மயூரநாதரும், அபயாம்பிகை அம்மனுமாகக் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறாங்க.... இந்த மாயூரத்தில். அம்பிகையும் ஈசனும் இங்கே மயில்வடிவம் எடுத்துக் காவிரித்துறையில் ஆடிக்களித்ததால்.... இந்த ஊருக்கு மயிலாடுதுறைன்னு பெயர். முந்தி மாயவரம்னு சொல்லக்கேட்டு அப்படியே பழகியும் போயிருக்கு.
ஒன்பது நிலை ராஜகோபுரத்தோடு, கோவில் நல்ல பெரிய அளவிலான கோவில்தான். திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தின்கீழ் எல்லா வழிபாடுகளும் பூஜை புனஸ்காரங்களும் அவர்களின் மேற்பார்வையில்தான் நடந்து வருது ! ஆனாலும் ஒரே ஒரு சந்நிதி மட்டும்.... தருமபுரம் ஆதீனத்தின் பொறுப்பில்.... அது நம்ம முருகன் சந்நிதிதான். குமரக்கட்டளைன்னு சொல்றாங்க.
கொடிமரம் சேவிச்சுட்டு நேரா உள்ளே போய் மயூரநாதரைக் கும்பிட்டு, உட்பரகாரம் வலம் வந்தோம். கோஷ்டத்தில் அழகான கடவுளர்கள் ! நல்ல நீளமான பிரகாரங்களே..... இருக்காதா பின்னே..... இந்தக் கோவிலே ஏறக்கொறைய ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்குல்லே ! (85 சென்ட் னு ஒரு தகவல்)கோவிலுள் கூட்டத்தையே காணோம்.....


உச்சி நேரம் நெருங்குதே..... அபியைப் பார்க்க முடியாதோ.... சந்நிதியை மூடிட்டால்....? பரபரன்னு அங்கே போனால்..... நிறையக் கூட்டம் ! தனிக்கோவில் போல பிரகாரமும் முன்மண்டபங்களுமாய்..... விஸ்தாரம். மண்டபத்தில் யாகம் நடந்ததற்கான யாககுண்டமும், செங்கற்களின் குவியலும்.....
அங்கிருந்த ஒரு சின்ன மண்டபத்தில் அங்கே இங்கேன்னு மக்கள் சிலர்.
ஏதோ விசேஷம் போலிருக்கே......
அம்பாள் சந்நிதிக்குப் போனோம். அங்கேயும் பலர். சந்நிதிக்கு முன்னால் சீர்வரிசைகள் அடுக்கி வச்சுருக்காங்க. குருக்கள் பலர் ரொம்ப பிஸியா....... என்ன நடக்குது ? பெண்கள் கூட்டத்தில் ஒருவரிடம் விசாரிச்சதில் 'நவாவர்ணபூஜை' காலையில் இருந்து நடந்துக்கிட்டு இருக்காம். அட!
ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது படிகளில் ஒன்பதுவிதமான பூஜை செய்வது.... அம்மனின் பூரண அருள் வேண்டி !
எட்டிப்பார்த்து அம்மனை தரிசனம் செஞ்சுட்டு, யாககுண்டத்தின் பக்கம் போனால் அம்மன் அருள்மிகு அபயாம்பிகைத் திருவுருவம் (ஓவியம். அழகி. ச்சிக்னு இருக்காள் ) ஒரு மூலையில் சின்னச் சந்நிதிபோல் அமைத்து, பக்கச்சுவரில் சுத்திவரக் கரும்பளிங்கு பலகையில் அபயாம்பிகை சதகம். எல்லாப் பாடலும் 'மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே' என்ற ஈற்றடியில்..... நம்ம சிங்காரச்சென்னை மயிலாப்பூர் நினைவு வந்தது உண்மை. அங்கேயும் அம்மன், மயில் உருவில் ஈசனை வணங்கினதாகத்தானே.....
என்ன ஒன்னு .... இங்கே ஈசனும் மயில் உருவில் வந்து, பெண் மயிலோடு ஆடினார் என்பதே சிறப்பு. மயில் ஆடும் துறை !!
இங்கேயுள்ள காவிரித் துறைக்கு இன்னுமொரு விசேஷமும் இருக்கு. துலாஸ்நானகட்டம்னு துலாம் மாசத்தில் (எல்லாம் நம்ம ஐப்பசி மாசம்தான் ! ) இங்கே வந்து காவிரியில் நீராடிப் பாவங்களைப் போக்கிக்கலாம் ! புண்ணிய நதிகளில் மக்கள் போய் நீராடித் தங்கள் பாவங்களைத் தொலைக்கும் வழக்கம் இருக்கு பாருங்க..... அப்படி தொலைத்த பாவங்கள் எல்லாம் எங்கே போகும் ? அந்தந்த நதிகளின் ரூபத்தின்மேலேயே கசண்டு மாதிரி பதிஞ்சு போகுமாம். அப்படிப் படிஞ்சு போறதால்.... நதி மாதாக்கள் தங்கள் பொலிவை இழந்து வெறும் அழுக்கு மூட்டைகளாய் இருக்கும்படி ஆகிருது. மனம் நொந்து போன மாதாக்கள், சிவனைக் கும்பிட்டு, 'இதுக்கொரு வழி சொல்லுங்கோ'ன்னு கெஞ்சுனதும்..... அவர்தான்., தெற்கே காவிரி நதியில் போய் நீராடினால்..... இழந்துபோன உங்கள் பொலிவும் பரிசுத்தமும் திரும்பக்கிடைக்கும் என்றதால்........ வடக்கிலிருந்து கிளம்பி கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் இங்கே துலாகட்டத்தில் வந்து மூழ்கி நீராடி, அவர்கள் மேல் ஒட்டிப்பிடிச்சுருந்த பாவமூட்டைகளைக் களைந்து, பொலிவோடு திரும்பி அவரவர் ஊர்களுக்குப் போனார்களாம்.
