Monday, July 28, 2025

முருகனைக் கும்பிட்டு.......(2025 இந்தியப்பயணம் பகுதி 51 )

மணி வேற ரெண்டாகப்போகுதே... திரும்பிப்போக இன்னும் அரைமணியாகுமேன்னு நினைக்கும்போதே....  ரொம்பப் பக்கத்துலே இன்னொரு கோவில் இருக்கு. உங்களை அங்கே கூட்டிக்கிட்டுப்போகணும். சட்னு போயிட்டு வந்துடலாம்.  நீங்க வண்டிக்குள்ளேயே உக்கார்ந்துருங்க. நான் அஞ்சே நிமிசத்துலே  உள்ளே போயிட்டு வந்துருவேன்னு தோழி வற்புறுத்தியதால் சரின்னு தலையாட்டி வச்சேன்.   உச்சிகால பூஜை முடிஞ்சு எல்லாக் கோவில்களிலும் நடை சாத்தியிருக்காதா என்ன?
பக்கத்துலேதான் இருக்குன்னு சொன்னாலுமே போய்ச்சேர அரைமணி ஆச்சு. சுமார் பதினைஞ்சு கிமீதூரம்.  போகும்போதே ஒரு சின்ன மலையைக் காமிச்சாங்க.  அந்த மலையின் அடிவாரத்துக்குத்தான் போறோம்.  நுழையற இடத்துலேயே நாலைஞ்சுபேர் கூட்டமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. கார்பார்க்கிங் டிக்கெட் வாங்கிக்கணும். கோவில்  திறந்திருக்கான்னு தோழி விசாரிச்சப்ப.....  ஆமாம்னு சொன்னதால் பார்க்கிங் சார்ஜ் பத்து ரூபாயோ என்னவோ  கொடுத்துட்டு மலைப்பாதையில் போனோம். அஞ்சே நிமிட்லே மேலே போயாச்சு.  எக்கச்சக்கமான வண்டிகளும், மக்களுமா இடம் ரொம்பவே கலகலன்னு இருக்கு. படிவரிசைகள் பக்கத்துலே போய் வண்டியை நிறுத்துனார் ட்ரைவர்.

'வண்டியிலேயே  இருப்பீங்களா... நான் இதோ போயிட்டு வந்துருவேன்'னாங்க தோழி.  பரவாயில்லை... நானே மெதுவா வர்றேன்னு இறங்கிட்டேன். கோவில்கடைகள்னு படிவரிசைகளையொட்டியே  நிறைய.... ஒரு படம் க்ளிக்கிட்டு  இன்றைக்கு என்ன விசேஷம்னு கேட்டால் கிருத்திகையாம் !

 ஆஹா.....
மயிலம் முருகன், கேள்விப்பட்டுருக்கேனே தவிர வந்ததில்லை.   இடதுபக்கம் இருந்த ரெய்லிங் கம்பியை ஒரு ஆதரவாப் பிடிச்சுக்கிட்டு மெதுவாப் படி ஏறினேன்.  படிகளெல்லாம்  மக்கள் அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. முன்னோர்கள் வேற இங்கேயும் அங்கேயுமா தாவிக்குதிச்சுக்கிட்டு இருக்காங்க. 

