பரபரன்னு கூட்டமா இருக்கும் ரொம்பவே பிஸியான சாலையில் கட்டடங்களோடு கட்டடமாத் தோளை ஈஷிக்கிட்டு நிக்கறதுபோல்தான் ராஜகோபுரமும் கோவிலுமா ம்காத்மா காந்தி ரோடில் நிக்குது ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில். பக்கவாட்டுத் தெருமுனையில் வண்டியை நிறுத்திட்டு வந்தார் விஜி.
ஒரு எட்டு வருஷங்களுக்கு முன்னே முதல்முதலா இங்கே வந்து, கோவில் ஆபீஸில் அனுமதி வாங்கிப் படங்களா எடுத்துத் தள்ளினேன்தான். அதுக்கப்புறம் எப்போ புதுச்சேரி வந்தாலும் இந்தக் கோவில் விஸிட் கட்டாயம்னு ஆகியிருந்தாலும்கூட ஒன்னுரெண்டு படங்களோடு நிறுத்திக்குவேன். புதுசா எடுக்கவேண்டிய அவசியமே இல்லை..... எல்லாமே புதுக்கருக்கழியாமல் அன்றுபோலவே இன்றும் !!!! ஊஞ்சல் மண்டபம் அழகோ அழகு !!!!
http://thulasidhalam.blogspot.com/2017/12/85.html
ரொம்பப்பெரிய கோவில் இல்லை. மீடியம் சைஸ்தான். நகருக்கு நடுவில் இவ்வளவு இடம் கிடைச்சதுகூட...... வியப்பே ! இங்கே மூலவர் சந்நிதியை வணங்கிட்டுக் கருவறையைச் சுற்றி வந்தால் போதும்......... நீங்கள் நூற்றியெட்டு திவ்யதேசப் பெருமாட்களையும் தரிசனம் செஞ்சாச்சு ! கண் நிறைஞ்சு வழிய அப்படியொரு அழகான ஓவியங்கள் ! ரொம்பவே பிடிச்ச இடமுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே ?
நம்ம வரதராஜர்.... மரச்சிலை !!!!
மூலவர் படம் : கூகுளார் உதவி.
தரிசனம் முடிச்சு, தீர்த்தம் சடாரி ஸேவிச்சபின் சுற்றி வரும்போது, கைப்பையில் இருந்த செல் கொஞ்சம் நடுங்கியது. பொதுவா என் செல்ஃபோன் எப்போதும் ம்யூட் மோடில்தான். !! ஃபோனில் பேச விருப்பம் இல்லை. நம்மவர்தான், நான் தனியாக இப்படி ஊர்சுற்றும்போது, ம்யூட்டை எடுத்துருன்னுவார். பெல் அடிச்சால் எனக்கு ஆகாதுன்னுருவேன். அப்புறம் தான் சமரசவழி ஒன்னு இருக்கட்டுமேன்னு.... தனியாச் சுத்தும்போது மட்டும் வைப்ரேஷன் மோட் வச்சுக்கறது. யார் ஃபோன் செய்யறதுன்னு தெரிஞ்சுக்கிட்டுத் தேவைன்னா பேசலாம்தானே!
இப்ப செல்நடுங்கியதும் எடுத்துப்பார்த்தால்.... ஏதோ புது எண்... இருக்கட்டுமுன்னு விட்டுட்டு நூற்றியெட்டைத் தொடர்ந்தேன். அடுத்து வெளிப்ரகாரச் சுற்றில் வலம்.... தாயார்சந்நிதியில் வணங்கி, திருக்குளத்தாண்டை போய் கம்பிவழியாப் பார்த்துட்டு, அப்படியே அடுத்த மூலையில் நம்ம ஆண்டாளம்மாவை வணங்கி, கண்மூடி, மனசுக்குள் தூமணிமாடத்து முடிச்சுட்டுக் கண்களைத் திறந்தால் என் எதிரில்...... தோழி ! இந்தப் பக்கம் நம்ம விஜி !
அட ! எப்படி ?
காலையில் நம்மவர் ஃபேக்டரிக்குப் போனாரில்லையா.... அவராண்டை என் ப்ரோக்ராம் என்னன்னு கேட்டுருக்காங்க. கோவில்களுக்குப் போறதா ஐடியான்னதும், சட்னு அவுங்க வீட்டுக்கடமைகளை (!!! )முடிச்சுட்டு, நம்மவரிடன் என் செல் நம்பரைக் கேட்டு, ஃபோன் செஞ்சுருக்காங்க. ஆஹா.... அந்த நடுக்கம்..... இவுங்கதான் !
நான் எடுக்கலைன்னதும், விஜியின் செல்நம்பரைக் கேட்டு அவருக்குப் போன் செஞ்சதும், அவர் நாமிருக்கும் கோவிலைச் சொல்லி இருக்கார். உடனே கிளம்பிவந்து என்னைப் பிடிச்சுட்டாங்க! இருக்கும் நாலைஞ்சு சந்நிதிகளுக்கிடையில் கஷ்டமா என்ன ? ஆஹா....