அப்போ... அந்த அழுக்கெல்லாம் காவிரியின் மேல் ஒட்டிக்கிச்சோ ? அடடா..... நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை..... எந்தப் பாவமும் காவிரின் மீது ஒட்டுவதில்லை.... என்பதே காவிரியின் சிறப்பு. கங்கையிலும் புனிதமாம் காவிரி என்ற சொல்கூட இதையே நிரூபிக்கும் விதம்தான்!
இதனால் இந்த ஊரையொட்டி ஓடும் காவேரியில் துலா ஸ்நானம் செய்ய பக்தர்கள் ஏராளமா வர்றாங்க. மாசமுழுவதும் முங்க முடியாதவர்கள், ஐப்பசி மாச அமாவாசையில் முங்கி எழுந்தால் இதே பலன். அமாவாசைக்கு வரமுடியலையா? நோ ஒர்ரீஸ். ஐப்பசி மாசக் கடைசி நாளில் முங்கிருங்க. இதே பலன் கிடைச்சுரும்னு சாஸ்திரங்கள் சொல்லுது. நம்ம மதம் ரொம்பவே ப்ளெக்ஸிபிளா இருக்கு பாருங்க. கடைசிநாள் முழுகுவதை கடைமுழுக்குன்னு கொண்டாடிடறாங்க.
ஐப்பசி மாசம் முழுக்க ரொம்ப பிஸியாப்போயிருச்சு. என் பாவம் தீரவே தீராதான்னு அழுது புலம்பாதீங்க யாரும். இருக்கவே இருக்கு கார்த்திகை மாசம். ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை பிறக்கும் நாளுக்கும் இதே பலன் உண்டு. இதுக்குப்புண்ணியம் கட்டிக்கிட்டவர் நினைவா இதுக்கு முடவன்முழுக்குன்னு பெயர் வச்சுருக்காங்க.
ஐப்பசி மாசம் காவேரியில் மூழ்க ஆசைப்பட்டு ஃபிஸிக்கலி சேலஞ்சுடுஆன ஒருவர் ரொம்ப தூரத்தில் இருந்து புறப்பட்டு இங்கே வந்துருக்கார். அவர் வந்து சேரவும் ஐப்பசி மாசம் கடை(சி) முழுக்கு நடந்து முடிக்கவும் சரியா இருந்துருக்கு! அடடா.... நமக்குக் கொடுத்து வைக்கலையேன்னு மனம் உருகி இறைவனை வேண்டினார். யாராவது கரைஞ்சால் சிவனுக்குத் தாங்கமுடியாது கேட்டோ! வருத்தப்படாதே, இன்னிக்குக் கார்த்திகை பிறந்துருக்கு. அதே பலன் இன்னைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டேன். இப்பவே நீ போய் முங்கி நீராடு ன்னு அசரீரியா அனௌன்ஸ் பண்ணினார். அவரும் நீராடி தன் பாவங்களைப் போக்கிண்டார்! இப்ப என் கால் இருக்கும் நிலைக்கு நானும் முடவன் முழுக்கு தினம் போய் காவிரி ஸ்நானம் செய்யணும்தான்.
https://thulasidhalam.blogspot.com/2013/03/blog-post_4.html
துலாகட்டத்தை ஒரு முறை நேரில் பார்க்கப் போய், அதைப்பற்றி எழுதிய பதிவு இது. படங்களும் உண்டு. விருப்பம் இருப்பின் க்ளிக்கிப் பார்க்கலாம்.
https://thulasidhalam.blogspot.com/2016/08/67.html
இந்த நவாவர்ண பூஜை எப்போ முடியுமுன்னு தெரியாததால்.... திரும்ப அம்மன் சந்நிதிக்கு வந்து வணங்கிட்டுக் கிளம்பினோம். முன்வாசலாண்டை விவரம் கிடைச்சது.
முதல்முதலா 'அஷ்ட சரஸ்வதி' யைக் கண்டேன் இங்கே......இந்தப்பூஜை பகல் பனிரெண்டரை வரை, அப்புறம் உச்சிகாலப்பூஜை முடிஞ்சு நடையடைப்பு. சாயங்காலம் அஞ்சு மணிக்கு லலிதா சகஸ்ரநாமம். அஞ்சு நாப்பதுக்கு அம்பாளின் நெய்க்குள தரிசனம் !
திருமீயச்சூர் லலிதா நெய்க்குளம்தான் கேள்விப்பட்டிருக்கோம் என்று பார்த்தால் ..... இங்கே இப்போ ரெண்டு வருஷமா ஆரம்பிச்சுருக்காங்களாம் !
ஆஹா........ இன்றைக்கு..... அதுவும் நாம் யதேச்சையா வந்திருக்கும் இன்றைக்கு....... மனம் அடிச்சுக்கிட்டது உண்மை. இருந்து தரிசிக்கமுடியுமான்னு தெரியலை...... எல்லாம் 'அவன் அருள்'னு கிளம்பினோம்.
தொடரும்....... :-)

0 comments:
Post a Comment