இந்தக் களேபரமான சூழலில்,  படிக்கட்டு, கம்பி வரிசைன்னு கண்ணில் பட்டதெல்லாம் எண்ணும் என் குணம் எங்கே போச்சுன்னு தெரியலை. ஒரு அம்பதறுவது படிகள் இருக்கணும்.  தோழி வேற கால் வலின்னு அஞ்சு நிமிஷம் உக்கார்ந்துட்டுப் போகலாம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. 
அஞ்சாறு படிகளுக்கொருமுறை கொஞ்சம் நின்னு,  கொஞ்சம் நின்னுன்னு படிகள் முடியும் இடத்துக்குப் போயிட்டேன்.  எதிரில் ஒரு பெரிய மண்டபம்.  மக்கள் கூட்டம் !  ட்ரெஸ் கோட் அறிவிப்பு போட்டு வச்சுருக்காங்க. 'அடுத்த கிருத்திகை பங்குனி மாசம்/ ஏப்ரல் முதல் தேதி ' நோட்டீஸ் ஒட்டிவச்சுருக்காங்க. 
விசேஷநாட்களிலும்  கிருத்திகை நாட்களிலும் கோவிலைப் பகலில் மூடுவதில்லையாம் ! இன்றைக்கு  ரெட்டை விசேஷம் வேற !  கிருத்திகை  & சஷ்டி சேர்ந்து வந்துருக்கு !  பாருங்க..... நாள் கிழமை ஒன்னும் தெரியாம நல்ல நாளிலே வந்துருக்கோம்.  வரவச்சுட்டான் முருகன் !  இந்த மண்டபத்துக்கு அந்தாண்டை நம் வலப்பக்கம்  கோவில் ராஜகோபுரம் தெரியுது ! அஞ்சு நிலை !
சிறப்புதரிசனத்தில் போகலாமுன்னு அந்த வழியாக் கூட்டிப்போனாங்க தோழி.  வெறும் இருபது ரூதான்.  கம்பித்தடுப்புக்குள் நுழைஞ்சு முன்னால் போகும் தோழியைப் பின் தொடர்ந்து போறேன்.  அப்புறம் கொஞ்சதூரத்துலே ஒரு கம்பி ஏணி போல படிகள்.  அதுலே ஏறி  ஒரு  திருப்பத்தில்  திரும்பி நீளமாப்போகும் கம்பிப்பாதையில் போறோம்.  இப்படி ரெண்டு திருப்பம் ஆனதும் பார்த்தால்.... ஒரு பெரிய மண்டபத்தில்  இருக்கும் கம்பித்தடுப்புக்குள்ளில் வரிசைவரிசையா சனம்......
நம்ம படிகள் இப்போக் கீழ்நோக்கி இறங்குது.... அதுலே இறங்கி சமதரைக்கு வந்து நின்னுட்டுத் தலையைத் தூக்கிப்பார்த்தால்......... அட ! முருகன் !  கொள்ளை அலங்காரத்தில் கம்பீரமா  ஒரு கையில் வேலும், இன்னொரு கையில் சேவல் கொடி (இதுவும்  உலோகக் கொடிதான்) பிடிச்சுக்கிட்டு ரெண்டும்  பெருக்கல் குறி போல  இடது வலது தோளுக்கருகில் நிக்க.....  கம்பீரமா முகத்துடன்....  ஹைய்யோ ! நல்ல உயரமான சிலை.  கீழே நிக்கற நம்ம  ஐ லெவலில் பாததரிசனம்.  எப்படியும் அஞ்சரை அடிக்குக் குறையாத  உயரம். ஏறக்கொறைய ஏகாந்த தரிசனம் போலத்தான் ! ஒரு அர்ச்சகர் மட்டும் இருந்தார்.  விபூதிப்ரஸாதம் கிடைச்சது. 

வலையில் சுட்ட படம் இவை. அன்னாருக்கு நன்றி !


மேலே கம்பித்தடுப்பில் வர்ற சனம்...... நம்ம  தலைக்குப்பின்புறம்  உயரத்தில் நின்னு மூலவரை தரிசனம் செய்யறாங்க.

திருத்தணி முருகன் கோவிலுக்குச் சிலமுறை போயிருக்கோம்.  அங்கேயும் சிறப்புதரிசனமுன்னு போகும்போது  இப்படிக் கம்பிப்பாதையில்  (ஏணிப்பாலம்/ அந்தரத்துலே போறதுதான்)சுத்தி சுத்திப்போய்  மூலவரை தரிசனம் செஞ்சுருக்கோம்.  அங்கே  மூலவர் ஒரு மூணடி உயரம்தான் இருப்பார்.   இங்கே.... சராசரி ஆள் உயரம் ! 