மூலவரை ஸேவிச்சுட்டு வாங்கன்னேன். வரும்போதே தரிசனம் ஆச்சுன்னாங்க. அவுங்க டிரைவரைத் திருப்பிப்போகச் சொல்லிட்டு , நாங்க அடுத்த (வழக்கமான) கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். லக்ஷ்மி இருக்குமிடம் வெறிச். ப்ச்.... பாவம் குழந்தை ! காலை காமிக்குடான்னால் கொலுசு போட்ட பாதங்களைத் திருப்பிக் காண்பிப்பாள், என் செல்லம்.
அவள் மறைவுக்குப்பின் இப்பதான் முதல்முறையாக வர்றேன்.
இந்தக் கோவிலுக்குள் எல்லோருமே வரலாம் என்றபடியால் நிறைய வெளிநாட்டினர் வந்து போவாங்க. பக்கத்துலே அர்விந்தர் ஆஷ்ரம் இருக்கு என்பதால் கூட்டத்திற்குக் குறைவில்லை.
நாங்களும் உள்ளே போய் புள்ளையாரை தரிசித்தோம். இந்த மூலவர் மணக்குள விநாயகர் அமர்ந்திருக்கும் பீடம், ஒரு நீர்நிலையின் மேலே என்பது ஒரு விசேஷம் ! கோவில் கட்டுமுன் அங்கே ஒரு குளமோ இல்லை கிணறோ இருந்துருக்கு. அதுக்கு மேலேதான் பீடம், கருவறை எல்லாம் கட்டிக் கோவில் வந்துருக்குன்னு ..... புள்ளையார் பீடத்துக்குப் பக்கம் ஒரு அரையடி விட்டத்தில் குழி ஒன்னு இருக்குன்னும், அதில் எப்போதும் வற்றாத தீர்த்தம் இருக்குன்னும் , குழியில் ஆழத்தைக் கண்டுபிடிக்கவே முடியலைன்னும் சொல்றாங்க. கோவில் குருக்களாண்டைதான் கேட்கணும்..... உண்மையாகத்தான் இருக்கவேணும். நம்பினால்தான் தெய்வமே !
இன்னொரு வகையில், கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையில் தூரம் அதிகமில்லை. ஒரு குளம் வேற இருந்துருக்கு. கடற்கரை ரொம்பப்பக்கம் (வெறும் முன்னூறு மீட்டர்) என்பதால் குளத்திலே மணல் அதிகம். மணல் குளம். இதன் கரையில்தான் கோவில் என்பதால் மணல்குளம்/ மணற்குளம் விநாயகர்னு சொல்லப்போய், இப்போ மணக்குள விநாயகராகிட்டார். ஆஹா..... அதுதான் 'மணக்குளம்' பெயர்க்காரணம் போல !
இங்கேயும் அந்நியர் ஆட்சி காலத்தில் அவர்களால் கோவிலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்துருக்கு என்பது வரலாறு.
கோவிலின் உட்புறச் சுவர்களில் உலகநாடுகள் பலவற்றிலும் இருக்கும் புள்ளையார் உருவங்கள் புடைப்புச்சிற்பமாக அமைச்சுருக்காங்க. பார்க்கவே அருமை !
மூலவர் மண்டபத்தையொட்டியே இன்னொரு மண்டபமும் இருக்கு. வலம் வரும்போது நாம் இந்த ரெண்டு மண்டபங்களையும் சேர்த்தேதான் சுற்றி வருவோம். எதோ கல்யாண வீடுபோல அங்கே மக்கள் குடும்பம் குடும்பமாக் குவியல் குவியலா உக்கார்ந்துருக்காங்க.
அந்தாண்டைச் சுவரையொட்டியே இன்னும் சில சந்நிதிகள். பள்ளியறை கூட இருக்கு ! நம்ம பக்கங்களில் புள்ளையார், ப்ரம்மச்சாரின்னு பொதுவா சொல்றாங்க இல்லையா.... ( திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் மட்டும் இரு தேவியருடன் இருக்கார், பார்த்துக்குங்க )
இங்கே புள்ளையாருக்குத் திருக்கல்யாண உற்சவம் கூட நடத்தறாங்க. சித்தி & புத்தின்னு தேவியர் இருவர் ! கேட்டவரம் கிடைப்பதால்...... உள்ளுர் மக்களுக்கும் இவர் இஷ்டதெய்வமா இருந்து அருள் பாலிக்கிறார்.
வெளியில் கோவில் கடைகளில் அழகழகான அலங்காரப்பொருட்கள். தேங்காய்நார் சமாச்சாரம் என்பதால்.... க்ளிக்கோடு திருப்திப்பட வேண்டியதாப் போச்சு.
மதியம் சாப்பாட்டு நேரம் வந்துருச்சுன்னு, அதே பகுதியில் கூப்பிடு தூரத்தில் இருக்கும் அடையார் ஆனந்தபவன் போனோம். அவரவருக்கு வேண்டியதை வாங்கியாச்சு. செல்ஃப் சர்வீஸ்தான். எனக்கு மினி இட்லி. சாம்பார் தனியா வேணுமுன்னு சொல்லி வாங்கிக்கிட்டேன்.
கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆச்சு அக்கார்ட் திரும்ப. விஜியை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பிட்டு, நானும் தோழியுமா அறைக்குப் போய்ப் பேசிக்கிட்டு இருந்தோம். எல்லாம் குடும்ப விஷயங்கள்தான். அப்படியே சாயங்காலம் வேறெங்காவது போவது பற்றியும் .......!
தொடரும்....... :-)

0 comments:
Post a Comment