ஏதோ கச்சேரி நடக்குது..... உள்ளே போறோம். நமக்காகவே முன் வரிசையில் ரெண்டு இடம் காலி. போய் உக்காரும்போதே..... மேடையில் இருந்த பாடகர், தொண்டையைச் சின்னதாச் செருமிக்கிட்டு, 'ஆடும் சிதம்பரமோ' ன்னு சொல்லி நிறுத்தறார். சபையில் ஒரே கைதட்டு.
நானும் உற்சாகமா மேடையைப் பார்க்கிறேன். நல்ல வெள்ளை வேஷ்டி சட்டையில் பாடகர். பக்கத்தில் மற்ற வாத்ய இசைக்கலைஞர்கள். வயலின் மட்டும் மெல்ல இழைகிறது.... அடுத்த வரியாக 'கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல். ராகம் பேஹாக். தாளம் ஆதி 'என்றவர் கம்பீரமான குரலில் 'ஆடும் சிதம்பரமோ..... ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ...... ன்னு பாட்டு, அட்டகாசம்.......
இப்படி ராகம் என்னன்னு சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. இல்லைன்னா..... என்ன ராகமுன்னு மனசுக்குள் பிடிபடும்வரை, மண்டைக் குடைச்சலில் பாட்டை ரசிக்காமல் கோட்டை விடுவதே அதிகம், இல்லையோ !!!!
பாடகர் யாருன்னுதான் தெரியலையேன்ற யோசனை..... இத்தனைக்கும் முன்னால் உக்கார்ந்துருக்கேன்..... சட்னு விழிப்பு வந்ததும் பார்த்தால்.... பகல் தூக்கத்தில் நான். காலில் தைலம் தேய்ச்சுக்கிட்டுப் பதிவு எழுதணுமுன்னு உக்கார்ந்தவள், அப்படியே ....... கச்சேரிக்குப் போயிருக்கேன்.... அடராமா..... சரி. இன்றையப்பதிவுக்கு இதுவே தலைப்பு ஆச்சு !!!
போகட்டும்.... ஒரு கச்சேரிக்குப் போனால்... நிகழ்ச்சி முடிஞ்சதும் எழுந்துவராமல் அங்கேயே படுக்கை போட்டுக்கிட்டு இருப்பவரை உங்களுக்குத் தெரியுமோ ?
கும்மோணம் ராயாஸை விட்டுக்கிளம்பின ஒரு ஒன்னேகால் மணி நேரத்தில் வண்டிவந்து நின்னது இந்த அலங்கார வாசலாண்டைதான்.
தெருவில் பயங்கரப்போக்குவரத்து, மக்கள் கூட்டமும் நிறைய .... எங்களை இறக்கி விட்டுட்டுப் பார்க்கிங் இடம் தேடிப்போனார் விஜி.
நாங்க கோபுரவாசலை நோக்கிப்போறோம். இது தெற்குவாசல்னு தெரிஞ்சது. பாதையின் ரெண்டு பக்கங்களிலும் நந்திதேவர்கள். நமக்கு இந்தவழியா வர்றது இதுதான் முதல்முறைன்னு நினைக்கிறேன். திருஞானசம்பந்தர் இறைவனை வழிபட இந்தவாசல் வழியாகத்தான் வந்துருக்கார் !
கோபுரவாசலைக்கடந்து கோவிலுக்குள் நுழையும்போது கண்ணெதிரே கண்ட காட்சியில் கண்கள் விரிஞ்சது உண்மை ! பளபளக்கும் தங்கக்கூரைக்குமுன் தக்ஷிணாமூர்த்தி சந்நிதி. கம்பிக்கதவினூடாக தரிசனம். உள்ளே கொஞ்சம் இருட்டுதான்...... ப்ச்....
மொத்தம் 43 ஏக்கர் பரப்பளவு. கால் வலியை நினைச்சு 'பகீர்' ஆனது ..... ஏற்கெனவே நாம் வந்து தரிசனம் செஞ்ச கோவில்தான்.... அதனால் முடிஞ்சவரைதான் இன்றைக்குன்னு.....
சிறுவயதில் (ஒரு அம்பத்திமூணு வருஷங்களுக்கு முன்) ஒருமுறை வந்திருக்கேன். சரியா நினைவில் இல்லை. அப்புறம் எங்க அறுபதாம் கல்யாணம் முடிஞ்சதும் (2012 ) நாங்க முதல்முறையா இங்கே வந்தோம். நம்ம அபிஅப்பாவின் ஏற்பாட்டில் திரு நடராஜ தீக்ஷிதர் கூட்டிப்போய் கோவிலைச் சுத்திக்காமிச்சு, சுகதரிசனம் நடத்திக் கொடுத்தார். அர்த்தஜாமப்பூஜை ரொம்ப விசேஷமுன்னும் சொன்னார்தான். ராத்ரி பத்துமணிக்கு வந்தால் போதாதான்னு கொஞ்சம் மெத்தனமா இருந்ததில் நமக்கில்லைன்னு ஆகிருச்சு.....
https://thulasidhalam.blogspot.com/2013/02/blog-post_20.html
எல்லாம் இந்த கொஸ்துப்ரேமியால் வந்த வினை.....
https://thulasidhalam.blogspot.com/2013/02/blog-post_22.html
அப்புறம் ஒரு நாலுவருஷம் கழிச்சு சிதம்பரம் போனப்ப..... அர்த்தஜாம பூஜையை விடுவதில்லைன்னு கங்கணம் கட்டிக்கிட்டேன். ஏறக்கொறைய இந்த முறையும் தவறியிருக்கவேண்டியது..... எம்பெருமாளின் அருளால், கூடவே ஒரு போனஸோடு அமைஞ்சது. என்னோட மனநிறைவுக்கு அளவே இல்லாமல் போனது அன்றைக்குத்தான் ! அப்போ எழுதின பதிவை, இன்றைக்கு வாசித்தாலும் உடம்பு புல்லரிச்சுத்தான் போகுது எனக்கு !
https://thulasidhalam.blogspot.com/2016/06/49.html
இன்னொரு முக்கிய அபிஷேகம் இருக்குன்னும் தெரிஞ்சது அப்போதான். நமக்கு வேளைவரலைன்னு இருந்தேன்.....