தரிசனம் முடிச்சதும்,  திரும்பப்படியேறாம..... கீழேயே இருக்கும் கம்பிக்கதவைத் திறந்து அந்தாண்டை நாம் படி ஏறின இடத்துக்குப்பக்கம் வந்துட்டோம்.  அப்ப.... எந்தப்படியும் ஏறாமலேயே  ஸ்வாமிதரிசனத்துக்கு வழி இருக்கு...... க்ரௌடு மேனேஜ்மென்ட் ஐடியா போல...... மொத்தம் பனிரெண்டு நிமிட் லே தரிசனம் ஆச்சு.  இங்கே நாம் வந்த நேரம் சிறப்புதரிசனக் கூட்டம் இல்லைன்றது நம்ம பாக்கியம்! 


 முருகனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன்.  ஒருவேளை நான் விசாக நக்ஷத்திரம் என்பதாலா ?   நான்பாட்டுக்கு வேறெங்கேயாவது  போனால்கூடக் கூப்பிட்டுத் தரிசனம் கொடுத்துருவான். 

  நம்ம அஹோபிலம் பயணம் முடிச்சுத் திருப்பதியில் இரவு தங்கிட்டு, மறுநாள்  திருத்தணி வழியாக வர்றோம். அன்றைக்குத் தைப்பூசம் வேற !  போறவழியில் முருகனைப் பார்த்துட்டுப்போலாமான்றார் நம்மவர்.  அவருக்கு இஷ்டதெய்வம் முருகன்தான்.  தைப்பூசம் கூட்டம் அதிகமா இருக்கும். போறபோக்கில் கீழே இருந்தே கும்பிடு போட்டுக்கலாமுன்னு சொன்னேன். 

திருத்தணி ஊருக்குள் வந்ததும்,  கூட்டமான கூட்டம். நாம் மெதுவா ஊர்ந்து ஊருக்குள் போகும்போது.... மேலே மலைக்குப்போகும் கார்களுக்கு அனுமதி இல்லைன்னு ஆரம்பத்துலேயே  காவல்துறை சொல்லிருச்சு.  

திருத்தணி ரோடு முழுக்கப்  பூமாலைகள் தொங்கும் பூக்கடைகளும் வாழைபழக்குலைகளும் வெத்தலைக்கூடைகளுமா ஜேஜேன்னு இருக்கு. இதுலே ட்ராஃபிக் ஜாம் வேற.   நம்ம வண்டியை நாலைஞ்சு போலீஸ் நிறுத்துச்சு.
என்னவோ ஏதோன்னு  நிறுத்தினா......   "மேலே போறீங்கதானே?  இவுங்களையும் அங்கே ட்ராப்  பண்ணிடறீங்களா?"  அதுக்கென்ன முன் ஸீட் எப்பவும் காலியாத்தானே கிடக்கு.  போலீஸ் ஆஃபீஸரம்மாவை வண்டியில் ஏத்திக்கிட்டோம்.  இப்பதான் நம்ம வண்டிக்கு ஒரு கெத்து வந்துருக்கு.

மலைமேலே போகும் பாதையில் தடுப்பு வச்சு, வர்ற வண்டிகளைத் திருப்பி விட்டுக்கிட்டு இருக்காங்க.  மேலே இடம் இல்லையாம். ஆனா  நமக்கு? ஸல்யூட் அடிச்சு வழிவிட்டது  தடுப்புக் காவல்.  பாருங்க.... கூட்டமா இருந்தா கீழே இருந்தே  போறபோக்குலே கும்பிட்டுக்கலாமுன்னு நினைச்சால்  இந்த முருகன் 'வந்து பார்த்துட்டுத்தான் போகணுமு'ன்னு விடாப்பிடியா  வழி செஞ்சு கொடுத்துட்டான்!

