் முதல் மாடி வெராந்தாக் கடைசியில் ஒரு வழி இருக்காம். அதே போல முதல்மாடிக்கு லிஃப்ட்டில் போய், அங்கிருந்து மாடி டைனிங் ஹாலுக்குப் போனோம். ரொம்ப நீட்டா இருக்கு ! அடடா..... தெரியாமல் போச்சே.... நினைவில் வச்சுக்கணும். நாளைக்கு இங்கே இருந்து கிளம்பறோம்.
மறுநாள் காலை ப்ரேக்ஃபாஸ்டும் இங்கேதான். நாம் தங்கியிருக்கும் ரெண்டாம் மாடியிலிருந்து முதல்மாடி வந்தோம்.
அவரவருக்கு வேண்டியதைச் சொல்லியாச். எனக்குப் பொங்கல் !
சரியா ஒன்பதே காலுக்கு ராயாஸை விட்டுக்கிளம்பியாச் ! ஒரு அறுபத்தியெட்டு கிமீ தூரம் போகணும்.
தொடரும்......... :-)

0 comments:
Post a Comment