அபிஷேகப்ரியனுக்கு தினமும் ஆறுகாலம் அபிஷேகமாம்! நடக்கட்டும் நடக்கட்டும்.....
பெருமாள் பக்தர்களுக்கு பூலோக வைகுண்டம் னு ஸ்ரீரங்கம் இருக்குல்லையா.... அதே போல் சிவன் பக்தர்களுக்குப் பூலோகக் கைலாஸம் இந்த சிதம்பரம் கோவிலே ! அவரவரின் பெரிய கோவில்கள் ! ஆனால்.... கைலாஸத்திலும் வந்து ஒரு இடம் பிடிச்சுக்கிட்டவனை..... ஹாஹா.... ( இது முதல்முறை இல்லையாக்கும். இன்னும் ரெண்டு கோவில்களிலும் இடம் பிடிச்சது உண்மை. இதுலே ஒரு ஒற்றுமை என்னன்னா.... இவையெல்லாமே அந்த நூற்றியெட்டில் வருதுன்றதுதான்.
நிதானமாக நடந்து போகும்போதே அங்கங்கே இருக்கும் சந்நிதிகளை தரிசனம் செஞ்சுக்கிட்டே போறேன். மூலவர் தரிசனத்துக்குப் போறோம். கொஞ்சம் படிகள் இறங்கவேண்டி இருந்தது...... பெருமாளே.......
ஆச்சு 'அவன் ' தரிசனம். எப்பவும்போல் பாம்புப்படுக்கையில் ஜம்னு!!!!
இந்தப் பக்கம் மூலவரை தரிசிக்கக் கண்களைத் திருப்பினால்.... பக்கவாட்டு மண்டபம் நோக்கி மக்கள் கூட்டம். படிகள் வரிசையில் நமக்கும் இடம் கிடைச்சது. அபிஷேகம் ஆரம்பிச்சுருக்கு..... பக்கத்துலே விசாரிச்சால் ரத்னசபாபதியாம் ! தினமும் ரெண்டாம் காலப் பூஜையில் நடப்பது ! ஆஹா....... கிடைச்சுருச்சு !!!!! அரைமணி நேரம், தேன் குடிச்ச நரிஓன்னு நொண்டிக்காலோடு நின்னு அனுபவிச்சது !!!!
மனநிறைவோடு வெளியே வந்ததும்.... எந்த வழியாப் போறதுன்னு ஒரு குழப்பம் வந்தது. ஏற்கெனவே செல்லில் எடுத்தபடத்தில் இருந்து நாம் வந்தது தெற்குவாசல்னு உறுதியாச்சு. மண்டபத்தில் அங்கங்கே ஓய்வாக இருக்கும் பக்தர்களில் ஒருவரிடம், தெற்குவாசல் எந்தப்பக்கம்னு கேக்கவேண்டியதாப் போச்சு. எல்லா கோபுரமும் ஏறக்கொறைய ஒரே மாதிரி, ஒரே அளவில் இருப்பதால் திக்குத்திசை தெரியாமல் போச்சே.......
அவர் காமிச்ச திசையில் நடந்தோம். நம்ம நந்தனாரின் சற்றே விலகி இருந்த நந்திதேவரை வணங்கினோம். அந்த கான்ட்ரவர்ஸி வாசல் அடைபட்டுருக்குதான். நம்ம ஆன்மிகப்பதிவர் கீதா சாம்பசிவம், கோவிந்தராஜருக்குக் கோபுரம் கட்டும்போது, கட்டடப்பொருட்கள் கொண்டுபோக அந்த இடத்தில் மதில்சுவரை இடித்ததாகச் சொன்னது நினைவில் வந்தது..... (மதிலை... மதிலாகக் கட்டாமல் வாசலாக் கட்டியது ஏனாம் ? ப்ச்.... போகட்டும் )
மதியம் அன்னதானத்துக்கான அன்னம் வண்டியில் எதிர்ப்பட்டது..... அவ்ளோ கூட்டத்துக்கு இது போதுமோ ?
இன்னொரு வாசல்வழியா வெளியே வந்துருந்தோம்..... விஜியை வரச் சொல்லிட்டுக் காத்திருந்தபோது, நெல்லிக்காய் கண்ணில் பட்டது, எண்ணி மூணே மூணு ! தாகசாந்தி.....
அடுத்த ஒரு மணி நேரப்பயணத்தில் அடுத்த மாநில எல்லைக்குள் நுழைஞ்சாச்சு !


தங்குமிடம் போய்ச் சேர இன்னும் ஓர் அரைமணி நேரம் !
தொடரும்......... :-)

1 comments:
பதினோரு வருடங்களாச்சு சிதம்பரம் சென்று வந்து. அபி அப்பா அங்கு அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிகிறாரோ....
Post a Comment