எனக்கு என்ன ஒரே ஒரு  மனக்குறைன்னா.... வண்டியின் தலையிலே சிகப்பு விளக்கு மிஸ்ஸிங் ஆனதுதான்.  ஜெகஜெகன்னு விளக்கு சுத்த  உய்ங் உய்ங்குன்னு  ஸைரன் கத்த  மலை ஏறி இருந்தா எம்பூட்டு நல்லா இருந்துருக்கும்! 

அப்புறம் என்ன ஆச்சு ?  நேரம் இருந்தால் இங்கே இந்தச் சுட்டியில் பாருங்க.  இதுவே பத்து வருஷத்துக்கு முன்னே கிடைச்ச தரிசனம்தான் ! 

https://thulasidhalam.blogspot.com/2016/05/28.html

 வெளியே வந்ததும் கொஞ்சம் க்ளிக்ஸ் ! முன்னோர்கள்  நிம்மதியா உலா வர்றாங்க. தாகம் எடுத்தால்,  தானே குழாயைத் திறந்து தண்ணீர் குடிச்சுட்டுக் குழாயை மூடிவச்சுட்டுப்போகும் அளவு  விவரம்தான் ! 
திரும்பப் படிவரிசைகளில் மெதுவா இறங்கினோம்.  பாதிவழியில் ஒரு  குடும்பம். பையனுக்கு மொட்டைபோட வந்துருக்காங்களாம். 
மொட்டையடிக்கும் இடம் எல்லாம் அந்தாண்டை இருக்கணும். நாங்கதான் வேறெந்த சந்நிதிகளையும் சுத்திப்பார்க்காம இறங்கிட்டோமே......
அடுத்த முறை நம்மவரைக் கூட்டிவரணும்....  சாதாரண நாளில் வந்தால் நிதானமாச் சுத்திப்பார்க்கலாம். 

மூணு மணியாகப்போதேன்னு அரக்கப்பரக்கக் கிளம்பி தோழி வீட்டுக்கு வரும்போது....  மணி  மூணரை.  இருபத்திநாலு கிமீ. தூரத்தை  நாப்பது நிமிட்லே கடந்துருக்கார் ட்ரைவர். கொஞ்சம் வேகம்தான். அவருக்கும் பசி வேளை இல்லையோ ???

கார்பார்க்கில் நம்ம வண்டியைக் காணோம். விஜி போயாச்சு போல.  நம்மைப் பார்த்துட்டு, நம்மவர் வந்து....  சீக்கிரம் போய் சாப்பிடுங்கன்னார்.  தோழியின் மகர் வந்துருந்தார்.  அவரிடம் கொஞ்ச நேரம் பேசினோம். க்ரிக்கெட் அணித் தலைவர். Pondicherry cricket team
சாப்பாடு ஆனதும் நாங்க  அம்மாவுடன் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.  நம்மவரும் நண்பரும் அஞ்சே முக்காலுக்கு ஃபேக்டரியில் இருந்து வந்தாங்க.          

'எனக்கு ராத்ரி டின்னருக்கு  இருக்கவேணாம்.  நாளைக்கு  ஊரைவிட்டுக் கிளம்புவதால்... கொஞ்சநேரம் கடற்கரைக்குப் போகணும் 'என்றேன்.  எல்லோரும் வர்றதா இருந்தது, கடைசியில்  மகரோடு கொஞ்ச நேரம் அவுங்க இருக்கட்டுமுன்னு  நம்மவர்  சொன்னதால்..... தோழியும் நண்பருமா நம்மைக்கொண்டுவந்து அக்கார்டில் விட்டுட்டுப்போனாங்க. 

தொடரும்.........:-)

1 comments:

said...

Was /is busy officially. Didn't read last 2 weeks posts. Apologies.